அக்ரஹாரம், முத்தரசநல்லூர், திருச்சி.
“அதோ அவர்தாண்டா!” என்று இராமகிருஷ்ணன் (எனக்கு இராம்கி) அவரைக் காண்பித்தான். முகத்தில் வெள்ளைத்தாடியும் மிக மெல்லிய ஃபிரேமினாலான மூக்குக்கண்ணாடியும் தீர்க்கமான கண்களுமாக முதல் பார்வையிலேயே எனக்குப் பிடித்துப்போனார். அப்பழுக்கில்லாத, சுருக்கங்களற்ற காவி வேட்டி உடுத்தியிருந்தார். வெள்ளைத்தாடியும் காவி வேட்டியும், இராம்கி அவரைப் பற்றிச் சொன்ன விஷயங்களும் அவர்பால் மிகுந்த மரியாதை கொள்ளச் செய்தன.
கணேசன்ஜி ஓர் அறிமுகம் என்று பெரிய குரலில் விவித்பாரதியில் வருகிறமாதிரி நிகழ்ச்சி விவரிக்கும் தொனியோடு இராம்கி கணேசன்ஜியைப் பற்றிச் சொன்ன விஷயங்களைச் சுருக்கிச் சொன்னால் இப்படிச் சொல்லலாம்.
அவர் குடும்ப வாழ்க்கை அத்தனைச் சிலாக்கியமாக இல்லை- ஏமாறி, புத்திசுவாதீனமில்லாத ஒருவனைக் கல்யாணம் செய்துகொண்டு அவனோடு வாழப்பிடிக்காமல் தாய்வீட்டுக்கு வந்த ஒரு பெண்ணுக்கு மறுவாழ்க்கை கொடுத்தார்- ஒரே வருடத்தில் அந்தப் பெண் பேப்பர் போடும் ஒருவனுடன் ஓடிப்போனாள்- அன்று முதல் தனியாகத்தான் இருக்கிறார்- ஓடிப் போன கணேசன்ஜியின் மனைவி, தன் பையனுடன் இப்போது இதே தெருவில்தான் இருக்கிறாள்.
அந்தப் பையன் யாருக்குப் பிறந்திருப்பான் என்ற சந்தேகம் உள்ளிட்ட பல விஷயங்களை இராம்கி கிண்டலும் கேலியுமாகச் சொன்னான். விரிவான அறிமுகத்தில் எனக்குத் தேவையானதைத் தவிர மற்றதையெல்லாம் நான் மறந்தாகிவிட்டது.
எத்தனைக் கெஞ்சியும் இராம்கி அவரிடம் என்னை அறிமுகப்படுத்திவைக்க மறுத்துவிட்டான். அவனைப் பார்த்த பார்வையிலேயே கணேசன் மாமாவுக்குக் கோபம் வருமென்றான். அவன் அவரைக் கணேசன் மாமா என்றுதான் அழைக்கிறான்.
“சொன்னா கேளுடா.. லீவுக்கு வந்தோமா என்ஜாய் பண்ணோமா.. காலேஜ்ல சேர்ந்தோமா.. சைட் அட்ச்சோமான்னு இரு.. இங்கிலீஷ்லாம் தானா வரும்.. அதுவுமில்லாம, முந்தா நேத்து சைக்கிள்ல போகும்போது அவர் மேல மோதிட்டேன். கீழே விழுந்துட்டார். நா நிக்காம போயிட்டேன். மனுஷன் கடுப்புல இருக்கார். நேத்து அப்பாக்கிட்டக் கூடச் சத்தம் போட்டுருக்கார். நா வந்து உன்னை அறிமுகப்படுத்தி வெச்சா சரியா வராது. கர்வி. இங்க்லீஷ்ல தாட் பூட்ம்பார். அதைக் கேட்டா இருக்கிற இங்கிலீஷும் மறந்துடும்.”
கணேசன்ஜிக்குக் கோபம் வந்தால் இங்கிலீஸ்தான் பேசுவார். எதிரே நிற்கும் நபருக்கு இங்கிலீஸ் தெரியுமா என்றெல்லாம் பார்க்கமாட்டார். ஹிந்தி சொல்லிக் கொடுக்கும்போது கூட அப்படித்தான். யாராவது எஸ்ஸே படிக்காமல் வந்தால் இங்கிலீஸ்தான். அவரது இங்கிலீஸ்க்குப் பயந்தே ஹிந்தி ட்யூஷன் நிறுத்தியவர்கள் அநேகம்பேர்.
இராம்கி தன் முடிவில் உறுதியாக இருந்துவிட்டபடியால் வேறு வழியில்லாமல் நானே அவர் வீட்டுக்குச் சென்றேன். வாசலில் நான் நிற்பதைப் பார்த்து சைகையால் உள்ளே வரச் சொன்னார். ரேழியில் “ஸ்வாகதம்” என்று ஹிந்தியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. வரிசையாக நிறையப் பெரிய மனிதர்களின் படம் இருந்தது. அவர்களில் எனக்குத் தெரிந்த ஒருவர் விவேகானந்தர் மட்டும்தான். ரேழியைத் தாண்டி முதல்கட்டில் ஒரு நாற்காலியைக் காண்பித்து அமரச் சொன்னார்.
“இல்லைங்க நா நின்னுக்கிட்டு. ..”
உட்கார் உட்கார் என்று சைகையிலேயே சொன்னார். நான் உட்கார்ந்துகொண்டேன். வாயில் குதப்பிக்கொண்டிருந்த வெற்றிலையை வெளியில் சென்று துப்பிவிட்டு வந்தார். நான் எழுந்து நின்றுகொண்டேன். உட்கார் உட்கார் என்று மீண்டும் சைகை காண்பித்துவிட்டுப் பின்னால் சென்றார். உட்கார்ந்தபடியே நான் அறையை முழுதும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தேன். வால்வு ரேடியோ இருந்தது. (அவருக்கு ரேடியோ கேட்பதில் ஆர்வம் அதிகம் என இராம்கி ஒருமுறை சொன்னான். சினிமாப்பாட்டுன்னா பைத்தியம் என்றான் கூட இருந்த த்ரிலோச்சன்.) வாய் கொப்பளிக்கும் சத்தம் சிறிது நேரத்தில் நின்றது. அவர் நடந்து வரும் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடிக்கொண்டே வந்து….
“சொல்லுங்கோ” என்றார்
காவி வேட்டி. அழுக்கே இல்லாத வெள்ளை நிற ஹவாய் செப்பல். ராம ராம என ஹிந்தியில் எழுதப்பட்ட மேல் துண்டு. இரண்டு ஸ்படிக மாலைகள். ஒரு உத்திராட்ச மாலை. குருவாயூரப்பன் வெள்ளி டாலர். விபூதிப் பட்டை. குங்குமம். எனக்குப் புல்லரிப்பது போல இருந்தது. அப்படியே பார்த்துக்கொண்டு நின்றேன். இதுமாதிரி நிறையச் சமயங்களில் தேவையில்லாமல் ஸ்தம்பிப்பதாக இராம்கி என்னைக் குற்றப்படுத்தியது ஞாபகம் வந்தது.
‘க்கும்’ என்ற செருமலுக்குப் பின் “சொல்லுங்கோன்னேன்” என்றார்.
மெல்லிய சத்தத்தில் அறையில் வியாபித்திருக்கும் பாட்டின் தொடக்கம் என்னவாயிருக்கும் என்ற என் சிந்தனையைப் புறந்தள்ளிவிட்டு என்னைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் சொன்னேன். பன்னிரண்டாம் வகுப்பு விடுமுறைக்கு அத்தை வீட்டுக்கு வந்ததைச் சொன்னேன். இராம்கியின் நண்பன் எனச் சொன்ன போது, நான் அறிந்த வரையில் அவர் முகத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை.
“என்ன வேணும் உங்களுக்கு?”
“நா இங்கிலீஸ் கத்துக்கணும். நா இங்கிலீஸ்ல ரொம்ப வீக்”
“நா இதுவரைக்கும் யார்க்கும் இங்கிலீஷ் சொல்லிக் கொடுத்ததில்லை. ஹிந்தி சொல்லித்தரத்தான் தெரியும். யாரோ உங்ககிட்டத் தப்பா சொல்லியிருக்கா” என்றார்.
“ஷ்”-ல் ஓர் அழுத்தம் கொடுத்த மாதிரி இருந்தது. குரலில் மென்மையும் தீர்க்கமும் இழைந்தோடியது. காவி வேட்டியின் ஒரு நுனியைக் கழுத்தின் பின்வழியாகச் சுற்றி மறுபக்கமாக இழுத்துக்கொண்டார். தரையைப் பார்த்துக்கொண்டே பேசினார். எனக்குப் பார்க்க கண்கள் பாதி மூடியிருந்தது மாதிரி இருந்தது. ஏதோ ஒரு ஞாபகத்தில் நான் பேச ஆரம்பித்தேன்.
“இல்லை. நீங்க கோபத்துல நல்லா இங்கிலீஸ் பேசுவீங்கன்னு..” நாக்கைக் கடித்துக்கொண்டேன். எத்தனைப் பெரிய அபத்தத்தைச் செய்திருக்கிறேன் என்று உணரத் தொடங்கிய போது உடம்பு நடுங்க ஆரம்பித்தது. உள்ளங்கைகள் சில்லிடுவதை உணர்ந்தேன். கணேசன்ஜியிடம் எந்தவொரு மாற்றமும் இல்லை. கண்கள் என் பார்வைக்கு அதே மூடிய நிலையில்தான் இருப்பதாகப்பட்டது. கூடுதலாக வாய் எதையோ முணுமுணுத்துக்கொண்டிருந்தது. ஸ்லோகம் சொல்வாராயிருக்கும். (“ஸ்லோகம் சொல்றதெல்லாம் வெறும் படம். ‘அது’ மாதிரிப் புத்தகங்கள் நிறைய வெச்சிருக்காராம். ட்யூசன் படிக்கிறச்சே த்ரிலோச்சன் பாத்துருக்கானாம்” என்றான் இராம்கி)
“சரிங்க. நா அப்புறம் வர்றேன்” என்று சொல்லிவிட்டு, அவர் பதிலுக்கு என்ன சொல்கிறார் என்று கூடக் கவனிக்காமல் வெளியில் வந்தேன்.
அவர் என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பார்? அவரைப் பற்றி எல்லாம் தெரிந்துகொண்டு வந்திருப்பதாக நினைத்திருப்பாரோ? ஒருவேளை நானும் இராம்கியும் அவரை நக்கலடிப்பதகாகக் கூட நினைத்திருக்கலாம். அதை அவரிடம் விளக்க முடியாது. கண்ணைப் பார்க்காமல் பேசும் எதிராளியிடம் பேச என்ன இருக்கிறது. கர்விதான். நான் தீர்மானித்தேன்.
இராம்கியிடம் சொன்னேன். சத்தமாகச் சிரித்தான். “நா தேவலைனு நினைச்சிருப்பார் மனுஷன்” என்றான்.
“இப்ப என்ன பண்ண இராம்கி?”
“ஒண்ணும் பண்ணவேண்டாம். இங்கிலீஷ் படிக்கிறதைவிட நிறைய இருக்கு. நா சொல்லித் தர்றேன். கௌசு உன்னை ரொம்ப விசாரிச்சா. அவளப் பத்தி டிஸ்கஸ் பண்ணலாம்” என்றான். “தலையிலிருந்து ஆரம்பிக்கட்டுமா” என்றவன் விவகாரமான சைஸ் ஒன்றைச் சொன்னான். பிடிக்காதது போல் தலையில் அடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தேன்.
அத்தையும் மாமாவும் வராண்டாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.
“எங்கப்பா போன? இப்பதான் ராஜாவை விட்டு உன்னைக் கூப்பிட்டுக்கிட்டு வரச் சொன்னேன். கணேசன் மாமா ஊட்டுக்கு வந்திருந்தாரு. உன்ன நாளைக்கு அவர் ஊட்டுக்கு வரச் சொன்னாரு. என்னடா விஷயம்?” என்றாள் அத்தை. “அவரு நம்ம ஊட்டுக்குலாம் வருவாருன்றதே இப்பத்தான் எனக்குத் தெரியும். வந்து நாலு நாள்ல எப்படி அப்படிப் பழகின?” என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டே இருந்தார் மாமா. நானும் ஆச்சரியம், சந்தோஷம், அதிர்ச்சி உள்ளிட்ட ஏதோ ஒன்றைப் பட்டுக்கொண்டேன்.
கணேசன்ஜி இங்கிலீஷ்தான் சொல்லித் தந்தார். ஆனால் நான் அதைத் தவிர நிறையக் கற்றுக்கொண்டேன். உண்ணும்போது சோற்றைப் பிசையும் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். ஐந்து விரல்களைத் தவிர வேறெங்கும் ஒரு பருக்கை ஒட்டாது. வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் வரும்போது செருப்பைக் கழற்றி வைப்பார். இரண்டு செருப்பையும் ஜோடியாகத்தான் விடுவார். (என் குடும்பத்தில் எல்லார் வீட்டிலும் செருப்புகள் மூலைக்கொன்றாய்த்தான் கிடக்கும்.) காஃபி சாப்பிட்ட கையுடன் லோட்டாவைக் கழுவி அதற்குரிய இடத்தில் தலைகீழாகக் கவிழ்த்து வைப்பார். தினம் தினம் குளிக்கும் முன்பு அவரது உடைகளைத் துவைத்து விடுவார். துவைத்தவற்றைக் காயவைப்பதில் கூட கணேசன்ஜி தனிவிதம். ஏனோ தானோ என்றில்லாமல் (அப்படிச் செய்தால் நமக்கும் கணேசன்ஜிக்கும் என்ன வித்தியாசம்?) ஈர வேட்டியை உதறிக் கொடியில் காயப் போட்டு இரண்டு பக்கத்து நுனிகளையும் ஒரே அளவாக வைப்பார். சுருக்கங்களில்லாமல் இரண்டு கைகளாலும் ஈரவேட்டியை இழுத்துவிடுவார். அப்படிச் செய்த வேட்டி காய்ந்த பின்னர் அயர்ன் செய்தது மாதிரி இருக்கும். (“காசுக்கள்ளன். நயா பைசா செலவழிக்கமாட்டார்” என்பான் த்ரிலோச்சன்.) இப்படி ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயங்களிலும் கணேசன்ஜி அவருக்கே தெரியாமல் எனக்குச் சொல்லித்தந்தது ஏராளம்.
கணேசன்ஜி இங்கிலீஷ் சொல்லித் தந்தது கூட ஒரு தனிவிதம். ஹிந்து பேப்பரை எடுத்து சினிமா சம்பந்தப்பட்டச் செய்திகளாக வாசிக்கச் சொல்வார். (“மனுஷன் அலையறார்”- த்ரிலோச்சன்.) ஒரு மாதத்திலேயே எனக்கே தெரியாமல் அதன் அடிப்படை இலக்கணம் பிடிபடத் துவங்கியது.
“நா எங்கடா சொல்லித் தந்தேன்? ஹிந்துன்னா சொல்லிக் கொடுத்தது” என்பார். “மாமா சந்தோஷமா இருக்கார்.. இல்லைனா இங்கிலீஷ்னா பேசுவார்” என்றான் இராம்கி. இராம்கிக்கும் கணேசன்ஜியைப் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. அவரைப் பற்றிப் பேச ஆரம்பித்தாலே “மாமா மாதிரி வருமா” என்று தொடங்கிப் பத்துப் பக்கத்திற்குப் புகழ் பாடித்தான் நிறுத்துவான். (இராம்கிய நம்ப முடியாது. எப்பவேணா கட்சி மாறுவான்” என்பான் த்ரிலோச்சன்) கணேசன்ஜியும் இராம்கியின் துடுக்குத்தனத்தையும் கிறுக்குத்தனமான கமெண்ட்களையும் கூட இரசிக்க ஆரம்பித்திருந்தார்.
நான் இங்கிலீஷ் கற்றுக்கொள்ள ஆரம்பித்து இரண்டரை மாதங்கள் முடிந்திருந்தது. கணேசன்ஜி வாழ்க்கையில் பல விஷயங்களைச் சொல்லித் தந்தார். பல விஷயங்களை வாழ்ந்து காட்டினார். கணேசன்ஜி ஒரு புத்தகம்.
எனது விடுமுறை கழிந்து நான் ஊருக்குத் திரும்ப வேண்டி வந்தது. திருநெல்வேலி பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்க ஜமீந்தாரைப் பார்த்து ரெக்கமண்டேஷன் கேட்க வேண்டும் என்பதால் உடனடியாக வரச்சொல்லி கடிதமும் ஃபோனும் வந்திருந்தது. (“உங்காத்துல எல்லாருக்குமே கொஞ்சம் படம் ஜாஸ்தி. லெட்டர் போறாதா? ஃபோன் செய்வானேன்?”- த்ரிலோச்சன்)
கணேசன்ஜியிடம் சொல்லிக்கொள்ளப் போனேன். சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அவர் சமையல் செய்யும் அழகு கூடத் தனிதான். ஒருவருக்கு மட்டும் தேவையானதை சரியாகச் சமைப்பார். மிகாது. (“எங்காத்துல எப்பவுமே ஒரு உருண்டை கூடத்தான் சமைப்பா”- த்ரிலோச்சன்) சமையல் செய்யும்போது பொருள்களை இறைய மாட்டார். தேவை முடிந்தபின்பு பாத்திரங்களைக் கையோடு கழுவி வைத்துவிட்டுத்தான் அடுத்தப் பாத்திரத்தை எடுப்பார். பீட்ரூட்டுக்குத் தோல் சீவும்போது அவர் மாதிரி மிக மெல்லியதாகத் தோலைச் சீவ இன்னொருத்தர் பிறந்தால்தான் உண்டு. (“இந்த விஷயத்தை நான் ஒப்புத்துக்கறேன். அவரை அடிச்சுக்க முடியாது. காசுகள்ளன்னு சொன்னேனே!”- வேறு யார்? த்ரிலோச்சன்தான்.) அவர் மாதிரி யாருக்கும் சமையலும் வராது. சமைக்கவும் வராது.
“ஜி.. நா ஊருக்குப் போறேன்”. எனக்குத் தொண்டை அடைத்தது.
சாப்பிட்டுக்கொண்டிருந்தவர் “இங்க வா!” கைகளால் அழைத்தார். வாயிலிருந்த கவளத்தை விழுங்கிவிட்டு (விழுங்கும்போது தொண்டைக்குழி ஏறி இறங்கியது. அவர் பேசும்போது தொண்டை ஏறி இறங்கும் அழகைச் சொல்ல விட்டுவிட்டேன். இன்னொரு சமயத்தில் சொல்கிறேன். த்ரிலோச்சனிடம் சொன்ன போது “வயசானா எல்லாத்துக்கும் அப்படித்தான் ஆகும். ரொம்ப உளறாதே” என்றான் என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்கிறேன்.) கையை நீட்டச் சொன்னார். அவர் தட்டில் ஒரு ஓரத்தில் தனியாக இருந்த சோற்று உருண்டையை எடுத்துக் கையில் தந்து உண்ணச் சொன்னார்.
“நீ சொல்லிண்டு போக வருவேன்னு தெரியும்” என்றார். சாப்பிட்டேன். நெய் வாசனை தூக்கலாக இருந்தது. “அடுத்த வருஷ லீவுக்கு வருவியோன்னோ.. அப்ப இன்னும் நிறைய சொல்லித் தர்றேன். லெட்டர் போடணும். மறந்துடாதே” என்றார்.
“வரேன் ஜி”
அவரிடமிருந்து பதில் இல்லை. என் பார்வைக்கு அவரது கண்கள் மூடியிருப்பதாகப்பட்டது. வாய் எதையோ முணுமுணுத்துக்கொண்டிருந்தது. நான் இன்னொரு முறை “வரேன் ஜி” என்று சொல்லிவிட்டுத் திரும்பி நடந்தேன்.
முதலியார் தெரு, பாட்டபத்து, திருநெல்வேலி.
இரண்டு கைகளையும் விட்டுவிட்டு சைக்கிளை ஓட்டுவது எனக்கு ரொம்ப இஷ்டமான ஒன்று. அதுவும் பாலத்தின் இறக்கத்தில் அப்படி வரும்போது கண்களை மூடிக்கொண்டால் காற்றில் மிதப்பது போல இருக்கும். 11-D பஸ்ஸில் போகும் பெண்கள் கூட்டத்தில் ஒருத்தி இதை வெகுவாக இரசித்தாள் என்றுதான் அனுமானித்திருக்கிறேன். “ஒருநா இல்ல ஒருநா கீழ விழுந்து அவ முன்னாடி நீ சீப்படலைனா எம்பேரு ஜாகீரு இல்லை” என்பான் ஜா. பெயர் இப்போது மட்டும் ஜாகீரா என்ன? வெறும் ஜாதான்.
பழக ஆரம்பித்த நாள்களில் தினம் தினம் ஒரு புதுக்கதை சொல்வான். “பாலத்துக்குக் கீழத்தான் ஆவியெல்லாம் பதுங்கியிருக்குமாமே.. கோயில்ல பூஜை பண்ணுது பாரு ஒரு ஹிப்பித்தலை.. அது சொல்லிக்கிட்டு அலஞ்சது.. ஒனக்குத் தெரியுமா?”. இப்போது ஞாபகம் வரவும் மூடியிருந்த கண்களைத் திறந்துகொண்டேன். பாலம்தாண்டி, ஜா வீடு தாண்டி மசூதிக்கு அடுத்த வளைவில் திரும்பினேன். ஜா வீட்டு முன்னாடி சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றேன்.
“வாப்பா.. ஜா இல்லையா? எங்க போயிருக்கான்?”
“இங்க இல்லன்னா எங்க இருப்பான் மூதி.. உங்க வீட்டுலத்தாம்ல கெடப்பான்.. போயி கொட்டிக்க வரச்சொல்லு” என்றார் வாப்பா. வாப்பாவின் இந்த அன்பு பரீச்சயமான ஒன்றுதான். உள்ளேயிருந்து ஜார்ஜிதா சொன்னாள், “திருச்சியிலேர்ந்து யாரோ ரெண்டு பேர் வந்துருக்காக்காங்க.. அண்ணந்தான் உங்க விட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போச்சி”
யார் வந்திருப்பார்கள் என யூகிக்க முடியவில்லை. அம்மாவும் அப்பாவும் உறவுக்காரர்கள் கல்யாணத்துக்குப் போயிருக்கிற சமயத்தில் வேறெந்தச் சொந்தக்காரர்களும் வர வாய்ப்பில்லை. “கல்யாணம்னு வந்துட்டா ஒரு ஆளு விடாமப் போயிருவீங்களே. நீ போலயா பசை?” என்று ஜா கிண்டலடித்தது நினைவுக்கு வந்தது. “யார் காதுலயாவது பசைன்னு விழுந்து நாலு சாத்துப்பட்டா சரியாயிடுவ” என்றால் கண்ணை உருட்டி உருட்டி அழகாகச் சிரிப்பான்.
“யாருன்னு தெரியாதா ஜார்ஜிதா?”
“நா பாக்கலண்ணே”
“சரி.. சைக்கிள் வெளிய நிக்கி.. ஜா வந்தா எடுத்து உள்ள விடச் சொல்லிடு” என்று சொல்லிவிட்டு- “தொர உள்ள எடுத்து விடமாட்டாராமான்னு வாப்பா கேட்டார்” என்று நாளை ஜார்ஜிதா சொல்லிச் சிரிப்பாள்- யார் வந்திருப்பார்கள் என்கிற யோசனையுடன் வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தேன்.
இராம்கி சொல்லாமல் வரும் ஜாதியில்லை. சொல்லிவிட்டு வராமலிருக்கும் ஜாதி. இராம்கி நினைவின் வழியாக மனம் கணேசன்ஜிக்குச் சென்றது. (“ஒனக்கு இதே பொழப்பு.. ஒண்ணு பேசிக்கிட்டு கெடக்கும்போதே இன்னொன்னு நினைக்க ஆரம்பிச்சிடுத” என்பான் ஜா.)
கணேசன்ஜி இப்போது என்ன செய்துகொண்டிருப்பார். மாநிலச்செய்திகள் கேட்டுக்கொண்டிருப்பார். “எத்தனை டீவி வந்தாலும் ரேடியோல கேக்கிற சுகமிருக்கே.. அதே அலாதிதான்.” (“சரியான லூசு.. இவரை மாதிரி ஆளுங்க சில பேர் பழசையே பிடிச்சிண்டு தொங்குறா” என்று த்ரிலோச்சன் நினைவுக்கு வர, அவன் இப்போது என்ன செய்வான் என நினைக்க ஆரம்பித்தேன். ஜா சொன்னது ஞாபகம் வரவும் மீண்டும் கணேசன்ஜிக்குத் தாவினேன்). அப்படிச் சொல்லும்போது அவர் கண் விரிகிற அழகு இருக்கிறதே… அலாதிதான்.
நடையை விரைவாக்கினேன். இராம்கி வந்திருந்தால் அவனிடம் கணேசன்ஜி பற்றி விசாரிக்கலாம். அவர் இப்போது முன்னிருந்த மாதிரி இல்லை என்கிற செவி வழிச்செய்தியை நான் நம்பவில்லை. எனக்கு கணேசன்ஜி எப்போதுமே முன்மாதிரிதான்.
திருவனந்தபுரத்திற்கு இன்டெர்வியூ செல்லும் வழியில் திருநெல்வேலி இரயில்வே ஸ்டேஷனில் இராம்கியைப் பார்த்தபோது பல செய்திகளைச் சொன்னான். இதையெல்லாம் என்னிடம் சொல்லவேண்டும் என்று முன்பே தீர்மானித்துக்கொண்டு வந்தவன் போல் வேகமாகப் பேசினான்.
“ரெண்டு நாளைக்கு முன்னாடி பெரிய ரகளை. அவரோட பொண்டாட்டி இல்லை.. அதான் ஓடிப்போய், திரும்பி வந்து பையனோட அதே தெருல இருக்காளே..”
புத்தகக்கடைகளில் தொங்கிக்கொண்டிருந்த புத்தகங்களைப் பார்த்துக்கொண்டே சொல்ல ஆரம்பித்தான். விஷயங்களைக் கோர்வையாகச் சொல்வதில் இராம்கி கில்லாடி. சில சமயம் பள்ளங்களை இட்டு நிரப்பிக் கோர்வையாக்கிச் சொல்வான். எது நடந்தது, எது ரொப்பியது என்று புரிந்துகொள்ளக் கொஞ்சம் பயிற்சி வேண்டும்.
“அவ திடீர்னு கதவைப்பூட்டிண்டு தூக்குல தொங்கப்போறேன்னு ஒரே ஒப்பாரி. ஊரே அல்லோலப்படுது. உன் இராமன் இருக்காரே.. அவர் பாட்டுக்கு ஈசி சேர்ல படுத்துண்டு இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லைன்னு சினிமாப்பாட்டு கேட்டுண்டு இருந்தார். என்ன மனுஷண்டா? ஒருவழியா அவளைச் சமாதானப்படுத்தி கதவைத் திறக்க வெச்சா ஊர்க்காரா. ஏண்டி இப்படிப் பண்றன்னு ஊர்க்காரா கேட்டதுக்கு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டா. அவருக்கும் பள்ளத் தெருவுல இருக்கிற ஒரு பொம்பளைக்கும் தொடுப்பாம். மொதநா இராத்திரி இவளே பாத்தாளாம். மாமா வெள்ளரித் தோப்புல விழுந்து ஓடி மறைஞ்சுட்டாராம்.”
“வெள்ளரித் தோப்பு இல்லை. தோட்டம்”
“ரொம்ப முக்கியம். ஏதோ ஒரு எழவு. ஒருத்தரும் சரியில்லைடா. எல்லா அமளியும் முடிஞ்சப்பறம் யார்கிட்டயோ கணேசன் மாமா சொன்னாராம். தூக்குப் போட்டுக்கிறவ ஊரைக் கூட்டியா தூக்குப் போட்டுப்பான்னு. அது அவரோட பொண்டாட்டி காதுக்கும் போயிடுத்து. அக்ரஹாரம் பத்தி தெரியாதா? பார்.. நான் ட்ருவேண்ட்ரம் போறேன். இன்டெர்வியூ இருக்கு. என்ன பேசிண்டிருக்கோம் பார்”
“பரவாயில்லை. சொல்லு”
“என்ன சொல்ல? அவ்வளவுதான். அவ காதுக்குப் போன உடனே பிடாரியாயிட்டா. சும்மாவே பிடாரிதான்றது வேற. மாமா வீட்டுக்கு முன்னாடி வந்து சாமியாடிட்டா. உங்க மாமா வழக்கம் போல இங்கீலீஷ்ல தஸ் புஸ்ன்னார். ”
“அவருக்கும் பள்ளத்தெரு பொம்பளைக்கும் கனெக்ஷன்றத நீ நம்புறியா இராம்கி?”
“எனக்குத் தெரியலைடா. ஆனா நிறையப் பேர் அவரைப் பள்ளத்தெருவுல பார்த்ததா சொன்னா. த்ரிலோச்சன் கூட சொன்னான்”
ஆக இராம்கி அவன் கண்ணால் பார்க்கவில்லை. வழி வழியாக வரும் செய்திகள். உப்பிப் பருத்துப்போன, உள்ளே ஒன்றுமே இல்லாம இராட்சதக் குமிழ். (இப்படி நான் ஆழப் பேசும்போது, “ஆரம்பிச்சிட்டான்யா.. தீடீர்னு வேற உலகத்துக்குப் போயிடுவான். புதுத் தமிழ் வந்திடும்” என்பான் ஜா.)
“நீ பாத்தியா?”
அவன் அதற்குப் பதில் சொல்லாமல் வேறு கதை ஆரம்பித்தான்.
“தனியாளா ஆயிட்டார்டா.. முன்ன மாதிரி முடியமாட்டேங்குது அவருக்கு.. இப்பல்லாம் ரொம்பக் குடிக்க ஆரம்பிச்சிட்டார்”
திருவனந்தபுரத்துக்குச் செல்லும் அவனைச் சென்று பார்த்திருக்கவே வேண்டாம். (“நா சொன்னால்லாம் நீ கேப்பியா? படு.”- ஜா)
கணேசன்ஜி குடிப்பார் என்பது ஒன்றும் புதிய செய்தியில்லை. அவர் குடிக்கும்போது நான் உடனிருந்து பார்த்திருக்கிறேன். முதல்முறை பார்த்தபோது ரொம்பவும் உறுத்தியது. “நாளைக்கு வர்றேன் ஜி” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டவனைப் பிடித்து இழுத்து உட்கார வைத்தார். நிறையப் பேசினார். நிறைவாகப் பேசினார். அவர் அத்தனைப் பேசி அதற்கு முன்பும், பின்பும் நான் பார்த்ததில்லை. என்னென்னவோ சொன்னார். திடீர் திடீரென அமைதியானார். கொஞ்சம் பயந்துகூடப்போனேன்.
“நீ சின்னப்பிள்ளை. நோக்குப் புரியாது. என்னைப் பத்தி ரொம்ப உயர்வா நினைச்சிண்டு இருக்கே. நீ உயர்வா நினைச்சிக்கணும்னு நான் ஸ்பெஷலா நடந்துக்கலை. ஆனா நோக்கு ஒரு சித்திரம் அப்படி உண்டாயிடுத்து. இருந்துட்டுப் போகட்டும். பெரிய பாதகமிலை. ஆனா இப்ப நான் குடிக்கிறதைப் பார்த்துட்டு மனசு ஒரு மாதிரி ஆகி ஓடப் பார்க்கப் பார்த்தியோன்னோ.. அது தப்பு. ஜி மனசுல பட்டதைச் சொல்லலாமில்லையோ..?”
அமைதி.
நான் பதில் சொல்லவில்லை. அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
“அந்தக் காலத்திலே புராணத்திலே இராமன், இராவணன்னு ரெண்டு பேரைச் சொல்லி வெச்சிருக்கா. ஏன் சொன்னா? இராமனைப் பார்த்து எது வேணும்னு படிச்சிக்கோ. இராவணனைப் பார்த்து எதுவேண்டாம்னு படிச்சிக்கோ. நான் அப்பப்ப இராமன். அப்பப்ப இராவணன்.” பலமாகச் சிரித்துவிட்டு அமைதியானார்.
எனக்கு என்ன பேசவேண்டுமென்று தெரியவில்லை. இப்படி ஒரு கணேசன்ஜி எனக்குப் புதியவர். (பின்னொருநாள் த்ரிலோச்சனிடம் சொன்னபோது “நா சொன்னா நீ கேக்கமாட்ட.. டியூசன் எடுக்கும்போது இதுமாதிரி நிறைய உபதேசம் செய்வார். அன்னைக்கு ஃபிட்டுன்னு அர்த்தம்” என்றான்.) “சொல்லுங்க ஜி” என்றேன். .”போறும். நாழியாறது. போயிட்டு நாளைக்கு வா” என்றார். நான் மறுபேச்சு பேசாமல் எழுந்து வந்தேன். வீட்டின் வெளிவரை வந்து வழி அனுப்புவது அவர் பழக்கம். எல்லாமுறை நான் வீட்டுக்குப் போகும்போதும் இதைச் செய்வார். நானும் அதே மாதிரி செய்ய உறுதிகொண்டிருந்தேன். இப்போதும் எனக்குப் பின்னால் கேட்கும் சரக் சரக் என்னும் செருப்புச்சத்தம் அவர் என்னை வழியனுப்ப வருகிறார் எனத் தெரிந்தது. நான் வெளியில் சென்றதும் வாசல் கதவைப் பூட்டிவிட்டு உள்ளே சென்றார். இறங்கி நடக்க ஆரம்பித்தேன். ஏதோ நினைவு வந்தவனாக மீண்டும் கணேசன்ஜி வீட்டுவாசலுக்கு வந்து கதவின் வழியாகப் பார்த்தேன். அவர் கட்டிலில் படுத்துக் கண்ணை மூடியிருந்தார். கட்டிலின் கீழே செருப்புகள் தாறுமாறாக இல்லாமல் ஜோடியாக இருந்தன.
எனக்குக் கணேசன்ஜி என்றும் இராமன்தான்.
கோயிலில் பூஜை செய்யும் சாமி (“அவர ஹிப்பின்னு சொல்றான்னு ஒனக்கு எத்தன தடவ சொல்ல?”- ஜா) என் கவனத்தைக் கலைத்தார். “ஆத்துக்கு யாரோ ஒரு பெரியவர் வந்திருக்கார். ரொம்ப நாழியா காத்திண்டு இருக்கார். கூட ஒரு பொம்பளையும் வந்திருக்கா. அன்னநடை நடக்காம வெரசலா நடையேண்டா..” என்று சொல்லி என் உணர்வை நிகழ்காலத்திற்குக் கொண்டுவந்தார். நான் இன்னும் கொஞ்சம் விரைவாக நடந்தேன். கணேசன்ஜியாக இருக்குமோ? இந்த நினைப்பு எனக்குள் தந்த எண்ணங்களைச் சொல்ல முடியுமா? தெரியவில்லை. நான் சந்தோஷப்படுகிறேனா? இல்லை பயத்தால் படபடப்பா? ஏன்? எனக்கே புரியவில்லை. சில விஷயம் தெளிவாகச் சொல்லப்படாமலே இருப்பதுதான் அதற்கு மரியாதை. ஜாவின் வாப்பா அடிக்கடி இதைச் சொல்வார். இப்போது புரிகிற மாதிரி இருந்தது. (“வாப்பா இப்படித்தான் எதையாவது பொலம்பும்.. கண்டுக்காத”- ஜா)
அக்ரஹாரம் கடந்து, பிள்ளையார் கோவிலைத் தாண்டி (“என்னடா சாமி கும்பிடுற? கையை விசுக்குன்னு ஒரு வெட்டு.. இதுக்குப் பேரு சாமி கும்பிடுறதா?”- ஜா) முதலியார் தெருக்குள் நுழைந்தேன்.
பொன்னம்மாக்கா வீடுதான் முதல்வீடு. அதைத் தொட்டடுத்த வீடு என்னது. பொன்னம்மாக்கா வீட்டின் வெளியிலேயே காத்திருந்தாள். பொன்னம்மாக்கா மாதிரி அன்பாகப் பேச இன்னொருத்தியால் முடியாது.
“எங்கய்யா போன? யாரோ ஹிந்தி மாஸ்டராம். திருச்சிலேர்ந்து ஒன்னப் பாக்கணும்னு வந்திருக்காரு. ஜாகீர் தான் வூட்ல இருக்கான். வேற யாருமில்ல. நா காபித்தண்ணி கொடுக்கலாம்னு நினைச்சேன். குடிப்பாரோ மாட்டாரோன்னு..”.
ஹிந்தி மாஸ்டராம் என்ற வார்த்தை காதில் விழுந்த பிறகு பொன்னம்மாக்கா சொன்னது எதையுமே கிரகிக்க முடியவில்லை. லேசான படபடப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் கூடிக்கொண்டே போனது. கைகள் சில்லிட ஆரம்பித்தது. பொதுவாகப் பரீட்சைக்குக் கேள்வித்தாள் தரும் நேரத்தில்தான் எனக்குக் கைகள் சில்லிடும். பொன்னம்மாக்கா என்னவோ சொல்லிக்கொண்டே இருந்தாள். நேரம் காலம் தெரியாமல் இந்தப் பொன்னம்மாக்கா ஏன் இந்த இழுவை இழுக்கிறாள். ஒருவழியாக பொன்னம்மாக்கா தன் பேச்சை முடித்துக்கொள்ள, வேகவேகமாக மாடிப்படிகளில் தாவி ஏறினேன்.
வீட்டு வாசலில் பல ஜோடிச் செருப்புகள் இருந்தன. அவை இருந்த விதம்….. அவை ஒரே சீராக இல்லை. ஒரு செருப்பு பக்கவாட்டிலும் இன்னொரு செருப்பு தலைகீழாகப் புரண்டும் மற்றவை ஒன்றன் மீது ஒன்றாய் ஆளுக்கொரு திசையில் இருந்தன. நான் ஸ்தம்பித்து நின்றேன்.
உள்ளே போகாமல் ஏதோ ஒரு படபடப்போடு இன்னும் நின்றுகொண்டிருக்கிறேன்.