Tag Archive for மணிகண்டன்

Lover Tamil Movie

லவ்வர் – எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய ஒரு டாக்சிக் திரைப்படமாக வந்திருக்கிறது லவ்வர்.

spoilers ahead.

ஒருவன் வேலைக்குப் போவதில்லை. குடிக்கிறான். வீட்டில் பணம் வாங்கிச் செலவழிக்கிறான். பிசினஸ் செய்வதாகச் சொல்லி நஷ்டம் வேறு. இரண்டாம் மனைவி வைத்துக்கொண்டு அம்மாவை நடுரோட்டில் விடும் அப்பாவை அடிக்கப் போகிறான். இவனுக்கு ஒரு காதலி.

கல்லூரிக் காலத்திலேயே இவனைக் காதலிக்க ஆரம்பிக்கிறாள். ஆனால் இவனோ, அவள் வேறு வழியின்றிச் சொல்லும் பொய்களை எல்லாம் குத்திக் கிழித்துப் பெரிதாக்கிக் காண்பித்து அவளை மிரட்டுகிறான். இவன் வேண்டாம் என்று அவள் ஒதுங்கிப் போக ஆரம்பிக்கும் போது, மீண்டும் அவளிடம் கெஞ்சுவது, கூத்தாடுவது, தன்னைச் சேர்த்துக் கொள் எனக் கெஞ்சுகிறான். அவளும் சம்மதிக்கிறாள். மீண்டும் காதலிக்கிறார்கள். திருமணத்திற்கு முன்னால் உறவு வேறு.

இவன் அவளை மொத்தமாகச் சந்தேகப்பட அவள் ஒரு கட்டத்தில் உதறிவிட்டுப் போகிறாள். அதற்குப் பின்னும் அவன் விடாமல் அவளைத் துரத்த அவள் கடைசி வரை அவன் பக்கம் திரும்பிப் பார்ப்பதே இல்லை. இதனால் தாங்க முடியாமல் தவிக்கும் அவன் அவளை எப்படியாவது மீண்டும் தன் வழிக்குக் கொண்டு வர முயற்சிக்கிறான.

இதற்குப் பிறகுதான் பெரிய பிரச்சினை இருக்கிறது. ஒன்று, அந்தப் பெண் முற்போக்கான பெண். கல்லூரியில் எப்படியோ அவனைக் காதலித்து விட, கல்லூரிக்குப் பிறகான வாழ்க்கை தடம் மாறுகிறது. இத்தனைக்கும் தன் காலில் அவள் நிற்கும் போது ஏன் அவன் பின்னாலே சுற்றுகிறாள் என்பது மில்லியன் டாலர் கேள்வி. தூக்கி எறிந்து விட்டுப் போயிருக்க வேண்டும்.

காதலால் அவன் மீது வைத்த பாசத்தால் அப்படி இருக்கிறாள் என்று எடுத்துக் கொண்டால் அது மிகவும் பலவீனமானதாக இருக்கிறது. ஏனென்றால் அந்தப் பெண்ணுக்கு மிகத் தெளிவாகவே தெரிகிறது அவன் ஒரு லோஃபர் என்று. அத்தனையையும் தாண்டி அவள் அவனைவிட்டு விலகும்போது, ஒரு கட்டத்தில் அவன் இவளிடமிருந்து விலகிப் போகிறான். விட்டது சனியன் என்றில்லாஎன்றில்லாமல், ஏன் இவள் சென்று அவனைக் கட்டிப்பிடிக்கிறாள் என்பது அடுத்த மில்லியன் டாலர் கேள்வி. உண்மையில் படம் தன் அத்தனை நிலைப்பாடுகளில் இருந்தும் தவறிய தருணம் அதுவே. அந்த காட்சி அந்தப் படத்தையும் அந்தப் பெண்ணின் கதாபாத்திரத்தையும் மொத்தமாக உடைத்து விட்டது என்பதுதான் உண்மை.

நியாயப்படி இந்தப் பெண் அவனை அழைத்து செருப்பால் ஒரு அறை அறைந்து, இனிமேல் நீ உன் வேலையை பார்த்துக் கொள் என்று சொல்லி இருக்க வேண்டும். இந்தக் காட்சியை ஒரு பெண்ணியத் தருணத்திற்காக நான் சொல்லவில்லை. உண்மையிலேயே அதைச் செய்திருக்க வேண்டும் அந்தப் பெண். அப்படிப்பட்ட ஒரு குடிகாரன்தான் அவனது காதலன். ஆனால் இத்தனைக்கும் பின்னால் சென்று அவள் அவனைக் கட்டிக் கொள்வாள் என்பது பெண்களை நிஜமாகவே மட்டம் தட்டும் ஒரு செயல்.

அடுத்து, இப்படி ஒரு பெண் நல்லவனாக இருந்து விட்டால் எங்கே பிரச்சினை குறைவாக இருக்குமோ என்று அந்தப் பெண்ணுக்கும் ஆயிரம் சிக்கல்களை ஏற்படுத்தி வைத்திருக்கிறார் இயக்குநர். நவீனப் பார்வையில் அதுவும் ஒரு திரைக்கதை சூட்சமம்தான் என்றாலும், இது அந்தப் பெண் பக்கத்திற்கான நியாயத்தை பெருமளவில் குறைகிறது. ஏனென்றால், காதலனான குடிகாரனைப் பார்த்துச் சொல்கிறாள், பகலில் குடிக்காதே என்று. அதன் அர்த்தம் இரவில் குடிக்கலாம். கூடவே இவளும் தன் நண்பர்களுடன் சேர்ந்து குடிக்கிறாள். ஏற்கெனவே ஒருமுறை தம் அடித்து பார்த்திருக்கிறேன், பிடிக்கவில்லை என்பதால் தம் அடிப்பதில்லை என்கிறாள். கூட இருக்கும் பெண்கள் எல்லாம் கஞ்சா அடிக்கிறார்கள். இதெல்லாம் செய்யும் ஒரு பெண் கதாபாத்திரத்தைப் பார்த்து யாருக்குப் பாவம் தோன்றும்? ஆனாலும் இந்தப் படத்தில் தோன்றுகிறது. காரணம் அவளுடைய காதலனை இதைவிட கேவலமானதாக கட்டியிருப்பதால். ஆம், தனக்காக உருகும் ஒரு பெண்ணைப் பாபார்த்து அவன் தேவடியா என்கிறான்.

மீண்டும் ஒரு முறை இப்படம் அதன் அடிப்படையில் உடைவது இறுதிக் காட்சிகாலில். எல்லாம் முடிந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு என்று போடும்போது, அந்த லோஃபர் காதலன் மிகப்பெரிய ஒரு உணவுக் கடையை திறந்து வைத்திருக்கிறான். அங்கே அந்தக் காதலி சாப்பிட வருகிறாள். அவனைப் பார்த்துக் கை கொடுக்கிறாள். அவன் வாழ்க்கையில் வென்று விட்டதாக அவளே சொல்கிறாள். உனக்காக சந்தோஷப்படுகிறேன் என்கிறாள். அவன் அவளுக்குப் பிடித்த ஒரு ஸ்வீட்டை கொண்டு வந்து கொடுக்கிறான். இது சொல்ல வருவது என்ன? இப்படிப்பட்ட லோஃபரை எல்லாம் விட்டுவிட்டுப் போய்விடாதீர்கள் பெண்களே, இவர்கள் நிச்சயம் ஒரு காலத்தில் வெல்வார்கள் என்றா? அப்படிச் சொல்ல நினைத்தால் இந்தப் படம் கிறுக்குத்தனமான ஆண் மையப் படமாக மாறி விடுகிறது. முழுக்கவே இது அராஜகமான ஆண் மையப் படம்தான் என்பது வேறு விஷயம். நான் ஆண் மையப் படங்களுக்கு எதிரி அல்ல. ஆனால் அது நியாயமான விதத்தில் உருவாக வேண்டும்.

அந்த இறுதிக்காட்சி, அதுவரை அந்தப் பெண் பட்ட கஷ்டங்களை எல்லாம் பொடிப்படியாக்குகிறது. நியாயமாக அந்தக் காட்சியில் அந்தப் பெண் ஒரு நல்ல கணவருடன், கையில் ஒரு குழந்தையுடன் இவனைப் பார்த்து, ‘நான் சொன்னேன்ல இவர்தான்’ என்று தன் கணவனிடம் சொல்வது போல் ஒரு செருப்படியுடன் முடித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாதது இயக்குநரின் பெரிய தவறு.

ஏன் இப்படிப்பட்ட தவறுகள் நிகழ்கின்றன? ரொம்ப சிம்பிள். இயக்குநர்கள் எப்போதுமே மார்டனாகத் திரைப்படத்தை உருவாக்க நினைக்கிறார்கள். அதற்காகத் தங்கள் மனதில் எதெல்லாம் மாடர்ன் என்று நினைக்கிறார்களோ அதையே காட்சிகளாக உருவாக்குகிறார்கள். இதனால்தான் திருமணத்திற்கு முந்தைய உறவு, பெண்கள் தண்ணியடிப்பது, பெண்கள் சிகரெட் புகைப்பது, பெண்கள் கஞ்சா உண்பது எல்லாம் சாதாரணமான விஷயம் என்று மீண்டும் மீண்டும் வலிய நுழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இதை மறுப்பவர்கள் பூமர் ஆகிவிடுகிறார்கள். இந்தப் படத்திலும் அதுதான் நடக்கிறது.

இத்தனைக்கும் இப்படி லோஃபர் போல அலையும் ஒருவனது குடும்பம் எப்படி இருக்கிறது என்றால் அங்கே அதைவிட பிரச்சினை. அவனது அப்பா இன்னொருத்தியை வைத்துக் கொண்டிருக்கிறான். இப்படிப்பட்ட குடும்பத்தில் ஒருவனைப் பார்த்து ஒரு பெண், அதுவும் நல்ல நிலையில் இருக்கும் ஒரு பெண், அதுவும் அவனைவிட பல லட்சம் சம்பாதிக்கும் ஒரு பெண் ஏன் காதலிக்க வேண்டும்? இதைத்தான் மார்டன் என்று காண்பிக்கிறார்கள். இதுதான் படத்தை டாக்ஸிக் ஆக்குகிறது. இப்படிப்பட்ட ஒரு பெண் ஒரு லோஃபரைக் காதலிக்கலாம் என்பதும் அந்த லோபர் அவளை தேவடியா என்று சொன்னாலும் அவள் கடைசியில் வந்து கட்டிக் கொள்வாள் என்பதும்தான் இந்தப் படத்தை டாக்சிக் படமாக மாற்றுகிறது.

உண்மையில் அந்தக் காதலி ஒரு தடவையாவது அவனைச் செருப்பால் அடிக்காமல் விட்டதுதான் இந்தப் படத்தின் பெரிய மைனஸ் பாயிண்ட்.

மீண்டும் மீண்டும் இது போன்ற நவீனத் திரைப்பட இயக்குநர்களுக்குக் கைகூப்பி ஒரு வேண்டுகோள். தொடக்கம் முதல் இறுதி வரை இப்படிப்பட்ட நவீன கதாநாயகிகளை அழ வைக்காதீர்கள். அந்தப் பெண் நெஞ்சுரம் கொண்டு எதையும் எதிர்த்து நிற்கும் ஒரு பெண்ணாக இருக்கட்டும். இல்லையென்றால் நீங்கள் பேசாமல் துலாபாரம் எடுப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

மணிகண்டனும் ஹீரோயினாக வரும் அந்த பெண்ணும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். திரைக்கதையைப் பொறுத்தவரை மீண்டும் மீண்டும் ஒரே போன்ற காட்சிகள் வந்து எரிச்சலை ஏற்படுத்துகின்றன. அதைக் கொஞ்சம் சரி செய்திருந்தால் படம் ஓரளவு மேம்பட்டியிருக்கும். மணிகண்டனுக்காகவும் அந்தப் பெண்ணுக்காகவும் பார்க்கலாம்.

Share

கடைசி விவசாயி – மயிலின் அகவல்

கடைசி விவசாயி – மயிலின் அகவல்

மணிகண்டன் பாராட்டுக்குரியவர். ஆனால் யாருக்காக இந்த மாதிரி திரைப்படங்களை எடுக்கிறார் என்றே தெரியவில்லை. உண்மையிலேயே அவரை நினைத்துப் பாவமாக இருக்கிறது. இது போன்ற திரைப்படங்களைத் தொடர்ந்து எடுக்கவும் ஒரு பிடிவாதம் வேண்டும். தான் எடுக்கும் படங்கள் மீதான நம்பிக்கை வேண்டும். இரண்டுமே மணிகண்டனிடம் இருக்கிறது, அதற்காகப் பாராட்டுகள்.

கடைசி விவசாயி என்ற பெயர் ஒரு வகையில் இப்படத்துக்குத் தவறான பெயரோ என்று இப்போது யோசிக்கிறேன். குற்றமே தண்டனையில் ‘ஜி-ன்னு கேட்டாலே எரிச்சல் வருது’ என்றொரு வசனம் வரும். இது போன்ற புதிய அலை இயக்குநர்கள் (மணிகண்டன் புதிய அலையில் வருவாரா என்பது தனியே விவாதத்துக்குரியது) எப்போது வாய்ப்புக் கிடைத்தாலும் இந்திய – ஹிந்து மதத்தை ஒரு இடி இடிப்பது வழக்கம் என்பது ஒரு பக்கம். தொடர்ந்து தமிழ்த் திரைப்படங்கள் விவசாயம் என்பதைத் அதீதப் புனிதமாக்கி, எங்கெல்லாம் திரைக்கதை எழுத முடியவில்லையோ அங்கெல்லாம் புனித விவசாயத்தைப் புகுத்தி, விவசாயம் என்றாலே பார்வையாளர்கள் ஓடிவிடும் அளவுக்கு ஆக்கி வைத்திருப்பது ஒரு பக்கம். இதனால்தான், இப்படத்தின் பெயர் கடைசி விவசாயி எனவும் கொஞ்சம் யோசித்தேன். ஆனால் மணிகண்டன் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. ஏன்? முதல் பாராவை வாசிக்கவும். அந்த நம்பிக்கையில் இப்படத்துக்குப் போனேன்.

முதல் 50 நிமிடம் ரொம்பவே சோதித்துவிட்டார் இயக்குநர். கதைக்குள் எடுத்த எடுப்பிலேயே வந்திருக்கலாம். ஆனால் என்னவெல்லாமோ காண்பித்துப் பாடாகப் படுத்திவிட்டார். அதிலும் விஜய் சேதுபதி வரும் காட்சிகள் படத்துடன் எங்கேயும் ஒட்டாமல் எப்படியோ அலைபாய்கின்றன. கேள்வியை எதாவது கேட்டுவிட்டு அதற்கு எதாவது ஒரு பதில் சொல்லி, அதைத் தத்துவ பன்ச் என்று நினைத்து அவர்களாக ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம்மால்தான் பார்க்கமுடியவில்லை. வெளியே போய்விடலாமா என்று நினைக்கும்போதுதான் அந்த நீதிமன்றக் காட்சி ஆரம்பிக்கிறது.

அதற்குப் பிறகு படம் நன்றாக இருக்கிறது. ஆனால், இறுதிக் காட்சியை எங்கே எப்படி வைப்பது என்பதிலும் மணிகண்டனுக்குக் குழப்பம் போல. இழுஇழு என்று இழுத்து எப்படியோ முடித்து வைக்கிறார். நவீன விவசாயத்தின் மீதான அவநம்பிக்கை படத்தில் ஒவ்வொரு காட்சியில் தெரிந்தாலும், கதையின் மையம் அதுவல்ல என்பது என் எண்ணம். இன்னொரு கோணத்தில் கதையின் மையம் அதுவே என்று சிலர் சொல்லக் கூடும். இயற்கை விவசாயம் என்பதை யாரால் முடியுமோ அவர்கள் செய்துகொள்ளலாம். ஆனால் நவீன வேளாண்மை என்ற ஒன்று இல்லாவிட்டால், பூச்சி மருந்துகள் என்கிற ஒன்று கண்டுபிடிக்கப்படாவிட்டால், உலகம் முழுக்க ஊஊஊஊதான் என்பதை எல்லாரும் மனத்தில் நிறுத்தி வைத்துக்கொள்வது நல்லது. என் பார்வையில் இப்படம் ஒட்டுமொத்த விவசாயமே கேள்விக்குறியாகிறது என்பதைப் பற்றியே பேசுகிறது என்றே நினைக்கிறேன். ஆனால், கடைசிக் காட்சியில் மயில் நடனமாட, மழையும் பெய்கிறது! அப்படியானால் மழைதான் பிரச்சினையா? ‘குற்றமே தண்டனை’யிலும் இதே போல் மணிகண்டனுக்குப் பிரச்சினைகள் இருந்தது நினைவுக்கு வருகிறது. ரொம்ப யோசித்துத் தத்துவச் சிக்கலுக்குள் மூழ்கும்போது திரைக்கதை எழுதுவாரோ? 🙂

படம் எப்போதெல்லாம் நம்மை சோதிக்கிறது என்றால், விஜய் சேதுபதியும் யோகி பாபுவும் வரும்போது! இந்த இரண்டு பேரும் ஏன் இந்தப் படத்துக்குத் தேவை என்பதே புரியவில்லை. ஒன்றரை மணி நேரத்தில் எடுத்திருந்தால் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம். இவர்கள் வரும் காட்சி மட்டுமன்றி, கிராமத்தை அப்படியே கண்முன் கொண்டு வருகிறேன் என்று, படத்தோடு ஒட்டமுடியாத, ஆனால் காட்சியாக நல்ல காட்சிகளும் பல உண்டு.

விவசாயியாக நடித்திருப்பவர் மட்டுமல்ல, பல நடிகர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். க்ளிஷேவாக அல்ல, நிஜமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களையே காட்சிக்கேற்றார் போல் வசனம் பேசச் சொல்லிவிட்டார் போல இயக்குநர். பல வசனங்கள் நாம் வீட்டில், தெருவில் பேசிக்கொள்வது போல அப்படியே வருகின்றன. திக்குவது, தவறாகச் சொல்லிப் பின்னர் சரியாகச் சொல்வது, எதாவது பேசுவது என எல்லாமே அப்படியே வருகின்றன. துல்லியமான மதுரைப் பேச்சு வழக்கில். இதில் சொதப்புவர்கள் யாரென்றால், பெயர் பெற்றுவிட்ட விஜய்சேதுபதி போன்றவர்கள்தான். மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சியெல்லாம், எத்தனை இயல்பாக இருக்கிறது என்றால், இப்படித் தமிழ்ப்படங்களில் பார்த்ததே இல்லையே என்று சொல்லும் அளவுக்கு இயல்பாக இருக்கிறது. பெரிய சாதனை இது. இதற்காக மணிகண்டன் பெரிதும் பாராட்டப்படவேண்டியவர்.

நீதிபதியாக வரும் பெண்ணின் நடிப்பு மிக அருமை. நீதிமன்றக் காட்சிகள் எல்லாமே பெரிய பலம்.

விஜய் சேதுபதி தான் இத்தனை நாள் நடித்த படங்களிலும் இனி நடிக்கப் போகும் படங்களிலும் ஹிந்து மதத்தைத் தாக்கியதற்காக ஒரு பெரிய பிராயசித்தமாக இப்படத்தில் நடித்திருக்கிறார் போல. தொடக்கக் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை படம் முழுக்க ஹிந்து மதச் சின்னங்கள்தான். ஆனால் பைத்தியம். எல்லாப் படங்களிலும் இவர் பேசுவது இப்படித்தான் இருக்கிறது என்பதால், நமக்கு இதில் எவ்வித வித்தியாசமும் தெரிவதில்லை என்பதுதான் பிரச்சினை.

எழுத்து போடும் காட்சியில் ஒலிக்கும் டி எம் எஸ்ஸின் முருகன் பாடல் தொடங்கி இறுதிக் காட்சி வரை முருகன், பிள்ளையார், குலசாமி, அய்யனார் என பக்தி மயம்தான். படத்தின் முதல் சட்டகமே ‘தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி, பாட்டன் முருகனுக்கும் அவனது அடியார்களுக்கும்’ என்றெல்லாம் வந்தது. ஒருவேளை கிண்டல் செய்கிறார்களோ என்று கூட நினைத்தேன். இல்லை, உண்மையிலேயே பக்தியாக எடுத்திருக்கிறார்கள். இயக்குநருக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. 🙂

சந்தோஷ் நாராயன் இசையில் பாடல்கள் ஒட்டவில்லை. இளையராஜா இசையமைத்த டிரைலர் இன்னும் காதில் ஒலிக்கிறது. நமக்குக் கொடுப்பினை இல்லை. வேறென்ன சொல்ல!

மணிகண்டனின் படங்கள் மெல்ல நகரும் என்பது தெரிந்ததுதான். இப்படம் மெல்ல ஆனால் நகரவே இல்லை என்பதுதான் பிரச்சினை. சில காட்சிகள் மிக இயற்கையாக இருக்கின்றன, சில காட்சிகள் செயற்கையாக இருக்கின்றன. இதையெல்லாம் சரி செய்து, திரைக்கதையில் கவனம் செலுத்தி, விஜய் சேதுபதி + யோகி பாபுவை மொத்தமாக நீக்கி இருந்தால், இப்போது மயிலின் அகவலாகத் தேங்கி இருக்கும் படம், மயிலின் நடனமாக . மணிகண்டன் தவறவிட்டுவிட்டார்.

இன்னும் எனக்கு ஆச்சரியமாக இருப்பது, மணிகண்டன் யாரை நம்பி இது போன்ற திரைப்படங்களை எடுக்கிறார் என்பதுதான். ரசிகர்களை நம்பி என்று தன்னைத்தானே அவர் ஏமாற்றிக் கொள்ளாமல் இருக்கட்டும். இன்று நான் தியேட்டரில் பார்த்தபோது 20 பேர் இருந்தால் அதிகம். நல்லவேளை, ஓ.டி.டி என்ற ஒன்று இருக்கிறது. அதில் வரும்போது இன்னும் சில லட்சம் பேர் நிச்சயம் பார்ப்பார்கள். அதற்குப் பின்னால்? மணிகண்டன் யோசிக்கவேண்டும். மணிகண்டன் திறமையான இயக்குநர் என்பதில் ஐயமே இல்லை. அந்தத் திறமையைப் பறைசாற்றும் திரைப்படங்களை அவர் தரட்டும். அந்த முருகன் அவருக்கு பிழைக்கும் புத்தியைத் தரட்டும்.

பின்குறிப்பு: படத்தில் ஒரு கவித்துவமான காட்சி. யோகிபாபு யானையை வைத்துப் பிழைப்பு நடத்துபவர். அந்த யானைக்கு கொசு வலை போட்டு உறங்க வைப்பார். அந்தக் காட்சியில் யோகி பாபுவின் உதவியாளர் படுத்திருக்கும் யானைக்குக் கால் அமுக்கிவிட்டுக் கொண்டே இருப்பார். ❤ எனக்கு மிகவும் பிடித்துப் போன காட்சி.

Share