உள்ளொழுக்கு (M) – அடர்த்தியான சிறுகதையைப் போன்ற ஒரு திரைப்படம். எளிய கதையில் சிறப்பான திரைக்கதை. யூகிக்க முடியும் ஒரு முடிவுதான் என்றாலும் முழுக்க பார்க்க வைக்கும் அனுபவம். ஊர்வசியும் பார்வதியும் வெகு சிறப்பு. மற்ற அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மிக மெல்ல நகரும் படம் விறுவிறுப்பாகவும் இருக்க முடியும் என்று சொல்லும் இன்னொரு மலையாளப் படம். ஒவ்வொரு காட்சியைப் பார்த்துப் பார்த்து எழுதி இருக்கிறார்கள். பல அநாவசியமான விஷயங்களை எல்லாம் ஒரே தாண்டாகத் தாண்டிவிடும் திரைக்கதை பெரிய பலம். மறக்க முடியாத ஒளிப்பதிவு. அடர்த்தியான படம்.
ப்ரைமில் கிடைக்கிறது.
அஞ்சக்கள்ளகொக்கன் (M) – இன்னொரு சிறந்த இயக்குநரின் வருகையைப் பறைசாற்றும் படம். ஆஹாஓஹோ வகையல்ல என்றாலும், எடுத்தவிதம் அருமை. சுற்றி சுற்றிச் செல்லும் திரைக்கதை. அனைத்து நடிகர்களும் சிறப்பு. அதீத யதார்த்தம். இணையாக நாடகத்தனமான வில்லன்களும். சமீப மலையாளப் படங்களில் தமிழ் அல்லது கன்னடம் நிறைய வருகிறது. இதில் ஆங்காங்கே கன்னடம். நேரமிருப்பவர்கள் நிச்சயம் பார்க்கலாம்.
அயல்வாஷி (M) – மிக எளிமையான, மண்டை காயாத கதை கொண்ட படம் பார்க்க விரும்புபவர்களுக்கான படம். இரண்டு நண்பர்களுக்கு இடையே வரும் விரிசலை எப்படிச் சரிசெய்து கொள்கிறார்கள் என்று நகைச்சுவையாகச் சொல்லி இருக்கிறார்கள். பாதிக்குப் பிறகு பல இடங்களில் சிரிக்க முடிந்தது. கடைசி ஃப்ரேமில் சத்தமாகச் சிரித்து விட்டேன். சூப்பர் டூப்பர் படங்களை மட்டுமே பார்ப்பவர்களுக்கான படமல்ல. மற்றவர்கள் பார்க்கலாம்.