Archive for திரை

எந்திரன் – சுரேஷ்கண்ணனுக்கு நன்றி!

சுரேஷ்கண்ணனுக்கு நன்றி!

பொதுவாக சுரேஷ்கண்ணன் ரஜினி படம் வருவதற்கு முன்பு ஒரு தடவைதான் திட்டுவார். இந்த முறை இரண்டு மூன்று முறை திட்டியதாலோ என்னவோ படம் எக்கசக்கமாக நன்றாக இருந்துவிட்டது. ரஜினி ரசிகர்கள் ஒவ்வொருவரும் சுரேஷ் கண்ணனுக்குக் கடமைப்பட்டிருக்கிறார்கள். வணிக சினிமாவுக்கு எதிராக அவரது போராட்டம் தொடரும் என்று அறிவித்திருக்கிறார். அடுத்தடுத்த ரஜினி படத்துக்கும் இப்படி அவர் திட்டி பதிவெழுதி, எஸ்பிபி முதல் பாட்டு பாடினால் எப்படி ரஜினி படம் ஹிட்டாகிவிடுமோ அதுபோல, இவர் திட்டினாலே ஹிட்டாகிவிடும் என்னும் உண்மையை நிலைநிறுத்தக் கேட்டுக்கொள்கிறேன்.

படம் – சான்ஸே இல்லை. ரஜினியின் தீவிர ரசிகர் ஷங்கரைப் பார்க்க நேர்ந்தால் நெடுஞ்சாண்கிடையாக அவர் காலில் விழுந்துவிடுவார்.

படம் பற்றிய எனது உணர்வு ரீதியான ரஜினி ரசிகனின் விமர்சனம் தமிழ் பேப்பரில் நாளை வெளிவரும். கோட்பாட்டு ரீதியான விமர்சனங்களை சுரேஷ்கண்ணன்கள் எழுதுவார்கள். இப்படியாக விமர்சகர் சுரேஷ்கண்ணன் ஒரு குறியீடாகவும் மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ் பேப்பரில் நாளை பார்க்கலாம்.

Share

ஏ.ஆர். ரகுமானின் பேட்டியும், நிறுத்தப்பட்ட எனது கமெண்ட்டும்

இந்த சிறிய விஷயத்தை ஒரு பதிவாகப் போடுவதற்கே அசிங்கமாகத்தான் உள்ளது. ஆனாலும் பதிந்து வைப்போம் என்பதற்காக இதனைப் போட்டு வைக்கிறேன்.

ஏ.ஆர். ரகுமானின் பேட்டி உதயம் என்ற வலைப்பதிவில் (http://kalyanje.blogspot.com/2010/04/blog-post.html) வெளிவந்திருந்தது. வாசித்துவிட்டு, நேற்று முன் தினம் நான் ஒரு சிறிய கமெண்ட்டைப் போட்டேன். பேட்டி குறித்த நெகடிவ் கமெண்ட் அது. அது அங்கு வெளியிடப்படவில்லை. அந்த கமெண்ட்டைப் போய் ஏன் நிறுத்தப் போகிறார்கள் என்று நினைத்து நேற்று மீண்டும் இன்னொரு கமெண்ட் போட்டேன், எனது கமெண்ட் ஏன் வரவில்லை ஏதேனும் தொழில்நுட்பப் பிரச்சினையா என்று கேட்டு. அதுவும் இதுவரை வெளிவரவில்லை.

நான் போட்ட கமெண்ட்டுகளைச் சேமித்து வைத்துக்கொள்ளவில்லை. நான் போட்ட முதல் கமெண்ட் இப்படி இருந்தது.

நல்ல காமெடியான பேட்டி. ஏ.ஆர். ரகுமான் இவ்வளவு மோசமாகப் பேட்டி கொடுத்து இதுவரை நான் பார்த்ததில்லை.

//தமிழில் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. அதற்கேற்ற மாதிரி படம் இல்லையென்றால், படம் ஃபிளாப் ஆகிறது. படத்திற்குப் பதிலாக ஆல்பம் பண்ணலாம். படம் பண்ணும்போது என்னாகிறதென்றால், பாட்டு நன்றாக போட்டுக்கொடுத்துவிட்டு ஒரு எதிர்பார்ப்பையும் கிளறி விட்டுவிட்டபின் தியேட்டருக்கு வந்து பார்த்துவிட்டு திட்டிவிட்டுப் போகிறார்கள். ‘ஏன் இந்தாளு இந்தப்படத்துக்கு மியூசிக் போட ஒத்துக்கிட்டாரு, இவனை நம்பி படம் பார்க்க வந்தால், இது என்ன இப்படி இருக்கு?’ என்று கேட்கிறார்கள். அப்படியல்லாமல், இந்த எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்கும் படம் கிடைத்தால் கண்டிப்பாகத் தமிழில் படம் பண்ணுவேன். நான் பட்ஜெட் பற்றிப் பேசவில்லை. ஐடியா பற்றிப் பேசுகிறேன். நூறு கோடியில்தான் படம் பண்ண வேண்டும் என்றில்லை. ஒரு கோடியிலும் இருக்கலாம். பத்து லட்சத்திலும் இருக்கலாம். ஆனால், புதிதாகப் பார்வையாளர்களுக்கு ஏதாவது வேண்டும்.//

சரி, கேட்டுக்கிட்டோம்.


இதுதான் நான் போட்ட முதல் கமெண்ட், ஏறக்குறைய இப்படித்தான் இருந்தது.

இரண்டாவதாக நான் போட்ட கமெண்ட், ஏறக்குறைய இப்படி.

நான் போட்ட கமெண்ட் வெளிவரவில்லை. ஏதேனும் தொழில்நுட்பப் பிரச்சினையா அல்லது மட்டுறுத்தலா?


இதுவும் வெளிவரவில்லை.

ஏ.ஆர். ரகுமானின் பேட்டி மீது வைக்கப்படும் மிக மேலோட்டமான குற்றச்சாட்டுக்கூட வெளியிடப்படாமல் ஏன் இருக்கவேண்டும்? அந்த அளவுகூட எதிர்ப்பை விரும்பவில்லை பதிவர் என்பது தெரியவில்லை. திரைத்துறையில் இருப்பதால் அதீத கவனம் எடுத்துக்கொள்கிறாரோ என்னவோ. அல்லது பாராட்டுகள் மட்டும் காதில் கேட்டால் போதும் என்கிற எண்ணமா எனத் தெரியவில்லை.

எல்லாம் அவன் செயல்!

Share

அங்காடித் தெரு – நாம் வாழும் தெரு

வெகு சிலமுறை நான் சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருக்கிறேன். எல்லாம் நம்ம ஊருப் பசங்க என்பதைக் கேட்டு, பெருமையுடன் காணச் சென்ற எனக்கு அங்கே முதலில் தோன்றியது குழந்தைத் தொழிலாளர் சட்டம் இருக்கிறதா என்பதுதான். பின்னர் அதுவே பழகிவிட்டது. ஒருதடவை ஒரு பையனிடம் என்னப்பா வயசு என்ற கேட்டபோது பதினாறு என்று சொல்லிவிட்டு, உடனே சட்டென்று மாற்றி பதினேழு என்று சொன்னான். ஆனால் அவன் வயது உண்மையில் 14வது இருக்குமா என்ற சந்தேகம் வந்தது எனக்கு. பதினாறுன்னு சொன்னாலும் பதினேழுன்னு சொன்னாலும் ரெண்டும் ஒண்ணுதான் என்றேன். அந்தப் பையன்களை நினைக்கும்போது பாவமாக இருக்கும். எனக்குத் தோன்றும் பாவம் வெறும் ஒரு வரிப் பாவம். ஆனால் வசந்தபாலன் இவர்களுக்குப் பின்னே இருக்கும் உலகத்தையே காட்டிவிட்டார். சென்னையில் வாழும் ஒவ்வொரு மனிதரையும் இந்தப் படம் ஏதோ ஒருவகையில் நிச்சயம் பாதிக்கும். அடுத்த முறை சரவணா ஸ்டோர்ஸ் போன்ற இடத்துக்குச் செல்பவர்களது எண்ணம், பார்வையில் கொஞ்சமாவது மாற்றம் இருக்கும். இந்தப் பசங்களோட கஸ்டமர் சர்வீஸ் மோசம் என்றெல்லாம் யாரும் சொல்வார்களா எனக்கூடத் தெரியவில்லை.

செந்தில் முருகன் ஸ்டோர்ஸின் களமும் ரெங்கநாதன் தெருவும் ஒரு மிகப்பெரிய வில்லனைப் போலத் தோற்றம் அளிக்க வைக்கும் முயற்சியில் வசந்தபாலன் மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார். வாழ்க்கையின் சிரிப்பில் தென் தமிழ்நாட்டு இளைஞர்கள் செந்தில் முருகன் ஸ்டோர்ஸால் விழுங்கப் படுகிறார்கள். அங்கே அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், காதல், காமம், கும்மாளம் என எல்லாவற்றையும் இத்திரைப்படம் சிறப்பாக முன்வைக்கிறது. நான் கடவுள் திரைப்படத்தில் பிச்சைக்காரர்களின் உலகத்தில் நமக்குத் தெரியாத பலவற்றை நாம் பார்த்ததுபோல, இத்திரைப் படத்தில் இது போன்ற இளைஞர்களுக்கு நடக்கும் நமக்குத் தெரியாத பல்வேறு காட்சிகள் நம் கண்முன் விரிந்து நம்மைப் பதற வைக்கின்றன.

ஒவ்வொரு சிறிய காட்சியையும் முக்கியக் கதையோடு இணைப்பதில் இயக்குநர் காட்டியிருக்கும் ஆர்வம் பழைய உத்தி. சம்பந்தமில்லாமல் வரும் காட்சிகள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் தன்னம்பிக்கையைக் காட்டுவதற்கோ, அல்லது பின்னர் கதாநாயகன் நாயகிக்கு உதவுவதற்கோ சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பது தெரிந்துவிடுகிறது. இதுபோன்ற சில குறைகள் நிறையவே இருக்கின்றன. படத்தின் பின்பாதியில் கொஞ்சம் இழுவை அதிகம். தேவையற்ற, செயற்கைத்தனம் கூடிய வசனங்கள் உண்டு. படம் முடிந்த பின்பு மீண்டும் இழுக்கப்படும் திரைப்பட உச்சக்கட்டக் காட்சி உண்டு. உச்சக்காட்சி என்ற ஒன்றில்லாமல் தமிழர்களுக்கு முழுத்திரைப்படம் பார்த்த உணர்வு வராது என்பதாலோ என்னவோ வசந்தபாலன் இப்படி செய்திருக்கவேண்டும். அதிலும் நல்ல ஒரு உத்தியைக் கையாண்டிருக்கிறார். படத்தோடு தொடர்பே இல்லாத ஒரு கிளைமாக்ஸை முதலிலேயே காட்டிவிட்டு, உச்சக்காட்சிக்கு முன்னரே வந்துவிடும் உச்சக்காட்சி மனோபாவத்தைக் குறைத்துவிட்டார்.

கதாநாயகியின் தங்கை பெரியவளாகும் கதையெல்லாம் சுற்றி அடிக்கிறது. இக்காட்சி இல்லாமலேயே, கதாநாயகி கதாநயாகனை மீண்டும் எற்பதற்கான சரியான முகாந்திரங்கள் உள்ளன. ஜெயமோகனின் கூர்மையான வசனங்கள் அசத்துகின்றன. கதாநாயகன் கதாநாயகியிடன் மிகக் கோபமாகப் பேசும் வசனமே போதுமானது கதாநாயகி மனம் மாறுவதற்கு. கதாநாயகியின் தங்கை வரும் காட்சிகளெல்லாம் வலிந்து சேர்க்கப்பட்டிருப்பது போலத் தோன்றுகிறது. அதிலும் அந்தப் பெண் இருக்கும் வீடு – தமிழ்த் திரையுலகில் அது யார் வீடாக இருக்கமுடியும்? அந்தப் பெண் கொடுமைப்படுத்தப்படுகிறாள். தீட்டு என்று சொல்லி வீட்டுக்குள் சேர்க்கமாட்டேன் என்கிறார்கள். நாய் கட்டிப்போட்டிருக்கும் இடத்துக்குப் பக்கத்தில் தட்டுமுட்டுச் சாமான்களோடு அவள் கிடக்கிறாள். ஆமாம், அது பிராமண வீடு.

பின்னணி இசையைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றால் கர்ண கொடூரம் என்றுதான் சொல்லவேண்டும். இல்லை என்றால் நம்பிக்கைத் துரோகம் என்று சொல்லலாம். இத்தனை ஆழமான, உணர்வு ரீதியான படத்துக்கு பின்னணி இசை செய்யும் மாபாதகத்தை மன்னிக்கவே முடியாது. ஒரு காட்சி தரவேண்டிய சோகத்தை, பதற்றத்தை இசை வழியாகத் தந்துவிட நினைத்து இசையமைப்பாளர்(கள்) செய்யும் குரங்குச் சேட்டைகளை என்னவென்று சொல்ல. தலையெழுத்து. இரண்டு பாடல்கள் கேட்க இனிமையாக உள்ளன.

கதாநாயகன் நன்றாக நடித்திருக்கிறார். அடுத்த படங்களில் புருவத்தை இப்படி நெறிக்கவேண்டியதில்லை. கதாநாயகி – அசத்தல். இவர் கற்றது தமிழ் படத்தில் நடித்தவர் என நினைக்கிறேன். அந்தப் படத்திலேயே நன்றாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் அசுரப் பாய்ச்சல். சிரிப்பு, வெட்கம், கோபம் எல்லாவற்றையும் நினைத்த மாத்திரத்தில் முகத்தில் கொண்டு வருகிறார். இதுவே படத்தின் பலம். என்னைக் கவர்ந்த விடுகதை நீனா, மின்சாரக் கனவு கஜோல், சிதம்பரத்தில் அப்பாசாமி நவ்யா நாயர் வரிசையில் அங்காடித் தெரு அஞ்சலியும் சேர்ந்துகொள்கிறார்.

நடிகர்களைப் புறந்தள்ளிவிட்டு இலக்கியவாதிகளும் அரசியல்வாதிகளும் சிறப்பாக நடிக்கத் தொடங்கிவிட்டார்கள். பெரும் குணச்சித்திர தொழில்முறை நடிகர்களே அசரும் வண்ணம் நடிக்கிறார்கள். அவள் பெயர் தமிழரசி படத்தில் தியடோர் பாஸ்கரனும் வீரச்சந்தானும் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்கள். இந்தமுறை பழ. கருப்பையா. இப்படத்தில் அண்ணாச்சியாக வந்து அட போட வைக்கிறார்.

இன்னொரு பலம் ஜெயமோகன். பல வசனங்கள் மிகக்கூர்மையாக உள்ளே இறங்குகின்றன – காட்சியோடு. காட்சியோடு இறங்கும் வசனம் என்பதுதான் முக்கியம். காட்சி உக்கிரமாக இல்லாமல் வசனம் மட்டும் முழித்துக்கொண்டு நிற்கும் படங்கள் பாலசந்தர்த்தனப் படங்களாக எஞ்சிவிடும். அந்த அபாயம் இப்படத்துக்கு நேரவில்லை. எத்தனை ஆழமாக எழுதினாலும் எப்போதும் ஜெயமோகனுக்குள்ளே விழித்திருக்கும் பெரும் நகைச்சுவையாளர் ஒட்டுமொத்த படத்தையே ஹைஜாக் செய்துவிட்டார் என்றே சொல்லவேண்டுன். நான் கடவுள் படத்தில் எப்படி இதே நகைச்சுவையாளர் படத்தை வேறு தளத்துக்கு மாற்றினாரோ அப்படி இங்கேயும் மாற்றுகிறார். ஜெயமோகன் கதை வசனம் எழுதும் படத்தில் இதுவும் முக்கியமான படமாக இருக்கும். ஒன்றிரண்டு இடங்களில் வரும் தேவையற்ற வசனங்கள், இயக்குநரால் மக்களின் புரிதலுக்காக சேர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன்.

நிச்சயம் நல்ல படம். இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் வெட்டித் தள்ளியிருந்தால் மிக நல்ல படமாக இருந்திருக்கும். விருதுத் திரைப்படங்கள் போன்ற திரைப்படங்களைப் போலவே, இது போன்ற நல்ல திரைப்படங்களும் தேவை. அந்த வகையில் இத்திரைப்படம் முக்கிய இடத்தைப் பெறும். சரவணா ஸ்டோர்ஸ் போன்ற பெரு முதலைக் கடைகளில் வேலை பார்ப்பவர்கள் இப்படத்தைப் பார்த்தால் என்ன உணர்வு அடைவார்கள் என்பதை யோசிக்க யோசிக்க இப்படம் இன்னும் பிடிக்கத் தொடங்குகிறது.

(இந்த விமர்சனத்தை இட்லிவடைக்கு அனுப்பியிருந்தேன். அவர் திடீரென்று காணாமல் போய்விட்டதாலும், இதை இதுவரை வெளியிடாததாலும் நானே வெளியிடுகிறேன். வழக்கம்போல இட்லிவடைக்கு நன்றி!)

Share

படித்துறையில் ஒருநாள்

இப்பதிவை வெளியிட்டுள்ள இட்லிவடைக்கு நன்றி.

இப்பதிவைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

ஏன் இட்லிவடையில் தொடர்ந்து எழுதுகிறீர்கள், நாந்தான் இட்லிவடை என்றெல்லாம் கேட்கவேண்டாம். 🙂 எனக்கு இட்லிவடை யாரென்பதுகூடத் தெரியாது. நம்புபவர்கள் நம்பிக்கொள்ளலாம். தேவைப்படும்போதெல்லாம், ஒரு நிமிடத்துக்கு சராசரியாக 7 பேர் படிக்கும் இட்லிவடை பதிவில் தொடர்ந்து எழுதவேன் என்றும் சொல்லிக்கொள்கிறேன்!

படித்துறையில் ஒருநாள்

எல்லாமே வித்தியாசமாக இருந்தது. ஒரு வசனத்தைப் பேச நூறு தடவை முயன்றார்கள். எப்படி சலிக்காமல் இதே வசனத்தைப் பேசுகிறார்கள் என்று முதலில் ஆச்சரியத்தோடும், பிறகு சலிப்போடும், அதன் பிறகு எரிச்சலோடும் பார்த்துக்கொண்டிருந்தேன். ஓர் இயக்குநர் ஒரு படம் எடுத்தவுடன் எப்படி பைத்தியம் ஆகாமல் இருக்கிறார் என்கிற ஆதாரமான சந்தேகம் வந்தது. பக்கம் பக்கமாக வசனம் பேசித் தள்ளிய சிவாஜியை நினைத்து வியப்பாக இருந்தது. சந்திரமுகி கதாபாத்திரத்துக்கு பின்னணி பேசியவருக்கு இதுவரை நான் கோவில் கட்டாததை நினைத்துக் கொஞ்சம் வருத்தமாக இருந்தது.

இயக்குநர் சுகாவின் படித்துறை படத்தின் டப்பிங்குக்குச் சென்றிருந்தேன். ‘பதறண்டாம் கேட்டேளா, நீங்களும் டப்பிங் பேசணும்’ – திடீரென்று சொன்னார் சுகா. இது என்ன ஒரு மேட்டரா என நினைத்துக்கொண்டு சென்றபின்புதான் தெரிந்து, வேண்டாத வேலையில் இறங்கிவிட்டோமோ என்று. அங்கே ஹீரோ ஒவ்வொரு வசனமாக மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருந்தார். அடுத்து என்னை பேசச் சொன்னார்கள். ஐந்து வார்த்தை உள்ள ஒரு வசனம். மீண்டும் மீண்டும் பேசினேன். படிக்கிற காலத்துல இப்படி படிச்சிருந்தா இன்னும் பத்து மார்க் கூட கிடைச்சிருக்கும் என்று என் அப்பா சொல்வது போல எங்கோ கேட்டது. எனக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. வார்த்தை க்ளியரா இல்லை என்றார் சுகா. இப்ப க்ளியரா இருக்கு, ஆனா எமோஷனலா இல்லை. எமோஷனலா இருக்கு, ஆனா நம்ம ஊர் பாஷ இல்லயே. இப்ப எல்லாம் சரியாத்தான் இருக்கு, ஆனா வசனத்த நீங்களே எழுதிட்டீங்க, நான் எழுதினத பேசினா நல்லாயிருக்கும். இப்படி பல. வசனம் ரொம்ப நீளமா இருக்கு என்று சொல்லலாமா என்று நினைத்தேன்! அடுத்த தடவை முதலில் டப்பிங் வைத்துவிட்டு, அப்புறம் படம் எடுக்கச் சொன்னால் ஈஸியாக இருக்குமே என்றெல்லாம் தோன்றியது. ஒரு வழியாக ஐந்து வார்த்தை வசனத்தைப் பேசி முடித்தேன். (என்ன பேசினேன் என்பது எனக்கு நினைவில்லை. அந்த வசனம் படத்தில் வந்தால் அதை மீண்டும் மனப்பாடம் செய்துகொள்ளவேண்டும்! வரலாறு நமக்கு மிகவும் முக்கியம்.) அடுத்து கொஞ்சம் நீண்ட வசனம். ஆமாம், 7 வார்த்தைகள் இருக்கும் என நினைக்கிறேன். அப்படி இப்படி என்று என்னவெல்லாமோ எப்படியெல்லாமோ சொல்லிப் பார்த்தேன். உண்மையில் கதை எழுதுவதும், கட்டுரை எழுதுவதும், கவிதை எழுதுவதும், முக்கியமாக படத்தை விமர்சனம் செய்வதும் அதுவும் அதனைக் கிழிப்பதும்தான் எவ்வளவு எளிமையானது.

வாய்விட்டே சொன்னேன், ஒரு படத்தை எடுத்த பின்னால டைரக்டருக்கு கோட்டி பிடிக்காததே சாதனதாங்கேன். ஒருவர் சொன்னார், பத்து படத்தையும் பாத்தவன் கதய யோசிச்சேளா என்று. சரிதான் என நினைத்துக்கொண்டேன். இன்னொரு காட்சியில் ஒரு நோயாளி முனகும் சத்தத்தைக் கொடுக்கவேண்டும். இவ்வளவு சத்தமா பேச முடிஞ்சா அவன் ஏன் ஆஸ்பத்திரிக்கு வராங்கிய. சரி என்று கொஞ்சம் குரலைக் குறைத்தேன். இவ்வளவு மெதுவா பேசினா ஒண்ணும் கேக்காது. மீடியமாகப் பேசினேன். இதுல பேச்சே வரக்கூடாது, வெறும் எக்ஸ்பிரஸந்தான். இது படத்தில் 20 செகண்டு வந்தால் அதிகம். அதற்கு ஒரு முப்பது தடவை முயற்சித்தார்கள். நீங்க மூச்சு விடும்போது ஆளு உள்ள இழுக்கான், நீங்க இழுக்கும்போது ஆளு வெளிய விடுதான். சின்க் ஆல பாருங்க. ஒரு வழியாக சின்க் ஆனது. பெருமூச்சு ஒன்றை விட்டேன். இப்ப நா எப்படி வேணா மூச்சு விடலாம் கேட்டியளா. வேறொரு கதாபாத்திரம் பேசிக்கொண்டிருக்கும்போது, டி டி எஸ்ஸில் கேட்கும் சின்ன எக்ஸ்பிரஸனுக்கு இவ்வளவு உழைப்பு.

உண்மையில் சினிமா உழைப்பின் மொழி. எந்த ஒரு மோசமான படத்தின் பின்னாலும் நிச்சயம் உன்னதமான உழைப்பு இருந்தே தீரும், ஏதோ ஒரு வடிவில். அதோடு சேர்ந்து படமும் சிறப்பாக அமையும்போது எல்லாமே உன்னதமாகிவிடுகிறது. தவறும்போது எல்லாமே உதாசினப்படுத்தப்பட்டுவிடுகிறது.

ஓர் உதவி இயக்குநர் சொன்னார். (எனது விமர்சனங்களை படித்திருக்கிறார் போல) இனிமே எழுதும்போது இதெல்லாம் மனசுல இருக்கும்ல என்று. விமர்சகர்கள் மோசமான ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று அவர் தெரிந்துகொள்வார். உண்மையில் இரு தரப்புமே நியாயங்களைக் கொண்டுள்ளது. உழைப்பின் உன்னதத்தோடு வரும் திரைப்படம் ஒன்று மிகவும் விமர்சிக்கப்படும்போது திரைப்படத்துடன் நேரடியாகப் பங்குகொண்டவர்கள் அடையும் நிம்மதியின்மை நிச்சயம் உண்மையானது. ஆனால் விமர்சனம் என்பது இதையெல்லாம் என்றுமே பொருட்படுத்தாமல் இயங்கிவருகிறது. ஏனென்றால் விமர்சனம் என்பது ஓர் ஒப்பீடு மட்டுமே. ஒப்பீடாலேயே தொடர்ந்து மாதிரிகள் கட்டமைக்கப்படுவதால் விமர்சனம் உழைப்பை மெல்லப் புறந்தள்ளுகிறது. ஆனால் விமர்சகன் ஒருவன் படம் எடுக்கும் விதத்தை முழுக்க முழுக்க கூடவே இருந்து பார்த்தானால் அவனது பார்வை இன்னும் கூர்மையடைவதோடு, எதை ஏன் எப்படி சொல்கிறோம் எனபதைவிட எதை எப்படிச் சொல்லக்கூடாது என்பது நிச்சயமாகப் புலப்படத் தொடங்கும் என்று தோன்றியது. பாலுமகேந்திரா சுகாவுக்கு முன்பு எழுதிய கடிதத்தில் ‘என்ன பலன் என்று தெரியாமலேயே கடும் உழைப்பைக் கோரும் ஊடகம் திரைப்படம்’ என்ற பொருள்பட எழுதியிருந்தாராம். கடும் உழைப்பைக் கோரும் ஒரு திரைப்பட அனுபவத்தை இன்று நேரில் பார்த்தேன். நான் இன்று பார்த்தது நூறில் ஒரு பங்கு கூட இல்லை என்பதுதான் இதில் முக்கியமானது. இன்றைக்குப் பார்த்ததாவது மூளையை அழுங்கடிக்கும் விஷயம்தான். டப்பிங்குக்கு முன்னதாக படத்தின் வேலைகள் கோரும் க்ரியேட்டிவிட்டி உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் தேவையான உழைப்பை நாம் இதிலிருந்தே புரிந்துகொள்ள முடியும்.

இன்னும் சில முக்கல் முனகல்களைச் சொன்னேன். டப்பிங் முடிந்தது எனக்கு. கிட்டத்தட்ட 2 மணி நேரத்தில் நான் பேசியது மொத்தம் 2 நிமிடங்கள் இருக்கலாம்! சரி போகலாம் என்றார் சுகா. விருது எப்போ தருவாங்க என்று கேட்டேன். பை கொண்டாந்திருக்கேளா என்றார். இல்லை, கொடுத்த உடனே வேண்டாம்னு மறுக்கணும், கவிஞம்லா என்றேன்.

சுகா இப்படத்தை இயக்குகிறார் என்பது ஓர் ஆர்வம். இன்னொரு ஆர்வம் இளையராஜாவின் இசை குறித்தானது. சுகா இசை என்றால் என்ன என்று தெரிந்தவர். அதாவது இசையோடு தொடர்புடைய விஷயங்கள் தெரிந்தவர் என்றல்ல நான் சொல்வது. நேரடியாகவே இசை என்றால் என்ன என்பதை பற்றிய நல்ல அறிவு உள்ளவர். ஆர்மோனியம் வாசிக்கத் தெரிந்தவர். கர்நாடக ராகங்களில் தேர்ச்சி உள்ளவர். அதனால் அவர் இளையராஜாவோடு பணிபுரிந்து வரும் திரைப்படத்தின் பாடல்கள் குறித்த அதீத ஆர்வம் எனக்கிருந்தது. மூன்றாவதான ஆர்வம் இத்திரைப்படம் நெல்லையோடு தொடர்புடையதென்பது. நான்காவதான ஆர்வம் இப்படத்தில் எஸ்.ராமகிருஷ்ணனும் நாஞ்சில் நாடனும் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள் என்பது.

தேரோடும் என்னும் ராமகிருஷ்ணன் எழுதிய பாடலைக் கேட்டேன். முதல் முறை கேட்டபோது இசையின் ஆழம் என்னை அசர வைத்தது. (எனக்கு இசை என்றாலே என்னவென்று தெரியாது. எனது கருத்து எனது ரசனை சார்ந்தது மட்டுமே.) பாம்பே ஜெயஸ்ரீயும் சுதா ரகுநாதனும் பாடியிருக்கும் இப்பாடல் இளையராஜாவின் முக்கியமான பாடல்களில் ஒன்றாக அமையும். எஸ்ராவின் தமிழ் அழகாக வெளிப்பட்டுள்ளது. அதேபோல் நா. முத்துக்குமார் எழுதியிருக்கும் நீரோடும் எனத் தொடங்கும் (என நினைக்கிறேன்!) பாடல் இன்னொரு அசத்தலான பாடலாக இருக்கும். இந்த இரு பாடல்களைக் கேட்டபோது, குணா, மகாநதி, தேவர் மகன் காலத்தில் இளையராஜா இசை அமைத்த மிகச் சிறந்த பாடல்களின் நினைவு வந்தது. இசையில் தொடங்குதம்மா (ஹே ராம்), உனைத் தேடும் ராகமிது (பொன்மலை), கண்ணில் பார்வை (நான் கடவுள்) வரிசையில் இப்பாடல்கள் இரண்டும் அமையும் எனபதில் ஐயமே இல்லை.

படத்தை அங்கங்கே பார்த்த வகையில், எல்லாருமே புதிய முகங்கள் என்பது தெரிந்தது. மற்றபடி என்ன கதை என்பதெல்லாம் விளங்கவில்லை. ஆனால் ஆர்வம் மட்டும் விண்ணோங்கி வளர்ந்துவிட்டது. படத்தின் ஹீரோ டப்பிங் தியேட்டரில் ஓரத்தில் கீழே உட்கார்ந்திருந்தார். இன்னும் பெயர் வைக்கப்படாத பையன். அடுத்த படத்துல எங்களையே பாத்து நீங்க யாருன்னு கேப்பான் என்றார் நண்பரொருவர். இப்படம் பெரும் வெற்றிபெற்று அக்கேள்வியை அவர் நிஜமாகவே கேட்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

ஆர்யா தயாரிக்கும் படம் இது. ஆர்யா இன்று டப்பிங் தியேட்டருக்கு வந்திருந்தார். படம் தொடங்கிய தினத்தில் இருந்து இன்றுதான் இரண்டாவது முறையாக வந்திருக்கிறார் என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். முதல் படம் இயக்கும் இயக்குநருக்குத் தேவையான சுதந்திரம் சுகாவுக்குக் கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு நல்ல படம் வர நினைக்கும் ஆர்யாவை நினைத்தும் சந்தோஷமாக இருந்தது.

சரி சுகா பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தேன். வானத்தில் சரியும் சூரியன் ரம்மியமாக இருந்தது. இனி ஆட்சியைப் பிடிக்கவேண்டியது மட்டும்தான் பாக்கி.

Share

நாயி நிரலு – கன்னடத் திரைப்படம் (சில இந்தியத் திரைப்படங்கள் – 05)

லோக் சபா சானலில் நாயி நிரலு (நாயின் நிழல்) என்ற கன்னடப் படம் நேற்று ஒளிபரப்பானது. எஸ். எல். பைரப்பாவின் நாவலை கிரிஷ் காசரவள்ளி இயக்கியிருக்கிறார்.

நேற்று படத்தைப் பார்த்தபோது, இது ஒரு சிக்கலான நாவல் போலத் தோன்றுகிறதே என்று நினைத்தேன். குறுநாவலே ஒரு திரைப்படத்துக்கான சிறந்த வடிவம் என்பது நேற்று மீண்டும் உறுதிப்பட்டது. ஒரு நீண்ட நாவலில் மட்டுமே சாத்தியமாகக்கூடிய நீளும் காலங்களும், தொடர்ந்த கதைத் திருப்பங்களும் திரைப்படத்தில் ஓர் அயர்ச்சியை ஏற்படுத்தியது என்றே சொல்லவேண்டும். கிரிஷ் காசரவள்ளி போன்ற இயக்குநரின் கைகளில் சிக்கியதால், அது ஓரளவு தப்பித்தது என்றும் சொல்லவேண்டும்.

நாவலின் மையமான மறுபிறப்பு (நன்றி: விக்கிபீடியா) என்கிற நம்பிக்கையிலிருந்து இப்படம் விதவையான ஒரு பெண்ணின் மையமாக மாறியிருப்பதைக் கண்கூடாகப் பார்க்கமுடிகிறது. ஒரு நாவலைத் திரைப்படமாக்கும்போது, இயக்குநர் தனக்குத் தேவையான சுதந்திரத்தை எடுத்துக்கொண்டே தீரவேண்டும். அந்த வகையில் இயக்குநர் இத்திரைப்படத்தில், நாவலில் சொல்லப்பட்ட சில காட்சிகளைத் தவிர்த்திருக்கிறார் என்பது தெரிகிறது. அதனால் இத்திரைப்படத்தின் மையம், ஒரு விதவைப் பெண்ணின் மீது குவிகிறது. அதன் பின்னூடாக ஒரு சிறந்த மாமனாரின் சித்திரம் மேலெழுவதையும் பார்க்கமுடிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. மாமனாரின் சித்திரத்தைப் பற்றித் தெளிவாக எழுதமுடியாது. சிறந்த விற்பன்னராகவும், தன் மீது தீராத விசாரணையும் கொண்டவராகவும் வரும் இவரது பாத்திரத்தைப் படத்தைப் பார்த்துத்தான் புரிந்துகொள்ளமுடியும்.

ஏற்கெனவே நான் பார்த்த காசரவள்ளியின் Kraurya (கதை சொல்லி) திரைப்படம் பாவனைகள் இன்றி மிக நேரடியாகப் பேசிய படம். நாயி நிரலு பாவனைகள் அற்ற படம்தான் என்றாலும், மிக நேரடியான திரைப்படம் என்று சொல்லமுடியாது. படத்தைப் பார்ப்பவர்கள் தாங்களாக உருவாக்கிக்கொள்ளவேண்டிய தீர்மானங்களுக்கு நிறைய இடம் இருக்கிறது. ஒருவர் இத்திரைப்படத்தை மறுபிறப்புத் தொடர்பான நம்பிக்கைகள் சார்ந்த திரைப்படம் என்ற வகையில் பார்க்கலாம். இன்னொருவர் இத்திரைப்படத்தை விதவைகளின் உணர்வுகள் சார்ந்த திரைப்படம் என்று பார்க்கலாம். இன்னும் ஒருவர் இத்திரைப்படத்தை குடும்பத்துக்குள்ளான உணர்வுகளின் பிரச்சினையாகவும், ஒரு தாய்க்கும் மகளுக்கும் நடக்கும் போராட்டமாகவும் பார்க்கலாம். இன்னொருவர் சமூகத்துக்கும் அது உண்டாக்கி வைத்திருக்கும் சம்பவங்களுக்குமான வெளியாகப் பார்க்கலாம். இவையெல்லாமே இப்படத்தில் அடங்கியிருக்கிறது என்றாலும், கிரிஷ் காசரவள்ளி நாவலில் எஸ்.எல். பைரப்பாவின் நாவலில் இருந்து சில குறிப்பிட்ட பகுதிகளை நீக்கிவிட்ட வகையில், இதனை விதவைகளின் உணர்வுகள் சார்ந்த பிரச்சினையாகவே என்னால் பார்க்கமுடிகிறது.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு இளம் விதவையுடன் வாழும் பிராமணக் குடும்பத்தைச் சுற்றி நடக்கிறது கதை. இளம் பிராமண விதவைதான் என்றாலும் அவளுக்கு வயதுக்கு வந்த, கல்லூரியில் படிக்கக்கூடிய மகள் உண்டு. சிறு வயதிலேயே திருமணம் ஆகிப் பிள்ளை பெற்றிருக்கக்கூடிய வாய்ப்புகள் அக்காலத்தில் உள்ள நிலையில், இந்த வயதுக்கு வந்த மகள் என்பதும், அவளது தாய் இளமையான விதவைத் தாய் என்பது முக்கியம் பெறுகிறது. வயதான, படுத்த படுக்கையாகக் கிடக்கும் மாமியார், குடும்பத்தைச் சுமக்கும் மாமனார். இறந்து போன தன் மகனின் மறுபிறப்பாக ஒருவன் பக்கத்து கிராமத்தில் பிறந்திருக்கிறான் என்று யாரோ ஒருவரின் மூலம் அறிகிறார் மாமனார். தன் மனைவியின் தொடர் வற்புறுத்தலுக்குப் பின்பு அவனை வீட்டுக்கு அழைத்து வருகிறார். படுத்த படுக்கையாகக் கிடக்கும் மாமியார் குணம் பெறுகிறார். தன் மகன்தான் அவன் என்று உறுதியாக நம்புகிறார் அவர். ஊரும் நம்புகிறது. ஆனால் விதவைப் பெண்ணோ வந்தவன் தன் கணவனல்ல என்று நினைக்கிறாள். ஊரும் மாமியாரும் வந்தவன் அவள் கணவனே என்று நம்பச் சொல்கிறது. ஒரு கட்டத்தில் அவளுக்கு அவனைப் பிடித்துப் போகிறது. அவளைத் தன் கணவனாக ஏற்றுக்கொள்கிறாள். இங்கே தொடங்குகிறது கதையின் பிரச்சினை.


விதவைப் பெண்ணுக்கும் வந்திருக்கும் இளைஞனுக்கும் ஏற்படும் உறவில் அவள் கருத்தரிக்கிறாள். மாதா மாதம் தலைமுடியை சிரைத்துக்கொள்ளும் சடங்கை இனிச் செய்ய மாட்டேன் என்கிறாள் விதவைப் பெண். இனி தான் விதவையல்ல என்று முடிவெடுக்கிறாள். இதுவரை தன் மகன் என்று நம்பி அவனை வீட்டை விட்டு அனுப்பக்கூடாது என்று சொன்ன மாமியார், அவனை வீட்டை விட்டுப் போகச் சொல்ல, அதுவரை தன் கணவன் என்று நம்பாமல் இருந்த விதவை பெண் அவனை வீட்டை விட்டு அனுப்பக்கூடாது என்று முடிவெடுக்கிறாள். வீட்டுக்கு அவனை அழைத்து வந்த தானே பிரச்சினையின் காரணம் என்று நினைக்கிறார் மாமனார்.

தன் மாமா வீட்டில் இருந்து படித்துவரும் விதவைப் பெண்ணின் மக்ள் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு அதிர்கிறாள். இத்தனைக்கும் விதவைப் பெண்களுக்கு மொட்டையடிக்கக்கூடாது, சமயச் சடங்குகள் கூடாது என்ற கருத்தோடு வளர்ந்த பெண் அவள். தன் அம்மா கர்ப்பம் தரித்திருக்கிறாள் என்று தெரிந்தவுடன் அவளுக்குப் பெரும் அதிர்ச்சியும், கோபமும் ஏற்படுகிறது. இத்தனைக்குப் பின்னும் அவளால் தன் அம்மாவை வெறுக்கமுடியவில்லை. தன் தந்தையாக வந்திருப்பவனை விரட்டிவிட்டால் தன் அம்மா தனக்குக் கிடைத்துவிடுவாள் என நினைக்கிறாள். ஆனால் அவனை வீட்டை விட்டு அனுப்ப அவளது அம்மா சம்மதிக்கவில்லை.

ஊராரின் நிர்ப்பந்தத்தால், யாருமற்ற ஒரு தீவுக்கு, தன் கணவனுடன் செல்கிறாள் அந்த விதவைப் பெண். தான் திருமணம் செய்துகொண்டும் விதவைப் பெண்; விதவைப் பெண்ணாக இருந்தும் திருமணம் ஆனவள் என்னும் குழப்பம் அவளைத் துரத்துகிறது. தான் சுமங்கலியும் அல்ல, அமங்கலியும் அல்ல என்பதுதான் உண்மை என்று நினைக்கிறாள். இதற்கிடையில் மகளின் கோபம் உச்சத்துக்குச் செல்கிறது. ஒரு கேஸ் கொடுத்து தன் தந்தை என வந்திருப்பவனை சிறையில் வைக்கிறாள். அதனால் அவன் கோபம் கொள்கிறான். தன்னைப் பார்க்கவரும் கர்ப்பிணி மனைவியைப் பார்க்க மறுக்கிறான். அவன் யாருமற்ற தீவில் போது, ஓடக்காரப் பெண்ணின் மீது மையல் ஏற்படுகிறது. அதனைப் பயன்படுத்தி, அந்தப் பெண்ணை வைத்து, தன்னைக் கெடுக்க வந்ததாகப் பொய் சாட்சியம் சொல்லச் சொல்லி, அவனை நிரந்திரமாக உள்ளே வைக்கிறார்கள். இரண்டு வருடம் சிறைத்தண்டை என்று தீர்ப்பு வருகிறது. அக்கோபத்தில் தனக்குப் பிறந்த பெண்ணையும் பார்க்க மறுக்கிறான் அவன்.

திரும்பி வருவானா வரமாட்டானா என்கிற நிலையில் அதே தீவிலேயே தங்க தீர்மானிக்கிறாள் ஒரு மகளைப் பெற்றிருக்கும், ஒரு கணவனைப் பெற்றிருக்கும் அந்த விதவைப் பெண்.

இந்த நீண்ட கதைப் பின்னல் கொண்ட இத்திரைப்படம் ஆரம்பம் முதல் இறுதிவரை, எல்லா சட்டகங்களிலும் ஒருவித சோகத் தன்மையை மையச் சரடாகக் கொண்டிருக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஏதோ ஒரு சோகம் நம்மைத் தொட்டுக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அது தனது மகன் பற்றிய ஒரு தாயின் சோகமாக இருக்கலாம். இளம் விதவைக்கு அக்காலத்துச் சமூகம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் தரும் அழுத்தமாக இருக்கலாம். தாய்க்கும் மகளுக்குமான போராட்டமாகவோ, தனது மனதுக்குள்ளேயே தான் செய்துவிட்ட செயலை நினைத்து கிழவர் செய்துகொள்ளும் தர்க்கமகாவோ அது இருக்கலாம். இப்படித் தொடரும் சோகமே இத்திரைப்படத்தின் நிறம்.

இத்திரைப்படத்தின் மிக முக்கியமான காட்சிகள் சிலவற்றைப் பற்றிச் சொல்லவேண்டும்.

தனது மகன் திரும்ப வந்துவிட்டான் என்று நினைத்துக்கொண்டு அவனோடு பாசமாகப் பழகும் ஒரு முதிய தாய், தன் மகனுக்காக தன் மருமகளை, விதவைக் கோலத்தை விடுத்து, ஒரே ஒரு தடவை வண்ணப் புடைவை ஒன்றை உடுத்திக்கொள்ளச் சொல்லிக் கெஞ்சும் காட்சி. மருமகள் தொடர்ந்து மறுக்கிறாள். ஆனால் தாயோ விடுவதாக இல்லை. மெல்ல மெல்ல அவள் மனதை மாற்றி, அவளை வண்ணப் புடைவை அணிவிக்கச் செய்கிறாள். ஆனால் பின்னர் மருமக்ளுக்கும் தன் மகனுக்கும் உறவு ஏற்பட்டுவிட்ட நிலையில், ஒன்றுமே செய்யமுடியாதவளாக மருமகளைப் பிடித்து உலுக்குகிறாள். அப்போது மருமகள் வைத்துக்கொண்டிருக்கும் சவுரி கையோடு வந்துவிடுகிறது. அப்போது அந்த முதிய தாய் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் சொல்லும் செய்திகள் ஏராளம்.

இன்னொரு காட்சி, மகளும் தாயும் சந்திக்கும் இடம். எப்படி தன் தாய் இருக்கவேண்டும் என்று நினைத்தாளோ அப்படி தாய் மாறியிருக்கிறாள். ஆனால் இந்த மாற்றம் வந்த விதம் வினோதமானது. இதனை ஏறக அந்த மகளால் முடியவில்லை. எப்படியாவது தன் தாயை மீட்கவேண்டும் என்று நினைக்கிறாள். அழகான வண்ணப் புடைவையுடன், தலை நிறைய முடியுடன், பூவுடன் அம்மாவைப் பார்க்கும்போது அவள் அழகாக இருப்பது தெரிகிறது. ஆனால் அந்த அழகுக்குப் பின் ஏதோ ஒரு வினோதம் இருப்பதை அவளால் ஏற்கமுடியவில்லை. எத்தனையோ கேட்டும் தந்தையாக வந்திருப்பவனை, தன்னைவிட வயதில் சிறிய தந்தையை, வெளியில் அனுப்ப மறுக்கிறாள் தாய். அதுவரை சமயச் சடங்குகளுக்கு எவ்வித மதிப்பும் தராத அந்த மகள், அவ்வருடம் தனது தந்தையின் மரண தினத்தை சிறப்பாகச் செய்துமுடிக்கிறாள். தனது தாயை ஏதோ ஒரு வகையில் பழிதீர்த்துவிட்ட மன நிம்மதி அவளுக்குக் கிடைக்கிறது.

படத்தின் உச்சகட்டக் காட்சி மிக முக்கியமானது. தாயும் மகளும் பேசிக்கொள்கிறார்கள். மகளின் கையில் தன் தாய்க்குப் பிறந்த குழந்தை இருக்கிறது. மகள் தன் தாயிடம் எப்போதும் கேட்டுவந்த அதே கேள்வியை மீண்டும் கேட்கிறாள். ‘வந்தவனை அப்பா என்று நீ நிஜமாகவே நம்பினாயா?’ என்று. இந்தக் கேள்வி கேட்கப்படும்போதெல்லாம் அதனைத் தவிர்க்கும் தாய் அப்போது பேசுகிறாள். ”ஊரெல்லாம் வந்தவனை உன் அப்பா என்றார்கள். ஆனால் என் கணவன் என்று ஏற்க மறுத்தார்கள். உன் பாட்டி அவனைத் தன் மகனாக நினைத்தாள். ஆனால் என் கணவனாக ஏற்க மறுத்தாள். ஊருக்கும், பாட்டிக்கும் எல்லாருக்கும் ஒரு பார்வை இருந்தது. எனக்கும் ஒரு பார்வை இருந்தது.” இடைமறித்து மீண்டும் மகள் கேட்கிறாள். ‘நீ அவனை அப்பா என்று நம்பினாயா’ என்று. அப்போது அவள், ‘ஒரு போதும் நான் நம்பியதில்லை’ என்கிறாள். பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிறாள் மகள். இக்காட்சியின் வழியே நீளும் மனப்பிரதிகள் ஏராளம். இக்காட்சியே அதுவரை படத்தைப் பீடித்திருந்த பெரும் சோகத்துக்கும், நீள நீளமான காட்சிகளுக்கும் ஒரு அர்த்தத்தைக் கொடுக்கிறது. இக்காட்சியில் வரும் கூர்மையான வசனங்கள்தான் இப்படத்தை விதவைகளின் மனப்போராட்ட பிரதியாகவும் மாற்றுகிறது.

தகப்பனாக மறுபிறப்பில் வரும் அவன் பிறந்தது முதலே ஏதோ ஒரு மனக்கோளாறில் இருப்பதாகவே காட்டப்படுகிறது. மிக முக்கியமான நேரங்களில், அவன் குயிலுடன் பேசிக்கொண்டிருக்கிறான். தனது தந்தையின் பெயரை மட்டும் சரியாகச் சொன்னதால், அவன் மறுபிறவி என்று நம்பிவிடுவதாக இத்திரைப்படத்தில் காட்டப்படுகிறது. அவன் சில கேள்விகளுக்குச் சரியாகவும், பல கேள்விகளுக்குத் தவறாகவும் பதில் சொல்கிறான். ஆனாலும் கிராம மக்கள் அவன் சரியாகச் சொல்லும் பதிலை மட்டும் எடுத்துக்கொண்டு, அவன் மறுபிறவிதான் என்று தீர்மானிக்கிறார்கள். ஆனால் நாவலில், அவன் மறுபிறவிதான் என்பதற்கான சில காரணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன என்று விக்கிபீடியா சொல்கிறது. கிரீஷ் காசரவள்ளி ஒரு நேர்காணலில் இதனை உறுதிப் படுத்துகிறார். நாவல் ஒருவனின் மறுபிறப்பை மையப்படுத்த, தான் கருப்பும் அற்ற வெள்ளையும் அற்ற நிறங்களில் உலவும் மனிதர்களை உருவாக்கியதாகச் சொல்கிறார்.

ஒரு நாவல் திரைப்படமாக்கப்படுவதில் உள்ள சவால்கள், சங்கடங்கள் இத்திரைப்படத்திலும் தெரிகின்றன. ஆனால் நல்ல திரையாக்கம், அருமையான ஒளிப்பதிவு, யதார்த்தமான நடிப்பு என்று மிகக் கச்சிதமாக அமைந்திருப்பதால், படத்தின் ஒவ்வொரு காட்சியும் பொலிவு பெற்றுவிடுகிறது. இதுவே இத்திரைப்படத்தை முக்கியமானதாகவும் மாற்றுகிறது, நம்மைப் பார்க்கவும் வைக்கிறது.

Share

Death of a President – பரிபூரண சுதந்திரத்தின் உச்சம்

சோனியா காந்தி ஜூலை 2009ல் கொலை செய்யப்பட்டுவிட்டார். யார் எதற்காகக் கொன்றார்கள் என ஆராய்கிறது சிபிஐ. கொலை செய்தவர்கள் யாராக இருக்கும் என்று யோசிக்கும்போது, இலங்கைத் தமிழர்களின் பட்டியலை முதலில் பார்க்கத் தொடங்குகிறது சிபிஐ.

இப்படி ஒரு திரைப்படத்தை இந்தியாவில் யோசிக்கவாவது முடியுமா எனத் தெரியவில்லை.

ஓர் அதிபரின் மரணம் என்னும் ஆங்கிலத் திரைப்படம் இதனைச் சாதித்திருக்கிறது. இத்திரைப்படம் ஆவணப்பட உத்தியில் இயக்கப்பட்டுள்ளது. ஜார்ஜ் புஷ் கொல்லப்பட்டுவிடுகிறார். அதனை விசாரிக்கும் எஃ பி ஐ, புஷ்ஷின் மெய்க்காப்பாளர்கள், அமைச்சர்கள், எஃபிஐ அதிகாரிகள், சந்தேகத்திற்கு உரிய கலவரக்காரர்கள் உள்ளிட்ட எல்லாரையும் விசாரிக்கிறது. அவர்கள் நடந்தவற்றை விவரிக்க விவரிக்க காட்சிகள் உருப்பெறுகின்றன. ஆவணப்படத் தன்மையில் இப்படம் இயக்கப்பட்டுள்ளது மிகப் பெரிய பலமாக அமைகிறது.

சிகாகோவில் வணிகர்களின் கூட்டத்தில் பங்கேற்க வரும் ஜார்ஜ் புஷ்ஷை எதிர்த்து பெரிய கூட்டம் மறியல் செய்கிறது. அதை மீறி புஷ் அக்கூட்டத்தில் சிறப்பாகப் பேசுகிறார். அக்கூட்டம் முடிந்ததும் சிகாகோ மக்களைப் பார்த்துப் பேசும் புஷ் சுடப்படுகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறக்கிறார். ஜார்ஜ் புஷ் பேசும் இடத்துக்கு எதிரே இருக்கும் பலமாடி உணவகத்திலிருந்தே யாரேனும் சுட்டிருக்கவேண்டும் என்று கருதும் எஃபிஐ, அங்கே பணிபுரியும் அலுவலர்களின் பட்டியலைப் பார்க்கிறது. அங்கிருக்கும் முஸ்லிம்களை முதலில் சந்தேகிக்கத் துவங்குகிறது. முதலில் சந்தேகத்துக்கு உள்ளாகும் ஒரு முஸ்லிம் தனது தரப்பைக் கூறுகிறார். அவரது சகோதரர் ஈராக்கில் போரில் இறந்ததுக்குக் காரணம் புஷ்தான் என்று அவரது தந்தை நம்புகிறார். புஷ் கொல்லப்பட்டதும், அவரது தந்தை தன் மகனுக்கு கடிதம் ஒன்றை எழுதிவிட்டுத் தற்கொலை செய்துகொள்கிறார். இன்னொரு முஸ்லிம்தான் கொலைகாரனாக இருக்கவேண்டும் என்று எஃபிஐ முடிவு செய்கிறது. கைரேகைத் தடங்கள் ஒத்துப் போவதாலும், அவர் ஆஃப்கானிஸ்தான் சென்றிருப்பதாலும் அவர்தான் கொலையாளியாக இருக்கமுடியும் என்று முடிவெடுக்கிறது எஃபிஐ.

யாரையேனும் கொலையாளி என்று முடிவு கட்டவேண்டிய அழுத்தம் எஃபிஐக்கு. அவர் முஸ்லிமாகவும், ஆஃப்கானிஸ்தானுக்குச் சென்றவராகவும் இருந்தால், அவரை அல்க்வைதாவுடன் எளிதில் தொடர்புபடுத்திவிட முடியும் என்று நினைக்கிறது எஃபிஐ. 11 ஜூரிகள் அடங்கிய சபை இவரையே குற்றவாளி என்றும் தீர்ப்பளிக்கிறது. அவர் இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடிவெடுக்கிறார். இவரது மேல்முறையீட்டை இழுத்தடிக்கிறது எஃபிஐ. குற்றவாளியின் வழக்கறிஞர் இந்த இழுத்தடிப்பைக் கேள்வி கேட்கிறார். விசாரணை தொடர்கிறது என முடிகிறது திரைப்படம்.

எது உண்மை, எது கற்பனை என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு, படம் முழுதும் விரவிக் கிடக்கும் ஆவணப்படத் தன்மை நம்மை ஆச்சரியப் படுத்துகிறது. உண்மையில் ஜார்ஜ் புஷ் இப்போது உயிரோடு இருக்கிறாரா அல்லது உண்மையில் கொன்றுதான்விட்டார்களா என்று ஒரு நிமிடம் நம்மை யோசிக்க வைத்துவிடுகிறது திரைப்படத்தின் கச்சிதமான ஆக்கம்.

குற்றவாளி யாராக இருக்கலாம் என்னும்போது முதலில் முஸ்லிம்களின் பட்டியலைத்தான் பார்த்தோம் என்கிறது எஃபிஐ. இது ஒரு இனத்துக்கு எதிரான நடவடிக்கை என்று பார்க்கவேண்டாம், அந்த நேரத்தில் அங்கே இருந்துதான் தொடங்கமுடியும் என்கிறார் அவர். இதைப் புரிந்துகொள்ள முடிந்தாலும், ஒரு முஸ்லிமை, இத்தனை பெரிய கொலைக்கு வெறும் கைரேகையை மட்டுமே வைத்து பொறுப்பாக்க முனைவது, அமெரிக்காவின் மனத்தின் அடியில் உறைந்துகிடக்கும் அல்க்வைதா பயத்தை படம்பிடித்துக் காட்டுகிறது. கைரேகை நிபுணர் ஒருவர் சொல்கிறார், கொலை செய்தவனின் கைரேகை பொதுவாகத் துப்பாக்கியில் கிடைக்காது; நீங்கள் பார்க்கும் திரைப்படங்களில்தான் இப்படிக் காண்பிப்பார்கள், ஆனால் உண்மை அதுவல்ல என்று. இதையும் சேர்த்துக்கொண்டு பார்த்தால் எஃபிஐயின் அவசரத்தையே இயக்குநர் (Gabriel Range) காண்பிக்க நினைத்திருக்கிறார் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இயக்குநர் சொல்ல வருவது, அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தேவையான, கடுமையாக்கப்படவேண்டிய சட்டங்களைப் பற்றி. அந்த நோக்கில் அவர் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

குற்றவாளி என்று அறியப்படும் முஸ்லிமின் மனைவியும் விசாரணையில் தன் கருத்தைச் சொல்கிறார். ஆஃப்கானிஸ்தானில் அல்க்வைதா அணியில் தன் கணவர் பலவந்தமாகச் சேர்க்கப்பட்டார் என்றும், உடல்நிலை சரியில்லை என்று அவர் நடித்ததால் விடுவிக்கப்பட்டுவிட்டார் என்றும், இதனை யாரிடமும் சொல்லவேண்டாம், பாகிஸ்தான் சென்றதாக மட்டும் சொன்னால் போதும் என்று அவர் சொன்னதாகவும் இவர் சொல்கிறார். உண்மையான ஒரு விசாரணையில் ஏற்படும் குழப்பத்தை திரையில் கொண்டுவருவதில் இக்காட்சியில் பூரணத்துவத்தை எட்டியிருக்கிறார் இயக்குநர். இதைப் பார்க்கும் ஒருவர் குற்றவாளி உண்மையில் யார் என்னும் குழப்பத்தோடே திரைப்படம் பார்க்க வேண்டியிருந்திருக்கும்.

இத்திரைப்படத்தின் வழியாக நாம் காண்பது அமெரிக்கா தரும் சுதந்திரத்தை. முதலில் இது போன்ற ஒரு படத்தை எடுத்தது, இரண்டாவதாக குற்றவாளி என்று சொல்லப்படும் முஸ்லிமுக்கு ஆதரவாகப் பேசும் வழக்கறிஞரின் கேள்விகள், அடுத்ததாக புஷ்ஷுக்கு எதிராகக் காட்டப்படும் கலவரக்காரர்களின் மறியல்களும் கூச்சல்களும். எல்லாவற்றிலும் சுதந்திரம். இதையே இத்திரைப்படம் நமக்கு முகத்தில் அடித்தாற்போல் காண்பிக்கிறது. இந்தியாவில் இது சாத்தியமாகுமா என்ற ஏக்கத்தை உருவாக்கிவிடுகிறது திரைப்படம்.

ஒரு தலைவரின் கொலையை விசாரிப்பது என்பது நாம் கதை போலச் சொல்லப் பிறர் அதனை அப்படியே புரிந்துகொள்வது அல்ல. நாம் எதிர்பார்க்காத திசைகளிலெல்லாம் பயணிக்கும் காற்றைப் போன்றது அது. ராஜிவ் காந்தி கொலை வழக்கின் சிறப்பு அதிகாரியாக இருந்த ரஹோத்தமனுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்னதையெல்லாம் கேட்டபோது, ஒரு வழக்கின் பல்வேறு புதிர்கள் எப்படி விடுவிக்கப்படுகின்றன என்றும், விடுவிக்கப்பட்ட அதே புதிர்கள் எப்படி மீண்டும் சிக்கலாகிக்கொள்கின்றன என்றும் ஒரு சேரப் பார்க்கமுடிந்தது. ராஜிவ் காந்தி கொலை வழக்கு பற்றிய சிடி ஒன்றையும் ரஹோத்தமன் வெளியிட்டிருக்கிறார். அதைப் பற்றி இன்னொரு பதிவில் எழுதுவேன்.

நேரில் காண்பது என்னவோ ஒரு குண்டு வெடிப்பு அல்லது தோட்டா. அதற்குப் பின்னர் சிதறிக் கிடக்கும் பல்வேறு செய்திகளை அள்ளிக் கூடையில் போடும் காவல்துறையின் ஒரு பரிமாணத்தை வெற்றிகரமாகத் திரையில் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர்.

Share

ஈரம், ஸ்பிரிட் திரைப்படங்கள்

மெண்ட்டல் ப்ளாக் பற்றி எழுதும்போதே சொல்லியிருக்கவேண்டும்.

வார்த்தை இதழில் ஆலோசனைக் குழுவில் இருந்தபோது, பிரசுரிக்கச் சொல்லி கவிதைகள் வரும். அஞ்சல் அட்டையில் அனுப்பவேண்டாம் என்று வார்த்தை இதழில் தெளிவாகத் தெரிவித்த பின்பும் அனுப்புவார்கள். அஞ்சலட்டையில் வந்த மறக்கமுடியாத கவிதை:

“அன்பே
என் உடலைத்தான்
உனக்குத் தரமுடியும்
ஏனென்றால்
என் உயிர்
இந்தியாவுக்கு.”

என்ன ஒரு இந்தியன்!

-oOo-

ஈரம் படம் பார்த்தேன். ஷங்கர் தயாரிப்பில் வந்த நல்ல மொக்கைப் படம் இதுதான். ஆரம்பத்தில் நன்றாக ஆரம்பித்த திரைப்படம், ஆவி, பேய் என்று நுழைந்து கழுத்தை அறுத்துவிட்டது. நல்ல மேக்கிங் இருந்தாலே எந்த ஒரு கதையையும் பார்க்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் ஷங்கருக்கு இடி விழுந்திருக்கும்.

நல்ல துப்பறியும் படம் என்று நினைத்துப் பார்க்கத் தொடங்கிய எனக்கு ஆவி அது இது என்றெல்லாம் படம் அலையத் தொடங்கியது முதல் எரிச்சல் என்றால், அதிலும் ஒரு புதுமையில்லாமல் பழைய ‘13ம் நம்பர் வீடு’ ரேஞ்சுக்கு, கார் தானாக ஓடுவதும், நீரில் விழுந்து சாவதும், திடீரென ஒரு குழந்தை பேய் போல வேஷம் போட்டு அதிரும் பின்னணி இசையில் பயமுறுத்துவதும் என ஒரே இம்சை. படம் முழுக்க எங்கேயாவது தண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது. தியேட்டரிலும் சொட் சொட் எனச் சொட்டியிருக்கும், அதன் பெயர் கண்ணீர்! முடியல.

நான் எங்க வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வந்துடுவேன் என்று ரஜினி ரேஞ்சுக்கு எல்லார்க்குள்ளும் பேய் வருவதுதான் ஹைலைட். அதிலும் தன்னைக் கொன்ற கணவனுக்குள்ளேயே பேய் வந்து அவனை மாட்டிவிடுவது மிகப்பெரிய டிவிஸ்ட் என்று இயக்குநர் கருதியிருக்கவேண்டும். பாவம்.

மேலே உள்ள வீடியோவில் பேயே சாட்சி சொல்லும் காட்சியையும், எஸ்.வி.சேகர் நாடகம் போல ஹீரோ படத்தின் பெயரைக் கடைசியில் சொல்லும் காட்சிகளையும் கண்டு ‘ரசிக்கலாம்.’

படம் ஊத்திக்கொண்டதும் அந்தப் பேய் ஷங்கருக்குள் இறங்கியிருக்கும். இயக்குநர் அறிவழகன் ரிச்நெஸ் முகமூடி போட்டு ஏமாற்றப் பார்த்திருக்கிறார். 🙂

இந்தப் படத்தை நிச்சயம் பாருங்க சார் என்று சொன்ன அந்தப் பையனைத் தேடிக்கொண்டிருக்கிறேன். எங்கள் அலுவலகத்தில்தான் வேலை பார்க்கிறான்.

-oOo-

SPIRIT என்று ஒரு திரைப்படம் பார்த்தேன். அனிமேஷன் திரைப்படம். குழந்தைகளுக்கான அனிமேஷன் என்று சொல்வது தவறு. ஒரு ரஜினி படத்தை ரசிப்பது போல இந்தப் படத்தை நான் ரசித்தேன். ‘நீயே குழந்தை மாதிரிதான்’ என்று என்னை நினைப்பவர்கள் இது குழந்தைகளுக்கான அனிமேஷன் என்று சொல்லிக்கொள்ளலாம். 🙂

ஒரு குதிரை பிறக்கிறது. சுட்டியாய் வளர்கிறது. எதிலும் வேகம், ஆர்வம், விவேகம். கழுகைவிட விரைவாக ஓடுகிறது. குதிரைக் குட்டிகளை வேட்டையாட வரும் சிங்கத்தை ஓட ஓட விரட்டுகிறது. வேட்டைக்காரர்கள் இதனை சிறைப் பிடிக்கிறார்கள். ஆனால் அவர்களால் இக்குதிரையை அடக்கமுடியவில்லை. என்னென்னவோ செய்கிறார்கள். அவர்களை வீழ்த்திவிட்டு, அவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் காட்டுவாசியுடன், அங்கிருக்கு மற்ற குதிரைகளையும் விடுவித்துவிட்டு ஓடுகிறது. அந்தக் காட்டுவாசி தன்னைக் காப்பாற்றிய குதிரையையே சிறைப்பிடிக்கிறான்! அவனிடம், நம் ஹீரோ குதிரையை ஒத்த, அதே வேகம் விவேகம் உள்ள ஒரு பெண் குதிரை உள்ளது. பிறகென்ன காதல்தான்.

ஹீரோ குதிரை காட்டுவாசியைப் புரிந்துகொள்கிறது. அவனுடன் நட்பாகிறது. குதிரையைத் தேடி வரும் வேட்டைக்காரர்களிடமிருந்து காட்டுவாசியைக் காப்பாற்றுகிறது பெண் குதிரை. காப்பாற்றும்போது ஓடும் வெள்ளத்தில் விழ, அந்தப் பெண் குதிரையைக் காப்பாற்றுகிறது ஹீரோ குதிரை. ஆனால் மீண்டும் வேட்டைக்காரர்களிடம் சிக்கிக் கொள்கிறது.பின்னர் எப்படி காட்டுவாசியைக் காப்பாற்றி, பெண் குதிரையோடு தன் வீட்டுக்குத் திரும்புகிறது என்பது கதை.

குதிரையின் ஸ்டைல் பற்றிச் சொல்லவேண்டும். முன் பக்கம் பறக்கும் தலைமயிரும், பிடரி மயிரும் அக்குதிரைக்கு ஒரு பிரத்யேகமான அழகைத் தந்துவிடுகிறது.

இந்தப் படத்தில் குதிரைக்குப் பதிலாக ரஜினி நடித்தால் (அனிமேஷனில் அல்ல!) இது ஒரு கச்சிதமான ரஜினி திரைப்படமாக மாறிவிடும். இதனால்தான் ரஜினி படத்தை குழந்தைகள் அப்படி விழுந்து விழுந்து பார்க்கிறார்கள் போல.

ஒரு ஆள் எப்படி நூறு பேரை அடித்து வீழ்த்தமுடியும் என்ற லாஜிக்கை மறந்துவிட்டு சுரேஷ் கண்ணன் போன்றவர்கள் ஸ்பிரிட் படத்தைப் பார்க்கமுடியும் என்பதால், அவர் நிச்சயம் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதோடு இன்னொரு வேண்டுகோள். எந்திரன் திரைப்படம் வெளிவர இருக்கிறது. எந்த ஒரு ரஜினி திரைப்படம் வந்தாலும் அதனை நாலு திட்டு திட்டி எழுதுவார் சுரேஷ் கண்ணன். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிடும். ஆனால் எந்திரன் திரைப்படத்தை இதுவரை அவர் திட்டாமல் இருப்பது ரஜினி ரசிகர்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களின் மனமறிந்து உடனே அவர் எந்திரனைத் திட்டி ஒரு பதிவிடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

Share

Turtles Can Fly – ஈரானியத் திரைப்படம்

இந்தக் கட்டுரையை தமிழ்ஹிந்து.காமில் வாசிக்கலாம்.

Share