ஜெயலலிதாவின் வெற்றி

இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது. ஏழு கட்சிக் கூட்டணிகளின் பலத்தில் அ.தி.மு.க. காணாமல் போகும் என்று மிக நம்பியபடியால், ஏற்கனவே முடிவு தெரிந்துவிட்ட கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்க விரும்பாததுபோல், இந்தத் தேர்தலிலும் சுவாரஸ்யம் இல்லாமல் இருந்தேன். நேற்று காலை முக்கியச் செய்தியாக ஜெயாவில் “அ.தி.மு.க. முன்னணி” என்று ஓடிக்கொண்டிருந்தது. கொஞ்சம் ஷாக் அடித்தது போல் உணர்ந்து, ஜெயா டி.வி. வழக்கம்போல் முதல் சுற்றை மட்டும் வைத்துக்கொண்டு பொய் சொல்லும் என்று நினைத்து, சன்னுக்கு மாறினேன். அங்கேயும் அதே முக்கியச் செய்தி. என்னால் சிறிது நேரத்திற்கு நம்பவே முடியவில்லை. 1998 நாடாளு மன்றத் தேர்தலிலும் 2001 சட்ட சபைத் தேர்தலிலும் கூட இதே போல் நடந்தது நினைவுக்கு வந்தது. வாக்கு வித்தியாசங்கள் தொடர்ந்து அ.தி.மு.க.விற்குச் சாதகமாகவே ஏறிக்கொண்டு வந்தது. அ.தி.மு.க. வெற்றியும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க.வின் வெற்றியை விட தி.மு.க. மற்றும் கூட்டணியின் தோல்வி எனக்குச் சந்தோஷமாக இருந்தது. ஏழு கட்சிக் கூட்டணியை ஜெயலலிதா முறியடிப்பார் என்று நான் நினைத்துக்கூடப் பார்த்திருக்கவில்லை. இந்த வெற்றியின் மூலம் அடுத்த சட்டசபைத் தேர்தலைச் சந்திக்க அ.தி.மு.க.வின் பக்கம் கணிசமான தன்னம்பிக்கை உயர்ந்திருக்கிறது. தி.மு.க.வின் நிலைமை நேர்மாறாகியிருக்கிறது. தி.மு.க. வென்றிருந்தால் கூட்டணிக் கட்சிகளைக் கருணாநிதியால் சமாளிக்க முடிந்திருக்கும். இப்போது கூட்டணிக் கட்சிகளின் கையில் கருணாநிதி சிக்கியிருக்கிறார். இட ஒத்துக்கீட்டில் பெரும் குழப்பங்கள் நேரும் வாய்ப்புள்ளது. ஒன்றிரண்டு கட்சிகள் கூட்டணி தாவும் சாத்தியக்கூறுகளும் அதிகரித்திருக்கிறது. ஜெயலலிதா ஏற்கனவே “தாம் வெற்றி பெற மட்டும் பிறந்தவர்” என்று நினைப்பவர். இந்த வெற்றியின் மூலம் அந்தக் கனவை நிஜம் என்று மீண்டும் நம்புவார். கூட்டணி சேர விரும்பும் கட்சிகளைக் கூட “தன் இலக்கணப்படியே” அலட்சியப்படுத்துவார். இப்படி பல நிகழ்வுகளை சாதகமாகவும் பாதகமாகவும் நிகழ்த்தியிருக்கிறது இந்த இடைத்தேர்தல் முடிவுகள்.


Thanks: Dinamani.com

அடுத்த தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி வெல்லக்கூடாது என்றே நான் விரும்புகிறேன். ஜெயலலிதாவின் ஆட்சியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிறைய இல்லை எனினும் தி.மு.க. ஆட்சி வரக்கூடாது என்று நான் நினைப்பதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன. கருணாநிதி முடிவு எடுக்கத் தெரியாதவர்; தயங்குபவர். யாருக்கும் குற்றமில்லாமல் நல்ல பெயர் வாங்கப் பேசுகிறேன் என்று நினைத்துக்கொண்டு ஜல்லி அடிப்பவர். மிக முக்கியமாக, தீவிரவாத விஷயத்தில் அவரின் மனம் தீவிரவாதிகளுக்குப் பரிவு என்ற நிலையையே எப்போதும் எடுக்கும். ஹிந்து மத தூஷனை ஒன்றே மதச்சார்பின்மை என்று நம்பும், அதைத் தீவிரமாகப் பரப்பும் கருத்துடையவர். தங்கள் குடும்ப உறுப்பினர்களின் கையில் சிக்கி சுதந்திரமாகச் செயல்படும் தன்மையை இழந்தவர். இக்காரணங்களால் தி.மு.க. வரக்கூடாது என்று நினைக்கிறேன். ஜெயலலிதாவின் ஆட்சியில் சில விஷயங்கள் நான் மிகவும் ஆச்சரியப்படும் அளவிற்கு நடந்திருக்கின்றன. அவையெல்லாம் ஜெயலலிதாவின் முடிவு எடுக்கும் தன்மைக்கும், தைரியத்திற்கும் சான்றளிப்பவை. அரசு ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கை, மதமாற்றத் தடைச் சட்டம், தீவிரவாதத்தின் மீது தொடந்து நடவடிக்கை, சங்கராசாரியார் கைது போன்றவற்றைச் சொல்லலாம். வீரப்பன் கொல்லப்பட்டது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி. மதச்சார்பின்மை என்ற பெயரில் ஹிந்து மதத்தைத் தூற்றி உளறிக்கொட்டாமல் இருப்பதும் கூட பாராட்டப்படவேண்டியதே. அமைச்சர்கள் இருக்கிறார்களா இல்லையா என்று நினைக்கவைக்கும் அமைச்சரவை, தொடர்ந்து அதிகாரிகளை மாற்றிக்கொண்டே இருக்கும் நிர்வாகக் குளறுபடி போன்ற விஷயங்கள் ஜெயலலிதாவிடம் இருக்கின்றன. ஆனால் கருணாநிதியின் அரசியலைப் பார்க்கும்போது, அடுத்த தேர்தலிலும் ஜெயலலிதாவே வெற்றி பெறுவது நல்லது என்று தோன்றுகிறது.

இந்த இடைத் தேர்தல் வெற்றி, அடுத்த சட்டசபைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று சொல்ல வாய்ப்பே இல்லை. பொதுவாக இடைத்தேர்தல் முடிவுகள், ஆளும் கட்சிக்கு எதிரானதாகவே அமையும். (1990 வாக்கில் நடந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. அப்போது இந்தக் கருத்தை கருணாநிதி வழிமொழிந்திருந்தார்!) அப்படி இருந்தும், இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருப்பது பற்றி தி.மு.க. தரப்பு ஆலோசிப்பது நல்லது. 20000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கும்போது, “இது பணநாயகத்தின் வெற்றி; ஜனநாயகத்தின் தோல்வி” என்று ராமதாஸும், “அதிகாரத் துஷ்பிரயோகமும் பணபலமும் கொண்டு ஜெயலலிதா வென்று விட்டார்” என்று நல்லகண்ணுவும் “விதிகளை மீறிச் செயல்பட்டு அ.தி.மு.க. வென்றது” என்று கருணாநிதியும் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளாமல் இருப்பது. இவையெல்லாம் இல்லாமல் தேர்தல் நடந்தது என்று உறுதி சொல்ல வரவில்லை. ஆனால் இவற்றில் தி.மு.க. கூட்டணி சளைத்ததல்ல என்பதே நாம் நோக்கவேண்டியது. அதில்லாமல், இந்த முறை தேர்தல் ஆணைய அதிகாரிகளின் கண்காணிப்பு மிக அதிக அளவில் இருந்தது. அதனால் பணத்தின் மூலம் வென்று விட்டார்கள் என்று சொல்லி, தங்கள் தோல்விக்கு என்ன காரணம் என்று ஆராயாமல் ஜெயலலிதா பாணியில், தி.மு.க. அறிக்கை விட்டுக்கொண்டிருக்காமல் யோசிப்பது நல்லது.

அ.தி.மு.க. வெற்றிக்குப் பின் வலைப்பதிவில் வந்து பார்த்தேன். யாரும் அதைப் பற்றி எழுதவில்லை. தேர்தலுக்கு முன்பு, மூக்கு சுந்தர் மட்டும் அவர் பதிவில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது நல்லது என்று எழுதியிருந்ததைப் பார்த்தேன். (என்ன தைரியம்!) இதே தி.மு.க. வென்றிருந்தால் ஊடகங்கள் மாறி மாறி ஜெயலலிதாவின் சர்வாதிகாரப் போக்கையும் எதேச்சாதிகாரத்தையும் மாறி மாறிக் கண்டித்த வண்ணம் இருக்கும். அ.தி.மு.க.வின் வெற்றியை ஏற்றுக்கொள்வதோ பாராட்டுவதோ, ஊடகங்கள் வளர்த்தெடுத்துக்கொண்டிருக்கும் “அ.தி.மு.க. வை எதிர்ப்பது மட்டுமே நடுநிலைமை” என்ற நடுநிலைமைக்கு எதிரானதாக அமைந்திருக்கும். ஆனால் வெற்றி பெற்றதோ அ.தி.மு.க. பின் எப்படி பாராட்ட முடியும்? ஆனால் அந்த “நடுநிலையாளர்கள்” வகையில் இருக்க விரும்பவில்லை. இந்த அ.தி.மு.க. வெற்றி தேவையான ஒன்று. தொடரவேண்டிய ஒன்றும். இந்த கருத்தைச் சொல்லவே இந்தப் பதிவு.

Share

ஆளுமை – கவிதை

எதிர்பாராமல்
யாரோ எறிந்த பந்தின்
விசை தாங்காமல்
நொறுங்கியது கண்ணாடிச்சுவர்
மீஉறுதியின் உச்சப்புள்ளி
உடைந்து போன சில்லுகள்
கொஞ்சம் மிச்சத்துடன்
என் கேள்வியோ
மீண்டு
உட்குவிந்த வலையாய்
துப்பும்போது
விசை தாங்குமோ
வலையாகுமோ
அவ்வாளுமை

-oOo-

Share

P.K.Sivakumar’s Interview in Jaya TV, Kalai malar program

P.K.Sivakumar’s interview will be telecasted tomorrow morning at 7.30 in Jaya TV-kaalai malar Program. He talks about anyindian.com in the program. Your comments are highly appreciated.

On behalf of Sivakumar,
Prasanna

Share

மும்பை எக்ஸ்பிரஸ் அல்லது கமலுக்கு என்னாச்சு?

   அடிப்படையில் கமலின் ரசிகன்(னும்) என்பதால் முதல்நாள் இரண்டாம் ஆட்டத்திற்கு எங்கள் குடும்ப சகிதம் சென்று பெரும் தொல்லையில் மாட்டிக்கொண்டோம். படத்தைப் பற்றிப் பேசுவதை விட, முதலில் படத்துக்குச் சென்ற விஷயத்தைப் பற்றிப் பேசலாம். எது சுவாரஸ்யமோ அதைத்தான் பேசமுடியும்! சந்திரமுகிக்கு அலையாய் அலைந்து, இரண்டு மணி நேரம் காத்திருந்து அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வந்த கலைப்பு நீங்குவதற்குள், கமலின் இரசிகர்கள் நிறைந்த எங்கள் குடும்பத்திலிருந்த அனைத்து ஆண்களும் ஒரே மனதாக மும்பை எக்ஸ்பிரஸ் போகவேண்டும் என்றார்கள். தியேட்டருக்கு போன் செய்து “டிக்கெட் கிடைக்குமா” என்று கேட்டதற்கு, எங்கள் முகவரி எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொண்டார்கள். எனக்கு அப்போதே எங்கேயோ இடித்தது! ஆனாலும் எல்லாரும் போனோம். மறுநாள் எங்கள் வீட்டின் மிக முக்கியமான ஒரு விழா இருந்தது. கிட்டத்தட்ட 40 வருடங்கள் கழித்து நடைபெறும் குடும்ப விழா அது. அதற்கான வேலைகள் எல்லாவற்றையும் முடித்துவிட்டு ஓடினோம். தியேட்டரில் கூட்டமே இல்லை. படம் போட்டுவிட்டார்கள் என்று நினைத்த கமலின் தீவிர இரசிகர்கள் எண்ணத்திலும் மண் விழுந்ததது. படம் வந்த முதல் தினம் இரவுக் காட்சி இப்படி கூட்டமில்லாமல் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்பதால் எனக்கே கொஞ்சம் வருத்தம்தான். விருமாண்டி போலவோ ஹே ராம் போலவே ஒரு படத்திற்கு இப்படி இருந்திருந்தால் அதை நான் எதிர்பார்த்தே இருந்திருப்பேன். நானறிந்த வரையில், மும்பை எக்ஸ்பிரஸ் என்பது நகைச்சுவைப் படம் என்பதே. திரையரங்கில் நிறைய நேரம் காத்திருந்தோம். படம் போடும் வழியைக் காணோம். கூட்டம் சேர்ந்தபின்பு படம் போடும் டூரிங் டாக்கீஸ் நிலையை நினைத்து விக்கித்துப் போயிருந்தார்கள் கமலின் தீவிர இரசிகர்கள். ஒரு வழியாகப் படம் ஆரம்பித்தது. ஆரம்பித்த சில காட்சிகளிலேயே, படம் ஆரம்பித்திருக்கவேண்டாமோ என்கிற எண்ணம் வந்தது.

   கமலுக்கு நிஜமாகவே என்னதான் ஆச்சு? சாதாரண நகைச்சுவைப் படங்களைப் புறந்தள்ளி, நகைச்சுவைப் படங்களில் ஒரு தரத்தையும், நல்ல வெரைட்டிகளையும் கொண்டு வந்தவர் கமல். அதன் நீட்சியாக ஒரு கிளாசிக் காமெடி என்கிற முயற்சிதான் இந்த மும்பை எக்ஸ்பிரஸ். ஆனால் கிளாசிக்கும் இல்லை; காமெடியும் இல்லை படத்தில். காமெடி என்றாலே வசனத்தை மாற்றி மாற்றிப் பேசுவது மட்டுமே என்கிற ஒரு தட்டையான எண்ணத்தில் தள்ளப்பட்டிருக்கிறாரோ கமல் என்கிற சந்தேகத்தை அவரது சமீபத்திய காமெடிப் படங்கள் உண்டாக்கின. அந்தச் சந்தேகத்தை மெய்ப்பிப்பது போல அமைகிறது இந்தப் படமும். ஆளாளுக்கு மாற்றி மாற்றிப் பேசுகிறார்கள். அதுவும் அலுத்துப்போன மேனரிசத்தோடு. அதே ஆள்மாறாட்டத்தை வைத்துக்கொண்டு தலை காய வைக்கிறார்கள். ஆங்கில கிளாசிக் படத்தை மனதில் வைத்துக்கொண்டு படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பது காட்சியமைப்பில் தெளிவாகத் தெரிகிறது. கொஞ்சம் கூட சிரத்தையற்ற கதையும், அதைச் சுற்றி எழுப்பப்பட்ட திரைக்கதையும் கிளாசிக் காமெடி முயற்சியை படுகுழியில் தள்ளுகிறது. படத்தின் ஆரம்ப காட்சிகளில் ஒரு சிறுவனைக் கடத்துவது பற்றிப் பேசிக்கொள்கிறார்கள். ஏதோ காமெடி என்று நினைத்துக்கொண்டு (அப்போதும் சிரிப்பு வரவில்லை!) பார்த்தால், கடைசி வரை அதுவே படமாகச் செல்கிறது.

   கமல் காது கேளாமல் வரும் காட்சிகள் எல்லாம் கொஞ்சம் கூட ஒட்டாமல் திரையில் ஓடுகின்றன. லேசாகப் புன்னகை வரவழைக்கக்கூடிய காட்சிகள் கூட ஒன்றோ இரண்டோதான். மற்ற காட்சிகள் எல்லாம் திரையில் வருகின்றன; போகின்றன. டிஜிடல் தொழில்நுட்பம் என்கிறார்கள். நான் பார்த்த திரையரங்கு சரியில்லையோ என்னவோ; படத்தின் ஒளிப்பதிவு சகிக்கவில்லை. நிறையக் காட்சிகள் கிராபிக்ஸில் ஒட்ட வைத்தது போன்ற தோற்றம். கமலுக்கு நகைச்சுவை நடிப்பு மறந்துவிட்டது என்று சந்தேகப்படும் அளவிற்கு உள்ளது அவரது நடிப்பு. சாதாரண காட்சியை, காட்சி அமைப்பின் மூலமும் நடிப்பின் மூலமும், கிளாசிக் ஆக்கிவிடலாம் என்று கமல் தன் மேல் நம்பிக்கை கொண்டிருப்பது புரிகிறது. கமல் போன்ற அசாதாரணக் கலைஞர்கள் அதைச் சாதிப்பவர்கள்தாம். ஆனால் “பழைய செருப்புக் கடிக்காது” என்பதை மறந்துவிட்டார்கள். அந்தச் சிறுவன் தற்கொலை செய்ய முயற்சி செய்யும்போது, கமல் காப்பாற்ற நினைக்கும் காட்சியின் நீளம் கொட்டாவி வரவைக்கிறது. அதைத் தொடர்ந்து கமல் அவரை மகனாக ஏற்றுக்கொள்வது, மணீஷாவை லவ் செய்வதும் நாம் அனுபவிக்கும் கொடுமைகளில் ஒன்று.

   எத்தனை நாள்தான் அபத்தமான ஒரு கதாபாத்திரத்திற்கு “ஆளவந்தான் மணீஷா”வைச் சொல்வது? இனி “மும்பை எக்ஸ்பிரஸ் மணீஷா” எனச் சொல்லலாம். பாத்திரப்படைப்பில் பெரும் கோட்டை விட்டிருக்கிறார் என்று தனியே சொல்லவேண்டியதில்லை. படத்திலுள்ள பல குறைகளில் இதுவும் ஒன்று.

   ஒரு காட்சியாவது வாய் விட்டுச் சிரித்தோம் என்றில்லை. சில காட்சிகள் சிரிப்பைத் தருவது போன்று அமைந்து, அடுத்த விநாடியே “இதுல என்ன இருக்கு?” என்கிற அலுப்பைத் தருகின்றன. இப்படிப்பட்ட காட்சிகள்தான் ஏராளம்.

   இளையராஜா எதற்காகவும் அலட்டிக்கொள்ளவில்லை. அவருக்கு வேலை ஒரே ஒரு பாட்டு. தனியாகக் கேட்கும்போது மனதில் ஏதோ ஒரு சோகம் ஒட்டிக்கொள்கிறது. ஆனால் காட்சி அமைப்புடன் பார்க்கக்கூடாது.

   கமல் கிரேனில் ஆபரேட் செய்யும் காட்சிகள், அங்கிருந்து கீழே இறங்கி ஒரு பையனைக் கடத்தும் காட்சிகள், கார் விபத்தில் சிக்கிய பின்பு போலீஸிடம் பேசும் காட்சிகள், அந்தப் பையன் தற்கொலை செய்ய முயல அவனைக் காப்பாற்ற முயலும் காட்சிகள் என்று நீளமாக நம்மைச் சோதனைக்குட்படுத்தும் காட்சிகள் நிறைய நிறைய. அள்ள அள்ளக் குறையாத அளவிற்கு.

   கிளைமாக்ஸ் காட்சிகளில் ஆளாளுக்கு லாஜிக்கே இல்லாமல் மாற்றி மாற்றி நினைத்துக்கொள்கிறார்கள். சீக்கிரம் படம் முடிந்துவிடும் என்ற நினைப்பே பெரும் சுகம் தருவதாக அமைகிறது.

   கமல் ஒரு பேட்டியில், எத்தனை நாள் காதலிக்க நேரமில்லை படமே கிளாசிக்கில் இருக்கும்?” என்று கேட்டு, அதை அந்தச் சிம்மாசனத்தில் இருந்து “மும்பை எக்ஸ்பிரஸ்” நீக்கும் என்று சொல்லியிருக்கிறார். ஆசை வெட்கம் அறியாது மற்றும் நல்ல விளம்பர உத்தி. நிஜம் என்னவோ, காதலிக்க நேரமில்லை இன்னும அதே சிம்மாசனத்தில்.

   பம்மல் (உவ்வேக்) சம்பந்தம் வரிசையில் மும்பை (உவ்வேக்) எக்ஸ்பிரஸ்.

   படத்தைப் பார்த்துவிட்டு வந்த இரசிகர்களைப் பார்க்க பாவமாக இருந்தது. ஒருவர் “இன்கம்டாக்ஸுக்காக எடுத்த படம்” என்றார். இன்னொருவர் “சந்திரமுகியில முதல் ஷாட்டே கமலுக்கு நன்றி சொல்றதுதான். மும்பை எக்ஸ்பிரஸ் படத்தைப் பார்த்துட்டு ரஜினி தேங்க்ஸ் சொல்லியிருக்காரு போல” என்றார். இன்னொருவர் “படம் இடைவேளை வரை செம ஃபாஸ்ட். ஆமா, நல்லாத் தூங்கிட்டேன்” என்றார். இதுபோன்ற கமலின் இரசிகர்களின் கமெண்ட்டுகள் எனக்குப் புதிதல்ல. குருதிப்புனல், குணா, ஹேராம் போன்ற படங்களை முதல் காட்சியில் பார்க்கும் “விசிலடிக்கும் இரசிகர்கள்” இப்படித்தான் எதிர்வினையாற்றுவார்கள். அதே எதிர்வினை ஒரு நகைச்சுவைப் படத்திற்கும் நிகழ்ந்திருக்கிறது. கமல் யோசிக்கவேண்டும்.

   [01] கமலின் நகைச்சுவை, ஒரே மாதிரியான நடிப்பினால் அலுக்கத் தொடங்கிவிட்டது. ஆள்மாறாட்டம், வார்த்தையை மாற்றி மாற்றிப் போட்டுப் பேசுவது போன்ற அலுத்துப்போன விஷயங்களிலிருந்து கமல் வெளி வரவேண்டும்.

   [02] கதையே வேண்டாம், காட்சியமைப்பில் வென்றுவிடலாம் என்கிற பரிசோதனைகளை விட, கொஞ்சமாவது கதையுடன் கூடிய பரிசோதனைகள் நல்லது.

   [03] சந்தானபாரதி போன்ற முகபாவனைகளே வராத நடிகர்களைப் போடுவதைக் காட்டிலும், இயல்பாகவே நகைச்சுவையாய் நடிக்கத் தெரிந்த நடிகர்களையும் நகைச்சுவை நடிகர்களையும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

   [04] என்னதான் கிளாசிக் காமெடி என்றும் காமெடிப் படங்களில் புதிய பரிசோதனை என்றும் சொல்லிக்கொண்டாலும், காமெடிப் படம் என்னும்போதே காமெடி என்கிற ஒன்று தேவைப்பட்டுவிடுகிறது. அப்படி காமெடி என்கிற சங்கதியே இல்லாமல் காமெடிப் படத்தில் பரிசோதனை எடுப்பதைப் பற்றிக் கமல் யோசிக்கவேண்டும்.

   [05] கமலின் பரிசோதனைகள் எல்லாம் வர்த்தக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் மிகச்சிறந்த பெயரைப் பெற்றிருக்கின்றன. ஆனால் இந்த முறை இரண்டும் இல்லாமல் போயிருக்கிறது. கிட்டத்தட்ட இதே பிரச்சனை விருமாண்டியிலும் கமலுக்கு ஏற்பட்டது என்றே நான் நினைக்கிறேன். வணிக வெற்றியையும் தரமான படங்களையும் கமல், முன்பு போலவே குழப்பாமல் வைத்துக்கொள்ளவேண்டும்.

   இவையெல்லாம் கமலுக்கு நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. சிறந்த சிந்தனையாளர் மற்றும் சுய பரிசோதனை செய்யும் கலைஞர் அவர். மும்பை எக்ஸ்பிரஸில் எனக்குத் தோன்றியதை மட்டும் சொல்லியிருக்கிறேன் என் கருத்து என்கிற வகையில்.

   குமுதம் இந்தப் படத்தை ஆஹா ஓஹோ என்று பாராட்டியிருக்கிறது. பத்திரிகைகள் ஒரு தரமற்ற படத்தைத் தூக்கி நிறுத்திவிட முடியாது என்பதற்கு இந்தப் படம் மேலும் ஒரு சான்றாக அமையும்.

   மும்பை எக்ஸ்பிரஸ் செம ஃபாஸ்டாக ஓடும் தியேட்டரை விட்டு.

   மதிப்பெண்கள்-35

Share

லகலகலகலகல

   ரஜினியின் படமொன்றிற்கு விமர்சனம் என எழுதுவது இதுவே முதல்முறை! விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட (:P) அவரின் படங்களுக்கெல்லாம் எதற்கு விமர்சனம் என்று நினைத்திருந்துவிட்டேன் என்று சொன்னால் சும்மா விடமாட்டார்கள்!

   பாபாவின் தோல்விக்குப் பிறகு வந்திருக்கும் சந்திரமுகி, படம் வருவதற்கு முன்பே, வழக்கம்போல் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டிருந்திருந்தது. அரசியலோ ஆன்மீகமோ இருக்காது என்று உறுதியாகத் தெரிந்த தகவல் ரஜினி ரசிகர்களுக்கு பெரிய ஆசுவாசத்தைத் தந்தது. மணிச்சித்திரத்தாழின் ரீமேக் என்றவுடன், அந்தக் கதை எப்படி ரஜினிக்குப் பொருந்தி வரும் என்று யோசிக்காத ரசிகன் இல்லை. மோகன்லால் இடைவேளைக்குப் பின்னரே மலையாளப் படத்தில் வருவாராம். (நான் இன்னும் மணிச்சித்திரத்தாழ் பார்க்கவில்லை). ரஜினி இடைவேளைக்கு பின்னர் வந்தால் திரையரங்குகள் என்னாவது?! எந்தவொரு சமரசமுமில்லாமல் ரஜினியோ வாசுவோ படமெடுக்கக்கூடியவர்கள் அல்ல என்பது தெரிந்த விஷயமாதலால் மணிச்சித்திரத்தாழ் “சந்திரமுகி”யாக மாற்றப்பட்டுவிடும் என்கிற நம்பிக்கையும் இருந்தது. இத்தனை எதிர்பார்ப்புகளுடன் ஏப்ரல் 14-ம் தேதி, இரண்டாவது காட்சியில் அமர்ந்திருந்தேன். (டிக்கெட் கிடைக்க நடந்த சம்பவங்கள் தனிக்கதை. அது என்னுடைய சுயசரிதையில் நிச்சயம் வெளிவரும்!!!)

   முதல் பதினைந்து நிமிடங்களில் ரஜினி ரசிகர்களுக்கான படம் முடிவடைந்துவிடுகிறது. அதன்பின் படம் பொதுப் பார்வையாளர்களுக்குரியது. ஆன்மீகம், அரசியலை விட்டுவிட்ட ரஜினி, அதற்குப் பதிலாய் மாந்த்ரீகம், மந்திரம் போன்றவற்றைக் கையில் எடுத்துக்கொண்டுவிட்டார். கொஞ்சம் பிசகினாலும் “ஏமாத்துறாய்ங்க” என்று ஒரே வரியில் ஊத்திக்கொள்ளக்கூடிய கதையை ரஜினிக்கு ஏற்றவாறு கையாண்டிருக்கிறார் வாசு. படத்தின் எழுத்துப் போடுவதற்கு முன்பாகவே, பாய்ந்து பாய்ந்து அடித்தல், காலைத் தலைக்கு மேலே தூக்கி நின்று சிரித்தல், சுவிங்கம் மென்றுகொண்டே ஸ்லோ-மோஷனில் நடந்து எதிரிகளைப் பந்தாடுதல், காலைச் சுற்றும்போது புயல் மையம் கொண்டு சத்தைகள் பறந்து அடங்குதல் என்று ரஜினி ரசிகர்களுக்கான காட்சிகளை வேக வேகமாக முடித்துவிட்டுக் கதைக்கு நகர்ந்துவிடுகிறார். சின்னச் சின்ன நெருடல்கள், கேள்விகளை எல்லாம் (ரஜினி படத்தில் லாஜிக்கா?) கொஞ்சம் கூடக் கண்டுகொள்ளாமல், வேட்டைக்கார பங்களாவில் சூடு பிடிக்கிறது படம். அந்த டெம்போ படத்தின் இறுதி வரை குறைவதே இல்லை. அதுவும் படத்தின் உச்சக்கட்டக் காட்சியான “ரா ரா” தெலுங்குப் பாடலின் இசை, ஜோதிகா மற்றும் ரஜினியின் நடிப்பு, படமாக்கிய விதம் அனைத்தும் படத்திற்கு ஒரு கிரீடத்தையே சூட்டிவிடுகிறது என்றால் மிகையில்லை.

   படத்தின் நிஜ சூப்பர் ஸ்டாராகச் சொல்லவேண்டியது இரண்டு பேரை. ஒன்று வித்யாசாகர். இன்னொருவர் ஜோதிகா. வித்யாசாகரின் பின்னணி இசை வெகு அபாரம். படத்தைத் தாங்கிப்பிடிப்பதே அவரின் இசையும் பாடல்களுமே. வித்யாசாகர் இத்தனைச் சிறப்பாக இதுவரை இன்னொரு படத்தில் பின்னணி இசையை அமைத்ததில்லை. படத்தின் காட்சி ஒவ்வொன்றிலும் அவரின் அயராத உழைப்புத் தெரிகிறது. உச்சக்கட்டக் காட்சியான “ரா ரா” பாடலுக்கு இசையமைத்த விதத்திற்கு அவருக்கு ஒரு ஷொட்டு. அத்திந்தோம் பாடல் இன்னொரு கலக்கல். இந்த மெட்டு 80 களில் இளையராஜா போட்டுச் சலித்ததுதான் என்றாலும் ரஜினிக்கு இது போதுமானது என்று கணித்தே வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். படம் சூடு பிடிக்கும் இடமே அத்திந்தோம் பாடலில் இருந்துதான். “கொக்கு பற பற” பாடல் படமாக்கப்பட்ட விதம் ரஜினி படங்களில் வெகு அபூர்வமாக நிகழக்கூடிய ஒன்று. “கொஞ்ச நேரம்” இந்த வருடத்தின் சிறந்த மெலோடிகளில் ஒன்று. படமாக்கும் விதத்தில் கொஞ்சம் சொதப்பியிருக்கிறார்கள். ரஜினிக்குத் தேவையான இசையை பாடல்களிலும், தரமான பின்னணி இசையையும் தந்து தன் பங்கை சிறப்பாக ஆற்றியிருக்கிறார் வித்யாசாகர்.

   ஜோதிகா. இப்படி ஒரு நடிப்புத் திறமை இவரிடம் இருக்கிறது என்று நம்பி, சோபனா செய்த கதாபாத்திரத்தை இவரால் செய்யமுடியும் என்று தேர்வு செய்த இயக்குநர் நிச்சயம் பாராட்டுக்குரியவர். படத்தின் கடைசி அரைமணி நேரக் காட்சிகளில் ஜோதிகாவின் நடிப்பு வேகம் பிரமிப்பில் ஆழ்த்துகிறது. “ரா ரா” பாடலில் அவரின் நடிப்பும், வேட்டைக்கார ராஜா மீது எண்ணெய் ஊற்றும்போது அவர் உட்கார்ந்திருக்கும் ஸ்டைலும்,. வேட்டைக்கார ராஜாவைப் பார்த்து அவரின் பாணியிலேயே “லகலகலகலகலகலகல” என்றும் சொல்லும் ஸ்டைலும் அதிசயிக்க வைக்கின்றன. இந்த வருட தமிழக அரசு விருது இவருக்குத்தான் கிடைக்கும். ஜோதிகாவுக்கு டப்பிங் கொடுத்த கலைஞர் யாரென்று தெரியவில்லை. தெலுங்கில் சந்திரமுகியாக அவர் பேசும் விதம் அதிசயிக்க வைக்கிறது. அவருக்கும் ஒரு விருது நிச்சயம்.

   இனி ரஜினி புராணம்! 57 வயது ரஜினிக்கு என்றால் நம்பவே முடிவதில்லை. ஒவ்வொரு காட்சியிலும் அவரின் ஸ்டைலும் காட்சியை உணர்ந்து நடிக்கும் தன்மையும், அவரது ஆளுமையும் – ரஜினிக்கே உரியது. சில காட்சிகளில் ரஜினியின் நடிப்பு மிகத் தீர்க்கமாக இருக்கிறது. வடிவேலுவும் ரஜினியும் இணைந்து செய்யும் நகைச்சுவைக் காட்சிகள் கலகலக்கின்றன. வடிவேலு நினைத்ததை ரஜினி சொல்லும் இடங்கள் நன்றாக இருக்கின்றன. பூட்டிய அறைக்கு வெளியே, வேட்டைக்கார ராஜாவாக ரஜினி இரண்டு முறை நடக்கும் ஸ்டைல் மற்றும் நடிப்பு வேறு யாருக்கும் வராத ஒன்று. “ரா ரா” பாடலில், “லகலகலகல” என்று சொல்லிக்கொண்டு, ஓட்டமும் நடையுமாக, துள்ளலுடன் ரஜினியைக் காணும்போது, ஒரு வேகம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. தலைப்பாகையைக் கீழே போட்டுவிட்டு, அதை எடுக்க ஒரு அமைச்சர் குனியும்போது ரஜினி சிரிக்கும் காட்சியும், கள்ளக்காதலினின் தலையைச் சீவிவிட்டுக் காது குண்டலத்தை எடுத்து மாட்டிக்கொண்டு பாடும் காட்சியும் ரஜினி சிறப்பாக நடித்திருக்கும் இன்னும் சில காட்சிகள். மற்றப் படங்களைக் காட்டிலும் இதில் ரஜினி வராத காட்சிகள் அதிகம். இது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் துக்கத்தை ஏற்படுத்தும் விஷயம். படம் பார்த்துவிட்டு வரும் ரசிகர்களிடம் இந்தக் கருத்தைக் கேட்க முடிந்தது. “பஞ்ச் டைலாக் இல்லை. இதெல்லாம் என்ன?” என்றார் ஒருவர். எங்கோ நடக்கும் ஒரு கதையில் ரஜினி வந்து போவதாகப் புலம்பினார் இன்னொரு ரசிகர். இதன் காரணம், உச்ச கட்டக் காட்சிகளில், ஜோதிகா செய்த ஹைஜாக்கில் அனைவரும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்கள் என்பதே.

   படத்தில் குறைகளே இல்லை என்பதில்லை. அது இருக்கிறது. நிறைய இடங்களில் லாஜிக் இடிக்கிறது. தேவையற்ற குழப்பங்கள் எழுகின்றன. எப்படியென்று தெரியாமல் சில விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் இவையெல்லாம் மிகக்குறைவான காட்சிகள் என்பதே படம் பிழைத்துக்கொள்ளும் காரணம்.

   மணிச்சித்திரத்தாழ் என்கிற க்ளாசிக் படத்தை, ரஜினிக்குத் தகுந்த முறையில் கையாண்டிருக்கிறார்கள். மணிச்சித்திரத்தாழில் இல்லாத சில காட்சிகளைச் சேர்த்திருந்தப்பதன் மூலம் ரஜினிக்குச் சிறந்த வாய்ப்பைத் தந்திருக்கிறார்கள்.

   பிரபு அவரது வேலையைக் கச்சிதமாகச் செய்கிறார்.

   சந்திரமுகியின் பலத்தில் ரஜினியின் கொடி பறக்கிறது.

[மதிப்பெண்கள்: 47]

Share

www.anyindian.com

இப்பதிவு AnyIndian.com-க்கும் அதன் பொருள்களுக்குமான விளம்பரமாகும். ஆனால், எப்படி AnyIndian.com இன்னொரு இணைய மின்வர்த்தகத் தளம் இல்லை என்று நம்புகிறோமோ, அப்படி இந்தப் பதிவும் இன்னொரு விளம்பரம் இல்லை என்று நம்புகிறோம். இம்மடலை வாசிக்க நேர்ந்த நேரம் வீணில்லை என்று நீங்கள் உணரும் வண்ணம் எதையும் மிகைப்படுத்தாமல் “உள்ளது உள்ளபடி” AnyIndian.com குறித்த விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். உங்கள் வாசிப்புக்கும் வருகைக்கும் நன்றிகள்.

1. AnyIndian.com-ஐப் பற்றி:

AnyIndian.com என்கிற மின்வர்த்தகத் தளம், The Pro-Found Company-ன் ஒரு பிரிவாகும். AnyIndian.com-ன் அலுவலகம் சென்னையில் உள்ளது. அதன் அலுவலக முகவரி, தொலைபேசி, மின்னஞ்சல் ஆகியவற்றை இப்பதிவின் இறுதியில் காணலாம்.

AnyIndian.com-ன் பெரும்பாலான பக்கங்கள் (பொருட்கள் பட்டியல், பொருட்களின் பக்கங்கள் உள்ளிட்டப் பல பக்கங்கள்) ஆங்கிலம் மற்றும் தமிழ் என்று இருமொழிகளில் காணக் கிடைக்கின்றன. மின்வர்த்தக வசதிக்காகவும் சில இடங்களின் சட்டங்களைப் பூர்த்தி செய்யும் முகமாகவும் – அனுப்பும் முறை, திருப்பியனுப்பும் முறை, பயனர் ஒப்புதல், பயனர் விவரப் பாதுகாப்பு முதலிய வெகு சில பக்கங்களே ஆங்கிலத்தில் மட்டும் உள்ளன.

2. AnyIndian.com-ல் கிடைக்கும் பொருட்கள் யாவை?

AnyIndian.com மூலமாகப் புத்தகங்கள், கைவினைப் பொருட்கள், ஓவியங்கள் ஆகியவற்றை இணையம் வழியாக விற்கவிருக்கிறோம்.

அதன் முதல்படியாக, புத்தக விற்பனையை இப்போது தொடங்கியிருக்கிறோம். உங்கள் நல்லாதரவுடன், விரைவில் கைவினைப் பொருட்கள், ஓவியங்கள் ஆகியவற்றின் விற்பனையையும் தொடங்க உத்தேசித்துள்ளோம்.

3. எந்த மாதிரியான புத்தகங்கள்?

AnyIndian.com-ன் நோக்கம் எல்லாத் தமிழ்ப் பதிப்பாளர்களின் எல்லாப் புத்தகங்களையும் பயனர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதே. அந்நோக்கை நிறைவு செய்யும் விதமாக AnyIndian.com செயல்படும்.

AnyIndian.com புத்தகப் பட்டியலில் இதுவரை ஆறாயிரத்துக்கும் மேற்பட்டத் தமிழ்ப் புத்தகங்கள் உள்ளன. ஆன்மீகத்திலிருந்து அறிவியல் வரை, சிறுவர் நூல்களிலிருந்து சோதிடம் வரை, நாட்டுப்புறவியலிலிருந்து நவீன இலக்கியம் வரை, சினிமாவிலிருந்து சீனி.விசுவநாதன் வரை, கவிதையிலிருந்து கணினி வரை, தலித்தியத்திலிருந்து பெண்ணியம்வரையான புத்தகங்கள் அவற்றுள் அடங்கும்.

இதுவரை வெளியாகி விற்பனையில் உள்ள – கலைஞன், கவிதா, காவ்யா, சீனி. விசுவநாதன், உயிர்மை, காலச்சுவடு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழரசு புத்தக நிலையம், சந்தியா,ஸ்ரீ செண்பகா, குமரன், மற்றும் திருமகள் நிலையம் ஆகியப் பதிப்பகங்களின் புத்தகங்கள் அனைத்தும் எம்மிடம் கிடைக்கும்.

இனி வரும் நாட்களில் – பிற பதிப்பகங்களின் எல்லாப் புத்தகங்களும் எம்மிடம் கிடைக்கும். எங்களிடம் இருக்கும் புத்தகப் பட்டியலில் சேரும் பதிப்பாளர்கள் மற்றும் புத்தகங்களின் எண்ணிக்கைகள் நாளும் வளர்ந்து கொண்டே வருகின்றன.

4. AnyIndian.com-க்கும் பதிப்பகங்களுக்கும் என்ன உறவு?

பல பதிப்பகங்களின் புத்தகங்களை இணையத்தில் விற்பதற்கு AnyIndian.com முன்னுரிமை பெற்ற விற்பனையாளர் (Preferred Vendor) அங்கீகாரம் பெற்றுள்ளது. இதன் பொருள் – அந்தப் பதிப்பகங்களின் அனைத்துப் புத்தகங்களும் AnyIndian.com-ல் விற்பனைக்குக் கிடைக்கும். மேலும், அந்தப் பதிப்பகங்களுடன் AnyIndian.com-க்கு நேரடியான தொடர்பும் வர்த்தக உறவும் இருப்பதால், அப்பதிப்பகங்களின் புத்தகங்களை எங்கள் மூலம் விரைவாக வாங்க முடியும்.

உதாரணமாக, கலைஞன், கவிதா, காவ்யா, சீனி. விசுவநாதன், உயிர்மை, காலச்சுவடு, சந்தியா, ஸ்ரீ செண்பகா, குமரன் உள்ளிட்ட பெரும்பாலான பதிப்பகங்களின் புத்தகங்களை இணையத்தில் விற்பதற்கு முன்னுரிமை பெற்ற விற்பனையாளர் (Preferred Vendor) AnyIndian.com என்பதை மகிழ்வுடனும் பெருமையுடனும் தெரிவித்துக் கொள்கிறோம்.

புதிய பதிப்பகங்களின் புத்தகங்களை AnyIndian.com விற்க விற்க, AnyIndian.com இணையத்தில் முன்னுரிமை பெற்ற விற்பனையாளராக இருக்கிற பதிப்பகங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து வளர்ந்து வரும்.

5. “சுக்கு கால் பணம் சுமைகூலி முக்கால் பணம்” என்பது போல – புத்தகங்களை அனுப்பும் செலவு (Shipping Cost) என்று தாளித்து விடுவீர்களா?

AnyIndian.com-ல் புத்தகங்களை ஒருவர் வாங்கும்போது, புத்தகங்களை அனுப்ப வேண்டிய முகவரி, தமிழ்நாட்டுக்குள் இருந்தால், அனுப்பும் செலவு எதையும் வாங்குபவர் தர வேண்டியதில்லை. (Free Shipping to any address inside Tamil Nadu). இந்தச் சலுகை குறிப்பிட்ட காலகட்டத்துக்கு, புத்தகங்களுக்கு மட்டும் அளிக்கப்படுகிறது. இதைப் பயனர்கள் உற்சாகத்துடன் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளுக்கு பாரமில்லாத அனுப்பும் செலவுகள். இது குறித்த முழுவிவரங்களின் எங்களின் “அனுப்பும் செலவு” பக்கத்தில் காணலாம்.

பிற இடங்களுக்கான அனுப்பும் செலவுகளை நீங்கள் ஒப்பு நோக்கினால், AnyIndian.com-ன் அனுப்பும் செலவுகள் குறைவென்று அறியலாம்.

6. இவ்வளவு புத்தகங்கள் ஓரிடத்தில் இருக்கும்போது – எந்தப் புத்தகம் நல்லப் புத்தகம் என்று எப்படி அறிவது?

AnyIndian.com-ல் இருக்கிற புத்தகங்கள் அனைத்தும் பயனர் வசதிக்காக, 47 உப-பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, “அ.முத்துலிங்கம் கதைகள்” சிறுகதை என்ற பிரிவிலும், புலம் பெயர்ந்த எழுத்தாளர் என்ற பிரிவிலும் இடம் பெற்றிருக்கிறது. ஒரு புத்தகம் குறைந்தபட்சம் ஒரு உப-பிரிவிலாவது அடங்குகிற வசதி செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து வளரும் எங்கள் புத்தகப் பட்டியலில் இதுவரை 6000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.

பெற்றோர்கள் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான நூல்களில் ஆர்வம் காட்டுகிறார்கள். AnyIndian.com-ல் குழந்தைகளுக்கான நூல்கள் பிரிவில் ஏறக்குறைய 500 நூல்களுக்கு மேலும், பொது அறிவுப் பிரிவில் ஏறக்குறைய 250 நூல்களுக்கு மேலும், வாழ்க்கை வரலாற்றில் 95 நூல்களுக்கு மேலும் உள்ளன. இந்த எண்ணிக்கை நிலையானதல்ல. தொடர்ந்து என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரு புத்தகத்தைப் படித்த பயனர் அப்புத்தகத்தைப் பற்றிய தன் கருத்தை AnyIndian.com-ல் பதிவு செய்ய இயலும். இது பிற பயனர்களுக்கு உதவும்.

ஒவ்வொரு புத்தகத்தின் அட்டையின் புகைப்படத்தையும், அந்தப் புத்தகம் பற்றிய சிறுகுறிப்பையும் AnyIndian.com கொடுக்க முயல்கிறது. இதுவரை அப்படிப் பல புத்தக அட்டைகளின் புகைப்படங்களும் குறிப்புகளும் சேர்க்கபட்டுள்ளன. இது ஒரு தொடர் நிகழ்வாகும். கொஞ்சம் கொஞ்சமாக முடிந்தவரை புத்தகங்களின் அட்டைகளின் புகைப்படத்தையும் புத்தகத்துக்கான குறிப்பையும் AnyIndian.com சேர்க்கும். ஆனாலும், பயனர்கள் புத்தகத்தைப் பற்றிய கருத்துகளைப் பதிவு செய்வது, ஒரு புத்தகம் குறித்த பல விமர்சனங்களை அறிய உதவுமென்பதால், அம்முறையை AnyIndian.com அதிகம் ஊக்குவிக்கிறது.

இவையில்லாமல் புதிய புத்தகங்கள், AnyIndian.com-ல் அதிகம் விற்பனையாகும் புத்தகங்களின் விவரங்கள், ஒரு புத்தகத்தை வாங்கிய பயனர் அது தொடர்பாக வேறு ஏதும் புத்தகத்தை வாங்கியிருந்தால் அது குறித்த விவரங்கள் ஆகியவற்றையும் அறிய முடியும்.

7. எனக்குத் தேவையான புத்தகம் AnyIndian.com புத்தகப் பட்டியலில் இல்லையே?
AnyIndian.com-ன் “பிரத்யேக ஆர்டர்” வசதியைப் பயன்படுத்தி எங்கள் பட்டியலில் இல்லாதப் புத்தகம் ஒன்றை நீங்கள் வாங்க முடியும். இதுகுறித்த முழுவிவரங்களை எங்களின் “பிரத்யேக ஆர்டர்” பக்கத்தில் பார்க்கலாம்.

8. வாங்கிய புத்தகம் திருப்தியில்லை என்றாலோ, தபாலில் வரும்போது சேதமடைந்து கையில் கிடைத்தது என்றாலோ என்ன செய்வது?

திருப்தியில்லையா? AnyIndian.com-ல் இருந்து வாங்கிய ஆர்டர், பிரிக்கப்படாத நிலையில் இருக்குமானால், அவற்றை நீங்கள் உங்களுக்குக் கிடைக்கப் பெற்ற தேதியிலிருந்து இரண்டு வாரத்துக்குள் திருப்பி அனுப்பலாம். எந்தக் கேள்வியும் கேட்காமல், அஞ்சல் செலவு தவிர்த்துப் புத்தகங்களுக்குத் தாங்கள் செலுத்திய பணத்தைத் திருப்பித் தந்து விடுகிறோம்.

புத்தகம் உங்கள் கைக்குக் கிடைக்கும்போது சேதாரமடைந்திருந்தால், அதை மாற்றித் தருகிறோம். ஏற்றுமதி/இறக்குமதி விதிமுறைகளினால் – திருப்பியனுப்பும் வசதியும், மாற்றித் தரும் வசதியும் இந்தியாவிலிருந்து வாங்கும் பயனர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகின்றன.

இது குறித்த முழுவிவரங்களை எங்களின் “திருப்பியனுப்பும் முறை” பக்கத்தில் காணலாம்.

9. உயிர்மை, காலச்சுவடு போன்ற சிற்றிதழ்கள் AnyIndian.com-ல் விற்பனைக்குக் கிடைக்குமா?

சிற்றிதழ்களை நேரடியாக விற்காமல், தமிழர்கள் விரைவாகச் சிற்றிதழ்களுக்குச் சந்தா செலுத்த உதவும் பொருட்டு, சிற்றிதழ்களுக்குக் கடனட்டையைப் (Credit Cards) பயன்படுத்திச் சந்தா செலுத்தும் முறையை AnyIndian.com அறிமுகப்படுத்தியிருக்கிறது. அது குறித்த தகவல்களை AnyIndian.com-ல் காணலாம்.

10. AnyIndian.com-ல் வாங்கும் பொருட்களுக்கு எந்தெந்த வழிகளில் பணம் செலுத்த முடியும்?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடனட்டைகளைப் (Countrywise and International Credit Cards) பயன்படுத்திப் பணம் செலுத்த முடியும். மாஸ்டர் கார்ட், விசா கார்ட், ஜேசிபி கார்ட், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்ட், டைனர்ஸ் க்ளப் கார்ட், சிட்டி பேங்க் இ-கார்ட் ஆகியக் கடனட்டைகளை AnyIndian.com ஏற்றுக் கொள்கிறது.

எச்.டி.எப்.சி பேங்க் (HDFC Bank), சிட்டி பேங்க் (CITI Bank), ஐசிஐசிஐ பேங்க் (ICICI Bank), ஐடிபிஐ பேங்க் நெட் பேங்க்கிங் (IDBI Bank Net Banking), யுடிஐ ஐ கனெக்ட் நெட் பேங்க்கிங் (UTI I Connect Net Banking), செஞ்சுரியன் பேங்க் (Centurion Bank), தி பெடரல் பேங்க் லிமிடெட் (The Federal Bank Ltd), பேங்க் ஆ·ப் பஞ்சாப் லிமிடெட் (Bank of Punjab Ltd) ஆகிய வங்கிகளில் உங்களுக்குக் கணக்கு இருந்தால், அந்தக் கணக்கிலிருந்து நேரிடையாக AnyIndian.com-ல் வாங்குகிற புத்தகங்களுக்குப் பணம் செலுத்த முடியும்.

கடனட்டை இல்லையா? கவலை வேண்டாம். வரைவோலை (Demand Draft) மற்றும் மணி ஆர்டர் மூலம் பணம் செலுத்த முடியும்.

தனிப்பட்ட காசோலைகள் (Personal Cheques) மூலம் பணம் செலுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

11. இவையில்லாமல் AnyIndian.com-ன் சிறப்பியல்புகள் வேறு யாவை?

a.) புத்தகங்களைப் பொருத்தவரை, இந்த மாத எழுத்தாளர், இந்த மாத பதிப்பகம் என்று எழுத்தாளர்களையும் பதிப்பாளர்களையும் தேர்ந்தெடுத்துப் பயனர்களிடம் AnyIndian.com பகிர்ந்து கொள்கிறது. எழுத்தாளர்களையும் பதிப்பாளர்களையும் கௌரவிக்கும் முகமாகவும், பயனர்களுக்கு இத்தகைய அறிமுகங்கள் பயனளிக்கும் என்ற எண்ணத்திலும் இது செய்யப்படுகிறது.

b.) ஒவ்வொரு பதிப்பாளருக்கும் ஓர் இணையப் பக்கம் AnyIndian.com-ல் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அப்பக்கங்களில் அப்பதிப்பாளர் பற்றிய விவரங்களையும் அறிமுகத்தையும் தருவதற்கு AnyIndian.com முயல்கிறது. பதிப்பாளர் பற்றிய தகவல்கள் இல்லாத பதிப்பாளர் பக்கங்கள் இனிவரும் காலங்களில் தக்க தகவல்களுடன் நிரப்பப்படும்.

c.) இணையத்தில் முன்னுரிமை பெற்ற விற்பனையாளராக (Preferred Vendor on Internet) அங்கீகரித்துப் பதிப்பகங்கள் தருகிற சான்றிதழ்கள் அவ்வப்போதே பயனர் பார்வைக்கும் வைக்கப்படுகின்றன.

d.) ஒரு குறிப்பிட்டப் புத்தகத்தைப் பற்றிய விவரத்தை அறிவதற்குப் பயனர் தன்னைப் பதிவு செய்து கொள்கிற வசதி இருக்கிறது.

e.) ஒரு குறிப்பிட்டப் புத்தகத்தை நண்பருக்குச் சிபாரிசு செய்கிற வசதியிருக்கிறது.

f.) தேவையான புத்தகங்களைப் பற்றிய விவரத்தை அறிய தேடல் (Search), நுணுக்கமான தேடல் (Advanced Search) ஆகிய வசதிகள் உள்ளன. இது இல்லாமல் புத்தக விவரங்களைப் பதிப்பாளர், கிடைக்குமிடம், எழுத்தாளர், புத்தகத்தின் உப-பிரிவுகள் முதலிய வழிகள் மூலமும் பார்க்க முடியும்.

g.) பயனர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட முகவரிகளைச் சேகரித்து வைத்துக் கொண்டு, பொருளை அனுப்ப அதிலிருந்து ஏதாவது ஒரு முகவரியைத் தேர்ந்தெடுக்க முடியும். பயனர்கள் இப்படித் தங்கள் வசதிக்கேற்ப முகவரிப் புத்தகங்களை வைத்துக் கொள்ள முடியும்.

h.) இவையில்லாமல் இன்னும் புதிய வசதிகளும் பகுதிகளும் AnyIndian.com-ல் விரைவில் தொடங்கப்படும்.

உங்கள் நல்லாதரவுடன் விரைவில் கைவினைப் பொருட்கள் மற்றும் ஓவியங்களும் AnyIndian.com-ல் கிடைக்கும்.

12. கேள்விகள் இருப்பின் AnyIndian.com-ஐ எப்படித் தொடர்பு கொள்வது?

எங்கள் தளத்தின் உதவிப் பக்கத்தில் இந்தக் கேள்விகளுடன் இன்னும் பல கேள்விகளுக்கான விடைகள் இடம் பெற்றுள்ளன. எனவே உங்கள் கேள்விக்கான பதில் அப்பக்கத்தில் இருக்கிறதா என்று ஒருமுறை பார்த்து விடவும்.

AnyIndian.com பல வழிகளில் பயனர் சேவை அளிக்கிறது. மின்னஞ்சல், கடித அஞ்சல், தொலைபேசி, இணையதளத்தில் உள்ள “தொடர்புக்கு” பக்கம் வழியாக என்று பலவகைகளில் ஒரு பயனர் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். ஆனாலும், மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்வதை AnyIndian.com ஊக்குவிக்கிறது. மின்னஞ்சல் மூலம் விரைவான சேவைக்கான வாய்ப்பிருக்கிறது. பயனர்களுக்கும் நேர விரயமில்லை.

AnyIndian.com-ன் முகவரி பின்வருமாறு:

V. Harihara Prasanna
Director – Marketing and Consumer Relations
AnyIndian.com (A Division of The Pro-Found Company)
G-3, S.A.Constructions, 4/31 D, III Main Road
Rayala Nagar, Ramapuram
Chennai-600 089, India
Telephone: (91)-44-22493706
E-Mail: customerservice@anyindian.com

Share

கூத்து – கவிதை

த்ரௌபதி சேலையுரியப்பட்டபோது
அவள் பேசிய நீண்ட வசனங்களில்
அதிக நடிப்புக்கு அவள்-அதிக அழுகைக்கு அவர்கள்;
அர்ச்சுனன் தபசில்
ஒவ்வொரு படிக்கும்
நீண்ட பாடலை
பொறுமையுடன் கேட்ட
பெருமக்கள்-இவர்கள்
பேரன் பேத்திகள்
பார்வையாளர்களிலிருந்து
தங்களை நடிகர்கள் வரிசைக்கு
மாற்றிக்கொண்டவர்கள்

ராஜா மார்த்தாண்டவர்மன்
கையிருந்த பளபள அட்டைக் கத்தியைப்
(“சோதி முத்து” ரொம்பக் கஷ்டப்பட்டுத் தூக்குவானாம்!)
பத்திரமாக வைத்திருப்பதைப் பார்த்துப் போகிறார்கள்
இரசனை மிக்க
நவீன தேசத்துக்காரர்கள்

கூத்து மேடையின் படியெங்கும்
பதிந்திருக்கும்
கால்ரேகைகளிலும்
கிருஷ்ணனின் தலைக்கவசத்திலும்
பீமனின் கதையிலும்
செத்துப்போன சோதிமுத்து வீட்டில் கிடக்கும் சில
கூத்துப் பொருள்களிலும்
இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கிறது
இன்னும் வரப்போகும் ஜென்மங்களில்
அழியப்போகிற கூத்து

த்ரௌபதியிடம் சொல்லிவைக்கவேண்டும்
துச்சாதனனால் அவளுக்குத் தொல்லையில்லை என்றும்
அவளால் கிருஷ்ணனுக்கு வேலையிருக்காது என்றும்.

Share

நிழல் – கவிதை

ஒரு மனிதனின் பல புறவடிவங்களை
கேள்விக்குள்ளாக்கி
நிழல்களின் வடிவங்கள்
பட்டியலிட முடியாததாய்
சிறுத்தும் ஒடுங்கியும் நீண்டும், ஆனாலும்
கருமை மட்டும் பொதுவாய்

வெளிச்சமற்ற பொழுதிலும் கூட
நிழல்கள்
கூடவே இருக்கின்றன
இதை உருவேற்றிக்கொள்ளும்போது
தனிமையிலும்,
கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாய்
நாம் விரும்பாதபோது
புறந்தள்ளக்கூடியதாய்
விரும்பும்போது
ஏற்படுத்திக்கொள்ளக்கூடியதாய்
இலகுவான தோழமை

ஏதோ இருவரின் நிழல்கள்
சங்கமித்துக்கொள்ளும்
எது எவரது என்று இனம் காண இயலாதவாறு
காற்றுச் செல்லும் இடைவெளி
இருவருக்குமிருந்த போதும்

நிழலுருவத்தை வரையும் ஒருவனால்
நிழலை மட்டுமே வரைய முடியாது
வரைய வரைய
அது நிஜமாகிக்கொண்டே இருக்கும்

நினைவுகளினூடே
என்னைக் கடந்து
தன் திசைமாற்றி
என் கைப்பிடிக்குமோ
நான் முன்னகர முன்னகர
பின் நீளும்
என்
நிழல்?

[எனது இந்தக் கவிதை பிப்ரவரி கணையாழியில் வெளியாகியுள்ளது.]

Share