5 மற்றும் 8ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு

நடப்பாண்டிலேயே 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என்ற அறிவிப்பை சூசகமாக வெளியிட்டதற்கே இத்தனை எதிர்ப்புகள். ஆனால் இதற்கான ஆயத்தம் முன்பிருந்தே நடந்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டிலேயே, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, மத்திய அரசு சிபிஎஸ்ஸி பள்ளிகளுக்கு இதைப் போன்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதை ஒட்டி மாநில அரசுகளுக்கும் பரிந்துரைத்தது என்று நினைக்கிறேன். அப்போதிருந்தே இது நிகழலாம் என்றிருந்த நிலையில் நேற்று செங்கோட்டையன் இந்த ஆண்டிலிருந்தே இத்தேர்வுகள் நிகழும் வாய்ப்பு உள்ளது என்றும், இதுகுறித்து அமைச்சரவை விவாதிக்கும் என்றும் சொல்லி இருக்கிறார். (ஆனால் நேற்றே பள்ளிகளுக்கு இதுதொடர்பான அறிக்கை வந்துவிட்டது!) இந்த ஆண்டிலிருந்து இத்தனை வேகமாகச் செய்யத் தேவையில்லை என்பது சிறிய பிரச்சினையே. இதைச் செய்வது அத்தனை கடினமான செயல் ஒன்றுமில்லை என்ற நிலையில் இந்த ஆண்டேவா என்ற கேள்வி முக்கியமற்றது. இந்த ஆண்டு செய்யாமல் அடுத்த ஆண்டிலிருந்து செய்யலாம் என்றாலும் சரிதான். ஆனால் இப்படி ஒரு பொதுத் தேர்வு தேவையா என்ற கேள்வியே அனைவராலும் முன்வைக்கப்படுகிறது.

பொதுத்தேர்வு என்றாலே பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளால் பெரிய அளவில் மன உளைச்சலுக்கும் பீதிக்கும் ஆளாகி இருக்கும் பெற்றோர்கள், இந்த இரண்டுக்கும் மீண்டும் பொதுதேர்வா என்று அலறுகிறார்கள். இப்படி அலற ஒன்றுமில்லை. நான் அரசுப் பள்ளியில் படித்தபோது (1988 வாக்கில்) ஈ எஸ் எஸ் எல் சி என்ற பெயரில் பொதுக் கேள்வித்தாள் ஒன்றுக்கு விடை எழுதிய நினைவு வருகிறது. அப்போதே அது கைவிடப்பட்டதா அல்லது தொடர்ந்ததா என்று தெரியவில்லை. பொதுவாகவே, சமச்சீர்க் கல்வி என்றானபிறகு, அனைத்து வகுப்புகளுக்குமே பொதுவான கேள்வித்தாளைக் கொடுத்துவிடுவது நல்லது. (சமச்சீர் என்பதே தேவையற்றது என்பதே என் கருத்து. மெட்ரிகுலேஷன், அரசுப் பள்ளி, சிபிஎஸ்ஸி என்று அவரவர்களுக்கான கல்வித் திட்டத்தை வைத்துக்கொண்டு, அவரவர்களுக்கான பொதுத் தேர்வைக் கொண்டாலே போதுமானது.) விடைத்தாள் திருத்துவது, குறுவள மைய அளவில் திருத்தப்படும் என்று இன்றைய தமிழ் தி ஹிந்து சொல்லி இருக்கிறது. குறுவள மைய அளவு என்றால் என்னவென்று எனக்குப் புரியவில்லை. மண்டல அளவில் திருத்தப்பட்டாலும் சரிதான், பிரச்சினையில்லை.

பொதுத் தேர்வு வினாத்தாள் என்ற உடனேயே பதற ஒன்றுமில்லை. மாணவர்களை வேண்டுமென்றே தோல்வி அடையச் செய்து அரசு (எந்தக் கட்சி ஆண்டாலும்) அடையப்போவது எதுவுமில்லை. கட்டாயத் தேர்ச்சி என்பது நிச்சயம் ஒழித்துக் கட்டப்படவேண்டியது. மாணவர்களுக்குக் கட்டாயக் கல்வி எத்தனை அவசியமோ அதற்கு இணையான அவசியம் அவர்களது கல்வித் தரம். அவர்களது கல்வித் தரத்தை உயர்த்த ஆசிரியர்களின் தகுதியைச் செம்மையாக்க வேண்டும். பள்ளிகளின் தரத்தை உயர்த்தவேண்டும். இதிலெல்லாம் எதுவுமே செய்யமுடியாது அல்லது என்ன செய்வது என்று தெரியவில்லை என்பதற்காக, மிக எளிதான தீர்வாக, படிக்கிறார்களோ இல்லையோ தரமிருக்கிறதோ இல்லையோ, மாணவர்கள் தேர்வு பெற்றதாக அறிவிக்கலாம் என்பது அநியாயம்.

5ம் வகுப்பிலும் 8ம் வகுப்பிலும் இப்படி ஒரு பொதுத் தேர்வு இருப்பது நல்லது. இதனால் இடை நிற்றல் அதிகமாகும் என்பது சரியான கருத்தல்ல. இடை நிற்றல் என்பது இல்லாமல் போக நாம் பேசவேண்டியது பெற்றோர்களிடம். கல்வியின் பயன் எதுவுமின்றி ஒரு மாணவர் இப்படித் தேர்ச்சி பெற்றுக்கொண்டே போவது சரியானதல்ல என்பதை விட்டுவிட்டு, கட்டாயத் தேர்ச்சிதான் சரியான தீர்வு என்று சொல்வதால் என்ன பயன்? இந்திய அளவில் தமிழ்நாட்டு மாணவர்கள் இதே கல்விமுறையில்தான் சாதிக்கிறார்கள் என்பதும் உண்மைதான். சாதிப்பவர்களுக்கு இந்தக் கட்டாயத் தேர்ச்சி முறை என்பதோ பொதுத் தேர்வு என்பதோ ஒரு பொருட்டே இல்லை என்பதையே நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். நாம் கவலை கொள்ளவேண்டியது சராசரி மாணவர்களையும் சராசரிக்கும் கீழான மாணவர்களையும்.

இதில் ஜாதியை நுழைப்பதில்தான் திராவிடக் கல்வியாளர்களின், முற்போக்காளர்களின் சூட்சுமம் உள்ளது. ஜாதிக்கும் இதற்கும் ஒரு தொடர்புமில்லை. பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் தரம் என்ன என்பதைப் பாருங்கள். தலையில் பெரிய இடி விழுந்ததைப் போல இருக்கும். கட்டாயத் தேர்ச்சியே இதற்கு ஒரு காரணம். (கட்டாயத் தேர்ச்சி மட்டுமே காரணமல்ல என்பதும் மிகச் சரியான வாதம்தான்.) இதைக் கொஞ்சம் சரி செய்யவே இந்தப் பொது வினாத்தாள் மற்றும் பொதுத் தேர்வு. நான் பத்தாம் வகுப்பு போனபோது முதல் நாளில் என் ஆசிரியர் பத்தாம் வகுப்புக்குத் தேர்ச்சி பெற்று வந்த மாணவர்களிடம் அவர்கள் 9ம் வகுப்புப் பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைச் சொன்னார். கேட்டபோது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அப்போது கட்டாயத் தேர்ச்சி இல்லை. இன்றும் இந்நிலை அன்று இருந்ததைவிடப் பல மடங்கு கீழே போயிருக்கிறது.

பொதுத் தேர்வைக் கொண்டுவருவதால் மாணவர்கள் அத்தனை பேரும் சரியாகிவிடுவார்களா என்பது முக்கியமான கேள்வி. நிச்சயம் அப்படி ஆகிவிடாது என்பதுதான் யதார்த்தம். அதேசமயம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான பொறுப்பு கூடும். அரசுப் பள்ளியில் ஒரு வகுப்பில் மாணவர்களின் தோல்வி விகிதம் கூடுதலாக இருந்தால் அவர்கள் என்னென்ன கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டி இருக்கும் என்பதை அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டுப் பாருங்கள். இந்நிலையில் இத்தேர்வு வருமானால் அத்தனை எளிதாக அவர்களால் ஒதுங்கிவிடமுடியாது. நாளை அரசு கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டி இருக்கும் என்ற நெருக்கடி உருவாகும். இதனால் பள்ளிகளில் நடக்கும் கல்வியின், சொல்லித் தரப்படும் முறையின் தரம் ஒருவேளை உயரலாம். இந்தப் பொதுத் தேர்வை ஒட்டுமொத்தமாக மறுப்பதன்மூலம் இதற்கான வாய்ப்பை ஒரேடியாக இல்லாமல் செய்துவிடக்கூடாது.

இந்த வருடமே பொதுத் தேர்வு வந்தாலும் உடனே மாணவர்களை அரசு தோல்வி அடையச் செய்யபோவதில்லை. மாணவர்களின் கழுத்தை நெரிக்க அரசு தயாராக உள்ளது போன்ற சித்திரங்களை எல்லாம் நம்பாதீர்கள். உச்சநீதிமன்றம், மத்திய அரசு, மாநில அரசு எல்லாருமே மாணவர்களுக்கு உதவவே சிந்திக்கிறார்கள். இதில் சாதியை, பொருளாதாரத்தைப் புகுத்திக் குழப்பப் பார்ப்பது அரசியல்வாதிகளே. இந்த ஆண்டு கேள்வித்தாள் நிச்சயம் எளிதாகத்தான் இருக்கும். அதுமட்டுமல்ல, எல்லா ஆண்டும் எளிதாகத்தான் இருக்கும்! ஒரு பொது வரையறையை எட்டவும், கட்டாயத் தேர்ச்சி என்பதால் ஏற்பட்டிருக்கும் ஒரு பின்னடைவைச் சரி செய்யவுமே இது பயன்படப்போகிறது.

கட்டாயத் தேர்ச்சி திட்டம் நீக்கப்படுவதற்கான வேலைகளை மத்திய அரசு தொடங்கிவிட்டாலும், இன்றும் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. உண்மையில் இதனால் மாணவர்களுக்குப் பெரிய பயன் ஒன்றுமில்லை. தோல்வி அடையவில்லை என்ற நெருக்கடி இல்லை என்ற ஒன்று மட்டுமே இதனால் மாணவர்களுக்குக் கிடைத்திருக்கும் நல்ல விஷயம். மன நெருக்கடியைக் களைவது, இரண்டு மாதத்தில் மீண்டும் நடக்க இருக்கும் பொதுத் தேர்வில் வெல்ல வைப்பது, அப்படியே தோற்றாலும் அது சகஜம்தான் என்ற நினைப்பை உருவாக்குவது, கல்வி வராத மாணவர்களுக்கு வாழ்க்கையில் வெல்ல என்ன செய்யலாம் என்று சிந்திப்பது, அதற்கான செயல்திட்டத்தை உருவாக்குவது போன்றவற்றைச் செய்வதே நாம் செய்யும் பெரிய சேவையாக இருக்கும். 8ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியில் வென்ற ஒரு மாணவன், 9ம் வகுப்பில் தோற்றால் என்ன ஆகும் என்பதையும் நாம் யோசிக்கவேண்டும். இப்படி எதையும் யோசிக்காமல் கட்டாயத் தேர்ச்சி ஒன்றே சரியான வழி என்று பேசுவது, போகாத ஊருக்கு இல்லாத வழியை அமைப்பது போன்ற ஒன்றுதான்.

மிக முக்கியமான பின்குறிப்பு: இப்போது வரப்போகும் பொதுத் தேர்வும் 60 மதிப்பெண்களுக்குத்தான். மீதி 40 மதிப்பெண்களுக்கு, 20 மதிப்பெண்கள் செய்முறைகளுக்காக (பிராஜெக்ட்), மீதி 20 ஸ்லிப் டெஸ்ட்டுகளுக்காக. பொதுவாக ஒரு பள்ளி இந்த மதிப்பெண்களில் கை வைக்காது. அப்படியானால் கட்டாயத் தேர்ச்சி என்பது இப்போதும் செயல்வடிவில் தொடரத்தான் போகிறது போல! இதில் இன்னும் புரிதல் கூடினால்தான் இதைப் பற்றி அதிகம் பேசமுடியும்.

நன்றி: https://oreindianews.com/?p=3463

Share

Comments Closed