சூஃபி சொன்ன கதை – பீவியும் பகவதியும்

சூஃபி சொன்ன கதை – பீவியும் பகவதியும் – புத்தக விமர்சனம் உயிரோசை.காமில் வெளியாகியுள்ளது.

நன்றி: உயிரோசை.காம்

சூஃபியிஸம் என்பதை அன்பை முக்கியமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாம் (அதாவது ஷரியத் சட்டங்களை முக்கியமாக வைத்து இயங்காமல்) எனப் புரிந்துகொள்ளலாம். சூஃபிகள் எங்கு வாழ்கிறார்களோ அங்கே இருக்கும் மதங்களோடு ஒன்றிணைந்தே வாழ்கிறார்கள். அவர்கள் மதங்களைவிட மனிதர்களையும் அன்பையும் பிரதானமாகப் பார்த்து அதன்படி தங்கள் செயல்களை வடிவமைத்துக்கொள்கிறார்கள். இந்தியாவில் சூஃபிக்களை இந்துக்களும் முஸ்லிம்களும் முக்கியமானவர்களாகக் கருதுகிறார்கள். ஹிந்துவாக இருந்து, பின்னர் முஸ்லிமாக மாறி, தான் பிறந்து வளர்ந்த மதத்தின் தேவியையும் விக்கிரகத்தையும் கைவிடமுடியாமல் தவிக்கும் ஒரு பெண் பீவியாக மாறும் நாவல் ‘சூஃபி சொன்ன கதை.’ அந்த பீவியை ஹிந்துக்களும் முஸ்லிம்களும் வணங்குகிறார்கள். கார்த்தி என்னும் பெண், சித்தாராவாகி, வாழ்நாளெங்கும் தன்னை விரட்டும் காமம் சார்ந்த அகச்சிக்கல்களைப் புறந்தள்ளமுடியாமல் அதற்குப் பலியாகி, பீவியாகிறாள்.

பீவியின் மஸாரை (புனித சமாதி) ஹிந்துக்களும் முஸ்லிம்களும் வணங்கத் தொடங்குவதோடு நாவல் தொடங்குகிறது, அங்கு வரும் சூஃபி ஒருவர் ‘முதல் பீவி’யின் கதையைச் சொல்லத் தொடங்குகிறார்.

மேலே புல்லாரத் தரவாட்டில் கார்த்தி பிறக்கிறாள். கார்த்தி வளர வளர, அவளின் தாய்மாமன் சங்குமேனன் தன் மருமகள் கார்த்தியின் மீது – கேரள பாரம்பரியக் கட்டுப்பாடுகளுக்கு எதிரானதாகக் கருதப்படுகிறது இது – காமம் கொள்கிறான். கார்த்திக்கும் தன் தாய்மாமன் மீது இனம்புரியாத காமம் இருக்கிறது. ஆனால் சங்குமேனன் தன் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் நினைவில் கொண்டு அவளிடமிருந்து விலகியிருக்கிறான். அதுமட்டுமன்றி, கார்த்தியை பகவதியின் அம்சமாகவே காண்கிறான். கார்த்தியின் வீட்டில் அனைவரையும் பெரியம்மை நோய் தாக்கும்போது, கார்த்தி மட்டும் நோயிலிருந்து விலகி, ஜோதியாக ஒளிர்கிறாள். தறவாட்டைச் சோதனையிட வரும் வெள்ளைக்காரத் துரைமார்கள் பகவதியின் உருவத்தை ஜோதியாகக் கண்டு அஞ்சி ஓடுகிறார்கள். அந்த ஊருக்கு வியாபாரம் செய்ய வரும் மாமுட்டிக்கும் கார்த்திக்கும் ஈர்ப்பு ஏற்படுகிறது. மாமுட்டி மாப்பிள்ளா சமூகத்தைச் சேர்ந்தவன். தறவாட்டை விட்டுவிட்டு மாமுட்டியோடு செல்கிறாள் கார்த்தி. அதைத் தடுக்க நினைத்தாலும், தடுக்க இயலாதவனாக ஆகிறான் சங்குமேனன்.

ஊரே அதிசயிக்க, ஒரு இந்துப் பெண்ணை அழைத்துச் செல்லும் மாமுட்டியை அவரு முஸலியார் இஸ்லாமானவளாக மாற்றுகிறார். குப்பாயம் மாட்டி, ஐவேளை தொழுது இஸ்லாத்தின் கடமைகளை நிறைவேற்றுகிறாள். எப்போதும் படுக்கையறையில் மாமுட்டியுடன் காமத்தைத் தீர்த்துக்கொள்ளும் சித்தாராவாகிய கார்த்திக்கு வாழ்க்கையே புதுமையானதாகவும் இனிமையானதாகவும் தோன்றுகிறது. வியாபார விஷயமாக மாமுட்டி மீண்டும் வெளியூர் செல்லும் இரவில், மாமுட்டி இல்லாமல் அலைபாயும் அவள், தான் புகுந்த வீட்டைச் சுற்றிப் பார்க்கிறாள். அங்கு அவள் எதிர்பாராமல் காணும் தேவி விக்கிரகம் அவளுக்கு அவள் பகவதி தன்மையை மீண்டும் காட்டிக்கொடுக்கிறது. இஸ்லாம் வீட்டுப் பெண்கள் தங்கள் வீட்டிற்குள் ஏதோ இனம்புரியாத ஒன்று வந்துவிட்டதாக அஞ்சுகிறார்கள். ஆனால் மாமுட்டி அவளுக்குத் தனியே கோவில் கட்டித் தருகிறான். இந்த ஹராமான செயலைக்கண்டு, அவனது ஊர்க்காரர்களும் சொந்தக்காரர்களும் அவனை ஒதுக்கிவைக்கிறார்கள். அவரு முஸலியாரும் கடும் கோபம் கொள்கிறார்.

அவரு முஸலியாரின் குடும்பமும் நான்கு தலைமுறைகளுக்கு முன்புதான் மதம்மாறிய குடும்பம். பழம் ஹிந்துக் குடும்பத்தின் நினைவுகள் தாக்கத் தொடங்க, அவரு முஸலியார் தன்வசம் இழக்கிறார். என்ன செய்கிறோம் என்ற நினைப்பில்லாமல் ஹிந்து விக்கிரகங்களைத் தொழவும், நினைவு வந்து அல்லாவிடம் மன்னிப்புக் கேட்கவுமென அலைக்கழிகிறது அவரது வாழ்க்கை. தனது வாழ்க்கை சீரழிவது தன் மனைவியால் என்கிற எண்ணம் எழவும், அவளோடு உறவு கொள்ளமுடியாத அலியாகிறான் மாமுட்டி. தன் காமத்திற்கு வடிகாலாக, பதினைந்தே வயதான அமீருடன் உறவுகொள்ளத் தொடங்குகிறான். இதனை அறியும் கார்த்தி, காமத்தோடும் தாய்மை உணர்வோடும் அவனைத் தன் மார்போடு இறுக்கி, குளத்துக்குள் அமுக்கிக் கொல்கிறாள். ஒரு துரையைப் பார்க்கப் போகும் மாமுட்டி, தனது ஹராமான செயலுக்காகக் கொல்லப்படுகிறான். கார்த்தியும் கடலில் கலந்து பீவியாகிறாள். கடலில் நிலைதடுமாறும் ஆண்களைக் காத்து, கரை சேர்க்கிறாள் பீவி. அம்மக்கள் அவளுக்குக் கல்லறை கட்டித் தொழுகிறார்கள். அவள் பகவதியாகவும் பீவியாகவும் கொண்டாடப்படுகிறாள்.

இரண்டாம் பீவியின் கதையை சூஃபி சொல்லத் துவங்குவதுடன் கதை நிறைவடைகிறது.

ஒரு நாவலின் கதையை இப்படி முழுமையாகச் சொல்வது சரியானதல்ல என்றாலும், இந்த நாவலைப் பொருத்தவரையில் இது மிகவும் முக்கியமானதாகிறது. பகவதியாகத் தன்னை இனம் காணும் ஒரு பெண் பீவியாகும் கற்பனை மிக அசாதாரணமானது. இதைச் சாத்தியமாக்கியிருக்கிறார் எழுத்தாளர் ராமனுண்ணி. கதை முழுவதும் ஒருவித மந்திரச் சொல்லாடல்கள் போன்ற மொழியில் சொல்லப்படுகிறது. எம்.டி. வாசுதேவன் நாயர் இக்கதை பற்றிச் சொன்னதுபோல, பழைய வார்த்தைகளைக் கொண்டு புதிய பொருள்களை உருவாக்குகிறார் ராமனுண்ணி. இப்படி ஒரு நீண்ட, அசாதாரணமான கற்பனையை ஓர் எழுத்தாளர் சாத்தியமாக்கியிருக்கிறார் என்பதே ஆச்சரியமான ஒன்று.

சங்குமேனன் கார்த்தியின் மீது கொள்ளும் காமமும், அவன் பகவதி மீது கொள்ளும் பக்தியும் ஒன்றோடொன்று பொருந்திப் போவது மிகச் சிறப்பாகப் புனையப்பட்டுள்ளது. இந்த விவரிப்பிற்குத் தேவையான, ஒருவித மெஸ்மரிஸத்தை உருவாக்கக்கூடிய எழுத்து நடையை மிக அழகாகக் கையாண்டிருக்கிறார் ராமனுண்ணி. இது மிகவும் எளிதாகப் படித்துமுடிக்கப்படக்கூடிய நாவலல்ல. மாறாக, வாசகனின் முழுக்கவனத்தையும், கடுமையான உழைப்பையும் வேண்டும் நாவல் என்பதை நாவல் ஆரம்பித்த சில பக்கங்களிலேயே உணர்ந்துகொள்ளலாம்.

கார்த்தியின் அகச்சிக்கல்கள் இந்நாவல் முதலிலிருந்து கடைசிவரை விவாதிக்கப்படுகின்றன. அவளது அகச்சிக்கல்கள் முழுக்க முழுக்க காமம் சார்ந்தவையே. அவள் பூப்பெய்தும் காலத்தில் தன் தாய்மாமன் சங்குமேனன் மீது கொள்ளும் காமம் துவங்கி, தன் கணவன் மாமுட்டியோடு கொள்ளும் உறவுகள் வரை, அவள் நிலைகொள்ளாமல் தன்னையும் தன்னுடலையும் தன் வாழ்வையும் பற்றி எப்போதும் யோசிக்கிறவளாக இருக்கிறாள். உடல் மீது கவனமும் கடும் காமமும் இருக்கும்வரை அவள் பகவதியை நினைக்காமல் இருப்பதும், ஒரே நாளில் ஒரு விக்கிரகத்தை அவள் கண்டடையவும் மிக உக்கிரமாக அவளை பகவதி ஆக்கிரமித்துக்கொள்வதும் நடக்கின்றன. தன்மீது வந்து அழுத்தும் சுமைகளை நீக்க, அவள் வீடெங்கும் கிடக்கும் சுமை நிறைந்த பொருள்களாகத் தூக்கி இறக்குவது சிறப்பான குறியீடாக முன்வைக்கப்பட்டுள்ளது.

தன் புகுந்தவீட்டில் தேவி விக்கிரகத்தைக் கண்டடைவதுமுதல், அவள் ஒரு இஸ்லாமானவளாகவும் ஹிந்துவாகவும் இருக்கிறாள். அந்த இடத்தில் அவள் ஒரு பீவியாக மாறத் தொடங்குகிறாள். ஆரம்பத்தில் அவளிடமிருந்து விலகி ஓடும் பெண்கள், அவளுக்குள் இருக்கும் ஒருவித மந்திர சக்தியை அறிந்து, அவளை ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயத்துக்குள்ளாகிறார்கள். மிகப்பெரிய பிரச்சினையைக்கூட மிக எளிதாக அவள் எதிர்கொள்ளும் விதமும், எப்போதும் சாந்தம் தவழும் ஜோதி எரியும் முகமுமென அவளை எளிதாக இஸ்லாம் பெண்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அந்நேரத்தில் அவள் கணவன் அவளிடமிருந்து விலகுவது அவளுக்குப் பெரும் கலவரத்தை ஏற்படுத்துகிறது. எப்போதும் தன்னுள் பொங்கிப் பிரவகிக்கும் தாய்மையைப் பதினைந்து வயது அமீருக்கு அள்ளிக் கொடுக்கும்போது அவன் அதை ஏற்றுக்கொள்ளமுடியாமல் தவிக்கிறான். அவனை காமத்தின் உச்சியில், தாய்மையின் கனிவில், பகவதியின் உக்கிரத்தோடு நீரில் முக்கிக் கொள்ளும்போது கார்த்தி சொல்லும் வசனங்கள் மிக முக்கியமானவை. இத்தகைய அகச்சிக்கல் அலைக்கழிப்புகளுக்கு ராமனுண்ணியின் எழுத்தே அதற்கான உயிர்ப்பைக் கொடுக்கிறது. தறவாடெங்கும் பெயரியம்மை பரவுகிறது என்பதை ராமனுண்ணி சொல்லும் விதத்தை, அவரின் எழுத்து நடைக்கு இன்னொரு உதாரணமாகச் சொல்லலாம். ஜெயமோகனின் ‘டார்த்தீனியம்’ படித்தபோது வீடெங்கும் கருமை சூழ்ந்ததை உணர்ந்ததைப் போல, பெரியம்மை வீடெங்கும் வீரிய விதைகளாகப் பரவும் விவரணையைப் படித்தபோது, என் வீடெங்கும் அதன் விதைகள் காற்றில் உலவுவதுபோன்ற ஓர் எண்ணத்தை அடைந்தேன். இது ராமனுண்ணியின் மிகப்பெரிய வெற்றியல்லவா.

அவரு முஸலியார் அறிவு நிலையில் தன்னை முஸ்லிமாகவும், உணர்வு நிலையில் தன்னை இந்துவாகவும் நினைத்துப் படும் அவஸ்தைகளும் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளன. நான்கு தலைமுறைகளுக்கு முன்பு, அவரின் முன்னோர்கள் கூட்டம் கூட்டமாக மதம் மாறுகிறார்கள். உயிர்பயம், காரிய சித்தி போன்றவை காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. இஸ்லாமாக மதம் மாற, சிலர் ஜோதிடம்கூடக் காண்கிறார்கள். மதம் மாற மறுக்கும் சிலர் உயிர் துறக்கிறார்கள். அப்போது மதம் மாறிவிட்டாலும், அவரு முஸலியாரின் தாத்தாவிற்குள் ஹிந்து நினைப்பு ஓடுகிறது. அது காலம் காலமாக மறைந்திருந்து, அவரு முஸலியாரின் உணர்வுக்குள் ஏறிக்கொண்டு அவரைப் பாடாய்ப்படுத்துகிறது. வேறு வழியறியாமல், உண்மையான முஸ்லிமாக வாழவேண்டிய ஆசை நிறைவேறாமல், இறந்துவிட முடிவெடுக்கிறார் அவரு முஸலியார். ஆனால் ஒரு பீவியின் தோற்றம் அவரது அலைக்கழிப்பிலிருந்து அவரை மீட்கிறது. ஒரு சூஃபியின் தேவையை மிக அழகாக இந்த இடத்தில் நிலைநிறுத்துகிறது நாவல்.

குறிஞ்சிவேலன் இந்நாவலை மலையாளத்திலிருந்து தமிழிற்கு மொழிபெயர்த்திருக்கிறார். மலையாளத்தில் ராமனுண்ணியின் நடை எத்தனை கடுமையானதாகவும், சவால் நிறைந்ததாகவும் இருந்திருக்குமென யூகிக்கமுடிகிறது. அதை மொழிபெயர்ப்பது எளிதான வேலையல்ல. அதைத் திறம்படவே செய்திருக்கிறார் குறிஞ்சிவேலன். ஆனால் பல இடங்களில், பல வாக்கியங்கள் பொருளற்றதாகத் தெரிகின்றன. அதேபோல் பல இடங்களில், அவள் – நான், அவனை – தன்னை – என்னை என்கிற குழப்பங்கள் காணப்படுகின்றன. ஒரு ஆசிரியரின் கூற்றும், ஒரு கதாபாத்திரத்தின் தன்கூற்றும் சட்டென மாறும் இடங்களில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் மொழிபெயர்ப்பாளர். பல இடங்களில் மலையாள வார்த்தைகள் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றிற்கான அடிக்குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பான ஒன்று. ஆனால் தேவையற்ற பல இடங்களில், அதற்கான தமிழ்வார்த்தைகள் உள்ள நிலையில் அவற்றை ஏன் அப்படியே பயன்படுத்தவேண்டும் என்று புரியவில்லை. வெளிச்சப்பாடு என்பதை வெளிச்சப்பாடு என்று எழுதி, அதற்கான ஒரு குறிப்பையும் கொடுப்பது சரியானதுதான். ஆனால் கிக்கிளி என்பதை அப்படியே பயன்படுத்தவேண்டியதில்லை. கிச்சுகிச்சு என்று சொல்லலாம். மேலும், நாவலில் இன்னும் இரண்டு இடங்களில் கிச்சுகிச்சு என்றும் பயன்படுத்தப்பட்டுள்ளது. புழை என்பதற்கு ஆறு என்றே பயன்படுத்தி இருக்கலாம். புழை என்று பயன்படுத்தி அதற்கான குறிப்பைத் தந்திருந்தாலும், இது தேவையற்றது என்றே தோன்றுகிறது. மூலச் சொல்லை அப்படியே மொழிபெயர்க்க முடியாத நேரத்திலும், அதன் தேவை அவசியம் என்று கருதுகிற இடங்களிலும் மட்டுமே அவ்வார்த்தையை அப்படியே பயன்படுத்திவிட்டு அடிக்குறிப்பு கொடுப்பது நல்லது என்பது என் எண்ணம். இவற்றை எல்லாம் மீறி, ஒரு சவாலான மொழிபெயர்ப்பை மிகச் சிறப்பாகச் செய்திருக்கும் குறிஞ்சிவேலன் பாராட்டுக்குரியவரே.

சூஃபி சொன்ன கதையின் மலையாள மூலம் கேரள சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுள்ளது. இது ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

சூஃபி சொன்ன கதை, நாவல், கே.பி. ராமனுண்ணி; தமிழில்: குறிஞ்சிவேலன், கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை – 600 018, விலை: 110 ரூபாய்.

Share

Comments Closed