Archive for ஹரன் பிரசன்னா

Navarathri 2025 – Neo India

ஜிஎஸ்டி தொடர்பான சீர்திருத்தங்களைப் பெரிய அளவில் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல இந்தியா முழுமைக்கும் பாஜக திணறிய நிலையிலும், அமெரிக்கா தொடர்ச்சியாக இந்தியாவுக்குக் கொடுத்து வரும் நெருக்கடியால் இந்தியப் பொருளாதார நிலைமை என்ன ஆகுமோ என்று எதிர்க்கட்சிகள் பயமுறுத்தி வந்த நிலையிலும், இவை இரண்டையும் எதிர்கொள்ளும் விதமாக மோடி இன்று தொலைக்காட்சியில் தோன்றி மக்களிடையே பேசி இருக்கிறார்.

இந்தியா முழுமைக்கும் ஜிஎஸ்டி குறைப்பு தரப் போகிற பயனைத் தெளிவாகப் புரிய வைத்திருக்கிறார்.

அமெரிக்கா பற்றி நேரடியாக எதுவும் பேசாவிட்டாலும் இந்தியா தன்னைத்தானே பொருளாதார ரீதியாகக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையைச் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

இந்தியப் பொருட்களைப் பயன்படுத்துவது பற்றிக் குறிப்பாக பேசியிருக்கிறார். இதனால் அனைவரும் இந்தியப் பொருள்களை வாங்குகிறார்களோ இல்லையோ, இந்தியப் பொருளாதாரம் இன்குளுசிவ் ஆக தன்னைத் தானே தேற்றிக் கொள்கிறதோ இல்லையோ, ஆனால் ஒன்று முக்கியமாக நடக்கும். அது இந்திய அளவில் அனைவருக்கும் ஒரு தைரியத்தை கொடுக்கும். உலக அளவில் இந்தியாவின் பொருளாதார இன்க்ளூசிவ்நெஸ் குறித்துப் பேசப்படும்.

அனைவரும் இல்லாவிட்டாலும் பலர் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஏற்ற வகையில் சுதேசிப் பொருட்களை வாங்க இயன்றவரை ஆர்வம் காட்டினால், (இதன் பொருள் முழுமையாக விதேசிப் பொருள்களைப் புறக்கணிப்பதல்ல, அது இயலாது என்பது எல்லோருக்கும் தெரியும்) அது உண்மையிலேயே இந்தியப் பொருளாதாரத்திற்கு பயனுள்ளதாகவும் அமையும்.

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு பேசி இருக்கிறார் பிரதமர்.

ஏன் மோடி போன்ற ஒரு தலைவர் தேவை என்பதை இந்த நேரத்தில் தொலைக்காட்சியில் தோன்றிப் பேசியதன் மூலம் மீண்டும் ஒருமுறை நமக்கு உணர்த்தி இருக்கிறார் மோடி.

நவராத்திரியில் நயோ இந்தியா பிரகாசமாகத் தொடங்கட்டும்.

Share

Mura Malayalam Movie

Mura (M)

பார்த்து பார்த்துப் புளித்துப் போன ஒரு கதை. துரோகம். இருபது வருடங்களுக்கு முன்பு இப்படி ஒரு மேக்கிங் பார்த்திருந்தால் கொஞ்சம் புதியதாகத் தோன்றியிருக்குமோ என்னவோ. ஆனால் இப்போது இந்தப் படத்தின் மேக்கிங் ஆயிரம் மலையாளத் திரைப்படங்களில் பார்த்துவிட்டு அலுத்துப் போன ஒன்றாகிவிட்டது. அதாவது, பேசிக்கொண்டே யதார்த்தத்துக்கு அருகில் இருப்பது. (தமிழில் இன்னும் இதில் 10% கூடச் சாத்தியப்படவில்லை என்பது தனிக்கதை.) முதல் முப்பது நிமிடங்கள் கதைக்குள் வராமல் என்னவோ பேசி பேசிச் சுற்றி அடிக்கிறார்கள். பின்புலத்தைக் கட்டமைக்கிறார்கள். முப்பதாவது நிமிடத்தில் இருந்து படம் கொஞ்சம் விறுவிறுப்பாகிறது. பின்னர் துரோகம், துரத்தல், கொலை என நீள்கிறது.

ஆனாலும் படத்தை முழுமையாகப் பார்க்க முடிந்தது. எதனால்? அந்த நான்கு நண்பர்களின் வெள்ளந்தியான முகம் மற்றும் நடிப்பால். வெள்ளந்தி என்பதால் நல்லவர்கள் என நின்னைத்துவிட வேண்டாம். கொட்டேஷன் எடுத்துக் கொலையும் கொள்ளையும் செய்பவர்கள்.

Spoilers ahead.

பொதுவாகப் பல மலையாளப் படங்களில் தமிழகர்களைத் துரோகிகளாக்குவார்கள். (நாம் தமிழ்த் திரைப்படங்களில் மலையாளிகளுக்குச் செய்வதைவிட இது குறைவே!) ஆனால் இந்தப் படத்தில்? இன்னும் கூட நம்பமுடியவில்லை. அந்த அளவுக்கு இரண்டு தமிழ்த் திருடர்களை உயரத்தில் கொண்டு போய் வைத்துவிட்டார்கள். இந்த ஆறு திருடர்களுக்கு இடையேயான இளம் நட்புக்காக இந்தப் படத்தைப் பார்க்கலாம். சுமாரான படமே என்றாலும், ஏனோ எனக்குப் பிடித்திருந்தது.

Share

Some Malayalam and Kannada Movies

பெருமானி (M) – சுமார். ஹீரோ ஹீரோயின் யதார்த்த காதல் மற்றும் வினய் ஃபோர்ட் வரும் காட்சிகள் அருமை. மற்ற காட்சிகள், நம்ம ஊர் ந முத்துசாமி வகையறா போன்ற அபத்த நாடகம். கடைசி அரை மணி நேரம் கொஞ்சம் சிரிப்பு. ஆனால் முதல் ஒரு மணி நேரம் பெரிய அறுவை.

தீரன் (M) – குப்பை.

Shodha (K) – கன்னட வெப் சீரிஸ். அய்யன மனே சீரியலை முழுமையாகப் பார்க்க முடியவில்லை. அத்தனை ஸ்லோ. இது கொஞ்சம் ஓகே. ஏனென்றால் ஒரு எபிசோட் 18 நிமிடங்கள்தான். இயக்குநர் பவன்குமார் இதில் ஹீரோ. என்ன கொடுமை என்றால், புதிய பறவை படத்தை அப்படியே எடுத்து வைத்திருக்கிறார்கள்!

Pariwar (M) – பொறுமையைச் சோதிக்கும் படம். ஆதே சமயம், பல‌ காட்சிகள் அருமை. பல இடங்களில் நாராணீன்டெ மூனாண்மக்கள் படம் நினைவுக்கு வருகிறது. நடிகர்களின் நடிப்பை நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம்.

Share

Athaikku Maranamillai

அத்தைக்கு மரணமில்லை – சீர்ஷேந்து முகோபாத்யாய் எழுதிய நாவல். தமிழில் மொழிபெயர்த்தவர் தி.அ.ஸ்ரீனிவாஸன். காலச்சுவடு வெளியீடு.

நல்ல மொழிபெயர்ப்பு. சுவாரஸ்யமான நாவல். சரியாகச் சொல்லவேண்டுமென்றால், குறு நாவல்.

விறுவிறுப்பான நாவல் என்றும் சேர்த்துச் சொல்லவேண்டும். மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த பெண்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைச் சொல்ல முயலும் நாவல். என்றாலும், இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த நாயகியின் பார்வையில்தான் முழு நாவலும் பார்க்கப்படவேண்டும் என்பது என் பார்வை.

அத்தையின் ஆவி சொல்வதெல்லாம், எம்விவியின் காது நாவலின் உத்தியை நினைவூட்டினாலும், சுவாரஸ்யமாகவும், சில இடங்களில் அட்டகாசமாகவும் இருக்கின்றன. ஆனால் ஆவி சொல்லாது என்று எடுத்துக்கொண்டால், ஏன் இந்த நாவலை இரண்டாம் தலைமுறைப் பெண்ணான சோமலதாவின் பார்வையில் பார்க்கவேண்டும் என்பது புரியும்.

ஒரு பெரிய குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட ஒரு பெண்ணின் ஏக்கம், தாகம், வெறி, வெற்றி, காமம், அதிகாரம் என எல்லாவற்றுக்கும் விடை கிடைப்பது, ஆவியின் குரலை சோமலதாவின் குரலாகப் பார்க்கும்போதுதான்.

கடைசி அத்தியாயம், ஒரு பிராயச்சித்தம். சோமலதாவின் பிராயச்சித்தம். குற்ற உணர்வின் மீதான பிராயச்சித்தம்.

நேரம் இருப்பவர்கள் வாசித்துப் பாருங்கள். விலை 125 ரூபாய்தான்.

ஃபோன் மூலம் வாங்க, 81480 66645

பின்குறிப்பு: ஆங்கில நாவலில் வரும் ஒரு பெயர் போஷோன். ஆனால் அதைத் தமிழில் வசந்தா என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி வைப்பது சரியா என்று தெரியவில்லை. தமிழில் வாசிப்பதற்கு வசந்தா சட்டென்று ஒட்டிக்கொண்டதும் உண்மைதான். இதைப் பற்றிய குறிப்பும் நாவலில் இல்லை. ஒருவேளை நான்தான் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறானோ என்னவோ.

Update

‘அத்தைக்கு மரணமில்லை’ நூல் தொடர்பாக நான் நேற்று எழுதிய குறிப்புக்கு, அந்த நூலின் மொழிபெயர்ப்பாளர் தி.அ.ஸ்ரீனிவாசன் இந்தக் குறிப்பை எனக்கு வாட்ஸப்பில் அனுப்பி இருக்கிறார். அவர் அனுமதியுடன் இங்கே பகிர்ந்துகொள்கிறேன். நன்றி.

//ஹரன் பிரசன்னா, வணக்கம்.‌ நான் தி.அ ஸ்ரீனிவாஸன். அத்தைக்கு மரணமில்லை புத்தகம் பற்றிய உங்கள் முகநூல் பதிவை நண்பரொருவர் எனக்கு அனுப்பியிருந்தார். நன்றி. போஷோனை ஏன் வசந்தா என்று தமிழ்ப்படுத்தினேன் என்ற உங்கள் சந்தேகத்திற்கு: அந்தப் பெண் வசந்தகாலத்தில் பிறந்ததால் அப்பெயரை இட்டோம் என்ற வரி கதையிலேயே இடம்பெற்றுள்ளது. வங்கமொழியில் அகரமும் வகரமும் எழுத்துக்கள் உண்டே தவிர ஓசை முறையே ஒகரமும் பகரமும்தான். எனவே வசந்தா என்பது பொஷோன்(தா) ஆனது. தமிழில் நான் அதை வசந்தா ஆக்கினேன். வங்க ஒலிப்புமுறையிலேயே பெயர்ச்சொற்களைத் தமிழில் தரவேண்டும் என்றால், ரவீந்திரர் ரொபீந்த்ரோ வாகவும் விவேகானந்தர் பிபேகானோந்தோவாகவும் விபின்சந்த்ர பாலர் பிபின்சந்தரோ பாலராகவும் ஆகிவிடுவார். பாரதி ஓரிடத்தில் போஸ் என்பதை வசு என்று எழுதிய நினைவு இருக்கிறது. வங்கக் குடும்பப் பெயர்களான பந்தோபாத்யாயா, போஸ் போன்றவற்றை‌ மட்டும்‌ பெரும்வழக்கு கருதி நாம் அப்படியே பயின்றுவருகிறோம். எனது விளக்கம் உங்களுக்கு உடன்பாடாக அமையும் என்று நம்புகிறேன். நன்றிகள்.//

Share

Hypocrisy of dog lovers

நாயைக் கொல்ல வேண்டும் என்று சொல்பவன் ஃபாசிஸ்ட். காட்டுமிராண்டி. யூதர்களைக் கொல்லச் சொன்ன ஹிட்லரைப் போன்றவன். கையில் கத்தியுடன் திரியும் மதவாதி. பக்கத்து வீட்டுக் குழந்தையை கொல்லச் சொல்பவனும் நாயைக் கொல்லச் சொல்பவனும் ஒனறு. பூனைக்கு உணவளிக்கப் பிச்சை எடுக்கும் கருணைவாதிகளின் குரல்கள் ஃபாசிஸ்ட்டுகளால் அமுக்கப்படுகின்றன. சாருவின் அதிரடி அறச்சீற்றக் கட்டுரை!

நாய்க்கு மட்டும்தான் கருணை. மற்ற எந்த உயிரையும் கொன்று பதமாகச் சமைத்து ருசித்துச் சாப்பிடலாம். அதில்‌ தவறில்லை. ஆனால், தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள வழி தெரியாமல், அரசு கைவிட்டுவிட்ட நிலையில், நாயைக் கொல்லச் சொல்லிப் பாதிக்கப்பட்டவர்கள் சொன்னால் அவர்கள் ஃபாசிஸ்டுகள்.

நாயைக் கொல்லாமல் வேறு தீர்வுகள் இருந்தால் நிச்சயம் யாரும் நாயைக் கொல்லச் சொல்லப் போவதில்லை. ஆனால் எத்தனையோ தீர்வுகள் இருந்தும் அத்தனை உயிரினங்களையும் கொன்று ரசித்து உண்ணும் மனிதர்கள், நாய்க் கொலையைப் பற்றிப் பேசத் தகுதியற்றவர்கள்.

நாயைக் கொல் என்று வாய் வார்த்தையில் செல்பவனை, தினம் தினம் ஒவ்வொரு உயிரினத்தையும் கொன்று தின்று கொண்டிருப்பவரோ அல்லது இவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமல் இருப்பவர்களோ பேசலாமா?

பின்குறிப்பு: தெரு நாயைக் கொல்வதில் எனக்கும் வருத்தம் இருக்கிறது. நான் அந்தத் தீர்வை ஏற்கவும் இல்லை. அதே சமயம் தெரு நாய்கள் பெருக்கம் கட்டுப்படுத்த வேண்டும். தெரு நாய்களின் உயிரை விட மனிதர்களின் உயிர் முக்கியமானது. தெரு நாய்கள் கடிக்காமல் இருக்குமானால் அதை ஏன் வெறுக்கப் போகிறார்கள்? நாய்களை வீட்டில் வைத்து வளருங்கள். இல்லை என்றால் அமைதியாக இருங்கள்.

Share

Trending Tamil Movie

Trending – மிரட்டலான தமிழ்ப்படம். தவறவிடக்கூடாத வகையறா. குறைந்த செலவில், பெரும்பாலும் ஒரே வீட்டில், மொத்தமே 5 நடிகர்களுக்குள் தொடக்க நொடி முதல் இறுதி வரை பரபரப்பு. எமோஷனல் சைகலாஜிகல் திரில்லர். உண்மையில் எப்படி வகைப்படுத்துவது என்பது கடினம். சில இடங்கள் குரூரமான உளவியல். இப்படி எல்லாம் நடக்குமா என்கிற நம்பகத்தன்மை அற்ற ஒன்றை ஆதாரமாகக் கொண்டு அதன் மேல் விளையாடி விட்டார்கள். தமிழில் இது போன்று வந்ததில்லை. ஏதேனும் வெளிநாட்டுத் திரைப்படத்தின் நகலோ என்கிற சந்தேகம் வரும் அளவுக்கு உணர்ச்சி ரீதியாக ஆடி இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் எது உண்மை எது விளையாட்டு என்கிற சந்தேகமும், அதுக்காக இவ்வளவா என்கிற கேள்வி தரும் எரிச்சலும் இப்படத்திற்கான வெற்றிச் சான்றுகள். ஏனென்றால் நாமே இந்த விளையாட்டின் லைக் மற்றும் வ்யூஸ் பலியாடுகள்தான். இந்தப் படம் இந்த இயக்கங்களின் உண்மையான கதை என்றால் இந்த இயக்குநர் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர்.

சில லாஜிக் பிழைகள் இருக்கின்றன. நாயகி குழந்தை உண்டாவது போல் காட்டுவது, ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக ஹீரோவே சொல்லிவிட்டு, கருவுற்றதற்காகக் கோபப்படுவது போன்றவை.

டார்க் விளையாட்டு ரசிகர்களுக்கு இந்தப் படம் விருந்து.

Share

Lokah Chapter 1 Chandra Review

லோகா சாப்டர் 1‌ சந்திரா (M) – மலையாளிகளுக்கு என்று எப்படித்தான் கதை கிடைக்கிறதோ‌, அசத்தி விட்டார்கள் என்று சொல்ல ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் பாருங்கள், இது படு குப்பை.

இடைவேளை வரை அத்தனை மோசமில்லை. குறிப்பாக நஸ்லேனும் அவர் நண்பர்களும் அடிக்கும் லூட்டியும், கல்யாணி யாரென்று தெரிந்த பிறகு நஸ்லேன் பேசும் வசனங்களும் தியேட்டரையே குலுங்க வைக்கின்றன. நீண்ட நாட்கள் கழித்து, தொடர்ந்து வாய் விட்டுச் சிரித்தேன். ஆனால் டொவினோ கால்‌ வைத்ததும் படம் குப்பை ஆகிவிட்டது.

ஒட்டுமொத்தமாகவே மிகவும் சுமார்தான். மின்னல் முரளியில் இருந்த ஆத்மார்த்தமும் மக்கள் நன்மைக்காகப் போராடுவதும் இதில் வலுவாக வெளிப்படவில்லை.

இந்தப் படத்தில் காண்பிக்கும் பல குறியீடுகளை வைத்துக்கொண்டு அப்படி இப்படிப் புரிந்து கொள்ள வேண்டும், யக்‌ஷி கதைகளின் தொன்மம் அது இது என்றெல்லாம் கதை சொல்வார்கள். அது எல்லாமே உண்மையாக இருந்தாலும் ஒரு படமாக இது குப்பை என்பதில் மாற்றம் இல்லை. அதுவும் தமிழர்கள் தியேட்டரில் பார்த்தால் வரும்போது சொட்டு ரத்தம் இல்லாமல்தான் வெளியே வருவார்கள். அதிலும் கடைசி ஒரு மணி நேரம் எழுந்து ஓடி விடலாமா என்றாகிவிட்டது.

வில்லனுக்கு எதிராக நாயகி பிரமாண்டமாக நிற்க வேண்டும் அல்லவா? அது எதுவும் இதில் வரவே இல்லை.

அழகான கல்யாணியை ஏன் இப்படிக் காண்பித்து வெறுப்பை உண்டாக்கினார்கள் என்று தெரியவில்லை. பார்த்தால் நஸ்லேனுக்காகப் பார்க்கவும். மற்ற எதற்காகவும் பார்க்கவே தேவையில்லை.

இதில் இது சாப்டர் 1 மட்டும்தானாம்! இன்னும்‌ எத்தனை‌ சாப்டர்களோ! செத்தோம்.

வில்லனாக வருபவர் கௌடா என்று சொல்கிறார்கள். ஆனால் தமிழ் பேசுகிறார். அவரது அம்மாவும் பார்க்க பிராமணப் பெண் போல் இருக்கிறார். ஆனால் பிராமணர் என்று எங்கேயும் வெளிப்படையாகக் காட்டப்படவில்லை. ஏன் இந்தக் குழப்பம் என்று தெரியவில்லை.

Share

Timmana Mottegalu Review

திம்மன மொட்டகளு (K) – நவீன திரைப்பட உலகில், ஓ டி டி வந்த பிறகு, திரைப்பட வர்த்தகம் முற்றிலும் மாறிப்போன பிறகு, மொத்தமாக அழிந்து கொண்டிருக்கும் ஒரு வகை, அவார்ட் வகைத் திரைப்படங்கள். இந்த விருது வகைத் திரைப்படங்கள் எடுப்பதற்கு என்று பலர் இருந்தார்கள். இன்று அவர்கள் அத்தனை பேரும் கிட்டத்தட்ட அருகிக் கொண்டிருக்கிறார்கள். 

மெல்ல நகரும் படத்தை மலையாளத்தில் அவ்வப்போது பார்க்க முடிகிறது என்றாலும், தமிழில் சமீபத்தில் இதைப் போன்ற ஒரு திரைப்படம் எப்போது வந்தது என்பது எனக்கு நினைவுக்கு வரவில்லை. பாலு மகேந்திரா, ஜெயபாரதி போன்றவர்கள் எல்லாம் இந்த வகையில் எடுப்பார்கள். மணிகண்டனின் கடைசி‌ விவசாயி கொஞ்சம் இந்த வகை.

இப்படி ஒரு திரைப்படம் திம்மன மொட்டகளு. வனவாசி திம்மன் பணத் தேவைக்காக, கருநாகக் கூட்டையும் அதன் முட்டைகளையும் ஓர் ஆய்வாளருக்குக் காட்டிக் கொடுப்பதுதான் கதை. 

இயற்கையும் மனிதர்களும் இயற்கைச் சுழற்சியும் எப்படி ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து இருக்கின்றன என்றும், அதை நாம் கெடுக்கக் கூடாது என்றும் மீண்டும் மீண்டும், மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். சாவடிக்கிறார்கள்.

முதலில் வரும் ஒரு பிராமணர் வனவாசிகளை இரக்கமின்றி வேலை வாங்குவது போல் காட்டினாலும், அவரை வைத்து ஏன் இயற்கை மற்றும் இயற்கைச் சுழற்சி முக்கியம் என்பதைச் சொல்ல வைத்திருக்கிறார்கள். அதற்காக அறிவியலுக்குப் புறம்பான படமாகவும் சொல்லிவிட முடியாது. 

வனவாசிகளின் நல்ல மனசை சொல்கிறேன் என்று என்னவோ சொல்ல வந்து எதையோ சொல்லி இருக்கிறார்கள்.

ரொம்ப சுமார் வகையிலான திரைப்படம். படத்தில் பேசப்படும் கன்னடத்துக்காகப் பார்க்கலாம். வனவாசிகளின் வாழ்க்கையில் கடவுளும் விலங்குத் தெய்வங்கள் பற்றிய நம்பிக்கையும் பயமும் எந்த அளவுக்கு உறைந்திருக்கின்றன என்பதை எந்தவித திருகுத்தனமும் இல்லாமல் காட்டியதற்காகப் பாராட்டி வைக்கலாம்.

Share