Archive for திரை

குரங்கு பொம்மை, காஸி அட்டாக், விவேகம், ஜாலி எல் எல் பி 2

குரங்கு பொம்மை – பார்க்கலாம். பொறுமையுடன். பாரதிராஜா வெகு யதார்த்தம். விதார்த் வழக்கம்போல பலவீனம். க்ளைமாக்ஸ் அவசியமற்ற இழுவை மற்றும் கொடூரம். சாதாரண கார் ஓட்டுநர்கூட கொலை செய்வார், கை கால் வெட்டுவார் என்பதெல்லாம் அராஜகமான சிந்தனை. யதார்த்தமும் இன்றி, அதற்காக முற்றிலும் வணிகத் தன்மையும் இன்றிச் செல்கிறது படம். பதற வைக்கவேண்டிய க்ளைமாக்ஸ் தராத பதற்றத்தைத் தந்த காட்சி – ஒரு சிறுமி தன் தந்தைக்கு பதிலாக தானே ஒருவரைக் கயிற்றால் அடித்துக்கொண்டே இருப்பது.

-oOo-

காஸி அட்டாக் ஹிந்திப் படம் பார்த்தேன். நல்ல முயற்சி. கடைசி காட்சிகளில் கொஞ்சம் இழுவை, புல்லரிப்பு, வீடியோ கேம் விளையாட்டுகள் போன்ற காட்சிகள் எல்லாம் கலந்து இருந்தாலும், பார்க்கலாம். ‘எல்லையில் வீரர்கள்’ (என்னைப் போன்ற) உணர்வாளர்கள் கை கால் மயிர்களை வழித்துவிட்டுப் பார்ப்பது நலம். இல்லையென்றால் மயிர்க்கூச்செரிந்துகொண்டே இருக்கும். இப்படியும் படம் எடுத்ததற்காகவே பாராட்டலாம்.

இதில் இரண்டு சந்தேகங்கள். தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள்.

1. நீர் மூழ்கிக் கப்பலின் கேப்டன் கப்பலுக்குள்ளேயே பணியின் போது இறந்துவிட்டால், அப்படியே கடலில் விட்டுவிடுவார்களா?

2. படம் முடிந்து இறுதியில் உண்மைகளைப் பட்டியல் இடும்போது, பாகிஸ்தான் தனது கடற்கண்ணிவெடி (கடற்கன்னி அல்ல!) வெடித்துதான் தன் நீர்மூழ்கிக்கப்பல் காஸி அழிந்ததாகச் சொன்னது என்று காண்பிக்கிறார்கள். இதைப் பற்றிய மேலதிக இந்திய பாகிஸ்தான்சார் தகவல்கள் உண்டா?

-oOo-

விவேகம் பார்த்தேன். ஒரு மணி நேரம் எப்படியோ தாங்கிக் கொண்டேன். அதற்குமேல் மிடில. சமீபத்தில் பார்த்த மிகப் பெரிய மொக்கைகளில் சத்ரியனுக்கு அதீத செலவுடன் சவால் விட்டு நிற்கிறது விவேகம். நல்ல பிரம்மாண்டமான கொடுமை. அஜித் ரஜிகர்களுக்குப் பிடிக்கும் என்ற விமர்சனம் இனி வந்தால் பம்மிவிட முடிவெடுத்திருக்கிறேன். அஜித் ரசிகர்கள் இப்பாவியை மன்னித்துவிடுங்கள்.

இடைவேளையில் ஒரு சொறிக் காக்கா பிரமாண்டமாக வருகிறது. அது ஃபீனிக்ஸாம். செம மாஸ்.

எனக்குப் பிடித்த அழகான காஜோலை அஞ்சலிதேவி ரேஞ்சுக்கு காண்பித்த இயக்குநரை எத்தனை திட்டினாலும் தகும்.

-oOo-

ஜாலி எல் எல் பி2 படம் பார்த்தேன். முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை பரபரவென்று இருந்தது. நல்ல டிராமா. முன்னா பாய் எம்பிபிஎஸ் வகையறா படம். ஹிந்தியில் இது போன்ற படங்களில் மாஸ்டர் பண்ணிவிட்டார்கள் போல. சில இடங்களில் அதீத நாடகத்தன்மையை ரசிக்க முடியுமானால் உங்களுக்கும் பிடிக்கலாம்.

-oOo-

Share

நிபுணன்

நிபுணன்

அருண் வைத்தியநாதனின் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படம் வந்த உடனேயே அதைப் பார்க்கவில்லை. பார்க்க நினைத்தேன், ஆனால் ஏனோ விட்டுப் போய்விட்டது. அதை அப்படியே மறந்தும்போய்விட்டேன். ஆறு மாதம் கழித்து ஒரு நண்பர், கிட்டத்தட்ட ஃபேஸ்புக் நரசிம்ம ராவ், என்னிடம் ஃபேஸ்புக் சாட்டில் அந்தப் படத்தைப் புகழ்ந்தார். இவரே புகழ்கிறாரே என்று ஒரு பக்கம் அதிர்ச்சி, இன்னொரு பக்கம் மகிழ்ச்சி. உடனே அந்தப் படத்தைப் பார்த்தேன். குடும்பத்துடன் எல்லோரும் சேர்ந்து பார்க்கத் துவங்கினோம். சில நிமிடங்களிலேயே என் மகனைப் பார்க்கவேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அந்த அளவுக்குப் படத்தின் தாக்கம். படம் முழுக்க இருந்த ஒரு திக்திக் தன்மை, அலட்டாத ஸ்டைலிஷ் உருவாக்கம் எனப் படம் மிக நன்றாக இருந்தது. அதிகம் பேசப்படவேண்டிய பிரச்சினை ஒன்றை அதன் சீரியஸ்நெஸ் கெடாமல் கத்திமேல் நடப்பது போன்ற படமாக்கல் சாதாரண விஷயமல்ல.

அவரது அடுத்த படம் பெருச்சாளி (மலையாளம்), தரைக்கு இறங்கி எடுத்த படம். 🙂 இப்படத்தைப் பார்த்தபோது தோன்றியது, இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் என்ற எண்ணமே. ஆனால் இப்படம் நல்ல ரீச்சைப் பெற்றிருந்தது. மிக நன்றாக ஸ்டைலிஷாக எடுக்கும் படங்களுக்கும் இத்தகைய படங்களுக்கும் வசூல் ரீதியாக உள்ள வேறுபாடு, திரையுலகில் எப்போதும் இருப்பதுதான்.

நிபுணன் திரைப்படம் த்ரில்லர் வகை என்பதாலும் சீரியல் கில்லர் வகைக் கதை என்பதாலும் இந்த இரண்டையும் எதோ ஒரு வகையில் சரியாகக் கையாண்டிருக்கிறது. என்றாலும் ஸ்டைலிஷ் தன்மையே அதிகம். படம் பார்க்கும்போது நம் கவனம் எங்கேயும் சிதறுவதில்லை. இது ஒரு த்ரில்லர் படங்களுக்கு மிகவும் தேவையான ஒரு தன்மை. படம் முடிந்ததும் நாம் அலசலாம் ஆராயலாம். ஆனால் பார்க்கும்போது நம்மைக் கட்டிப் போடவேண்டும். அதை இப்படம் பெருமளவுக்குச் செய்திருக்கிறது. பெருச்சாளி படம் போன்ற ‘தரை ரேஞ்சுக்கு இறங்கி’ச் செய்யும் லாஜிக் அற்ற காட்சிகள் மிக மிகக் குறைவே.

திரைக்கதையை ஏனோ தானோ என்று அமைக்காமல் ஒழுங்காக ஹோம் வொர்க் செய்து மெருகேற்றி, ஒவ்வொரு கேள்வியையும் தாங்களே கேட்டுக்கொண்டு அதற்குச் சரியான பதிலையும் படத்தில் வைத்து, பெரிய அளவிலான சந்தேகங்களே வராத அளவுக்குப் படத்தை உருவாக்கி இருக்கிறது நிபுணன் டீம். திரைக்கதையில் ஆனந்த் ராகவின் பங்களிப்பும் உள்ளது. படத்தில் வசனங்கள் பல இடங்களில் ஷார்ப். சுஜாதாவின் வாசனை சில இடங்களில். அதை தனியே துருத்தித் தெரியாதவாறு படத்தோடு போகிற போக்கில் செய்திருப்பது ரசனையாக உள்ளது. (ரத்தம் உறையாமல் இருக்கப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருளைச் சொல்லும் காட்சியும் கொலையை உள்ளே வந்து பாருங்க என்று பிரசன்னா அர்ஜூனை அழைக்கும்போது அர்ஜூன் பதில் சொல்லும் காட்சியும் உதாரணங்கள்.)

அர்ஜூன் அட்டகாசமாக நடிக்கிறார். பிரசன்னா, வரலக்ஷ்மி போன்றவர்கள் தங்கள் தேவையை உணர்ந்துகொண்டு அதை மட்டும் செய்திருக்கிறார்கள். யாரும் ஓவர் ஆக்டிங் செய்யவில்லை என்பது ஆறுதல். மொத்தத்தில் ஒரு டீசண்டான படம் என்று உறுதியாகச் சொல்லலாம்.

எங்கேயெல்லாம் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று பார்த்தால், இடைவேளைக்குப் பிறகு ஒரு தொய்வு, லேசான தொய்வுதான், வருகிறது. அது ஃப்ளாஷ் பேக் காட்சியால் வருகிறது என்றாலும், அதைத் தவிர்க்கமுடியாது என்றாலும், அதற்குப் பிறகு வேகமெடுக்கும் படம், மீண்டும் க்ளைமாக்ஸில் தொய்வடைகிறது. யார் என்பதை கடைசி வரை தெரியாமல் வைத்திருக்காமல் அதற்கு முன்பே அந்தக் கதாபாத்திரத்தின் பெயரையெல்லாம் சொல்லி விடுகிறார்கள். ஆளை மட்டுமே கடைசியில் காட்டுகிறார்கள். நமக்குத் தெரிந்த ஒருவர்தான் கொலையாளியோ என்ற எண்ணம் தமிழ்ப்பட ரசிகர்களுக்கு இருப்பது இயல்பதுதான். அப்படி இப்படத்தில் எதுவும் இல்லாதது ஒருவகையில் சரிதான் என்றாலும் இன்னொரு வகையில் ஏமாற்றமாகவும் இருந்தது. அதேசமயம், நாம் எதிர்பாராத ஒருவரைக் கொலையாளி என்று காட்டி இருந்தாலும் இந்த ஏமாற்றம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்பதையும் புரிந்துகொள்ளமுடிகிறது. இது கொஞ்சம் சிக்கலான விஷயம்தான். பிடிக்காத விஷயம் என்று பார்த்தால், அர்ஜுனுக்கு பார்க்கின்சன்ஸ் நோய் என்று காண்பித்து, முக்கியமான காட்சிகளில் எல்லாம் அவருக்கு வலது கை செயல்படாமல் போவது. இதை மிக எளிதாக ஊகித்துவிட முடிவதாலும் அது அப்படியே நடப்பதாலும், அக்காட்சிகள் எல்லாம் 60களின் தமிழ்ப்பட உத்தி போலத் தோன்றியது. படத்தில் மற்ற எந்த காட்சிகளும் இப்படி இல்லாத நிலையில், உதாரணமாக ஹீரோ மற்றும் ஹீரோவின் நண்பர்களின் குடும்பத்தைக் கொல்வது மிரட்டுவது போன்ற எந்த அபத்தங்களும் இல்லாதபோது, இதுபோன்ற காட்சிகளும் இல்லாமல் இருந்திருக்கலாம். அதேபோல், கொஞ்சம் ஆசுவாசம் செய்யும் காட்சிகள் கூடுதல் இருந்திருக்கலாம். இது ஒரு குறை அல்ல என்றாலும், படத்தின் ரீச்சுக்கு இது உதவும். உதாரணமாக, கொலையாளி பற்றித் துப்பு சொல்லும் ஒருவர் பிரசன்னாவை கான்ஸ்டபிள் என்று அழைக்கும் காட்சி. தனியே உருத்தாமல் இது போன்ற காட்சிகள் தரும் கலகலப்பு ஒரு வணிகப் படத்துக்கு மிகவும் முக்கியமானதே.

வெட்டியாகப் பணத்தைப் போட்டு தரைரேஞ்சுக்கு எடுக்கிறேன் என்று சொல்லி நம்மைப் படுத்தும் படங்களுக்கு மத்தியில் தெளிவாக திட்டமிடப்பட்டு திரைக்கதை அமைக்கப்பட்டு நன்றாக எடுக்கப்படும் படங்கள் நிச்சயம் வரவேற்கப்படவேண்டியவை. இவையே தமிழ்த் திரையுலகை வாழவைக்கப் போகும் ஆக்சிஜன். அந்த வகைத் திரைப்படமாக வந்திருக்கிறது நிபுணன்.

பின்குறிப்பு: படத்தின் மிகச்சிறந்த காட்சி எதுவென்றால், இடைவேளைக்குப் பிறகு வரும் ஒரு நிமிடக் காட்சிதான்.
படத்தின் இயக்குநருக்கு ஒரு சைன் ஆஃப் மெசேஜ் – கபாலி ரேஞ்சுக்கு அடுத்த படத்தை எடுக்க வாழ்த்துகள். 😛

 

Share

மூன்று குறிப்புகள்

மூன்று குறிப்புகள்:

டசக்கு டசக்கு பாடல். நேற்றுதான் பார்த்தேன். இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஹரீஷ் பெராடியின் (உச்சரிப்பு?) ரசனையான ஆட்டம் கண்ணை விட்டு அகலவே இல்லை. விஜய் சேதுபதியை முந்துகிறார். ஹரீஷ் ஆடுவாரா என்ற அதிர்ச்சியை தாண்டுகிறது இவர் இவ்வளவு கெத்தாகவும் ஆடுவாரா என்ற ஆச்சரியம். இந்த வருடத்தின் சிறந்த குத்துப் பாடலாக இருக்கலாம்.

மீசைய முறுக்கு. சுமாரான மொக்கைப் படம். ஆனால் என்னவோ பிடித்திருக்கிறது. இதை எப்படிப் புரிந்து கொள்வது? எனக்கே புரியவில்லை. படம் முழுக்க கல்லூரியில் இருப்பது போன்ற உணர்வு. படிப்பதை மட்டும் காட்டவில்லை. முன்பெல்லாம் படிக்கவும் செய்தோம். ஹிப்ஹாப் தமிழா என்ற பெயரைக் கேள்விப்பட்டிருந்தாலும் இப்படத்தில்தான் அவரைப் பார்க்கிறேன். எதோ ஒரு இன்னசென்ஸி ஈர்க்கிறது. டைரக்‌ஷன், இசை, நடிப்பு என எதுவுமே அட்டகாசம் இல்லை என்றாலும் எதுவுமே மோசமும் இல்லை. நன்றாகவே நடிக்கிறார், ஆடுகிறார். மூன்று பாடல்கள் பிரமாதம். இதில் வரும் ஒரு காட்சி, மா கா பா (மகப?) ஆனந்தின் இரண்டு நிமிடக் காட்சி. இவரையும் இப்படத்தில்தான் கேள்விப்படுகிறேன். ஆர்ஜே, அவ்வப்போது நடிகர் போல. என்ன ஒரு ஸ்பாண்டேனியஸ் காமெடி. விழுந்து விழுந்து சிரித்தேன். இதற்காக ஒட்டுமொத்த படத்தையும் பார்க்க முடிவெடுத்தால் அது உங்கள் விதி.

தற்காப்பு என்றொரு படம் பார்த்தேன். பி.வாசு ஷக்தியை விக்கியில் ட்ரிக்கர் ஸ்டார் ஷக்தி என்று போட்டிருக்கிறார்கள். பிக்பாஸ் குசும்பா பட்டமா எனத் தெரியவில்லை. படம் மொக்கை என்றாலும், இப்படத்துக்கும் விக்ரம் வேதாவுக்கும் உள்ள ஒற்றுமையை யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு கதைக்கான ட்ரீட்மெண்ட் படத்தை எங்கே வைக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

Share

நாங்கள்

நாங்கள் என்றொரு திரைப்படம் வந்தது. 1992ல். சிவாஜி கணேசன் நடித்த திரைப்படம். 1991ல் நான் மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு வீடுமாற்றிக்கொண்டு வந்துவிட்டோம். ஆனாலும் மதுரையின் மீதிருந்த காதலும் ஈர்ப்பும் குறையாமல் இருந்த காலகட்டம். எப்போதெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் மதுரைக்குப் போய்விடுவேன். அங்கே இருந்த நண்பர்களுடன் படத்துக்குச் செல்வது ஒரு பொழுதுபோக்கு. அந்தமுறை எந்த நண்பரும் வீட்டில் இல்லை. நாங்கள் இருந்த வளைவுக்குச் சென்று அங்கிருந்தவர்களைப் பார்த்துவிட்டு, அவர்கள் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு, வேறு என்ன செய்வது என்று தெரியாமல், நான் மட்டும் தனியாகக் கிளம்பி மதி தியேட்டரில் ‘நாங்கள்’ படம் பார்க்கப் போனேன். இந்தப் படத்தைப் பார்க்க ஒரே காரணம், இளையராஜா.

சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு, ‘பாடு குயில்களே பாச மலர்களை’ பாடலைக் கேட்டபோது, அதுவரை மறந்திருந்த பாடல் நினைவுக்கு வந்தது. அப்படியே நான் மதுரைக்குச் சென்றது, படம் பார்த்தது என எல்லா நினைவுகளும். மதுரையில் அந்த வயதில் பார்த்தபோதே அந்தப் படம் படு குப்பை என்ற எண்ணம் வந்ததை நினைத்துக்கொண்டேன். அப்போது தீபிகா மகாபாரதத்தில் மிகப் பிரபலமாகி இருந்தார். அவர், சிவாஜி, பிரபு என ஏகப்பட்ட பேர் இருந்தும், இருந்ததாலேயே படுகுப்பையாக அந்தப் படம் இருந்தது.

இந்த நாங்கள் திரைப்படம் நான்கைந்து நாள்களுக்கு முன் ஏதோ ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. சரி, பழைய நினைவுகளுக்காகவும், ‘பாடடி குயிலே’ பாடலுக்காகவும் பார்ப்போம் என்று பார்க்கத் துவங்கினேன். இந்தப் படத்தை எப்படி அந்தக் காலத்தில் பொறுமையாகப் பார்த்தோம் என்ற ஆச்சரியம் எனக்கு இன்னும் தீர்ந்த பாடில்லை.

இன்னொரு அதிர்ச்சி, வசனம் மகேந்திரன். மகேந்திரன் எப்படி இப்படி ஒரு மோசமான படத்துக்கு மோசமான வகையில் வசனம் எழுதினார் என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். ஒருவேளை வேறொரு மகேந்திரனாக இருக்குமோ என்று விக்கியில் பார்த்தால், கதை மகேந்திரன் என்றிருக்கிறது. ஆனால் வசனம் மகேந்திரன் என்று படம் சொல்கிறது. என்னதான் மோசமான கதையாக இருந்தாலும் மகேந்திரன் போன்ற ஒருவர் எவ்வித ஒரு ‘பளிச்’சும் இல்லாமல் இப்படி வசனம் எழுதமுடியுமா என்ற சோகம் இந்த நிமிடம் வரை தீர்ந்தபாடில்லை. அந்த வயதிலேயே மகேந்திரன் எனக்கு மிகப் பிடித்த இயக்குநர். இருந்தும் அன்று மதுரையில் படம் பார்க்கும்போது எப்படி மகேந்திரன் பெயரைத் தவற விட்டேன் என்பதுவும் பிடிபடவில்லை. 🙂

Share

சச்சின் – பில்லியன் ஆஃப் ட்ரீம்ஸ்

சச்சின் – இன்னொருவரின் நம் டைரி
 
சச்சின் டெண்டுல்கர் கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவு நாயகன். இன்று அரைக்கிழவர்களாகியிருக்கும் ஒவ்வொரு தமிழரின் வாழ்விலும் எப்படி இளையராஜா ஒன்றரக் கலந்திருக்கிறாரோ அப்படி ஒவ்வொரு இந்திய அரைக்கிழவர்களின் பெரும்பாலான கனவாக சச்சினே இப்போதும் எஞ்சியிருப்பார். சச்சின் புகழின் உச்சியில் இருந்த காலத்தில் நாம் அவரது ஆட்டத்தைப் பார்த்தது நம் வாழ்நாளின் கொடுப்பினை என்று உறுதியாக நம்பும் ஒரு மிகப்பெரிய மக்கள்திரளுள் நானும் ஒருவன். இன்று கிரிக்கெட்டைப் பார்ப்பதை நிறுத்திவிட்ட பலரும் விரும்புவது ஒரு டைம் மிஷினில் மீண்டும் சச்சினின் யுகத்தைச் சென்றடைந்துவிடமாட்டோமா என்பதையே. அப்படி ஒரு டைம் மிஷின்தான், சச்சின் – பில்லியன் ஆஃப் ட்ரீம்ஸ், கொஞ்சம் குறைகளுடன்.
 
படம் என்று நம்பிச் சென்றவர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை நிச்சயம் சந்தித்திருப்பார்கள். நான் ஒரு வாழ்க்கையைத் தேடியே சென்றேன். என் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி ‘இப்படத்தில்’ பெரும்பகுதியில் நடிகர்கள் இல்லை. மினுமினுப்புக் காதல் இல்லை. நாடகிய துரோகங்கள் இல்லை. இப்படி ஒரு படத்தைப் பார்க்கமுடியும் என்று நம்பமுடியாத ஒரு டாக்குமெண்ட்ரியாக இத்திரைப்படம் வந்திருப்பது பெரிய மகிழ்ச்சிக்குரிய விஷயமாக எனக்குப் படுகிறது.
 
இன்னொருவரின் டைரியில் நம் வாழ்வின் மறக்கமுடியாத பக்கங்கள் நம்கண்முன்னே விரியும்போது, மீண்டும் அவ்வாழ்வுக்குள் சென்றுவிடமாட்டோமா என்ற ஏக்கம் இணைகோடாகத் திரைப்படம் முழுக்க விரிகிறது. சச்சின் அவுட்டா, இந்தியாவே அவுட்டு என்ற வசனங்களையெல்லாம் எத்தனை முறை கேட்டிருப்போம், சொல்லி இருப்போம். இது நடந்து பத்து வருடங்கள்தான் ஆகிறது என்பதால் வரலாற்றை மிக அருகில் இருந்து மீண்டும் ஒரு முறை வாழ்ந்தது போன்ற உணர்வுடன் பார்க்கமுடிகிறது.
 
சச்சினின் நீண்ட நெடும் பயணத்தில் எதை எடுப்பது எதை விடுவது என்பது மிகப்பெரிய சிக்கல் என்பது உண்மைதான். எனவே மிக முக்கியமான ஹைலைட்டுகளை மட்டும் வைத்துக்கொண்டு, உச்சகாட்சியாக உலகக் கோப்பை வெல்வதை நோக்கியே படம் பயணிக்கிறது. சஸ்பென்ஸ், திரில் எதுவும் இல்லை என்பதால் நிஜமான உணர்வுடன் படத்தைப் பார்க்க முடிகிறது. பத்து முக்கியமான விஷயங்களை மனத்தில் வைத்து எடுத்ததெல்லாம் சரிதான். ஆனால் எப்படி மிக மிக முக்கியமான வாழ்க்கைத் தருணங்களைத் தவறவிட்டார்கள் என்று யோசிக்கும்போது வரும் எரிச்சல் இன்னும் அடங்கவில்லை.
 
சச்சினின் முதல் ஆட்டத்தில் அவர் டக் அவுட் என்பது, இது போன்ற திரைப்படத்துக்கு எத்தனை முக்கியமான பதிவு? அடுத்த சச்சின் அடையப்போகும் உயரத்துக்கு இது எத்தனை முக்கியமான எதிர்முனை? கோட்டை விட்டிருக்கிறார்கள். டெஸ்ட் போட்டியில் தொடங்கும் சச்சினின் வாழ்க்கையைச் சொன்னவர்கள் சச்சினின் ஒருநாள் முதல் போட்டியைப் பற்றிப் பேசவே இல்லை. இதைவிட அநியாயம், சச்சின் முதன்முதலாக எப்போது துவக்க ஆட்டக்காரராக ஒருநாள் போட்டியில் களமிறங்கினார் என்பதைக் காட்டவே இல்லை. ஜஸ்ட் ஒரு வரியில் பேச்சில் அதைக் கடந்துவிட்டார்கள். அந்த ஒருநாள் போட்டி சச்சினின் வாழ்க்கையை மட்டுமல்ல, ஒட்டுமொத்த கிரிக்கெட்டின் நிறத்தையே மாற்றியது. அது ஒரு வரலாற்றுத் தருணம். அதையும், அதை நிகழ்த்திக்காட்டிய அசாருதீனையும், அத்தருணத்தை அற்புதமாக்கிய சச்சினின் பேட்டிங்கையும் காட்டாத ரணம் இன்னும் ஆறவில்லை. இதையெல்லாம் விடப் பெரிய அக்கிரமம், நூறுகளாக அடித்துக் குவித்த சச்சின் அடித்த முதல் சதம் பற்றிய விவரணை இல்லாதது. என் நினைவில் தோராயமாக 80 ஆட்டங்களுக்குப் பிறகே சச்சின் சதமடித்தார் என்று நினைக்கிறேன். ஆனால் அதற்குப் பிறகு நிற்கவே இல்லை. இவற்றையெல்லாம் கவனமாகப் பதிவு செய்திருக்கவேண்டாமா?
 
இன்னொரு முக்கியத் தருணம், மணற்புயல் வீசும்போது சச்சின் அதை எதிர்த்து நின்றது. இப்படியான ஒரு நாடகத் தருணம் நிஜ வாழ்க்கையில் நடந்து அதை ஐம்பது கோடிப் பேர் பார்த்தார்கள் என்பதெல்லாம் நம்பக்கூடிய ஒன்றா? அப்படி நிகழ்ந்ததைத் திரைப்படத்தில் காட்டவேண்டாமா? அந்த ஆட்டத்தில் சச்சின் அடித்ததை மட்டுமே காண்பிக்கிறார்கள். புயலை விட்டுவிட்டார்கள்.
 
சச்சின் கேப்டனாக இருந்தபோது அசாருதீன் ஏற்படுத்திய பிரச்சினைகளே அதிகம் என்பதை அன்று பேசாத ஊடகங்கள் இல்லை. அதை மிகத் தெளிவாக இப்படத்தில் காட்டி இருக்கிறார்கள். அசாருதீனின் அரசியலைப் பற்றிப் பேசும்போது அசாருதீனை நேரடியாகக் குறிப்பிடாவிட்டாலும் அசாருதீனைத்தான் காமிக்கிறார்கள். அசாருதீனின் மிகப்பெரிய ரசிகனாக இருந்த எனக்கு அவர் செய்த ஃபிக்ஸிங் தந்த எரிச்சலும் ஏமாற்றமும் கொஞ்சநஞ்சமல்ல. இப்படத்தில் இக்காட்சிகளைப் பார்க்கும்போது ஏற்பட்ட பரவசமும் கொஞ்சநஞ்சமல்ல. சச்சினுக்கும் அப்படியே இருந்திருக்கவேண்டும்.
 
ராகுல் டிராவிட், சச்சின், சௌரவ் கங்கூலி (கூடவே கும்ப்ளே) இவர்களே இந்திய கிரிக்கெட்டின் மிக முக்கிய சூத்ரதாரிகள். இவர்களே இந்திய கிரிக்கெட்டை மீட்டெடுத்தவர்கள். இதை மிக முக்கியமாகச் சொல்கிறார் சச்சின் டெண்டுல்கர். மிக மகிழ்ச்சியாகக் கடந்த தருணங்கள் அவை, திரைப்படத்திலும், அன்றைய நிஜ வாழ்விலும்.
 
கொல்கத்தாவில் நடந்த உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில் தோற்றதைச் சொல்லும் இப்படம், அதற்கு இணையான தோல்வியாக நான் நினைக்கும் சென்னை டெஸ்ட் தோல்வியைக் காட்டவில்லை. சச்சின் அழுது மேன் ஆஃப் தி மேட்ச் வாங்க மறுத்த ஆட்டம் அது. அவரால் இந்தியாவின் அத்தோல்வியைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அதுவும் பாகிஸ்தானுடன் தோல்வி. அதுவும் வெற்றிக்கோட்டைத் தொடும் வேளையிலான தோல்வி. அந்த ஆட்டத்தில்தான் சச்சினின் முதுகுவலியை உலகமே அறிந்துகொண்டது என்பது என் நினைவு. அதைப் பற்றியும் இப்ப்படத்தில் இல்லை. சிம்பாப்வேவின் ஒலங்காவுக்கு தண்ணிய காட்டியது பற்றியெல்லாம் மூச்சே இல்லை.
 
வெங்கடேச பிரசாத்தின் ஒரு பந்தில் ஃபோர் அடிக்கும் அமீர் சோஹைல் (சரிதானா?) அடுத்த பந்திலேயே அவுட் ஆகும் காட்சியை சச்சின் ஒரு குழந்தையைப் போலச் சொல்கிறார். ஒட்டுமொத்த திரையரங்கமும் அதிர்ந்தது. தோனியைக் காட்டும்போது, டிராவிட், கங்குலி, ஷேவக் என ஒவ்வொருவர் வரும்போது தியேட்டர் அலறுவதைப் பார்க்கவும் குதூகலம் கொள்ளவும் நீங்கள் 1989ல் பதின்ம வயதில் இருந்திருக்கவேண்டும். இன்று நாற்பதைத் தொடும் அத்தனை பேரும் தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியைத் தங்கள் குழந்தைகளுக்குக் காட்டவேண்டும் என்ற வெறியில் தியேட்டரில் குழுமி இருந்தார்கள் என்றே நினைக்கிறேன்.
 
தோனியைப் பற்றிய எந்தவொரு விமர்சனத்தையும் சச்சின் முன்வைக்கவில்லை. கிரேக் சாப்பல் பற்றி மிக விளக்கமாகச் சொல்லும் சச்சின், அசாரூதினைப் பற்றிய கருத்தைச் சொல்லும் சச்சின், 20-20 வகை ஆட்டத்தில் இருந்து தான் விலகியதைப் பற்றி எந்த ஒரு வரியையும் சொல்லவில்லை. சச்சின் தன் குடும்பத்தின் மீதும் தந்தையின் மீதும் வைத்திருக்கும் பாசமும் நம்பிக்கையும் இப்படத்தில் மிக விரிவாகவே பதிவாகிறது. உண்மையில் ஒரு குடும்பமே இந்தியாவுக்கு சச்சினைத் தர உழைத்திருக்கிறது. அதிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் தன்னுடன் தன் சகோதரன் அஜய் இருப்பதாக சச்சின் சொல்வதெல்லாம் ஒரு அண்ணனுக்கு எத்தனை பெரிய பெருமிதம்? சச்சினின் பணிவு படம் முழுக்க பார்க்கக் கிடைக்கிறது.
 
தனக்கு இப்படத்தில் வேலை இல்லை என்பதை ஏ.ஆர்.ரஹ்மான் உணர்ந்ததுதான் பாராட்டுக்குரியது. ரசிகர்களின் காட்டுக் கத்தலே பின்னணி இசை என்பதை உணர்ந்து அவர்களோடு இணைந்து பயணிக்கிறது பின்னணி இசை. எப்போது தீம் பாடல் துவங்குகிறது என்பதைக் கண்டுபிடிக்கமுடியாதபடித் தொடங்குகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
 
பாகிஸ்தானுடனான ஒவ்வொரு உலகக்கோப்பை வெற்றியின் பெருமிதத்தையும் சச்சின் பதிவு செய்கிறார். தன் உடைமைகளை வைத்திருக்கும் பெட்டியில் கடவுள்களின் படத்துடன் இந்தியக் கொடியும் இருக்கிறது. கடவுளும் தந்தையுமே தன் வெற்றிக்குக் காரணம் என்று தான் உறுதியாக நம்புவதை, உலகின் முன் பலப்பல முறை சொன்னதை இப்படத்திலும் மீண்டும் மீண்டும் சொல்கிறார் சச்சின்.
 
இது திரைப்படம் போல எடுக்கப்படவில்லை என்பதுதான் எனக்குப் பிடித்திருந்தது. முதல் பதினைந்து நிமிடங்களுக்குள் படம் டாக்குமெண்ட்ரி ஆகிறது. பின் இறுதிவரை டாக்குமெண்டரிதான். சச்சின் போல ஒருவர் நடிப்பதை எப்படித் தாங்கிக்கொள்ளமுடியும்? இத்தவறைச் செய்துவிடக்கூடாது என்று சரியாக முடிவெடுத்துச் செயல்பட்டிருக்கிறார்கள். கிரிக்கெட்டைப் பார்த்தே வாழ்க்கையைத் தொலைத்துவிடுவோமோ என்று என்னைப் போல அஞ்சிய கூட்டம் நிச்சயம் தவறக்கூடாத படம் இது. சுவாரஸ்யத்துக்காக அல்ல, நம்மை ஒருதடவை திரும்பிப் பார்க்க. இந்திய வரலாற்றில் இப்படியான டாக்குமெண்ட்டரியெல்லாம் வராது என்று நினைத்திருந்தேன். வந்திருக்கிறது. நிறைய குறைகள் இருந்தாலும், இந்த முயற்சிக்காகப் பார்க்கலாம்.
Share

பாகுபலி

நேற்று பாகுபலி (இரண்டாம் பாகம்) பார்த்தேன். 🙂
 
முதல் பதினைந்து நிமிடங்கள் பொறுமையைச் சோதித்துவிட்டார்கள். பாதி நேரடித் தமிழ்க் காட்சிகள், பாதி டப்பிங், எரிச்சலான நகைச்சுவைக் காட்சிகள் என்று நொந்து போயிருந்த சமயத்தில் சிவகாமி சத்தியம் செய்கிறார். அங்கே பிடித்துக்கொண்ட படம், இடைவேளை வரை நான் திறந்த வாயை மூடவில்லை. மிரட்டல். இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் தொய்வு, ஆனாலும் பிரமாண்டத்துக்கும் அட்டகாசத்துக்கும் குறைவே இல்லை. உலகத் திரைப்பட பிரமாண்டங்களுக்கு இந்தியாவின் பதில் இது. இந்தியப் பெருமிதம். ராஜ மௌலியின் திறமை ஆச்சரியப்படுத்துகிறது. முதலில் வரும் யானை, பல்வாள்தேவனின் ரத காளைகள் போன்றவை கிராஃபிக்ஸில் சொதப்பினாலும், ஒட்டுமொத்த அளவில் கிராஃபிக்ஸின் பிரமாண்டம் இன்னும் கண்ணிலேயே நிற்கிறது. இளையராஜா இல்லாத குறை தெரியாத அளவுக்குப் பின்னணி இசையிலும் பாடல்களிலும் மரகதமணி கலக்கல். பின்னணி இசையின் இனிமையும் அன்னப்பறவை போன்ற கப்பலில் வரும் பாடலும் இன்னும் காதில் மிச்சம் இருக்கிறது. வம்சம் மெகா தொடர் கண்ணில் பட்டு ஒட்டுமொத்தமாக வெறுத்துப் போயிருந்த ரம்யா கிருஷ்ணன், இப்படத்தில் அதகளப்படுத்துகிறார். வசனகர்த்தா மதன் கார்க்கிக்கு தனியே ஒரு பாராட்டு. ஒரு திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் ஒன்றை ஒன்று விஞ்சும் அளவுக்கு நன்றாக அசத்தலாக அமைவது என்பது சாதாரண விஷயமல்ல. ராஜமௌலி இதைச் சாதித்திருக்கிறார்.
 
தமிழில் நேரடியாக என்று சொல்லி எடுக்கப்படும் இருமொழிப் படங்கள் அத்தனையிலும் உள்ள பிரச்சினையே இப்படத்தின் பிரச்சினையும் கூட. தெலுங்கு பேசும் உதட்டசைவுக்கு தமிழில் பேசிப் பாடி வரும் காட்சிகள் துருத்திக்கொண்டு தெரிகின்றன. இதைக் கடந்துவிட்டால் போதும்.
 
தமிழர்கள் செய்திருக்கவேண்டிய இப்பெரும் சாதனையை தெலுங்குத் திரையுலகம் தட்டிக்கொண்டு போனதில் கொஞ்சம் வருத்தம்தான் என்றாலும் இது ஒரு இந்தியப் பெருமை என்ற வகையில் மறக்கமுடியாத திரைப்படமே.
Share

பவர் பாண்டி

பவர் பாண்டி பார்த்தேன். மஞ்சள் பை தந்த பயம், கிழவர்களின் காதல் என்ற பிரயோகங்கள் தந்த அச்சம் காரணத்தால் இயன்றவரை இப்படத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தே வந்தேன். மகளிர் மட்டும் திரைப்படத்தில் இருந்து ரேவதி மீது உருவான இனம்புரியாத எரிச்சல் இன்னுமொரு காரணம். சுத்தமாக முக பாவங்கள் காட்ட வராத ராஜ்கிரண் வேறு. இத்தனை எரிச்சலுடன் பார்த்தும், இந்தப் படம் பிடித்துவிட்டது. இன்னும் சொல்லப்போனால், தனுஷின் காதல் காட்சிகள் முடியும் வரை படம் அட்டகாசமான ஃபீல் குட் மூவி. அதற்குப் பின்பு கொஞ்சம் சொதப்பல். ஆனால் அந்த சொதப்பல் காட்சிகளில் ரேவதியின் நளினமான நடிப்பு – அருமை. ரேவதி மிதமிஞ்சிப் போனால் படத்தில் பதினைந்து நிமிடங்கள் வந்திருக்கலாம். ஆனால் அந்த சிரிப்பு, அந்த கண்களில் காட்டும் நுணுக்கம் என ஒட்டுமொத்த படத்தையும் ஹைஜாக் செய்துவிட்டார். ரேவதியின் முன்பு ராஜ்கிரண் பூனையாகிப் போனது பெரிய மைனஸ். தனுஷை அந்த அளவுக்கு ரசிக்கும்விதமாகக் காட்டிவிட்டு, ரேவதியின் முன்பு ராஜ்கிரண் இறங்கிப் போனதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதுதான் படத்தின் மைனஸ் என நினைக்கிறேன்.

படத்தில் எனக்குப் பிடித்துப் போன இன்னும் சில விஷயங்கள்: அலட்டாத மிகவும் சீரியஸான யதார்த்தமான பிரசன்னாவின் நடிப்பு. பிரசன்னாவின் வாழ்நாள் படம் இது என நினைத்துக்கொண்டேன். அடுத்து தனுஷின் ஃபிரண்டாக வரும் அந்த பீர் பார்ட்னர். என்ன ஒரு யதார்த்தம். இளையராஜா இசையமைத்திருக்கலாமே என்று படம் முழுக்க தோன்றிக்கொண்டே இருந்தது.

தேவையற்ற அந்த கடைசி சண்டைக் காட்சியை நீக்கி, ராஜ்கிரணை இறுதிக்காட்சிகளில் கொஞ்சம் கெத்தாகக் காட்டி இருந்தால், படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

தனுஷின் முதல் பட இயக்கம் மிகவும் நன்றாகவே வந்துள்ளது. தனுஷின் இயக்கம் என்று சொன்னபோது நான் எதிர்பார்த்த திரைப்படம் வேறு. தனுஷ் தந்ததோ முற்றிலும் வேறானது. ஆனாலும் ரசிக்கும்படியாகவே இருந்தது. இந்த வயதான காதல் வகைத் திரைப்படங்களில் தமிழின் ஒரே முத்து கேளடி கண்மணி மட்டுமே என்பது என் எண்ணம். இப்போதும் கேளடி கண்மணியே முதன்மையில் உள்ளது. துணை படம் (துரை இயக்கியது) இதை கொஞ்சம் தொட்டுப் பார்த்தது. (துணை படத்தில் சிவாஜியைத் தூக்கிச் சாப்பிடும் ராதாவின் மிரட்டல் நடிப்பு இன்னும் கண்ணில் நிற்கிறது.) இப்போதைய டீஸண்ட் வரவு பவர் பாண்டி.

முதல் மரியாதையை மிஸ் செய்துவிட்டேன். முதல் மரியாதை வேற லெவல்.

Share

காற்று வெளியிடை

காற்று வெளியிடை – கதையே இல்லை. கார்கில் பிரச்சினை தொட்டுக்கொள்ள ஊறுகாய். பாகிஸ்தானைத் திட்டினால் முஸ்லிம்களுக்குக் கோபம் வந்துவிடுமோ என்ற அச்சம். இந்தியாவைக் குறை சொன்னால் இந்திய அளவில் எதிர்ப்பு வந்துவிடுமோ என்ற பயம். எனவே அரசியலையும் நாட்டுப் பிரச்சினைகளையும் இம்மி கூடத் தொடாமல் கார்கில் பிரச்சினையை மையப்படுத்தி படம் எடுத்து சாதனை செய்திருக்கிறார் மணிரத்னம். ஒரு முக்கியப் பிரச்சினையை பின்னணியாக எடுத்துக்கொண்டு அதில் காதலை மட்டும் சொல்லிவிட்டுச் செல்வது மணிரத்னத்துக்கும் நமக்கும் புதியதல்ல என்றால், இப்படம் இன்னும் ஒரு படி மேல். இதற்கு முந்தைய படங்களில் அப்பிரச்சினையைப் பற்றி எதாவது சொல்லவாவது முயற்சிப்பார். இதில் அந்த முயற்சியும் கிடையாது.
 
பாகிஸ்தானில் கார்த்தி சிக்குவதும் பாகிஸ்தானிலிருந்து தப்பிப்பதும் மனைவி குழந்தையுடன் சேருவதுமான காட்சிகளில் எது சிறந்த காமெடிக் காட்சி என்று யாராலும் கண்டுபிடிக்கமுடியாது. கல்யாணத்துக்கு முன்னரே உடலுறவு என்ற கருத்துத் திணிப்பை இப்படத்திலும் கடைப்பிடிக்கிறார் மணிரத்னம். என் செல்லக்கிளியே, உங்க அருமை பேத்தி என்பது போன்ற ஒட்டாத மணிரத்னத்தின் ட்ரேட் மார்க் செயற்கை வசனங்கள், வண்ணப்பொடி தூவி ஒரு கல்யாணப் பாடல், டாக்டரைத் தேடிப் போன மாதவனைப் போல ஒரு டாக்டர் காதலைத் தேடிப் போவது, டெண்ட் போட்டு வைத்தியம் பார்க்கும் ஹீரோயின் என மணிரத்ன க்ளிஷேக்கள் இப்படத்திலும் உள்ளன.
 
படத்தின் ப்ளஸ் என்ன? ப்ளஸ் அல்ல, பல ப்ளஸ்கள். ஒன்று, ஒளிப்பதிவு. தமிழில் இத்தனை சிறந்த ஒளிப்பதிவுள்ள படங்கள் மிகக்குறைவு. உயிரே திரைப்படத்துக்குப் பிறகு இப்படி அசரடிக்கும் ஒளிப்பதிவை த்மிழ்ப்படங்களில் பார்த்ததாக நினைவில்லை. அதையும் தாண்டிச் செல்கிறது இப்படத்தின் ஒளிப்பதிவு. ஒளிப்பதிவாளர் ரவி வர்மனுக்கு விருது உறுதி. ஒளிப்பதிவுக்காகவே இப்படத்தை நிச்சயம் பார்க்கலாம்.
 
இரண்டாவது ப்ளஸ், அதிதி ராவ். முகத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் நடிக்குமா? நடிக்கிறது. கண் காது மூக்கு என சின்ன சின்ன அழுத்தமான அசரடிக்கும் பாவங்களில் அதகளப்படுத்துகிறார் அதிதி ராவ். சான்ஸே இல்லை.
 
மூன்றாவது ப்ளஸ், மணிரத்னத்தின் இயக்கம். படம் முழுக்க பத்து காட்சிகளாகவது பிரமாதமாக இருக்கின்றன. வழக்கமான மணிரத்னத்தின் படங்களைப் போல இவை ஒன்றுடன் ஒன்று ஒட்டவில்லை என்பதுதான் பிரச்சினை.
 
பின்னணி இசையா அது பாடலா என்று கண்டுபிடிப்பதற்குள் அது முடிந்துவிடுகிறது. நல்லை அல்லை பாடல் இரண்டு வரி காதில் விழுந்தது. ஏ.ஆர்.ரஹ்மானின் பிரச்சினை, மெலடி பாடல் என்றால் இசையே இல்லாமல் இசைப்பதுதான் என்ற முடிவுதான்.
 
மெல்ல நகரும் மணிரத்னத்தின் படங்களின் ரசிகர்கள் இப்படத்தைப் பொறுமையாகப் பார்ப்பார்கள். நான் பார்த்தேன். ரசித்துப் பார்த்தேன். கதையே இல்லை என்பது தந்த எரிச்சலை மீறி, மணிரத்னத்தின் சில செயற்கையான காதல் வசனங்களை மீறி, பிரமிக்க வைக்கும் பல காட்சிகளை ரசித்துப் பார்த்தேன். இரண்டாம் முறையும் பார்க்கப் போகிறேன். மற்றவர்கள் நொந்து போவார்கள். அப்படி நொந்து போனவர்கள் நம்மையும் நிம்மதியாகப் பார்க்கவிடாமல் கமெண்ட் அடித்துக்கொண்டே இருப்பார்கள். இன்று நான் பார்த்த திரையரங்கில் என்னைத் தவிர எல்லாருமே இப்படி நொந்து போய் கமெண்ட் அடித்துக்கொண்டுதான் இருந்தார்கள். இரண்டரை மணி நேரப் படம் இருபது மணி நேரம் ஓடுவது போல் பிரமை ஏற்படுத்துவது உறுதி என்பதால் கட்டுச்சாதம் கட்டிச் செல்லவும். மிகத் தெளிவாக இது ஈகோ க்ளாஷ் படம் என வகைப்படுத்தி இருந்தால், ஒரு கட்டுக்குள்ளாவது இருந்திருக்கும். அதைத் தவறவிட்டுவிட்டார் மணிரத்னம்.
 
பின்குறிப்பு: இசை ஏ.ஆர்.ரஹ்மான் என்று வருகிறது. பின்னணி இசையிலும் ஏ.ஆர்.ரஹ்மான் பேர் வருகிறது. கூடவே இன்னொருவர் பெயரும் வருகிறது. அதோடு ஒரிஜினல் ஸ்கோர் என்று அதிலும் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் வருகிறது. இதை எப்படிப் புரிந்துகொள்ளவேண்டும்?
Share