கிட்டத்தட்ட மூன்று நாள்களில் 700 பக்கம் உள்ள தூக்கு செல்வம் எழுதிய ‘தூக்குக் கைதியின் வாக்குமூலம்’ என்ற புத்தகத்தைப் படித்து முடித்தேன். இத்தனை விரிவான குற்றப் பின்னணியையும் சிறை வாழ்க்கையும் இவ்வளவு விறுவிறுப்பாகச் சொல்லி இருப்பது பாராட்டுக்குரியது. அதைவிட பாராட்டுக்குரியது, இதைத் தைரியமாக வெளியிட்டிருக்கும் கிழக்குப் பதிப்பகத்தின் துணிச்சல். என்னிடம் கேட்டிருந்தால் நான் ஒரு பதிப்பாளராகக் கொஞ்சம் யோசித்திருப்பேன். அத்தனை தூரம் பல பிரச்சினைக்குரிய விஷயங்கள் இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.
ஒரு வாசகனாக இந்தப் புத்தகத்தை நான் படிக்கும்போது அடிக்கடி என் மனதில் நான் சொல்லிக் கொண்டது, ‘குற்றவாளி எப்போதுமே குற்றவாளிதான், தீவிரவாதி எப்போதுமே தீவிரவாதிதான், பயங்கரவாதி எப்போதுமே பயங்கரவாதிதான்; இவர்களை ரொமாண்டிசைஸ் செய்வது எந்தக் காலத்திலும் நிகழவே கூடாத ஒன்று’. இப்படிச் சொல்வதால் இந்தப் புத்தகம் ஒரு குற்றவாளியை ரொமான்டிசைஸ் செய்கிறது என்பதல்ல; அப்படி ஓர் எண்ணம் இதைப் படிப்பவர்களுக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான்.

இந்தப் புத்தகத்தின் ஒரு பிரச்சினையாக நான் பார்ப்பது — ராஜிவ் கொலை விவகாரத்தில் ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டபோது உண்மையில் அவர்கள் நிரபராதி என்று சொல்லி விடுவிக்கப்படவில்லை. மாறாக அவர்கள் நீண்ட காலம் சிறையில் இருந்தார்கள் என்பதற்காகத்தான் விடுவிக்கப்பட்டார்கள். ஆனால் பொதுமக்கள் நோக்கில் அவர்கள் ஏதோ நிரபராதி என்பது போலக் காட்சிப்படுத்தப்பட்டார்கள். அவர்களும் பல இடங்களில் தாங்கள் நீண்ட காலம் சிறையில் இருந்ததால் மட்டுமே விடுதலை ஆனோம் என்பதைச் சொல்லாமல் தவிர்த்தார்கள். இந்தப் புத்தகத்திலும் அந்தக் குழப்பம் உள்ளது. குற்றம் செய்ததற்காகத்தான் உள்ளே சென்றோம் என்பதும், கூடவே நிரபராதிகளான தாங்கள் செய்யாத குற்றத்திற்குத் தண்டனை அனுபவிக்கிறோம் என்பதும் மாறி மாறி சொல்லப்பட்டிருக்கிறது. இது பெரிய குழப்பம். இப்படிச் சொல்வதற்கு ஏற்றாற் போல் இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு கொலை செய்ய திட்டமிடப்படுவது சொல்லப்படும் போதே, அடுத்த நாள் கொலை பற்றிய செய்திதான் சொல்லப்படுகிறது. ஒரு திரைக்கதையின் நுணுக்கத்துடன் இது எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் வாசகன் ஏமாளி அல்ல. இது இந்தப் புத்தகத்தின் எழுத்தாளருக்கும் தெரியும். ஏனென்றால் அவரே ஒரு தேர்ந்த வாசகர்தான்.
இவற்றையும் மீறி இந்தப் புத்தகம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? இத்தனை விரிவாக இத்தனை ஆழமாகச் சிறை குறித்த விவரங்கள் தமிழில் அபூர்வம். ஒன்றிரண்டு புத்தகங்கள் சிறை வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகின்றன என்றாலும், இந்த அளவுக்கு ரத்தமும் சதையுமாகச் சொல்லும் புத்தகம் குறைவு. இந்தப் புத்தகம் கிட்டத்தட்ட ஒரு என்சைக்ளோபீடியா போன்று அமைந்திருக்கிறது. இனி எடுக்கப் போகும் திரைப்படங்களுக்கும் வெப் சீரிஸுகளுக்கும் இந்தப் படமே வழிகாட்டியாக இருக்கப் போகிறது. அந்த அளவுக்கு இதில் விவரணைகள் இருக்கின்றன. நமக்குத் தெரியாத பல சிறிய சிறிய சட்ட நுணுக்கங்கள் கூடத் தெளிவாக இதில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. அந்த அளவில் இந்தப் புத்தகம் பெரிஅ அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தப் புத்தகத்தின் இன்னொரு முக்கியத்துவம், வெளியில் இருந்து பத்திரிகைகள் வாயிலாக நாம் அறிந்த பல தலைவர்கள் / குற்றவாளிகள் பற்றிய இணை சித்திரத்தை உருவாக்குவது. சில சமயங்களில் நாம் ஏற்கெனவே அறிந்திருக்கும் சித்திரத்திற்கு வலுச் சேர்க்கிறது அல்லது மொத்தமாகப் புரட்டிப் போடுகிறது.
உண்மையில் சொல்லப்போனால் இவை அனைத்தையுமே கிழக்குப் பதிப்பகம் முன்பே வெளியிட்டிருக்கும் ‘அடியாள்’ (ஜோதி நரசிம்மன் எழுதியது) என்ற புத்தகம் செய்துவிட்டது. அந்தப் புத்தகத்திற்கு நான் எழுதிய நீண்ட விமர்சனத்தில் இவை அனைத்தையுமே நான் குறிப்பிட்டிருக்கிறேன். அந்தப் புத்தகத்துக்கும் இந்தப் புத்தகத்திற்கும் உள்ள வேறுபாடு, அந்தப் புத்தகத்தை எழுதிய ஜோதி நரசிம்மன் 21 நாள்கள் மட்டுமே சிறையில் இருந்தார். ஆனால் தூக்குச் செல்வம் கிட்டத்தட்ட 31 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார். ஜோதி நரசிம்மன் சிறிய அடிதடி வழக்கில் உள்ளே போனவர் என நினைக்கிறேன். ஆனால் தூக்கு செல்வம் தூக்குத் தண்டனை கைதியாக இருந்து, பின்னர் ஆயுள் கைதியாக இப்போதும் இருந்து வருகிறார். எனவே ஒரு மடுவுக்கும் மலைக்குமான வித்தியாசம் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.
‘அடியாள்’ புத்தகத்துக்கும் இந்தப் புத்தகத்துக்கும் உள்ள மிகப்பெரிய ஒற்றுமை பிரேமானந்தா பற்றிய சித்திரம். ‘அடியாள்’ புத்தகம் சொன்னதை இந்தப் புத்தகம் விரிவாகப் பதிவு செய்கிறது. கடைசி வரை சிறையிலேயே இருந்து செத்துப்போன பிரேமானந்தா, கைதிகளின் பார்வையில் மிகவும் நல்லவராக மீண்டும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கான ஒரு கூடுதல் காரணத்தையும் தூக்கு செல்வம் இந்தப் புத்தகத்தில் வாய்மொழியாகக் கேட்டதை வைத்துப் பதிவு செய்திருக்கிறார். இந்தப் புத்தகத்தில் தூக்கு செல்வம் பதிவு செய்திருப்பது அத்தனையுமே வாய்மொழியாகக் கேட்டவை. அல்லது அவர் கண்ணால் கண்டவை. எனவே அதை எந்த அளவுக்கு நாம் நம்ப வேண்டும் என்பது அவரவர் பார்வையிலும் அவரவர் நிலைப்பாட்டிலும் நிச்சயம் மாறும். ஆனாலும் இதை தூக்கு செல்வம் பதிவு செய்திருக்கிறார் என்பதுதான் முக்கியமானது. பின்னாளில் இவை மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படும் ஒரு குறிப்பாகவும் மாறும் வாய்ப்புள்ளது. ஆம், பிரேமானந்தா சிறைக்குள்ளேயே ஒரு சிவன் கோயிலையும் கட்டிக் குடமுழுக்கு செய்து வைத்திருக்கிறார், இன்றும் அந்தக் கோவில் இருக்கிறது என்கிறார் செல்வம்.
பிரேமானந்தா பிராமணராக இருந்திருந்தால் இது நடந்திருக்காது என்று பிரேமானந்தாவிடம் சொல்லும் பெரியாரிஸ்ட் செல்வம் தன் கூற்றைத் தனக்குத் தெரியாமல் தானே மறுக்கிறார், ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளின் கூற்றின் மூலமாக. ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் குறித்தும் சங்கரராமன் குறித்தும் தூக்கு செல்வம் எழுதி இருக்கும் இரண்டு வரிகள் முக்கியமானவை. அப்புதான் அடியாள் மூலம் கொலை செய்தார் என்று தன்னிடம் வாய்ப்பேச்சில் அப்பு கூறியதாக எழுத்தில் பதிவு செய்திருக்கிறார் செல்வம்.
இந்தப் புத்தகத்தின் ஆச்சரியம் என்னவென்றால் இத்தனை தீவிரமான குற்றச்சாட்டுகளை அதாவது பெயர் சொல்லியே காவல்துறைக்காரர்கள் மீது தூக்கு செல்வம் வைக்கும் குற்றச்சாட்டை எப்படிப் புத்தகமாக்க அனுமதித்தார்கள் என்பதுதான். சிறைக் காவலர்களுக்கு தெரியாமலேயே குறிப்புகள் அனைத்தும் வெளியே கொண்டு வரப்பட்டுப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தூக்கு செல்வம் எழுதுகிறார்.
சில இடங்களில் தூக்கு செல்வம் வரம்பு மீறி எழுதியிருக்கிறார் என்பதுதான் என் பார்வை. ஆதாரம் இல்லாத நிலையில் ஒற்றைப் பார்வையாக அதை அவர் சொல்லும் உரிமை அவருக்கு உண்டு என்றாலும், படிக்கும் போது நமக்கு பகீர் என்று இருக்கிறது. அதேசமயம் சிறைத் துறைக்குள்ளே எந்த அளவுக்கு ஊழலும் அராஜகங்களும் இருக்கின்றன என்பதும் நமக்குப் புதிதல்ல. இன்னும் சொல்லப்போனால் நாம் எதிர்பார்ப்பதை விட மிகவும் சீரழிந்து கிடைக்கிறது சிறைத்துறை என்பதுதான் இந்தப் புத்தகம் நமக்குச் சொல்லும் ஒரே செய்தி. இதில் நீதித்துறையையும் தூக்கு செல்வம் சேர்த்துக் கொள்கிறார். அதற்கான காரணங்களை அவர் விரிவாக அடுக்குகிறார். ஆதாரங்களையும் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியிருக்கிறார். ஆனால் அத்தனையையும் மீறி நான் இன்னும் நீதிமன்றத்திடம் நம்பிக்கை இழந்து விடவில்லை என்பதால் தூக்கு செல்வத்தின் கருத்துக்களை பின்ச் ஆஃப் சால்ட்டுடன்தான் எடுத்துக் கொண்டேன்.
அதே சமயம் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து செல்வம் சொல்லும் ஆதாரங்கள் அனைத்தும் கவனிக்கப்பட வேண்டியவை. ராஜிவ் கொலை விவகாரத்தில் ஏழு பேர் விடுவிக்கப்பட்டார்கள் என்றால், அதைவிட அதிகக் காலம் சிறைத் தண்டனை அனுபவிக்கும் கைதிகளை விடுவிக்காதது ஏன் என்பது ஓர் உதாரணம். இது போன்று அவர் பல வழக்குகளில், ஒரே குற்றத்தன்மை உள்ள வழக்குகளில் கூட, வெவ்வேறு மாதிரியான தீர்ப்புகள் வருவதைக் கேள்வி கேட்கிறார். ஆனால் நீதி என்பது நீதிபதிகளுக்குத் தரப்படும் சாட்சியையும் பின்னணியையும் வைத்து மட்டுமே சொல்லப்படுவது. இதைப் புரிந்து கொண்டால்தான் நாம் மேற்கொண்டு பேச முடியும். அதே சமயம் இதைக் கூடுதலாக நாம் அழுத்தமாகச் சொல்ல முடியாததற்குக் காரணம், நீதித்துறையிலும் புரையோடி இருக்கும் ஊழல்கள்.
ஒரு வலுவான ஆதாரத்தைச் சொல்ல வேண்டும் என்றால், அஸ்ஸாமில் இருந்த சிறைக் கைதி Machang Lalung 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலேயே இருந்திருக்கிறார். 1951ல் சிறைக்குச் சென்ற அவர் 2007ல் அவரது 77 வது வயதில் வெளியே வருகிறார். நீதித்துறை அவருக்கு நடந்த அநீதியை ஏற்றுக்கொண்டு தண்டப் பணம் தந்திருக்கிறது. பென்சனும் தந்திருக்கிறது. ஆனால் அடுத்த ஒன்றரை வருடங்களில் அவர் இறந்து விடுகிறார். இந்தக் குறிப்புகளை எல்லாம் செல்வம் சொல்லாவிட்டாலும், அவர் பெயரை மட்டும்தான் சொல்கிறார் என்றாலும், செல்வம் கேட்கும் கேள்வி நியாயமானது. இந்த அநியாயமான சிறைத் தண்டனைக்கு யார் பதில் சொல்வது?
குற்றவாளிக்கு ஒரு தண்டனையை நீதிபதி கொடுத்தால் அந்தத் தண்டனைக் காலத்தை வரையறுக்க வேண்டிய கட்டாயமான ஒரு காலகட்டத்திற்குள் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மூன்று ஆயுள் தண்டனைகளைக் கொடுத்துவிட்டு ஒவ்வொரு ஆயுள் தண்டனை முடிந்த பின்பாக அடுத்த ஆயுள் தண்டனை என்று தரும் தீர்ப்பையும் கேள்வி கேட்கும் செல்வம், அதே நீதிபதியே பிற்காலத்தில் தான் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக, ஏகபோக காலத்தில் இந்த மூன்று தண்டனைகளையும் அனுபவிக்க வேண்டும் என்று சொல்லி, ‘ஒரு ஆயுள் தண்டனை முடிந்த பிறகு இன்னொரு ஆயுள் தண்டனை என்பது எப்படிச் சரியாகும்’ என்று கேள்வி எழுப்பிய முரணைச் சுட்டிக் காட்டுகிறார்.
இப்படிப் பல முரண்களைத் தனக்கு ஏற்ற வகையில் செல்வம் கடுமையாக எடுத்து வைப்பது ஆச்சரியப்படுத்துகிறது. அவரே எழுதியிருந்தால் அவரை நிச்சயம் பாராட்ட வேண்டும். பின்னணியில் யாரேனும் உதவி இருந்தால் அவர்களையும் பாராட்ட வேண்டும். ஏனென்றால் தன் தரப்புக் கருத்துகளை இத்தனை வலுவாக வைப்பது அத்தனை எளிதானதல்ல.
இந்தப் புத்தகத்தில் தவிர்த்திருக்கப்பட வேண்டியதாக நான் நினைப்பது, மனமொத்து நடக்கும் காம விஷயங்கள். இதனால் சட்ட ரீதியாகப் பிரச்சினை மட்டும்தான் நாம் அதைப் பற்றிப் பேச வேண்டும். அப்படி இல்லாத நிலையில் அது விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றே அல்ல. ஆனாலும் தனது முதல் புத்தகம் மட்டுமே தனது ஒரே புத்தகமாக இருக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாக செல்வம் நினைத்தோ என்னவோ அத்தனையையும் இதில் பதிவு செய்ய நினைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
தூக்கு செல்வத்தின் பல்வேறு கருத்துகள் இன்றைய நிலையில் முற்போக்குகளாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் எழுத்தாளரின் குரலுடன் ஒத்துப் போவதைப் பார்க்கலாம். பல்வேறு அரசியல் வழக்குகளுக்காக உள்ளே வரும் எழுத்தாளர்கள் / அரசியல்வாதிகள் அத்தனை பேரும் தூக்கு செல்வத்தின் மீது தீராத தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். எனவே இரண்டு குரல்களும் ஒரே குரல் போல் ஒலிக்கின்றன. இந்த விஷயத்தில் உண்மையில் இந்துத்துவ இயக்கங்கள் தோற்றுப் போய்விட்டன என்று கூடச் சொல்லக்கூடாது, இதைப் பற்றி அவர்கள் யோசிக்கவே இல்லை என்பதுதான் உண்மை. ஆனால், தனக்குத் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டதற்கு நன்றி சொல்லும் செல்வம், அதில் ஜனா.கிருஷ்ணமூர்த்தி பெயரையும் சேர்த்திருக்கிறார். ஏனென்று எனக்குப் புரியவில்லை. ஒருவேளை அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்காக, சம்பிரதாயத்திற்காக நன்றி சொல்லி இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.
சிறையில் இருக்கும் குற்றவாளிகளிடம் பரிவுகாட்ட கன்னியாஸ்திரிகள் வருவதைப் பற்றிய குறிப்பு இந்தப் புத்தகத்தில் மின்னல் போல் வந்து செல்கிறது. வேறொரு சந்தர்ப்பத்தில் நான் இது குறித்து எழுதி இருக்கிறேன். இந்துத்துவ / பக்தி இயக்கங்கள் சிறைத்துறையைக் கண்டு கொள்வதே இல்லை. ஆனால் இஸ்கான் அமைப்பு சில விஷயங்களைச் செய்ததை நான் நேரடி அனுபவத்திலிருந்து கண்டு கொண்டிருக்கிறேன்.
இந்தப் புத்தகத்தில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால், சிறைத்துறைக்குள்ளே கிடைக்கும் உணவு வகைகள். வேகமாக வேகமாகப் படித்ததில் எனக்கு நினைவிருப்பவை — பன்றிக்கறி, ஆட்டுக்கறி, சாம்பார், பொரியல், உதிரிச் சோறு, கட்டுச்சோறு, பிரியாணி, ஒட்டகக் கறி, மீன் குழம்பு, கேக், காஃபி இன்னும் எத்தனையோ. இத்தனை விரிவாக எப்படி உணவு வகைகள் அனுமதிக்கப்படுகின்றன என்று புரியவில்லை. இது சட்டபூர்வமாக நடக்கிறதா அல்லது சட்டத்தைத் தாண்டி நடக்கிறதா அல்லது இரண்டுமேவா என்பது பற்றிய தெளிவு இந்தப் புத்தகத்தில் எனக்குக் கிடைக்கவில்லை. முதலைக் கறி உண்ட படலமும் இந்தப் புத்தகத்தில் சொல்லப்படுகிறது. இதைவிட அநியாயம் என்னவென்றால், இங்கே சமைத்து வீட்டுக்குக் கொடுத்து விட்டிருக்கிறார்கள். மாவீரர் தினம் கொண்டாட்டம் சிறைக்குள்ளே நடைபெற்றிருக்கிறது. சிறைத்துறைக் காவலர்கள் எந்த லட்சணத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு இந்தப் புத்தகம் வலுவான சாட்சி. இந்தப் புத்தகத்தில் செல்வம் பொய் சொல்லியிருக்கிறார் என்றும் கருத முடியாது. ஏனென்றால் அவர் அது நடந்த தினம், அங்கே இருந்த காவலர்கள் யார் என்ற பட்டியலோடுதான் சொல்கிறார்.
இத்தனை ஊழல்களிலும் என்னை அதிர வைத்தது, சிறைக்குள்ளேயே ஜாமின் தரும் போலி ஆவணத்தை உருவாக்கிய ஊழல்தான். இதைப்பற்றிக் கேள்விப்பட்டது சுத்தமாக மறந்து போய், இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது புதியதாகப் படிப்பது போலத்தான் தோன்றியது. நம்பவே முடியாத அளவுக்கு ஆட்டமாக ஆடி இருக்கிறார்கள்.
வெளியே இருக்கும் சாதிச் சண்டைகளே எத்தனையோ பரவாயில்லை என்னும் அளவுக்கு உள்ளே நடக்கிறது சாதிச் சண்டை. இந்தப் புத்தகத்தை எழுதியவர் கூட சாதி இல்லை என்பதை நம்புபவராக எனக்குத் தெரியவில்லை. ஒரு பப்பாளிக்காக ஜான் பாண்டியனுடன் நடக்கும் சண்டை. சந்திரலேகாவின் முகத்தில் அமிலம் எறிந்த சுர்லா என்னும் சுடலை முத்துத் தேவர். கராத்தே செல்வினின் அறிவுரை! எல்லாம் சாதி மயம். மதமாற்றம் சாதி இல்லாமலாக்கும் என்பதை மறுக்கும் லட்சமாவது ஆவணம்.
இன்னொரு அநியாயம், சிறைக்குள்ளேயே ஆபாசப் படம் பார்த்திருக்கிறார்கள். பணம் இருந்தால் எதுவும் நடக்கும் போல. பல இடங்களில் 18+ என்று சொல்லும் அளவுக்கான ஆபாசமான வார்த்தைப் பிரயோகங்கள் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன. சிறைத் துறையின் கதை என்பதால் அதைத் தவிர்க்க முடியாது. உண்மையைச் சொல்லப் போனால் மிகக் குறைவாகவே அதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். அதே சமயம் ஒரு அதிகாரியைப் பார்த்துக் காமம் கொள்ளும் இடத்தில் அந்த அதிகாரியின் பெயரைக் குறிப்பிட்டிருப்பதெல்லாம் கொஞ்சம் அதிகம் என்றுதான் நினைக்கிறேன். அதே போல் ஒரு நடிகையின் பெயரையும் சொல்லி இருப்பது. என்னதான் கருத்துச் சுதந்திரம் என்றாலும், என்னதான் உண்மை என்றாலும், அது இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. விடுதலைப்புலிகள் தங்களுக்குள்ளேயே சண்டை போட்டுக்கொண்டு, ராபர் ஃபயஸும் ஜெயக்குமாரும் முருகனுக்கு சயனைடு விஷம் வைத்துக் கொல்லப் பார்த்தார்கள் என்பதை எல்லாம் எப்படி எடுத்துக் கொள்வது? இதை முருகனே செல்வத்திடம் சொல்லி இருப்பதாகச் செல்வம் சொல்கிறார்.
புத்தகத்தின் தொடக்கம் முதல் பாதிப் புத்தகம் வரை கொலைகள் கொலைகள் கொலைகள்தான். திரைப்படங்களில் காண்பிப்பதெல்லாம் ஒன்றுமே இல்லை என்னும் அளவுக்கான தொடர் கொலைகள். மாறி மாறிப் பழி. நீதிமன்றத்திற்குள்ளே புகுந்து நீதிபதி முன்னாலேயே செய்யப்படும் கொலைகள். இதற்கு ஆயுள் தண்டனை தவறல்ல என்பதுதான் என் பார்வை. ஆனால் ஆயுள் தண்டனை பெற்ற சில குற்றவாளிகள் விடுதலையாகி வெளியே வரும்போது, அதைவிட அதிகக் காலம் தண்டனை அனுபவித்த ஒரு கைதி ஏன் வெளியே வரக்கூடாது என்பது நியாயமான கேள்விதான். இந்தப் புத்தகத்தின் அடிநாதம் இந்தக் கேள்விதான்.
தொடக்க காலத்திலேயே கைதாகாமல் இன்னும் 10-15 ஆண்டுகள் செல்வம் வெளியேவே இருந்திருப்பாரேயானால், நிச்சயமாக இந்நேரம் அமைச்சராக இருப்பார் என்றுதான் எனக்குத் தோன்றியது. அதற்கேற்ற அத்தனை தகுதியையும் அவர் வளர்த்துக் கொண்டிருக்கிறார். ஈவெராவைக் கடுமையாகத் திட்டும் அவர், ஒரு கட்டத்தில் ‘என் தலையில் பெரியார் அமர்ந்து கொண்டார்’ என்றும், இது பெரியார் மண் என்றும் சொல்லத் தொடங்கி விடுகிறார். கருணாநிதி தலைவர் என்கிறார். கருணாநிதி மேல் தீராக் காதல். கலைஞர் என்று மட்டுமே அழைக்கிறார்.
பல சிறைத்துறை மாற்றங்களைக் கொண்டு வந்த முதல்வர்களுக்கு நன்றி சொல்லும்போது, ஜெயலலிதா உட்பட அவர் அனைவருக்கும் நன்றி சொன்னாலும், கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் அவர் சொல்லும் நன்றி உண்மையிலேயே ஆத்மார்த்தமாகத் தெரிகிறது. அந்த அளவுக்கு திமுக ஆதரவாளராக இருக்கிறார். தொடக்கக் காலத்தில் குற்றச்செயல்கள் செய்த போது எந்தக் கட்சியையும் சாராதவராகவும்தான் இருந்திருக்கிறார். அப்போதும் கருணாநிதியே தலைவர். செல்வம் சிறைக்குச் சென்றதும் அவர் ஜாமீனுக்கும் ஆயுள் தண்டனைக் குறைப்புக்கும் உதவுவது திமுக எம்எல்ஏக்கள்தான். அவர்கள் பெயரையும் வெளிப்படையாகவே அவர் குறிப்பிட்டிருக்கிறார். அரசியலையும் ரௌடியிஸத்தையும் எந்தக் காலத்திலும் பிரிக்க முடியாது என்பதுதான் நிதர்சனம். அதற்கு இந்தப் புத்தகம் ரத்த சாட்சியம்.
சில சுவாரசியமான சம்பவங்களையும் செல்வம் குறிப்பிடுகிறார். அதில் என்னை வாய்விட்டுச் சிரிக்க வைத்தது — நயன்தாரா புத்தகம். ஒரு கைதி ஆபாசக் கதை எழுதி சரோஜாதேவி புத்தகம் போல அதற்கு நயன்தாரா புத்தகம் என்று பெயர் வைத்து அதைப் படிக்க 25 சிகரெட் வசூலித்திருக்கிறார்.
இன்னொரு அதிர்ச்சிகரமான சம்பவம், சிறைத்துறைக்கு நூல் வாங்கிச் செல்வது குறித்து. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சிறைத் துறை ஓர் அரங்கு அமைத்து, அங்கே புத்தகங்களை இலவசமாகத் தரலாம் என்று அறிவிப்பை வெளியிட்டது. அதற்குப் பெரிய ஆதரவு இருந்தது. பலர் புத்தகங்களை நன்கொடையாகத் தந்தார்கள். ஆனால் அப்படி வரும் புத்தகங்களில் பலவற்றைப் பல அதிகாரிகள் திருடிக்கொண்டு போய்விடுகிறார்கள் என்பதால், யாரும் இலவசமாகத் தராதீர்கள் என்கிறார் செல்வம். நாம் எங்கேயும் எதிலேயும் ஊழல் செய்வோம் என்பதற்கு இன்னுமொரு ஆதாரம் இது. உண்மையில் ஓர் அரசு நூலகத்துக்கோ அல்லது சிறைக்கோ புத்தகங்களை இலவசமாகத் தாருங்கள் என்று கேட்கக் கூசவேண்டும். புத்தகம் வாங்க அரசிடம் இல்லாத பணமா!
கடைசியில் செல்வம் சொல்லும் சில சிறைத் திருத்தங்களைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதானால் — அவற்றையெல்லாம் செய்தால் ஒரு கொலையோ கொள்ளையோ செய்துவிட்டு நாமே ஏன் சிறைக்குப் போகக் கூடாது என்ற எண்ணம் தோன்றி விடும்! அவர் சொல்லும் சில சீர்திருத்தங்கள் முக்கியமானவைதான் என்றாலும், ஒட்டுமொத்தமான சீர்திருத்தங்கள் சிறைக் கைதிகளுக்கான மனிதாபிமான அடிப்படையிலான பரிந்துரைகள் என்பதைத் தாண்டி, கிட்டத்தட்ட வெளியே இருப்பதைப் போன்ற சொகுசு உலகம் உள்ளேயும் வேண்டும் என்று ஆசைப்படுவதாகத்தான் தோன்றுகிறது. அதை பரிசீலிப்பது கூடத் தேவையில்லை தேவையற்றது என்பதே என் நிலை. அதேபோல் தூக்குத் தண்டனையே இருக்கக் கூடாது, ஒரு மனிதன் செய்த கொலைக்கு பதிலாக நீதிமன்றம் இன்னொரு கொலை செய்யக் கூடாது என்பதெல்லாம் ஏற்கவே முடியாதவை. அரிதிலும் அரிதான வழக்குகளில்தான் தூக்கு தரப்படுகிறது. நிர்பயா வழக்கில் கொலைகாரர்களின் பக்கத்தையும் (நியாயப்படுத்தி அல்ல) செல்வம் போன்றவர்கள் பேசினாலும், அதை ஏற்கவே முடியாது.
இந்தப் புத்தகத்தின் அறிவிப்பு வந்தபோது இந்தப் புத்தகம்தான் இந்தப் புத்தகக் கண்காட்சியின் பெஸ்ட் செல்லராக இருக்கப் போகிறது என்று நினைத்தேன். ஆனால் மிகப் பெரிய புத்தகம் என்பதால், அதனால் 800 ரூபாய் விலை என்பதால் அது நடக்காது என்றும் தோன்றியது. ஒருவேளை இந்தப் புத்தகம் சிறிய புத்தகமாக 250 ரூபாய் என்றளவில் வந்திருந்தால், இந்தப் புத்தகக் கண்காட்சியில் மட்டும் ஆயிரம் பிரதிகள் நிச்சயம் விற்றிருக்கும். ஏனென்றால் வன்முறையின் பக்கங்களைச் சொல்லும் நேரடிப் பதிவுகளுக்கு என்றைக்குமே ஓர் ஈர்ப்பு உண்டு. அது இந்தப் புத்தகத்தில் பக்கத்திற்குப் பக்கம் வார்த்தைக்கு வார்த்தை கொட்டிக் கிடக்கிறது.
இந்தப் புத்தகத்தைப் படிக்கும் நாம் செய்ய வேண்டியது எல்லாம், நாம் படிப்பது ஒரு வாக்குமூலத்தைத்தானே அன்றி, ஒரு பொய்யின் மறுபக்கத்தை அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான். ஏனென்றால், கஸாப், அஃப்ஸல் போன்றவர்கள் தூக்கிலிடப்படுவதற்கு முன்பான நிமிடங்களைப் படித்துக் கண்ணீருடன் நின்ற சமூகம் நம் சமூகம். அவர்கள் பயங்கரவாதிகள் என்று தெரிந்தும் நாம் கண்ணீர் விடுவதற்கான காரணம், நாம் பயங்கரவாதிகள் அல்ல, நல்லவர்கள் என்பதுதான். ஒரு புத்தகமோ ஒரு திரைப்படமோ அதைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டியது நம் பொறுப்பு.
I strongly recommend this book. அடுத்த 3 நாள்களுக்கு மட்டும் சுவாசம் புக்ஸ் வலைத்தளத்தில் இந்தப் புத்தகம் 15% தள்ளுபடியில் கிடைக்கும். லின்க் https://www.swasambooks.com/


