2003 Films

2003 முடிந்து 2004 பிறந்துவிட்டது.

இனிய புதுவருட வாழ்த்துகள்.

தமிழ்த்திரையுலகம் 2002 போல அல்லாமல் கொஞ்சம் நிம்மதிப்பெருமூச்சு விட்டிருக்கிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மசாலா படங்கள் அதிக அளவில் (பெரிய வெற்றி முதல் நஷ்டமில்லை என்பது வரை) வென்றிருக்கின்றன. மசாலா படங்களிலிருந்து கொஞ்சம் விலகிச் செல்லும் பிதாமகன் மாதிரியான படமும் வென்றிருப்பது பாலா, சேரன் மாதிரியான நெறியாளர்களுக்குச் சந்தோஷத்தைச் சந்திருக்கிறது. இதேமாதிரி சில வரவேற்கத்தக்க முயற்சிகளை அவர்கள் மேலும் எடுக்கக்கூடும்.

காதல்கொண்டேன் படத்தில் பணிபுரிந்தவர்களில் வயது முதிர்ந்தவரின் வயது 31. இந்தச் செய்தியைப் படித்தபோது எனக்குள் எழுத்த ஆச்சரியமும் சந்தோஷமும் அளவிடமுடியாதது. இளைஞர்களின் பெரிய வெற்றி காதல்கொண்டேன்.

கன்னட நாவலை ஜமீலாவாக எடுத்தார் பொன்வண்ணன். நதிக்கரையினிலே என்று பெயர்மாறித் திரைக்கு வந்தது. தலாக்கில் உள்ள சிக்கல்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டத் திரைப்படம். கதை மட்டுமே படத்தின் பலம். நடிகர்கள் தேர்வு, திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு என எதுவுமே ஒரு கலைப்படத்திற்கான நேர்த்தியுடனும் தரத்துடனும் இல்லாதது மிகப்பெரிய பலவீனம். ஆனாலும் பொன்வண்ணன் பாராட்டப்பவேண்டியவர்தாம்.

ஊருக்கு நூறு பேர், ஒருத்தி போன்ற படங்கள் இங்கே காணக்கிடைக்கவில்லை. இவையும் நாவல்களிலிருந்து திரைக்கு வந்தவை.

2003ல் வெளியான படங்களில் என் இரசனைத் தேர்வுப்பட்டியல்

5. பார்த்திபன் கனவு

4. காதல் கொண்டேன்

3. பாறை

2. அன்பே சிவம்

1. பிதாமகன்

பாடல்கள்

18. தீராதது காதல் தீராதது (சேனா)

17. தவமின்றி கிடைத்த வரமே (அன்பு)

16. அவள் யாரவள் அழகானவள் (அன்பு)

15. இதுதானா (சாமி)

14. வயசுக்காரா வயசுக்காரா (புதிய கீதை)

13. ஒன்றா ரெண்டா ஆசைகள் (காக்க காக்க)

12. நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது (திருமலை)

11. ஆலங்குயில் (பார்த்திபன் கனவு)

10. மினிமினிப்பார்வைகள் (ஜூலி கணபதி)

09. இனிய நதி இளைய நதி (மனசெல்லாம்)

08. அலெ அலெ (பாய்ஸ்)

07. என்னைக் கொஞ்சம் மாற்றி (காக்க காக்க)

06.கனா கண்டேனடி (பார்த்திபன் கனவு)

05. பிறையே பிறையே (பிதாமகன்)

04. எனக்குப் பிடித்த பாடல் (ஜூலி கணபதி)

03. உதயா உதயா உளறுகிறேன் (உதயா)

02.பூவாசம் புறப்படும் (அன்பே சிவம்)

01. இளங்காத்து வீசுதே (பிதாமகன்)

நடிகர்கள்:

5. விஜய்

4. விக்ரம்

3. கமல்

2. சூர்யா

1. மாதவன்

நான் பார்த்ததில் “ஏண்டா பார்த்தோம்” என்று வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்ட படங்கள்

08. புதிய கீதை

07. சேனா

06. விசில்

05. அலை

04. ஈர நிலம்

03. அலாவுதீன்

02. ஆஞ்சநேயா

01. பாப்கார்ன்

பிடித்த பாடலாசிரியர்: வைரமுத்து (அன்பேசிவம்)

நடிகைகள்

02. சரிதா (ஜூலி கணபதி)

01. ரம்யாகிருஷ்ணன் (பாறை)

(என் புருசன் எதிர்வீட்டுப்பொண்ணு என்று ஒரு படம் வெளியாகியிருக்கிறது. அதைப் பார்க்காத்தால் அதைப் பற்றிக் கருத்துச் சொல்ல முடியவில்லை!)

***

Share

ஒன்று நீங்கலாக… – கவிதை

என்றோ தூக்கியெறிந்த

வேண்டாத பப்பாளி விதைகள்

மரங்களாக நிற்குமழகைக்

காணும்போதெல்லாம்

மண் பெருமை உணர்ந்தாலும்

வீட்டுக்குள் ஒருபிடி மண்ணில்லை

என்பதுவும்-

ஒரு காலத்தில்

நெல்லிக்கொம்பு மிதந்த கிணறு

தூர்வாரச்சொல்லி

பழம்பெருமையோடு மட்டும்

காத்திருத்தல்

காணும்போதும்-

இடதும் வலதுமாய்

தலையைத் திருப்பி

சொறிதலைக்

கடித்துச் சுகம் காணக் கடினப்படும்

வீட்டு நாயின்

தினக்குளியலும்-

பத்தாவது பக்கத்தில் பிரிந்து

காற்றில் பக்கங்கள் சடசடக்க

குப்புறக் கிடக்கும் புத்தக

நினைவும்-

செதுக்கிவைத்த தோல்வியெனினும்

தொடர்ந்துகொண்டே இருக்கின்றன

சில எத்தனங்கள், கூடவே

விதிவிலக்காய் இருந்து

குமைக்கின்றன

எல்லா இரவுகளும்

Share

உங்கள் பார்வையும் என் பதிலும் – கவிதை

சிரிக்கும் ஓநாய்

பச்சப்புள்ள

தந்திரக்கார நரி

விஷமுள்ள பாம்பு

வெள்ளந்தி

கடுவன் பூனை என

என் நிலை மாறிக்கொண்டே

இருப்பதான உங்கள் குற்றச்சாட்டுக்கு

என் பதில் என்னவாய் இருக்கமுடியும்

என் நிலைக்கண்ணாடி

எப்போதும்

என்னை எனக்கு

வெள்ளையாகத்தான் காட்டுகிறது

என்பதைத் தவிர?

Share

மீண்டும் ஒரு மாலைப் பொழுது – சிறுகதை


சீரான இடைவெளியில் கைதட்டிக்கொண்டே இருக்கிறார்கள். யார் யாரோ கேள்வி கேட்டிக்கொண்டிருக்க யாரோ ஒருவர் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார். எந்தப் பதில் சொன்னாலும் கைதட்டச் சொல்லி பயிற்றுவிக்கப்பட்டிருக்கப்பட்டிருப்பது தெரிகிறது. டாக்டர் வேதசகாயம் இதையெல்லாம் காதில் வாங்கிக்கொண்டது மாதிரியே இல்லை. போர்னோ படங்கள் நிறைந்த புத்தகத்தைக் கையில் வைத்து ஒவ்வொரு கோணமாக திருப்பத் திருப்பிப் பார்த்துக்கொண்டிருந்தார். (“கொன்னுட்டான் போ”) திடீரெனச் சிரித்துக்கொண்டார்.

“இந்தப் புத்தகத்தையே எத்தனைத் தடவை பார்ப்பீங்க?”

“நீ வேணும்னா புதுசா ஒன்னு வாங்கிக்கொடு. வேண்டாம்னா சொல்றேன்?” முகத்தைக்கூடப் பார்க்காமல் பதில் சொல்லிவிட்டு அடுத்த பக்கத்தைத் திருப்பினார். நான் அந்த அறையைவிட்டு வெளியில் வந்தேன்.

“என்ன இன்னும் டாக்டர் அதே புத்தகத்தைப் பார்த்துக்கிட்டு இருக்கிறாரா?” என்று கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திராமல் பெண்கள் உடைமாற்றும் அறைக்குள் புகுந்துகொண்டாள் செல்வி. அங்கிருந்தபடியே கத்தினாள்.

“ஊர்லேர்ந்து அம்மா ஊறுகாய் அனுப்பியிருக்காங்க. ரிஷப்ஷன்ஸ்ல ஷெல்·ப்ல இருக்குது. எடுத்துக்கோங்க.”

“சரி”

“ஸ்டோர்ல வெயிட் பண்றீங்களா? இன்னும் அஞ்சு நிமிசத்துல வந்துருவேன்”

வாட்ச்மேன் நமட்டுச் சிரிப்பு சிரித்த மாதிரி இருந்தது.

“எனக்கு வேலை இருக்கு. நான் போறேன்”.

தலையை மட்டும் வெளியே நீட்டி தாழ்ந்த குரலில் “எத்தனை நாள் தப்பிக்கிறீங்கன்னு பார்க்கிறேன்” என்றாள்.

பார்க்கலாம் எனச் சொல்லிவிட்டு ரிசப்ஷனை விட்டு வெளியில் வந்தேன். பெரிய கேட் பூட்டியிருந்தது. லேசாக இருட்ட ஆரம்பித்திருந்தது. கேட்டுக்கு வெளியே ரோடு போடுவதற்காக கல்லையும் மண்ணையும் குவித்துவைத்திருந்தார்கள். மிதமான காற்றில் மரங்கள் ஆடுவதைப் பார்க்கவே இரம்மியமாக இருந்தது. தூரத்தில் மசூதியிலிருந்து அல்லாஹ¤அக்பர்அல்லா என ஒலித்தது. ஆஸ்பத்திரியின் வலது புறத்திலிருந்து மிக லேசான கைத்தட்டல் சத்தமும் கேட்டது. கிட்டத்தட்ட அரைமணிநேரமாய் சரியான இடைவெளியில் கைதட்டிக்கொண்டே இருக்கிறார்கள். அவன் தான் பேசிக்கொண்டிருக்கவேண்டும். இது முதல் முறை அல்ல. அவன் அவனை இலக்கியவாதி என்பான். ஏற்பார்கள். மற்ற எல்லார் கேள்விக்கும் ஒரு கருத்தை முன் வைப்பான். ஏற்பார்கள். அவன் சொல்லும்போது கூடுவார்கள். அவன் சொல்லும்போது கலைவார்கள். அந்தக்கூட்டத்தில் அவனுக்கு மிகப்பெரிய ஆளுமை உண்டு.. அதனால் ஏற்பட்ட கர்வம் அவன் முகத்தில் தெரியும்.

கூட்டம் நடக்கும் இடம் தேடி, கைதட்டல் ஓசையைப் பின்பற்றி நடந்தேன்.

ஆஸ்பத்திரியின் வளாகம் பெரிய மதில்சுவரால் சூழப்பட்டிருந்தது. மதிற்சுவரின் மேலே சிறிய சிறிய உடைந்த கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்டிருந்தன. உள்ளே மதிற்சுவருக்கு இணையாக, வரிசையாய் மரங்கள். சின்னச் சின்ன தொட்டிகளில் குரோட்டன்ஸ் செடிகள். அதைத்தொடர்ந்து ஒரு மரத்தின் கீழ் குவிக்கப்பட்ட மணல். அங்குதான் கூட்டம் கூடியிருக்கிறது. பதினைந்து இருபது பேர் உட்கார்ந்திருக்க ஒருவன் மட்டும் நின்றிருக்கிறான். கையைக் கட்டிக்கொண்டு முகத்தில் மெல்லிய புன்னகையைத் தவழவிட்டுக்கொண்டு அடுத்த கேள்விக்குத் தயாராய் இருக்கிறான். காதில் வெள்ளை முடிகள் வளர்ந்திருந்தன.

ஒரு காலை தரையில் ஊன்று, இன்னொரு காலை மடக்கி, பாதத்தால் மதில் சுவரை மிதித்துக்கொண்டு யாரும் என்னைக் கவனிக்காதவாறு காம்பவுண்ட் சுவரின் மீது சாய்ந்து நின்றுகொண்டேன். எனக்கு இப்படி நிற்பதுதான் பிடிக்கும்.

“புரட்சி. பெரும் புரட்சி. யுகப்புரட்சி. வரும். வந்தே தீரும். அதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.”

வானத்தை நோக்கிக் கைகாட்டினான். எல்லாரும் மேலே பார்த்தார்கள்.

“அங்கிருந்து அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறான். இங்கே இருக்கிறான் அவன்”

பூமியை நோக்கிக் கைகாட்டினான். எல்லாரும் பூமியைப் பார்த்தார்கள்.

“உங்கள் முன்னே இருக்கிறான்”

தன்னைச் சுட்டிக்கொண்டான். எல்லோரும் கைதட்டினார்கள்.

அங்கிருந்து பார்க்கும்போது டாக்டரின் அறை தெரிந்தது. மூன்று நாள்களுக்கு முன்னதாக இராபர்ட் அந்த அறையின் வழியாகத்தான் பார்த்திருக்கவேண்டும். இப்போது கூட்டம் நடந்து கொண்டிருக்கும் மணலில்தான் நடந்தததாம். இராபர்ட் சொல்லும்போது அவன் குரலில் இருந்த சந்தோஷம் பொறாமையைக் தந்தது.

“நைட் ட்யூட்டியா.. தூக்கமா வந்துச்சு. டாக்டர் அவர் ஷெல்·ப்ல எதாவது பலான புத்தகம் வெச்சிருப்பார்னு எடுக்க வந்தேன். ஜன்னல் வழியா பார்த்தா.. வேப்ப மரம் இருக்குதுல்ல.. அதுக்குப் பக்கத்துல மணல் குவிச்சு வெச்சிருக்காங்கல்ல.. அங்கதான். கவிதாவும் சிவாவும். சிவா ரொம்ப பயந்த மாதிரிதான் இருந்தது. கவிதா அவனை விடவே இல்லை”

கண்கள் அகல விரித்து, அவன் சொன்ன வேகத்தில் ஒன்றிரண்டு எச்சில் துளிகள் என் மீது தெறித்தன. அதைப் பொருட்படுத்தாமல், “முழுக்கப் பாத்தியா?” என்றேன்.

“வேற வேலை? செம ஷோடா.. கொஞ்சம் லைட்டிங் மட்டும் ப்ராப்பரா இருந்ததுன்னு வெச்சிக்கோயேன்.. ரொம்ப சூப்பரா இருந்திருக்கும்.”

“அவங்க உன்னைப் பார்க்கலையா?”

“அவங்க என்னைப் பார்க்கிற மூட்லயா இருந்தாங்க.. சிவா இன்ஜெக்ஷன் போட்டுக்கிட்டு இருந்திருப்பான்னு நினைக்கிறேன்..”

“சே சே.. இப்பல்லாம் போடுறது இல்லை. முன்னாடி ஏதோ ஒரு ஜாலிக்காகப் போட்டுக்கிட்டு இருந்தான். அவனுக்கே பயம் வந்திருச்சு. எங்க அடிமை ஆயிட்டோமோன்னு.. ஒருநா சொல்லிச் சொல்லி அழுதான்.. அப்புறம் விட்டுட்டான்னு தோணுது”

“என்னமோ எனக்குத் தோணுச்சுப்பா.. அரைமணி நேரம் கழிச்சு ஒன்னுமே நடக்காத மாதிரி கவிதா ரிஷப்ஷன்ல புத்தகம் படிச்சுக்கிட்டு இருந்தா.. என்ன ஒரு மாதிரி இருக்கன்னு கேட்டேன்.. ஒன்னுமில்லை; டயர்டா இருக்குதுன்னு சொன்னா.. மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டேன். செம கட்டைடா.. ஒருநாள் நானும் டயர்டாக்கணும்”

ராபர்ட்டை நம்ப முடியாது. எதையாவது அளந்து வைப்பான். அவன் கேரக்டர் அப்படி.

கூட்டம் அடுத்த பதிலுக்குத் தயாரானது.

“பறவை என்கிறார்கள். பறப்பது பறவை. ஒரு பறவையைப் பிடித்து அதன் இறக்கைகளை வெட்டி அடைத்து வைத்துவிட்டால் அது பறவை இல்லையென்று ஆகிவிடுமா? பறக்காமல் இருக்கும்போது கூட அது பறவைதான். நானும் அப்படிப்பட்ட ஒரு சிறைவாழ்க்கையில் இருக்கிறேன். எழுதாமால் இருந்தாலும் நான் இலக்கியப் பிதாமகன் தான். எனக்குள் இன்னும் அலைமோதும் பல எண்ணங்கள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. அவையெல்லாம் அச்சாகும்போது என் மேன்மை இன்னும் உயரும். அன்று இலக்கிய உலகம் ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்குப் பெயரும். அதன் காரணகர்த்தா நானாக இருப்பேன். இதில் சிறிதளவும் சந்தேகமில்லை எனக்கு. ”

வானத்தை நோக்கி இரண்டு கைகளைத் தூக்கிக் கர்ஜித்தான். அவன் வெட வெட உடம்புக்கும், தொள தொள அழுக்கு வெள்ளைச் சட்டைக்கும், கைலிக்கும், அந்தக் கர்ஜித்தலுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி இருந்தது. இன்னொருவன் அடுத்த கேள்வியைக் கேட்டு வைத்தான். என்ன கேட்டான் என்றே புரிய இல்லை. அவனுக்கும் புரிந்திருக்காது. புரிந்திருக்கவேண்டிய தேவையும் இல்லை. அவனுக்கு அவனுடைய பதில்தான் முக்கியம்.

நான் டாக்டர் அறையை நோக்கினேன். அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தவர் என்னைப் பார்த்துச் சைகை காட்டி, தானும் இங்கே வருவதாகச் சொன்னார். சரி என்றேன்.

டாக்டர் வருவதற்குள் அவன் அடுத்தவன் கேள்விக்கு விடை சொல்லத் தயாரானான்.

தொப்பையைத் தூக்கிக்கொண்டு நடந்து வந்ததில் டாக்டருக்கு லேசாக மூச்சு வாங்கியது.

“டாக்டர்.. இவரை ஏன் இன்னும் இங்க வெச்சிருக்கீங்க?”

அடிக்குரலில் பேசிக்கொண்டோம்.

“அன்னைக்குப் பார்த்தேல்ல.. கடைசியில என்ன பண்ணான்னு.. பேசிக்கிட்டு இருக்கும்போதே வயலண்ட் ஆயிடுவாங்க. எப்பன்னு சொல்ல முடியாது. அதுக்காகத்தான்.”

“அவனைப் பாதி நோயாளியா ஆக்கினதே நீங்கதான்..”

டாக்டர் சிரித்தார்.

“கற்பனையையெல்லாம் கதையோட நிறுத்திக்கக்கூடாதா?”

“நீங்க நார்மல்னு நினைக்கிறீங்களா? ஒரே புத்தகத்தை மாறி மாறிப் பார்க்கலை? கவிதாவோட ப்ராவை திருட்டுத்தனமா வாசனை பிடிக்கலை? கேவலம் வேலைக்காரி.. அவளோட ஸ்லெப்ட் வெல் பண்ணலை?”

ஸ்லெப்ட் வெல் இராபர்ட் சொல்லித்தந்தது. திடீரென ஒரு நாள் மஞ்சு நர்ஸ¤ம் வாட்ச்மேனும் ஸ்லெப்ட் வெல் என்றான். நான் பரிதாபமாக முழித்தேன். ஸ்லெப்ட் வெல் தெரியாதா என்று கேலி செய்து துணைக்குச் சிவாவையும் அழைத்தான். இருவரும் சேர்ந்து ஸ்லெப்ட் வெல்லை விளக்கினார்கள். பின் எப்போது பார்த்தாலும் மறக்காமல் “நேத்து டாக்டரும் அந்த நர்ஸ¤ம் ஸ்லெப்ட்வெல், மூனு நாளைக்கு முன்னாடி யாரும் யாரும் ஸ்லெப்ட் வெல்” எனச் சொல்லாமல் விடமாட்டான்.

“பரவாயில்லை. கோட் வோர்ட்லாம் தெரிஞ்சு வெச்சுருக்க.. பை தி பை, கேவலம் வேலைக்காரின்னா.. நர்ஸ் பரவாயில்லைங்கிறியா?” சிரித்தார் டாக்டர்.

“உங்க புல்ஷிட் ஹாஸ்யத்தை நிறுத்திட்டு, பதில் சொல்லுங்க மொதல்ல..” உஷ்ணமானேன்.

“ஆரம்பிச்சிட்டான்யா அலம்பல.. இப்ப என்ன பண்ணனும்ங்கிற?”

“காசுக்காகத்தானே இதெல்லாம்..”

“காசுக்காகன்னு பார்த்தா காசுக்காகத்தான் எல்லாம்.. நீ எழுதி என்ன சாதிக்கப்போற? உலகத்தைத் திருத்தப்போறியா? இல்லை சோ கால்ட் (so called) இலக்கியவாதியாகப் போறியா? எழுதிக்கிட்டே இருக்கேல்ல.. காசுக்காகத்தான? அது மாதிரிதான்.. வீட்டுல வெச்சுக்க முடியாம கொண்டு தள்ளிட்டுப் போறான். நாங்க பார்த்துக்கறோம். காசு வாங்கறோம். சரி.. காசு வாங்கிட்டா யாரு வேணா பார்த்துக்கலாம்னு நினைக்கிறியா? ஒரு பத்து நாள் இங்க இருந்து பாரேன்.. கொண்டு வந்து விட்டுட்டுப் போயாச்சுன்னா அவ்வளவுதான். எத்தனை பேர் ரெகுலரா வந்து பார்த்துட்டுப் போறான்ற? வாய் ஓயாம கதை, இலக்கியம்னு பேசிக்கிட்டு இருக்கானே.. அவன் பொண்டாட்டி அவனை வந்து பார்த்து அஞ்சு வருஷம் ஆகப்போகுது.. ஆனா மாசா மாசம் டாண்ணு காசு வந்துரும். ஏன் எதுக்குன்னு கேக்காம பில் செட்டில் பண்ணிடுவாங்க.”

கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன பதில். இன்னும் கேட்டால் அவன் ஒரு இராத்திரியில் செய்த லீலைகளை எல்லாம் சொல்வார். இராபர்ட் மிரண்டு போனதை விவரிப்பார். பக்கத்து பெட் ஆசாமி மறுநாள் முழுதும் வலிக்குது வலிக்குதுன்னு புலம்பிக்கொண்டிருந்ததைச் சொல்லிக் காட்டிச் சிரிப்பார். அவன் நார்மல் இல்லை என்பார். (“பைத்தியங்களுக்கே கண்ட்ரோல் பண்ண முடியலையே.. நாமெல்லாம் எந்த மூலைக்கு” என்று அன்று முழுவதும் இராபர்ட் மப்பில் புலமபிக்கொண்டிருந்தான்.) இராபர்ட்டைக் கருத்து கேட்பார்.

இன்னும் ஐந்து அல்லது பத்து நிமிடத்தில் கவிதா ஒரு ஊசியோடு வருவாள். அவளைப் பார்த்ததும் இலக்கியவாதி முதலில் ஓடுவான். ஒட்டு மொத்தக் கூட்டமும் ஓடும். கவிதா அசரவே மாட்டாள். பின்னாடியே ஓடிப் போய், கையைப் பிடித்து முறுக்கி (“ஓடப்பாக்கிறியா.. மூதி..” ) ஊசி போடுவாள். அடுத்த ஐந்து அல்லது பத்து நிமிடத்தில் அவன் அடங்கிவிடுவான். கவிதாவின் நைட் ஷி·ப்ட் அதோடு முடிந்த மாதிரிதான். அதற்குப்பின் சிவாவும் மணல்மேடும்தான்.

“அப்ப அவன் ஆயுசு முழுக்க இங்க கெடக்க வேண்டியதுதான்றீங்களா?”

“கம் ஆன் யா.. என்ன ஆச்சு உனக்கு? ரொம்ப டிஸ்டர்ப்டா இருந்தா நைட் என் ரூம்ல இரு. அங்கே இருந்து பார்த்தா மணல்மேட்டுல நடக்குற ஷோ கிளீனா தெரியும். ஒருநாள் நானே ஸ்டே செய்யணும்னு இருக்கேன்..” கண்ணடித்தார்.

பேசிக்கொண்டே நடக்க ஆரம்பித்தோம். அவன் குரல் இன்னும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது.

“அவன் தன்னை இலக்கியவாதின்னு நினைச்சுக்கிறான். இத்தனைக்கும் அவன் நார்மலா இருந்தப்ப ஒரு புத்தகம் கூட எழுதினதில்லை. நிறைய படிச்சிருப்பான் போல.. பெரும்பாலான நேரத்துல அவன் நார்மல்தான். சில நேரங்கள்ல அப்நார்மல். அன்னைக்கு இராத்திரி நடந்துக்கிட்ட மாதிரி. அப்நார்மாலிட்டி இருக்கிற வரைக்கும் அவனை அனுப்ப முடியாது. அதுதான் விஷயம்”

“எனக்கு இந்தக் கதையெல்லாம் வேண்டாம். அவனுக்குச் சரியாகுமா ஆகாதா? அவனை வெளியில் அனுப்புவீங்களா இல்லை இங்கயே வெச்சு மாசா மாசம் பணம் பார்ப்பீங்களா?”

டாக்டர் வேதசகாயம் எனப்படுகிற அந்த நபர் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு ஒரு பெருமூச்சோடு என்னைப் பார்த்துச் சொன்னார்.

“நீ இன்னைக்கு அப்நார்மலா இருக்க. உனக்கு இப்பச் சொன்னா எதுவும் புரியாது. நீ நார்மலாகும்போது உனக்கே புரியும்” சொல்லிவிட்டு யோசனையில் ஆழ்ந்தார்.

இருட்டத் தொடங்கியிருந்தது.

இராபர்ட் இரவில் ஜன்னல் வழியே பார்ப்பான்.

கவிதா நிலவொளியில் மணல்மேட்டில் வெறியுடன் சிவா ஆளுவாள்.

டாக்டர் ஆயிரத்து எட்டாவது தடவையாகப் புத்தகத்தைக் கையில் எடுப்பார்.

வேலைக்காரி ஒரு அழைப்புக்காகக் காத்துக்கொண்டிருப்பாள்.

செல்வி ஸ்டோர் ரூமையே ஏக்கத்தோடுப் பார்த்துக்கொண்டிருப்பாள்.

அவன் தினம் தினம் பேசிவிட்டு, ஊசி மயக்கத்தில் தூங்கிக்கொண்டிருப்பான்.

வாட்ச்மேன் கேட்டைப் பூட்டிச் சாவியைப் பையில் வைத்துக்கொண்டு, பூட்டை இழுத்துப் பார்த்துக்கொண்டார்.

யோசனைக்குப் பின் டாக்டர், ” இப்படி இருப்பது ஒரு வகையில கொடுப்பினை” என்றார்.

நான் டாக்டரிடம் “கேட்டே வேண்டாம்” என்றேன்.

***
Share

கிருஷ்ணன் வைத்த வீடு – வண்ணதாசன்

12 சிறுகதைகளால் ஆன ஒரு தொகுப்பு. சிறுகதைகள் ஆன தொகுப்பு என்பதை விட அழகான முத்துக்களால் ஆன ஒரு மாலை என்று சொல்லலாம். அத்தனையும் அழகான கதைகள். வண்ணதாசன் (கல்யாண்ஜி) ஒரு கவிஞரும் கூட. அவரது கவிதைகள் பற்றிய அறிமுகம் தேவையில்லை. எனக்கு மிகப் பிடித்த கவிஞர்களுள் முதன்மையானவர்

வண்ணதாசன். முழுக்க முழுக்க யதார்த்த தளத்திலான கவிதைகள். தீவிரபோக்குக் கவிதைகளெல்லாம் இல்லாமல் நேரடியாய்ப் பார்க்கும் விஷயங்களை, உறுத்தாத, இயல்பான உவமைகள் கொண்டு, மிக யதார்த்தமான கவிதைகள் அவரது பலம்.

இந்தச் சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகள் முழுவதிலும் இதே மாதிரியான கவிதையின் படிங்களைக் காணலாம். ஒன்றிரண்டு கதைகள் எந்தவொரு கதையையும் சொல்லாமல், நிகழ்ச்சி விவரிப்புகளாகவும் கதைக்கள விவரிப்புகளாகவும் கண்முன் விரிகின்றன. ஒரு சம்பவத்தை கண்முன் பார்த்த மாதிரியான அனுபவத்தை விட்டுச்செல்கின்றன.

கதைகளின் பெரிய பலம் மற்றும் காரணம் மனிதர்களின் மன உணர்வுகளைப் படம் பிடிப்பதுதான். நேரில் பார்த்த சம்பவங்களையும் கற்பனைகளையும் கலந்து, கட்டுரையா கதையா என்ற சந்தேகம் வராமல், கதையாக்கும் வித்தையை மிக அழகாகச் செய்திருக்கிறார் வண்ணதாசன்.

கிட்டத்தட்ட அனைத்து கதைகளும் திருநெல்வேலியில்தாம் நிகழ்கின்றன. நெல்லைதான் வண்ணதாசனுக்குச் சொந்த ஊர். சொந்த ஊரை விட்டுவிட்டு வெளியில் சென்று கதை எழுத முயற்சிக்கவில்லை. எது இயல்பாக வருகிறதோ அதைச் செய்திருக்கிறார். அதனால்தான் கதைகள் முழுவதிலும் நெல்லை மண்ணின் வாசம் வீசுகிறது.

அவரே முன்னுரையில் சொல்கிறார்.

“சென்னையில் இருக்கும்போது எழுதியவை, அல்லது சென்னையில் இருந்துவிட்டு வந்த நிலையில் எழுதியவை இந்தக் கதைகள். ஏதோ ஓரிரண்டு கதைகளில், ஓரிரண்டு வரிகளில் ஓடுகிற மின்சார இரயில் மட்டும் நான் சென்னையிலும் இருந்த அடையாளத்தைச் சொல்லக் கூடும்.

இருந்த இடம் வாழ்ந்த இடம் ஆகாது.

எல்லா இடத்திலும் இருக்கவும் எல்லா இடத்திலும் வாழவும் விரும்புகிற அதே மனம், இன்னொரு விதத்தில் ஒரே இடத்தில் இருக்க விரும்புகிறது என்பதும், எல்லா இடத்திலும் வாழ முடியாது தவிக்கிறது என்பதும் நிஜம். பிடாரனின் பிராம்புக் கூடையிலிருந்து தற்செயலாகத் தப்பித்த பாம்பு, கூடைக்குள் திரும்புகிற வழி தொலைந்து, ஒளிந்து

கொள்கிற அவசரத்தில், பழக்கமற்ற தரையோரங்களில், சரசரத்து ஓடி, முட்டி முட்டி முடை தேடுகிற நிஜம் அது. இந்த விதத் தவிப்பிற்கும் விருப்பத்திற்கும் இடையில்தான் உறவும் வாழ்வும் தொடர்ந்து என் மீது கவிகிறது. அல்லது நான் உறவின் மீதும் வாழ்வின் மீதும் கவிகிறேன். இந்தவிதமான வாழ்வும் உறவும் ஊடாடுகிற மனநிலையில் எழுதப்பட்டவையே இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள்”

பாம்பு உவமை ஒரு எடுத்துக்காட்டு. இது மாதிர் நிறைய உவமைகள் கதைகள் முழுவதிலும் விரவிக்கிடக்கின்றன. சித்திரத்தைக் கண்முன் கொண்டு வர விழையும் அந்த உவமைகளைத் தொகுத்து எழுதினால் அது சிறந்த கவிதைகளைப் படித்த உணர்வைத் தரும் என்பது என் எண்ணம்.

கதையில் சில அழகான கவிதைப் படிமங்களும் விரவிக்கிடக்கின்றன. கதைகளின் தலைப்பே கவிதைத்துவமாகத்தான் இருக்கிறது. உள்புறம் வழியும் துளிகள், கூண்டுக்கு வெளியே ஒரு புல்வெளி, ஒரு நிலைக்கண்ணாடி… சில இடவல மாற்றங்கள், விதை பரவுதல், மின்மினிப்பூச்சி வெளிச்சத்தில் ஒரு தாத்தாவின் முகம் – இவையெல்லாம் கவிதைத்துவமான தலைப்புகள்.

கதைகளிலும் இதே மாதிரியான, தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளைக் கொண்ட கவிதை போன்ற வரிகள் விரவிக்கிடக்கின்றன.

“வாசல் தூண்கள் கார்த்திகை தினத்து இருட்டுக்கென்று வருடம் பூராவும் ஒரு அழகை ஒளித்து வைத்திருக்குமோ என்னமோ” (ஆறாவது விரல் கதையில்)

“ஓடுகிற தண்ணீருக்குள் நடு ஆற்று மணலில் கை புதைப்பது மாதிரி, நானும் என்னுடைய விரல்களை அரிசிக்குள் வெதுவெதுப்பாய் புதைத்துக்கொள்ள விரும்பினேன்” (ஆறாவதுவிரல் கதையில்)

“நூறு வருஷத்துக்கு முந்தின மண்டபம் சரிந்து கடலுக்குள் பாசியும் சிப்பியும் அப்பிக் கிடந்த கல்தூண்போல இருந்த அண்ணாச்சியின் முகம் அதைக் கேட்டதும் பரவசமாகச் சிரித்தது” (ஊரும் காலம் கதையில்)

“உயர்த்தின ஒவ்வொரு டம்ளர் உள்சுவரிலும், மிச்சமிருந்த குளிர்பானத்துளிகள் வழிந்து கீழ் இறங்கிக்கொண்டிருந்தன” (உள்புறம் வழியும் துளிகள் கதையில்)

“அலை ஒதுக்கின கிளிஞ்சலை விடவா கடல் அழகு” (சின்னு முதல் சின்னு வரை கதையில்)

“அறுபது வருஷ மழையும் பாசியும் கண்ட அருமையான ஓடுகள்” (சின்னு முதல் சின்னு வரை கதையில்)

இதுமாதிரி ஏகப்பட்ட படிமங்கள் கதை முழுவதும் காணக்கிடைக்கின்றன. இயல்பான நெல்லை வட்டார வழக்கும், விளி முறைகளும், ஊரைப்பற்றிய வர்ணனைகளும், வாதாங்கொட்டை, நந்தியாவட்டை, வேப்பம்பூ, சீம்பால் போன்ற வார்த்தைப் பிரயோகங்களும், நெல்லையில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராமங்களின் பெயர்களும், நெல்லையின் தேரோட்டம் பற்றிய குறிப்புகளும் கதைகளில் அணிச்சையாக வந்துபோகின்றன. அவை நம்மை வசமிழக்கச் செய்து கதைக்குள் இழுத்துக்கொள்கின்றன. எல்லோரையும் போலவே தாமிரபரணியும் தேரோட்டமும் ஆசிரியரை நிரம்பப் பாதித்திருக்கிறது.

சில இடங்களில் தேவையில்லாத வர்ணனைகள் இருந்து, தனியே துருத்திக்கொண்டும் தெரிகின்றது. எடுத்துக்காட்டாய், “தாயின் மார்க்காம்பிற்கும் மின்பொத்தானின் அமைப்புக்குமான ஒற்றுமையின் தூண்டுதல் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்” (சின்னு முதல் சின்னுவரை கதையில்) என்பது போன்ற அவசியமற்ற உவமைகளைச் சொல்லலாம்.

வாழ்க்கையின் எல்லா சின்ன சின்ன, ஆனால் வெகு அழுத்தமான கணங்களைக் கூட வெகு அழகாகப் படம் பிடித்திருக்கிறார் வண்ணதாசன்.

“அப்பாவின் சட்டை ஆணியில் கிடந்ததைப் பார்த்துவிட்டு நான் பயங்கரமாக அழுதது, அப்பாவின் காரியத்திற்காக அழுததை விடவும் கூடுதலாக இருந்தது” என்ற வரியில் பொதிந்திருக்கும் உண்மை மற்றும் வலியின் ஆழம் அதிகம். இதை உணர்ந்தவர்களால்தான் எழுதவோ இரசிக்கவோ முடியும்.

நல்ல கதையைப் படிக்க நினைப்பவர்களும், எழுத்தாளர்களாக முயற்சிப்பவர்களும் இந்தச் சிறுகதைகளை அவசியம் வாசிக்கவேண்டும். ஒரு புதிய கோணத்தை, இந்தக் கதைகள் தரும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

அதிலுள்ள பன்னிரண்டு கதைகளில், என் பார்வையில் சிறந்ததாகச் சின்னுமுதல் சின்னுவரை கதையைச் சொல்லுவேன். அதிலுள்ள ஒரு சில வரிகளைக் கண்டிப்பாகச் சொல்ல வேண்டும். இல்லையென்றால் இந்தக் கட்டுரை நிறைவு பெறாது.

“டயோசீசன் பள்ளிக்கூடம் தாண்டி, சர்ச் தாண்டி, வாய்க்கால் தாண்டி, இறைச்சிக்கடை எல்லாம் தாண்டி, தைக்காத்தெரு பள்ளிவாசல் தாண்டி, ஒரு சந்துக்குள் போக வேண்டி இருந்தது. இவள் “சை.. சை.. ” என்று மூக்கைப்

பிடித்துக்கொண்டே வந்தாள். கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குப் போகிற கைப்பிள்ளைக்காரிகளையும், வயசாளிகளையும் …..” (சின்னுமுதல் சின்னுவரை கதையில்)

விமானதளத்தில் காத்திருக்காமல், எமிக்ரேஷன் செக்கிங் இல்லாமல், காசு செலவில்லாமல் என் வீட்டுக்குப் போயிட்டு வந்த மாதிரி ஒரு உணர்வு. அந்த ஆஸ்பத்திரிக்குப் பின்னாடிதான் என் வீடு இருக்கிறது.

***

Share

கிரிக்கெட் – ஆஸ்திரேலியாவில் இந்திய வெற்றி

ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவை இந்தியா வென்றிருக்கிறது.

முதல் இன்னிங்கிஸில் 500க்கும் மேல் எடுத்த அணி தோற்பது 108 ஆண்டுகளுக்கு பின்னர் என்கிறது புள்ளிவிவரம். திராவிட் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம். மூன்று மாதங்களில் இரண்டு இரட்டைச் சதங்களை அடித்து, தனது திறமையை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் திராவிட்.


வெற்றிக்களிப்பில் ராகுல் திராவிட்

வரலாற்றின் பின்னே சென்று பார்க்க வேண்டும். ஒரு காலத்தில் எந்தவொரு காரணமும் இல்லாமல் திராவிட்டைத் தூக்கி வெளியில் வைத்தது இந்தியத் தேர்வாளர்கள் குழு. திராவிட்டின் ஆட்டத்தின் மீது அவர்கள் சொன்ன குற்றச்சாட்டு, “பந்துகளை வீணாக்குகிறார்” ஊடகங்கள் வழியாகப் பரவியது இந்தக்குற்றச்சாட்டு. திராவிட் என்றாலே பந்துகளை வீணாக்குபவர் என்கிற குற்றச்சாட்டு அவர் மேல் விழுந்தது.

அப்போது அவர் பந்துகளை வீணாக்கத்தான் செய்தார். ஆனால் தவறு அவர் மீதில்லை; இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் மீது.

ஐம்பது ஓட்டங்களுக்கு நான்கு அல்லது ஐந்து விக்கெட்டுகள் பறி கொடுத்த நிலையில் இந்தியா தத்தளித்துக்கொண்டிருக்கும்போது இந்திய அணியின் விக்கெட்டுகளைக் காப்பாற்றவேண்டிய பெரும் பொறுப்பு திராவிட்டுக்கு வந்து சேரும். தத்தளித்துக்கொண்டிருக்கும் ஓர் அணியைக் காப்பாற்றவேண்டிய நபர் அடித்து ஆட முடியாது. கொஞ்சம் பந்துகளைச் சாப்பிட வேண்டித்தானிருக்கும். இதுதான் நேர்ந்தது திராவிட்டுக்கு.

அவர் விக்கெட் காப்பாற்றியதையெல்லாம் மறந்து, பந்துகளை மட்டுமே வீணாக்கியதாகக் குற்றம் சாட்டி அவரை அணியிலிருந்து நீக்கியது இந்தியத் தேர்வாளர்கள் குழு. இத்தனைக்கும் அப்போதைய கேப்டன் அசாருதீன், ஆட்டக்காரர்கள் சச்சின், கங்கூலி உள்ளிட்டோர் எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவரது நீக்கத்தைக் கண்டித்து ஹிந்து நாளிதழ் ஒரு கவர்ஸ்டோரி வெளியிட்டது. அவர் எந்தெந்த ஆட்டங்களில் பந்துகளை வீணடித்தார்; அந்த ஆட்டங்களில் திராவிட் மைதானத்திற்குள் வரும்போது இந்திய அணியின் நிலைமை என்னவாக இருந்தது என்ற புள்ளிவிவரங்களை உள்ளிட்ட அந்தக் கட்டுரை தேர்வாளர்களின் நியாயமற்ற நடவடிக்கையை மிக அழகாக எடுத்துக்காட்டியது.

சில மாதங்களுக்குப் பிறகு திராவிட் ‘டெஸ்ட் பந்தயங்களுக்கு மட்டும்’ என்ற “தலைவிதியோடு” அணிக்குள் வந்தார். அவரது ஆட்டம் பலமுறை இந்திய அணியின் தோல்வியைத் தவிர்த்தது. மெல்ல மெல்ல திராவிட் ஒருநாள் அணியிலும் இடம்பிடித்தார்.

இடையில் சில மேட்சுகளில் பந்துகளை வீணடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு மீண்டும் எழுந்தது. முதலில் வெறுமனே சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிஜமாகச் செய்துவிடுவாரோ என கிரிக்கெட் உலகம் அஞ்சிய போது அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார் திராவிட். டெஸ்ட் மேட்சுகளுக்கும் ஒருநாள் ஆட்டங்களுக்கும் ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் திறமையை வளர்த்துக்கொண்டார்.

தற்போது இந்தியாவின் மிகப்பொறுப்பான ஆட்டக்காரர்களில் ஒருவர். இந்திய ஆட்டக்காரர்களில் மேட்ச் வின்னர்கள் மூன்று பேர். அதிலொருவர் திராவிட். உலகத் தரம் வாய்ந்த ஆட்டக்காரர்களில் ஒருவர். டெஸ்ட் பந்தயங்களில் அவரது பொறுமை அசாத்தியமானது. கோட்டை விட்டுத் தவறும் பந்துகளை ஓட்டங்களாக்கும் வித்தையை லாவகமாகச் செய்கிறார்.

22 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவை வென்றதில் மிக முக்கியப் பங்கு திராவிட்டுக்கு இருக்கிறது. அவர் பெருமைப்படவேண்டிய ஒரு இன்னிங்ஸ் இது. இதுவே அவரது வாழ்க்கையின் மிகச்சிறந்த இன்னிங்ஸாகவும் அமையலாம். இதைவிட இன்னுமொரு சிறந்த இன்னிங்க்ஸையும் தரலாம். ஓர் இந்தியனாக, கிரிக்கெட் இரசிகனாக இரண்டாவது சொன்னதை எதிர்பார்க்கிறேன்.


“இந்தக் காட்சைத் தவறவிடாமல் பிடித்து ராகுல் திராவிட்டை அவுட்டாக்கியிருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கலாம்”

அஜித் பாலசந்திர அகர்க்கர்.

கபில்தேவுக்குப் பிறகு என்னை அதிகம் கவர்ந்த வேகப்பந்து வீச்சாளர் அகர்க்கர்தாம். அகர்க்கரைக் கபில்தேவுடன் ஒப்பிட முடியாது என்பது வாஸ்தவம்தான். இந்தியாவிலிருந்து வந்த உலகத்தரம் வாய்ந்த ஒரே பந்துவீச்சாளர் கபில்தேவ் மட்டுமே. ஆனாலும் அகர்க்கர் வசீகரிக்கிறார்.

இனி நான் சொல்லப் போவதெல்லாம் நினைவிலிருந்து மட்டுமே. புள்ளிவிவரங்களில் சில தவறுகள் இருக்கலாம். இணையத்தில் சரிபார்த்து எழுத நேரமில்லை. அதுவரை எழுதாமல் இருக்கவும் முடியவில்லை.

முதல் நான்கைந்து மேட்சுகளில் அத்தனைத் தூரம் அசத்தவில்லை என்றாலும் அவரது வேகம், மிதமான பந்துகள், சில இன் ஸ்விங்கர்கள், இந்தியப் பந்து வீச்சாளர்கள் மனோஜ் பிரபாகருக்குப் பிறகு மறந்து போயிருந்த யார்க்கர் என எல்லாவற்றையும் வீசி, கிரிக்கெட் நோக்கர்களின், விமர்சனர்களின் கவனத்தை ஈர்க்கத்தவறவில்லை
அந்த இளைஞர். வந்தது நியூசிலாந்து ஆட்டம். அகர்க்கர் ஒட்டுமொத்த இந்திய மக்களின் பார்வையில் பட்டார்.

இந்தியா முதலில் பேட் செய்து ஏறத்தாழ 230 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது. அடுத்து ஆடத்தொடங்கிய சிம்பாப்வேயின் ஆரம்பம் இந்த ஓட்டங்களை எளிதாக எட்டிவிடும் என்கிற எண்ணத்தைத்தான் இந்தியர்களுக்குக் கொடுத்தது. ஆனால் அகர்க்கரின் இரண்டாவது சுற்று அந்த எண்ணத்தை முற்றிலுமாகத் தகர்த்தது. நான்கு
விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகனானார் அகர்க்கர். அசாருதீன் அகர்க்கரை மிக அதிகமாக நம்பத்தொடங்கியதும் அப்போதுதான். அந்த ஆட்டத்தில் வர்ணணையாளர் டோனி க்ரெய்க் Its agarkkar, agarkkar, agarkkar என்று புகழ்ந்தார். அது மிகச் சில புதிய ஆட்டக்காரர்கள் மட்டுமே பெற்ற கிரெடிட்.

நினைவிலிருக்கும் அகர்க்கரின் இன்னொரு ஆட்டம் இலங்கையுடனானது. முதலில் பேட் செய்த இந்தியாவின் துவக்கம் மிக மோசமானதாக இருந்தது. அடுத்தடுத்து முன்னணி விக்கெட்டுகள் சரிய தத்தளித்துக்கொண்டிருந்த இந்தியாவைத் தோளில் சுமக்க ஆரம்பித்தார்கள் ராபின்சிங்கும், ஜடேஜாவும். இந்த மாதிரி விஷயங்கள் அவர்கள் இருவருக்கும் புதியதல்ல. ஏற்கனவே பல ஆட்டங்களைத் தங்கள்
தோளில் தூக்கி சுமந்திருக்கிறார்கள் அவர்கள் இருவரும். இந்தமுறையும் அவர்கள் அப்படிச் செய்ய நினைத்துத்தான் ஆடினார்கள். ஆக்ரோஷமான வாசின் பந்துவீச்சை அவர்கள் சமாளித்து, எடுக்கமுடிந்த ஓட்டங்கள் 173 மட்டுமே. அப்போது இலங்கை சிம்ம சொப்பனமாக விளங்கிய நேரம். டிசில்வாவும் ஜெயசூர்யாவும் கலுவிதரனேயும் ரணதுங்காவும் – நான்குபேரும் ஒரே மேட்சில் ·பார்மில் இருபபர்கள் – ·பார்மில் இருந்த நேரம். இந்த இலக்கு ஓர் இலக்கே அல்ல என்றுதான் நாங்கள் பேசிக்கொண்டோம். ஆனால் இந்தியப் பந்து வீச்சு இலங்கை ஆட்டக்காரர்களைத் தகர்த்தது. முதல் ஆறு ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்தது இலங்கை. முதல் ஓவரில் அகர்க்கர், இரண்டாவது ஓவரில் ஸ்ரீநாட் என மாறி மாறி விக்கெட்டுகள் எடுத்து முதல் ஆறு ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஒரு வழியாகத் தாக்குப்பிடித்து ஆடிய இலங்கை 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மூன்று விக்கெட்டுகள் எடுத்திருந்த அகர்க்கர் ஆட்ட நாயகனானார். அன்றைக்கு அவரது பந்துவீச்சிலிருந்த ஆக்ரோஷம் இன்னும் கண்ணில் இருக்கிறது. அரவிந்த் டி சில்வா ஒரு பந்தை மறிக்கும்போது, பேட்டின் விளிம்பில் பட்ட பந்து கீப்பரின் கையில் தஞ்சம் புகுந்தது. அகர்க்கர் உள்ளிட்ட இந்தியர்கள் அரவிந்த டி சில்வாவின்
அவுட்டென நினைத்து சந்தோஷப்பட, அரவிந்த டி சில்வா அம்பயரின் அறிவிப்பிற்காகக் காத்திந்தார். அம்பயர் அவுட் தரவில்லை. மூன்றாவது அம்பயரிடம் கேட்க மறுத்துவிட்டார். அகர்க்கார் சோர்ந்துபோனார். ரீப்ளேவில் டி சில்வா அவுட்டானது தெளிவாகத் தெரிந்தது. இதையெல்லாம் கணக்கில் கொண்டு அகர்க்கருக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது. (அன்றைக்கு ஸ்ரீநாத்தும் மூன்று விக்கெட்டுகள் எடுத்திருந்தார்)

இன்னொரு ஆட்டம் நியூசிலாந்துடனானது. இந்த முறை அகர்க்கர் “அதிரடியைக்” காட்டினார். ஒருகாலத்தில் தேவையான ஓட்ட விகிதம் (Req. Run Rate) எட்டை எட்டி, இந்தியா ஜெயித்தது ரொம்பக் குறைவு. போராடித்தோற்கும் ஓரணியாகத்தான் இந்தியா இருந்தது. ராபின் சிங்கின் வரவிற்குப்பின்னர்தான் இந்தியா போராடி ஜெயிக்க ஆரம்பித்திருந்தது. அன்றைக்கும் அப்படி ஒரு நிலைமைதான். ஏறத்தாழ பத்து பந்துகளில் 13 ரன்களை எடுக்க வேண்டிய நிலைமை. எல்லோரும் இராபின்சிங்கை நம்பியிருக்க, அவரோ பந்து மட்டையில் சிக்காது போராடிக் கொண்டிருந்தார். யாரும் எதிர்பார்க்காத ஒரு விதமாக, மூன்று இரண்டுகள் ஒரு ஆறு எடுத்து இரண்டு பந்துகள் மீத மிருக்கும் நிலையில் ஆட்டத்தை முடித்துவைத்தார் அகர்க்கர். “அட.. பேட்டிங்க் கூட வருமா” என்று சொல்ல வைத்தார். பின்னொரு சமயத்தில் 21 பந்துகளில் 70 ரன்கள் எடுத்துச் சாதனை படைத்தார். இன்றைக்கும் குறைந்த பந்துகளில் ஐம்பது எடுத்த இந்தியச்சாதனை அகர்க்கர் செய்ததுதான். அந்த ஆட்டத்தில் முதல் ஆறு பந்துகளில் அவர் எடுத்த ஓட்டங்கள் ஒன்றோ இரண்டோ. (இது பற்றிய சரியான புள்ளிவிவரத்தை பத்ரி தருவாரா?) இல்லையென்றால் பந்துவீச்சில் செய்த சாதனையைப் போலவே பேட்டிங்கிலும் ஒரு சாதனை நிகழ்த்தியிருப்பார் அகர்க்கர். பந்துவீச்சில் அவர் செய்த சாதனை, குறைந்த ஆட்டங்களில் (24 ஆட்டங்கள்) முதல் ஐம்பது விக்கெட்டுகளை எடுத்தது. இது ஒரு உலகச்சாதனை.


“எப்போதும் இதே போல் எறிவாரா அகர்க்கர்?”

அகர்க்கரின் பலவீனம் எனப் பார்த்தால் சில சமயம் லைன் கிடைக்காமல் திண்டாடுவது. ஒரு நாலோ ஆறோ போய்விட்டால் அடுத்த பந்தில் லைனுக்குள் வருவது ஒரு சிறந்த பந்துவீச்சாளரின் தேவை. இந்தப் பண்பு அகர்க்கரிடம் இல்லை. தொடர்ந்து நான்கோ, ஆறோ கொடுத்த வண்ணம் இருப்பார். ஸ்லோ யார்க்கரின் போது கொஞ்சம் கவனம் சிதறினால் ·புல்டாஸாகிவிடும். அந்தப் பந்து எல்லைக்கோட்டிற்குப் போவது உறுதி. ஸ்ரீநாத் அடிக்கடிச் செய்யும் தவறை அகர்க்கரும் செய்கிறார். அகர்க்கரின் பலம் என்று பார்த்தால் எந்தவொரு சூழ்நிலையிலும் டென்சன் ஆகாதது.

கொஞ்சம் ஆலோசனைகள் வழங்கப்பட்டு சீர் செய்ய முடிந்தால், இந்தியாவிலிருந்து இன்னொரு உலகத்தரம் வாய்த்த ஆல்ரவுண்டர் வருவார், கபிலுக்குப் பிறகு.

Share

நாடோடி – கவிதை

இடது மேல் மூலையில்

மின்னொளிர் ஊதுபத்தி

தொடர்ந்து பேனா, குறிப்பெடுக்க தாள்

கைகட்டிய விவேகானந்தர்

கணினி

தீபாரதனை மணி சகிதம் விர்ச்சுவல் பூஜை

அரட்டைக்கு இயர்·போன்

ஸ்க்ரீன் சேவராய் குடும்பப்படம்

எஸ் எம் எஸ்ஸில் அதிரும் கைத்தொலைபேசியென

மர மேஜையின் நான்கு மூலைகளுக்குள்

சுருங்கிவிட்டது

உலகம்

வரவழைத்துக்கொண்ட சந்தோஷத்துடன்

சின்னச் சின்னச் சண்டைகள்,

உயிர்ப்பகிர்தலின்றி.

Share

மேல் பார்வை – சுந்தரராமசாமி – சிறுகதைத் தொகுப்பு

 

=====================

நிர்மால்யா வெளியீடு,

48, முதலியார் தெரு,

கிருஷ்ணன் கோவில்,

நாகர்கோவில் – 629001

=====================

சுந்தரராமசாமி பல்வேறு காலகட்டங்களில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம். ஒன்பது சிறுகதைகள் இருக்கின்றன. மற்றச் சிறுகதைத் தொகுப்புகளிலிருந்து இந்தத் தொகுப்பு மாறுபட்டிருப்பதற்கு ஒரு காரணம், இதிலுள்ள கதைகள் எழுதப்பட்ட வருடங்கள். 1953 தொடங்கி 1990 வரையிலான வருடங்களில் வெவ்வேறு காலங்களில்

எழுதப்பட்ட கதைகள் புத்தகத்தை அலங்கரிக்கின்றன.

எழுதத்தொடங்கும்போது சுந்தரராமசாமியின் எழுத்து மிக வித்தியாசமானதாக இருந்துவிடவில்லை என்பதை அறிய முடிகிறது. ஆனால் 1990ம் ஆண்டில் எழுதப்பட்டு இந்தியாடுடேவில் வெளியாகிய மேல்பார்வை கதையில் அவரது எழுத்தின் நவீனம் தெரிகிறது. வெவ்வேறு காலகட்டங்களில் அவரது எழுத்து எப்படி மாறிக்கொண்டேயிருந்திருக்கிறது என்பதை அவதானிக்க விரும்புகிறவர்கள் இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்.

முதல் கதையாகத் தண்ணீர். 1953ல் எழுதப்பட்டது. மழையில்லாமல் வாடும் பயிர்களுக்குத் தண்ணீரில்லை. ஆனால் அந்த வருடத் தெப்போற்சவத்துக்காகத் தண்ணீர் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. அதை அறிந்து கொதித்தெழும் மக்கள் மறைத்துவைக்கப் பட்டிருந்த நீரின் வரப்பை உடைத்து பயிருக்குத் திருப்பி விடுகிறார்கள். போலீஸ் வந்து ‘கலகக்காரர்களைக்’ கொண்டு செல்கிறது. கதை இவ்வளவுதான். சில இடங்களில் அழகான அங்கதம் தெரிகிறது. நெல்லை வட்டார வழக்கு எல்லாக் கதைகளிலும் மாதிரி இதிலும் அழகாகக் கையாளப்பட்டிருக்கிறது.

அடுத்த கதை கோவில் காளையும் உழவு மாடும். 1955ல் எழுதப்பட்டது. தொலைதூரத்திலிருந்து வரும் கிழவன் ஒருநாள் இராத்தங்க கோவில் பண்டாரத்திடம் அனுமதி கேட்கிறான். பின் நிரந்தரமாகத் தங்கி விடுகிறான். அந்தக் கிழவன் யாருக்கும் தெரியாமல் தன்னந்தனியாளாய் கிணறு தோண்டுகிறான். உடம்பு மிக மோசமாகி, தான் தோன்றிய கிணற்றில் ஊறிய நீரைப் பருகிவிட்டு, கண்ணை மூடுகிறான். கதை விவரிக்கப்பட்ட விதம் மிக அழகு. கூடவே இருக்கும் பண்டாரத்தின் மன மாற்றங்களும் இயல்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

அடுத்த கதை சன்னல். 1958ம் வருடம் எழுதப்பட்டது. எல்லாக் கதைகளைப் படித்த பின் மனதுக்குள் ஊடுருவிக்கொண்டு, கீழே இறங்க மறக்கும் கதைகளுள் முதன்மையானது சன்னல் கதை. படுத்த படுக்கையாகக் கிடக்கும் ஒருவனின் மன ஓட்டங்கள் தான் கதை. ஒரு குளவி நெஞ்சில் விழுந்துவிட, கத்த முடியாமல், கை கால் அசைக்க முடியாமல் அவன் பதறும் காட்சிகள் படிப்பவர்கள் மனதுக்குள் பெரும் போராட்டத்தை ஏற்படுத்திவிடுகின்றன. அப்படியிருக்கும் அந்த ‘அவனுக்கு’ ஒரே ஒரு ஆறுதல் சன்னல். சன்னல்தான் உலகம். சன்னல் வழியாக வெளியில் நிகழும் காட்சிகளைக் காண்பது மட்டுமே அவனுக்கு வாழ்க்கை. மூங்கிலை வண்டு ஓட்டை போடுவதையும், ரோஜாவைத் திருடிப் பால்செம்பில் போட்டுக்கொள்ளும் பால்காரி மகளையும், கன்றுகளாக நட்ட வாழைகள் மரமாகிச் செழித்து நிற்பதையும் பார்த்துப் பார்த்துச் சந்தோஷிக்கும் அவனது வாழ்க்கையில் ஒரு இடி விழுகிறது. சன்னல் வழியாக வீசும் தணுப்புக் காற்று உடலுக்காது எனத் தடுப்புச் சுவர் எழுப்புகிறார்கள். அவனது அழுகையோடு கதை முடிகிறது. வாச்கர்கள் மட்டும் தொடர்ந்து அழுதுகொண்டிருப்பார்கள் என்பது நிச்சயம். கதையின் எளிமையும் உணர்வும் மனது மறக்காத கதையாக்குகின்றன. (இதே கதையை சல்மாவும் அவரது நேர்காணலில் பாராட்டியிருந்தார்.)

அடுத்தது ஸ்டாம்பு ஆல்பம். (1958) பள்ளி மாணவர்களுக்கு மாணவப்பருவத்தில் ஏற்படும் அசூயையையும் அதன்காரணமாக நிகழும் சில நிகழ்வுகளையும் சொல்லும் கதை. தனது ஸ்டாம்பு ஆல்பத்தை விட இன்னொருவனின் ஸ்டாம்பு ஆல்பம் அழகாக இருக்கிறது என்று எல்லோரும் சொல்வதைப் பொறுக்காமல் எரித்துவிடும் சிறுவன் அதற்காக வருந்துகிறான். தாந்தான் எரித்தது எனக் கண்டுபிடிக்கப்பட்டுவிடுவோமோ என்று பயப்படுகிறான். எரித்த தவறுக்காக வருந்தி, தனது ஆல்பத்தை மனமில்லாமல், இன்னொருவனுக்கு விட்டுக்கொடுக்கிறான். எந்தவிதச் சிக்கலுமில்லாமல் எளிமையாகப் பயணிக்கும் கதை. சிறுவர்களின் பேசும் விதமும் பேச்சும் வெகு நேர்த்தியாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

சீதைமார்க் சீயக்காய்த்தூள். பணத்துக்காக சீதையை ‘எடுப்பாக’ வரையச் சொல்லும் கதை. அங்கதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. வறுமையிலும் நியாயம் பேசும் கலைஞன் காட்டப்பட்டிருக்கிறான். வட்டார வழக்குத்தான் கதையை தூக்கிப்பிடிக்கிறது. மற்றபடி கதையில் ஆழமாக ஒன்றுமில்லை. ஆனாலும் எழுதின வருடம் 1959 என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

சன்னல் கதையை அடுத்து மனதைத் தொடும் இன்னொரு கதை. எங்கள் டீச்சர். (1962). மிக நெருக்கமானத் தோழிகளாக இருக்கும் இரண்டு டீச்சர்கள் ஒரு சின்ன நிகழ்வில் பிரிகிறார்கள். மோசமான வகுப்பைத் தனது திறமையால் ஒரு டீச்சர் முதன்மையாகத் தூக்கி நிறுத்த, இன்னொரு டீச்சர் பொறாமையில், கேள்விகளைச் சொல்லித் தந்து முதன்மை பெறச் செய்துவிட்டாள் குற்றம் சாட்டுகிறார். நேர்மையான டீச்சர் நொறுங்கிப் போகிறார். வெளியூரில் கேள்விகள் தயாராகும் அடுத்த தேர்வில் தனது மாணவர்களை மீண்டும் முதன்மை பெறச் செய்து தனது

நேர்மையையும் தனது மாணவர்களின் திறமையையும் நிரூபிக்க ஆயத்தமாகிறார். எதிர்பாராத விதமாக அந்தத் தேர்வில் தவறிழைக்கும் தனது மாணவிக்கு, மறைமுகமாகச் சொல்லித் தர முனையும்போது கையும் களவுமாகப் பிடிக்கப்படுகிறார். தவறை ஒத்துக்கொண்டு வேலையை விட்டே போய்விடுகிறார் நேர்மையான டீச்சர். கதையில் இரண்டு

டீச்சர்களுக்கிடையேயான அன்னியோன்யமும் நட்பும், ஒரே ஒரு அசூயையில் (பொறாமை)அது உடைந்து போவதும் எந்தவித மேல்பூச்சுகளும் இல்லாமல் யதார்த்தமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. தனது மாணவி மீண்டும் வென்றே

ஆக வேண்டும் என்ற நினைப்பில், “நேரமிருக்கிறது. சரி பார்” என இரண்டு மூன்று முறை நிர்பந்திக்கும்போது நமக்கே அந்த டீச்சரின் மீது பச்சாதாபம் தோன்றி விடுகிறது. நடையின் வெற்றி.

விகாசம். 1990ல் எழுதப்பட்ட கதை. கண் தெரியாத ராவுத்தருக்கு ஒரு திறமை. நொடியில் கணக்குப் போடுவார். அவர் இல்லையென்றால், ஓணத்தின் பரபரப்பான ஜவுளி வியாபாரத்தைச் சமாளிக்க முடியாது என்கிற அளவுக்கு அவரின் தேவை இருந்தது. எதிர்பாராத விதமாய் அவருக்குப் பெரிய இடி ஒன்று கால்குலேட்டர் வடிவில் வந்து சேர்கிறது. அவரை பெயர்த்துகிறது கால்குலேட்டர். அவரின் முக்கியத்துவம் குறைவதாக உணர்கிறார். சிப்பந்திகள் தொகையைச் சொல்ல, முதலாளி கால்குலேட்டரைத் தட்ட, வியாபாரம் கனஜோராக நடக்கிறது. யாரோ ஒரு சிப்பந்தி விலையைத் தவறாகச் சொல்ல, அதை திருத்துகிறார் ராவுத்தர். தவறாகச் சொல்லப்படுவது கால்குலேட்டருக்குத் தெரியாது என்பதை உணர்கிறார் முதலாளி. ஸ்டாக் விவரம், கரண்ட் பில் என்று கட்டவேண்டும் என்பன போன்ற விவரங்களைச் சரியாகச் சொல்கிறார் இராவுத்தர். கால்குலேட்டர் வருவதற்கு முன்பு ‘கால்குலேட்டராக’ இருந்த இராவுத்தர் அதன் வரவுக்குப் பின்னர் மானேஜராகிறார் என்பதோடு முடிகிறது கதை. தன்னை மிஞ்ச ஆள் கிடையாது என்ற போது இராவுத்தரின் நக்கலும் குத்தலும் திமிரும், திடீரென ஒருநாள் அவரது பேத்தி, அவரை விட வேகமாகக் கணக்கைச் சொல்ல, அதிரும் இடமும் அதற்குக் காரணம் கால்குலேட்டர் என்று அறிந்து அதைத் தொட்டுப் பார்த்துப் பயப்படும் இடமும் அருமை. கால்குலேட்டர் எல்லாக் கணக்கையும் செய்யத் தொடங்கும்போது நக்கல், குத்தல் பேச்சில்லாமல் நடைபிணமாகிறார். கால்குலேட்டர் செய்ய முடியாத காரியங்களை அவர் செய்யத் தொடங்கும்போது மீண்டும் நக்கல், குத்தல் எல்லாம் வந்து சேர்கிறது அவருக்கு. கடைசியாக, “இப்போ இப்ராஹிம் ஹசன் ராவுத்தர் கணக்கு மிஷின் இல்லே. மானேஜர். ஆண்டவன் சித்தம்” என்று இராவுத்தர் சொல்வது நச் கமெண்ட்.

அடுத்த கதை மேல்பார்வை. 1994-95ம் ஆண்டுக்கான இந்தியாடுடே ஆண்டுமலரில் வெளியான கதை. இதுவரை கதைகளில் இல்லாதிருந்த கதைக்களம் பற்றிய விவரிப்புகள் அதிக அளவில் இடம் பெறுகின்றன. எழுத்தில் நவீனம் தெரிகிறது. கூடைப்பந்தாட்டம்தான் கதை. அதன் நடுவர் ஒரு பெண். மைதானத்தில் அந்தப் பெண்ணின் வேகத்தால் கிராம மக்கள் வசீகரிக்கப்படுகிறார்கள். கடைசியில் அதிகம் உணர்ச்சிவசப்பட்ட கிழவி ஒருத்தி, ஆட்டத்தில் நடக்கும் தவறை சுட்டிக்காட்டி, சரியான தீர்ப்பைச் சொல்லும் நடுவர் பெண்ணுக்குப் பாராட்டைத் தெரிவிக்கிறாள். ஆட்டத்தைப் பார்க்கும் கிழவியின் கமெண்ட்கள் கிராமத்தை கண்முன் கொண்டுவருகின்றன. இந்தக் கதையில் வரும் சில வரிகளைக் கண்டிப்பாகக் குறிப்பிட்டே ஆகவேண்டும். “செப்பனிடப்பட்ட ஒரு படியின் மீது சிமெண்ட் காய்வதற்கு முன் கெட்ட வார்த்தை ஒன்றை ஒரு கை எழுதி வைத்திருக்கிறது. அதன் இருப்பு கஷ்டம். அதைப் பார்ப்பதைத் தவிர்ப்பதில் அடையும் தோல்வி அதைவிடக் கஷ்டம்”. பலமுறை நான் அனுபவித்த விஷயம் இது.

பக்கத்தில் வந்த அப்பா. கடைசி கதை. 1987ல் எழுதப்பட்டது. தொலைபேசி பிரபலாமாகாத காலத்தில் அப்பாவுக்குத் தொலைபேசி அழைப்பு வருகிறது. சிறுவயது மகன் கூடச் செல்கிறான். அப்பாவுக்குத் தொலைபேசியில் பேசத் தெரியாமல் போகவே மகன் பேசுகிறான். அவனது பெரியப்பா இறந்த செய்தியை அப்பாவுக்குச் சொல்கிறான். அப்பா இடிந்து போகிறார். வரும் வழியெல்லாம் அழுது புலம்புகிறார், தன் பாசமான அண்ணன் மறைவுக்காக. வீட்டுக்கு வந்து இடிந்து போய் உட்கார்ந்துவிடுகிறார். மகன் தாந்தான் அப்பாவுக்கு உதவினதாய் எல்லோரிடமும் சொல்லிப் பெருமை பட்டுக்கொள்கிறான். ஆனால் அப்பா அதைச் சொல்லாமல், அவரது அண்ணன் மறைவுக்காக வருந்துவது அவனுக்கு வருத்தமாக இருக்கிறது. அந்தச் சிறுவனின் அக்கா அவன் பொய் சொன்னதாக அவனைக் கேலி செய்கிறாள். மனம் நொந்து போன அவன் இப்படிச் சொல்கிறான்: ” இன்னொரு பெரியப்பா வருவாரே.. அவர் செத்துப்போகும்போது போன் வரும். அப்பவும் நான் அப்பாக்கூடப் போவேன். அப்பத்தெரியும் உனக்கு”. ஒரு சிறுவனின் மன ஓட்டங்கள் சொல்லப்பட்ட விதம் கதையின் பலம். நேர்த்தியான நடை. அப்பாவின் குணநலன்களும் அம்மாவும் அக்காவும் அப்பாவைக் கிண்டல் செய்வதும், தானும் அவர்களைப் பார்த்துப் படித்து அப்பாவைக் கிண்டல் செய்வதும், பின்னர் தனக்குப் பெரியத்தனம் வந்துவிட்டதாகத் தானே நினைத்துக்கொள்வதும் என அந்தச் சிறுவனின் மனஓட்டம் நம்மை வசீகரித்துக்கொள்கிறது.

எல்லாக் கதைகளும் நன்றாக இருந்தாலும் சன்னல் கதையும் எங்கள் டீச்சர் கதையும் பக்கத்தில் வந்த அப்பாவும் மனசுக்குள்ளேயே தங்கிவிடுகின்றன. இந்தப் புத்தகத்தில், என் பார்வையில் இந்த மூன்று கதைகளும் சிறந்த கதைகள்.

Share