Archive for புத்தகப் பார்வை

பார்பி – சரவணன் சந்திரன்

பார்பி (நாவல்), சரவணன் சந்திரன், கிழக்கு வெளியீடு, ரூ 150

நான் வாசிக்கும், சரவணன் சந்திரனின் இரண்டாவது நாவல். கிழக்கு பதிப்பக வெளியீடாக வெளியாகி இருக்கிறது.

கோவில்பட்டி/திருநெல்வேலியில் வளரும் ஒருவன் இந்திய ஹாக்கி அணியில் இடம்பெறும் கதை என்று ஒருவரியில் சொல்லலாம். ஆனால் இந்த ஒருவரிக்குள் இருக்கும் போராட்டங்கள், அவமானங்கள், வறுமை, பெண்ணுடல் ஈர்ப்பு, சாதிப் பிரச்சினை, பாலியல் தொல்லைகள், அரசு வேலைக்கான அவசியம், உயரிடத்துக்குப் போவதற்காகச் செய்யவேண்டிய கூழைக்கும்பிடுகள் போன்ற பல முனைகளை இந்த ஒரு வரி தட்டைப்படுத்திவிடக்கூடும் என்பதால் அப்படிச் சொல்லாமல் இருப்பதே நல்லது, சரியானது.

பார்பி என்ற ஒரு பொம்மையைத் திருடி அதையே தன் நாவலின் உயிராக மாற்றிக்கொண்டுவிட்டு பின்னர் எந்த ஒன்றையும் அந்த பார்பியுடன் இணைத்துவிடுகிறார் சரவணன் சந்திரன். அதேபோல் மிக சாகவாசமாக நாவலின் நிகழ்வுகளையெல்லாம் பல இடங்களில் ஓடவிட்டு, இடை இடையே ஓடவிட்டு, நம் கவனம் கலையும் நேரத்தில் சட்டென இவரது கோச்களில் யாரேனும் ஒருவர் சொல்லும் கருத்தைக் கொண்டு மைதானத்தில் பிணைத்துவிடுகிறார். இந்த நிகழ்வுகளில்தான் சாதிப் பிரச்சினை முதல் வட இந்திய தென்னிந்திய ஹாக்கி வீரர்களின் பிரிவுகள் வரை அனைத்தையும் விவரிக்கிறார்.

கோவில்பட்டி திருநெல்வேலியில் ஹாக்கி இந்த அளவு முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதைப் படிக்க ஆச்சரியமாக இருந்தது. ஹாக்கி நட்சத்திர வீரர்களின் பெயர்கள் நாவலில் சொல்லப்படும்போது இன்றைய ஹாக்கியின் வீழ்ச்சியை உணரமுடிகிறது.

தன்னிலையில் செல்லும் நாவல் என்பதால் நாவல் முழுக்க சொல்லப்படும் நிகழ்ச்சிகளில் ஒரு உணர்வுபூர்வ பந்தம் இருப்பதை உணரமுடிகிறது. கூடவே எந்த ஒரு பெண்ணையும் அக்கா என்று அழைப்பதும் தன்னைப் பற்றிய பிம்பங்களை நாயகன் கதாபாத்திரம் உருவாக்குவதும் உடனேயே அதை உடைப்பதுமென கோல்போஸ்ட்டை வெகு வேகமாக முன்னேறுகிறார்.

ரோலக்ஸ் வாட்ச் நாவலுக்கும் இந்த நாவலுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம், ரோலக்ஸ் வாட்ச் நாவலில் பல கதை மாந்தர்களின் கதைகளுக்கிடையே ஒரு மைய இழை சரியாக உருவாகிவரவில்லை. பல இடங்களில் சென்றதால் நாவல் பல இழைகளின் தொகுப்புகளில் உருவாக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. பார்பியிலும் அப்படித்தான் என்றாலும் ஒருமை ஒன்று கைகூடி வந்திருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம், நாவலில் சொல்லப்படும் விஷயங்களில் இருக்கும் ஹாக்கி விளையாட்டு தொடர்பான புதுத்தன்மை மற்றும் ஒரு கதாபாத்திரத்தின் வழியாகவே மற்ற அனைவரும் நோக்கப்படும் விதம்.

இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கும் வறுமையும் உணவுக்கான அலைச்சலும் மிக முக்கியமானவை. எந்த ஒரு வறுமைக்காரனின் கொதிப்பும் இதுவாகவே இருக்கும்போது, அங்கிருந்து தொடங்கும் ஒரு விளையாட்டுக்காரரின் வெறி பல மடங்கு அதிகமானதாக இருக்கும். ஏனென்றால் அதற்கான தேவையும் அவசியமும் விளையாட்டுக்காரனுக்கு உள்ளது. இதை நாவல் முழுக்கப் பல இடங்களில் பார்க்கலாம்.

மிக எளிய நாவல். ஒருகட்டத்தில் பெண்ணுடல் மீதான தீரா வேட்கையும் அதற்குச் சமமான, மிடில் க்ளாஸ் வளர்ப்புக்கே உரிய தயக்கமும், மோகமுள் நாவலின் உச்சத்துக்குக் கொண்டு போகுமோ என நினைத்தேன். அப்படித்தான் ஆனது, கூடுதலாக இரண்டு அத்தியாங்களுன். இந்தக் கடைசி இரண்டு மிகச் சிறிய அத்தியாயங்கள் நாவலுக்கு ஓர் அழகியல்தன்மையைக் கொண்டுவருகிறது.

மொத்தத்தில் மிக எளிய அழகிய நாவல். இனி எழுதப் போகும் நாவலில் சரவணன் சந்திரன் மனதில் வைத்துக்கொள்ளவேண்டியது என்று ஒன்றைச் சொல்லவேண்டுமானால், முன்னுரையில் அரவிந்தன் சொன்னதைத்தான்.

ஹரன் பிரசன்னா

ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/9788184938500.html

Share

கோபி ஷங்கரின் மறைக்கப்பட்ட பக்கங்கள் புத்தகம்

மறைக்கப்பட்ட பக்கங்கள், கோபி ஷங்கர், கிழக்கு பதிப்பகம் (சென்னை புத்தகக் கண்காட்சி 2018)

முன்குறிப்பு: இப்புத்தகத்தில் உறவு நிலைகள் வெளிப்படையாக விவரிக்கப்பட்டுள்ளன. எனவே இப்புத்தகம் வயது வந்தவர்களுக்கு மட்டுமானது.

மறைக்கப்பட்ட பக்கங்கள் – உலக வரலாற்றில் பாலும் பாலினமும் என்னும் புத்தகம் கோபி ஷங்கர் என்னும் இண்டர்செக்ஸ் மனிதரால் எழுதப்பட்ட ஒரு புத்தகம். திருநங்கைகள், திருநம்பிகள் போலவே அல்லது அதையும்விடக் கூடுதலாக புறக்கணிக்கப்பட்ட சமூகம் இந்த இடையிலங்க மனிதர்களின் உலகம். அதன் வலிகளையும் புறக்கணிப்புகளையும் உடல்சார் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு போராடி வெல்லத் துடிக்கும் ஒரு இளைஞர் கோபி ஷங்கர்.

ஹிந்து சமய சேவை அமைப்புகளின் கண்காட்சி ஒன்றில் இவரது மறைக்கப்பட்ட பக்கங்கள் என்ற புத்தகத்தை வானதி ஸ்ரீனிவாசன் வெளியிடும்போதுதான் இவரைப் பற்றி முதன்முதலாக அறிந்துகொண்டேன். பின்பு அரவிந்தன் நீலகண்டன் இந்த நூலைச் செம்மைப்படுத்தி வெளியிடவேண்டியதன் அவசியத்தைச் சொன்னார். முதலில் வெளியிடப்பட்டிருந்த மறைக்கப்பட்ட பக்கங்கள் நூல், ஒரு நூல்வடிவமின்றி, அனைத்துக் கட்டுரைகளையும் தொகுத்து அப்படியே அச்சிடப்பட்டிருந்தது. அந்த நூலைச் செம்மைப்படுத்தும் பொறுப்பை நான் எடுத்துக்கொண்டேன். முதலில் தனியே வெளியிடும் எண்ணமே இருந்தது. ஆனால் புத்தகத்தைப் படித்து, எடிட் செய்து முடித்ததும் அது கிழக்கு பதிப்பகம் போன்ற ஒரு பதிப்பகத்தின் வழியே வரவேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். தற்போது, மறைக்கப்பட்ட பக்கங்கள் புத்தகம் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளியாகிறது.

இந்நூலில் ஆண் பெண் பாலினம் தவிர இன்னும் எத்தனை வகையான பாலினங்கள் உள்ளன என்பது பற்றி விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. அவர்களுக்குள்ள தன்மைகள் என்ன, அவர்கள் எப்படி ஒருவரிலிருந்து மற்றவர் வேறுபடுகிறார்கள் என்று விளக்கப்பட்டுள்ளது. பால் மற்றும் பாலியல் ஒருங்கிணைவு (Gender and Sexual orientation) என்பதற்குரிய விளக்கத்தைப் புரிந்துகொண்ட பின்னர்தான் இந்தப் புத்தகத்துக்குள்ளேயே நம்மால் செல்லமுடியும். இதற்குரிய விளக்கத்தின் மூலம்தான் தங்களைப் புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறார் கோபி ஷங்கர். இந்த அடிப்படையைக்கூடப் புரிந்துகொள்ளாமல்தான் இச்சமூகம் உள்ளது என்பதுதான் இந்தப் புத்தகத்தின் அடிப்படைக் கோபம்.

ஆண் பெண் பாலியல் உறவுகள் தாண்டி நிலவும் உறவு நிலைகளைப் பற்றி மிக விரிவாக இந்நூலில் பேசியுள்ளார் கோபி ஷங்கர். ஹோமோ மற்றும் லெஸ்பியன் உறவுகள் தாண்டி, பல்வேறு உறவுநிலைகளை இப்புத்தகம் விளக்குகிறது. அதேபோல் ஹோமோ மற்றும் லெஸ்பியம் உறவுநிலைகள் இந்த உலகத்தில் தொன்றுதொட்ட காலம் முதலே இருந்திருக்கவேண்டும் என்பதை வரலாற்றையும் புராணத்தையும் உதாரணமாகக் கொண்டு எழுதி இருக்கிறார். உலக வரலாற்றின் பாலியல் உறவுகளின் நிலைகளையும், ஆண் பெண் உறவு நீங்கலாகப் பிற உறவுகள் கொண்டிருந்தவர்களின் சமூக நிலையையும் மிக விரிவாக எழுதியுள்ளார் கோபி ஷங்கர்.

Lesbian, Gay, Bisexual, and Transgender (LGBT) குறித்த அனைத்து விவரங்களையும் அவர்களின் பிரச்சினைகளையும் சமூகம் அவர்களைப் புறக்கணிப்பதன் வலியையும் பல்வேறு கட்டுரைகளில் விளக்கி இருக்கிறார் கோபி ஷங்கர். இந்தியா முழுமைக்கும் திருநங்கைகளுக்கு இருந்த இடம், இந்தியப் பண்பாட்டில் அவர்களுக்கு இருந்த மதிப்பு, அதேசமயம் இடைப்பட்ட காலத்தில் அவர்களுக்கு நேர்ந்த இழிவு, இன்று மெல்லத் தெரியும் வெளிச்சம், அது நீடித்துத் தொடருமா என்கிற ஏக்கம் எனப் புத்தகம் பல்வேறு செய்திகளை, நாம் இதுவரை அறிந்திராத பின்னணிகளைப் பட்டியலிடுகிறது. ஆண் பெண் என்ற இரண்டு பாலினங்கள் தாண்டி மூன்றாவது பாலினத்தை படிவங்களில் குறிப்பிடக்கூட உரிமையற்ற நிலையை நீக்கப் போராடும் இடத்தில் இச்சமூகம் உள்ளது.

இதுவரை இதுதொடர்பான இத்தனை விரிவான புத்தகம் தமிழில் வெளிவந்ததில்லை. அந்த வகையில் இப்புத்தகம் ஒரு பெரிய பாய்ச்சல்.

இப்புத்தகத்தின் ஆகப்பெரிய இன்னொரு சாதனை என்று பார்த்தால், அனைத்து வகையான உறவு நிலைகள், பாலியல் நிலைகள் தொடர்பான ஆங்கில வார்த்தைகளுக்கும் தமிழ்வார்த்தை சொல்ல முயல்வது. இது பாராட்டப்படவேண்டியது. தமிழின் செழுமைக்கு இத்தகைய வார்த்தைகள் நிச்சயம் உதவும். அதேபோல் உலக வரலாற்றில் உள்ள LGBT குறித்த தகவல்களைத் தேடிப்பிடித்துத் தொகுத்திருப்பது முக்கியமாகச் சொல்லப்படவேண்டியது.

இந்நூலில் எனக்குள்ள விமர்சனங்கள் என்று பார்த்தால், ஒரு கட்டத்தில் ஆண் பெண் என்ற இரு பாலினத்துக்குள் உள்ள உறவுநிலையைவிட மற்ற உறவுநிலையே மேம்பட்டது என்று தோன்றும் அளவுக்கு இந்நூலில் எழுதப்பட்டுள்ளது போன்ற ஒரு மயக்கம். இது மயக்கம்தான், அப்படி நூல் சொல்லவில்லை, சொல்லக் காரணமும் இல்லை. புறக்கணிக்கப்பட்டதன் வெறுப்பும் எரிச்சலும் இப்படி வெளிப்படுகிறதெனப் புரிந்துகொண்டேன். இன்னொரு பிரச்சினை, திருநங்களைகளுக்குக் கிடைக்கும் வெளிச்சம் கூடத் தங்களுக்குக் கிடைப்பதில்லை என்று இடையிலங்கத்தவர்களின் குற்றச்சாட்டு. உண்மையில் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தே மிகக் குறைந்த அளவே இருப்பார்கள் என்ற நிலையில் இவர்களுக்குள்ளான பிரிவு வேதனை அளிக்கிறது. உண்மையில் இவர்கள் ஒற்றுமையுடன் இதைத் தாண்டத்தான் வேண்டும்.

இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, உலக வரலாற்றைச் சேர்ந்த மனிதர்களின் பெயர்கள் சரியான உச்சரிப்பில் சொல்லப்படவில்லை என்பது இன்னொரு குறை. இதை அடுத்த பதிப்பில் சரி செய்யவேண்டும்.

இப்புத்தகத்தின் தொடக்க பக்கங்கள், பாலினங்களையும் பாலியல் ஒருங்கிணைவையும் பட்டியலிடுபவை. இப்பக்கங்களில் நாம் ஒரு பாடப் புத்தகத்தைப் படிக்கிறோமோ எனத் தோன்றலாம். ஆனால் இப்பக்கங்கள் மிக முக்கியமானவை. தவிர்க்க இயலாதவை. தமிழில் இவையெல்லாம் கிடைக்கவேண்டியது மிக அவசியம். எனவே இவற்றைத் தாண்டித்தான் நாம் இப்பிரச்சினைக்குள்ளும் புத்தகத்துக்குள்ளும் நுழைந்தாகவேண்டும்.

முக்கியமாக நான் நினைத்த ஒரு விஷயம், உலகில் உள்ள எல்லாக் குற்றச்சாட்டுகளையும் ஆதாரமற்ற அவதூறுகளையும்கூட கோபி ஷங்கர் நம்ப முனைகிறாரோ என்பது குறித்து. பொதுவாகவே இதுபோன்ற புத்தகங்கள் தங்களுக்கு ஆதரவான எந்தக் குரலையும் தவிர்க்க முனையாது என்பதைப் புரிந்துகொள்கிறேன். ஆனாலும் ஆதாரமற்ற குரல்களை ஏற்பது தற்சமயத்தில் உதவினாலும் நீண்டகால நோக்கில் அது நமக்கே எதிரானதாக அமையும். இதைப் புரிந்துகொண்டு கோபி ஷங்கர் எதிர்காலத்தில் அனைத்தையும் அணுகுவது அவருக்கு உதவலாம்.

மற்றபடி, இந்தப் புத்தகம் தமிழில் நிகழ்ந்திருக்கும் ஒரு புதிய திறப்பு. அரிய வரவு. முகச்சுளிப்போடும் அருவருப்போடும் நாம் கடந்துசெல்லப் பழக்கப்பட்டிருக்கும் ரத்தமும் சதையுமான மனிதர்களின் ஆவணம் இது. இதைப் புரிந்துகொண்டால்தான் நாம் நம்மைப் புரிந்துகொள்ளமுடியும் என்பதில் உள்ளது இப்புத்தகத்தின் அடிப்படைத் தேவை. கோபி ஷங்கர் போன்றவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பதும் அதையேதான்.

– ஹரன் பிரசன்னா

Share

சென்று வருக 2017

இந்த வருடம் படித்த புத்தகங்கள்

* தடைசெய்யப்பட்ட துக்ளக்

* முஸ்லிம் லீக் ஆர் எஸ் எஸ் சந்திப்பு

* ஒளிர் நிழல் – சுரேஷ் பிரதீப்

* நாயகிகள் நாயகர்கள் – சுரேஷ் பிரதீப்

* பிரேக்கப் குறுங்கதைகள் – அராத்து

* தற்கொலை குறுங்கதைகள் – அராத்து

* உடலென்னும் வெளி (இன்னும் வெளிவரவில்லை.)

* பால், பாலினம். (கோபி ஷங்கரின் நூல்)

* லக்ஷ்மி சரவணக்குமாரின் நாவல் (இன்னும் வெளிவரவில்லை)

* பூனைக்கதை (பா.ராகவனின் நாவல்)

* போகப் புத்தகம்

* இந்தியப் பயணம் (ஜெயமோகன்)

* ஓரிதழ்ப்பூ – அய்யனார் விஸ்வநாத்

* பான்கி மூனின் றுவாண்டா – அகரமுதல்வன்

* உப்புக் கண்க்கு – வித்யா சுப்பிரமணியன் (இன்னும் படித்துமுடிக்கவில்லை!)

* ஆதி சைவர்கள் வரலாறு

* நேதாஜி மர்ம மரணம்

* My father Baliah (Not yet finished)

* சினிமா பற்றிய ஒரு புத்தகம் (இன்னும் வெளிவரவில்லை)

* நரசிம்ம ராவ் – ஜெ.ராம்கி மொழ்பெயர்ப்பில்

* மீன்கள் – தெளிவத்தை ஜோசப்

* குடை நிழல் – தெளிவத்தை ஜோசப்

* ஜெஃப்னா பேக்கரி – வாசு முருகவேல் (இன்னும் முடிக்கவில்லை)

* போரின் மறுபக்கம் – பத்திநாதன்

* எம்டன் செல்வரத்தினம் – சென்னையர் கதைகள்

* கொங்குதேர் வாழ்க்கை – நாஞ்சில் நாடன்

* ரோக்ஸ் வாட்ச் – சரவணன் சந்திரன்

* சார்த்தா – எல். பைரப்பா

* அவன் காட்டை வென்றான்

* நான் ஏன் தலித்துமல்ல – தர்மராஜ்

* ஒருத்திக்கே சொந்தம் – ஜெயலலிதா

* திராவிட மாயை பாகம் 2 – சுப்பு

இன்னும் சில புத்தகங்களைப் பட்டியலிட விட்டுவிட்டேன். மறந்துவிட்டது.

உடனடியாகப் படிக்கவேண்டியவை:

* அஜ்வா – சரவணன் சந்திரன்

* பார்பி – சரவணன் சந்திரன்

* பச்சை நரம்பு – அன்னோஜன்

இதற்கிடையில் 12 வலம் இதழ்கள் கொண்டுவருவதில் என் பங்களிப்பும் உண்டு.

மீதி நேரங்களில் 100 திரைப்படங்களுக்கு மேல் பார்த்திருக்கிறேன்.

இவையெல்லாம் உணவைக் குறைத்ததால் கிடைத்த நேரத்தில் சாத்தியமாகி இருக்கிறது என நினைக்கிறேன்.

இதற்கிடையில் கிழக்கில் வேலையும் பார்த்திருக்கிறேன் என்று லேசாகத் தோன்றவும் செய்கிறது. 🙂

பிப்ரவரி மாதம் என் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. ஆகஸ்ட்டில் மரணமடைந்தார். பேரிழப்பு. இந்த ஐந்து மாதங்களில் அதிகம் படம் பார்க்கவில்லை, புத்தகங்கள் படிக்கவில்லை. இந்த நேரத்திலும் கொஞ்சம் ஆக்டிவாக இருந்திருந்தால்… ஜாக்கிரதை.

Share

கொங்குதேர் வாழ்க்கை – நாஞ்சில் நாடன்

பதிமூன்று கதைகள் அடங்கிய தொகுப்பு. ஒரே மூச்சில் படிக்கத்தக்க புத்தகமே. என்றாலும் நாளொன்றுக்கு இரண்டு மூன்று கதைகள் என நான்கு நாள்களில் படித்தேன்.
 
நாஞ்சில் நாடனின் பிரத்யேகமான மொழியே அனைத்துக் கதைகளின் அச்சாணி. இன்னொருவர் ஒரு சிறுகதையில் இத்தகைய தமிழை, தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தினால் (யாண்டு, ஈங்கு, யாவர் உள்ளிட்ட வெகு பல வார்த்தைகள்) கதைகளில் ஒரு அந்நியத் தன்மை தோன்றிவிடும். நாஞ்சில் நாடன் கதைகளில் அப்படித் தோன்றவில்லை. கூடவே ஒரு இசைத்துவம் தெரிகிறது. கதைகளை வாய்விட்டு வாசிக்கலாம் என்ற அளவுக்கான இசைத்துவம் அது. கூடவே ஒரு வார்த்தை கிடைத்துவிட்டால் அவ்வார்த்தைகளின் இணை வார்த்தைகளையும் அதன் பொருளையும் வரலாற்றையும்கூடத் தொட்டுச் செல்கிறார் நாஞ்சில்நாடன்.
 
எல்லாக் கதைகளுமே நுணுக்கமானவை. பொதுவாகவே நாஞ்சில் நாடனின் கதைகளின் தலைப்பும் கதையும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருப்பவை. கதையின் தலைப்பு கதைக்கான பெரிய வெளியை வைத்திருக்கும். இக்கதைகளின் தொகுப்பிலும் அப்படியே. நுணுக்கம் பிடிபடும் தருணத்தில் சட்டென விரிவு கொள்ளும் கதைகள் அபாரமானவை. பெரும்பாலான கதைகள் அப்படியே. இந்த நுணுக்கம் உடையாவிட்டால் நமக்கு இவை வெற்று விவரணைகாளகவே எஞ்சும். வேறொரு சந்தர்ப்பத்தில் வாசித்தால் மனவிரிவுக்குள் இக்கதைகள் சிக்க நேரலாம்.
 
இத்தொகுப்பில் வயதானவர்கள் குறித்த சித்திரம் ஒன்று உள்ளது. இரண்டு மூன்று கதைகளில் அது பயின்று வருகிறது. ஒரு கதை கல்யாணம் ஆகாத பெண்ணைப் பற்றியது. இன்னொன்று, திருமணம் தடைபடும் ஆணைப் பற்றியது. கொங்குதேர் வாழ்க்கை என்னும் சிறுகதையே இக்கதைகளின் உச்சம். அதேபோல் பரிசில் வாழ்க்கையும் இன்னொரு அட்டகாசமான சிறுகதை. கதைகளில் ஆங்காங்கே தெறிக்கும் நகைச்சுவையும் கோபமும் ஏளனமும் நாஞ்சில் நாடனின் முத்திரைகள். பாம்பு போன்ற உருவகக் கதைகள் எனக்கு எப்போதுமே பிடிக்காதவை. பெருந்தவம் சிறுகதையில் வருவம் ஏழிலைக் கிழங்கு பற்றிய விவரணைகள் அபாரமானவை. இக்கதையின் இறுதி வரியே முக்கியமானது. ஒரு சிறிய விஷயத்தைக் கூட விலாவாரியாக விவரிக்கும் பண்பை இத்தொகுப்பில் உள்ள கதைகளில் காணலாம். சங்ககாலம் தொடங்கி இன்றுவரை உள்ள அத்தனை சாத்தியங்களையும் தொட்டுப் பார்க்கிறார் நாஞ்சில் நாடன். ஒன்றிரண்டு கதைகள் அனுபவம் என்ற அளவுக்கே நம்மைச் சேர்கின்றன.
 
சிறுகதைகளின் பல்வேறு சாத்தியங்களைச் சொல்லும் கதைகள் அடங்கிய தொகுப்பு. மொத்தத்தில் அருமையான தொகுப்பு. நிச்சயம் படிக்கவும். கிண்டிலில் 9 ரூபாய்க்குக் கிடைத்தது. இப்போது விலை 50 ரூ.
 
https://www.amazon.in/Konguther-Vazhkai-Tamil-Naanjil-Nadan-ebook/dp/B06Y45RMMY/ref=sr_1_fkmr0_1?ie=UTF8&qid=1509710941&sr=8-1-fkmr0&keywords=konguther+vaazkkai
 
#கிண்டிலுக்குவாங்கஇயக்கம் 🙂
Share

ரோலக்ஸ் வாட்ச்

சரவணன் சந்திரனின் ரோலக்ஸ் வாட்ச் நாவல் படித்தேன். மிக எளிய வடிவிலான நாவல். முதல் சில நாவல்களில் இந்த உத்தி எளிமையானதும் வசதியானதும். பல்வேறு நிகழ்வுகளை மெல்ல புனைவுக்குள் அமிழ்த்தி பல அத்தியாயங்களில் உலவி சில அத்தியாங்களில் ஒரு தொடர்ச்சியை உருவாக்குவது. இந்த உத்தியைச் சரியாகவே செய்திருக்கிறார் சரவணன் சந்திரன். விறுவிறுவெனப் படிக்க வைக்கும் நடை கைகொடுக்கிறது. பல இடங்களில் சைவமான சாரு நிவேதிதாவைப் படித்தது போன்ற உணர்வு மேலோங்குகிறது. சந்திரன் பாத்திரம் கொள்ளும் உச்சம் மிக நன்றாக வெளிப்பட்டுள்ளது. சந்திரன் பற்றிய நேரடி விவரங்களே இல்லை என்பதுதான் இதில் உள்ள சிறப்பு. இதைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார் சரவணன் சந்திரன்.
 
எனக்கு அலுப்புத் தந்தவை எவை என்று பார்த்தால், எவ்வித ஆழமும் இன்று சிலச்சிலப் பக்கங்களில் விரியும் தொடர்ச்சியற்ற சம்பவங்கள். நாவல் எழுதும் நாளில் என்ன தோன்றுகிறதோ அதை எழுதிவிட்டாரோ என்று எண்ணத்தக்க அளவுக்கு ஏகப்பட்ட சம்பவங்கள். வெகு சில பக்கங்கள் கொண்ட அத்தியாயங்களை கீரனூர் ஜாகிர் ராஜாவின் நாவல்களில் வாசித்திருக்கிறேன். ஆனால் அவற்றுக்கிடையே உள்ள தொடர்பும் அந்தக் கதைகளின் வழியே உருவாகி வரும் ஒட்டுமொத்த சித்திரமும் அபாரமானதாகவும் தவிர்க்கமுடியாத ஒன்றாகவும் இருக்கும். இந்த உணர்வு இந்த நாவலில் கிடைக்கவில்லை. சில சாதிகளைப் பற்றியும் சில கட்சிகளைப் பற்றியும் அந்தச் சாதி என்றும் அந்தக் கட்சி என்றும் சொன்னது ஆச்சரியமாக இருந்தது. நாவலிலுமா இப்பிரச்சினை என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.
 
சரவணன் சந்திரனின் எழுத்து மிக நன்றாக இருப்பது நாவலின் பெரிய ப்ளஸ். தொடர்ந்து பல நாவல்கள் எழுதி முக்கியமான நாவலாசிரியராக வர சகல சாத்தியங்களை இந்நாவல் வெளிப்படுத்துகிறது. சரவணன் சந்திரனுக்கு வாழ்த்துகள்.
 
தமிழ் மகன் இந்நாவலுக்கு எழுதியிருக்கும் முன்னுரையில் உள்ள, சினிமாவில் நாயகர்கள் எடுத்துக்கொண்ட வில்லன்களின் உடைமைகள் பற்றிய குறிப்பு சுவாரஸ்யம்.
 
ரோலக்ஸ் வாட்ச், சரவணன் சந்திரன், உயிர்மை பதிப்பகம்.
Share

அவன் காட்டை வென்றான்

அவன் காட்டை வென்றான் நாவலைப் படித்தேன். 78 பக்கமே உள்ள குறுநாவல். தொடக்கம் முதல் இறுதி வரை நாவலில் விவரிக்கப்பட்டிருப்பவை, ஒரு கிழவனின் பன்றிப் பாசமும், காடும்தான். காட்டுக்குள் வழி தவறிச் செல்லும் சினைப் பன்றியை மீட்கச் செல்லும் கிழவன் காட்டை எப்படிப் புரிந்துகொண்டு அதை வெல்ல யத்தனிக்கிறான் என்பதே ஒட்டுமொத்த கதையும். நாவல் முழுக்க விவரணைகளும் அகக் கேள்விகளும் மட்டுமே. இருவர் பேசிக்கொள்ளும் காட்சி ஒன்றிரண்டு கூட இல்லை. இதனால் நாவல் ஒரு கட்டத்தில் கிழவனுக்கும் இயற்கைக்குமான அக விசாரணை அளவுக்குச் செல்கிறது. தேவைக்காக தன் ஆசைப் பன்றியையே கிழவன் கொல்லும் காட்சி நான் கொஞ்சமும் எதிர்பாராதது. அவன் காட்டை வென்றான் என்ற பெயர் இருந்தாலும், காட்டை வென்ற கிழவன் இந்த ஒரு சந்தர்ப்பத்தில் முழுமையான தோல்வியையே அடைகிறான். அவன் நினைத்தது எதுவுமே நடக்கவில்லை. காட்டை நீங்கள் எத்தனை புரிந்துகொண்டாலும் அது தனக்கான ரகசியத்தை எப்போதும் பாதுகாத்து வைத்திருக்கும் என்றும் அதற்கு இயற்கையும் பரிபூரணமாக ஒத்துழைக்கும் என்றும் இப்பிரதியைப் புரிந்துகொள்ளலாம். தெலுங்கிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்று யூகிக்கிறேன். மிகச் சரளமான மொழிபெயர்ப்பு. மிகச் சில வார்த்தைகள் (ரண வாயு, களேபரம் என்று இறந்த உடலைச் சொல்வது போன்றவை) தவிர, வாசிப்பனுவத்தைப் பாழ் செய்யும் அந்நிய வார்த்தைகள் இல்லவே இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம், நாவல் முழுக்க பல இடங்களில் ஆசிரியர் கூற்றாக கடவுள் நம்பிக்கையைப் பற்றியும் மகாபாரதத்தின் மாந்தர்கள் பற்றியும் வந்துகொண்டே இருக்கிறது. இனி வரும் காலங்களில் இது சாத்தியமா எனத் தெரியவில்லை. அப்படியே வந்தாலும் அது இலக்கியப் பெருமை பெறுமா என்பது பெரிய கேள்வி.

33958622

அவன் காட்டை வென்றான், கேசவ ரெட்டி, தமிழில்: எத்திராஜுலு, விலை ரூ 25.

Share

ஒருத்திக்கே சொந்தம், தடை செய்யப்பட்ட துக்ளக்

இந்த வருடத்தில் முதலில் வாசித்த கதை – ஒருத்திக்கே சொந்தம். ஜெயலலிதா எழுதியது. இதை நாவல் என்று சொல்வது நாவல் கோட்பாடுகளுக்கு எள்ளு இறைப்பதற்கு ஒப்பானது என்பதால் கதை என்கிறேன். அடுத்த பஸ் ஐந்து நிமிடத்தில் வருவதற்குள் நிறுத்தத்தில் காத்திருக்கும் சக பெண்ணுக்குக் கதையைச் சொல்லி முடிக்கும் வேகத்தில் ஜெயலலிதா இக்கதையைச் சொல்லி இருக்கிறார். 1960களில் உள்ள திரைக்கதைகளை நகலெடுத்து எழுதப்பட்ட கதை.
oruthi_3101048h
இதை 60களில் ஜெமினிகணேசனை ஹீரோவாக வைத்து படமாக எடுத்திருந்தால் இன்னுமொரு சூப்பர்ஹிட் உணர்ச்சிகர காவியம் தமிழகத்துக்குக் கிடைத்திருக்கும். இதன் முடிவுக்காக சிலரால் புரட்சிகர சினிமா என்று போற்றப்பட்டிருக்கும் என்பதோடு, இரண்டு மனைவி கலாசாரத்தைப் புகுத்துகிறாரா என்று பலரால் தோரணமும் கட்டப்பட்டிருக்கும். இதை ஏன் ஜெயலலிதா இப்படி எழுதினார் என்பதை ஒட்டி ஜெயலலிதாவின் பின்னாளைய அரசியல் வாழ்க்கைக்கான அடிப்படைகளும் விவாதிக்கப்பட்டிருக்கும். நாவலாக வந்துவிட்டதால் இந்நாளைய தமிழர் மரபுக்கு இணங்க பெரும்பாலானோர் இதை வாசிக்கவே இல்லை. குடும்ப நாவல் இந்த மாதம் இதை வெளியிட்டதால் இதைப் படிக்க முடிந்தது. இது போக இன்னும் ஒரு நாவல் ஜெயலலிதா எழுதி இருக்கிறார் போல. அதையும் வாசிக்கவேண்டும். இந்த நாவலைப் படிக்கும்போது ஜெயலலிதாவை நினைத்து ஏனோ வருத்தமாக இருந்தது.
 
 
இன்று புத்தகக் கண்காட்சிக்கு கொஞ்சம் தாமதமாகச் செல்லலாம் என்ற எண்ணத்தில் ‘தடை செய்யப்பட்ட துக்ளக்’ நூலைக் கையில் எடுத்தது தவறாகப் போய்விட்டது!
Jpeg

Jpeg

 
துக்ளக் சோவை இன்னும் மறக்கமுடியவில்லை. இவரது நினைவுக்காக அல்லயன்ஸ் பதிப்பகத்தில் ‘தடை செய்யப்பட்ட துக்ளக்’ நூலை இரண்டு நாளுக்கு முன்னர் வாங்கினேன். விலை ரூ 120. பொக்கிஷம் என்ற க்ளிஷேவை இதற்குச் சொல்லலாம். பொக்கிஷம். கருணாநிதி மற்றும் எம்ஜியாரைத் துவைத்து எடுத்திருக்கிறார். 71ல் ஈவெரா ராமரை செருப்பால் அடித்தது போன்ற போஸ்டரை வெளியிட்டதற்காக தடைசெய்யப்பட்ட துக்ளக் இதழ் மற்றும் அதை ஒட்டிய விவகாரங்களும்; 1985ல் பி.எச். பாண்டியன் சட்டசபையில் ரகுமான் கானிடம் ‘தன்மையாகப்’ பேசியதை துக்ளக் இதழில் வெளியிட்டு (என நினைக்கிறேன்) உரிமைப் பிரச்சினைக்கு ஆளான பிரச்சினை மற்றும் அதை ஒட்டிய விவகாரங்களையும் முழுமையாக இந்தப் புத்தகத்தில் வாசிக்கலாம். அதுவும் கிட்டத்தட்ட துக்ளக் வடிவமைப்பில். பல இடங்களில் சோவைப் பற்றிய நினைவுகள் என்னைக் கலங்கடித்துவிட்டன. என்னவெல்லாம் செய்திருக்கிறார். 15.7.85 அன்று சோ துக்ளக்கில் எழுதியிருக்கும் தலையங்கத்தில்தான் எத்தனை தெளிவு, என்ன துணிவு. வாய்ப்பே இல்லை. அதன் கடைசி வரி, “என்ன நடந்தாலும் சரி, ஆனது ஆகட்டும், நானும் பார்க்கிறேன்.”
 
சோவின் கடைசி காலங்களில் அவரது வேகம் மிகவும் மட்டுப்பட்டுவிட்டது என்பதையும் ஜெயலலிதாவை அவர் தீவிரமாக ஆதரித்தார் என்பதையும் ‘தடை செய்யப்பட்ட துக்ளக்’ இதழைப் படிக்கும்போது புரிந்துகொள்ளமுடிகிறது. ஜெயலலிதா மீது வைக்கப்பட்டும் பல குற்றச்சாட்டுகளுக்குத் தொடக்கப்புள்ளி எம்ஜியார் என்பதை இப்புத்தகம் பின்னணியில் உங்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும். நெடுஞ்செழியன், பி.எச். பாண்டியன் போன்றவர்களுக்கு எதிர்விதத்தில் நேர் செய்யும் விதமாக வருகிறார்கள் ‘வணிக ஒற்றுமை’ பத்திரிகை ஆசிரியர் பால்ராஜும், பாளை சண்முகமும்.
 
இந்நூலில் உள்ள ஒன்றரைப் பக்க நாளேடு ஓர் உச்சம். தலைவர்களின் தீபாவளி வாழ்த்து கற்பனை அதகளம். கடவுளைக் கற்பித்த்வன் முட்டாள், காட்டுமிராண்டி என்று ஈவெராவின் சிலைக்குக் கீழ் உள்ள வாசகங்களை ஒட்டிய பிரச்சினைக்கு பதில் கூறும் முகமாக எழுதப்பட்ட கட்டுரையில், சென்னை ஆர்ச் பிஷப் பூஜ்யர் ஸ்ரீ அருளப்பாவின் கருத்தைச் சரியாகச் சேர்த்திருப்பது அட்டகாசமான சோ-த்தனம். ஐ லவ் சோ. ஐ மிஸ் ஹிம். 🙁
Share

காலம் 50வது இதழ்

காலம் 50 வது இதழ். ஒரு சிற்றிதழ், அதிலும் தீவிரமான சிற்றிதழ், 50வது இதழ் என்னும் குறிப்பிடத்தக்க சாதனையைச் செய்வது நிச்சயம் பாராட்டப்படவேண்டிய ஒன்று. யாரோ ஒருவரின் அர்ப்பணிப்பும் தியாகமும் இன்றி இச்சாதனை சாத்தியமே இல்லை. இந்த ஒருவருக்குப் பின்னால் ஒவ்வொரு காலகட்டத்திலும் பலர் நிச்சயம் உதவி இருப்பார்கள். அவர்களும் நினைவில் நிறுத்தப்படவேண்டியவர்களே. செல்வம் என்ற பெயரே எனக்கு காலம் செல்வம் என்றுதான் பரிட்சயம். காலம் இதழைத் தொடர்ந்து கொண்டு வரும் காலம் செல்வம் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

காலம் இதழ் 50 – நிச்சயம் வாசிக்கவேண்டிய இதழ். 176 பக்கங்களில் 150 ரூபாய்க்கு வெளியாகி இருக்கும் இந்த இதழைத் தவற விட்டுவிடாதீர்கள்.

மரிய சேவியர் அடிகளாரின் பேட்டி முக்கியமான ஒன்று. என் கொள்கைச் சாய்வுகளில் வைத்துப் பார்த்தால், என் நண்பர்கள் இதில் கற்கவேண்டியது அதிகம் உள்ளது என்றே சொல்வேன். கிறித்துவம் எப்படி மக்களுடன் இயங்கி கலையினூடாக மக்களைத் தன் வசமாக்குகிறது என்பதை இதில் பார்க்கலாம். என் கொள்கைக்கு எதிர்ச்சார்பு கொண்டவர்கள் இக்கருத்தை நிச்சயம் எதிர்ப்பார்கள். அவர்களுக்கும் இப்பேட்டி ஒரு பொக்கிஷமே.

ஐயர் ஒரு அரிய வகை மனிதர் கட்டுரை – பத்மநாப ஐயருக்கு செய்யப்பட்டிருக்கும் மரியாதை.

தீரன் நௌஷாத்தின் கட்டுரை பல விஷயங்களை வெளிப்படையாகப் பேசுகிறது. பலருக்கு இக்குறிப்புகள் பின்னாட்களில் உதவலாம். 🙂

காயா – ஷோபா சக்தியின் சிறுகதை. இன்றைய காலங்களில் மிகக் காத்திரமான சிறுகதைகளில் எழுதுபவர்களில் முதன்மையானவர் ஷோபா சக்தி. அக்கதைகளின் வரிசையில் உள்ள கதை அல்ல இது. இது வேறு ஒரு வகையான கதை. இக்கதையை வாசித்ததும் எனக்கு மனரீதியாக ஏற்பட்ட பாதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல. அன்று இரவு முழுவதும் இக்கதை என் நினைவில் சுற்றிக்கொண்டே இருந்தது. மிக தொந்தரவு செய்யும் கதை. இத்தொகுப்பின் சிறந்த படைப்பு இது என்பதே என் தனிப்பட்ட ரசனை.

நான் கிரிக்கெட் கோஷ்டிக்கு கேப்டன் ஆன வரலாறு என்ற ஒரு சிறுகதையை அசோகமித்திரன் அவரது நினைவிடுக்குகளில் இருந்து தேடி எழுதி இருக்கிறார்.

அமெரிக்க கடற்படையில் அன்னபூரணி அம்மாள் என்னும் கட்டுரை, அன்னபூரணி என்னும் கப்பலைப் பற்றிய ஆய்வுக்கட்டுரை. 1930ல் வல்வெட்டித்துறையில் செய்யப்பட்ட கப்பல் இது. மிக முக்கியமான கட்டுரை.

பொன்னையா கருணாகரமூர்த்தியின் Donner Wetter கதை, இரண்டு மனிதர்களின் அனுபவங்களை அவர்களுக்கிடையேயான கிண்டல்களைப் படம்பிடிக்கிறது. கதை முழுக்க ஒரு மெல்லிய புன்னகையும் இரு மனிதர்களின் ஈகோவும் பிணைந்து வருகின்றன.

திரைப்பட விழாக்கள் – அன்றும் இன்றும் என்ற கட்டுரை சொர்ணவேல் எழுதியது. பல தகவல்களைத் தரும் முக்கியமான கட்டுரை.

நாஞ்சில் நாடனின் ‘கூற்றம் குதித்தல்’ கட்டுரை வழக்கம்போல நாஞ்சில் நாடனின் தமிழ்த்திறமையை பறைசாற்றுவது.

சிறில் அலெக்ஸின் தீண்டுமை கட்டுரை, தொடுதல் பற்றிய அறிவியல் உண்மைகளை முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கிறது. மிக நல்ல கட்டுரை.

இவை போக இன்னும் சில கதைகளும் (எம் கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழவன்) கட்டுரைகளும் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் கதைகளும் பல கவிதைகளும் இத்தொகுப்பில் உள்ளன.

காலம் 50 வது இதழ் சென்னை புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு அரங்கு எண் 635 மற்றும் அந்திமழை அரங்கு எண் 299லும் கிடைக்கிறது.

Share