Masters League 2025

மாஸ்டர்ஸ் லீக் 2025

முன்பு ‘ஒரு கல்லூரியின் கதை’ என்றொரு திரைப்படம் வந்தது. திராபையான திரைப்படம். ஆனால் நல்ல கரு. அப்போதுதான் கல்லூரி எல்லாம் முடிந்து வேலைக்குப் போய் திருமணம் என்று செட்டிலாகி இருந்த தருணம். கல்லூரியை ரொம்பவே மிஸ் பண்ண நேரம். மீண்டும் கல்லூரி வாழ்க்கைக்குள் போவது என்பதே போதை தரும் ஒரு நாஸ்டால்ஜியா. அந்தப் படத்தில் இதுதான் கதை.

சச்சின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு எனக்கு அடிக்கடி தோன்றியதுண்டு, மீண்டும் சச்சின் விளையாடுவதைப் பார்க்கவேண்டும் என்று. என்னைப் போலப் பலரும் யோசித்திருக்கிறார்கள் போல. ஓய்வுபெற்றவர்களை எல்லாம் அழைத்து வந்து மாஸ்டர்ஸ் டிராஃபி!

சச்சின் மீண்டும் ஆடுவதைப் பார்த்ததே புல்லரிக்கும் தருணமாக இருந்தது. சச்சினுக்கு இப்போது 51 வயதாகிறது. மாஸ்டர்ஸ் டிராஃபியில் ஆடும் சிலருக்கு இதைவிட வயது குறைவுதான். 51 வயதுக்குப் பார்க்கையில் சச்சின் தன் உடலை நன்றாக ஃபிட்டாகவே வைத்திருக்கிறார்.

ஶ்ரீலங்காவிற்கு எதிரான முதல் மேட்ச்சில் இரண்டு ஃபோர் அடித்த அழகும் அவரது பழைய ஆட்டத்தை நினைவூட்டின. அவரது எப்போதுமான ஸ்டைல் ஷாட் ஒன்றில் அடுத்து ஆட்டமிழந்தபோது ஐயோ என்றிருந்தது. ஆனால் மற்ற விளையாட்டுக்காரர்களின் சிறப்பான ஆட்டத்தில் எப்படியோ இந்தியா வென்றுவிட்டது.

இரண்டு நாள் முன்னர் லாரா ஆடியதைப் பார்க்கும்போது பழைய சுகமான நினைவுகள் வந்து போயின.

இத்தனை சீக்கிரம் ஷேன் வார்ன் நம்மைவிட்டுப் போகாமல் இருந்திருக்கலாம்.

யுவராஜ் சிங் படு ஃபிட். மற்ற பல இந்திய வீரர்களை அவ்வப்போது எங்கோ பார்த்த நினைவு!

ஏனோ ஷேவாக், கங்கூலி, பிரெட் லீ, வாஸ், முரளிதரன் உள்ளிட்ட பலர் வரவில்லை. அடுத்த டிராஃபிக்கு வருவார்கள் என நினைக்கிறேன்.

மாஸ்டர்ஸ் டிராஃபியைப் பார்க்கும்போது கொஞ்சம் காமெடியாகவும் இருக்கிறது. பெரும்பாலான வீரர்களால் ஓடவே முடியவில்லை. அடியாள்களை அடிக்க துரத்தும் அடியாள்கள் சுகர் மாத்திரை போட்டுட்டு வந்துரட்டுமா பாஸ் என்று கேட்பது போல், பவுண்டரியை மெல்ல நடந்து விரட்டுகிறார்கள். போனால் போகட்டும் என்று விட்டுவிடுகிறார்கள். கஷ்டப்பட்டு பவுலிங் செய்கிறார்கள். பவுண்டரி லைனில் கேட்ச் பிடித்தால் ஓடிப் போய் கையைக் குலுக்கி அலப்பறை எல்லாம் செய்ய முடிவதில்லை. டிரைனில் போகும் நண்பனை வழியனுப்பவது போல தூரத்தில் நின்று கைகாட்டி பரஸ்பரம் பாராட்டிக் கொள்கிறார்கள். தம்ஸ் அப் காட்டி மூச்சு முட்டப் புன்னகைக்கிறார்கள். எப்படியோ பேட்டிங்கில் மட்டும் சமாளிக்கிறார்கள்.

நேற்று இங்கிலாந்துக்கு எதிராக சச்சின் சிறப்பாக ஆடினார். 21 பந்துகளில் 34 ரன்கள். ஆறு ஃபோர்கள். பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. 51 வயதில் அற்புதமான ஆட்டம். ஒரு சிக்ஸ். ஜென்ம சாபல்யம் போல இருந்தது.

கடந்த இரண்டு ஆட்டங்களில் இன்னும் சில இந்திய வீரர்கள் மற்ற அணிகளின் பவுலிங்கை அடி வெளுத்துவிட்டார்கள். ஶ்ரீலங்காவுக்கு எதிராக பின்னியும் யூசுஃப் பதானும் பிளந்தார்கள். ஶ்ரீலங்கா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு ஆட்டங்களிலும் குர்கீரத் சிங் அடி பின்னிவிட்டார்.

இந்த நாஸ்டால்ஜியாவைப் பார்க்கவே ஸ்டேடியத்தில் நல்ல கூட்டம். அத்தனை பேரும் பார்க்க சுகர் பேஷண்ட்டுகள் போலவே இருந்தாலும் பார்க்க சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

மாஸ்டர்ஸ் டிராஃபி என்று யோசித்தவனை எத்தனை பாராட்டினாலும் தகும்.

Share

Tears of Begums

பேகம்களின் கண்ணீர்

பென்னேசன் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் முக்கியமான நூல். 1857ல் நடந்த சிப்பாய்ப் புரட்சிக்குப் பிறகு ஆங்கிலேய அரசு அன்றைய ஆட்சியாளர்களை எப்படிப் பந்தாடியது என்பதை விளக்கமாகப் பதிவு செய்யும் நூல். இப்புரட்சியை அடக்காதவர்கள் என்று நினைத்தோ அல்லது புரட்சிக்கு உதவி செய்தார்கள் என்று நினைத்தோ அல்லது ஜாஃபர் ஷா புரட்சியில் பங்கெடுத்தார் என்பதற்காகவோ அல்லது இவை எல்லாவற்றுக்குமாகவோ, அன்றைய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் பிரிட்டிஷ் அரசால் கொடூரமாக ஒடுக்கப்பட்டார்கள். அன்று உயிருக்காகத் தப்பிப் பிழைத்தவர்களின் நினைவை, அன்றிலிருந்து கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு பேட்டி எடுத்துத் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர் க்வாஜா ஹஸன் நிஜாமி.

இந்தப் பேட்டி எடுக்கப்படும்போது பலர் பிரிட்டிஷ் அரசு தரும் உதவித் தொகையான ஐந்துக்கும் பத்துக்கும் ஏங்கித் தங்கள் வாழ்க்கையைக் கழிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். தங்கள் அரசப் பாரம்பரியம் தங்கள் கண்முன்னே பறிக்கப்பட்டதை ரத்தமும் வலியுமாக இந்த நூலில் அவர்கள் பதிவு செய்கிறார்கள்.

தன் தந்தை தன் கண்ணெதிரே கொல்லப்பட்டதை, ரம்ஜானுக்கு வீட்டில் குந்துமணி கோதுமை கூட இல்லாததை, வேலைக்காரர்களை ஏவி ஏவி ராஜபோக வாழ்க்கை வாழ்ந்தவர்கள் கூலி வேலை செய்து பிழைப்பதை, உயிருக்கும் உடைமைக்கும் அஞ்சி மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு ஓடியதை எல்லாம் இந்தப் பதிவில் நாம் பார்க்கலாம்.

உருதுவில் இருந்து பென்னேசன் நேரடியாக தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். அனாவசியமான சொல்லாடல்களோ தேவையற்ற திருகல் மொழியோ இல்லை. இந்த நூலுக்குத் தேவையான நேரடி மொழி. மிகச் சிறப்பான பணியைச் செய்திருக்கிறார் பென்னேசன்.

இந்த நூல் படிக்கும்போது இன்னொரு நினைவும் ஒருசேர எழுந்துவந்ததை மறைக்க முடியாது.

இந்த நூலில் பேசுபவர்கள் அனைவரும் தாங்கள் செங்கிஸ்கானின் வம்சம், பாபரின் பேரர்கள் என்று பழம்பெருமை பேசுவதைத் தொடர்ந்து பார்க்கலாம். பாபரும் செங்கிஸ்கானும் இன்று பிரிட்டிஷ் அரசு இவர்களுக்குச் செய்த அதே கொடூரத்தை அன்று மற்றவர்களுக்குச் செய்தவர்கள்தான். அப்படிச் செய்துதான் இவர்கள் இந்த நாட்டில் காலூன்றவே முடிந்தது. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்று சொன்னவன் சும்மா சொல்லிவிட்டுப் போகவில்லை. வன்மத்துடன் நான் இதைச் சொல்லவில்லை, நிதர்சனம் இது என்கிற வகையில் சொல்கிறேன்.

கன்ஃப்யூஸ்ட் தேஸி என்பதைப் போல, இந்த வம்சாவளியினருக்குத் தாங்கள் யார் என்பதில் குழப்பம் இருக்கிறது. பழம்பெருமைகளில் தோயும்போது தங்களை பாபரின் சந்ததி என்று நினைத்துக்கொள்கிறார்கள். அதே சமயம் இந்தியாவே இவர்களது யதார்த்தமான தாய்நாடு என்பதும் இவர்களுக்குப் புரிகிறது. இந்த இரண்டு நிலைகளுக்கு இடையேயும் ஊடாடுகிறார்கள். பாவம்தான்.

இதில் ஒரு கதை என்னை மிகவும் கவர்ந்தது. பாதுஷாவின் மகள் ஒருவர் மெக்கா செல்கிறார். இவர் அரச வம்சம் என்பதால் மெக்கா சுல்தான் இவருக்கு வேண்டிய வசதிகளை எல்லாம் செய்து தருகிறார். தங்குவதற்கு வீடும், கூடவே மாதச் செலவுக்குப் பணமும் தருகிறார். இந்தியாவில் அல்லல்பட்டு மாதப் பணத்துக்காக பிரிட்டிஷ் அரசிடம் கையேந்த வேண்டிய தேவை இனி இல்லை. கூடுதலாக மெக்காவில் சுல்தானின் தயவால் மரியாதையும் கிடைக்கிறது. ஆனாலும் சில வருடங்களில் இவர் இந்தியா வருகிறார். தன் நாடு இந்தியா என்று உணர்வதால் அவரால் மரியாதையோடு கூட பாக்தாத்தில் வாழ முடியவில்லை. கன்ஃப்யூஸ்ட் தேசிகளுக்கு மத்தியில், பாபரின் வழித் தோன்றல் என்றாலும் தன் நாடு இந்தியா என்று வந்த அந்த மனிதருக்கு, இந்தக் கதையில் வரும் அத்தனை இன்னல்களும் சமர்ப்பணம் ஆகட்டும்.

Share

Vanangaan

வணங்கான் – அரை மணி நேரம் பார்த்திருக்கிறேன். பெரிய இயக்குநர் ஒரு படத்தை சுமாராக எடுக்கலாம். ஆனால் இத்தனை கேவலமாக எடுக்கக் கூடாது. ‘அவன் இவன்’ திரைப்படத்தை விட மோசமான ஒரு திரைப்படத்தை இனி பாலாவால் எடுக்க முடியாது என்கிற எண்ணத்தைப் போட்டு உடைத்திருக்கிறார் பாலா. தனக்குத்தான் காமெடி வரவில்லையே, அப்புறம் எதற்கு அதைக் கட்டிப்பிடித்து அழ வேண்டும் என்று தெரியவில்லை. எல்லாக் காட்சிகளும் ஏதோ அவரது பழைய திரைப்படத்தில் வந்த காட்சிகள் போலவே இருக்கின்றன. ஆங்காங்கே பிராமண பாஷை, ஆங்காங்கே கிறிஸ்துவக் கிண்டல், மீண்டும் கிறிஸ்துவப் புகழ்ச்சி, ஆங்காங்கே அரசியல் நையாண்டி, ஆங்காங்கே இந்து மதக் கிண்டல் என எல்லாவற்றையும் போகிற போக்கில் தொட்டுக்கொண்டு விட்டால் மக்கள் ரசிப்பார்கள் என்று யாரோ பாலாவை நம்ப வைத்துக் கழுத்தை அறுத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது என் மகனும் மகளும் கடுப்பாகி, இது என்ன படம், ஒரு மண்ணும் புரியல, ஏன் இதைப் போட்டுக் கழுத்தறுக்க என்று கேட்டார்கள்.

இப்படித்தான் முன்பொரு சமயம் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’ என்ற கன்னடப் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். முதல் 20 நிமிடம் பார்த்ததில் ஒன்றுமே புரியவில்லை. பிடிக்கவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு வசீகரம் இருக்கப் போய் அந்தத் திரைப்படத்தைச் சாப்பிடும் போதெல்லாம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அரை மணி நேரம் என்ற வாக்கில் 7 ஞாயிற்றுக்கிழமைகளில் பார்த்து முடித்தேன். முடிவில் உண்மையில் அந்தப் படத்தின் வெறியனாகிவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். ரக்ஷித் ஷெட்டி பிரமாதப்படுத்தி விட்டார். பின்பு அந்தப் படத்தை முழுமையாக மீண்டும் பார்த்தேன்.

அதேபோல் இந்தப் படத்தையும் இனி ஒவ்வொரு நாளும் சாப்பிடும்போது பார்க்கப் போகிறேன் என என் பையனிடம் சொன்னேன். மறு விநாடி அவன் சொன்னான், ‘இந்த வீட்ல உன்கூட சேர்ந்து சாப்பிடறது இன்னைக்குத்தான் கடைசி’.

வணங்கான் திரைப்படத்தில் ஒரு பாதிரியார் நெற்றி நிறையக் குங்குமம் பூசிக்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி பக்கம் இந்த எழவெடுத்த மரபு ஏதேனும் உண்டா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

Update:

இன்று சாப்பிடும்போது வணங்கான் அடுத்த 30 நிமிடம் பார்த்தேன். முதல் 30 நிமிடமே பரவாயில்லையோ என்று நினைக்க வைக்கும் அடுத்த 30 நிமிடம்! கொடூரம். இயக்குநர் எடிட்டர் என அனைவரும் படத்தைப் பார்த்து மயங்கிய தருணம் ஒன்று இருக்கிறது. பிறவியிலேயே பேச முடியாத காது கேட்க முடியாத ஹீரோ கீழே விழுந்துவிட்ட குழந்தையை வேகமாக ஓடிச் சென்று தூக்கியபடி, அடிப்படலைல்ல ஒன்னும் ஆகலைல்லை என்று வாயசைப்பில் கேட்கும் அந்தக் காட்சி!

Share

Hissab Barabar

Hissab Barabar (H)

கணக்கை நேர் செய்துவிட்டேன் என்று அர்த்தம். இன்னொரு ஆம் ஆத்மி படம். ஆம் ஆத்மி என்றால் அரசியல் கட்சி அல்ல, சாதாரண மனிதனின் படம். சாதாரண மனிதன் எப்படி தன்னை கார்ப்பரேட் வங்கி சுரண்டுகிறது என்பதைக் கண்டுபிடித்து அதை மக்கள் முன் தோலுரிக்கும் கதை. அஞ்சு பைசா திருடினா தப்பா? அஞ்சு அஞ்சு பைசாவா அம்பது தடவை அம்பது கோடி பேர் திருடினா? இதுதான் கதையின் ஒன்லைனர்! சீரியஸான கதையை நகைச்சுவையாகச் சொல்கிறேன் என்று சோதித்துவிட்டார்கள். மாதவன் தானாகச் சிரித்துக்கொள்கிறாரே ஒழிய நமக்குச் சிரிப்பே வருவதில்லை. உச்சக்கட்டக் காட்சியில் 1,500 கோடி ரூபாய் பணத்தைச் சுருட்டும் காட்சி, நம்ம ஊர் மெகா சீரியல்களில் கூட இதைவிட நன்றாக இருக்கும். நேர விரயம் செய்யத் தயாராக இருப்பவர்கள் பார்க்கலாம்.

Share

Adisi Nodu Beelisi Nodu

நேற்று ஏதோ ஒரு ரீல்ஸில் ஒரு பாடல் காதில் விழ, கன்னட நடிகர் ராஜ்குமாரின் ஆடிசி நோடு பீலிசி நோடு ஹுருளி ஹோகது பாடல் பற்றிக்கொண்டது. அட்டகாசமான பாடல். இந்தப் படம் கஸ்தூரி நிவாஸா தமிழில் அவன்தான் மனிதன். இந்தப் பாடலுக்கு இணையான பாடல், மனிதன் நினைப்பதுண்டு அல்லது ஆட்டுவித்தால் யாரொருவர். ஆட்டுவித்தால் யாரொருவர் எம் எஸ் வி தந்த காலத்தால் அழியாத பாடல். வாழ்நாளில் மறக்க முடியாத பாடலும் கூட. அதே போலத்தான் ஜி.கே.வெங்கடேஷின் ஆடிசி நோடு பாடலும்.

ஆடிசி நோடு பாடலில் 2ம் நிமிடத்தில் இருந்து வரும் 30 செகண்டுக்கு ராஜ்குமாரின் நடிப்பைப் பார்த்து அசந்திருக்கிறேன். பல முறை. இன்றைய நடிகர்களுக்கு இணையான தோற்றத்தை அன்றே வைத்திருக்கிறார். நிச்சயம் பாருங்கள்.

இந்தப் பாடலைக் கேட்ட நாளில் இருந்து, இந்தப் பாடல் தமிழில் ஏதோ ஒரு பாடல் போல இருக்கிறதே என்று ஒரு வருடமாக மண்டையைப் பிராண்டிக் கொண்டிருந்தேன். நேற்றிரவு விடை கிடைத்தது. அந்தப் பாடல், கேவி மகாதேவன் இசை அமைத்த மனுஷனை மனுஷன் சாப்பிடறாண்டா தம்பிப் பயலே பாடல்!

Share

Max Kannada Movie

மேக்ஸ் (K) – சுதீப்பின் திரைப்படங்கள் என்றாலே காத தூரம் ஓடுபவன் நான். இந்தப் படத்தைப் பற்றிச் சில நண்பர்கள் பாசிட்டிவாகச் சொல்லவும் பார்த்தேன். கைதி போன்ற ஒரு படத்தை எடுக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. தொடக்கம் முதல் இறுதி வரை தலைவலி. பைத்தியக்காரத்தனமான திரைக்கதை. ஆயிரம் ரஜினி ஆயிரம் விஜய் சேர்ந்து காதில் பூச் சுற்றினால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு பூச்சூற்றல். கிறுக்குத்தனமான படம். இதில் இளவரசு, ஆடுகளம் நரேன், கிங்க்ஸ்லி போன்ற தமிழ் நடிகர்கள் கன்னடம் பேசும் கொடுமையை எல்லாம் வேறு பார்க்க வேண்டியிருக்கிறது. கைதி திரைப்படம் ஏன் கிளாசிக் என்பதை இந்தத் திரைப்படம் மீண்டும் உறுதி செய்கிறது. இனிமேல் செத்தாலும் சுதீப் நடித்த திரைப்படத்தின் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க மாட்டேன்.

Zee5ல் கிடைக்கிறது.

Share

Maryade Preshne Kannada Movie

மரியாத ப்ரஷ்னே (K) – நன்றாகத் தொடங்கி அழகாகச் சென்று திடீரென்று தடம் மாறி ஏன்டா பார்த்தோம் என்று கதற வைத்து விட்ட ஒரு திரைப்படம். ஆரம்பத்தில் வரும் காட்சிகளும் நட்பின் ஆழமும் எளிய குடும்பமும் அழகான காதலும் மிக அருமை. குறிப்பாக ஒவ்வொரு நடிகரும் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். அவர்களின் இயல்புத்தன்மை நம்மையும் பற்றிக் கொள்கிறது. பின்பு படம் ஒரே காட்சியில் ஒட்டுமொத்தமாகத் தடம் மாறுகிறது. பிரபாகர் முன்ட்கர் இந்தப் படத்தில் வில்லனாக வருகிறார். அவர் மர்ஃபியில் கதாநாயகனாக நடித்து அசத்திய பிறகு இந்தப் படம் வந்திருக்கிறது. ஒரு வேளை இது முதலிலேயே தொடங்கப்பட்ட திரைப்படமாக இருந்திருக்கலாம். அழகுக்கும் திறமைக்கும் பிரபாகர் முன்ட்கர் கன்னடத் திரை உலகில் நிச்சயம் ஒரு வலம் வருவார் என நினைக்கிறேன். ஒரு திரைப்படத்தில் எதை முன்னிறுத்துகிறோம், எதைச் சொல்லப் போகிறோம் என்பது மிக முக்கியமானது. இந்தத் திரைப்படத்தில் அது சுத்தமாக இல்லை. லாஜிக் என்றால் என்ன என்று கேட்கும் இவ்வகைத் திரைப்படங்களை முழுமையாகப் பார்ப்பதே கொடுமைதான்.

Share

Lucky Bhaskar

லக்கி பாஸ்கர் (T) – நேற்றுதான் பார்த்தேன். ஊரை ஏமாற்றிய ஒருவன் கடைசி வரை ஜெயிக்கிறான் என்பதைக் காட்டுவது பெரிய நெருடல். ஆனால் உலகமும் அப்படித்தான் இருக்கிறது. அதேசமயம் ஒரு திரைப்படத்துக்கு அதாவது ஒரு கலைக்கு இது ஆதாரமாக அமையமுடியுமா என்ற கேள்வி மனத்தில் உழன்றபடி இருக்கிறது. மக்களை ஏமாற்றும் ஒரு கூட்டத்திடம் அதே பாணியில் பணம் பறிக்கும் ஒரு கதாபாத்திரத்தை ஏற்பதில் சிக்கலில்லை. ஆனால் இதை ஏற்கவே முடியவில்லை.

இதை விட்டுவிட்டுப் பார்த்தால், படம் அட்டகாசம். சமீபத்தில் வந்த திரைப்படங்களில் புத்திசாலித்தனமான படம் இதுவே. (ஜிகர்தண்டா இரு பாகங்களும் புத்திசாலித்தனமான படங்களே.) கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு என அனைத்தும் அருமை. துல்கர் நடிப்பு அபாரம். பாஸ்கர் பணத்திமிர் கொள்ளும் காட்சிகளில் இருந்து அரை மணி நேரம் அதீத விறுவிறுப்பு. பல காட்சிகளில் காதில் பூச்சுற்றல் இருந்தாலும் இந்த விறுவிறுப்பே நம்மை அதைக் கடந்து போக வைக்கிறது.

படத்தின் பெரிய மைனஸ், மூன்று கார்களைக் கொண்டு போய் கோவாவில் விற்கும் நீண்ட காட்சி. பெரிய அறுவை. தெலுங்குப் பட வாடை அடித்தது இந்தக் காட்சியில்தான். மற்ற காட்சிகள் எல்லாம் ஹிந்தித் திரைப்படம் பார்ப்பது போலவே இருந்தது. குறிப்பாக வங்கிக் காட்சிகள்.

இதுவரை பார்க்காதவர்கள் பாருங்கள்.

நெட்ஃப்ளிக்ஸில் பார்த்தேன்.

Share