சில கன்னடத் திரைப்படங்களும் மலையாளத் திரைப்படங்களும்

சர்க்காரி ஹிரிய ப்ரதமிகெ ஷாலே, காஸர்கோடு – கொடுகெ: ராமண்ணா ராய் – படத்தின் பெயர் இது. தோராயமாக மொழிபெயர்த்தால்: அரசு உயர்நிலைப்பள்ளி, காஸர்கோடு – உபயம்: ராமண்ணா ராய் என்று சொல்லலாம். இது என்ன என்று புரிந்துகொள்ளவே எனக்கு ஐந்து நிமிடங்கள் ஆகியது. ஒரு திரைப்படம் வந்துவிட்டால் அது தொடர்பான வார்த்தைக்கு கூகிளில் பொருள் கண்டுபிடிப்பது என்பது மலையைப் புரட்டி எலியைப் பிடிப்பது போலத்தான். ஹிரிய ப்ரதமிகெ ஷாலே என்றால் நடுநிலைப்பள்ளியா உயர்நிலைப்பள்ளியா என்று இன்னும் பிடிபடவில்லை. கன்னடம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். ராமண்ணா ராய் என்பவர் காஸர்கோட்டில் இருந்து 80களில் எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மொழிவாரி பிரிக்கப்படும்போது 1956ல் காஸர்கோடு கேரளாவுடன் இணைக்கப்படுவதற்கு எதிராகப் போராடியவர் என்று தெரிகிறது.

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான இப்படம் நகைச்சுவைத் திரைப்படம். நகைச்சுவை என்றால் நம்ம ஊர் கமல்ஹாசனின் திரைப்படங்கள் வகையல்ல. இது ஒரு மென் நகைச்சுவைத் திரைப்படம். கூடவே, சிறுவர்களுக்கான படம் என்றும் சொல்லலாம். காஸர்கோட்டின் கர்நாடக கேரள எல்லைப் பகுதியில் இருக்கும் கன்னடம்வழி கற்பிக்கும் பள்ளி கேரள அரசின் கீழ் உள்ளது. ஐம்பது பேர் மட்டுமே படிக்கும் இப்பள்ளிக்கு மலையாளியான கணக்கு வாத்தியாரை அரசு அனுப்புகிறது. இவருக்கு கன்னடம் தெரியாது. மலையாளத்தில் கணிதம் சொல்லித் தருகிறார். இங்கிருக்கும் கன்னடர்கள் அதை எதிர்க்க, அந்த மலையாளி ஆசிரியர் பயந்து ஓடிப் போகிறார். இனியும் இப்பள்ளியை நடத்துவது தேவையற்றது என்று ஊழல்வாதியான கேரளக் கல்வி அதிகாரி முடிவெடுக்கிறார். ஆனால் பள்ளி தலைமையாசிரியரான மலையாள நம்பூதிரியோ கன்னடப் பள்ளியும் அதில் படிக்கும் கன்னட மாணவர்களும் பாவம் என்று தன்னால் முடிந்த அளவுக்குப் போராடுகிறார். மாணவர்கள் போராடி, மைசூரிலிருந்து ஒருவரை அழைத்து வந்து அவரை வைத்துச் சட்டப் போராட்டம் நடத்தி எப்படிப் பள்ளியை மீட்கிறார்கள் என்பது மீதிக் கதை.

இந்த அளவுக்கு சீரியஸ் கதையை இத்தனை நகைச்சுவை இழையோடச் சொல்லி இருப்பது ஆச்சரியம். எப்போதும் ஒரு சிறு புன்னகை நம் முகத்தில் தவழ்ந்தபடி இருக்கிறது. சில காட்சிகள் நல்ல நகைச்சுவை. சில கொஞ்சம் டல். ஒவ்வொரு நடிகரும் மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். (கன்னட வெறியராக வரும் ப்ரமோத் ஷெட்டி தவிர!) பள்ளி மூடப்பட்டு அங்கே படிக்கும் ஏழை மாணவர்கள் தத்தம் தொழிலுக்குப் போகும் காட்சியைக் கூட உணர்ச்சிவசப்பட வைக்காமல் மிகவும் ஜாலியாக எடுத்திருக்கிறார்கள். பார்க்கும் நமக்கு மட்டுமே அம்மாணவர்களின் எதிர்காலம் குறித்த வருத்தம் வருகிறது. அத்தனை தெளிவாகத் திரைக்கதை எழுதி இருக்கிறார்கள்.

அழகி திரைப்படத்தில் பள்ளி சார்ந்த காட்சிகளை நாம் திரையில் பார்த்தபோது எப்படிச் சில்லரையை சிதற விட்டோமோ அப்படி படம் முழுக்கக் காட்சிகள் இருக்கின்றன. நம்மை பழங்காலத்துக்குக் கொண்டு போகும் காட்சிகள். காஸர்கோட்டில் மலையாளம் கலந்து கன்னடம் பேசும் சிறுவர்கள், மம்மூட்டி மோகன்லாலைக் கொண்டாடும் கன்னடச் சிறுவர்கள் என்று இயல்பாக நகர்கிறது படம்.

2001ல் துபாயில் நான் தியேட்டரில் பார்த்த முதல் திரைப்படம் சூத்ரதாரன். அப்போது எனக்கு மலையாளம் ஒரு வார்த்தை கூடத் தெரியாது. தியேட்டரில் பாண்டவபுர காட்சிகள் வந்தபோது அதில் சிலர் கன்னடம் பேச, ஆஹா நமக்குப் புரிந்த ஒரு மொழி என்ற ஒரு மகிழ்ச்சி எட்டிப் பார்த்தது. அதேபோல் இத்திரைப்படத்தில் பல இடங்களில் மலையாளம் பேசப்படுகிறது. காஸர்கோட்டில் இத்திரைப்படம் ஓரளவுக்கு ஓடி இருக்கிறது. இப்படம் 2018ல் வெளி வந்திருக்கிறது. 2020ல் கூட காஸர்கோட்டில் ஒரு கன்னட மீடியம் பள்ளியில் மலையாள கணக்கு ஆசிரியை நியமிக்கப்பட்டு பிரச்சினை ஆகி இருக்கிறது. அதாவது இன்று வரை இப்பிரச்சினை இன்னும் அங்கே இருக்கிறது.

பள்ளியை மாணவர்கள் ஆனந்த்நாக் மூலம் மீட்பதெல்லாம் கொஞ்சம் அபத்தமான நகைச்சுவைக் காட்சிகளே. ஆனால் தாய்மொழியில் சிந்திக்கவேண்டியதன் அவசியத்தைச் சொல்லி புல்லரிக்க வைத்துவிட்டார்கள். பதினைந்து வயதில் ஒரு பையனுக்கும் உடன் படிக்கும் ஒரு மாணவிக்கும் வரும் எதிர்பாலினக் குறுகுறுப்பைப் படம் முழுக்கப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், எல்லை தாண்டாமல்.

கன்னட நகைச்சுவைப் படங்கள், மற்ற கன்னடப் படங்களைப் போலவே, பார்க்கவே கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். ஆனால் இத்திரைப்படம் நல்ல ஃபீல் குட் முவீயாக வந்திருக்கிறது. நேரம் இருப்பவர்கள் பார்க்கலாம். ஆன்லைனில் எம் எக்ஸ் ப்ளேயரில் இலவசமாகக் கிடைக்கிறது.

இதே பிரச்சினையை அப்படியே தமிழுக்கு மையப்படுத்திக் கொண்டு வந்தால், புல்லரிக்க வைக்கும் தமிழ்வழிக் கல்வி தொடர்பான ஒரு உருப்படியான படத்தைக் கொண்டு வர முடியும். அந்த அளவுக்கு நேட்டிவிட்டியுடன் இருக்கிறது இத்திரைப்படம்.

*

பாப்கார்ன் மன்க்கி டைகர் என்றொரு படம். தனஞ்செய் நடித்தது. ரத்னன் ப்ரபஞ்ச பார்த்துப் பிடித்துப் போய் தனஞ்செய்யின் இந்தப் படத்தைப் பார்த்தேன். கன்னடத்தின் சிறந்த நவீன படமாக நான் நினைப்பது, உலிதவரு கண்டெந்தெ. (தமிழில் ரிச்சி!) ரக்‌ஷித் ஷெட்டி இயக்கி நடித்தது. சமீபத்தில் கருட கமனா வ்ருஷப வாகனா என்றொரு படம் சென்னையில் திரையிடப்பட்டிருந்தது. ரக்‌ஷித் ஷெட்டியின் படம் என்று நினைத்து இதற்கு டிக்கெட் வாங்கப் போகும்போது, எதோ ஜெர்க்காகிப் பார்த்தால், இது ராஜ் ஷெட்டியின் படம். பின் எப்படி ரக்‌ஷித் ஷெட்டியின் படம் என்று நினைத்தேன்? பின்னர் நினைவுக்கு வந்தது, இப்படம் பற்றி ரக்‌ஷித் ஷெட்டி தன் ஃபேஸ்புக்கில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

ராஜ் பி ஷெட்டியின் படம் என்று தெரிந்ததும் டிக்கெட் வாங்கவில்லை. இவரது படமான ஒரு மொட்டயின் கதா-வை ஆஹா ஓஹோ என்று பலர் கொண்டாடினாலும் எனக்குப் பிடிக்கவில்லை. ராஜ் ஷெட்டியின் படங்களில் எனக்கு உறுத்துவது எதோ ஒரு தேக்கம். ஆனால் கருட கமனா அப்படி இல்லை. படம் நன்றாகவே இருந்தது. எல்லாரும் ராஜ் பி ஷெட்டியைப் புகழ, அவரை விட எனக்கு ரிஷப் செட்டியின் நடிப்பு பிடித்துப் போனது. வழக்கமான கன்னடப் படம் போலல்லாமல் நவீன மலையாளத் திரைப்படத்துடன் ஒப்பிடும் அளவுக்கு, சில காட்சிகளில் அதையும் தாண்டி நன்றாகவே இருந்தது கருட கமனா. தமிழ்ப் படங்களின் மேக்கிங் தரத்துடன்! ஆனாலும் உலிதவரு கண்டெந்தே இதைவிடப் பல மடங்கு நல்ல படம்.

இப்படி ஒரு பின்னணியில் பாப்கார்ன் மன்க்கி டைகர் பார்த்தேன் – என்ன சொல்ல! உலிதவரு கண்டெந்தெ போல மிகச் சிறப்பான படம் என்று சொல்ல முடியாவிட்டாலும், சந்தேகமே இல்லாமல் மிக வித்தியாசமான படம். முதல் காட்சியில் இருந்து கடைசிக் காட்சி வரை ரத்தம், வன்முறை, கொலைதான். ரிவர்ஸ் க்ரொனாலஜிகல் முறையில் படத்தை எடுத்திருக்கிறார்கள் என்று கூகிள் சொல்கிறது. படம் முழுக்க அப்படி இல்லை. ஆனால் நிறைய காட்சிகள் அப்படித்தான். படம் முடிந்தாலும் கூட, இத்தனை நேரம் என்ன பார்த்தோம், ஏன் இத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்றெல்லாம் புரிவதே இல்லை. அல்லது எதோ ஒரு குழப்பம். பின்பு நீண்ட நேரம் யோசித்துத்தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. படம் வெளிவந்தபோது (2020) தியேட்டரில் கதறிக்கொண்டேதான் பலர் போயிருக்கிறார்கள். விஸ்வரூபம் பலருக்குப் புரியவில்லை என்று சொன்னது நினைவுக்கு வருகிறது. இப்படம் அதைப் போல பத்து மடங்கு புரியாது. படம் பார்த்துவிட்டு யூ ட்யூப்பில் பல வீடியோக்களைத் தேடிப் பிடித்துப் பார்த்து, நான் நினைத்தது சரியா என்று உறுதிப்படுத்த வேண்டியதாயிற்று. இதனாலேயே பலருக்குப் புரியாத படமாகவும், சிலருக்கு மிகவும் முக்கியமான படமாகவும் ஆகிவிட்டிருக்கிறது இத்திரைப்படம்.

இப்படி புதிர் போன்ற ஒரு படத்தைப் பார்க்க விரும்புகிறவர்கள், மூளைக்கு வேலை வைக்கும் திரைப்படத்தைப் பார்க்கும் பொறுமை உள்ளவர்கள் தவறவிடக் கூடாத படம் இது. இப்படத்தில் வரும், குழந்தை காணாமல் போகும் தொடர் காட்சிகள் பதற வைக்கும் சோகக் கவிதை என்றே சொல்லவேண்டும். இடைவேளையின் போது அக்குழந்தை அழுதுகொண்டிருக்கும் அந்தச் சட்டகம் என்றும் மறக்கமுடியாத ஒன்று. அதே போல் டைகர் சீனு கதாபாத்திரத்துடன் இணையும் நான்கு பெண் பாத்திரமும் மிகவும் நேர்த்தியாகப் படைக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் மனைவியின் கதாபாத்திரம் மிக அருமை.

நேரம் இருப்பவர்கள், பொறுமை இருந்தால் மட்டும், இப்படத்தைப் பாருங்கள். நான் ஸீ5ல் பார்த்தேன்.

*

ரத்னன் ப்ரபஞ்ச (க)

முன்பின் தெரியாத ஒரு திரைப்படத்தை ஏன் பார்க்கிறோம் என்பதே கொஞ்சம் ஆச்சரியமான விஷயம்தான். நேற்றிரவு தூக்கம் வராத நேரத்தில் பார்த்த கன்னடத் திரைப்படம் ரத்னன் ப்ரபஞ்ச. (ரத்னனின் உலகம்) இதன் டிரைலர் தற்செயலாகக் கண்ணில் பட்டது. தொடர்ச்சியாக வசவுச் சொற்கள். போளி மகனே, திக்கா முச்கொண்டிருத்தீரா, முள்ஹந்திமுண்டேகண்டி என்றெல்லாம் காதில் விழவும், ஆர்வமாகப் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். போளி மகனே டப்பிங்கில் தட்டி மகனே ஆகிவிட்டது. திக்கா வரவே இல்லை. ஆனாலும் படத்தை முழுக்கப் பார்த்தேன்.

திணிக்கப்பட்ட கதை. ஹீரோவின் அம்மாவின் அதீத நடிப்பு. இதைப் பொறுத்துக்கொண்டால், கன்னடம் கொஞ்சமேனும் தெரியும் என்றால், முழுக்கப் பார்த்துவிடலாம். காஷ்மீரில் நடக்கும் காட்சிகளில், கதாநாயகியின் அம்மா என ஒரு transgenderஐ அறிமுகப்படுத்த, அந்த 2 நிமிடக் காட்சிகள் இனிமை.

அதைத் தொடர்ந்து வரும் உத்ர கர்நாடகக் காட்சிகள் இத்தனை நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கவே இல்லை. நல்லவேளை, தவறவிடாமல் பார்த்தோம் என்று நினைக்கும் அளவுக்கு நன்றாக இருந்தது. குறிப்பாக உத்ர கர்நாடகத்தின் பேச்சு வழக்கு. உத்ர கர்நாடகத்தின் பேச்சு வழக்குக்காகவே பற்பல வீடியோக்களை தேடி தேடிப் பார்த்திருக்கிறேன். இப்படத்திலும் என்ன அழகு! ஹீரோவின் தம்பியாக வரும் நடிகரின் நடிப்பு மிக நன்றாக இருக்கிறது. ஹீரோ தனஞ்சயாவின் நடிப்பும் அருமை.

இறுதிக் காட்சிகளில் நெஞ்சை நக்க வைத்து, வளர்ப்புத் தாயை நினைத்து மகன் ஏங்குவதோடு சுபமாக முடித்து வைக்கிறார்கள். பெற்றால் மட்டுமே அம்மா அல்ல என்பதை மூன்று பகுதிகளாக ஆழ உழுதிருக்கிறார்கள்.

உத்ர கர்நாடகக் காட்சிகளுக்காகவும், படம் முழுக்க உடன் வரும் சொக்க வைக்கும் ஒளிப்பதிவுக்காகவும், நேரம் இருப்பவர்கள் பார்க்கலாம். பிராமணப் பையனின் அக்கா முஸ்லீமாக இருந்தும் எவ்வித மதப் பிரச்சினைகள், வம்புகளுக்குள் போகாமல், அது அதை அப்படியே காட்டி இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவலுக்காக.

*

நீண்ட நாள்கள் கழித்து இரண்டு மலையாளப் படங்கள் பார்த்தேன். கடந்த 8 மாதங்களில் நான் இன்னும் பார்க்காத பல தமிழ்ப்படங்கள் அப்படியே இருக்கின்றன. என்னவோ ஒரு மனவிலகல். இப்போது பார்த்த இரண்டு மலையாளப் படங்கள் பீமண்டெ வழி மற்றும் மின்னல் முரளி.

பீமண்டெ வழி – வளவளவென்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். உண்மையில் இப்படிப் பேசிக்கொண்டே இருக்கும் மலையாளப் படத்தைப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டே பார்க்க ஆரம்பித்தேன். படம் சுமார். அரை மணி நேரத்தில் எடுத்து முடித்திருக்கவேண்டியதை இழு இழு என்று இழுத்து, ஒரு வழியாய் முடித்து வைத்தார்கள். ஜினு ஜோசப்பின் நடிப்பு மிரட்டல்! கடைசி காட்சியில் ஜினு ஜோசப்பை அந்த குண்டுப் பெண் தூக்கி அடிக்கும் காட்சியில் வாய் விட்டுச் சிரித்தேன். மற்றபடி சிரிக்க ஒரு காட்சி கூட படத்தில் இல்லை.

மின்னல் முரளி – ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால் மிரட்டல். சூப்பர் மேன் படங்கள் வந்து குவிந்து விட்டிருக்க, அதே பாணியில் ஒரு படத்தை இத்தனை விறுவிறுப்பாகவும் அட்டகாசமான திரைக்கதையுடனும் எடுக்கவேண்டுமென்றால், அது எத்தனை கஷ்டம்? ஆனால் இதை மிக எளிதாகத் தாண்டி இருக்கிறார்கள். குரு சோம சுந்தரத்தின் நடிப்பு அற்புதம். தமிழனைக் கொன்று மலையாளி கடவுள் ஆகிறான் என்றெல்லாம் யாரும் வரப்புத் தகராறுக்குப் போகாமல் இருந்ததன் காரணம், கள படத்தில் தமிழன் மலையாளியை ஓட ஓட விரட்டி அடித்தாலோ என்னவோ. டொவினோ தாமஸ் எத்தனை நடித்தாலும் எனக்கு ஏனோ ஓட்டவே ஒட்டாது. ஆனால் மின்னல் முரளியில் கலக்கிவிட்டார். தவறவிடக் கூடாத படம் இது.

Share

Comments Closed