துபாயிலிருந்து மஸ்கட்டிற்குச் சாலைவழியே செல்லும் பயணத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தோம். நானும் என்னுடன் ஒரு குஜராத்தியும் தேவையான எல்லாப் பொருள்களும் இருக்கின்றனவா என்று மீண்டும் ஒருமுறை பரிசோதித்து உறுதிப்படுத்திக்கொண்டு Lab-ல் எங்களுடன் வேலைபார்க்கும் சக நண்பர்களுக்கு பை சொல்லிவிட்டுக் கிளம்பத்தயாரானோம். என் மேலாளர் என்னை அவர் அறைக்கு அழைத்தார்.
என்னுடன் வரும் குஜராத்தியின் மீது எப்போதும் ஒரு கவனம் வேண்டுமென்றும் அவன் வேலையை ஒழுங்காகச் செய்யமாட்டான்; நீதான் அறிவுறுத்த வேண்டும் என்று சொன்னார். குஜராத்திக்கு சாதாரண வேலை நேரத்தில் வேலை செய்யவே பிடிக்காது. எந்தவொரு வேலையையும் இழுத்து இழுத்து, அதிக வேலை நேரத்தில் (Over Time) முடிப்பதே அவனது இஷ்டம், கொள்கை எல்லாம். அதிகவேலை நேரமில்லாத சம்பளத்தை அவன் வாழ்நாளில் பார்த்ததே இல்லை.
முன்பொருமுறை வேலை குறைவாக இருந்த சமயத்தில் சக நண்பர்கள் அரட்டை அடித்துக்கொண்டிருந்தபோது ஒவ்வொருத்தருடைய சர்வீஸ் எத்தனை வருடம் என்ற கேள்வி வந்தது. எல்லோரும் சொல்லிக்கொண்டார்கள். குஜராத்தியின் முறை வரும்போது “ஆறு வருடம்” என்றான். இதைக்கேட்ட பாகிஸ்தானி இடைமறித்து, “கமான். எப்படி ஆறு வருஷம் ஆகும்? 9 வருஷம் இல்லையா? ஆறுவருஷம் சர்வீஸ், மூணு வருஷம் OT” என்றான்.
மேலாளர் “குஜராத்தி எப்போதும் அதிக வேலைநேரத்திலேயே கண்ணாக இருப்பான்; நேரத்தில் வேலையை முடிக்கமாட்டான்; கவனம்” என்று சொன்னார். “சரி” என்றேன். ஏதோ யோசித்தவர் “எல்லா குஜராத்திகளுமே இப்படித்தான்” என்றார்.
அலுவலகத் திட்டம் படி எங்கள் வேலை தொடங்கியதென்னவோ நிஜம்தான். ஆனால் அலுவலகத்திலிருந்து என்னை காரில் அள்ளிக்கொண்டு புறப்பட்ட குஜராத்தி எனது அறையில் விட்டுவிட்டு காத்திருக்குமாறு சொல்லிவிட்டுப் போய்விட்டான். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கழித்து வந்தான். அன்றைய கணக்கின்படி வேலை ஆரம்பிக்காமலேயே மூன்று மணிநேரம் அதிகவேலை நேரம் சேர்த்தாகிவிட்டது. மீட்டர் ஓட ஆரம்பித்தாகிவிட்டது. அதே அளவு அதிகவேலைநேரம் எனக்கும் வரும்! “மன்மதலீலை” மேலாளர் நிலைமை எனக்கு. ஒன்றும் சொல்ல இயலவில்லை.
ஒருவழியாகப் பயணம் தொடங்கியது.
குஜராத்தி அவனது இன்னல்களை, அவன் வாழ்வில் பட்ட கஷ்டங்களை, பணியைத் தெய்வமாக மதிக்கும் அவனது பழக்கத்தை, ஒரு வேலையை எத்தனைச் சீக்கிரம் முடியுமோ அத்தனைச் சீக்கிரம் முடிப்பதே அவனது இலட்சியம் என்பதை எத்தனையாவது முறையாகவோ என்னிடம் சொன்னான். நான் வேலைக்குச் சேர்ந்த பொழுதில் அவன் முதல்முறை இதைச் சொன்னபோது அவன் பக்கம் நியாயம் இருக்கிறதென நினைத்தேன். அவன் சொல்லும் லாகவமும் உணர்ச்சிவசப்பட்டு அடிக்கொருதடவை தெய்வத்தைத் துணைக்கழைத்து ‘தான் தவறு செய்தால் ஸ்வாமி நாராயண் சும்மா விடமாட்டார்’ என்றெல்லாம் சொல்லும்போது கேட்பவர் யாருமே அவன் பக்கம் சாய்வார்கள். ஆனால் எனக்குப் பழகிவிட்டது. அவனது முழுமுதல் நோக்கமே “மீட்டரை” ஓட்டுவதே!
துபாய்-ஹட்டா எல்லையில் பலப்பல புதுவிதிகள். நாங்கள் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்பட்டோம். வெயில் கருணையில்லாமல் 50 டிகிரி செல்ஷியஷில் காய்ந்தது. பாலைவன அனல்காற்றில் மூக்கு எரிந்தது. ஆனால் அதைப் பற்றிய பிரக்ஞையோ கவலையோ குஜராத்திக்கு இருக்கவில்லை. அவனது மீட்டர் ஓடிக்கொண்டிருக்கிறதே!
ஆங்கிலம் என்றாலே எத்தனைக் கிலோ என்று கேட்கும் அராபிகளின் கூட்டத்தில் எங்கள் வேலைக்கான உபகரணங்களைக் (Instruments for Stack emission) காட்டி அவர்களைப் புரியவைப்பதற்குள் குஜராத்திக்கு இன்னொரு ஒரு மணிநேரம் மீட்டர் ஏறிவிட்டிருந்தது. அதே ஒருமணிநேரம் எனது மீட்டரிலும் ஏறும். புகைபோக்கிக்குள் இருக்கும் வாயுவின் திசைவேகத்தைக் காண உதவும் பிடாட் ட்யூபின் [pitot tube] வடிவம் கிட்டத்தட்ட ஒரு ஆயுதம் மாதிரி நீளமான கம்பி போல இருக்கும். அராபிகள் எங்களைச் சந்தேகப்பிரிவில் வைப்பதற்கு அது ஒன்று மட்டுமே
போதுமானதாக இருந்தது.
வளைகுடாவின் பல அரசுடைமை கம்பெனிகளில் காவலாளிகளாகப் [security] பெரும்பாலும் அராபியர்கள்தான் இருப்பார்கள். மருந்துக்கும் ஆங்கிலம் தெரியாது. “மலையாளம் கூடத் தெரியாது!” என்பதும் இங்கே சொல்லப்படவேண்டியதே.
அராபிகளுக்குப் புரியவைக்க “ஹவா காட்சிங் (காற்றுப் பிடிக்க!)” என்று குஜராத்தி சொல்லியதும் கிட்டத்தட்ட அலறினார்கள். அராபி தெரியாதா என்று அவர்கள் கேட்க, “நான் அராபிதான் பேசினேன்” என்று சொல்ல வாயெடுத்த குஜராத்தியை ஓரம்கட்டிவிட்டு, “மா·பி அராபி, உங்களுக்கு ஆங்கிலம் தெரியாதா” என்று பதிலுக்குக் கேட்டேன். அவர்கள் “மா·பி இங்கிலீஷ்” என்றார்கள். குஜராத்தியின் மீட்டர் ஓடிக்கொண்டே இருந்தது.
ஒருவழியாக எல்லையைக் கடந்தோம்.
குஜராத்தி ஆரம்பித்தான். அராபிகள் எல்லாருமே முட்டாள்கள் என்றான். நான் ஆமோதித்தேன். இந்தியர்களே புத்திசாலிகள் என்றான். ஆமோதித்தேன். இந்தியர்கள் இல்லாமல் இந்தப் பாலைவனம் சொர்க்கபூமியாக மாறியிருக்குமா என்றான். பாகிஸ்தானிகளையும், இலங்கைக்காரர்களையும், பங்களாதேசிகளையும் பிலிப்பைன்ஸையும் விட்டுவிட்டாயே என்றேன். ஏதோ போனால் போகட்டும் என்று எனக்காக ஒப்புக்கொண்டான். “ஸ்ரீலங்கா தமிழ்-தமிழ் சேம்-சேம் சானல்?” என்றான். சிரித்தேன்.
வண்டி 130கி.மீ. வேகத்தில் எகிறிக்கொண்டிருந்தது. எல்லையிலிருந்து சோஹாரை 35 நிமிடத்தில்
அடைந்துவிட்டிருந்தோம். குஜராத்தியின் வண்டி ஒடிக்கும்வேகம் எனக்குப் புதுமையாக இருந்தது. மீட்டரில் ஒரு அரைமணி நேரத்தை எப்படிக் குறைக்க அவனுக்கு மனம் வந்தது என்பது பிடிபடவேயில்லை. அப்போதுதான் தெரிந்தது, சோஹாரில் ஒரு குஜராத்தியின் கடையில் மதிய உணவு அருந்த வருவதாக நேரம் குறித்துவைத்திருக்கிறான் என்று. குஜராத்திகளின் கணக்கு மற்றவர்களின் கற்பனைக்கு எட்டாததாக இருக்கும் என்று பாகிஸ்தானி சொன்ன நினைவு வந்தது.
குஜராத்தி எந்தவொரு வேகமும் இல்லாமல் மெதுவாக உணவை இரசித்து உண்டான். ரெஸ்டாரண்ட் உரிமையாளருடன் அரைமணி நேரம் குஜராத்தியில் பேசிக்கொண்டிருந்தான். கடையின் சிப்பந்தி ஒருவர் தமிழர். அவரும் நானும் கொஞ்ச நேரம் கதைத்துக்கொண்டிருந்தோம். அவர் எனக்காக சிறிதுநேரம் ஜெயா டிவி வைத்தார். குஜராத்தியின்
மீட்டரும் எனது மீட்டரும் ஒரு மணிநேரத்தை மேலும் ஏற்றிக்கொண்டது.
சோஹாரிலிருந்து மஸ்கட் கிளம்பினோம். இடையில் இரண்டு இடங்களில் காரை நிறுத்திச் சிறிது தூங்கினான் குஜராத்தி. மஸ்கட் கேரி·போர் [carre four] சென்று அங்கு ஒரு அரை மணிநேரம் கழித்தோம். ஒருவழியாக நாங்கள் சேரவேண்டிய நிஸ்வாவை (மஸ்கட்டிலிருந்து 184 கி.மீ.) அடைந்தபோது எங்கள் மீட்டரில் கிட்டத்தட்ட 10 மணிநேரம் ஏறிவிட்டிருந்தது. குஜராத்தி மிகவும் சந்தோஷப்பட்டான். ஸ்வாமி நாராயண்-க்கு நன்றி சொல்லிக்கொண்டான்.
நாங்கள் வேலைக்குச் சென்றிருந்த கம்பெனி ஒதுக்கியிருந்த ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இளைப்பாறினோம். மறுநாள் காலையில் வேலைக்குத் தயாரானோம். காலையில் 8.00 மணிக்கு கம்பெனியில் இருக்கவேண்டும். அதில் மீட்டரில் ஏற்ற ஒன்றும் வாய்ப்பில்லை என்று குஜராத்திக்குத் தெரியும். 7.30க்கெல்லாம் தயாராகி ஒரு சேட்டன் கடையில் புரோட்டாவும் சாயாவும் சாப்பிட்டுவிட்டு காரில் கிளம்பினோம். காரை இயக்கினான் குஜராத்தி. திடீரென்று ஏதோ நினைத்தவன், ஒரு நிமிடம் ஒரு ·போன் செய்துவிட்டு வருகிறேன் என்று சாவியை காரிலேயே வைத்துவிட்டுக் கீழே இறங்கிப் போனான். மூன்று நிமிடங்கள் பேசியிருப்பான். காருக்குள் இருக்கும் என்னை சைகையால் அழைத்தான். காரை விட்டு இறங்கி வந்து நானும் பேசினேன். மேலாளரிடம் எங்கள் பயணத்தைப் பற்றிச் சொல்வதற்காக அவரை அழைத்திருக்கிறான் குஜராத்தி. பேசி முடித்துவிட்டு மீண்டும் காருக்குள் ஏறச் செல்லும்போது காத்திருந்தது ஒரு அதிர்ச்சி.
இறங்கும்போது கண்ணாடிகளை ஏற்றிவிட்டு வெளியிலிருந்து திறக்கமுடியாதவாறு நான் அடைத்திருக்கிறேன். வண்டியின் சாவி காருக்குள். குஜராத்தி செம டென்ஷன் ஆகிவிட்டான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இன்னும் அரைமணி நேரத்தில் கம்பெனியில் இருக்கவேண்டும். புலம்பிக்கொண்டே குஜராத்தி அங்குமிங்கும் ஓடினான். டீக்கடைச் சேட்டன் போலீஸ¤க்குச் சொல்வதே நல்லது என்றான்.
நான் தொலைபேசியில் மஸ்கட்டில் இருக்கும் அத்தைப் பையனைக் கூப்பிட்டேன். போலீஸ¤க்குப் போ என்றான். அது எனக்குத் தெரியும் என்று சொல்லி ·போனைத் துண்டித்தேன். துண்டிக்கும்போது “கல்லுப்பட்டிக்காரங்க கிட்ட கேட்டா இப்படித்தான், ஒண்ணத்துக்கும் ஆவாத பதிலே வரும்” என்றேன்.
அதற்குள் குஜராத்தி ஒரு ஓமானியைக் கூட்டிக்கொண்டு வந்தான். ஓமானி கையில் ஒரு ஸ்க்ரூ ட்ரைவரும், நெம்புக் கம்பியும் வைத்திருந்தான். இரண்டு நிமிடங்களில் கதவைத் திறந்தான். ஸ்க்ரூ ட்ரைவரை வைத்துக் கதவை லேசாக நெம்பிக்கொண்டு, கம்பியை உள்ளே நுழைத்து லாக்கை எடுத்துவிட்டான். கதவு திறந்துகொண்டது. எனக்கும் குஜராத்திக்கும் உயிர் வந்தது. அவனுக்கு ஐந்து ரியால் கொடுத்தோம். நிஜச்சாவி இருந்தால் கூட இத்தனைச் சீக்கிரம் திறந்திருக்க முடியாது என்று அவனை வாழ்த்தினேன். குஜராத்தி “இப்ப பேசு” என்றான். ஓமானியிடம் திரும்பி நன்றி சொல்லி அவனை அணைத்துக்கொண்டான்.
மீண்டும் அத்தைப் பையனைக் கூப்பிட்டேன். கதவைத் திறந்த விஷயத்தைச் சொன்னேன். போலீஸ¤க்குப் போவதே நேரான வழியென்றும் அதைத்தான் தான் சொன்னதாகவும் சொன்னான். இப்படி பல ஓமானிகள் ஐந்து நிமிடத்தில் திறந்துவிடுவதாகவும் மீண்டும் காரை அதே இடத்தில் நிறுத்தவேண்டாம் என்றும் சொன்னான். கடைசியாக “ஓமானிகள் என்ன வேணா செய்வாங்க” என்றான்.
குஜராத்தியிடம் என் அத்தைப்பையன் சொன்னதைச் சொன்னேன். “ஆஹாம்! தமிழ் புத்திசாலிகள்” என்று சொல்லிவிட்டு “இனிமேல் காரை அங்கே நிறுத்தக்கூடாது” என்றான். காலை நேரத்தில் வந்து உதவிவிட்டுப் போன ஓமானிக்கு இது தேவைதான்.
ஐந்து நாள்கள் வேலை. மலையாளிகள் என்றாலே மோசம் என்று தினமும் இரண்டு முறையாவது சொல்வான் குஜராத்தி. அந்தக் கம்பெனியில் இருக்கும் இரண்டு மலையாளிகள் மிக நல்லவர்களாக இருந்தார்கள் என்பதைக் குஜராத்தியால் ஏற்கவே முடியவில்லை. மலையாளிகளை நம்பவேமுடியாது, முன்னாடி ஒன்று பேசி பின்னால் ஒன்று பேசுவார்கள் என்றான். குஜராத்திகளை நம்பாதே என்று என் மேலாளர் மலையாளி சொன்னது நினைவுக்கு வந்தது. குஜராத்தி “தமிழர்கள் அச்சா” என்றான். எல்லாவற்றையும் ஆமோதித்துக்கொண்டே இருந்தேன். அவனிமிருந்து தப்பிக்க அதுவே வழி. இல்லையென்றால் கையிலிருக்கும் நாவல்களைப் படிக்க நேரமிருக்காது. அதுபோக ஒன்றிரண்டு கவிதைகளாவது எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன்.
ஐந்து நாள் வேலையை முடித்துக்கொண்டு மஸ்கட்டில் அத்தைப்பையனைச் சந்தித்துவிட்டு மீண்டும் துபாய் திரும்பினோம். குஜராத்தி அதிகவேலை நேரம் எத்தனை என்று கணக்கிடச் சொன்னான். ஐந்து நாள்களில் 44 மணிநேரம் அதிக வேலை நேரம் வந்திருந்தது. இன்னும் ஒரு ஆறு மணி நேரம் கூட்டவேண்டும் என்றான் குஜராத்தி.
மேலாளர் பற்றிப் பேச்சுத் திரும்பியது. மீண்டும் மலையாளிகள் புராணம் ஆரம்பித்தான். தமிழர்களை வாயார வாழ்த்தினான். நேரம் கிடைக்கும்போது மலையாளிகளிடத்தில் “தமிழர்கள் ரூட்[rude]. கர்வம் அதிகமிக்கவர்கள்” என்று அவன் சொன்ன விஷயங்கள் என் காதுக்குப் பலமுறை எட்டியிருந்ததை அவன் அறிந்திருக்கவில்லை. ஆனாலும் அவன் சொல்வதை ஆமோதிக்கத் தயங்கவில்லை. இல்லையென்றால் பெரிய பெரிய கதைகளை ஆரம்பித்துவிடுவான். என்னால் பொறுக்க இயலாது.
மீண்டும் ஹட்டா – துபாய் எல்லையை அடைந்தோம். விசா எக்ஸிட் அடிக்க வரிசையில் நின்றிருந்தோம். எங்கள் வரிசையில் எங்களுக்குப் பின் நின்றிருந்த ஒரு அமெரிக்கன் வரிசையைப் புறக்கணித்துவிட்டு, முன்னுக்கு வந்து, எக்ஸிட் வாங்கிப்போனான். காத்திருந்த குஜராத்தி புலம்பத் தொடங்கிவிட்டான். இந்த அநியாயத்தை அராபிகள் கேட்பதே இல்லை; ஐரோப்பியர்கள் என்றால் அவர்களுக்குத் தனிச்சலுகைதான் என்றான். அடுத்த வரியாக, ஐரோப்பியர்களுக்குத் தங்கள் மனதில் தங்களைப் பற்றி எப்போதுமே உயர்ந்த எண்ணம்தான், எல்லா ஐரோப்பியர்களுமே இப்படித்தான் என்றான். நான் ஆமாம் என்றேன்.
நாங்கள் வேலைக்காகக் கொண்டு போயிருந்த உபகரணங்களைச் சோதிக்க ஆரம்பித்தான் அராபி ஒருவன். நிறையக் கேள்விகள் கேட்டான். எல்லாமே அராபியில் இருந்தன. எங்களால் பதில் அளிக்கவே முடியவில்லை. குஜராத்தி சிரித்துச் சிரித்து மழுப்பினான். அப்போது குஜராத்தியைப் பார்க்கவே வேடிக்கையாக இருந்தது. நான் ஆங்கிலத்தில் பதில் சொல்லத் தொடங்கும்போதெல்லாம் அராபி “மா·பி இங்கிலீஷ்” என்று சொல்லி என்னை ஒரேடியாக நிராகரித்தான். ஒரு நிலைக்கு மேல் குஜராத்திக்குக் கோபம் வந்துவிட்டது. கொஞ்சம் சூடாகிவிட்டான். ஆங்கிலத்தில் அவன் படபடக்க ஆரம்பிக்க, அந்தக் கட்டத்தில் இருந்த மற்ற அராபிகள் ஒன்று சேர்ந்துவிட்டார்கள். எல்லோரும் சேர்ந்து குஜராத்தியை வறுத்தெடுத்து, கடைசித் தீர்ப்பாக “எல்லா இந்தியர்களுமே இப்படித்தான். பொறுமையில்லாதவர்கள். மேலும் இந்தியர்கள் கரப்பான்பூச்சிகள்” என்று சொல்லிவிட்டார்கள். அதற்கு மேல் எங்களால் ஒன்றும் பேச இயலவில்லை. அமைதியாக இருந்துவிட்டு, பல விளக்கங்களுக்குப் பின் விசா – எக்ஸிட் வாங்கிக்கொண்டு காரைக் கிளப்பினோம்.
எனது எண்ணம் முழுவதும்
* யார் யார் எப்படி? இப்படி ஒரு இனத்தை வரையறுக்க இயலுமா?
* பொதுவான ஒரு கருத்து எல்லாத் தனிமனிதர்களுக்கும் பொருந்துமா? எல்லாத் தனிமனிதர்களும் அவரவர்கள் அளவில் வேறல்லவா? பின் எப்படிப் பொதுப்படுத்த?
* ஒரு ஐரோப்பியன் போல் குணமுள்ள தமிழனோ ஒரு குஜராத்தி போல் குணமுள்ள மலையாளியோ இருந்தே தீர்வார்கள் அல்லவா?
* ஒரு இந்தியன் போன்ற அமெரிக்கனின் பொறுமைக்கு என்ன பெயர்? ஒரு அமெரிக்கத்தனம் கொண்ட இந்தியத் தன்னுணர்வுக்கு என்ன பெயர்?
என்பதிலேயே இருந்தது.
குஜராத்தி வண்டியை ஓரமாக நிழலில் நிறுத்திவிட்டு, “ஹே ஸ்வாமி நாராயண்” என்று மறக்காமல் சொல்லிவிட்டு, அரை மணி நேரம் தூங்கப்போவதாக என்னிடம் சொன்னான். அவனது மீட்டர் ஓடத்தொடங்கியது. அந்த மீட்டரில் எனக்கும் பங்குண்டு.
துபாய் – மஸ்கட்டின் எல்லை என்று சொல்லப்படும் ஒன்றை இன்னும் சிறிது நேரத்தில் கடப்போம்.