நீண்ட பதிவு, பொறுமையாகப் படிக்கவும். ஜெய் ஸ்ரீராம். 🙂
பள்ளிகளில் ஹிஜாப் – காவித் துண்டுப் பிரச்சினை இந்திய அளவில் பெரிய பேசுபொருளாகி இருக்கிறது. நேற்று உடுப்பியில் அரசு ப்ரி யுனிவர்சிட்டி கல்லூரியில், ஒரு மாணவி பர்கா அணிந்து பள்ளிக்கு வர, சுற்றி நின்ற ஹிந்து மாணவர்கள் காவித் துண்டுடன் ஜெய்ஸ்ரீராம் என்று கத்த, இந்த மாணவி அல்லாஹு அக்பர் என்று கத்திக்கொண்டே பள்ளிக்குள் சென்றுவிட்டார்.
இதைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை இன்னும் தீவிரமாகியது. கிடைத்தது வாய்ப்பென்று தமிழ் எழுத்தாள முற்போக்காளர்கள் இத்தனை நாள் திரைமறைவில் இருந்தது போதும் என்று உடனே தங்கள் கொந்தளிப்புகளை, ஹிந்துத்துவ அரசியல் தரும் அபாயங்களை எல்லாம் பட்டியலிடத் தொடங்கிவிட்டார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் தற்கொலை செய்துகொண்டவர்களைப் பற்றி இவர்கள் ஒரு மூச்சு கூட விடவில்லை. ஆனால் கர்நாடகாவில் ஒரு பள்ளியில் பிரச்சினை என்றவுடன் கம்ப்யூட்டரில் தட்டத் தொடங்கிவிட்டார்கள்.
இவர்கள் போதாதென்று, அரைகுறை ஹிந்துக்களாக ஃபேஸ்புக்கில் வலம் வந்து சரியான நேரத்தில் தவறான கருத்தைச் சொல்லி உயிரெடுக்கும் அரை மண்டையர்கள் இன்னொரு புறம். இவர்கள் பல விதங்களில் பேசுகிறார்கள். முதல் விஷயம், வீடியோவைப் பார்த்துவிட்டு அந்தப் பெண்ணின் தைரியத்தைப் போற்றுகிறேன் என்பது. இதில் இருப்பது தைரியம் அல்ல, அசட்டுத் தைரியம். இன்னும் சொல்லப் போனால் தேவையற்ற பல அபாயங்களை இந்திய அளவில் உருவாக்கி இருக்கக் கூடிய அனாவசியமான தைரியம். உண்மையில், அந்த நேரத்தில் கும்பல்-மனப்பான்மைக்குள் போகாமல் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று குரல் எழுப்பிவிட்டு அமைதியாக அந்தப் பெண்ணைப் போக விட்ட மாணவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
இரண்டாம் விதம், மாணவர்கள் காவிக்கொடி ஏற்றியது தொடர்பானது. வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது, ஒரு மாணவன் தன் கையில் இருக்கும் காவி கொடியைப் பள்ளி வளாகத்தில் இருக்கும் ஒரு கம்பத்தில் ஏற்றுகிறான். அந்தக் காட்சியைப் பார்த்ததும், அடுத்தடுத்து சில செய்திகள் உடனே பரபரப்பபட்டன. அங்கே பறந்து கொண்டிருந்த இந்திய தேசியக் கொடியைக் கழற்றிவிட்டு மாணவர்கள் காவிக் கொடி ஏற்றினார்கள் என. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இவர்களைத் தேசத் துரோகிகள் என்றே அழைக்கவேண்டும் என்று முடிவெடுத்து, ஏகப்பட்ட வீடியோக்களைப் பார்த்தேன். ஒன்றிலும் தேசியக் கொடி கண்ணில் படவே இல்லை. எந்த மாணவன் கையிலும் தேசியக் கொடி இல்லை. ஆனால் இந்தியா டுடே உள்ளிட்ட தளங்கள் தெளிவாக இதே கருத்தைப் பரப்பின. டிவி9 கன்னடச் செய்திச் சேனலில் ஒருவர் பொறிபறக்கப் பேசினார், தேசியக் கொடியைக் கழற்றிய இந்த மாணவர்கள் தேசத் துரோகிகள் என. அதாவது, தேசியக் கொடி கழற்றப்பட்டதாக இவர் முடிவுக்கே வந்துவிட்டார். (ஒரு ஆறுதல், இவர் எந்தத் தரப்பையும் எடுக்காமல் இரண்டு தரப்பையும் திட்டினார்!) ஆனால் ஏஸியாநெட் ஸ்வர்ணா செய்திச் சானல் தெளிவாகச் சொன்னது, அங்கே தேசியக் கொடி இல்லவே இல்லை என. (இப்போதும் சொல்கிறேன், நாளையே மாணவர்கள் தேசியக் கொடியைக் கழற்றிவிட்டி காவிக் கொடியை ஏற்றிய வீடியோ வெளியானால், சந்தேகமே இன்று இந்த மாணவர்கள் தேசத் துரோகிகளே.)
அங்கே தேசியக் கொடி இல்லை என்பதுவே உண்மை என்று தெரிந்துகொண்ட நம் திடீர் உணர்ச்சிப் போராளி ஹிந்துக்கள் என்ன சொல்லி இருக்கவேண்டும்? வழக்கம்போல ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரத்துக்கு அடிமையாகிவிட்டோம் என்றுதானே? அவர்கள் இன்னொரு உளறலை ஆரம்பித்தார்கள். அதாவது அந்தக் கம்பம் தேசியக் கொடி ஏற்றிட வைக்கப்பட்டிருந்த கம்பமாம். அதில் காவிக் கொடி ஏற்றியது தவறாம். இவர்களை எல்லாம் என்ன சொல்ல? தேசியக் கொடியை இறக்கிவிட்டு காவிக் கொடியை ஏற்றி இருந்தால் மட்டுமே அது தவறு. வளாகத்தில் இருக்கும் ஒரு கம்பத்தில், தேசியக் கொடிக்கான கம்பமாக இருந்தாலுமே, அதில் காவிக்கொடி ஏற்றுவதில் தவறே இல்லை. அதுவும் இது போன்ற ஒரு கும்பல்-மனப்பான்மையிலும் கூட, மாணவர்கள் தங்கள் மூளையை அடகுவைக்காமல் நடந்துகொண்டிருக்கிறார்கள். காவிக் கொடி என்பது இந்திய ஆன்மாவின் கொடி. காவிக் கொடி இந்திய ஒருமைப்பாட்டுக்கான கொடி. இங்கே காவிக் கொடி ஏற்றப்பட்டது கூட, ஹிஜாப் அணிந்து வந்து பிரச்சினையை சில மாணவர்கள் துவக்கி அதன் எதிர்வினையாகத்தான் ஏற்றப்பட்டதே ஒழிய, ஹிந்து மாணவர்கள் போராட்டத்தைக் காவிக்கொடி ஏற்றி ஆரம்பித்து வைக்கவில்லை. எவ்விதப் பிரச்சினையும் இல்லாத சமயத்தில் தேவையே இல்லாமல் மாணவர்கள் காவிக் கொடி ஏற்றி இருந்தால், அதுதான் அராஜகம், அநியாயம். ஆனால் இங்கே அப்படி நடக்கவில்லை. ஒரு தூண்டல் இருந்திருக்கிறது, தொடர்ந்து மாணவர்கள் எதிர்வினையாற்றி இருக்கிறார்கள்.
அடுத்து பெண்ணிய கோஷ்டிகள். இத்தனை நாள் பெண்ணியம் பேசிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம், செலக்டிவ் அம்னீஷியாவால் பீடிக்கப்பட்டு, ஹிஜாப் அணிவது பெண்ணின் உரிமை என்று ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படித் தலைகீழ் மாற்றம் கொள்ள இவர்கள் என்றுமே வெட்கப்பட்டதில்லை. ஹிஜாப்பும் சரி, பர்காவும் சரி, நிச்சயம் பெண்ணிய சுதந்திரத்துக்கு எதிரானதுதான். ஆனால் ஒரு முஸ்லிம் பெண் அதை விரும்பி அணிந்தால் அது அவளது சுதந்திரம். இதில் மாற்றமே இல்லை. நாம் போய் அந்த பர்காவை நீக்கு என்று சொல்லும் சுதந்திரம் யாருக்கும் இல்லை, அது பள்ளியாக இல்லாமல் இருக்கும் பட்சத்தில். பள்ளியில் இந்த சுதந்திரம் கிடையாது. பள்ளியில் பள்ளி சொல்லும் சீருடையில் வரவேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை. இதே பெண் முஸ்கான் 2021ல் பள்ளிச் சீருடையை அணிந்துகொண்டு வருவேன் என்று பள்ளியின் சட்டதிட்டங்களுக்கு ஒப்புக்கொண்டு கையெழுத்தும் இட்டிருக்கிறார் என்று செய்திகள் வருகின்றன. இதே பெண், மற்ற பொதுவிடங்களில் ஹிஜாப் இல்லாமல் வந்திருக்கிறார் என்று புகைப்படங்களும் பகிரப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்தப் பெண்ணும் பர்கா அணிந்து பள்ளிக்கு வந்த மாணவியும் ஒருவரேதானா என்று என்னால் உறுதி செய்ய முடியாததால் அதைப் பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை. ஒருவேளை இரண்டு பெண்களும் ஒருவரே என்றால், பள்ளிக்கு மட்டும் பர்கா அணிந்து ஏன் வரவேண்டும் என்கிற பதில் சொல்ல முடியாத கேள்வி எழவே செய்யும்.
பர்கா அணிவதும் ஹிஜாப் அணிவதும் முஸ்லிம் பெண்களின் உரிமை என்று பொதுவாகச் சொல்லி, வழக்கம் போல இந்தப் பிரச்சினையைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள். ஒரு ஹிந்துக் கல்யாணம் நடக்கிறது, அங்கே ஒரு பெண் ஹிஜாப் அணிந்து வந்தால், அதைத் தடுத்தால், அது அராஜகம் என்று சொல்வதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், ஒரு பள்ளிக்கு ஒரு பெண் வரும்போது பள்ளி சொன்ன சீருடையில் வரவேண்டியது முக்கியம். பள்ளி சொன்ன சீருடையில் வராமல் இருப்பதும், உள்நோக்கத்துடன் பிரச்சினையை உருவாக்கும் பொருட்டு திடீரென்று சில மாணவர்கள் மட்டும் வேண்டுமென்றே வேறு ஒரு உடையில் வருவதும் தவறுதான்.
இப்படி யோசிப்போம். தமிழ்நாட்டில் ஒரு தனியார் ஹிந்துப் பள்ளியில் ஒரு பிராமணப் பையன் (அல்லது தனிப்பட்ட உடை அணியும் எதோ ஒரு சாதியைச் சேர்ந்த பையன்), பள்ளிச் சீருடையில் வரமாட்டேன், பஞ்ச கச்சை அணிந்து, பூணூல் வெளியே தெரிய, உத்தரியம் மட்டும் அணிந்து வருவேன் என்று சொன்னால், ஏற்பீர்களா? கொஞ்சமாவது மனசாட்சியுடன் யோசித்துப் பாருங்கள். இன்று ஃபேஸ்புக்கில் உளறித் திரியும் ஹிந்துக்கள்தான் முதலில் யோசிக்கவேண்டியவர்கள். இன்று பெண்ணின் உடை அவளது உரிமை என்று பேசும் எந்த முற்போக்கு எழுத்தாளர்களும் பிராமணச் சிறுவனின் உடைக்கு ஆதரவாக வாயைத் திறக்க மாட்டார்கள் என்பது மட்டுமல்ல, அப்படி உன் உடை முக்கியம் என்றால் மணியாட்டப் போ வாய் கூசாமல் சொல்வார்கள். தமிழ்நாட்டில் கூட இது நடந்திருக்கவேண்டாம், இந்தியாவில் எங்கு நடந்தாலும் இதையே இவர்கள் சொல்வார்கள். இதே விஷயம் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு என்று வரவும், அவள் உடை அவள் உரிமை என்று பேசத் துணிந்துவிட்டார்கள். இதைக் கூடப் புரிந்துகொள்ள முடியாத நிலையில்தான் ஃபேஸ்புக் திடீர் ஹிந்துகள் உணர்ச்சிவசப்பட்டு உளறித் திரிகிறார்கள்.
ஒரு பிராமணப் பையன் இப்படி ஒரு உடையுடன் பள்ளிக்கு வந்தால் என் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? ‘உன் உடை உன் உரிமை என்றால், அதற்கேற்ற பள்ளிக்குப் போ, உடன் படிக்கும் மாணவர்களின் சூழலைப் பாழாக்காதே. இதே பள்ளியில்தான் படிக்கவேண்டும் என்றால், அப்பள்ளி சொல்லும் சீருடையை ஏற்றுக்கொள்ளவேண்டியது உன் கடமை. பள்ளி முடிந்து பொது வாழ்க்கை வந்ததும், உன் இஷ்டம் போல் இரு. பள்ளியில் மதச் சின்னங்களை அணிந்து கொள்ள உனக்கு உரிமை உண்டு, ஆனால் சீருடைக்குப் பங்கம் வரக்கூடாது.’
ஒரு அரசுப் பள்ளியில் பெரும்பான்மை ஹிந்து மாணவன் மட்டும் சீருடையில் வரவேண்டும், ஆனால் சிறும்பான்மையினர் அவரவர்கள் மத உடையில் வரலாம் என்றால், அதை மாற்றுவதற்கு இந்தப் பிரச்சினை ஒரு தொடக்கமாக இருந்தால், அது நல்லதுதான். இதனால்தான் சில ஹிந்து இயக்கங்கள் தங்கள் நிறுவனங்களை சமயத்தின் அடிப்படையில் சிறுபான்மை என்றே அழைக்கவேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இன்று வாய் கிழியப் பேசும் முற்போக்கு வாய்ச்சவடால்காரர்களின் இன்னொரு அசிங்கமான பக்கத்தையும் பார்ப்போம். பள்ளியில் அல்ல, பொதுவெளியில் பிராமணர்கள் பூணூலுடன் போவதை எல்லாம் எத்தனை அசிங்கமாக எழுதி இருக்கிறார்கள்? உன் உடலை செக்ஸியாகக் காட்டுகிறாயா என்று கேட்டு நக்கலாக எழுதிய முற்போக்காளர்களை எனக்குத் தெரியும். குடுமியைக் கிண்டலாக எழுதி, மணியாட்டிப் பிழைக்கிறான் என்று சொன்னவர்களை எனக்குத் தெரியும். இதைவிடக் கொடுமை, பூணூல் அறுக்கும் போராட்டமும், பன்றிக்குப் பூணூல் அணிவிக்கும் போராட்டமும் இதே மண்ணில் நடந்திருக்கிறது. அன்றெல்லாம் இதே முற்போக்காளர்கள் வாயே திறக்கவில்லை. திக, திமுக சம்பந்தட்ட எந்த ஒன்றையும் இவர்கள் மறந்தும் கண்டித்துவிடமாட்டார்கள். ஏன்? பிழைப்பரசியல். வாய்ப்பரசியல். இந்த பிழைப்பரசியல்காரர்கள் ஒன்று சொல்கிறார்கள் என்றாலே தெரிந்துகொள்ளுங்கள், அவர்கள் மற்ற மதத்துக்காரர்களின் உண்மையான உரிமைக்காகப் பேசவில்லை, ஹிந்துக்களுக்கு எதிரான ஒன்று என்பதால் மட்டுமே பேசுகிறார்கள் என்று.
உடுப்பிப் பள்ளியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக ஹிந்து மாணவர்கள் காவித் துண்டு அணிந்து வந்திருக்கிறார்கள். ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என்று சொல்லி இருந்தால் இந்தப் பிரச்சினை இங்கே முடிந்திருக்கும். அல்லது, காவித் துண்டு அணிந்து வரலாம் என்று சொல்லி இருந்தாலாவது, அநியாயத்துக்குள் ஒரு நியாயம் இருந்திருக்கும். இரண்டும் இல்லை. ஹிஜாப் அணிந்து வரலாம், ஆனால் காவித் துண்டு கண்ணை உறுத்துகிறது என்று சொன்னால் ஒன்றும் செய்ய முடியாது. இப்போதும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஒரு வரியில் இருக்கிறது, யாராக இருந்தாலும், நாளை ஹிந்துக்களே எங்கள் மத உடையில் வருவோம் என்று சொன்னாலும், அதெல்லாம் முடியாது, ஒழுங்காகப் பள்ளிச் சீருடையில் வா என்று சொல்வதுதான் அந்தத் தீர்வு. இல்லை என்றால், இப்படிப் பிரச்சினைகள் வந்துகொண்டேதான் இருக்கும்.
இந்தப் பிரச்சினை நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறது. இன்று தீர்ப்பு வரலாமோ என்னமோ. எப்படியும் பள்ளியில் ஹிஜாப் மற்றும் காவித் துண்டு அணிவதற்கு எதிராகவே தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறேன். அப்படி இல்லாமல் தீர்ப்பு வேறு மாதிரி இருக்குமானால், கர்நாடக அரசு உச்சநீதிமன்றம் வரை இப்பிரச்சினையை எடுத்துச் செல்லவேண்டும். பெரும்பான்மை மாணவர்களுக்கு மட்டும் எதிராக இருக்கும் சட்டத்தை மாற்ற இந்த பாஜக அரசு முயலவேண்டும். இதற்குள், இந்திய எதிர்ப்பாளர்கள் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டு, மாணவர்களுக்குக் கெட்ட பெயர் வராமல் இருப்பதையும் அரசு உறுதி செய்யவேண்டும்.