பேகம்களின் கண்ணீர்
பென்னேசன் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் முக்கியமான நூல். 1857ல் நடந்த சிப்பாய்ப் புரட்சிக்குப் பிறகு ஆங்கிலேய அரசு அன்றைய ஆட்சியாளர்களை எப்படிப் பந்தாடியது என்பதை விளக்கமாகப் பதிவு செய்யும் நூல். இப்புரட்சியை அடக்காதவர்கள் என்று நினைத்தோ அல்லது புரட்சிக்கு உதவி செய்தார்கள் என்று நினைத்தோ அல்லது ஜாஃபர் ஷா புரட்சியில் பங்கெடுத்தார் என்பதற்காகவோ அல்லது இவை எல்லாவற்றுக்குமாகவோ, அன்றைய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் பிரிட்டிஷ் அரசால் கொடூரமாக ஒடுக்கப்பட்டார்கள். அன்று உயிருக்காகத் தப்பிப் பிழைத்தவர்களின் நினைவை, அன்றிலிருந்து கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு பேட்டி எடுத்துத் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர் க்வாஜா ஹஸன் நிஜாமி.
இந்தப் பேட்டி எடுக்கப்படும்போது பலர் பிரிட்டிஷ் அரசு தரும் உதவித் தொகையான ஐந்துக்கும் பத்துக்கும் ஏங்கித் தங்கள் வாழ்க்கையைக் கழிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். தங்கள் அரசப் பாரம்பரியம் தங்கள் கண்முன்னே பறிக்கப்பட்டதை ரத்தமும் வலியுமாக இந்த நூலில் அவர்கள் பதிவு செய்கிறார்கள்.
தன் தந்தை தன் கண்ணெதிரே கொல்லப்பட்டதை, ரம்ஜானுக்கு வீட்டில் குந்துமணி கோதுமை கூட இல்லாததை, வேலைக்காரர்களை ஏவி ஏவி ராஜபோக வாழ்க்கை வாழ்ந்தவர்கள் கூலி வேலை செய்து பிழைப்பதை, உயிருக்கும் உடைமைக்கும் அஞ்சி மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு ஓடியதை எல்லாம் இந்தப் பதிவில் நாம் பார்க்கலாம்.
உருதுவில் இருந்து பென்னேசன் நேரடியாக தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். அனாவசியமான சொல்லாடல்களோ தேவையற்ற திருகல் மொழியோ இல்லை. இந்த நூலுக்குத் தேவையான நேரடி மொழி. மிகச் சிறப்பான பணியைச் செய்திருக்கிறார் பென்னேசன்.
இந்த நூல் படிக்கும்போது இன்னொரு நினைவும் ஒருசேர எழுந்துவந்ததை மறைக்க முடியாது.
இந்த நூலில் பேசுபவர்கள் அனைவரும் தாங்கள் செங்கிஸ்கானின் வம்சம், பாபரின் பேரர்கள் என்று பழம்பெருமை பேசுவதைத் தொடர்ந்து பார்க்கலாம். பாபரும் செங்கிஸ்கானும் இன்று பிரிட்டிஷ் அரசு இவர்களுக்குச் செய்த அதே கொடூரத்தை அன்று மற்றவர்களுக்குச் செய்தவர்கள்தான். அப்படிச் செய்துதான் இவர்கள் இந்த நாட்டில் காலூன்றவே முடிந்தது. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்று சொன்னவன் சும்மா சொல்லிவிட்டுப் போகவில்லை. வன்மத்துடன் நான் இதைச் சொல்லவில்லை, நிதர்சனம் இது என்கிற வகையில் சொல்கிறேன்.
கன்ஃப்யூஸ்ட் தேஸி என்பதைப் போல, இந்த வம்சாவளியினருக்குத் தாங்கள் யார் என்பதில் குழப்பம் இருக்கிறது. பழம்பெருமைகளில் தோயும்போது தங்களை பாபரின் சந்ததி என்று நினைத்துக்கொள்கிறார்கள். அதே சமயம் இந்தியாவே இவர்களது யதார்த்தமான தாய்நாடு என்பதும் இவர்களுக்குப் புரிகிறது. இந்த இரண்டு நிலைகளுக்கு இடையேயும் ஊடாடுகிறார்கள். பாவம்தான்.
இதில் ஒரு கதை என்னை மிகவும் கவர்ந்தது. பாதுஷாவின் மகள் ஒருவர் மெக்கா செல்கிறார். இவர் அரச வம்சம் என்பதால் மெக்கா சுல்தான் இவருக்கு வேண்டிய வசதிகளை எல்லாம் செய்து தருகிறார். தங்குவதற்கு வீடும், கூடவே மாதச் செலவுக்குப் பணமும் தருகிறார். இந்தியாவில் அல்லல்பட்டு மாதப் பணத்துக்காக பிரிட்டிஷ் அரசிடம் கையேந்த வேண்டிய தேவை இனி இல்லை. கூடுதலாக மெக்காவில் சுல்தானின் தயவால் மரியாதையும் கிடைக்கிறது. ஆனாலும் சில வருடங்களில் இவர் இந்தியா வருகிறார். தன் நாடு இந்தியா என்று உணர்வதால் அவரால் மரியாதையோடு கூட பாக்தாத்தில் வாழ முடியவில்லை. கன்ஃப்யூஸ்ட் தேசிகளுக்கு மத்தியில், பாபரின் வழித் தோன்றல் என்றாலும் தன் நாடு இந்தியா என்று வந்த அந்த மனிதருக்கு, இந்தக் கதையில் வரும் அத்தனை இன்னல்களும் சமர்ப்பணம் ஆகட்டும்.