அழகரடியும் அப்பாவும்
மதுரை அழகரடியின் நினைவுகள் மறக்க முடியாதவை. என்னதான் உள்ளும் புறமும் திருநெல்வேலிக்காரனாக இருந்தாலும் 87 முதல் 91 வரை அழகரடியில் வாழ்ந்த காலங்கள் எப்போதுமே பசுமையானவை. இப்படித்தான் நான் என பின்னால் அமையப்போகும் பலவற்றுக்கு அங்கே தான் விதை ஊன்றப்பட்டது என்பது என் மனப்பதிவு. குறிப்பாக இரண்டு பேர் இளையராஜா மற்றும் சச்சின் டெண்டுல்கர். கொஞ்சம் கமலஹாசனும் கூட. ஆனால் இன்று கமல்ஹாசன் முற்றிலுமாக என்னிடமிருந்து விலகி விட்டார். வெறுப்பு கூட தோன்றி விட்டது. ஆனால் இளையராஜாவும் சச்சினும் அன்று எந்த நிலையில் இருந்தார்களோ அதைவிட கூடுதலான உயரத்தில் இப்போதும் இருக்கிறார்கள்.
அழகரடியை நினைக்கும் போது பல விஷயங்கள் எப்போதும் மனதில் வந்து போகும். அவற்றில் ஒன்று அப்பாவின் நினைவு.
அப்பா, நான், அம்மா, தாத்தா, பாட்டி, அண்ணன், அக்கா என்று ஒண்டிக் குடித்தன வீடு ஒன்றில் வாழ்ந்தோம். வரண்டா போன்ற ஒன்றில் தட்டி போட்டு மறைக்க அது தாத்தாவும் பாட்டி அறையானது. அம்மா அப்பா அக்கா எல்லாம் வீட்டுக்குள் படுத்துக்கொள்ள நான் வெளியே திண்ணையில் படுத்துக் கொள்வேன். வீட்டு வாடகை அதிகபட்சம் 50 ரூபாய் இருக்கலாம் என நினைவு. அப்பாவுக்கு சம்பளம் 300 ரூபாய் போல. தினம் பேட்டா ஒரு ரூபாய் டீ குடிக்க. அந்த ஒரு ரூபாயைப் பத்திரமாகச் சேர்த்து வைப்பார். தினச் செலவுக்கு தின வட்டிக்குப் பணம் வாங்கி ஓட்டிய காலம். அப்பா வேல்முருகன் லாரி சர்வீஸ் சென்ற ஒரு கம்பெனியில் கணக்கெழுதிக் கொண்டிருந்தார்.
அழகரடியில் இருந்து மெய்ஞானபுரத்தில் குடியிருந்த சித்தப்பா வீட்டுக்கு நடந்து போகும்போது அப்பாவின் ஆபிசைக் கடந்து போக வேண்டும். அப்போது ஆஃபிசுக்குச் சென்று அவரைப் பார்ப்பேன். பென்சிலின் பின்னால் ரப்பர் பேண்டைச் சுற்றி அதை ரப்பராகப் பயன்படுத்துவார். எப்போதும் அந்த பென்சிலைக் காதில் வைத்திருப்பார். பெரிய கணக்கு நோட்டைத் திறந்து ஏதேதோ பெரிய பெரிய நோட்டுகளில் கணக்குப் போட்டுக் கொண்டே இருப்பார். கணக்குப் பிள்ளையாக வேலை பார்த்தார். அவரது ஆஃபிஸுக்கு நான் சென்றதும் ஒரு சேரில் அமரச் சொல்வார். டீ குடிக்கிறியா என்று கேட்பார். வேண்டாம் என்பேன். ஏனென்றால் அம்மா என்னிடம் முதலிலேயே தெளிவாகச் சொல்லி அனுப்பி இருப்பார். அப்படியும் ஒன்றிரண்டு முறை டீ வாங்கிக் கொடுத்திருக்கிறார். என்னவோ அப்பாவை மிகப் பெரிய கம்பெனியில் பார்த்தது போன்ற உணர்வு ஏற்படும். மனதுக்குள் அத்தனை பெருமையாக இருக்கும். அப்படியே சித்தப்பா வீட்டிற்கு அந்தப் பெருமிதத்துடன் நடந்து செல்வேன்.
அப்பா தனக்காக எதையும் சேமிக்க வேண்டும் என்று நினைத்தவர் இல்லை. அத்தனை வருமானமும் இல்லை. பெரிய பெரிய வேலைக்குச் செல்ல வேண்டும் என்று கனவு கண்டவர் இல்லை. அதற்கான பெரிய கல்வித் தகுதிகளும் இல்லை. ஆனால் எல்லோருடனும் அன்பாக இருக்க வேண்டும் என்பதில் இறுதிவரை மாறாத உறுதியுடையவராக இருந்தார். அவரது இயல்பே அன்புதான். கள்ளம் கபடமற்றவர். எத்தனை வேகமாக கோபம் வருகிறதோ அத்தனை வேகமாக கோபத்தை இழக்க கூடியவர். பின்பு அதிலேயே குற்ற உணர்ச்சி கொண்டு, தான் கோபம் கொண்டவரிடம் ஏதாவது பேசி சமாதானம் செய்யும் வரை நிலை இல்லாமல் தவிப்பவர். அம்மா சொல்லும் ஒவ்வொரு விஷயத்திற்கும் எதிராகப் பேச நினைத்தாலும் அதை ஆரம்பித்துப் பாதியிலேயே விட்டுவிட்டு அம்மா சொல்வதையே சரி என்று வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ளத் தயங்காதவர்.
எல்லோரையும் போல ஒரு குழந்தையாகவே பிறந்தார். குழந்தையாகவே வளர்த்தார். குழந்தையாகவே வாழ்ந்தார். அப்படியே மறைந்தார்.
அப்பாவும் அம்மாவும் இல்லாமல் இன்று நாங்கள் இல்லை. அழகரடி வீட்டில் பட்ட கஷ்டங்களை எல்லாம் நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. 15 நாளுக்கு ஒருமுறை கூட இட்லி தோசை சாப்பிட்டிருக்க மாட்டோம். ரேஷன் அரிசி சாப்பாடுதான். தினமும் காலை செய்த குழம்பு ரசம்தான் இரவு வரை. பொரியல் எப்போதாவது இருக்கும். குடும்பமாகச் சேர்ந்து திரைப்படத்திற்குப் போன கதை எல்லாம் கிடையவே கிடையாது. எனக்குத் தெரிந்து ஒரு முறை படித்துறை மடத்தில் சாப்பிட்டுவிட்டு நான் அண்ணா அக்கா அம்மா அப்பா என அனைவரும் பரமேஸ்வரி தியேட்டரில் போட்டிருந்த மைக்கேல் மதன காமராஜனுக்குச் சென்றோம். அதற்கு முன்னும் பின்னும் இப்படி அத்தனை பேரும் சேர்ந்து பார்த்த வேறு படங்கள் நினைவுக்கு வரவில்லை.
அப்பா எங்களுக்காகவே வாழ்ந்தார். அப்பாவை நினைக்காத நாளில்லை. மறந்த நொடி இல்லை. எங்கிருந்தாலும் அப்பா எங்களை அணைத்து ஆசீர்வதிக்கட்டும்.
இன்று அப்பாவின் திதி.

