சாருஹாசனின் ‘கேள்விக்கு என்ன பதில்’ பேட்டியைப் பார்த்தேன். அனுகூலச் சத்ரு என்று கமல் ரசிகைகள் அலறியதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. 🙂
சாருஹாஸன் ஃபேஸ்புக்கில் எழுத ஆரம்பித்ததும் முதல் சில இடுகைகளைப் பார்த்து, இவர் கொஞ்சம் நல்லா எழுதுறாரே என்று மதி மயங்கி அவரைப் பின்தொடர்ந்தேன். பெரிய தவறுதான், ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்பு என்பதால் அப்போது வயது இரண்டு எனக்குக் குறைவு என்பதால் நேர்ந்துவிட்ட பிழை என யூகிக்கிறேன். போகப் போகத்தான் புரிந்தது, கமல் எழுதும் பத்து வார்த்தைகளில் பத்து புரியாது என்றால், சாருஹாசன் எழுதும் பத்து வார்த்தைகளில் பதினொன்று புரியாதென்பது. அப்படியே ஒரு கும்பிடு போட்டுவிட்டு அவரைப் பின்தொடர்வதை நிறுத்தினேன். பின்னர் ஒரு வார இதழில் (குங்குமமா குமுதமா?!) சாரு ஹாஸன் தொடர் எழுதினார். கொஞ்சம் மிரண்டு போய் சில வாரங்கள் படித்தேன். எடிட்டர்களின் கைவண்ணத்தில் அப்பத்திகள் மிக அழகாகவே வெளிவந்தன. ஹாசன்களின்தமிழ்த்தனம் அதில் இல்லை. சட்டெனப் புரிந்தது.
இந்தப் பின்னணியில் சாரு ஹாஸன் பேட்டி அப்படி இருக்குமோ இப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் பார்த்தேன், மிக எளிமையாக தன் மனதுக்குப் பட்டதை மிக நேரடியாகப் பேசினார். சில அதிர்ச்சி தந்தார். மோடியைப் பற்றி அவர் சொன்னவை, நான் கொஞ்சமும் எதிர்பாராதவை. திராவிடக் கட்சிகளுக்கு அவர் தந்த அறை, மோடியைப் பற்றி அவர் சொன்னதுக்கும் மேலே! பிராமணர் என்பதால் கமல் முதல்வராக முடியாது என்றதும், கமலும் ரஜினியும் சேர்ந்தாலே 10% வாக்குதான் கிடைக்கும் என்றதும் இன்னொரு அதிர்ச்சி. ரஜினி தனியாக வந்தால் முதல்வர் ஆகிவிடுவார், கமலுடன் சேர்ந்தால் 10% வாக்கு மட்டுமே மொத்தமாகக் கிடைக்கும் என்று அவர் சொல்வதாக எனக்குத் தோதாகப் புரிந்துகொண்டேன். 🙂 விஜய்காந்த் அதிமுகவில் சேர்ந்து அதிமுகவைக் கைப்பற்றவேண்டும் என்றதெல்லாம் அரசியல் திரைப்பட வகை.
ரஜினி எதிர் கமல் என்ற கேள்விக்கு, ரஜினியை வணங்குகிறார்கள் மக்கள் என்றார். மிகத் தெளிவாக இரண்டு மூன்று முறை சொன்னார். இதற்கு யாரும் எதிர்பார்க்காத அர்த்தம் ஒன்றை பாண்டே உருவாக்கி, “கமல் அரசியலுக்கு வரணும்னு மக்கள் நினைக்கிறாங்கன்னு நீங்க சொல்றதா புரிஞ்சிக்கலாமா?” என்று கேட்டார். இந்த அர்த்தம் எப்படி பாண்டேவுக்கு வந்தது என்று எனக்கு இன்னும் புரியவில்லை.
கமலா ரஜினியா என்ற கேள்விக்கு கமலின் அண்ணனால் கூட உறுதியாக கமல் என்று சொல்லமுடியவில்லை. இத்தனைக்கும் ஒரே கொள்கை, ஒரே நோக்கம். அப்படியானால் கமலுக்குக் கிடைக்கப்போகும் ஓட்டுகளை எண்ணிக்கொள்ளலாம். 🙂
ரஜினிக்கான ஆதரவு என்பது, ‘திரைப்படம் பார்க்கும் முப்பது சதவீதப் பெண்கள் கமலை விரும்புவதால் அதில் எரிச்சல் படும் 70% ஆண்கள் தந்த ஆதரவு’ என்பது கொஞ்சம் புதிய கருத்துதான் என்றாலும், என்னமோ ரஜினியை நேரடியாக யாருக்கும் பிடிக்காது என்பதாகவும், கமலை விரும்பும் பெண்களை வெறுக்கும் ஆண்களுக்கு மட்டுமே பிடிக்கும் என்ற எண்ணத்தைத் தருவதாகவும் இருந்தது. இதெல்லாம் கமல் இளைஞனாக மேலே எழுந்த காலத்தில் கொஞ்சூண்டுகொஞ்சம் உண்மையாக இருந்திருக்கலாம். கமல் பெரிய நடிகர் என்ற பெயர் பெற்ற காலத்தில் அவரைப் பிடிக்காத, அவர் திரைப்படத்தைக் கண்டாலே அலறி ஓடிய பெண்களே அதிகம். அருகிருந்து கண்ட உண்மை இது. #வெரிஃபைட். 🙂
பிராமணக் குலத்தில் பிறந்ததால் கமலுக்கு வாய்ப்புக் கிடைக்காது என்று சாரு ஹாஸன் சொன்னது உண்மைதான். இதுவும் கமலின் பின்னடைவுக்கு ஒரு காரணம், ஆனால் மிகச்சிறிய காரணம் மட்டுமே. கருணாநிதி ஒருவேளை மோடியை ஆதரித்தால் சகித்துக்கொள்பவர்கள், கமல் மோடியை ஒருவேளை ஆதரித்தால் சரியாக நூலுக்குப் போய்த்தான் நிற்பார்கள். தமிழ்நாட்டின் மரபு அப்படி. அதையே சாரு ஹாஸன் சொன்னார்.
சுவாரஸ்யமான பேட்டி. கமல் அரசியலுக்கு வந்தால் வெல்வார் என்பதை அவர் குடும்பமும் நம்பவில்லை என்பது நல்ல விஷயம். அப்படியே ஆகட்டும்.
பின்குறிப்பு 1: திமுக போராளிகள் இன்னுமா சாரு ஹாஸனை விட்டு வைத்திருக்கிறார்கள்?
பின்குறிப்பு 2: முதல் வாரத்திலேயே தான் எழுத நினைத்திருக்கும் அத்தனையையும் சொல்ல முயன்று, கமல் ஆனந்த விகடனில் எழுதத் தொடங்கியிருக்கும் தொடரை தொடர்ச்சியாக வாசகர்கள் வாசித்தால், கமலுக்குக் கிடைக்கப்போகும் பத்து சதவீத வாக்குகளிலும் பத்து சதவீதம் மட்டுமே கமலுக்குக் கிடைக்கும் என்று யாராவது அவருக்கு எடுத்துச் சொல்வது நல்லது.