Tag Archive for இளையராஜா

இளையராஜா குறித்து அராத்து எழுதியது தொடர்பாக

இளையராஜா குறித்து அராத்து எழுதியது தொடர்பாக.

பொதுவாக அராத்து சென்ஸிபிளாக எழுதக் கூடியவர். ஆனால் இந்த முறை சறுக்கி இருக்கிறார். சில பூமர் அங்கிள்கள் பொழுதுபோகாமல் அவ்வப்போது ராஜாவைத் திட்டி லைக் வாங்குவது கண்கூடு. அராத்து அப்படிச் செய்பவரும் அல்ல.

* இசை தெரியாது என்று சொன்னால் இசை குறித்த கருத்தில் இருந்து விலகி இருந்திருக்கவேண்டும்.

* தபேலாவில் டொண்டனக்க என்று இசையமைப்பவர் என்று செவிடர்கள் கூட சொல்ல மாட்டார்கள்.

* கணவன் மனைவிக்கு, காதலர்களுக்கு ராஜாவின் பாட்டே கிடையாது என்பது அபத்தம். ஒருமுறை சுரேஷ்குமார் இந்திரஜித், ‘ராஜாவின் பாடல்களில் அதிகபட்சம் 15 தேறும்’ என்றார். அதற்கு இணையான அபத்தம். மூன்று தலைமுறைகள், ராஜாவின் பாடலால்தான் காதலித்தது, காமம் கொண்டது, சோகத்தில் அழுதது, வெற்றியில் நிமிர்ந்தது, சந்தோஷத்தில் தளுதளுத்தது. இது எம்.எஸ்.விக்கும் கே.வி.எம்முக்கும் பின்னர் ரஹ்மானுக்கும் நடந்தது.

* ‘என் இசை’ என்ற கர்வமே ஒரு கலைஞனைச் செலுத்தக் கூடியது. அராத்து அடிப்படையில் ஓர் எழுத்தாளர். அவர் எப்படி இதைத் தவறவிட்டார் என்பது ஆச்சரியம். சாரு நிவேதிதாவின் ‘என் எழுத்து’ என்னும் திமிருக்காகவே அவரது வாசகர்கள் அவரை வாசிப்பது அராத்துவுக்குத் தெரிந்திருக்கும். அந்த உரிமை ராஜாவுக்கு உண்டு. அதுவும் சாரு நிவேதிதாவைவிட பல மடங்கு உண்டு.

* இன்னொருவரை வளரவிடவில்லை என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இளையராஜாவை மீறி வளர, அவரளவு திறமை உள்ள ஒருவர் வரவேண்டும். இல்லையென்றால் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் ஆள்கள் வருவார்கள். வந்தார்கள். ரஹ்மான் புதிய இசையோடு வந்தபோது இளையராஜா அவர் வளர்ச்சியை ஒன்றும் செய்துவிடவில்லை என்பதே வரலாறு.

* இளையராஜா போன்ற, கற்பனைக்கெட்டாத சாதனையாளர்கள் இப்படித் தூற்றப்படுவது நாம் யார் என்பதைத்தான் சொல்கிறதே ஒழிய, ராஜாவின் திறமையை இம்மியளவும் மதிப்பிட்டுவிடவில்லை.

Share

கீதா (கன்னடம்)

கீதா (க) – கோகக் கிளர்ச்சி என்று சொல்லப்படும் கிளர்ச்சி, கர்நாடகத்தில் கோகக் (ஞானபீட விருது பெற்றவர்) என்பவரால் கன்னட மொழிக்காக தொடங்கப்பட்ட கிளர்ச்சி. மூன்று மொழிக் கல்விக் கொள்கையைக் கைக்கொண்டிருந்த கர்நாடகாவில், பள்ளிகளில் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் சம்ஸ்க்ருத மொழிகள் கன்னடத்தைவிட அதிகம் முக்கியத்துவம் பெற்றதால், அதை எதிர்த்து நடைபெற்ற கிளர்ச்சி இது. இப்படியே போனால் எதிர்கால சந்ததி கன்னடத்தைக் கைவிட்டுவிடுவார்கள் என்று அஞ்சி, கன்னடத்தை அலுவல் மொழியாக ஆக்க இக்கிளர்ச்சி செய்யப்பட்டது. முதலில் சுணங்கி இருந்த இந்தப் போராட்டம், ராஜ்குமார் தலைமையில் கர்நாடகாவின் முழு ஆதரவையும் பெற்றது. இந்தப் பின்னணியில் உருவாக்கப்பட்ட படம் கீதா! இந்தப் பின்னணியில் வரும் காட்சிகளில், பள்ளிகளில் ஹிந்தி ஆங்கிலத் திணிப்பைக் காட்டாமல், ஊரில் மற்ற மொழிக்காரர்களின் வளர்ச்சியைக் காண்பித்து, அதை எதிர்த்துப் போராட்டம் என்று கொண்டு போகிறார்கள். அதிலும் தமிழ் பேசும் நான்கு பேரை கணேஷ் அடித்து நிமிர்த்துகிறார். அடுத்த காட்சியிலேயே பெங்காலிப் பெண்ணைக் காதலிக்கிறார். கோகக் கிளர்ச்சியை மையமாகக் கொண்டு வரும் காட்சிகள் வரை படம் பார்க்கும்படியாகவே உள்ளது. அதற்குப் பின்பு அது காதல் படமாகி எங்கெங்கோ அலைந்து எப்படியோ போய், சீக்கிரம் முடிங்கய்யா என்று கதறும்போது முடிகிறது. இதெல்லாம் நமக்கெதுக்கு? ஆனால் ஒரு முக்கியமான விஷயம் உள்ளது.

ஷங்கர் நாக்-கின் (பழைய) கீதா என்னும் திரைப்படம் கன்னட க்ளாஸிக் என்று சொல்லப்படுகிறது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் சாகா வரம் பெற்றவை. ஜொதயலி ஜொத ஜொதயலி (விழியிலே மணி விழியில் – தமிழில்) பாடல் கர்நாடகாவின் மறக்க முடியாத பாடல்களில் ஒன்று. இந்தப் படத்தில் வரும் கேளதே நிமகீஹா (தேவதை இளம் தேவி – தமிழில்) பாடலும் மிக நன்றாக இருக்கும். அதே போல் சந்தோஷக்கே ஹாடு என்ற பாடல் கர்நாடகாவின் பட்டி தொட்டிகளிலும் நிச்சயம் ஒலித்திருக்கும். இளையராஜா ரம்மியமான ஒரு பொழுதில் இந்தப் படத்தின் பாடல்களைப் போட்டிருக்கவேண்டும். ஏனே கேளு கொடுவே ஈகா பாடல் அத்தனை இனிமையாக இருக்கும். இந்த ஜொத ஜொதயலி பாடலை எத்தனை முறை கேட்டிருக்கிறேன் என்றே கணக்கில்லை.

(புதிய) கீதா படத்தில் முதல் காட்சியிலேயே (பழைய கீதா படத்தின்) ‘கீதா சங்கீதா’ பாடல்தான். ஹெட்போனில் படம் பார்க்க ஆரம்பித்தபோது இந்தப் பாடல் ஒலிக்கவும் ஏற்பட்ட புல்லரிப்பு கொஞ்சநஞ்சமல்ல. இளையராஜாவின் இசை என்னை எங்கோ கொண்டு போய்விட்டது. கமலின் ஏக் துஜே கேலியே படத்தைப் பார்க்கப் போகும் ஹீரோயினுக்கு கணேஷ் ராஜ்குமாரின் பெருமைகளைச் சொல்லி, கமலே புகழ்ந்த நடிகர் ராஜ்குமார் என்று சொல்லும் வசனமும் உண்டு. கன்னடத்தின் பெருமைகளைச் சொல்லும் கணேஷ், ராஜ்குமாரின் ஒரு பாடலைக் குறிப்பிட்டு சிலாகிக்கிறார். அது, ஜீவா ஹூவாகிதே. இதுவும் ராஜா இசை! கேட்டாலே மனதை உருக்கிவிடும் ஒரு காதல் பாடல்.

நல்லா எழுதுறீங்கய்யா வசனமும் திரைக்கதையும்!

Share

மிஷ்கினின் சைக்கோ – குழப்பக்காரன் கையில் ஒரு கத்தி

தொடர் கொலைகள், அதைத் துப்பறியும் கதைகள் உலகம் முழுக்க பிரசித்தி பெற்றவை. சைக்கோ வகைக் கொலைகளில் எத்தனையோ விதங்களாக யோசித்து எப்படியெல்லாமோ எடுத்திருக்கிறார்கள். நினைத்துக்கூடப் பார்க்க முடியாத, நினைத்துப் பார்த்தாலே குமட்டி வாந்தி வரும் அளவுக்கான கதைகள் எல்லாம் யோசிக்கப்பட்டுவிட்டன. இத்திரைப்படங்களுக்குக் கொலைகள் முக்கியமல்ல. கொலைக் காட்சிகளின்போது நாம் அடையும் பதைபதைப்பே முக்கியம். கொலைகளுக்கான காரணம் மிக முக்கியம். அந்த வலுவான காரணம் கொலைகளையே நியாயப்படுத்தும் அளவுக்கு இருக்கவேண்டும். படத்தில் லாஜிக் சிதைக்கப்படாமல் இருப்பது மிக முக்கியம். இதையெல்லாம் தாண்டி, கொலைகாரன் கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்படும்போது மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். தமிழின் ஒரே சிறந்த சீரியல் கொலைப்படம் ராட்சசன். ராட்சசன் ஏன் முக்கியமானது என்பதை, சைக்கோவின் குழப்பங்களைப் பார்ப்பதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.

பெண்களைக் கடத்தி ஒரே இரவுக்குள் தலையை வெட்டி வெறும் உடலை மட்டும் காட்சிக்கு அனுப்பி வைக்கும் சைக்கோ கொலைகாரன் ஒருவன், தலைகளை சேமித்து வைக்கிறான். கொல்லப்பட்டவர்களுள் எவ்வித ஒற்றுமையும் இல்லை. எப்படி யோசித்தாலும் யார் ஏன் கொல்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. போலிஸ் திணறுகிறது.

பார்வையற்ற ஹீரோ, குரலைக் கொண்டே காதலிக்கும் ரேடியோ ஜாக்கியிடம், தன் காதலைச் சொல்லி அவள் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியம் இருக்கும் இரவில் அவள் கடத்தப்படுகிறாள். பார்வையற்ற தன் காதலன் ஒரு வாரத்துக்குள் தன்னை மீட்பான் என்று சைக்கோ கொலைகாரனிடம் சபதமும் செய்கிறாள். அந்த சவாலை ஏற்றுக்கொள்கிறான் சைக்கோ. எப்படி பார்வையற்ற ஹீரோ வெல்கிறான் என்பதே சவசவ மீதிக் கதை! ஏன் அப்படி ஒரு சபதத்தை ஹீரோயின் செய்கிறாள்? அது எப்படி ஹீரோவுக்குத் தெரியும்? இப்படி பல எப்படிகள் அப்படியே காற்றில் அலைகின்றன.

சின்ன வயதில் நாம் கதை கேட்டிருப்போம். பார்வை தெரியாத ஒருவனும் கால் நடக்கமுடியாத ஒருவனும் நட்பாகி வெல்லும் கதை. அதையே கொஞ்சம் சீரியஸாக யோசித்திருக்கிறார் மிஷ்கின். பார்வையற்ற ஹீரோவுக்கு கால் நடக்கமுடியாத பெண் (முன்னாள்) ஐபிஎஸ் துணை. சதா தன் அம்மாவைத் திட்டிக்கொண்டே இருக்கிறார் அந்த ஐபிஎஸ். சோவின் சரஸ்வதியின் சபதம் நாடகத்தில் வரும் கே பாலசந்தர் ரக கதாபாத்திரங்களை நினைவூட்டும் சீரியஸான நகைச்சுவை பாத்திரமாக எஞ்சுகிறது இந்த ஐபிஎஸ்.

ஏன் ஹீரோ பார்வையற்றவராக இருக்கிறார்? என்ன தேவை இந்தப் படத்துக்கு? அதிலும் அவர் ஏன் இசைஞராக இருக்கிறார்? எல்லாம் அப்படித்தான்! அப்படி இருக்கக்கூடாதா என்ன என்ற கேள்வியைத் தாண்டி ஒரு பதிலும் இல்லை! ஒரு பார்வையற்ற ஹீரோ இந்த அளவு கொடூரமான சைக்கோ கொலைகாரனைப் பிடிக்கப் போகிறான் என்ற ஒற்றை வரி தரவேண்டிய சுவாரஸ்யம் பெரும் அலுப்பையே கொண்டு வருகிறது. கடைசிக் காட்சி வரை அந்த அலுப்பு தீரவே இல்லை. அதிலும் கண் தெரியாத ஹீரோ கார் ஓட்டுவதெல்லாம் ராம நாராயணன் படத்தில் பாம்பு கார் ஓட்டுவதையும் விட மோசமான கற்பனையாகவே எஞ்சுகிறது.

சிசிடிவி என்ற வஸ்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்பதையும், இதன் மூலம் உலகளவில், இந்திய அளவில், தமிழ்நாட்டு அளவில் பல கொலைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டார்கள் என்பதையும், ஒரு குற்றம் எப்படி நடக்கிறது என்பதை சில மணி நேரங்களுக்குள் போலிஸ் தெரிந்துகொண்டு விடுகிறது என்பதையும் யாராவது இயக்குநருக்குச் சொன்னால் நல்லது.

மிஷ்கினுக்கும் இலக்கிய உலகத்துக்கும் இருக்கும் தொடர்பைப் பறைசாற்றுவதற்காகவே ஷாஜி, பாரதி மணி, பவா செல்லத்துரை ஆகியோர் ஐயோபாவமாக வந்து போகிறார்கள். இசையும் ஒளிப்பதிவும் அள்ளுகின்றன. ஆனால் விழலுக்கு இறைத்த நீர்! இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்றாக வந்திருக்கவேண்டிய ‘தாய் மடியில்’ பாடல் கடைசியில் ஒற்றை வரி மட்டுமே வருகிறது. ஏன் இப்படி இயக்குநர்கள் ராஜாவின் கழுத்தை அறுக்கிறார்கள் என்பது புரிவதே இல்லை.

ஒருவன் ஏன் சைக்கோ கில்லராகிறான் என்பதற்கான காரணம் மிக முக்கியம். அந்தக் காட்சிகளை மட்டும் இப்படத்தில் ஓரளவு நன்றாக எடுத்திருக்கிறார்கள். அந்த பத்து நிமிடம் மட்டுமே கொஞ்சம் படத்துடன் ஒட்டிப்போக முடிந்தது.

சிறுவயதில் கிறித்துவப் பள்ளியில் படிக்கும் மாணவனை கிறித்துவ பெண் ஆசிரியை (மிரட்டலான நடிப்பு), மாணவனின் இயல்பான பதின்ம வயது சுய இன்பத்துக்குத் தரும் கொடூரமான தண்டனை அவனை சைக்கோவாக்குகிறது. சீர்திருத்தப் பள்ளிக்குப் போகும் வழியில் அவன் ஒரு போலிஸால் பாலியல் வதைக்குள்ளாக்கப்படுகிறான். இந்தக் காட்சிகள் காட்சிரீதியாக காட்டப்படாமல், பாதிக்கப்பட்ட நபரால் சொல்லப்படுவதுபோல், மாற்று அரங்க நாடகங்களின் பாதிப்பில் படமாக்கப்பட்டிருக்கின்றன. இந்நாடகங்களில் பரிச்சியமில்லாதவர்கள் எரிச்சாகிவிடும் சாத்தியங்களும் உள்ளன. ஆனால் இந்தக் காரணங்கள், ஏன் அவன் பல கொலைகளை அதுவும் பெண்களாகப் பார்த்துக் கொல்கிறான் என்பதையோ அவன் ஏன் அவர்களைப் பாலியல் ரீதியாக ஒன்றும் செய்யவில்லை என்பதையோ தொட்டுக்கூடப் பார்க்கவில்லை.

மற்றபடி கொலைகாரன் யாரையாவது கொல்லப்போகிறான் என்ற பயம் நம்மிடம் பரவவே இல்லை. அதேபோல் ஏன் இந்த ஹீரோ முன்பின் தெரியாத, காதலிக்கத் துவங்காத ஒரு பெண்ணுக்காக இத்தனை அலைகிறான் என்பதும் பிடிபடவே இல்லை. திடீர் திடீர் என்று ஹீரோவும் போலிஸும் என்னவோ யோசித்து எதையோ கண்டுபிடிப்பதெல்லாம் எவ்வித லாஜிக்கும் இன்றி, சட்டென்று தோன்றும் காட்சிகளாகவே அமைக்கப்பட்டுள்ளன. சாகும் முன்பு ஏ.எம்.ராஜா பாட்டுப் பாடும் போலிஸெல்லாம் – பாவமாக இருக்கிறது இந்தக் கால இயக்குநர்களை நினைத்தால்!

இடைவேளை வரை படம் தொடங்கிய புள்ளியில் இருந்து ஒரு அங்குலம் கூட நகர்ந்திருக்கவில்லை என்பது அலுப்பைத் தருகிறது. அதற்குப் பிறகு வரும் காட்சிகள் கொஞ்சம் சுவாரஸ்யத்தைத் தரும் வேளையில், மீண்டும் மீண்டும் கொடூரமான கொலைகள் என்ற பழைய பல்லவிக்கே படம் திரும்பிவிடுகிறது. அதிலும் சைக்கோ கொலைகாரன் மேல் ஹீரோயினுக்கு கொலைகாரன் மேல் வரும் இரக்கமெல்லாம் படு க்ளிஷேவாக இருக்கிறது. ஒரே வெட்டில் தலையை வெட்டி எரிவதை தினம் தினம் பார்க்கும் ஹீரோயின் அவனிடம் குழந்தையைப் பார்த்தேன் என்பதெல்லாம் சுத்த மடத்தனம்.

இப்படத்தில் சுய இன்பம் தொடர்பான வார்த்தையும் நான்கெழுத்து ஆங்கில வசவு வார்த்தையும் மயிறு என்ற வார்த்தையும் வெளிப்படையாக ம்யூட் செய்யப்படாமல் இடம்பெற்றிருக்கின்றன. நாம் முன்னேறுகிறோம்! படம் நெடுகிலும் கொடூரமான கொலைகள். வயது வந்தவர்களுக்கான திரைப்படம் இது. குழந்தைகள் பார்க்கக்கூடாத ஒன்று.

மிஷ்கினுக்கு ஒரு திரைப்படம் என்றால் என்னவென்று நன்றாகத் தெரிந்திருக்கிறது. ஆனால் அந்த அறிவை ஒரு நல்ல கதை மற்றும் திரைக்கதையோடு சேர்ந்து பெரிய படைப்பாக மாற்றத் தெரியவில்லை. திணறுகிறார். இந்தப் படம் அதற்கு இன்னொரு சான்று. திரைப்பட இயக்குநர்கள் தீவிர இலக்கியவாதிகளாக, தீவிர இலக்கிய வாசகர்களாக இல்லாமல் இருப்பது முக்கியத் தேவை என்ற என் எண்ணம் வலுப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கதைகளை இலக்கியவாதிகளிடம் இருந்து எடுத்துக்கொண்டு தங்களுக்கேற்ற திரைக்கதையையும் திரைமொழியையும் உருவாக்கும் படங்களே பேசப்படும் என்று உறுதியாக நம்புகிறேன்.

சைக்கோ – இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களைக் கேட்டு, முதல்நாள் முதல் காட்சி திரையரங்கில் பார்த்தேன். இனிமே வருவியா இனிமே வருவியா என்று பழுக்கக் காய்ச்சிய கம்பியைத் தொடைகளில் வைத்து இழுத்து..

நன்றி: ஒரேஇந்தியாநியூஸ்

Share

இளையராஜா பேட்டி – 1979

இளையராஜா 1979ல் அப்துல் ஹமீதுக்கு அளித்த பேட்டி. மிக வேகமாக எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் இளைய இளையராஜாவைக் கேட்கவே சந்தோஷமாக இருந்தது. அப்போதே கடவுள் என்றெல்லாம் பதில் சொல்லி இருந்தாலும், இப்போதைய அளவுக்கு ஆன்மிக பதில்கள் இல்லை. மிகப் பெரிய கனவுகளுடன் பேசி இருக்கிறார். இவரது இசை ஒரே போல இருக்கிறது என்ற புகார் அப்போது இருந்திருக்கிறது. அதற்குத் தெளிவாகப் பதில் சொல்கிறார். கர்நாடக சங்கீதப் பயிற்சி இல்லாமல் சிறந்த இசையமைப்பாளராக முடியாது என்று சொல்லி, கூடவே கர்நாடக இசை விற்பன்னர்கள் எல்லாவற்றையும் கற்றுக் கொடுப்பதில்லை என்ற விமர்சனத்தையும் சொல்கிறார்.

இளையராஜா தான் இசையமைக்க வந்த காலம் தொட்டுத் தனக்கு முன்பிருந்த திரை இசைக் கலைஞர்களைக் கொண்டாடத் தவறவே இல்லை. இப்பேட்டியிலும் எம் எஸ் வியையும் எஸ்.வி. வெங்கட்ராமனையும் (காற்றினிலே வரும் கீதம் பாடலுக்கு இசையமைத்தவர்) குறிப்பிட்டுச் சொல்கிறார். சி.ஆர். சுப்புராமன் இசையமைத்த எல்லாப் பாடல்களும் பிடிக்கும் என்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வந்தபோது இப்படி ஒரு வரிகூடச் சொல்லி இருக்கவில்லை. அப்போதைக்கு அது ஒரு விநோதமான செயலாக எனக்குத் தோன்றியது. அந்தச் சமயத்தில் ஒரு இதழில் வெளிவந்திருந்த பேட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த ரீதியில் சொல்லி இருந்தார்: இந்த நேரத்தில் என்னைப் பற்றி அவரும் அவரைப் பற்றி நானும் பேசாமல் இருப்பது சரியானது என்ற பொருளில் சொல்லி இருந்தார். இது எனக்கு ஒரு சிறிய புரிதலைக் கொடுத்தது. இளையராஜா தனது முன்னோர்களைக் கொண்டாடியதையும் ரஹ்மான் வெளிப்படையாகப் பேசாததையும் இரண்டு விதங்களில் புரிந்துகொள்ள முயன்றேன். ஒன்று, தலைமுறை இடைவெளி. இன்னொன்று, ரஹ்மானுக்கு வாய்ப்பளித்தவர்கள் இளையராஜாவுக்கு எதிர்ப்புறம் நின்றவர்கள். ராஜாவுக்கு இந்தச் சிக்கல்கள் இருந்திருக்கவில்லை. இதையெல்லாம் மீறி, ரஹ்மான் ராஜாவைக் கொண்டாடியிருக்கவேண்டும் என்றுதான் இப்போதும் தோன்றுகிறது. இதில் எப்போது பிரச்சினை வருகிறது என்றால், ஏன் ராஜா ரஹ்மானைக் கொண்டாடவில்லை என்று ராஜாவின் எதிர்ப்பாளர்கள் கேட்கும்போதுதான். இருவரும் ஒருவரை கொண்டாடிக்கொள்ளாமல் இருப்பது கூட ஒருவகையில் சரிதான். ஆனால் அது நடக்கவேண்டும் என்றால் அது ரஹ்மான் தரப்பிலிருந்துதான் தொடங்கி இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

தனக்குப் பிடித்த சிறந்த இசைக்கருவி தம்புரா என்று ராஜா சொல்லி ஒரு பிரச்சினை அந்தக் காலத்தில் ஓடியிருக்கிறது. இன்று ராஜா மாணவிகள் மத்தியில் கல்லூரியில் பேசும்போது தனக்குப் பிடித்த இசைக்கருவி எது என்ற கேள்விக்குச் சொன்ன பதில், மனம்! எப்பேற்பட்ட நகர்வு.

நம் தமிழ் இயக்குநர்களின் பல திராபையான படங்களில் ராஜா இசையமைத்து உன்னதமான பாடல்களைத் தந்திருக்கிறார். ஆனாலும் இந்த இயக்குநர்களைக் கொண்டாடவே வேண்டும். ஒரே காரணம், இப்படியான பல பொக்கிஷங்களுக்கான சூழலைத் தங்கள் திரைப்படங்களில் உருவாக்கியதற்காகத்தான். இன்று வரும் இசையமைப்பாளர்களுக்கு இத்தனை விதங்களில் பாடல் அமைப்பதற்கான நாடகத்தனமான சந்தர்ப்பங்கள் வாய்க்கப் போவதே இல்லை. அந்த வகையில் அந்த இயக்குநர்களுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.

Share

அந்திமழை ஏப்ரல் 2018

அந்திமழை ஏப்ரல் 2018 இதழ் –

(உடனே அடுத்த அந்திமழை இதழில் நான் எழுதப் போகிறேனா என்று கேட்கப் போகிறவர்கள் நடையைக் கட்டவும்.)

நாற்காலிக் கனவுகள் என்ற தலைப்பின் கீழ் பல கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. என்றாலும் தூக்கிச் சாப்பிடும் கட்டுரை நாற்காலிக் கனவைப் பற்றியதல்ல. டி.எம். சௌந்தர ராஜனைப் பற்றியது. இன்னும் துலக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், விஜயராஜ் என்பவர் டி.எம்.எஸ்ஸைப் பற்றி எடுத்திருக்கும் ஆவணப்படம் பற்றியது. (மதிமலர் என்பவர் எழுதி இருக்கிறார்.)

1968லேயே இளையராஜா இசையமைப்பில் தீபம் என்ற படத்துக்காக (பின்னர் சிவாஜி நடித்து வெளிவந்த தீபம் அல்ல) ‘சித்தம் தெளிவடைய முருகனருள் தேடு’ என்ற பாடலை டி.எம்.எஸ் பாடி இருக்கிறார் என்ற தகவலை கங்கை அமரன் சொல்லி இருக்கிறார்! அந்தப் பாட்டை இந்த ஆவணப்படத்தில் சேர்த்திருக்கிறாராம் விஜயராஜ். ஆச்சரியம். (சொக்கன் முன்பு சொல்லித்தான், தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு நபிநாதரிடம் போய்ச் சொல்லு பாடலும் ராஜா இசையமைத்தது என்ற ஆச்சரியமான தகவல் தெரியும்!) இந்தக் கட்டுரையை வாசிக்க: http://andhimazhai.com/news/view/tms-special-article-642018.html (ஆன்லைனில் தொடரும் என்று போட்டிருக்கிறார்கள். அச்சிதழில் தொடரும் என்றெல்லாம் இல்லை.)

இன்னுமொரு சுவாரஸ்யம், ஆவணப்படத்துக்காக ராஜாவும் டிஎம்எஸ்ஸும் சந்தித்துப் பேசியது. அதில், புதிய குரல்களுக்காகத்தான் டிஎம்எஸ்ஸைப் பயன்படுத்தவில்லையே தவிர அவரை ஒதுக்கவில்லை என்று ராஜா அவரிடமே சொல்லி இருக்கிறார். மற்றபடி தான் சந்தித்ததிலேயே மிகச்சிறந்த ஆண்குரல் டிஎம் எஸ் என்று ராஜா சொல்லி இருக்கிறார்.

இந்த ஒரு கட்டுரைக்காக இந்த இதழை வாசிக்கவேண்டும். சிறிய கட்டுரைதான்.

நாற்காலிக் கனவுகள் தலைப்பில் வந்த கட்டுரையில் மாலனின் கட்டுரை (வைகோ பற்றியது) அட்டகாசம். அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் அதை வெளியிட்டார் என நினைக்கிறேன். மற்றவை எல்லாம் மிக அவசரத்தில் அல்லது இடப்பற்றாக்குறையில் எழுதப்பட்டவை போல உள்ளன.

அகில் எழுதிய கட்டுரையில், எம்ஜியார் எஸ் எஸ் ஆர் கழகம் என்ற பெயரில் எஸ் எஸ் ஆர் ஒரு கட்சி தொடங்கினார் என்ற செய்தி (மட்டும்!) வியப்பளித்தது.

இந்த இதழில் சில பக்கங்கள் கனடா சிறப்பிதழாகவும் வந்துள்ளது. அதில் அ.முத்துலிங்கத்தின் (சுமாரான) பேட்டி ஒன்றும் வெளியாகியுள்ளது.

மேக்ஸ்டரில் கிடைக்கும் என நினைக்கிறேன். தேவைப்படுபவர்கள் வாங்கி வாசிக்கவும்.

Share

நாங்கள்

நாங்கள் என்றொரு திரைப்படம் வந்தது. 1992ல். சிவாஜி கணேசன் நடித்த திரைப்படம். 1991ல் நான் மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு வீடுமாற்றிக்கொண்டு வந்துவிட்டோம். ஆனாலும் மதுரையின் மீதிருந்த காதலும் ஈர்ப்பும் குறையாமல் இருந்த காலகட்டம். எப்போதெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் மதுரைக்குப் போய்விடுவேன். அங்கே இருந்த நண்பர்களுடன் படத்துக்குச் செல்வது ஒரு பொழுதுபோக்கு. அந்தமுறை எந்த நண்பரும் வீட்டில் இல்லை. நாங்கள் இருந்த வளைவுக்குச் சென்று அங்கிருந்தவர்களைப் பார்த்துவிட்டு, அவர்கள் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு, வேறு என்ன செய்வது என்று தெரியாமல், நான் மட்டும் தனியாகக் கிளம்பி மதி தியேட்டரில் ‘நாங்கள்’ படம் பார்க்கப் போனேன். இந்தப் படத்தைப் பார்க்க ஒரே காரணம், இளையராஜா.

சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு, ‘பாடு குயில்களே பாச மலர்களை’ பாடலைக் கேட்டபோது, அதுவரை மறந்திருந்த பாடல் நினைவுக்கு வந்தது. அப்படியே நான் மதுரைக்குச் சென்றது, படம் பார்த்தது என எல்லா நினைவுகளும். மதுரையில் அந்த வயதில் பார்த்தபோதே அந்தப் படம் படு குப்பை என்ற எண்ணம் வந்ததை நினைத்துக்கொண்டேன். அப்போது தீபிகா மகாபாரதத்தில் மிகப் பிரபலமாகி இருந்தார். அவர், சிவாஜி, பிரபு என ஏகப்பட்ட பேர் இருந்தும், இருந்ததாலேயே படுகுப்பையாக அந்தப் படம் இருந்தது.

இந்த நாங்கள் திரைப்படம் நான்கைந்து நாள்களுக்கு முன் ஏதோ ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. சரி, பழைய நினைவுகளுக்காகவும், ‘பாடடி குயிலே’ பாடலுக்காகவும் பார்ப்போம் என்று பார்க்கத் துவங்கினேன். இந்தப் படத்தை எப்படி அந்தக் காலத்தில் பொறுமையாகப் பார்த்தோம் என்ற ஆச்சரியம் எனக்கு இன்னும் தீர்ந்த பாடில்லை.

இன்னொரு அதிர்ச்சி, வசனம் மகேந்திரன். மகேந்திரன் எப்படி இப்படி ஒரு மோசமான படத்துக்கு மோசமான வகையில் வசனம் எழுதினார் என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். ஒருவேளை வேறொரு மகேந்திரனாக இருக்குமோ என்று விக்கியில் பார்த்தால், கதை மகேந்திரன் என்றிருக்கிறது. ஆனால் வசனம் மகேந்திரன் என்று படம் சொல்கிறது. என்னதான் மோசமான கதையாக இருந்தாலும் மகேந்திரன் போன்ற ஒருவர் எவ்வித ஒரு ‘பளிச்’சும் இல்லாமல் இப்படி வசனம் எழுதமுடியுமா என்ற சோகம் இந்த நிமிடம் வரை தீர்ந்தபாடில்லை. அந்த வயதிலேயே மகேந்திரன் எனக்கு மிகப் பிடித்த இயக்குநர். இருந்தும் அன்று மதுரையில் படம் பார்க்கும்போது எப்படி மகேந்திரன் பெயரைத் தவற விட்டேன் என்பதுவும் பிடிபடவில்லை. 🙂

Share

தாரை தப்பட்டை – முழுக்க தப்பு

தாரை தப்பட்டை திரைப்படம் பாலாவின் வழக்கமான கொடூரத் திரைப்படமாகத்தான் இருந்தது. இதுவரை வந்த கொடூரத் திரைப்படங்களில் அதை ஒட்டி கொஞ்சம் கதையும் கொஞ்சம் திரைக்கதையும் இருந்தன. இதில் கொடூரம் மட்டுமே உள்ளது.

மிக முக்கியமான குறையாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது, படத்தின் பல காட்சிகள் எவ்வித உயிருமின்றி தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்கள் பாணியில் இருந்தன. இது படத்தின் தரத்தை வெகுவாகக் குறைத்துவிட்டது.

சிவாஜி கணேசன் என்ற ஒரு சிறந்த நடிகன் தன் மிகை நடிப்பை நம்பி காலமாற்றத்தைப் பொருட்படுத்தாமல் அதற்குள்ளேயே சிக்கி மடிந்து போனது போல பாலா தன் திரைப்படம் என்ற ஒரு பிம்பத்துக்குள் பலவாறாகக் சிக்கிக்கொண்டுவிட்டார். அவன் இவன் என்ற திரைப்படம் தமிழ்த் திரைப்படக் குப்பைகளில் ஒன்று. நல்ல படங்கள் இயக்கும் இயக்குநர்களின் தோல்விப் படங்கள்கூட ஒரு எல்லைக்கு மேலே பொருட்படுத்தத்தக்கக் கூடிய படமாக இருக்கவேண்டும். ஆனால் தமிழில் இப்படி நிகழ்வதில்லை. தமிழின் இரண்டு மிகச் சிறந்த திரைப்படங்களைத் தந்த பாலு மகேந்திரா சில குப்பைகளைக் கொடுத்திருக்கிறார். மகேந்திரனும் இப்படியே. ஆனால் இவற்றையெல்லாம்விட பாலாவின் அவன் இவன் படு மட்டமானது.

விளிம்பு நிலை/புறக்கணிக்கப்பட்ட மனிதர்களைப் பற்றிய படத்தை எடுப்பதாகத் தொடங்கிய பாலா, எப்படி பாரதிராஜா கிராமங்களைக் காட்டுவதாகத் தொடங்கி ஒரு கட்டத்தில் அவரே கிராமங்களை உருவாக்கிக் காண்பிக்க ஆரம்பித்தாரோ அப்படி பாலாவின் விளிம்பு நிலை மனிதர்கள் உருவாகி வர ஆரம்பித்தார்கள். இவர்களுக்கும் யதார்த்த சமூகத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ‘என் பிரா சைஸை நீயே பார்த்துக்கோ’ ஓர் உதாரணம்.

மணிரத்னம் மிகப்பெரிய பிரச்சினையை மையமாகக் கொண்டு காதல் படங்களை எடுப்பதைப் போல பாலாவும் தாரை தப்பட்டை என்று பெயர் வைத்துவிட்டு அதில் என்னென்னவோ காண்பிக்கிறார். ஏன் எதற்கு என்ற திரைக்கதை பற்றிய எவ்வித முதிர்ச்சியும் இப்படத்தில் இல்லை.

நடிகர்களை அதீதமாக மிகை நடிப்புச் செய்யச் சொல்லி பார்வையாளர்களை முதல் காட்சியிலிருந்தே கலவரப்படுத்துவது பாலாவின் பாணி. அவன் இவன் திரைப்படத்துக்கு அடுத்து வந்ததாலேயே பரதேசி பரவாயில்லை என்று சொல்லப்பட்டாலும், பரதேசி திரைப்படத்தின் முதல் பத்து நிமிடங்களிலேயே நான் அடைந்த குமட்டல் இன்றும் நினைவில் உள்ளது. அதேபோலவே இப்படத்திலும் முதல் காட்சியிலேயே ஜி.எம். குமார் அந்த கொடுமையைத் தொடங்கி வைக்கிறார். அவர் இசைக்கும் கருவி என்ன? படத்தின் பெயருக்கும் அதற்கும் என்ன தொடர்பு என்று எனக்குத் தெரியவில்லை. தப்பட்டை என்றால் பறை என்று விக்கி சொல்கிறது. ஜி.எம்.குமாரோ தவிலை அதை அவர் சிவாஜி கணேசன் போல வாசிக்கிறார். சரக்கு கேட்கிறார். பின்பு ஒரு காட்சியில் சம்பந்தமே இல்லாமல் ஒரு பாடலும் பாடுகிறார். கம்பீரமான குரலில். இவர் யார்? சகலகலா வல்லவரா? இவர் ஏன் புகழ்பெறவில்லை? என்ன நடந்தது? ஏன் குடித்துக்கொண்டே இருக்கிறார்? ஒன்றும் விளங்கவில்லை. ஜி.எம். குமார் போன்ற எவ்வித முகபாவங்களும் இன்றி நடிப்பையே கொலையாக்கும் நடிகர்களை பாலா தள்ளி வைக்கவேண்டும். தன்னால் யாரையும் நடிக்க வைக்கமுடியும் என்பதே இயக்குநரின் தோல்வியின் முதல்படியாக இருக்கும்.

ஜி.எம்.குமாரின் ஒவ்வாத (வராத) நடிப்பைப் பிடித்துக்கொண்டு அடுத்து தொடர்கிறார் வரலட்சுமி. அப்படி ஒரு ஓவர் ஆக்டிங். இவரும் சரக்கு கேட்கிறார். இவர் நடிக்கும் ஒவ்வொரு காட்சியும் குமட்டலை உண்டு பண்ணுகிறது. இன்னொருவருடன் திருமணம் என்றதும் அப்படியே நடைப்பிணமாக மாறுகிறாராம். சகிக்கவில்லை. ஆ ஓ ஊ என்று கத்தினால் நடிப்பு என்ற, தங்கர் பச்சான் கதாபாத்திரங்களின் இலக்கியப் பிரதியை பாலா கைவிடுவது நல்லது.

சசிக்குமாரும் வரலட்சுமிக்கும் காதலாம். ஆனால் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்களாம். நாம் அதைப் புரிந்துகொள்ளவேண்டுமாம். இது என்ன ரொம்ப புதுமையானதா? பார்த்தால் புரியாதா? இடையிடையே செண்ட்மெண்ட் காட்சிகளை வைத்து அதற்கு இளையராஜா மிகப் பிரமாதமான பின்னணி இசையைப் போட்டு, ஆனால் அங்கே காட்சிகளோ கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கின்றன.

தேவையற்ற காட்சிகள்தான் ஒட்டுமொத்த படமும். பாலா 10,000 அடி படங்கள் எடுத்துவிட்டு தேவையற்றதை வெட்டிவிடுவார் என்று சொல்வார்கள். எனக்கென்னவோ அப்படி வெட்டிப்போட்டதை தவறாக வெளியிட்டுவிட்டார்கள் என்று தோன்றுகிறது.

ஒரு திரைக்கதை என்றால் சுவாரஸ்யம் வேண்டாமா? அரிசியை ஊற வைத்து உளுந்தை ஊற வைத்து ஆட்டி எடுத்து ஒன்றாக்கி உப்பு போடும் தினசரி வேலையா என்ன திரைக்கதை? இந்தப் படம் அப்படித்தான் இருக்கிறது. அடுத்து என்ன என்று யோசிக்கவே வேண்டாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது அப்படியே நடக்கும். நாம் அதை ஏற்கெனவே சிவாஜி கணேசன்  காலத்திலேயே பார்த்திருப்போம்.

அந்தமான் போகிறார்கள். என்ன நடக்கும்? ஆட்டக்காரிகளை படுக்கக் கூப்பிடுவார்கள். அதேதான் நடந்தது. ஹீரோவுக்குப் பசி. ஹீரோயின் என்ன செய்வாள்? நடு ரோட்டில் ஆடி பிச்சையெடுத்து ஆடி உருக வைக்கும் பின்னணி இசையில் மாமாவுக்காக அம்மணமாகூட ஆடுவேன் என்று சொல்கிறாள். ஹீரோயினுக்கு உடல்நிலை சரியில்லை. ஹீரோ கண் விழித்துப் பார்த்துக்கொள்கிறான். இதெல்லாம் ஏன் அந்தமானில்? எப்படி அந்தமானில் இருந்து திரும்பி வந்தார்கள்? சட்டென்று ஒரு காட்சியில் தஞ்சைக்கு வந்துவிட்டார்கள். இதை முதல் காட்சியிலேயே காண்பித்திருக்கலாமே. (தஞ்சையின் படித்துறை அழகு.)

ஜி.எம். குமாரை சசிக்குமார் திட்டுகிறார். அடுத்த காட்சியில் ஆஸ்திரேலியாகாரர்கள் பாட அழைக்கிறார்கள். அவர் யாழ் போன்ற கருவியை மீட்டுகிறார். அடுத்த காட்சியில் உங்கப்பன் ஜெயிச்சிட்டான் என்று சொல்லி செத்துப்போகிறார். இதில் ஆஸ்திரேலியாகாரர் மொழி தெரியாமலேயே இவர் பாடிய வரிகளை சொல்கிறார். இசை இணைக்கிறதாம். இசை எப்படி மொழியை இணைத்தது? இப்படி படம் முழுக்க கொடுமைகள் வந்தால் எப்படி சகித்துக்கொள்வது? இதில் பணத்துக்கும் மயங்கமாட்டாராம். கோவக்காரராம். பாராட்டை பதில்-சன்மானமாக திரும்பக் கொடுப்பாராம். ஏனென்றால் கலைஞராம். மீம்களில் வருமே, ஐ டி க்ளையண்ட்டுகள் தங்களை சிங்கம் போல நினைத்துக்கொள்ள, மற்றவர்கள் பார்வையில் பூனை போலத் தென்படுவார்களே, அதைப் போல. ஜி.எம்.குமாரை மிகப்பெரிய சமரசமற்ற கோபக்கார திறமையான கலைஞனாகக் காட்ட பாலா எத்தனிக்கிறார். நமக்குத் தெரிவதெல்லாம் ஒரு குடிகாரனின் கோபமும் உளறலும் மட்டுமே. எல்லாரும் அவரை திறமைக்காரண்டா என்கிறார்கள். என்ன திறமை? அதை மறைத்து வைத்துவிட்டார்கள்.

ஒரு செட்டியாருக்கு குழந்தை வேண்டுமாம். ஒரு பிராமண ப்ரோக்கர் வேலை பார்க்கிறார். (ஆனால் கிறித்துவ டீன் மட்டும் போப்பே தப்பு செய்தாலும் தொப்பியைக் கழற்றிவிட்டு குட்டுபவர்!) என்னென்னவோ சொல்கிறார். வில்லனின் கொடூரத்தைக் காண்பிக்க ஆறு பெண்களுக்கு மொட்டை. இந்தக் காட்சிகளையெல்லாம் பார்க்க சகிக்கவில்லை. என்ன எடுக்கிறோம், என்ன சொல்லப்போகிறோம் என்று எந்த இலக்குமின்றி இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

பாலாவின் திரைப்படங்கள் திரையில் ஒதுக்கப்பட்ட சமூகத்தினரைக் காண்பிக்க முயல்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் அவர்கள் மேல் மரியாதையைக் கொண்டுவரும் எந்த முயற்சியையும் அது செய்வதில்லை. பொதுப்புத்தியில் இருக்கும் இகழ்ச்சியை வெறுப்போடு இணைக்கிறது. ஆட்டக்காரிங்கன்னா அவுசாரிங்களா என்கிறார். இப்படத்தில் அவர்கள் அத்தனை பேரும் ஆபாசமாகவே ஆடுகிறார்கள். ஆபாசமாகவே பேசிக்கொள்கிறார்கள். மாமனாருடன் சேர்ந்து குடிக்கிறார். ஆனால் வசனம் மட்டும் மரியாதையைக் கேட்கிறது. ஆட்டம் ஆபாசமாக இருந்தாலும் அவர்களைத் தொட உரிமையில்லை என்பது நியாயம். ஆனால் அதைப் பார்வையாளர்களுக்குத் தெளிவாகச் சொல்ல பாலாவால் முடியவில்லை.

பாலாவின் நடிகர்களின் ஓவர் ஆக்டிங்கே அவரது ஒவ்வொரு படத்தை சீரழிக்கிறது. அது நடிகர்களின் பிரச்சினையல்ல, ஒவ்வொரு நடிகருக்குள்ளும் இருந்துகொண்டு நடிக்கும் பாலாவின் பிரச்சினை. இதைத் தீர்க்காத வரை நல்ல படத்தை பாலாவால் இனி கொடுக்கமுடியாது.

பாலாவின் நகைச்சுவைக் காட்சிகளின் கொடுமை இப்படத்திலும் தொடர்கிறது. லொடுக்கு பாண்டி, சரோஜாதேவி சோப்பு டப்பா என்ற கொடுமைகளின் வரிசையில் இப்படத்திலும் ஒரு காட்சி. புது ஆட்டக்காரியைத் தேடிச்செல்லும் காட்சி. நேரத்தை இழுக்கப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு நல்ல படம் என்று எதையுமே பேசமுடியாது என்பதை பாலா புரிந்துகொள்ளவேண்டும்.

கதையை சவசவ என்று இழுத்துவிட்டு கடைசியில் தன் பிராண்டான கொடூரத்துக்குத் தாவுகிறார். ஹீரோ மிருகம் போல தாக்கி எல்லோரையும் கொல்வதும், ஒரு பெண்ணின் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுத்துவிட்டு அவளைக் கொன்றுவிடுவதும் என கொஞ்சம்கூட லாஜிக்கே இல்லாத காட்சிகள். ஹீரோ மிருகம் போல மாறி அடிக்கும் காட்சிகளின் விஷுவல்கள்கூட பழைய பாலா படங்களைப் பார்ப்பதைப் போலவே உள்ளது.

இதில் சசிக்குமார் மிகையாக நடிக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். பாவம் அவர் உழைப்பு. பாலா ஹீரோக்களின் நடிப்பு விழலுக்கு இறைத்த நீராகப் போவது இது முதல்முறையும் அல்ல, கடைசி முறையும் அல்ல.

இளையராஜாவுக்கு செய்யப்பட்ட துரோகம் கொஞ்சம் நஞ்சமல்ல. அட்டகாசமான பாடல்களையெல்லாம் கூறுகெடுத்து கொத்துக்கறி போட்டுக் கெடுத்திருக்கிறார்கள். மிகச்சாதாரண இயக்குநர் கூட இதைவிட ஒழுங்காக எடுத்திருப்பார். பாருருவாயா பாடலைப் பார்த்தால் கதறத் தோன்றுகிறது. இதில் நல்ல பாடல் ஒன்று வரவில்லை. ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளேவைப் பார்க்கமுடியவில்லை. ராஜாவின் பின்னணி இசை பலவித மாயங்களை நிகழ்த்துகிறது. காட்சிகள் ஈடுகொடுக்கமுடியாமல் திணறுகின்றன. உண்மையில் ராஜா காட்சிகளுக்குத்தான் இசையமைத்திருப்பார். ஆனாலும், அவன் தன் தரத்தில் இருந்து கீழே இறங்கவில்லை.

இந்தப் படத்தில் ஒரு பெண்கூட நல்லவராக ஏன் இல்லை என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். இந்த நினைப்பு இப்படத்தை ஒரு சிக்-மூவியாக என் மனத்தில் பதியச் செய்துவிட்டது. ஏன் பெண்கள் மேல் இத்தனை வெறுப்பு, வன்மம்? யோசிக்க யோசிக்க எரிச்சலே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆறு பெண்களுக்கு மொட்டை போடும் காட்சியும், செட்டியார் முன்னிலையில் வரிசையாகப் பெண்கள் வரும் காட்சியும். இவையெல்லாம் கலையல்ல. குரூரத்தின்  கலை என்பது நீங்கள் எதைப் படமாக எடுக்கிறீர்கள், எந்தக் களத்தில் எடுக்கிறீர்கள் என்பதில் உள்ளது. வெற்றுக் குரூரம் கலையாகாது.

இப்படத்தில் எனக்குப் பிடித்திருந்த ஒரே காட்சி, அண்ணனும் தங்கையும் ஆடும் தெரு டான்ஸ்தான். அது ஒன்று மட்டுமே யதார்த்தத்துக்கு அருகில் உள்ளது. வரலட்சுமியின் ஆட்டமும் யதார்த்தத்துக்கு அருகில் இருந்தாலும், மற்ற காட்சிகளில் அவர் செய்யும் மிகை நடிப்பு இதையும் சேர்த்துக் கெடுத்துவிட்டது.

ஒரே விதமான கதாபாத்திரங்களைப் படைப்பது, பார்வையாளர்களை திடுக்கிட வைப்பதற்காகவே கொடூரமாக எதையாவது செய்வது, தரமற்ற நகைச்சுவைக் காட்சிகளை வைப்பது, நடிகர்களை ஏனோ தானோவென்று ஓவர் ஆக்டிங் செய்யவைப்பது, திரைக்கதையெல்லாம் தேவையில்லை என்று தன் திறமையில் அதீத நம்பிக்கை வைப்பது – இவற்றையெல்லாம் கைவிடவில்லையென்றால் பாலாவின் திரைப்படங்கள் இனி தேறப்போவதில்லை.

பின்குறிப்பு: மகராசி இலவசமா அரிசி கொடுக்கிறதால என்ற ஒரு வரி வருகிறது. அதிமுகக்காரர்கள் இதைப் பார்த்தார்களா என்று தெரியவில்லை. பாலா போன்ற இயக்குநர்கள் செய்யக்கூடாத ஒன்று இது.

Share

இங்கே எதற்காக – புத்தக விமர்சனம்

ஒரு திரைப்படத்தை இயக்கி வெளியிடுவது எத்தனை கடினமானது என்பது எல்லாருக்குமே தெரியும். அதுவும் மாற்றுத் திரைப்படங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இங்கே வணிகத் திரைப்படங்கள் வெளிவருவதே அத்தனை கடினம் என்னும் நிலையில், மாற்றுத் திரைப்படங்கள் மட்டுமே எடுப்பேன் என்றொரு இயக்குநர் உறுதியாக இருந்தால் அவர் என்ன பாடுபடவேண்டியிருக்கும் என்பதை இயக்குநர் ஜெயபாரதியின் ‘இங்கே எதற்காக’ நூலைப் படித்தால் புரிந்துகொள்ளலாம்.

inge etharkaakaஇங்கே எதற்காக, இயக்குநர் ஜெயபாரதி, டிஸ்கவரி புக் பேலஸ், ரூ 150

முன்பு தூர்தர்ஷனில் மதியம் மாநில மொழித் திரைப்படங்கள் வரிசையில் ஜெயபாரதியின் ‘உச்சிவெயில்’ திரைப்படம் ஒளிபரப்பப்படும் என்று அறிவித்தார்கள். அப்போது எனக்கு 13 அல்லது 14 வயதிருக்கலாம். அப்போதே இதுபோன்ற ‘மெல்ல நகரும் இருட்டுக்குள் யாரோ ஒருவர் சத்தம் குறைவாகப் பேசும் படங்களை’ (படமெடுக்க பணம் கேட்டு ஜெயபாரதி செல்லும்போது இப்படித்தான் நடிகை ராதிகா சொல்கிறார்) விரும்பிப் பார்க்கும் வழக்கம் எனக்கு உண்டு. மொழி தெரியாமல் சப்-டைட்டில்களை மெல்ல கூட்டி வாசித்து அரைகுறையாகப் புரிந்துகொண்டு மலையாள, கன்னடப் படங்களெல்லாம் பார்த்திருக்கிறேன். இந்தப் படம் கருப்பு வெள்ளை படம். (இதுதான் தமிழின் கடைசி கருப்பு வெள்ளை படமாம்.) ஜெயபாரதி என்ற பெயரைக் கேட்கவும் ஜெயபாரதி என்ற நடிகை நடித்தது என்றுதான் அதைப் பார்க்கத் தொடங்கினேன்.

படம் ஆரம்பித்த சில நிமிடங்களுக்கெல்லாம் என் வீட்டில் எல்லோரும் உறங்கிவிட்டார்கள். நான் மட்டும் பார்த்துக்கொண்டிருந்தேன். மிக மங்கலாக சில காட்சிகள் நினைவிலுள்ளன. தலைவாசல் விஜய் (அப்போது அவர் வெறும் விஜய் மட்டுமே. தலைவாசல் வெளியாகியிருக்கவில்லை) ராணுவத்திலிருந்து திரும்ப வந்தவர் போன்ற நினைவு. அந்த ராணுவ உடையில் க்ளோஸப் காட்சியில் என்னவோ பேசுவார். யாரோ ஒரு முதியவர் காணாமல் போய்விடுவார். அவரை காரில் தேடுதேடென்று தேடுவார்கள்.

மறுநாள் பள்ளிக்குச் சென்றபோது இந்தப் படத்தைப் பார்த்திருந்த ஒரே ஜீவன் நானாகத்தான் இருந்தேன். ‘இதுக்கெல்லாம் அவார்ட்னு கொடுத்து… நம்ம டிடிக்குன்னு படம் கிடைக்குதே’ என்பதுதான் ஒட்டுமொத்த கருத்தாக இருந்தது. இந்தப் படம் ஏன் முக்கியமான படம் என்றெல்லாம் அன்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. இன்றும் நான் இது மிக முக்கியமான படம் என்றெல்லாம் நினைக்கவில்லை. மாற்றுத் திரைப்படங்களின் இலக்கணமாக ஜெயபாரதியின் திரைப்படங்களைச் சொல்லவும் இல்லை. நிச்சயம் ஜெயபாரதியின் படங்களில் அவற்றுக்கே உரிய குறைகள் உள்ளன. ஆனால் இந்த இயக்குநர் ஏன் எதற்காக இது போன்ற படங்களை எடுக்கிறார், எப்படி இத்தனை கஷ்டத்துக்குள்ளாகி ஒரு படத்தை எடுக்கத் தோன்றுகிறது என்று நிச்சயம் யோசிக்கிறேன். மாற்றுத் திரைப்படங்களின் உச்சம் இல்லை என்றாலும், ஜெயபாரதியின் திரைப்படங்கள் நிச்சயம் மாற்றுத் திரைப்படங்கள்தான். மகேந்திரனின் திரைப்படங்கள்கூட இந்த அளவு மாற்றுத் திரைப்படங்கள் அல்ல என்றுகூடச் சொல்லலாம். மகேந்திரன் மாற்றுத் திரைப்படங்களுக்கும் வணிகத் திரைப்படங்களுக்கும் இடையே ஒரு பாதையைக் கண்டுகொண்டார். கொஞ்சம் முயன்றால் ஜெயபாரதியும் அந்தப் பாதையைக் கண்டுகொண்டிருக்கலாம். ஏனென்றால் சில குறைந்தபட்ச சமசரங்களுக்கு மகேந்திரன் போலவே ஜெயபாரதியும் ஆயத்தமாகவே இருந்திருக்கவேண்டும். அதற்கான தடயங்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. ஆனாலும் ஏனோ ஜெயபாரதி அதைச் செய்யவில்லை.

ருத்ரையாவின் ‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். எடிட்டிங், தொடர்ச்சி, ஒளிப்பதிவு, ஒலிக்கோர்ப்பு என எல்லாவற்றிலும் ஏனோதானோவென்று இருந்தது. ஜெயபாரதியின் திரைப்படமும் அப்படித்தான் இருந்ததாக நினைவு. குடிசை திரைப்படத்தையும் நான் பார்த்திருக்கிறேன். ருத்ரையாவின் அவள் அப்படித்தான், ஜெயபாரதியின் குடிசை, உச்சிவெயில், ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் – இவை எல்லாமே ஒரே ரகம். பணம் இல்லாமல் மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்டவை.

எவ்வித ஈகோவுமின்றி யார் பணம் தந்தாலும் வாங்கிக்கொண்டு படம் தயாரித்திருக்கிறார் ஜெயபாரதி. ஆனால் பணம் தந்தவர் நேர்மையற்றவர் என்று தெரிந்தால் அத்தோடு விலகிவிடுகிறார். (என்று புத்தகத்தில் சொல்கிறார்.) அப்படித்தான் 24சி வேதபுரம் முதல்வீதி திரைப்படத்தை இவர் நிறுத்துகிறார். கம்யூனிஸ்ட்டுகளுக்காக இவர் எடுக்கும் படம் தேநீர், அந்த கம்யூனிஸ்ட் தயாரிப்பாளர் செம்மலர்ச்செல்வனின் லீலைகளில் நின்றுபோகிறது. பணம் வந்தால் கம்யூனிஸ்ட்டுகள் கள்குடித்த குரங்கைப் போல் ஆடுவார்கள் என்று தோழர் வி.பி. சிந்தன் சொன்னதை அனுபவத்தில் புரிந்துகொண்டு அப்படத்தைக் கைவிடுகிறார். பின்னர் அதுவரை எடுத்த படம் சண்முகம் என்பவரால் (பிற்பாடு இவர் தராசு ஷ்யாம் என்று புகழ்பெறுகிறார்) ஊமை ஜனங்கள் என்று பெயர்மாற்றப்பட்டு வேறு கதையில் இது நுழைக்கப்பட்டு வெளிவந்து படுதோல்வி அடைகிறது.

மேற்கொண்டு படம் எடுக்க பணம் இல்லாமல், நடிக்க வந்த நடிகை போட்டிருந்த நகைகளையெல்லாம் விற்று உடன் நடிக்க வந்த அனைவரையும் பத்திரமாக அனுப்பி வைக்கும் அனுபவமெல்லாம் இவருக்கு ஏற்படுகிறது. ஆனாலும் ஏதோ ஒன்று இவரைச் செலுத்துகிறது. எப்படியோ அடுத்த அடுத்த படங்களை எடுக்கிறார். ஒவ்வொரு படத்துக்கும் இடையே சில சமயங்களில் பத்துவருடங்கள்கூட கடக்கின்றன. ஆனாலும் யாரேனும் ஒருவர் வந்து படம் எடுக்கவேண்டும் என்றால் படம் எடுக்கிறார்.

இதற்கிடையில் கே.பாலசந்தர் நடிக்கவும் அழைக்கிறார்.  படம் இயக்கிக்கொண்டிருப்பதால் இவரால் நடிக்கச் செல்லமுடியவில்லை. ருத்ரையா இயக்கத்தில் நடிக்கச் சென்று அவமானப்பட்டு திரும்புகிறார். இதற்கெல்லாம் பிற்பாடு ‘கிராமத்து அத்தியாயம் படத்தில் நன்றாக நடித்ததால், ’அந்த’ நடிகருக்கு இவர் போட்டியாகிவிடுவாரோ என்று அஞ்சியே இவர் தூக்கப்பட்டார்’ என்று இவருக்குச் சொல்லப்படுகிறது. அதை இவர் ஏற்கவில்லை. ஆனால் அந்த ஒரு படத்துக்குப் பிறகு ருத்ரையாவும் ஓரம்கட்டப்படுகிறார். இதுதான் சினிமா உலகம் என்று இவருக்கு இவர் நண்பர் சொல்கிறார். முற்போக்களரான ருத்ரையா தனது அடுத்த படம் வராததற்கு ஜெயபாரதியின் வயிற்றெரிச்சலே காரணம் என்று சொன்னதாகவும் இவர் கேள்விப்படுகிறார்.

இப்படி புத்தகம் முழுக்க பல சிதறல்கள். இதன்வழியே நாம் திரையுலகின் ஜொலிக்கும் வெள்ளித்திரைக்குப் பின்னே நடக்கும் அவலங்களை ஏமாற்றங்களை துரோகங்களை துல்லியமாகக் காணமுடியும். சில நண்பர்கள் இதுபோன்ற துரோகங்களை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். இப்படியெல்லாமா செய்வார்கள், இவர் ஏமாற்றத்தில் பேசுகிறார் என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். ஆனால் ஜெயபாரதியின் புத்தகம் முகத்தில் அறைந்து உண்மையைச் சொல்கிறது. எடுத்தவுடனேயே தான் சொல்வதெல்லாம் உண்மை என்று இறைவன் மீது சத்தியம் செய்துவிட்டுத்தான் ஜெயபாரதி தொடங்குகிறார். ஜெயபாரதி பொய் சொல்லவேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாகவும் தோன்றவில்லை.

* ஒரு நடிகையிடம் பேட்டி எடுக்கச் சென்று அவர் ஷூட்டிங்கில் ஓய்வில் இருக்கும்போது ‘நான் தினமணிக் கதிரில் இருந்து வருகிறேன்’ என்று சொல்லவும் அவர் பதிலுக்கு ‘ஸோ வாட்’ என்று கேட்க, இவருக்கு என்ன பதில் சொல்லவென்று தெரியவில்லை. அந்த நடிகை – ஜெயலலிதா.

* சிவாஜி கணேசன் நடித்த ‘இளைய தலைமுறைகள்’ பட ஷூட்டிங்கில் கஷ்டப்படும் மகனுக்கு தாய் பணம் கொடுத்தனுப்பும் காட்சி. கை நிறைய சில்லறைகளாக அந்தத் தாய் (பண்டரிபாய்) கொண்டு வந்து மகனாக நடிக்கும் சிவாஜியிடம் கொடுக்க, சிவாஜி சில்லறைகளையெல்லாம் தொட்டு நடிக்கமாட்டேன், பணமாகக் கொடுக்கச் சொல்லுங்கள் என்று சொல்லிவிடுகிறார்.

* குடிசை திரைப்படத்துக்கு இசையமைக்க விரும்பி இளையராஜாவே முன்வருகிறார். ஆனால் ஏற்கெனவே காமேஷ் (கமலா காமேஷின் கணவர்) இசையமைக்க ஜெயபாரதி ஒப்புக்கொண்டுவிட்டதால் இது நிறைவேறாமல் போகிறது.

* குடிசை திரைப்படத்தை எடுப்பதற்குள் ஜெயபாரதி படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. மாயாஜாலக் காட்சி நடத்தி பணம் சேகரித்து ஷூட்டிங் நடத்துகிறார். ’சுராங்கனி’ புகழ் மனோகர் கச்சேரி நடத்தி பணம் திரட்டிக் கொடுக்கிறார். சிவகுமார் யாரிடமும் சொல்லவேண்டாம் என்று சொல்லி 2,000 ரூ தருகிறார். மிருணாள் சென்னை வைத்து தமிழில் படம் எடுக்க விரும்பும் விநியோகஸ்தரை, அப்பணத்தை குடிசை திரைப்படத்துக்குத் தரும்படி மிருணாள் சென்னே சொல்கிறார்.

* ஜெயபாரதியின் முதல் படத்தில் கமல் நடிப்பதாக இருந்தது. பாடல்களைச் சேர்ப்பதால் கோபப்பட்ட கமல் அதிலிருந்து விலகுகிறார். பிற்காலத்தில் ரஜினியை நடிக்கவும் ஜெயபாரதி கேட்கிறார். ‘சலிப்படையும்போது உங்களிடம் வருகிறேன்’ என்று சொல்கிறார் ரஜினி.

*Crowd funding மூலம் பணம் சேர்த்தே திரைப்படம் எடுக்கிறார் ஜெயபாரதி. சிலர் தருகிறார்கள். பலர் தருவதில்லை. ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் உச்சிவெயில் படத்துக்கு பத்தாயிரம் நன்கொடை தருகிறார்.

நான் சில விஷயங்களையே சொல்லியிருக்கிறேன். இப்படி புத்தகமெங்கும் அறிந்த மனிதர்களின் அறியாத முகங்களும் அறியாத முகங்களின் அசரடிக்கும் குணங்களும் கொட்டிக் கிடக்கின்றன. அம்பிகா நடித்தால் இயக்குகிறேன் என்று சொன்ன மனிதரையும், உச்சிவெயில் படத்தில் ஹீரோவான தனக்கு எத்தனை பாடல்கள் என்று கேட்ட குப்புசாமித் தாத்தாவையும் மறக்கமுடியாது நம்மால்.

கமலையும் ரஜினியையும் நடிக்க கேட்ட இவர் ஏன் இவர் மம்முட்டியையோ மோகன்லாலையோ கேட்கவில்லை என்ற கேள்வி இப்புத்தகம் முழுவதும் எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது. அதிலும் ஸ்ரீவித்யா ‘நீங்கள் எப்போது அழைத்தாலும் வந்து நடித்துக்கொடுப்பேன்’ என்று சொன்னதைப் படித்தபோது இந்நினைவு அதிகமாகியது. அதைத்தான் வைரமுத்து ஜெயபாரதியிடம் ‘இங்கே எதற்காக?’ என்று கேட்டிருக்கிறார் போலும்.

உண்மையில் தமிழ்த் திரையுலகில் வரும் திரைப்படங்களைப் பார்த்தும் யாருக்காக இன்னும் இதுபோன்ற திரைப்படங்களை ஜெயபாரதி இயக்குகிறார் என்று எனக்கு இன்னும் பிடிபட்டபாடில்லை. நண்பா நண்பா, புத்ரன், குருக்ஷேத்திரமெல்லாம் வந்ததும்கூட யாருக்கும் தெரியாது. சி.சு.செல்லப்பா புத்தகக் கட்டுகளை தலையில் சுமந்துகொண்டு வீதி வீதியாக விற்றதாகச் சொல்வார்கள். படத்தை முடிக்க ஒவ்வொரு கல்லூரியாக பணம் கேட்டு ஜெயபாரதி ஏறி இறங்கும்போது அதுதான் நினைவுக்கு வந்தது

குருக்ஷேத்திரம் படம் வெளிவருவது போர்க்களமான குருக்ஷேத்திரத்தில் பட்டபாட்டைவிட பெரியதாக இருக்கிறது. திடீரென வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் சேர்த்தால்தான் படத்தை விற்கமுடியும் என்று தயாரிப்பாளர் சொல்லிவிட (இவர் ஏற்கெனவே ஷூட்டிங்கின்போது கோபத்தில் தேவடியா பசங்களா என்று கத்தியவர்) வேறுவழியின்றி அதற்கும் ஒப்புக்கொள்கிறார். முதலில் இவர்தான் ஜெயபாரதி தெரியாத வடிவேலு, இவர் யாரென்று தெரிந்துகொள்ளவும் மிகவும் மரியாதையாக நடந்துகொள்கிறார். ஷூட்டிங் முடிந்து கிளம்பும்போது ‘சந்திரசேகருக்கே தேசிய விருது வாங்கிக் கொடுத்திருக்கீங்க, எனக்கும் ஒரு படத்துல வாங்கிக் கொடுங்கண்ணே’ என்று கேட்கிறார். விவேக்கும் இவரை அழைத்து ‘மாற்றுத் திரைப்படம்’ வேண்டுமென்று கேட்டு ஒரு படம் நடிக்க முயல்கிறார். அந்த முயற்சி வெற்றியடையாமல் அது பிற்பாடு ஒய்.ஜி. மகேந்திரா நடித்து ‘புத்ரன்’ என்ற திரைப்படமாக வெளிவருகிறது. (இப்படி ஒரு படம் வந்ததே எனக்குத் தெரியாது!) விவேக், வடிவேலு போன்ற நடிகர்களுக்குள்ளேயும்தான் எத்தனை கனவுகள்!

நூல் முழுக்க தினுசு தினுசான தயாரிப்பாளர்கள். ஹோட்டல் தொழில் நடத்தும் ஒருவர். தன்னைவிட இயக்குநருக்குப் புகழா என்று மருகும் ஒருவர். அம்பிகா ஹீரோயின் என்றால் படம் தயாரிக்கத் தயாராக இருக்கும் ஒருவர். படம் தயாரிக்க இன்னொரு வாய்ப்புக் கிடைக்காது என்பதால் கிடைத்ததையெல்லாம் தின்று பெண்களுடன் ஆட்டம்போடும் ஒருவர். இதற்கிடையில்தான் நாம் நல்ல திரைப்படங்களை எதிர்பார்க்கிறோம். நினைக்கவே அயற்சியாகத்தான் உள்ளது.

திரைப்படம் பற்றி தெரிந்துகொள்ள இந்நூலை வாசிப்பது மிக முக்கியம். இது மாற்றுத் திரைப்படங்களுக்கான இயக்குநர்களின் பிரச்சினை மட்டுமல்ல. வணிகத் திரைப்படங்களுக்கான இயக்குநர்களும் இதேபோலவோ இதைவிட அவமானப்பட்டு நம்பிக்கைத் துரோகம் செய்யப்பட்டு அவமானப்படுத்தி நம்பிக்கைதுரோகம் செய்துதான் மேலே வரவேண்டியுள்ளது. அத்தகைய ஒரு நிலையைக் காலம் காலமாகவே நம் திரையுலக அமைப்பு கைக்கொண்டுள்ளது. இந்நிலை அத்தனை சீக்கிரத்தில் மாறாது. ஒரு புகழ்முகம் தனக்குப் பின்னே ஒளித்துக்கொண்டிருக்கும் பல்வேறு முகங்களை நாம் தரிசிக்க நேரும்போது ஏற்படும் மனவலியை எப்படிச் சொல்வது? அந்த மனவலியை இப்புத்தகம் எனக்குக் காட்டியது.

இப்புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/1000000023800.html

Share