அந்திமழை.காம் – கவிதைத் திருவிழா

அந்திமழையில் கவிதைத் திருவிழாவில் எனது கவிதைகள் வெளியாகியுள்ளன. வாசிக்க இங்கே சுட்டவும்.

நத்தை மனிதன்

கால வெளிகளில் திரிந்தலைந்தபின் வீடு திரும்ப
என்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் வீடு
தன் அறைகளோடும் வாசத்தோடும்

என் அலைதல் ஒவ்வொன்றும்
வீட்டை மையப்படுத்தியே இருந்திருக்கிறது
ஒரு நாளைக்கு 56 தடவைகள் வீட்டைப் பற்றி நினைக்கிறேன்
பதினோரு முறை வெளியிலிருந்து வீட்டிற்குள் பிரவேசிக்கிறேன்
சதாசர்வ காலமும்
மூடிக்கிடக்கும் கதவைத் திறக்கும்போது கேட்கும் ஒலிகள்
என் காதில் ஒலித்துகொண்டே இருக்கின்றன
வீட்டுக்குள் தொங்கும் சட்டைகளோடு என் நினைவுகளும் தொங்க
வெளியே வெற்றுடலாய் அலைகிறேன்

வீட்டின் கூரைகளும் சுவர்களும் நெகிழ்ந்திருக்கின்றன
தன் எஜமானனுக்கான வரவை நோக்கி

இன்று கதவு திறக்கும் பொழுதில்
என் சப்தங்கள் உள்நுழைய
ஒடுங்குகிறது வழிதவறிய நத்தை
சுவர் மூலையில்.
நான் உரக்கச் சொன்னேன்,
அது தன் வழி கண்டடைந்த நத்தை.

பீடம் பற்றிய கவிதை

சிறிய மலையொன்றின் உச்சியில்
எனக்கான பீடமிட்டிருந்தேன்
செல்லும் வழியெங்குள்ள மணமற்ற பூக்களை
காலால் மிதித்தும் தாண்டியும் ஓடினேன்
மேலே ஏற ஏற
கீழே மனிதர்கள் எறும்புகளாய் ஊர்ந்தார்கள்
என் சத்தமிட்ட சிரிப்பில்
வண்டுகள் கலைந்தோட
எதிரொலியில் என் வயிறே அதிர்ந்தது
பீடக்கால்களின் நுனியை என் கைகள் தொட்டபோது
சுற்றியிருந்த நறுமண மலர்களின் வாசத்தை
நுகர மறுத்தது என் மூக்கு
பீடமேறி அமர்ந்தபோது
மலையுச்சியிலிருந்து விழுந்து
தற்கொலை செய்துகொண்டது என் ஆன்மா
ஒன்றும் இழப்பில்லை
பீடங்களில் உலகில்
இலவசமாகவே கிடைக்கும்
புதிய ஆன்மாக்கள்

சுவர்கள்

தடுப்புகளற்ற எதிரெதிர் இருக்கைகளில்
மூன்று பேர்கள்
முதலாமவனின் எண்ணம் இரண்டாக இருந்தது
இடைச்சுவரை உடைப்பது நல்லது மற்றும்
இந்தச் சுவருக்குப் பின்னிருப்பதே பாதுகாப்பானது.
இரண்டாமவள் இடைச்சுவரை உடைத்தல் பற்றி யோசித்தாள்
மற்றும் இடைச்சுவருக்குப் பின்னிருத்தல் பாதுகாப்பானது என்பது பற்றியும்;
ஏனெனில் இது ஆண்களின் உலகம்.
மூன்றாமவனின் நினைவுக்குள்
சுவரை மீறுவதாகவும்
பின்னிருப்பதே பாதுகாப்பானதாகவும்.
மூன்று சுவர்களுக்குள்ளிருந்து வெளியேறி
மூன்று பேரும் கைகுலுக்கிக்கொண்டார்கள்.
அப்போது அங்கே
மூன்று இருக்கைகள், மூன்று பேர்கள்
மற்றும் மூன்று சுவர்கள்.

சுயசரிதை எழுதுதல்

நான் நினைத்ததுபோல்
எளிதாக எழுத இயலாமல்போன
அடித்து அடித்து
எழுதப்பட்ட
சுயசரிதைக்குள்
நான் அடைந்துகொண்டேன்
கடைசியில் ஒரு குறிப்புடன்,
இது வளைந்து நெளிந்து செல்லும்
நேரான பாதை.

அணிலைப் பற்றிய குறிப்புகள்

உலகின் அற்புதங்களில் ஒன்றாக
நான் கருதும் அணில்களைப் பற்றி
நிறைய நாள்கள் மறந்துவிட்டிருந்தேன்
நான்காம் நாள் கனவில் ஒரு பூ கொண்டு வந்தது அணில்
உண்மையில் அன்றுவரை பூ கொண்டு வரும் அணில் என்பதாக
எக்குறிப்பையும் நான் எழுதிவைக்கவில்லை,
சிறிய பழக்கொட்டையை
இரண்டு கைகளில் ஏந்தி நிற்கும் அணிலே
என் விருப்பத்தேர்வாக இருந்திருந்தது,
மிருதுவான அதன் உடற்பரப்பும்
துடிக்கும் வெதுவெதுப்பான சாம்பல் நிற வயிறும்-
நீளும் என் குறிப்புகளில்
பூவோடு வந்த அணிலால்
மறுநாள் பொழுது சந்தோஷமாகக் கழிந்தது
அதன் மூன்று கோடுகளைப் பற்றி
புதிதாக எழுத யோசித்துக்கொண்டிருந்தபோது
பூனை ஒன்று குதித்தோடியது, வாயில் அணிலின் வாலோடு.
தொலைந்துபோன அதன் சதைப்பிண்டங்களைப் பற்றியும்
குறிப்பெழுதி வைத்தேன்,
பூனையைப் பற்றிக் குறிப்புகள் எதுவுமில்லை.

Share

முறிந்து விழுந்த கிளை – கவிதை

முறிந்து விழுந்துவிட்ட
அந்தக் கிளையைப் பற்றிச் சொல்ல அதிகமில்லை
எல்லாக் கிளைகளுக்கும் போலவே
சில பொதுக்குணங்கள்
பருத்தி மொட்டு பூத்திருந்த காலத்தில்
பறவைகள் பிரசித்தம்
நீளமான காபி நிறக்காய்கள் தொங்கியபோது கல்லெறி
இரண்டாம் தளத்தில்
12 பி வகுப்பு வராந்தாவிலிருந்து
நீளும் கைகள்
கர்வத்தில் மிதந்த கிளை
எதிர்பாராத நிமிடத்தில் முறிந்து விழுந்தது
மரத்தைப் பார்த்தபடி
விடுமுறைக்குப் பின் பள்ளி திரும்பிய கைகள்
கிளையிழந்த மரத்தைப் பார்த்துக்கொண்டு நின்றன
மரம் வானத்தைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தது
காற்றில் கலந்திருந்தது
முறிந்த கிளையின் ஏக்கமூச்சு.

Share

பின்னோக்கி நகரும் பெருங்காலம் – கவிதை

ஆலமரத்தின் பரந்த கருநிழலும்
மஞ்சள் வெளிர் மஞ்சள் படர்வுகளும்
கண் எல்லையிலிருந்து மறைய
பின்னோக்கி நகரும் பெருங்காலம்

எப்போதோ அமிழ்ந்தொளிந்த
ஆழ்மனக் காட்சிகள்
கண்ணை மறைத்துப் பெருங்காட்சியாய் விரிய
ஒரு நொடி பேரமைதி,
அப்போதே அத்தையின் மரணம்.
ஒரு வருடத்திலெல்லாம் மாமா.
வீட்டில் கருமை சூழ்ந்த ஒரு தினத்தில் அம்மா
அப்பாவுக்காகக் காத்துக்கொண்டிருந்தபோது
ஒலித்தது புதிய குரல்

யாராலும் தடுக்கமுடியாத
காலத்தின்
பின்னோக்கியப் பெரும்பயணத்தில்
ஓரடி முன்னேயென
தொடர்ச்சியாய்ப் புதிய குரல்கள்,
வீடெங்கும் வாசற்படிகள்.
காலத்தின் வெளியெங்கும்
பரவிக்கிடக்கும் தடங்கள்
மென்மையாய் புதியதாய்
பாவங்களற்றதாய்
பூவினொத்ததாய்.

Share

யாரோ ஒருவனின் சவ ஊர்வலம் – கவிதை

யாரோ ஒருவனின் சவ ஊர்வலம்
நான்கைந்து பேர்களுடன்
மெல்ல நகர்கிறது
அந்த நிமிடத்தைப் போல.

அந்த யாரோவுக்குத் தூவப்படும் மலர்களுள் சில
என் மீது விழ எனது ஆசாரம் விழித்துக்கொள்கிறது,
எவ்வளவு ஒதுங்கிக்கொண்டும்
விலகவில்லை மலர்களின் வாசனை.

வெயிலின் உக்கிரம், வியர்வை;
இடுக்காட்டின் முன் பாட்டாசு.

கிட்டத்தட்ட அனாதை என்றார்கள்;
தெருவில் இரு ஓரத்திலும்
காத்திருந்தது பெருங்கூட்டம்.

ஊர்வலத்தின் பின் நீளும்
வண்டிகளின் சக்கரங்களில்
நசுங்கிக்கிடக்கும் மலர்களுள்
அவனுக்குப் பிடித்ததெதுவோ.

சீக்கிரம் சவ வண்டி கடந்துபோக
காத்திருக்கும் நீண்ட வரிசையில்,
அவனின் சாதனைகள் பற்றிய
யோசனையுடன்
அடுத்த நொடியில்
அவனை மறக்கப்போகும்
நான்.

Share

வேட்டையாடு விளையாடு – திரைப்பார்வை

இதற்கு விமர்சனம் எழுதுவது நேரவிரயம் என்று தெரிந்தும் அதைச் செய்கிறேன்! இறை என்னை மன்னிக்க. 🙂

* கமலுக்கு நடிக்க மறந்துவிட்டது. சிரிப்பது, பேசுவது, சண்டைக் காட்சிகள் என எல்லாவற்றிலும் ஒரு செயற்கைத்தன்மை. யதார்த்தம் என்றால் என்ன என்பதை அவர் மீண்டும் கண்டடைவது நலம்.

* கதையே இல்லை என்பது இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பம்சம்!

* பின்னணி இசை தேவையில்லாமல் பல இடங்களில் ஒலிக்கிறது. தேவையற்ற இடங்களில் மௌனமே சிறந்த இசை. இதை மறந்துவிட்டார் ஹாரிஸ் ஜெயராஜ். படம் முழுக்க இரைச்சலோடு பின்னணி இசை. இருந்தாலும் இந்தக் கேடுகெட்ட படத்திற்கு தேவைக்கு அதிகமாகவே செய்திருக்கிறார் ஹாரிஸ். பாடல்கள் நன்று.

* காக்க காக்க-வில் வரும் எடிட்டிங் உத்திகள் இந்தப் படம் முழுவதும் இடம்பெற்றுத் தலைவலியை உண்டாக்குகின்றன. உத்திகளை எத்தனைத்தூரம் பயன்படுத்த வேண்டுமென்பதைக் கௌதம் புரிந்துகொள்ளவேண்டும்.

* கமல் இனி பரீக்ஷார்த்தத் திரைப்படங்களில் மட்டும் நடிப்பது அவருக்கு நல்லது. அவர் அவரைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கலாம். குறைந்தபட்சம் அவர் மீது மிகவும் நம்பிக்கையும் மரியாதையும் வைத்து, அவரது ரசிகர்கள் என்கிற போர்வையில் சிக்காத, நல்ல ரசனையுள்ள மக்களை நினைத்தாவது அவர் இதைச் செய்யவேண்டும்.

* கமல் உடல் பெருத்துவிட்டது. உடல் கமலோடு ஒத்துழைக்கவே இல்லை. குறிப்பாக சண்டைக்காட்சிகளில். நேற்று வந்தவர்கள் எல்லாம் பின்னி எடுத்துக்கொண்டிருக்க, இவர் சிவாஜி ஸ்டைலில் நின்ற இடத்திலிருந்தே அடித்துப் பந்தாடுவது நல்ல காமெடியாக இருக்கிறது. வில்லனைத் துரத்திக்கொண்டு ஓடும் காட்சிகளில் தடுமாறுகிறார்.

* கமல் காக்கிச்சட்டையில் நடந்து வரும் காட்சி மிடுக்கற்றுத் தோற்றமளிக்கிறது. இதில் மட்டும் எப்படி கமல் கச்சிதமாக யதார்த்தத்தைக் கௌவிக்கொண்டார் எனத் தெரியவில்லை. 🙂

* படத்தில் லாஜிக் என்று பார்த்தால் ஒரு மண்ணும் இல்லை. எந்தப் பிணத்தைப் புதைத்து வைத்தாலும் கமல் அரைமணி நேரம் முதல் ஐந்து மணி நேரங்களில் கண்டுபிடித்துவிடுகிறார். சரியான ரீல். ரஜினியின் ஹீரோயிஸத்திற்கும் இதற்கும் நிறைய வேறுபாடுகள் இல்லை. ஆனால் ரஜினிக்கு எடுபடும், கமலுக்குச் சறுக்கும்.

* கமலும் ஜோதிகாவும் நேரம் காலம் தெரியாமல் காதலித்து வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறார்கள்.

* கமல் படம் முடியும் தருவாயில் திடீரென்று ‘ராகவன் ஆபரேஷன் பிகின்ஸ்’ என்று சொல்லி அதிர்ச்சிக் குண்டைப் போடுகிறார். அடுத்த சீனிலேயே ஜோதிகாவுடன் காதல் வசனம் பேசுகிறார். இதுதான் ஆபரேஷன் ஆஃப் ராகவனா?

* வில்லன்கள் என்ன எழவிற்கு கை விரலை வெட்டித் தொங்க வைக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. படம் பார்ப்பவர்களை மிரட்ட வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாயிருக்கவேண்டும்.

* வில்லன்கள் லூசு மாதிரி வருகிறார்கள் போகிறார்கள். கடைசியில் போயும் சேர்கிறார்கள்.

* ஜோதிகா ஒரு பாடலில் திடீரென்று ஒரு குழந்தையுடன் வருகிறார். இது பற்றி முன்பே படத்தில் வசனம் இடம்பெற்றதாகத் தெரியவில்லை.

(இன்னொரு முறை பார்த்தால் தெரியும். ஆனால் இந்தக் கொடுமையை இன்னொரு முறை அனுபவிக்க முடியுமா?) அட இதுவேறயா என்கிற எண்ணம் எழுகிறது.

* படத்தின் முதல் காட்சி பிரத்யேகமாக குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. அந்த ஒரு காட்சியிலேயே இந்தப் படம் இப்படித்தான் அமையும் என்று முடிவுக்கு வந்துவிடலாம். அப்படி ஒரு காட்சி! என் கண்ணைப் பிடுங்கிக்கோ என்று சொல்லி சட்டென சென்னைத் தமிழ் பேசி, மறைமுகமாக, படம் பார்க்க வந்திருப்பவர்களை “இப்பமே ஓடிடுங்கப்பா” என்று மிரட்டுகிறார் கமல். இதே போல் அமைந்து எனது வயிற்றெரிச்சலைக் கட்டிக்கொண்ட இன்னொரு படம் ‘வால்டர் வெற்றிவேல்.’

* வசனங்கள் சில இடங்களில் பளிச்சென்றும் பல இடங்களில் சொதப்பலாயும் அமைந்துள்ளன. கமல் ஒரு காவல் துறை அதிகாரியைப் பார்த்து அவரால்தான் இந்தப் பிரச்சினையே ஆரம்பித்தது என்கிறார். அடுத்த நொடியில், இருந்தாலும் அவன் ஏற்கனவே பல கொலைகள் செய்திருக்கிறான் என்கிறார். இப்படியாக நிறைய உளறல்கள், நிறையக் குளறுபடிகள் படம் முழுக்க இலவசம்.

* பம்மல் சம்பந்தம்ம, வசூல் ராஜா, மும்பை எக்ஸ்பிரஸ் என்கிற வரிசையில் இன்னொரு கமல் (பாடாவதி) படம். உண்மையான கமல் படம் எப்போது வரும் என்று தெரியவில்லை. நம்பிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது என்பதுதான் முக்கியமாக வருத்தப்படவேண்டிய விஷயமாக இருக்கிறது.

* 29 மதிப்பெண்கள்.

பஞ்ச்: இந்தப் படம் வராமலேயே இருந்திருக்கலாம்.

Share

சொக்கலிங்கத்தின் மரணம் – சிறுகதை

[1]

சொக்கலிங்கத்தின் நினைவுகள் தாறுமாறாக அறுத்துக்கொண்டு ஓடின. அவருக்குள் ஏதேதோ எண்ணங்கள் தொடர்ந்து எழுவதும் அதைத் தொடர்ந்து கலக்கமும் எழுந்தன. அவர் செத்துப்போவார் என அவரது சொந்தங்கள் அவர் வீட்டுத் திண்ணையிலும் எதிர் வீட்டுத் திண்ணையிலுமாகக் காத்துக்கிடந்தன. போயிட்டியே என்று கதற ஆயத்தப்படுத்திக்கொண்டு சொக்கலிங்கத்தின் தலைமாட்டில் உட்கார்ந்திருந்தாள் ஒருத்தி. பெரு மழையில் கரைந்து போய் வெளுத்துவிட்ட, கரியில் வரையப்பட்டிருந்த ஸ்டம்ப் கோடுகளைப் பார்த்துக்கொண்டு கிரிக்கெட் விளையாட முடியாத சோகத்தில் அந்த வளைவின் சிறுவர்கள் கன்னத்தைக் கையால் தாங்கிக்கொண்டு சினிமா கதை பேசிக்கொண்டிருந்தார்கள். மழையின் தீவிரம் கூடிக்கொண்டே இருந்தது. சொக்கலிங்கம் சீக்கிரம் செத்துப்போனால் பெரு மழைக்கு முன் எரித்துவிடலாம் என்று பேசிக்கொண்டிருந்தார்கள் சொந்தக்காரர்கள். சொக்கலிங்கம் சாவதாய் இல்லை. பையன் பாலூத்தினா செத்துடுவான் என்றார் வெள்ளைத் துண்டு போட்ட ஒருவர். ‘யாரு சம்முவமா? நல்லா ஊத்துவாம்ல பாலு!’ என்றார் இன்னொருவர். அவர் கிருதாவைப் பெரிதாக வைத்திருந்தார். ‘என்னதாம் கொலைப்பகையா இருக்கட்டும்வே. அப்பனுக்குப் பையன் பாலூத்தவேணாமா’ என்றார் வெள்ளைத் துண்டு. ‘ஒம் பையன் ஒனக்கு பாலூத்துவானா யோசிவே’ என்று மனதுக்குள் வைதது கிருதா.

போயிட்டியே என்று பெருங்குரல் ஒன்று கேட்டது.

அதுவரை சலம்பிக்கொண்டிருந்த ஊரு சனங்களின் பேச்சு சட்டென இரண்டொரு நொடிகள் அடங்கி மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது. திண்ணையில் உட்கார்ந்திருந்த சொன்ந்தக்காரர்கள் சொக்கலிங்கத்தின் வீட்டுக்குள் போனார்கள். தனது குரலின் எட்டுக் கட்டையை நினைத்துச் சந்தோஷப்பட்டுக்கொண்டே அழுதுகொண்டிருந்தாள் அந்தப் பெண். மாடி வீட்டிலிருந்து எட்டிப் பார்த்தான் சண்முகம். ‘அதாம் உசுரு போயிட்டில்லவே, கீழ இறங்கி வாரும்’ என்றது வெள்ளைத் துண்டு. ‘செத்த இருங்க வாறேன் அண்ணாச்சி’ என்று சொல்லி, வீட்டுக்குள் சென்று, குத்தாலத் துண்டு ஒன்றைத் தோளில் போட்டுக்கொண்டு, கைலியை மடித்துக்கொண்டே கீழே இறங்கினான் சண்முகம். ‘அப்பஞ் சாவுக்கு இவ்வளவு சாவாசமா வாற மனுசாளும் ஊர்ல இருக்கானுவடே’ என்று முணுமுணுத்தது கிருதா. மழை நின்றாலும் வளைவில் கிரிக்கெட் விளையாடமுடியாது என அலுத்துக்கொண்டன சிறுவர் கூட்டம். ‘அந்தாளு உசுரோட இருக்கிறப்பயே விளையாட விடமாட்டான். செத்தும் களுத்தறுக்கான் பாரு, மூதி’ என்றான் ஒருவன். பந்து தனது எல்லைக்குள் வந்தால், உடனே ஓடிச் சென்று எடுத்து வைத்துக்கொள்வார் சொக்கலிங்கம். அப்படி எடுக்குமுன் பந்தை எடுத்துவிட ஓடி வருவார்கள் சிறுவர்கள். பந்து சொக்கலிங்கத்தின் கையில் சிக்கிவிட்டால் அது திரும்ப வராது. யாராவது சிறுவர்கள் அவரிடம் பந்தைக் கேட்கப் போனால் தாறுமாறாக வைவார். குடும்பத்தை மட்டுமில்லாமல் சிறுவனின் பரம்பரையையே வைவார். ரோட்ல போய் ஆடுங்கல, கிரவுண்டுல போயி ஆடுங்கல, உங்க வீட்டு அடுப்பாங்கறையில ஆடுங்கல என பல ‘யோசனைகளை’ச் சொல்வாரே ஒழிய பந்தைத் தரமாட்டார். சுவத்துல கரியால கோடு போட்டுக் கோடு போட்டு நாசப்படுத்துறீங்களேல, படிச்சவனுளா என்பார். மறுநாள் பந்து இரண்டாக வாயைப் பிளந்துகொண்டு வெளியில் கிடக்கும். ‘ரெண்டு மூணு நாளு விளையாடாட்டியும் பரவாயில்ல, ஆளு ஒளிஞ்சான் பாரு, அதுக்கே திருச்செந்தூருக்கு மொட்டை போடணும்ல’ என்றான் இன்னொருவன்.

சண்முகம் செத்துக்கிடந்த தன் அப்பாவைத் தூரத்திலிருந்து பார்த்தான். உடனே வெளியில் வந்தான். ‘ஆகவேண்டியதைப் பாக்கணும்’ என்றார் வெள்ளை துண்டுக்காரர். ‘ம்ம்’ என்றான் சண்முகம். மேலிருந்து சண்முகத்தின் மகன் இறங்கி வந்தான். சண்முகம் பார்வையாலேயே அவனை மேலேயே இருக்கச் சொன்னான். ‘தாத்தாவ பாக்கணும்னு வாரான், அவனை வெரட்டாதவே, நீ போல’ என்றார் வெள்ளைத் துண்டுக்காரார். மிகுந்த ஆர்வத்தோடும் கலக்கத்தோடும் காலை உள்ளே வைத்தான் மணி.

[2]

தாத்தாவின் மேல் அமர்ந்திருந்த ஈயைப் பார்த்துக்கொண்டிருந்தான் மணி. அந்த ஈ ஆடாமல் அசையாமல் வெகுநேரம் அவர் மேலே அமர்ந்திருந்தது. யாரோ ஒருவர் இறந்தவருக்கு மாலை போட்டு விட்டுப் போனார். ஈ தன் இடத்தை விட்டுக் கொஞ்சம் அணங்கியது. நேராகப் பறந்து மேலேயிருந்த பரணில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த பந்திப் பாயில் அமர்ந்தது. அங்கிருந்து சிறிது நேரத்திற்கெல்லாம் பக்கத்தில் இருந்த பெட்டியில் தாவி அமர்ந்தது. சட்டென்று பறந்து, அந்த அறையை இரண்டு மூன்று முறை சுற்றிவிட்டு ஜன்னல் வழியே வெளியேறியது. மணி வீட்டின் பின்புறம் வழியே சந்துக்குள் நுழைந்து ஜன்னலின் வெளிப்புறம் வழியாகப் பார்த்தான். ஜன்னலின் வழியாகப் பார்த்தபோது தாத்தாவின் முகம் விகாரமாகத் தோன்றியது. ஈயைத் தேடினான். அந்த இடத்தில் இருந்த ஒரே ஒரு ஈ அந்த ஈயாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டான். தனக்கு ஏதோ சொல்ல அந்த ஈயிடம் ஏதோ இருப்பதாகப்பட்டது அவனுக்கு.

உள்ளுக்குள் பலமாகப் பேசுக்குரல்கள் எழுந்தன. சட்டுன்னு தூக்கணும் என்றது வெள்ளைத்துண்டு. சண்முகம் கத்தினான். அவர யாருன்னு நினைச்சிட்டீங்க அண்ணாச்சி, சாவுற வரைக்கும் கெத்தோட இருந்த மனுஷன் என்றான். கிருதா முகத்தை வேறு பக்கம் திருப்பிச் சிரித்தது. எல்லாருக்கும் சொல்லி, எல்லாரும் வந்து பார்த்து வாக்கரிசி போட்ட பின்னாடிதான் எடுக்கணும்னு என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டான் சண்முகம்.

மணி ஈயைப் பார்த்துக்கொண்டே நின்றான். அந்தச் சந்தில் நின்று ஈயைப் பார்த்துக்கொண்டிருப்பது அவனுக்கு விநோதமாகப்பட்டது. ஏதோ ஒரு நாளில் தாத்தாவும் இதே சந்தில் நின்று எதையோ விநோதமாகப் பார்த்துக்கொண்டிருந்திருக்கலாம். ஒரு மனிதனின் சாவுக்குப் பின் அவனது நினைவுகள் அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும் என்று தீவிரமாக நம்பினான் மணி. இதை நினைத்துப் பல தினங்கள் அவன் யோசித்திருக்கிறான். அதன் ஒரு தொடர்பே அந்த ஈ. அவனுக்குள் சந்தேகமே இல்லை. ஈயைத் தேடினான். அங்கு அந்த ஈ இல்லை. மீண்டும் பின்கட்டு வழியாக வீட்டுக்குள் வந்தான். தாத்தாவின் மீது ஈக்கள் உட்கார்ந்திருந்தன. தாத்தாவுக்குத் தன்னிடம் சொல்ல பல விஷயங்கள் உள்ளன என்றும் அவர் நிச்சயம் சொல்லுவார் என்றும் உறுதியாக நம்பினான் மணி.

[3]

விடாமல் மழை கொட்டிக்கொண்டிருந்தது. இப்படி ஒரு மழையைத் தன் வாழ்நாளில் பார்த்ததே இல்லை என்று உறுதியாகச் சொன்னார் ஒருவர். இழவு வீட்டுக்கு வந்தவர்களில் வயதில் மூத்தவர் அவர். இவன் செத்தா இவனுக்கு யாரு பாலூத்துவா என்று யோசித்துக்கொண்டிருந்தது கிருதா. தான் சொல்லும்போதே பிணத்தைத் தூக்கியிருந்தால் எல்லாருக்கும் சௌகரியமாகப் போயிருக்கும் என்று சொல்லிச் சொல்லிப் புலம்பியது வெள்ளைத் துண்டு. அவர் சண்முகத்தைக் குறை சொல்லச் சொல்லச் சண்முகத்துக்கு அவன் அப்பாவின் மீது பாசம் கூடிக்கொண்டே போனது. “அண்ணாச்சி, அவர் என் அப்பா அண்ணாச்சி” – மீண்டும் மீண்டும் வெவ்வேறு ஏற்ற இறக்கங்களில் சொன்னான். சண்முகத்தின் பொண்டாட்டி, ஆட்டும்னு எடுக்கப் பாருங்க, சோலி நிறையக் கெடக்கு என்றாள். சண்முகம், “அவர் என் அப்பாட்டீ” என்றான். ஊர்ல மத்தவன்லாம் அப்பா இல்லாம பொறந்துட்டானுவளே என்று ரொம்ப வருத்தப்பட்டுக்கொண்டது கிருதா.

மழையின் தீவிரம் சண்முகத்துக்கும் கொஞ்சம் கலவரத்தைக் கொடுத்தது. இருந்தாலும் அவன் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. “நாறிப் போகணும்னு எழுதியிருந்தா நாறட்டும். என்னா பாடு படுத்தினான் பாவி” என்று நினைத்துக்கொண்டான். தாமிரபரணியில் வெள்ள அபாயம் இருப்பதாக ரேடியோவில் சொன்னதாகச் சொல்லிவிட்டுப் போனான் சொக்கன். அவனைத்தான் வீடு வீடாகச் சென்று தகவல் சொல்ல ஏற்பாடு பண்ணியிருந்தார்கள். ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் சென்று “பிச்சம்மா காம்பவுண்டு, சம்பந்தர் தெரு பெரியவுக சொக்கலிங்கம் பிள்ளை இன்னைக்குக் காலேல தவறிட்டாக. நாளைக்குக் காலேல எடுப்பாக. வந்துருங்க. சங்கத்துலேர்ந்து சொன்ன தகவலுங்கோய்” என்று கத்திவிட்டுப் போனான். துண்டை தலையில் கட்டிக்கொண்டு, லொடுக்கு விழுந்த கன்னத்தோடு அவன் கத்துவதைப் பார்த்து வீட்டுச் சிறுவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். சில பெரிசுகள், யாருடே போனது, சரியாச் சொல்லு என்று கேட்டுச் சேதியைத் தெரிந்துகொள்வார்கள்.

வெள்ளம் வரப்போவுது என்று சாவு வீடே பேசிக்கொண்டிருந்தது.

மணி வீட்டுக்குப் பின்னால் இருக்கும் ஸ்டோர் ரூமுக்குள் நுழைந்தான். தாத்தா வெகு நேரம் அங்கிருந்த பெட்டியை நோண்டிக்கொண்டிருப்பதையும் அங்கேயே அமைதியாய் உட்கார்ந்திருப்பதையும் அவன் நிறையத் தடவைகள் பார்த்திருக்கிறான். தாத்தாவின் மீதிருந்த ஒரு ஈ அந்த அறைக்குள் பறந்துசென்றது. தாத்தாவே கூட்டிச் செல்வதாக நினைத்துக்கொண்டு அந்த அறைக்குள் நுழைந்திருந்தான். தாத்தாவின் மீது அவனுக்கு அவ்வளவு பாசம் இருந்ததா என்பது பற்றியும் அவனுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஒரு சாவு அவனைக் கொஞ்சம் அசைக்கிறதோ என்றும் தோன்றியது. உணர்வுகளுக்குக் கட்டுப்படுவது அவனுக்குப் பிடித்திருந்தது. அந்த வயதில் உணர்வுகளுக்குக் கட்டுப்படுவதே அந்த வயதுக்கு செய்யும் மரியாதை என்பதைப் பல இரவுகளில் அவன் கண்டடைந்திருக்கிறான். சாவும் கூட ஒரு உணர்வு ரீதியால் உந்தப்பட்ட விஷயமாக இருப்பதில் அவனுக்குக் கொஞ்சம் உடன்பாடு வந்துவிட்டிருந்தது. மழை நீர் வடியும் வரை தாத்தாவைத் தூக்கமாட்டார்கள் என்பது அவனுக்கு நிம்மதியாய் இருந்தது. அதுவரை அவன் என்ன செய்கிறான் என்று யார் பார்க்கப்போகிறார்கள்? ஒரு ஈ அவன் காதருகில் வந்து சத்தமெழுப்பிச் சென்றது. மணி சிரித்துக்கொண்டான்.

வெள்ள நீர் தண்டவாளம் வரையில் வந்துவிட்டதாகப் பேசிக்கொண்டார்கள். தண்ணி வடியர வரைக்கும் தூக்கமுடியாதுடே என்றார் வெள்ளைத்துண்டு. என்ன செய்ய அண்ணாச்சி என்றான் சண்முகம். இப்ப கேளு என்றார் கிருதா. சண்முகம் கிருதாவை முறைத்தான். கருப்பந்துறைக்குத் தண்டவாளத்தைத் தாண்டி கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டர் தூரம் போகவேண்டும். தண்டவாளத்திலேயே தண்ணி என்றால் கருப்பந்துறை முங்கியிருக்கும். சண்முகத்துக்கு ஒரு நடை போய் பார்த்துவிட்டு வரலாமா என்று தோன்றியது. “பொணத்தைப் போட்டு நாறடிக்கணும்னே வேணும்னே சொன்னாலும் சொல்லுவானுவோ” என்று நினைத்துக்கொண்டு வெளியில் போக நடையைக் கட்டினான்.

வளைவிலிருந்து வெளிப்பட்ட அவனைப் பார்த்துப் பதறினாள் பிரமு கிழவி. அப்பன் செத்துக் கெடக்கான், வெளிய போகக்கூடாதுடே என்று சொல்லி அவனைக் கட்டிக்கொண்டு அழுதாள். சண்முகத்துக்கு எரிச்சலாக இருந்தது. அப்பாவின் வைப்பாட்டிகள் என்கிற சண்முகத்தின் பட்டியலில் பிரமு கிழவியும் இருந்தாள்.

இப்படியே இரவு ஆகிவிட்டிருந்தது.

மணி அந்த அறைக்குள் மூழ்கிவிட்டிருந்தான். தாத்தாவின் பல பரிமாணங்கள் அவனுக்கு இன்பத்தையும், ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும், காமத்தையும் ஒருசேரத் தூண்டியிருந்தன. தாத்தாவின் வாழ்க்கையே அந்த அறைக்குள் புதைந்து கிடப்பதாகப்பட்டது அவனுக்கு. அங்கிருந்த பெட்டிகள் முழுவதிலும் தாத்தா எழுதிப் போட்டிருந்த கத்தைக் கத்தையான காகிதங்கள் அவனுக்குப் பல விஷயங்களைச் சொன்னது. எதுவும் ஓர் ஒழுங்கான காலவரிசையில் இல்லை. அவன் கையில் கிடைத்த தாளையெல்லாம் பிடித்திழுத்துப் படித்தான்.

[4]

மழையின் உக்கிரம் சற்றும் குறையவில்லை. தொடர்ந்து முப்பத்தாறு மணிநேரமாக மழை பெய்துகொண்டிருந்தது. ஊரெங்கும் மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தது. பிணத்தைச் சுற்றி நான்கைந்து பேர் மட்டுமே இருந்தார்கள். கிருதா அவ்வப்போது வந்து போய்க்கொண்டிருந்தது. எரிந்துகொண்டிருந்த விளக்கில் சண்முகத்தில் எரிச்சலும் அவன் பொண்டாட்டியும் எரிச்சலும் அப்பட்டமாகத் தெரிந்தது. ‘செத்தும் கொல்லுதானப்பா’ என்று நினைத்துக்கொண்டான் சண்முகம். தன் கணவனின் வறட்டு ஜம்பத்தால் இப்படி நாறும்படி ஆகிவிட்டதே என்று வயிறு எறிந்துகொண்டிருந்தாள் சண்முகத்தின் பொண்டாட்டி. மணி கையில் கிடைத்த சில முக்கியமான பக்கங்களை எடுத்துக்கொண்டு அவன் வீட்டிற்குள் ஓடினான். மெழுகுவர்த்தியை வைத்து ஒவ்வொன்றாகப் படித்துக்கொண்டிருந்தான். வெள்ளம் வாகையடி முக்குத் தாண்டி டவுணுக்குள் புகுந்து சம்பந்தர் தெருவைத் தொட்டுக்கொண்டிருந்தது. வெள்ளைத்துண்டு வந்து, “பொணத்தை இங்க வெச்சிக்கிட்டு இருந்தா வேலைக்காகாது. ஐஸ் வாங்கி அதுல படுக்க வெக்கணும். இங்கனயே வெச்சிருக்கமுடியாது. இப்பமே நாத்தம் அடிக்க ஆரம்பிச்சிட்டு. வெள்ளத்தண்ணி இங்கயும் வந்துட்டுன்னா நிலைமை ரொம்ப மோசமாயிடும். பேசாம மாடில உன் வீட்டுக்குக் கொண்டு போயிடலாம். எப்படியும் இன்னைக்கு ராத்திரியில தண்ணி வடிய ஆரம்பிச்சிடும். நாளைக்குக் காலங்காத்தால தூக்கிடலாம்” என்றார். எழு வருசம் மாடிக்கு வராத தன் அப்பனை இப்போது மாடிக்குக் கொண்டுபோகவேண்டுமா என்று யோசித்தான் சண்முகம்.

[5]

தாத்தாவின் எழுத்துகள் மணியை என்னவோ செய்தது.

சொக்கலிங்கம்-1

……….ளின் சேலை காத்துலாடி எம்மேல பட்டது. அதுக்கு மேல சும்மா இருக்க முடியலை. காலேல குடிச்சிருந்த தென்னங்கள்ளு உடம்பை முறுக்கேறி வெச்சிருந்தது. காலேல ஆத்துல குளிச்சப்பையும் அவ ஒடம்பைத்தான் நினைச்சிக்கிட்டுக் கெடந்தேன். எண்ணெய் தேச்ச மாதிரி வேர்வை வழிஞ்சு கெடக்கற கருப்பு இடுப்புலத்தான் எம்பார்வை கெடந்தது. அவளுக்குந் தெரியும் எம்மனசு. ஒடனே ஒத்துக்கப்பிடாதுன்னு நினைச்சாளா கருப்பி? இருக்கும். எங் காந்திமதியில்லா. ஒலகத்துல ஒண்ணும் வேணாமின்னு நினைச்சேன். ஜன்னலுக்கு வெளிய நின்னுக்கிட்டு படுக்கையறைல துணி மாத்திக்கிட்டு இருந்த அவளைப் பாத்தேன். உள்ளவான்னு சொன்னா. நான் உள்ள போனேன். கூளு குடிச்ச ஒடம்போட ருசி, தெனவு எல்லாங் காமிச்சா அன்னைக்கு. (சில வரிகள் அடிக்கப்பட்டிருந்தன. மணி அதை ஊன்றிப் படித்துப் பார்த்தான். ஒன்றும் பிடிபடவில்லை.) ….தைப் படிப்பாங்கன்னு தோணுது. படிக்கட்டும். எல்லா மனுசனுக்குள்ளும் இருக்கிறதைத்தான் எழுதிருக்கேன். நான் அன்னைக்கு அப்…..

எந்த வருடம் என்பதைச் சொக்கலிங்கம் எழுதி வைக்கவில்லை.

சொக்கலிங்கம்-2

காந்திமதி போயிட்டா
பொலிவழிஞ்சு போச்சு திருநெல்வேலி
ஆத்துல தண்ணி நின்னுருக்கும்
நெல்லையப்பனுக்குத்தான் காலம் வாய்க்கலை
.
.
.
.
.
.
.
நெல்லையப்பனுக்குக் காலம் வாய்க்கல்லே…!

(1997)

சொக்கலிங்கம்-3

….ன்னு சொன்னேன். மவனா இவன்? நாய் விளுந்த மாதிரி விளுந்தான். நீரு எனக்கு என்ன மயித்த செஞ்சீருங்கான். அப்பன் புள்ளைக்குப் பண்ணதை நியாபகம் வெச்சுச் சொல்லமுடியுமா கோட்டிப்பலேன்னேன். நீரு கோட்டிவே, ஒமக்குக் கோட்டிவேன்னான். அந்தக் கருப்பச்சி கூட நீரு ஆடின ஆடமெல்லாந் தெரியாதான்னான். நா மறச்சி வெச்சி ஆடலியேன்னேன். காறித்துப்பிட்டுப் போனான். எனக்கு ரத்தம் ஓடிக்கிட்டுக் கெடந்த காலத்துல முன்னாடி நிக்கப் பேலுவான் இந்தச் சண்முவம். இன்னைக்குக் காறித்துப்புதான். அவஞ் சந்தேகப்பட்ட மாதிரியே அந்தக் கருப்பிக்கு மாடியை எழுதி வெச்சி உயிலு மாத்தினேன். அன்னைக்கு வரைக்கு நா நெனைக்கல்லே அப்பிடி. அவஞ் சொன்ன அன்னைக்குத்தான் செஞ்சேன். அவளுக்கு ஒரு கடப்பாடு பாக்கி கெடக்கு. வேணுங்கிறப்பெல்லாம் படுத்தா தாயி. (மணி பக்கத்தைத் திருப்பினான். பின் பக்கத்தில் தொடர்ச்சி இருந்தது.)

எப்படி தெரிஞ்சதோ சம்முவத்துக்கு. அதுவரைக்கும் வேம்படித்தெருவுல பொண்டாட்டி புள்ளையோட தனி வீட்டுல கெடந்தவன், எவ வாரான்னு பாக்கேன் மாடிக்கு, எழுதி வெச்சிட்டா கொடுத்துப்பிடுவோமா, பாக்கலாம், அவ மாதிரி கண்டவனுக்குப் பெக்கலை என் அம்மான்னு சொல்லி மாடிக்கு ஜாகையை மாத்திக்கிட்டான். அவனை வெரட்ட எனக்கு முடியலை. ரத்தம் சுண்டிப்போச்சு. ஆடி ஓஞ்சிட்டேன். முன்ன மாதிரி இருந்தா அவன் மொகரக்கட்டையை ஒடச்சி வெளிய அனுப்பியிருப்பேன். திடீர்னு ஒரு நாள்…..

(தொடர்ச்சியான பக்கத்தைக் காணவில்லை. இந்தத் தாளின் கிடைமட்டத்தில் 1991 என்று எழுதப்பட்டிருந்தது.)

சொக்கலிங்கம்-4

ஹே காற்றே
என்னைச் சுழன்றடிக்கும் காற்றே
வேகமாய் வீசும் காற்றே
புழுதி வாரி இறைக்கும் காற்றே
என்னைச் சுற்றாதே
நானென்ன நெல்லையப்பனா?
வேம்படியில் கருப்புக் காந்திமதி இருக்கிறாள்
வேண்டுமானால் அவளைச் சுற்று
ஹே காற்றே
காந்திமதியின் சாகசங்கள் உனக்குத் தெரியுமா?
அவள் கருப்புக் கடவுள், அறி!
அவளே காந்திமதி, அறி!
அவள் வீட்டுக்குள்ளே வர
வீடெங்கும் பரவுகிறான்
உன் உறவுக்காரத் தென்றல் பையன்.
எங்கோ மொய்த்துக்கொண்டிருக்கும் ஈக்கள்
அவளையும் என்னையும் மாறி மாறி மொய்க்கின்றன
ஹே காற்றே…

(கவிதை முயற்சி என்று தலைப்பிட்டு, 1979-இல் சொக்கலிங்கம் எழுதியது. மணிக்கு ஆச்சரியமாக இருந்தது.)

சொக்கலிங்கம்-5

….னோ அவனுக்கு என்கிட்ட ராஜவல்லிபுரத்துல நெலம் கெடக்குன்னு. வூட்டுக்கு வந்து என்ன வேணும்னாலும் என்கிட்ட கேளுங்கான் சம்பந்தம் சம்பந்தமில்லாம. சம்முவத்தோட பொண்டாட்டி அந்த மூளிக்களுதை கூட நிக்கா. வீட்டுக்குள்ள காலை வைக்கும்போது கால எடுட்டீன்னு கத்தலாமின்னு நினைச்சேன். கத்தலை. நா அவளை ஒரு மாதிரி பாக்கேன்னு சம்முவத்துக்கிட்ட சொல்லி வெச்ச நாயி வீட்டுக்குள்ள கால வைக்கலாமா? சம்முவத்தைப் பாத்துக் கத்தினேன். ரோசங் கெட்ட நாயே, மாடியக் காலி பண்ணிட்டுப் போல, அது காந்திமதிக்குள்ள வூடுன்னேன். அவனுங் கத்தினான். எவ காந்திமதி, கண்ட அவுசாரிக்கு காந்திமதி பேரச் சொல்லுதியே. காந்திமதியம்மாவே ஒன்னக் கேப்பா, நா மாடியக் காலி பண்ணுவேன்னு நினைக்காதீரும்வேன்னான். இளுத்துக்கிட்டு கிடக்கும்போது வருவீருவேன்னான். எலேய், நாஞ் செத்தாலும் ஒங்கிட்ட வரமாட்டேம்ல, ரோசக்காரம்ல. தொங்கினாலும் தொங்குவேம்ல. புளுத்துச் செத்தாலும் சாவேம்ல நீ இருக்கற வரைக்கும் மாடிய மிதிக்கமாட்டேம்லனு திட்டி அனுப்பினேன். அன்னைக்கு பூரா பொலம்பிக்கிட்டே இருக்க வெச்சிட்டான் இந்தப் பய. கண்ணதாசன் பாடினானே, சரியாத்தான் பாடினான். புள்ள……

(வருடம் 1996)

[6]

மழை எல்லார் வீட்டுக்குள்ளும் புகுந்தது. கீழ் வீட்டுக்காரர்கள் மாடிக்கு ஓடினார்கள். ஊரே அல்லோலப்பட்டது. குழந்தைகள் வீட்டின் கீழே சூழ்ந்திருக்கும் முழங்கால் அளவுத் தண்ணீரில் குதித்தாடினார்கள். இப்படி ஒரு மழையும் வெள்ளமும் 88 வருடங்களுக்கு முன்பொருமுறை வந்ததாக தினசரிகள் அறிவித்தன. பெரியவர் ஒருவர் அப்போது தான் பட்ட கஷ்டங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். ஜங்ஷனில் கவிதா ஷாப்பிங் சென்டர் முங்கிவிட்டதாகவும் பரணி ஹோட்டலில் இரண்டாவது தளத்தில் தண்ணீர் புகுந்துவிட்டதாகவும் சுலோச்சனா முதலியார் பாலம் எங்கே இருக்கிறதென்ற சுவடே இல்லையென்றும் பேசிக்கொண்டார்கள். சம்பந்தர் தெருவில் சொக்கலிங்கம் செத்துக்கிடந்த வளைவில் கீழ் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. கணுக்கால் அளவுக்குத் தண்ணீர் இருந்தது. அருகிலிருந்த ஒரு மருத்துவமனையிலிருந்து கொண்டு வந்திருந்த ஒரு தூக்குப் படுக்கையில் சொக்கலிங்கத்தைக் கிடத்தி ஆறேழு பேர் தூக்கிப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். சண்முகத்தின் மனைவி தலையில் அடித்துக்கொண்டாள். சண்முகம் மேலே கொண்டு போயிடலாம் என்றான். அனைவரும் வேற வழியே இல்லை என்றார்கள். வளைவில் இருக்கும் எல்லாரும் அதிசயமாகப் பார்த்தார்கள். சொக்கலிங்கத்தின் வாயிலிருந்து தண்ணீர் வெகுவாகக் கசிந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தியது. கடுமையாக ஈக்கள் மொய்த்தன. முகம் மோசமாக விகாரமடைந்திருந்தது.

கஷ்டப்பட்டு வீட்டுக்குள் இருந்து வெளியில் கொண்டு வந்தார்கள்.

மாடிக்குச் செல்லும் படிகள் மிகவும் குறுகலாக இருந்தன.

“நேரா அப்படியே கொண்டு போக முடியாதப்பே”

“கொஞ்சம் சரிச்சிக்க வேண்டியதான்”

“படுக்கையோட கட்டிக்கலாமா?”

“என்னத்தையோ சட்டுன்னு செஞ்சித் தொலைங்க. செத்தும் உயிர வாங்குதான்யா மனுஷன்!”

“தண்ணீல நின்னு நின்னு காலக் கடுக்குதுடே. சட்டுன்னு மேல கொண்டு போவணும்”

“கயறு கட்டித் தூக்கிடலாமா?”

“தண்ணி அடிச்சிட்டுப் பேசுற நாய் மண்டைல போடுங்கேன்”

“சரிடே, ஆளாளுக்குப் பேசாதீங்க. எல்லாரும் படிக்கு நேரா வெச்சிக்கிட்டு நில்லுங்க. கட்டல்லாம் வேணாம். நா சொல்லச் சொல்ல சரிங்க. அப்படியே ஒருக்களிச்சுக் கொண்டு போயிடலாம்”

எல்லாரும் சொக்கலிங்கத்தை அந்தப் படுக்கையில் வைத்து சுமந்துகொண்டு படிக்கு நேரே நின்றார்கள். மெல்ல இரண்டு படி ஏற்றினார்கள். மாடிப்படியின் பக்கச் சுவர்களில் படுக்கை இடித்தது.

“எவனாவது ஈயை விரட்டுங்கப்பா. மொவத்துல வந்து அப்புது”

“லேசா சரிங்கப்பா… லேசா… இன்னும் கொஞ்சம்…. சண்முகம் நீதான் மேல நிக்க. கவனமா இரு. மெல்ல மெல்ல சரி.. இன்னும் கொஞ்சம்…”

கீழே இருந்தவன் கொஞ்சம் வேகமாகச் சரித்துவிட்டான். சண்முகத்தின் கை சுவற்றில் இடித்தது. ஐயோ என்று கையை உதறினான். அவன் பக்கம் சட்டெனக் கீழே சரிந்தது. கீழிருந்தவன், “தாயோளி கெடுத்தான்யா காரியத்தை” என்றான். உருட்டி விட்ட மாதிரி பிணம் மாடிப்படியில் விழுந்தது. சொக்கலிங்கத்தின் வாய் படியில் பலமாக இடித்தது. கொளுக்கென ஒரு குடம் திரவம் கொட்டி படிகளில் வழிந்தது. பிணமும் கீழே சரிந்தது. கீழிருந்தவர்கள் அய்யரவுடன் ஐயோ என்று சொல்லிக்கொண்டு காலைத் தூக்கிக்கொண்டு ஓடினார்கள். சொக்கலிங்கத்தின் உடல் கடைசி இரண்டு படிகளில் சரிந்து கீழே பரவியிருந்த நீரில் அமிழ்ந்தது. தாமிரபரணியின் நீர் அவன் மேலே ஓடியது. அவனது முகம் விகாரமாக வானத்தை விறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தது. நீர் மூழ்கடிக்காத இடங்களில் ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன.

[முற்றும்]

தேன்கூடு போட்டிக்கான ஆக்கம்.

Share

திரை – கவிதை

காற்றில் ஆடும் ஜன்னல் திரையில்
மலர்ந்திருக்கின்றன போலிப்பூக்கள்
என்னைப் பார்த்தவண்ணம்.

படுக்கைக்கு மேலே
உத்திரத்தில் தொங்குகிறது
நிலவும் பிறையும்
சில நட்சத்திரங்களும்;
திரைக்கு வெளியில் அலையும் கேலக்ஸி
படுக்கையறைக்குள்ளே ஒரு விளக்கணைப்பில்.

இரவுகள் பகலாகவும்
பகல்கள் போலியாகவும்
அங்குமிங்கும் அலைகின்றன
சிறிய திறப்பைத் தேடி

உள்ளங்கைக்குள் வேர்த்தடங்கிக்கிடக்கும் வெளி

கையைத் திறக்க
மெல்ல கசிகிறது
நெகிழும் திரையின் வழியே
என் படுக்கையறை
உலகுக்கு.

Share

கருட பஞ்சமி

இன்று கருட பஞ்சமி.

இதன் ஐதீகக் கதை:

முன்னொரு காலத்தில் ஏழு அண்ணன்களுக்கு ஒரே ஒரு தங்கை இருந்தாள். அவர்கள் விறகு வெட்டிப் பிழைக்கிறவர்கள். அப்படி ஒருநாள் அந்தத் தங்கை தன் அண்ணன்களுக்குக் கஞ்சி கொண்டு சென்றாள். அப்போது வானில் கருடன் ஒரு நாகத்தைக் கௌவிக்கொண்டு சென்றது. அந்த நாகம் தங்கை கொண்டு செல்லும் கஞ்சியில் விஷம் கக்கிவிட்டது. அதை அறியாத அவள் அண்ணன்கள் அனைவருக்கும் அதே கஞ்சியை வழங்கினாள். அதை உண்ட அண்ணன்கள் அனைவரும் இறந்துவிட்டனர். தினமும் செய்வதுபோலத்தானே செய்தோம், இன்று என்ன இப்படி ஆகிவிட்டது என்று வருத்தப்பட்ட அந்தத் தங்கை தெய்வத்தை நினைத்து அழுது தொழுதாள். அந்த வழியாக வந்த பார்வதியும் பரமேஸ்வரனும் அவளைப் பார்த்து, நடுக்காடில் இருந்துகொண்டு ஏன் அழுகிறாய் என்று கேட்டார்கள். அவள் நடந்ததைக் கூறினாள். ‘இன்று கருடபஞ்சமி. அதை மறந்துவிட்டு பூஜை செய்யாமல் நீ வந்துவிட்டாய். அதுதான் இதற்குக் காரணம். இங்கேயே இப்போது நாகருக்குப் பூஜை செய். கங்கணக் கயிறில் ஏழு முடிச்சிட்டு, நாகர் இருக்கும் புற்று மண் எடுத்து, அட்சதை சேர்த்து இறந்து கிடக்கும் உன் அண்ணன்கள் முதுகில் குத்தவும். அவர்கள் உயிரோடு எழுந்திருப்பார்கள்” என்று சொல்லி கருட பஞ்சமியின் முக்கியத்துவத்தை உணர்த்தினர். அவளும் அதே போல் செய்தாள். இறந்து கிடந்த அண்ணன்கள் அனைவரும் உயிர் பெற்று எழுந்தார்கள்.

இப்போதும் கருட பஞ்சமி அன்று பெண்கள் தங்கள் உடன் பிறந்தவர்கள் முதுகில் அட்சதை இட்டு குத்தி, அவர்கள் தரும் சீரைப் பெற்றுக்கொள்கிறார்கள். கருட பஞ்சமி தன் உடன் பிறந்தவர்கள் சிறப்புடன் வாழ பெண்கள் கொள்ளும் நோன்பு.

Share