ஓபிஎஸ்ஸின் தியானம் அல்லது திடீர்ப் புரட்சி

அடுத்து என்ன?

எப்படியும் இன்று ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவார். அடுத்த பொதுத் தேர்தலுக்கு நான்கரை வருடங்கள் உள்ள நிலையில், இதே வேகத்தை மக்கள் மத்தியில் நீட்டித்து வைத்திருப்பது சாத்தியமே இல்லாதது. ஓபிஎஸ் பின்னால் ஒரு எம் எல் ஏ கூட வரமாட்டார் என்பதுவே இப்போதைய நிலை. ஒருவேளை ஒரு எம் எல் ஏ கூட வரவில்லை என்றால், ஓபிஎஸ் என்ன செய்வார் என்பதைவிட எதிர்க்கட்சிகள் அவரை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே முக்கியத்துவம் பெறும். ஏனென்றால் மக்கள் ஆதரவை நிரூபிக்க நான்கரை வருடங்கள் காத்திருக்கவேண்டும். நான்கரை வருடங்கள் என்பது அரசியலில் மிக நீண்ட காலம். ஜெயலலிதா மறைந்து இரண்டு மாதங்களில் என்னவெல்லாம் நடந்திருக்கிறது என்று பாருங்கள். அதுவே ஜெயலலிதா ஆண்ட ஐந்தரை ஆண்டுகளில் (ஜெயலலிதாவின் தனிப்பட்ட வழக்கு விவகாரங்கள் நீங்கலாக) இப்படி பரபரப்பாக பெரும்பாலும் எதுவும் இல்லை என்பதையும் யோசித்துப் பாருங்கள். அரசியல் உறுதித்தன்மை இல்லாதபோது சிறுநிகழ்வு கூட பெரிய உருவம் கொள்ளும். அதைத்தான் கட்சிகள் பயன்படுத்திக்கொள்ளும்.

ஒரு கட்சியின் வளர்ச்சி அக்கட்சியின் உள்ளார்ந்த வளர்ச்சியைப் பொருத்தது என்பதோடு, போட்டிக் கட்சியின் தாழ்விலும் அமையும். இன்னொரு கட்சியின் அழிவுக்கு நாங்கள் எதுவும் செய்யமாட்டோம் என்று வெளியில் பேசிக்கொண்டாலும், உள்ளே குழிப்பறி வேலைகள் நடந்தவண்ணம் இருக்கும். இதில் வெளிப்படைத்தன்மையுடன் உள்ள நேர்மையான செயல்களும், மோசமான நடவடிக்கைகளும் அடங்கும். அரசியல் இப்படித்தான்.

சசிகலா முதல்வராகப் பதவி ஏற்கும் பட்சத்தில், அவர் எப்படியும் ஆறு மாதத்துக்குள் ஒரு தொகுதியில் நின்று எம் எல் ஏவாக வென்றே ஆகவேண்டும். அத்தொகுதியில் ஓபிஎஸ் நிற்கவேண்டும். இது சசிகலாவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தலாம். ஓபிஎஸ் மனதில் வேறு பெரிய எண்ணங்கள் இருக்குமானால், நல்ல ஒரு வேட்பாளரை நிற்கவைக்கலாம். ஒருவேளை ஓபிஎஸ் நின்று தோற்றுப் போனால், உடனடியாக அவரது அரசியல் வாழ்வு பின்னடைவு கொள்வதை இது தடுக்கலாம். வேறொரு வேட்பாளரை நிறுத்தும்போதோ அல்லது ஓபிஎஸ்ஸே நிற்கும்போதோ, திமுக தன் வேட்பாளரை நிறுத்தாமல், தன் ஆதரவை ஓபிஎஸ்ஸுக்கு அளிப்பதன்மூலம் சசிகலாவின் தோல்வியை உறுதி செய்யலாம். இதை ஸ்டாலின் செய்வது திமுகவுக்கும் ஒரு வகையில் நல்லது.

சசிகலாவின் தோல்வி அவரது முதலமைச்சர் கனவைத் தூளாக்குவதோடு, அதிமுகவின் வளர்ச்சிக்கும் பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தும். இது ஸ்டாலினின் உடனடி வளர்ச்சிக்கு நல்லது. திமுக வேட்பாளரை ஓபிஎஸ் ஆதரிக்கட்டும் என்று கருணாநிதி பாணியில் யோசிக்காமல், தன் சிறுநலனை விட்டுக்கொடுத்து பெரிய நலனில் அக்கறை கொள்வது ஸ்டாலினுக்கு நல்லது. இதனால் ஏற்படப்போகும் இன்னொரு நன்மை, ஓபிஎஸ்ஸின் திடீர்ப் புரட்சிக்குப் பின்னால் திமுக உள்ளது என்று சொன்னவர்கள் இதைக் கையில் எடுத்துக்கொள்வார்கள். இதனால் ஓபிஎஸ்ஸுக்கு ஒரு தர்ம சங்கடம் ஏற்படும். இன்னுமொரு நன்மை, தொடர்ச்சியாக ஸ்டாலினைச் சுற்றி நிகழும் அரசியல். இவற்றையெல்லாம் மனதில் வைத்து ஸ்டாலின் முடிவெடுக்கவேண்டும்.

இதில் ஒரு பின்னடைவு ஸ்டாலினுக்கு உள்ளது. திமுக போட்டியிடாத நிலையில், ஏதேனும் ஒரு கட்சி கொஞ்சம் அதிகம் செல்வாக்குடன் இரண்டாவது இடத்துக்கு வரும். இடைத்தேர்தல்தான் என்பதாலும் அடுத்து வரும் பொதுத்தேர்தலில் திமுக எளிதாக முதலாவதாகவோ இரண்டாவதாகவோ வரும் என்பதால் திமுக அல்லாத ஒரு கட்சி இரண்டாம் இடத்துக்கு வருவது மிகத் தற்காலிகமே என்பதாலும் இந்தச் சிறிய பின்னடைவை ஸ்டாலின் பொறுத்துக்கொள்ளலாம்.

இந்த உடனடி நன்மையைக் கணக்கில் கொண்டால் மட்டுமே ஓபிஎஸ் மூலம் கொஞ்சம் அறுவடையைத் தமிழ்நாடு பெறும். இல்லையென்றால் இந்தப் புரட்சி ஒருநாள் புரட்சியாக மட்டுமே வரலாற்றில் தேங்கிப் போகும்.

சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றால், இது எதுவுமே தேவை இல்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெறாவிட்டால், மேலே உள்ளதைத் தவிர வேறு வாய்ப்புகளை யோசிக்கமுடியவில்லை.

Share

Comments Closed