Tag Archive for மலையாளம்

Kishkindha Kaandam(M)

கிஷ்கிந்தா காண்டம் (M) – அட்டகாசமான திரைப்படம். ஒற்றை வரியில் சொல்லக்கூடிய கதையை வைத்துக்கொண்டு திரைக்கதையில் மாயாஜாலம் காட்டி விட்டார்கள். படம் எடுத்த விதமும் காட்டின் சூழலும் என்ன நடந்தது என்பதை நாம் கணித்து விடவே கூடாது என்பதில் இயக்குநர் காட்டியிருக்கும் அசாத்தியமான திறமையும் அட்டகாசம். ஆசிஃப் அலியின் நடிப்பு பிரமாதமோ பிரமாதம். மற்றவர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள். நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம். மலையாளத்தில் மட்டும் பார்க்கவும். தமிழில் பார்த்தால் நிச்சயம் பல்லிளித்து விடும்.

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் கிடைக்கிறது.

Share

Two movies

Adiyos Amigo (M) – பேசி பேசியே சாவடித்துவிட்டார்கள். சூரஜ் வெஞ்சரமூடுவின் ஒரே போன்ற முகபாவமும் நடிப்பும் எரிச்சலூட்டுகின்றன. ஆசிஃப் அலி உயிரைக் கொடுத்து நடித்தாலும் எவ்வளவு நேரம் ஒரே காட்சியை, நகராத திரைக்கதையை மீண்டும் மீண்டும் காண்பது? அலவலாதித்தனத்தைச் சகித்துக் கொள்வதற்கும் ஓர் அளவில்லையா! சாலையைச் சலிக்க சலிக்க காட்டுவதைத் தாண்டி வேறு ஒன்றும் இல்லை. எப்படி இதைச் சிலர் புகழ்ந்தார்கள் என்பது ஆச்சரியமே.

படம் நெட்ஃப்ளிக்ஸில் கிடைக்கிறது.

லப்பர் பந்து – சமீபத்தில் தமிழில் வந்த திரைப்படங்களில் அபாரமான திரைக்கதை கொண்ட சிறந்த கமர்சியல் படம் இதுவே. பெரிய இயக்குநர்களின் படங்களுக்குரிய கச்சிதம் இதில் இல்லை என்றாலும், அந்த இயக்குநர்களின் ஆரம்பப் படங்களில் இருக்கும் அந்த rawness இந்தப் படத்தில் இருப்பது பெரிய ப்ளஸ். பின்னால் இந்த rawnessஐ இந்த இயக்குநர் தவற விடாமல் இருக்க வேண்டும். படத்தில் மாமியார் மருமகள் உருகும் காட்சி கொஞ்சம் இழுவை. அதை மட்டும் விட்டு விட்டால் மற்ற அனைத்துக் காட்சிகளும் பக்காவான திரைக்கதையுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. தான் காதலிக்கும் பெண்ணின் அப்பாதான் கிரிக்கெட்டில் தனக்குப் போட்டி என்பது அவனுக்குத் தெரியாதா என்ற கேள்வியை மறக்க வைக்கிறது பரபரப்பான திரைக்கதை. 80களின் இசை பின்னணியில் வந்தால் அந்தப் படம் எந்த அளவுக்கு நம்மை கவர்ந்திழுக்கும் என்பதற்கு இந்தப் படம் இன்னும் ஒரு உதாரணம்.

Share

Chattambi (M)

மகாநதி திரைப்படத்தில் கமலை ஆசை காட்டி மோசம் செய்வது ஒரு மலையாளி. அதில் நடித்ததும் ஒரு மலையாளி. கொச்சின் ஹனீஃபா.

சட்டம்பி என்றொரு மலையாளத் திரைப்படம். 2022ல் வெளியான படத்தை நேற்றுதான் பார்த்தேன். சுமாரான படம்.  நாம் எப்படி மலையாளிகளைக் காண்பிக்கிறோமோ அதே போல் தமிழர்களை பாண்டி என்று அழைக்கும் இன்னுமொரு திரைப்படம். இதில் ஹீரோ மட்டும் ஒரு தமிழனை நம்புகிறான். ஆனால் ஹீரோவின் எதிரி ஹீரோவிடம் தமிழனை நம்புவதற்குப் பதிலாக (கெட்டவார்த்தை) என்று சொல்கிறான். அதையும் மீறி ஹீரோ தமிழனை நம்புகிறான். கடைசிக் காட்சியில் அந்தத் தமிழன் ஹீரோவைப் பணத்துக்காக நயவஞ்சமாக, ஹீரோவின் தலையில் கல்லைப் போட்டுக் கொல்கிறான். அந்தத் தமிழன் பாத்திரத்தில் நடித்திருப்பது தமிழ் நடிகர் சோம சுந்தரம். மிக நல்ல நடிகர். நடிப்புக்கு மொழி அவசியமே இல்லை என்று அவர் எப்போதும் உரக்கச் சொல்வார் என்று நம்புகிறேன், ஜி என்ற வார்த்தையைக் கேட்டாலே எரிச்சலா வருது என்று சொல்லி நடித்ததும் நடிப்பு மட்டுமே என்று சொல்வார் என்று நம்புவதைப் போல.

Share

Two movies

Little hearts (M) – சுமாரான படம். ஷேன் நிகம்-க்காகப் பார்த்தேன். சிறிய புன்னகை ஆங்காங்கே வருகிறது என்றாலும் மொத்தத்தில் அறுவை.

கோடி (K) – பார்க்கலாம். மிக நன்றாக வந்திருக்க வேண்டிய படம். கொஞ்சம் இழுவையால் நீர்த்துவிட்டது. என்னைப் போல் தனஞ்செய் பிடிக்கும் என்பவர்கள் பார்க்கலாம்.

இரண்டும் ப்ரைமில் கிடைக்கிறது.

Share

Golam

கோளம் (M) – தவற விடக் கூடாத ஒரு திரைப்படம். தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு. ஆட்டம் திரைப்படம் போல. கொலையாளிகளின் பக்கம் நின்று‌ அவர்கள் கொல்வதை நம்மை ரசிக்க வைத்துவிடுவது திரைக்கதையாக எவ்வளவு பெரிய வெற்றி! குறைந்த வசனங்கள், நல்ல பின்னணி இசை என அசத்தி இருக்கிறார்கள். அவர்கள் முகத்தை மறக்க முடியாது என்று டாக்டர் சொல்லவும் அந்த 13 பேரும் நிற்கும் ஃப்ரேம் மறக்க முடியாத காட்சி. ப்ரைமில் கிடைக்கிறது.

Share

சிபிஐ 4

CBI (டைரிக்குறிப்பு) 5 (M) – சவட்டித் தள்ளி விட்டார்கள். மூன்று மணி நேரப் படத்தை ஓட்டி ஓட்டிப் பார்த்தாலும் ஆறு மணி நேரம் ஓடுகிறது. பேசுகிறார்கள் பேசுகிறார்கள், வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். பயங்கரமான திருப்பம் என்று அவர்களாக நினைத்துக் கொண்டு நம்மைப் போட்டு தள்ளி விடுகிறார்கள். 72 வயதில் மம்மூட்டி அழகாகத்தான் இருக்கிறார். ஆனால் கை கால்கள் ஒத்துழைக்கவில்லை. வில்லன் ஓடும்போது வீட்டுக்குள் நின்று தலையை மட்டும் சாய்த்து சாய்த்து மாடியையே பார்க்கிறார், பாவமாக இருக்கிறது.

பல வருடங்கள் கழித்து ஜெகதீஷ் ஸ்ரீ குமாரை திரையில் பார்த்தபோது மனம் கனத்தது. ஜெகதி ஸ்ரீ குமார் முகம் காட்டியது மட்டுமே இந்தப் படத்தின் ஒரே சாதனை.

Share

Some movies

உள்ளொழுக்கு (M) – அடர்த்தியான சிறுகதையைப் போன்ற ஒரு திரைப்படம். எளிய கதையில் சிறப்பான திரைக்கதை. யூகிக்க முடியும் ஒரு முடிவுதான் என்றாலும் முழுக்க பார்க்க வைக்கும் அனுபவம். ஊர்வசியும் பார்வதியும் வெகு சிறப்பு. மற்ற அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மிக மெல்ல நகரும் படம் விறுவிறுப்பாகவும் இருக்க முடியும் என்று சொல்லும் இன்னொரு மலையாளப் படம். ஒவ்வொரு காட்சியைப் பார்த்துப் பார்த்து எழுதி இருக்கிறார்கள். பல அநாவசியமான விஷயங்களை எல்லாம் ஒரே தாண்டாகத் தாண்டிவிடும் திரைக்கதை பெரிய பலம். மறக்க முடியாத ஒளிப்பதிவு. அடர்த்தியான படம்.

ப்ரைமில் கிடைக்கிறது.

அஞ்சக்கள்ளகொக்கன் (M) – இன்னொரு சிறந்த இயக்குநரின் வருகையைப் பறைசாற்றும் படம். ஆஹாஓஹோ வகையல்ல என்றாலும், எடுத்த‌விதம்‌ அருமை. சுற்றி சுற்றிச் செல்லும் திரைக்கதை. அனைத்து நடிகர்களும் சிறப்பு. அதீத யதார்த்தம். இணையாக நாடகத்தனமான வில்லன்களும். சமீப மலையாளப் படங்களில் தமிழ் அல்லது கன்னடம் நிறைய வருகிறது. இதில் ஆங்காங்கே கன்னடம். நேரமிருப்பவர்கள் நிச்சயம் பார்க்கலாம்.

அயல்வாஷி (M) – மிக எளிமையான, மண்டை காயாத கதை கொண்ட படம் பார்க்க‌ விரும்புபவர்களுக்கான படம். இரண்டு நண்பர்களுக்கு இடையே வரும் விரிசலை எப்படிச் சரிசெய்து கொள்கிறார்கள் என்று நகைச்சுவையாகச் சொல்லி இருக்கிறார்கள். பாதிக்குப் பிறகு பல இடங்களில் சிரிக்க முடிந்தது. கடைசி ஃப்ரேமில் சத்தமாகச் சிரித்து விட்டேன். சூப்பர் டூப்பர் படங்களை மட்டுமே பார்ப்பவர்களுக்கான படமல்ல. மற்றவர்கள் பார்க்கலாம்.

Share

குருவாயூர் அம்பல நடையில்

குருவாயூர் அம்பல நடையில் (M) – இருபது வருடங்களுக்கு முன்பு வந்த நந்தனம் மலையாளிகளால் கொண்டாடப்பட்டது. பிரிதிவிராஜ், நவ்யா நாயரின் முதல் படம். அதைத் தேவையே இல்லாமல் நாஸ்டால்ஜியாவுக்காகத் தொட்டுக்கொண்டு ஒரு காமெடிப் படம். ஒரேடியாக வாய் விட்டுச் சிரிக்கும்படியாகவும் இல்லை. வெறுப்பாகவும் இல்லை. லாஜிக் மறந்துவிட்டுப் பார்த்தால் கொஞ்சம் பிடிக்கலாம். முன்கணிக்கக்கூடிய எளிய திரைக்கதை. ஆனாலும் கடைசி இருபது நிமிடங்கள் சுவாரஸ்யம்தான். யோகிபாபு அறை வாங்கும் காட்சி நல்ல சிரிப்பு.

தமிழ்நாட்டு வசூலுக்காக இதிலும் தமிழ்ப்பாட்டு உண்டு. அழகிய லைலா பாடல்‌ என்பதால் ஒன்றும் ஒட்டவில்லை.‌ ஏன் இளையராஜாவின் பாடல்கள் இதற்குத் தேவை என்று முன்பே மஞ்ஞும்மெல் பாய்ஸுக்குத் தெரிந்திருக்கிறது.

ஒருமுறை பார்க்கலாம். ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது.

Share