Tag Archive for ருத்ரையா

இங்கே எதற்காக – புத்தக விமர்சனம்

ஒரு திரைப்படத்தை இயக்கி வெளியிடுவது எத்தனை கடினமானது என்பது எல்லாருக்குமே தெரியும். அதுவும் மாற்றுத் திரைப்படங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இங்கே வணிகத் திரைப்படங்கள் வெளிவருவதே அத்தனை கடினம் என்னும் நிலையில், மாற்றுத் திரைப்படங்கள் மட்டுமே எடுப்பேன் என்றொரு இயக்குநர் உறுதியாக இருந்தால் அவர் என்ன பாடுபடவேண்டியிருக்கும் என்பதை இயக்குநர் ஜெயபாரதியின் ‘இங்கே எதற்காக’ நூலைப் படித்தால் புரிந்துகொள்ளலாம்.

inge etharkaakaஇங்கே எதற்காக, இயக்குநர் ஜெயபாரதி, டிஸ்கவரி புக் பேலஸ், ரூ 150

முன்பு தூர்தர்ஷனில் மதியம் மாநில மொழித் திரைப்படங்கள் வரிசையில் ஜெயபாரதியின் ‘உச்சிவெயில்’ திரைப்படம் ஒளிபரப்பப்படும் என்று அறிவித்தார்கள். அப்போது எனக்கு 13 அல்லது 14 வயதிருக்கலாம். அப்போதே இதுபோன்ற ‘மெல்ல நகரும் இருட்டுக்குள் யாரோ ஒருவர் சத்தம் குறைவாகப் பேசும் படங்களை’ (படமெடுக்க பணம் கேட்டு ஜெயபாரதி செல்லும்போது இப்படித்தான் நடிகை ராதிகா சொல்கிறார்) விரும்பிப் பார்க்கும் வழக்கம் எனக்கு உண்டு. மொழி தெரியாமல் சப்-டைட்டில்களை மெல்ல கூட்டி வாசித்து அரைகுறையாகப் புரிந்துகொண்டு மலையாள, கன்னடப் படங்களெல்லாம் பார்த்திருக்கிறேன். இந்தப் படம் கருப்பு வெள்ளை படம். (இதுதான் தமிழின் கடைசி கருப்பு வெள்ளை படமாம்.) ஜெயபாரதி என்ற பெயரைக் கேட்கவும் ஜெயபாரதி என்ற நடிகை நடித்தது என்றுதான் அதைப் பார்க்கத் தொடங்கினேன்.

படம் ஆரம்பித்த சில நிமிடங்களுக்கெல்லாம் என் வீட்டில் எல்லோரும் உறங்கிவிட்டார்கள். நான் மட்டும் பார்த்துக்கொண்டிருந்தேன். மிக மங்கலாக சில காட்சிகள் நினைவிலுள்ளன. தலைவாசல் விஜய் (அப்போது அவர் வெறும் விஜய் மட்டுமே. தலைவாசல் வெளியாகியிருக்கவில்லை) ராணுவத்திலிருந்து திரும்ப வந்தவர் போன்ற நினைவு. அந்த ராணுவ உடையில் க்ளோஸப் காட்சியில் என்னவோ பேசுவார். யாரோ ஒரு முதியவர் காணாமல் போய்விடுவார். அவரை காரில் தேடுதேடென்று தேடுவார்கள்.

மறுநாள் பள்ளிக்குச் சென்றபோது இந்தப் படத்தைப் பார்த்திருந்த ஒரே ஜீவன் நானாகத்தான் இருந்தேன். ‘இதுக்கெல்லாம் அவார்ட்னு கொடுத்து… நம்ம டிடிக்குன்னு படம் கிடைக்குதே’ என்பதுதான் ஒட்டுமொத்த கருத்தாக இருந்தது. இந்தப் படம் ஏன் முக்கியமான படம் என்றெல்லாம் அன்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. இன்றும் நான் இது மிக முக்கியமான படம் என்றெல்லாம் நினைக்கவில்லை. மாற்றுத் திரைப்படங்களின் இலக்கணமாக ஜெயபாரதியின் திரைப்படங்களைச் சொல்லவும் இல்லை. நிச்சயம் ஜெயபாரதியின் படங்களில் அவற்றுக்கே உரிய குறைகள் உள்ளன. ஆனால் இந்த இயக்குநர் ஏன் எதற்காக இது போன்ற படங்களை எடுக்கிறார், எப்படி இத்தனை கஷ்டத்துக்குள்ளாகி ஒரு படத்தை எடுக்கத் தோன்றுகிறது என்று நிச்சயம் யோசிக்கிறேன். மாற்றுத் திரைப்படங்களின் உச்சம் இல்லை என்றாலும், ஜெயபாரதியின் திரைப்படங்கள் நிச்சயம் மாற்றுத் திரைப்படங்கள்தான். மகேந்திரனின் திரைப்படங்கள்கூட இந்த அளவு மாற்றுத் திரைப்படங்கள் அல்ல என்றுகூடச் சொல்லலாம். மகேந்திரன் மாற்றுத் திரைப்படங்களுக்கும் வணிகத் திரைப்படங்களுக்கும் இடையே ஒரு பாதையைக் கண்டுகொண்டார். கொஞ்சம் முயன்றால் ஜெயபாரதியும் அந்தப் பாதையைக் கண்டுகொண்டிருக்கலாம். ஏனென்றால் சில குறைந்தபட்ச சமசரங்களுக்கு மகேந்திரன் போலவே ஜெயபாரதியும் ஆயத்தமாகவே இருந்திருக்கவேண்டும். அதற்கான தடயங்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. ஆனாலும் ஏனோ ஜெயபாரதி அதைச் செய்யவில்லை.

ருத்ரையாவின் ‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். எடிட்டிங், தொடர்ச்சி, ஒளிப்பதிவு, ஒலிக்கோர்ப்பு என எல்லாவற்றிலும் ஏனோதானோவென்று இருந்தது. ஜெயபாரதியின் திரைப்படமும் அப்படித்தான் இருந்ததாக நினைவு. குடிசை திரைப்படத்தையும் நான் பார்த்திருக்கிறேன். ருத்ரையாவின் அவள் அப்படித்தான், ஜெயபாரதியின் குடிசை, உச்சிவெயில், ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் – இவை எல்லாமே ஒரே ரகம். பணம் இல்லாமல் மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்டவை.

எவ்வித ஈகோவுமின்றி யார் பணம் தந்தாலும் வாங்கிக்கொண்டு படம் தயாரித்திருக்கிறார் ஜெயபாரதி. ஆனால் பணம் தந்தவர் நேர்மையற்றவர் என்று தெரிந்தால் அத்தோடு விலகிவிடுகிறார். (என்று புத்தகத்தில் சொல்கிறார்.) அப்படித்தான் 24சி வேதபுரம் முதல்வீதி திரைப்படத்தை இவர் நிறுத்துகிறார். கம்யூனிஸ்ட்டுகளுக்காக இவர் எடுக்கும் படம் தேநீர், அந்த கம்யூனிஸ்ட் தயாரிப்பாளர் செம்மலர்ச்செல்வனின் லீலைகளில் நின்றுபோகிறது. பணம் வந்தால் கம்யூனிஸ்ட்டுகள் கள்குடித்த குரங்கைப் போல் ஆடுவார்கள் என்று தோழர் வி.பி. சிந்தன் சொன்னதை அனுபவத்தில் புரிந்துகொண்டு அப்படத்தைக் கைவிடுகிறார். பின்னர் அதுவரை எடுத்த படம் சண்முகம் என்பவரால் (பிற்பாடு இவர் தராசு ஷ்யாம் என்று புகழ்பெறுகிறார்) ஊமை ஜனங்கள் என்று பெயர்மாற்றப்பட்டு வேறு கதையில் இது நுழைக்கப்பட்டு வெளிவந்து படுதோல்வி அடைகிறது.

மேற்கொண்டு படம் எடுக்க பணம் இல்லாமல், நடிக்க வந்த நடிகை போட்டிருந்த நகைகளையெல்லாம் விற்று உடன் நடிக்க வந்த அனைவரையும் பத்திரமாக அனுப்பி வைக்கும் அனுபவமெல்லாம் இவருக்கு ஏற்படுகிறது. ஆனாலும் ஏதோ ஒன்று இவரைச் செலுத்துகிறது. எப்படியோ அடுத்த அடுத்த படங்களை எடுக்கிறார். ஒவ்வொரு படத்துக்கும் இடையே சில சமயங்களில் பத்துவருடங்கள்கூட கடக்கின்றன. ஆனாலும் யாரேனும் ஒருவர் வந்து படம் எடுக்கவேண்டும் என்றால் படம் எடுக்கிறார்.

இதற்கிடையில் கே.பாலசந்தர் நடிக்கவும் அழைக்கிறார்.  படம் இயக்கிக்கொண்டிருப்பதால் இவரால் நடிக்கச் செல்லமுடியவில்லை. ருத்ரையா இயக்கத்தில் நடிக்கச் சென்று அவமானப்பட்டு திரும்புகிறார். இதற்கெல்லாம் பிற்பாடு ‘கிராமத்து அத்தியாயம் படத்தில் நன்றாக நடித்ததால், ’அந்த’ நடிகருக்கு இவர் போட்டியாகிவிடுவாரோ என்று அஞ்சியே இவர் தூக்கப்பட்டார்’ என்று இவருக்குச் சொல்லப்படுகிறது. அதை இவர் ஏற்கவில்லை. ஆனால் அந்த ஒரு படத்துக்குப் பிறகு ருத்ரையாவும் ஓரம்கட்டப்படுகிறார். இதுதான் சினிமா உலகம் என்று இவருக்கு இவர் நண்பர் சொல்கிறார். முற்போக்களரான ருத்ரையா தனது அடுத்த படம் வராததற்கு ஜெயபாரதியின் வயிற்றெரிச்சலே காரணம் என்று சொன்னதாகவும் இவர் கேள்விப்படுகிறார்.

இப்படி புத்தகம் முழுக்க பல சிதறல்கள். இதன்வழியே நாம் திரையுலகின் ஜொலிக்கும் வெள்ளித்திரைக்குப் பின்னே நடக்கும் அவலங்களை ஏமாற்றங்களை துரோகங்களை துல்லியமாகக் காணமுடியும். சில நண்பர்கள் இதுபோன்ற துரோகங்களை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். இப்படியெல்லாமா செய்வார்கள், இவர் ஏமாற்றத்தில் பேசுகிறார் என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். ஆனால் ஜெயபாரதியின் புத்தகம் முகத்தில் அறைந்து உண்மையைச் சொல்கிறது. எடுத்தவுடனேயே தான் சொல்வதெல்லாம் உண்மை என்று இறைவன் மீது சத்தியம் செய்துவிட்டுத்தான் ஜெயபாரதி தொடங்குகிறார். ஜெயபாரதி பொய் சொல்லவேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாகவும் தோன்றவில்லை.

* ஒரு நடிகையிடம் பேட்டி எடுக்கச் சென்று அவர் ஷூட்டிங்கில் ஓய்வில் இருக்கும்போது ‘நான் தினமணிக் கதிரில் இருந்து வருகிறேன்’ என்று சொல்லவும் அவர் பதிலுக்கு ‘ஸோ வாட்’ என்று கேட்க, இவருக்கு என்ன பதில் சொல்லவென்று தெரியவில்லை. அந்த நடிகை – ஜெயலலிதா.

* சிவாஜி கணேசன் நடித்த ‘இளைய தலைமுறைகள்’ பட ஷூட்டிங்கில் கஷ்டப்படும் மகனுக்கு தாய் பணம் கொடுத்தனுப்பும் காட்சி. கை நிறைய சில்லறைகளாக அந்தத் தாய் (பண்டரிபாய்) கொண்டு வந்து மகனாக நடிக்கும் சிவாஜியிடம் கொடுக்க, சிவாஜி சில்லறைகளையெல்லாம் தொட்டு நடிக்கமாட்டேன், பணமாகக் கொடுக்கச் சொல்லுங்கள் என்று சொல்லிவிடுகிறார்.

* குடிசை திரைப்படத்துக்கு இசையமைக்க விரும்பி இளையராஜாவே முன்வருகிறார். ஆனால் ஏற்கெனவே காமேஷ் (கமலா காமேஷின் கணவர்) இசையமைக்க ஜெயபாரதி ஒப்புக்கொண்டுவிட்டதால் இது நிறைவேறாமல் போகிறது.

* குடிசை திரைப்படத்தை எடுப்பதற்குள் ஜெயபாரதி படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. மாயாஜாலக் காட்சி நடத்தி பணம் சேகரித்து ஷூட்டிங் நடத்துகிறார். ’சுராங்கனி’ புகழ் மனோகர் கச்சேரி நடத்தி பணம் திரட்டிக் கொடுக்கிறார். சிவகுமார் யாரிடமும் சொல்லவேண்டாம் என்று சொல்லி 2,000 ரூ தருகிறார். மிருணாள் சென்னை வைத்து தமிழில் படம் எடுக்க விரும்பும் விநியோகஸ்தரை, அப்பணத்தை குடிசை திரைப்படத்துக்குத் தரும்படி மிருணாள் சென்னே சொல்கிறார்.

* ஜெயபாரதியின் முதல் படத்தில் கமல் நடிப்பதாக இருந்தது. பாடல்களைச் சேர்ப்பதால் கோபப்பட்ட கமல் அதிலிருந்து விலகுகிறார். பிற்காலத்தில் ரஜினியை நடிக்கவும் ஜெயபாரதி கேட்கிறார். ‘சலிப்படையும்போது உங்களிடம் வருகிறேன்’ என்று சொல்கிறார் ரஜினி.

*Crowd funding மூலம் பணம் சேர்த்தே திரைப்படம் எடுக்கிறார் ஜெயபாரதி. சிலர் தருகிறார்கள். பலர் தருவதில்லை. ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் உச்சிவெயில் படத்துக்கு பத்தாயிரம் நன்கொடை தருகிறார்.

நான் சில விஷயங்களையே சொல்லியிருக்கிறேன். இப்படி புத்தகமெங்கும் அறிந்த மனிதர்களின் அறியாத முகங்களும் அறியாத முகங்களின் அசரடிக்கும் குணங்களும் கொட்டிக் கிடக்கின்றன. அம்பிகா நடித்தால் இயக்குகிறேன் என்று சொன்ன மனிதரையும், உச்சிவெயில் படத்தில் ஹீரோவான தனக்கு எத்தனை பாடல்கள் என்று கேட்ட குப்புசாமித் தாத்தாவையும் மறக்கமுடியாது நம்மால்.

கமலையும் ரஜினியையும் நடிக்க கேட்ட இவர் ஏன் இவர் மம்முட்டியையோ மோகன்லாலையோ கேட்கவில்லை என்ற கேள்வி இப்புத்தகம் முழுவதும் எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது. அதிலும் ஸ்ரீவித்யா ‘நீங்கள் எப்போது அழைத்தாலும் வந்து நடித்துக்கொடுப்பேன்’ என்று சொன்னதைப் படித்தபோது இந்நினைவு அதிகமாகியது. அதைத்தான் வைரமுத்து ஜெயபாரதியிடம் ‘இங்கே எதற்காக?’ என்று கேட்டிருக்கிறார் போலும்.

உண்மையில் தமிழ்த் திரையுலகில் வரும் திரைப்படங்களைப் பார்த்தும் யாருக்காக இன்னும் இதுபோன்ற திரைப்படங்களை ஜெயபாரதி இயக்குகிறார் என்று எனக்கு இன்னும் பிடிபட்டபாடில்லை. நண்பா நண்பா, புத்ரன், குருக்ஷேத்திரமெல்லாம் வந்ததும்கூட யாருக்கும் தெரியாது. சி.சு.செல்லப்பா புத்தகக் கட்டுகளை தலையில் சுமந்துகொண்டு வீதி வீதியாக விற்றதாகச் சொல்வார்கள். படத்தை முடிக்க ஒவ்வொரு கல்லூரியாக பணம் கேட்டு ஜெயபாரதி ஏறி இறங்கும்போது அதுதான் நினைவுக்கு வந்தது

குருக்ஷேத்திரம் படம் வெளிவருவது போர்க்களமான குருக்ஷேத்திரத்தில் பட்டபாட்டைவிட பெரியதாக இருக்கிறது. திடீரென வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் சேர்த்தால்தான் படத்தை விற்கமுடியும் என்று தயாரிப்பாளர் சொல்லிவிட (இவர் ஏற்கெனவே ஷூட்டிங்கின்போது கோபத்தில் தேவடியா பசங்களா என்று கத்தியவர்) வேறுவழியின்றி அதற்கும் ஒப்புக்கொள்கிறார். முதலில் இவர்தான் ஜெயபாரதி தெரியாத வடிவேலு, இவர் யாரென்று தெரிந்துகொள்ளவும் மிகவும் மரியாதையாக நடந்துகொள்கிறார். ஷூட்டிங் முடிந்து கிளம்பும்போது ‘சந்திரசேகருக்கே தேசிய விருது வாங்கிக் கொடுத்திருக்கீங்க, எனக்கும் ஒரு படத்துல வாங்கிக் கொடுங்கண்ணே’ என்று கேட்கிறார். விவேக்கும் இவரை அழைத்து ‘மாற்றுத் திரைப்படம்’ வேண்டுமென்று கேட்டு ஒரு படம் நடிக்க முயல்கிறார். அந்த முயற்சி வெற்றியடையாமல் அது பிற்பாடு ஒய்.ஜி. மகேந்திரா நடித்து ‘புத்ரன்’ என்ற திரைப்படமாக வெளிவருகிறது. (இப்படி ஒரு படம் வந்ததே எனக்குத் தெரியாது!) விவேக், வடிவேலு போன்ற நடிகர்களுக்குள்ளேயும்தான் எத்தனை கனவுகள்!

நூல் முழுக்க தினுசு தினுசான தயாரிப்பாளர்கள். ஹோட்டல் தொழில் நடத்தும் ஒருவர். தன்னைவிட இயக்குநருக்குப் புகழா என்று மருகும் ஒருவர். அம்பிகா ஹீரோயின் என்றால் படம் தயாரிக்கத் தயாராக இருக்கும் ஒருவர். படம் தயாரிக்க இன்னொரு வாய்ப்புக் கிடைக்காது என்பதால் கிடைத்ததையெல்லாம் தின்று பெண்களுடன் ஆட்டம்போடும் ஒருவர். இதற்கிடையில்தான் நாம் நல்ல திரைப்படங்களை எதிர்பார்க்கிறோம். நினைக்கவே அயற்சியாகத்தான் உள்ளது.

திரைப்படம் பற்றி தெரிந்துகொள்ள இந்நூலை வாசிப்பது மிக முக்கியம். இது மாற்றுத் திரைப்படங்களுக்கான இயக்குநர்களின் பிரச்சினை மட்டுமல்ல. வணிகத் திரைப்படங்களுக்கான இயக்குநர்களும் இதேபோலவோ இதைவிட அவமானப்பட்டு நம்பிக்கைத் துரோகம் செய்யப்பட்டு அவமானப்படுத்தி நம்பிக்கைதுரோகம் செய்துதான் மேலே வரவேண்டியுள்ளது. அத்தகைய ஒரு நிலையைக் காலம் காலமாகவே நம் திரையுலக அமைப்பு கைக்கொண்டுள்ளது. இந்நிலை அத்தனை சீக்கிரத்தில் மாறாது. ஒரு புகழ்முகம் தனக்குப் பின்னே ஒளித்துக்கொண்டிருக்கும் பல்வேறு முகங்களை நாம் தரிசிக்க நேரும்போது ஏற்படும் மனவலியை எப்படிச் சொல்வது? அந்த மனவலியை இப்புத்தகம் எனக்குக் காட்டியது.

இப்புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/1000000023800.html

Share