பாஜக அதிமுக பாமக கூட்டணிக்கு வரவில்லை என்றால் அது இக்கூட்டணிக்குப் பெரிய பின்னடைவாகவே அமையும். அதிலும் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு தேமுதிக செல்லுமானால் அது இரட்டைப் பின்னடைவாகவே அமையும்.
அதேசமயம் தேமுதிகவின் தற்போதைய நிலை, விஜய்காந்த் உடல்நலமில்லாமல் இருப்பது – இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் அதிகபட்சம் அதற்கு 3 இடங்களே தரமுடியும். போனால் போகிறதென்று 5 இடங்களைத் தரலாம்.
தேமுதிகவின் பலம் என்பது, அதன் எதிரணியை எத்தனை இடங்களில் தோற்கடிக்கமுடியும் என்பதிலேயே உள்ளது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் நின்று பத்து இடங்களில் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளது. தனித்து 20,000 வாக்குகளைப் பெறும் என்றாலும்கூட, எதிரணிக்கு சேதாரம் பலமாக இருக்கும். இதை வைத்து திமுக 7 இடங்களை தேமுதிகவுக்குத் தரலாம். தந்தால் அது சரியான முடிவுதான். ஆனால் வரலாற்றில் சமீப காலங்களில் பொதுவாக கூட்டணிப் பேரங்களை முதலில் ஆரம்பித்து கடைசியில் அதைச் சரியாகக் கோட்டை விடும் கட்சிகளில் உலகளவில் முதன்மை பெறுவது திமுகவாகவே இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
விஜய்காந்த் கட்சி தொடங்கும் முன்பிருந்தே என் யூகம், இவர் இன்னொரு வைகோவாக அமைவார் என்பதாகவே இருந்தது. இன்று வைகோ அதலபாதாளம் போய்விட்ட நிலையில், வைகோ அளவுக்கு விஜய்காந்த் மோசமாக முடியாது என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் மாறி மாறி ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்தே தீரவேண்டிய நிலை இவருக்கும் ஏற்பட்டே தீரும். இதுவரை திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றாலும், எந்நேரத்திலும் எக்கட்சியுடனும் கூட்டணி வைக்கும் வாய்ப்புடனேயே தேமுதிக இருந்தது, இருக்கிறது, இருக்கும்.
2014ல் தமிழ்நாட்டில் அமைந்த பாஜக கூட்டணி மிக முக்கியமான ஒன்று. விஜய்காந்த் மற்றும் அன்புமணி என இருவருக்கும் முதல்வர் பதவி மேல் இருந்த (நியாயமான) ஆசை காரணமாக இக்கூட்டணி தொடராமல் போனது. இக்கூட்டணி தொடர்ந்திருந்தால், கருணாநிதியும் ஜெயலலிதாவும் மறைந்த நேரத்தில் நல்ல ஒரு மாற்றாக அமைந்திருக்கும். பாஜக இல்லாமல் இப்படி ஒரு கூட்டணி அமைந்தாலும் அது மாநில அளவில் முக்கியமான மாற்றாகவே அமையும். ஆனால் தேசியக் கட்சி என்ற ஒன்றில்லாமல் இது அமையாது என்றே நினைக்கிறேன்.