இளையராஜா 1979ல் அப்துல் ஹமீதுக்கு அளித்த பேட்டி. மிக வேகமாக எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் இளைய இளையராஜாவைக் கேட்கவே சந்தோஷமாக இருந்தது. அப்போதே கடவுள் என்றெல்லாம் பதில் சொல்லி இருந்தாலும், இப்போதைய அளவுக்கு ஆன்மிக பதில்கள் இல்லை. மிகப் பெரிய கனவுகளுடன் பேசி இருக்கிறார். இவரது இசை ஒரே போல இருக்கிறது என்ற புகார் அப்போது இருந்திருக்கிறது. அதற்குத் தெளிவாகப் பதில் சொல்கிறார். கர்நாடக சங்கீதப் பயிற்சி இல்லாமல் சிறந்த இசையமைப்பாளராக முடியாது என்று சொல்லி, கூடவே கர்நாடக இசை விற்பன்னர்கள் எல்லாவற்றையும் கற்றுக் கொடுப்பதில்லை என்ற விமர்சனத்தையும் சொல்கிறார்.
இளையராஜா தான் இசையமைக்க வந்த காலம் தொட்டுத் தனக்கு முன்பிருந்த திரை இசைக் கலைஞர்களைக் கொண்டாடத் தவறவே இல்லை. இப்பேட்டியிலும் எம் எஸ் வியையும் எஸ்.வி. வெங்கட்ராமனையும் (காற்றினிலே வரும் கீதம் பாடலுக்கு இசையமைத்தவர்) குறிப்பிட்டுச் சொல்கிறார். சி.ஆர். சுப்புராமன் இசையமைத்த எல்லாப் பாடல்களும் பிடிக்கும் என்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வந்தபோது இப்படி ஒரு வரிகூடச் சொல்லி இருக்கவில்லை. அப்போதைக்கு அது ஒரு விநோதமான செயலாக எனக்குத் தோன்றியது. அந்தச் சமயத்தில் ஒரு இதழில் வெளிவந்திருந்த பேட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த ரீதியில் சொல்லி இருந்தார்: இந்த நேரத்தில் என்னைப் பற்றி அவரும் அவரைப் பற்றி நானும் பேசாமல் இருப்பது சரியானது என்ற பொருளில் சொல்லி இருந்தார். இது எனக்கு ஒரு சிறிய புரிதலைக் கொடுத்தது. இளையராஜா தனது முன்னோர்களைக் கொண்டாடியதையும் ரஹ்மான் வெளிப்படையாகப் பேசாததையும் இரண்டு விதங்களில் புரிந்துகொள்ள முயன்றேன். ஒன்று, தலைமுறை இடைவெளி. இன்னொன்று, ரஹ்மானுக்கு வாய்ப்பளித்தவர்கள் இளையராஜாவுக்கு எதிர்ப்புறம் நின்றவர்கள். ராஜாவுக்கு இந்தச் சிக்கல்கள் இருந்திருக்கவில்லை. இதையெல்லாம் மீறி, ரஹ்மான் ராஜாவைக் கொண்டாடியிருக்கவேண்டும் என்றுதான் இப்போதும் தோன்றுகிறது. இதில் எப்போது பிரச்சினை வருகிறது என்றால், ஏன் ராஜா ரஹ்மானைக் கொண்டாடவில்லை என்று ராஜாவின் எதிர்ப்பாளர்கள் கேட்கும்போதுதான். இருவரும் ஒருவரை கொண்டாடிக்கொள்ளாமல் இருப்பது கூட ஒருவகையில் சரிதான். ஆனால் அது நடக்கவேண்டும் என்றால் அது ரஹ்மான் தரப்பிலிருந்துதான் தொடங்கி இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
தனக்குப் பிடித்த சிறந்த இசைக்கருவி தம்புரா என்று ராஜா சொல்லி ஒரு பிரச்சினை அந்தக் காலத்தில் ஓடியிருக்கிறது. இன்று ராஜா மாணவிகள் மத்தியில் கல்லூரியில் பேசும்போது தனக்குப் பிடித்த இசைக்கருவி எது என்ற கேள்விக்குச் சொன்ன பதில், மனம்! எப்பேற்பட்ட நகர்வு.
நம் தமிழ் இயக்குநர்களின் பல திராபையான படங்களில் ராஜா இசையமைத்து உன்னதமான பாடல்களைத் தந்திருக்கிறார். ஆனாலும் இந்த இயக்குநர்களைக் கொண்டாடவே வேண்டும். ஒரே காரணம், இப்படியான பல பொக்கிஷங்களுக்கான சூழலைத் தங்கள் திரைப்படங்களில் உருவாக்கியதற்காகத்தான். இன்று வரும் இசையமைப்பாளர்களுக்கு இத்தனை விதங்களில் பாடல் அமைப்பதற்கான நாடகத்தனமான சந்தர்ப்பங்கள் வாய்க்கப் போவதே இல்லை. அந்த வகையில் அந்த இயக்குநர்களுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.