மாஸே சாஹிப் – ஹிந்தி திரைப்படம் (சில இந்தியத் திரைப்படங்கள் – 02)

Director/Story : Pradip Krishen
Camera : R. K. Bose
Editor : Mohan Kaul
Music : Vanraj Bhatia
Cast : Raghuvir Yadav, Barry John, Arundhati Roy, Virendra Saxena
1986/ 118 Mins/ Hindi/ Social
Thanks: http://www.nfdcindia.com/view_film.php?film_id=36&show=all&categories_id=8

1986 இல் வந்த திரைப்படம். இந்த அருமையான திரைப்படத்தைக் காணும் வாய்ப்பு மக்கள் தொலைக்காட்சி மூலம் கிட்டியது. என்னைக் கவர்ந்த படங்களுள் இதுவும் ஒன்று.

1927இல் நடக்கும் கதை. கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய மாஸே (நடிகர் ரகுவீர் யாதவ். இவரை ருடாலி, தாராவி ஆகிய படங்களிலும் பார்க்கமுடிந்தது.) பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை மிகவும் மதிக்கிறான், நம்புகிறான். ஒரு க்ளார்க்காக பணிபுரியும் அவன் செயல்கள், நடத்தை, உடை எல்லாமே பிரிட்டிஷ் அதிகாரிகளை ஒத்திருக்கின்றன. மத்திய இந்தியாவில் வாழும் அவனது செய்கைகள் அங்கிருக்கும் மக்களுக்கு பெரும் வியப்பூட்டுபவையாக அமைகின்றன. கடைகளுக்குச் செல்லும் அவன் தான் ஒரு பிரிட்டிஷ் சாம்ராஜ்யாத்தின் வேலையாள் என்று சொல்லி கடன் வாங்குகிறான். தொடர்ந்து கடன் தர மறுக்கும் நபர்களை மிரட்டி வைக்கிறான். ஆனால் உண்மையில் மாஸே ஒரு அப்பாவி. அவன் மிரட்டும் வேளைகளில் கூட எதிராளிகள் அவன் ஒரு அப்பாவி என்பதை உணர்ந்துவிடுகின்றனர். இந்நிலையில் சாலி (சாலியாக நடித்திருப்பவர் எழுத்தாளர் அருந்ததிராய்) என்கிற காட்டுவாசிப் பெண்ணை அவன் சந்திக்கிறான். பார்த்த கணமே காதல் ஏற்படுகிறது. அவளை மணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறான். அவன் வீட்டுக்காரர்கள் ஆரம்பத்தில் மறுக்கிறார்கள். என்றாலும் அவன் தருவதாகச் சொல்லும் பணத்துக்காகச் சம்மதிக்கிறார்கள். ஆங்கிலேயர்களின் திருமணம் நடப்பதுபோல, ஒரு சர்ச்சில் வைத்து அவன் திருமணம் நடக்கிறது. திருமணம் ஆன இரவே, (முதலிரவு முடிந்துவிடுகிறது) சாலியின் உறவினர்கள் வந்து அவன் தருவதாகச் சொன்ன பணத்தைத் தராததால் சாலியைத் தங்களுடன் அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கிறான் மாஸே.

Thanks:nfdcindia.com
அருந்ததி ராய், ரகுவீர் யாதவ்

மாஸே வேலை செய்யும் இடத்திலுள்ள ஆங்கிலேயர்களிடம் மிகவும் நெருக்கமானவனாகத் தன்னைக் காட்டிக்கொள்கிறான். சார்லஸ் ஆடம் என்கிற பிரிட்டிஷ் உயரதிகாரி அலுவலகத்தின் கணக்கு வழக்குகளைக் கேட்கிறார். முதலில் ஏதேதோ காரணம் சொல்லும் மாஸே, பின் தான் செலவுக்கு அந்தப் பணத்தை எடுத்ததை ஒப்புக்கொள்கிறான். அதோடு நில்லாமல், அதை எப்படி கணக்குக் காட்டித் தன்னைத் தப்ப வைக்கமுடியும் என்றும் ஆடமுக்கு விளக்குகிறான். கடும் கோபம் கொள்ளும் ஆடம், இது அரசாங்கத்தின் பணம் என்றும் இது திரும்ப கிடைக்கும்வரை அவனை வேலையில் இருந்து தற்காலிக நீக்கம் செய்வதாகவும் உத்தரவிடுகிறார். உண்மையில் அந்தப் பணம் நகரத்தையும் கிராமத்தையும் இணைக்கும் சாலைகளுக்கான பணம்.

மனைவியையும் இழந்து வேலையையும் இழந்து நிற்கும் மாஸே, தனக்கு எப்படியும் தனது மேலதிகாரி ஆடம் உதவுவார் என்று நம்புகிறான். வருடங்கள் ஓடுகின்றன. மனைவி சாலியையும் தனது மகனையும் யாருக்கும் தெரியாமல் சந்திக்கிறான் மாஸே. இதை அறியும் சாலியின் அண்ணன் கோபத்தில் மாஸேயை பெரும் கழியால் தலையில் அடித்துவிடுகிறான். பின் யாருக்கும் தெரியாமல் சாலியையும் தன் மகனையும் அழைத்துக்கொண்டு தலைமறைவாகிறான்.

மழைக்காலத்தில் சாலை போடும் பணிகள் மந்தமடைவதால் தன் ஊருக்குச் செல்கிறார் ஆடம். பருவ நிலை மாறுகிறது. சாலை போடவேண்டிய வேலையைத் துரிதப்படுத்தும் அரசின் ஆணையோடு, தன் மனைவியையும் அழைத்துக்கொண்டு திரும்ப வருகிறார் ஆடம். என்ன முயன்றும் சாலை போடும் வேலை மெத்தனமாகவே நடக்கிறது. சாலைகள் காடுகள் வழியே போடப்படவேண்டி இருக்கிறது. காட்டை அறிந்தவர்கள் யாரும் துணையில்லாமல் திண்டாடுகிறார் சார்லஸ் ஆடம். அவரது மனைவி இப்படி ஒரு வேலை தேவையா என்று சலித்துக்கொள்கிறார்.

காட்டில் டெண்ட்டைப் பார்க்கும் மாஸே அது தனது அதிகாரி ஆடமாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்து அங்கு செல்கிறான். அங்கு ஆடமைப் பார்க்கும் அவன் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறான். ஆடமும் மாஸேயை வேலையை விட்டுத் தூக்குவதைத் தவிர தனக்கு வேறு வழி இருக்கவில்லை என்று சொல்லி வருந்துகிறார். வெளியில் நிற்கும் தனது மனைவியையும் ஆடமுக்கு மாஸே அறிமுகப்படுத்துகிறான். கையில் இருக்கும் குழந்தையைப் பார்க்கும் ஆடம், அக்குழந்தையின் பெயரைக் கேட்கிறார். சார்லஸ் என்கிறான் மாஸே. ஆடம் மிகுந்த உணர்ச்சிக்குள்ளாகிறார். எப்படி மாஸேக்கு உதவுவது என்று யோசிக்கிறார்.

மாஸே ஆடமுக்கு சாலை போடும் விஷயத்தில் உதவ முடிவெடுக்கிறான். ஆடமிடமும் சொல்கிறான். ஒரு அரசாங்கத்தால் முடியாததை எப்படி மாஸே தனியாளாகச் செய்யமுடியும் என்று கேட்கிறார் ஆடம். நாளை காலை உங்களுக்குத் தேவையான ஆள்களை வேலைக்குக் கொண்டுவருகிறேன் என்று சொல்லிச் செல்கிறான் மாஸே. அதை நம்பாத ஆடமின் மனைவி ஆடமையும் மாஸேயையும் கேலி செய்கிறாள்.

மாஸே அன்று இரவே எல்லா காட்டுவாசி குடியிருப்புகளுக்கும் சென்று, தான் அரசாங்கத்தின் ஆள் என்று சொல்லி, நைச்சியமாகப் பேசியும் ஆசை காட்டியும் பயமுறுத்தியும் அனைவரையும் வேலைக்கு வர வைக்க சம்மதம் பெறுகிறான். மறுநாள் ஆடமின் கூடாரத்துக்கு (Tent) வெளியே கேட்கும் பெரும் சத்தத்தைக் கேட்டு வந்து பார்க்கிறாள் ஆடமின் மனைவி. அனைவரும் வேலைக்கு வந்தவர்கள் என்றறியும்போது அவளுக்கும் மாஸேயின் மீது பெரிய ஆச்சரியமும் நம்பிக்கையும் ஏற்படுகிறது.

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலை வேகம் பெறுகிறது. அரசு நிர்ணயித்த தினத்திற்கு முன்பாகவே சாலைகள் போடப்பட்டுவிடும் என்று அரசுக்கு தகவல் அனுப்புகிறார் ஆடம். அதற்கு முக்கியக் காரணம் மாஸேதான் என்றும் அவனை மீண்டும் பணிக்கு அமர்த்தவேண்டும் என்றும் பரிந்துரைக்கிறார். பரிந்துரை ஏற்கப்படுகிறது. சாலையைத் திறந்துவைக்கும் விழா நடைபெறுகிறது. ஆடம் உரையாற்றுகிறார். மாஸேயைப் புகழ்ந்து அவனுக்கு வேலை மீண்டும் தரப்படுவதை உறுதி செய்கிறார். அப்போது அங்கு வரும் காட்டுவாசிகள், சாலையைத் திறந்து வைக்க வரும் அரசின் பிரதிநிதிகளிடம், சாலைக்கான வரியை ரத்து செய்யவேண்டும் என்று விண்ணப்பம் வைக்கிறார்கள். அரசின் பிரதிநிதியும் ஆடமும் அதிர்ந்து போகிறாகள். அப்படி ஒரு வரி இல்லவே இல்லை என்று சொல்கிறார்கள். அந்த இடத்திற்கு வரும் மாஸே அனைவரையும் திட்டி விரட்டுகிறான். ஆனால் ஆடமுக்கு ஏதோ சந்தேகம் தோன்ற, மீண்டும் காட்டுவாசிகளைக் கூப்பிட்டுக் கேட்கிறார். அவர்கள் அனைவரும் மாஸே வரி வசூலித்ததைச் சொல்கிறார்கள்கள். கடும் கோபம் அடைகிறார் ஆடம். அரசு மாஸேவைக் கைது செய்து சிறையில் அடைக்கிறது.

சிறையில் எவ்விதத் துன்பமும் இன்றி இருக்கும் மாஸே தன்னை எப்படியும் ஆடம் காப்பாற்றிவிடுவார் என்று நம்புகிறான். ஆடமுக்கு இருக்கும் கோபம் வடிந்து, இயல்பாகவே மாஸே மீது இருக்கும் அன்பு பொங்குகிறது. ஆடமின் மனைவியும் ஆடம் எப்படியும் மாஸேவைக் காப்பாற்றவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறாள். சட்டத்தை மீறி எதுவும் செய்யமுடியாத நிலையில், அவனைத் தனிமையில் சந்திக்கும் ஆடம் மாஸே எப்படி நீதிமன்றத்தில் பேசவேண்டும் என்று சொல்லித் தருகிறார். அனைத்தையும் அலட்சியப்படுத்தும் மாஸே, ஆடமிடம் ‘எப்படியும் என்னை நீங்கள் காப்பாற்றிவிடுவீர்கள் எனத் தெரியும்’ என்று சொல்கிறான். எவ்வளவு விளக்கியும் மீண்டும் மீண்டும் அதையே சொல்கிறான் மாஸே. ஆடம் செய்வதறியாமல் வீட்டுக்குப் போகிறார். நீதிமன்றத்தில் மாஸேவுக்கு தூக்குத் தண்டனை உறுதியாகிறது. தூக்குத் தண்டனைக்கு முந்தைய நாள்கூட ஆடம் எப்படியும் தன்னைக் காப்பாற்றுவார் என்றும் நம்பும் மாஸே, ஆடமே தன்னைச் சுட்டுக் கொல்வது போல கனவு காண்கிறான். மறுநாள் மாஸேவுக்குத் தூக்குத்தண்டனை நிறைவேற்றுவதாக திரையில் எழுத்தில் காண்பிப்பதோடு படம் முடிவடைகிறது.

காடுகளில் சாலை போடும் காட்சிகள் மிக அழகாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. மாஸேயாக வரும் நடிகர் ரகுவீர் யாதவும் ஆடமாக வரும் ஆங்கில நடிகரும் மிக அழகாக, இயல்பாக நடித்திருந்ததே படத்தின் பலம். ரகுவீர் யாதவ் ஆடமை மேயர் சாப் என்றே கடைசி வரை அழைக்கிறார். அவர் அழைக்கும் விதம், அந்தக் குரல் இன்னும் காதில் ஒலிக்கிறது. அருந்ததி ராய்தான் மாஸேயின் மனைவியாக நடித்தவர் என்ற செய்தி என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.

மாஸே பெண் கேட்டுச் செல்லுமிடத்தில், காட்டுவாசிகள் பிரிட்டிஷ்காரர்களைப் போல நாகரிகம் தெரியாதவர்கள் என்று உணர்கிறார். ஆனால் அதேசமயம் தன் காதலை விட்டுக்கொடுக்கவும் அவர் தயாரில்லை. அவர் தரும் பணத்திற்காக சம்மதிக்கும் சாலியின் அண்ணன், மாஸே அணிந்திருக்கும் கோட்டையும் பேண்ட்டையும் கேட்கிறான். வேறு வழியின்றி அதைக் கொடுத்துவிட்டு, கால்சட்டையுடன் திரும்புகிறான். அவன் வைத்திருக்கும் குடையையும் சாலியின் தந்தை பிடுங்கிக்கொள்கிறான். இதற்குப் பின்னர்தான் மாஸேயின் திருமணம் நடக்கிறது. திருமணத்தின் போது, காட்டுவாசிகள் வழக்கம்போல் எப்படி துண்டை போர்த்திக்கொள்வார்களோ அதேபோல அந்த கோட்டை போர்த்திக்கொண்டு வருகிறான் சாலியின் அண்ணன். அதைப் பார்க்கும் மாஸேயின் முகபாவம் ரசிக்கத்தக்க ஒன்று.

காட்டுவாசிகளிடம் சாலை வேலைக்கு வருமாறு கேட்கும் காட்சிகளில் மாஸே செய்யும் தந்திரங்கள் எளிமையானவை, நம்பத் தகுந்தவை. எந்தக் குழுக்கள் சாலை வேலைக்கு வருகிறார்களோ அவர்கள் மட்டுமே சாலையைப் பயன்படுத்தமுடியும் என்கிறான். ஒருகுழுவிடம் மற்றொரு குழு இந்த வேலைக்கு ஒப்புக்கொண்டுவிட்டது என்கிறான். இப்படியே ஆள்களை வேலைக்குச் சேர்க்கிறான்.

கணக்கு கேட்டு வேலையை விட்டு துரத்தப்படும் நிலையில், ஆடமின் வீட்டு முன்னால் நின்றுகொண்டு சத்தம் போடும் காட்சி இன்னொரு சிறப்பான காட்சி. ‘என்ன கணக்கு வேணும் பெரிய கணக்கு, நானா திருடினேன், என் டைரியில இருக்கு கணக்கெல்லாம். பாருங்க. யார் யாருக்கு எவ்ளோ கொடுத்தேன்னு இதுல இருக்கு பாருங்க’ என்று ஆடம் வீட்டு முன்பு நின்று கத்துகிறான். பின்பு அந்த டைரியை அவர் வீட்டின் முன் தூக்கி எறிந்துவிட்டுச் செல்கிறான்.

ஆடமுக்கு மாஸேயின் மீது இருக்கும் சாஃப்ட் கார்னர் அழகாக விவரிக்கப்படுகிறது. மாஸேயின் மகனுக்குத் தன் பெயரான சார்லஸ் என்று வைத்திருப்பதை அறியும் கணத்தில் அவனுக்கு தான் ஏதேனும் செய்தாகவேண்டும் என்கிற கட்டாயத்தை உணர்கிறார் ஆடம். கடைசி காட்சிகளில், ஆடம் எப்படி நீதிமன்றத்தில் சொன்னால் தப்பிக்கலாம் என்று விளக்கும்போது அவர் அடையும் விரக்தியும் ஏமாற்றமும் தன்மீதான மாஸேயின் கண்மூடித்தனமான நம்பிக்கையும் பேரி ஜானால் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

பேரி ஜான், அருந்ததி ராய் இவர்கள் எல்லாம் National School of Dramaவில் நடித்துக்கொண்டிருந்தவர்கள்தானாம்.(இந்த விவரம் தவறென்று சுட்டிக்காட்டியவர்களுக்கு நன்றி. வாய்மொழியாக நண்பர் சொன்னதை வைத்து விவரத்தை உறுதி செய்யாமல் எழுதியது இது.) படத்தின் இயக்குநர் ப்ரதீப் கிஷென் பாராட்டுக்குரியவர்.

இதுவும் இந்தியாவின் சிறந்த படங்களில் ஒன்று என்று நான் நம்புகிறேன்.

Search Tips: Indian Movies, Indian Award Movies.

Share

சில இந்தியத் திரைப்படங்கள் – 01

உலகம் முழுக்க சிறந்த படங்களாகப் போற்றப்படும் உலகத் திரைப்படங்களின் டிவிடி விசிடிக்களைக் கொஞ்சம் முனைந்தால் வாங்கிவிட முடிகிறது. ஆனால் சிறந்த இந்தியப் படங்களை வாங்கிப் பார்ப்பதென்பது கிட்டத்தட்ட முடியாத காரியமாகவே இருக்கிறது. பதேர் பாஞ்சாலி போன்ற திரைப்படங்களை கொஞ்சம் முனைந்தால் அதிக விலை கொடுத்தேனும் வாங்கி விடலாம். ஆனால் மற்ற இந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களைப் பார்ப்பதற்கு வழியே இல்லை என்கிற நிலைதான் நீடிக்கிறது. இதிலும் மோசம் சிறந்த தமிழ்ப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பும் இல்லை என்பது. எனி இந்தியன் பதிப்பகம் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொள்ள பாரதி மணியன் வந்திருந்தார். றெக்கை படத்தில் அவரைப் பார்த்தபோது, இவரை வேறெந்தப் படத்திலேயோ பார்த்திருக்கிறோமே என யோசித்துக்கொண்டிருந்தேன். என் மனைவி சட்டென்று பாபாவில் வருவார் என்றார். அப்போதும் எனக்கு பிடி கிட்டவில்லை. திடீரென்று ஒரு தினத்தில் ஒருத்தி திரைப்படத்தில் கிடையை மறிக்கும் கீதாரியாக வருபவர்தான் அவர் என்று பொறி தட்டியது. அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது குருக்ஷேத்திரம் படத்தில் நடித்திருப்பதாகவும் சொன்னார். அந்த படம் எப்போது வெளியாகும் என்று கேட்டபோது, அது ஆறுமாதங்களுக்கு முன்பே வெளியாகி யாராலும் கவனிக்கப்படாமல் போய்விட்டது என்றார். என்னால் நம்பவேமுடியவில்லை. ஜெயபாரதி இயக்கி சத்யராஜ் நடித்த திரைப்படம். ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் கோடம்பாக்கத்து சுவர்களில் குருக்ஷேத்திரம் படத்தின் விளம்பரங்களைப் பார்த்த நினைவிருக்கிறது. பின் தினமலரிலோ வாரமலரிலோ ஜெயபாரதி இயக்கி சத்யராஜ் ஹிட்லராக நடிக்கிறார் என்கிற செய்தியைப் பார்த்த ஞாபகமும் இருக்கிறது. ஆனால் அந்தப் படம் வந்ததும் தெரியாது; போனதும் தெரியாது. இப்போது கூட அந்தப் படம் வெளி வந்து, யாராலும் கவனிக்கப்படாமல் போய்விட்டது என்பதை என்னால் நம்பமுடியாமல்தான் இதை எழுதுகிறேன்.

இதுபோன்ற விருதுப் படங்களில் ஆர்வம் உள்ள ஒருவருக்கே அந்தப் படம் எப்போது வருகிறது, போகிறது என்கிற விவரம் தெரியவில்லை என்றால் மற்ற மக்களுக்கு இந்தப் படம் பற்றிய அறிவு என்னவாக இருக்கும்? இத்தனைக்கும் தமிழில் கிட்டத்தட்ட 7 முக்கியமான தொலைக்காட்சிகள் (சன், கே டிவி, ராஜ், ராஜ் டிஜிடல், ஜெயா, தமிழன், விண்) சினிமாவே கதி என்று தங்கள் ஒளிபரப்பைச் செய்துவருகின்றன. இவற்றில் எதிலும் இத்தகைய திரைப்படங்களைப் பற்றிய செய்தி வந்ததாக நான் பார்க்கவில்லை. மகேந்திரனின் சாசனம் திரைப்படம் கடந்த ஒரு வருடத்திற்குள் வெளியானது. சென்னையில் இரண்டு திரையரங்குகளில் மட்டுமே வெளியிடப்பட்டது என நினைக்கிறேன். என்னால் பார்க்க இயலாமல் போனது. இன்றுவரை அதன் சிடி கிடைக்கவில்லை. சாலையோரங்களில் எல்லா டிவிடியும் விசிடியும் விற்கிறார்கள். சாசனம் படத்தைக் கேட்டால் ‘கிடைக்காது சார்’ என்கிறார்கள். அரவிந்த்சாமி கொஞ்சம் தெரிந்த நடிகர் என்பதால் ‘கிடைக்காது சார்’ என்றாவது சொல்கிறார்கள். இல்லையென்றால் ‘அப்படி ஒரு படம் எப்ப வந்தது’ என்றுதான் கேட்டிருப்பார்கள்.

ஒன்றிரண்டு சிறந்த படங்கள் கிடைக்கின்றன. சில நேரங்களில் சில மனிதர்கள், வீடு போன்றவை. ஆனால் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், உன்னைப்போல் ஒருவன், மறுபக்கம், சந்தியா ராகம், அக்ரஹாரத்தில் கழுதை, டெரரிஸ்ட், மல்லி, இரண்டு பேர் வானத்தைப் பார்க்கிறார்கள், நண்பா நண்பா, ஊருக்கு நூறு பேர், றெக்கை, கண் சிவந்தால் மண் சிவக்கும், உச்சி வெயில் போன்ற படங்களை வாங்குவதென்பது மிகவும் கடினம். தமிழ்ப்படங்களுக்கே இந்தக் கதி என்றால் இந்தியாவின் மற்ற மாநிலத் திரைப்படங்களைப் பார்ப்பது பற்றி நினைப்பதுவே பாவம். கொஞ்சம் அலைந்தால் மலையாளத் திரைப்படங்கள் சிலவும் பெங்காலி திரைப்படங்கள் மிகக்கொஞ்சமும் கிடைக்கலாம். மற்ற மொழித் திரைப்படங்களைப் பார்க்கவே முடியாது. மேலும் அந்த அந்த மொழிகளில் சிறந்த திரைப்படங்கள் எவை எனவும் அறியமுடிவதில்லை.

மக்கள் தொலைக்காட்சி சில மாதங்களுக்கு முன்பு சிறந்த இந்திய விருதுத் திரைப்படங்களை ஒளிபரப்பியது. கிட்டத்தட்ட 9 படங்களை ஒளிபரப்பியது என நினைக்கிறேன். (அதில் ஒரு தமிழ்த்திரைப்படம்கூட இடம்பெறவில்லை என்பது சோகம்!) இந்த சிறந்த முயற்சியை திடீரென்று நிறுத்திவிட்டார்கள். இனி இது போன்ற சிறந்த படங்களைக் காணமுடியாது என நினைத்துக்கொண்டிருந்தபோது எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பி, லோக் சபா சானலைப் பார்க்கச் சொன்னார். எனக்கு அப்படி ஒரு சானல் வருவதே தெரியாது. அடித்துப் பிடித்து ட்யூன் செய்து பார்த்தேன். சுரேஷ் கண்ணனுக்கும் எஸ்.எம்.எஸ் அனுப்பி அந்தப் படத்தைப் பார்க்கச் சொன்னேன். ஷ்யாம் பெனகலின் திரைப்படம். அடுத்த வாரமும் இதே நேரத்தில் இதுபோன்ற திரைப்படங்கள் ஒளிபரப்பாகுமா என்கிற ஏக்கத்தில் நாங்கள் மூன்று பேருமே அவரவர் விட்டு தொலைக்காட்சி முன்பு காத்திருந்திருப்போம் என நினைக்கிறேன். கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக பிரதி சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கு பல்வேறு இந்திய மொழிகளில் எடுக்கப்பட்ட விருதுத் திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன. மக்கள் தொலைக்காட்சியைப் போலவே, இவற்றிலும் இதுவரை ஒரு தமிழ்ப்படம்கூட ஒளிபரப்பப்படவில்லை என்பது இன்னொரு சோகம். தென்னிய மொழித் திரைப்படங்களில் இதுவரை ஒரே ஒரு மலையாளத் திரைப்படம் (பூத்திருவாதர ராவில் – லோக் சபா சானலில், மக்கள் தொலைக்காட்சியில் மங்கம்மா என்கிற மலையாளத் திரைப்படம்) மட்டுமே இடம்பெற்றுள்ளது. அதிகமாக ஹிந்திப் படங்களும் பெங்காலி படங்களும் இடம்பெறுகின்றன. எல்லா படங்களுமே சிறந்த முறையில் உருவாக்கப்பட்ட படங்கள் அல்லது அத்தகைய முயற்சியை நோக்கிய படங்கள் என்ற அளவில் அவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

இவையல்லாமல் மாதத்திற்கு ஒருமுறை பொதிகையில் எப்படியாவது ஒரு நல்ல திரைப்படத்தை ஒளிபரப்புகிறார்கள். சந்தியா ராகம், றெக்கை (இந்தப் படம் விருதுப்படம் என்கிற பிரிவில் வந்தாலும் இது மோசமான திரைப்படம். இத்தகைய செயற்கையான திரைப்படத்தைப் பார்த்ததே கொடுமை) மறுபக்கம் (தங்கத்தாமரை விருது பெற்ற திரைப்படம்) போன்ற திரைப்படங்களைக் காண முடிந்தது. தற்செயலாக இரண்டு வாரங்களுக்கு முன்பு ஞாயிறு இரவில் டிடி நேஷனல் பார்த்துக்கொண்டிருந்தபோது அதிதி என்கிற கன்னடத் திரைப்படத்தைக் காண முடிந்தது. மறுவாரம் அதே நேரம் டிவியின் முன்பு காத்துக்கொண்டிருந்தபோது, பெரிய தடாகத்தில் மழை நீர் சொட்டுச் சொட்டாகச் சொட்டிக்கொண்டிருக்க, யாரோ ஹிந்தியில் பேசிக்கொண்டிருந்தார்கள்.

இதுபோக இன்னும் சில திரைப்படங்களை நண்பர்களிடமிருந்து வாங்கிப் பார்த்தேன். உலக மொழிகளில் இருக்கும் படங்களைப் பார்த்தாலும், இந்திய மொழி பற்றிய படங்களைப் பற்றியாவது எழுத வேண்டும் என்கிற நினைப்பு எனக்கு வலுத்துக்கொண்டே வந்தது. ஆனால் எழுதவே முடியாமல் போனது. தேடித் தேடிப் பார்த்த படங்களைப் பற்றி அன்றே எழுதிவிட வேண்டும் என்று நினைத்துக்கொள்வதோடு சரி. இதுவரை அப்படிச் செய்ய முடிந்ததில்லை. இப்போது யோசித்துப் பார்த்தால், அப்படி செய்திருந்தால் மிகச் சிறந்த ஒரு கருவூலத்தை உருவாக்கியிருக்க முடியும் என்று தோன்றுகிறது. இதுவரை பார்த்த படங்களைப் பற்றிய சிறிய குறிப்புகளை, குறைந்த பட்சம் நாளைக்கு நானே புரட்டிக்கொள்கிற மாதிரி, எழுதி வைக்க நினைத்தேன். அதுதான் இந்த முயற்சிக்கான காரணம்.

01. சாருலதா:

இயக்கம்: சத்யஜித் ரே

நான் பார்க்கும் சத்யஜித் ரேயின் முதல் படம். ரபீந்த்ரநாத் தாகூர் எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். 1964-ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படம்.

பூபதியும் சாருலதாவும் குழந்தையற்ற தம்பதிகள். பூபதி கொல்கத்தாவில் அரசியல் பத்திரிகை நடத்துபவர். இந்தியாவின் சுதந்திர இயக்கங்களில் நம்பிக்கையும் அதீத ஆர்வமும் உள்ளவர். சாருவின் மீது பூபதி அன்பாக இருந்தாலும், அவரது நேர்மின்மையால் சாரு ரசிக்கும் சின்ன சின்ன சந்தோஷங்களை அவரால் பகிர்ந்துகொள்ள முடியாமல் போகிறது. சாருலதா இலக்கியத்தில் அதிக ஆர்வமும் ஈடுபாடும் உள்ளவர். பூபதிக்கு அது பற்றித் தெரியும் என்றாலும் அதை ஊக்குவிக்கவோ, அதைப் பற்றி விவாதித்து சாருவை சந்தோஷம் கொள்ளச் செய்யவோ அவருக்கு நேரமில்லை. பூபதிக்கு வேலையில் உதவியாக இருக்கிறார் சாருவின் சொந்தக்காரர் ஒருவர்.

இந்நிலையில் அமல் என்கிற, பூபதியின் உறவினர் அங்கு வருகிறான். அவனுக்கும் சாருவுக்கும் ஒரே வயது. சாருவைப் போலவே அமலுக்கும் அதீத இலக்கிய ரசனையும், வங்காள நாடகங்கள் மற்றும் இலக்கியங்களின் மீதான விமர்சனமும் இருக்கின்றன. கவனிப்பாரற்றுக் கிடக்கும் தன் இலக்கிய ரசனை மூலமும், தொடர்ந்து நடக்கும் விவாதங்கள் மூலம் அமலை நெருங்குகிறாள் சாரு. அவளே அறியாத பொழுதில் அது காதலாக மலருகிறது. அமல் பூபதியின் மீது மிகுந்த மரியாதையும் அபிமானமும் உள்ளவன். சாருவின் இலக்கிய ரசனை மீது அமலுக்கு உயரிய மதிப்பு இருக்கிறது; மேலும் சாருவை ஏதேனும் எழுதச் சொல்லி வற்புறுத்துகிறான். ஆனால் சாரு மறுக்கிறாள். அமல் அறியாமல் சாருவின் படைப்பு ஒன்று பத்திரிகை ஒன்றில் வெளியாகிறது. அதை அறியும் அமல், சாருவைப் பற்றி அவனுக்கே தெரியாமல் அவன் மனதில் இருந்த நம்பிக்கையின்மையை அறிகிறான். அதைத் தொடர்ந்து அவள் மீது அவன் அதிக மரியாதை கொள்கிறான். பின்னொரு சமயத்தில் சாரு தன் மீது கொண்டிருக்கும் காதலை உணர்கிறான் அமல். அதுமுதல் அவனை குற்ற உணர்ச்சி பீடித்துக்கொள்கிறது. அவன் மெல்ல அவளிடமிருந்து விலக முயல்கிறான். அதை அறியும்போது தன் மீதே வெறுப்பேற்படுகிறது சாருவுக்கு.

Thanks: http://www.filmreference.com

இந்நிலையில், பூபதியின் வேலைக்கு உதவியாக இருக்கும் சாருவின் உறவினர் பணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகிறார். பூபதியின் நிலை மிகவும் மோசமாகி, பத்திரிகை மூடப்படுகிறது. அமல் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வெளியூருக்குப் பயணமாகிறான். இதை அறியும் சாரு மனதளவில் உடைந்து போகிறாள். ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கிறாள். அமல் ஏன் சென்றான் என்பது தெரியாமல் குழம்பிப் போகிறார் பூபதி. உண்மையில் அனைத்தும் தன்னை விட்டுப் போனபோது, அமலின் உதவியால் தான் மீண்டும் வெற்றி பெற்ற தொழிலதிபராக வலம் வரலாம் என்று பெரும் நம்பிக்கை கொண்டிருந்தவர் அவர். ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் மீண்டும் போராடுவது என்று முடிவெடுக்கிறார். சாருவின் இலக்கிய சாதனை பற்றி அறிந்துகொண்டு, அரசியல் பத்திரிகை ஒன்றும் இலக்கிய பத்திரிகை ஒன்றும் நடத்த முடிவெடுக்கிறார். வாழ்க்கையில் புதிய வழி கிட்டிவிட்டதாகக் குதூகலிக்கிறார்.

அந்த சமயத்தில் அமலிடமிருந்து கடிதம் ஒன்று வருகிறது. அமல் இங்கிலாந்து செல்லப்போவதாகவும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் கடிதம் சொல்கிறது. பூபதியின் முன்பு அந்தக் கடிதம் பற்றிக் கண்டுகொள்ளாதவாறு இருக்கிறாள் சாரு. பூபதி வீட்டை விட்டு வெளியேறிய பின்பு, அந்தக் கடிதத்தைக் கையில் வைத்துக்கொண்டு கதறி அழுகிறாள். தற்செயலாக வீட்டுக்குள் நுழையும் பூபதி நடந்ததை அறிந்து, பெரும் குழப்பத்திற்கும் அதிர்ச்சிக்கும் ஆளாகிறார். தன் கணவர் பார்த்துவிட்டார் என்பதை அறிந்துகொள்கிறாள் சாரு. வீட்டை விட்டுச் செல்லும் பூபதி நகரெங்கும் இலக்கில்லாமல் அலைகிறார். மீண்டும் வீடு திரும்புகிறார். அவரை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சாருவின் கையை பிடிப்பதுடன் சாருவின் மீதான பெரும் நம்பிக்கையை முன்வைப்பதோடு முடிவடைகிறது திரைப்படம்.

மனித உறவுகளின் சிக்கல் மீது நடத்தப்படும் இந்தத் திரைப்படம் உச்சகட்ட உணர்ச்சிகளின் தொகுப்பாக உள்ளது. முக்கியமான விஷயம், இந்த உணர்ச்சிகளை நடிகர்கள் வலிய ஊட்டாமல், படம் பார்ப்பவர்கள் தாங்களாகவே கண்டுகொள்வது. தொடர்ந்து இலக்கியத்தைப் பற்றி விவாதிக்கும் அமலும் சாருவும் வரும் காட்சிகளின் ஒளிப்பதிவுக் கோணம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. சாரு ஊஞ்சலில் ஆடிக்கொண்டே இருக்க, அமல் கவிதை எழுத முயலும் காட்சி மிகச் சிறப்பான ஒன்று. தன் மனைவி எழுதிய படைப்பொன்று ஒரு பத்திரிகையில் வந்திருப்பதைக் கூட அறியாத பூபதி, அதை அறியும் காட்சியில் அடையும் குழப்பமும் சந்தோஷமும் இன்னொரு சிறந்த காட்சி. சாருவின் முகபாவங்கள், ஏக்கம், கோபம், ஆத்திரம் என எல்லாவற்றையும் மிக நளினமாக வெளிப்படுத்துகின்றன. தனது படைப்பு வந்துவிட்டதை அறிந்த சந்தோஷத்தில், தன்னால் முடியாது என்கிற எண்ணம் கொண்ட அமல் தன்னைப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற வெறியில், அந்தப் பத்திரிகையை மடித்து வைத்து அமலின் தலையில் ஓங்கி ஓங்கி அடிக்கிறார். வசனங்களே இல்லாமல், அவர் படைப்பு பத்திரிகையில் வந்தது, அமலின் அடிமனதில் இருந்த சாருவின் மீதான தாழ்மதிப்பீடு, சாருவின் கர்வம் என எல்லாம் ஒரே காட்சியில் விரிவடைகிறது. படத்தின் இன்னொரு மிகச்சிறந்த காட்சி இது.

அமலுக்கும் சாருவுக்கும் இடையே இருக்கும் பிணைப்பை எப்படி பூபதி அறிந்துகொள்ளப் போகிறார் என்பதை படம் நெடுக எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு நாடகம் போல அமைந்துவிட்டது அக்காட்சி. கடிதத்தைக் கையில் வைத்துக்கொண்டு, யாருமற்ற வேளையில் சத்தமாகப் புலம்புகிறார் சாரு. அதைக் கேட்டு பூபதி அதை அறிந்துகொள்கையில், அதை ஒரு மேடை நாடகத்தின் பகுதியாகவே என்னால் பார்க்கமுடிந்தது.

படத்தின் முடிவு இன்னொரு சிறப்பு. இலக்கின்றி அலையும் பூபதி, அமலுக்கும் சாருவுக்கும் இடையே இருக்கும் உறவைப் பற்றிய ஒரு தெளிவு கொள்கிறார். வீடு திரும்பும் அவர் சாருவின் கையை அழுத்தி பிடிக்கும் காட்சியில் உறைந்து திரைப்படம் முடிவடைகிறது.

1964இல் வெளிவந்த திரைப்படம் என்று நானறிந்தபோது எனது ஆச்சரியம் இன்னும் அதிகரித்துவிட்டது. இந்தியத் திரைப்படங்களில் சத்யஜித் ரேயின் அனைத்துப் படங்களையும் பார்க்கவேண்டும் என்கிற எண்ணத்தை மேலும் அதிகரித்தது இத்திரைப்படம்.

ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் நூலில் ஜெயகாந்தன் இப்படி எழுதுகிறார்.

“Illustrated weeklyயின் அப்போதைய ஆசிரியராய் இருந்த ஏ.எஸ்.ராமன் மிகப்பிரபலமான தனது ‘சியராஸ்குரே’ பகுதியில் இரண்டு முறை மிக நீளமான விமர்சனக் கட்டுரைகளை எழுதியிருந்தார். அதில் Jayakanthan’s unnai pol oruvan is shade better than Sathyajith Ray என்று சொல்லியிருந்த வரிகள் அதீதமானவை அப்போதே எனக்குத் தோன்றியது உண்டு. ஆனால் A.S.R.இன் இந்தக் கணிப்பு எனக்குப் பெருமையாகவும் இருந்தது. சத்யஜித் ரேயின் படங்களில் உள்ள romanticism இல்லை. இதில் (உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்தில்) realism இருக்கிறது என்று தனது கட்டுரை திரு.இராமன் விளக்கியும் எழுதி இருந்தார். … முதல் பரிசுக்கும் மூன்றாம் பரிசுக்கும் சாருலதாவும் உன்னைப் போல் ஒருவன் படமும் போட்டியிட்டன. அந்தத் தேர்வில் எனக்கும் ஒரு ஓட்டுரிமை தரப்பட்டிருந்தால், நானும் கூடச் சாருலதா படத்திற்குத்தான் எனது ஓட்டைப் போட்டிருப்பேன்; உன்னைப் போல் ஒருவன் படத்திற்கு அல்ல.”

Share

அறிவிப்பு – இஸ்லாமிய கலாச்சாரம் – கவிஞர் ஹெச்.ஜி.ரசூலின் பார்வை குறித்த ஓர் உரையாடல்

தகவலுக்காக மட்டும். பெரிதாக்கிப் பார்க்க படத்தின் மீது சுட்டவும்.

விமர்சன அரங்கு அழைப்பிதழ்

கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் மீதான ஊர்விலக்க நடவடிக்கையைத் திரும்பப் பெறக்கோரி தமிழக எழுத்தாளர்களின் கூட்டறிக்கை

Share

சாதேவி – சிறுகதை

ப்பாவின் மரணம் தந்த தீவிரமான யோசனையில் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது அப்பாவின் வெகுளித்தனமான உள்ளமே. அப்பாவை நிச்சயம் ஒரு குழந்தை என்று சொல்லிவிடலாம். மற்ற ஆண்களுக்கு இருக்கும் வல்லமையும் திறமையும் அப்பாவுக்கு இருந்ததாகச் சொல்லமுடியாது. அப்பாவின் உருவத்தை ஒரு ஏமாளிக்குரிய உருவமாகத்தான் நான் யோசித்து வைத்திருந்தேன். ஆனால் அவரது மரணத்திற்கு வந்த கூட்டம் அவர் கோமாளியல்ல என்று எனக்கு உணர்த்தியது. அப்பா உயிரோடு இருந்த காலங்களிலெல்லாம் அவரது வெகுளித்தனத்தை அம்மா எப்போதும் வைவாள். அப்பா சின்ன வயதாக இருந்தபோது அற்ப காரணங்களுக்காக கிடைத்த நல்ல வேலையை உதறியது முதல் கடைசி வரை அவர் செய்த குழந்தைத்தனமான காரணங்களை அம்மா எப்போதும் வசவாக்கிக்கொண்டே இருப்பாள். அப்பா இறந்தபோது கணவன் இறந்துவிட்டான் என்பதைவிட தனது குழந்தை ஒன்று இறந்துவிட்டதாக அம்மா உணரத் தொடங்கினாள். அது அவளை ஆற்றாத துயரத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டது.

அப்பாவின் ஈமக்கிரியைகள் மடமடவென நடந்தன. எட்டாம் நாள் காரியத்திலிருந்து சுபம் வரை செய்ய ஸ்ர்ரங்கத்தில் கூடியிருந்தோம். கூட்டமாக சொந்தக்காரர்கள் சேர்ந்ததில் அப்பா இறந்த சோகம் பின்னுக்குத் தள்ளப்பட்டு எங்கள் குடும்பத்தின் இயல்பான உற்சாகம் முன்னுக்கு வந்துவிட்டிருந்தது. நானும் அம்மாவும் திடீரென்று அப்பாவை நினைத்துக்கொண்டு அழுவோம். அப்போதும் அம்மா இப்படியும் ஒரு மனுஷன் இருந்துட்டுப் போகமுடியுமா என்று சொல்வாள். இந்தக் காலத்தில் அப்பாவைப் போல வெகுளியாக இருந்து வாழ்க்கையை வெல்லவே முடியாது என்பது அம்மாவின் தீர்மானமான எண்ணம். எனக்கும் அதில் கொஞ்சம் ஒப்புதல் இருக்கவே செய்தது. அப்பாவிற்கு வீட்டுக்கு வெளியில் இருக்கும் தொடர்புகள், நட்புகள் பற்றி நான் அதிகம் யோசித்ததே இல்லை. அவரை ஒரு குழந்தையாகவும் வெகுளியாகவும் கோமாளியாகவும் பார்த்துப் பழகிவிட்டதால் அவருக்கும் ஒரு நட்பு இருக்கும், அவர்களுக்குள் அவர் கொண்டாடப்படுவார் என்றெல்லாம் நான் நினைத்துப் பார்க்கவில்லை. சில சமயங்களில் அவர் நட்பு வட்டத்தில் அவர் கிண்டலுக்கான ஒரு சந்தர்ப்பமாகவே மிஞ்சுவார் என்றுதான் நினைத்திருக்கிறேன். ஒரு மஞ்சள் பையைக் கையில் வைத்துக்கொண்டு மாநகராட்சி அல்வா கடைமுன் அவர் நின்றிருக்கும் காட்சி எனக்கு எப்போதும் வெறுப்பை அழிக்கக்கூடியது. மூச்சுக்கு முன்னூறு தடவை மந்திரம் போல வருமா என்பார். மந்திரம் 8வது கூட படிக்கமுடியாமல் பெட்டிக்கடை வைத்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தான். அவன் எப்படி அப்பாவைக் கவர்ந்தான் என்பது கடைசிவரை பிடிபடவே இல்லை.

அப்பா இறந்து அவரை வீட்டில் கிடத்தியிருந்தபோது மாநகராட்சிக் கடைக்காரரும் மந்திரமும் ஓடியாடி எல்லா வேலைகளையும் செய்தார்கள். அப்போதுதான் அவர்களுக்குள் அப்பாவிற்கு இருந்த இடம் எனக்கு புரியத் தொடங்கியது. ஒருவேளை அன்றுதான் அவர்களுக்கும் புரிந்ததோ என்னவோ. அம்மா ரொம்ப வியந்து போனாள் என்பது மட்டும் உண்மை. உண்மையில் தன் கணவனுக்கு கம்பீரமளிக்கும் அந்தக் கணத்தில் அவள் தன் கணவனின் மரணத்தை விரும்பியிருக்கக்கூடும்.

ஸ்ர்ரங்கத்தின் கொள்ளிடக் கரையில் என்னை 9 முறை மூன்று மூன்று முறையாக முங்கிக் குளிக்கச் சொன்னார்கள். நான் 27வரை எண்ணிக்கொண்டு குளித்தேன். நீர் அதிகம் இல்லை. முழங்கால் வரைக்கும் இருந்த நீரில் மண் தெளிவாகத் தெரிந்தது. மண்ணில் சிறிய சிறிய எலும்புத்துண்டுகள் புதைந்து கொண்டு நின்றன. யாரோ எப்போதோ வீசிய மாலையின் நார் ஒன்று புதைந்துகொண்டு அந்த இடத்தில் சிறிய அலையைத் தோற்றுவித்திருந்தது. அப்பா கூட இப்படித்தான். சிறிய அலையைத் தோற்றுவித்துவிட்டுப் போய்விட்டார்.

மந்திரம் சொல்லி காரியங்கள் செய்துவைக்கும் ஆச்சார் வேகமாக வரச்சொன்னார். ஒரு வாளியில் கொள்ளிடத்தின் நீரை மொண்டுகொண்டு படியேறினேன். 9ஆம் தினத்திற்கான காரியங்கள் நடந்தன. சிலைக்கு [#1] தண்ணீர் ஊற்றி மந்திரங்கள் சொன்னேன். அம்மா சிறிய விசும்பலுடன் ஸ்வாமி என்றாள். எனக்கும் கண்ணீர் வந்தது.

அன்று உணவு உண்ண ஒரு மணி ஆகிவிட்டது. மடி ஆசாரங்களைத் தீவிரமாகப் பின்பற்றும் மடம் இது. பொதுவாகவே இதுபோன்று காரியங்கள் நடக்கும் மடத்தின் ஆசாரத்தன்மை நாங்கள் அறிந்ததுதான். ஆனால் ஆசாரங்களை வீட்டில் பேணாத எங்களுக்கு அது பெரிய சவாலாக இருந்தது. ஒவ்வொருமுறையும் ஏதாவது ஒரு ஆச்சார் எதற்காகவாவது முறைத்துவிட்டுச் செல்லுவார். என் அண்ணா திருநெல்வேலி சம்பிரதாயம் இப்படித்தான் என்பார். நாங்கள் எல்லாரும் சிரிப்போம். அம்மா சும்மா இருங்கடா என்று அதட்டுவாள். உண்மையில் அது ஒரு வித்தியாசமான உலகம். மடத்தில் எப்போதும் தொலைபேசி ஒலித்துக்கொண்டே இருந்தது. யாராவது ஒருவரைப் பற்றிய மரணச் செய்தி வந்துகொண்டே இருந்தது. ஆச்சார்கள் மதுரைக்கும் திருச்சிக்கும் தாராபுரத்திற்கும் பயணமாகிக்கொண்டே இருந்தார்கள். ஆளுக்குத் தகுந்த மாதிரி பணம் பெறப்பட்டது. சிலருக்கு இலவசமாகச் செய்து வைத்ததாக தலைமை ஆச்சார் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார். மடத்தினுள் ‘மடி மடி தள்ளிக்கோங்க’ என்று கன்னடத்தில் யாராவது யாரையாவது பார்த்துச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ஒரே சமயத்தில் ஒரு குடும்பத்திற்கு எட்டாவது நாள், இன்னொரு குடுமத்திற்கு 9 வது நாள், இன்னொரு குடும்பத்திற்கு சுபம் என்று விஷேஷம் நடந்துகொண்டே இருந்தது. “பூணூலை வலக்க போட்டுக்குங்க, பூணூலை இடக்க போட்டுக்கோங்க, ஆவாகம் பண்ணுங்க” என்று ஆச்சார் சொல்லச் சொல்ல கர்த்தா அதை செய்துகொண்டிருந்தார். சிலர் எப்போதும் காய்கறி நறுக்கிக்கொண்டிருந்தார்கள். இதுமாதிரி விஷேஷங்களுக்கு எதை எதைச் செய்யவேண்டும் எதைச் செய்யக்கூடாது என்பது அவர்களுக்கு அத்துப்பிடி. வீட்டில் இதுமாதிரி காரியங்கள் வரும்போது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை வலுக்கும். அப்பா எப்போதும்போல ஒன்றுமே தெரியாமல் எதையாவது சொல்லிவைப்பார். அம்மா வைவாள். “இவ்ளோ வருஷமாகியும் எது எது செய்யணும் எது எது செய்யக்கூடாதுன்னு தெரியலையே, எப்படித்தான் வாழ்ந்தீங்களோ” என்பாள். கூடவே “15 வயசுல உங்க அம்மா உங்களைப் பெத்தா, அந்த 15 வயசு உள்ளவளுக்குள்ள புத்திதான் உங்களுக்கும் இருக்கும்” என்பாள். இன்னும் இரண்டு பேர் மடத்தின் பக்கத்தில் இருக்கும் ராகவேந்திர மடத்தில் பூஜை செய்துகொண்டே இருப்பார்கள். கடுமையான ஆச்சார அனுஷ்டானங்கள். பகல் இரண்டு மணிக்கு இந்த உலகம் ஓயும். அதுவரை அப்படி ஒரு பரபரப்பு. இப்படி ஒரு உலகம் இருப்பதாகவோ அது இவ்வளவு தீவிரமாக இயங்கிக்கொண்டிருப்பதாகவோ நான் அறிந்திருக்கவில்லை. என் தாத்தாவும் பாட்டியும் இறந்தபோது அனைத்துக் காரியங்களை திருநெல்வேலியில் வீட்டிலேயே செய்துவிட்டோம். இந்தமுறைதான் ஸ்ர்ரங்கத்தின் மடம். மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

மறுநாள் பத்தாம் நாள். அன்றுதான் முக்கியமான நாள். தீவிரமான, மனதை உலுக்கக்கூடிய சம்பிரதாயங்கள் நிகழப்போகும் நாள். ஆச்சார் என்னை அழைத்து மறுநாள் செய்யவேண்டிய காரியங்களைப் பற்றிச் சொன்னார். அவரது கன்னடம் வித்தியாசமாக இருந்தது. தமிழ்க்கன்னடம் பேசிப் பேசியே நாங்கள் பழகிப்போனதால் உண்மையான கன்னடம் எனக்கு அந்தத் தோற்றத்தைத் தந்திருக்கலாம். “காலேல நீங்களும் உங்க அம்மாவும் அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடுங்க. அவங்களை நல்லா குளிப்பாட்டி, மஞ்சள் பூசி குளிக்கச் சொல்லுங்க, பூ வெச்சிக்கிட்டு, குங்குமம் வெச்சிக்கிட்டு, வர்ற வழியில சாப்பிட்டுட்டு வரச் சொல்லுங்க. வெறும் வயிறோடு வரக்கூடாது. சுமங்கலி முகம் பார்க்க வர்றவங்க நாளைக்கே வந்து பார்த்துரட்டும். கமகம் [#2] ஆயாச்சுன்னா விளக்கு வைக்கிற வரைக்கும் யாரும் எந்த சுமங்கலியும் பார்க்கக்கூடாது. இங்கயே ஒரு ரூம் இருக்கு. அங்கயே இருக்கச் சொல்லுங்க. சரியா அஞ்சு மணிக்கு வந்துடுங்க. நிறைய காரியம் இருக்கு ஸ்வாமி. உங்க அம்மாதானே அது… அவ கூட இருக்கிறதுக்கு ஒரு சாதேவியோ சக்கேசியோ இருக்காளா? அதுக்கும் ஏற்பாடு பண்ணிடுங்க. அம்பட்டயனுக்கு நாங்களே ஏற்பாடு செஞ்சிடுவோம். காலம் ரொம்ப மாறிடுச்சு. அம்மாவை ரொம்ப கலவரப்படுத்தவேண்டாம். எல்லாம் சிம்பிளா வெறுமனே சாஸ்திரத்துக்கு செஞ்சா போதும். பாவம் வயசான ஜீவன்.”

“சரி நா பார்த்துக்கறேன்.” உள்ளூர பதட்டம் எழுந்தது.

எப்போதும் என் மகனுடன் விளையாடிக்கொண்டிருக்கும் அம்மா எதையோ பறிகொடுத்ததுபோல் விட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களில் இருந்து நீர் வழிந்துகொண்டே இருந்தது. எதையோ பறிகொடுத்தவள் என்று நான் நினைத்தது கூடத் தவறு. அவள் இந்த பத்து நாள்களில் தன் வாழ்க்கையையே பறிகொடுத்துவிட்டதாகத்தான் எண்ணினாள். இத்தனைக்கும் அப்பாவின் மரணம் எதிர்பார்க்காத ஒன்றல்ல. நான்கு வருடங்களுக்கு முன்பே அவர் இறந்திருக்கவேண்டியது. மருந்துகளின் புண்ணியத்தால்தான் அவர் உயிர்வாழ்ந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவம் எங்கள் குடும்பம் அவர்களின் வாழ்நாளில் பாராதது என்றே சொல்லலாம். அப்படி ஒரு ராஜ கவனிப்பு அவருக்கு. அதிலெல்லாம் என் மீதும் என் அண்ணா மீதும் அம்மாவுக்கு ரொம்பவே பெருமை. எங்களுக்கு அதில் கொஞ்சம் கர்வம் இருந்தது. அப்பா தன் 72 வயது வரை உயிர் வாழ்ந்ததே ஒரு அதிசயம் என்றுதான் நான் நினைத்திருக்கிறேன். அப்படி ஒரு பூஞ்சை உடம்பு. அதிகம் நடக்கமுடியாது. சுறுசுறுப்பு அதிகம் கிடையாது. சிறிய வயதிலிருந்து கணக்குப்பிள்ளையாக இருந்துவிட்டதால், ஏவி ஏவியே காரியம் செய்யும் கலை மட்டுமே தெரிந்ததிருந்தது. தான் இறங்கி ஒரு வேலையை செய்து முடித்ததாக எனக்கு நினைவில்லை. இப்படி அப்பாவின் 72 வயது ஆண்டு வாழ்வே பெரிய கொண்டாட்டத்திற்குரிய விஷயமாகவே இருந்தது. அவர் கடைசி வரையில் தான் இறப்போம் என்று நம்பவே இல்லை. என்ன ஆனாலும் தன் இரு மகன்கள் தன்னைக் காப்பாற்றி வழக்கம்போல வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள் என்றுதான் நம்பினார். அவர் நினைத்ததுபோலத்தான் ஆரம்பத்தில் நடந்தது. ஆனால் ஒரு சென்ற வாரம் வந்த சந்திர கிரஹணம் கொண்ட ஞாயிறு காலையில் அப்பா விழிக்க இயலாத மரணப் படுக்கையில் வீழ்ந்தார். அவர் கடைசிவரை ஏதோ சொல்ல வாயெடுத்தார். எங்கள் குடும்பத்தின் ஒவ்வொருவரும் அதை ஒன்றாகச் சித்திரப்படுத்திக்கொண்டார்கள். நான் இப்படி. “கடைசியில என்னை விட்டுட்டீங்க போல இருக்கேடா.”

15 மாதம் மட்டுமே வயதான என் பையன் ஓடிப்போய் அவ்வா என்று அம்மா மடியில் விழுந்தான். நான் அதட்டினேன். அம்மா இப்படி எதுவும் நடந்ததாகக் காட்டிக்கொள்ளாமல் குழந்தையின் தலையைத் தடவிக் கொடுத்தாள். அவனது மெல்லிய தலைமுடி அம்மாவின் கையில் பட, அவனுக்கு கூச்சம் எழுந்தது. முகத்தை நாணிக் கோணிச் சிரித்தான். அம்மா அணிச்சையாக, அப்பாவுக்கும் இப்படித்தான், தலைல எங்க தொட்டாலும் கூச்சம் என்றாள். அவர் உயிரோடு இருந்தவரை அவர் அறியாமல் அவர் தலையின் பின்புறத்தைத் தொட்டு அவருக்குக் கூச்சமேற்படுத்துவோம். தலையில் உள்ள கூச்சத்துக்கு எங்கள் குடும்பத்திலேயே பிரசித்தி பெற்றவர் அவர். எனக்கும் கொஞ்சம் கூச்சம் இருந்தது. ஆனால் அப்பாவின் அளவிற்கு அல்ல. அம்மா ஏதோ திடீரென்று எண்ணம் தோன்றியவளாக, “நா சொல்றத கூச்சல் போடாம கேளு. நா நாளைக்கு மொட்டை போட்டுக்கறேனே” என்றாள். அவள் சொல்வது எனக்குப் பிடிபட இரண்டு நிமிடங்கள் ஆனது. என்னால் அதை எடுத்துக்கொள்ளவே முடியவில்லை. கடுமையாகக் கூச்சலிட்டேன். பக்கத்து அறையில் பேசிக்கொண்டிருந்த அண்ணா, அண்ணி, அக்கா, பாவா (அத்தான்), சித்தப்பா சித்தி என சகலரும் ஓடிவந்தார்கள். என்னைப் போலவே அது எல்லாருக்கும் கடுமையான அச்சமும் பதற்றமும் தருவதாக இருந்தது.

சித்திதான் பதவிசாகப் பேசத் தொடங்கினாள். “பாருங்க மன்னி, உலகம் எங்கயோ போய்க்கிட்டிருக்கு. நீங்க என்ன இப்படி பேசறீங்க. உங்களை அப்படி எங்களால பார்க்க முடியும்னு நினைக்கிறீங்களா? எங்களுக்கெல்லாம் அது பெரிய தண்டனை மாதிரி இல்லையா. பாவாதான் கல்லைத் தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டார். ஒருவகையில அது எதிர்பார்த்ததுதான். நீங்க அதைவிட பெரிய கல்லை போட்றாதீங்க மன்னி. குடும்பத்துக்கே அது தாங்காது.”

“இங்க பாரு, நான் யோசிச்சுதான் சொல்றேன். எனக்கு மட்டும் என்ன சந்தோஷமா இதைச் செய்றதுல.” அம்மா அழுதாள். கண்ணைத் துடைத்துக்கொண்டு, “அவர் போயிட்டார். அதுக்கு பின்னாடி மத்ததெல்லாம் எனக்கெதுக்கு?” என்றாள்.

அடுத்து அத்தை பேசினாள். “என்ன அண்ணி ஒளர்ற? ஒனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருச்சா? அண்ணா போயிட்டா ஒனக்கு வேற ஒண்ணுமே இல்லியா? உங்கிட்ட இவ்ளோ பேசறதே தப்பு. அதெல்லா ஒண்ணும் வேணாம்டா பத்மா” என்றாள் என்னைப் பார்த்து.

மீண்டும் அனைவரும் சொன்னோம். அம்மா சொன்னாள். “ஏன் இப்படி ஆளாளுக்கு பதட்டப்படறீங்க? ஊரு உலகத்துல செய்யாததை நான் செய்யச் சொல்லலை. இது எப்பவும் நடக்கறதுதான்” என்றாள். நான் கேட்டேன், “என்னம்மா ஒளர்ற? நாம சுமங்கலி பூஜை செஞ்சப்ப நம்ம பாட்டியோட நினைவா ஒரு சாதேவி வேணும்னு எவ்ளோ அலைஞ்சோம்? ஒருத்திகூட கிடைக்கலை. காலம் அவ்ளோ மாறிக்கிட்டிருக்கு. நீ என்னடான்னா இப்பவும் நடக்கறதுன்னு கதை சொல்லிக்கிட்டு இருக்க.”

“உன் பேசிலேயே பதில் இருக்குடா பத்மா. எப்படி அலைஞ்சோம் ஒரு சாதேவிக்கு? அதை யோசிச்சுத்தாண்டா இந்த முடிவுக்கு வந்தேன். இது நம்மவங்களுக்கு நாம செய்ற உதவி இல்லையா?”

“என்ன மண்ணாங்கட்டி உதவி? ஊருல சாதேவி கிடைக்கலைன்னா உலகம் அழிஞ்சிடுமா? அன்னைக்கு நாம என்ன பண்ணோம்? சாதேவிக்குக் கொடுக்கவேண்டியதை தாமிரபரணியில விடலை? அதுமாதிரி செஞ்சிக்குவாங்க. யாரும் திருநெல்வேலியில ஒரு சாதேவி இருக்கான்னு உன்னைத் தேடிக்கிட்டு வரமாட்டாங்க”

அண்ணா ஒரே அடியாக, “இவ்ளோ எதுக்கு பேச்சு? அம்மாவுக்கு யோசிக்கமுடியலை. அப்பா போன பதட்டம். என்னவோ ஒளர்றா. அதை பெரிசாக்கவேண்டாம். நம்மளை மீறி என்ன நடந்துடப் போகுது?” என்றார். அம்மா அழத் தொடங்கினாள். அதற்கு மேல் என்ன பேசவென்று தெரியாமல் எல்லாரும் அவரவர் அறைக்குச் சென்றுவிட்டார்கள். என் மனைவியில் அண்ணியும் பேசிக்கொண்டபோது, “அத்தையோட பிடிவாதம் இருக்கே, அப்பப்பா ரொம்ப மோசம்” என்று சொல்லிக்கொண்டார்கள். அக்காவும் தலையாட்டினாள். பாவா என்னையும் என் அண்ணாவையும் தனியாக அழைத்துக்கொண்டு போனார். “என்னடா ஆச்சு உங்கம்மாவுக்கு? இங்க பாருங்கடா, அவங்க அழறாங்கன்னு சரின்னு சொல்லிடாதீங்க. மொதல்ல பாவம். ரெண்டாவது ஊர்ல எல்லாரும் நம்மளை காறித் துப்பிடுவாய்ங்க. பார்த்துக்கோங்க.” நாங்கள் சரி பார்த்துக்கறோம் என்றோம். “இன்னொரு முக்கியமான விஷயம், இதை மடத்து ஆச்சாருங்ககிட்ட சொல்லிடாத. இதுதான் சரின்னு அம்மாவை ஏத்திவிட்டாலும் ஏத்திவிட்டுருவாய்ங்க” என்றார். பாவா சொல்வதிலும் உண்மை இருக்கிறது என்றுதான் நான் நம்பினேன். உள்ளிருந்து அக்கா அழைத்தாள். அழுதுகொண்டே சொன்னாள். “அம்மாவுக்கு சகேசியா இருந்தா எந்தவொண்ணும் ஆகாம போயிடுவோம்னு பயம். சாம்ப்ளோர் வந்தா சமைச்சு போடணும்னே முத்திரை வாங்கிக்கிட்டவங்க அவங்க. இப்ப சகேசியா இருந்தா அவங்க எதையும் செய்யக்கூடாது. திதி கிதி வந்தா சமைக்கக்கூடாது. சாம்ப்ளோர் வந்தா அந்தப் பக்கம்கூட போகக்கூடாது. அம்மா மாதிரி சகேசியா இருக்கிறவங்களை சாம்ப்ளோர் பார்த்துட்டா அவங்க அன்னைக்கு முழுதும் சாப்பிடக்கூடாதாம். அவ்ளோ தோஷமாம். அன்னைக்கு ராத்திரி பௌர்ணமி வர்ற வரைக்கும் காத்து இருந்துட்டு, பௌர்ணமி தரிசனம் முடிஞ்ச பின்னாடிதான் சாப்பிடணுமாம்.” அண்ணா கேட்டார், “இதெல்லாம் யார் சொன்னா?” “நேத்து வந்தாளே அந்த கமலா அத்தை, சாதேவி..” “யார் அந்த மொட்டைப் பாட்டியா?” “அவ தாண்டா, அம்மாகிட்ட ரொம்ப நேரம் என்னவோ பேசிண்டிருந்தா. அடிக்கடி அம்மாவ ஒண்ணத்துக்கும் ஆகாம போயிட்டயேடின்னு சொல்லிக்கிட்டு இருந்தா.. அவதாண்டா எல்லாத்துக்கும் காரணம்.” நான் பெருமூச்சு விட்டேன்.

பத்தாம் நாள் அதிகாலையில் அம்மாவுக்கு வெந்நீ£ர் வைத்துக் கொடுத்தாள் சித்தி. அம்மா குளித்துவிட்டு அலங்காரம் செய்துகொண்டு வந்தாள். அவளை எந்த சுமங்கலியும் வெறும் வயிற்றுடன் பார்க்ககூடாது என்பதால் நான் தனியறையில் அவளை இருக்கச் சொன்னேன். மற்ற சுமங்கலிகள் எல்லாம் கடையில் கிடைத்த இட்லியை ஆளுக்கொரு துண்டாக வாயில் போட்டுக்கொண்டு, முந்தானையில் மஞ்சள் முடிந்துகொண்டு அம்மாவைப் பார்க்கவந்தார்கள். அம்மாவும் வெறும் வயிற்றுடன் இல்லாமல் ஒரு இட்லி சாப்பிட்டிருந்தாள். அவளைப் பார்த்தவுடன் அந்த இடமே அழுகையால் சூழ்ந்துகொண்டது. எனக்கு படபடப்பு ஏறிவிட்டிருந்தது. அண்ணா, “இதெல்லாம் என்ன சம்பிரதாய எழவோ” என்றார். அம்மாவை அழைத்துக்கொண்டு மடத்திற்குப் போனேன். அங்கு அவளைத் தனி அறையில் இருக்கச் சொல்லிவிட்டார்கள். நான் அவளுடன் இருந்தேன். சுமங்கலி முகம் பார்க்க வந்தவர்கள் வரிசையாக வந்தார்கள். வரிசையாக அழுதார்கள். சம்பிரதாயங்கள் முடிந்த பின்பு கொள்ளிடக் கரைக்குப் போனோம்.

அப்பா இறந்த மறுநாள் செய்த கிரியைகள் அனைத்தையும் மீண்டும் செய்தோம். பலிக்கு அனைவரையும் நமஸ்காரம் செய்யச் சொன்னார் ஆச்சார். ஒட்டுமொத்த குடும்பமும் விழுந்து வணங்கியது. அம்மா விடாமல் “ஸ்வாமி காப்பாத்துங்க” என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். பெண்கள் அனைவரையும் அம்மாவின் கண்ணில் படாதவாறு செல்லச் சொன்னார் ஆச்சார். அண்ணா இனி நடக்கப்போகும் கொடுமையைப் பார்க்கமுடியாது என்று சொல்லி குளிக்கப் போய்விட்டார். அம்மாவின் உடன் பிறந்தவர்கள் ஓலமிட்டுக்கொண்டே பிறந்தவீட்டுப் புடைவையைச் சார்த்திவிட்டுப் போனார்கள். அம்மாவுடன் இருந்த சாகேசி தூரத்து அத்தை. அவள்தான் கமுகம் செய்தாள். அம்மாவின் தாலியை அறுக்கவே முடியவில்லை. அம்மா அழுதுகொண்டே, “இது கட்டியா இருக்கு. அவர் இல்லையே” என்று சொன்னாள். அந்தக் காட்சியை யாரும் பார்த்துவிடக்கூடாது என்று புடைவையை விரித்துப் பிடித்திருந்த நான் கதறினேன். எல்லாவற்றின் மீதும் வெறுப்பாக இருந்தது. ஆச்சார், “அதை அறுக்கெல்லாம் வேண்டாம். கழட்டி வெச்சிடுங்க. ரொம்ப படுத்தவேண்டாம். வளையலையும் உடைக்கவேண்டாம். கழட்டி வெச்சா போதும்” என்றார். அம்மா ஆச்சாரிடம் “சாதேவி ஆகணும்” என்றார். நான் இரைந்தேன். “ஒனக்கென்ன பைத்தியமா? ஏன் இப்படி நினைச்சதை சாதிக்கணும்னு நினைக்கிற?” ஆச்சார் கொஞ்சம் அதிர்ச்சியுடன் சொன்னார், “இங்க பாருங்கம்மா. நீங்களும் எனக்கு அம்மா மாதிரிதான். எனக்குத் தெரிஞ்சு யாருமே இதை செஞ்சிக்கிறதில்லை. இதெல்லாம் வேண்டாம்” என்றார். அம்மா, “அதனாலதான் நான் செஞ்சிக்கணும்”னு சொல்றேன் என்றாள். நான் கையாலாகாமல் “அண்ணா” என்று கத்தினேன். தூரத்தில் கொள்ளிடத்தின் போக்கை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த அண்ணாவின் செவிகளைனென் குரல் அடையாமல் காற்றில் கரைந்தது.

எல்லாரும் கரையேறிய பின்பு நானும் அம்மாவும் அம்மாவுடன் இருந்த சாகேசி அத்தையும் குளித்துவிட்டு மடத்தின் தனியறைக்குச் சென்றோம். அரசல் புரசலாக அம்மா செய்த காரியம் எல்லாருக்கும் தெரிந்துவிட்டது. ஆளாளுக்கு சத்தம் போடுவது கேட்டது. சித்தி அத்தை அக்கா எல்லாரும் இனிமேல் அம்மாவை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்று சொல்லிச் சொல்லி அழுதார்கள். அண்ணாவும் மாமாவும் கடும் கோபத்துடன் அறைக்குள்ளே வந்தார்கள். அம்மாவைப் பார்த்த மறுகணத்தில் அவர்கள் கோபம் எல்லாம் போய் பெரும் ஓலமிட்டு அழுதார்கள். நான் அம்மாவின் மடியில் படுத்து விசும்பிக்கொண்டிருந்தேன். விஷயம் மெல்ல மெல்லப் பரவி அங்கிருக்கும் ஆச்சார்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்துவிட்டார்கள். அதில் ஒரு முதியவர், “இது சாதாரண காரியமில்லம்மா. நீ இப்படி பண்ணியிருக்க வேண்டாம். பண்ணிட்ட. உன் புருஷன் மேல நீ வெச்சிருக்கிற பாசத்தைக் காண்பிச்சிட்ட. எனக்கு என்ன பேசறதுன்னே தெரியலை. ஆனா இது ஒரு அசாதாரண காரியம்னு மட்டும் தெரியுது. உன் குடும்பமே வாழையடி வாழையா நல்லா இருக்கும்” என்றார். அம்மா சொன்னாள், “நீங்க பார்க்க என் மாமனார் மாதிர் இருக்கீங்க. அவரே நேர்ல வந்து சொல்றதா இதை எடுத்துக்கறேன். சரியோ தப்போ எனக்கு இப்படி செய்யணும்னு தோணிச்சு. அவர் இருக்கிறவரைக்கும் அவருக்காக இதை நான் செய்வேன்னு யாரும் சொல்லியிருந்தா நானே நம்பியிருக்க மாட்டேன். அவர் போனதுக்கப்புறம்தான் அவரோட இருப்பு தெரியுது. எல்லாம் அவன் செயல்.” எனக்குள் பலப்பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

அம்மா எப்படி இப்படிச் செய்தாள்? இந்த அம்மா புதியதல்ல. தான் நினைத்ததைத் தவிர எதையும் செய்யாதவள் அவள். இன்றைக்கு வரை அது அவளுக்கு அனுமதிக்கப்பட்டே வந்திருக்கிறது. நானும் என் அண்ணாவும் சொல்லி அவள் சில முடிவுகளை மாற்றிக்கொண்டிருக்கிறாள். மற்றபடி யார் சொல்லியும் எதற்காகவும் அவள் தன்னை மாற்றிக்கொண்டதாக எனக்கு நினைவுக்கு வரவில்லை. அப்படி வந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் அவள் தன் முடிவுக்காக சகல சொந்தக்காரர்களையும் இழக்கத் தயாராக இருந்தாள். இந்த விஷயத்தில் என்னையும் என் அண்ணாவையும்கூட இழக்கத் தயாராகிவிட்டாளோ என்னவோ. நேற்று ஆச்சார் ஒரு கதை சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு கணவனின் சிதையில் விழுந்த ஒரு பெண்ணைப் பற்றிய வர்ண்னை. அது நடந்து ஐம்பது வருடங்கள் இருக்கும். இன்றைக்கும் அந்த வெம்மை அவரைத் தாக்குவது போல அவர் சொன்னது அவர் எவ்வளவு தூரம் அதனால் வேதனைப்பட்டார் என்பதை உணர்த்தியது. அந்தப் பெண்ணின் பையன் பைத்தியமாக அலைந்து கொள்ளிடத்தின் கரையில்தான் உயிர் துறந்திருக்கிறான். ஒருவேளை நானும் என் கண்முன்னே நடந்த இந்த விஷயத்தை நினைத்து நினைத்து பைத்தியமடைந்து இந்தக் கொள்ளிடத்தின் கரையில் மடியக்கூடும். என் கண்ணீர் அம்மாவின் தொடையை நனைத்தது. அம்மா என் கண்களை துடைத்துவிட்டாள். நான் எழுந்து அம்மாவை நோக்கினேன். “ஏம்மா இப்படி செஞ்சிட்ட?” “ஒரு காரணமும் இல்லைடா. தோணிச்சு செஞ்சேன்.” “ஏன் இப்படியெல்லாம் தோணிச்சு?” “அப்பா முன்னாடி ஒரு தடவை சொல்லியிருக்றார். புருஷன் போனா மொட்டை அடிச்சிக்கிட்டு தன் அழகையே கெடுத்துக்கிறவதான் புருஷனுக்காவே வாழ்ந்தவன்னு. அதுதான்னு வெச்சிக்கோயேன்” “அப்படின்னா அப்பா வெகுளி இல்லையாம்மா?” “நீ உன் பொண்டாட்டிகிட்ட இப்படி சொல்லுவியா? அவர் சொல்லியிருக்கார். அதுலேர்ந்தே தெரியலையா அவர் வெகுளின்னு?” அம்மாவை பேச்சில் ஜெயிக்கவே முடியாது. வெளியிலிருந்து யாரோ அழைத்தார்கள். வெளியே சென்றேன். “நாஸ்வன் காசு வாங்க வந்திருக்காண்டா” என்றார் மாமா. நானும் மாமாவும் மடத்திற்கு வெளியே சென்றோம். நாவிதர் என்னைப் பார்த்தது எனக்கு என்னவோ போலிருந்தது. மாமாவிடம் அவர் கேட்டார், “என்னை ஞாபகம் இருக்கா சாமி?” “ஏண்டா ஞாபகம் இல்லாம? திருப்பதில பார்த்தோமே. மணிதானே நீ?” “ஆமா சாமி” என்றார். அடுத்து அவர் கேக்கப்போகும் வார்த்தைகளுக்காகக் காத்துக்கொண்டிருந்தேன். நான் நினைத்தவாறே கேட்டார். என்னைப் பார்த்து, “என்ன சாமி அவ்ளோ படிச்சவங்கன்னு சொல்லிக்கிறீங்க, ஊர் ஞாயம் உலக ஞாயமெல்லாம் பேசிக்கிறீங்க, இதை தடுக்க முடியலயா? திருப்பதில எத்தனையோ பொம்பளேங்களுக்கு நானும் மொட்டை போட்டுருக்கேன். இது… முடியல சாமி. கையெல்லாம் நடுங்கிருச்சு…” அதற்குமேல் அங்கு நிற்கமுடியாமல் மாமாவிடம் ரூபாயைக் கொடுத்துவிட்டு அம்மா இருந்த அறைக்குள் சென்றேன். மாமா என்னவோ அவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

அம்மா தலையை தன் முந்தானையால் மறைத்துக்கொண்டிருந்தாள். தாலி, கருகமணி எதுவுமே இல்லை. சித்தி கொடுத்த தங்க செயினை மட்டும் போடிருந்தார். ஏற்கனவே எடுப்பாக இருக்கும் பற்கள் இன்னும் விகாரமாகத் தெரிந்தன. கையாலாகாத ஒரு பாவப்பட்ட தெருநாயின் பிம்பம்தான் தெரிந்தது. அம்மா என்று மனதுக்குள் கூவிக்கொண்டே அம்மாவின் மடியில் முகம் புதைத்து அழுதேன். இந்த அம்மா ஏனிந்த தீராத வலியில் என்னைத் தள்ளினாள்? உண்மையில் ஒரு பெண்ணின் விஸ்வரூபத்திற்கு முன்னால் ஆணால் எடுபடவே முடியாதோ? பெண்கள் ஆணின் அடிமை போல இருப்பதெல்லாம், இதோ இந்த முந்தானையில் மறைந்துகிடக்கும் ஒரு பெரிய ரணம் போல, பெண்ணுள்ளே மறைந்துகிடக்கிறதோ? ஒரு பெண்ணின் தீவிர எழுச்சி என்று நினைத்தாலே எனக்கு பயமாக இருந்தது. அம்மா என் தலையை வருடினாள். நான் எழுந்து அம்மாவைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன என்பதுபோல அம்மா பார்த்தாள். அவள் தலையை மெல்ல வருடினேன். மொழுமொழுவென்றிருந்தது. என் மகனுக்கு மொட்டை போட்டுவிட்டு தடவிப் பார்த்தபோது இப்படித்தான் இருந்தது. ஒரு குறுகலான பார்வையில் அவனுக்கும் அம்மாவுக்கும்தான் என்ன பெரிய வித்தியாசம் இருந்துவிடப் போகிறது?

-oOo-

குறிப்புகள்:

குறிப்பு #1: சிலை: இறந்தவர்களை எரித்த பின்பு, எரித்த இடத்தில் மறுநாள் சாந்தம் (குளிர்வித்தல்) செய்வார்கள். பின்பு அவரைப் போன்ற ஒரு உருவத்தை மண்ணில் வரைந்து அதற்குப் பூஜை செய்வார்கள். அங்கிருக்கும் ஒரு சிறிய கல்லை எடுத்து, ஆவாஹம் செய்து, அதையே இறந்தவராக நினைத்து பூஜை செய்வார்கள். இதுவே சிலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கல்லை பத்திரமாக வைத்திருந்து 13-ஆம் நாள் பூஜை முடிந்தவுடன் ஆற்றில் எறிய வேண்டும்.

குறிப்பு #2: கமகம் (அல்லது கமுகம்): தாலி அறுக்கும் சடங்கு.

மேலும் சில அடிக்குறிப்புகள்:

* கன்னடம் பேசும் மாத்வ சமூகத்தில் கணவர் இழந்தவர்களை இரண்டு வகைகளாகச் சொல்கிறார்கள். சாதேவி என்பவர்கள் கூந்தலை மழித்துக்கொண்ட கைம்பெண்கள். சகேசி என்பவர்கள் கூந்தலை வைத்துக்கொண்டிருக்கும் கைம்பெண்கள்.

* தீவிர மரபுகளைக் கடைப்பிடிக்கும் சில மாத்வ குடும்பங்களில் சாதேவி பெண்கள் மட்டுமே தவசம், சாம்ப்ளோர்கள் வரும்போது அவர்களுக்கு சமையல் செய்து பரிமாறுவது போன்ற காரியங்களுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். சகேசி என்பவர்களை சாம்ப்ளோர்கள் காண்பதேகூட தவிர்க்கப்படுகிறது. கூந்தலை மழித்துக்கொள்வது என்பது முற்றிலும் அருகிவிட்ட காலம் என்றாலும் சகேசி பெண்கள் எதற்கும் அனுமதிக்கப்படுவதில்லை என்கிற மரபு தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

* சுமங்கலி பூஜையின் போது மாத்வ குடும்பங்களில் ஒவ்வொரு குடுமத்திற்கு ஒரு வழக்கம் இருக்கிறது. இருக்கும் உட்பிரிவுகளுக்கேற்ப இந்த வழக்கங்கள் மாறுபடும். சில மாத்வ குடும்பங்களில் இந்த சுமங்கலி பூஜையின்போது சுமங்கலிகளுக்கு உணவாக பழங்களையே பரிமாறுவார்கள். அசி ஹூ ஹுள்ள என்று இதற்குப் பெயர். இதில், இரண்டு கன்னிப் பெண்களும் அடங்குவர். இவர்களோடு, ஒரு சாதேவி பெண்ணுக்கும் இதைச் செய்யவேண்டும். (இந்த எண்ணிக்கையெல்லாம் ஒவ்வொரு குடும்பங்களுக்கு ஏற்ப வேறுபடும்.) அதாவது அசி ஹூ ஹுள்ள பழக்கம் உள்ள குடுமங்களில் சாதேவி பெண்களுக்குப் படைப்பதும் ஒரு வழக்கம். இந்த சுமங்கலி பூஜை என்பது வருடா வருடம் வரும் சுமங்கலி பூஜையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இதை கன்னடத்தில் முத்தைத என்கிறார்கள். முத்தைத என்றால் சுமங்கலி என்று அர்த்தம். (அதனால் சுமங்கலி பூஜை என்று மொழிபெயர்த்தேன்.) இந்த முத்தைத எனப்படும் சுமங்கலி பூஜை எப்போதெல்லாம் செய்யப்படுகிறது என்றால், வீட்டிலிருக்கும் பெண்கள் திருமணமாகிச் செல்கிறார்கள் என்றால் அவர்களின் திருமணத்திற்கு முன்பும், ஆண்களுக்குத் திருமணம் ஆகி வீட்டிற்கு புதுப்பெண் வருகிறாள் என்றால் அந்தப் புதுப்பெண் வீட்டிற்கு வந்தபிறகும் இதைச் செய்கிறார்கள். இந்தப் பழக்கமும் காலமாற்றத்திற்கேற்ப வழக்கொழிந்து வருகிறது. கடந்த 50 வருடங்களில் எங்கள் குடும்பங்களில் ஒரேயொரு முறைதான் இந்த முத்தைத நடந்ததாகச் சொல்கிறார்கள். 50 ஆண்டுகளில் எத்தனை திருமணங்கள் நடந்திருக்கின்றன. ஆனாலும் முத்தைத செய்யவில்லை. என் திருமணத்திற்குப் பிறகுதான் மீண்டும் முத்தைத செய்தார்கள். அவ்வளவு அருகிவிட்டது இந்த வழக்கம். இன்னும் சொல்லப்போனால் இப்போதிருக்கும் மாத்வ இளைஞர்களுக்கு இவையெல்லாம் சுத்தமாகத் தெரியாது என்றுகூடச் சொல்லிவிடலாம்.

* சாம்ப்ளோர்கள் என்பவர்கள் மாத்வ குடும்பங்களில் இருக்கும் பல பிரிவுகளின் தலைமை குரு போன்றவர். கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் சங்கராச்சாரியர்களை ஒத்தவர்கள். மாத்வர்களுக்குள் பல பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு சாம்ப்ளோர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வரும்போது அவர்களுக்கு உணவு செய்து பரிமாற பெண்கள் முத்திரை பெற்றிருக்கவேண்டும். பெண்கள் முத்திரை பெறுவது என்பது கூட எளிதானதல்ல. சுமங்கலிகளுக்கு மாதவிலக்கு முழுவதுமாக நின்ற பிறகு, ஏழு வருடங்களுக்கு பின்பு இந்த முத்திரை வழங்கப்படுகிறது. கணவன் இழந்த பெண்கள் என்றால் அவர்கள் சாதேவியாய் இருக்கும்பட்சத்திலேயே இந்த முத்திரையைப் பெறமுடியும். ஏற்கனவே முத்திரை பெற்ற சுமங்கலிகள் கணவனை இழக்கும் பட்சத்தில், அவர்கள் சாதேவியாய் மாறும் பட்சத்தில் அந்த முத்திரை அவர்களுக்குத் தொடரும். அவர்கள் சகேசியாக இருக்கும் பட்சத்தில் அந்த முத்திரை செல்லாது.

* முத்திரை என்பது சங்கு அல்லது சூரியன் போன்ற வெள்ளியானால் ஆன முத்திரையை கரி அடுப்பில் சூடு செய்து முத்திரை போன்று கையில் வைப்பார்கள். இதை செய்ய அனுமதி பெற்றவர்கள் சாம்ப்ளோர்கள் என்றழைக்கப்படும் சமூகப் பெரியவர்களே. இப்போது இவையெல்லாம் அருகிக்கொண்டு வந்தாலும், ஆங்காங்கே சில மாத்வ சங்கங்கள் இந்த முத்திரை பெறுவதற்காக அவரவர் சாம்ப்ளோர்களை அழைக்கிறார்கள். நான் மூன்றாவது படிக்கும்போது சேரன்மகாதேவியில் சாம்ப்ளோர் வருகிறார் என்று எங்கள் வீடே அல்லோலப்பட்டது மட்டும் எஞ்சிய நினைவுகளாக எனக்கு ஞாபகம் இருக்கிறது. அதற்குப்பிறகு இத்தனை வருடங்களில் எங்கள் குடும்பங்களைச் சார்ந்த சமூகங்களில் சாம்ப்ளோர் என யாரும் வரவில்லை.

* தமிழ்நாட்டில் இருக்கும் மாத்வர்கள் வீட்டில் கன்னடம் பேசிக்கொள்வதற்கு இணையாக தமிழே பேசுகிறார்கள். அப்படி அவர்கள் தமிழ் பேசும்போது வழக்குத் தமிழில்தான் பேசுகிறார்களே ஒழிய பிராமணத் தமிழில் பேசுவதில்லை.

Share

எனி இந்தியன் பதிப்பகம் நடத்தும் கருத்தரங்கு

அழைப்பிதழைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்.

அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்/வேண்டுகிறேன்.

Share

சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்

நான் ஏழாவது படித்துக்கொண்டிருந்த சமயம். தங்கராமு ஐயா என்கிற வாத்தியார் ஒருவர் இருந்தார். இவரை தமிழ் வாத்தியாராக, கணக்கு வாத்தியாராக அல்லது ஆங்கில வாத்தியாராக, எப்படி வேண்டுமானாலும் வகைப்படுத்தலாம். ஏனென்றால் எதை வேண்டுமென்றாலும் எடுப்பார். எதுவுமே எங்களுக்குப் புரியாது என்பதால் அவர் எதை எப்படி எடுத்தாலும் நாங்கள் கவலைப்படமாட்டோம். எங்கள் தலைமை ஆசிரியர் பால்ராஜ் ஐயாவிற்குத் திடீரென்று தன் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பேச்சாற்றலை வளர்க்கவேண்டும் என்கிற எண்ணம் தோன்றிவிட்டது. வித்தியாசமில்லாமல் சகட்டுமேனிக்கு யார் வேண்டுமானாலும் பேசலாம் என்கிற சட்டம் அமலில் இருந்துவந்தாலும் அது உபயோகப்படாததால், புதுச்சட்டம் ஒன்றைப் பிறப்பித்துவிட்டார். ஒவ்வொரு வகுப்பிலும் ஒருவராவது பேசவேண்டும் என்று. அதற்கு அந்த அந்த வகுப்பாசிரியர்களே பொறுப்பு. பையன்களின் பேச்சாற்றலை வளர்ப்பதைவிட தமது மானத்தைக் காத்துக்கொள்ளவேண்டும் என்கிற வேகம் பெருகிப்போந்த நிலையில், தங்கராமு ஐயாவின் கைகளில் நான் மாட்டிக்கொண்டேன்.

அவர் எழுதிக்கொடுத்த பன்னிரண்டு பக்கங்களுக்கு மேலான சுதந்திர தின எழுச்சி உரையை மனப்பாடம் செய்தேன். மனப்பாடம் செய்யும் சக்தி எனக்கு அந்தக் காலத்தில் அதிகமாக இருந்தது. அதனால் எளிதில் மனப்பாடம் செய்துவிட்டேன். குரல் வேறு கணீரென்று இருக்கும். அதனால் எல்லாரும் என்னை உசுப்பேத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

நான் மனப்பாடம் செய்த பகுதிகளை வீட்டில் சொல்லிப் பார்த்துக்கொண்டிருந்தேன். வீர உரை வேறு. நானே கப்பலோட்டிய தமிழனாக மாறிவிட்டதுபோன்ற வேகத்தில், ‘சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்’ என்று ஒப்பித்துக்கொண்டிருந்தேன். பக்கத்து அறையில் இருந்து பாஸ்கர் அண்ணா வந்தார். முதல் கேள்வி, ‘ஏண்டா, தங்கராமு எழுதிக்கொடுத்தானா?’ என்றார். அவர் எப்படி கண்டுபிடித்தார் என நான் யோசித்துக்கொண்டிருந்தபோதே, ‘இந்த ஒரு வரியை வெச்சே பத்துவருஷம் ஓட்டுறானப்பா’ என்றார். அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்த நாராயணன் என்கிற அவரது நண்பனைக் கூப்பிட்டார். ‘நாராயணா, இவன் சொல்றதக் கேளு’ என்று சொல்லி, என்னைப் பார்த்து, ‘சொல்லுடா!’ என்றார். நான், ‘சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்.’ அடுத்த நொடி நாராயணன் சத்தமான சிரிப்புடன், ‘தங்கராமு எழுதிக்கொடுத்தானா?’ என்றார். என் ஒட்டுமொத்த உற்சாகமும் வடிந்துவிட்டது. இந்த சுதந்திரம் சும்மாவே கிடைத்துத் தொலைந்திருக்கலாம் என்றுதான் தோன்றியது. மடமடவென ஒப்பிக்கும்போது, அந்த வரி வரும்போது ஒரு துணுக்குறலுடன் மெல்லத்தான் சொல்லுவேன்.

ஆகஸ்ட் 15. வகுப்பில் எல்லார் முன்னிலும் தங்கராமு ஐயா என்னைப் பேசச் சொன்னார். சும்மா வீரவசனம் பொங்கி ஓடியது. ‘சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்’ என்ற வரி வரும்போது லேசாகச் சிரித்துவிட்டு, முழுதும் பேசி முடித்தேன். தங்கராமு ஐயா, ‘என்ன எடையில பல்லக் காமிக்கிறவன்? ஒழுங்கா பேசமுடியாதா? சுதந்திரம்னா நக்கலா ஒனக்கு?’ என்றார்.

நான் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த ஆர்ட்டு (ஓவிய ஆசிரியர்) என்னைக் கூப்பிட்டு, ‘நல்லா பேசறியேப்பா… இதுக்கு முன்னாடி நிறையப் பேசிரிக்கியோ?’ என்று கேட்டார். ‘இல்லை, இதுதான் முதல்ல பேசப்போறேன்’ என்றவுடன், கையில் இருந்த பத்து பைசாவைக் கொடுத்து (1987இல்) ‘வெச்சிக்கோ’ என்றார். உடனடியாக ஓடிப்போய் குச்சி ஐஸ் வாங்கித் தின்றேன். என்னுடன் படித்த நரசிம்மன் என்னையே பொறாமையாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

எல்லாரும் வரிசையாக கலையரங்கத்திற்குச் சென்றோம். பேசப்போகிறவர்களெல்லாம் மேடைக்கு அருகில் அமர வைக்கப்பட்டார்கள். நான் ஓரமாக அமர்ந்துகொண்டேன். லேசாக பயம் வரத் தொடங்கியிருந்தது. ஏன் பயப்படுகிறேன் எனவும் கேட்டுக்கொண்டேன். என் பெயரைச் சொல்லி அழைத்தார்கள். மேடை ஏறினேன். கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமப் பள்ளியின் ஒட்டுமொத்த மாணவர் கூட்டமும் என் பார்வையில் பட்டது. எங்கு திரும்பினாலும் வெள்ளை வேட்டியும் நீல அரை டிரவுசரும் பச்சை தாவணியும் கண்ணில் பட, என் நாக்கு எழவே இல்லை. யாராவது ஓடிவந்து ஒரு டம்ளர் தண்ணி தரமாட்டாங்களா என்பது போலப் பார்த்தேன். கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, ஒப்பிக்கத் தொடங்கினேன்.

வகுப்பில், வீட்டில் பேசிய வீர வசனம், உச்ச ஸ்தாதி எதையும் காணோம். கடகடவென ஒப்பித்தேன். ‘சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்’ என்கிற வரி வந்தது. அடுத்த வரி வரவில்லை. அந்த வரியிலேயே நின்றுகொண்டிருந்தேன். பால்ராஜ் ஐயா, ‘சரிப்பா, சும்மா கிடைக்கலை. அதுக்கு இப்ப என்ன செய்யச் சொல்ற? அதச் சொல்லு மொதல்ல’ என்றார். அவ்வளவுதான். அதைச் சொல்வதையும் நிறுத்திவிட்டேன். கூட்டத்தில் கலகலவென பேச ஆரம்பித்துவிட்டார்கள். பின்னாலிருந்து யாரோ, ‘சரி போ போ’ என்று சொன்னார்கள். கீழிறங்கிவிட்டேன். ஆர்ட்டு தூரத்தில் இருந்து முறைத்தார். நரசிம்மன், ‘இதெல்லாம் தேவையா ஒனக்கு’ என்றான்.

இன்று யோசித்துப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. [தங்கராமு ஐயா அந்த வருடமே, நான் அவருக்கு பேப்பர் திருத்த கொடுத்த பேனாவைத் திரும்பத் தராமலேயே, மேலே போய்ச்சேர்ந்தார். நரசிம்மன் எங்கிருக்கிறான் எனத் தெரியவில்லை. பால்ராஜ் ஐயா ரிட்டயர் ஆகி பல மாணவர்களுக்கு நன்மை செய்தார்.]

சில தினங்களுக்கு முன்பு சடகோபனின் ‘சிறை அனுபவம்’ என்கிற நூலைப் படித்துக்கொண்டிருந்தேன். (அகல் வெளியீடு.) அப்போது மீண்டும் இந்த சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம் நினைவுக்கு வந்தது. சத்யாகிரஹியான சடகோபன் அவரது அஹிம்சைப் போராட்டத்தின் ஒருபகுதியாகச் சிறைக்குச் சென்றபோது அங்கு அவர் சந்தித்த அனுபவங்களை தொகுத்திருக்கிறார். எவ்வளவு கஷ்டப்பட்டு சத்யாகிரஹிகள் நமக்குச் சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார்கள் என்று யோசித்தபோது, ஒரு நெகிழ்வான மனநிலையில் விழுந்தேன்.

சிறையில் அவருக்குத் தரப்பட்ட உணவின் தரம், வேலையின் கடுமை, பட்ட கஷ்டங்கள், சத்யாகிரஹிகள் அல்லாத பிற கைதிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் எல்லாவற்றையும் தெளிவாக விளக்குகிறது இந்த சிறிய நூல். ஆங்கிலேயர் காலத்தில் இருந்த சிறையை எமலோகத்தில் இருக்கும் நரகத்துடன் ஒப்பிடுகிறார் சடகோபன். இன்று சிறை எந்த நிலையில் இருக்கும்? நிச்சயம் மேம்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. சுதந்திர இந்தியாவின் நிலைமைகள் பல இடங்களில் கேள்வி கேட்கப்பட்டாலும், சுதந்திரம் என்கிற ஒன்றை அனுபவிக்கும்போது அதன் மேன்மை புரிகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.இன்றைய நிலையில் யாரையும் எதையும் கேள்வி கேட்க முடிகிறது. பதில் கிடைக்கிறது, கிடைக்கவில்லை, ஆனால் கேள்வி கேட்கும் சுதந்திரம் இருக்கிறது. யாரையும் விமர்சனம் செய்யும் சுதந்திரம் இருக்கிறது. இந்த சுதந்திரத்தை பன்மடங்கு அதிகரித்திருக்கின்றன வலைப்பூக்கள். ஒருவகையில் வலைப்பூக்களின் வழியே சுதந்திர தின வாழ்த்துச் சொல்வது பொருந்திப் போகிறது.

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்

.

Share

ஒரு கவிதை, சில ஹைக்கூக்கள்

முடிவு

இணைகோட்டின்
ஆளுக்கொரு பக்கத்தில் நின்றுகொண்டு
நான் கல்லெறியத் தொடங்கினேன்
நீ எச்சிலை உமிழ்ந்தாய்
சில யுகங்கள் காலச் சுழற்சியில்
நம்மிரு இடங்களும் மாறின
அப்போது நான் எச்சில் உமிழ
நீ கல்லெறியத் தொடங்கினாய்

சில ஹைகூக்கள்

இரண்டு பக்கமும்
திறந்துகிடக்கும் வீட்டில்
மீன் தொட்டி

-oOo-

பறக்கும் காலண்டரில்
கண்ணில் படுகின்றன
கடந்த நாட்கள்

-oOo-

மரம், அதன் நிழல்
சின்னச் சின்னதாய்
வெயில்

-oOo-

அமர்ந்திருக்கும் ஈ
சத்தமின்றி நெருங்கும் பல்லி
ஒலிக்கிறது செல்ஃபோன்

-oOo-

குடைக்குள்ளிருந்து
அழுகிறான் சிறுவன்
காகிதக் கப்பலில் மழை நீர்

-oOo-

மரண வீட்டில்
ஊதுபத்தி
சிரிக்கும் குழந்தைகள்

-oOo-

Share

துக்ளக்கில் வெளியான கருத்துப்படம் (கார்டூன்)

08.08.2007 இதழில் வெளியான இந்த கார்டூனைப் பார்த்ததும் என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. கருத்துப்படம் துக்ளக் சத்யாவினுடையது.

Thanks:Thuglak

Share