பொதுவாகவே அறிவியல்/சூழலியல் தமிழ்க் கட்டுரைகளை (ஆங்கிலக் கட்டுரைகளையும்!) நான் அதிகம் வாசிப்பதில்லை. முதலும் கடைசியுமான காரணம், இவை என் தலைக்கு மேலே பயணிப்பவை. டிஸ்கவரி சானல்களில் வரும் தமிழ் மொழிபெயர்ப்புகளைப் பார்ப்பதுண்டு. அவை அசரடிக்கும் வகையில் படம்பிடிக்கப் படுபவை. ஒரு மணி நேர ஸ்கிரிப்ட்டுக்கு அவர்கள் எடுத்துக்கொள்ளும் கவனமும் உழைப்பும் ஆச்சரியமானவை. ஆனால் அவற்றில் எதோ ஒருவகையில் ஒரு அந்நியத் தன்மை இருக்கும். ஹாலாஸ்யனின் கட்டுரைகளில் அந்த அந்நியத்தன்மை இருப்பதில்லை. நேரடியாகத் தமிழில் எழுதப்படும் கட்டுரைகள். தமிழர்களின் சராசரி அறிவியல் அறிவை, விருப்பத்தை அறிந்துகொண்ட ஒருவர் எழுதும் கட்டுரைகள்.
தமிழில் பெரும்பாலான அறிவியல் கட்டுரை முயற்சிகள், ஒன்று, குறைவான அறிவியலுடன் பெரும்பாலும் கிண்டல் பேச்சுக்கள் மூலம் அறிவியலை விளக்கப் பயன்படும் கட்டுரைகளாக அமையும். அல்லது, தீவிரமான அறிவியல் கட்டுரைகளாக, அறிவியல் பற்றி ஏற்கெனவே அறிந்திருப்பவர்களுக்கான கட்டுரைகளாக அமையும். என்.ராமதுரை போன்ற சிலர் இந்த இரண்டுக்கும் இடைப்பட்டு கட்டுரைகள் முயன்றிருக்கிறார்கள். ஹாலாஸ்யன் இதில் அடுத்த படி.
விளக்க சில நகைச்சுவைத் தொடர்களை, உரையாடல்களைப் பயன்படுத்தினாலும் அவற்றிலேயே உறைந்துவிடுவதில்லை ஹாலாஸ்யன். அறிவியல் 90% இருக்கவேண்டும் என்பதில் பிறழ்வதில்லை.
மிகச் சரியான தமிழ் வார்த்தைகளைத் தேடித் தேடிப் பயன்படுத்துகிறார். உருவாக்குகிறார். ஏன் அந்தத் தமிழ் அறிவியல் வார்த்தைகளை உருவாக்குகிறோம் என்பதில் அவருக்கு சரியான புரிதல் இருப்பதால், அவை பெரும்பாலும் சரியான வார்த்தைகளாகவே அமைகின்றன. ஒன்றிரண்டு கட்டுரைகள் எழுதிவிட்டு ஓய்ந்து போய்விடுவதில்லை என்பது முக்கியமாகச் சொல்லவேண்டியது. தொடர்ச்சியாகக் கட்டுரைகள் எழுதுகிறார்.
உலக அறிவியல் முன்னேற்றங்கள் குறித்துத் தொடர்ச்சியாகத் தமிழில் அறிமுகப்படுத்தும் ஆர்வமும் உழைப்பும் இருக்கிறது. சமீபத்தில் எழுத வந்த இளைஞர்களில் (குழந்தை என்றே சொல்லவேண்டும்!) தனிப்பாதை ஒன்றைக் கைக்கொண்டிருக்கிறார் ஹாலாஸ்யன். தொடர்ச்சியாக இதே திக்கில் இவர் எழுதுவாரானால் இவரது ஒட்டுமொத்த தொகுப்பு தமிழுக்கான கொடையாக இருக்கும்.
ஹாலாஸ்யனின் புத்தகங்கள்:
சிள்வண்டு முதல் கிகாபைட்ஸ் வரை, கிழக்கு பதிப்பகம்.
நுண்ணுயிர்கள் ஓர் அறிமுகம், யாவரும்.
எக்காலம், பார்வதி படைப்பகம்.
* மணி ரத்னம் இறங்கி அடித்திருக்கிறார். இளம் இயக்குநர்களுக்கு நிஜமாகவே தண்ணி காட்டியிருக்கிறார்.
* காற்று வெளியிடை மூன்று மணி நேரத்தில் முப்பது மணி நேரம் உணர்வைத் தந்ததை அப்படியே மாற்றிப்போட்டு இப்படம் முழுக்க பரபரவென வைத்திருக்கிறார்.
* நான்கு பெரிய நடிகர்கள் என்றெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் எல்லாரும் எல்லாக் காட்சிகளிலும் கிட்டத்தட்ட வருமாறு திரைக்கதை அமைத்ததுதான் பெரிய பலம்.
* இது மணிரத்னம் படமா என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு படம் கமர்ஷியல். அதுவும் அவரது துல்லியமான தரத்தில் வரும்போது மிக நன்றாகவே இருக்கிறது.
* குறைகள் என்று பார்த்தால் –
* அரவிந்த் சாமி என்னதான் நன்றாக நடித்தாலும், அவருக்கு இந்தப் பாத்திரம் கொஞ்சம் ஓவர். எரிச்சல் வரும் அளவுக்கு!
* ஏர் ஆர் ரஹ்மானிடம் கதையே சொல்லாமல் செம பாட்டு வாங்கிவிடுவதுதான் மணி ரத்னம் பாணி. இதிலும் பாடல்கள் அட்டகாசம். ஆனால் கதைக்கு ஒரு பாட்டுக்கூடத் தேவையில்லை. அதனால் அத்தனை பாடல்களையும் வீணடித்திருக்கிறார் மணி ரத்னம். சீரியஸான காட்சிகளிலெல்லாம் சம்பந்தமே இல்லாமல் பாட்டைப் போட்டு நிரப்பி இருக்கிறார் – வழக்கம் போலவே.
* ஒரே ஒரு பாடல் மட்டும், கொலைக்கு முன்னர் எல்லாம் வருகிறது என்று நினைத்தால் அதையும் பின்னர் விட்டுவிட்டார்.
* விஜய் சேதுபதிக்கு கிட்டத்தட்ட காமெடி வேடம். ஆனால், ஆனால்…
* ஒரு முழுமையான கமர்ஷியல் பட ரசிகன் படத்தின் முதல் ஐந்து நிமிடங்களிலேயே முக்கியமான ஒரு முடிச்சையும், கமர்ஷியல் வெறியன் அடுத்த பத்து நிமிடங்களில் இன்னொரு முக்கியமான முடிச்சையும் யூகித்துவிடுவான். நான் யூகித்தேன். ஆனால் வெறியன் அல்ல! மணி ரத்னத்தின் பெரிய சமரசம் இது. அவருக்கு வேறு வழியில்லை. படத்தின் இறுதிக்காட்சியில் அப்படிக் கை தட்டுகிறார்கள்.
* படத்தின் நடிகர் நடிகைகள் அத்தனை பேரும் நன்றாக இருக்கிறார்கள். நன்றாக நடிக்கிறார்கள். அருண் விஜய் செம ஸ்டைல்.
* வழக்கமான மணி ரத்னம் ரசிகர்கள் கிளைமாக்ஸ் காட்சியைப் பார்த்து எரிச்சல் அடையவும் மணி ரத்னம் வெறுப்பாளர்கள் கொண்டாடவும் செய்வார்கள். நான் மணி ரத்னம் ரசிகனே. ஆனால் க்ளைமாக்ஸ் நான் யூகித்தபடியே இருந்ததால் பிடித்தது. அது என்னவென்றால்… அனைவரும் கழுவி ஊற்றும்போது தெரிந்துகொள்ளவும்.
* ஹை ஃபை மண்ணாங்கட்டி ஓவர் லாஜிக் என்பதையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு இப்படி மணி ரத்னம் அவ்வப்போது ஒரு படம் எடுப்பது அவருக்கு நல்லது. கமர்ஷியலும் தரமும் ஒன்றிணையும் படங்கள் மிகவும் முக்கியம். அந்த வகையில் இது நன்றாக உள்ளது.
பின்குறிப்பு 1: நீல மலைச்சாரல் பாட்டைக் கூட ரெண்டு வரியில் முடிக்க ஒரு அசட்டு தைரியம் வேணும்.
பின்குறிப்பு 2: கருணாநிதி, பொன்னியின் செல்வன், காட் ஃபாதர் என எல்லாவற்றையும் மறந்துவிட்டுப் போகவும். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எல்லாவற்றின் சாயலையும் வேண்டுமென்றே வைத்துவிட்டு, கேங்க்ஸ்டர் படமொன்றை எடுத்திருக்கிறார் மணி ரத்னம்.
பின்குறிப்பு 3: ட்ரைலரைப் பார்த்துவிட்டு, பெயரையும் வைத்துக்கொண்டு கம்யூனிஸ லெனினிஸ மாவோயிஸ ட்ராட்ஸ்கியிஸ குறியீட்டைக் கண்டுபிடித்த என்னை நானே நொந்துகொண்டேன்.
நீட் தேர்வில் தமிழில் எழுதிய மாணவர்கள் அனைவருக்கும்
196 மதிப்பெண்களை வழங்கச் சொல்லி உயர்நீதி மன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கி உள்ளது.
நீதிபதிகள் செல்வம் மற்றும் பஷீர் அஹம்த் அடங்கிய பென்ச், தற்போது நடக்க இருக்கும்
கலந்தாய்வையும் நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ இரண்டு வாரங்களுக்குள்
இந்த புதிய மதிப்பெண்களிடன்படி தரவரிசையை உருவாக்கவும் அறிவுறுத்தி உள்ளது. இதை எதிர்த்து
சிபிஎஸ்இ உச்சநீதிமன்றம் செல்கிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பல கேள்விகளையும்
குழப்பங்களையும் தோற்றுவித்துள்ளது.
தமிழில் தேர்வு நடந்த உடனேயே, பல கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டிருப்பதாகப்
புகார்கள் எழுந்தன. டெக் ஃபார் ஆல் என்னும் அமைப்பு, இக்கேள்விகளில் உள்ள தவறுகளைப்
பட்டியலிட்டு, குறைந்தது 196 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டுள்ளன
என்றது. சிபிஎம்மின் டி.கே.ரங்கராஜன் இதை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றார். இதை
ஒட்டிய தீர்ப்பே இப்போது வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே மாணவர்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்ட
நிலையில், இத்தீர்ப்பின்படி தேர்வுபெற்ற புதிய மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டால்,
ஏற்கெனவே தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவர்களின் நிலை என்ன? அவர்களை அப்படியே
வைத்துக்கொண்டு, கூடுதலாக புதிய மாணவர்களையும் சேர்த்துக்கொள்ளப் போகிறார்கள் என்றால்,
கூடுதல் இடங்களை அரசு உருவாக்குமா? இப்படியான சிக்கலை உருவாக்கி இருக்கிறது இத்தீர்ப்பு.
இப்பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம் சிபிஎஸ்இயின் பொறுப்பற்ற
தன்மைதான். நீட் பிரச்சினையில் தொடக்கம் முதலே சிபிஎஸ்இ அலட்சியமாகவே நடந்துகொண்டுள்ளது.
நீட் தேர்வுக்கான மையம் ஒதுக்குதலில் சிபிஎஸ்இயின் எதிர்பாராத பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளலாம்.
ஆனால் மாணவர்களின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கும் கேள்வித் தாள் பிரச்சினையில் சிபிஎஸ்இ
நடந்துகொண்ட விதம் நிச்சயம் பொறுப்பற்றதனமே. நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ, தாங்கள் சிறப்பான
மொழிபெயர்ப்பாளர்களையே நியமனம் செய்ததாகவும், அதற்குமேல் அதில் பிரச்சினை இருந்தால்
தங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்றும் கூறி இருக்கிறது. இது இத்தனை எளிதாகக் கடந்து
செல்லவேண்டிய விஷயம் அல்ல.
சிபிஎஸ்இயின் பாடத்திட்டப்படியான புத்தகங்கள் தமிழில் இல்லை
என்பது உண்மைதான். ஆனால் ஆங்கிலத்துக்கு இணையான தமிழ் வார்த்தைகள் தொடர்ச்சியாகத் தமிழ்ப்பாடத்திட்டப்படியான
அரசுப் பாடப் புத்தகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த விஷயத்தில் தமிழக அரசுகள்
தொடர்ச்சியாகப் பல காலங்களாக மிகக் கவனமாகவே செயல்பட்டு வருகின்றன. சிபிஎஸ்இ மாணவர்கள்
மட்டுமே தேர்வு எழுதப்போவதில்லை என்னும் நிலையில், தமிழில் தேர்வை எதிர்கொள்ளப் போகிறவர்கள்
அரசுப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்னும் நிலையில், மொழிபெயர்ப்புக்கான சரியான அறிவியல்
வார்த்தைகளை அரசுப் பள்ளிப் பாடப்புத்தகங்களில் உள்ளவற்றை ஒப்புநோக்கித் தேர்ந்தெடுத்திருக்கவேண்டும்.
மிகச் சிறிய விஷயம் இது. இதைச் செய்திருந்தால் இந்தியா முழுமைக்குமான தலைக்குனிவை சிபிஎஸ்இ
சந்திக்க நேர்ந்திருக்காது.
ஆங்கிலம் மற்றும் மண்டல மொழிகளில் கேள்விகள் தரப்பட்டிருக்கின்றன
என்றாலும் இறுதியான முடிவு ஆங்கிலக் கேள்வியே என்ற ஒரு பொறுப்புத் துறப்பை ((Disclaimer)
சிபிஎஸ்இ செய்திருக்கிறது. “மொழிபெயர்ப்பில் சந்தேகமான வார்த்தைகள் இருப்பின், அந்தக்
கேள்விகளின் பதில்களை ஏற்பதில் ஆங்கில வினாக்களின் பொருள்தான் முடிவில் ஏற்றுக்கொள்ளப்படும்.
தமிழில் தேர்வை எழுதும் மாணவர்கள், இதை உணர்ந்துகொள்ள வேண்டும்” என்கிறது `பொறுப்புத்துறப்பு!’
இதையும் ஏற்பதற்கில்லை. ஒன்றிரண்டு கேள்விகள் என்றால் சமாதானம் கொள்ளலாம். 49 கேள்விகள்
என்றால் அதை எப்படி எடுத்துக்கொள்வது. மொத்தம் 180 கேள்விகள், 720 மதிப்பெண்கள். இதில்
49 கேள்விகள், 196 மதிப்பெண்களில் குழப்பம் என்றால் அதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்.
49 கேள்விகளில் என்ன என்ன தவறுகள் நேர்ந்தன என்பதைச் சரியாக
அறியமுடியவில்லை. டெக் ஃபார் ஆல் இக்கேள்விகளின் பட்டியலை வெளியிட்டதாகச் செய்திகளில்
பார்க்கமுடிந்தது. ஆனால் ஒட்டுமொத்த கேள்விகளின் பட்டியலும் கைக்குக் கிடைக்கவில்லை.
டெக் ஃபார் ஆல் அமைப்புக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டேன். மடல் அனுப்பினேன்.
என்ன தேவைக்காக என்றும் என்னைப் பற்றிச் சொல்லுமாறும் கேட்டார்கள். என் ஜாதகத்தைத்
தவிர அனைத்தையும் அவர்களுக்குச் சொன்னேன். இதை அறிந்துகொள்ளவேண்டும் ஒரு முனைப்பில்
கேட்பதாகச் சொன்னேன். ஆனால் அவர்களிடம் இருந்து பதிலே இல்லை.
49 கேள்விகள் அனைத்துக்குமே ஏன் மதிப்பெண் தரவேண்டும் என்பதும்
கேட்கப்படவேண்டிய கேள்வியே. இந்த 49 கேள்விகளில் எவையெல்லாம் மாணவர்களைக் குழப்பும்
கேள்விகள் என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கு மட்டும் மதிப்பெண்கள் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கலாம்.
ஆனால் நீதிமன்றத்தின் நோக்கம், இது போன்ற ஒரு பொறுப்பற்ற செயலைச் செய்த சிபிஎஸ்இஐப்
பதற வைப்பது என்றே தெரிகிறது. அப்படி ஒன்று நடந்தால்தான் இனி எல்லாம் சரியாகச் செயல்படும்
என்று நீதிமன்றம் யோசித்திருக்கிறது. இனி வரும் காலங்களில் சிபிஎஸ்இ இத்தேர்வுகளை நடத்தாது
என்றும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
49 கேள்விகளின் பட்டியலில் உள்ள சில கேள்விகள் மட்டும் எனக்குக்
கிடைத்தன. இவற்றைப் பார்ப்பதற்கு முன்னர், என் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப்
பார்ப்பது, மேலதிகப் புரிதலைத் தர உதவலாம். நான் தமிழ் வழிக் கல்வியில் பயின்றவன்.
அரசுப் பள்ளியில் படித்தவன். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறும்
கனவில் தேர்வில் பங்கெடுத்தேன். உயிரியல் தேர்வின் கேள்வித் தாளின் முதல் பக்கத்திலேயே
ம்யூட்டேஷன் என்றால் என்ன என்றொரு கேள்வி இருந்தது. நான் உயிரியலில் மிக நல்ல மதிப்பெண்கள்
வாங்க நினைத்திருந்தவன். இந்தக் கேள்வி எனக்குப் பெரிய பதற்றத்தைத் தந்தது. ஏனென்றால்
ம்யூட்டேஷன் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. மரபணு மாற்றம் என்றோ மரபணுப் பிறழ்வு
என்றோ தூண்டப்பட்ட மரபணு மாற்றம் என்றோ படித்தேன். (இப்போது நினைவில்லை.) இன்னும் சில
கேள்விகள் இப்படி இருந்த நினைவு. தேர்வு முடிந்ததும் மாணவர்கள் அனைவரும் பேசிகொண்டது,
தவறாக இருந்த கேள்விகளைப் பற்றிய வருத்தத்தைத்தான். இதில் நீட் தேர்வில் பங்குகொள்ளும்
மாணவர்களின் வருத்தமும் பதற்றமும் எப்படி இருக்கும் என்று யூகிக்கலாம். எல்லாருமே தேர்வு
பெறப்போவதில்லை என்றாலும், இக்கேள்விகளால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மாணவர்களை நாம்
புறக்கணிக்கமுடியாது.
இதன் அடிப்படையில் 49 கேள்விகளின் மொழிமாற்றப் பிரச்சினையை
அணுகவேண்டும். கொஞ்சம் மாற்றி மொழிபெயர்த்திருந்தாலும் ஏன் மாணவர்களால் அதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை
என்பது, நம் பாடத்திட்டம் உருவாக்கும் மாணவர்களைப் பற்றிய வேறொரு பிரச்சினை. ஏன் சிபிஎஸ்இ
சரியான மொழிபெயர்ப்பை உருவாக்க முயற்சி எடுக்கவில்லை என்பதுதான் இப்போதைய பிரச்சினை.
தமிழ் அல்லாமல் பிறமொழிகளில் எப்படி இக்கேள்விகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன,
அங்குள்ள மாணவர்கள் எப்படி இதை எதிர்கொண்டார்கள், அங்குள்ளவர்கள் சார்பாக ஏன் வழக்குகள்
பதிவாகவில்லை என்பதெல்லாம் கூட நாம் யோசிக்க வேண்டியவையே.
என் பார்வைக்குக் கிடைத்த தவறான தமிழ்க் கேள்விகளை மட்டும்
இப்போது பார்க்கலாம். இவை இணையத்தில் கிடைத்த செய்திகளில் இருந்து சேகரிக்கப்பட்டவை.
செங்குத்து என்பது நேர்குத்து என்று கேட்கப்பட்டுள்ளது. செங்குத்து
என்றே நான் பள்ளிகளில் படிக்கும் காலம் தொட்டு 25 வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகிறது.
இதை நேர்குத்து என்று சொன்னால் மாணவர்களுக்குப் புரியும் என்று எதிர்பார்க்கமுடியாது.
சிறுத்தை என்பதற்குப் பதிலாக அதன் ஆங்கிலப் பெயரை அப்படியே தமிழில் சீத்தா என்று எழுதி
இருக்கிறார்கள். சிறுநீர் நாளம் என்று கேட்காமல் யூரேட்டர் என்று கேட்கப்பட்டிருக்கிறதாம்.
இயல்பு மாற்றம் என்பது இயல் மாற்றம் என்றும், தாவரங்கள் என்பது ப்ளாண்டே என்றும் கேட்கப்பட்டுள்ளன.
இறுதி நிலை என்பது கடை நிலை என்றாகியுள்ளது. புதிய அரிசி ரகம் என்பது புதிய அரிசி நகம்
என்று கேட்கப்பட்டுள்ளது. வவ்வால் என்பது வவ்னவால் என்று அச்சிடப்பட்டுள்ளது. பலகூட்டு
அல்லீல்கள் என்பது பல குட்டு அல்லீல்கள் என்றாகி உள்ளது. ஆக்டோபஸ் ஆதடபஸ் என்றாகி இருக்கிறது.
நீள பரிமாணங்கள் என்பது நீள அலகுகள் என்று வந்திருக்கிறது. விதை வங்கி வதை வங்கி
ஆகி இருக்கிறது.
இப்படியாகப் பல கேள்விகள் தவறாகவே கேட்கப்பட்டுள்ளன. டெக்
ஃபார் ஆல் 49 கேள்விகள் தவறு என்று பட்டியலிட்டாலும், 18 கேள்விகளை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம்
என்கிறார்கள் சிலர். ஆனால் உயர்நீதிமன்றம் கேள்விகளின் தவறுகள் எத்தகையவை என்பதற்குள்
போகவே இல்லை. உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சரியான ஒன்றே.
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் விவாதம் ஒன்றில் பங்கேற்ற
கோகுல ஸ்ரீனிவாஸ் இது தொடர்பான முக்கியான கருத்து ஒன்றை வெளியிட்டார். “இத்தீர்ப்பு
சரியான ஒன்றே. ஆனால் ஏன் நீதிமன்றம் இத்தீர்ப்பை முன்பே வெளியிட்டிருக்கக்கூடாது” என்பதுதான்
அவரது நிலைப்பாடு. உண்மையில் இத்தீர்ப்பு முன்பே வந்திருக்குமானால் பல குழப்பங்களைத்
தவிர்க்க அது உதவியிருக்கக்கூடும். ஆனால் ஏன் சிபிஎஸ்இ உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை
தரவரிசைப் பட்டியலை வெளியிடாமல் காத்திருக்கக்கூடாது என்னும் கேள்வியும் நியாயமானதுதான்.
சிபிஎஸ்இ தான் தவறு செய்ததாகவே நினைக்கவில்லை என்பதுதான் இதற்கான வருத்தத்துக்குரிய
பதில்.
நீட் தொடர்பாக ஏற்கெனவே பல பிரச்சினைகள் நிலவி வரும் சூழலில்
இப்பிரச்சினை இன்னும் சிக்கலைத் தீவிரப்படுத்தி இருக்கிறது. ஏற்கெனவே மெட்ரிகுலேஷன்
பள்ளிகளின் சேர்க்கை குறைந்து சிபிஎஸ்இ செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கி
இருக்கிறது. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் எல்லாமே தங்கள் வசம் சிபிஎஸ்இ பள்ளிகள் இருக்கவேண்டிய
அவசியத்தை உணர்ந்து அவற்றைத் துவங்கத் தேவையான முயற்சிகளை எடுக்கத் தொடங்கிவிட்டன.
நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையிலான புதிய பாடத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
இந்நிலையில் தமிழில் கேள்விகள் இப்படித்தான் இருக்கும் என்பது நீட் எதிர்ப்பாளர்களுக்கும்,
மத்திய அரசின் எதிர்ப்பாளர்களுக்கும் பெரிய வசதியாகப் போயிருக்கிறது.
நீட் தேர்வின் குழப்படிகளைக் களைவதில் ஆர்வம் காட்டுவதைவிடக்
கூடுதலாக, நீட் தேர்வு ஒழிப்பில் காட்டுகிறார்கள். இனி அது சாத்தியமில்லை என்னும் நிலையையும்
அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். எனவே மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வேண்டுமென்றே
வஞ்சனை செய்கிறது என்கிற பிரசாரத்தைத் துவங்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நீட்
தேர்வெழுத மாணவர்களுக்கு வேறு மாநிலங்கள் ஒதுக்கப்பட்டன என்ற பிரச்சினையிலும் இவர்கள்
இதையே முன்வைத்தார்கள். தமிழ்நாட்டை ஒழிக்க ஏன் மத்திய அரசு நீட் தேர்வில் பங்குபெறும்
ஆயிரம் மாணவர்களை மட்டும் குறி வைக்கவேண்டும் என்று இவர்கள் யோசிக்கவே இல்லை. இதன்மூலம்
தமிழ்நாட்டை என்ன செய்துவிடமுடியும்? தமிழில் தேர்வுக்கேள்விகள் இப்படி வந்திருப்பது
பெரிய துரதிர்ஷ்டம், அநியாயம். ஆனால் இதன் பின்னணியில் அலட்சியம் மட்டுமே இருக்கிறதே
ஒழிய தமிழ்நாட்டை ஒழிக்கவேண்டும் என்கிற எந்த ஒரு எண்ணமும் இருக்க வாய்ப்பில்லை.
மற்ற அரசுகளுக்கும் தற்போதைய மத்திய அரசுக்கும் உள்ள ஒரே
வித்தியாசம், தவறுகள் நேரும்போது அதைத் திருத்திக்கொள்ள எடுக்கும் நடவடிக்கைதான். இதைப்
பற்றி ஏன் மத்திய அரசு பேசுவதில்லை என்ற கேள்விகள் பொருளற்றவை. பேச்சைக் காட்டிலும்
செயல்பாடும் தீர்வுமே முக்கியம். இனி சிபிஎஸ்இ நடத்தப்போவதில்லை, நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸிதான்
நடத்தும் என்பது, இப்பிரச்சினைகளை ஒட்டி மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு ஒரு முன்னகர்வு.
அது எப்படி இயங்கும், அது சிபிஎஸ்இயில் இருந்து எப்படி வேறுபட்டிருக்கும் என்பதெல்லாம்
இனிதான் நாம் பார்க்கவேண்டியது. ஆனால் நிச்சயம் காங்கிரஸ் அரசைப் போல ஒரு கண் துடைப்பு
அறிவிப்பாக இது இருக்காது என்று நம்பலாம். சிபிஎஸ்இ எதிர்ப்பு மற்றும் மத்திய அரசு
எதிர்ப்பு இரண்டையும் ஒன்றாக்கி, வெகுஜன மக்கள் மத்தியில் மத்திய அரசு எதிர்ப்புக்கான
விதையை ஊன்றுவதுதான் சிலரின் நோக்கம். இதிலிருந்து விடுபட்டு தமிழக மாணவர்களுக்கு எது
தேவை என்பதை மட்டும் யோசிப்பதுதான் சரியான நிலைப்பாடு.
உச்சநீதி மன்றத்தில் வரும் தீர்ப்பு இவ்விஷயத்தில் ஒரு முடிவைக் கொண்டு வரலாம். அதை ஒட்டி இன்னும் குழப்பங்கள் தமிழ்நாட்டில் அரங்கேறலாம். ஆனால் இனி வரும் தேர்வுகளில் இப்படியான ஒரு அலட்சியத்தை எந்த அமைப்பும் கைக்கொள்ளாது என்பதை இப்பிரச்சினை உறுதி செய்திருக்கிறது என்றே நம்புகிறேன்.
கச்சத் தீவு பிரச்சினையில் அன்றைய
மத்திய அரசின் நிலைப்பாட்டை பாராளுமன்றத்தில்
கண்டித்த முதல் தலைவர் வாஜ்பாயி
என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் புகழுரை
தீட்டியிருக்கிறது. கொள்கையளவில் வேறுபட்டவர் என்றாலும் அனைவர்
உள்ளங்களிலும் அங்கீகரிக்கத்தக்க ஒரு தலைவர் என்ற இடத்தைப் பிடித்திருக்கிறார் வாஜ்பாயி.
இத்தனைக்கும் கடந்த பதினைந்து வருடங்களாக அவர் அரசியல் வெளியில் முற்றிலுமாக இல்லை.
இந்தியாவின் ஒவ்வொரு
மாநிலத்தின் மிக முக்கியமான பிரச்சினை எது, எது அந்த மக்களின், இனத்தின் உணர்வுசார்ந்த
உண்மையான பிரச்சினை என்பதையெல்லாம் வாஜ்பாயி அறிந்திருந்தார். மதுரையில் நடந்த டெசோ
மாநாட்டில் அவர் கலந்துகொண்டது இன்று வரை அனைவரையும் நினைவுகூர வைக்கிறது.
காங்கிரஸ் எத்தனையோ
மாநில அரசுகளைக் கலைத்திருக்கிறது. ஆனால், எவ்வளவோ நெருக்கடியை ஜெயலலிதா உருவாக்கியபோதும்,
தன் வாழ்நாளில் தான் சந்தித்திருந்தாத சிறுமைகளைச் சந்திக்கவேண்டி வந்தபோதும், வாஜ்பாயி
தமிழ்நாட்டில் திமுக அரசைக் கலைக்க மறுத்தார்.
1994ல் காஷ்மீர்
பிரச்சினையை ஒட்டிய ஒரு தீர்மானத்தை ஐநாவில் பாகிஸ்தான் கொண்டு வரவிருக்கிறது என்ற
செய்தி இந்தியாவுக்குக் கிடைத்தது. இந்தியாவின் நிலையை ஐநாடில் உறுதிபட எடுத்துரைக்க
அன்றைய பிரதமர் நரசிம்மராவ் வாஜ்பாயி தலைமையில் ஒரு குழுவை ஜெனீவாவுக்கு அனுப்பினார்.
தனக்குத் தரப்பட்ட மிகப்பெரிய பொறுப்பைச் சாதித்தார் வாஜ்பாயி. தீர்மானம் வந்தால்,
தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலை உறுதியாகிவிடும் என்று பயந்துபோன பாகிஸ்தான்
அந்தத் தீர்மானத்தைக் கொண்டு வரவே இல்லை.
பொக்ரான் அணுகுண்டுச்
சோதனை அனைத்து உலக நாடுகளையும் இந்தியாவை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தது. இத்தனை
பரந்து விரிந்த நாட்டில் ஒரு ரகசியத்தைக் காப்பாற்றி இத்தனை பெரிய நிகழ்வைச் சாதித்துவிட
முடியும் என்று இந்தியாவின் சாதாரண மக்கள் மட்டுமல்ல, உலக நாடுகளும் பெரியண்ணன் நாடும்கூட
நம்பியிருக்கவில்லை. அப்படி ரகசியமாக புத்தர் சிரித்தபோது உலக நாடுகள் ஆச்சரியத்தில்
வாய்பிளந்தன. ஒவ்வொரு இந்தியன் உள்ளத்தில் எதோ ஒரு பெருமிதம். இதன் தொடர்ச்சியாக இந்தியா
எதிர்கொள்ளப் போகும் பொருளாதாரத் தடைகளை எல்லாம் மீறி அனைவர் உள்ளத்திலும் என்னவோ தாங்களே
சாதித்து விட்டது போன்ற உணர்ச்சி.
இந்த உணர்ச்சியின்
உளவியல் முக்கியமானது. தொடர்ச்சியாக மிக பலவீனமான பிரதமர்களையே கண்டுவிட்ட இந்தியா,
தன்னளவில் மிகவும் தன்னம்பிக்கையுள்ள, தேசத்தின் மீது பெரும் அபிமானமுள்ள, இந்தியாவின்
எந்த ஒரு மாநிலத்தின் மீதும் அக்கறையுள்ள ஒரு தலைவனைக் கண்டுகொண்டது என்ற உணர்ச்சிதான்
அதன் உண்மையான காரணம்.
கார்கில் போரை வாஜ்பாயி
அரசு கையாண்ட விதம் மிக முக்கியமானது. லாகூர் பயணத்துக்குப்பின் இந்தியாவின் நல்லெண்ணத்துக்கு
பாகிஸ்தான் செய்த அநியாயத்துக்கு வாஜ்பாயி தக்க பதிலடி கொடுத்தார். சமாதானம் என்றால்
சமாதானம், போர் என்றால் போர் என இந்தியா எதற்கும் தயார் என்ற செய்தி கார்கில் வெற்றி
வழியே உலகிற்குச் சொல்லப்பட்டது.
நாற்கரச் சாலைத்
திட்டம் இந்தியாவை சாலை வழியே ஒருங்கிணைத்தது. இன்றும் இச்சாலைகளில் பயணம் செய்பவர்கள்
வாஜ்பாயி பெயரைக் குறிப்பிடுவதைக் கேட்கலாம். தொலை நோக்கு என்பது ஒரு அரசியல் தலைவரின்
அடிப்படைத் தேவை. இது இல்லாத சமயங்களில்தான் இந்தியா தள்ளாடுகிறது. இந்தியாவின் இத்தள்ளாட்டத்தைப்
போக்கிய பாரதத் தாயின் பிதாமகன் வாஜ்பாயி.
ஒப்பற்ற ஒரு தலைவரை, ஒரு மாபெரும் நிகழ்வை நாம் இழந்திருக்கிறோம். வாஜ்பாயி தனக்களிக்கப்பட்ட வாழ்வை மிக அர்த்தம் மிகுந்ததாக்கியிருக்கிறார். கட்சி ரீதியாகவும் சரி, ஒரு தலைவர் என்ற நிலையில் இந்தியாவுக்காகவும் சரி, அவர் செய்துவிட்டுச் சென்றிருக்கும் சாதனைகள் என்றென்றும் நினைவுகூரத்தக்கவை. வாஜ்பாயி என்ற அந்த சாதனையாளருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.
வாட்ஸப்பை கணினியில் பார்ப்பது எவ்வளவு உதவிகரமானது என்று அலுவலகத்தில் வேலையில் இருப்பவர்களுக்குப் புரியும். இதேபோல் மெசேஜையும் (எஸ் எம் எஸ்) பார்க்க வழி உள்ளதா என்று பீராய்ந்திருக்கிறேன். டெக்ஸ்டாப் ஆப் ஒன்றில் அந்த வசதி இருந்தது. ஆனால் அது சில சமயம் வேலை செய்யும். சில சமயம் ஏழரையை இழுக்கும்.
வாட்ஸப் மற்றும் மெசேஜ் – இரண்டும் கணினியிலேயே பார்க்க முடிந்துவிட்டால் வேலை செய்வது மிக எளிது. பதில் அளிக்க, பெரிதாக விரைவாக டைப் செய்ய, காப்பி பேஸ்ட் செய்ய எனப் பல வசதிகள் இதில்.
நௌகாட் இந்த வசதியைக் கொடுத்திருக்கிறது என நினைக்கிறேன். மற்ற ஆண்ட்ராய்ட் வெர்சன்களில் இவ்வசதி உள்ளதா என்பது தெரியவில்லை. இப்போது மெசேஜையும் வாட்ஸப்பைப் போலவே கணினியில் பார்க்கமுடிகிறது. அட்டகாசமான முன்னேற்றம் இது. தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். எஸ் எம் எஸ்–> செட்டிங்க்ஸ் —> வெப் –> ஸ்கேன் கோட். அவ்ளோதான். https://messages.android.com/என்ற இடத்தில் உங்கள் மெசேஜ் வரும்.
பின்குறிப்பு: இது இப்பதான் தெரியுமா, எவ்ளோ வருஷமா தெரியும் என்பவர்கள், மறக்காமல் ஷேர் செய்யவும். 🙂
கடைக்குட்டி சிங்கம் என்றொரு கொடுமையைப் பார்த்தேன். தலையெழுத்து. ஒரு காட்சி கூடவா நல்லா இருக்காது? மாயாண்டி குடும்பத்தார் போன்ற இன்னொரு கொடுமை இது. இதில் விவசாயி காளை ஆணவக் கொலை என்றெல்லாம் அங்கங்கே தூவல் வேறு. ஜாதியைத் திட்டிக்கொண்டே அவங்களும் பெரிய தலைக்கட்டு என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். வளவள என்று காது தொங்கும் அளவுக்கு வசனம். கண்றாவி.
கருணாநிதியின் மறைவை ஒட்டிப் பல ஹிந்து ஆதரவாளர்களும் ஹிந்துத்துவ ஆதரவாளர்களும் தொடர்ச்சியாகத் தங்களது விதவிதமான கருத்துக்களையும் விதவிதமான கோணங்களையும் நிலைப்பாடுகளையும் பகிர்ந்த வண்ணம் இருக்கிறார்கள். இவர்கள் கருணாநிதியை இத்தனை நாள் எப்படிப் புரிந்துகொண்டார்கள் என்பதையும் இப்போது விதவிதமாக எப்படியெல்லாம் புரிந்து கொள்ளப் பார்க்கிறார்கள் என்பதையும் ஒப்புநோக்கும்போது பெரிய அதிர்ச்சியும் அதைவிடப் பெரிய ஆச்சரியமும் ஒருங்கே உண்டாகிறது.
பொதுவாகவே நாம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுச் சிந்திப்பவர்களே – என்னையும் சேர்த்து. அது ஜெயலலிதா மரணம் என்றாலும் கருணாநிதியின் மரணம் என்றாலும் நாம் அவர்களது பழைய வரலாற்று நிலைப்பாடுகளையெல்லாம் மறந்துவிட்டு, நம் கண்ணெதிரே நிகழும் மனிதன் ஒருவனின் மரணத்தை மட்டுமே சிந்திக்கத் தலைப்பட்டு விடுகிறோம். ஆனால் ஒரு அரசியல் நிலைப்பாடுள்ள, அரசியலில் சாதித்த மனிதனின் மரணம் என்பது நாம் எப்போதும் காணும் ஒரு சாதாரண மனிதனின் மரணத்துடன் ஒப்பிடத் தகுந்தது அல்ல.
எந்த ஒரு மரணமும் வருத்தப்பட வேண்டியதுதான். எந்த ஒரு மனிதனின் மரணமும் அஞ்சலி செலுத்தப்பட வேண்டியதுதான். ஆனால் அந்த அஞ்சலியின் பின்னால் ஒளிந்துகொண்டு நாம் புதிய புதிய கருத்துக்களை அந்த அரசியல்வாதியின் மீது ஏற்றி வைப்பது சரியானதல்ல. நம் வீட்டோடு இருக்கும் ஒருவரின் மரணத்தை ஒட்டி அவர் தனிப்பட்ட மனிதர்களுக்கு மட்டுமே செய்த தீமைகளை மறப்பது வேறு. அவர் கொடுத்த பல துன்பங்களை மறப்பது வேறு. ஆனால் ஒரு சமுதாயத்திற்கு ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்த அரசியல்வாதியை நாம் இப்படி அணுகிவிட முடியாது. அணுகக்கூடாது.
இன்று சமூக வலைத்தளங்களில்நாம் செய்வதெல்லாம் என்ன என்று கவனித்துப் பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளது. தனிப்பட்ட ஆன்மீக ஹிந்துக்கள் மட்டுமே இப்படி யோசித்தால் கூட அதில் உள்ள உணர்ச்சிப் பெருக்கைப் புரிந்துகொண்டு விட முடியும். ஆனால் நல்ல அரசியல் முதிர்ச்சி பெற்ற ஹிந்துத்துவ ஆதரவாளர்கள்கூட, இத்திக்கில் இதயத்தால் மட்டும் யோசிப்பது அதிர்ச்சியாக உள்ளது.
விதவிதமான கற்பனைகளை கருணாநிதியின் மீது ஏற்றி வைக்கப் படாதபாடு படுகிறார்கள். அவர் ஹிந்துக்களின் ஆதரவாளர் என்கிறார் ஒருவர். அவர் பிராமணர்களுக்குத் தீமை பெரிதாகச் செய்யவில்லை என்கிறார் இன்னொருவர். ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டால் கருணாநிதி எவ்வளவோ மேல் என்கிறார் வேறொருவர். பொதுப்புத்தி ஒன்றைச் சிந்தித்து, அதே வழியில் நாமும் சிந்திப்பது என்பது ஒரு பழக்கம். ஒரு வகையில் நோய். இந்த நோய் பீடிக்கப்பட்டு, இப்படி யோசிக்கத் துவங்குகிறார்கள். ஒரு புதிய கருத்தை திடீரென அடைந்து, அதை ஒட்டி இவர்கள் பெரும் மகிழ்ச்சி கொள்கிறார்கள். தொடர்ச்சியாக, தாங்கள் நினைத்த கருத்துக்கு வலுச்சேர்க்கும் மேலதிகக் கருத்துக்களை எழுதி எழுதிச் சேர்கிறார்கள். இதுதான் பிரச்சினை.
கருணாநிதி ஹிந்து ஆதரவாளர் என்று சொல்ல உண்மையில் ஒருவர் கூச வேண்டும். கருணாநிதி பிராமணர்களுக்கு அத்தனை தீமை செய்யவில்லை என்று எழுத ஒருவர் நாண வேண்டும்.
கருணாநிதி இறந்த சமயத்தில் நான் இதைச் சொல்வது அவரை அவமதிப்பது செய்வதற்காக அல்ல. மாறாக அவர் இத்தனை நாள் என்ன அரசியல் செய்தாரோ அதை மீண்டும் நினைவுறுத்தும் விதமாக மட்டுமே. அதுவும் கூட கருணாநிதியைப் பாராட்ட திடீரெனத் தலைப்பட்டிருக்கும் இந்துத்துவ மக்களுக்காகத்தான்.
கருணாநிதி நல்ல தந்தை நல்ல மகன் என்றெல்லாம் யோசிக்கத் தலைப்படுகிறார்கள். கருணாநிதி மரியாதை நிமித்தம் சந்தித்த இந்துத் தலைவர்களை ஒட்டி யோசிக்கிறார்கள். ஏன் அதை அவர் வெளிப்படையாக ஒத்துக்கொள்ளவில்லை என்கிற பிரச்சினை இத்தனை நாள் அவர்களுக்குள் இருந்தது. ஆனால் கருணாநிதியின் மறைவையொட்டி அதை மறந்துவிட்டு அவர் ஹிந்து ஆன்மிகத் தலைவர்களைச் சந்தித்ததையே பெரும் பேராக எண்ணிப் பூரிப்பது தேவையற்ற செயல். உண்மையில் கருணாநிதியின் சந்திப்பில் எப்பொருளும் நமக்கு இல்லை.
என்றும் கருணாநிதி தன்னை ஹிந்து எதிர்ப்பாளராகவும் இந்துத்துவ வெறுப்பாளராகவும் பிராமணக் காழ்ப்பாளராகவும் மட்டுமே தன் அரசியலை வடிவமைத்துள்ளார். இந்தச் சமயத்தில் நாம் இதையெல்லாம் மறந்து விட வேண்டியதில்லை. ஜெயலலிதாவை எதிர்க்க கருணாநிதியை நம்மவராக்கத் தேவையே இல்லை. கருணாநிதி எதிர்ப்பும் ஜெயலலிதா எதிர்ப்பும் – கருணாநிதியும் ஜெயலலிதாவும் மறைந்துவிட்ட நிலையில் – ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவை.
இதன் இன்னொரு பக்கத்தையும் சொல்ல வேண்டி உள்ளது. இதையெல்லாம் மனதில் கொண்டு கருணாநிதி இறந்த இச்சமயத்தில் அவர் மீது அவதூறுகளைப் பரப்புவது சரியல்ல. என் நோக்கம் அதுவல்ல. சில மிகத் தரக்குறைவான பதிவுகளைப் பார்க்கிறேன். அது தேவையற்றது. நம் எதிர்ப்பு கருத்துக்களோடுதான், தனிப்பட்ட வகையில் அல்ல. நாம் கருணாநிதியைப் பற்றி விமர்சிக்க இன்னும் நமக்குக் காலம் உள்ளது. இதற்கு முன்னரும் காலம் இருந்தது. எனவே கருணாநிதி மறைந்திருக்கும் செய்தியால் திமுகவினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாடி இருக்கும் இந்நேரத்தில் நாம் நம் தீவிரமான விமர்சனங்களைச் சொல்ல வேண்டியதில்லை. ஹிந்துத்துவர்கள் அவரைப் பாராட்ட துவங்கியிருப்பது தேவையற்ற செயல். நான் இதைப்பற்றி இந்நேரத்தில் எழுத நினைத்தது ஒரே ஒரு காரணுத்துக்காகத்தான்.
நான் மதிக்கும் இந்துத்துவ சுய சிந்தனை உள்ள சிந்தனையாளர்கள் கூட எழுத ஆரம்பித்திருப்பது பெரிய ஏமாற்றத்தைத் தந்தது என்பது மட்டுமே அதற்கான காரணம். உதாரணமாக பி.ஆர்.மகாதேவன்.
நான் பி.ஆர். மகாதேவன் எழுதியிருக்கும் ஒரு நூலுக்கு மிக முன்னர் ஒரு முன்னுரை எழுதி இருக்கிறேன். அந்த நூலில் குறிப்பிட்டவை இன்றளவும் செல்லுபடியாகக்கூடியவையே. அதன் அடிப்படை இப்படி இருந்தது – பிஆர் மகாதேவன் சுயமாக சிந்திக்கத் தெரிந்த மிகச் சிலரில் ஒருவர். என் கணிப்பு இன்றளவும் அதுவேதான். நான் அதில் எள்ளளவும் மாறுபாடு கொள்ளவில்லை. அதேசமயம் மகாதேவனின் நிலைப்பாடுகள் மிகவும் சிக்கலானவை. பல கண்ணிகளில் காலூன்றி ஒரு விருட்சம் போல எழுபவை. அதனாலேயே அதில் அடிப்படைக் குழப்பங்கள் அதிகம். பல விஷயங்களைப் பல நிலைப்பாடுகளிலிருந்து ஒரே கட்டுரையில் சொல்ல முயல்வதால் கட்டுரை என்ன சொல்ல வருகிறது என்பதைத் தீர்மானமாக அணுகுவது மிகக் கடினம். மகாதேவனின் பாணி இது. பி.ஆர். மகாதேவன் மிக முக்கியமான ஹிந்துத்துவ சிந்தனையாளர், மிக வித்தியாசமான பார்வைகள் கொண்டவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
கருணாநிதி குறித்து அவர் எழுதியிருக்கும் அஞ்சலிக் குறிப்பு போன்ற ஒன்றை தமிழ்ஹிந்து வலைத்தளம் வெளியிட்டு இருப்பதுதான் வேதனை அளிக்கிறது. கருணாநிதி குறித்த மாயையை உருவாக்கி, அதை ‘அவர் நல்லவர் அல்ல ஆனால் நம்மவர்தான் (ஹிந்துதான்)’ என்ற ஒரு கருத்தை முன்வைத்து ஒரு அதிர்ச்சி மதிப்பீட்டை உருவாக்குகிறார். இதை வாசிப்பவர்கள் அதன் சட்டென ஒரு கருத்துக்காக ஆராதிக்கலாம். ஆனால் இதன் பின்னே உள்ள பொருள் உண்மையில் ஒன்றும் இல்லை. நல்லவர்தான் ஆனால் ஹிந்து என்று சொல்ல வருவதன் மூலம் நாம் தமிழ்ஹிந்து தளத்தில் என்ன சாதிக்கப் போகிறோம் என்று யோசித்திருக்க வேண்டும்.
அது மட்டுமல்ல, அந்தக் கட்டுரை இரண்டு முக்கியமான தவறுகளைச் செய்கிறது என்றே நினைக்கிறேன். (இப்போதைக்கு என்னால் இதை உறுதி செய்யமுடியவில்லை என்றாலும் கூட.) மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் சிலை கருணாநிதியால் நிறுவப்பட்டது என்பதை உறுதி செய்ய வேண்டும் என ஒரு நண்பர் கூறினார். இது கருணாநிதி வைத்தது அல்ல என்று குறிப்பிட்டார் அவர். இரண்டாவது அந்த நண்பர் குறிப்பிட்டது, கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் அடிப்படை எண்ணத்தை விதைத்தது ரானடே என்பதுதான். ஆனால் அந்தப் பெருமையும் கருணாநிதிக்கே தாரை வார்க்கப்பட்டுள்ளது. உண்மையில் ஒட்டுமொத்த கட்டுரையின் அடிப்படையுமே இந்த இரண்டு விஷயங்களில்தான் நிலைகொண்டுள்ளது. இந்த இரண்டு விஷயங்களுமே சரிதானா என்ற சந்தேகம் உள்ள நிலையில் அந்தக் கட்டுரை கட்டியெழுப்பும் கருத்துக்கள் ஆட்டம் காணுகின்றன.
ஒருவரின் மரணத்தின் போது அவரது நல்லதை மட்டுமே பேசுவது நம் மரபு. ஆனால் நாமாகவே நல்லதை அவர் மேல் கட்டி வைக்கத் தேவையில்லை. இதை புரிந்து கொண்டாலே போதும். இதுவே இக் கட்டுரையின் நோக்கமும் கூட. இந்த நேரத்தில் இதை எழுத நேர்ந்ததும் ஹிந்து நண்பர்கள் இதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக மட்டுமே.
கல்வெட்டாய்வாளர் ராமசந்திரன் அவர்கள் தரும் ஒரு குறிப்பு: மயிலை சமஸ்கிருதக்கல்லூரிக்கு எதிரிலுள்ள திருவள்ளுவர் சிலை1966ஆம் ஆண்டில் முதலமைச்சர் பக்தவத்சலம்,குடியரசுத்தலைவர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நிறுவப்பட்டது. வைகாசி அனுட நாள் திருவள்ளுவர் திருநாள் என அறிவித்து(அருகிலுள்ள திருவள்ளுவர் கோயிலில்600 ஆண்டுகளாகப்பின்பற்றப்படும் நாள் என்பதால்) அரசாணை வெளியிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கி நிறுவப்பட்டசிலை. கடற்கரையில் நின்ற வண்ணம் உள்ளசிலை1968ஆம் ஆண்டில் சிவாஜிகணேசனை மாதிரியாக வைத்து உலகத்தமிழ் ஆய்வுமாநாட்டையொட்டி அண்ணாவால் நிறுவப்பட்டது. வள்ளுவர்கோட்டத்திலுள்ளசிலை கருணாநிதியாரின் ஆலோசனைப்படி அமைக்கப்பட்டதென எண்ணுகிறேன்.