அம்மாவுக்குக் கடக ராசி. அதாவது நண்டு. ஆனால் அம்மாவுக்கு நண்டு, தேள் போன்ற எந்த ஜீவராசிகளையும் பிடிக்காது. யாருக்குத்தான் பிடிக்கும்? ஆனால், தேள்களுக்கு அம்மா என்றால் பிடிக்கும் என்பதுதான் பிரச்சினை. எப்படித்தான் தேடி வந்து சரியாக அம்மாவைத் தேள்கள் கொட்டுமோ தெரியாது.
1985 வாக்கில் சேர்மாதேவியில் தேள்களைத் தினம் தினம் பார்க்கலாம். நம்முடன் வீட்டில் வசிக்கும் ஒரு சக உயிரிநண்பன் மாதிரி கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும். அந்தக் காலத்து வீடுகளில் விறகுகள் அடுக்கப்பட்டிருக்கும். தெருவில் இருந்து வீட்டுக்குள் வரும் போது காலைத் துடைத்துக் கொண்டு வர சாக்குதான் போடப்பட்டிருக்கும். சிறுவயதில் எங்கோ படித்த நினைவு. சாக்குகளில் தண்ணீர் தெளித்து ஓரமாகப் போட்டு விட்டால் பத்து நாட்களில் அங்கே தேள் குட்டிகள் பிறந்திருக்கும் என்று. தேள் குட்டிகளால் குஞ்சுகளா என்பது எனக்குத் தெரியவில்லை. இரண்டுமாம்!
அம்மாவுக்கு ஒரு வழக்கம் உண்டு. வீட்டுக்குப் பின்புறத்தில் இருக்கும் மரங்களில் இருந்து விழும் சுள்ளிகளைப் பொறுக்கி அதில்தான் வெந்நீர் போடுவாள். வெந்நீருக்கு விறகைப் பயன்படுத்தினால் கட்டுப்படியாகாது என்பது அவளது எண்ணம். வெட்டியாகப் போகும் சுள்ளிகளை வீணாக்கக்கூடாது! பொறுக்கிய சுள்ளிகளை ஓரிடத்தில் அழகாக அடுக்கி வைப்பாள். அங்கே சென்று பாதுகாப்பாக வாழத் தொடங்கும் தேள்கள்.
திருநெல்வேலி, சேர்மாதேவி, கல்லுப்பட்டி, சந்தாஸ்பத்திரி என எல்லா இடங்களிலும் இப்படி அம்மா சேமித்து வைத்தது உண்டு. காலை அம்மா வெந்நீர் போட சுள்ளி எடுக்கும்போது சரியாகத் தேள் அவள் கையில் கொட்டும். அம்மா டாக்டருக்கு ஓடுவாள். ஒரு முறை அவள் விரலில் கொட்டிய தேளின் கொடுக்கு இருந்ததை நானே பார்த்திருக்கிறேன். ஒரு தடவை தேள் அம்மாவின் கை விரலில் கொட்டியதில் விரல் வீங்கி கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு அந்த விரலை அசைக்க முடியாமல் இருந்தது.
வீடுகளில் பூனைகள் வளர்த்துக் கொண்டிருக்கும் போது இந்தத் தேள்களின் பிரச்சினை கொஞ்சம் குறைவாக இருக்கும். ஆனாலும் தேள்களுக்குப் பூனைகளும் பயப்படத்தான் செய்யும். பூனை உடல் விதிர்த்து ரோமங்கள் தூக்க ஏதேனும் இடத்தை வெறித்துப் பார்க்கத் தொடங்கினால் அங்கே தேள் இருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்து கொள்வோம்.
ஒரு முறை சேர்மாதேவி வீட்டில் மாடியில் இருந்து என்னவோ சத்தம் கேட்க அனைவரும் மேலே போய் பார்த்தோம். அங்கே மாடியில் ஒரு பொந்திலிருந்து இன்னொரு சிறிய பொந்துக்கு வரிசையாக தேள்கள் ஊர்வலம் போய்க் கொண்டிருந்தன. எனக்குத் தெரிந்து 10 தேள்களாவது இருக்கும். ஒரு பெரிய தேள். மற்றவை எல்லாம் சிறிய தேள்கள். ஆச்சரியத்துடன் பார்த்தோம். அவை எங்களைப் போடுவதற்கு முன்பே மாமா அவற்றைப் போட்டுத் தள்ளி விட்டார்.
நான் கடைசியாக நட்டுவாக்காலியை பார்த்தது திருநெல்வேலியில் சந்தாஸ்பத்திரி வீட்டில் இருந்தபோதுதான். நல்ல மழை நாளில் மரத்தின் பச்சையங்கள் கீழே சிதறி இருக்க வானம் கிளர்ந்திருந்த சமயத்தில் அங்கே கிடந்த நாகலிங்கப்பூவை எடுக்கப் போனேன். அப்போது ஏதோ ஓர் அசைவு கண்ணில் பட, பார்த்தால் அழகாக கருமையாக ஒரு நட்டுவாக்காலி. அது தேள் என்றே நினைத்தேன். ஆனால் நட்டுவாக்காலி.
பகலில் தேள் கண்ணில் பட்டுவிடுகிறது. இரவில்? இரவில் தேள்களிலிருந்து தப்பித்துக் கொள்ள அம்மா ஒன்றைக் கற்றுக் கொடுத்தார். தூங்கப் போகும் போது சங்கர கோமதி அம்மனை நினைத்துக் கொள், எந்த விஷ ஜந்துகளும் கெட்ட கனவுகளும் உன்னை அண்டாது என்பார். தன்னை எத்தனையோ முறை தேள் கொட்டி இருந்தாலும் உறக்கத்தில் இருக்கும்போது மட்டும் தேள் கொட்டியதில்லை, காரணம் கோமதி அம்மன்தான் என்பார். இன்று வரை இரவு கோமதி அம்மனை நினைத்துக் கொண்டுதான் படுத்துக் கொள்கிறேன்.
இப்போதெல்லாம் தேள்களைப் பார்க்கவே முடியவில்லை. கல்யாண்ஜி மோடில் இருந்தால் தாவிக் குதிக்கும் தேரைகளைப் பார்த்து விட முடிகிறது, தேள்களைத்தான் பார்க்க முடியவில்லை என்று எழுதலாம். ஆனால் அதை எல்லாம் கல்யாண்ஜி போன்றவர்கள் எழுதினால்தான் சரியாக வரும்.
பின்குறிப்பு: அம்மா சொன்னது, “என் மாமியார், அதான் உன் பாட்டிக்கு விருச்சிக ராசி.” நான் கேட்டது, “எப்படி ராசி மாறிப் போச்சு?”
கிட்டத்தட்ட 28 வருடங்களுக்கு முன்பு, ‘பாம்பேவில் உனக்கு வேலை’ என்று என்னைப் பார்த்துச் சொன்னதும் எனக்குக் கொஞ்சம் கெதக் என்றுதான் இருந்தது. எப்படி பாம்பே போய் ஹிந்தி பேசி சமாளிக்கப் போகிறோம் என்கிற குழப்பம். மனதுக்குள் க, க, க, க என்று நான்கு வகையாகச் சொல்லிப் பார்த்துக் கொண்டாலும், நான்கும் ஒரே போல்தான் ஒலிக்கிறதோ என்ற சந்தேகமும் வந்தது.
ஆனால் சுதா அண்ணா இருக்கிறார். பார்த்துக் கொள்வார். அவர்தான் கண்டிப்பாக வேலைக்கு வர வேண்டும் என்று சொன்னது. காலேஜ் படிக்கும்போதிருந்தே பாம்பேவுக்கு வந்துவிட வேண்டும் என்று என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். காலேஜ் முடித்த மறுநாளே அவருக்கு ஃபோன் செய்து, ஃபோனிலேயே ஒரே நொடியில் வேலை கிடைத்து, உடனே என்னை பாம்பேவுக்கு டிக்கெட் புக் செய்யச் சொல்லவும், நானும் என் நண்பன் ராமசுப்பிரமணியனும் நெல்லை ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் டிக்கெட் புக் செய்தோம்.
முதல்முதலாக வி டி என்ற ஸ்டேஷனை அப்போதுதான் கேள்விப்படுகிறேன். அப்போதுதான் சத்ரபதி சிவாஜி என்று பெயரையும் மாற்றி இருந்தார்கள். ஆரம்பித்திலேயே இத்தனை குழப்பமா என்று தோன்றியது. சுதா அண்ணா என்னிடம், விடி இல்லை, சி எஸ், அந்த ஸ்டேஷனுக்கு வந்து இறங்கு, பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார்.
டிக்கெட் புக் செய்து விட்டு, ஜங்ஷனில் இருக்கும் ப்ளூ ஸ்டார் ஹோட்டலில் கொத்து பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, என் மனதில் ஏகப்பட்ட குழப்பங்கள். பாம்பே போக வேண்டுமா? அங்கே சமாளிக்க முடியுமா? தாமிரபரணி என்னாகும்? டிரைனில் அத்தனை தூரம் எப்படிப் போவது? ஆனால் வெளியே எதைப் பற்றியும் கவலைப்படாதவன் போல சாத்துக்குடி ஜூஸ் ஆர்டர் செய்து குடித்தேன்.
வீட்டுக்கு வர, என் முகத்தை விட அம்மாவின் முகம் வாடிக் கிடந்தது. பையன் தன்னை விட்டு பாம்பே போகப் போகிறானே என்னும் கவலை.
மறுநாள் மதியம் டிவி பார்த்துக் கொண்டே, ஒரு நிலையில் இல்லாமல் அரைத் தூக்கத்தில் படுத்திருந்தபோது, கதவு தட்டப்பட்டது. தட்டியது சேது. இன்னொரு நண்பன். ‘உடனே உன்னுடைய சர்ட்டிஃபிகேட் ஜெராக்ஸ் எல்லாம் காலேஜ் சார் வாங்கிக் கொண்டு வரச் சொன்னார்’ என்றான். ‘எல்லாம் அவங்க கிட்டயே இருக்குமே’ என்று சொல்ல, அவன் என்னைத் திட்டி, ஜெராக்ஸ் எடுக்க அழைத்துச் சென்றான்.
காலேஜ் உதவியில், தூத்துக்குடியில் உள்ள டேக் கம்பெனியில் இருந்து இன்டர்வியூ வந்தது. இன்டர்வியூவில் கலந்துகொண்ட உடனே தெரிந்து விட்டது, எனக்கு நிச்சயம் வேலை கிடைத்துவிடும் என்று. ஏனென்றால், கல்லூரியில் இரண்டாவது மதிப்பெண் நான். இன்டர்வியூவில் நன்றாக செய்தவர்களில் நிச்சயம் முதல் இடத்தில் இருப்பேன் என்கிற நம்பிக்கை. அதேபோல்தான் நடந்தது. எனக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் வந்துவிட்டது. ஆனால் எனக்கு அத்தனை செய்த சேதுவுக்கு வேலை கிடைக்கவில்லை. இன்று அவன் வேறு ஒரு கம்பெனியில், அதே கெமிஸ்ட்டாக இன்றும் மிகச் சிறப்பான பதவியில் இருக்கிறான் என்பது தனிக்கதை.
என் அம்மா மிகவும் சந்தோஷப்பட்டார். இனி என் பையன் பாம்பே போக வேண்டியது இல்லை. சுதா அண்ணாவை அழைத்துச் சொன்னேன். தூத்துக்குடி டேக் என்றால் அங்கேயே இருப்பதுதான் நல்லது என்று அவரும் சொல்லிவிட, பாம்பே முடிவுக்கு வந்தது.
டேக்-கில் வேலைக்குச் சேர்ந்து, முதல் மாதச் சம்பளம் வாங்கியதும் அம்மா மெல்ல சொன்னார், ‘பாம்பே போகாம தூத்துக்குடியில் உனக்கு வேலை கிடைத்தால், பிள்ளையாருக்கு 108 தேங்காய் உடைப்பது என வேண்டியிருக்கிறேன்.’ அது என்ன பிரமாதம், செய்து விடலாம், இவ்வளவு நல்ல வேலைக்கு 108 தேங்காய் ஒரு பிரச்சினையா என்றோம். அது மட்டுமல்ல, 1008 கொழுக்கட்டையும் செய்து படைப்பதாக வேண்டி இருக்கிறேன் என்றார்.
1008 என்ற எண்ணைக் கேட்டதுமே கொஞ்சம் திக்கென்று இருந்தது. ஆனால் அம்மா அதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை. ‘அதெல்லாம் ரெண்டு மணி நேரத்தில் முடிச்சிரலாம்’ என்று சொல்லிவிட்டாள்.
ஒரு நல்ல நாள் பார்த்து, பாட்டபத்து அக்ரஹாரத்தில் இருந்த மாமிகளை எல்லாம் வீட்டுக்கு வரச் சொல்லி, கொழுக்கட்டை வைபவத்தை ஆரம்பித்தாள். அனைவரும் கொழுக்கட்டை செய்து கொடுக்க, முதல் ஈடு வேகவைத்து எடுத்த போது அதில் 30 லிருந்து 40 கொழுக்கட்டைகள் கூட வரவில்லை. அம்மாவுக்கு தலை சுற்றத் தொடங்கியது. இதே போல் இன்னும் 40 முறை செய்ய வேண்டும். அப்போதுதான் 1008 கொழுக்கட்டைகள் வரும். இதற்கே அரை மணி நேரம் ஆகிவிட்டது. ஒரு ஈடுக்குப் பத்து நிமிடம் என்று வைத்துக் கொண்டாலும் கூட, எட்டு மணி நேரம் ஆகுமே! இதில் அனைவரையும் கண்டிப்பாக வீட்டில் சாப்பிட வேண்டும் என்று வேறு சொல்லி இருந்தாள். யார் சமைப்பது? எப்படிப் பரிமாறுவது? எழுதப்பட்ட குழப்பங்கள்!
அப்போதுதான் ஒரு மாமி சொன்னாள். ‘இதில் யோசிக்க ஒன்றும் இல்லை. நான் சொல்வது போல் செய்யுங்கள்.’ அந்த மாமி என்ன சொன்னார்?
நேற்று ரீல்ஸில் ஒரு வீடியோ பார்த்தேன். அதில் இட்லி மாவைக் கொதிக்கும் தண்ணீரில் ஊற்றுங்கள் என்று என்னவோ சொல்லிக் கொண்டிருந்தார் ஒர் பெண். எரிச்சலில் அதற்கு மேல் பார்க்கவில்லை. ஆனால் அந்த வீடியோவைப் பார்த்ததுதான், இப்போது நான் எழுதுவதற்கு அடிப்படை.
அந்த மாமி கொழுக்கட்டையைச் செய்து, இப்படி இட்லி போல வேக வைத்து எடுத்தால் நீண்ட நேரம் ஆகும், அதற்குப் பதிலாக இரண்டு ஸ்டவ் வைத்து, பெரிய இட்லி கொப்பரை இரண்டு வைத்து, நீரை நிறைய கொதிக்க வைத்து, கொழுக்கட்டையை அந்த நீரில் பொறித்து எடுத்து விடலாம் என்றார்.
தண்ணீரில் பொறித்து எடுப்பதா? யாருக்கும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்த மாமி விடாப்பிடியாகச் சொன்னார். மாவையும் வணக்கி, விட்டோம் உள்ளே வைக்கும் பூரணத்தையும் வணக்கிவிட்டோம், இனி நீரில் பொறித்தால் போதுமானது என்பது அவரது வாதம். சரி செய்து பார்ப்போம் என்று கேஸ் ஸ்டவ், சிலிண்டரை எல்லாம் கீழே வைத்து – சிலிண்டரின் மட்டத்தைவிட அடுப்பின் மட்டம் கீழே இருக்கக் கூடாது என்னும் அறிவியல் எல்லாம் அங்கே எடுபடவில்லை – தண்ணீரைக் கொதிக்க வைத்து, கொழுக்கட்டையைத் தண்ணீரில் பொறித்து எடுக்க ஆரம்பித்தார்கள்.
சுவை எப்படி இருக்கும்? பிள்ளையாருக்குப் படைக்காமல் சாப்பிட்டும் பார்க்க முடியாது. பிள்ளையாரின் தலைவிதி. அத்தனையையும் செய்து, இரண்டு முறை 1008 எண்ணி, ஒருவழியாகப் பிள்ளையாருக்குப் படையல் செய்து, வேண்டுதல் நிறைவேற்றப்பட்டது. கொழுக்கட்டை மோசமில்லை, நன்றாகவே இருந்தது. அன்று அக்ரஹாரத்தில் அனைத்து வீடுகளிலும் இந்தக் கொழுக்கட்டைதான்!
அம்மா எளிதாகச் சொன்னார், ‘வேண்டிக்கிறது நாமதான். ஆனா அதை செய்யறது என்னவோ பகவான்தான். இல்லைன்னா 1008 கொழுக்கட்டை இன்னைக்கு படைச்சிருக்க முடியுமா?’ இதெல்லாம் வக்கணையா இப்ப பேசு, ஆனா இனிமே 1008 எல்லாம் வேண்டி வைக்காதே என்று அம்மாவிடம் சொன்னோம். 108ன்னுதான் வேண்டிக்க நினைச்சேன், எப்படியோ 1008ந்னு வாய்ல அந்த நேரத்துல வந்துருச்சு என்றார். ‘அதுவும் பகவான்தான்!’ கொர்ர்.. பிள்ளையாரை சீட் பண்ணிட்டு இந்த டயலாக் எல்லாம் தேவையா என்று ஓட்ட ஆரம்பித்தோம்.
அடுத்து 108 தேங்காய் உடைப்பது. ஒரு வருடம் கழித்துத்தான் இதைச் செய்தோம். 108 தேங்காய் உடைப்பது அத்தனை பெரிய கஷ்டமில்லை என்று நினைத்தோம். 108 தேங்காய் வாங்கினால், அதை சைக்கிளில் கொண்டு வர முடியாது என்று உறைத்தது. மார்க்கெட்டில் இருந்து ஆட்டோ. நானும் என் நண்பனும் பைக்கில் வர, கோவிலுக்கு ஆட்டோ வந்து தேங்காய் மூட்டையை இறக்கிவிட்டுச் என்றது.
இருவரும் டிப் டாப்பாக டிரெஸ் செய்துகொண்டு, பாட்டபத்து பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக நின்று கொண்டு, பிள்ளையாரை வேண்டிக் கொண்டு, பின்னர் நான் ஒரு தேங்காயை உடைத்தேன். ஜாலியாக இருந்தது. பத்து தேங்காய் உடைப்பதற்குள் வேர்க்கத் தொடங்கியது. இருபது தேங்காயில் கை வலிக்க ஆரம்பித்தது. 25வது தேங்காய், முதல் தேங்காயைப் போல அத்தனை சிதறவில்லை. டேய், நீயும் உடை என்று சொல்லவும், கூட வந்தவனும் உடைத்தான். ஆனது முதல் தேங்காய் சீறிப் பாய்ந்தது. அவன் 20வது தேங்காயிலேயே சோர்ந்துவிட்டான். இந்த வேலைக்கு இவ்ளோ டிப்டாப்பா டிரெஸ் பண்ணிட்டு வந்திருக்க வேண்டாம் என்று சிரித்துக் கொண்டே உடைத்தோம்.
பாட்டபத்து ஊரே எங்களைப் பார்த்தது. போவோர் வருவோரை எல்லாம், நீங்க ரெண்டு உடைச்சிப் பாருங்களேன், ஜாலியா இருக்கும் என்று கேட்க ஆரம்பித்து, நாங்களே சிரிக்க ஆரம்பித்து விட்டோம். ஒரு தேங்காய் உடைத்தால் ஓடி வந்து பொறுக்கும் சிறுவர்களில் ஒருவர் கூட 108 தேங்காய் உடைக்கும்போது வந்து பொறுக்கவில்லை. ‘எப்படியும் அவனுவளே தருவானுவ!’
கோவில் குருக்கள், எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன், நீங்க உடைங்கோ என்று சொல்லிவிட்டார். வேர்க்க விறுவிறுக்க 108 தேங்காயை உடைத்து முடித்தேன். அன்று பாட்டபத்து வீட்டில் அனைவர் வீட்டிலும் தேங்காய் சாதம்தான் இருந்திருக்கும்.
வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக அம்மாவிடம் சொன்னது, கொழுக்கட்டைன்னா 108, தேங்காய்ன்னா ஒன்னு போதும் என்றேன்.
சாரு நிவேதிதா தன் வலைப்பதிவில் எழுதியதை நேற்றிரவு பொழுது போகாத நேரத்தில் படித்தேன். அதைத் தொடர்ந்து, இதுவரை எழுதாத ஒன்றைப் பதிவு செய்யலாம் என்று இதை எழுதுகிறேன்.
எனி இந்தியன் பதிப்பகம் சார்பாகக் கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்திருந்த நேரம். அலுவலகம் திநகர் பிஎம்ஜி காம்ப்ளக்ஸில் இருந்தது. நான் கம்ப்யூட்டரில் வேலையாக இருந்தேன்.
அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்தால், பழுப்பு நிறத் தோல் பையோடு வயது உலர்ந்த மனிதர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் அசோகமித்திரன் என்று பிடிபட எனக்கு ஒரு சில நொடிகள் ஆயின. சட்டென்று எழுந்து, வாங்க சார் என்றேன். அங்கே இருந்து நாற்காலியில் மெல்ல அமர்ந்துகொண்டு, நீங்கதான் பதிப்பகத்தைப் பாத்துக்கறீங்களா என்று தனக்குள் கேட்டபடி, தன் தோல் பையைத் திறந்து, எனி இந்தியன் பதிப்பித்த புத்தகங்களை வெளியே எடுத்தார்.
எனி இந்தியன் பதிப்பித்திருந்த புத்தகங்களை அவர் பார்வைக்கு அனுப்பி இருந்தோம்.
அந்தப் புத்தகங்களை மேஜை மேலே அடுக்கியவர், “இத்தனை புத்தகம் படிக்கறது கஷ்டம். பணம் போட்டுக் கஷ்டப்பட்டு பதிப்பிச்சிருக்கீங்க. வீணாகக் கூடாதுன்னு நேர்ல கொடுத்துட்டு போலாம்னு வந்தேன்” என்றார். எனக்குப் பாவமாகப் போய்விட்டது. இந்தப் புத்தகங்களைக் கொடுப்பதற்காக இந்த வெயிலில் இவ்வளவு தூரம் வரவேண்டுமா என்று கேட்டேன். வீடு பக்கத்தில்தான், நடந்தே வந்துவிட்டேன் என்றார். இன்னும் கஷ்டமாகிப் போனது.
நாங்கள் அனுப்பிய புத்தகங்களில் தனக்குத் தேவையான ஒன்றிரண்டு புத்தகங்களை எடுத்துக்கொண்டதாகச் சொல்லி, புத்தகங்களுக்கு நன்றியும் சொன்னார்.
“புத்தகத்துல தப்பே இல்லையே.. நெஜமா தமிழ் தெரிஞ்சவங்கதான் போட்டுருக்கணும்னு நினைச்சிக்கிட்டேன்” என்றார்.
“இந்தக் காலத்துல புத்தகமெல்லாம் இன்னும் விக்குதா?” என்று கேட்டார்.
டீ குடிக்கிறீங்களா சார் என்று கேட்டபோது, தண்ணீர் மட்டும் போதும் என்று சொல்லி, குடித்துவிட்டு, வேலை நேரத்தில் உங்களைத் தொந்தரவு பண்ணிட்டேன் என்று சொல்லிவிட்டுப் போனார்.
அசோகமித்திரனை வியந்து படித்தவனை அசோகமித்திரனே நேரில் வந்து பார்த்தது (என்னைப் பார்க்க அவர் வரவில்லைதான்) பெரிய ஆச்சரியமாக இருந்தது எனக்கு.
இன்னொரு முறை அசோகமித்திரனைப் பார்த்தது, கோபால் ராஜாராமின் வீட்டுத் திருமணம் ஒன்றில்.
அதன் பின்னர் புத்தகக் கண்காட்சிகளில் நான்கைந்து முறை பார்த்துப் பேசி இருக்கிறேன்.
எழுத்தாளர்களும் வாசகர்களும் சந்திக்கவே கூடாது என்று சுஜாதா சொன்னதை மறுத்து சாரு நிவேதிதா எழுதி இருப்பது, இவற்றை எல்லாம் நினைவூட்டியது.
உண்மையில் சுஜாதா ‘வாசகர்களும் எழுத்தாளர்களும் சந்திக்கக் கூடாது’ என்று எப்போது சொன்னார்? அதுவும் என் (எங்கள்!) சந்திப்பின் போதுதான். அதைப் பற்றி சுஜாதாவுக்கான அஞ்சலியில் 2008ல் எழுதி இருக்கிறேன்.
//தேசிகன் மூலம் நண்பர்கள் சிலர் அவரைச் சந்தித்தோம். ஆறு மணிக்கு சரியாக உட்லேண்ஸ் டிரைவ்இன் வந்த அவர் மிக இயல்பாக எல்லாருடனும் பேசினார். இப்படி சிலர் சேர்ந்து அவரை வறுத்தெடுக்கிறோமே என்று எல்லாருக்குமே தோன்றினாலும், விடாமல் அவருடன் பேசிக்கொண்டிருந்தோம். கமல், ரஜினி, சிறுகதை, தொடர்கதை, பிரபந்தம் என ஆளாளுக்குப் பல கேள்விகள் கேட்டோம். எல்லாவற்றிற்கும் பதில் சொன்னார். கவிதைகள் பற்றிப் பேச்சு வந்தபோது என்னைப் பார்த்து ‘நீங்ககூட கவிதை நல்லா எழுதுறீங்களே’ என்றார். இரண்டு முறை சொன்னார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. அவருக்கு அபுல்கலாம் ஆசாத்தின் கஜல் புத்தகத்தையும் ஹரிகிருஷ்ணனின் அனுமன் வார்ப்பும் வனப்பும் புத்தகத்தையும் அன்பளிப்பாகக் கொடுத்தேன். இனிமையாக முடிந்த அந்த சந்திப்புக்குப் பின்னர், இரண்டு நாள்கள் கழித்து வந்த ஆனந்தவிகடன் கற்றதும் பெற்றதும் பகுதியில், இந்த சத்திப்பைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, இதன் மூலம் அவருக்குக் கிடைத்த செய்தியாக ‘வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையேயான இடைவெளி அவசியம்’ என்பதைச் சொல்லியிருந்தார். சந்திப்பில் பங்குகொண்ட அனைவருக்குமே கொஞ்சம் திக்கென்றிருந்தது. சுஜாதாவுடன் சந்த்திப்பில் பேசிக்கொண்டிருந்தபோது, பலர் இடையே வந்து அவரிடம் ஆட்டோகிரா·ப் வாங்குவதும் அவரது ஃபோன் நம்பர் கேட்பதும் அவரது வீட்டுக்கு வரலாமா என்று கேட்பதுமாக இருந்தார்கள். அவருடைய பாப்புலாரிட்டியின் காரணமாக அவர் எப்போதும் வாசகனுடன் ஒரு இடைவெளியை வைத்திருக்க விரும்பினார். அதுமட்டுமின்றி என் கணிப்பில் அவர் ஒரு தனிமை விரும்பியாக இருந்தார். தனிமையைக் கொண்டாடுவாரோ என்று கூட நினைத்திருக்கிறேன். தேசிகனிடம் ஏன் கற்றதும் பெற்றதும் பகுதியில் சுஜாதா இப்படி எழுதினார் என்று கேட்டபோது, கற்றதும் பெற்றதும் பகுதியைப் படித்துவிட்டு பலர் அவருக்கு ·போன் செய்து, நாங்களும் டிரீட் தருவோம், எங்களுடனும் பேசவாருங்கள் என்று அழைத்தார்களாம், அதைத் தவிர்க்கவே சுஜாதா அப்படி எழுதினார் என்று விளக்கம் கூறினார்.//
இப்போது சாருவின் விஷயத்துக்கு வருவோம். எழுத்தாளர்களும் வாசகர்களும் சந்திக்கலாமா? கூடவே கூடாது. எழுத்தாளர்களுக்காக அல்ல. வாசகர்களுக்காக.
கேரளா க்ரைம் ஃபைல்ஸ் (M) – ஒருமுறை பார்க்கலாம். ஆகா ஓகோ என்று சொல்ல முடியாவிட்டாலும் நிச்சயம் நம்மை ஆச்சரியப்படுத்தும் பல தருணங்கள் உள்ளன. முதல் இரண்டு அத்தியாயங்களும் கடைசி இரு அத்தியாயங்களும் அருமை. அதிலும் முதல் 5 நிமிடங்கள் வாவ். நடுவில் இரண்டு அத்தியாயங்கள் தாலாட்டுப் பாடித் தூங்க வைக்க முயல்கின்றன. அதில் தப்பித்துக் கொள்வது நம் சாமர்த்தியம்.
தொடர் முழுக்க ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஆறு எபிசோட் எப்படியாவது வந்தாக வேண்டும் என்கிற கட்டாயம் போல. அதிகாரிகள் மாறினாலும் அதே விஷயத்தை ஒவ்வொரு ஊரிலும் சென்று பேசுகிறார்கள். போதும்டா சாமி நீங்க பேசுனது என்று நினைக்கும் போதுதான் கதைக்குள்ளேயே வருகிறார்கள். இதில் போதாக்குறைக்கும் மனைவி கதாபாத்திரங்களின் எரிச்சல் வேறு.
கதையில் ஓர் ஆச்சரியம் கொலை எதற்காக என்பது. அதில் ஒரு மைனஸ் இதற்காகத்தான் இருக்கும் என்பதை முதல் காட்சியிலேயே யூகிக்க முடிவது. இன்னொரு மைனஸ், என்னதான் நியாயம் என்றாலும் அதற்காக இத்தனை கொடூரமான கொலையா என்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.
இதை எல்லாம் தாண்டி இந்தத் தொடரில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, திரைக்கதை எழுதிய விதம். கடைசி வரை எதற்காக கொன்றான் என்று ஒரு சாதாரண பார்வையாளன் யோசித்தாலும் பரவாயில்லை, அது பூடகமாகவே இருக்கட்டும் என்று, பொதுவான கிரைம் த்ரில்லர்களில் வருவது போல கொலைகாரன் அவன் வாயிலேயே வெளிப்படையாகச் சொல்லாதது. அதெல்லாம் கதைக்குள்ளே இருக்கிறது. காட்சிகள் மூலமாக முன்பின் இணைத்து, இதற்குத்தான் கொன்றான் என்பதை நீயே புரிந்து கொள் என்று விட்டிருப்பது நல்ல விஷயம்தான் என்றாலும், 5 மணி நேரமாக காரில் ரோட்டில் படகில் வீட்டில் என்று சதா பேசிக் கொண்டே இருப்பவர்கள், இதை மட்டும் ஏன் வெளிப்படையாக சொல்லாமல் விட்டார்கள் என்ற கேள்வி எழாமல் இல்லை. யூட்யூபில் சேட்டன்கள் இதைப் புளி போட்டு விளக்கிக் காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் இல்லாமல் திறமையான நடிகர்களை வைத்து இயக்கி இருப்பது இன்னொரு நல்ல விஷயம். முதல் இரண்டு எபிசோடுகளில் ஐந்து நிமிடங்களே வந்தாலும் இந்திரன்ஸ் காட்டும் முகபாவம், அதைவிட குறைவான நிமிடங்களே வந்தாலும் ஹரிஸ்ரீ அசோகனின் மேக்கப்பும் குறைவான மிரட்டலான நடிப்பும் இந்தத் தொடரில் முக்கியம் எனலாம்.
இன்னும் வெப் சீரியஸ் விஷயத்தில் மலையாளிகளுக்குப் பிடி கிடைக்கவில்லை. ஏதோ ஒன்று குறைவாகத்தான் இருக்கிறது. அவர்கள் அதைச் சரியாகப் பிடிக்கும் போது, வெப்சீரிஸில் பல மாயங்கள் மலையாளிகளால்தான் நிகழப் போகிறது.