பைரி – சில சிறிய சிறிய குறைகள் இருந்தாலும் இத்திரைப்படம் தமிழ்த் திரையுலகின் முக்கியமான திரைப்படங்களுள் ஒன்று. அசல் திரைப்படம். மிரட்டல். டோண்ட் மிஸ் வகையறா.
மதயானைக் கூட்டத்துக்குப் பிறகு நான் பார்க்கும் அசல் திரைப்படம் இதுவே. கொஞ்சம் கூட ரொமாண்டிசைஸ் செய்யப்படாத ஒரு படம். பந்தயப் புறாவைப் பற்றி இப்படி ஒரு திரைப்படம் வந்ததில்லை. இனி வரப் போவதுமில்லை. முதல் நொடி முதல் இறுதி நொடி வரை பந்தயம் மற்றும் அதைச் சுற்றிய வன்முறையை மட்டுமே திரைக்கதையாகக் கொண்ட ஒரு படமெல்லாம் தமிழில் அபூர்வம். திகட்ட திகட்ட திரைக்கதையும் வசனமும் எழுதி இருக்கிறார்கள்.
இதைவிட இன்னொரு அபூர்வம், தமிழில் கிராமத்து அம்மாக்களை இத்திரைப்படத்தின் அம்மாவைப் போல் யாரும் இதுவரை சித்திரித்ததில்லை. அம்மா மகன் உறவை இத்தனை குரூரத்துடனும் இத்தனை பாசத்துடனும் இத்தனை அசலாகவும் இத்தனை உயிர்ப்புடனும் எவரும் படமாக்கியதில்லை. அம்மாவாக நடிக்கும் நடிகை கலக்கிவிட்டார். அதேபோல் வில்லுப்பாட்டைப் படத்தோடு இணைத்த விதம் அட்டகாசம்.
நாகர்கோவில் வட்டார வழக்கில் ஆங்காங்கே சில குறைகள் இருந்தாலும், இப்படி ஒரு படம் இதுவரை வந்ததில்லை. புறா கிராஃபிக்ஸ் மிக மோசம். அனைத்து நடிகர்களும் ஒரே போல் நடிப்பது இன்னொரு குறை என்றாலும், ஒரு கட்டத்தில் நமக்கு இது பிடிக்க ஆரம்பித்துவிடுகிறது என்பது அதிசயம்தான். இந்தத் திரைப்படத்தில் ஒரு நடிகரைக் கூட எனக்குத் தெரியாது. இதற்கு முன்பு எந்தத் திரைப்படத்திலும் அதிகம் பார்த்ததாக நினைவில்லை. அப்படியானால் இயக்குநர் எந்த அளவு உழைத்திருப்பார் என்று யோசித்துப் பாருங்கள்.
ரத்தமும் சதையுமான தமிழ்ப்படம் இது. ஹிந்துத்துவ மற்றும் ஹிந்துத்துவ-வெறுப்பு நண்பர்கள் குறியீடுகளில் சிக்காமல் இத்திரைப்படத்தைப் பார்க்கலாம். ஏனென்றால் ஹிந்து ஆதரவு மற்றும் கிறித்துவ ஆதரவு, இவற்றுக்கிணையாக இரண்டு பக்கங்களுக்கான எதிர்ப்பையும் நாம் யோசித்துப் பிரித்தெடுக்க, படம் நெடுக அத்தனை சட்டகங்களிலும் காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குநர் ஜான் க்ளாடி.
மலையாளத்தில் பல புதிய புதிய இயக்குநர்கள் என்ன என்ன ஜாலமெல்லாமோ செய்துகொண்டிருக்க, தமிழில் இயக்குநர்கள் புரட்சிக்குள் சிக்கிப் பாழாகப் போய், பெரிய வெற்றிடம் ஒன்று உருவாகி இருக்கிறது. இந்த வெற்றிடத்தை நிரப்ப ஜான் க்ளாடி போன்ற இயக்குநர்களால் முடியும். தடம் மாறாமல், திரைப்படம் ஒன்றே குறிக்கோள் என்று வாழ்ந்தால் போதும்.
இத்திரைப்படத்தில் பிரான்ஸிஸ் கிருபாவைப் பார்க்கும்போது பக்கென்று இருந்தது. 2021ல் கிருபா மறைந்துவிட்டார். அப்படியானால் எப்போது எடுக்கப்பட்ட படம் இப்போது வந்திருக்கிறது பாருங்கள்!
இரண்டாம் பாகம் வருகிறது என்று இறுதியில் காட்டுகிறார்கள். அது வரும்போது வரட்டும். முதல் பாகத்தைக் கட்டாயம் பாருங்கள்.
பைரி ப்ரைமில் கிடைக்கிறது.