Tag Archive for அண்ணாமலை

அண்ணாமலை வெளியிட்ட திமுகவினரின் சொத்துக் குவிப்பு பற்றிய செய்திகள்

ஊடகங்களின் இருட்டடிப்பு இது. முதல் பக்கத்தில் செய்தியை வெளியிடக் கூட இவர்களால் முடியவில்லை. ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிப்பதில் உள்ள மோகம். பணமே அரசியலை நிர்ணயிக்கிறது.

கேஜ்ரிவால் செய்தியை முதல் பக்கத்தில் போட்டுவிட்டு, அண்ணாமலை சொன்னதை 2ம் பக்கத்தில் போட்டிருக்கிறது தமிழ்த்திசை. அனைத்து நீதிமன்றங்களிலும் முகக்கவசம் கட்டாயம் என்னும் முக்கியச் செய்தியை தமிழ்த்திசை முதல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.

மற்ற செய்தித்தாள்களின் உட்பக்கங்களை நான் பார்க்கவில்லை.

தந்தியும் தினகரனும் ஒரே குரலில் முதல் பக்கத்தில் பேசுகின்றன.

தினமலர் ஒன்றே தைரியமாக, முதல் பக்கத்தில் அண்ணாமலை வெளியிட்ட குற்றச்சாட்டு பற்றிய செய்தியை வெளியிட்டிருக்கிறது.

தினமணியின் முதல் பக்கத்தை இணையத்தில் இருந்து ஸ்க்ரீன்ஷாட்டாக எடுத்தேன். கொடுமை. இதற்கு எதற்கு தினமணி?

பத்திரிகைகள் எல்லாம் எப்படி வெட்கமே இல்லாமல் நேர்மை, உண்மை என்றெல்லாம் பேசுகின்றன? அசிங்கமாகவே இருக்காதா? செய்தியைச் சொல்லிவிட்டு, அதை எதிர்த்து பல கட்டுரைகளைக் கூட வெளியிடட்டும். அது அவர்களின் கொள்கைச் சாய்வு. அதில் தவறில்லை. ஆனால் செய்தியையே சொல்லாமல் சாய்ஸில் விடுவதெல்லாம் எவ்வளவு அசிங்கம்!

***

நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ ஃபேஸ்புக் பக்கத்தில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தும், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த அறிவிப்பும் வெளியிட்டிருக்கிறார். டிவிட்டரிலும் இதுவே.

வானதி ஶ்ரீனிவாசன் எம்.எல்.ஏ ஃபேஸ்புக் பக்கத்தில் அவரது செயல்பாடுகளைப் பற்றிய பதிவுகள் மட்டுமே உள்ளன. டிவிட்டரில் விஷு ஆஷாம்ஷகள் என்று மலையாளத்திலும் வாழ்த்து வெளியிட்டிருக்கிறார் வானதி.

எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ ஃபேஸ்புக்கில் ஆக்டிவாக இல்லை.

சரஸ்வதி எம்.எல்.ஏ சட்டசபையில் இன்று என்ற செய்திகளையும், அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என்ற முக்கியமான செய்தியையும் வெளியிட்டிருக்கிறார்.

இந்நிலையில் ஹெச்.ராஜா பற்றிச் சொல்லவேண்டும். எஸ்.வி.சேகருக்கான விருதில் ராஜா கலந்துகொண்டது எனக்கு தனிப்பட்ட அளவில் பெரிய வருத்தம். ஆனால்,  ஹெச்.ராஜா ஒருவரே அண்ணாமலையின் சொத்துப்பட்டியல் பற்றிய குறிப்பை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்தவும் செய்திருக்கிறார். ஹெச்.ராஜா மதிப்பிற்குரியவர்.

இந்நிலையில், மற்ற பத்திரிகைகள் பாஜகவின் செய்திகளை இருட்டடிப்பு செய்கிறது என்று சொல்ல பாஜகவினருக்குத் தகுதியே இல்லை என்பதுதான் உண்மை.

Share

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022

ஏன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கவேண்டும்?

• ஊழலற்ற நிர்வாகத்துக்காக
• உண்மையான வளர்ச்சிக்காக
• நல்ல சாலைகள் கிடைத்திட
• மழை வெள்ளத்தில் படகில் போகாமல் இருக்க
• எப்போது மின்சாரம் வரும் என்று தேவுடு காக்காமல் இருக்க உரிய இடத்தில் நமக்காகக் குரல் கொடுத்திட
• போலி மதச்சார்பின்மையை ஒழித்துக்கட்ட
• தாஜா அரசியலுக்கு முடிவுரை எழுத
• நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்துக்கு முடிவுகட்ட
• மத்திய அரசின் முக்கியமான திட்டங்கள் ஒவ்வொரு கடைக்கோடி தமிழனுக்கும் கிடைத்திட
• தன் வசதிக்கேற்ப மொழிவெறி, சாதிவெறி, மதவெறியைத் தூண்டி அதில் குளிர்காயாமல் இருக்க
• தமிழ்நாட்டு அரசியலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க
• புதிய பாதை, புதிய இலக்கு, புதிய செயல்திட்டம் கொண்ட புதிய தலைமையின் கீழ் தமிழ்நாடு ஒளிர்ந்திட.

ஏன் திமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது?

• மேலே உள்ள அனைத்துக்காகவும்.
• உண்மையான மாற்றம் வேண்டும் என்பதற்காக.
• இனி வரப் போகும் புதிய அரசியலுக்குக் கட்டியம் கூற.
• ஒரு ஜீவன் ஹிந்து என்பதற்காகவே அந்த ஜீவனின் தற்கொலையைப் பற்றி யாரும் வாய் திறக்காமல் அவலத்தைத் தடுப்பதற்காக.
• கோவில்கள் மட்டும் இடிக்கப்படும் அவலத்தைத் தடுத்து நிறுத்தப்படுவதற்காக.

ஏன் அதிமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது?

• பாஜகவின் ஓட்டு வங்கி பாஜகவுக்கு மட்டும் வரவேண்டும் என்பதற்காக.
• திமுகவுக்கு உறுதியான எதிர்ப்பு அதிமுகதான் என்று ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை நிலவிய சூழல் இப்போது இல்லை என்பதற்காக. அந்த இடத்தில் பாஜக வந்துவிட்டது என்பதற்காக.
• சில பிரச்சினைகளில் மட்டும் ஒப்புக்காகப் பேசும் அதிமுக பெரும்பான்மையான அரசியல் கருத்துகளில் திமுகவின் கருத்தையே கொண்டிருப்பதற்காக.
• இரண்டாம் இடத்துக்கு பாஜக வரவேண்டும் என்றால் அதிமுக அல்லது திமுகவை பாஜக தாண்டியாக வேண்டும் என்பதற்காக.

இத்தேர்தலில் பாஜக வெல்லுமா?

வெற்றி தோல்வி என்பது இரண்டாம் பட்சம். தனித்துக் களம் காணும் முதல் உள்ளாட்சித் தேர்தலிலேயே பாஜக பெரும்பான்மை பெற்றுவிடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பாஜக பெறும் ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது.

பாஜக ஒருவேளை 20% வாக்குகள் பெறுமானால் அடுத்து வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டின் அரசியல் முன்னெடுப்புகள் முற்றிலும் வேறானதாக இருக்கும். இதுவரை தமிழ்நாட்டு அரசியலில் நிலவிய களம் மாற்றியமைக்கப்படும். அதற்காக நிச்சயம் நாம் பாஜகவுக்கு வாக்களிக்கவேண்டும்.

அண்ணாமலை போன்ற உறுதியான, திறமையான தலைவருக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றி அமைக்கும் ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டியது ஒவ்வொரு இந்திய தேசியத் தமிழனின் கடமை. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நாளை அண்ணாமலை முதல்வராவார். அதற்கான விதை இன்று நாம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு அளிக்கப் போகும் வாக்குகளே.

மொழி, மதம் போன்றவற்றால் பிரிக்கப் பார்க்கும் பிரிவினைவாதிகளின் கொட்டத்தை அடக்கி, என்றும் தமிழ்நாடு இந்தியாவின் உறுதியான ஒரு அங்கமே என்பதை உறுதிபடச் சொல்வதற்காக பாஜகவுக்கு வாக்களிக்கவேண்டும். இப்படிப் பேசவேண்டிய இன்னொரு கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் தன்னிலை மறந்து பிரிவினைக் கட்சிகளுக்கு வால் பிடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து, ஏன் பாஜகவை ஆதரிப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

பாஜக தான் போட்டியிடும் இடங்களில் ஒட்டுமொத்த சராசரியாக 12% வாக்குகள் பெறும் என்று நினைக்கிறேன், பெறவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

நிஜமான வளர்ச்சிக்கும் உண்மையான மதச்சார்பின்மைக்கும் கிடைத்திருக்கும் வாய்ப்பை நழுவ விடாமல் பாஜகவுக்கு வாக்களியுங்கள்.

Share