Tag Archive for பல்

ஞானப்பல்

இரண்டு வருடங்களுக்கு முன்பே கடைவாய்ப்பல் கொஞ்சம் பிரச்சினை செய்தது. என்ன சாப்பிட்டாலும் பல்லில் சிக்கிக்கொள்ளும். இனியும் அடைக்கலைன்னா பலாச்சுளையே சிக்கிக்கும் என்று சுற்றி இருந்தவர்கள் சொல்ல ஆரம்பிக்கவும் டாக்டரைத் தேடிப் போனேன். டாக்டர் என்றாலே ஏமாற்றுபவர்கள் என்பதுதானே நம் எண்ணம்? அந்தப் பல்லில் பிரச்சினை இருக்கிறது, வேர் சிகிச்சை (ரூட் கானல்) செய்யவேண்டும் என்ற டாக்டரைப் புறந்தள்ளி, அடைச்சி மட்டும் விடுங்க என்று சொல்லி அடைத்துக்கொண்டேன். ஒன்றரை வருடங்கள் பிரச்சினை இல்லாமல் போனது. அடைத்துக்கொண்டது புட்டுக்கொள்ளவும் மீண்டும் டாக்டரிடம் போனேன்.

ஏஸி அறையில் அரை மணி நேரம் உட்கார வைத்தார்கள். டாக்டர் குடும்பத்தைப் பற்றியெல்லாம் அக்கறையாக விசாரித்தார். சே, ஜாதகத்தைக் கொண்டு வராம போயிட்டமே என்று என்னை நானே நொந்துகொண்டு அந்த டாக்டரின் அன்பில் நனைந்துகொண்டிருந்தேன். ஒரு எக்ஸ்ரே எடுத்துறலாம் என்று அதே அன்புடன் கூட்டிக்கொண்டு போய், அட்டகாசமான ஒரு எக்ஸ்ரே அறையில் வைத்து எக்ஸ்ரே எடுத்துவிட்டு மீண்டும் டாக்டர் அறைக்குக் கூட்டிப் போனார் புன்சிரிப்பு மாறாத உதவியாளர். எக்ஸ்ரே காப்பி கொடுங்க என்று கேட்கவும், சார், டெக்னாலஜி இம்ப்ரூவ்ட் அ லாட், டாக்டருக்கு மெயில் பண்ணிட்டோம் என்றார். டாக்டருக்குத் தலையைச் சுற்றி இருந்தது ஒளிவட்டம் அல்ல, பின்னால் இருந்த டிவியின் ஒளி என்று புரிந்தபோது அதில் என் பல் தன் தலையைக் காட்டியது. பாத்தீங்கன்னா உங்களுக்கு சின்ன வயசுல இருந்தே விஸ்டம் டீத் வளைஞ்சு இருக்கு, அது பக்கத்துப் பல்லு மேல படுத்து அதையும் கெடுத்துடுச்சு, இப்ப அந்த விஸ்டம் பல்லை எடுக்கணும், பக்கத்து பல்லை ரூட் கானல் பண்னனும், விஸ்டம் டீத் எடுத்தாச்சான்னா அதுக்கு இணையா இருக்கிற மேல் பல்லையும் எடுக்கணும் என்று அடுக்கிக்கொண்டே போக, எத்தனை பல் மிஞ்சும் என்ற அச்சத்தில் இருந்தபோது, நோ நோ எல்லாப் பல்லையும் எடுக்கமாட்டோம் என்ற டாக்டர் மீண்டும் என் குடும்பத்தைப் பத்தி விசாரிக்கத் துவங்கினார். மொத்தமா ஒரு மணி நேரம் போதும் எல்லாத்தையும் முடிச்சிடலாம், சண்டே காலைல வந்தா சாயங்கலாம் நீங்கபாட்டி ஹாயா படம் பார்க்கலாம், லீவே வேண்டாம் என்று என் அலுவலகத்துக்கு என்னைவிட அதிகம் கரிசனப்பட்டவர், என்னை மீண்டும் புன்சிரிப்பாளரிடம் அனுப்பி வைத்தார். அவர் என் குடும்பத்தைப் பற்றி விசாரித்துக்கொண்டே கொட்டேஷன் கொடுத்தார். உங்களுக்கு டிஸ்கவுண்ட் இருக்கு, டிஸ்கவுண்ட் போக ஜஸ்ட் 19,500 ரூபாய்தான், ரெண்டு பேமெண்ட்ல கொடுக்கக்கூட ஆப்ஷன் இருக்கு என்றார். ஒருத்தன் செத்தாலே மொதல் ரெண்டு காரியத்துக்கே அவ்வளவுதான ஆகும் என்ற எண்ணம் வந்தபோது ஏஸி குளிரெல்லாம் போய் வேர்க்கத் துவங்கியது. யோசிச்சிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு, எக்ஸ்ரே ஒரு ப்ரிண்ட் கொடுங்க என்று கேட்டேன். அதெல்லாம் அந்த சிடில இருக்கு என்று சொன்னார். முன்பெல்லாம் கரிய நிறத்தில் ஒரு வஸ்துவைத் தருவார்களே என்றெல்லாம் கேட்கத் தோன்றாமல் வெளியே வந்தேன். பற்கள் விரைத்திருந்தன.

நமக்கு அரசு ஆஸ்பத்திரிதான் சரியா வரும் என்று முடிவெடுத்தபோது, அரசு ஆஸ்பத்திரி பக்கம் ஒதுங்கியே 30 வருடத்துக்கு மேல் இருக்கும் என்ற எண்ணம் மனத்தில் வந்தது. நண்பர் ஒருவர், நன்றிக்குரியவர், உதவி செய்தும் ஏனோ அரசு ஆஸ்பத்திரி செட் ஆகவில்லை. ஆஸ்பத்திரிக்குளேயே நான்கைந்து கிலோமீட்டர்கள் நடந்ததுதான் மிச்சம்.

ஆனால் பல் பக்கத்துப் பல் மேல் மேலும் மேலும் இடித்துக்கொண்டே தன் வேலையைத் தொடர்ந்துகொண்டே இருந்ததால் மீண்டும் ஒரு டாக்டரிடம் போனேன். இந்த டாக்டர் நல்லா வாயைத் தொறங்க, இன்னும், இன்னும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். பழைய ஜோக்குகளெல்லாம் ஞாபகத்துக்கு வந்தது. ஐயோ என்று கத்தவும் நான் இன்னும் ஒண்ணுமே பண்ணலியே பிரதர் என்றவரிடம், உங்க ஃபோர்ஸ்டெப் என் உதட்டை அழுத்துறது உயிர் போகுது என்று சொன்னேன். ஸாரி ஸாரி என்றார். மீண்டும் என் ஞானப்பல்லைக் குறை சொன்னார். கூடவே உங்களுக்கு தாடையே சரி இல்லை என்றும் இந்தப் பக்க கடைவாய்ப்பல்லும் போச்சு என்றெல்லாம் சொன்னார். எதோ பொறந்துட்டேன், ப்ளீஸ் என நான் கெஞ்சுவதற்குள், கொட்டேஷன் இம்முறை 8,000 ரூபாய். சரி இதைச் செய்துவிடவேண்டியதுதான் என்று அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினேன். ஆச்சரியமாக, ஒரு நாளைக்கு முன்பு ஒரு எஸ் எம் எஸ், ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஒரு அழைப்பு என ப்ரொஃபஷனலிஸம் காட்டி அசத்தினார்கள்.

வாய்க்குள் ஊசி போடுவார்கள் என்ற எண்ணம் தந்த பயத்தை கெத்தாக மறைத்துக்கொண்டிருந்தபோது பையன் சனியன் சரியாக, ரொம்ப பயமா இருக்காப்பா என்றது. கூடவே எனக்கெல்லாம் இப்படித்தான் ஸ்கின் டெஸ்ட்டுக்கு எடுத்தாங்க, வலிக்காது என்றான். சைத்தானே தூரப்போ என்று சொல்லிவிட்டு மருத்துவரின் ஊசிக்குத் தயார் ஆனேன். ஊசி வலிக்கவே இல்லை, சுத்தமாக வலிக்கவில்லை. கடைவாய்ப் பல்லுக்குப் பக்கத்துப் பல்லுக்கு செய்யப்பட்ட ரூட் கானலும் சுத்தமாக வலி இல்லை. வாய் மரத்துப் போயிருந்தது. உதட்டைத் தொட்டால் பத்து ஊர் தள்ளி இருக்கும் யார் உதட்டையோ தொட்டது போலிருந்தது. இவ்ளோதானா, இவ்வளவேதானா, இதுக்குப் போயா என்று நினைத்துக்கொண்டேன். மறுநாள் கடைவாய்ப்பல்லை எடுக்க நாள் குறித்தார் டாக்டர். சரியான நேரத்துக்கு துள்ளிக் குதித்துப் போய், லேட்டாகுமா டாக்டர் என்றேன்.

இந்த முறையும் ஊசி வலிக்கவில்லை. டாக்டர் பல்லைப் பிடுங்கியது யாரோ ஒருவர் வீட்டில் செங்கல்லை பிடுங்கியது போலத்தான் இருந்தது. எனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல. இவ்ளோ ஈஸியா பல் பிடுங்குவது, வாவ். என் மாமா பையன் என்னிடம், சைஸ் மாத்தி சைஸ் கொறடு போட்டு இழுத்து அப்படியே உன் தலையைப் பிடிச்சிக்கிட்டு நாக்குல பட்டா ரத்தம்லாம் வரும்… எங்கப்பாக்கெல்லாம் பல்லு வரவே இல்லை என்று என்னலாமோ சொல்லி இருந்தான். என் பல்லை டாக்டர் ஐந்து நிமிடத்திலெல்லாம் அறுத்துப் பிடுங்கிவிட்டிருந்தார். டாக்டருக்கு பணம் கொடுத்துவிட்டு ஆட்டோ பிடிக்க நடந்து வரும்போது எதிர்ப்படுபவர்களிடமெல்லாம், பல்லு பிடுங்கினதில்லையா, வாட், ரியல்லி ஷாக்கிங், வெரி ஈஸி யூ நோ, வலிக்கவே வலிக்காது, இப்பமே வரீங்களா பிடுங்கிறலாம் என்றெல்லாம் சொல்லத் தோன்றியது. டாக்டர் ஒரு பெரிய தாளில் ஏழெட்டு மாத்திரைகள் எழுதி இருந்தார், முட்டாள் என நினைத்துக்கொண்டேன். அப்போது என்னவோ ஒரு எறும்பு இடது தாடையில் கடித்தது போல் இருந்தது. கூட இருந்த மனைவியிடம் எதாவது பேசினயா என்ன என்று கேட்டேன். முறைத்தாள். உனக்கெல்லாம் பல்லைப் பிடுங்கனதே இல்லைல என்று கேட்டேன். அந்தப் பக்கம் பார்த்து உட்கார்ந்துகொண்டாள். அனுபவமற்ற தற்குறி.

வீட்டுக்குப் போனதும்தான் டாக்டர் பிடுங்கிய பல் என் உடம்பில் இருந்தது என்பதை உணர்ந்தேன். எறும்பு யானையாக மாறத் துவங்கி இருந்தது. ஒரு வாய்க்குள் அத்தாம் பெரிய யானையா? ஓ மை காட். அந்த டாக்டர் பயல் (மரியாதையாகத்தான்!) நிஜமாகவே பிடுங்கோ பிடுங்கு என்று பிடுங்கிவிட்டார் என்பது உறைத்தது. மரண வலி. ஐஸ் ஒத்தடம் வைத்தால் சரியாகும் என்று டாக்டர் சொன்னது எங்கோ காதில் ஒலித்தது. ஓடிப் போய் பனிக்கட்டியை வாங்கி ஒத்தடம் வைத்தால், வாவ், யானைக்குப் பதில் டைனோசார், வேறு வகையான வலி அவஸ்தை. மாத்திரை எங்கே மாத்திரை எங்கே என்று ஓடி அதைப் போட்டுக்கொண்டதும் தூக்கம் வருவது போன்ற பிரமை, ஆனால் இன்னொரு பக்கம் வலி. அவஸ்தையோ அவஸ்தை. வாயைத் திறந்து யாரையும் திட்டவும் முடியவில்லை. திட்டாமல் இருக்கவும் முடியவில்லை. எனக்குப் பின்னே என் குடும்பமே நமுட்டுச் சிரிப்பு சிரிப்பது எனக்கு நன்றாகத் தெரிகிறது. ஆனால் திரும்பித் திட்ட முடியவில்லை. சைகையில் தண்ணீர் கேட்டால் இப்ப எதுக்கு தம்ஸ் அப் என்றெல்லாம் கேட்ட கொடூரர்களின் உலகம். அடப்பாவிகளா, இத்தனை வலிக்கும் என்று சொல்லவேண்டாமா என்று மனதுக்குள்ளேயே கதறினேன். ஒவ்வொரு கவளைத்தையும் எத்தனை பெரியதாக இருந்தாலும் அப்படியே டபக்கென்று முழுங்கும் என் சாகசமெல்லாம் இல்லாமல் போய், அணில் கொறிப்பதற்கும் குறைவாகக் கொறித்து கொறித்து உண்ணவேண்டியதாயிற்று இரவில். வாயைத் திறந்தால்தானே கவளத்தை உள்ளே செலுத்த.

இன்னும் ஒரு பல்லை எடுக்கவேண்டி இருக்கிறது எனபதை நினைத்தாலே குலை நடுங்குகிறது. ரெண்டு வருஷம் முன்னாடியே ரூட் கானல் பண்ணிருந்தா இவ்ளோ ஆகியிருக்காது என்று டாக்டர் சொன்னதை யாரிடமும் நான் சொல்லவே இல்லை. 🙂

Share