Archive for ஹரன் பிரசன்னா

Pathimoonaavathu maiyavaadi

தமிழில் கிறித்துவத்தை இப்படி வெளிப்படையாக விமர்சிக்கும் நாவல்கள் குறைவு, இது அவற்றில் உச்சமாக இருக்கும் என நினைக்கிறேன். பங்குத் தந்தைகளும் கன்னியாஸ்திரிகளும் புரட்டு செய்வதாகவோ அல்லது அவர்கள் நிஜமாகவே செய்யும் அனைத்து விதமான புரட்டுகளுமோ இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது. படிக்கவே அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

ஒரு சிறுவன் வயதுக்கு வரும் நாவல் என்று இதைக் கொண்டாலும், அதைப் பின்னணியாக மட்டுமே பார்க்கவேண்டி இருக்கிறது. மணிரத்னம் தன் படங்களில் பெரிய பரப்பைப் பின்னணியாக வைத்துக்கொண்டு அதில் காதலை மட்டும் சொல்லிக்கொண்டிருப்பார். ஆனால் தர்மன் வயதுக்கு வரும் ஒரு விடலையின் பரப்பைப் பின்னணியாக வைத்துக்கொண்டு அதைவிட பெரிய களத்தை நாவலில் சொல்லி இருக்கிறார். கன்னியாஸ்திரிகளுடன் உறவு, பெண்களுடன் உறவு, ஏமாற்று என பாதர்களை தேவைக்கும் அதிகமாகவே சோதித்துவிட்டார் தருமன். சில இடங்களில் இவை அத்துமீறுகின்றன என்பதையும் குறிப்பிடவேண்டும். குறிப்பாக, எந்த எந்தக் காயை வாங்குவார்கள் என்பதும், ஆணி அடிக்கவேண்டும் என்று கொச்சையாகப் பேசுவதும். இவை ரசக்குறைவு. தவித்திருக்கலாம்.

நாவலின் குறைகள் என்று பார்த்தால் பலவற்றைச் சொல்லலாம். முதல் குறை, அனைத்துப் பெண்களும் கருத்தமுத்துவைப் பார்த்த உடனே படுக்கைக்கு அழைப்பது. இத்தனைக்கு அவன் சிறிய பையன். கொடுமை. இதிலும் மிக மோசமான பாத்திரப் படைப்பு ஜெஸ்ஸி. தன் தாயை அவள் எதற்காக வெறுக்கிறாளோ அதையே அவளும் செய்கிறாள். பின்னராவது அதைப் புரிந்துகொண்டு அவள் தாயை ஏற்றுக்கொண்டிருப்பது போல் சித்தரித்திருக்க இருக்கவேண்டும். அப்படிச் செய்யாததால், ஜெஸ்ஸி கதாபாத்திரம் மிக மோசமான பாத்திரமாகத் தேங்கிவிட்டது. அதிலும் திருமணத்துக்குப் பிறகும் கருத்தமுத்துவுடன் உறவு, குழந்தை பிறந்தபிறகும் முத்தம் என்பதெல்லாம் கொஞ்சம் அதீதம். பிற குறைகள் — பல கதாபத்திரங்கள் அப்படி அப்படியே தேங்கி நிற்பது, நாவல் திடீர் திடீரென அறுந்து எங்கெல்லாமோ போவது, கடைசிச் சில பக்கங்கள் வேகமாகச் செல்வது, மீண்டும் மீண்டும் ஒரே போன்ற பாலியல் பிறழ்வுகளே கதைகளாக வருவது.

நிறுவனமயப்படுத்தப்பட்ட கிறித்துவத்துக்குள் இருக்கும் ஊழலை முன்வைப்பதே நாவலின் நோக்கம் என்றாலும், கன்னியாஸ்திரிகளின் தன்னலமற்ற தொண்டையும் இந்த நாவல் சொல்கிறது. குறிப்பாக, தொழுநோயாளிகளுக்கான மருத்துவம் குறித்த பக்கங்கள்.

மையவாடியைச் சுற்றி வரும் அத்தியாயங்கள் எல்லாமே அருமை. இந்த ஒன்றில் மட்டுமே தொடக்கம், மையம், முடிவு எல்லாமே ஒரே சீராக வெளிப்பட்டிருக்கிறது.

இறுதியில் வரும் கம்யூனிஸ்ட் ஒருவனின் சிந்தனை, இன்றைய ஹிந்துத்துவச் சிந்தனை போலத் தோன்றியது எனக்கு.

இத்தனையிலும் ஒன்றைக் குறிப்பிடவேண்டும். மிக எளிதாக கருத்தமுத்துவை ஹிந்துச் சிந்தனை கொண்டவனாகக் காட்டி இருக்கும் வாய்ப்பு இருந்தும், முற்போக்காகக் காட்டி இருக்கிறார் தர்மன். எனவே அவரது நோக்கம் ஹிந்து எதிர் கிறித்துவம் என்று நிற்பதல்ல, மாறாக, அவரை உறுத்திய கிறித்துவ மடங்களுக்குள் நிலவும் பாரபட்சங்களை முன்வைப்பதே என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

தைரியமான நாவல்தான். இது உருவாக்கும் வித்தியாசமான உலகுக்காக நாவலை நிச்சயம் வாசிக்கலாம்.

புத்தகத்தை வாங்க https://www.swasambooks.com/

Share

Chennai book fair 2026 final day

நேற்று புத்தகக் கண்காட்சி வேலையெல்லாம் முடிந்து இரவு 10:30க்குக் கிளம்பும்போது கண்காட்சி வாசலில் காத்திருந்த ஒருவர் பைக்கில் ஏறிக்கொண்டு, பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு எலக்ட்ரிக் டிரைன் ஸ்டேஷனில் இறக்கி விடச் சொன்னார். கிண்டி வரை பேசிக்கொண்டே வந்தார். அவரே பேச ஆரம்பித்தார். யாரிடமாவது இதையெல்லாம் சொல்ல மாட்டோமா என்கிற ஏக்கம் அவர் குரலில் தெரிந்தது. அவர் பெயரும் ஊரும் வேண்டாம். கான்ஸ்டபிளாக இருக்கிறார். வயது 36. வரும் 23ஆம் தேதி மோடி வருவதை ஒட்டிய பாதுகாப்புக்காக சென்னைக்கு வந்திருக்கிறார். நல்ல படிப்பு படித்துவிட்டு, சிவில் தொழிலில் நல்ல வேலையிலும் இருந்துவிட்டு, நுழைவுத் தேர்வுக்குப் படித்து, பாஸாகி கான்ஸ்டபிளாக மாறியிருக்கிறார். எட்டு வருடம் வேலை செய்து அவர் இப்போது பெறும் சம்பளம் 34,000 என்று சொன்னார். எனக்கு அதிர்ச்சி தாங்கவில்லை. இத்தனை குறைவாகவா பணம் வருகிறது என்று கேட்டேன். இத்தனைக்கும் இரண்டு கழகங்களும் போலீசைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்களே என்று கேட்டபோது அவர் சொன்னார், போலீஸ் என்பது ஆளுங்கட்சியின் அடிமை மற்றும் அடியாள், அடிமைக்கும் அடியாளுக்கும் யாரும் அதிகப் பணம் தர மாட்டார்கள் என்றார். எனக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. இன்ஜினியரிங் தொழிலிலேயே இருந்திருந்தால் இந்நேரம் எவ்வளவோ சம்பளம் வாங்கி எப்படி எல்லாமோ மரியாதையாக இருந்திருப்பேன், இங்கே எந்த மரியாதையும் இல்லை, குறிப்பாக புத்தகம் படிக்கிறவனக்கு எந்த மரியாதையும் கிடையாது என்றார். கிண்டியில் இறங்கிக் கொண்டு நன்றி சொல்லிவிட்டுப் போனார்.

ஒரே ஒரு நொடி மட்டுமே அவர் முகத்தைப் பார்த்தேன். பாவமாக இருந்தது.

Share

Chennai Book Fair 2026

இந்த முறை புத்தகக் கண்காட்சியில் கடந்த நான்கு நாள்களாகக் கண்ணில் பட்டவையும் அவை தொடர்பாக மனதில் தோன்றியவையும்.

* வழக்கம்போல முதல் வரிசைக் கடைகளில் மட்டுமே பெரும் கூட்டம். மற்ற கடைகளில் ஒப்பீட்டளவில் கூட்டம் குறைவு. வரிசைகளை மாற்றி மாற்றி டிக்கெட் கொடுத்தாலும், மக்கள் என்னவோ தொடக்க ஸ்டாலில் இருந்து பார்ப்பதைத்தான் விரும்புகிறார்கள். இது தொடர்பாக இன்னும் சீரியஸாக பபாஸி யோசிப்பது நலம்.

* நான்கு ஸ்டால்கள் எடுத்தாலும் கூட, முதல் வரிசையில் அரங்கு இல்லாவிட்டால் விற்பனை ஒப்பீட்டளவில் குறையவே செய்யும்.

* இந்த முறை தமிழ்ப் புத்தகங்களைவிட ஆங்கிலப் புத்தக அரங்குகளில் அதிகம் கூட்டம் தென்படுவது போன்ற ஒரு பிரமை.

* தொடர்ச்சியாக மாவட்டம்தோறும் நடத்தும் புத்தகக் கண்காட்சிகளால் நிச்சயம் சென்னைப் புத்தகக் கண்காட்சியின் விற்பனை ஒட்டுமொத்த அளவில் குறைந்திருக்கிறது. ஆனாலும் சென்னைப் புத்தகக் கண்காட்சியின் மீதான மக்களின் ஆர்வம் கூடுதலாகவே இருக்கிறது. இந்திய அளவில் அதிக அளவில் மக்கள் புத்தகம் வாங்க வரும் புத்தகக் கண்காட்சிகளில் இது முக்கியமான ஒன்றாகவே இருக்கிறது.

* பிரிண்ட் ஆன் டிமாண்ட் தொழில்நுட்பம் ஒட்டுமொத்த பதிப்பு உலகத்தையே மாற்றிப் போட்டிருக்கிறது. இதற்கேற்றாற் போல் திட்டமிடாவிட்டால் கடினம்.

* பதிப்பகம் ஒரு பிராண்டாக நிலைபெறாவிட்டால் பதிப்பகமாகப் பெரிய சவாலைச் சந்திக்கவேண்டி இருக்கும். இப்படி நிலைபெற வைப்பது அத்தனை எளிதல்ல.

* எழுத்தாளரையே ஒரு வெற்றிகரமான பிராண்டாகக் கொண்டிருக்கும் பதிப்பகங்கள் பிழைத்துக் கொள்ளும். ஆனால் அந்த எழுத்தாளர் அதே பிராண்டாக, நிலை பிறழாத ஒருவராக இருக்கவேண்டும்.

* ஃபேஸ்புக்கில் வரும் லைக்கில் ஆயிரத்தில் ஒரு பங்கு விற்றால் கூட ஒவ்வொரு புத்தகமும் ஆயிரம் விற்கும்.

* சோஷியல் மீடியா என்ற ஒன்று இல்லாவிட்டால் புத்தகங்களை இத்தனை எளிதாகப் பிரபலப்படுத்த முடியாது. அதே சமயம் சோஷியல் மீடியா என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் புத்தக வாசிப்பும் விற்பனையும் கூடுதலாக இருந்திருக்கும். ஒருவகையில் இது வரமும் சாபமும்.

* புத்தக விமர்சனங்களை அதிகமாக்குவதன் மூலம் மட்டுமே புத்தகம் குறித்தான தொடர் கவனிப்பைக் கொண்டு வர முடியும். தொடக்க கால ப்ரொமோஷன்கள் அந்தக் காலத்துக்கு உதவுமே ஒழிய, தொடர் கவனத்தைக் கொண்டு வராது. இன்றிருக்கும் ஆகப் பெரிய சவாலே இதுதான்.

* புத்தகம் எழுதியவர் எழுத்தாளரல்ல. எழுத்தாளர் என்பது ஒரு நிலை. ஒரே ஒரு புத்தகம் எழுதியவர் முக்கியமான எழுத்தாளராகவும், பல புத்தகங்கள் எழுதி இருந்தாலும் அவர் எழுத்தாளர் என்ற நிலையை அடையாமல் இருக்கும் வாய்ப்பு உள்ள சூழல் இது. தன்னை எழுத்தாளன் என்று நினைக்கும் கர்வமே, திறமையே ஒருவரை எழுத்தாளராக்கும்.

Share

Chennai book fair 2026 preparation

நான்கு மாத காலம் எப்படிப் போனது என்றே தெரியவில்லை. செப்டம்பர் 1 அன்று தொடங்கிய ஓட்டம். அனைத்துப் புத்தகங்களும் முதல் நாளே புத்தகக் கண்காட்சியில் கிடைக்க நாங்கள் (எடி ட்டோரியல் டீம், ஃப்ரீலேன்ஸ் உதவி எடிட்டர்கள், லே அவுட், அட்டை வடிவமைப்பாளர்கள், ஓவியர்கள், பிரிண்ட்டர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக எழுத்தாளர்கள்) பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. உயிரைக் கொடுத்து என்பார்களே, அது போன்ற வேலை, பேய் வேலை.

ஒரு மாதத்தில் குறைந்தது பத்து படங்கள் பார்க்கும் நான், இந்த நான்கு மாதங்களில் பார்த்தது இரண்டே படங்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நேரம் அல்ல விஷயம், மூளை புத்தகக் கண்காட்சியைத் தவிர எதிலும் செல்லவில்லை! சுற்றி நடக்கும் மிகவும் பரபரப்பான அரசியல் நகர்வுகள் தவிர, பல செய்திகள் கூட கவனத்துக்குள் செல்லவில்லை.

இன்று நாங்கள் திட்டமிட்ட அனைத்துப் புத்தகங்களும் (ஒன்றே ஒன்று நீங்கலாக, அது பிப்ரவரியில் வரும், ஸாரி எழுத்தாளர் சார்) முதல் நாளான நாளை முதல் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் என்னும்போது வரும் சந்தோஷமும் பரவசமும் நிம்மதியும் அனுபவித்தால்தான் புரியும்.

புத்தகங்களில் உள்ள குறைகள், விடுபடல்கள், செய்யப்படவேண்டிய மேம்படுத்தல்கள் உங்கள் கண்ணில் முதலில் படலாம். எங்களுக்கும் படுகிறது. ஆனால் இதற்குப் பின்னால் உள்ள உழைப்பு உண்மையானது. உழைப்பில் குறை இல்லை. இதற்குக் காரணமான ஒவ்வொருவருக்கும் என் நன்றி. இதைப் பொதுவாகப் புத்தகக் கண்காட்சியின் முடிவில் சொல்வதுதான் வழக்கம். ஆனால் இந்த முறை முதலிலேயே சொல்கிறேன்.

எந்த ஓர் உழைப்பும் அர்ப்பணிப்பும் வீண் போகாது. இது வேத சத்தியம். எனவே இதற்கான பலன் நிச்சயம் இந்தப் புத்தகக் கண்காட்சியில் தெரியும்.

நான் செய்த வேலைகளை விட அதிகம் செய்தவர்கள், மேலே நான் சொன்ன எங்கள் குழு. அவர்கள் இல்லையென்றால் ஒரு புத்தகம் கூட வந்திருக்காது. அனைத்துப் பெருமைகளும் அவர்களுக்கு மட்டுமே.

எழுத்தாள நண்பர்களும், பிற நண்பர்களும் இந்த வீடியோவை உங்கள் பதிவில் வெளியிட்டு உதவுங்கள்.

தங்கள் புத்தகங்களைத் தாங்களே மார்க்கெட்டிங் செய்வதா என்று நினைப்பதில் தவறில்லை. அதேசமயம், இன்றைய உலகத்தை எண்ணி, தகவலாகவாவது சொல்லுங்கள். நாம் மார்க்கெட் செய்வது புத்தகத்தைத்தான் என்னும் பெருமிதத்தோடு செய்யுங்கள்.

நண்பர்களே, புத்தகங்களை வாங்குங்கள். பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் வாங்கிப் பரிசளியுங்கள். புத்தக விற்பனையே இந்தச் செயல்பாடு அனைத்திற்கும் அடிப்படை.

புத்தகக் கண்காட்சியில் சந்திப்போம்.

Share

Reeta Compound

மதுரையில் ஜெய்ஹிந்த்புரத்தில் ரீட்டா காம்பவுண்டில் நாங்கள் குடியிருந்தோம். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன்னால். அந்த இடத்தைத் தேடி இப்போது சென்றபோது, அந்தத் தெரு அப்படியே இருந்தது. அந்த காம்பவுண்டும் கூட அப்படியேதான் இருந்தது.

அதற்கு எதிரே இருந்த ஒரு வீட்டின் முகப்பு பால்கனியில் ஓவல் சைசில் ஒரு பெரிய துளை இருக்கும். அங்கே அமர்ந்துதான் அன்றைய இளைஞரான அண்ணன் ஒருவர்  — எம்எஸ்வியின் தீவிர ரசிகர் — மன்னிக்க மாட்டாயா உன் மனமிரங்கி என்ற பாடலைப் போட்டுக் கொண்டே இருப்பார். போதும் போதும் என்று இரண்டு குரலில் யேசுதாஸ் பாடுவது மனப்பாடமாகிவிட்டது. அவர் வீட்டில் எப்போதும் எம்எஸ்வியின் பாடல்கள்தான் ஒலிக்கும். ஒன்றிரண்டு தடவை அவரது ஸ்கூட்டரில் என்னை குருகுலம் பள்ளியிலும் அவர் ட்ராப் செய்திருக்கிறார்.

அந்த ஓவல்சைஸ் பால்கனி வீட்டைக் கண்டுபிடித்து அதற்கு எதிரே இருந்த ரீட்டா காம்பவுண்டைப் பார்த்தபோது, காம்பவுண்டு என்ற பெயரிலான அந்தச் சிறிய முடுக்கு போன்ற சந்தில் அம்மிக்கல்லும் குழவியும் தோன்றி, அம்மா அரைத்துக்கொண்டு இருப்பது போன்ற பிம்பமும், பத்துக்கு பத்து ஒரே அறை மட்டுமே கொண்ட வீட்டுக்குள் அப்பா அமர்ந்து ரேடியோவில் சிந்து பைரவியின் பாடலை ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பது போன்ற பிரமையும் பரவ, ஒரு கணம் விக்கித்து நின்றேன். கண்களில் எட்டிப் பார்த்த கண்ணீர்த் துளியைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன். இப்போது எழுதும் போது கூட அதே உணர்வு.

அந்தத் தெருவில் இருந்த சிறிய முருகன் கோவில் வாசலில் நின்றுதான் கந்த சஷ்டிக் கவசத்தை விடாமல் பாடுவேன். சஷ்டிக்கு 36 முறை பாடினால் நல்லது என்று ஒருதடவை அம்மா சொல்ல, ஒரு துண்டை மட்டும் கட்டிக் கொண்டு கோவில் முன்னால் நின்று 36 தடவை பாடினேன்.

கார்த்திகை அன்று சகோதரிகளுக்கு ஆனை அடை செய்து கொடுப்பது நல்லது என்று அம்மா ஸ்டவ்வில் ஆனை அடை சுட்டுத் தந்து, பக்கத்தில் இருந்த ரமணி அத்தை விட்டுக்குக் கொடுத்துவிட்டு வரச்சொன்னது, மதியமானால் அம்மாவுக்கு அடிகுழாயில் நீர் அடித்துக் கொடுக்க சுரேஷ் பாவா வருவது, முருகன் தியேட்டரில் செங்கமலைத் தீவு, அன்னை பூமி போன்ற கணக்கற்ற படங்கள் பார்க்க ஓடியது எல்லாம் என் நினைவில் வந்து போயின.

இன்று அந்த ரீட்டா காம்பண்டு இல்லை. முருகன் தியேட்டர் இல்லை. அன்று இருந்தவர்கள் யாருமே இல்லை. அப்பாவும் பக்கத்து வீட்டு மாமாக்களும் அமர்ந்து அரட்டை அடித்த அந்த ஒற்றைச் சந்து மட்டும் அப்படியே இருக்கிறது.

எதிர்வீட்டில் பால்கனியில் இருந்து எட்டிப்பார்த்த ஓர் இளைஞரும் யுவதியும், நாங்க இங்கதான் பிறந்து வளந்தோம், ரீட்டா காம்பவுண்டுன்ற பேரையே கேள்விப்பட்டது இல்லை என்றார்கள். அவர்களுக்கு வயது அதிகபட்சம் 30 இருக்கலாம். நீங்கள் பிறப்பதற்கு 10 வருடங்களுக்கு முன்னாலேயே நான் இங்கே இருந்தேன் என்று சொல்லவும், அவரது அம்மா வந்து எட்டிப் பார்த்து, ஆமாம் அந்த பெண் பெயர் ரீட்டா, அவர் பெயரில்தான் அந்த காம்பவுண்டு இருந்தது, இப்போது அவர்கள் பக்கத்து தெருவில் இருக்கிறார்கள், இந்த இடத்தை விற்றுவிட்டார்கள் என்றார்.

எத்தனை எத்தனையோ மாற்றங்கள். அம்மாவும் இல்லை, அப்பாவும் இல்லை, அந்த காம்பவுண்டு மட்டும் அப்படியே இருப்பதில் என்னவோ ஒரு மகிழ்ச்சி.

Share

Flying Abiram

ஒரு விநோதமான கனவு.

நான் என் பையனை அவனது காலேஜுக்கு வானில் பறக்கும் ராட்சத பலூனில் டிராப் செய்கிறேன். இந்தக் கனவு ஏற்கெனவே ஒரு முறை வந்திருக்கிறது. மறந்துவிட்டது. நேற்றுமுன்தினம் மீண்டும்.

ராட்ச பலூனில் ஒரு ஸ்டேஷனில் அபிராம் ஏறிக் கொள்கிறான். அது சென்னைதான். நான் ஏறவில்லை. அஞ்சுகிறேன். அவனைப் பார்த்துப் போய்விட்டு வா என்கிறேன். ஒரு பக்கக் கயிற்றை நான் பிடித்துக் கொள்கிறேன். வானத்தில் பறக்கிறது ராட்சத பலூன். மறுநாள் அதேபோல் அவன் போகத் தயாராகிறான். குமார் வருகிறார்(ன்). என் மனைவியின் சித்தப்பா என்றாலும் எனக்கும் அவனுக்கும் 2 வயசுதான் வித்தியாசம். ஒன்றாக திருநெல்வேலியில் கிரிக்கெட் விளையாண்டவர்கள். அவனும் அபிராமை அன்று வழியனுப்ப வருகிறான்.

அபிராம் பலூனில் ஏறிக்கொள்ள, நான் ஏறப் பயப்பட, அபிராம் குமாரை வந்து பார்க்கச் சொல்ல, குமாரும் அதில் ஏறிக்கொள்கிறேன். சென்னை முழுக்கப் பறந்து வண்டலூர் தாண்டிப் போகும் என்கிறான் அபிராம். நான் மீண்டும் ஒரு பக்கக் கயிற்றைப் பிடித்துக் கொள்கிறேன். அபிராம் ராட்சத பலூனில் பறந்தவாறு, கடல் தெரிகிறது என்கிறான், ஸ்பென்ஸர் ப்ளாஸா என்கிறான். பலூன் அப்படியே ஓரிடத்தில் நிற்க, ஒரு பெரிய கட்டடத்தின் மொட்டை மாடியில் அபிராம் இறங்கிக் கொள்கிறான்.

காலேஜ் போகலயாடா என்று நான் கேட்க, ஒரு திரைப்பட ப்ரொமோஷன் என்கிறான். குமாரைக் காணவில்லை. ஆனால் நான் அங்கே இருக்கிறேன். எப்படி வந்தேன் என்பது கனவுக் கடவுளுக்கே வெளிச்சம். அங்கே பல முன்னணி இளைய நடிகர்கள் தங்கள் படங்களை ப்ரொமோட் செய்ய வரிசையாக நிற்கிறார்கள். அபிராம் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறான். நான் எடுக்க மாட்டேன் என்கிறேன். எடுப்பா என்கிறான்.

கனவு கலைந்தது.

பின்குறிப்பு: இந்தக் கனவும் மறந்துவிடக் கூடாது என்று, இரவு 2 மணி வாக்கில் என் மனைவியை எழுப்பி, “கனவு வந்தது, அபிராம் ராட்சத பலூனில் காலேஜுக்குப் பறக்கிறான், நாளை ஞாபகப்படுத்து” என்று சொல்லிவிட்டுப் படுத்தேன். சரியான லூசு என்று திட்டியபடி மீண்டும் தூங்கத் தொடங்கினாள். மறுநாள் காலை, நான் எதிர்பார்த்தது போலவே கனவு மறந்துவிட்டது. “என்னவோ அபிராம் ராட்சத பலூன்னு சொன்னீங்க” என்று சொல்லவும், அனைத்தும் படம் போல ஞாபகத்துக்கு வந்தது.

Share

Devaaaa

தேவாஆஆஆ

நேற்று ஒரு வேலையாக கேப் ஏறி அமர்ந்ததுமே என்னவோ கலவரமாக இருந்தது. காரணம்‌ உள்ளே ஒலித்தது தேவாவின் ஒரு பாடல். தேவா எனக்கு அத்தனை பிடித்தமான இசையமைப்பாளர் அல்ல. அவரது 20 – 30 பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்றாலும் பல பாடல்கள் ஏனோ எரிச்சலைத்தான் வரவழைத்திருக்கின்றன. நேற்று கேப்-இல் ஒலிபரப்பானது தேவாவின் ஹிட் பாடல்கள் அல்ல. படம் வந்தபோது அவ்வப்போது அங்கங்கே கேட்டு தேவாவே மறந்து விட்ட பாடல்கள். தொடர்ந்து அதே போன்ற பாடல்கள் வரிசையாக வந்தன. இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான், எம் எஸ் விஸ்வநாதன், கே வி மகாதேவன் தவிர யார் இசை அமைத்த பாடல்களாக இருந்தாலும் தொடர்ந்து ஐந்தாறு பாடல்கள் கேட்டாலே எனக்கு பிபி ஏறத் தொடங்கும். நேற்று நடந்தது வன்கொடுமை. என்னென்ன பாடல்கள் என்று கூட எனக்கு இப்போது சொல்ல வரவில்லை. ஆனால் அந்தப் பாடல்களை எல்லாம் நான் கல்லூரிக்கு சைக்கிளில் போகும் போதோ அல்லது ஏதோ ஒரு டீக்கடையிலோ நிச்சயம் கட்டியிருக்கிறேன். டிரைவரிடம் பாடலை மாற்றச் சொல்லவும் எனக்கு ஒரு மாதிரி இருந்தது. சரி போய்த் தொலையட்டும் என்று அமைதியாக விட்டுவிட்டேன். கிட்டத்தட்ட 50 நிமிடப் பயணம். 11 பாடல்கள். காது புண்ணாகிப் போனது.

அவர் என்னை இறக்கி விடவும் அங்கே இருந்த ஒரு டீக்கடையின் முன்பாக இருந்த பஸ் ஸ்டாப்பில் அமர்ந்து, அந்த மிதமான மழைச்சாரலின் நடுவே, எனது மொபைலில் ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் வரும் ராம நாமம் ஒரு வேதமே பாடலைக் கேட்டேன். கிட்டத்தட்ட கண்ணீர் வந்துவிட்டது. அதிலும் அந்த யேசுதாஸின் குரலும் இளையராஜாவின் இசையும் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அது ஒர் அனுபவம். அடுத்ததாக அழைக்கிறான் மாதவன் கேட்டேன். டீக்கடை மறந்து, டீக்கடையின் முன்னால் நின்று 5 இளைஞர்களும் 5 யுவதிகளும் சிறிய கேக்கை வாங்கி என்னவோ பேசி அர்த்தம் இல்லாமல் சிரித்துக் கொண்டிருந்த காட்சிகள் மறைந்து, எனக்குள்ளே ஒரு பிருந்தாவனம் தோன்றி மறைந்தது. மனம் கொஞ்சம் இலகுவானது.

ஒரு வேலையை முடித்துவிட்டு மீண்டும் கேப் பிடித்தேன் மீண்டும் தேவா. இப்படி ஒரு நிலைமை எனக்கு இதுவரை
வந்ததில்லை‌ இந்த முறை தேவாவின் ஹிட் பாடல்கள். அதனால் கொஞ்சம் தாங்கிக் கொள்ள முடிந்தது. மீண்டும் 50 நிமிடம். மீண்டும் பதினொரு பாடல்கள்.

நேற்று எனக்கும் தேவாவுக்கும் இப்படி ஒரு ஏழாம் பொருத்தம் அமைந்திருக்க வேண்டாம்.

Share

S.I.R – my views

SIR திருத்தம் மிக முக்கியமானது. இது குறித்து முன்பே பலமுறை பேசி இருக்கிறோம். இன்று வரும் இத்தனை சதவீத ஓட்டுப் பதிவு என்பதெல்லாம் 80% மட்டுமே சரியாக இருக்க வாய்ப்பு. ஏனென்றால், இறந்தவர்கள் பெயர் நீக்கப்படாதது, பலருக்கும் இரண்டு இடங்களில் வாக்கு இருப்பது, நாம் நீக்கச் சொல்லி இருந்தாலும் நீக்கப்படாமல் இருப்பது, சில உள்நுழைப்புகள் என்று ஏகப்பட்ட குளறுபடிகள். இதனால் இந்தத் திருத்தம் அவசியமானது.

ஆனால் இதன் நடைமுறைதான் தேவையின்றிப் பலரைக் கலங்கடித்துவிட்டது. இப்போதும் கலங்கடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு வேண்டுமென்றே பரப்பப்பட்ட அரசியல் உள்நோக்கமும் ஒரு காரணம் என்றாலும், குழப்பம் இல்லாமல் இல்லை என்பதுதான் உண்மை.

நான் இந்த SIR நடவடிக்கையை எப்படி எதிர்கொண்டிருப்பேன்? இதைத் தேர்தல் ஆணையம் செய்திருக்கவேண்டும் என்று சாமானியனாகக் கருதுகிறேன். அவர்களுக்கு இருக்கும் அழுத்தங்கள் எல்லாம் எனக்கும் புரியும். ஆனாலும் இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் ஆணையத்தின் பார்வையில் மட்டுமே பார்த்ததே அன்றி, தமிழக மக்கள் பார்வையில் பார்க்கத் தவறிவிட்டது அல்லது வேறு வழியின்றி அமைதியாக இருந்துவிட்டது என்றே நான் புரிந்துகொள்கிறேன்.

• முதலில் தேர்தல் ஆணையம் மிகத் தெளிவாகச் சொல்லி இருக்கவேண்டியது, 2024 வரை வாக்களித்து அதே இடத்தில் அதே முகவரியில் நீங்கள் இருந்தால் இந்த முறையும் வாக்களிப்பதில் ஒரு சிக்கலும் இல்லை என்பதை. அதாவது, தேர்தல் ஆணையத்தின் வலைத்தளத்தில் உங்கள் பெயர் இருந்து, அதே முகவரியில் இருந்தால் நீங்கள் வாக்களிப்பதில், எஸ் ஐ ஆர் படிவம் தருவதில் எந்தச் சிக்கலும் இல்லை என்பது.

• பின்னர் சொல்லி இருக்கவேண்டியது, நீங்கள் முகவரி மாறி இருந்து, பழைய முகவரியில் வாக்களித்துக் கொண்டிருந்தால், உங்கள் பெயர் நிச்சயம் நீக்கப்படும் வாய்ப்பிருக்கிறது, ஆனால் அஞ்சத் தேவையில்லை, உங்கள் பழைய ஐடியையும் புதிய முகவரி நிரூபணங்களையும் கொடுத்து, வரைவுப் பட்டியல் வெளியான பிறகு அப்ளை செய்யலாம், அதுவரை பொறுமையாக இருங்கள் என்பதை.

• ஒருவேளை நீங்கள் முகவரி மாறி இருந்தாலும், அதே தொகுதியில் இருந்தால், இதே படிவத்தில் நீங்கள் நிரப்பிக் கொடுக்கலாம் என்பதை.

• முதலில் சில படிவங்கள்தான் கொடுக்கப்பட்டிருக்கின்றன, உங்கள் வீட்டுக்கு வர 15 நாளாவது ஆகும், அப்படியும் வரவில்லை என்றால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கவேண்டும்.

• எப்போது பி எல் ஓ வருவார் என்பதை, யார் யாரெல்லாம் மொபைல் எண்ணை தங்கள் வாக்காளர் அட்டையுடன் இணைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு எஸ் எம் எஸ் அல்லது இமெயில் மூலம் தகவல் அனுப்புவோம் என்ற முடிவை எடுத்திருக்கலாம்.

• பி எல் ஓ உங்கள் வீட்டுக்கு வந்து உங்கள் வீடு பூட்டி இருந்தால், அவர் இன்னும் இரண்டு முறை வருவார், மொத்தம் 3 முறையும் உங்கள் வீடு பூட்டி இருந்தால், அந்தப் புகைப்படத்தை பி எல் ஓ எங்களுக்கு அனுப்புவார். இதையும் சொல்லி இருக்க வேண்டும். சில இடங்களில் இப்படி ஃபோட்டோ அனுப்பச் சொல்லி வாய்மொழித் தகவல் மூலம் கட்டளை இடப்பட்டிருப்பதாக அறிந்தேன். இது நல்ல விஷயம். சும்மா வராமல் வீட்டில் ஆள் இல்லை என்று சொல்வதைக் கணிசமாகக் குறைக்க முடியும்.

• ஆன்லைனில் தாங்களாகவே முன்வந்து எஸ் ஐ ஆர் பதிவு செய்ய விரும்புவர்கள், ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர் இனிஷியல் உட்பட ஒரே போல் இருந்தால், உங்களுக்கு லாகின் இருந்தால், அதைச் செய்யலாம். இல்லையென்றால் பி எல் ஓ மூலமாக மட்டுமே இதைச் செய்யவேண்டும் என்று சொல்லி இருக்கவேண்டும்.

• மூன்று முறை வந்தும் நீங்கள் இல்லை என்றால், எங்களைத் தொடர்புகொள்ளுங்கள் என்று சொல்லலாம்.

• இந்தப் படிவத்தை எப்படி நிரப்புவது என்று ஒரு வீடியோவை எங்கள் வலைத்தளத்தில் ஏற்றி இருக்கிறோம், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், உருது மொழிகளில் உள்ளது, பாருங்கள் என்று சொல்லலாம்.

• இப்படி எல்லாம் சொல்லி முடித்துவிட்டு, 2002 மற்றும் 2005 சிறப்புத் திருத்தப் பட்டியல் பற்றிச் சொல்லவேண்டும். அப்படிச் செய்யாமல், முதலில் இதைச் சொல்லிவிட்டு, எல்லாரும் குழம்பி, அப்பா அம்மாவின் பெயர், தன் பெயர் எதுவும் 2002 சிறப்புத் திருத்தப் பட்டியலில் கிடைக்காமல் – இதெல்லாம் அவசியமே இல்லை. திருத்தப்பட்டியலில் இருந்தால் நிரப்புங்கள், இல்லை என்றால் அவசியமில்லை என்று சொல்லிவிட்டு, 2004 வரை நீங்கள் வாக்களித்து சரியான முகவரியில் இருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை, இது அவசியமில்லை என்று சொல்லி இருக்கவேண்டும்.

• அடுத்து மிக முக்கியமாக, வரைவுப் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்யச் சொல்வது.

• வரைவுப் பட்டியலில் பெயர் இருப்பவர்களுக்கு அவர்களது மொபைல் எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்பலாம். இமெயில் அனுப்பலாம்.

இவற்றை எல்லாம் செய்யாமல், எடுத்த எடுப்பில் 2002/2005 சிறப்புப் பட்டியலைப் பற்றி பேசி, 1987க்குப் பின்னர் பிறந்திருந்தால் என்று சொல்லிக் குழப்பி, இன்று என்னடா என்றால் அதை ஃபில்லப் செய்யத் தேவை இல்லை என்கிறார்கள். அவர்களே நிரப்புவார்களாம். எப்படி முடியும்? நம்மாலேயே முடியவில்லை, அவர்களால் எப்படி முடியும்? அன்று மொபைல் இல்லை, ஆதார் இல்லை, பெயரோ கிருஷ்ணனைக் குரங்கு என்று அடித்து வைத்திருந்தார்கள், எப்படி நிரப்புவார்கள்?

மிக முக்கியமாக, ஆளும் கட்சிகள் இதை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்யச் சொல்லவேண்டும். தேர்தல் வரும் நேரத்தில் இப்படி முட்டி மோதிக் கொண்டிருப்பது அவசியமற்றது.

இதை எளிதாக்க என்னவெல்லாம் செய்யலாம்?

• புதிய வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைப் படிவத்தை கல்லூரியிலேயே நிரப்பச் சொல்லவேண்டும். இது அனைத்துக் கல்லூரியின் வேலையாக வேண்டும். எப்படி பள்ளிகள் ஆதார் எண் வழங்க ஏற்பாடு செய்தார்களோ அதைப் போல. ஒரு ஊரைச் சேர்ந்த மாணவன் இன்னொரு ஊரில் இருந்தாலும் ஆன்லைனில் அப்ளை செய்து வாக்காளர் அட்டை வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும்.

• இறந்தவர்களுக்கான டெத் சர்ட்டிஃபிகேட் தரப்படும்போது அவர்கள் வாக்குச் சீட்டின் நகல் அதனுடன் சேர்க்கப்பட்டு மாதம் ஒருமுறை இவர்களது பெயர்கள் கட்டாயமாக நீக்கப்படவேண்டும்.

• ஆதார் எண்ணை வாக்காளர் எண்ணுடன் இணைத்தால் பாதிப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அதைச் செய்ய ஏன் இத்தனை யோசனை என்று தெரியவில்லை.

இனி நாம் செய்யவேண்டியது என்ன?

• பி எல் ஓ உங்களிடம் வந்து படிவங்களைத் தருவது வரை ஓயவே ஓயாதீர்கள். யார் என்ன சொன்னாலும் காதில் வாங்காமல், அவருக்கு ஃபோன் செய்வது, மெசெஜ் அனுப்புவது, அவர் பதில் அளிக்கவில்லை என்றால் தேர்தல் ஆணையத்துக்கு மெயில் அனுப்புவது என்று தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருங்கள். வாக்கு உங்கள் உரிமை. அதை சரியாகத் தரவேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. அவர்கள் சொன்ன வேலையை பி எல் ஓ செய்ய வேண்டியது கட்டாயம்.

• பி எல் ஓ ஏக்கப்பட்ட அழுத்தத்தில் இருப்பதால் அவரிடம் அமைதியாக உரையாடலாம். அவர் வேண்டுமென்றே சதி செய்கிறார் என்கிற கான்ஸ்பிரஸிக்குள் போகவேண்டாம்.

• பெரும்பாலான பி எல் ஓக்கள் சரியாக உங்கள் படிவத்தைத் தந்துவிடுவார்கள். ஆனால் சிலர் உங்கள் வீடு பூட்டி இருக்கிறது என்று சொல்ல முற்படலாம். காரணம், ஏன் அலையவேண்டும், ஒரு வாக்குதானே என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதை நாம்தான் முறியடிக்கவேண்டும். ஆனால் 90% பி எல் ஓக்கள் இப்படிச் செய்வதில்லை.

• படிவத்தை நிரப்புவது மிக எளிது. படிவம் கையில் கிடைப்பதுதான் பிரச்சினை. அதை நிரப்புவது ஒரு விஷயமே இல்லை. 2002 / 2005 ஐ மறந்துவிட்டு நிரப்புங்கள்.

• மீண்டும் படிவத்தை அவரிடம் சேர்ப்பது மிக முக்கியமானது.

• வரைவுப் பட்டியல் வந்த உடனேயே உங்கள் வாக்கு இருக்கிறதா என்று உறுதி செய்து ஒரு பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

• வரைவுப் பட்டியலில் இல்லை என்றால், மீண்டும் வாக்காளர் அட்டைக்கு அப்ளை செய்யுங்கள். சரியான முகவரி மற்றும் சான்று இருந்தால் இது மிக எளிதான விஷயம். நம்மால் செய்யமுடியவில்லை என்றால் இ சேவை மையத்தில் சிறப்பாகச் செய்து தருவார்கள்.

நான் இப்போது எந்த நிலையில் இருக்கிறேன்? சிலர் லூசுத்தனமாக நான் என்னவோ பிஜேபிக்கு எதிராகப் பேசுவது போல் உளறினார்கள். அவர்களை எல்லாம் ப்ளாக் செய்துவிட்டேன். வாக்குரிமை இருந்தால்தான் பிஜேபி வரும். இல்லையென்றால் மாங்காய் பறித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். மாங்காய் மந்திரத்தில் முளைக்காது மோனே!

என் படிவம் (பல குழப்படிக்குப் பிறகு) என் கையில் கிடைத்துவிட்டது. நிரப்பித் தயாராக வைத்திருக்கிறேன். இன்று வாங்கிக் கொள்கிறேன் என்று பி எல் ஓ சொன்னார். இன்று வேலையோ என்னவோ. வரவில்லை. நாளை வாங்கிக் கொள்வார். நாளையும் அவரால் வரமுடியவில்லை என்றால் நானே அவர் இருக்கும் இடத்துக்குச் சென்று கொடுத்துவிடுவேன்.

நம் வாக்கு நம் உரிமை.

Share