மலையாளக் கன்னடத் தமிழ்த் திராவிடனின் குறிப்புகள்.
2001ல் துபாயில் முதன்முதலாகக் கால் வைத்தபோது அது கேரளா என்று தெரியாது. திருநெல்வேலியில் இருந்து வந்திருப்பதால் அவனுக்கு மலையாளம் கொஞ்சமாச்சும் தெரிந்திருக்கும் என்பதெல்லாம் அநியாயக் கற்பனை. பி.வி.ஜான் என்னை புனலூரில் இண்டர்வ்யூ செய்தபோது, புனலூரின் லேசான தூறலும் குளுகுளு காலநிலையும் என்னை பொறாமை கொள்ள வைத்தாலும், மலையாளம் அவசியம் என்று நினைக்க வைக்கவில்லை. தமிழே எல்லா இடங்களிலும் போதுமானதாக இருந்தது. ஆனால் துபாயில் மலையாளம்தான் தாய்மொழி!
மலையாளம் பேசக் கற்றுக்கொள் என்று உடன்பிறவா சேச்சியும் சந்தோஷ் என்னும் நண்பனும் சொல்லப் போக, திக்கித் திணறி நான் சொன்ன பதில், ‘அரி கழிச்சு.’ என்ன சாப்பிட்ட என்று கேட்ட கேள்விக்கு, ரைஸ் என்று சொல்வதாக நினைத்து நான் சொன்ன பதில் இது. அரை மணி நேரம் சிரித்துவிட்டு, ‘சோறு கழிச்சு’ என்று சொல்லித் தந்தார்கள்.
அடுத்த மூன்று மாதத்தில் முழுக்க முழுக்க மலையாளம்தான் பேச்சு. நான் துபாயில் வேலைக்குச் சேர்ந்த அன்று லீவில் போன பி.வி.ஜான், மூன்று மாதம் கழித்து வந்தபோது நான் பேசிய மலையாளத்தைப் பார்த்து மிரண்டு போனார். ‘திருநெல்வேலின்றதால மலையாளம் முன்னாடியே தெரிஞ்சிருக்கும்’ என்று திருவாய் மலர்ந்தருளினார்.
தொடர்ந்து நண்பர்களிடம் மலையாளத்தில் மட்டுமே பேசுவது, வாராவாரம் மலையாள (நல்ல!) திரைப்படங்கள் பார்ப்பது, தொலைக்காட்சியில் தொடர்கள் பார்ப்பது என மலையாளம் பச்சக்கென சீக்கிரமே தொற்றிக்கொண்டது.
ஒன்றுமே தெரியாத மொழியைக் கற்றுக்கொள்வதுதான் ஒரு வகையில் சுலபம். மலையாளத்தில் நிறைய ஆதித்தமிழ் மற்றும் தற்காலத் தமிழ் வார்த்தைகள் கலந்திருப்பதால் வரும் குழப்பம் பெருங்குழப்பம்.
தந்தார்கள், கொடுத்தார்கள் என்பதை நாம் வரைமுறை இல்லாமல் பயன்படுத்துகிறோம். நம்மைப் பொருத்தவரை இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான். அவந்தான் தந்தான் என்றும் அவந்தான் கொடுத்தான் என்று எழுதுவதில் நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் மலையாளத்தில் தெளிவாகத் திருத்தினார்கள், எனிக்கு அவன் தந்து, ஞான் அவனுக்கு கொடுத்து. எனக்குத் தந்தார்கள், நான் பிறருக்குக் கொடுத்தேன். ஆனால் இதை அப்படியே பின்பற்றுவது அத்தனை சுலபமாக இருந்திருக்கவில்லை. பின்னர் பிடித்துக்கொண்டேன்.
எதோ ஒரு திரைப்படத்தில் ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கும் ஒரு நடிகர் (அசோகன் என நினைக்கிறேன்) ‘அவன் முங்கி’ என்று சொல்லிவிட்டு இவரும் நீரில் முங்கிவிடுவார். தியேட்டர் சிரித்தது. அவன் முங்கினதுக்கு ஏன் சிரிக்கணும் என்று யோசித்தபோது, பின்னர்தான் புரிந்தது, முங்கி என்பதற்கு இன்னொரு அர்த்தம், ஆள் தலைமறைவாகிவிட்டான் என. நாம் பயன்படுத்தும் முங்கி என்ற வார்த்தைக்கு இப்படி ஒரு நேரடிப் பொருள் இப்போது இல்லையென்றாலும், யோசித்துப் பார்த்தால் முங்கி என்ற வார்த்தையின் பொருள் அதுவாக இருப்பதிலும் ஒரு நியாய இருக்கவே செய்கிறது.
அதேபோல் இன்னொரு வார்த்தை சம்மந்தி. இன்றளவும் அதைச் சட்னி என்று என்னால் ஜீரணிக்கமுடியவில்லை. தமிழில் சம்பந்திக்குப் பேச்சுவழக்கில் சம்மந்தி என்றிருக்க, இந்த சம்மந்தி புத்திக்குள் புகுவேனா என்று அடம் பிடிக்கிறது.
தமிழில் இல்லாத வார்த்தைகள் வேற்று மொழிகளில் இருக்கும்போது அதைப் பிடித்துக்கொள்வது எளிதாக இருக்கிறது. தமிழில் இருந்து, அதுவும் வேறு பொருளில் இருந்துவிட்டால் குழப்பிவிட்டுவிடுகிறது.
மூன்று வருடங்களுக்கு முன்பு நண்பர் சுதர்ஸன் மூலம் கன்னட மெகா சீரியலை தமிழில் மொழிபெயர்க்க வேண்டிய பணி வந்தபோது, ரொம்ப யோசித்தேன். மலையாளத்திலிருந்து தமிழுக்கு என்றால் சந்தோஷமாக ஒப்புக்கொண்டிருப்பேன். நான் வீட்டில் பேசும் கன்னடம் வேறு, நிஜக் கன்னடம் வேறு என்பது என் அப்போதைய மனப்பதிவு. சரி என்று ஒப்புக்கொண்டு வேலையை ஆரம்பித்தேன்.
முதல் பத்து எபிசோட்களைப் பார்த்தேன். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலத்தான் இருந்தது. அப்போது ஒரு முடிவெடுத்தேன். உட்டாலக்கடியாக நாமாக குன்ஸாகப் புரிந்துகொண்டு எழுதக்கூடாது என்பதை அடிப்படை விதியாக வைத்துக்கொண்டேன். ஒரு வார்த்தை புரியாவிட்டால் கூட அடுத்த வார்த்தைக்குப் போகமாட்டேன். மீண்டும் மீண்டும் கேட்டு, அந்த வார்த்தையைத் தேடிக் கண்டுபிடித்து, அர்த்தம் தெரிந்துகொண்டுதான் அடுத்த வசனத்தையே கேட்பேன்.
இணையம் பெரிய அளவில் கைக்கொடுத்தது. கூகிள் டிரான்ஸ்லேட் ஒரு வரப்பிரசாதம். கன்னடம் எழுதவோ படிக்கவோ தெரியாது. ஆனால் எனக்கு அர்த்தம் வேண்டும். அதை ஆங்கிலத்தில் எழுதிக் கண்டுபிடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். நாம் ஒரே எழுத்தில் க, க2, க3, க4 என எல்லாவற்றையும் எழுதிப் பேசி விடுகிறோம். எனவே ஆங்கிலத்தில் சரியான கன்னட உச்சரிப்பை எழுதுவதில் பெரிய சிக்கல் இருந்தது. அப்போது கூகிள் டிரான்ஸ்லேட் கைக்கொடுத்தது. வசனத்தைப் பேசினால் அதுவே டைப் செய்து அதன் உத்தேசமான மொழிபெயர்ப்பைத் தந்தது. பின்னர் ஒவ்வொரு வார்த்தையாகவும் தெரிந்துகொள்வேன்.
இதில் இருந்த அடுத்த சவால், பேச்சு வழக்கு வார்த்தைகளின் பயன்பாடு. கம்பி நீட்டிட்டான் என்றால் நொடிக்குள் புரிந்து சிரித்துவிடுகிறோம். ஆனால் தமிழ் தெரியாத ஒருவர் இதற்கு அர்த்தத்தை கூகிள் டிரான்ஸ்லேட்டில் தேடினால், கம்பியை நீட்டிவிட்டான் என்றே பொருள் சொல்லும். இதைத் தவிர்க்க உதவியது, கூகிள் தேடல். விதவிதமாக, ரகரகமாக கன்னடப் பேச்சு வழக்கை இணையம் முழுக்க கங்கிலீஷில் கொட்டி வைத்திருக்கிறார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதைப் பார்த்து வார்த்தை வளத்தைப் பெருக்கிக்கொள்வேன்.
வீட்டில் பேசும் கன்னடமும் நிஜக் கன்னடமும் ஒன்றில்லை என்றாலும், முக்கியமான ப்ளஸ் பாய்ண்ட் ஒன்று இருந்தது எனக்கு. அது இப்போதும் ஆச்சரியமான ஒன்றே. கன்னட வார்த்தைகளின் வேர் பெருமளவு சிதையாமல் அப்படியே இருப்பதால், கன்னடத்தின் வொக்காபுலரி எனக்கு மிக எளிதாகக் கிடைத்துவிட்டிருந்தது. மலையாளத்தில் நான் இதைப் பேசிப் பேசித்தான் கற்றேன்.
கூடவே, பல வார்த்தைகளை எப்படி வீட்டில் தவறாகப் பேசுகிறோம் என்பதும் புரிந்தது.
எங்கள் குடும்பத்தில் கணவனை மனைவி பாவா என்று அழைப்பது வழக்கம். உண்மையில் இது தெலுங்கர்களின் வழக்கம் (என்று நினைக்கிறேன்.) எங்களுக்கு முந்தைய இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் இவ்வழக்கம் கிடையாது. றி என்று அழைப்பதே முறை. தமிழில் ஏங்க என்று சொல்வதற்கு இணையானது. அக்காவின் கணவனை பாவா என்று அழைப்பதும், அத்தைப் பையனை பாவா என்று அழைப்பதும்தான் முறை. சொந்தத்துக்குள்ளேயே திருமணம் என்ற ரீதியில், இதை கணவனுக்கும் பாவா என்று நீட்டிவிட்டார்கள். எனவே முதலில் இதைப் புரிந்துகொள்ளவேண்டி இருந்தது. இல்லையென்றால், அக்காவின் கணவனை இவள் கணவன் என்று நினைத்து, இல்லாத கதையை நாமே புரிந்துகொள்ளும் சிக்கல் இருந்தது.
அடுத்த வார்த்தை அவ்வா! அய்யகோ. இது தந்த கொடுமை ஒன்றிரண்டு அல்ல. நாங்கள் அவ்வா என்ற வார்த்தையைப் பாட்டிக்குப் பயன்படுத்துகிறோம். உண்மையில் அவ்வா என்றால் அம்மா என்றே பொருள். சில வீட்டில் அப்பாவை அண்ணா என்றழைப்பார்கள். அப்படி அல்ல, நிஜமாகவே அவ்வா என்றால், அன்பாக அம்மா என்று பொதுவாக அழைப்பதாகவே அர்த்தம். அஜ்ஜி என்றால்தான் பாட்டி. அஜ்ஜி என்றால் பாட்டி என்று முன்பே தெரியும். ஆனால் அவ்வா என்றால் அம்மா என்று தெரிந்துகொள்வதற்குள் தலை சுற்றிவிட்டிருந்தது.
அடுத்த வார்த்தை முந்தெ. தமிழில் முன்னால் என்றால், மிக முன்னால் அதாவது கடந்தகாலம் என்றே பொருள். நாங்கள் கன்னடத்தில் இந்த வார்த்தையையே பயன்படுத்திப் பேசப் பழகிக்கொண்டு விட்டோம். ஆனால் கன்னடத்தில் முந்தே என்றால் எதிர்காலம். முந்தின நில்தானா என்றால், அடுத்த நிறுத்தம். இப்போது எழுதும்போது கூட இது எனக்குக் குழப்பத்தைத் தருகிறது. அந்த அளவுக்கு முந்தெ என்பது எங்களுக்குள் முன்னால் என்ற பொருளில் ஊறிவிட்டிருக்கிறது.
இன்னொரு வார்த்தை தாழ்மை! தமிழில் தாழ்மை என்றால் பணிவு என்று பொருள். ஆனால் கன்னடத்தில் பொறுமை! தாழ்மை என்றொரு தமிழ்வார்த்தை இல்லாமல் இருந்திருந்தால் கூட, பொறுமை என்ற பொருள் தரும் கன்னட வார்த்தையை எளிதாக நினைவு வைத்திருந்திருக்க முடியும். ஆனால் இப்போதே ஒவ்வொரு தடவையும் கன்னடத்தில், ‘தாழ்மெ தாழ்மெ’ என்று வரும்போது, மனதுக்குள் ‘பணிவு பணிவு’ என்றும், அறிவில் ‘பொறுமை பொறுமை’ என்றுமே வருகிறது.
இன்னொரு வார்த்தை அக்கி. இதில் என்ன பிரச்சினை? அரிசிதானே. கன்னடத்தில் அ, ஹ அடிக்கடி மாறிக்கொள்ளும். பேச்சு வழக்கில். அப்ப, ஹப்ப (பண்டிகை) இப்படி. அப்படியானால் அக்கி என்றால் அரிசி, ஆனால் ஹக்கி என்றால் பறவை. இதில்லாமல், நாம் ஆத்தா (அம்மன்) என்று சொல்லும் சொல்லுக்கு இணையாகவும் அக்கி உத்தர கன்னடத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதைப் புரிந்துகொள்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
இன்னொரு வார்த்தை, கை கொட்டு பிட்டா. அதாவது கை விட்டுவிட்டான் என்று பொருள். நேரடிப் பொருளாக, கை கொடுத்தான் என்றே புரிந்துகொள்ளத் தோன்றும். சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றால், பொருளே மாறிவிடும். கொஞ்சம் யோசித்தால், நம்மைக் குழப்பும் இப்படியான நிறைய வார்த்தைகள் சிக்கும்.
இன்னொரு வார்த்தை, பிரச்சினை. தமிழில் பிரச்சினை தெரியும். கன்னடத்தில் ப்ரெச்னே என்றால் கேள்வி! இதில் இன்னுமொரு உட்குழப்பமும் உண்டு. கன்னடத்தில் சம்சய என்றால் பிரச்சினை என்று பொருள். ஆனால் தமிழில் சம்சயம் என்றால் சந்தேகம் என்றொரு பொருளும் உண்டு!
இன்னொரு வார்த்தை, அனுமானம். தமிழில் அனுமானம் என்பதற்கு எப்படியோ ‘யூகம்’ என்ற பொருள் வந்துவிட்டது. கன்னடத்தில் அனுமானா என்றால் சந்தேகம். முன்பு தமிழிலும் அனுமானம் என்கிற வார்த்தை சந்தேகம் என்ற பொருளிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பல நூல்களில் பார்த்தேன்!
இன்னும் இன்னும் நிறைய கன்னட வார்த்தைகள் தெரிந்துகொள்ள, யூ ட்யூப்பில் சகட்டுமேனிக்கு கலந்துரையாடல்களைப் பார்க்க ஆரம்பித்தேன். நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது. தேடித் தேடிக் கன்னடக் கெட்ட வார்த்தைகளையும் தெரிந்துகொண்டேன். அதனால்தான், நிகழ்காலக் கன்னடப் படம் ஒன்றைப் பார்த்தால் இப்போதெல்லாம் 99% வார்த்தைகள் புரிகின்றன. மலையாளம் போலவே.
கன்னட சீரியலில் திடீரென உத்தர கன்னடம் கேரக்டர் ஒன்று வந்தது. அதாவது நம் திருநெல்வேலி, மதுரைக்கு இருப்பது போன்ற ஒரு வட்டார வழக்கு. அசரடிக்கும் வழக்கு. சட்டெனப் புரியாது. நிறைய வார்த்தைகள் புதியதாகப் புழங்கும். இதற்காகவே, யூ ட்யூப்பில் தொடர்ந்து உத்தர கன்னட வார்த்தைகள் புழங்கும் கலந்துரையாடல்களைப் பார்த்தேன். உத்தர கன்னட வார்த்தைகளைப் பேசும் படங்களைப் பார்த்தேன். ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட எல்லா வார்த்தைகளும் புரிய ஆரம்பித்துவிட்டன.
எப்போது பிரச்சினை வருகிறது? செய்தி கேட்கும்போது அல்லது அரசர் காலத் திரைப்படங்கள் பார்க்கும்போது. இதையும் தொடர்ச்சியாக ஒரு மாதம் பார்த்தால், 90% வார்த்தைகளைத் தெரிந்துகொண்டு விடுவேன். தேவை வரவில்லை என்பதால் செய்யவில்லை.
கன்னடப் புத்தகங்களை ஒலியாகக் கேட்டுப் பார்த்தால், 50%தான் புரிகிறது. எனவே அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டேன்.
சீரியல்களில் உள்ள (நமக்கு!) ப்ளஸ் பாய்ண்ட் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட வார்த்தைகளுக்குள்ளேதான் சுற்றிச் சுற்றி வருவார்கள். தமிழ் உட்பட. ஒரு குறிப்பிட்ட ஜானரில் மட்டும் 5% வார்த்தைகள் புதியதாக வரலாம். மற்றபடி எல்லாம் அதே வார்த்தைகள்தான் மீண்டும் மீண்டும். எனவே கொஞ்சம் முயற்சி எடுத்துவிட்டால், பின்னர் அது எப்போதோ வங்கியில் போட்டுவைத்த வைப்பு நிதியைப் போல வட்டியைத் தந்துகொண்டே இருக்கும். ‘நீதானா எந்தன் பொன்வசந்தம்’ சீரியலை எழுதும்போது நான் எடுத்த முடிவு, அதாவது கன்னட சீரியலான ‘ஜொத ஜொதயலி’-யில் வரும் எந்த ஒரு கன்னட வார்த்தையும் புரிந்துகொள்ளாமல் போகக்கூடாது என்ற அந்த முடிவு, இன்று வரை உதவுகிறது.
எப்படித் தேடியும் அர்த்தம் கிடைக்காத வார்த்தைகளுக்கு, பெங்களூருவில் இருக்கும் கன்னட நண்பர்களிடம் கேட்டு எனக்குச் சொல்லித் தந்த, டாக்டர் பிரகாஷ், உமா பிரகாஷ், ராகவேந்திரன் போன்ற நண்பர்களை அன்போடு நினைத்துக்கொள்கிறேன்.
இங்கே இன்னொன்றையும் சொல்லவேண்டும். தொலைக்காட்சி மெகா தொடர்களின் கலந்துரையாடலின்போது, தெலுங்கில் இருந்து தமிழுக்குக் கதை எழுதும் நண்பர் கேட்டார், ‘கன்னடம் தெரிஞ்சா கன்னடத்துல இருந்து தமிழ்ல எழுதறீங்க? இதென்ன புதுப்பழக்கம்? எனக்கெல்லாம் தெலுங்குல ஒரு வார்த்தை கூடத் தெரியாது!’ 🙂 சரியாக ஒரு வருடம் முன்பு, ஒரு வாய்ப்பு எனக்கு வந்தது, ‘வங்காள மொழியில் இருந்து தமிழுக்குச் செய்யுங்கள்’ என. நடுக்கம் பரவ, ‘ஒரு வார்த்தை கூடத் தெரியாதே சார்’ என்றேன். ‘க்ரியேட்டிவிட்டி முக்கியம். யூ கேன் மேனேஜ்’ என்றார்கள். 25 எபிசோட்கள் பார்த்தேன். டிவியை ம்யூட்டில் வைத்துப் பார்ப்பதும், சத்தத்தோடு பார்ப்பதும் ஒன்றுதான் என்ற அளவுக்கே எனக்குப் புரிந்தது. ஆனால் கதையைப் புரிந்துகொள்வதில் ஒரு பிரச்சினையும் இல்லை. ‘தெலுங்கு எனக்கு தெரியாது’ என்று சொன்ன நண்பரை நினைத்துக்கொண்டேன். நல்லவேளை, வங்கமொழி தப்பித்தது, அந்த ப்ராஜெக்ட் க்ளிக் ஆகவில்லை.
அதற்கு மறுநாளே இன்னொரு அழைப்பு, ‘தெலுங்கில் இருந்து தமிழுக்கு’ என்றார்கள். ‘வங்க மொழியையே தெறிக்க விட்டாச்சு, தெலுங்குலு என்னலு இருக்குலு’ என்று 25 எபிசோட்கள் பார்த்தேன். ஆச்சரியமான ஆச்சரியம், 70% புரிந்தது. இந்த சீரியல் கிடைத்தால், இன்னும் 3 மாதத்தில் தெலுங்கை 90% புரிந்துகொள்ள முயற்சி எடுக்கவேண்டும், இனி என் தாய்மொழி தெலுங்கு என்று நினைத்துக்கொண்டபோது, தெலுங்கு செய்த புண்ணியம், அந்த ப்ராஜெக்ட்டும் டிராப் ஆனது.
கொரியன் திரைப்படத்தைத் தமிழில் எழுதும் வாய்ப்பு வந்தால் உடனே எனக்குச் சொல்லுங்கள், ஏனென்றால், கொரிய மொழி என்று தவறில்லாமல் தமிழில் கூட எனக்கு எழுத வராது.