நான்கு கவிதைகள்

நன்றி: சொல்வனம்

காத்திருப்பு

வலையில் சிக்கி நெளியும்
மனதை விடுவிக்க நேரம் பார்த்து
காத்திருந்தாள் வேலையில்லாத பெண்ணொருத்தி
சிலந்தியின் எச்சில்தடத்தின் மையத்தில்
நிலைகொண்டிருந்தது சிலந்தியின் கர்வம்
சிலந்திக்கும் பெண்ணுக்குமான போட்டியில்
கடந்துவிடுகிறது ஓர் யுகம்
காற்றடிக்கத் தொடங்குகிறது
இருவரும் இன்னும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்

அன்றொருவன் வந்திருந்தான்

அவனைக் கடவுள் என்றேன்
அன்று தெருவழியே ஒரு பிணம் சென்றது
சில மனிதர்கள் சென்றிருந்தார்கள்
நசுக்கப்பட்டுக் கிடந்தன சில மலர்கள்
மீன் கொண்டு வந்தவனை
கத்திக்கொண்டிருந்தது பூனை
மழையை எதிர்த்தன குடைகள்
அன்றுதான் அவன் வந்திருந்தான்
இத்தனையையும் அவன் கவனிக்கவில்லை
எல்லோருக்கும் ஒரே புன்னகை
மழையின் நீர்
எதிர்ப்பற்ற ஒரு மனிதன்
கிடைத்துவிட்ட வெறியில்
கலந்து தீர்த்தது மிக வேகமாய்
யாருமில்லாத தோரணையில்
அவனருகே கிடந்து
மீனைத் தின்றது பூனை

சட்டகம்

பதின்ம வயதிலிருந்து
சட்டகம் செய்துகொண்டிருக்கிறேன்
அளவு கச்சிதம் தப்பியதே இல்லை
அதன் உள்முனைகளில்
சிக்கிக் கொண்டுவிடும் மனிதர்கள்
பின் மீறி வெளியே சென்றதே இல்லை
அதை எப்படிச் சிறிதாக்கினாலும்
விரும்பி வந்து புன்னகையுடன்
தன்னை அடைத்துக்கொண்டார்கள் அவர்கள்
சுற்றித் திரியும் மனிதர்கள்
கழுத்தெல்லாம் என் தயாரிப்புப் பொருள்
அலுத்துப் போகிறது எனக்கு.
இதோ இப்போது சொல்கிறேன்,
நான் இனி சட்டகம் செய்யப்போவதில்லை
உங்களுக்கான ஒன்றை
நீங்களே கொண்டு வந்துவிடுங்கள் ப்ளீஸ்.

தேடல்

தெரியாமல் ஒரு பாம்புக்குட்டியை
விழுங்கிவிட்டால் எப்படி இருக்கும்?

யாரோ சொன்னதாகத்தான் நினைவு
யார் சொன்னதென நினைவில்லை
எப்போது என்பதும் நினைவில்லை
ஆனால் சொல்லின் காலத்தெளிவும்
சொல்லியின் தொனியும்
இன்னும் பசுமையாக
நானேதான் நினைத்தேனா
என் மனசுக்குள் இருந்துகொண்டு
நானேதான் பேசிக்கொண்டேனா
தெரியாமல் விழுங்கமுடியுமா
குழப்பமே எஞ்சுகிறது
தெளிவாக வரிசையாக
யோசிக்கலாம் என்றால் எங்கிருந்து?
நிச்சயம் கனவில்லை
யார் சொல்லியிருந்தாலும்
இப்போது யாரிடமிருந்தாலும்
அச்சொல் என்சொல்

Share

சென்னை புத்தகக் கண்காட்சி 2011

சென்னை புத்தகக் கண்காட்சியின் பரபரப்பு தொற்றிக்கொண்டு இன்றோடு கிட்டத்தட்ட 20 நாளிருக்கும். திருநெல்வேலியின் தேரோட்டம் போன்றது சென்னை புத்தகக் கண்காட்சி. இதைவிட என்னால் எளிமையாக விளக்கிவிடமுடியும் என்று தோன்றவில்லை. அந்த நிகழ்ச்சியைவிட அது தரும் பரபரப்புதான் போதை. அவ்வித போதையின் அடிமை நான். 20 நாள்களாக எதிலும் ஒரு கவனமின்மை, எல்லாவற்றிலும் ஒரு சிரிப்பு, எல்லாவற்றிலும் ஒரு சிறிய பதட்டம், ஆனால் உள்ளுக்குள்ளே இன்னொரு மனம் அதையே பார்த்து அமைதி என்று சிரிக்கும் இரட்டைநிலை – இதுதான் சென்னை புத்தகக் கண்காட்சி. ஏன் இப்படி? நீங்கள் ஒரு பதிப்பகத்தின், அதுவும் புத்தகக் கண்காட்சியின் பேசுபொருளாக இருக்கப்போகும் ஒரு பதிப்பகத்தின் புத்தகக் கண்காட்சியை நடத்திப் பார்த்தால்தான் தெரியும்.

எல்லா வேலையும் நாம் திட்டமிட்டபடி கட்டுக்குள் இருந்தாலும், எங்கேயோ ஏதோ கட்டுக்குள் இல்லை என்று தோன்றிக்கொண்டிருப்பது மடத்தனமா உள்ளுணர்வா எனத் தெரியவில்லை. மடத்தனமோ, உள்ளுணர்வோ – இதுதான் இலக்கை நோக்கி விடாமல் விரட்டிக்கொண்டிருக்கிறது என்பது உண்மை. எனவே அதற்கு ஒரு நன்றி.

இந்தமுறை இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல். சென்னை புத்தகக் கண்காட்சியில் நியூ ஹொரைஸன் மீடியாவின் அனைத்துப் பதிப்பகங்களின் புத்தகங்களையும், அதாவது கிழக்கு, நலம், வரம், ப்ராடிஜி உள்ளிட்ட அனைத்து பதிப்பகங்களின் அனைத்துப் புத்தகங்களையும் ஒரே இடத்தில் வாங்கலாம். இதில் வசதி உள்ளது என்பதோடு எங்களது பொறுப்பும் கூடுகிறது. நிச்சயம் இந்தமுறை கிழக்கு வாசகர்களுக்கு வித்தியாசமான அனுபவம் கிடைக்கப்போவது உறுதி.

இதில் சுஜாதாவின் புத்தகங்களும் சேர்ந்துகொண்டிருக்கிறது. 60க்கும் மேற்பட்ட சுஜாதாவின் புத்தகங்கள். சுஜாதாவின் வாசகர்கள் கிழக்கு புத்தகங்களையும் பார்க்கப் போகிறார்கள். சுஜாதா தனது புத்தகங்களின் விற்பனையாளர் என்பதோடு, மற்ற புத்தகங்களின் விற்பனையையும் அதிகமாக்குபவர் என்று நான் நம்புகிறேன். இம்முறை அது நிரூபிக்கப்படும்.

எனக்குப் பிடித்த எழுத்தாளர்களும் ஒருவரான ஜெயமோகனின் இரண்டு புத்தகங்கள் – உலோகம், விசும்பு இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். விசும்பு – எததனை முறை படித்தாலும் எனக்குச் சலிக்காத புத்தகம். 2011 மார்ச்சுக்குள், ஜெயமோகன் சிறுகதைகள் தொகுப்பு, ஜெயமோகன் குறுநாவல்கள் தொகுப்பு, ஆழ்நதியைத் தேடி, தமிழிலக்கிய அறிமுகம் போன்ற புத்தகங்கள் வெளிவரும்.

இதுபோக, கிழக்கு வாசகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளான பல்வேறு புத்தகங்கள் வெளியாகின்றன.

இவைபோக, மற்ற பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கும் முக்கியமான புத்தகங்களை உடனடியாகக் காணும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும். இந்த முறை, சென்னை புத்தகக் கண்காட்சியின் முதல் நாளிலிருந்து தினமும் பத்து வரி புத்தகக் கண்காட்சியைப் பற்றி எழுத நினைத்திருக்கிறேன். அனானி ஆப்தர் இட்லிவடை வலைப்பதிவில் அது வெளிவரும். எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டு எழுதாமல் போவது எனக்கு ஒன்றும் புதியதல்ல. எனவே ஒருவேளை நான் எழுதாமல் போனாலும் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதால் இதனை தைரியமாகச் சொல்லிவிடமுடிகிறது.

எல்லாப் பதிப்பகங்களும் வெளியிடப் போகும் பல்வேறு புத்தகங்கள் பற்றி எழுதி ஏன் அவற்றைப் பிரபலப்படுத்தக்கூடாது என்று கேட்டார் பாரா. அதற்கு முதலில் என் வலைப்பதிவை பிரபலப்படுத்தவேண்டும் என்றேன்! நான் கடைசியாகப் படித்த இரண்டு புத்தகங்கள் தேகம், சரசம் சல்லாபம் சாமியார் – இதைப் பற்றி நான் என்ன எழுதிவிடமுடியும்? 🙂

புத்தகக் கண்காட்சியில் சந்திப்போம்.

சென்னை புத்தகக் கண்காட்சி 2011

ஜனவரி 4 (செவ்வாய்) முதல் ஜனவரி 17 (திங்கள்) வரை.

இடம்:
புனித ஜார்ஜ் ஆங்கிலோ இண்டியன் பள்ளி, பச்சையப்பா கல்லூரி எதிரில், பூந்தமல்லி ரோடு.

நேரம்:
விடுமுறை நாள்களில்: காலை 11 மணி முதல் இரவு 8.30 வரை.
வேலை நாள்களில்: மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

எங்கள் ஸ்டால் எண்:

கிழக்கு – F 13

புத்தகங்களை நிதானமாகப் படித்துப் பார்த்து வாங்க வேலைநாள்களில் வருவது நல்லது. விடுமுறை நாள்களில் கடும் கூட்டம் இருக்கும் என்பதால், உங்களால் புத்தகங்களை நிதானமாகப் பார்க்க முடியாமல் போகலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Share

ஹிந்துத்துவம் ஓர் எளிய அறிமுகம் – ஒரு சிறிய அறிமுகம்

எந்த ஒரு கோட்பாட்டுக்கும் ‘இதுதான் அந்தக் கோட்பாடு’ என்று தெளிவாகச் சொல்லும் புத்தகம் வேண்டும் என்றபடிதான் பேச்சுத் தொடங்கியது. உலகத்தில் இரண்டு வகையான ஹிந்துத்துவவாதிகள் உண்டு. உண்மையில் பசிக்கான ஹிந்துத்துவவாதிகள். இவர்கள் கோட்பாட்டுவாதிகள். இன்னொன்று பஞ்சத்துக்கு ஹிந்துத்துவவாதிகள். அதாவது கோட்பாட்டுவாந்திகள். நான் இரண்டாவது வகை. அதாவது ஹிந்துத்துவவாதி என்றாக்கப்பட்டவன்.

ஹிந்துத்துவவாதி என்பதும், பிராமணர் என்பதும் ஒருவகைத் தண்டனை என்று அறியப்படுகிற நிலையில், ஆமாம் இப்போ அதுக்கென்ன என்றது மட்டுமே என்னை ஹிந்துத்துவவாதி ஆக்கியது என்று சுருங்கச் சொல்லலாம். மற்றபடி ஹிந்துத்துவ சித்தாந்தங்கள் மீது ஈர்ப்பு இருந்தது/இருப்பது உண்மைதான். ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் என்று வேண்டுமானால் எங்களைச் சொல்லலாம். உண்மையான ஹிந்துத்துவவாதிகளிடம் திட்டு வாங்கவேண்டுமானால், நீங்கள் ஹிந்துத்துவ ஆதரவாளராக இருந்தால்தான் முடியும். அப்போதுதான் அதன் வலி புரியும்! இந்த ஆதரவாளர் அவ்வப்போது சில உண்மைகளை அல்லது உண்மை என்று நம்புவற்றைப் பேசிவிடுவார். அது தவறாகவே இருக்கலாம். ஆனால் அதை உண்மை என்று நம்பிவிட்டார் பாவம். ஆனால் கோட்பாட்டுவாதிகளுக்கு இந்தப் பிரச்சினை வராது. இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், இப்படித்தான் ‘ஹிந்துத்துவம் என்றால் என்ன’ என்ற ஒரு புத்தகம் வேண்டும் என்ற கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது.

எனக்குத் தெரிந்த ஹிந்துத்துவவாதி அரவிந்தன் நீலகண்டன் எழுதினால் சரியாக இருக்கும் என்று சொன்னேன். அவர் எழுதினால் யாருக்கும் புரியாது என்பது பெரிய ப்ளஸ் பாய்ண்ட். இனிமேல் ’இந்தக் கோட்பாட்டை இப்படி வரையறுக்கவேண்டும்’ என்னும் புத்தகச் சிந்தனைகளுக்கு ஒட்டுமொத்த முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்தானே!

மற்ற கோட்பாடுகளை வரையறுப்பது போல ஹிந்துத்துவத்தை வரையறுக்க முடியாது என்று சொல்லிப் பார்த்தேன். அப்படியானால் ’இதெல்லாம் ஹிந்துத்துவம், இதெல்லாம் ஹிந்துத்துவம் இல்லை’ என்று சொல்லிப் புத்தகம் வரலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. விதி வலிது.

ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸுக்கு ஆள்பிடிக்கும் கூட்டம் கிழக்கு மொட்டை மாடியில்தான் இருக்கிறது என்று சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுவிட்ட நிலையில், இப்புத்தகம் என்ன செய்துவிடும் என்றும் என்னை தைரியப்படுத்திக்கொண்டேன். இந்தச் சூழ்நிலையில் பெரிய அதிர்ச்சியாக அரவிந்தன் நீலகண்டன் தெளிவாகப் புரியும்படி எழுதிவிட்டார். இந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே சிறிது காலம் தேவைப்பட்டது. பாராவின் எடிட்டிங் அதனை இன்னும் சிறப்பாக்கியது. ஒரு வழியாகப் புத்தகம் வந்தது.

ஹிந்துத்துவம் என்னும் கோட்பாட்டை இந்தப் புத்தகம் எப்படி வரையறுக்கிறது? உண்மையில் ஹிந்துத்துவத்தை சரியாக வரையறுப்பது கடினம் என்றுதான் இப்போதும் நினைக்கிறேன். ஹிந்துத்துவத்தை அரசியல் சுதந்திரம் என்றுதான் நான் வரையறுக்க விரும்புவேன். சுதந்திரத்தை எப்படி வரையறுப்பது? ஹிந்துத்துவம் பன்மைக்கு முக்கியத்துவம் தருவது. பன்மையை எப்படி வரையறுப்பது? எனவே நிகழ்ச்சிகள் சார்ந்து வரையறுப்பது என்னும் வரையறையை ஏற்படுத்திக்கொண்டார் அரவிந்தன் நீலகண்டன். நல்ல தேர்வுதான். இதனால் ஒவ்வொரு நிகழ்ச்சி சார்ந்தும் மெல்ல மெல்ல ஹிந்துத்துவத்தின் எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டே சென்றார். பாரா இந்தப் புத்தகத்தைப் பற்றிச் சொன்னது, ப்ரில்லியண்ட் க்ளெவர் புத்தகம்.(இந்தப் பதிலில் எனக்கு ஏற்பில்லை என்பது ஒருபுறம். ஆனால் மிகச்சிறந்த பதில் அது!) எனக்கு இந்தக் கோட்பாட்டின்பால் சாய்வு இருப்பதால், இதனை நல்ல புத்தகம் என்று நினைக்கத் தோன்றுகிறது. எதிர்த்தரப்புக்காரர்கள் காயத் துவைத்துப் போட்டால், நல்ல விவாதங்கள் வரலாம். வரவேண்டும்.

ஒரு மனிதனை நல்லவனா கெட்டவனா என்று எப்படிச் சொல்வது? அப்படி வேறு வழியில்லாமல் ஒரு பதில் சொல்லவேண்டுமென்றால், அவனுள் இருக்கும் பல நுண்மைகளை மறுத்துவிட்டுத்தான் சொல்லவேண்டியிருக்கும். எந்த ஒரு கோட்பாட்டையும், எந்த ஒரு மனிதனையும், எந்த ஒரு நிகழ்வையும் வரையறுக்கும்போது இந்த அபாயத்தை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்றுதான் நினைக்கிறேன். எனவே, ஹிந்துத்துவம் ஓர் எளிய அறிமுகம் புத்தகம், பன்மைகளை அதனதன் தளத்தில் இருந்து வரையறுக்கத் தொடங்கியது. இதில் ஏற்பட்ட பிரச்சினை (வாசகர்களுக்கு) அல்லது பிளஸ் பாயிண்ட் (எழுத்தாளருக்கு) என்ன என்றால், இப்புத்தகத்தைப் படிக்கும் யாரும் ஏதோ ஒரு கட்டத்தில் தானும் ஹிந்துத்துவவாதிதானோ என்று எண்ணிக்கொண்டு விடலாம் என்பதுதான். இப்புத்தகத்தைப் படிக்கும் எதிர்த்தரப்புவாதிகள் கோட்பாட்டை விமர்சிக்காமல், நிகழ்வுகள் சார்ந்து கோட்பாட்டை விமர்சிப்பதும் எளிதாகிவிடும் என்பது இன்னொரு பலவீனம். ஆனால் ஹிந்துத்துவத்தை இப்படி அல்லாமல் வரையறுக்கமுடியாது என்றுதான் இப்போதும் தோன்றுகிறது. இந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டே எதிர்த்தரப்புவாதிகள் அரவிந்தனிடம் பல கேள்விகளை முன்வைக்கலாம். அவர் அதனையெல்லாம் எதிர்கொள்ளத் தயாராகத்தான் இருப்பார் என நினைக்கிறேன்.

இன்னொரு முறை உண்டு. விரிவான முறை. ஹிந்துத்துவத்தின் ஒட்டுமொத்த வரலாற்றை, அதன் காலத்தை வைத்து முன்னிறுத்திப் பேசுவது. காலம் தோறும் எப்படி ஹிந்துத்துவம் மாறி வந்திருக்கிறது என்பதைப் பேசுவது. இதிலும் நிகழ்வுகள், செயல்பாடுகள் சார்ந்துதான் ஹிந்துத்துவத்தைப் பேசவேண்டியிருக்கும் என்றாலும், ஒரு விரிவான விவரிப்பு சாத்தியமாகும். அதனையும் அரவிந்தன் நீலகண்டன் செய்யவேண்டும். புரியும்படியாகத்தான். இதில் எழுத்தாளருக்கு உள்ள பிரச்சினை, அவர் ஏதோ ஓர் அமைப்பின் உறுப்பினராக இருந்தால், இந்தக் கோட்பாட்டை அந்த அமைப்பின் மீது வைத்துப் பரிசீலிப்பதில் ஏற்படும். ஆனால் அரவிந்தன் இதனை எளிதாக எதிர்கொள்பவர் என்பது எனக்குத் தெரிந்ததுதான். அரவிந்தன் போன்ற நிஜமான அறிவுஜீவிகள் இல்லாமல் இதைப் போன்ற ஒரு பணியைச் செய்வது நிச்சயம் கடினமே.

இதேபோன்று, கம்யூனிஸம் உள்ளிட்ட கோட்பாடுகளை எளிமையாக விவரிக்கும் புத்தகங்கள் வரவேண்டும் என்ற கருத்து வலுப்பட்டிருக்கிறது. கிழக்கு இதைப் போன்ற புத்தகங்களை நிச்சயம் கொண்டு வரும். ஏற்கெனவே கிழக்கு என்பது ஒரு தளம், அதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று பத்ரி வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார்.

கிழக்கு மொட்டை மாடியில் ஆர் எஸ் எஸுக்கு இடம் பிடிக்கும் கூட்டத்துக்குப் பக்கத்திலேயே கம்யூனிஸ்டுகளும் ஓர் இடம் பிடித்துக்கொள்ளலாம். தோழர்களே, வாருங்கள்.

வெளியீடு: மினிமேக்ஸ் | விலை: ரூ 25/- | ஆன்லைனில் வாங்க |

Share

கிவிஞர்களை விரட்டுவோம் – 1

தினம் ஒரு கவிதை என்று எழுதிவிடலாம் என்றுதான் நினைத்தேன். கொஞ்சம் ‘செட்’ ஆகவில்லை. கவிதை என்று எழுதுவார்களாம். அதுவே கிவிதை போலத்தான் உள்ளது. மீண்டும் அதனைக் கிவிதை என்று வேறு ஒரு மாதிரி எழுதுவார்களாம். அதுவும் கிவிதை போலவே இருக்குமாம். நாங்களெல்லாம் சுணுக்குடனேயே போரிட்டு வளர்ந்தவர்கள்!

இன்றைய கவிதைகளில் பல கவிதைகள் சொற்கூட்டாகவும், வார்த்தைகளின் வளைப்பாகவும் உள்ளன என்பது உண்மையே. பொருட்படுத்தத்தக்க விமர்சனமே. ஆனால் எந்த ஒரு படைப்பிலக்கியத்திலும் இந்தப் பிரச்சினை என்பது இருந்தே தீரும். கட்டுரைகளிலும், கதைகளிலும் நாம் இன்று காண்பது என்ன? விவாதங்கள் என்பதில் நாம் காண்பது என்ன? சிறுகதை என்பது இன்று எதில் வேண்டுமானாலும் எழுதலாம் என்று தொடங்கி, எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று தொடங்கி, அதில் எல்லாமே இருக்கிறது. ஆனால் நாம் கவிதையை மட்டும் பிடித்துக்கொண்டு கிவிதை என்கிறோம். ஏனென்றால், நாம் கவிதை மட்டுமே எழுதுவதில்லை என்பதால் இருக்கலாம்.

முதலில் கிவிதை ஒன்றைப் பார்ப்போம்.

வக்கற்றவர்கள்

கல்யாணம் செய்துகொண்டு வாழ வக்கில்லை
திருமணம் சமூகத் தேவையல்ல என்றிடவேண்டும்
குழந்தையை கண்டித்து வளர்க்க வக்கில்லை
குழந்தைச் சுதந்திரம் தேவை என்றிடவேண்டும்
கணினி பயன்படுத்த வக்கில்லை
பேப்பர் பேனா போல வருமா என்றிடவேண்டும்
புத்தகம் படிக்க வக்கில்லை
நேரமே இல்லை என்றிடவேண்டும்
கருத்தை மறுக்க வக்கில்லை
அதில் ஒன்றுமே இலலை மறுக்க என்றிடவேண்டும்
மிக்ஸி கிரைண்டர் வாங்க வக்கில்லை
அம்மி, ஆட்டுக்கல் உடற்பயிற்சி என்றிடவேண்டும்
கடைசி இரண்டுவரிகள்
சரிதான், அதேதான்.

இனிமேல் எனது 3 கவிதைகளை வாசிக்க சொல்வனம் செல்லுங்கள்.

முக்கியமான பின்குறிப்பு: உங்கள் கவிதையைவிட கிவிதை நன்றாக உள்ளது என்பது போன்ற கமெண்ட்டுகள் பிரசுரிக்கப்படமாட்டாது.

 

பாற்கடல்
வெண்ணிறக் குதிரைகள்
மிடறு நிமிர்த்தி பாய்ந்தோடுகின்றன
புரண்டு படுக்கிறான் மகன்
விஷ்ணுவின் புன்னகையை ஏந்தி
தொப்புள்கொடியில் லக்ஷ்மியைத் தாங்கி
வாயிடுக்கில் ஒழுகும் நீரில்
மிதக்கிறது என் கட்டில்
கட்டிப் பிடித்துக்கொள்கிறாள்
கனவின் நிறத்தில்
மலர்ந்த மனைவி
என்ன நீர்ச்சத்தம் என்கிறாள் அம்மா
அலைகளுக்கு இடையே
ஆயிரம் ஆயிரமாய்
மிதந்து வருகின்றன
அந்த இரவில்
அப்போது மலர்ந்த
தாமரை மலர்கள்
ஒரு மலரை எடுத்து
விஷ்ணுவுக்கு வைத்தேன்
எங்கேயோ ஒலிக்கிறது மணிச்சத்தம்

 


ஒளி
நீண்ட நேரம்
சூரியனை நோக்கி இருந்துவிட்டு
கொஞ்சம் ஒளியை
பைக்குள் போட்டுக்கொண்டு
உடல் அதிர நடந்தேன்
அந்தியில்
பச்சை இலைகள்
சூழ்ந்திருந்த தோட்டத்துள்
எனக்கு முன் சென்று
என்னை வரவேற்றது ஒளி
நீரில் மூழ்கினால்
என்னைச் சுற்றி
தங்க வெளிச்சம் பரப்பியது
என் பையிலிருந்த சூரியன்
இரவில் உறங்கும்போது
என் உடல் ஒளிர்ந்ததைக் கண்டேன்
மனமெங்கும் சூழ்ந்திருந்த
திசையறியா வேதனை
எங்கோ ஓட
உலகெங்கும்
வெளியெங்கும்
மனமெங்கும்
மின்னின
மறுநாள் காலை
ஒளியைத் திருப்பிக் கேட்க
வீட்டுக்குள் நுழைந்தது சூரியன்
நான் குளிரத் தொடங்கினேன்
என் வெளிச்சத்தில்
இன்னும் பிரகாசமாக சூரியன்

 


மகுடி
வாயின் வழியாக
பாம்புக் குட்டிகள்
வந்த வண்ணம்
எவனோ ஊதும்
மகுடிக்கு என் ஆட்டம்
ஊரெங்கும்
வழியெங்கும்
சிதறி ஓடும்
என் வயிற்றுப் பாம்புகள்
மகுடிக்காரனை விட்டுவிட்டு
எதிர்ப்படுவோரையெல்லாம்
கொத்திச் செல்கின்றன
கண்ணாடியில் என் முகமேகூட
வரைகலையில் மாற்றிவிட்ட மனிதன்போல
பத்தியாகவும் வாலாகவும்
மொழு மொழு உடலாகவும் தெரிகிறது
பாம்பிலிருந்து பாம்புக்குட்டிகள்
தோன்றுவது இயற்கையே
என்கிறது ஓர் அசரிரீ
மகுடிக்காரன் நிறுத்தினால்
என் பத்தி சுருங்கலாம்
பாம்புக்குட்டிகள் வீடடையலாம்
ஆனால்
நிற்பதே இல்லை மகுடிக்காரனின் இசை

Share

ஒரே ஒரு துரோகம் (சிறிய குறிப்பு!)

TACல் வேலை செய்துகொண்டிருந்தபோது, அங்கே வேலை செய்பவர்களுக்கென ஒரு தனி நூலகம் வைத்திருந்தார்கள். அதில் சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன் புத்தகங்கள் அதிகம் இருக்கும். +2 முடிக்கும்வரை எங்கள் வீட்டுக் கெடுபிடியின் காரணமாக சுதந்திரமாக நிறையப் புத்தகங்கள் வாசிக்க முடிந்ததில்லை. வீட்டுக்குத் தெரியாமலும், கொஞ்சம் தெரிந்தும் வாசித்தவற்றில், பாலகுமாரன், ஜெயகாந்தன் புத்தகங்களே அதிகம். கல்லூரியில் சேர்ந்ததும் எனக்கான தளைகள் அத்தனையும் அறுந்துவிட்டது போன்ற உணர்வு. வீட்டிலும் தண்ணீர் தெளித்துவிட்டார்கள். தொடர்ச்சியாகத் திரைப்படங்கள், தொடர்ச்சியாகப் புத்தகங்கள், இது போக கிரிக்கெட். இவைதான் வாழ்க்கை என நினைத்து வாழ்ந்த காலம் அது. டாக்-கில் வேலை கிடைத்ததும், அங்கே லைப்ரரி இருந்ததும் பெரிய வரம் போல ஆகிவிட்டது. ஒவ்வொரு எழுத்தாளராகக் குறித்துவைத்துப் படித்தேன். வரிசையாக சுஜாதா புத்தகங்கள். பல புத்தகங்கள் பிடித்திருந்தன. முக்கியமாக மனசில் நின்றது ஒரே ஒரு துரோகம்.

இப்போது கிழக்கு பதிப்பகம் இந்த புத்தகத்தை மீள்பதிப்பு செய்திருக்கிறது. ஐபோன் வந்தவுடன், அதில் பிடிஎஃப் பைலைப் படிக்கமுடிகிறதா என்று சோதித்தேன். நன்றாகவே வேலை செய்தது. முதலில் அதில் படிக்க எடுத்தது ஒரே ஒரு துரோகம். ஒருவகையில் ஐபோனில் ஒரு தமிழ்ப் புத்தகத்தைப் படித்து அதைப் பற்றி எழுதும் முதல் பதிவு இது. :)) (தமிழக அளவில், இந்திய அளவில்? உலக அளவில் இல்லை என்பதை மட்டும் பெருந்தன்மையுடனும் நேர்மையுடனும் ஒப்புக்கொள்கிறேன். இதனை மறுத்து வரும் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது. :>)

கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு படித்தபோது அடைந்த அதே அனுபவங்களை மீண்டும் அடைவது போன்ற ஒரு பிரமை. அந்த நினைவுகள் என் ஆழ்மனத்தில் உறைந்து கிடந்திருக்கின்றன என்பதே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த வயதில் மனத்தில் அப்படியே பதிந்துபோன பெண் சார்ந்த விஷயங்கள் ஒரே ஒரு துரோகத்தின் வழியாக மீண்டு வருவதைப் பார்க்க பார்க்க ஆச்சரியமாக இருந்தது. நானே என் சலனப் படத்தைப் பார்ப்பது போல.

சுஜாதாவைப் பற்றிய விமர்சனமாகச் சொல்பவர்கள் சொல்வது – கொஞ்சம் கதை, கொஞ்சம் செக்ஸ், கொஞ்சம் பெண், கொஞ்சம் டெக்னிகல் சமாசாரங்கள் என்பார்கள். இந்தக் கதையும் அப்படியே. கொஞ்சம் கதை கொஞ்சம் செக்ஸ்தான். இதனால்தான் அவர் இளைஞர்களின் எழுத்தாளராக மாறிப் போனாரோ என்னவோ. ஆனால் அதைச் சொல்லும் நடையிலும், அந்த எழுத்தின் சில வரிகளில் சுஜாதா தொட்டுவிடும் அகமன ஆழங்களும் வேறு யாருக்கும் எளிதில் கைகூடாதவை. குறிப்பாக, இந்த நாவலில் ராஜியின் தன்பார்வையில் வரும் பகுதிகளைப் படிக்கும் எந்த ஒரு பெண்ணும் சுஜாதாவின் ரசிகையாக மாறிவிடும் வாய்ப்பு உள்ளது.

ராஜி என்ற பெண்ணின் பார்வையில் விவரிக்கப்படும் அத்தியாங்களில் சுஜாதாவின் வீச்சு அபாரமானதாக இருக்கிறது. இளமையைத் தொலைத்த பிறகு முதிர் இளமையில் திருமணம் நடக்கும் ஒரு பெண்ணின் மனப்பதிவாக அவர் எழுதியிருக்கும் வரிகள் அசலானவை. திருமணம் என்ற ஒன்று நிச்சயமானதும் ஒரு பக்கம் அவள் மனத்தளவில் இளமையான பெண்ணாவதும், மறுபக்கம் அவரது முதிர்மனம் அதனை எச்சரிப்பதும் என சுஜாதாவின் ஆட்டம் அசரடிக்கிறது. முதலிரவு அறையில் சிறுவர்கள் ஓடி விளையாடுவதேகூட கூச்சமாக உள்ளது என்னும் வரி யதார்த்தத்தை சுஜாதா எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு. ஒரு தங்க சொம்பை விழுங்கிவிட்டாற் போல என்னும் வரியில் நான் அசந்தே போய்விட்டேன். ஒட்டுமொத்த கதையில் ராஜியின் பெருமையை, ஏக்கத்தை, தவிப்பை இந்த ஒரு வரி விளக்கிவிடுகிறது.

அம்பலத்தில் சுஜாதா அரட்டையின்போது இந்தப் புத்தகத்தைப் பற்றி நான் சொல்லியிருந்தேன். அடுத்த கற்றதும் பெற்றதும் பகுதியில், தான் மறந்த புத்தகங்களை எல்லாம் என் வாசகர்கள் நினைவு வைத்துச் சொல்லும்போது ஆச்சரியமாக இருக்கிறது என்று சொல்லியிருந்தார். அவர் யாரைச் சொன்னார் என்று தெரியாது, ஆனால் என்னைத்தான் சொன்னார் என்று நினைத்துக்கொண்டேன்.

இப்போது அந்த நாவலை மீண்டும் வாசித்தபோது அந்த நினைவு உறுதிப்பட்டிருக்கிறது. சம்பத்தின் நினைவுகளாக விரியும் பத்திகளில், ரஜினி வில்லனாக நடிக்கும்போது அவருக்குக் கிடைத்துவிடும் சுதந்திரம்போல, சுஜாதாவுக்கு ஒருவித சுதந்திரம் கிடைத்துவிடுகிறது. சம்பத் தொடர்ந்து ராஜியையும் சுந்தரியையும் மையமாக வைத்து பெண்களை ஒரு போகப் பொருள் என்னும் அளவுக்குச் சித்திரிக்கும் பகுதிகள் ஓர் உதாரணம். பதின்ம வயது ஆண்களுக்கு இளைஞர் ஒருவர் எழுதியது போலத்தான் இருக்கும். இதையேதான் சுஜாதா விமர்சனமாகவும் எதிர்கொள்ள நேர்ந்தது. பெண்களைப் பற்றி அவர் மிகவும் மலிவாக சித்திரிக்கிறார் என. சம்பத்தின் எண்ணங்களை சுஜாதாவின் எண்ணமாக எடுத்துக்கொண்டால், சுஜாதாவை பிற்போக்காளராக்க இந்த நாவலிலும் நிறைய சந்தர்ப்பங்கள் உள்ளன. தேவைப்பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சுஜாதாவின் நாவல்கள் என்று சொல்லப்படுபவை எல்லாமே தொடர் கதைகள். இதனால் வாரா வாரம் ஏற்படும் நிர்ப்பந்தம் காரணமாக, சூழல் காரணமாக அந்த நாவலில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் தவிர்க்கமுடியாதவை. உண்மையில் இவை நாவலின் தோல்விகளே. இதனைப் பெரும்பாலான சுஜாதா கதைகளின் உச்சக்கட்ட காட்சிகளில் காணமுடியும். பெரும்பாலும் ஒரு நாடகத்தன்மையுடன் முடியும். இந்த நாவலை முதலில் படித்தபோது இந்த நாவலை எப்படி முடிக்கப்போகிறார் என்பதுதான் என் கவனமாக இருந்தது. இப்போது மீண்டும் வாசிக்கும்போது, முடிவு முதலிலேயே தெரியும் என்பதால், அவசரம் எதிர்பார்ப்பு இன்றிப் படிக்க முடிந்தது. இதிலும் அந்த நாடகத்தன்மை சிறிய அளவில் எட்டிப் பார்ப்பதை இப்போதும் உணரமுடிந்தது. ஆனாலும் கடைசி அத்தியாயம் சிறப்பானதுதான்.

ஈ ரீடரில் படித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இன்னும் கொஞ்சம் பெரிய சைஸில் ஃபாண்ட் இருந்திருக்குமானால் இன்னும் எளிதாக இருந்திருக்கும். ஆனால், இதுவே படிக்கும்படியாகத்தான் இருக்கிறது. என்ன ஒரு குறை என்றால், தட்டுப் பிழைகளைக் குறித்து வைக்க இயலவில்லை. இன்னொரு மொபைலில் வாய்ஸ் ரெக்கார்ட் செய்து பிழைகளைக் குறித்து வைத்தேன். கையடக்க ஈபுக் ரீடரில் என்று விஷ்ணுபுரத்தை எளிதாகப் படிக்கமுடிகிறதோ அன்றுதான் ஈ ரீடர் அச்சுப் புத்தகங்களை வென்றுவிட்டதாக அர்த்தம் என்று ஒரு விதியை உருவாக்கியிருக்கிறேன். அந்த வகையில் விஷ்ணுபுரம் எழுதிய ஜெயமோகன்தான் எவ்வளவு நன்றிக்குரியவர்!

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-452-6.html

Share

வம்சம்

உலகத் திரைப்படங்கள் தங்கள் வாழ்க்கையைப் பதிவு செய்யும்போது தமிழ்ப்படங்கள் மரத்தைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன என்பதன் அபத்தத்தைப் புரிந்துகொண்டு வந்த தமிழ்த் திரைப்படங்கள் சொற்பமே. ஹே ராம், விருமாண்டி படங்களைப் பார்த்தபோது, கதைகளுக்குப் பஞ்சம் என்னும் அபத்த வாதத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. கதைக்கென யோசிக்க, மெனக்கெட யாரும் தயாரில்லை. குறைந்த யோசிப்பில் அதிக லாபம் அல்லது கைக்கடிக்காத படம் என்பதில்தான் அனைவருமே கவனம் செலுத்துகிறார்கள். தமிழில் வாழ்க்கையைப் பேசவேண்டுமானால், அரசியல், மத, ஜாதி வராத மாதிரி யோசிக்கவேண்டும் என்னும் ஒருவித நிர்ப்பந்தத்துக்குள் இயக்குநர்கள் உழல்வது புரிகிறது. எதற்குத் தேவையில்லாத பிரச்சினை என்னும் எண்ணம் காரணமாக இருக்கலாம். கமல் இதனை எளிதாக எதிர்கொண்டுவிடுவதால் அவரால் சிறந்த கதைகளைக் கொண்ட படங்களைக் கொடுத்துவிடமுடிகிறது.

ஜாதியை வெளியே வெளிப்படையாகப் பேசும் கதாபாத்திரங்கள் கொண்ட படங்களை எடுப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பாரதிராஜா அதனை வேறு வேறு வடிவங்களில் வெளிப்படுத்துவார். கமல் தேவர் மகனில் நேரடியாகச் சாதியைப் பற்றிப் பேசினாலும், அதிலிருந்த ரொமாண்டிசைசேனும், ஹீரோயிஸமும் அதனை ஜனரஞ்சகப் படமாக்கியது என்றுதான் சொல்லவேண்டும். விருமாண்டியில் கமல் ஹீரோயிஸத்தையும் ஜாதி பற்றிய விவரணைகளையும் மிக அறிவுபூர்வமாகக் கலந்திருந்தார். அதிலும் கமல் என்னும் நடிகருக்குள்ளான இமேஜ் தந்த எல்லையைக் காணமுடிந்தது. கமல் அவரது நிலையில் கவனமாக இருப்பதும் நல்லதுதான். அமீரின் பருத்திவீரன் தெளிவாக வெளிப்படையாக ஜாதியை முன் வைத்திருந்தால் பெரிய கலகம் ஏற்பட்டிருக்கக்கூட வாய்ப்புள்ளது. ஆனால் அந்தப் படத்தின் அடிநாதமே அதுதான். அமீர் எந்த எண்ணத்துடன் அதனை எடுத்தார் என்பது தெரியாது. ஆனால் மிக முக்கியமான விஷயம்தான் அவர் தொட்டது.

இந்நிலையில் வம்சம் படம் முக்கியத்துவம் பெறுகிறது. இது ஓர் அருமையான திரைப்படம் அல்ல. ஒரு தமிழ்த் திரைப்படத்துக்கே உரிய எல்லைகள், பிரச்சினைகள் இப்படத்துக்கும் உள்ளன. ஹீரோயிஸ அடிப்படையில் எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ், ஃப்ளாஷ் பேக் காட்சிகளின் இழுவை போன்றவை. அதனையும் மீறி, மறவர் சமூகத்தின் கதை என்ற அளவில், அதனை மிகவும் வெளிப்படையாகவே சொல்லி வம்சம் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. இப்படமும் மற்றப் படங்கள் போலவே ஜாதிய மேன்மையை முன்வைக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதனையும்கூட இப்படம் மிகத் தெளிவாக வெளிப்படையாகவே முன்வைக்கிறது. கருத்தியல் அடிப்படையில் இந்த ஜாதி மேன்மை, அதிலும் மேல்ஜாதி மேன்மையை பறைசாற்றும் படங்கள் தரும் எதிர்மறை விளைவுகள் யோசிக்கத் தகுந்தவையே.

ஆனால், ஒரு திரைப்படம் என்ற அளவில், இதனையும் பதிவு செய்வது மிக மிக அவசியமே. மறவர்களின் பல வம்சங்களைக் குறிப்பிட்டு, அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளை, ஈகோக்களை முன்வைத்திருக்கிறார் இயக்குநர். அவர்களின் ஈகோவும் பிரச்சினையும் எப்போதும் வெட்டுக் குத்தோடு தொடர்புடையதுதான் என்பதனைச் சொல்லவும் கொஞ்சம் தைரியம் வேண்டும். அது இயக்குநருக்கு இருக்கிறது. ஒருவேளை இது வெளியில் அப்பட்டமாகத் தெரியாமல் இருப்பதற்காகத்தான் ஜாதி மேன்மை என்பதைக் கேடயமாகப் பயன்படுத்திக்கொண்டாரோ எனத் தோன்றுகிறது.

இலங்கையில் புத்தகக் கண்காட்சியின்போது ஒரு மறவ நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, மறவர்கள் பற்றிப் பல விஷயங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். அதில் பல விஷயங்கள் இந்தப் படத்தில் பதிய வைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக கள்ளச் சாராயமும் பன்றிக் கறியும் இப்படத்தின் வெற்றிக்கான குறியீடாகவே மாறியுள்ளன. இவர்கள் பெண்களைக் கேவலப்படுத்துவதில்லை என்பதையும் இப்படத்தில் சொல்லிவிடுகிறார் இயக்குநர். இதனால் பெண்களைக் கேவலப்படுத்தும் சம்பிரதாயமான தமிழ்ப்படக் காட்சிகளில் இருந்து எளிதாக வெளிவந்துவிடுகிறார். அதேசமயம், கதாநாயகி நடுத்தெருவில் வில்லன் மீது சாணியைக் கரைத்து ஊற்றும் காட்சிக்கும் அதனைப் பயன்படுத்திக்கொண்டுவிட முடிகிறது. இப்படத்தின் சிறப்பான காட்சி இதுவே. அதேபோல் அந்த கதாநாயகியைக் கேவலப்படுத்த, இன்னும் இரண்டு பெண்களை அழைத்துக்கொண்டு வில்லன் கும்பல் சுற்றுவதும் நல்ல யோசனைதான்.

கருணாநிதியின் வம்சத்தைச் சேர்ந்த ஒரு நடிகர் நடித்திருந்தும், படத்தை இப்படி எடுத்திருப்பது ஆச்சரியம்தான். அவருக்கான காட்சிகள் பிற்பகுதிகளில் வந்து படத்தையே புரட்டிப் போட்டுவிட்டாலும்கூட, ஒரு பேண்ட் கூட இல்லாமல், படம் முழுக்க வேட்டி, லுங்கிகளில் வலம் வரவும் இன்றைய கதாநாயகர்களும் தில் வேண்டியிருக்கிறது. ஒரு மறவருக்கான திமிர் அருள்நிதியின் தோற்றத்துக்கு இல்லை. ஆனால் இதையே இன்றைய நிலையிலான ஒரு மறவப் பொதுப் பிம்பமாக வைப்பதில் பாண்டிராஜ் சொல்ல வரும் சேதியும் அடங்கிவிடுகிறது. அந்த உருவம் மக்களின் பொதுப்புத்தியில் எப்படிப் பதிந்திருக்கிறது என்பதைப் பயன்படுத்திக்கொண்டு, சரியான கல்வியே இவர்களைப் பண்படுத்த வல்லது என்பதை அவர் சொல்லாமல் சொல்லிவிடுகிறார். கிராமத்தில் இருந்துகொண்டு கிராம வாழ்க்கை வாழாமல் இருப்பதும்கூட இதிலிருந்து வெளிவர உதவும் என்று இயக்குநர் நினைக்கிறாரா எனத் தெரியவில்லை. கடைசிக் காட்சியில் கதாநாயகன் பேண்ட் ஷர்ட் வண்ணம் இறங்கிச் செல்லும்போது, அவரது மகன் எதிரியாக இருந்தவனின் மகனைத் திருவிழாவுக்கு அழைக்கிறான். பேண்ட் போட்டுக்கொண்டு, காரின் அருகில் நடந்தால் சகிப்புத்தன்மை வந்துவிடுகிறதா என்ன?

எப்பாடு கொண்டாவது பிற்பாடு கொடாதவர் உள்ளிட்ட பல்வேறு வம்சங்களின் பெயர்களைச் சொல்வதே கூட தமிழில் அரிது. ஒருவகையில் இது ஆழமாகப் பேசப்படுவதால், பொதுவான ஒரு படம் என்பதிலிருந்து விலகி, அப்பகுதியைச் சேர்ந்த அந்த மக்களுக்கான படம் என்று காணப்படக்கூடிய ஆபத்தும் உள்ளது. இதுவே இப்படத்துக்கு நேர்ந்திருக்கிறது என நினைக்கிறேன். படம் முழுக்க, கிராமத் திருவிழாவின்போது நடக்கும் கொண்டாட்டங்களைக் காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். இது கொஞ்சம் அலுப்பதைத் தருகிறது. என்றாலும், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், இன்று இப்படி நடப்பதெல்லாம் அருகி வருகிறது என்னும் நிலையில், பெரிய மகிழ்ச்சியுடன் பார்த்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. நடிகர்கள் தேர்வில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஜெயப்ராகாஷின் அமுல்பேபி முகம் வில்லனுக்கு ஒப்பவில்லை. கதாநாயகனின் அம்மாவாக வருபவரும் ஒட்டவில்லை. பாண்டிராஜ் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கவேண்டும்.

ஜாதி என்பதைப் பொத்திப் பொத்திப் பேசுவதும், அல்லது மேம்போக்காக அணுகி அதனை ஒட்டுமொத்தமாக ஒரு சாதி என்றாக்கி, அதற்குண்டான நுண்மைகளையெல்லாம் மறைத்துவிட்டுப் பேசுவதும்தான் தமிழ்ப் படங்களின் அணுகுமுறையாக இருந்து வந்துள்ளது. பிராமணர்கள் மட்டும் விதிவிலக்கு. பிராமணர்கள் பற்றிய படங்களை மட்டும் வெளிப்படையாகவே பேசிவிடுவார்கள். வேற்று ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்றால், மிகக் கவனமாகவே பேசுவார்கள். எல்லா மேல்சாதிகளையுமாவது ஒன்றாக வைத்துப் பேசவேண்டும் என்ற உணர்வுகூட இவர்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடியது. அந்த வகையில் இந்தப் படம் ஒரு முதற்படி. இனியும் அடுத்தடுத்த, பிராமணர்களோடு சேர்த்து மற்ற மேல்சாதிகளின் குணங்களையும் தோலுரிக்கும் படங்கள் வரட்டும். இதனை எதிர்பார்ப்பதே அதிகம்தான் என்றாலும், இந்தப் படம் அது நடக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது. இந்தப் படம் மறவர் வம்சத்த்தின் மேன்மையோடு தேங்கிவிட்டாலும், பருத்திவீரன் போன்ற கதையில், அதைவிட ஆழமாக அடுத்த படிக்குச் செல்லும் படைப்புகள் வரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

Share

நான் – கவிதை

பிரிந்திருந்த ஐந்தாம் நாளில்
மெல்ல முளைத்தது சோகம்
முதன் முதலில் கண்ட காலங்கள்
புன்னகை மட்டும் பரிமாறிக்கொண்ட நிமிடங்கள்
மெல்ல தொடங்கி
தீவிரமாகத் தொட்டுக்கொண்ட நேரங்கள்
இரண்டு நாள் செல்ல
சோகம் நிறம் மாறி
மூர்க்கத்துடன் காமம்
எங்கோ நின்று அலைக்கும்
வீடு நோக்கித் திறந்து கிடந்தன கண்கள்
கதவு திறந்து உள்ளே நுழையவும்
என்னைப் பிடித்துக் கொள்கிறது
சுயமுனைப்புடன்
நான் போகும்போது விட்டுப்போன
நானென்னும் சுயம்.

Share

வழி – கவிதை

வழி என்னும் கவிதை சொல்வனத்தில் பிரசுரமாகியுள்ளது. வாசிக்க இங்கே சொடுக்கவும்.

http://solvanam.com/?p=10807

வழி

மீண்டும் கடக்கவியலாத
ஆற்றின் பாதையில் செல்கிறேன்
கணம்தோறும் நடந்துவிடும்
செயல்களைத் திருத்திக்கொள்ளும்
வாய்ப்பு மறுக்கப்படும்
வழியென்றறிந்து
கவனமாக அடி வைக்கிறேன்
கண்கூசும் ஒளியில்
நடைபிறளும் நேரமும்
வரலாறென்றாகிவிடும்
சோகத்தைக் கொண்டு
நீண்டு செல்கிறது அச்சாலை.

Share