தமிழ் சினிமா கேள்விகள் – தொடராட்டம்

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா. என்ன உணர்ந்தீர்கள்?

நினைவில்லை. சில சமயம் இப்படி யோசித்திருக்கிறேன். யார் நமக்கு முதலில் ஏதேனும் ஒரு வார்த்தையைச் சொல்லிக்கொடுத்திருப்பார்கள் என்று. விடை தெரியாத கேள்வியே இது. நாமாக நினைத்துக்கொள்ளவேண்டியதுதான். பொன்வண்டு என்கிற வார்த்தையை யார் சொல்லிக்கொடுத்தது? நினைவில்லை. அதேபோல் எந்தப் படம் முதலில் பார்த்தேன் என்பதும் நினைவில்லை. ஆனால் என் நினைவில் தெரியும் காட்சி ஒன்று உண்டு என்று நானாக ஒன்றை நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஔவையார் படத்தில் வைக்கோலை யானை கட்டி போரடிக்கும் காட்சி. அந்தக் காட்சியைப் பார்த்தது நான் ஒன்றாம் வகுப்பு பார்த்தபோது இருக்கலாம்.

2.கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?

சரோஜா – படம் பரவாயில்லை.

3.கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

விருமாண்டி. நேற்று முன் தினம் கிரண் டிவியில் பார்த்தேன். இளையராஜாவும் கமலும் பெரும் ஆச்சரியத்தை உண்டாக்கினார்கள். அந்தக் கமல் காணாமல் போனது குறித்து வருத்தம் இருக்கிறது. பின்னணி இசைக்காக இளையராஜாவிற்கு விருது கிடைக்காதது அநியாயம் என்ற நினைப்பு மீண்டுமொருமுறை எழுந்தது. முதல்முறை படம் பார்க்கும்போது ஏற்பட்ட அதே உணர்வுகள் மீண்டும் தலைதூக்கின. ஹே ராம் பாதிப்பில் வரும் ஒன்றிரண்டு காட்சிகள், சமய சந்தர்ப்பம் இல்லாமல் கிரேஸி மோகன் டைப்பில் கமல் அடிக்கும் ஒன்றிரண்டு ஜோக், கடைசியில் படம் கமர்ஷியலாகத் தடம்புரள்வது என… இருந்தாலும் விருமாண்டி நல்ல படம். மிகச்சிறந்த படமாக வந்திருக்கவேண்டியபடம்.

4.மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

ஹேராம்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

பாட்ஷா திரைப்பட மேடையில் ரஜினி ஜெயலலிதாவைக் கண்டித்தது.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

ஏ.ஆர். ரகுமானின் வரவு.

6.தமிழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

மிகவும் ஆர்வத்துடன் வாசிப்பேன். விட்டல்ராவின் தமிழ்சினிமாவின் பரிமாணங்கள் ஒரு சிறந்த புத்தகம். செழியனின் பேசும் படம், மகேந்திரனின் நடிப்பு என்னும் கலை, தியடோர் பாஸ்கரனின் எம் தமிழர் செய்த படம், ஜெயகாந்தனின் ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள், மின்னல் என்ற புனைப்பெயரில் ஒருவர் எழுதிய புத்தகம், சுஜாதாவின் பார்வை 360, இன்னும் பல.

7.தமிழ் சினிமா இசை?

பார்த்திபன் ‘உள்ளே வெளியே’ திரைப்படத்தில் இசை @ இளையராஜா என்று டைட்டில் கார்டில் போட்டார். நானும் அக்கட்சிதான். தமிழ் சினிமா இசை @ இளையராஜா.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

கடந்த இரண்டுமூன்று வருடங்களாக நிறையப் பார்க்கிறேன். நல்ல மலையாளப் படங்கள் மிகவும் பிடிக்கும். நிறைய உலகப் படங்களயும் பார்க்கிறேன். தாக்கிய படங்கள் பல. Life is beautiful, பதேர் பாஞ்சாலி, சூரஜ் கா சாத்வன் கோடா, Amistad எனப் பல.

9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ் சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை.

10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மோசமில்லை.

11.அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு எரிச்சலாகத்தான் இருக்கும். என்னதான் பல படங்களைப் பார்த்தாலும், மொக்கையாக இருந்தாலும் தமிழ்ப்படம் பார்க்காமல் இருக்கமுடியுமா என்ன. அதிலும் ரஜினி படத்தை, முதல் நாள் முதல் ஷோவில் பார்க்காமல் என்ன வாழ்க்கை வேண்டியிருக்கிறது. :)) கருணாநிதிக்கும் நேரம் நிறையக் கிடைக்கும் என்று மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். 🙂

பதிவு போட அழைத்த சுரேஷ்கண்ணன், ஜெ. ராம்கி ஆகியோருக்கு நன்றி. மோகந்தாஸ் என்னை அழைக்கவில்லை, மிரட்டினார். அதனால் அவருக்கு நன்றி கிடையாது. 😛

அழைக்க விரும்புகிறவர்கள் என்கிற column கொஞ்சம் பயமாக இருக்கிறது. தப்பித் தவறி சாருநிவேதிதா என்று எழுதினால், நீ ரஜினிகாந்தைக் கூப்பிட்டியா என்பார் என்பது குறித்த பயம் இருக்கிறது. தமிழ்ப்படங்களைப் பற்றி சாருவிடம் கேட்க கேள்விகள் அதிகம் இல்லை என்பதால் அவரை அழைக்காமல் இருப்பதும் நல்லதுதான். 🙂

நான் அழைக்க விரும்புகிறவர்கள்:

சந்திரசேகர் கிருஷ்ணன் (இவரது எழுத்து நடை எனக்குப் பிடித்தது என்பதால்.)

சுகா (இவர் திரைப்படத் துறையில் நேரடியாகப் பங்கு பெற்றிருப்பதால்.)

இட்லிவடை (இவர் சம்பந்த சம்பந்தமில்லாமல் எழுதுவதைக் கேட்க விரும்புவதால்.)

ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் (எப்படியும் எழுதப்போவதில்லை என்பதால்.)

சேதுபதி அருணாசலம் (திரைப்படங்கள் பற்றிய ரசனை கொண்டவர் என்பதால்.)

பின்குறிப்பு: இனிமேல் இதுபோன்ற ஆட்டைல சேர்க்காதீங்க சாமி. 🙂

Share

கொலு

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பின்பு இன்றுதான் கொலு பார்ப்பதற்காக என்னுடைய உறவினர் வீட்டுக்குப் போனேன். நான் கல்லுப்பட்டியில் இருந்தபோது பல வீடுகளுக்குக் கொலு பார்க்கப்போவோம். அந்த நினைவு வந்தது. கல்லுப்பட்டியில் கொலுவிற்கு வீடே அமர்க்களப்படும். கடும் ஆசாரத்தைக் கடைப்பிடிக்கும் என் அம்மா வழிப் பாட்டிவீடு அது. சிரத்தையாக கொலு வைத்து, கலசம் வைத்து வழிபட்டு, ஒவ்வொரு நாளும் ஒரு சுண்டல் செய்து வரும் எல்லாருக்கும் விநியோகிப்பார்கள். கொலு வைப்பதற்கு முன்பும், கொலு முடிந்த பின்னர் பொம்மைகளை எடுத்து வைப்பதற்குள்ளும் வீடு ரணகளமாகியதெல்லாம் நினைவுக்கு வருகிறது.

கொலுவை வீட்டின் முக்கிய அறையில் வைப்பார்கள். அடுத்த ஆண்டில் திடீரென பாட்டி கொலுவை தனியறையில் வைக்கச் சொல்லிவிட்டார். அது மாமாவும் அத்தையும் உறங்கும் இடம். ரணகளத்திற்கான காட்சிகள் தொடங்கிவிட்டன. என்ன வெட்டுக்குத்து நடந்தாலும் பாட்டியை யாரும் ஜெயித்ததில்லை. சாகும்போதுகூட இரண்டு தடவை டாக்டர் தோற்றுவிட்டார். மதுரை மருத்துவமனையில், இந்தக் கிழவி பிழைக்காது என்று வீட்டுக்கொண்டு போகச் சொல்லி, வரும் வழியில் திருமங்கலத்தில் இறுதிச் சடங்கிற்கு ஆச்சார்களைச் சொல்லி வீட்டிற்கு வந்தால், கிழவி எழுந்து உட்கார்ந்துகொண்டுவிட்டது. மீண்டும் மதுரை டாக்டர்க்கு ஃபோன், ஆச்சார்களுக்கு ஃபோன் என எல்லாரையும் தோற்கடித்தது பாட்டி. அடுத்தமுறை மீண்டும் டாக்டரைத் தோற்கடித்தது பாட்டி. இன்னும் ஒரு வருஷம் இருக்கும் என்று சொன்ன பத்தாவது நாளில் அந்த வருடக் கொலுவைப் பார்க்காமலேயே போய்ச் சேர்ந்தது பாட்டி. சாகும்வரை ஜெயித்துக்கொண்டே இருந்த பாட்டி, தன் வீட்டிற்கு வந்த மாட்டுப்பெண்களிடமா தோற்கும்? தனியறையில்தான் கொலு வைத்தார்கள். இடம் தீர்மானித்தாகிவிட்டது. எத்தனை படி வைக்கலாம் என்பதில் அடுத்த பிரச்சினை தொடங்கும். படிகள் தீர்மானிக்கப்பட்டால் எப்படி லைட் செட் போடலாம் என்பதில் பிரச்சினை வரும். எல்லாவற்றையும் தீர்த்து முதல் நாள் கொலுவைக் கண்ணில் பார்த்து, வருபவர்களுக்கெல்லாம் சுண்டல் கொடுத்ததும்தான் பெருமூச்சு விடும் பாட்டி. மற்ற வீடுகளுக்குக் கொலு பார்க்கப் போகும். வரும்போது ஒரு பெரிய சண்டைக்கான முகாந்திரத்துடன் கிழவி வரும். நான் சொன்னமாதிரி வெச்சிருந்தா அவ வீட்ட விட நம்ம வீட்டுல நல்லா இருக்கும் என்று ஆரம்பித்து, வீட்டிலிருக்கும் எல்லாரையும் ஒரு வாங்கு வாங்கிவிடும். இதில் ஏடாகூடமாக எதாவது ஒரு பெண் வீட்டிற்கு விலக்கு என்றால் கேட்கவே வேண்டாம்.

நவராத்திரி நாள்களில் ஒரு பட்டாளமாக கொலு பார்க்கப்போவார்கள். நான் என் அம்மாவுடன் ஒட்டிக்கொள்வேன். ஒவ்வொரு வீடாக தினமும் அசராமல் கொலு பார்க்கப்போவார்கள். எல்லார் வீட்டிலும் ஏதேனும் சுண்டல் இருக்கும். எல்லார் வீட்டிலும் சுண்டல் அருமை என்று சொல்லிவிட்டு வருவார்கள். கடைசி நாள் கொலு பார்க்கச் செல்லும்போதுக்கூட, ஏற்கெனவே எட்டு நாள் அந்த பொம்மைகளைப் பார்த்தே இருக்காதது மாதிரி, புதுக்கருத்து சொல்வார்கள். அந்த வீட்டு அம்மா முகம் மலர்ந்து அதைக் கேட்டுக்கொள்ளும்.

மாமி ஒரு பாட்டு பாடலாமே என்று ஒவ்வொருமுறையும் கேட்டபின்புதான் மாமி பாடத் துவங்குவார். ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி பாட்டைக் கேட்டாலே பிச்சி பிடுங்கி ஓடலாமா என்றிருக்கும். ஆனால் மாமியோ சுசிலாவின் குரலில்கூட லேசாக பிசிறு இருந்தது என்கிற பாவத்தில் பாடிக்கொண்டிருப்பார். முடித்தவுடன் வெற்றியும் நாணமும் கலந்த சிரிப்பில் தலைமுடியைக் கோதிக்கொண்டு ‘எப்படி இருந்ததிடீ’ என்பார். அதற்குள் திடீரென ஒரு அக்கா கேட்காமலேயே நவராத்திரி நாயகியே என்று ஏதேனும் ஆரம்பிப்பாள்.

என் அம்மாவும் பாடுவாள்.

‘கற்பகவள்ளி நின் பொற்பதங்கள் பிடித்தே… மின்ன மாதிரி இல்லை. வயசாயிடுத்து. பொற்பதங்கள் பிடித்தே நற்கதி அருள்வாயம்மா… வயசுல அப்படி பாடுவேன். பற்பலரும் போற்றும் பனிமதுராபுரியில்.. லலலலா லலலா… ஆஸ்துமா வந்து முடியல… வரியும் மறந்துடுச்சு… நீ பாடுவியேடி…’

நான் அம்மாவிடம் இன்று சொன்னேன் இதைப் பற்றி. ‘இவன் எல்லாம் கண்டான்’ என்றாள். அவள் வயசுக் காலத்திலே இருந்து இப்படித்தான் ‘வயசுக்காலத்துல நல்லாப்பாடுவேன்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறாள் – என்று சொன்னேன். சிரித்துக்கொண்டாள்.

நாங்கள் இன்று கொலு பார்க்க வந்தது குறித்து என் உறவினருக்கு மிகவும் மகிழ்ச்சி. என் மனைவி வந்திருக்கிறாள் என்று தெரிந்தவுடன் பக்கத்துவீட்டு, எதிர்வீட்டுப் பெண்கள் வந்து என் மனைவியை அழைத்துச் சென்றார்கள். இதற்கு முன்பு பார்த்ததில்லை என்கிற எவ்வித தடங்கல்களும் இல்லை. உடனடி நட்பு. நவராத்திரி நட்புக்கான பண்டிகை. கடந்த நான்குவருடங்களில் என் மனைவியும் இதுபோலப் போனதில்லை என்பதால் அவளுக்கு இது புதிய அனுபவமாக இருந்தது. நவராத்திரி பெண்கள் பண்டிகை. அதுவும் வீட்டில் கன்னிப் பெண்கள் இருந்தால் அந்த வீடே களைகொண்டுவிடுகிறது என்பதை கண்கூடாகப் பார்க்கமுடிந்தது.

முன்பு அக்கிரஹாரத்தில் இருந்தபோது அக்கிரஹாரமே தாவணி உடுத்திகொள்ளும். தெருவெங்கும் வண்ணங்கள் இழைந்தோட பையன்கள் வாய் பார்த்திருப்பார்கள். இழந்த வயது திரும்ப வருவதில்லை. நவராத்திரி வருகிறது.

ஒரு காலத்தில் யாருக்கும் அலுவலக வேலை என்பது இல்லாதிருந்த காலத்தில், பணத்திற்காக அதிகம் உழைக்கவேண்டிய கட்டாயம் இல்லாதிருந்த காலத்தில், தேவை குறைவாகவும் அதை அடைவது எளிதாகவும் இருந்த மகிழ்ச்சி நிறைந்த காலத்தில், பண்டிகைகளே மக்களை உற்சாகமாக வைத்திருந்திருக்கிறது. ஒன்பது நாள்களும் ஒரு ஊரே கொண்டாட்டத்தில் இருந்திருக்கும். கோயில்களில் கொலு வைக்கும் வழக்கம் உண்டு. நவராத்திரி பெண்களுக்கான விழாவாதலால், வீட்டிலும் கோயிலிலும் கூடும் பெண்களைக் கண்டு பழம்கால மன்னர்களும் தளபதிகளும் காதல் கொண்டு கல்யாணம் செய்திருக்கக்கூடும். ஒருவகையில் நவராத்திரி என்பதே வயசுப்பெண்களுக்காக விழாவாக இருந்திருக்கலாம் – இப்படி யோசித்துக் கொண்டே போனபோது நவராத்திரியை மிகவும் பிடித்துவிட்டது.

மீனாட்சி அம்மன் கோவில் கொலு வைப்பார்கள். கொலுவைப் பார்த்துமுடிக்கும்போது கால் வலி வந்துவிடும். அத்தனை பொம்மைகள் வைப்பார்கள். எங்கள் வீட்டில் கொலு கிடையாது. முன்பு ஒருமுறை பல வருடங்களுக்குமுன்பு எங்கள் வீட்டில் கொலு வைத்தபோது எங்கள் முக்கிய உறவினர் ஒருவர் இறந்துவிட்டாராம். அதிலிருந்து கொலு வைக்காமல் இருந்திருக்கிறார்கள். இன்னும் சில வருடங்கள் கழித்து, இன்னொரு தடவை கொலு வைத்துப் பார்க்கலாம் என்று வைத்தபோது, தீபம் கீழே விழுந்து கொலு மண்டபம் எரிந்துவிட்டதாம். இப்படி தடங்கல் வந்ததால் என் தாத்தா இனிமேல் கொலு வைக்கவேண்டாம் என்று முடிவெடுத்து, எல்லா பொம்மைகளையும் கோவிலுக்குக் கொடுத்துவிட்டாராம். மீனாட்சி அம்மன் கோவிலில் கொலுபார்க்கும்போதெல்லாம் இந்த நினைவு எனக்கு வரும். இப்போது எத்தனை பொம்மைகளைக் கொலுவில் வைக்கிறார்கள் என்பது தெரியவில்லை. நெல்லையப்பரின் தேர்த்தட்டுகளின் எண்ணிக்கை வருடாவருடம் குறைந்துவருவது பற்றி ஊர் பெருசுகள் புலம்புவதுபோல, மீனாட்சி அம்மன் கோவிலில் குறைந்துவரும் பொம்மைகளின் எண்ணிக்கையைப் பற்றியும் மதுரை புலம்புவதுண்டு.

இந்த பரபரப்பான காலத்திலும் மக்கள் விடாமல் கொலு வைப்பது சந்தோஷமாக இருக்கிறது. குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மக்கள் தங்களைப் பற்றி அறிந்துகொள்ளவும், எந்த வீட்டில் எந்தப் பெண் எப்படி இருக்கிறாள் என்று தெரிந்துகொள்ளவும், குறிப்பிட்ட இடங்களில் வசிக்கும் மக்களுக்கான ஒரு தொடர்பு வெளியாகவும் இப்பண்டிகை விளங்குகிறது என்பதை இன்று நேரில் பார்த்தேன்.

என் மனைவி ஐந்தாறு வீடுகளுக்குச் சென்றுவிட்டு, கை நிறைய பழங்கள், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், ஐந்தாறு வகை சுண்டலகள், ஒரு சிறிய எவர்சில்வர் தட்டு என சுமந்துகொண்டு வந்தாள். அந்த வீட்டுல அப்படி இருந்தது, இந்த வீட்டுல இப்படி இருந்தது, நம்ம வீட்டுலதான் இதெல்லாம் ஒண்ணுமில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தாள். கல்லுப்பட்டியில் என் அம்மா வழிப்பாட்டி இப்படித்தான் சொல்லுவாள். ‘ஒரு ஏரி கட்டி நாலஞ்சு படகை மிதக்க விட்டு, சுத்திலும் பார்க் போட்டு, மண்ணு ரொப்பி, லைட் செட் போட்டுட்டா, நம்ம வீட்டு கொலுதான் இருக்கிறதுக்குள்ள நல்லா இருக்கும்…’

Share

எல்லாம் அம்மா செயல்

என்றைக்கு கருணாநிதி வந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டாரோ அன்றே தொடங்கிவிட்டது அக்கோயிலின் மீதான ஓர் ஆர்வமின்மை. அதிலும் அக்கோயில் 250 கோடி பட்ஜெட்டில் கட்டப்பட்ட கோவில் என்றபோது அதன் மீதான ஆர்வமின்மை வெறுப்பை நோக்கி நகரத் தொடங்கியது. இதனாலேயே இக்கோவிலுக்குப் போகலாம் என்கிற பேச்சு வந்தபோதெல்லாம், சில எதிர்மறையான காரியங்களைச் சொல்லி தவிர்த்தே வந்தேன். நேற்று அக்கோவிலுக்குச் செல்லவேண்டிய சந்தர்ப்பம் வந்தது. சரி போவோம் என்று போனேன்.

வேலூருக்கு அருகில் இருக்கிறது கோவில். ஸ்ரீபுரம் தொடக்கத்தில் இருந்து எங்கே பார்த்தாலும் நாராயணியும் அம்மாவும் காட்சி தருகிறார்கள். உண்மையில் நான் ஸ்ரீ அம்மா என்று சொல்லியிருக்கவேண்டும். மரியாதையின்மையின் உச்சம் நான் அம்மா என்று மட்டும் சொல்வது. மேல் மருவத்தூரில் அம்மன் முன்பு அம்மா (இது வேறு அம்மா) நின்று அருள் சொல்வதுபோல, நாராயணியின் முன்பு நின்று அம்மா அருள் பாலிக்கிறார். அம்மா என்று அழைக்கப்படுபவர் கிட்டத்தட்ட 32 வயதான ஒரு ஆண். ’அவர் பிறக்கும்போது அவர் முகத்தில் நாமம் இருந்தது. பின்னர் அவர் கடவுளின் குழந்தையாக இல்லாமல் வேறு யாராக இருக்கமுடியும்? அவரைப் பார்த்த சிலர் கண்மூடிக் கண் திறந்தபோது அவர் சிங்கத்தின் மீதிருக்கும் நாராயணியாகக் கண்டார்கள். அவர் நாராயணியின் அம்சம்.’

திருப்பதியை மனதில் வைத்துக்கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள். கொஞ்சம் அதிகமாக உருவாக்கிவிட்டார்கள்! திருப்பதியில் வரும் சின்ன சின்ன எரிச்சல்களெல்லாம் பெரிய அளவில் வருகிறது இங்கே. உள்ளே நுழைந்ததும் கேமரா, செல்ஃபோன் என எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொண்டுவிட்டார்கள். வரிசையில் நின்று, வரிசை மெல்ல மெல்ல நகன்று செல்ல, ஒரு அறையை அடைந்தோம். அங்கே அடைத்துவைத்தார்கள். கொளுத்தும் வெயிலில் நான்கே நான்கு ஃபேன்கள். அங்குள்ள ஒரு டிவியில் அம்மா செய்த யாகங்கள், வேத மந்திர முழக்கங்கள் என எல்லாவற்றையும் வரிசையாகக் காட்டிக்கொண்டிருந்தார்கள். அம்மா ஒரு காவி சால்வையைப் போர்த்திக்கொண்டு, கைகளைக் குறுக்காக கட்டிக்கொண்டு மிடுக்காக நடந்துகொண்டே இருக்கிறார்.

அந்த அறையிலிருந்து திறந்து விட்டார்கள். நடக்க ஆரம்பித்தோம். (உண்மையில் நான் இரண்டு மணிநேரம் கழித்துதான் அடுத்த வரி எழுதவேண்டும். அத்தனை நேரம், அத்தனை தூரம் நடந்தோம்.) நடைபாதை சூரிய சக்கரம், சந்திர சக்கரத்தை உத்தேசித்துக் கட்டப்பட்டதாம். நடந்தோம். நடுவில் தங்கத்தில் கோயில் ஜொலிக்க, நாங்கள் அதை அடைய நடந்தோம். நேரடியாக சடுதியில் அடைந்திருக்கவேண்டிய கோவிலை, சுற்றிச் சுற்றி ஸ்டார் வடிவத்தில் இருக்கும் நடைபாதை வழி நடந்தோம். வழியெங்கும் கற்சிலைகள் அழகழாகப் பூத்திருக்க, திரும்பிய பக்கமெல்லாம் பசும்பூல் போட்டு அதை ஆள் பராமரித்துக்கொண்டிருக்க நடந்தோம். ஒவ்வொரு ஒரு கிமீ தொலைவிற்குள்ளும் நன்கு பராமரிக்கப்பட்ட கழிப்பறைகள். கழிப்பறை சுட்டி அட்டைகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி என எல்லா மொழிகளையும் கொண்டிருந்தன. மலையாளம் காணவில்லை. ஒருவேளை மலையாளிகள் அறிவாளிகளோ என நினைத்துக்கொண்டே நடந்தோம். இன்னும் நடந்தோம். மேலும் நடந்தோம். திடீர் திடீரென நிறுத்தினார்கள். நின்றோம். போகச் சொன்னார்கள், நடந்தோம். வெயில் சுட்டெரித்தது. என் அம்மாவிற்கு மூச்சு முட்டியது. ஆஸ்துமா கேஸ். ஆனாலும் ஆர்வம் குறையவில்லை. தங்கக்கோவிலை அவள் தரிசிக்கும் தருணம் அவளுக்கு முக்கியமானது. எங்களுடன் பல நூறு மக்கள், பல்லாயிரக் கணக்கான மக்கள் நடந்தார்கள். எல்லாருக்கும் ஒருவித ஆர்வம், ஆச்சரியம். மிகக் குறைந்தவர்களுக்கு மட்டுமே பக்தி. இது சுற்றுலாத்தலமா இல்லை கோவிலா என்று தோன்றிவிட்டது. ஒருவழியாக நடந்துமுடிந்து தங்கத்தாலான கோவிலைக் காண உள்ளே நுழைந்தோம்.



தங்கத் தூணையும், தங்கச் சிற்பங்களையும் நீங்கள் எட்டி நின்று பார்க்கலாம். மூல ஸ்தானத்தில் உள்ள தங்க அம்மனை நெருங்க முடியாதபடி நீர் சேர்ந்து நிற்கும் அகழி இருந்தது. நீர் ஆடி ஆடி நீரில் இருந்து வெளிப்படும் சூரிய ஒளி தங்கக்கோவிலின் சுவர்களில் ஒளிக்க, கோவிலின் சுவரே ஆடுவதுபோன்ற அழகும். வெகு அழகுதான். அங்கேயும் சுற்றி சுற்றிப் போகச் சொன்னார்கள். போனோம். திடீரென நிறுத்தி, திடீரென அனுப்பி ஒருவழியாக சந்நிதியை அடைந்தோம்… என்றால், கிட்டத்த மூலஸ்தானத்திலிருந்து 75 அடி தள்ளி நின்று பார்த்துவிட்டுப் போகச் சொல்லிவிட்டார்கள். என் அம்மாவிற்கு வந்த ஏமாற்றம்தான் என்னால் தாங்கமுடியாமல் இருந்தது. மற்றபடிக்கு நான் ஓர் ஆர்வமில்லாமல்தான் நடந்துகொண்டிருந்தேன்.


கடவுளை தரிசித்துவிட்டு வெளியில் வரும்போது ஒரு செயற்கை நீரோட்டம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதில் பெண்கள் தங்கள் வளையலை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்று தெரியவில்லை. இப்போதே கூட்டம் குவியத் தொடங்கியிருக்கிற நிலையில், இன்னும் சில வருடங்களில் கூட்டம் குவியப்போகிற நிலையில், வளையல்களை அள்ள தனி காண்டிராக்ட் விட்டாலும் விடுவார்கள்.

ஏகப்பட்ட வளைவுகள். ஏகப்பட்ட நுழைவாயில்கள். ஜொலிக்கிறது கோவில். ஆனால் பக்தர்கள் வெயிலில் அவஸ்தைப் படாமலிருக்க எவ்வித ஏற்பாடுமில்லை. நவதிருப்பதி செல்வோம். அங்கேயும் இப்படித்தான். எவ்வித ஏற்பாடும் இருக்காது. ஆனால் அது குறையாக உறுத்தியதே இல்லை. காரனம் அவையெல்லாம் ஏழைக் கோவில்கள். நாம் பாரம்பரியத்தையும் மரபையும் தொடர்ந்து காப்பாற்றிக்கொண்டு, தன் பெருமையை பறைசாற்றிக்கொண்டு நிற்பவை. அவை கோவில்கள் என்பதைவிட மனசாந்தி தரும் இடங்கள். ஆனால் இது கார்ப்பொரேட் நிறுவனம். கோவில் ஸ்டலில் கட்டப்பட்டிருக்கிறது. அங்கே 250 கோடி செலவளிக்க தகுதி இருக்கிறது. அப்போது மக்களின் கஷ்டத்தையும் நினைவில் வைத்திருக்கலாம். சுட்டெரிக்கும் வெயிலில் கால்கள் பொசுங்க ஓடினோம். பிரசாதமாக சாம்பார் சாதம் தந்தார்கள். அதை வாங்கிக்கொண்டு ஓடினோம். வெளியில் வரும்போது கடும் எரிச்சல் மட்டுமே மிச்சமிருந்தது. கோவில் மனதிற்குத் தந்திருக்கவேண்டிய அமைதி இல்லை. ஒரு கடவுளை தரிசித்த நிலையில் கிடைக்கவேண்டிய ஆனந்தம், புல்லரிப்பு இல்லை. கோவிலில் குங்குமம் கூடவா கொடுக்கமாட்டார்கள்? 250 ரூபாய் கொடுத்து டிக்கட் வாங்கினால், 50 அடி தொலைவில் அம்மனை தரிசித்துவிட்டு குங்குமம் பெற்றுக்கொள்ளலாம், 500 ரூபாய் கொடுத்து டிக்கட் வாங்கினால் அம்மனை மிக அருகில் கண்டு குங்குமம் பெற்றுக்கொள்ளலாம்.

எப்படி திருப்பதி இக்கோவிலிருந்து வேறுபடுகிறது? உண்மையில் திருப்பதியோடு இக்கோவிலை ஒப்பிடுவதே நான் பெருமாளுக்கு செய்யும் துரோகம். இருந்தாலும், இக்கோவில் திருப்பதி போன்று வரவேண்டும் என்கிற நினைப்பில் கட்டப்பட்டிருப்பதால் இது தேவையாகிறது.

திருப்பதி கோவில் ஏற்படுத்தப்பட்டதல்ல. மக்கள் அக்கோவிலுக்கு எளிதாகச் சென்றுவர பல்வேறு வழிகளைச் செய்துவைத்திருக்கிறார்கள். இக்கோவில் ஏற்படுத்தப்பட்டது. கூட்டம் வருவதே எண்ணம் என்ற நினைப்பில் செய்திருக்கிறார்கள்.

திருப்பதியில் பெருமாள் மட்டுமே முக்கியம். இங்கே நாராயணியோடு அம்மாவும் முக்கியம். சில சமயங்களில் நாராயணியைவிட அம்மா முக்கியம்.

திருபப்தியிலும் ஸ்பெஷல் தரிசனங்கள் உண்டு. ஆனால் எல்லாரும் ஒரே இடத்தில் இருந்து மட்டுமே கடவுளைக் கும்பிடமுடியும். பணம் என்பது அங்கு நேரத்தைக் குறைக்கமட்டுமே. அன்றி, வழிபாடு செய்யும் இடம் எல்லோருக்கும் பொதுவானதே. இங்கே அப்படி இல்லை. பணம் கூட கூட நீங்கள் நின்று வழிபடப்போகும் இடம் மாறும்.

திருப்பதியில் நீங்கள் எங்கேயும் பக்தியை மட்டுமே தரிசிக்கமுடியும். இங்கே பக்தியைக் கொஞ்சமாகவும், பகட்டையும் ஆடம்பரத்தையும் மட்டுமே தரிசிக்கமுடியும். திரும்பிய பக்கமெல்லாம் அம்மாவின் அருள்வாக்குகள் பல வண்ண fluxகளில் உங்களைத் துரத்துகின்றன. என்னுடன் வந்த பெரும்பாலான மக்கள் ஆச்சரியத்தைப் பற்றி மட்டுமே பேசினார்கள்.

திருப்பதியில் கோவில் என்பது நம் மனதோடு சம்பந்தப்பட்டது. இங்கே கோவில் என்பது ஆடம்பரத்தோடு சம்பந்தப்பட்டது.

திருப்பதியில் நீங்கள் மூலஸ்தானத்தை அடைய நடக்கும்போது, உங்கள் மேல் வெயிலே படாது. ஒரு அறையில் அடைக்கப்படும் நீங்கள், அங்கிருந்து நடக்கத் தொடங்கினால், பின்பு நிற்கவேண்டியது இருக்கவே இருக்காது. இங்கே அப்படி அல்ல. செல்லும் வழியெல்லாம் வெயிலே உங்களை வழி நடத்துகிறது. திடீர் திடீரென நிறுத்துகிறார்கள். நின்று நின்று கால்வலித்து, பின்பு நடந்து கால் வலித்து, எப்போதுடா வெளியில் வருவோம் என்கிற எண்ணம் வந்துவிட்டது. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், உள்ளே இருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியில் செல்லலாம் என்கிற நுழைவாயில்களை வைப்பது குறித்துப் போராடலாம். இப்போது நீங்கள் உள்ளே வந்துவிட்டால், சாமி பார்க்காமல் எச்சமயத்திலும் வெளியில் வரவே முடியாது.

இன்னும் சில காலங்களில் அம்மாவின் புகழ் எங்கும் பரவக்கூடும். அவர் பல்வேறு மருத்துவமனைக்கூடங்கள் எல்லாம் கட்டி அக்கிராமத்தையே தன் வசப்படுத்தக்கூடும். ஆனாலும் 250 கோடியில் ஒரு கோவில் இப்போது தேவையா என்கிற கேள்வியை புறக்கணிக்கமுடியாமல்தான் போகும். அம்மாவின் அருள்வாக்குகளில் ஒன்று, இக்கேள்விக்கும் பதில் சொல்கிறது. ‘250 கோடி செலவில் ஒரு கோவிலுக்கு பதிலாக ஏன் மருத்துவமனை கட்டக்கூடாது என்று கேட்கிறார்கள். இப்படி ஒரு கோவில் மூலம் ஆயிரம் ஆயிரம் மருத்துவமனைகள் சாத்தியமாகும்’ என்கிறது அது. எப்படியோ, 250 கோடியில் கோவில் என்பது அம்மாவையே உறுத்தியிருக்கிறது.

250 கோடி எங்கிருந்து வந்தது? யார் பணம்? எனக்குத் தெரியாது. யாருக்குத் தெரியும் என்பதும் தெரியாது. அரசியல் அம்மா ஆட்சிக்கு வந்தால் என்னாகும் என்பதும் தெரியவில்லை. ஆனால் கூட்டம் என்னவோ வந்துகொண்டேதான் இருக்கிறது. அது பக்திக்கான கூட்டமா, தங்கத்தைப் பார்க்கும் கூட்டமா என்று பார்த்தால், இப்போதைக்கு தங்கத்தைப் பார்க்கும் கூட்டம்தான் அதிகம் என்று தோன்றுகிறது. நாளை மாறலாம். இதைக் கொஞ்சம் உருப்படியாக்கி, ஒரு நல்ல கோவிலாக மாற்றலாம். அது அம்மாவின் கையில் இருக்கிறது. தன் புகழை அதிகம் அம்மா நாடிவிட்டால், கோவில் பிந்தங்கிவிடும். அம்மாவை மட்டும் கண்டால் கோவில் கிடையாது என்பதை அம்மா புரிந்துகொள்ளவேண்டும். 250 கோடி முதலீட்டில் எக்காலகட்டத்திற்குமான நிரந்தர வருமானம் என்பது எண்ணமாக இருந்தால், நாராயணிதான் பார்த்துக்கொள்ளவேண்டும். ஆடம்பரமெல்லாம் இருந்தாலும் கடவுள் என்பது எதாலும் தீண்டப்படமுடியாத ஒரு உருதான். அதனுடன் விளையாடுவது பற்றி அம்மாதான் முடிவெடுக்கவேண்டும்.

கோவிலுக்குள் இருந்து வெளியே வருபவர்கள் மனதில் இருக்கவேண்டியது பக்தியும் ஆன்மிகமும். இது இல்லாவிட்டால் கோவில் என்கிற கான்செப்ட்டே அடிபட்டுப்போகும். இப்போதிருக்கும் நிலையில், மதமாற்றக்காரர்கள் அக்கோவிலின் வாசலில் ஒரு கடைபோட்டால், செம விற்பனை ஆகும் என்றுதான் தோன்றுகிறது. எல்லாவற்றையும் நாராயணிதான் பார்த்துக்கொள்ளவேண்டும்.

Share

வேர்ப்பற்று – ஆவதும் ஆக்கப்படுவதும்

முற்போக்கு பேசும் பிராமணர்கள் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். ஒருவகையில் பிராமணர்கள் என்ன செய்தாலும் அது நடிப்பாகவே இங்கு கருதப்படுகிறது எனலாம். எவ்வளவு உண்மையாக முற்போக்கு பேசி, எத்தனை தூரத்தில் தன்னை ஜாதியில் இருந்து பிரித்து வைத்துக்கொண்டாலும், பிறப்பால் ஒருவன் பிராமணனனாக இருக்கும்பட்சத்தில், அவன் எப்போதும் இச்சமூகத்தால் பூணூலாலேயே பிணைக்கப்பட்டிருக்கிறான். நிகழ்காலத்தில் ஞாநியிலிருந்து கமல்ஹாசன் வரை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லமுடியும். ஒருவகையில் ஞாநி, கமல்ஹாசன் போன்றவர்கள் பிராமணர்களாலும், பிராமணர்களின் எதிர்த்தர்ப்பாலும் ஏற்கப்படவும் புறக்கணிக்கப்படவும் ஆளாகிறார்கள். இவர்களைப் போன்றவர்கள் சொல்லும் கருத்துகளை வைத்து அவர்கள் மீது தம் எண்ணத்தை ஏற்றுவதை இச்சமூகம் செய்துகொண்டே இருக்கிறது. கருணாநிதிக்கு வயதாகிவிட்டதற்காக ஞாநியும் தசாவதாரம் படத்திற்காக கமலும் பல இடங்களில் பிராமணர்களாக்கப்பட்டார்கள். இதற்கான எதிர்க்கருத்தும் பதிவு செய்யப்பட்டதும் உண்மையே. இன்றைய இந்நிலையை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எழுதியிருக்கிறார் இந்திரா பார்த்தசாரதி.

திராவிடர் கழகம் முன்னிறுத்தியது போல பிராமணர்கள் அனைவரும் எத்தர்கள் அல்ல. அதேபோல் பிராமண ஆதரவாளர்கள் பிராமணர்களை முன்னிறுத்துவதுபோல் அவர்கள் அப்பாவியுமல்ல. இதையே நாவலின் எல்லா இடங்களிலும் கதாபாத்திரங்கள் வழியே பேசியபடியே செல்கிறார் இபா. இபா பிறப்பால் ஒரு பிராமணர் என்பதால் அவரை விடுத்து, நாவலை வெறும் கற்பனையாகப் பார்க்கமுடிவதில்லை. அதனால் கதாபாத்திரங்கள் சொல்லும் அனைத்து வசனங்களையும் இபாவின் விவாதமாகவே என்னால் எடுத்துக்கொள்ளமுடிகிறது. எந்த ஒரு சமூகத்தையும் பிரதிபலிக்கும் மனிதர்களைப் போலவே பிராமண சமூகத்தையும் அம்மக்கள் பிரதிபலிக்கிறார்கள். பிராமணன் ஏமாற்றுகிறான் என்பது பிரதானமாகிறது என்பதைவிட, எச்சமூகத்திலும் நிலவும் பல்வேறு வகைப்பட்ட மனிதர்கள் போலவே பிராமண சமூகத்திலும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லலாம். இதுவே கழகக்காரர்களால் பிராமணியம் என்றழைக்கப்படுகிறது. எப்போதெல்லாம் நாம் மனதில் பட்டதைச் சொல்லத் துவங்குகிறோமோ அப்போது அதற்கு பிராமணியச் சாயமும், ஹிந்த்துவச் சாயமும் பூசப்படுவது புதியதல்ல. இதிலிருந்து இன்றைய நிலையில் விடுபடுவது கடினம். ஒரு கருத்தைச் சொல்லிவிட்டு, உங்கள் மேல் சாயம் பூசப்படுமுன் நீங்கள் அதற்கெதிரான கருத்தைச் சொல்லியே தீரவேண்டும் என்கிற ஒரு கட்டாய நிலையிலேயே நிகழ் சமூக நிலை இருக்கிறது. இந்தக் கட்டாயத்தை மீறும்போது வேறு வழியே இன்றி நீங்கள் என்னவாக இருக்கப் பிறர் தீர்மானிக்கிறார்களோ அவராக மாறியே தீரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுப்போகிறது. இதோடு சேர்ந்து துரத்தும் வாழ்தல் தொடர்பான அவசியங்கள். வேறு வழியில்லாமல் உங்கள் மனதோடு தொடர்பே இல்லாத சில முடிவுகளை எடுக்கவேண்டியிருக்கிறது. இது போன்றவர்கள் ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள். வேறு வழியின்றி, வாழ்தல் பொருட்டு ஒருவர் எடுக்கும் முடிவின் மீதான அவரது பங்கைவிட அவர்கள் மேல் அவர்கள் சார்ந்த சமூகம் செலுத்தும் பங்கு அதிகம் எனலாம். வேர்ப்பற்றின் கதாநாயகன் இத்தகைய ஒரு முடிவுக்குத் தள்ளப்படுகிறான். வாழ்தல்வேண்டி அவன் பூணூலானாக வேண்டியிருக்கிறது.

வேர்ப்பற்று நாவல் 1946ல் இருந்து 1952 வரை, ஓர் ஆசார பிராமணக் குடும்பத்தில் பிறந்த, சாதிகளை மறுக்கும் ஓர் இளைஞனை மையமாக வைத்துச் சொல்லப்படுகிறது.

ஆசாரமான குடும்பத்தின் பிராமண வாழ்க்கையும், அக்குடும்பத்தில் உழலும் பிராமணக் குழந்தைகள் எதிர்கொள்ளும் வெளி உலகமும் ஒன்றோடு ஒன்று சிறிதும் தொடர்பில்லாதவை. அதனால் தன்னை வெளி உலகத்தில் ஒரு வினோத மனிதனாக, பிராமணனாகப் பிறந்த ஒரு இளைஞன் நினைப்பது தவிர்க்கமுடியாதது. இதைத் தொடர்ந்து அவன் சிந்திக்கத் தொடங்கினால் அவனுக்கு பைத்தியம் பிடிக்கலாம் அல்லது மார்க்ஸிடம் சரணைடையலாம். இரண்டாவது விஷயம், வேர்ப்பற்றின் கேசவனுக்கு நிகழ்கிறது. பிராமணன் என்கிற சாதியிலோ, அது சார்ந்த சின்னங்களிலோ சற்றும் நம்பிக்கையில்லாத கேசவன் தன்னை கம்யூனிஸ்டாக அறிகிறான். தன் தந்தையை மீறி, தன் சாதிக் கட்டுப்பாடுகளை மீறி ஒரு கம்யூனிஸ்ட்டாக மாறுகிறான். புத்தகங்களில் இருக்கும் சித்தாந்தங்களின் வழியாக அவன் கண்டடையும் கம்யூனிஸம் அவனைக் கிறங்கடிக்கிறது. ஒரு கம்யூனிஸ்டாக கல்லூரிக்குள் நுழையும் கேசவன், கல்லூரியில் நடக்கும் கழக – கம்யூனிஸ மோதலுக்குப் பின் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறான். மன்னிப்பு கேட்டால் மீண்டும் கல்லூரியில் சேரலாம் என்கிற நிலையில், அவன் மன்னிப்பு கேட்பதை கேவலமாக நினைக்கிறான். ஆனால் அவனுடன் சேர்ந்து போரிட்ட கம்யூனிஸ்ட்டுகள் மன்னிப்பு கேட்டுவிட்டு கல்லூரியில் சேர்ந்துவிட, அவனுக்கு கம்யூனிஸத்தின் மீதிருக்கும் அபரிமித ஈர்ப்பு விலகுகிறது. அதோடு காந்தியின் மரணம் அவனுக்குள் தரும் சலனங்களைக் கண்டு அவனே அரண்டு போகிறான். காந்தியின் மீது தனக்கிருந்த வெறுப்பின் கீழே, மிக அடியாழத்தில் குடிகொண்டிருந்த காந்தியின் பிம்பம் விஸ்வரூபம் எடுக்கும்போது அவன் காந்தியைப் புதியதாகக் கண்டடைகிறான். அவனது கம்யூன் நண்பர்கள் அவனுக்கு, ‘நாம காந்திய கெட்டவர்னு சொல்லலே, நல்லவர்னுதான் சொல்றோம்’ என்று புதுவிளக்கம் கொடுக்கிறார்கள். தொடர்ந்து கம்யூனிஸ்ட்டாகவே வலம் வரும் கேசவனின் உலகம், கல்லூரியில் நடக்கும் கலகத்திற்குப் பின் தடம் புரள்கிறது.

எல்லா பிராமண இளைஞர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினையின் வழியிலேயே செல்லும் கேசவன் அடுத்த எதிர்நிலையாக ஆன்மிகத்தில் செல்ல முடிவெடுத்து, துறவறம் மேற்கொள்ள சிந்திக்கிறான். ஒரு பிராமண இளைஞன் தவிர்க்கவே முடியாத இன்னொரு புள்ளி இது என்பதை இபா மிகத் தெளிவாக, மிக இயல்பாகச் சொல்லிச் செல்வது நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. துறவறம் கொள்வது கல்லூரியில் இடம்பெறுவது போன்றதல்ல என்பது அவனுக்கு விளங்குகிறது. வெளியில் தன்னை பிராமண துவேஷியாகக் காட்டிக்கொள்ளும் ஒரு பெரியாரிஸ்ட், கேசவனுக்கு வேலை வாங்கிக் கொடுக்கிறார். ஒன்று கேசவன் பிராமணனாக இருக்கவேண்டும், இல்லையென்றால் கலப்பு மணம் செய்துகொண்டு கிறிஸ்துவனாகவேண்டும் என்கிற நிலை வரும்போது, பிராமணனாக இருப்பதே எளிதானது என்கிற முடிவுக்கு வரும் கேசவன் பிராமணனாக்கப்படுகிறான். அவனது அறுபதாவது வயதில் திருச்சூர்ணத்துடனும், பஞ்சகச்சத்துடனேயுமே அவன் உலவேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது.

நாவலின் போக்கில், கதாபாத்திரங்களின் பேச்சில் பல்வேறு வரலாறு தொடர்பான விஷயங்கள் அலசப்படுகின்றன. குறிப்பாக 1947ல் நிலவிய கழக எழுச்சியும், கம்யூனிஸ ஆதரவும் அதற்கு உண்டான போட்டியும். கழகங்களும் கம்யூனிஸமும் கல்லூரிகளில் அப்போதிருந்தே வன்முறையையே முன்வைத்திருக்கின்றன போலும். இன்றுவரை அரசியலில்லாத கல்லூரி தேர்தல்களை நாம் பார்த்துவிடமுடியாது. வீரிய விதை.

அதேபோல் நாவல் முழுவதும் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் ஒரு விஷயம் பிராமணனுக்குத் தமிழ் எதற்கு என்பது. கேசவனைக் காணும் ஒவ்வொருவரும், பிராமணர், பிராமண ஆதரவாளர்கள், பிராமண எதிர்ப்பாளர்கள் என்கிற பேதமில்லாமல், அவன் தமிழ் படிப்பதற்கு கேலி செய்கிறார்கள் அல்லது உபதேசிக்கிறார்கள். அதில் பிராமண எதிர்ப்பாளர் கேட்கும் கேள்வி ருசிகரமானது, “இதையும் நீங்க எடுத்துக்கிட்டா நாங்க என்னதாண்டா பண்றது?” தடையை எல்லாம் மீறி தமிழ் படிக்கும் கேசவன் வேலைக்காக வேறு வழியே இன்றி பிராமணனாக மாறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுப் போகிறது. தமிழோ சமிஸ்கிரதமோ அல்ல, கடைசிவரை வரப்போவது ஜாதியே என்கிற உண்மை அவனுக்கு முகத்தில் அறைகிறது.

நாவலில் சில இடங்களில் மட்டுமே தென்பட்டாலும், இபாவின் நகைச்சுவை உணர்வு அசரவைக்கிறது. எங்கெல்ஸ் பற்றியும் மார்க்ஸ் பற்றியும் கேசவன் சொல்லும்போது முருகேசன் (கேசவனின் கம்யூன் தோழன்) என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறும் இடம் (பக் 62), கழகக்காரர்கள் போல அடுக்குமொழியில் கவிதை எழுதும் ஒரு கம்யூனிஸ்ட்டைச் சுற்றிய விவாதங்கள் (பக். 73), நேரு, ராஜாஜி உள்ளிட்டோர்கள் பேசிய ஆங்கிலத்தால்தான் சுதந்திரம் கிடைத்ததோ என்பது (பக். 81), ஒரு பெரிய கதையில் தமிழாசிரியர் ஒற்றுப் பிழைகளைக் கண்டுபிடிப்பது, கதையில் கம்பனைப் பற்றிக் குறிப்புகள் இல்லை என்று வருத்தப்படுவது (பக். 97), கேசவனின் அப்பா மகானாக்கப்படும் தருணங்கள், இப்படி பல இடங்கள்.

பிராமண இளைஞனின் கதையில் பிராமணர்களைப் பற்றி எல்லா வகையிலும் யோசித்திருக்கிறார் இபா. அவர் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களிடமிருந்து இதைக் கொண்டிருந்திருக்கவேண்டும். கேசவனின் தந்தையின் கதாபாத்திரம் ஒரு கட்டத்தில் விஸ்வரூபம் எடுக்கிறது. தன் வீட்டில் வேலை பார்க்கும் ஒரு தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணை கையைப் பிடித்து இழுக்கும் ஒரு பிராமணருக்கு எதிராகப் பேசாமல் எல்லா பிராமணர்களும் அமைதியாக இருக்கும்போது, கேசவனின் அப்பா பிராமணனாக இருப்பதைவிட முக்கியம் நேர்மையானவனாக இருப்பது என்று முடிவெடுக்கிறார். இச்சம்பத்தில்தான் தன் தந்தையை தானே கண்டடைகிறான் கேசவன். ஒரு கம்யூனிஸ்ட்டுக்கான சிந்தனையை ஓர் ஆசார பிராமணரிடத்தில் காணும் அவன் அதற்குப் பின் தன் தந்தையைப் பற்றிய பெருமையான தருணங்களையே தொடர்ந்து தரிசிக்கிறான். கேசவனின் பெரியப்பா பல்வேறு பெண்களிடம் தொடர்பு வைத்துக்கொண்டு சொத்தை இழந்து திரும்ப வருகிறார். அதற்குப் பின் அவர் கொள்ளும் நிலையில் பெரும் ஆன்மிக அமைதி காணக்கிடைக்கிறது. இத்தகைய பெரியப்பாவை வைத்து காசு பார்க்க அவர் குடும்பத்தவர்கள் முயலும்போது கேசவனின் தந்தை அப்போதும் நேர்மையே முக்கியம் என முடிவெடுக்கிறார். இப்படி ஒரு சமூகத்தில் நிலவும் எல்லாவிதமான மனிதர்களையும் வெளிப்படுத்துவதில் முழுவெற்றி காண்கிறார் இபா.

இக்கதையில் வரும் இடறல்கள் எனச் சிலவற்றைச் சொல்லலாம். முதல் விஷயம், இது ஒரு நாவலுக்கான கட்டமைப்பைப் பெறுவதைவிட, தொடருக்கான மனோநிலையிலேயே எழுதப்பட்டுள்ளது என்பது. திடீரென மாறும் காட்சிகளுக்குள் தொடர்பு இல்லாமல் போவது முதல் சறுக்கல். ஒரு கதாபாத்திரம் வரும்போது அதைப்பற்றிய இரண்டு வரிகள் தந்தே தீரவேண்டிய கட்டாயம் தொடர்களுக்கு ஏற்படுவதுண்டு. இதை இபாவால் சமாளிக்கமுடியவில்லை. அடுத்தது கதையில் அரசியல் நிகழ்ச்சிகள் உக்கிரம் கொள்ளும் சமயத்தில் அது தடாரெனத் தடம் விலகி, கிருஷ்ணன் (கேசவனின் கல்லூரி நண்பன்) மற்றும் கேசவனின் ஈகோவில் முட்டி நிற்பது. இதிலிருந்தும் விலகும் கதை கேசவனின் பெரியப்பா வழியாக ஆன்மிக வழிக்குச் செல்கிறது. இதையாவது, கேசவன் கடைசியாக ஆன்மிக வழியை அடைவதற்கான முகாந்திரம் என்ற அளவில் ஏற்கலாம். கேசவனின் பெரியப்பாவும் கேசவனும் பேசிக்கொள்ளும் விஷயங்கள் அதிகமாக பாலகுமாரனை நினைவுபடுத்துகின்றன. வெகுஜன எழுத்தாளர்களாக அறியப்படுபவர்களில் (மாலன், ஆதவன், சுப்ரமண்ய ராஜு போன்றோர்) பாலகுமாரனே சிறந்தவர் என்பது என் எண்ணம். இபாவின் பாலகுமாரத்தனமான வசனங்களைப் படிக்கும்போது, மீண்டும் பாலகுமாரனைப் படித்து, நாஸ்டால்ஜியாவை மீட்டெடுக்கலாம் என்று தோன்றிவிட்டது. :)அதேபோல் நாவலுக்கான முடிவு என்பது ஒருவித எதிர்பார்த்த முடிவு என்பது தெரிந்துவிடுகிறது. ஆனால் இன்றளவும் இது யதார்த்தமாக இருப்பதால், இம்முடிவைத் தவிர்க்கமுடியாததாகவும் எடுத்துக்கொள்ளலாம். என் பெயர் ராமசேஷன் நாவலின் முடிவு இத்தகைய தன்மை கொண்ட ஒன்று. அதாவது எதிர்பார்த்த ஒன்று; ஆனாலும் யதார்த்தமானது என்கிற அளவில்.

1994ல் எழுதப்பட்ட நாவல் இன்னும் நூறாண்டுகளுக்குப் பொருத்தமாக இருக்கப்போகிறது என்பதுதான் இதன் முக்கியத்துவம்.

வேர்ப்பற்று, நாவல், இந்திரா பார்த்தசாரதி, கிழக்கு பதிப்பகம், விலை: 120 ரூ.

Share

நான்கு கவிதைகள்

முற்று

நண்ப
உன் நீண்ட கடிதம்
என் முரண்களில்
நீ கொள்ளும் கோபம்,
என்னைப் பற்றி
நான் படிப்பது
சலிப்பானது என்றாலும்
வாய் பிளந்து நிற்கும்
முதலையை மிதிக்காமல்
இருக்க முடிந்திடுவதில்லை
நீண்ட வரிகளுக்குள்
சிக்கி மீளும்போது
கொலை பற்றிய எண்ணமும்
தற்கொலை பற்றிய எண்ணமும்.
என் கூடாரத்தின்
மூடிய போர்வையை
இழுத்துப் பார்க்காமல்
இருந்திருக்கலாம்.
என் ரசனை,
தேவையற்ற இடமொன்றில்
நீ வைத்திருந்த முற்றுப்புள்ளி.

முளை

நிழலின்றி நடக்கும்
மிருகமொன்றின்
கழுத்தைத் திருகத் திருக
பெரிதாகும் உடலும்
புதைத்து வைத்த
கோபக் குழியிலிருந்து
வெளி நீட்டித் தெரியும்
முள்மரத்தின் முளையொன்றும்
வாலாட்டித் திரிய
எள்ளல் சிரிப்போடு
கவிகிறது அன்றைய இரவு
தொடர்கனவின் காத்திருப்போடு.

என் மீது நிகழும் வன்முறை

யாருக்காகவோ
ஒலித்துக்கொண்டிருந்த
வானொலியிலிருந்து
சன்னதம் கொண்ட தேவதை
வெட்டியெடுத்த கையொன்றை
கையில் ஏந்தி
கண்கள் சிவக்க
தொட்டு எழுப்பினாள்
அதிகாலை
என் மீது இறங்கியது
வழியெங்கும்
ரத்தத் துளிகள்
சிதறிக் கிடக்க

வீட்டின் பாடல்

வனத்தைத் தொலைத்த
வீட்டிலிருந்து
வெளியேறிபடி இருக்கிறது
வீட்டின் பாடல்
சதா கேவல்களாகவும்
சீற்றங்களாகவும்
இரவுகளில்
வீடெங்கும் சன்னதம்
கொண்டலையும் மிருகமொன்று
பகலில் பறவையாகி
சாலைகளில் நத்தையாக
ஒடுங்கும்போது
வீட்டின் பாடலில்
உச்சம் கொள்கிறது
விலங்குகளின் பறவைகளின்
பூச்சிகளின் சேர்ந்திசை.

மேலே உள்ள கவிதைகள் ‘மணல் வீடு’ செப்-அக் 2008 இதழில் வெளியானவை. நன்றி: மணல் வீடு.

Share

பொம்மைகள் – கவிதை

ஆடும் பொம்மைக்கு
தான் சாவி கொடுக்கவில்லை என்றான் என் மகன்
பொம்மைக்கும் தனக்கும்
சம்மந்தமே இல்லை என்கிற பாவனையில் என் மனைவி
அம்மாவிடம் கேட்டால்
தான் அந்த பொம்மையை கண்டதே இல்லை என்பாள்
எப்போது நம் வீட்டிற்கு வந்தது என்று
எதிர்க்கேள்விகூட கேட்கலாம்
மூன்று பேரும் சத்தியம் செய்யவும் தயாராக இருக்கிறார்கள்.
அப்பா ஃபோட்டோவில் இருப்பதால்
அவரை கேள்விகள் கேட்க நியாயம் இல்லை.
நானே என்னைச் சந்தேகப்பட முடியாது.
மௌனச் சிரிப்புகளுக்கிடையில்
சத்தமெழுப்பி
ஆடும் பொம்மைகள் ஆடிக்கொண்டிருக்கின்றன.

Share

‘Power Cut’

இன்று தமிழ்நாடெங்கும் பல இடங்களில் அறிவிப்பே இல்லாமல், ஒரு நேர வரைமுறை இல்லாமல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. (இதுபோல பலதடவை நடந்துகொண்டுதான் இருக்கிறது என்றாலும் இன்று ரொம்ப ஓவர்.)

ராயப்பேட்டை – 3 மணி நேரம்
ராமாபுரம் – 3 மணி நேரம்
தாம்பரம் – 2 மணி நேரம்
திருநெல்வேலி டவுண் – 4 மணி நேரம்
திருச்சி (கேகே நகர் பகுதிகள்) – 2 மணி நேரம்
திருச்சி (முத்தரசநல்லூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகள்) – 6 மணி நேரம்
மதுரை – 3 மணி நேரம்
தே. கல்லுப்பட்டி – 8 மணி நேரம்
நாகர்கோவில் – 3 மணி நேரம்

இன்னும் கோயமுத்தூர், தாராபுரம், ஈரோடெல்லாம் கேட்டால் தெரியும்.

நமது முதல்வருக்கு, ஜெயலலிதாவிற்குப் பதில் சொல்லவும், தோழர்களுடன் மல்லுக்கு நிற்கவும், யாரேனும் ஏதேனும் படங்கள் எடுத்து அதை வெளியிடும் விழாவிற்கு அழைத்தால் உடனே செல்லவும் நேரம் இருக்கிறது. கலைஞர் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கேட்டறிந்து அதில் ஆலோசனை சொல்ல ஆசையும், தெம்பும் இருக்கிறது. ஆனால் ஆற்காடு வீராஸ்வாமி என்றொரு அமைச்சர் எதற்காக அமைச்சராக இருக்கிறார் என்பதோ, தமிழ்நாட்டில் மின்வெட்டு எவ்வளவு பெரிய தொல்லை தரும் விஷயமாக, எரிச்சல் தரும் விஷயமாக மாறி, பொதுமக்களை அவதிப்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதை அறிய மட்டும் நேரமில்லை. ஏதேனும் மேம்பாலம் திறந்தால் மின்சாரத்தைத் திருட, மின்சாரம் கிடைக்கிறது. ஆனால் வீட்டுக்கு மின்சாரம் இல்லை. ராமன் குடிகாரனா என்று ஆராய்ச்சி செய்ய, மண்டையை உடைத்துக்கொண்டு யோசித்துக் காரணங்கள் கண்டுபிடிக்க திறமை இருக்கிறது. ஆனால் மின்வெட்டைத் தவிர்த்து மக்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து ஆராய நேரமில்லை. ‘அவாள்’ பற்றிக் கவிதை எழுத நேரமிருக்கிறது. ஆனால் ஆதாரத் தேவையான மின்வெட்டைத் தவிர்ப்பது எப்படி என்று யோசிக்க நேரமில்லை.

இப்படிப்பட்ட முதல்வர் நம் பூர்வஜென்மப் பயன். வேறு வழியே இல்லை, நாமும் பவர் கட் செய்துவிடவேண்டியதுதான்.

Share

குசேலன் – பெண்களின் கிருஷ்ணன்?

படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலெல்லாம் நெளிய ஆரம்பித்துவிட்டேன். தொலைக்காட்சிகளில் வரும் மெகா சீரியல் போல ஆளாளுக்கு பேசும் வசனங்கள். ஒரு நல்ல கதையை கமர்ஷியலாக்குகிறேன் என்று அதீத தன்னம்பிக்கையில் (அகம்பாவத்தில்) கதையைக் கூறு போட்டு, ‘ஒரு சீன் பசுபதி சார், அடுத்த சீன் வடிவேலு சார்’ என்று யோசித்துவிட்டார் பி.வாசு. வடிவேலு வரும் காட்சிகள் மருந்துக்கும் சிரிப்பைத் தருவதில்லை. பசுபதியிடம் ‘சீரியஸ் கேரக்டர்’ என்று வாசு மிரட்டியிருப்பார் என நினைக்கிறேன். எப்போதும் ஒரு சோகத்தை வலிய வைத்துக்கொண்டு உயிரை எடுக்கிறார். ரஜினியின் என்ட்ரியின் போது 75 ஆண்டுகால சினிமாவிற்கு இப்பாடல் சமர்ப்பணம் என்று ஒரு வரியைப் போட்டு ஒரு பாட்டையும் போடுகிறார்கள். 75 ஆண்டுகால சினிமாவின் மீது வாசுவுக்கு என்ன கோபமோ, பழிதீர்த்துவிட்டார். இசை ‘சின்னப்பையன்’ என்பதை நிரூபித்துவிட்டார்.

வடிவேலு காட்சிகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக நீக்கிவிட்டு, ஒரு சின்ன கதையை அடிப்படையாக வைத்து, நேர்க்கோட்டுப் படமாக, உருப்படியாக எடுத்திருக்கலாம். அதற்குத் திறமை வேண்டும். வாசுவின் திறமை நாம் அறிந்ததே. திரைக்கதை என்றால் என்னவென்றே தெரியாது என்பதை கற்பூரம் அடித்து சத்தியம் செய்து, பணக்காரன், உழைப்பாளி, சாது, தாலாட்டு கேட்குதம்மா, கட்டுமரக்காரன் எனப் பல படங்களில் நிரூபித்தவர்தான் அவர். அதை மீண்டும் இன்னொருமுறை அழுத்தம் திருத்தமாக நிரூபிக்கிறார். படத்தில் அழுத்தமான காட்சியோ, அழுத்தமான வசனமோ, மனதைக் கொள்ளை கொள்ளும் நல்ல நடிப்போ எதுவும் கிடையாது. பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி முகங்களைக் காட்டிக்கொண்டு, ஆளாளுக்கு உளறித் திரிகிறார்கள். இதில் நரிக்குறவர் இனத்தைப் பெருமைப் படுத்துகிறேன் என்று படுத்தித் தள்ளிவிட்டார். ஆனால் ரஜினிக்கு ‘இதெல்லாம் போணிக்காகாது’ என்பது கூடவா தெரியாது?

அண்ணாமலை வெளிவரும் முன்பு ஒரு கூட்டத்தில் பேசிய ரஜினி, ‘அண்ணாமலை வெள்ளிவிழா படமாக அமையும். நஷ்டமானால், தயாரிப்பாளர்களுக்கு பணத்தைத் திருப்பித் தருகிறேன்’ என்று சொன்னார். அவர் சொன்னது போலவே அண்ணாமலை வெள்ளிவிழா படமாக அமைந்தது. குசேலன் படத்தின் வெளியீட்டுவிழாவில் இப்படம் 25 வாரங்கள் ஓடும் என்றார் ரஜினி. 25 வாரங்கள் ஓடுவதற்கு இந்தப் படத்தில் என்ன இருக்கிறது? திடீர் திடீரென்று பாடல்களும், சம்பந்தமில்லாத காட்சிகளும் என கத்தரித்துச் சேர்த்த பிட்டு படம் போலவே ஓடுகிறது குசேலன். மூன்று குழந்தைகள் மட்டுமே அமைதியாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் நன்றாக நடித்துவிடுவார்களோ என்கிற சந்தேகம் வந்ததோ என்னவோ இயக்குநருக்கு, அவர்கள் வரும் காட்சிகளை ஒரேடியாகக் குறைத்துவிட்டார்.

படத்தில் ரசிக்கத்தக்க காட்சிகள் இரண்டே இரண்டு. ஒன்று, ஆர். சுந்தரராஜன் ரஜினியைக் கேள்வி மேல் கேள்வி கேட்கும் வசனம். அடுத்து வடிவேலு ரஜினியைப் பார்த்தவுடன், ‘பார்த்துட்டேன்’ என உடலை வளைத்து ஹைபிட்ச்சில் அலறும் காட்சி. வேறெந்தக் காட்சிகளும் மனதில் கொஞ்சம் கூட ஒட்டுவதில்லை. பெரும் எரிச்சல் தரும் பாடல்களும், மட்டமான பின்னணி இசையும், சந்திரமுகி, அண்ணாமலை பார்ட் 2 என்று சொல்லி வாசு அடிக்கும் கொட்டங்களும் தாங்கமுடியாதவை. இதில் ‘தலைவா நயந்தாராவையே பார்க்கிறியே எங்களைப் பார்க்கமாட்டேன்கிறியே’ போன்ற வசனங்கள் எல்லாம் கண்ணில்படாமல் போகின்றன.

கடைசி 15 நிமிடங்கள் படம் செண்ட்டிமெண்டாக அமைந்து, படத்துக்கு வந்த எல்லாப் பெண்களையும் ஈர்த்துவிடுகிறது. தன் ஆரம்பகால படங்களில் நாம் பார்த்திருக்கும் ரஜினியின் எதார்த்தமான நடிப்பை இந்த 15 நிமிடங்களில் பார்க்கமுடியும். அசர வைக்கிறார். சின்ன இடத்தில்கூட எல்லை தாண்டாமல், சறுக்காமல், அவர் மேடையில் பேசும் விதமும், கண் கலங்கி கண்ணீர் விடும் இடமும் எல்லாரையுமே கவர்கிறது. கடைசி 15 நிமிடங்களால் மட்டும் வெள்ளிவிழா சாதனை புரிந்த ‘காதலுக்கு மரியாதை’, ‘பாரதி கண்ணம்மா’, ‘லவ் டுடே’, ‘சந்திரமுகி’ வரிசையில் இந்தப் படமும் சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நாடகம் போன்ற ஒரு படம், க்ளைமாக்ஸில் பெண்களை ஈர்க்கும் படமாகிவிடுகிறது. இதில் அசந்துதான் ரஜினியும் 25 வாரங்கள் என்று சொல்லியிருக்கவேண்டும். பி.வாசுவின் திறமையை ஆணித்தரமாக நிரூபித்திருக்கும் இப்படம், 25 வாரம் ஓடிவிட்டால், தமிழ்நாடு என்னாகும்? அதற்கான வாய்ப்பிருக்கிறது என்பதுதான் சோகம் தரும் விஷயம்!

மதிப்பெண்கள்: 39/100

Share