
ஒருத்தி திரைப்படம் நாளை (ஞாயிறு, 17.06.07 அன்று) இந்திய நேரம் மாலை 4.20க்கு பொதிகையில் ஒளிபரப்பாகிறது. இத்திரைப்படம் கி.ராஜநாராயணனின் சாகித்ய அகாடமி விருது பெற்ற ‘கிடை’ நாவலை மையமாக வைத்து இயக்கப்பட்டது. இயக்கம் அம்ஷன் குமார். இசை எல்.வைத்தியநாதன்.

இன்னொரு முறை பார்த்துவிட்டுத்தான் விமர்சனம் எழுதவேண்டும் என நினைத்திருந்தேன். இணையத்தில் தேடிப்பார்த்த வரையில் தமிழ் விமர்சனங்கள் என் கண்ணில் படவில்லை. அதனால் சிவாஜி பற்றி சில வார்த்தைகள்.
காலை 4.30 மணிக்காட்சி. திருவிழா போல கூட்டம். சரியான மழை. தியேட்டரின் முன் முழங்கால் அளவு தண்ணீர். சிவாஜி படம் பார்க்க போனதே ஒரு சிறந்த அனுபவமாக அமைந்துவிட்டது.

மழையில் நனைந்துகொண்டு, மின்னல் இடிக்கிடையில், காலை 3.30 மணிக்கு தூறலில் பைக் ஓட்டிக்கொண்டு சென்றது மறக்கமுடியாத அனுபவமே.
ஜெண்டில்மேன், இந்தியன், அந்நியன் கதையின் இன்னொரு பதிப்பு. கருப்புப் பண விவகாரம் என்று லேபிள் ஒட்டிக்கொண்டுவிட்டார்கள். மற்றபடி அதே கதை. லஞ்சம், லாவண்யம், ஊழல். அதை இந்த முறை எதிர்ப்பவர் ரஜினி. அவ்வளவுதான். ஒரு பெரிய கோடீஸ்வரன் எல்லா சொத்தையும் இழந்து கையில் ஒரு ரூபாயுடன் நடுத்தெருவுக்கு வந்துவிட்டால் அவன் எப்படி மீள்வான் என்பது இரண்டாவது முடிச்சு. ஒரு நல்ல விஷயத்திற்காக எதையும் செய்யலாம் என்கிற உலக ஹீரோக்களின் ஃபார்முலா. இதுபோதாதா ஒரு ரஜினி படத்திற்கு. இடைவேளை வரை மிகவும் ஜாலியாக செல்கிறது படம். ஒரு காட்சி ரஜினியின் கனவு, இன்னொரு காட்சி ரஜினியின் காதல் என்று மாறி மாறிக் காட்டுகிறார்கள். இடைவேளையில் ரஜினி எல்லா சொத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வருகிறார். அராஜக வழியில் எப்படி வில்லன்களை சமாளிக்கிறார் என்பது மீதிக்கதை. அதற்காக ரஜினி செய்யும் வேலை லாஜிக்கே இல்லாதது. லாஜிக் இல்லாத ஒரு விஷயத்தை அடிப்படையாக வைத்துகொண்டு, அதன் மேலே லாஜிக்கான விஷயங்களாக அடுக்கிவிட்டார்கள். யார் யார் எவ்வளவு கருப்புப் பணம் வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்களின் கார் டிரைவர்கள், எதிரிகளிடமிருந்து பெற்றுக்கொள்கிறார். மறுப்பவர்கள் ஆபிஸ் ரூமில் வைத்து விசாரிக்கப்படுகிறார்கள். இரண்டாவது முறை, ஒத்துக்கொள்ள மறுப்பவர்களிடம் ஆபிஸ் ரூம்ல வெயிட் பண்ணுங்க என்று ரஜினி சொல்லும்போது தியேட்டர் கலகலக்கிறது. தாசில்தார் என்று ரஜினி சொன்னதும் ஆபிஸ் ரூமிலிருந்து தாசில்தார் பறந்துவந்து விழுகிறார். ரஜினி படம் என்று ரசிகர்கள் சந்தோஷப்பட்டுப் போகிறார்கள். ஆபிஸ் ரூம் உங்களை அன்புடன் வரவேற்கிறது என்று விவேக் சொல்லி படம் முழுதும் ரஜினிக்கு பின்னாலேயே வருகிறார்.
முதல் பாதியில் ரஜினியின் ஹேர் ஸ்டைல் அவருடைய வயதைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது. இரண்டாவது பாதியில் ரஜினியின் இளமை (மேக்கப்) ஆச்சரியப்பட வைக்கிறது. ஏன் முதல் பாதியில் அப்படி ஒரு ஹேர் ஸ்டைல் என்பதே புரியவில்லை. படத்தின் ஓப்பனிங் பாடல் பெரிய ட்ரா பேக். அதிரடிக்கார மச்சான் பாட்டும் ஒரு கூடை சன் லைட்டும் படத்தின் உச்சபட்சமான கைத்தட்டலைப் பெறுகின்றன. சஹானா பூக்கள் என்கிற நல்ல பாடல் செட்டிங் போட்டுப் படமாக்கப்பாட்டிருக்கிறது.
ரஜினி இறந்த போதே கதை முடிந்திருந்தால் இது பேசப்படும் படமாயிருக்கும். ஆனால் ஓடியிருக்காது. அதுவே க்ளைமாக்ஸ் என்கிற உணர்வைத் தந்துவிட்டதால், அதற்குப் பின் வரும் இரண்டாவது க்ளைமாக்ஸ் காட்சி போரடிக்க வைக்கிறது. அதிலும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்த, மூன்று மிமிக்ரி கலைஞர்கள் வருகிறார்கள். நல்ல காமெடி. சாலமன் பாப்பையா, ராஜா, ரஜினி, ஷ்ரேயா, விவேக் வரும் காட்சிகள் லாஜிக் இல்லாமல் இருக்கின்றன என்றாலும் ரசிக்கும்படியாக இருக்கின்றன. முதல் பாதி முழுக்க ரஜினி பழக வாங்க என்று சொல்வது அசத்தல். சுஜாதாவின் வசனங்கள் (நீங்க ஆதி ஷேஷன்னா நான் அல்ஷேஷன்) ஒரு கமர்ஷியல் படத்திற்கு, அதுவும் ரஜினி படத்திற்கு எது தேவையோ அதைத் தருகிறது. சுமன் எடுபடவில்லை. ஏ.ஆர். ரகுமானின் பாடல்களின் தரம், குறிப்பாக ஒரு கோடி சன் லைட், அதிரடிக்கார மச்சான், உச்சம்.
கண்டிப்பாக கலெக்ஷனை அள்ளும். அதில் சந்தேகமே இல்லை.
95 ஆண்டுகள் வாழ்ந்த ஒரு மனிதரின், தமிழகம் பல்வேறு வகைகளில் இன்னும் நினைவு வைத்திருக்கும், இன்னும் விவாதித்துக்கொண்டிருக்கும், இன்னும் விமர்சனம் செய்துகொண்டிருக்கும் ஒரு மனிதரின் வாழ்க்கையைப் படமாக எடுப்பதில் உள்ள சிக்கல் புரிந்துகொள்ளக்கூடியதே. இந்த சலுகையையும் மீறி மிக மோசமாக எடுக்கப்பட்டிருக்கிறது பெரியார் திரைப்படம். ஞானசேகரனுக்கு ஒரு படத்தின் அடைப்படைக்கூறுகள் கூடத் தெரியாதோ என்கிற எண்ணத்தை ஏற்படுத்திவிடுகிறது படத்தின் வடிவம். துணுக்குத் தோரணங்களால் அமையும் ஒரு சராசரி தமிழ் நகைச்சுவைப் படம் போல, துணுக்குக் காட்சிகளில் ரொப்பப்பட்ட படமாக பெரியார் திரைப்படம் அமைந்துவிட்டது மிகப்பெரிய துரதிர்ஷ்டம்.

படத்தில் எந்தவொரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்கும் தொடர்பே இல்லை. வானொலி நாடகங்கள் போல எல்லாவற்றையும் வசனத்தில் சொல்கிறார்கள். அதோ சுப்ரமணியே வந்துட்டாரே, தங்கச்சி செத்துப்போனாலும் தங்கச்சி பொண்ணுக்கு நல்லா கல்யாணம் பண்ணனும்னு, ராமாம்ருதம்மா வாங்க என்று கதாபாத்திரங்கள் வசனங்கள் பேசி படத்தை நாடகமாக்கியிருக்கிறார்கள். சத்யராஜ் ஜோதிர்மயி தவிர மற்ற எல்லா நடிகர்களும் படம் நெடுக எதையோ யோசித்துக்கொண்டே நடிக்கிறார்கள். அதிலும் அண்ணாவும் வீரமணியும் மணியம்மையும் சதா எதையோ யோசித்துக்கொண்டே இருக்கிறார்கள். மணியம்மையின் கதாபாத்திரம் தாய் போன்ற கதாபாத்திரம் என்று சொல்லப்பட்டிருக்கும் போல. எப்போதும் கனிவை கண்வழியே கொண்டு வந்து கொட்டிக் கொட்டி அன்பையும் நெகிழ்ச்சியையும் ஒழுக விடுகிறேன் என்று பயமுறுத்திவிடுகிறார். ஜோதிர்மயியின் திறமைக்கு காட்சிகள் மிகக்குறைவு.
தேவையற்ற விஷயங்கள் அளவுக்கு அதிகமாக வலியுறுத்தப்படுகின்றன. பெரியாரை முன்னிறுத்த வேண்டிய விஷயங்கள் பல இருக்க, அவர் குளிக்க விரும்பாத விஷயம் நான்கு முறை குறிப்பிடப்படுகிறது. பெரியார் பாட்டுப்பாடி ஆட்டம் ஆடுகிறார். கடவுள் உலகத்தைப் படைச்சான் பாடலுக்கே நான் அதிர்ந்துபோனபோது, ஜோ ஜோ சந்தா என்று ஜேசுதாஸ் பாட பெரியார் நடிகர் சிவாஜி கணக்கில் நடந்துபோகும்போது, ஞானசேகரன் பெரியாரைத் தாக்கப் படம் எடுத்தாரோ என்கிற சந்தேகம் வந்துவிடுகிறது. கருணாநிதி, அண்ணா, எம்.ஜி.ஆர். வருகிறார்கள் போகிறார்கள். அண்ணா ஏன் அவ்வளவு யோசித்து யோசித்துப் பேசுகிறார் எனத் தெரியவில்லை. கருணாநிதி அண்ணாவையே முறைத்துப் பார்ப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுவிட்டது எனக்கு. ஏனென்று தெரியவில்லை. அண்ணா, கருணாநிதியைக் காண்பித்துவிட்டு எம்.ஜி.ஆரைக் காண்பிக்காமல் விட்டால் அரசியல்வாதிகளுக்கு யார் பதில் சொல்வது. எம்.ஜி.ஆர் வரும் காமெடிக் காட்சியும் உண்டு. 95 லட்ச ரூபாய் கொடுத்ததற்காக, கடைசியில் கருணாநிதியுடன் படத்தை முடித்துவிட்டார்கள் போல.
எல்லாரும் தமிழ் பேசுகிறார்கள். காந்திக்குக் கூட தமிழ்ப்பற்று அதிகம். அவரும் தமிழ்தான் பேசுகிறார். அவர் தமிழ், ஹிந்தி, ஆங்கில எனக் கலந்து எல்லாமும் பேசுகிறார். நல்ல காமெடியாக இருக்கிறது. ஆங்கிலேயர்கள் தமிழ் பேசுகிறார்கள் ஒரு பேரல்லல் படமாக வந்திருக்கவேண்டிய முயற்சி என்கிற எண்ணம் இயக்குநருக்குச் சிறிதும் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. திடீரென்று ரஷ்யப் பயணம். திடீரென்று பர்மா பயணம். அங்கு ஒரு நடிகர். அதுவும் யாருடைய கதாபாத்திரம். அம்பேத்கர். சும்மா பெரியார் வாழ்க்கையில் அவரும் உண்டு என்று சொல்வதற்கு ஒரு காட்சி. ஒரு கருத்து. இன்னொரு காட்சியில் பெரியார் செல்லும் வழியில் குயவர்கள், உழவர்கள், தாழ்த்தப்பட்ட சாதியினர். அனைவருக்கும் சேர்ந்து ஒரு கருத்து. ஒரே கருத்து. விவேக் சொல்வது போலத்தான் இருக்கிறது. பெரியாரைக் காணோம். ஸ்ர் ராகவேந்திரர் படத்தில் ரஜினி ஊர் ஊராகச் சென்று உபதேச மழையாகப் பொழிவார். இந்த விஷயத்தில் ஞானசேகரனுக்கும் எஸ்.பி.முத்துராமனுக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை.
பிராமண எதிர்ப்பாகவே சொல்கிறேமே என்று இயக்குநர் நினைத்தாரோ என்னவோ. தீடீரென்று மழை, பிராமணப் பெண், பிரசவம், பெரியாரின் மனித நேயம், பிரமாணர் மனம் நெகிழ்ந்து பெரியாரைப் பாராட்டும் இடம். மீண்டும் ஒரு நாடகத்தன்மை கொண்ட காட்சி. இப்படி ஒட்டுமொத்த படத்தையும் ஐந்து ஐந்து நிமிடக் காட்சிகளாகப் பிரித்துவிடலாம்.
ராஜாஜியைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். படத்தின் நகைச்சுவை மற்றும் வில்லன் கேரக்டர் கலந்த ரோல் அவருக்கு. என்றைக்கும் இளமையாக இருக்கிறார். வயதாகிப் பெரியார் படுக்கையில் கிடக்கும்போது பார்க்க வருகிறார் ராஜாஜி. எப்படி? மான்போலத் தாவி வருகிறார். பார்த்துவிட்டுப் போகும்போது வயதாகிவிடுகிறது போல. மெல்ல, நிதானித்து, நொண்டி நொண்டி நடக்கிறார். இப்படி இவர் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல காமெடிக் காட்சிகள் பல உள்ளன. ரயிலில் சந்திக்கும் பெரியார் அங்கிருந்து சென்றவுடன், இது வரலாறு படைக்கும் நிகழ்ச்சியாக இருக்கும் என்கிறார். இதன் மீது ஏற்றப்படும் கவனம் அடுத்த ஒரு காட்சியில் ஒரு நிமிடம் மட்டுமே வருகிறது. அண்ணா மேடையில் இந்த சந்திப்பைப் பற்றிக் கேள்வி எழுப்புகிறார். அத்துடன் அதன் தொடர்ச்சி அறுந்துபோகிறது. இப்படியே எல்லாக் காட்சிகளும் அமைந்து இருக்கின்றன.
தேவதாசி ஒழிப்பு முறையும் வைக்கம் போராட்டமும் படத்தில் காண்பிக்கப்பட்டிருக்கும் முறை, அது மிக எளிமையான ஒன்று என்கிற தோற்றத்தையே ஏற்படுத்துகிறது. இப்படி ஒரு இயக்குநரால் குழந்தைத்தனமாக இயக்கமுடியுமா என வியக்கவைக்கின்றன இக்காட்சிகள். அத்தனை மோசமான இயக்கம்.
ஆரம்பக் காட்சிகள் சத்யராஜுடன் இணைவதில் சிரமங்கள் இருந்தாலும், போகப் போக நாம் சத்யராஜை சுத்தமாக மறந்துவிடுகிறோம். ஒவ்வொரு காலகட்டத்திலும் சத்யராஜ் காட்டியிருக்கும் குரல் வேறுபாடுகள், உடலசைவின் நுணுக்கங்கள் பாராட்டத்தக்கவை. விருது வெல்ல வாய்ப்பிருக்கிறது. படத்தின் ஒரே ஆசுவாசமும் அவர்தான்.
இசையும் கேமராவும், சரியாகச் சொல்வதானால், தண்டம். ரஜினி படத்திற்கும் விஜய் படத்திற்கும் இசை அமைப்பதுதான் எளிது என்று வித்யாசாகர் புரிந்துகொண்டிருப்பார். ஆனால், அவரைச் சொல்லியும் குற்றமில்லை. எல்லாக் காட்சிகளுமே ‘முக்கியமான காட்சிகள்’ போல படமாக்கப்பட்டிருப்பதால், எல்லாக் காட்சியிலும் வயலினும் கையுமாக இசையமைக்க உட்கார்ந்துவிட்டார் போல. கேமரா எவ்வித வித்தியாசங்களையும் காட்ட முயற்சிக்காமல் சும்மா அப்படியே இருக்கிறது. கிணற்றிலிருந்து ஜோதிர்மயியைத் தூக்கிக்கொண்டு வரும் காட்சி மட்டுமே கொஞ்சம் கவனிக்கும் விதமாக இருந்தது.
பெரியாரின் அனைத்து விஷயங்களையும், அனைத்து நண்பர்களையும் ஒரு படத்திற்குள் நுழைத்துவிட வேண்டும் என்று இயக்குநர் முயற்சிக்கும்போதே படம் அதள பாதாளத்துள் வீழ்ந்துவிடுகிறது. ஒரு நல்ல கலைப்படத்திற்குத் தேவையான பொறுமையும் யதார்த்தமும் இல்லை. வசனங்களைப் பேச வைப்பதில் இருக்கும் சிரத்தை, காட்சியமைப்பிலும் நடிப்பிலும் காட்டப்படவில்லை. படம் என்பது காட்சி ரீதியானது என்கிற எண்ணத்தையெல்லாம் கைவிட்டுவிட்டு பேசிப் பேசியே கொல்கிறார்கள். எல்லாவற்றையும் வசனம் மூலமே சொல்கிறார்கள். ஒரு வரியில் சொல்லி, மற்றவற்றைக் காட்சியில் காண்பிக்கவேண்டிவற்றை, சுலபமாக வாயால் சொல்ல வைத்து விடுகிறார்கள். இது படத்தை மிகச் சாதாரணமாக்கிவிடுகிறது.
பெரியார் படத்தில் எதைச் சொல்லவேண்டும் என்பதை முதலிலேயே தீர்மானித்து, சிறப்பான திரைக்கதை மூலம் ஒரு நல்ல படத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால் இயக்குநருக்கு கவனம் எல்லாம் பெரியாரின் விசுவாசிகளைத் திருப்திபடுத்துவதிலேயே இருப்பது புரிகிறது. இதுவே படத்தின் தோல்விக்கு முக்கியக் காரணம். நிஜமான பெரியார் படத்தை யாராவது இனிமேல் எடுத்தால்தான் உண்டு.
பேராசிரியர் டி.கே.துரைசாமி என்பவர் பின்னாளில் நகுலன் என்றறியப்பட்டார். ஆங்கிலத்திலும் தமிழிலும் கவிதை, நாவல், விமர்சனம் என எழுதி நவீன இலக்கியவாதிகளில் முன்னோடியாகத் திகழ்ந்த நகுலன் நேற்றிரவு (17.05.07 இரவு) இயற்கை எய்தினார்.
நவீன கவிஞர்களில் முன்னோடிகளில் ஒருவராக அறியப்படும் நகுலன் ஆரம்ப காலங்களில் தன் கைச்செலவிலேயே சில கவிதைத் தொகுப்புகளைக் கொண்டுவந்தார்.
பின்பு காவ்யா பதிப்பகம் அவரது கவிதைகளின் மொத்தத் தொகுப்பை வெளியிட்டது. சில மாதங்களுக்கு முன்னால் “கண்ணாடியாகும் கண்கள்” என்ற அவரது கவிதைத் தொகுப்பையும் காவ்யா வெளியிட்டது. அதில் நகுலனின் புகைப்படங்கள் தரமான தாள்களில் அச்சிடப்பட்டிருந்தது. அதில் நகுலனை ஒரு குழந்தையாகக் கண்டடையலாம். அவரது புகைப்படங்களைக் கண்டபோது வயதானவர்கள் எல்லாருமே ஒரே போன்ற முகத்தை அடைந்துவிடுகிறார்கள் என்கிற என் எண்ணம் மேலும் வலுப்பட்டது.
கடந்த சில வருடங்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்த அவர், நினைவுகளின் குழப்பம், தீவிர இலக்கியவாதிகளுக்கு மனதளவில் ஏற்படும் நெருக்கடி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். திருமணம் செய்துகொள்ளாத நகுலனை அவரது அன்னையின் தோழியான பிருத்தா கடைசி காலங்களில் கவனித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
நகுலன் தன் வாழ்நாளில் பெற்ற ஒரே விருது விளக்கு விருது மட்டுமே.
நகுலனின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.
நகுலன் நினைவாக:
ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு
புகையிலை
வாய் கழுவ நீர்
·ப்ளாஸ்க்
நிறைய ஐஸ்
ஒரு புட்டிப்
பிராந்தி
வத்திப்பெட்டி/ஸிகரெட்
சாம்பல் தட்ட்
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு
அதிகமான விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் உள்ளான நகுலனின் கவிதை (கோட்ஸ்டாண்ட் கவிதைகள்):
ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன் என்றார்
எந்த ராமச்சந்திரன்
என்று நான் கேட்கவுமில்லை
அவர் சொல்லவுமில்லை
இன்னொன்று:
நில்
போ
வா
வா
போ
நில்
போ
வா
நில்
நில்போவா?
(இந்தக் கவிதை விருட்சத்தில் வெளியாகியது. இதைத் தொடர்ந்து பிரமிள் அவரது அதிரடிக் கவிதைகளில் நகுலனையும் அதை வெளியிட்ட விருட்சம் அழகிய சிங்கரையும் தாக்கி ஒரு கவிதையை எழுதினார்.நகுலனின் கவிதையைக் கண்டு கோபமடைந்த கும்பகோணன் நாராயணன் இதைக் கேள்விகேட்டு விருட்சத்திற்கு எழுதினார். அதை நகுலனின் அழகிய சிங்கர் தெரிவித்த போது, நகுலன், இக்கவிதைக்கு விளக்கமாக இரண்டு பக்கங்களில் எழுதி அனுப்பினாராம். அழகிய சிங்கர் சொன்ன தகவல் இது.)
தமது கவிதைகளில் அதிக அளவு கடவுளைப் பற்றியும் புராண இதிகாச மாந்தர்களைப் பற்றியும் நேரடியாகவும் குறியீடாகவும் நகுலன் எழுதியிருப்பதைப் பார்க்கமுடிகிறது. எப்படியும் ஏதோவொரு குறியீடு பெரும்பாலான கவிதைகளில் கவிஞனின் அனுமதியோடோ அனுமதியின்றியோ குடிகொண்டுவிடுகிறது.
இன்று நகுலன் கவிதைகளாகவே மிஞ்சுகிறார்.
வெறிச்சோடிக் கிடக்கும் மைதாங்களில்
சுருட்டி எறியப்பட்ட காகிதக் குப்பைகள் இல்லை
சிறுநீர் படாமல் கொஞ்சம் செழித்திருக்கிறது சிறுசெடி
மணிச்சத்தம் கேட்காமல்
‘மாசில் வீணையும்’ கேட்காமல்
நிம்மதியாய் உறங்கிக்கிடக்கிறது கடுவன் பூனை
வறாண்டாக்களின் தவம்
மாடிப்படிகளிலேறி
வகுப்பறைகளில் முடிவடைய
சொட்டும் தண்ணீரின் சத்தம்
பூதாகரமாகி குலுக்கிப் போடுகிறது கட்டடத்தை
குறுக்குச் சந்தில்
திருட்டுத்தனமாய் தம்மடித்த சரவணனும்
சத்துணவுக்கூடத்துப் பின்பக்கம்
அவசரம் அவசரமாய்
முத்தமிட்டுக்கொண்ட பிரான்சிஸும் கோமதியும்
பள்ளியை மறந்துவிட்டிருக்க
திறந்திருக்கும் ஜன்னல் காத்திருக்கிறது
காணாமல் போய்விட்டவர்களை எதிர்நோக்கி.
உடலின் மீது நகரும் உயிர்
வெளிச்சத்தின் மீது அலையும் இரவைப்போல
அங்குமிங்கும் அலைந்தது
உடலின் மீது உயிர்
காலிலிருந்து தலைக்குத் தாவி
வயிற்றில் நிலைகொண்டு
நெஞ்சில் நின்றபோது
திரையில் ஓடின
திக்கற்ற படங்கள்
கட்டவிழுந்து போன ஞாபகங்கள்
ஒரு திசையில் மனம் குவிக்க எண்ணி
சதா முயலும் கண்களில்
குத்திட்டு நின்றது
அறையின் ஒட்டுமொத்த வெளிச்சம்
தன்னிச்சையாய்
விரிந்து மூடும் கைகளில்
இளங்காலத்து மார்பின் மென்மை
நாசியெங்கும் பால் வாசம்
தொடர்ச்சி அறுந்து
சில்லிட்ட நொடியில்
வியாபித்தது காலம்
கேள்வி பதில்களற்ற உலகம்
பதில்களற்ற கேள்விகளாய் எடுத்து கோர்க்க
நீண்டு கொண்டே சென்றது மாலை
ஆதியில் ஒரே ஒரு கேள்வியில்தான் தொடங்கியது அம்மாலை
முடிவற்றுத் திரியும் கேள்விகளுக்குள்ளே
விரவிக் கிடந்த பதில்களைத் தேடியபோது
திறந்துகொண்டது பதில்களாலான உலகம்
ஆதியில் அங்கேயும் ஒரே ஒரு பதிலே இருந்தது
கேள்வியும் பதிலும்
தொடர்ச்சியாக
ஒன்றையொன்று நிரப்பிக்கொண்டபோது
ஒலி இழந்தன வார்த்தைகள்
வெறும் திட்டுத் திட்டாய்
தெறித்துவிழும் மௌனத்தில்
ததும்பும் சங்கேதங்களில்
முற்றுப்பெறுகிறது இவ்வுலகு
சிறிய திறப்பொன்றில் விழுவதாகவே தோன்றியது. ஆனால் அத்திறப்பு நீண்டு பெரும்பள்ளமாகி கீழே வெகு கீழே செல்ல நான் அலறத்தொடங்கினேன். கண் விழித்துப்பார்த்தபோது அறையெங்கும் பரவியிருந்த வெளிர் நீலநிறப் படர்வில் என் மகன் எவ்விதக் குழப்பமும் இன்றி இரண்டு கைகளையும் தலைக்குக் கொடுத்து ஒருக்களித்துப் படுத்திருந்தான். மனதை முட்டிக்கொண்டு வரும் பேரழுகை கூட அவனைப் பார்த்துக்கொண்டிருந்தால் வடிந்துவிடும் என்று நினைத்துக்கொண்ட காலங்கள் இப்போது ஏன் திரும்ப வருவதில்லை எனத் தெரியவில்லை. இன்னொரு மூலையில் மனைவி படுத்துக்கொண்டிருந்தாள். தூக்கத்தில் அவளது உதடுகள் லேசாகப் பிரிந்து பல் வெளியில் தெரிந்துகொண்டிருந்தது. எல்லா முகத்திற்குள்ளும் விகாரம் மறைந்துகொண்டிருக்கிறது. மூத்திரம் முட்ட, சத்தமின்றி எழுந்து சென்று மூத்திரம் கழித்துவிட்டு வந்தேன். பெரும்பள்ளத்தில் விழுந்த உணர்வு இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை. என்னை எப்போதும் இம்சிக்கும் நிழல் என்னைச் சுற்றி இருக்கிறதா என்று பார்த்தேன். வெளிர் நீலப் படர்வில் தொலைந்து போயிருந்த நிழல் கொஞ்சம் ஆசுவாசம் தந்தது. குளிர்ந்த நீரைக் கொஞ்சம் பருக அடி வயிற்றில் பரவிருந்த திகிலும் வெம்மையும் மேலும் தணிந்தது. படுக்கையில் கிடந்தபோது என்னைச் சுற்றிச் சலனங்கள் பேயாட்டம் போடுவதாக எழுந்த கற்பனையைப் புறந்தள்ளத் தள்ள அது மீண்டும் என்னைச் சுழன்று முடிவில் என் மேலேயே படர்ந்தது. இப்படி இன்று நேற்றில்லை, பல காலமாக நடந்துகொண்டே இருக்கிறது. இரவில் பெரும்பள்ளத்தில் வீழ்வதும், திடுக்கிட்டு எழுவதும் பின்னர் சலனங்கள் குதியாட்டம் போட்டு என்னைச் சூழ்வதும் என் மீது படர்வதும் எனக்கு அலுப்புதரும் விஷயங்களாகிவிட்டிருந்தன. ஒரு கட்டத்தில் அவ்வேதனைப்போதைக்கு அடிமையாகிவிட்டிருந்தேன். முதலில் நிழல் என்கிற பிரமையின் மீது எனக்கிருந்த பேரச்சம் பற்றியும் சொல்லவேண்டும். எப்போதும் என்னைத் தொடரும் நிழலில் நான் நிம்மதி இழந்துவிட்டிருந்தேன். இருளில் கூட என்னைத் தொடரும் நிழல் என்பதாக நான் செய்துகொண்ட கற்பனைகளிலிருந்து கொஞ்சம் வெளிவந்தபோது மீண்டும் திறந்துகொண்டது பள்ளம். நினைவுகளில் அழற்சியில் கண்ணுறங்கியபோது அப்பள்ளம் என்னை உள்வாங்கிக்கொண்டது.
இந்த முறை திடுக்கிட்டு எழவில்லை. மீண்டும் மீண்டும் பார்த்தேன், நிச்சயமாகத் தெரிந்தது நான் எழவில்லை என்று. ஆனால் நடந்துகொண்டிருப்பது கனவு என்றும் என்னால் நம்ப இயலவில்லை. ஏதோ ஒரு நிலையில் அகப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் தெளிவாகத் தெரிய, என் வீழிச்சியை, பெரும்பள்ளத்தை நோக்கிய என பயணத்தை, பல நாள் எதிர்நோக்கிய ஒரு நிகழ்வாக அனுமதித்தேன். அப்பள்ளம் அறையை ஒத்த ஓரிடத்தில் சட்டனெ முடிந்துகொண்டது. அடர்ந்த இருளும் நான் வந்த பாதை வழி கசியும் சிறிய வெளிர் நீலக்கதிரும் அன்றி அங்கு வேறொன்றுமில்லை. கண் அவ்விருளுக்குப் பழக்கப்பட சில நொடிகள் எடுத்தது. தட்டுத் தடுமாறி எழுந்து நின்றபோது ஒரு பொம்மையை ஒத்த உருவத்தின் கையின் மீது முட்டிக்க்கொள்ள, பின்னகர்ந்தேன். பெரும்பீதி ஒன்று என்னுள் எழுந்தடங்க யார் என்று கூவினேன். கசியும் விளக்கொளி மெல்ல பாதாளத்துள் பரவ – நான் அதைப் பாதாளமென்றே நம்பினேன் – என் கண்ணில் அலையும் திரையின் பின்னே சலனமற்றிருக்கும் ஒரு பொம்மையைக் கண்டேன். அதன் கையில்தான் மோதியிருக்கிறேன். அறையில் வெளிச்சம் கூடிக்கொண்டே வந்தது. கசியும் கதிரின் திறனைத் தாண்டியும் வெளிச்சம் பரவுவது எனக்குள் ஒருவித அச்சத்தைத் தோற்றுவித்திருந்தாலும் என்னால் விடுபடமுடியாத வசீகரமொன்றுள் அமிழ்வதைப் போல அக்கணமும் ஆகிக்கொண்டிருந்தது.
பொம்மையின் முகத்தை உற்று நோக்கினேன். அது பதிலுக்கு என்னை உற்று நோக்கியது போலிருந்தது. சில விநாடிகள் அப்படியே கழிய, சிறிய திடுக்கிடலில் கண்ணிமை மூடித் திறந்தேன். என் உணர்வுகள் அந்தப் பொம்மையினுள் கடத்தப்படுவதை உணர்ந்தேன். இந்த விசித்திரம் பற்றி நான் யோசித்துக்கொண்டிருக்கும்போதே, ஒரு அவசர கதியில் பொம்மை என்னை முழுவதுமாக எடுத்துக்கொண்டுவிட்டிருந்தது. நானசைய அசைய பொம்மை அசைந்தது. சலனமற்றிருந்த பொம்மை என்கிற எண்ணத்தைப் பொய்யாக்கியது பொம்மையின் கடுமை நிறைந்துவிட்ட முகம். அடிக்கடி என் மனைவி என் முகத்தில் குடியேறிக்கொண்டிருக்கும் கடுமையைப் பற்றிச் சொல்லிய வார்த்தைகள் நினைவுக்கு வர, என்னைப் பற்றிய பயம் என்னுள் எழுந்தது. இந்நிலையிலிருந்து விடுபடமுடியாதென்று மிகத் தெளிவாகவே தெரிந்தது. விடுபடமுடியாத வசீகரம். சந்தேகமேயில்லை. மௌனத்தின் வெளியில் பரவிக்கிடக்கும், பல்வேறு அர்த்தங்களைப் பிரதிபலிக்கும் வார்த்தைகளின் மீது நடந்தேன். பொம்மை தானிருந்த இடத்திலேயே இருந்து நடந்தது.
அது மிகச்சிறிய வயது. எல்லாரும் சிறிய வயதென்றே சொன்னார்கள். ஆனால் எனக்குள் அப்போதே கிளைபரப்பி விட்டிருந்த காமத்தின் சுவடுகள் பற்றி நினைக்கும்போது மிகவும் வெறுப்பாயிருக்கும். பொம்மையின் கண்களைக் கண்டேன். அதன் முகவிகாரம் மறைந்து மழலையை ஒத்த முகத்திற்கு மாறிக்கொண்டிருந்தது. அதன் கண்கள், எவ்விதக் களங்கமும் அற்ற, என் சிறுவயதின் கண்கள். பொம்மை என் சிறு வயதுப் பிரதிமையாக மாறிவிட்டிருந்தது. அதன் கைகள் பக்கத்திலிருக்கும் வேறொரு பொம்மையின் மார்பகங்களைத் தடவிக்கொண்டிருந்தது. பக்கத்திலிருந்த பொம்மை அதுவரை என் கண்ணுக்குத் தட்டுப்படாத மர்மம் விளங்கவில்லை. அது விமலாவின் பிரதிமையாகத்தான் இருக்கவேண்டும். விமலாவைப் பார்க்கும் துணிவு எனக்கில்லை. அவள் வயது அதிகமில்லை. ஆனால் என்னைவிட அதிகம்தான். விமலா ஏதேதோ முனகினாள். என் கைகளை அவளிஷ்டத்திற்கு அலைக்கழித்தாள். உச்சநிலை என்று இப்போது புரிகிற ஒரு வலிநிலையை அப்போது அடைந்தேன். இரண்டு நிமிடங்களில் விமலா என்னைப் புரட்டித் தள்ளிவிட்டு ஒன்றும் நடக்காத மாதிரி, அவள் வீட்டிற்குப் போய்விட்டாள். என் பிரதிமையின் முகம் விகாரம் கொள்ளத் தொடங்கியது. உண்மையில் அன்றிலிருந்தே எனக்குள் மெல்லப் பரவத் தொடங்கவிட்ட விகாரம் இப்போது கடும் வேகத்துடன் தனது பெருக்கத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. அது இன்னும் உச்சமடையுமே ஒழிய சிறுத்துப்போகாது. விகாரங்கள் குறைந்த நிலையிலேயே ஒரு குழந்தை பெற்றுக்கொண்டதை நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டேன். என் மகனை நினைத்ததும் பிரதிமையின் முகம் இளகத் தொடங்கியது. மீண்டும் மீண்டும் வம்படியாக என் மகனையே நினைத்தேன். உருகிக் கீழே விழுந்துவிடும் என்று எதிர்பார்த்த நேரத்தில், பிரதிமை தன்னிச்சையான எண்ணங்களை உள்ளெடுத்துக்கொண்டு, எனக்குள் அதன் நினைவுகளைக் கடத்தத் தொடங்கியது. இந்தத் தாக்குதலை நான் எதிர்பார்க்கவில்லை. மீண்டும் அந்த வசீகரச் சுழலில் நான் சிக்கிக்கொள்ள, என் எண்ணங்கள் கடும் சீற்றத்துடன் பாயத்தொடங்கின.
மதுரகாளியம்மனின் பெயரைக் கேட்டாலே உடலெங்கும் ஒரு உதறல் எடுத்து அலைந்த தினங்கள் நினைவுக்கு வந்தன. ஊரெங்கும் மதுரகாளியின் கோபமும் உக்கிரமும் பேச்சாக இருந்த நேரத்தில், அவளின் பெயரைக்கொண்ட ஒரு பெண்ணை எனக்குச் சம்மதம் பேச வந்தார்கள். அப்போது நான் வளர்ந்திருந்தேன். அப்படித்தான் எல்லாரும் சொன்னார்கள். ஆனால் என் கட்டுக்கடங்காத காமம் நான் வளர்ந்து பல நாளாகிவிட்டதை எனக்கு உணர்த்திக்கொண்டே இருந்தது. இரவுகளின் நீட்சி, பெண்ணின் நினைவு, ஏற்கனவே சில பெண்களுடன் எதிர்பாராமல் ஏற்பட்ட உடல் நெருக்கங்கள் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வர, நான் மதுரகாளியின் சிவப்பிலும் திளைத்துச் செழித்திருந்த உடல் மதர்ப்பிலும் கிறங்கிவிட்டிருந்தேன். எந்த யோசனைக்கும் இடமின்றி வேலைகள் மளமளவென நடக்க, நானும் மதுரகாளியும் மதுரகாளியம்மன் முன்னிலையில் மாலை மாற்றிக்கொள்ள, என் உடலெங்கும் அனல் பரவிக்கொண்டிருந்தது. மதுரகாளி சதா சிரித்துக்கொண்டிருந்தாள். அவள் உதடுகள் சிரிப்பில் அடையும் நெளிவுகள் என்னை இரவை எதிர்நோக்க வைத்தன. மதுரகாளி அலட்டிக்கொள்ளவே இல்லை. சதா சிரித்தாள். எனக்கு கொஞ்சம் கலவரமாகவும் சந்தேகமாகவும் இருந்தது. ஆனாள் அவளின் நிர்வாணத்தில் நிலைகுலைந்துபோனேன் என்றே சொல்லவேண்டும். அவள் உடலின் தினவும் என் கைக்கடங்காத மார்பகங்களும் செக்கச்செவேல் என்றிருக்கும் உடலும் என்னை வேறெதைப் பற்றியும் சிந்திக்கவே விடவில்லை. மீண்டும் மீண்டும் மீண்டும் அவளுடன் கடுமையான வேகத்தில் உடலுறவு கொண்டேன். அவள் அப்போதும் சிரித்தாள். இரண்டு நாள்களில் தெரிந்துவிட்டது. என் வீட்டுக்காரர்கள் அவள் வீட்டுக்குச் சென்று பெரும் யுத்தம் செய்துவிட்டு வந்தார்கள். மதுரகாளி சித்தம் கலங்கிப்போனவள் என்றார்கள். அவள் இந்த வீட்டில் இருக்கக்கூடாது, ஒரு முடிவு கட்டவேண்டும் என்றார்கள். கிடைத்த இரவுகளில் நான் சும்மா இருக்கவில்லை.
திடீரென பெரும் ஓலம் கேட்டு நான் பதறிக் கண்விழித்தேன். இப்போதும் அந்த ஓலம் என் காதுள் கேட்கிறது. என் பிரதிமையின் நெஞ்சு துடிக்கும் வேகம் கூடியிருந்தது. பிரதிமைக்கும் கேட்டிருக்கவேண்டும் அக்குரல். மதுரகாளியின் அம்மா என் வீட்டு வாசல் முன் நின்று அடிக்குரலிலிருந்து பெருங்குரல் எடுத்துக் கத்தினாள். “எம் பொண்ணு போயிட்டா. அவ சாமிடா. ஒனக்கு மதுரகாளியே கூலி கொடுப்பா,” என்று கூக்குரலிட்டாள். என் அடிமனம் சில்லிட்டது. சில நாள் முன்பு வரை நான் விடாமல் அனுபவித்த அந்த உடல் இன்று இல்லை. அவளைத் தூக்கிக்கொண்டு போகும்போது கணுக்கால் வரை விலகியிருந்த சேலையில் அவளது செக்கச்செவேல் என்கிற தேகம் முகத்தில் அடித்தது. சில இரவுகளில் இன்னும் அக்கால்கள் என் கனவில் வருவதுண்டு. அன்றே என் முகம் கடுமையான விகாரத்தைக் கொண்டிருக்கத் தொடங்கியிருக்கவேண்டும்.
ஊரெங்கும் என்னைக் குறை சொன்னார்கள். மதுரகாளியை நானே செய்வினை வைத்துக்கொன்று விட்டதாகச் சொன்னார்கள். அவள் நான்கு மாதம் கர்ப்பிணி, நிச்சயம் மதுரகாளி என்னைச் சும்மாவிடமாட்டாள் என்றார்கள். எந்த மதுரகாளியோ. தினுசு தினுசான கதைகள் பரவின. என் கையில் விஷத்தை வைத்துக்கொண்டு, நான் அதைச் சாப்பிடப் போவதாக நடித்ததாகவும் மதுரகாளி என்னைக் காப்பாற்றப்போவதாக நினைத்துக்கொண்டு அதைக் குடித்துவிட்டதாகவும் பரவிய கதை ஊரின் ஒவ்வொரு தெருவிலும் ஒலித்தது.
என் பிரதிமை கையில் விஷத்தை ஏந்திக்கொண்டிருப்பது போல் கையை நீட்டிக்கொண்டிருந்தது. வேகமாக ஓடிச்சென்று பிரதிமையின் கையைத் தட்டினேன். பிரதிமையின் முகம் மாறத்தொடங்கியது. பெண்மையின் சாயலில் அது மாற, ஒரு நிலையில் மதுரகாளியின் முகத்தை அடைந்தது. இரவின் கருமையையும் பரவியிருக்கும் கதிரின் போர்வையையும் மீறி மதுரகாளியின் செக்கச்செவேல் நிறம் பொம்மையைச் சுற்றித் தகிக்கத் தொடங்கியிருந்தது. எனக்குள் காமம் என்னை மீறிக் கிளர்ந்தெழுந்தது. இப்போது மதுரகாளியின் முகம் கடும் கருப்பு நிறத்திற்கு மாற, அவள் உடலெங்கும் கருமை பரவத் தொடங்கியது. என் கிராமத்தின் மதுரகாளியம்மனின் முகத்தை பொம்மை அடைந்துவிட்டிருந்தது. மதுரகாளியின் தாயின் குரல் எங்கிருந்தோ ஒலிக்க, என் நினைவுகள் என்னுள் ஈட்டியைப் பாய்ச்சின. நான் அலறினேன், ஒரு பைத்தியத்துடன் வாழமுடியாது என. பொம்மை சட்டென நிறம் மாறி, மதுரகாளியாக மாறி, ஏளனப் புன்னகை சிந்தியது. மதுரகாளி உடல் சரியில்லாமல் அவள் வீட்டிற்குச் செல்லும் நாள் வரையில் அவளுடன் தினம் உறவுகொண்டிருந்தேன். மீண்டும் கூவினேன், உடலுறவுக்கும் அன்புக்கும் சம்பந்தமில்லையென. பொம்மை எனது பிரதிமையாக மாறியது. இப்போது என்னால் அதனுடன் பேசமுடியவில்லை. என் பிரதிமை என்னைப் பார்த்துச் சிரித்தது.
இவற்றை விட்டு வெளியேற என் உடல் வெகுவாக முயன்றது. என் உடல் படும் வேதனையும் பிரதிமைக்கும் பொம்மைக்குமிடையே அலைக்கழிப்படும் என் நினைவும் வெகு தெளிவாக எனக்குத் தெரிந்தன. இரண்டின் மனநிலைக்குள்ளூம் நான் கடுமையாக மூழ்கினேன். என் கையில் மதுரகாளியின் மார்பு அழுந்திருப்பதாகத் தோன்றவே, கையை மீண்டும் மீண்டும் உதறினேன். என் மனைவி என்னை உலுப்பினாள். என் மகன் தூக்கத்திலிருந்து பயந்து எழுந்து அழுதான். என்னால் கண்ணைத் திறக்கவே முடியவில்லை. என்னைச் சுற்றி பொம்மைகள் அமர்ந்திருப்பதாகவே நம்பினேன். மிகுந்த பிரயாசைக்குப்பின் கண்ணைத் திறந்தேன். அங்கு மதுரகாளி இல்லை. பிரதிமை இல்லை. நான் மட்டும் இருந்தேன். என் மனைவி இருந்தாள். மகன் இருந்தான். நாளையோ நாளை மறுநாளோ மீண்டும் வருவார்களாயிருக்கும். பிரதிமையாக இல்லை என்றால் நிழலாக. அதுவும் இல்லையென்றால் குரலாக. அனிச்சையாகக் கையைக் கையை உதறினேன். கடும் காய்ச்சல் அடித்தது. என் மனைவி பாராசிட்டமால் மாத்திரையும் வெந்நீரும் தந்தாள். அடிக்கடி கனவு கண்டு புலம்புவதாக மனைவி மொபைலில் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தாள். பிரதிமையைக் கனவென்று நானும் நினைக்கத் தொடங்கினால் அன்றே எனக்கு மரணம் சம்பவிக்கும். லேசாக விடியத் தொடங்கியிருந்தது.
ராமநாதன் பொறுமையாகக் கேட்டான். நாடகத்தில் வரும் மிகைநடிப்புப் பாத்திரமொன்றின் மெனக்கெடலுடன் பேசத் தொடங்கினான்.
– நம்ம ஆத்துக்குப் போற வழி இருக்கு பாத்தியா? முதல்ல ஒரு சின்ன பாலம் வருமே, அங்கனதான். என் தாத்தா என்கிட்ட நெறய தடவ சொல்லியிருக்றாரு. அந்த பாலத்துலேர்ந்து வலது கைப்பக்கமா மூணாவது மரம். ஞாபகம் வெச்சிக்கோ.
நாடகம் தொடங்குவதற்கு முன்பாக அந்நாடகத்தோடு தொடர்புடைய சில விஷயங்களைச் சொல்லிவிட்டு, பின் அதை இணைத்துக் கதை சொல்லுவான் போல. நான் சொல்லுவதைக் கேட்க ஒரு ஆள் தேவையாக இருக்கிறது. வேறு வழியில்லை.
– எங்க தாத்தாவுக்கானா சரியான வுவுத்து வலி. வலின்னா உங்க வீட்டு வலி எங்க வீட்டு வலி இல்ல. நெறய நாள் எந்திரிச்சி உட்கார்ந்து வவுத்தப் புடிச்சிக்கிட்டு அழுதுக்கிட்டு இருப்பாராம். என்னடா இது நிம்மதியில்லாத வாழ்வுன்னு சாகலாம்னு தோணியிருக்கு. துண்ட ஒதறித் தோள்ல போட்டுக்கிட்டு (இந்த ராமநாதன் அவன் தாத்தாவைப் பார்த்ததே இல்லை, ஆனால் அவர் அருகில் இருந்து பார்த்தது போலக் கதை சொல்கிறான்.) விறுவிறுன்னு நாலு எட்டு வெச்சி நடந்தாரு. நான் சொன்னேனே அந்த மரம், பாலத்துப் பக்கத்துல வலது கைப்பக்கமா மூணாவது மரம்… நீ கேக்றியா?
– சொல்லு, கேட்டுக்கிட்டுத்தான இருக்றேன்.
– அங்க போயி நின்னுகிட்டு வவுத்த புடிச்சிட்டு ஓன்னு அழுதுக்கிட்டிருந்திருக்றாரு. மணி ஒரு ஆறு இருக்கும். இன்னும் நாலு எட்டு வெச்சா காவேரி. இந்த வவுத்து வலியோட உசிரோட இருந்தா தாங்காதுன்னு முடிவு பண்ணிக்கிட்டு வவுத்தப் புடிச்சிக்கிட்டு அங்கயே நிக்றாரு. மரத்துப் பின்னாடிலேர்ந்து ஒரு சாமி. அதுவரைக்கும் அந்த சாமிய இந்த ஊர்ல யாரும் பாத்ததே இல்லியாம். சாமின்னா அப்படி ஒரு சாமி. சுண்டினா ரத்தம் வரும். அப்டி ஒரு செவப்பு. முடியெல்லாம் சடை விழுந்து தாடியோட அவர் முன்னாடி வந்து நிக்றாரு. தூக்கி வாரி போட்டுச்சாம் தாத்தாவுக்கு.
எனக்குள்ளும் ஒரு திடுக்கிடல் படர்ந்து அடங்கியது. இந்த ராமநாதன் இப்படியெல்லாம் இதுவரை பேசினதில்லை. முடிவே இல்லாத பெரு நாடகமொன்றின் ஓரங்கத்தை மட்டுமே என்றும் சொல்லுவான். இன்று அவன் நாடகம் வேறொரு திக்கில் திறந்துகொண்டு விட்டது புரிந்தது.
– என்ன சாகப்போறியான்னுச்சாம் சாமி. தாத்தாவுக்கு ஒண்ணுமே ஓடல. சட்டுன்னு பொறி தட்டியிருக்கு, ஆகா இவர்தாண்டா நாம தேடிக்கிட்டிருந்த சாமின்னு சாஷ்டாங்கமா கால்ல வுழுந்திருக்றாரு. சரி எந்திருன்னுச்சாம் சாமி. இடுப்புலேர்ந்து சுருக்குப் பையை எடுத்துப் பிரிச்சி அதுலேர்ந்து வூபுதி எடுத்துக் கொடுத்திச்சாம். வவுத்துல பூசுன்னுச்சாம். பூசியிருக்றாரு தாத்தா. கொஞ்சம் வாயில போட்டுக்கோன்னுச்சாம். வாயில போட்ட நிமிஷத்துல போயிடுச்சு வவுத்த வலி. நம்புவியா நீ? அன்னைலேந்து வவுத்த வலி வல்ல தாத்தாவுக்கு. நீ ரொம்ப கஷ்டப்பட்டுக்காத. ஒனக்கும் ஒரு சாமி வரும். மதுரகாளியே வருவா. நீ தெரிஞ்சு ஒண்ணும் தப்பு செய்யல. விடு.
மதுரகாளியின் பெயர் கொஞ்சம் பதற்றத்தைக் கொடுத்தது. ராமநாதன் வேறு ஏதோ சொல்ல வாயெடுத்தான். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. சிறிதுநேரம் இருவரும் அமைதியாக இருந்தோம். ஊர் உறங்கிவிட்டிருந்தது.
அந்தக் கடிதம் ராமநாதன் எழுதியது என்று அறிந்தபோது என்னைப் பதற்றம் பீடித்தது. அவன் என்னுடன் பேசிக்கொண்டிருந்த தினம் இரவில் தற்கொலை செய்துகொண்டு செத்துவிட்டான். எல்லாரும் என்னைத் தோண்டித் துருவிக் கேட்டார்கள். அவன் என்னிடம் எதுவும் சொல்லவில்லை என்று நான் சொன்னதை யாருமே நம்பவில்லை. அன்று நான்தான் அவனிடம் நிறையச் சொல்லிக்கொண்டிருந்தேன். அவன் சொன்னதெல்லாம் அவனது தாத்தாவைப் பற்றித்தான். யாருமே நம்பவில்லை. எனக்கே கொஞ்சம் சந்தேகம் வந்தது, அவன் ஏதும் சொல்லி நாம்தான் கவனிக்காமல் விட்டுவிட்டோமோ என்று. நாங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு பிரிந்து சென்ற மூன்று மணி நேரத்தில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறான். கோரமான சாவு. சேலையை ·பேனில் மாட்டிக்கொண்டு தொங்கிவிட்டான். அப்படி என்ன அவனுக்குள் இருந்திருக்கும் என்று யோசித்து யோசித்தே நான் சோர்ந்துவிட்டிருந்தேன்.
ராமநாதனின் கடிதம் என்றதும் திடுக்கிடல், பயம், ஆர்வம் என எல்லாம் ஒன்று சேர, கடிதத்தைப் பிரித்தேன்.
– இந்த லெட்டர் நீ படிக்கும்போது எவ்ளோ பயந்துட்ருப்பேன்னு எனக்கு தெரியுது. இன்னும் ஒரு மணிநேரத்துல சாகப்போறேன். இவ்ளோ பிரச்சினை, கனவு, பொம்மை, பிரதிமைன்னு நீ என்னென்னவோ உளர்ற. ஆனா உனக்கு எப்படி தற்கொலை செஞ்சிக்கணும்னு எண்ணமே வரலேன்னு தெர்யலை. என்னால முடியலைடா. உனக்கு மதுரகாளின்னா எனக்கு இன்னொருத்தி. பேரு வேண்டாம். என்னோடவே இருக்கட்டும். உன்னய மாதிரிதான் என்னயும் ஏமாத்திக்கிட்டு, ஊரயும் ஏமாத்திக்கிட்டு. பிரதிமை கை நீட்டி விஷம் வெச்சிக்கிட்டு இருந்தாமாதிரி காமிச்சதுன்னு சொன்னியா, பிரதிமை பொய் சொல்லுமாடா? நாமதான் பொய் சொல்லணும். எல்லார்கிட்டயும். நீ என்கிட்டயும் நான் உன்கிட்டயும். அவ்ளோதான்.
நான் திக்பிரமை பிடித்து நின்றிருந்தேன். மதுரகாளியம்மன் என்னைக் காப்பாற்றுவாள் என்று அவன் சொன்னதெல்லாம் நாடகத்தின் ஒரு வசனம்போல.
அன்றிரவும் பள்ளம் திறந்தது. இந்தமுறை எனக்காக ராமநாதனின் பிரதிமை கையில் கடிதத்துடன் நிற்பது போல நின்றுகொண்டிருந்தது.