NIOS எனப்படும் ‘தேசிய திறந்தவெளிப் பள்ளிகள்’ குறித்தும், இப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இனி தமிழ்நாட்டு அரசு வேலை வாய்ப்பு கிடைக்காது என்று சமீபத்தில் தமிழக அரசு முடிவெடுத்திருப்பது குறித்தும் மாரிதாஸ் தனக்கே உரிய கோபத்துடன் பேசி இருக்கிறார். முக்கியமான காணொளி. கட்டாயம் பாருங்கள்.
ஏன் திமுக அரசு இந்த முடிவெடுத்தது என்று தெரியவில்லை. இன்று காலம் மாறிக்கொண்டிருக்கிறது. எம் சி ஏ கூட தேவையில்லை, திறமையை நிரூபித்தால் போதும் என்று பல நிறுவனங்கள் தங்கள் நிலைப்பாட்டை மேம்படுத்திக் கொண்டு வருகின்றன. இந்த வேளையில் இப்படி ஒரு நிலைப்பாட்டை ஸ்டாலின் அரசு எடுத்திருப்பது அர்த்தமற்றது.
ஏன் ஒரு மாணவன் திறந்தவெளிப் பள்ளிக்குப் போகிறான் என்பதையெல்லாம் மாரிதாஸ் விளக்கமாகவே தன் காணொளியில் சொல்லி இருக்கிறார். ஆட்டிஸம், குடும்பச் சூழல் உள்ளிட்ட பல காரணங்களைப் பட்டியலிடுகிறார். அவர் விட்டுவிட்ட முக்கியமான ஒன்று, பள்ளிகள் மீதான பயம்.
ஒரு மாணவனுக்கு ஒட்டுமொத்தப் பள்ளிகள் மீதான பயம் தேர்வினால் மட்டுமல்ல, அங்கே இருக்கும் ஆசிரியர்களால், பள்ளி மாணவர்களின் கிண்டலால், சில சமயங்களில் பாலியல் அத்துமீறலால் கூட வரலாம். இவர்களுக்கெல்லாம் கடைசித் தீர்வாக இருப்பது இந்த திறந்தநிலைப் பள்ளிகளே. இந்தப் பள்ளியில் பயின்று, மீண்டும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் முக்கியமான நிறுவனங்களில் நல்ல நிலையில் வேலைக்குச் சேர்ந்து, நன்றாக இருக்கிறார்கள். நானே பார்த்திருக்கிறேன். இந்த மாணவர்களுக்குத் தேவை, அந்தச் சமயத்தில் ஒரு சிறிய பிரேக் மட்டுமே. அதை எவ்வித இழப்பும் இன்றி ஏற்படுத்தித் தருபவை இந்தத் திறநிலைப் பள்ளிகள். இதில் படித்தால் அரசு வேலைவாய்ப்பு இல்லை என்பது சரியல்ல. அரசு இதை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும்.
அரசுத் தரப்பில் இதில் இன்னொன்றையும் சொல்லி இருக்கிறார்கள். ஃபிப்ரவரி 13, 2023ல் வெளியான டைம்ஸ் நவ் செய்தியின்படி, ஜெ.குமரகுருபரன் (பள்ளிக் கல்விச் செயலாளர்) சொல்வது, “இப்படி திறந்தநிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேறியவர்கள் கல்லூரிகளில் மேற்படிப்படித் தொடரலாம், அதில் எந்தச் சிக்கலும் இல்லை. அப்படி கல்லூரியில் தேர்வு பெற்றாலும், அவர்களுக்கு தமிழ்நாட்டு அரசு வேலை வாய்ப்புக் கிடைக்காது’. இதெல்லாம் அநியாயம்.
ஜனவரி 1ம் தேதியே தமிழ் தி ஹிந்து இது பற்றிச் செய்தி வெளியிட்டிருக்கிறது. மாரிதாஸ் இதைப் பற்றிப் பேசி இருக்கவில்லை என்றால், நான் அறிந்திருக்கவே மாட்டேன்.
அமைச்சர் பொன்முடி கிளப்பி இருக்கும் பிரச்சினை குறித்து. சமூக அறிவியல் எம் ஏ பாடத்திட்டத்தில் முதலாம் ஆண்டு புத்தகத்தில் உள்ள சில வரிகள் நிஜமாகவே கொஞ்சம் தீவிரமாகவும் ஒரு சார்பாகவுமே இருக்கின்றன. கொஞ்சம் மட்டும்தான். தெளிவாக சில முஸ்லிம்கள் என்று சொல்லி இருக்கவேண்டும். அதைவிட முக்கியம், பெரும்பான்மையான இந்திய முஸ்லிம்கள் இந்தியர்களே என்றும் அமைதியை விரும்புகிறவர்களே என்றும் தெளிவாகச் சொல்லி இருக்கவேண்டும். இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்படும் தாக்குதல்களில் பெரும்பாலான வெகுஜன முஸ்லிம்களின் ஆதரவு இல்லை என்று சொல்லிவிட்டு, அதை ஆதரிக்கும் தீவிர இஸ்லாமியர்களைப் பற்றித் தனியே பேசி இருக்கவேண்டும். வெகுஜன முஸ்லிம்களும் அடிப்படைவாத முஸ்லிம்களும் வேறு என்ற தெளிவான வேறுபாட்டுடன் பேசி இருக்கவேண்டும். இந்த அடிப்படை நியாயம் இல்லாததால் அதில் சொல்லப்பட்டிருக்கும் பல உண்மைகளும் அடிபட்டுப் போகின்றன.
ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடக்கும்போது, அது இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல் என்றால், இங்கே இருக்கும் திக திமுக கம்யூனிஸ முற்போக்குக் கட்சிகள் அதை எப்படி அணுகுகின்றன என்பது எல்லாருக்குமே தெரிந்ததுதான். வாக்கு வங்கிக்காக அவர்கள் இஸ்லாமியர்களையும் கிறித்துவர்களையும் எப்படி வைத்திருக்கிறார்கள் என்பதும் புதியதல்ல. தாஜா அரசியலுக்காகவே அவர்கள் அன்பு செலுத்துகிறார்கள். நாளையே இந்து வாக்கு வங்கி உருவானால் இவர்கள் எப்படி நடக்கப் போகிறார்கள் என்பதையும் இதே வெகுஜன இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் பார்க்கத்தான் போகிறார்கள்.
பாடத்தில் இருந்து ஒரு பத்தியை வாசித்துக் காட்டிய பொன்முடி, (அவரது முழு பேட்டியை நான் பார்க்கவில்லை) அதற்கு முந்தைய பத்தியில் இந்து முன்னணியின் பெயரும் இருப்பதை வாசித்தாரா என்று தெரியவில்லை. அதிமுகவும் பாஜகவும் இணைந்து இந்தப் பாடத்தை புகுத்தி இருக்கிறது என்றால், ஏன் இந்து முன்னணியின் பெயரையும் பாஜக புகுத்தவேண்டும்? பாஜவைச் சொல்லாமல் உங்களால் இருக்க முடியாது என்பதைத் தவிர வேறு காரணமே இல்லை! அதுமட்டுமல்ல, சங்பரிவாரம் மசூதியை உடைத்தது என்றும் அதனால் கலவரங்கள் நிகழ்ந்தன என்றும் இப்பாடப் பகுதி சொல்கிறது. அடுத்து, அதில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள் என்றும் சொல்லி இருக்கிறது. இதை முற்போக்களர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்று நினைக்கிறேன்.
ஹிந்துக்களின் தாக்குதல் என்பது பதிலடி என்பது மிக முக்கியமான ஒன்றே. அதைப் பேசுவது ஏன் முக்கியமானதாகிறது என்றால், எந்த ஊடகமும், எந்த முற்போக்காளரும் இதைப் பற்றிப் பேசுவதில்லை என்பதால்தான். அதை இந்தப் பாடப் பகுதி தெளிவாகச் சொல்லி இருப்பது ஆச்சரியமளிக்கிறது.
இந்தப் பாடத்திட்டத்தை எழுதியவர் பதவி ஓய்வு பெற்றுவிட்டார் என்று பொன்முடி சொல்கிறார். யார் அந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் எனத் தெரியவில்லை. துணைவேந்தர் யார் எனத் தெரியவில்லை. இப்போது அவர்களுக்கு என்ன ஆகும் என்றும் தெரியவில்லை.
பாடத்திட்டத்தில் ஈவெராவை பெரியார் என்றும் தமிழர் தந்தை என்றும் வைக்கம் வீரர் என்றும், அண்ணாத்துரையை ஆஹோ ஓஹோ என்றும் தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா என்றும், கருணாநிதியை கலைஞர் என்றும் புகுத்தினால்; ஆரியர்கள் பறக்கும் குதிரையில் காற்றில் அவர்களின் தலைமுடி பின்னால் பறக்க படையெடுத்து திராவிடர்களை வேட்டையாடினார்கள் என்ற ஒரு கற்பனைச் சித்திரம் மனதில் பதியும் அளவுக்குப் பாடங்களை எழுதினால்; கண்ணில் படும் கடவுளர் சித்திரங்களை எல்லாம் நீக்கி, கடவுள் வாழ்த்தை நீக்கி, ஹிந்துப் பெயர்களை நீக்கி, புகைப்படங்களில் வரும் ஹிந்து மதச் சின்னங்களை நீக்கி பாடங்களை எழுதினால், அப்போதெல்லாம் அமைதியாக இருந்தால், அடுத்தவனுக்கு வாய்ப்பு வரும்போது விரல் சூப்பிக் கொண்டிருக்க மாட்டான். நியாயமாகப் பார்த்தால், திராவிட இயக்கங்கள் செய்த பாடத்திட்டத் திணிப்புப் புரட்டுகளுக்கு மத்தியில், இன்று பொன்முடி சொல்லும் பாடத் திட்டம், மிகச் சரியாகச் சொல்லப்படாத ஒன்றாகவே உள்ளதே அன்றி, முழுப் பொய்யாக இல்லை, புரட்டாக இல்லை.
நீங்கள் ஒரு கட்சியாக அரசாக என்ன செய்ய நினைக்கிறீர்களோ அதையே உங்களுக்கு மற்றவர்களுக்குச் செய்வார்கள்.
(பின்குறிப்பு: கிடைத்த நான்கு பக்கங்களை மட்டுமே படித்தேன். முழு புத்தகத்தையும் படிக்கவில்லை.)
பத்தாம் வகுப்புத் தேர்வுகளை நடத்தாமல் விட்டது சரியான முடிவல்ல. வேறு வகையான முடிவுகளை ஆராய்ந்திருக்கலாம்.
* ஐந்து கட்டங்களில் தேர்வுகளை நடத்தி இருக்கலாம். எந்த நாள் முடியுமோ அந்த நாளில் தேர்வுகளில் பங்கெடுக்க மாணவர்களுக்கு அனுமதி அளித்திருக்கலாம்.
* யாரேனும் இரண்டு முறை ஒரே தேர்வை எழுதினால் அதில் எந்த மதிப்பெண் அதிகமோ அதை எடுத்துக் கொள்ளலாம். ஒரு மாணவர் இரண்டு முறைக்கு மேல் எழுதக்கூடாது என்ற வரன்முறையையும் கொண்டு வரலாம்.
* இண்டர்னல் மதிப்பெண்களை முழுமையாக வழங்கலாம்.
* இண்டர்னல் போக 80 மதிப்பெண்களுக்குப் பதிலாக 40 மதிப்பெண்களுக்குத் தேர்வு வைக்கலாம். மிக எளிதாக மாணவர்கள் தேர்வு எழுதும்படியாக ஒரு வரி வினா விடையை அதிகமாகவும் மற்றவற்றைக் குறைவாகவும் வைக்கலாம். இதனால் தேர்வு நேரத்தை ஒரு மணி நேரமாகக் குறைக்கலாம்.
* ஒரு பள்ளி முழுக்க பத்தாம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே எழுதப் போவதால் ஒரு வகுப்பில் ஒரு பென்ச்சில் ஒருவரை மட்டுமே அமரச் சொல்லி எழுதச் சொல்லலாம்.
* ஐந்து முறை தேர்வுகள் நடத்தப்படுவதால் நிச்சயம் மாணவர்கள் கூட்டம் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.
* ஐந்து வேறு வேறு வினாத்தாள்கள் என்றால் எப்படி பொதுவாகக் கருதமுடியும் என்ற கேள்வி எழும். எதோ ஒரு வகையில் அனைத்து வினாத்தாள்களையும் எளிமையாகவே கேட்கலாம். இதன்மூலம் சுற்றி வளைத்து ஒரு பொதுவான தேர்வுப் பட்டியலைக் குறைந்தபட்சம் அடையலாம்.
* பாடத்தின் பின் பக்க கேள்விகளில் இருந்து 80% கேள்விகளும், உள்ளே இருந்து 20% கேள்விகளும் வரும் என்று சொல்லலாம். இது ஆவரேஜ் மற்றும் பிலோ ஆவரேஜ் மாணவர்களுக்குப் பெரிய அளவில் உதவும்.
* ப்ளூ ப்ரிண்ட்டை மாற்றி அமைத்து எந்த எந்த பாடங்களை மாணவர்கள் படிக்காமல் விடலாம் என்று ஒரு சலுகை அளிக்கலாம்.
* அல்லது சில பாடங்களைக் குறைத்து அறிவிக்கலாம்.
* காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை மட்டும் சேர்த்துக் கொள்ளலாம். வருகைப் பதிவேட்டின்படியும் கொஞ்சம் சலுகை மதிப்பெண் தரலாம். இதன்மூலம் மாணவர்கள் தேர்ச்சி பெறுவது கடினம் என்கிற நிலை மாறும். அதே சமயம் ஒட்டுமொத்தமாக எதோ ஒரு தரவரிசை கிடைக்கும். அதை வைத்து மேற்கொண்டு படிக்கப் போகும் துறையைத் தேர்ந்தெடுக்க மாணவர்களுக்கும் பள்ளிகளுக்கும் உதவும்.
* பள்ளி ஆரம்பிப்பதற்கு பத்து நாள் முன்பாகக் கூட தேர்வுகளை நடத்தலாம். பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றாம் வகுப்பு போகும் மாணவர்களுக்குப் பாடச் சுமையைக் குறைத்து, பள்ளி நடக்காத இந்தக் காலத்தைச் சரி செய்யலாம். அதேபோல் கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் செய்யவேண்டும்.
* எந்தப் பள்ளி மாணவரும் பக்கத்தில் இருக்கும் எந்தப் பள்ளியிலும் (தமிழகம் முழுக்க) தேர்வு எழுத அனுமதிக்கலாம். தேர்வு எழுத பள்ளியைத் தேர்ந்தெடுப்பது மாணவர்கள் உரிமை என்றாக்கலாம்.
* சான்றிதழில் கொரோனா காலம் என்று அச்சிட்டுத் தரலாம்.
* இந்த வருடம் படிக்கப் போகும் மாணவர்களுக்கான தேர்வு தொடர்பான அறிவிப்புகளையும் இப்போதே வெளியிடவேண்டும். பாடத்திட்டத்தை மறுவரையறை செய்யலாம்.
தபால்துறையில் கிராமின் தாக் சேவா என்னும் கிராமப்புற ஊழியர்களுக்கான முடிவுகள் ஜூன் 22 2019அன்று அறிவிக்கப்பட்டன. பத்தாம் வகுப்புத் தேர்வின் மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது இது. திடீரென சில நாள்களுக்கு முன்பு அந்த பிடிஎஃப் கோப்பை தரவிறக்கிய திமுகவினர், அதில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கானவர்களின் (EWS) கட் ஆஃப் 42 என்பதை எடுத்துக்கொண்டு, ஒரு பதிவை எழுதி சுற்ற விட்டனர். அந்தப் பதிவில் ஒரு சிறிய உண்மை உள்ளது. அதேசமயம் அதில் சொல்லப்படாத பல உண்மைகளும் உள்ளன. ஒரே ஒரு உண்மையை மட்டும் உரக்கச் சொல்வது, இரண்டாம் கருத்துக்கே இடமின்றி, 10% EWS இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதற்காக மட்டுமே. அதைக்கூட நியாயப்படி எதிர்க்காமல், அவர்களுக்கே உரிய அநியாயப்படி, அதில் பயன்பெறப்போவது பிராமணர்கள் மட்டுமே என்று சொல்லி வருகிறார்கள். எவ்வித சலுகைகளும் இல்லாத அனைத்து முற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் இது பொருந்தும் என்பதை மறந்தும் இவர்கள் சொல்லமாட்டார்கள். இதில் பயன்பெறும் பிராமணரல்லாத சாதியினரின் பெயர்களைச் சொல்லிவிட்டால் இவர்கள் அரசியல் வேகாது என்பதுதான் காரணம்.
கிராமின் தாக் சேவா ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்கள் அல்ல. இன்னும் இவர்கள் அரசு ஊழியர்கள் ஆக்கப்படவில்லை. அவர்களது கோரிக்கை நிலுவையில்தான் உள்ளது. ஆனால் பதிவை சுற்ற விட்டவர்களும், உடனே சமூக நீதி செத்துப்போய்விட்டது என்று எள்ளும் நீரும் தெளித்தவர்களும், பிராமணர்களுக்கு அரசு வேலைன்னா கசக்குதா என்று கேட்டார்கள். இந்த கிராமின் தாக் சேவா ஊழியர்கள் கிராமப்புற ஊழியர்கள். தபால் துறையால் நேரடியாக முழு நேர அலுவலகமாகவோ துணை அலுவலகமாகவோ தொடங்க முடியாத இடங்களில் இவர்கள் நியமிக்கப்படுவார்கள். அது கிராமமாக, பட்டிக்காடாக, மக்கள் எளிதில் செல்லமுடியாத இடங்களாக இருக்கலாம். இவர்களது சம்பளம், மற்ற பொதுவான அரசு ஊழியர்களின் சம்பளத்தைவிடப் பலமடங்கு குறைவாக இருக்கும். இவர்கள் ஐந்து வருடம் இந்த வேலையில் இருந்து, பின்னர் தேர்வெழுதி தபால்துறைக்குள் வேலைக்கு வரலாம். அப்போது இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கிராமின் தாக் சேவா ஊழியர்கள் வேலைக்கு மனு செய்யும்போதே அவர்களுக்குரிய இடத்துக்குத்தான் மனு செய்யமுடியும். அல்லது அவர்கள் எந்த இடத்துக்கு மனு செய்தார்களோ அந்த இடத்துக்கு மட்டுமே அவர்களது மனு பரிசீலிக்கப்படும். சென்னையில் உள்ள ஒரு இடத்துக்கு மனு செய்தவர்கள், தகுதி இருக்கிறது என்ற காரணத்துக்காக, மதுரைக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் நியமிக்கப்படமாட்டார்கள். ஏனென்றால், எது உள்ளூர்க்காரர்களுக்கான வேலைக்கு வசதியோ அதை ஒட்டியே இந்த வேலை என்பதுதான் இதன் அடிப்படையே. ஆனால் திமுகவினர் இதையும், உள்ளூர்ல வேலைன்னா கசக்குதா என்று ஒருவரியில் சொல்லிக்கொண்டார்கள்.
கட் ஆஃப்: கட் ஆஃப் என்பது, போட்டியில் பங்கெடுத்தவர்களையெல்லாம் ஒழித்துக் கட்டவேண்டும் என்பதற்காக, காற்றில் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு மதிப்பெண் அல்ல. ஒரு தேர்வில் பங்குகொண்டவர்களின் தரத்தைப் பொருத்தே இந்த கட் ஆஃப் அமையும். கட் ஆஃப் என்பதுதான் இறுதித் தேர்வு என்றால், இதற்குப் பின் நேர்முகத்தேர்வுகூடக் கிடையாது என்றால், கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு கூடுதலாக மதிப்பெண் வாங்கும் அனைவருக்கும் வேலையோ மேற்படிப்போ கிடைத்துவிடும். உதாரணமாக, மிக மேம்போக்காகச் சொல்வதென்றால், 4000 பேர் தேர்வெழுதி, 400 பேர் மட்டுமே தேந்தெடுக்கப்படவேண்டும் என்றால், யார் 400வது குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்களோ அதுவே கட் ஆஃப் என்று வைத்துக்கொள்ளலாம். இதையே ஒவ்வொரு இட ஒதுக்கீட்டின்படியும் செய்வார்கள்.
அம்மாபட்டினம் என்ற ஒரு கிராமத்தில் ஒருவர் 42 மதிப்பெண்கள் பெற்று EWS கோட்டாவில் வேலைக்கு வந்திருக்கிறார். இதில் கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்ன?
முதலில் வேலைக்கு மனு போடும்போதே இந்த இடத்தில் ஒரே ஒரு வேலைதான் என்றும், அது EWSக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது என்பதும் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் ஒவ்வொரு ஊரிலிலும் எந்த கோட்டாவில் வேலை என்பதைத் தெரிவித்திருந்தார்கள். அப்படியானால் இந்த ஊரில் EWS கோட்டாபடி எத்தனை பேர் வேலைக்கு மனு செய்திருந்தார்கள்? இது தெரிந்தால்தானே ஏன் 42 மதிப்பெண் பெற்றவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்? அந்த விவரம் யாருக்கும் தெரியாது. தெரிந்தால்தான் இதை மேற்கொண்டு பேசமுடியும்.
இன்னும் சில ஊர்களில் 50 மதிப்பெண்களுக்கும் கீழான மதிப்பெண்கள் பெற்றவர்கள் EWS கோட்டாவில் வந்திருக்கிறார்கள். அந்த ஊர்களிலும் இதுவேதான் பிரச்சினை.
EWS கோட்டாவின்படி இந்த ஆண்டே வேலைக்கு மனு செய்வது என்பது கொஞ்சம் சிரமமான விஷயமே. அதனால் கட் ஆஃப் மதிப்பெண்கள் நிச்சயம் குறைவாகவே இருக்கமுடியும். இன்னும் இரண்டு மூன்று வருடங்களில், EWS கோட்டாவில் மனு செய்பவர்கள் அதிகரிக்கும்போது, எஸ் சி எஸ் டி பிரிவுகளுக்கான கட் ஆஃப் மற்றும் EWS கோட்டாவின் கட் ஆஃப் இரண்டுக்கும் இடையேயான வேறுபாடு மறையும். நிச்சயம் இது நடக்கத்தான் போகிறது.
ஆனால் எந்தத் தகவல்களும் இல்லாத நிலையில், 42 மதிப்பெண்கள் பெற்ற ஐயரும் ஐயங்காரும் வேலைக்குப் போகிறார்கள் என்று சொல்வது எப்பேற்பட்ட அயோக்கியத்தனம்? அதைத்தான் திமுகவினர் செய்து வருகிறார்கள். இன்னும் பகுத்துப் பார்த்தால், எஸ் சி எஸ் டி இவர்களின் கட் ஆஃபைவிடக் குறைவான EWS கோட்டாவினர் மிகச் சொற்பமே. அதாவது 4500க்கும் மேற்பட்ட மொத்த நபர்களில் 10% EWS கோட்டாவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 100க்கும் குறைவானவர்களே இப்படி வந்திருக்கிறார்கள். அதுவும் இது EWS கோட்டாவுக்கான முதல் வருடம் என்பதால்! இதை எதையுமே இவர்கள் கணக்கில் கொள்ளவில்லை.
இதை ஒட்டி இதே பதிவுகளில் அவர்கள் சொல்லத் துவங்கியது, 69% இட ஒதுக்கீடுக்கு ஆபத்து என்பது. 69%ல் உண்மையில் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் இவர்கள் இதை எப்படி ஒரு செய்தியாக உருவாக்கினார்கள்? 69% இட ஒதுக்கீட்டோடு சேர்ந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பொது இடங்களிலும் போட்டியிட முடியும். அப்படியானால் ஒட்டுமொத்த இடங்களின் எண்ணிக்கை கூடுதலாக வரும். அந்த பொதுப் பிரிவில் 10% EWS கோட்டா என்றாக்கிவிட்டால், ஒட்டுமொத்த இடங்களின் எண்ணிக்கை எஸ் சி மற்றும் எஸ் டி பிரிவினருக்கு (அதாவது பொதுப்பிரிவுக்குப் போட்டியிடும் எண்ணிக்கையும் சேர்த்து) குறையும் அல்லவா? அதைச் சொல்லத் தொடங்கினார்கள். அதாவது EWS கோட்டாவுக்கு முன்பு எஸ் சி எஸ் டி பிரிவினருக்கான இடங்கள் எத்தனை கிடைக்கும், இப்போது எத்தனை கிடைக்கும் என்பதை மட்டும் சொல்லி, ஒரு மீம் ஆக்கி, அதைப் பரப்பினார்கள்.
இப்படிப் பொய்ச் செய்திகளை, அரைகுறை உண்மைகளைப் பரப்புவது எளிதாக இருக்கிறது. அதற்கு தேவையான பதிலைச் சொல்வது பெரிய வேலையாக இருக்கிறது. 10% EWS கோட்டா என்பது, பொதுப்பிரிவில் உள்ள இடங்களுக்குள்ளே மட்டுமே. எவ்வகையிலும் ஏற்கெனவே மாநில மத்திய அரசுகளில் இருக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அது பாதிக்காது. இதை மத்திய அரசு தெளிவாகவே சொல்லி இருக்கிறது. ஆனாலும் திமுகவினர் இதை வேண்டுமென்றே ஒரு செய்தியாகப் பரப்புகிறார்கள். அதிலும் EWS கோட்டாவின்படி பலன் பெறப் போவது ஐயரும் ஐயங்காரும் என்று சொல்வதில் உள்ள வெக்கம்கெட்டத்தனம்தான் கேவலமாக இருக்கிறது.
8 லட்சம் வருட வருமானம் என்பது நிச்சயம் கூடுதலான தொகைதான். இதை மத்திய அரசு குறைக்கவேண்டும் என்பதே என் தனிப்பட்ட எண்ணம். 2.5 லட்சமாக்கலாம் என்பது என் பரிந்துரை. ஆனால் இந்த 8 லட்சம் வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை. பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் க்ரீமி லேயர் பரிந்துரையில் தரப்பட்டிருக்கும் தொகை இது. அதையே, உண்மையில் நேர்மையாக, மத்திய அரசு EWS கோட்டாவுக்கும் வைத்துள்ளது. EWS கோட்டாவில் 8 லட்சம் அதிகம் என்று பேசுபவர்கள், க்ரீமி லேயர் பற்றி வாயே திறக்கமாட்டார்கள்.
க்ரீமி லேயரையும் அறிமுகப்படுத்தி, EWS கோட்டாவின் வருட வருமானம் மற்றும் சொத்து மதிப்பையும் வரைமுறை செய்தால், இட ஒதுக்கீடும் EWS ஒதுக்கீடும் நிச்சயம் தேவையானவர்களைச் சென்றடையும். ஆனால் திமுகவினர் ஐயர் ஐயங்காருக்கு இட ஒதுக்கீடு என்றுதான் பேசிக்கொண்டிருக்கப்போகிறார்கள். ஐயர் ஐயங்கார்தான் என்றாலும், அவர்களில் உண்மையான பொருளாதார நலிவில் இருப்பவர்களுக்கு வேலை கிடைப்பதும் அவசியம்தான். இதையும் உள்ளடக்கியதுதான் உண்மையான சமூக நீதி. 99% வாங்கிய பிராமணருக்கு வேலை இல்லை, ஆனால் 94% வாங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வேலை கிடைக்கும் என்பதில் உள்ள நியாயத்தை இந்த EWS கோட்டா கொஞ்சமாவது சமன் செய்யும். உண்மையான சமூக நீதியைப் பேசுபவர்கள் இப்படித்தான் யோசிப்பார்கள்.
ஒரு பிரச்சினையில் மிகச் சரியான தகவல்கள் கிடைக்காத நிலையில், தமிழ்நாட்டின் பாஜகதான் இதை முன்னெடுத்துச் செய்யவேண்டும். ஒரு பொய்க்கருத்தை திமுக பரப்புகிறது என்றால், அதை உடனே சரியான வல்லுநர்களுடன் ஆராய்ந்து, அதிலுள்ள தவறைக் குறிப்பிட்டு சொல்லிப் பரப்பும் செயலை தமிழக பாஜகதான் மேற்கொள்ளவேண்டும். ஒரு பொய் லட்சம் பேர்களால் பரப்பப்படுகிறது. அதற்கான உண்மை என்பதைக் கண்டறிய தனியாளால் முடியாது. பாஜகவினர் இதைச் செய்யலாம். ஆனால் பாஜகவினர் கருத்தைப் பரப்பும் ஒரு விஷயத்தில் திமுகவிடம் தோல்வி அடைந்தவர்களாகவும் அதை ஒப்புக்கொள்பவர்களாகவுமே நடந்துகொள்கிறார்கள். இதை முதலில் மாற்றவேண்டும். அப்போதுதான் உண்மையான கருத்து என்ன என்பது பரவத் துவங்கும்.
ஓர் அரசுப் பள்ளியில் 7ம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் தாங்களே எழுதியது. 73 மாணவர்களில் (சந்திப் பிழையைக் கவனத்தில் கொள்ளாது) ஒரு வார்த்தை கூடப் பிழையின்றி எழுதியவர்கள் 7 பேர். 5 எழுத்துகளுக்கு மேலுள்ள வார்த்தைகள் கிட்டத்தட்ட எல்லாவற்றையுமே தவறாக எழுதியவர்கள் 15 பேருக்கும் மேல். பாதிக்கும் மேல் தவறாக எழுதியவர்கள் 40 பேருக்கும் மேல். கிட்டத்தட்ட அனைத்து வார்த்தைகளையும் தவறாக எழுதியவர்கள் 6 பேர் இருக்கலாம்.
8ம் வகுப்பில் செய்யுட் பகுதியில் பெரிய வினா உண்டு, உரைநடைப் பகுதியிலும் உண்டு, கட்டுரை உண்டு. யோசித்துப் பாருங்கள்.
இது ஒரு பள்ளியின் நிலைதான். என்றாலும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுப் பள்ளிகளின் தமிழின் நிலையும் இதுவாகவே இருக்கக்கூடும்.
1. இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. அது தேவை. எனவே, மார்க் குறைந்தாலும் ஏன் வருகிறார்கள் என்ற கேள்வி எனக்கானதல்ல.
2. 10% புதிய ஓசி ஒதுக்கீட்டை ஆதரிக்கிறேன்.
3. காட்டாயத் தேர்ச்சி தவறு. மாணவர்களின் தரத்தை, ஆசிரியர்களின் தரத்தை உயர்த்துவதன் மூலம் எதிர்கொள்ள வேண்டும்.
4. எதோ ஒரு வகையில் பொதுத் தேர்வு தேவை. முழுக்க மாநில அரசே வைத்துக்கொண்டாலும் சரி.
5. சாதிய ஆதரவில் பேச எனக்கு ஒரு முகாந்திரமும் இல்லை. பள்ளிகளின் மீதான அக்கறையிலேயே சொல்கிறேன். மற்ற “பிராமணர்கள்” கருத்துக்கு அவர்களே கருத்துச் சொல்ல வேண்டும்.
6. பிராமண வெறுப்பில்லை, ஆனால் பிராமணர்கள் அப்படித்தான் சிந்திக்கிறார்கள் என்பதில், பிள்ளைமார், முதலியார் உள்ளிட்ட பிறர்களுக்கான விலக்கில் ஒரு நியாயமும் இல்லை. அதாவது, ஒரு சாரார் இப்படி யோசிக்கிறார்கள் என்பதையே நான் ஏற்கவில்லை. அது பிராமணக் காழ்ப்பாளர்களால் கட்டி ஏற்றப்படும் ஒன்று.
7. பள்ளிகளின் யதார்த்த நிலையைச் சொன்னால், அதையும் இட ஒதுக்கீடு, சாதியோடு புரிந்துகொள்வது, விளக்கம் கொடுத்த பின்பும் மீண்டும் மீண்டும் சொல்வதெல்லாம், பழகிப் புளித்துப் போய்விட்டது.
8. அரசுப் பள்ளிகளை அல்ல, ஒட்டுமொத்த பள்ளிகளின் தரமும் அதுதான் என்றே சொல்லி இருக்கிறேன். தனியார்ப் பள்ளிகளில் இட ஒதுக்கீடு இல்லை. அப்படியானால் இது பொதுக் கருத்து என்பது குழந்தைகளுக்கும் புரிந்திருக்கவேண்டும். சில குழந்தைகளுக்குப் புரியாதது, பிராமணக் காழ்ப்பு.
நடப்பாண்டிலேயே 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என்ற அறிவிப்பை சூசகமாக வெளியிட்டதற்கே இத்தனை எதிர்ப்புகள். ஆனால் இதற்கான ஆயத்தம் முன்பிருந்தே நடந்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டிலேயே, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, மத்திய அரசு சிபிஎஸ்ஸி பள்ளிகளுக்கு இதைப் போன்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதை ஒட்டி மாநில அரசுகளுக்கும் பரிந்துரைத்தது என்று நினைக்கிறேன். அப்போதிருந்தே இது நிகழலாம் என்றிருந்த நிலையில் நேற்று செங்கோட்டையன் இந்த ஆண்டிலிருந்தே இத்தேர்வுகள் நிகழும் வாய்ப்பு உள்ளது என்றும், இதுகுறித்து அமைச்சரவை விவாதிக்கும் என்றும் சொல்லி இருக்கிறார். (ஆனால் நேற்றே பள்ளிகளுக்கு இதுதொடர்பான அறிக்கை வந்துவிட்டது!) இந்த ஆண்டிலிருந்து இத்தனை வேகமாகச் செய்யத் தேவையில்லை என்பது சிறிய பிரச்சினையே. இதைச் செய்வது அத்தனை கடினமான செயல் ஒன்றுமில்லை என்ற நிலையில் இந்த ஆண்டேவா என்ற கேள்வி முக்கியமற்றது. இந்த ஆண்டு செய்யாமல் அடுத்த ஆண்டிலிருந்து செய்யலாம் என்றாலும் சரிதான். ஆனால் இப்படி ஒரு பொதுத் தேர்வு தேவையா என்ற கேள்வியே அனைவராலும் முன்வைக்கப்படுகிறது.
பொதுத்தேர்வு என்றாலே பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளால் பெரிய அளவில் மன உளைச்சலுக்கும் பீதிக்கும் ஆளாகி இருக்கும் பெற்றோர்கள், இந்த இரண்டுக்கும் மீண்டும் பொதுதேர்வா என்று அலறுகிறார்கள். இப்படி அலற ஒன்றுமில்லை. நான் அரசுப் பள்ளியில் படித்தபோது (1988 வாக்கில்) ஈ எஸ் எஸ் எல் சி என்ற பெயரில் பொதுக் கேள்வித்தாள் ஒன்றுக்கு விடை எழுதிய நினைவு வருகிறது. அப்போதே அது கைவிடப்பட்டதா அல்லது தொடர்ந்ததா என்று தெரியவில்லை. பொதுவாகவே, சமச்சீர்க் கல்வி என்றானபிறகு, அனைத்து வகுப்புகளுக்குமே பொதுவான கேள்வித்தாளைக் கொடுத்துவிடுவது நல்லது. (சமச்சீர் என்பதே தேவையற்றது என்பதே என் கருத்து. மெட்ரிகுலேஷன், அரசுப் பள்ளி, சிபிஎஸ்ஸி என்று அவரவர்களுக்கான கல்வித் திட்டத்தை வைத்துக்கொண்டு, அவரவர்களுக்கான பொதுத் தேர்வைக் கொண்டாலே போதுமானது.) விடைத்தாள் திருத்துவது, குறுவள மைய அளவில் திருத்தப்படும் என்று இன்றைய தமிழ் தி ஹிந்து சொல்லி இருக்கிறது. குறுவள மைய அளவு என்றால் என்னவென்று எனக்குப் புரியவில்லை. மண்டல அளவில் திருத்தப்பட்டாலும் சரிதான், பிரச்சினையில்லை.
பொதுத் தேர்வு வினாத்தாள் என்ற உடனேயே பதற ஒன்றுமில்லை. மாணவர்களை வேண்டுமென்றே தோல்வி அடையச் செய்து அரசு (எந்தக் கட்சி ஆண்டாலும்) அடையப்போவது எதுவுமில்லை. கட்டாயத் தேர்ச்சி என்பது நிச்சயம் ஒழித்துக் கட்டப்படவேண்டியது. மாணவர்களுக்குக் கட்டாயக் கல்வி எத்தனை அவசியமோ அதற்கு இணையான அவசியம் அவர்களது கல்வித் தரம். அவர்களது கல்வித் தரத்தை உயர்த்த ஆசிரியர்களின் தகுதியைச் செம்மையாக்க வேண்டும். பள்ளிகளின் தரத்தை உயர்த்தவேண்டும். இதிலெல்லாம் எதுவுமே செய்யமுடியாது அல்லது என்ன செய்வது என்று தெரியவில்லை என்பதற்காக, மிக எளிதான தீர்வாக, படிக்கிறார்களோ இல்லையோ தரமிருக்கிறதோ இல்லையோ, மாணவர்கள் தேர்வு பெற்றதாக அறிவிக்கலாம் என்பது அநியாயம்.
5ம் வகுப்பிலும் 8ம் வகுப்பிலும் இப்படி ஒரு பொதுத் தேர்வு இருப்பது நல்லது. இதனால் இடை நிற்றல் அதிகமாகும் என்பது சரியான கருத்தல்ல. இடை நிற்றல் என்பது இல்லாமல் போக நாம் பேசவேண்டியது பெற்றோர்களிடம். கல்வியின் பயன் எதுவுமின்றி ஒரு மாணவர் இப்படித் தேர்ச்சி பெற்றுக்கொண்டே போவது சரியானதல்ல என்பதை விட்டுவிட்டு, கட்டாயத் தேர்ச்சிதான் சரியான தீர்வு என்று சொல்வதால் என்ன பயன்? இந்திய அளவில் தமிழ்நாட்டு மாணவர்கள் இதே கல்விமுறையில்தான் சாதிக்கிறார்கள் என்பதும் உண்மைதான். சாதிப்பவர்களுக்கு இந்தக் கட்டாயத் தேர்ச்சி முறை என்பதோ பொதுத் தேர்வு என்பதோ ஒரு பொருட்டே இல்லை என்பதையே நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். நாம் கவலை கொள்ளவேண்டியது சராசரி மாணவர்களையும் சராசரிக்கும் கீழான மாணவர்களையும்.
இதில் ஜாதியை நுழைப்பதில்தான் திராவிடக் கல்வியாளர்களின், முற்போக்காளர்களின் சூட்சுமம் உள்ளது. ஜாதிக்கும் இதற்கும் ஒரு தொடர்புமில்லை. பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் தரம் என்ன என்பதைப் பாருங்கள். தலையில் பெரிய இடி விழுந்ததைப் போல இருக்கும். கட்டாயத் தேர்ச்சியே இதற்கு ஒரு காரணம். (கட்டாயத் தேர்ச்சி மட்டுமே காரணமல்ல என்பதும் மிகச் சரியான வாதம்தான்.) இதைக் கொஞ்சம் சரி செய்யவே இந்தப் பொது வினாத்தாள் மற்றும் பொதுத் தேர்வு. நான் பத்தாம் வகுப்பு போனபோது முதல் நாளில் என் ஆசிரியர் பத்தாம் வகுப்புக்குத் தேர்ச்சி பெற்று வந்த மாணவர்களிடம் அவர்கள் 9ம் வகுப்புப் பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைச் சொன்னார். கேட்டபோது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அப்போது கட்டாயத் தேர்ச்சி இல்லை. இன்றும் இந்நிலை அன்று இருந்ததைவிடப் பல மடங்கு கீழே போயிருக்கிறது.
பொதுத் தேர்வைக் கொண்டுவருவதால் மாணவர்கள் அத்தனை பேரும் சரியாகிவிடுவார்களா என்பது முக்கியமான கேள்வி. நிச்சயம் அப்படி ஆகிவிடாது என்பதுதான் யதார்த்தம். அதேசமயம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான பொறுப்பு கூடும். அரசுப் பள்ளியில் ஒரு வகுப்பில் மாணவர்களின் தோல்வி விகிதம் கூடுதலாக இருந்தால் அவர்கள் என்னென்ன கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டி இருக்கும் என்பதை அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டுப் பாருங்கள். இந்நிலையில் இத்தேர்வு வருமானால் அத்தனை எளிதாக அவர்களால் ஒதுங்கிவிடமுடியாது. நாளை அரசு கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டி இருக்கும் என்ற நெருக்கடி உருவாகும். இதனால் பள்ளிகளில் நடக்கும் கல்வியின், சொல்லித் தரப்படும் முறையின் தரம் ஒருவேளை உயரலாம். இந்தப் பொதுத் தேர்வை ஒட்டுமொத்தமாக மறுப்பதன்மூலம் இதற்கான வாய்ப்பை ஒரேடியாக இல்லாமல் செய்துவிடக்கூடாது.
இந்த வருடமே பொதுத் தேர்வு வந்தாலும் உடனே மாணவர்களை அரசு தோல்வி அடையச் செய்யபோவதில்லை. மாணவர்களின் கழுத்தை நெரிக்க அரசு தயாராக உள்ளது போன்ற சித்திரங்களை எல்லாம் நம்பாதீர்கள். உச்சநீதிமன்றம், மத்திய அரசு, மாநில அரசு எல்லாருமே மாணவர்களுக்கு உதவவே சிந்திக்கிறார்கள். இதில் சாதியை, பொருளாதாரத்தைப் புகுத்திக் குழப்பப் பார்ப்பது அரசியல்வாதிகளே. இந்த ஆண்டு கேள்வித்தாள் நிச்சயம் எளிதாகத்தான் இருக்கும். அதுமட்டுமல்ல, எல்லா ஆண்டும் எளிதாகத்தான் இருக்கும்! ஒரு பொது வரையறையை எட்டவும், கட்டாயத் தேர்ச்சி என்பதால் ஏற்பட்டிருக்கும் ஒரு பின்னடைவைச் சரி செய்யவுமே இது பயன்படப்போகிறது.
கட்டாயத் தேர்ச்சி திட்டம் நீக்கப்படுவதற்கான வேலைகளை மத்திய அரசு தொடங்கிவிட்டாலும், இன்றும் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. உண்மையில் இதனால் மாணவர்களுக்குப் பெரிய பயன் ஒன்றுமில்லை. தோல்வி அடையவில்லை என்ற நெருக்கடி இல்லை என்ற ஒன்று மட்டுமே இதனால் மாணவர்களுக்குக் கிடைத்திருக்கும் நல்ல விஷயம். மன நெருக்கடியைக் களைவது, இரண்டு மாதத்தில் மீண்டும் நடக்க இருக்கும் பொதுத் தேர்வில் வெல்ல வைப்பது, அப்படியே தோற்றாலும் அது சகஜம்தான் என்ற நினைப்பை உருவாக்குவது, கல்வி வராத மாணவர்களுக்கு வாழ்க்கையில் வெல்ல என்ன செய்யலாம் என்று சிந்திப்பது, அதற்கான செயல்திட்டத்தை உருவாக்குவது போன்றவற்றைச் செய்வதே நாம் செய்யும் பெரிய சேவையாக இருக்கும். 8ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியில் வென்ற ஒரு மாணவன், 9ம் வகுப்பில் தோற்றால் என்ன ஆகும் என்பதையும் நாம் யோசிக்கவேண்டும். இப்படி எதையும் யோசிக்காமல் கட்டாயத் தேர்ச்சி ஒன்றே சரியான வழி என்று பேசுவது, போகாத ஊருக்கு இல்லாத வழியை அமைப்பது போன்ற ஒன்றுதான்.
மிக முக்கியமான பின்குறிப்பு: இப்போது வரப்போகும் பொதுத் தேர்வும் 60 மதிப்பெண்களுக்குத்தான். மீதி 40 மதிப்பெண்களுக்கு, 20 மதிப்பெண்கள் செய்முறைகளுக்காக (பிராஜெக்ட்), மீதி 20 ஸ்லிப் டெஸ்ட்டுகளுக்காக. பொதுவாக ஒரு பள்ளி இந்த மதிப்பெண்களில் கை வைக்காது. அப்படியானால் கட்டாயத் தேர்ச்சி என்பது இப்போதும் செயல்வடிவில் தொடரத்தான் போகிறது போல! இதில் இன்னும் புரிதல் கூடினால்தான் இதைப் பற்றி அதிகம் பேசமுடியும்.
நீட் தேர்வில் தமிழில் எழுதிய மாணவர்கள் அனைவருக்கும்
196 மதிப்பெண்களை வழங்கச் சொல்லி உயர்நீதி மன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கி உள்ளது.
நீதிபதிகள் செல்வம் மற்றும் பஷீர் அஹம்த் அடங்கிய பென்ச், தற்போது நடக்க இருக்கும்
கலந்தாய்வையும் நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ இரண்டு வாரங்களுக்குள்
இந்த புதிய மதிப்பெண்களிடன்படி தரவரிசையை உருவாக்கவும் அறிவுறுத்தி உள்ளது. இதை எதிர்த்து
சிபிஎஸ்இ உச்சநீதிமன்றம் செல்கிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பல கேள்விகளையும்
குழப்பங்களையும் தோற்றுவித்துள்ளது.
தமிழில் தேர்வு நடந்த உடனேயே, பல கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டிருப்பதாகப்
புகார்கள் எழுந்தன. டெக் ஃபார் ஆல் என்னும் அமைப்பு, இக்கேள்விகளில் உள்ள தவறுகளைப்
பட்டியலிட்டு, குறைந்தது 196 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டுள்ளன
என்றது. சிபிஎம்மின் டி.கே.ரங்கராஜன் இதை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றார். இதை
ஒட்டிய தீர்ப்பே இப்போது வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே மாணவர்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்ட
நிலையில், இத்தீர்ப்பின்படி தேர்வுபெற்ற புதிய மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டால்,
ஏற்கெனவே தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவர்களின் நிலை என்ன? அவர்களை அப்படியே
வைத்துக்கொண்டு, கூடுதலாக புதிய மாணவர்களையும் சேர்த்துக்கொள்ளப் போகிறார்கள் என்றால்,
கூடுதல் இடங்களை அரசு உருவாக்குமா? இப்படியான சிக்கலை உருவாக்கி இருக்கிறது இத்தீர்ப்பு.
இப்பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம் சிபிஎஸ்இயின் பொறுப்பற்ற
தன்மைதான். நீட் பிரச்சினையில் தொடக்கம் முதலே சிபிஎஸ்இ அலட்சியமாகவே நடந்துகொண்டுள்ளது.
நீட் தேர்வுக்கான மையம் ஒதுக்குதலில் சிபிஎஸ்இயின் எதிர்பாராத பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளலாம்.
ஆனால் மாணவர்களின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கும் கேள்வித் தாள் பிரச்சினையில் சிபிஎஸ்இ
நடந்துகொண்ட விதம் நிச்சயம் பொறுப்பற்றதனமே. நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ, தாங்கள் சிறப்பான
மொழிபெயர்ப்பாளர்களையே நியமனம் செய்ததாகவும், அதற்குமேல் அதில் பிரச்சினை இருந்தால்
தங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்றும் கூறி இருக்கிறது. இது இத்தனை எளிதாகக் கடந்து
செல்லவேண்டிய விஷயம் அல்ல.
சிபிஎஸ்இயின் பாடத்திட்டப்படியான புத்தகங்கள் தமிழில் இல்லை
என்பது உண்மைதான். ஆனால் ஆங்கிலத்துக்கு இணையான தமிழ் வார்த்தைகள் தொடர்ச்சியாகத் தமிழ்ப்பாடத்திட்டப்படியான
அரசுப் பாடப் புத்தகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த விஷயத்தில் தமிழக அரசுகள்
தொடர்ச்சியாகப் பல காலங்களாக மிகக் கவனமாகவே செயல்பட்டு வருகின்றன. சிபிஎஸ்இ மாணவர்கள்
மட்டுமே தேர்வு எழுதப்போவதில்லை என்னும் நிலையில், தமிழில் தேர்வை எதிர்கொள்ளப் போகிறவர்கள்
அரசுப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்னும் நிலையில், மொழிபெயர்ப்புக்கான சரியான அறிவியல்
வார்த்தைகளை அரசுப் பள்ளிப் பாடப்புத்தகங்களில் உள்ளவற்றை ஒப்புநோக்கித் தேர்ந்தெடுத்திருக்கவேண்டும்.
மிகச் சிறிய விஷயம் இது. இதைச் செய்திருந்தால் இந்தியா முழுமைக்குமான தலைக்குனிவை சிபிஎஸ்இ
சந்திக்க நேர்ந்திருக்காது.
ஆங்கிலம் மற்றும் மண்டல மொழிகளில் கேள்விகள் தரப்பட்டிருக்கின்றன
என்றாலும் இறுதியான முடிவு ஆங்கிலக் கேள்வியே என்ற ஒரு பொறுப்புத் துறப்பை ((Disclaimer)
சிபிஎஸ்இ செய்திருக்கிறது. “மொழிபெயர்ப்பில் சந்தேகமான வார்த்தைகள் இருப்பின், அந்தக்
கேள்விகளின் பதில்களை ஏற்பதில் ஆங்கில வினாக்களின் பொருள்தான் முடிவில் ஏற்றுக்கொள்ளப்படும்.
தமிழில் தேர்வை எழுதும் மாணவர்கள், இதை உணர்ந்துகொள்ள வேண்டும்” என்கிறது `பொறுப்புத்துறப்பு!’
இதையும் ஏற்பதற்கில்லை. ஒன்றிரண்டு கேள்விகள் என்றால் சமாதானம் கொள்ளலாம். 49 கேள்விகள்
என்றால் அதை எப்படி எடுத்துக்கொள்வது. மொத்தம் 180 கேள்விகள், 720 மதிப்பெண்கள். இதில்
49 கேள்விகள், 196 மதிப்பெண்களில் குழப்பம் என்றால் அதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்.
49 கேள்விகளில் என்ன என்ன தவறுகள் நேர்ந்தன என்பதைச் சரியாக
அறியமுடியவில்லை. டெக் ஃபார் ஆல் இக்கேள்விகளின் பட்டியலை வெளியிட்டதாகச் செய்திகளில்
பார்க்கமுடிந்தது. ஆனால் ஒட்டுமொத்த கேள்விகளின் பட்டியலும் கைக்குக் கிடைக்கவில்லை.
டெக் ஃபார் ஆல் அமைப்புக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டேன். மடல் அனுப்பினேன்.
என்ன தேவைக்காக என்றும் என்னைப் பற்றிச் சொல்லுமாறும் கேட்டார்கள். என் ஜாதகத்தைத்
தவிர அனைத்தையும் அவர்களுக்குச் சொன்னேன். இதை அறிந்துகொள்ளவேண்டும் ஒரு முனைப்பில்
கேட்பதாகச் சொன்னேன். ஆனால் அவர்களிடம் இருந்து பதிலே இல்லை.
49 கேள்விகள் அனைத்துக்குமே ஏன் மதிப்பெண் தரவேண்டும் என்பதும்
கேட்கப்படவேண்டிய கேள்வியே. இந்த 49 கேள்விகளில் எவையெல்லாம் மாணவர்களைக் குழப்பும்
கேள்விகள் என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கு மட்டும் மதிப்பெண்கள் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கலாம்.
ஆனால் நீதிமன்றத்தின் நோக்கம், இது போன்ற ஒரு பொறுப்பற்ற செயலைச் செய்த சிபிஎஸ்இஐப்
பதற வைப்பது என்றே தெரிகிறது. அப்படி ஒன்று நடந்தால்தான் இனி எல்லாம் சரியாகச் செயல்படும்
என்று நீதிமன்றம் யோசித்திருக்கிறது. இனி வரும் காலங்களில் சிபிஎஸ்இ இத்தேர்வுகளை நடத்தாது
என்றும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
49 கேள்விகளின் பட்டியலில் உள்ள சில கேள்விகள் மட்டும் எனக்குக்
கிடைத்தன. இவற்றைப் பார்ப்பதற்கு முன்னர், என் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப்
பார்ப்பது, மேலதிகப் புரிதலைத் தர உதவலாம். நான் தமிழ் வழிக் கல்வியில் பயின்றவன்.
அரசுப் பள்ளியில் படித்தவன். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறும்
கனவில் தேர்வில் பங்கெடுத்தேன். உயிரியல் தேர்வின் கேள்வித் தாளின் முதல் பக்கத்திலேயே
ம்யூட்டேஷன் என்றால் என்ன என்றொரு கேள்வி இருந்தது. நான் உயிரியலில் மிக நல்ல மதிப்பெண்கள்
வாங்க நினைத்திருந்தவன். இந்தக் கேள்வி எனக்குப் பெரிய பதற்றத்தைத் தந்தது. ஏனென்றால்
ம்யூட்டேஷன் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. மரபணு மாற்றம் என்றோ மரபணுப் பிறழ்வு
என்றோ தூண்டப்பட்ட மரபணு மாற்றம் என்றோ படித்தேன். (இப்போது நினைவில்லை.) இன்னும் சில
கேள்விகள் இப்படி இருந்த நினைவு. தேர்வு முடிந்ததும் மாணவர்கள் அனைவரும் பேசிகொண்டது,
தவறாக இருந்த கேள்விகளைப் பற்றிய வருத்தத்தைத்தான். இதில் நீட் தேர்வில் பங்குகொள்ளும்
மாணவர்களின் வருத்தமும் பதற்றமும் எப்படி இருக்கும் என்று யூகிக்கலாம். எல்லாருமே தேர்வு
பெறப்போவதில்லை என்றாலும், இக்கேள்விகளால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மாணவர்களை நாம்
புறக்கணிக்கமுடியாது.
இதன் அடிப்படையில் 49 கேள்விகளின் மொழிமாற்றப் பிரச்சினையை
அணுகவேண்டும். கொஞ்சம் மாற்றி மொழிபெயர்த்திருந்தாலும் ஏன் மாணவர்களால் அதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை
என்பது, நம் பாடத்திட்டம் உருவாக்கும் மாணவர்களைப் பற்றிய வேறொரு பிரச்சினை. ஏன் சிபிஎஸ்இ
சரியான மொழிபெயர்ப்பை உருவாக்க முயற்சி எடுக்கவில்லை என்பதுதான் இப்போதைய பிரச்சினை.
தமிழ் அல்லாமல் பிறமொழிகளில் எப்படி இக்கேள்விகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன,
அங்குள்ள மாணவர்கள் எப்படி இதை எதிர்கொண்டார்கள், அங்குள்ளவர்கள் சார்பாக ஏன் வழக்குகள்
பதிவாகவில்லை என்பதெல்லாம் கூட நாம் யோசிக்க வேண்டியவையே.
என் பார்வைக்குக் கிடைத்த தவறான தமிழ்க் கேள்விகளை மட்டும்
இப்போது பார்க்கலாம். இவை இணையத்தில் கிடைத்த செய்திகளில் இருந்து சேகரிக்கப்பட்டவை.
செங்குத்து என்பது நேர்குத்து என்று கேட்கப்பட்டுள்ளது. செங்குத்து
என்றே நான் பள்ளிகளில் படிக்கும் காலம் தொட்டு 25 வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகிறது.
இதை நேர்குத்து என்று சொன்னால் மாணவர்களுக்குப் புரியும் என்று எதிர்பார்க்கமுடியாது.
சிறுத்தை என்பதற்குப் பதிலாக அதன் ஆங்கிலப் பெயரை அப்படியே தமிழில் சீத்தா என்று எழுதி
இருக்கிறார்கள். சிறுநீர் நாளம் என்று கேட்காமல் யூரேட்டர் என்று கேட்கப்பட்டிருக்கிறதாம்.
இயல்பு மாற்றம் என்பது இயல் மாற்றம் என்றும், தாவரங்கள் என்பது ப்ளாண்டே என்றும் கேட்கப்பட்டுள்ளன.
இறுதி நிலை என்பது கடை நிலை என்றாகியுள்ளது. புதிய அரிசி ரகம் என்பது புதிய அரிசி நகம்
என்று கேட்கப்பட்டுள்ளது. வவ்வால் என்பது வவ்னவால் என்று அச்சிடப்பட்டுள்ளது. பலகூட்டு
அல்லீல்கள் என்பது பல குட்டு அல்லீல்கள் என்றாகி உள்ளது. ஆக்டோபஸ் ஆதடபஸ் என்றாகி இருக்கிறது.
நீள பரிமாணங்கள் என்பது நீள அலகுகள் என்று வந்திருக்கிறது. விதை வங்கி வதை வங்கி
ஆகி இருக்கிறது.
இப்படியாகப் பல கேள்விகள் தவறாகவே கேட்கப்பட்டுள்ளன. டெக்
ஃபார் ஆல் 49 கேள்விகள் தவறு என்று பட்டியலிட்டாலும், 18 கேள்விகளை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம்
என்கிறார்கள் சிலர். ஆனால் உயர்நீதிமன்றம் கேள்விகளின் தவறுகள் எத்தகையவை என்பதற்குள்
போகவே இல்லை. உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சரியான ஒன்றே.
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் விவாதம் ஒன்றில் பங்கேற்ற
கோகுல ஸ்ரீனிவாஸ் இது தொடர்பான முக்கியான கருத்து ஒன்றை வெளியிட்டார். “இத்தீர்ப்பு
சரியான ஒன்றே. ஆனால் ஏன் நீதிமன்றம் இத்தீர்ப்பை முன்பே வெளியிட்டிருக்கக்கூடாது” என்பதுதான்
அவரது நிலைப்பாடு. உண்மையில் இத்தீர்ப்பு முன்பே வந்திருக்குமானால் பல குழப்பங்களைத்
தவிர்க்க அது உதவியிருக்கக்கூடும். ஆனால் ஏன் சிபிஎஸ்இ உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை
தரவரிசைப் பட்டியலை வெளியிடாமல் காத்திருக்கக்கூடாது என்னும் கேள்வியும் நியாயமானதுதான்.
சிபிஎஸ்இ தான் தவறு செய்ததாகவே நினைக்கவில்லை என்பதுதான் இதற்கான வருத்தத்துக்குரிய
பதில்.
நீட் தொடர்பாக ஏற்கெனவே பல பிரச்சினைகள் நிலவி வரும் சூழலில்
இப்பிரச்சினை இன்னும் சிக்கலைத் தீவிரப்படுத்தி இருக்கிறது. ஏற்கெனவே மெட்ரிகுலேஷன்
பள்ளிகளின் சேர்க்கை குறைந்து சிபிஎஸ்இ செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கி
இருக்கிறது. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் எல்லாமே தங்கள் வசம் சிபிஎஸ்இ பள்ளிகள் இருக்கவேண்டிய
அவசியத்தை உணர்ந்து அவற்றைத் துவங்கத் தேவையான முயற்சிகளை எடுக்கத் தொடங்கிவிட்டன.
நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையிலான புதிய பாடத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
இந்நிலையில் தமிழில் கேள்விகள் இப்படித்தான் இருக்கும் என்பது நீட் எதிர்ப்பாளர்களுக்கும்,
மத்திய அரசின் எதிர்ப்பாளர்களுக்கும் பெரிய வசதியாகப் போயிருக்கிறது.
நீட் தேர்வின் குழப்படிகளைக் களைவதில் ஆர்வம் காட்டுவதைவிடக்
கூடுதலாக, நீட் தேர்வு ஒழிப்பில் காட்டுகிறார்கள். இனி அது சாத்தியமில்லை என்னும் நிலையையும்
அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். எனவே மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வேண்டுமென்றே
வஞ்சனை செய்கிறது என்கிற பிரசாரத்தைத் துவங்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நீட்
தேர்வெழுத மாணவர்களுக்கு வேறு மாநிலங்கள் ஒதுக்கப்பட்டன என்ற பிரச்சினையிலும் இவர்கள்
இதையே முன்வைத்தார்கள். தமிழ்நாட்டை ஒழிக்க ஏன் மத்திய அரசு நீட் தேர்வில் பங்குபெறும்
ஆயிரம் மாணவர்களை மட்டும் குறி வைக்கவேண்டும் என்று இவர்கள் யோசிக்கவே இல்லை. இதன்மூலம்
தமிழ்நாட்டை என்ன செய்துவிடமுடியும்? தமிழில் தேர்வுக்கேள்விகள் இப்படி வந்திருப்பது
பெரிய துரதிர்ஷ்டம், அநியாயம். ஆனால் இதன் பின்னணியில் அலட்சியம் மட்டுமே இருக்கிறதே
ஒழிய தமிழ்நாட்டை ஒழிக்கவேண்டும் என்கிற எந்த ஒரு எண்ணமும் இருக்க வாய்ப்பில்லை.
மற்ற அரசுகளுக்கும் தற்போதைய மத்திய அரசுக்கும் உள்ள ஒரே
வித்தியாசம், தவறுகள் நேரும்போது அதைத் திருத்திக்கொள்ள எடுக்கும் நடவடிக்கைதான். இதைப்
பற்றி ஏன் மத்திய அரசு பேசுவதில்லை என்ற கேள்விகள் பொருளற்றவை. பேச்சைக் காட்டிலும்
செயல்பாடும் தீர்வுமே முக்கியம். இனி சிபிஎஸ்இ நடத்தப்போவதில்லை, நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸிதான்
நடத்தும் என்பது, இப்பிரச்சினைகளை ஒட்டி மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு ஒரு முன்னகர்வு.
அது எப்படி இயங்கும், அது சிபிஎஸ்இயில் இருந்து எப்படி வேறுபட்டிருக்கும் என்பதெல்லாம்
இனிதான் நாம் பார்க்கவேண்டியது. ஆனால் நிச்சயம் காங்கிரஸ் அரசைப் போல ஒரு கண் துடைப்பு
அறிவிப்பாக இது இருக்காது என்று நம்பலாம். சிபிஎஸ்இ எதிர்ப்பு மற்றும் மத்திய அரசு
எதிர்ப்பு இரண்டையும் ஒன்றாக்கி, வெகுஜன மக்கள் மத்தியில் மத்திய அரசு எதிர்ப்புக்கான
விதையை ஊன்றுவதுதான் சிலரின் நோக்கம். இதிலிருந்து விடுபட்டு தமிழக மாணவர்களுக்கு எது
தேவை என்பதை மட்டும் யோசிப்பதுதான் சரியான நிலைப்பாடு.
உச்சநீதி மன்றத்தில் வரும் தீர்ப்பு இவ்விஷயத்தில் ஒரு முடிவைக் கொண்டு வரலாம். அதை ஒட்டி இன்னும் குழப்பங்கள் தமிழ்நாட்டில் அரங்கேறலாம். ஆனால் இனி வரும் தேர்வுகளில் இப்படியான ஒரு அலட்சியத்தை எந்த அமைப்பும் கைக்கொள்ளாது என்பதை இப்பிரச்சினை உறுதி செய்திருக்கிறது என்றே நம்புகிறேன்.