அவெஞ்சர்ஸ் – இன்ஃபினிட்டி வார் – ஒரு தந்தையின் புலம்பல்
இரண்டு மாதங்களாகவே அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்துக்குக் கூட்டிக்கொண்டு போகவேண்டும் என அபிராம் சொல்லிக்கொண்டிருந்தான். ஏப்ரல் 27 காலா ரிலீஸ் என்று சொல்லப்பட்டிருந்தது. அப்ப அதுக்குத்தான முதல்ல போவ என்று சோகமானான். காலா ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டதும் இந்தப் படத்துக்குப் போவது உறுதியானது அவனவளவில் பெரிய நிம்மதி.
குழந்தைகள் பார்க்கும் சானல்கள் அத்தனையிலும் விடாமல் விளம்பரம் துரத்திக்கொண்டிருந்தது. கூகிளில் தேடி இப்படம் பற்றிய அனைத்து விவரங்களையும் அபிராம் தெரிந்து வைத்திருந்தான். கூடவே நண்பர்களிடம் பேசியதில் இருந்தும். பேட் மேன் சூப்பர்மேன் எல்லாம் வரமாட்டாங்களா என்று தெரியாமல் கேட்ட தினத்தில்தான் நான் இதைக் கண்டுபிடித்தேன். அவெஞ்சர்ஸ் என்றால் யார், மார்வெல் என்ற நிறுவனம், அது இது என அள்ளி அடித்தான். இதெல்லாம் பெரிய அறுவையான புள்ளிவிவரங்கள் என்ற ரீதியில் முகத்தை வைத்துக்கொண்டேன். ஒருவழியாக நேற்று படத்துக்குப் போனேன்.
*
ஏற்கெனவே பேட் மேன் வெர்சஸ் சூப்பர் மேன் தந்த சூடு ஞாபகம் இருந்தது. இந்தப் படத்தில் வரிசையாக அவெஞ்சர்கள் வந்தவாறு இருந்தார்கள். படத்திலும் சரி, பார்க்கவும் சரி, சரியான கூட்டம். குடும்பத்துடன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்திருந்தார்கள். அத்தனை பெற்றோர்களும் என்னைப் போலவே விழித்துக்கொண்டுதான் தியேட்டரில் உட்கார்ந்திருந்தார்கள். ஒவ்வொரு அவெஞ்சர் தோன்றும் காட்சியிலும் கைத்தட்டும் விசிலும் காதைப் பிளந்தன. நிஜமாகவே சொல்கிறேன். நான் கொஞ்சம் பயந்துவிட்டேன். இது என்ன ஊர், ஏன் இப்படி மாறிப் போனது என்றெல்லாம் குழப்பம். என் பக்கத்து சீட்டில் இருந்த பையன் ஒவ்வொரு அவெஞ்சரின் வருகையின்போதும் சரியாக அந்த அவெஞ்சரின் பெயரையும் அந்த நடிகரின் பெயரையும் சொல்லிக்கொண்டே இருந்தான். ஆச்சரியமாக இருந்தது. ஸ்பைடர் மேன், ஐயன் (சாதி அல்ல!) மேன், ஹல்க், கேப்டன் அமெரிக்கா தவிர எந்த அவெஞ்சரும் எனக்குப் பழக்கமில்லை. ஆண்ட் மேன், ஸ்ட்ரேஞ்ச், தோர் மேன், ப்ளேக் பேந்தர், விசன், ப்ளாக் விடோ, ஃபால்கன், மார்வெல் எனப் பலரை இப்படத்தில்தான் கண்டுகொண்டேன். இத்தனை பேருக்கும் தனித்தனியே படங்கள் இருக்கின்றனவாம். மார்வெல் காமிக்ஸின் சாதனை பெரியதுதான். ப்க்கத்தில் இருந்த வாண்டுகளெல்லாம் இவர்களை நம் வீட்டுச் சொந்தக்காரர்கள் போல, இவனைத் தெரியலையா என்று தம் பெற்றோர்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தன.
*
அவெஞ்சர்ஸ் படம் சூப்பர்மேன் வெர்சஸ் பேட்மேன் அளவுக்கு மோசமில்லை. முதல் ஒரு மணி நேரம் கொஞ்சம் அப்படி இப்படிப் போனாலும் கடைசி ஒரு மணி நேரத்தில் மிரட்டி எடுக்கிறார்கள். பூமியைப் போன்ற பல கிரகங்கள். அத்தனையிலும் நடக்கும் கதை. இதைவிட விளக்கமாக எனக்குச் சொல்லத் தெரியவில்லை. அத்தனை அவெஞ்சர்ஸையும் காண்பிக்கவேண்டி இருப்பதால் திரைக்கதை அங்குமிங்குமாக ஓடுகிறது. எந்த நேரத்தில் எந்த அவெஞ்சர் இன்னொரு எந்த அவெஞ்சரைக் காப்பாற்ற வருவார் என்பது திரைக்கதை எழுதியவருக்கே தெரியாது என நினைக்கிறேன்.
ஹல்க்கை காமெடி பீஸாக்கிவிட்டார்கள். தோரை உயரத்துக்குக் கொண்டு சென்றுவிட்டார்கள். இந்தப் படத்திலும் ஸ்பைடர் மேன் ஐயன் மேனிடம் கெஞ்சிக்கொண்டே இருக்கிறார். தானோஸ் அதிரடி. படமே இவர் தோளில்தான். மிகப் பெரிய அளவில் வில்லனைக் காட்டி, அவர் முன் அனைத்து அவெஞ்சர்ஸ்களும் பிச்சை எடுக்கும் அளவுக்கு உயர்த்தி இருக்கிறார்கள்.
ஏற்கெனவே ஒரு ரத்தினக் கல்லைப் பெற்றுக்கொண்டுவிட்ட தானோஸ் மீதி ஐந்து கல்லை எடுக்கப் போராடுவதுதான் கதை. அப்படி எடுத்துவிட்டால் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் ஆளும் சக்தி வந்துவிடும். தானோஸின் நோக்கம் ஒன்றுதான், ஒட்டுமொத்த பிரபஞ்சத்தில் உள்ள மனிதர்களில் (!) பாதி பேரைக் குறைப்பது. குறைக்கும் வழி கொலைகள். இதை எதிர்த்து அவெஞ்சர்ஸ் போராடுகிறார்கள். ஆறு கல்லையும் தானோஸ் அடைகிறார். பின்னர் என்ன ஆகிறது? இன்னும் ஒரு வருடம் காத்திருக்கவேண்டும்.
ஆறாவது கல்லை அடையும் காட்சிகள் பிரமிப்பூட்டுகின்றன. அதேபோல் தன் வளர்ப்பு மகளை பலி கொடுக்கும் காட்சி மிக நன்றாக உள்ளது. படத்தின் முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை கிராஃபிக்ஸ்தான். எதோ ஒரு தனியான உலகத்தில் இருப்பது போன்ற உணர்வைக் கொண்டு வருகிறார்கள். தானோஸ் இறுதிக் காட்சியில் இறுக்கமான முகத்துடன் பிரபஞ்சத்தைப் பார்த்தவண்ணம் அமரும் காட்சி பல விஷயங்களைச் சொல்கிறது. கவித்துவமாக தானோஸைப் படைத்திருக்கிறார்கள்.
படம் முழுக்க இருட்டில் நடக்கிறது. சில காட்சிகள் மட்டுமே வெளிச்சத்தில் தெரிகின்றன. அவெஞ்சர்ஸ் தங்களுக்குள் அடித்துக்கொள்ளும் காமெடிக் காட்சிகள், இப்படத்தையே சுவாசமாகக் கொண்டிருப்பவர்களுக்குக் கூடுதலாகப் புரியும். தமிழ் டப்பிங்கில் பாகுபலியையெல்லாம் சேர்த்து கைத்தட்டு வாங்கிக் கொள்கிறார்கள். தமிழில் பார்க்காமல் ஆங்கிலத்தில் பார்த்திருந்தால் தூக்கில் தொங்கி இருப்பேன் என்றே நினைக்கிறேன். சில வழக்கமான, ஹெல்மெட் மண்டையா என்பதைப் போன்ற வசனங்களைத் தவிர மற்றவை பாதகமில்லை. இந்த ஹெல்மெட் மண்டையா வசனத்துக்கு, பக்கத்தில் உட்கார்ந்திருந்த வாண்டு வானம் வரை குதித்தான். மீண்டும் மீண்டும் ‘ஹெல்மெட் மண்டையனாம்ப்பா’ எனச் சொல்லிக்கொண்டே இருந்தான். சரியாக பல்ஸ் பிடித்து வைத்திருக்கிறார்கள். அல்லது ட்யூன் செய்து வைத்திருக்கிறார்கள்.
*
ஒரு படம் பார்த்து முடித்ததும் அதைப் பற்றி அதிகம் பேசக்கூடாது என்று வீட்டில் ஒரு சின்ன சட்டம். நேற்று அந்த சட்டத்தைக் கொஞ்சம் தளர்த்திக்கொண்டு அபிராமிடம் பேசினேன். ஏனென்றால் எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது என்பதால். இடைவேளையின்போதே மெல்ல கூகிளில் நோட்டம் விட்டிருந்தேன். அபிராம் அடித்து முழக்கினான். எப்படிடா இதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்ட என்று சொன்னதுக்கு அவன் சொன்ன பதில் – நானெல்லாம் ஒண்ணுமே இல்லைப்பா, திருநெல்வேலில அரவிந்த் இதைவிட அதிகம் சொல்லுவான். அரவிந்த் என் அண்ணா பையன். இன்னும் என் தங்கை பையன்களுடனெல்லாம் பேசினால்தான் தெரியும், அவெஞ்சர்ஸ் எந்த அளவுக்கு நம் சமூகத்தில் ஊடுருவி இருக்கிறார்கள் என.
குழந்தைகளுக்கான சானல்களே இவர்கள் நம் சமூகத்தில் இத்தனை தீவிரமாக வெற்றிகரமாக நுழைந்தற்கான வழி என நினைக்கிறேன். மிகத் தெளிவாகத் திட்டமிட்டு வெற்றி பெறுகிறார்கள். படத்தையும் ஏனோ தானோ என்று எடுப்பதில்லை. மிகக் கச்சிதமான திட்டமிடல். அசுர உழைப்பு. ‘கேமராவுக்கும் கிராஃபிக்ஸுக்குமே காசு சரியா போச்சு’ என்கிறான் அபிராம். உண்மைதான். எல்லாமே உச்சம்தான். பாகுபலி முதல் பாகத்தைப் போல அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் முடிந்திருக்கிறது. பல விஷயங்கள் தெளிவாகவில்லை. பாகுபலியைக் கொன்றது யார் என்பது போல, காற்றில் உதிரும் அவெஞ்சர்ஸ்க்கு என்ன ஆச்சு என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. மீண்டும் ரத்தினக் கற்கள் கைக்கு வருமா? விஷன் திரும்ப வருவானா? அவெஞ்சர்ஸ் 2ல் இவையெல்லாம் தெரிய வரும் என்று நான் சொன்னபோது, இது அவெஞ்சர்ஸ் 3, அடுத்து அவெஞ்சர்ஸ் 4 என்ற பதில் கிடைத்தது. நேக்கு தெரிஞ்சதெல்லாம் ரஜினி கமல் புளிப்பு மிட்டாய் என்று காலம் ஓடிவிட்டது. ஆனால் இந்தப் பொடியன்கள்… இன்னும் முழித்துக்கொண்டிருக்கிறேன்.
*
மடிப்பாக்கம் குமரன் தியேட்டரில் ஏப்ரல் 27ம் தேதி இரண்டு தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்டிருந்தன. தியா மற்றும் பக்கா. அவெஞ்சர்ஸ்க்கு வந்த கூட்டத்தை அடுத்து, எல்லாக் காட்சிகளுமாக இந்தப் படத்தைத் திரையிட்டிருக்கிறார்கள். சுவரொட்டிகளைப் பார்த்து ஏமாற வேண்டாம்.
*