‘வெள்ளை ராஜா’ என்றொரு
தொடர் தமிழில் அமேஸான் ப்ரைம் தயாரிப்பில் வந்தது. அதைப் பார்த்தபோதே எழுதினேன், இது
போன்ற தொலைக்காட்சித் தொடர்களுக்கும் சென்ஸார் வைப்பது நல்லது என்று. இப்போது மிர்ஸாப்பூர்
பார்த்தேன். வெள்ளை ராஜா எல்லாம் இதற்கு முன் ஒன்றுமே அல்ல!
அதீத வன்முறை, அதாவது
பதற்றத்துடன் கண்ணை மூட வைக்கும் வன்முறை, அதீதமான உறவுக் காட்சிகள், மிக ஆபாசமான வார்த்தைப்
பிரயோகங்கள் எனக் கலங்கடித்துவிட்டார்கள். இது ‘வெள்ளை ராஜா’அளவுக்கு மோசமில்லை. ஆஹா
ஓஹோவுமில்லை. ஆனால் எப்படியோ ஒன்றச் செய்துவிடுகிறார்கள்.
மிர்ஸாப்பூர் –
சாதாரண கதை. திரை உலகம் கடித்துச் சவைத்துத் துப்பிவிட்ட கேங்ஸ்டர் கதை. அதே கதையை
எவ்விதத் திருப்பமும் இல்லாமல் அப்படியே எடுத்திருக்கிறார்கள், ஆனால் பொறுமையாக. 2
மணி நேரத்தில் பாட்டு சண்டை என்றெல்லாம் வைத்து, ஹீரோவைப் புனிதமாக்கி என்பதான எவ்விதச்
சிக்கலும் இல்லை என்பதால் கதையை மட்டுமே மையமாகக் கொண்டு நகர்த்துகிறார்கள். அட்டகாசமான
ஒளிப்பதிவு, இசை எனக் கலங்கடிக்கிறார்கள்.
அதீதமான வன்முறைக்
காட்சிகள். கிட்டத்தட்ட ஐந்து காட்சிகளிலாவது நான் கண்களை மூடிக்கொண்டிருப்பேன். அதிலும்
இறுதி எபிசோடின் சில காட்சிகள் – உவ்வேக். மறந்தும் குழந்தைகளுடன் பார்த்துவிடாதீர்கள்.
பங்கஜ் திரிபாதியின்
நடிப்பு – உலக லெவல். அதேபோல் ஒவ்வொரு நடிகருமே மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். ஆச்சரியப்படுத்துகிறார்கள்.
கதையில் எவ்விதமான புதிய தன்மையும் இல்லை என்றாலும், நடிகர்களின் நடிப்புக்காகவும்
நம்மைத் தொற்றிக் கொள்ளும் பதற்றத்துக்காகவும் பார்க்கலாம், எப்போது யாரைக் கொல்வார்கள்,
யார் யாரை தேவையே இல்லாமல் கலவி கொள்வார்கள் என்ற அச்சத்துடன்!
தமிழில் சப்டைட்டில்
கிடைக்கிறது. பல இடங்களில் அட்டகாசமாகவே மொழிபெயர்த்திருக்கிறார்கள். முக்கியமாக, ஆவோ
பேட்டா என்பதையெல்லாம் கர்ம சிரத்தையாக வா மகனே என்றெல்லாம் எழுதிக் கொல்லாமல், வாப்பா
என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். இது அடிப்படையான விஷயம்தானே, இதை ஏன் பாராட்டவேண்டும்
என்றால், மற்ற மொழிபெயர்ப்புகளின் தரம் இந்த அளவில்தான் அமேஸான் ப்ரைமில் இருக்கிறது!
இதில் கபூதர் என்ற வார்த்தையை புறா என்று நேரடியாக மொழிபெயர்க்காமல், கதைக்கு ஏற்றவாறு
குருவி என்று மொழிபெயர்த்தது நிச்சயம் பாராட்டுக்குரியது. சில எபிசோடுகளில் கடுமையாகச்
சொதப்பியும் இருக்கிறார்கள். உதாரணமாக, ‘உண்ணதானே குபத்ராங்க என் ஃப்ரண்ட் கல்யாணம்
ஒளுங்கா எந்திர்சு வா’ என்பதெல்லாம் அராஜகம். எழுத்துகள் கணக்குக்காக புள்ளி கமா இல்லாமல்
மொழிபெயர்ப்பதெல்லாம் அநியாயம், அக்கிரமம்.
தமிழ் சப்டைட்டிலுடம்
பார்ப்பவர்கள் கவனத்துக்கு – உங்களை அதிரச் செய்யும் அத்தனை கெட்ட வார்த்தைகளும் அப்படியே
தமிழ் சப்டைட்டிலில் வரும். எனவே கவனம். தனியாக இருந்து பாருங்கள். 🙂
இத்தனை வன்முறை,
ஆபாசம் எல்லாம் வீட்டுக்குள் வருவது சரியா தவறா என்று யோசிக்கவே அயர்ச்சியாக இருக்கிறது.
ஒரு கட்டத்தில் இதைத் தவிர்க்க முடியாது என்பதுதான் யதார்த்தம். சைல்ட் லாக் போட்டு
பூட்டுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் இது உண்மையிலேயே பாதுகாப்பாக இருக்குமா, பையன்கள்
பார்க்காமல் இருப்பார்களா என்பதெல்லாம் தெரியவில்லை. நம் மன திருப்திக்காக செய்துகொள்ளவேண்டியதுதான்
போல. தமிழில் ‘வெள்ளை ராஜா’வை இதே போல் அப்படியே எடுக்க முனைந்திருக்கிறார்கள் போல.
ஆனாலும் தமிழில் ஹிந்தி அளவுக்குப் போக முடியவில்லை. இனி போவார்கள் என நினைக்கிறேன்.
66வது தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழில்
பாரம் என்ற படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைக் கேள்விப்பட்டதுகூட இல்லை.
உண்மையில் மேற்குத் தொடர்ச்சி மலை படத்துக்கே விருது தரப்பட்டிருக்கவேண்டும்.
தேசிய
அளவில் சிறந்த நடிகை – கீர்த்தி சுரேஷ் (மகாநடி). சரியான தேர்வுதான். எதிர்பார்த்ததும்
கூட.
மலையாளத்தில்
நல்ல படம் – சூடானி ஃப்ரம் நைஜீரியா. நல்ல தேர்வு.
தேசிய
அளவில் சிறந்த இசையமைப்பாளர் – சஞ்சய் லீலா பன்ஷாலி – பத்மாவத் படத்துக்காக. சரியான
தேர்வு.
தேசிய
அளவில் சிறந்த பின்னணி இசை – யூரி படத்துக்காக. நல்ல தேர்வு. எதிர்பார்த்ததுதான்.
தேசிய
அளவில் சிறந்த ஒலிப்பதிவு – யூரி படத்துக்காக. எதிர்பார்த்ததுதான்.
தேசிய
அளவில் சிறந்த சமூகப் படம் – பேட் மேன். நல்ல தேர்வு.
தமிழுக்கு அதிகம்
விருதுகள் தரப்படவில்லை என்றும் தமிழ் புறக்கணிக்கப்பட்டுவிட்டது என்றும் ஆரம்பித்திருக்கிறார்கள்.
விருது கொடுத்தால் திருப்பித் தரவேண்டியது, மத்திய அரசைத் திட்டவேண்டியது, அப்புறம்
விருது தரவில்லை என்று புகார் வாசிக்கவேண்டியது! விருதுக்கு எத்தனை படங்கள் இங்கே இருந்து
அனுப்பப்பட்டன என்ற பட்டியலைப் பார்த்தால்தான் இன்னும் கொஞ்சம் புரியும். கிடைக்குமா
என்று பார்க்கிறேன். (திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்கள் இருந்தால் இப்பட்டியல் கிடைக்க
வழி செய்யுங்கள்.)
சிறந்த அறிமுக
இயக்குநராக மாரி செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம். நால் என்றொரு மராத்தி படத்தின்
இயக்குநர் தேர்வாகி இருக்கிறார். படத்தைப் பார்த்தால்தான் தெரியும் ஏன் இது தேர்வாகி
இருக்கிறது என்று.
மற்றபடி தமிழ்
புறக்கணிக்கப்பட்டதாக நான் நினைக்கவில்லை. தமிழில் மிக முழுமையான முயற்சிகள் கைகூடவில்லை
என்பதே உண்மை. ஒவ்வொரு படம் வரும்போதும் அந்தப் படத்தின் குறைகளைப் பட்டியலிட்டுவிட்டு,
போதாமையையெல்லாம் சொல்லிவிட்டு, விருதுகள் கிடைக்கவில்லை என்னும்போது தமிழ் புறக்கணிக்கப்படுகிறது
என்பதெல்லாம் அபத்தம்.
மற்றபடி இந்தத்
தேசியத் திரைப்பட விருதுகளில் லாபியே இல்லை என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். லாபி
இல்லாமல் எப்போதும் இருந்தால் அது சரியானது. ஆனால் காங்கிரஸ் ஆளும் வரை லாபி இருந்தால்
ஓகே, ஆனால் பாஜக ஆளும்போது லாபி கூடாது என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதமல்ல.
இன்னும் சொல்லப்போனால், பாஜக அரசிலும் இந்த லாபியில் இருப்பது காங்கிரஸ் + முற்போக்காளர்கள்
மட்டுமே. பாஜக காரர்களுக்கு இன்னும் ஒரு திரைபடத்தின் முக்கியத்துவம் தெரியவில்லை.
நேற்றுதான் ஹெச்.ராஜா ஒரு ஸ்டேட்டஸை ஃபேஸ்புக்கில் இது குறித்துப் போட்டிருந்தார்.
கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. லாபியில் கொஞ்சம் இந்திய தேசிய சினிமாக்களும் இந்தியத்தையும்
ஹிந்து மதத்தையும் நிந்திக்காத சினிமாக்களும் சிறிது காலமாவது வெல்லட்டும்.
பின்க் திரைப்படத்தின் கருவைப் புரிந்துகொள்வது மிக முக்கியம். ஒரு பெண்ணின் சம்மதத்துடன் மட்டுமே உறவு கொள்ளவேண்டும். பார்க்க இது மிக எளிமையான ஒன்றாகத் தோன்றலாம். ஆனால் பின்க் திரைப்படம் இதில் சில பல நிபந்தனைகளைச் சேர்த்துக்கொண்டே போகிறது. அது காதலியாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும், பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் அனுமதி இல்லாமல் உறவு கூடாது என்கிறது. இன்னும் ஒரு படி மேலே போய், பாலியல் தொழிலாளி கை நீட்டி காசு வாங்கிவிட்டு பின்னர் வேண்டாம் என்று மறுத்தாலும் உறவு கொள்ளக்கூடாது என்கிறது. இந்தக் கடைசி நிபந்தனையை ஒட்டி பின்க் திரைப்படம் வெளியானபோது இந்தியா முழுக்க விவாதம் நடந்தது.
இன்று பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளை ஒட்டி இத்திரைப்படம் தமிழிலும் வருவது நல்லது என்று அஜித் நினைத்திருக்கிறார். அஜித் போன்ற பெரிய நட்சத்திரங்கள் இப்படி நினைப்பதும் அதை செயல்படுத்துவதும் மிக முக்கியமான விஷயம். ஆனால் எப்போதும் குறுக்கே வந்து நிற்கும் தமிழின் துரதிர்ஷ்டம் இந்தத் திரைப்படத்தையும் விட்டு வைக்கவில்லை. எந்த அளவுக்கு இந்தத் துரதிர்ஷ்டம் அமைத்திருக்கிறது என்றால், ஏன் அஜித்தை பின்க்கைப் பார்த்தார் அல்லது ஏன் பின்க்கை நாம் முன்பே பார்த்தோம் என்ற அளவுக்கு!
ஒரு திரைப்படத்தை ரீமேக் செய்யும்போது என்னவெல்லாம் செய்துவிடக்கூடாது என்பதற்குத் தமிழில் ஏகப்பட்ட திரைப்படங்கள் உதாரணமாக உள்ளன. சமீபத்திய உதாரணம் இது. அதிலும் ஒரு பெரிய நட்சத்திரம் நடிக்கும்போது சின்ன சின்ன காட்சி முதல் பெரிய காட்சி வரை என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை ஒப்பிட பின்க் திரைப்படமும் நேர்கொண்ட பார்வையும் மிகச் சிறந்த உதாரணம்.
பின்க் திரைப்படத்தில் அமிதாப் மிகச் சாதாரண வக்கீல். ஆனால் தமிழில் அஜித்தோ அஜித்! எனவே அவர் தோன்றும் காட்சி பின்னால் இருந்து கொஞ்சம் ஸ்டார்-சஸ்பென்ஸுடன் காண்பிக்கப்படுகிறது. மற்ற பெரிய நட்சத்திரங்களின் படத்துடனும் அஜித்தின் மற்ற படங்களுடனும் ஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லை என்பது உண்மைதான். ஆனால் பின்க்-க்கு இது ஒத்துவராது. அதைவிட அடுத்த காட்சியில் அஜித் மருத்துவரைப் பார்க்க காத்திருக்கும்போது அவரை அழைக்கும் உதவியாளர் மிரள்வதெல்லாம் தாங்க முடியாத காட்சி.
அஜித்துக்கு ஒரு காதல் காட்சியும் பாட்டும் பைக் சீனும் சண்டையும் வேண்டும் என்பதற்காக ஜஸ்ட் லைக் தட் சேர்த்திருக்கிறார்கள். இவை மட்டுமே மொத்தம் 20 நிமிடங்களுக்கு மேல் வரும்! பின்க் படத்தில் அமிதாப் உடல் நிலை சரி இல்லாதவர். அவர் மனைவியும் உடல் நிலை சரி இல்லாதவர். ஆனால் நேர்கொண்ட பார்வையில் என்னவெல்லாமோ காண்பித்து அஜித் ‘நான் வாழ வைப்பேன்’ சிவாஜி ரேஞ்சுக்கு தலையைப் பிடித்துக்கொண்டு உடலைக் குலுக்குகிறார். உண்மையில் நல்ல திரைப்படத்தின் ரசிகன் அந்தக் காட்சியோடு தலை தெறிக்க தியேட்டரை விட்டு வெளியே ஓடி இருக்கவேண்டும். ஆனால் நான் சிவாஜி, ரஜினி, கமல், விஜய் எனப் பலரின் இதுபோன்ற திரைப்படங்களைப் பார்த்த தமிழன் என்பதால், என்னதான் ஆகிவிடும் பார்க்கலாம் என்று தொடர்ந்து பார்த்தேன்.
பின்க் திரைப்படத்தின் காட்சிகளை ஒன்றுவிடாமல் அப்படியே எடுத்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் மழை பின்க் படத்தில் பெய்தால் அதே காட்சியில் நேர்கொண்ட பார்வையிலும் மழை. அந்த அளவுக்கு டிட்டோ. அத்தோடு விட்டிருந்தால் படம் கொஞ்சம் சுமாராகவாவது இருந்திருக்கும். சில காட்சிகளை இவர்களாக யோசித்துச் சேர்த்தும் இருக்கிறார்கள். எங்கெல்லாம் காப்பியோ அங்கெல்லாம் படம் நன்றாக இருப்பது போல ஒரு பிரமை (பிரமைதான்!), இவர்கள் சேர்த்த காட்சிகளில் படம் பல்லிளிக்கிறது.
பின்க் திரைப்படத்தின் வசனங்களை அப்படியே தமிழாக்கி இருக்கிறார்கள். கூடுதல் கவனம் எடுத்திருக்கலாம். ஹிந்தியில் சப் டைட்டிலுடன் பார்க்கும்போது சரியாகத் தோன்றும் வசனமெல்லாம் தமிழில் கேட்கும்போது இரண்டு மூன்று விதமாகப் புரிந்து தொலைக்கிறது! We should save our boys, not our girls, becuase if we save our boys, then our girls will be safe என்ற உயிர்நாடியான வசனத்தை இவர்கள் மொழிபெயர்த்திருக்கும் விதத்தில் ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டேன். நம் பெண்களை ஆண்களிடமிருந்து காக்கவேண்டும் என்று வருகிறது (என நினைக்கிறேன்!). எப்போதுமே அப்படித்தானே. இந்தப் படம் எதற்கு இதைச் சொல்ல? இப்படி சில நுணுக்கமான விஷயங்களை எல்லாம் கோட்டை விட்டிருக்கிறார்கள்.
பின்க் படத்தில் 22 கிமீ தூரத்தை எப்படி 10 நிமிடத்தில் கடக்கமுடியும், வண்டியை 125 கிமீ வேகத்தில் ஸ்டார்ட் செய்தீர்களா என்று வரும் வசனத்தை, தமிழுக்கேற்றவாரு மாற்றவேண்டும் என்பதற்காக, 40 கிமீ தூரத்தை 10 நிமிடத்தில் எப்படி கடக்க முடியும், 425 கிமீ வேகத்தில் ஸ்டார்ட் செய்தீர்களா என்று கேட்கிறார்கள். எல்லாவற்றிலும் தமிழனுக்கு எக்ஸ்ட்ரா தேவை என்பதில் இயக்குநர் உறுதியாக இருந்திருக்கிறார். (தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் தான் இந்தப் படத்தின் இயக்குநர் என்பதை நம்பவே முடியவில்லை!)
அஜித்தைப் பார்த்து வில்லன் நீதிமன்றத்தில் ஒரு கட்டத்தில் நீ என்று பேசுகிறார். அஜித்தும் பதிலுக்கு அவரை நீ என்கிறார். ஆனால் பின்க்கில் அமிதாப் தன் குரல் உயராமல் தொடர்ந்து மரியாதையுடனேயே பேசுகிறார். பின்க் படத்தில் அமிதாப் கதாநாயகியைப் பார்த்து Be careful என்கிறார். அர்த்தம் பொதிந்த வசனம் அது. ஆனால் அஜித்தோ ‘யோசிச்சி நட, யோசிச்சிக்கிட்டே நடக்காத’ என்ற பன்ச்சுடன் அறிமுகமாகிறார்.
ஒரு நல்ல திரைப்படத்தை, முக்கியமான திரைப்படத்தை, கமர்ஷியலாகவும் வெற்றி பெற வைத்துக் காட்டுகிறேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு எத்தனை தடவை மூக்குடைபடுவார்கள் எனத் தெரியவில்லை. கழுதையாகவும் இல்லாமல் புலியாகவும் இல்லாமல் இவர்கள் நம்மைப் படுத்தும் பாடு கொஞ்சம் நஞ்சமல்ல.
நீதிமன்றக் காட்சிக்கு முன்னர் ரங்கராஜ் பாண்டே தன் கட்சிக்காரருக்கு அறிவுரை சொல்வது போலவும் அஜித்தை ரேக்கச் சொல்வது போலவும் வருகிறது. ஹிந்தியில் இந்தக் கண்றாவியெல்லாம் கிடையாது.
வித்யா பாலன் ஏன் வந்தார் என்று இன்னும் யாருக்கும் புரியவில்லை. எத்தனை வருடம் ஆனாலும் யாருக்கும் புரியப் போவதுமில்லை. அதிலும் அஜித் பொதுசேவகராக நீதிமன்றத்துக்குள் நுழையும்போது ஒருவர் போன் செய்கிறார். ஏன் செய்கிறார் என்று தெரியவில்லை. யாரிடமாவது கேட்கலாம் என்றால், இரண்டாம் பாகத்தில் சொல்வார்கள் என்று சொல்லிவிட்டால் என்னாவது என்ற அச்சத்தில் கமுக்கமாக இருந்துவிட்டேன்.
ரங்கராஜ் பாண்டே இங்கேயும் கேள்வியாகக் கேட்கிறார். ஒரே ஒரு வேண்டுகோள்தான் அவரிடம், ப்ளீஸ், வேண்டாம் இந்த விஷப் பரிட்சை. தாங்க முடியவில்லை. பின்க் படத்தில் இதே பாத்திரத்தில் வரும் அந்த நடிகரின் நடிப்பு எத்தனை யதார்த்தமாக இருக்கும்! ரங்கராஜ் பாண்டேவோ என் கேள்விக்கு என்ன பதில் ரேஞ்சிலேயே பேசுகிறார்.
அமிதாப்பின் நடிப்பையும் அஜித்தின் ‘நடிப்பையும்’ பற்றிப் பேசப்போவதில்லை. அது பாவக்கணக்கில் சேர்ந்துவிடும்.
ஷ்ரத்தா ஸ்ரீநாத் மிக நன்றாக நடிக்கிறார். ஆனால் பின்க் படத்தில் தப்ஸீ – வாய்ப்பே இல்லை. வேற லெவல் அது.
இதே போல் ஒவ்வொன்றையும் ஒப்பிடலாம். பெண் போலிஸ் தமிழில் பரவாயில்லாமல் நடிக்கிறார். ஆனால் பின்க் படத்தில் அவர் நடிப்பு அட்டகாசமாக இருக்கும். வில்லனாக வரும் நடிகர்கள் இரண்டு மொழிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் தமிழ்த் திரையுலகம் இந்தத் திரைப்படத்தைக் கையாளும் அளவுக்கு வயதுக்கு வரவில்லை. எதையுமே உரக்கவும் ஒரு நிலைப்பாடு எடுத்தும் கருப்பு வெள்ளையாகவும் மட்டுமே இவர்களுக்கு (நமக்கு!) அணுகத் தெரியும். இடைப்பட்ட நுணுக்கங்கள், கதாபாத்திரத்தின் தன்மையே முக்கியம் என்பதெல்லாம் இன்னும் இவர்களுக்குப் பழக்கப்படவில்லை. அதுவரை பின்க் படத்தைப் பார்த்துவிட்டு, பாராட்டிவிட்டு, அதை நிச்சயம் அனைவரும் பார்க்கவேண்டும் என்று அஜித் போன்றவர்கள் சொல்லிவிட்டு அமைதியாக இருந்துவிட்டால் புண்ணியமாகப் போகும். அஜித் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது, நல்ல ரசனையாளராக மட்டும் இருந்தாலும் போதாது, அதை அப்படியே எப்படித் தமிழில் கொண்டு வருவது என்றும் யோசித்திருக்கவேண்டும். அங்கே ஒட்டுமொத்தமாக அஜித் சறுக்கி இருக்கிறார்.
சில படங்களுக்கு ஒரு பிளஸ் பாயிண்ட் இருக்கும். அது என்னவென்றால், படத்தைப் பார்க்கப் போகும்போதே அப்படம் கேவலமாகத்தான் இருக்கும் என்று முடிவெடுத்துக் கொண்டேதான் செல்வோம். நாம் எதிர்பார்த்ததைவிட படம் கொஞ்சம் சுமாராக இருந்துவிட்டால்கூட அது ஒரு நல்ல படமோ என்ற மயக்கம் சிலருக்கு ஏற்பட்டுவிடும். இதை ஒட்டியே சில படங்களுக்கு மைனஸ் பாயிண்ட் உண்டு. அது என்னவென்றால், நாம் பார்த்த படம் நாம் எதிர்பார்த்ததை விட மிகக் கேவலமாக இருக்கும். ஏ1 திரைப்படம் இரண்டாம் வகையைச் சார்ந்தது.
சந்தானத்தின் இந்தப் படம் எப்படியும் மோசமாகத்தான் இருக்கும் என்று நினைத்தேதான் நான் திரையரங்குக்குள் நுழைந்தேன். நான் எதிர்பார்த்ததை விட மிகக் கேவலமாக இருந்தது.
இப்படத்தின் டீசர், பிராமண சமுதாயத்தைக் கேவலப்படுத்துவதாக இருந்தது. இதை ஒட்டிப் பேசிய சந்தானம், அப்படியெல்லாம் எதுவுமே இல்லை என்றும் சில விஷயங்களைக் கிண்டலுக்கு உள்ளாக்கினால்தான் காமெடி செய்ய முடியும் என்றும் வேலை வெட்டி இல்லாதவர்களே இதை எதிர்ப்பார்கள் என்றும் கூறியிருந்தார். இந்தப் படத்தைப் பார்க்கும்பொழுது ஒன்று உறுதியாகிறது. வேலை வெட்டி இல்லாதவர்கள் இது போன்ற படத்தை எடுப்பவர்களும் இப்படத்தில் நடிப்பவர்களும்தான்.
இந்தப் படத்தை ஜான்சன் என்ற இயக்குநர் இயக்கி இருக்கிறார். ஜான்சன் என்ற பெயருடையவர் என்பதால் இப்படம் இப்படி பிராமணர்களைத் தாக்குகிறது என்று நினைக்க எந்தக் காரணமும் இல்லை. ஏனென்றால் இப்படம் சந்தானத்தின் திரைப்படமாகவே அறியப்படுகிறது. ஜான்சன் என்பவர் இதற்கு முன்பு ஏதேனும் திரைப்படம் எடுத்திருக்கிறாரா என்ற தகவல் கூட எனக்குத் தெரியாது. சந்தானம் போன்றவர்களே இப்படிப்பட்ட படத்தை எடுக்கத் துணியும்போது மற்றவர்களைச் சொல்லி பொருளில்லை.
நான் கூட தொடக்கத்தில் பிராமணர்களை அத்தனை கேவலப்படுத்தி இருக்கமாட்டார்கள் என்றே நினைத்தேன். ஆனால் எத்தனை முடியுமோ அத்தனை அத்தனை இப்படத்தில் கேவலப்படுத்தி இருக்கிறார்கள். அது மட்டுமல்ல, சேரியில் வாழ்பவர்கள் முட்டாள்கள், குடிகாரர்கள் என்றும் மிகக் கேவலமானவர்கள் என்ற ரீதியிலும் இப்படத்தில் காட்டியிருக்கிறார்கள். இந்த இரட்டை நிலையிலிருந்து தமிழ்த் திரைப்படங்கள் விடுபடாத வரை நமக்கு மோட்சம் இல்லை.
இப்படத்தில் வரும் ஒரு பிராமணக் கதாபாத்திரம் மிக நேர்மையானவராகக் காட்டப்படுகிறது. ஊரே அவரைப் போற்றுகிறது. அந்தக் கதாபாத்திரத்தை எந்த நேரத்திலும் சிதைப்பார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். படத்தின் மைய முடிச்சே அந்தக் கதாபாத்திரத்தைச் சீரழிப்பதுதான் என்பது நான் கொஞ்சமும் எதிர்பாராதது. அதை எப்படி சீரழித்து இருக்கிறார்கள் என்பதை திரைப்படத்தில் பார்த்தால்தான் தெரியும். நேர்மையானவராகக் காட்டப்பட்ட அந்தப் பிராமணக் கதாபாத்திரத்திற்கு மூன்று மனைவியர். ஒருவர் வட இந்தியப் பெண். இன்னொருவர் சேரியில் வாழும் பெண் ரௌடி. இதில் அந்தப் பிராமணர் நடு இரவில் கருவாட்டுக் குழம்பை வாங்கிச் சாப்பிடுவார் என்றெல்லாம் வசனம் வருகிறது.
இந்தத் திரைப்படத்தில் பொருட்படுத்தத்தக்க அம்சம் ஒன்று கூடக் கிடையாது என்பது விஷேசம். சந்தோஷ் நாராயணன் இசை உட்பட. பிராமணர்களைக் கேவப்படுத்துவதற்காக மட்டுமே இந்தத் திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையில்லை. சந்தானம் தொலைக்காட்சியில் பேசும்பொழுது சொன்னார், திரைப்படங்களை இப்படி எடுத்தால்தான் காமெடி செய்ய முடியும் என்று அப்படியும் காமெடியே இல்லை என்பது ஒரு பக்கம். அவருக்கும் தெரிந்திருக்கிறது, ஜான்சனுக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது, பிராமணர்களை மட்டுமே வெளிப்படையாகக் காட்ட வேண்டும் என்றும் இதில் வரும் இன்னொரு ஜாதி என்ன என்பதைக் காட்டவே கூடாது என்றும் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் மறந்தும் ஒரு சொல் கூடச் சொல்லிவிடக் கூடாது என்றும் இவர்களுக்குத் தெளிவாகவே தெரிந்திருக்கிறது. பிராமணப் பெண்ணிடம் முட்டை சாப்பிட்டுத்தான் தன் காதலை நிரூபிக்க வேண்டும் என்று சொல்லும் சந்தானம் உள்ளிட்ட திரையுலகத்தினர் எந்த படத்திலாவது இஸ்லாம் பெண் தன் காதலை நிரூபிக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்களா?
தமிழ்த் திரையுலகமே மிக மோசமான ஒரு சூழலில் சிக்கி இருக்கிறது. இந்திய வெறுப்பு, ஹிந்து வெறுப்பு, பிராமண வெறுப்பு என்ற மூன்றும் உள்ளடக்கி உருவாகியிருக்கும் இந்தச் சுழலில் சிக்காத நடிகர்களே இன்று கிடையாது என்று சொல்லிவிடலாம். இவர்களிடமிருந்து தமிழ்நாட்டை நாம் மீட்டாக வேண்டும்.
இந்தப் படத்தின் சென்சார் சர்டிபிகேட் காட்டப்படும்போது ஒரு நொடி மட்டுமே கவனித்தேன், அதில் லீனா மணிமேகலை என்ற பெயர் வந்ததோ? பெயரைப் பார்த்தேன் என்று உறுதியாகச் சொல்ல முடியாத அளவுக்குத்தான் இப்போதைக்கு எனக்கு நினைவிருக்கிறது. ஏனென்றால் ஒரு நொடியில் அது மறைந்து விட்டது. லீனா மணிமேகலை போன்றவர்கள் சென்சார் பட்டியலில் இருப்பார்கள் என்றால் நாம் இதுபற்றி மேற்கொண்டு விவாதிக்க ஒன்றும் இல்லை.
(Update: நல்லவேளை, அது லீனா மணிமேகலை இல்லையாம். லீலா மீனாட்சி என்று சொன்னார் அம்பை. அதெப்படி யாரென்றே தெரியாமல் எழுதலாம் என்ற அம்பையின் கேள்விக்கு என் பதில் இங்கே. 🙂
முன்குறிப்பு: ஏன் ‘ஆனந்தத்
தேன்காற்றுத் தாலாட்டுதே’ புத்தகத்தைப் படித்தேன்? படித்த இரண்டு அரசியல் நூல்கள் –
சகிக்கவில்லை ரகம். பிரச்சினையே இல்லாத ஒன்றைப் படிப்போம் என்று தோன்றியதில், வேகமாகப்
படிக்கவேண்டும் என்று தோன்றியதில், கையில் சிக்கியது இப்புத்தகம்தான்!
கவிஞர் முத்துலிங்கத்தின் ‘ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே’ என்ற புத்தகத்தைப் படித்தேன். வானதி வெளியீடு. பல சுவையான, முக்கியமான பாடல்களை எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம். இளையராஜாவின் இசையில் பல முக்கியமான பாடல்களை எழுதி இருக்கிறார். (மரவண்டு கணேஷ் இவர் எழுதிய பாடல்களில் சிலவற்றைத் தொகுத்திருந்தார்.) முரசொலியில் வேலை பார்த்து, பின்னர் எம்ஜியாரின் அதிமுகவில் சேர்ந்து, மேலவையில் இருந்து, பின்னர் அரசவைக் கவிஞராக இருந்தவர் என்று நீள்கிறது இவரது வாழ்க்கை.
பொதுவாகவே திரையைச் சேர்ந்தவர்களின்
சுயசரிதை என்பது, அவர்களது நன்றியை, வாழ்க்கையை அர்ப்பணிக்கும் ஒன்றாகவே இருக்கும்.
இதுவும் விதிவிலக்கல்ல. பலருக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருக்கிறார். எம்ஜியாருக்கும்
எம் எஸ் விக்கும் வாழ்க்கையையே அர்ப்பணிக்கிறார் என்று சொல்லலாம். சின்ன சின்ன நினைவுகளைக்
கூடக் குறித்துவைத்துவிடும் வேகம், இந்நூல் முழுக்கத் தெரிகிறது. தவறில்லை, எழுதப்போவது
ஒரே ஒரு சுயசரிதை என்னும்போது இதைத் தவிர்க்கமுடியாது. அதனாலேயே பல குறிப்புகளின் தொகுப்பாகிவிடுகிறது
இப்புத்தகம். உண்மையில் மணிரத்னம் – பரத்வாஜ் ரங்கன் பேட்டி போலத்தான் ஒருவரின் நினைவுகளைப்
பட்டியலிடும் நூல் இருக்கவேண்டும். (தமிழில்: மணிரத்னம் படைப்புகள், கிழக்கு வெளியீடு)
ஆனால் அதற்கெல்லாம் பெரும் உழைப்பும் திட்டமிடலும் வேண்டும்.
பல நினைவுத் தெறிப்புகளுக்கு
நடுவே சில ஆச்சரியங்கள் கிடைக்கின்றன. இளையராஜா 1973லேயே இசையமைத்த பாட்டு; கண்ணதாசனுக்கு
எழுத நேரம் இல்லாததால் அவரைப் போலவே எழுதும் வாலியை வைத்து எழுதப்பட்டு கண்ணதாசன் பெயரில்
வரவிருந்த பாட்டு (பின்னர் வாலி பெயரிலேயே வருகிறது); ஆண்டவன் கட்டளைக்கு முன் அரச
கட்டளை என்னாகும் என்று எழுதி எம்ஜியாரின் கோபத்துக்கு ஆளாகி அந்தப் படத்தில் இவர்
நீக்கப்பட்டு இன்னொரு கவிஞரான முத்துக்கூத்தன் ‘ஆளப் பிறந்தவளே ஆடிவா’ என்றெழுதுவது;
பொன்னெழில் பூத்தது புதுவானில் பாட்டில் இளவேனில் என்று எழுதி, அதைப் பாடும்போது இழவே
நில் என்று வருவதால், நிலவே நில் என்று பஞ்சு அருணாசலம் மாற்றியது – இப்படி ஏகப்பட்ட
ஆச்சரியமான தகவல் குறிப்புகள் கடல் போலக் கிடைக்கின்றன.
கவிஞர் சுரதா இவரைப்
பார்த்து, “அகமுடையார்தானே?” என்று கேட்கிறார். இவர் உட்பிரிவுடன் தன் ஜாதியைச் சொல்கிறார்.
எப்படிக் கண்டுபிடித்தீர்கள் என்ற கேள்விக்கு சுரதா சொல்லும் பதிலைப் புத்தகத்தில்
படிக்கவும். ராகவனே என்று எழுதுங்கள் என்று வைரமுத்து சொல்ல, கோபாலனே என்று எழுதியதை
மாற்றி ராகவனே ரமணா ரகுநாதா என்று எழுதுகிறார் முத்துலிங்கம். ஜானகி என்ற சொல் வருவதால்
எம்ஜியார் பெயரும் வரட்டும் என்ற நோக்கத்தில் ஸ்ரீராமசந்திரா என்று ஒரு வரியில் எழுதினாராம்.
இப்புத்தகத்தின் மிக
முக்கியமான விஷயமாக நான் சொல்ல நினைப்பது: இப்புத்தகத்தில் வரும் ஏகப்பட்ட கவிஞர்கள்
எழுதிய திரைப்பாடல்களின் பட்டியலை. அந்த அளவுக்கு எல்லாக் கவிஞர்கள் மேலும் நல்ல அபிப்பிராயத்துடன்
இருக்கிறார் கவிஞர் முத்துலிங்கம். மருதகாசி, உடுமலை நாராயணக்கவி தொடங்கி இன்றைய யுகபாரதி,
நா.முத்துக்குமார் வரை அனைவரையும் பற்றி, பற்பல பெயர் மறந்துபோன கவிஞர்களைப் பற்றி,
அவர்கள் எழுதிய மறக்கமுடியாத பாடல்கள் பற்றி எழுதிக் குவித்திருக்கிறார். இப்புத்தகத்தில்
உள்ள எல்லாப் பாடல்களையும் அதை எழுதிய கவிஞர்களின் பெயர்களையும் இசையமைப்பாளர்களையும்
மட்டும் தொகுத்து தனியே வைத்தால் பொக்கிஷமாக இருக்கும்.
இளையராஜாவைப் பற்றிய
பல நினைவுகளைச் சொல்லி இருக்கிறார். ராஜா எந்த ஒருவருக்கும் உதவவே இல்லை என்றொரு புரளி
பல காலமாக ஓடிக்கொண்டிருந்தது. பலர் வெளிப்படையாக ராஜா எப்படியெல்லாம் உதவினார் என்று
சொல்லத் தொடங்கியதும் அப்புரளி இப்போது அடங்கிவிட்டது. ராஜா எப்படி எல்லாம் உதவினார்
என்பதற்கு முத்துலிங்கத்தின் புத்தகம் இன்னொரு சாட்சி.
தனித்தமிழ்த்தாகம் (சில
இடங்களில் கமல்காசன் என்றெல்லாம் வருகிறது!) அரசியல் மேம்போக்குத் தன்மை (மோடியின்
பணமதிப்பிழப்பு பற்றி ஒரு வரிவிமர்சனம்!), அரசியலில் பிற்பட்டுப் போன தன்மை என எல்லாம்
அங்கங்கே சிதறல்களாக, எவ்வித ஆழமும் இன்றிக் கண்ணில் படுகின்றன. இவற்றையெலலம் விட்டுவிட்டு,
இதன் தகவல்களுக்காக நிச்சயம் படிக்கலாம்.
பின்குறிப்பு: கவிஞர்
அநியாயத்துக்கு சந்தி வைக்கிறார். ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே என்பதுதான் புத்தகத்தின்
பெயரே. புத்தகத்திலும் பல இடங்களில் தேவையற்ற இடங்களில் சந்தி வருகிறது. ஏனென்று தெரியவில்லை.
ஆனந்தத் தேன்காற்றுத்
தாலாட்டுதே, கவிஞர் முத்துலிங்க, வானதி பதிப்பகம், விலை ரூ 400
விஷ்ணுவிஷாலின் அஜெண்டா என்னவென்று தெரியவில்லை. மிகத் தவறாமல் ஹிந்து மதத்தைச் சீண்டுவதை, குறிப்பாக கிறித்துவ மதத்துக்கு மாறுவதை நேரடியாகவும் மறைமுகமாகவும் தன் படத்தில் நுழைத்துக்கொண்டே இருக்கிறார். இத்தனைக்கும் இவர் சொல்லி படத்தில் காட்சியை வைத்தே ஆகவேண்டிய அளவுக்கு அவர் உயரவும் இல்லை. அப்படியானால் ஒட்டுமொத்த திரைப்படச் சூழலும் எப்படி இருக்கும் என்று யோசித்துக்கொள்ளுங்கள்.
இவர் நடித்த ஜீவா படத்தில் வரும் ஒரு காட்சி பற்றி ஏற்கெனவே எழுதி இருந்தேன். இங்கே வாசிக்கலாம்.
இப்போது ஒரு படம், சிலுக்குவார்ப்பட்டி சிங்கம். 2018ல் வந்திருக்கிறது. ஓவியாவுக்காகப் பார்க்கப் போனால், கதாநாயகி வேறொரு பெண். சரி, பார்ப்போம் என்று பார்த்ததில், கண்ணில் பட்ட ஒரு காட்சி. வீடியோ இணைத்திருக்கிறேன்.
எப்படி நேரடியாக, மறைமுகமாக, பின்னணியாக, உபகாட்சியாக, காமெடியாக, சாதாரணமாக, காதலாக, கண்ணீராக, கோபமாக எப்படியெல்லாம் நுழைக்கிறார்கள் பாருங்கள். எதாவது ஒரு படத்திலாவது ஒரு இஸ்லாமிய கதாபாத்திரமோ கிறித்துவ கதாபாத்திரமோ இப்படி ஒரு வசனம் பேசுவதாக வைத்திருக்கிறார்களா? அப்படி வைத்திருந்தால், அது ஹிந்து மதத்தையும் சேர்த்துப் புறக்கணிக்கும் ஒரு ‘புரட்சி’ப் படமாக இருக்குமாறு பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
டிஃபன் பாக்ஸ்
(படம் பெயர்
லஞ்ச் பாக்ஸ்,
நாங்கள் கிண்டலாக அதை அன்று அப்படிச்
சொன்னோம்) படம்
பார்த்தது இன்றும்
நினைவிருக்கிறது. நினைவிருக்கிறது என்றால்,
வாழ்க்கையில் மறக்காது. குஜராத்தில்
இரவுக் காட்சிக்கு அழைத்துச்
சென்ற பிரதீப்பையும் கூட வந்த நண்பர்களையும்
மருதனையும் அந்த
இரவு முழுக்க
சுற்றியதையும் நிச்சயம் வாழ்நாளில்
மறக்கமுடியாது. படம்
மெல்ல மெல்ல
நகர்ந்தது. முக்கியமான படம்தான்,
ஆனால் அப்போதைய எங்கள்
கொண்டாட்ட சூழலுக்கு ஒட்டவில்லை.
ஆனாலும் பார்த்தோம். சிரித்தோம்.
கலைந்தோம்.
அந்த இயக்குநரின் இரண்டாவது படம் போட்டோகிராஃப். அதே போன்று மெல்ல நகரும் படம். அதேபோன்று நம்பமுடியாத ஒரு சின்ன கதைத் தொடக்கம். அதை நம்பினால் படம் பிடிக்கும். இல்லையென்றால் இதெல்லாம் எப்படிச் சாத்தியம் என்பதற்குள்ளேயே நாம் அலைந்துகொண்டிருப்போம். லஞ்ச்பாக்ஸில் ரொம்ப அலைந்தேன். போட்டோகிராஃபில் அத்தனை இல்லை என்றாலும், நம்பமுடியாத ஒரு கதைக்கருதான்.
ஏன் இந்தக் கதைக்கு ஒரு ஹீரோ முஸ்லிமாக இருக்கிறான்? ஏன் ஒரு ஹிந்துப்பெண்ணை இப்படி விழுந்து விழுந்து ஆனால் வெளியே தெரியாமல் மெல்ல மெல்ல அழுத்தமாகத் துரத்துகிறான்? தற்செயலா? படம் தற்செயல் என்றே சொல்கிறது. ஆனால் என்னால்தான் அந்த யோசனைகளில் இருந்து வெளியேற முடியவில்லை. அந்தப் பெண் எதனால் கோபமே இல்லாமல் இவன் பின்னால் வருகிறாள்? கோபம் இல்லை என்பதுகூடப் போகட்டும். புரிதலின் உச்சமாக இருக்கலாம். ஆனால் ஏன் ஒத்துழைக்கிறாள்? இத்தனைக்கும் அந்தப் பெண்ணின் படிப்பென்ன, அந்தஸ்து என்ன? சரி, இவனிடம் எதைப் பார்த்து மயங்குகிறாள்? சிஏ இண்டர் படிக்க இருக்கும் டாப்பர் பெண்ணுக்கு மயங்க கிடைக்காத வேறு வாய்ப்புகளா இல்லை? ஆண்களா இல்லை? ஆனால் இவனிடம் மயங்குகிறாள். இதை ஏற்றுக்கொண்டுவிட்டால் ஒரு கவிதை காத்திருக்கிறது.
நவாஸுதீன் சித்திக் ஒரு ஏழை முஸ்லிம். அவன் தன் பாட்டிக்காக ஒரு பொய் சொல்கிறான். அப்படியானால் எப்படிப்பட்ட பெண் தனக்குக் கிடைத்திருக்கிறாள் என்று சொல்வான்? ஒரு தற்செயல்தான் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா? எந்தத் தைரியத்தில் அந்தப் பெண்ணிடம் சென்று நடிக்கக் கேட்கிறான்? எதுவுமே ஒட்டவில்லை. மாற்றுத் திரைப்படம் என்பதால் இதை ஏற்றுக்கொண்டு அனுபவத்துக்குள் போ என்கிறார்கள். அந்த அனுபவம் உண்மையில் அட்டகாசமாகவே வந்துள்ளது. பல நுணுக்கமான காட்சிகள். ஆனால் அதன் அடிப்படைதான் நம்பமுடியாததாக இருக்கிறது.
இவர்கள் இருவரும் காதலித்துவிடக்கூடாது என்ற பரிதவிப்பில் பார்த்த முதல் படமாக இதுவே இருக்கும் என நினைக்கிறேன். ஒரு திறந்த முடிவுன் விட்டு வைக்கிறார்கள். அவள் கட்டவுட்டில் இருப்பது தன் படம் இல்லை என்பதைத் தொட்டு, அவனை ஏற்கிறாள் என்றும் சிலர் கொள்ளலாம். ஆனால் அதன் பின்பு வரும் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்கில் பெற்றோர் சம்மதிக்கமாட்டார்கள் என்ற கிளிஷே சினிமா காட்சியின் விளக்கத்துடன் யதார்த்தமாக அவர்கள் பிரிகிறார்கள் என்றே எடுத்துக்கொள்ளலாம். இதுதான் சரியாக வருகிறது.
லஞ்ச் பாக்ஸ் படத்திலும் சரி, இப்படத்திலும் சரி, மிகக் குறிப்பாக ஈர்த்தது, ஒலிப்பதிவின் துல்லியம். அத்தனை அட்டகாசம்.
இன்னும் ஏன் இத்தனை மெல்லமாகப் படம் எடுக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. அவள் யோசிக்கிறாள் என்றால் யோசித்துக்கொண்டே இருக்கிறாள். நடந்து வருகிறாள் என்றால் நடந்துகொண்டே இருக்கிறாள். கடைசியில் கேம்ப கோலா ஃபார்முலாவைச் சொல்லும் ஒரு கிழவர் கதவைத் திறந்தபோது அவருக்கும் நவாஸுதீன் சித்திக்குக்கும் இடையே பத்தடிதான் இருக்கும் என்றாலும், ஐயோ இவர் நடந்து வர 10 நிமிடம் ஆகுமே என்று மனம் அரற்றியது. சட்டென ஒரு எடிட்டிங்கில் அடுத்த காட்சிக்குப் போனபோது அப்பாடி என்றிருந்தது என்றால் அடி எத்தனை பலம் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
மெல்ல நகரும் திரைப்படங்களுக்கு மத்தியில் இத்திரைப்படத்தில் ஒரு நவீனத்தன்மை கூடுதலாகத்தான் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். இத்தனை மெல்ல நகரும் படம், மிக அழுத்தமான கதையொன்றைச் சுற்றாத வரையில், எனக்குத் தாங்காது என்பது மீண்டும் ஒருமுறை எனக்குப் புரிந்தது.
கேசரி (ஹிந்தி) – 21 சீக்கிய சிப்பாய்கள் தங்கள் சரகாரி (Saragarhi) கோட்டையைக் காக்க, எப்படி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பதான் வீரர்களை எதிர்த்துப் போரிட்டு வீர மரணம் அடைந்தார்கள் என்பதைச் சித்தரிக்கும் படம். 21 சிப்பாய்கள் அல்ல, 22 சிப்பாய்கள் என்றொரு கருத்தும் உண்டு. அதையும் படத்தில் உருக்கமான வசனமாகக் காட்டி இருக்கிறார்கள். சரகாரி பற்றி கூகிளில் தேடினால் ஆச்சரியத்தக்க அளவுக்கு விஷயங்கள் கிடைக்கின்றன. ஏற்கெனவே வெப் சீரிஸ் ஒன்றும் வந்திருக்கிறது. 21 சீக்கிய வீரர்கள் கொன்றது 600 முதல் 1000 பதான் வீரர்கள் வரை இருக்கலாம் என்றெல்லாம் தகவல்கள் கிடைத்தாலும், பிரிட்டிஷ் அரசுத் தரப்பின் எண்ணிக்கை குறைவாகவே சொல்கிறது. காவி நிற டர்பனைக் கட்டிக்கொண்டு போரிடுவதாக கேசரி படத்தில் காண்பிக்கப்படுகிறது. பொதுவாக பிரிட்டிஷ் அரசின் வீரர்கள் காக்கி நிற டர்பனையே அணிந்திருப்பார்கள் என்பதால், இப்படி காவி நிற டர்பன் அணிந்து போரிட்டதற்கு ஆதாரம் இல்லை என்று செய்திகள் சொல்கின்றன. ஆனால் அக்காட்சியை மிக முக்கியமான காட்சியாக இயக்குநர் வைத்திருக்கிறார். பிரிட்டிஷ் அரசின் கீழே உள்ளவர்கள்தான் என்றாலும், தாங்கள் போரிடுவது சீக்கியர்களின் வீரத்தையும் தியாகத்தையும் சொல்வதற்காக என்ற எண்ணத்தை உறுதியாகச் சொல்கிறார் இஷார் சிங் என்னும் வீரர். 21 வீரர்களில் ஒருவர் இவர். இவரைச் சுற்றியே கதை நிகழ்கிறது. உண்மையில் இவரைச் சுற்றி இப்படிக் கதை நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள் எவையும் கிடையாது. படத்துக்காக இப்படி வைத்துக்கொண்டிருக்கிறார்கள். வரலாற்றைப் பதிவு செய்த வகையில் முக்கியமான படம்.
ஒரு திரைப்படமாகப் பார்த்தால், பெரிய அலுப்பைத் தரும் படம். சிறுவர்களுக்கான திரைப்படமாகச் சொல்லலாம். 21 வீரர்கள் பத்தாயிரம் பதான் வீரர்களை எதிர்த்துப் போரிடுகிறார்கள் என்ற ஒற்றை வரிக்குள் திரைக்கதையை பார்த்து பார்த்துப் பழகிப் போன விதத்தில் நுழைத்திருக்கிறார்கள். அதே காதல், உறவுகள் பிரிந்திருக்கும் செண்டிமெண்ட் என்று. பொறுமையாகப் பார்ப்பதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. ஒவ்வொரு கொலையையும் விதவிதமாகக் காண்பிக்கிறார்கள். ஒரு திரைப்படத்தில் அதிகம் பேர் கொல்லப்பட்டது இப்படத்தில்கூட இருக்கலாம் என்னுமளவுக்குக் கொலைகள். 21 பேரின் தியாகத்தை பிரிட்டிஷ் அரசு அங்கீகரித்திக்கிறது என்னும் குறிப்போடு நிறைவடைகிறது திரைப்படம்.