Tag Archive for சினிமா

Lover Tamil Movie

லவ்வர் – எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய ஒரு டாக்சிக் திரைப்படமாக வந்திருக்கிறது லவ்வர்.

spoilers ahead.

ஒருவன் வேலைக்குப் போவதில்லை. குடிக்கிறான். வீட்டில் பணம் வாங்கிச் செலவழிக்கிறான். பிசினஸ் செய்வதாகச் சொல்லி நஷ்டம் வேறு. இரண்டாம் மனைவி வைத்துக்கொண்டு அம்மாவை நடுரோட்டில் விடும் அப்பாவை அடிக்கப் போகிறான். இவனுக்கு ஒரு காதலி.

கல்லூரிக் காலத்திலேயே இவனைக் காதலிக்க ஆரம்பிக்கிறாள். ஆனால் இவனோ, அவள் வேறு வழியின்றிச் சொல்லும் பொய்களை எல்லாம் குத்திக் கிழித்துப் பெரிதாக்கிக் காண்பித்து அவளை மிரட்டுகிறான். இவன் வேண்டாம் என்று அவள் ஒதுங்கிப் போக ஆரம்பிக்கும் போது, மீண்டும் அவளிடம் கெஞ்சுவது, கூத்தாடுவது, தன்னைச் சேர்த்துக் கொள் எனக் கெஞ்சுகிறான். அவளும் சம்மதிக்கிறாள். மீண்டும் காதலிக்கிறார்கள். திருமணத்திற்கு முன்னால் உறவு வேறு.

இவன் அவளை மொத்தமாகச் சந்தேகப்பட அவள் ஒரு கட்டத்தில் உதறிவிட்டுப் போகிறாள். அதற்குப் பின்னும் அவன் விடாமல் அவளைத் துரத்த அவள் கடைசி வரை அவன் பக்கம் திரும்பிப் பார்ப்பதே இல்லை. இதனால் தாங்க முடியாமல் தவிக்கும் அவன் அவளை எப்படியாவது மீண்டும் தன் வழிக்குக் கொண்டு வர முயற்சிக்கிறான.

இதற்குப் பிறகுதான் பெரிய பிரச்சினை இருக்கிறது. ஒன்று, அந்தப் பெண் முற்போக்கான பெண். கல்லூரியில் எப்படியோ அவனைக் காதலித்து விட, கல்லூரிக்குப் பிறகான வாழ்க்கை தடம் மாறுகிறது. இத்தனைக்கும் தன் காலில் அவள் நிற்கும் போது ஏன் அவன் பின்னாலே சுற்றுகிறாள் என்பது மில்லியன் டாலர் கேள்வி. தூக்கி எறிந்து விட்டுப் போயிருக்க வேண்டும்.

காதலால் அவன் மீது வைத்த பாசத்தால் அப்படி இருக்கிறாள் என்று எடுத்துக் கொண்டால் அது மிகவும் பலவீனமானதாக இருக்கிறது. ஏனென்றால் அந்தப் பெண்ணுக்கு மிகத் தெளிவாகவே தெரிகிறது அவன் ஒரு லோஃபர் என்று. அத்தனையையும் தாண்டி அவள் அவனைவிட்டு விலகும்போது, ஒரு கட்டத்தில் அவன் இவளிடமிருந்து விலகிப் போகிறான். விட்டது சனியன் என்றில்லாஎன்றில்லாமல், ஏன் இவள் சென்று அவனைக் கட்டிப்பிடிக்கிறாள் என்பது அடுத்த மில்லியன் டாலர் கேள்வி. உண்மையில் படம் தன் அத்தனை நிலைப்பாடுகளில் இருந்தும் தவறிய தருணம் அதுவே. அந்த காட்சி அந்தப் படத்தையும் அந்தப் பெண்ணின் கதாபாத்திரத்தையும் மொத்தமாக உடைத்து விட்டது என்பதுதான் உண்மை.

நியாயப்படி இந்தப் பெண் அவனை அழைத்து செருப்பால் ஒரு அறை அறைந்து, இனிமேல் நீ உன் வேலையை பார்த்துக் கொள் என்று சொல்லி இருக்க வேண்டும். இந்தக் காட்சியை ஒரு பெண்ணியத் தருணத்திற்காக நான் சொல்லவில்லை. உண்மையிலேயே அதைச் செய்திருக்க வேண்டும் அந்தப் பெண். அப்படிப்பட்ட ஒரு குடிகாரன்தான் அவனது காதலன். ஆனால் இத்தனைக்கும் பின்னால் சென்று அவள் அவனைக் கட்டிக் கொள்வாள் என்பது பெண்களை நிஜமாகவே மட்டம் தட்டும் ஒரு செயல்.

அடுத்து, இப்படி ஒரு பெண் நல்லவனாக இருந்து விட்டால் எங்கே பிரச்சினை குறைவாக இருக்குமோ என்று அந்தப் பெண்ணுக்கும் ஆயிரம் சிக்கல்களை ஏற்படுத்தி வைத்திருக்கிறார் இயக்குநர். நவீனப் பார்வையில் அதுவும் ஒரு திரைக்கதை சூட்சமம்தான் என்றாலும், இது அந்தப் பெண் பக்கத்திற்கான நியாயத்தை பெருமளவில் குறைகிறது. ஏனென்றால், காதலனான குடிகாரனைப் பார்த்துச் சொல்கிறாள், பகலில் குடிக்காதே என்று. அதன் அர்த்தம் இரவில் குடிக்கலாம். கூடவே இவளும் தன் நண்பர்களுடன் சேர்ந்து குடிக்கிறாள். ஏற்கெனவே ஒருமுறை தம் அடித்து பார்த்திருக்கிறேன், பிடிக்கவில்லை என்பதால் தம் அடிப்பதில்லை என்கிறாள். கூட இருக்கும் பெண்கள் எல்லாம் கஞ்சா அடிக்கிறார்கள். இதெல்லாம் செய்யும் ஒரு பெண் கதாபாத்திரத்தைப் பார்த்து யாருக்குப் பாவம் தோன்றும்? ஆனாலும் இந்தப் படத்தில் தோன்றுகிறது. காரணம் அவளுடைய காதலனை இதைவிட கேவலமானதாக கட்டியிருப்பதால். ஆம், தனக்காக உருகும் ஒரு பெண்ணைப் பாபார்த்து அவன் தேவடியா என்கிறான்.

மீண்டும் ஒரு முறை இப்படம் அதன் அடிப்படையில் உடைவது இறுதிக் காட்சிகாலில். எல்லாம் முடிந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு என்று போடும்போது, அந்த லோஃபர் காதலன் மிகப்பெரிய ஒரு உணவுக் கடையை திறந்து வைத்திருக்கிறான். அங்கே அந்தக் காதலி சாப்பிட வருகிறாள். அவனைப் பார்த்துக் கை கொடுக்கிறாள். அவன் வாழ்க்கையில் வென்று விட்டதாக அவளே சொல்கிறாள். உனக்காக சந்தோஷப்படுகிறேன் என்கிறாள். அவன் அவளுக்குப் பிடித்த ஒரு ஸ்வீட்டை கொண்டு வந்து கொடுக்கிறான். இது சொல்ல வருவது என்ன? இப்படிப்பட்ட லோஃபரை எல்லாம் விட்டுவிட்டுப் போய்விடாதீர்கள் பெண்களே, இவர்கள் நிச்சயம் ஒரு காலத்தில் வெல்வார்கள் என்றா? அப்படிச் சொல்ல நினைத்தால் இந்தப் படம் கிறுக்குத்தனமான ஆண் மையப் படமாக மாறி விடுகிறது. முழுக்கவே இது அராஜகமான ஆண் மையப் படம்தான் என்பது வேறு விஷயம். நான் ஆண் மையப் படங்களுக்கு எதிரி அல்ல. ஆனால் அது நியாயமான விதத்தில் உருவாக வேண்டும்.

அந்த இறுதிக்காட்சி, அதுவரை அந்தப் பெண் பட்ட கஷ்டங்களை எல்லாம் பொடிப்படியாக்குகிறது. நியாயமாக அந்தக் காட்சியில் அந்தப் பெண் ஒரு நல்ல கணவருடன், கையில் ஒரு குழந்தையுடன் இவனைப் பார்த்து, ‘நான் சொன்னேன்ல இவர்தான்’ என்று தன் கணவனிடம் சொல்வது போல் ஒரு செருப்படியுடன் முடித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாதது இயக்குநரின் பெரிய தவறு.

ஏன் இப்படிப்பட்ட தவறுகள் நிகழ்கின்றன? ரொம்ப சிம்பிள். இயக்குநர்கள் எப்போதுமே மார்டனாகத் திரைப்படத்தை உருவாக்க நினைக்கிறார்கள். அதற்காகத் தங்கள் மனதில் எதெல்லாம் மாடர்ன் என்று நினைக்கிறார்களோ அதையே காட்சிகளாக உருவாக்குகிறார்கள். இதனால்தான் திருமணத்திற்கு முந்தைய உறவு, பெண்கள் தண்ணியடிப்பது, பெண்கள் சிகரெட் புகைப்பது, பெண்கள் கஞ்சா உண்பது எல்லாம் சாதாரணமான விஷயம் என்று மீண்டும் மீண்டும் வலிய நுழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இதை மறுப்பவர்கள் பூமர் ஆகிவிடுகிறார்கள். இந்தப் படத்திலும் அதுதான் நடக்கிறது.

இத்தனைக்கும் இப்படி லோஃபர் போல அலையும் ஒருவனது குடும்பம் எப்படி இருக்கிறது என்றால் அங்கே அதைவிட பிரச்சினை. அவனது அப்பா இன்னொருத்தியை வைத்துக் கொண்டிருக்கிறான். இப்படிப்பட்ட குடும்பத்தில் ஒருவனைப் பார்த்து ஒரு பெண், அதுவும் நல்ல நிலையில் இருக்கும் ஒரு பெண், அதுவும் அவனைவிட பல லட்சம் சம்பாதிக்கும் ஒரு பெண் ஏன் காதலிக்க வேண்டும்? இதைத்தான் மார்டன் என்று காண்பிக்கிறார்கள். இதுதான் படத்தை டாக்ஸிக் ஆக்குகிறது. இப்படிப்பட்ட ஒரு பெண் ஒரு லோஃபரைக் காதலிக்கலாம் என்பதும் அந்த லோபர் அவளை தேவடியா என்று சொன்னாலும் அவள் கடைசியில் வந்து கட்டிக் கொள்வாள் என்பதும்தான் இந்தப் படத்தை டாக்சிக் படமாக மாற்றுகிறது.

உண்மையில் அந்தக் காதலி ஒரு தடவையாவது அவனைச் செருப்பால் அடிக்காமல் விட்டதுதான் இந்தப் படத்தின் பெரிய மைனஸ் பாயிண்ட்.

மீண்டும் மீண்டும் இது போன்ற நவீனத் திரைப்பட இயக்குநர்களுக்குக் கைகூப்பி ஒரு வேண்டுகோள். தொடக்கம் முதல் இறுதி வரை இப்படிப்பட்ட நவீன கதாநாயகிகளை அழ வைக்காதீர்கள். அந்தப் பெண் நெஞ்சுரம் கொண்டு எதையும் எதிர்த்து நிற்கும் ஒரு பெண்ணாக இருக்கட்டும். இல்லையென்றால் நீங்கள் பேசாமல் துலாபாரம் எடுப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

மணிகண்டனும் ஹீரோயினாக வரும் அந்த பெண்ணும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். திரைக்கதையைப் பொறுத்தவரை மீண்டும் மீண்டும் ஒரே போன்ற காட்சிகள் வந்து எரிச்சலை ஏற்படுத்துகின்றன. அதைக் கொஞ்சம் சரி செய்திருந்தால் படம் ஓரளவு மேம்பட்டியிருக்கும். மணிகண்டனுக்காகவும் அந்தப் பெண்ணுக்காகவும் பார்க்கலாம்.

Share

அயலான்

அயலான் – பல குறைகள் இருந்தாலும் தமிழில் வந்திருக்கும் ஒரு பொருட்படுத்தத் தக்க படமே. நல்ல கிராஃபிக்ஸ். குழந்தைகளுக்கான படம் என்ற தெளிவு. இந்த இரண்டும் படத்தை சுவாரஸ்யமானதாக்குகின்றன.

,ஹீரோ பெயர் தமிழ் & வில்லனுக்குப் பெயர் ஆரியன், ஆதார் கார்டைக் கிண்டலடிக்கும் ஐடெண்டிடி கார்ட் போன்ற குறியீடுகளைச் சமன் செய்யும் சில வசனங்களும் உண்டு, ‘இந்த ஊர்ல ஒரு திட்டத்தை செயல்பட விடமாட்டாங்களே… போராட்டம்னு ஆரம்பிச்சிருவாங்களே.’

மின்னல் முரளி, எந்திரன் போன்ற திரைப்படங்களின் நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. விவசாயம், கிராமம் என்றெல்லாம் எரிச்சலைக் கிளப்பி கொட்டாவி வரும் நேரத்தில் அயலான் வருகிறான். பின்னரே படம் சுதாரித்துக் கொள்கிறது. முதல் அரை மணி நேரக் கிராமத்துக் காட்சிகளை எல்லாம் வெட்டி எறிந்துவிட்டு, ,நேரடியாக அயலான் காட்சியில் ஆரம்பித்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

கிளைமாக்ஸ் காட்சி மிக அருமை. அயலானின் கிராஃபிக்ஸ் நிஜ பிராணி என்று நம்ப வைக்கும் வகையில் இருப்பதும் அருமை. யோகி பாபு பெரிய ப்ளஸ். பின்னணி இசை கொடூரம். படத்தின் மிகப் பெரிய மைனஸ் இது. இன்னொரு மைனஸ் சித்தார்த்தின் குரல். அதேசமயம் விஜய் சேதுபதியைப் போடாததற்கு நன்றி சொல்லத்தான் வேண்டும். ஆங்கிலப் படங்களில் இருக்கும் லாஜிக் தீவிரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் எடுத்தது, திரைக்கதை ரீதியாக மைனஸ். ஆனால் தமிழில் அறிவியல் புனைகதைப் படங்களே இல்லை என்ற நிலையில், இந்த அளவுக்கு ஒரு படம் வந்திருப்பதே சிறப்புதான்.

சிவகார்த்திகேயன் குழந்தைகளின் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

இஷா கோபிகர் பெயரைப் பார்த்ததும் பழைய நினைவுகள். எவ்வளவு பெரிய திறமைசாலி. கூகிள் தேடிப் பார்த்தேன். பிஜேபியில் இருக்கிறாராம்.

இயக்குநர் ஆர்.ரவிக்குமாரின் ‘இன்று நேற்று நாளை’ நல்ல சுவாரஸ்யமான அறிவியல் புனைகதைத் திரைப்படம். அயலான் இன்னும் சிறப்பு. தேவையற்ற அரசியல் வசனத் தெறிப்புகளில் சிக்கிச் சிதறிப் போகாமல் பெரிய இயக்குநராக இவர் வர வாழ்த்துகள்.

Share

மாமன்னன் – சாதா மன்னன்

மாமன்னன் – தீவிரமான வெளிப்படையான குறியீடுகளுடன் ஒரு படம். பட்டியலின ஆதரவுத் தரப்பு என்பதை திராவிட அரசியல் நிலைப்பாட்டுடன் வெளிப்படுத்தும் தீவிரமான கலைத்தன்மையுடன் கூடிய திரைப்படங்களைப் போல இன்னும் அதன் எதிர்த்தரப்பிலிருந்து அதே பட்டியலின ஆதரவுடன் வராமல் இருப்பது நம் துரதிஷ்டம் என்றே சொல்லவேண்டும். மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் போன்றவர்கள் திராவிட தலித் ஆதரவைத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்கள்.

இத்திரைப்படத்தை எவ்விதச் சார்பும் இன்றி ஆராய்ந்து பார்த்தால்,

• முதல் நாற்பது நிமிடங்கள் படம் எதையுமே சொல்லவில்லை. தாமிரபரணியில் ஆளும்கட்சி / போலிஸால் மாஞ்சோலைத் தொழிலாளர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை இத்திரைப்படம் சாதிய மோதலாக உருவகிக்கிறது. ஆனால் இந்த முக்கியமான சம்பவம் படத்தின் மையச் சரடோடு பயணிக்காததால் வெறும் ஒரு காட்சியாகத் தனித்து நின்றுவிடுகிறது. எப்படியாவது பதற்றத்தைப் பார்வையாளர்களின் மனதில் உருவாக்கிவிடவேண்டும் என்ற இயக்குநரின் ஆசையைத் தாண்டி எதுவுமில்லை.

• அதற்கடுத்த ஒரு மணி நேரம், பரபரப்பின் உச்சம். அதுவும் மாமன்னன் நாற்காலியில் உட்காரும் காட்சி மிக அருமை.

• அதன் பின் படத்தில் பொருட்படுத்தத்தக்க கோர்வையான காட்சிகளே இல்லை என்று சொல்லிவிடலாம். அதுவரை மிகத் துல்லியமாகச் சொல்லப்பட்ட வசனங்கள் நீர்த்துப் போகத் தொடங்குகின்றன. மீண்டும் மீண்டும் ஒரே விதமான காட்சிகள், ஒரே விதமான வசனம். இவையெல்லாம் வெறும் தனித்தனிக் காட்சிகளாகத் திரையில் தோன்றி மறைகின்றன. அவை எவ்விதத் தாக்கத்தையும் உண்டாக்கவில்லை. சாவுக்கு வரும் காட்சி, திடீரென இளைஞர்கள் திரண்டு வந்து நிற்கும் காட்சி, ரத்னவேலு காலில் விழும் காட்சி, காரில் மாமன்னன் துப்பாக்கியால் மிரட்டும் காட்சி, கீர்த்தி சுரேஷிடம் அதிவீரன் கோபமாகப் பேசும் காட்சி என எதுவுமே ஒட்டவில்லை. எல்லாம் திடீர் திடீர்க் காட்சிகள். அதிலும் ஒரே ஒரு வீடியோவில் மாமன்னன் வெல்வதெல்லாம் கொடுமை. அதிலும் அந்த வீடியோவில் மாமன்னன் பேசுவதெல்லாம் எவ்வித ஆழமும் இன்றி மேம்போக்காக இருக்கிறது.

• உச்சகட்டக் காட்சியில் மாமன்னன் சபாநாயகராகப் பதவி ஏற்பது அருமை. அதற்கு முந்தைய சண்டை எல்லாம் பொறுமையைச் சோதிக்கிறது.

• கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் மாமன்னன் அதிமுகவாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. முன்னாள் சபாநாயகர் தனபாலை மனதில் வைத்து மட்டும் சொல்லவில்லை. ரத்னவேலு கட்சி மாறியதும் அக்கட்சித் தலைவரின் படம் தினகரனில் முதல் பக்கத்தில் வருகிறது. தினகரனில் முதல் பக்கத்தில் விளம்பரம் வந்தால் நிச்சயம் அது அதிமுகவாக இருக்கமுடியாது. எனவே மாமன்னன் அதிமுகதான் என்பது நிரூபணமாகிறது. (நானே யோசிச்சேன்!)

• இத்தனை முக்கியமான படத்துக்கு இத்தனை சப்பையான பாடல்களைப் போட்டிருக்கவேண்டாம். இன்னும் கதைக்களத்துடன் பயணப்பட ஏ.ஆர்.ரகுமானால் முடியவில்லை. ஆனால் பின்னணி இசையில் சமாளிக்கிறார்.

• ரத்னவேலுவின் மனைவியாக வரும் நடிகையும் சரி, கீர்த்தி சுரேஷும் சரி – வீண்.

• பன்றி நாய் குறியீடெல்லாம் சுத்த அறுவை.

• வடிவேலுவின் நடிப்பு பிரமாதம். அதேபோல் ஃபகத்தின் நடிப்பும். இருவருக்கும் ஈடுகொடுக்க முடியாமல் உதயநிதி ஏதோ சமாளிக்கிறார்.

பரியேறும் பெருமாள் > கர்ணன் > மாமன்னன்.

Share

வலிமை – ஹைடெக்

வலிமை – மிரட்டலாக எடுத்திருக்கிறார்கள். அனைத்து உச்ச நடிகர்களும் நகைச்சுவைக் காட்சிகள், காதல், குடும்பத்தைக் கொல்லும் வில்லன், பழிவாங்கல் என்று போய்க்கொண்டிருக்க, இது எதுவுமே இல்லாமல் ஒரு படத்தை நடிக்க முன்வந்திருக்கும் தைரியத்துக்காக அஜித்தை நிச்சயம் பாராட்டவேண்டும். ஒரு நவீன தொழில்நுட்பத் திரைப்படம் எப்படி இருக்கவேண்டும் என்று பாடம் எடுத்திருக்கிறார்கள். வித்தியாசமாக யோசித்து, எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்து, லாபமும் பார்ப்பதெல்லாம் பெரிய சாதனை. வலிமை டீமுக்கு வாழ்த்துகள்.

மைனஸ் பாய்ண்ட் என்று சொல்லவேண்டுமானால், பேசி பேசியே அனைத்துப் பெரிய பிரச்சினைகளையும் அஜித் விடுவிப்பது, நீளமான அந்த பைக் ரேஸ், வில்லனை ஏமாற்றுவதை ஒரே போல் இரண்டு முறை செய்வது, என்னதான் லாஜிக் வேண்டாம் என்றாலும் அரசு வசம் இருக்கும் போதை மருந்தை அஜித் எடுப்பது இவையெல்லாம்தான். செண்ட்டிமெண்ட் அதிகம் என்று அனைவரும் சொன்னார்கள், நான் பார்த்தது எடிட் செய்யப்பட்ட வெர்ஷன் போல, அதில் அத்தனை செண்டிமெண்ட் இல்லை.

மிக முக்கியமாகக் குறிப்பிடவேண்டியது, உச்சக்காட்சியில் கதாநாயகன் கொலைகாரர்களை மன்னித்து ஒரு வழக்கு கூட இல்லாமல் விடுவிப்பது – இது அராஜகம். என்னதான் கதாநாயகனுக்குக் காவடி எடுக்கவேண்டும் என்றாலும் இத்தனை தூரம் தரம் தாழவேண்டியதில்லை.

வில்லனை அஜித் காவல்துறை பஸ்ஸில் கொண்டு போகும் சேஸிங் காட்சி, மிக நீளமாக இருந்தாலும், அட்டகாசமாக இருந்தது. அஜித் நன்றாக இருக்கிறார், கெத்தாக இருக்கிறார், முக்கியமாக மிக நன்றாக நடிக்கிறார்.

செய்ன் அறுப்பு என்பது எனக்கு மிகவும் பதற்றம் தரும் ஒன்று. சில நிஜ வீடியோக்களைப் பார்த்திருக்கிறேன். அதை நினைத்தாலே பதற்றம் வந்துவிடும். இந்தப் பதற்றத்தை அப்படியே திரையில் கொண்டு வந்த தமிழ்ப்படம் மெட்ரோ. உச்சக்காட்சிகள் மட்டுமே சொதப்பல். வலிமை திரைப்படத்தின் முதல் பதினைந்து நிமிடங்கள், அஜித் வராதபோதும், பரபரப்பாக இருந்ததற்கு இந்த செய்ன் அறுப்புக் காட்சிகளும் அதை ஒட்டிய கொலைகளுமே காரணம். இன்னும் ‘மெட்ரோ’ படத்தை இப்படம் தொடவில்லை என்றாலும், வலிமையும் முக்கியமான பதிவுதான்.

இனி அரசியல். இவ்வளவு பார்க்கவேண்டுமா என்பவர்கள் இங்கேயே ஜூட் விட்டுவிடவும். என் நோக்கமே இதைப் பதிவு செய்யத்தான்!

பொதுவாகவே அஜித் ஹிந்துக்களுக்கு எதிராக வேண்டுமென்றே எதையும் திணிப்பதில்லை என்று இங்கே இருக்கும் அஜித் ரசிக ஹிந்துத்துவர்கள் சொல்வது வழக்கம். நானும் அதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது என்றுதான் நம்புகிறேன். இப்போதும்!

அதே சமயம் இந்தப் படத்தில் வந்திருக்கும் சில காட்சிகளைப் பற்றி ஒரு குறிப்பாவது எழுதி வைத்துக்கொள்வது நல்லது என்றும் தோன்றியது. இந்த இயக்குநரின் அடுத்த படத்துக்கு நமக்கு உதவலாம்! (இயக்குநர் மட்டுமே இதற்குப் பொறுப்பு என்று நழுவிவிடவும் முடியாது!) இதே இயக்குநரின் மிக முக்கியமான படமான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திலும் இப்படிப் பிரச்சினைகள் இருந்தன. மத ரீதியிலானது அல்ல, இவர்கள் இப்படித்தான் என்னும் மோசமான முத்திரை குத்தல் தொடர்பானது.

வலிமை படத்தில், குடிகாரனாக வரும் ஒருவன் பெரும் பட்டை போட்டுக்கொண்டு வருகிறான்.

ஐயப்ப மாலை போட்டிருக்கும் அண்ணன் ஐயப்ப மாலையைப் பாலில் கழற்றிப் போட்டுவிட்டுக் குடிக்கிறான்! அப்படிக் குடித்தால் பாவமில்லை என்று ஒரு நியாயமும் கற்பிக்கிறான். இதைப் பார்த்துவிட்டு இன்னும் எத்தனை பேர் ஆரம்பிக்கப் போகிறார்களோ..

வில்லன் கதாபாத்திரம், அதாவது செய்ன் அறுப்பு + போதை மாஃபியா + கொடூரக் கொலைகாரனை மட்டும் ஜி என்று அழைக்கச் சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

மற்றபடி வலிமை வலிமைதான்!

Share

சுட்டுப் பிடிக்க உத்தரவு – கபட நாடகம்

சுட்டுப் பிடிக்க உத்தரவு – கபட நாடகம்

கோவை தொடர் குண்டுவெடிப்பு என்பது தமிழ்நாட்டில் எத்தனை முக்கியமான தீவிரவாத நிகழ்வு என்பது எல்லாருக்கும் தெரியும். சிதைந்த வேனும் வெடிக்க காத்திருந்த காரும் அத்தனை மறக்கக் கூடியதல்ல. இத்தனை முக்கியமான ஒரு நிகழ்வைப் பின்னணியாக வைத்து ஒரு படம் வருகிறது என்றால், அது எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்? எப்படிப்பட்டதாக இருக்கக்கூடாது என்று தெரியவேண்டுமானால் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ பார்க்கலாம்.

1998 Coimbatore bombings.gif
Nine convicted in Coimbatore blast case released - The Hindu

ஒரு முக்கியமான நிகழ்வை, ஒரு மாநிலத்தையே உலுக்கிய நிகழ்வை மையமாக வைத்து முக்கியமான திரைப்படங்கள் உலகம் முழுக்க வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டுக்கு மட்டும் ஒரு சாபம் இருக்கிறது. உண்மையைச் சொல்வதைவிட யாரையாவது தாஜா செய்யவேண்டும் என்றால் அதற்காக இந்தக் கருவை எடுத்துக்கொண்டு, மனசாட்சியை அடகு வைத்துவிட்டுப் படம் எடுப்பது. அந்த அளவுக்கு தாஜா அரசியல் இங்கு ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அரசியலிலும் திரை உலகிலும்.

இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தின் கோர முகத்தை கோயமுத்தூரில் பார்த்தோம். இஸ்லாமியர்களை எப்போதும் உச்சி மோந்து அன்பு செலுத்தும் கருணாநிதி கூட இந்தக் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தீவிரமான நடவடிக்கை எடுத்தார் என்று திமுகவினரே சொல்வார்கள். இதைக் குறை சொல்லியும் பல திமுக ஆதரவு இஸ்லாமியர்கள் இன்று வரை பதிவுகள் இடுவதைக் காணலாம். ரஜினி சம்பந்தமே இல்லாமல் ஒரு அறிக்கை தந்தார். திமுகவைச் சேர்ந்த இஸ்லாமியர்களே ரஜினி சொன்னது மடத்தனம் என்றும், இந்தக் குண்டுவெடிப்புக்கு அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புக்களே காரணம் என்று ஒப்புக்கொண்டதும் வரலாறு. இதுகுறித்து ரஜினி இன்று வரை வருத்தம் தெரிவிக்கவில்லை என்பது வேறு விஷயம். இப்படி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பின்னணியைக் கொஞ்சம் கூட வரலாற்றுப் பிரக்ஞையோ பொறுப்போ இல்லாமல் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இப்படத்தில் ஒரு தீவிரவாதக் குழு கோவையில் குண்டு வெடிப்பு நிகழ்த்த திட்டமிடுகிறது. அவர்கள் உடை பாவனை பேச்சு எல்லாம் இஸ்லாமியத் தீவிரவாதிகள் போலவே இருக்கிறது. ஆனால் வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆறு தீவிரவாதிகளின் பெயர்களைக் கூடச் சொல்லாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா. ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஒரு தீவிரவாதியின் பெயர் முபாரக் என்று வருகிறது என நினைக்கிறேன். தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பைத் தடுத்து நிறுத்தி வெற்றி பெறுகிறது தமிழகக் காவல்துறை.

பயங்கரவாதிகளுக்கு உதவும் ஒருவரது பெயர் தெளிவாகச் சொல்லப்படுகிறது. ஹிந்து. இது உண்மையாக இருக்கவே வாய்ப்பும் அதிகம். அதை மறுப்பது என் நோக்கமல்ல. ஆனால் தீவிரவாதிகளின் பெயர்கள்? இயக்குநர் அந்தச் சமயத்தில் தாஜா அரசியல் மற்றும் செக்யூலரிசத்தின் உச்சத்துக்குப் போய்விட்டார். அத்துடன் நிற்கவில்லை. இந்தத் தீவிரவாதத் தாக்குதலை முறியடிக்கும் இன்ஸ்பெக்டரின் பெயர் இப்ராஹிம்! இயக்குநர் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பார் என்பது நிச்சயம்.

படத்தில் இரண்டு முறை ஒரு வசனம் வருகிறது. இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்தால் மசூதியில் தொழுபவர்கள் இறந்து போய்விடுவார்கள் என்று. அதாவது இது இஸ்லாமியர்களுக்கு எதிரான படமல்ல என்று இயக்குநர் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறாராம். இத்தனை உண்மைகளைக் கவனம் எடுத்து வலிந்து வலிந்து சொன்ன இயக்குநருக்குப் பயங்கரவாதிகளின் பின்னணியை விவரிப்பதில் மட்டும் செலக்டிவ் அம்னீஷியா வந்துவிடுகிறது. ஒரு தீவிரவாத நிகழ்வை அப்படியே படம் எடுப்பதில் என்ன பிரச்சினை? அது எப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கும் மதத்துக்கும் எதிரான படமாகும்? உண்மையில் இப்படி யோசிப்பதே அந்த மதத்தினருக்குச் செய்யும் அநீதி அல்லவா? இப்படி யோசிப்பவன் தானே நியாயமானவனாக இருக்கமுடியும்? ஆனால் இங்கே அவன் கட்டம் கட்டப்படுவான். எனவேதான் இயக்குநர்கள் எதிர்த்திசைக்குப் போகிறார்கள்.

இத்தனை பெரிய குண்டுவெடிப்பை காவல்துறை தடுத்து நிறுத்த ஒரு நாடகம் நடத்துகிறார்கள். அந்த நாடகம் – ஐயகோ. குண்டுவெடிப்பைக் காட்டிலும் கொடூரமானதாக இருக்கிறது. இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்று கூட இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா யோசிக்கவில்லை. அவரது நோக்கம் உண்மையைப் பதிவு செய்வதல்ல, மாறாக ஒரு நாடகத்தைச் சொல்வதுதான் என்பது உறுதியானபின்பு அவர் ஏன் இதைப் பற்றிக் கவலை கொள்ளப் போகிறார்!

தமிழ்நாட்டுத் திரையுலகம், உண்மையான நிகழ்வைப் பின்னணியாக வைத்து அரசியல் ரீதியான தீவிரமான படம் எடுப்பதில் இன்னும் வயதுக்கு வரவில்லை என்று சொல்லலாமா? இப்படியும் சொல்லிவிடமுடியாது. இதுவே ஹிந்துக்களுக்கு எதிரான திரைப்படம் என்றால் எல்லாவிதமான திறமைகளையும் ஒரே நேரத்தில் இறக்கிப் படமெடுப்பார்கள் என்பது உறுதி. உண்மையான நிகழ்வை அப்படியே பதிவு செய்யாமல், தங்களது மன ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் புகுத்தி ஒரு படம் எடுத்தால் அங்கே கலை செத்துப் போய்விடும். ஆனால் முற்போக்காளர் பட்டமும் பணமும் கிடைக்கும். எது தேவை என்பதை இயக்குநர்கள் தெளிவாகவே முடிவு செய்துவிடுகிறார்கள்.

ஆனாலும் நாம் சில நன்றிகளைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். ஒன்று, இந்தக் குண்டுவெடிப்பைத் திட்டமிடும் தீவிரவாதிகளின் பின்னணியைக் காண்பிக்கவில்லை என்பது போலவே, இந்த குண்டுவெடிப்பு நியாயமான தேவையான ஒன்றுதான் என்ற அளவுக்கு இயக்குநர் யோசிக்காமல் இருந்திருக்கிறாரே, அதற்கு முதல் நன்றி! இரண்டு, குண்டுவெடிப்பைத் தகர்க்க உதவும் இஸ்லாமிய போலிஸுக்கு உதவும் மற்றவர்கள் ஹிந்துக்கள். அவர்களையும் இஸ்லாமியர்களாகவோ கிறித்துவர்களாகவோ யோசிக்காத இயக்குநருக்கு நன்றி சொல்லவேண்டாமா! இயக்குநர் இதையெல்லாம் யோசித்து மனதில் வைத்து அடுத்த படத்தில் இன்னும் பதினாறு அடி பாய வாழ்த்துவோம்.

Share

சிகை

சிகை திரைப்படம் – நல்ல முயற்சி. இன்னும் மிகச் சிறப்பாக வந்திருக்கவேண்டியது ஏன் சறுக்கியது என்று யோசித்ததில்:

* நல்ல படங்களுக்கு ஏற்படும் லாஜிக் சிக்கல் மிக முக்கியமான பிரச்சினையாக உருவெத்துவிடும். பாலியல் புரோக்கராக வருபவர் இத்தனை கருணை கொண்டவராகவும் அறத்தைப் பார்ப்பவராகவும் நியாயமானவராகவும் இருக்கிறார். இத்தனை நல்லியல்புகள் கொண்டவர் ஏன் புரோக்கராக இருக்கவேண்டும் என்று பிடிபடவே இல்லை. இது இப்படித்தான் என்றோ, இது இப்படியும் இருக்கலாமே என்றோ கடந்துபோகமுடியவில்லை.

* என்னதான் புரோக்கர் நல்லவராக இருந்தாலும் ஒரு கொலையைக் கண்ட பின்பும் ஒரு பாலியல் தொழிலாளியைத் தேடிச் செல்வதெல்லாம் ஒட்டவே இல்லை. இதையும் மீறி நாம் நம்புவதன் காரணம், அந்த புரோக்கராக வரும் நடிகரின் அமைதியான யதார்த்தமான நடிப்பும், படமாக்கப்பட்ட விதமும்தான்.

* சிகை படம் பற்றிய ஆர்வம் வந்ததே கதிர் பெண் போன்ற வேடத்தில் இருந்த புகைப்படம் மூலமாகத்தான். அசரடிக்கும் வகையிலான மேக்கப்புடன் அந்தப் புகைப்படம் வெளியாகியிருந்தது. ஆனால் படத்தில் அந்தக் கதாபாத்திரம் வருவதோ மிகச் சொற்ப நேரம்தான். அதனால் மனம் அந்தக் கதாபாத்திரத்தையே எதிர்நோக்கி இருந்தது.

* கதிரின் பாத்திரம் தொடர்பான காட்சிகளைவிட, முதல் பாதி காட்சிகள் உயிரோட்டமாக இருந்தன. நம்பகத்தன்மை என்ற ஒன்றைத்தாண்டி, காட்சிகளின் படமாக்கம் நன்றாக இருந்தது.

* ஒரு பெண் தற்கொலை செய்துகொள்ள முயல்வதும் ஆண்மையவாதத்தைக் கேள்வி கேட்பதும் கணவன் கொலை செய்ய முயன்றான் என்று சொல்வதுமான காட்சிகள் தேவையற்றவை, வலிந்து திணிக்க முற்பட்டவை போன்ற தோற்றம் தருகின்றன. அதுவரை கதை செல்லும் பார்வையிலிருந்து ஒரு மாற்றம் திடீரென்று வருகிறது.

* ஒரே இரவில் இரண்டு கொலைகளை கதிர் செய்துவிடுவதையெல்லாம் இன்னும் கொஞ்சம் சிறப்பாக யோசித்திருக்கலாம்.

* கதிரின் திருநங்கை பாத்திரம் அத்தனை சிறிய இடைவெளியில் முடிந்துபோவதைத் தவிர்த்திருக்கலாம்.

* இந்தப் படத்தை ஒரு திரில்லர் போல யோசித்தது ஏன் என்று புரியவில்லை. அப்படி யோசிக்காமல் இருந்திருந்தால் மிக நல்ல படம் என்றாகி இருக்கும். ஆனால் முதல்பாதியில் இருந்த விறுவிறுப்பு இல்லாமல் போயிருக்கும். இப்போது படம் இரண்டும் இல்லாமல் வந்துவிட்டது.

கொஞ்சம் யோசித்து மெனக்கெட்டிருந்தால், எத்தனையோ மொக்கையான கேவலமான படங்களுக்கு மத்தியில் ஒரு டீசண்டான படம் என்ற இமேஜைத் தாண்டி வேறு ஒரு தளத்துக்குப் போயிருக்கும்.

Share

ஐரா: இரும்புக் கோடரியும் தங்கக் கோடரியும்

மார்ச் மாதத்தில் தேர்வுகள் முடிவடைந்ததுமே குழந்தைகளைத் திரையரங்குக்கு ஈர்க்கும் நோக்கில் பேய்ப்படங்கள் வரத் துவங்கிவிடும். இந்தமுறை வரும் அனைத்துப் பேய்ப்படங்களையும் என்ன ஆனாலும் பார்த்துவிடுவது என்று முடிவெடுத்திருக்கிறேன். ஹே ராம்! முதல் போணி ஐரா. எப்படியாவது ஒரு ஹிட் பேய்ப்படத்தைத் தந்துவிடுவது என்ற வெறியில் இருக்கும் நயந்தாராவிடம் இன்னும் எத்தனை முறை சிக்கிக்கொள்வோம் என்று தெரியவில்லை.

பேய்ப் படம் என்றால் ஒரு காட்சியில் கூடப் பயம் இருக்கக்கூடாது என்பதே தமிழ்ப் பேய்ப்படங்களின் தலைவிதி. காஞ்சனா, அரண்மனை போன்ற கொடுமைகள் பெற்ற வெற்றி, தொடர்ச்சியாக காமெடிப் பேய்ப் படங்களைக் கொண்டு வந்தன. கொஞ்சம் நல்ல முயற்சிகளான, தமிழின் உருப்படியான பேய்ப்படங்களான பீட்ஸா, மாயா மற்றும் டிமாண்டி காலணி போன்றவை வசூலில் ஒப்பீட்டளவில் பின்தங்கிப் போக, அசட்டு காமெடிப் பேய்ப் படங்கள் வசூலைக் குவித்தன. இந்த ஆசையில் வந்த படங்களுக்கு மத்தியில் ஐரா கொஞ்சம் வித்தியாசமானது. ஆம், இதில் அசட்டு காமெடிகூடக் கிடையாது!

கதை என்ற ஒன்று இல்லவே இல்லாமல், ஒரு காட்சி கூடப் பயமே இல்லாமல், ஒரு காட்சி கூடச் சிரிப்பே இல்லாமல் ஒரு படம். அதுவும் பேய்ப் படம். அதற்கு ஒரு ஃப்ளாஷ் பேக். அந்த ஃப்ளாஷ் பேக், 1960களில் ஜெமினி கணேசனும் சாவித்திரியும் அழுது வடிவதைவிடக் கூடுதலாக அழுது வடிகிறது. அதிலும் அந்த க்ளைமாக்ஸ், ஐயகோ.

நயந்தாராவுக்கு வயதாகிக்கொண்டே வருவது தெளிவாகத் தெரிகிறது. உடலைக் கச்சிதமாக வைப்பதன் மூலம் இளமையாகத் தெரிய முயல்கிறார். தெரிகிறார். முகம் காட்டிக்கொடுத்துவிடுகிறது. ஆனாலும் அழகாகவே இருக்கிறார். ஓம் சாந்தி! கருப்பு நயந்தாராவாக அவர் ஓவராக நடிப்பதெல்லாம் கொடுமையின் உச்சம். தாங்கமுடியவில்லை.

யோகி பாபு ஏன் வந்தார், குலப்புள்ளி லீலா ஏன் செத்தார் என்பதெல்லாம் படுபயங்கர சஸ்பென்ஸ் காட்சிகள். அதைவிட அந்தப் வண்ணத்துப் பூச்சி ஏன் வந்தது என்பதை இயக்குநர் இனி வரும் படத்தில் சொன்னால்தான் உண்டு. வண்ணத்துப் பூச்சியே வெறுத்துப் போகும் அளவு அதை கிராஃபிக்ஸில் காண்பிக்கிறார்கள்.

கருப்பு நிறத் தோல், ராசியற்ற பெண் என்ற கொடுமையையெல்லாம் அப்படியே பொறுமையாக, மெல்ல, நீளமாக, தூக்கம் வருமளவுக்குக் காட்டுகிறார்கள். அந்தக் குழந்தை பிறந்ததும் அப்பா இடி தாக்கி இறப்பதாக எடுக்கவெல்லாம் எதையும் எதிர்கொள்ளும் தைரியமான மனது ஒரு இயக்குநருக்கு இருக்கவேண்டும்.

இதையெல்லாம் தாண்டி சிவப்பு நயந்தாராவை கருப்பு நயந்தாரா ஏன் கொல்ல நினைக்கிறார் என்பதற்குக் காட்டப்படும் காரணம், ஐயையோ ரகம். ஹீரோ கருப்பு நயந்தாராவைக் காதலித்து, இரும்புக் கோடரியைத் தொலைத்தவனுக்கு வனதேவதையின் மூலம் தங்கக் கோடரி கிடைப்பது போல சிவப்பு நயந்தாரா கிடைக்க, ஒரு நிமிடம் பொறாமைப்பட்டுவிட்டேன். ஆனால் இயக்குநர் பொலிடிகல்லி கரெக்நெஸ்ஸைக் கைவிடாமல் இன்னொரு க்ளைமாக்ஸ் வைத்து நம்மை மந்திரித்து அனுப்பிவைக்கிறார்.

மிக சுமாரான படமாக்கம், நாடகம் போன்ற காட்சிகள் என்று எல்லாவிதமான மொக்கைகளும் ஒருங்கே அமைந்த ஒரு திரைப்படம். நயந்தாரா நடிக்காமல் இருந்தால் அழகாக இருக்கிறார். ஆனால் படத்தில் நடிக்கவேண்டிய கட்டாயம் வேறு. நம்மைக் கதறடிக்கிறார். அடுத்த பேய்ப் படமாவது நயந்தாராவுக்குச் சரியாக அமையட்டும்.

இந்தக் கொடுமையையெல்லாம் விஞ்சும் இன்னொரு கொடுமையைச் சொல்லாவிட்டால் முழுமையாகாது. ஐராவதம் என்ற யானையின் நினைவு சக்தியை மையமாக வைத்து இந்தப் படத்துக்கு ஐரா என்று பெயர் வைத்தார்களாம். :சுவரில் முட்டிகொள்ளும் ஜிஃப்:

நன்றி:
https://oreindianews.com/?p=4294

Share

பேரன்பு – துயரத்துள் வாழ்தல்

கத்தி மேல் நடக்க வேண்டிய ஒரு கதை. மிகக் கவனமாகவே கையாண்டிருக்கிறார் ராம். இயக்குநர் ராமின் திரைப்படங்களில் எப்படியோ தோற்றம் கொள்ளும் (அல்லது அப்படி எனக்குத் தோன்றும்) ஏதோ ஒன்றின் மீதான வெறுப்பு இத்திரைப்படத்தில் இல்லை. எனவேதான் படத்துக்கான பெயரைக் கூடப் பேரன்பு என்று வைத்துவிட்டார்.

ராம் திரைப்படங்களில் உள்ள பிரச்சினை யாரோ ஒருவரின் அதீத நடிப்பாக இருக்கும். தங்கமீன்கள் திரைப்படத்தில் அவரே அப்படியாக இருந்தார். அந்தத் தவறை எக்காரணம் கொண்டும் செய்துவிடக் கூடாது என்பதற்காகவே மம்முட்டியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். மூழ்கிக் கொல்லும் வதை வரும் போதிலும் ஒரு இம்மி அளவு கூடத் தன் நிலையில் இருந்து விலகிவிடாமல் ஒரு கதாபாத்திரம். அதை அச்சு அசலாகக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் மம்மூட்டி. தங்க மீன்கள் படத்தில் அதீத நடிப்பு செய்த அதே பெண் இந்தப் படத்தில் தன் நடிப்பின் மூலம் அசர வைத்திருக்கிறார். முகத்தையும் உடல்மொழியையும் முதலில் இருந்து கடைசி வரை ஒரே மாதிரியாக அவர் வைத்திருப்பது ஆச்சரியப்படுத்துகிறது. அப்படி இருக்கும் மனிதர்களின் வேதனை என்ன என்பதை நினைக்க வைத்து பதட்டத்தையும் கொண்டு வருகிறார்.

இதுபோன்ற மனநலம் பாதிக்கப்பட்ட மனிதர்களின் செக்ஸ் சார்ந்த சிந்தனைகள் என்னவாக இருக்கும் என்பதைப் பலமுறை நான் யோசித்திருக்கிறேன். இளவயதில் என் நண்பர்கள் பலர் செவிலியராக இருந்தவர்களே. அதில் சிலர் மனநலக் காப்பகத்தில் பணியாற்றியவர்கள். இது போன்ற மனிதர்களின் பல கதைகளைச் சொல்லி இருக்கிறச்ர்கள். அப்போதே எனக்கு சொல்லமுடியாத மனபாரம் அழுத்தி இருக்கிறது. இப்படி குடும்பத்தில் யாருக்கும் நேராத வரை எல்லாம் நமக்கு மிக எளிதான, வருத்தப் படும் சம்பவம் மட்டுமே. ஆனால் அதே துயரில் வாழ்வது வேறு. இதே பிரச்சினையை ஒரு படம் முழுக்க அலசியிருக்கிறார் ராம்.

அதிரவைக்கும் காட்சிகள் படத்தில் இரண்டு மூன்று உண்டு. அதில் உச்சகட்டத்தில் வரும் பதற்றம் தரும் காட்சியின் நீளம் கொஞ்சம் அதிகம். இசையற்ற அலை ஓசை இன்னும் காதில். மற்ற இரண்டு காட்சிகள் மிகச் சிறியவை. சில நொடிகள் கூட நீடிக்காதவை. இக்காட்சிகள் தரும் பதற்றமும் கொஞ்ச நஞ்சமல்ல. முதலாவது, தன் மகளுடன் ஒரே படுக்கையில் அன்புடன் உறங்கும் மம்முட்டி, மறுநாள் எழுந்து பார்க்கும் பொழுது, அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில், சோர்ந்து போய் ஒருநொடி தலையில் கை வைத்துக் கொள்ளும் காட்சி. இன்னொரு காட்சியில் அந்தப் பெண் ஒரு பொம்மைக்கு வண்ணம் தீட்டுவது. இது போன்ற சில காட்சிகள் நம்மை வருத்தப்பட வைக்கத்தான் செய்கின்றன.

இந்தப் படத்தில் இரண்டு அஞ்சலிகள். முதல் அஞ்சலி நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர். அழகாக வருகிறார். அழகாக நடிக்கிறார். இரண்டாவது அஞ்சலி, அஞ்சலி அமீர், மலையாளி. மலையாளத்தில் பிக் பாஸ் வெளியானபோது அதில் இவரும் ஒரு போட்டியாளராக நடுவில் வந்து சேர்ந்து கொண்டார். திருநங்கை. இந்தப் படத்தில் மிக அற்புதமாக நடித்திருப்பது இவரே. மிக அழகாக இருக்கிறார்.

இப்படத்தின் பிரச்சினைகள் என்ன என்று பார்த்தால் படம் மிக மிக மெல்லவே நகருகிறது. இதுபோன்ற படங்களுக்கு இது ஒரு பிரச்சினை அல்ல என்றாலும் கூட, முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரைக்குமான எங்கேயும் நகராத திரைக்கதை ஒரு சலிப்பைக் கொண்டு வருகிறது. இப்படி வெளிப்படையாகச் சொல்வதன் மூலம் மிகச் சிக்கலான ஒரு விஷயத்தைக் கையாளும் படத்தை மலினப்படுத்தக்கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வுடனேயே சொல்கிறேன். அதேசமயம் அந்தச் சலிப்பு ஏற்படுவது உண்மைதான். தமிழ்நடிகை அஞ்சலியின் கதாபாத்திரம் மிகவும் குழப்பமாக இருக்கிறது. தொடக்கம் முதல் இறுதிவரை ஒரு நாவலின் அத்தியாயங்கள் போல நகர்ந்தாலும் ஒரு நாவல் கொண்டிருக்க வேண்டிய புதிர்த்தன்மையைப் படத்தில் அஞ்சலி பாத்திரத்தில் நுழைத்தது ஏதோ ஒரு வகையில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் நல்லவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்ற ஒரு வசனத்தை வைப்பதற்காகவே அந்தக் காட்சியில் புதிர்த்தன்மை விளக்கப்படாமல், வேண்டுமென்று நுழைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் ஏற்கனவே மணமான ஒரு பெண் தன்னையே இழக்கத் துணிவது எல்லாம் கொஞ்சம் அதிகம்தான். இதற்கான காரணத்தை விளக்கி இருந்தால் கூட இந்தக் குழப்பம் வந்திருக்காது. அது ஒரு க்ளிஷே என்ற அளவில் மட்டும் போயிருக்கும்.

குழந்தையைப் பார்த்துக்கொள்ள வரும் அஞ்சலியைச் சுற்றி நிகழும் காட்சிகள் தேவையற்ற ஒரு திரில்லிங் தன்மையைக் கொண்டிருக்கின்றன. அவர் ஏன் குழந்தையைக் கொலை செய்யும் அளவுக்குப் போக வேண்டும் என்பதெல்லாம் குழப்பத்தைத் தரும் தேவையற்ற காட்சிகள்.

திருநங்கையாக வரும் அஞ்சலி படத்துக்கு உள்ளே வரும் காட்சியிலேயே அவர்தான் பேரன்பைத் தரப் போகிறார் என்பது நமக்குத் தெரிந்துவிடுகிறது. இதுபோன்ற படங்கள் எதிர்கொள்ளும் பெரிய சவால் அவற்றை எப்படி வளர்ப்பது, முடிப்பது என்பதுதான். இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. அப்பாவும் மகளும் ராசியாகும் காட்சிகளின் நீளத்தைக் குறைத்து இதைச் சமாளித்திருக்கவேண்டும்.

இந்தப் படத்தில் என்னளவில் நேர்ந்த பிரச்சினை, எந்தக் காட்சிடுடனும் முதலில் உணர்வுரீதியாக இணைந்து கொள்ள முடியாமல் போனதுதான். எடுத்த எடுப்பிலிருந்து பிரச்சினைக்குள் படம் நுழைந்ததால் வந்த பிரச்சினையாக இருக்கலாம். இதே போன்ற படத்தை, இந்த அளவுக்குத் தீவிரமாக, சிக்கலான ஒன்றைக் கையாளவில்லை இல்லை என்றாலும், மணிரத்னத்தின் அஞ்சலி திரைப்படத்தை ஒப்பு நோக்கலாம். அஞ்சலி திரைப்படம் சிரிப்பும் கும்மாளமுமாகத் தொடங்கி, அதற்கே பழகிப்போன நம்மை சட்டென உள்ளிழுத்துக்கொண்டு, அதற்குப் பிறகு குடும்பத்தில் நுழையும் ஒரு குழந்தையின் மூலம் அந்த பிரச்சினையைக் கையாளத் துவங்குகிறது. ஒரு வணிக சினிமாவுக்கான தேவை இதில் இருந்தாலும் கூட, சொல்லவேண்டிய பிரச்சினையின் தீவிரத்தைக் கொண்டு சேர்க்க அது ஓரளவுக்கு உதவியது என்றே நம்புகிறேன். இந்தப்படம் அது போன்ற மாயையில் சிக்கிக் கொள்ளவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் ஒட்டுமொத்த பார்வையாளர்களை முழுமையாக உள்ளிழுத்துக் கொள்ளுமா என்பது குறித்த சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் இப்படி ஒரு திரைப்படத்தை எடுக்க துணிந்ததற்காகவே இயக்குநர் ராம் பாராட்டப்பட வேண்டும். அதிலும் இதற்கு முன் அவரது படங்களில் இருந்த எந்தக் குழப்பங்களும் பிரச்சினைகளும் இந்தப் படத்தில் இல்லை. மிகத் தெளிவான கொதிக்கும் நீரோடை போல இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.

பின்குறிப்பு: இசை யுவன் ஷங்கர் ராஜா. பின்னணி இசை தொடக்கக் காட்சிகளில் மிக சுமாராக இருந்தது. பின்னர் பரவாயில்லை.

நன்றி: ஒரே இந்தியா வலைத்தளம்.

Share