குதலைக் குறிப்புகள் – 7

குதலையில் தெரு நாய்களைப் பற்றி எழுதாவிட்டால் எப்படி என்று முன்பே நினைத்திருக்கிறேன். ஆனால் நாய்களைப் பற்றி நினைத்தவுடனே எழுதிவிடமுடியாது என்பதை உணர்த்தினார் ஒரு நண்பர். காஞ்சிப் பெரியவர் நாய்களைப் பற்றி (நாயர் என்று மரியாதையாகத்தான் சொல்லவேண்டும். ஆனால் ஜாதிப்பிரச்சினையாகிவிடும் என்பதால் இப்போதைக்கு நாய்கள் என்றே இருக்கட்டும் என விட்டுவைக்கிறேன்) ‘அவை வேதஸ்வரூபம்’ என்று சொல்லியுள்ளார் என்று எடுத்துச்சொல்லி என் ஊனக் கண்ணைத் திறந்து வைத்தார் அந்நண்பர். இருந்தாலும் மீண்டும் ஊனக் கண் தோன்றாமலில்லை. போதாக்குறைக்கு என் இன்னொரு நண்பரும் இப்படி ஒரு மடல் அனுப்பி என்னை உசுப்பிவிட்டார்.

“தனித்து ஒரே ஒரு ஆளாகப் பார்க்கும்போது சோகம் ததும்பும், கருணை பொங்கும் இரக்கமே வடிவான உயிரினமாகத் தென்படும் வேதஸ்வரூபம், இரவில் ஒரு பத்துப்
பதினைந்து இதர வேதஸ்வரூபங்களைத் துணைக்கழைத்துக் கொண்டுவந்தவுடன், மெயின் கெம்ப் ஸ்வரூபமாக ஸ்வரூப மாற்றம் பெற்றுவிடுகிறது.

சென்ற வருடத்தில் ஒரே வாரத்தில் நான்கு குழந்தைகள் பகல் நேரத்திலேயே வேதஸ்வரூபங்களுக்கு பலியாகிவிட, ஊர் முழுவதும் வேதஸ்வரூபங்கள் வேட்டையாடப்பட்டன. இத்தனைக்கும் இந்த நான்கு குழந்தைகளில் இரண்டே இரண்டு
குழந்தைகள்தான் பாதுகாப்பற்ற சேரிக்குழந்தைகள். ஒரு குழந்தை நல்ல பாதுகாப்பான குடியிருப்புப் பகுதியில் வசித்த மத்திய வர்க்கத்துக் குடும்பத்துக் குழந்தை. தெருவில் விளையாடிக்கொண்டிருந்தபோது பத்து வேதஸ்வரூபங்கள் தூக்கிச்சென்றுவிட்டன. வே.ஸ்வ-க்கு பலியான இன்னொரு குழந்தை கட்டடத்தொழிலாளியின் குழந்தை. நான்கு தொழிலாளிகளின் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தபோது வேட்டையாடப்பட்டவை.

இதற்கு நாம் வேதஸ்வரூபங்களை மட்டும் குற்றம் சொல்லக்கூடாது. உண்மையில் குற்றமே சொல்லக்கூடாது. அந்தந்த பகுதி மக்கள் வேதஸ்வரூபங்களை அன்போடு நடத்தாமல், அதேசமயம் மோசமாகவும் நடத்தாமல் விட்டேத்தியாக எல்லாம் பிரம்மம் என்றிருந்து விட்டார்கள். சில இறைச்சிக்கடைக்காரார்கள் இறைச்சி மிச்சங்களை அருகிலிருந்த குப்பைக்குழியில் மலை போல் குவித்து வைக்க,அவற்றை ருசி பார்த்துவிட்ட வேதஸ்வரூபங்களுக்கு இரத்தவாடை பிடித்துப்போய் குழந்தைகளை வேட்டையாடியதாகவும் காரணம் சொன்னார்கள்.

ஆனந்தவிகடன், நக்கீரன் இதெல்லாம் வே.ஸ்வரூபங்களும் படிக்கின்றனவா என்று தெரியாது. அவர்களுக்கும் இரவு நேரத்தில் வீடு திரும்பும் சாஃப்ட்வேர் மக்களை மிகவும் பிடிக்கும். பைக்கில் வீடு திரும்பும் ஆட்களை பத்துப்பதினைந்து வேதஸ்வரூபங்கள் ஒன்றாக சேர்ந்துகொண்டு கொலை வெறியோடு துரத்தும். எல்லாம் பிரம்மமே என்று வண்டியோட்டிகளும் எந்தப் பதற்றமும் அடையாமல் ஆக்ஸிலரேட்டரை முறுக்கினால் மட்டுமே தப்பிக்க முடியும். அதிலும் இரு சக்கர வாகனங்களுக்கு நடுவே விழுந்து வண்டியோட்டியை தலைகுப்புற விழச்செய்வது இந்த ஸ்வரூபங்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. அப்படி இவர்கள் வண்டியில் அடிபட்டு விட்டாலும், உடம்பைப் பந்து போலாக்கித் தப்பித்துப் போவதில் ஸ்வரூபங்கள் கில்லாடிகள்.

நான் வேலைக்குச் சேர்ந்து ஒருவருடமிருக்கும். இருட்டுக்குப் பழகுவது போல அப்போதுதான் எனக்கு அந்த ஊர் கொஞ்சம் கொஞ்சமாகப் பழக ஆரம்பித்திருந்தது. மேலும் இப்போது போலில்லாமல் அப்போது நிறைய நண்பர்கள் ஒன்றாக இருப்போம். கல்லூரியின் மிச்ச சொச்ச சந்தோஷமான நீட்சி நாட்கள் அவை. எனக்கு நிறைய வடஇந்திய நண்பர்களும் கிடைத்தார்கள். என் நண்பனின் நண்பன் ஒரு பிஹாரி. நண்பர்களுடனான பார்ட்டியில் அறிமுகமானவன். எனக்கும் நண்பனாகிப்போனான்.

அவன் புதிதாக வாங்கிய More smiles per hour டிவிஎஸ் விக்டரில் ஒரு நாள் பின்னிரவு அவனும், அவன் நண்பனும் வேலையிலிருந்து லேட்டாக வீடு திரும்பினார்கள். மெயின் ரோடிலிருந்து திரும்பியதும் பல வேதஸ்வரூபங்கள் அவனைத் துரத்தத் தொடங்கின. அவைகளிடமிருந்து தப்பித்த்டு வேகமாக ஓட்டிய அவன் ஒரு கல் தடுக்கி வண்டி தாறுமாறாக ஓடி நிலைதடுமாறி பைக்கிலிருந்து விழுந்து கழுத்தில் பலத்த அடிபட்டு ஸ்பாட்டிலேயே பிரம்மத்துடன் கலந்துவிட்டான். பின்னிருக்கையில் அமர்ந்திருந்த நண்பன் முகமெல்லாம் சிராய்க்கப்பட்டு, ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் குழியில் மயங்கிய நிலையில் அடுத்தநாள் கண்டெடுக்கப்பட்டான்.

பிஹாரிகளைப் பற்றிய ஒரு நட்பான உருவத்தை எனக்குள் உருவாக்கியவன் அந்த நண்பன். வார்த்தைக்கு வார்த்தை சாலா என அழைத்து செளத் இண்டியன் உணவு வகைகளைப் பற்றிய அபத்த சந்தேகங்களை எழுப்பிய அவன் எனக்கு சொல்லித்தந்த BSDK என்ற கெட்ட வார்த்தைய அநிச்சையாக இன்று காலை உச்சரித்தேன்.

சொல்ல மறந்துவிட்டேன். வேத ஸ்வரூபங்கள் பிரம்மத்துக்கு அனுப்பி வைத்த அவனுடைய பெற்றோருக்கு ஒரே பையன். அவர்கள் கதறிய கதறலைக் கேட்ட நண்பர்கள் நாங்கள் ஒருமாதம் வரை ஒரு வித சோகநிலையுடனே வழக்கமான உற்சாகங்கள் இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்தோம்.”

’இதைப் போல, நகைச்சுவை கலந்த சோகத்துடன், என் போல சிறப்பாக இல்லாவிட்டாலும் சுமாராகவாவது நீங்கள் வேதஸ்வரூபங்களைப் பற்றி எழுதவேண்டாமா’ என்று கேட்டதும், எனது ஞானக்கண் மறைந்து, ஊனக் கண் திறந்துகொண்ட நேரத்தில், இன்னொரு நண்பர் நமது பாரம்பரியம், கலாசாரம், பெருமை எல்லாவற்றையும் எடுத்துக்காட்டி, மகாபாரதமே நாயில் தொடங்கி நாயில் முடிகிறது என்கிற ரேஞ்சுக்கு மிரட்டவும், எனது ஞானக்கண்ணை மீண்டும் திறந்துவைத்துக்கொண்டேன். இனி இந்நாய்களைப் பற்றி வாயே திறப்பதில்லை என்றெல்லாம் சபதம் எடுத்திருந்தேன். இருந்தாலும், வசூல்ராஜா எம் பி பி எஸ்ஸில் யாருக்கும் கண்ணடித்துவிட்டு கண்மூடிக்கொள்ளும் ஒரு நோயாளி போல, என்னுள் இந்த வேதஸ்வரூபம் பற்றிய கண் சிமிட்டல் இல்லாமல் இல்லை.

வேதஸ்வரூபங்களைப் பற்றி இலேசாகவும் நினைத்துவிடமுடியாது என்பது எனக்குத் தெரியும். நான் TACல் வேலை பார்க்கும்போது, தூத்துக்குடியில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தேன். அங்கு செல்லும் வழியில் ஒரு நாய் (வேதஸ்வரூபியை சிறிது நேரத்துக்கு நாய் என்று அழைக்கவேண்டியிருக்கிறது. பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் என்னை மன்னிக்கவேண்டும்!) என் வழியில் அடிக்கடி குறுக்கிட்டது. என்னைப் பார்த்து முன்னே வரும். சும்மா வந்தால் பரவாயில்லை. மிக மெல்லிய அடிக்குரலில் ஓர் உறுமல் கேட்டுக்கொண்டே இருக்கும். வாய் திறந்து, பற்கள் தெரிய, இரண்டு கடவாய்களிலும் நீர் வழிய கோபக் கண்களோடே எப்போதும் பார்க்கும். ஒவ்வொருமுறை செல்லும்போதும் பயந்து பயந்தே செல்வேன். இதிலிருந்து மீளும் வழியே தெரியவில்லை. எனக்கு மட்டுமில்லை, என்னுடன் இருந்த நண்பனுக்கும் இதே பிரச்சினை. அந்தவகையில் அந்த நாய் மீது எனக்கு மரியாதை இருந்தது. என்னை மட்டுமில்லாமல், எல்லோரையும் ஒரே மாதிரி நடத்தும் நாயைப் பாராட்டாமல் இருக்கமுடியுமா என்ன? கிட்டத்தட்ட ஆறுமாதங்களாக இப்படியே மிரட்டல். ஆனால் என்னையும் என் நண்பனையும் கடிக்கவில்லை. ஒருதடவை என் கால் வரையில் வந்து முகர்ந்துபார்த்துவிட்டு, வாடை பிடித்துவிட்டதோ என்னவோ, கடிக்காமல் விட்டுவிட்டது. பிஸ்கெட் எல்லாம் போட்டுப் பார்த்தேன். தின்றுவிட்டு கொஞ்சம் தெம்புடன் குலைத்தது.

பின்பொருநாள் வெளியில் சாப்பிட்டுவிட்டு ஒரு பாட்டில் தண்ணீர் குடித்துவிட்டு வெறும் பாட்டிலைத் தட்டிக்கொண்டே வந்தேன். அது ஒரு ப்ளாஸ்டிக் பாட்டில். இப்போது அக்வாஃபினா வரும் பாட்டிலை ஒத்தது. லேசாகத் தட்டினாலே நல்ல சத்தம் கேட்கும். தட்டிக்கொண்டே வந்து என் வீட்டுப்பக்கம் திரும்பினேன். திடீரென்று ஒரு புதருக்குள் இருந்து அந்த நாய் பயந்து அலறி ஓடியது. ஏன் ஓடியது என்று தேடித் தேடிப் பார்த்தேன். நான் தட்டிய பாட்டில் எழுப்பிய ஒலிக்குப் பயந்துதான் ஓடியிருக்கிறது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. மீண்டும் தட்டினேன். அது மீண்டும் ஓடியது. தூரத்தில் இருந்தே குலைத்தது. அட, இத்தனை பயந்தாங்கொள்ளி நாய்க்கா நாம் இவ்வளவு பயந்தோம் என்றே எனக்கு வெட்கமாகிவிட்டது. பின்பு அந்த நாயை விரட்டி லேசாக சத்தம் போட்டால் போதும் என்றாகிவிட்டது.

ஒருவகையில் எல்லா தெரு தேவஸ்வரூபங்களும் இப்படித்தான் இருக்கின்றன. ஒரு மிரட்டு லேசாக மிரட்டினால் ஓடிவிடுகின்றன. ஆனால் ஒரு தெருவில் இரவில் நடந்துவரும்போது இருபது முப்பது ஸ்வரூபிகள் இருப்பதைப் பார்த்தால் உண்மையிலேயே பயம் வந்துவிடுகிறது. நாம் விரட்டக்கூட முடியவில்லை. அத்தனை ஸ்வரூபிகள். இந்த நாய்களை விரட்டினால் ஓடிவிடும் என்று பெண்களுக்கோ, குழந்தைகளுக்கோ தெரிவதில்லை. ஒருவித பயத்தோடு நடக்கும்போது ஏழறிவு கொண்ட வேதஸ்வரூபங்கள் கண்டுகொண்டுவிடுகின்றன, ‘இவன் நமக்கு அடிமைடா’ என்று. துரத்தத் தொடங்கிவிடுகின்றன. இந்த வேதஸ்வரூபங்களுக்கு நடப்பவரை விட, பைக்கில் வருபவர்களைக் கண்டால் மிகவும் பிடித்துவிடுகிறது. ஒரே விரட்டுதான்.

நேற்று காலையில் என் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு பையனை ஒரு வேதஸ்வரூபி கடித்துவிட்டார். தெருவே அல்லோகலப்பட்டது. அந்தப் பையனைத் தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினார்கள். கிட்டத்தட்ட மதியம்தான் அந்தப் பையனைக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். தெருவே கூடி நிற்க, ஒரு வாளியில் நீரை வைத்து திருஷ்டி கழித்துக்கொண்டிருந்தார் அந்தப் பையனின் தாய். தூரத்தில் அவனைக் கடித்த ஸ்வரூபி, மேலே என் நண்பர் சொல்லியிருப்பது போல, அத்தனை சாதுவாக, பாவமான கண்களுடன், ‘என்னைப் பாத்தா கடிக்கிற மாதிரியா இருக்கு சொல்லுங்க’ என்று வாலாட்டிக்கொண்டு சாந்தஸ்வரூபியாக உட்கார்ந்திருந்தார்.

அந்தப் பையனைப் பார்த்தேன். நடு உச்சந்தலையில் ஒரு கடி. கழுத்தில் ஒரு கடி. கழுத்தைச் சுற்றிக் கட்டு. அது அப்படியே நீண்டு தலைவரையில் சென்றது. என் உடம்பில் ஓர் உதறல். என் ஞானக்கண் மறைந்து ஊனக்கண் ஒன்று திறந்துகொண்டது. ஓர் இலக்கியவாதி என்றால் அறச்சீற்றம் வேண்டாமா? சாரு – சிவரமான் சண்டையில்தான் கருத்துச் சொல்ல வக்கில்லை என்றாலும், இந்த ஸ்வரூபியின் அத்துமீறலைக் கண்டிக்கக்கூடவா தைரியம் கிடையாது?

அந்தப் பையனைப் பார்க்கவே பாவமாக இருந்தது. ‘லீவு அன்னைக்கு ஏன் பையனை வெளியில் விட்ட’ என்று சிலர் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் கேட்பதும் சரிதான். ஞாயிறு லீவு என்று வேதஸ்வரூபிகளுக்கு யாராவது சொல்லித் தந்தார்களா? இப்படி சமூக அக்கறையில்லாமல் வேதஸ்வரூபிகளைப் புறக்கணித்திருப்பது சமூகக் குற்றமல்லவா?

இந்த வேதஸ்வரூபிகள் கூட்டமாகச் சேர்ந்து செய்யும் தொல்லையும் கொஞ்சநஞ்சமல்ல. ஒரு மாதத்துக்கு முன்னால் இரண்டு வேதஸ்வரூபிகள் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். இரண்டு ஸ்வரூபிகளின் உடலெங்கும் இரத்தம் வழிந்து ஓட, கம்யூனிஸ்டுகள் போல கடும் சண்டை போட்டுக்கொண்டிருந்தன. சுற்றிலும் ஒரு பெரிய கூட்டமே பயந்து நடுங்கிக்கொண்டிருந்தது என்பதனை அறிந்துகொண்டு சண்டை போட்டார்களோ என்னவோ தெரியாது, சண்டை என்றால் உங்கவீட்டுச் சண்டை எங்க வீட்டுச் சண்டை இல்லை. கடுமையான சண்டை. கல்லைக் கொண்டு எறிந்தாலும் வேதஸ்வரூபிகள் சண்டை போடுவதை நிறுத்துவதில்லை. ‘நரி இடம் போனா என்ன வலம் போனா என்ன மேல விழுந்து பிடுங்காம இருந்தா சரி’ என்ற பழமொழியெல்லாம் தெரிந்த மக்கள் ஓடிப்போய்விட்டார்கள். உண்மையில் இந்த வேதஸ்வரூபிகள் தங்கள் சண்டை வேகத்தில் நம்மைக் கடித்துவைத்தால் என்ன செய்வது என்று எனக்கும் திகிலாகத்தான் இருந்தது. அதான் கம்யூனிஸ்டுகள் போன்ற சண்டை என்றேனே, ஆழமான விவாதம்தான்.

எங்கள் வீட்டைச் சுற்றி எப்போதும் ஒரு வேதஸ்வரூபி திரிந்துகொண்டிருப்பார். ஓர் எலி ஓடும் சத்தம் கேட்டாலும் அரண்டு போய் எங்காவது ஒளிந்துகொள்வார். நான் கையைத் தூக்கினாலே அடங்கி ஒடுங்கி ஈனஸ்வரத்தில் கத்துவார். அப்படிப்பட்ட பயந்த சுபாவமுடைய அவரும் ஒருநாள் ஒரு குழந்தையைக் கடிக்க இருந்தார். மயிரிழையில் தப்பித்தது அக்குழந்தை. இப்படி பயந்த சுபாவமுடைய வேதஸ்வரூபிகளே இப்படி என்றால், மற்ற விரமிகு வேதஸ்வரூபிகளைப் பற்றி என்ன சொல்ல?

எங்கள் பகுதி கவுன்சிலர் ரொம்ப நல்லவர். வேதஸ்வரூபிகள் என்று பெரியவர் சொன்னது அவருக்கும் தெரியுமோ என்னவோ, எத்தனை முறை சொல்லியும் அவர் இந்த வேதஸ்வரூபிகளை இல்லாமலாக்க எதையுமே செய்யவில்லை. ‘ஒரு மாசத்துல பெருகிடுதுங்க சார்’ என்பார்.

தினமும் பத்திரிகையில் அங்கொன்றுமாக இங்கொன்றுமாக ஒரு பையனையாவது ஒரு நாய் கடித்துவிடுவதைப் படிக்கிறோம். ஆனால் இதுகுறித்த கடுமையான நடவடிக்கையை எந்த ஓர் அரசும் எடுப்பதில்லை. மேனகா காந்தி கண்மூடித்தனமாக எல்லா உயிர்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்கிறார். இப்படிப்பட்ட நாய்களை என்ன செய்வது? இவற்றுக்கெல்லாம் குடும்பக் கட்டுப்பாடு செய்யவேண்டும் என்பது ஒரு குரல். இந்த நாய்களை என்ன செய்வது என்பது பற்றி ஏதும் பேசில்லை. எல்லா நாய்களையும் பாதுகாத்துப் போஷிக்கவும் முடியாது. கொன்றுவிடவேண்டியதுதான். இந்த நாய்களால் ஏற்படும் தொல்லைகளையும், உயிரிழப்பையும் பார்க்கும்போது, இவற்றைக் கொல்வதில் தப்பே இல்லை என்றுதான் தோன்றுகிறது.

இப்படி நாய்களைக் கொல்லலாம் என்று எழுதியதைக் கண்டு என் மீது ‘மனிதாபிமானற்றவன்’ என்கிற கண்டனங்கள் பாயக்கூடும். இருந்தாலும் என்ன செய்வது, வேறு வழியே இல்லை, இந்த வேதஸ்வரூபிகளைக் கொன்றுவிடவேண்டியதுதான்.

நான் முன்பு சொன்னதுபோல இன்றும் என் ஊனக்கண் திறந்துகொண்டுவிட்டதை உணர்கிறேன். இதை போஸ்ட் செய்துவிட்டு, பெரியவர் புகைப்படத்துக்கு நேராக சாஷ்டாங்கமாக காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுவிடவேண்டியதுதான். வேதஸ்வரூபிகளைக் கொல்லச் சொன்னதற்கு அவர் மன்னிப்பாரா என்று தெரியவில்லை. ஆனால் கொன்றுவிடுவதைத் தவிர வேறு வழியிருக்குமா என எனக்கும் தெரியவில்லை. ஒருதடவைக் கொன்றுவிட்டு, பின்பு அவை பெருகாமல் பார்த்துக்கொண்டுவிட்டால் பிரச்சினை கட்டுக்குள் வந்துவிடும். மனுக் கொடுக்கப் போகலாம் என்றால், அந்தத் தெரு முழுவதும் இதே பிரச்சினைதான் என்கிறார் கௌன்சிலர்.

Share

குதலைக் குறிப்புகள் – 6

நீண்ட நாள்கள் ஆயிற்று எவ்வித சிந்தனையுமின்றி கைபோன போக்கில் ஒரு பதிவு எழுதி. இதனை கொஞ்சம் கூட அநாகரிகமே இல்லாமல் பதிவுலகில் மொக்கை என்று அழைக்கிறார்கள். ‘பிக்பாக்கெட் அடிக்கிறதுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா அடிக்கிறது நானா இருக்கணும்’ என்ற அடிப்படையில் இன்றைய ‘குதலை மொக்கை’ மேலே செல்லப்போகிறது.

பள்ளிக்குச் செல்லுதல் பற்றி. சென்ற ஆண்டு என் மகன் ப்ரீகேஜியில் படித்தான். முதல்நாள் அவனைக் கொண்டு போய் சேர்த்தபோது, அவனுக்கு ராஜ மரியாதை கிடைத்தது. இரண்டரை வயதான குழந்தைகளின் கூட்டம் விஜயதசமி அன்று அப்பள்ளியில் நிரம்பிக் கிடந்தது. ஆப்பிள்களால் அலங்கரிங்கப்பட்ட ஒரு வகுப்பறையில், ஒரு பீடத்தில் சரஸ்வதி அமர்ந்திருக்க, ஓர் ஆசிரியை எல்லாக் குழந்தைகளையும் கைப்பிடித்து அரிசியில் ஓம் என (தமிழில்!) எழுதி அக்ஷ்ராப்யாசம் செய்துவைத்தார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு ஹிந்துச்சூழல் நிறைந்த பள்ளியில் என் மகன் படிக்கவேண்டும் என்பது என் ஆர்வமாக இருந்தது. ஹிந்துச்சூழல் மிகுந்த பள்ளிகளில் என் மகனைச் சேர்க்க நான் கொடுக்கவேண்டிய தொகை ஹிந்துமதத்தின் ஆகிருதியைவிடப் பெரியதாக இருந்தது. இதில் ப்ரீகேஜிக்கே இந்த விலை. ப்ரீகேஜி, எல் கேஜி, யூகேஜி என்கிற விஷயங்களே இல்லாமல், நேரடியாக ஒன்றாம் வகுப்பு படித்து, மூன்றாம் வகுப்பில் ஆங்கில எழுத்துகள் கற்றுக்கொண்டு, இன்று மேதைகளாகப் பலர் இருக்கிறார்கள்! அப்படியானால் ப்ரீகேஜிக்கே இந்தத் தொகை கொடுப்பது எதற்கு என்று புரியவில்லை. எனக்குக் கட்டுபடியாகக்கூடிய தொகையில், எனக்கேற்ற ஒரு பள்ளியைக் கண்டுபிடித்தேன்! இப்போதைக்கு இது போதும் என்று நினைத்துக்கொண்டு அங்கே சேர்த்தேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ப்ரேயரில் எல்லா மாணவர்களுக்கும் சந்தனம் வைத்துவிடுகிறார்கள். ஹிந்துமதமல்லாத மற்றக் குழந்தைகள் வைத்துக்கொள்வதில்லை. பள்ளியும் அதைக் கட்டாயப்படுத்தவில்லை. பாராட்டவேண்டிய விஷயம். எல்லாம் நன்றாகவே இருக்கிறது படிப்பைத் தவிர என நினைத்துக்கொண்டேன். மாணவர்களுக்குப் படிப்பு சொல்லித் தரும் விஷயத்தில் இப்பள்ளி போகவேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது.

இப்படி ப்ரீகேஜிக்கு போய்க்கொண்டிருந்த என் பையன் பள்ளியை ஒரு சீரியஸான விஷயமாக நினைக்கவில்லை. முதல் நாள் ராஜமரியாதையுடன் சென்று அக்ஷ்ராப்யாசம் செய்துவிட்டு கூடவே அழைத்துவந்துவிட்டோம். மறுநாள் பள்ளிக்குச் செல்ல அவனை ஆயத்தப்படுத்தியபோது மிக மகிழ்ச்சியாகக் கிளம்பினான். முதல்நாளைப் போலவே அன்றும் கூடவே அழைத்துக்கொண்டு வந்துவிடுவார்கள் என நினைத்துவிட்டான் போல. ஆனால் அன்று அப்படி நடக்கவில்லை. அவனது சுதந்தரத்தில் எத்தனை பெரிய குறுக்கீடு. எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? அழுது தீர்த்துவிட்டான். பள்ளிக்குச் செல்வதே அழுகை என்றாகிவிட்டது. ‘மழை வர்ற மாதிரி இருக்குல்ல,’ ‘வயித்த வலிக்குது’ எல்லாம் இரண்டரை வயது வாயில் வரத்தொடங்கிவிட்டன. கிளம்பும் வரை லீவு என்று சொல்லிவிட்டு, அந்த நேரம் வந்ததும் அலேக்காகத் தூக்கிக்கொண்டுபோய் பள்ளிக்கு விட்டுவிட்டு வந்துவிடுவேன். ஒருவழியாகப் பள்ளி என்னும் தொல்லை தீர்ந்து, முழுத்தேர்வு கழிந்து விடுமுறை வந்தது.

மீண்டும் பள்ளிக்குச் செல்லும் காலமும் வந்தது. எல் கே ஜி. பெரியவனாகிவிட்டான். ஆனாலும் முதல்நாள் அதே அழுகை. இந்த அழுகை இரண்டாம் நாளே காணாமல் போய்விட்டது. அங்கே விளையாட நண்பர்கள் கிடைத்துவிட்டார்கள். பள்ளியைக் கண்டதும் துள்ளிக்கொண்டு ஓடுகிறான். தன்னை அழைத்துக்கொண்டு செல்ல சீக்கிரம் வந்துவிடாதே என்று தன் அம்மாவிடம் சண்டை போடுகிறான். ‘பசங்கள்லாம் ஒரே அழுகை’ என்று என்னிடம் தினமும் சொல்கிறன். ‘யாராது ஸ்கூலுக்குப் போக அழுவாங்களா’ என்கிறான்!

பள்ளியில் இவன் படிக்கிறானா, சண்டை போடப் போகிறானா என்பதே சந்தேகமாக இருக்கிறது. தினம் ஒரு பையனுடன் வழக்கு. நான் சும்மா இல்லாமல் ‘உங்க ஸ்கூல்ல எப்பவும் அ ஆதான் சொல்லித்த்ருவாங்களா’ என்று கேட்க, அதையே அவனும் அவன் டீச்சரிடம் கேட்டுவைத்திருக்கிறான். இப்படியாகக் கழிகிறது இவனது பள்ளிக்காலம்.

பள்ளிக்காலம் என்பது எத்தனை முக்கியமானது என்பதை நான் உணர்கிறேன். இன்று கிழக்கு பதிப்பகத்தின் அலுவலக விஷயமாகப் பள்ளிகளுக்குச் செல்லும்போதெல்லாம், மாணவர்களைக் காணும்போதெல்லாம் நான் எதையோ இழந்துவிட்டது போன்ற நினைவுக்கு வருகிறது. இந்த சோகம் இதனால் மட்டுமே எழுந்த சோகமா என்றால் நிச்சயம் இல்லை என்றே சொல்லுவேன். மாணவர்களைக் காணும்போதெல்லாம் ஏதோ அடிமைகளைக் காணுகிற சோகமும் உடன்சேர்ந்தே எழுவதைப் பார்க்கமுடிகிறது. இந்த மாணவர்கள் பள்ளியினாலும், பள்ளி ஆசிரியர்களாலும், பாடத்தினாலும் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல.

ஒரு பத்தாம் வகுப்பு மாணவிக்கு டியூசன் எடுத்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருக்கும். இப்போதும் அதே பாடம்தான் என நினைக்கிறேன். நம் பாடத்திட்டத்தின்படி பாடங்களைப் புரிந்துகொள்ள, ஒரு நல்ல புத்திசாலியான மாணவனால் மட்டுமே முடியும். சராசரி மாணவர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. பாடத்திட்டத்தின் கடுமை அத்தகையது. நான் எத்தனையோ முறைகளில் ஒரு விஷயத்தைச் சொல்லிக்கொடுத்தும், அந்த மாணவரால் அதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. உண்மையில் நான் அதை என் கல்லூரியில்தான் படித்தேன்! பாடத்திட்ட முன்னேற்றம் என்பதை கல்வியாளர்கள் கல்லூரியிலிருந்து பள்ளிக்கும், பள்ளி வகுப்புகளில் மேல் நிலையிலிருந்து உயர்நிலைக்கும் உயர்நிலையிலிருந்து இடைநிலைக்கும் மாற்றுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த அபத்தமான கொள்கையினால் ஒரு கல்லூரி மாணவன் ஒரு காலத்தில் புரிந்துகொள்ள அவஸ்தைப் பட்டதை ஒரு மாணவன் பள்ளிகளிலேயே புரிந்துகொள்ளவேண்டிய அபத்தம் நேர்கிறது. பாடத்திட்டத்தை இந்த ஆசிரியர்கள் நடத்தும் முறையைப் போன்ற கேவலமான ஒன்றைக் காணவே முடியாது. எனக்கு பத்தாம் வகுப்பெடுத்த ரமணி டீச்சரும் சிரில் மேரி டீச்சரும் பாடத்தை அப்படியே மனப்பாடம் செய்து அடிக்குரலில் இருந்து குரலை எழுப்பி கத்திக்கத்திச் சொல்லிக்கொடுத்துக் கொன்றார்கள். இன்றும் தவளையையும் கரப்பான்பூச்சியையும் பார்த்தாலே குலை நடுங்குகிறது எனக்கு. ஒரே நிமிடத்தில் கரப்பான் பூச்சியைக் கொன்றுவிடமுடியும். ஆனால் இந்தக் கரப்பான்பூச்சியின் உடலமைப்பைப் படிக்க நானடித்த குட்டிக்கரணங்கள் நினைவுக்கு வருகின்றன. ஆங்கிலத்தை அப்படியே தமிழில் எழுதி அதைப் பெயர்களாகச் சொல்வார்கள். பெரிப்ளானட்டா அமெரிக்கானா என்பதை எப்படி உச்சரிக்கவேண்டும் என்று தெரியாமல் குழம்பும்போது, இதே போன்ற ஆயிரம் பெயர்கள் நினைவுக்கு வந்து பயமுறுத்தும். படிக்காமலும் விடமுடியாது. மதிப்பெண் போய்விடும்.

நல்ல மதிப்பெண்கள் பெறுவது எளிமையான விஷயமல்ல. காலையில் 4 மணிக்கு அலாரம் வைத்து எழுந்திருக்கவேண்டும். ஒருநாள் எழாவிட்டாலும் அம்மா தலையில் அடித்துக்கொண்டு அழுவாள். அண்ணா ஓட ஓட அடித்தாலும் அடிப்பார். டிவி பார்க்கக்கூடாது. ஏதேனும் ஒரு பரிட்சையில் 75 மதிப்பெண்கள் எடுத்துவிட்டால், ஏதோ ஒரு பெண்ணைக் கற்பழித்துவிட்டவனைப் பார்க்கும் பாவனையில் என் அக்கா ‘என்னது 80க்கு கீழயா?’ என்பார். இத்தனைக்கும் அவள் வாழ்நாளில் என் அக்கா 40ஐத் தாண்டியதே இல்லை. தன்மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை தன் மீது தீர்த்துக்கொள்கிறார்களோ என்று ஒரு மாணவன் சிந்திக்காமல் பள்ளி வாழ்க்கையைக் கழிக்கவே முடியாது. என்ன காரணம்? எல்லாம் மதிப்பெண்ணை மையமாக வைத்துச் சுற்றும் கல்விமுறை. 35 மதிப்பெண் பெற்ற ஒரு பையன் பாஸ். 29 மதிப்பெண் பெற்றுவிட்ட ஒரு பையன் பெயில். 97 மதிப்பெண் பெற்றுவிட்ட ஒரு மாணவன் முதலாமவன். 96 பெற்றுவிட்டவன் இரண்டாமவன். இருவரும் எவ்வளவு புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று நாம் ஆழ்ந்து நோக்கத் தொடங்கினால் பெரிய பெரிய அதிர்ச்சிகள் நமக்குக் கிடைக்கலாம்.

மதிப்பெண்ணை மையமாகக்கொண்ட தேர்வுமுறையில் பள்ளி ஆசிரியர்களை மட்டும் குறை சொல்லிப் பிரயோஜனமில்லை. இருக்கும் நேரத்தில் பாடமும் நடத்தி, கேள்வித்தாள் தயாரித்து, திருத்தி, மற்ற விஷயங்களிலும் மாணவர்களைப் பங்கெடுக்க வைத்து – எத்தனைதான் செய்வார் ஓர் ஆசிரியர்? இந்த லட்சணத்தில் அரசுப் பள்ளிகளில் ஓர் ஆசிரியர் ஓய்வுபெற்றால் அந்த இடத்தில் இன்னொரு ஆசிரியரை வேலைக்கு வைக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என யாருக்கும் தெரியாது. இருக்கும் ஆசிரியரே இந்த வேலையையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அவர் என்ன செய்வார்? படிக்காத மாணவர்களை மாடு போல சாத்துவார்.

மாடு போல சாத்துவார் என்பது உணர்ச்சி மதிப்பீட்டில் சொல்வது அல்ல. உண்மையாகவே ஆசிரியர்கள் படிக்காத மாணவர்களை மாடு போலச் சாத்துவார்கள். அதுவும் மாடுகளை அடிக்க உதவும் அதே மணிப்பிரம்பு. அந்த மணிப்பிரம்பு வாங்கவும் மாணவர்களே காசு தரவேண்டும். தனது காசாலேயே தன்னை அடிக்கும் ஓர் அரசை ஒரு மாணவன் பள்ளியிலேயே கண்டுகொண்டுவிடுகிறான். இதில் மரத்துப்போகும் மாணவனுக்கு ஓர் அரசு இதனையே செய்யும்போது அதைப் பெரியதாக எடுத்துக்கொள்ளத் தோன்றுவதில்லை போல. இப்படி கிட்டத்தட்ட பாடத்திட்டத்துக்கு, மதிப்பெண் தேர்வுமுறைக்கு, ஆசிரியர்களுக்கு அடிமைகளாக இருக்கும் ஒரு மாணவனைப் பார்க்கும்போது, நான் இழந்த மாணவப்பருவம் தரும் சுகமான சோகத்தைவிட, தங்கள் சுதந்திரத்தை இழந்துகொண்டிருக்கும் ஒரு மாணவனின் சோகம் பெரியதாகத் தாக்குகிறது.

மாணவர்கள் செய்யும் துப்புரவு பற்றி வெங்கட் எழுதியிருக்கிறார். நான் இதைப் பற்றியும் எழுத நினைத்திருந்தேன். வெங்கட் சொல்வது மாணவர்கள் தங்கள் சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்திருக்க இது உதவும் என்பது. இது சரிதான். ஆனால் எல்லாப் பள்ளிகளும் இந்த உயர்ந்த நோக்கத்தில் இதைச் செய்வதில்லை. நோக்கம் உயர்வாக இருந்து, மாணவர்கள் தூய்மை செய்யவேண்டிய பழக்கத்தை ஏற்படுத்திய பள்ளிகளில் கூட, இது மாணவர்களின் கடமையாக மாறி, அதற்கான தண்டனைகளிலெல்லாம் முடிந்திருக்கிறது. நான் படித்த பள்ளி ஒன்றில் நாங்களே துப்புரவு செய்யவேண்டும். அங்கு பள்ளிக்கு வரும் பல மாணவர்களின் பெற்றோர் கூலி வேலைக்குச் செல்பவர்கள். அவர்களோடு கூட ஒத்தாசைக்குச் செல்லும் மாணவர்கள் இந்தத் துப்புரவு வேலைக்கு வராமல் அவதிப்படுவதும், அதற்காகவே அவர்கள் மாடுபோல் அடிக்கப்படுவதெல்லாம் கொடுமை. சுற்றுப்புற விழிப்புணர்வு என்பது ஒருவித அழுத்தமாக மாறுவதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். இப்பள்ளியில் துப்புரவுக்கென்று பணியாளர்கள்கூட இருக்கமாட்டார்கள்! அப்படியே ஒன்றிரண்டு பணியாளர்கள் இருந்தாலும் அவர்கள் ஒரு சேரில் உட்கார்ந்துகொண்டு மாணவர்களை விரட்டிக்கொண்டிருப்பார்கள். நாம் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவது பாடம் படிக்கவே அன்றி இப்படி ஓர் அடிமைத்தனத்துக்கு வால்பிடிக்க அல்ல. என்னைத் துப்புரவு செய்யச் சொல்லி அடித்த வாத்திமார்களையெல்லாம் கல்லால் அடிக்கவேண்டும் என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். சுற்றுப்புறச் சூழலைத் துப்புரவாக வைத்துக்கொள்ளும் நல்ல நடிப்பில்தான் இத்தகைய கொடுமைகள் எல்லாம் தொடங்குகின்றன. இதுமட்டுமல்ல. எப்போதேனும் ஆண்டுவிழாவோ மற்ற விழாவோ வந்துவிட்டால் ஒவ்வொரு வகுப்பு மாணவனும் செத்தான் என்றே சொல்லவேண்டும். துப்புரவு என்பது சுற்றுப்புறச்சூழலைத் தூய்மையாக வைத்திருத்தல் என்கிற அழகான வரியில் அமிழ்ந்துவிடுகிறது. மாணவர்கள் வகுப்பறைக்குள்ளே இருக்கும் எல்லா பெஞ்சுகளையும் வெளியில் வைத்து, அவற்றைக் கழுவி, வகுப்பறையைப் பெருக்கிக் கழுவி, மாணவிகள் கோலமிட்டு – பள்ளிகள் ஒருவருடத்தில் ஒரு பாடத்துக்கு இத்தனை வகுப்புகள் என்று ஒதுக்குகின்றன. அப்படி ஒதுக்கும் பள்ளிகள் இப்படி பாழாகும் வகுப்புகளுக்கும் சேர்த்தே நேரம் ஒதுக்குகின்றனவனா? அந்த நேரங்களில் நடத்தப்படாமல் விடப்படும் பாடங்களுக்கு யார் பொறுப்பு? நான் படித்த பள்ளிகளில் – நான் அரசுப்பள்ளிகளில் மட்டுமே படித்தேன் – எந்தப் பள்ளியிலும் என் பாடத்தை ஒழுங்காக யாருமே முடித்ததே இல்லை. ஏன் இந்த நிலை? எந்தப் பள்ளிக்கும், எந்த ஆசிரியருக்கும், எந்த அரசுக்கும் பொறுப்பே இல்லை. மாணவர்களை இவர்கள் ஏதோ சின்னப்புள்ளைங்களாக மட்டுமே பார்க்கிறார்கள்.

என் தனிப்பட்ட அளவில் நான் சாதியின் கொடுமைகளைக் கண்டதும் இப்பள்ளிகளிலேயே. நான் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவன். பிராமண – அபிராமண ஆசிரியர்களுக்கு இடையில் இருந்த பிரச்சினைகள் என்னையும் பாதித்தன. ஆனால் அவற்றுக்கெல்லாம் காரணம் எனக்கு இப்போதுதான் புரியத் தொடங்குகிறது. என்னுடன் படித்த, நன்றாகவே படிக்காத ஒரு பிராமண மாணவனை ஒரு பிராமண ஆசிரியர், ‘ஐயர் குலத்த கெடுக்க வந்த கோடாரிப் பாம்பே’ என்று சொல்லிக்கொண்டே ஓட ஓட விரட்டி அடித்தார். பிராமணரல்லாத ஆசிரியர்களெல்லாம் அந்த பிராமண ஆசிரியரைக் கண்டு சிரித்தார்கள். என்னை ஓர் ஆசிரியர் அடித்துக்கொண்டிருக்கும்போது தூரத்தில் இருந்து இன்னோர் ஆசிரியர் ‘அய்யருங்க அது சாத்துங்க’ என்றார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இதன் மூலகாரணம் ஆசிரியர்களுக்கு இடையே நிலவிய ஜாதிப் பிளவுகள்தான். ஆனாலும் மாணவர்களை இதில் பலிகடாவாக்குவது என்ன நியாயம். எனக்கு நேர்ந்த அவமானங்களைப் போலவே, எனக்கு ஆதரவாக சில அதிகார மீறல்களும் நிகழ்ந்திருக்கின்றன என்பதனையும் மறுப்பதற்கில்லை. இரண்டுக்குமே நான் பொறுப்பாளி அல்ல என்பதே இங்கே பிரச்சினை. ஒரு பிராமண ஆசிரியர் வெளிப்படையாகவே கல்லூரியில் என்னைப் பற்றி இன்னொரு பிராமண ஆசிரியரிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த செய்முறைத் தேர்வில் நான் நூறு சதம் வாங்கினேன். அவர் சொல்லியிருக்காவிட்டாலும் நான் நிச்சயம் நூறு சதம் வாங்கியிருப்பேன் என்றாலும், உடனிருந்த மாணவர்கள் கிண்டல் செய்துகொண்டிருந்தார்கள். பள்ளிகளில் இலலாத ஒரு புரிந்துகொள்ளும் திறன் கல்லூரிப் பருவத்தில் வந்துவிட்டதால், என் நண்பர்களும் இதனை ஒரு சிரிப்பதற்குரிய நிகழ்வாகவே எடுத்துக்கொண்டார்கள். மேலும் திருநெல்வேலி பகுதிகளில் சாதிகளைச் சொல்லிப் பேசிக்கொள்வது வெகு இயல்பாகவே நடக்கும். இதனால் நண்பர்கள் இதனை சகஜமான ஒன்றாகவே எடுத்துக்கொண்டார்கள்.

ஓர் உலகத்தையே திறந்துகாட்டவேண்டிய பள்ளிகள், தங்கள் பொறுப்பின்மையாலும், அர்ப்பணிப்பு உணர்வின்மையாலும், குழப்பமான பாடத்திட்டங்களாலும், மதிப்பெண்ணை மையமாக வைத்த தேர்வு முறைகளாலும் சீரழிந்துகொண்டிருக்கின்றன. கிராமங்களில் பள்ளிகளின் வீழ்ச்சி இன்னும் மோசமானது. கிராமங்களில் படிக்கும் மாணவர்களால் சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்கும் மாணவர்களோடு போராடமுடியாமலேயே போய்விடக்கூடிய நிலை தொலைவில் இல்லை. இவற்றையெல்லாம் மாற்ற ஆசிரியர்களாலேயே முடியும். என் தாத்தா ஒரு ‘மாதிரி ஆசிரியர்.’ அவரைப் போன்ற அர்ப்பணிப்பு உணர்வை இன்றைய ஆசிரியர்களிடம் காண்பது அரிது. கடந்த தலைமுறையின் ஆசிரியர்களைப் போன்ற பொறுப்புணர்வு மிக்க ஆசிரியர்கள் உருவாகாவிட்டால், இந்த மாணவர்களின் வீழ்ச்சியையும், ஒட்டுமொத்த அடிமைகளின் உருவாக்கத்தையும், என்ன படிக்கிறோம் என்று புரியாமல் எழுத்தை மனனம் செய்யும் ஒரு தலைமுறையையும் ஒன்றுமே செய்யமுடியாது.

Share

Turtles Can Fly – ஈரானியத் திரைப்படம்

இந்தக் கட்டுரையை தமிழ்ஹிந்து.காமில் வாசிக்கலாம்.

Share

ஒலிக்காத குரல்கள் – கோபி கிருஷ்ணனின் ‘உள்ளே இருந்து சில குரல்கள்’

சொல்வனம் இணையத்தளத்தில் இக்கட்டுரை வெளியாகியுள்ளது.

கட்டுரையை வாசிக்க: http://solvanam.com/?p=248

Share

ராஜமார்த்தாண்டன் – மனதின் கலைஞன்

கட்டுரையை வாசிக்க – தமிழ் ஹிந்து.காம் செல்லவும்.

Share

கவிதை

வெக்கை மிகுந்த
வியர்வை இரவொன்றில்தான் கண்டேன்
வீட்டுக்குள் வளர்ந்து கிடக்கும்
தனித்த மரமொன்றை.
கிளைகள் வீட்டு உத்தரத்தை உரசியிருக்க
வேர்கள் வீடெங்கும் பரவிக்கிடந்தன
கைக்கெட்டிய அரிவாளும் கோடாலியும்
உலோக ஒலியெழுப்பி
மரத்தின் கீழ் மண்டியிட்டன
தனியறைக்குள் உறங்கிக் கிடக்கும்
மெல்லிய சுவாசத்தை அடக்கி
அதிர்ந்தன மரத்தின் இலைகள்.
மரத்தின் கிளைகள் மேலும் நீண்டபோது
வெளியிருந்து ஒரு குருவி
சிறகடித்துப் பறந்து
உள்வந்து அமர்ந்தது.
மரத்தை சூழத் தொடங்கியது
குருவியின் இசை.

Share

குதலைக் குறிப்புகள் – 5

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் குதலையோடு வருகிறேன். 🙂 தொடர்ந்து ஏகப்பட்ட விசாரிப்புகள் ஏன் எழுதவில்லை என்று. வேண்டாம், விஷயத்துக்கு வருவோம்.

Kraurya என்று ஒரு கன்னடத் திரைப்படம் பார்த்தேன். லோக் சபா டிவி புண்ணியத்தில். கிரீஷ் காசரவள்ளி இயக்கத்தில் இப்படம் என் மனதை பாதித்தது. ஒரு கதை சொல்லியின் கதை. கிழவியாக வரும் ரேணுகாம்மாவின் நடிப்பு உலகத் தரத்தில் இருந்தது. அவரது தூரத்து உறவினராக வரும் தத்தாத்ரேயாவின் நடிப்பும் மிக யதார்த்தமாக இருந்தது. தத்தாத்ரேயாவின் நடிப்பை இன்னும் சில படங்களில் பார்த்தேன். எல்லாமே லோக் சபா சானல் உபயம்தான். எல்லாப் படங்களிலுமே தத்தாத்ரேயா மிக எளிமையாக, மிக யதார்த்தமாக, அற்புதமாக நடித்திருக்கிறார். நான் பார்த்த தத்தாத்ரேயாவின் படங்களை மட்டும் வைத்துக்கொண்டு, நம்ம ஊர் டெல்லி கணேஷுடன் இவரை ஒப்பிடலாம் எனத் தோன்றுகிறது. டெல்லி கணேஷ் தனது எல்லை எதுவெனத் தெரிந்து நடிக்கும் ஒரு நடிகர். பிரகாஷ் ராஜ் போல எல்லா கதாபாத்திரங்களையும் ஒரே ரீதியில் அணுகும் நடிகர்களுக்கு மத்தியில், டெல்லி கணேஷ் போல, தத்தாத்ரேயா போல ஓரிருவரே எஞ்சுகிறார்கள். இதுபோன்ற திரைப்படங்கள் விஷயத்தில் லோக் சபா சானல் செய்து வரும் பணி மகத்தானது. காங்கிரஸ் கட்சியே உலகின் சிறந்த கட்சி என்று சுற்றி வளைத்து அறிவிக்கும் லோக்சபா சானலின் ஆகப் பெரிய குற்றத்தைக் கூட இது போன்ற திரைப்படங்களுக்காக மன்னிக்கலாம். மக்கள் தொலைக்காட்சி ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் ஞாயிறு மதியம் ரஷ்யத் திரைப்படங்களை ஒளிபரப்புகிறது. இதுவரை பார்த்த ஒன்றிரண்டு படங்கள் என்னைக் கவரவில்லை. அதனால் தொடர்ந்து பார்ப்பதில்லை. இப்படி ஒரே வகையான படங்கள் என்று ஒளிபரப்பாமல், மக்கள் தொலைக்காட்சி உலகத் திரைப்படங்களை ஒளிபரப்புவது நல்லது. இன்றைய நிலையில், மக்கள் தொலைக்காட்சியைத் தவிர, வேறெந்த சானலும் இதைச் செய்துவிடமுடியாது. வால்ட் டிஸ்னியின் திரைப்படங்களை சன் டிவி ஒளிபரப்பத் தொடங்கியிருக்கிறது. குழந்தைகல் குதூகலிக்கிறார்கள். படங்களின் தரமும் உச்சத்தில் இருப்பதால், யாரும் ரசிக்கத்தக்கவண்ணம் படங்கள் இருக்கின்றன. இந்தவாரம் தி வைல்டு படம் பார்த்தேன். சென்ற வாரத்தில் தி இன்கிரிடிபிள்ஸ். இரண்டுமே அசத்தலாக இருந்தன.

-oOo-

தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுவிட்டது. நான் அதிமுக+ 25 வெல்லும் என நினைத்திருந்தேன். மக்களோடு நெருங்கிப் பழங்குங்க பாஸ் என்ற அறிவுரை கிடைத்தது! இன்றைய நிலையில் ஊடகங்கள் மக்களிடமிருந்து முற்றிலும் விலகிவிட்டன என்கிறார் லக்கிலுக். மக்களோடு நெருங்கிப் பழகி, அடுத்த் தேர்தலில் பிஜேபி 240 இடங்களில் வெல்லும் எனச் சொல்ல இப்போதே முடிவெடுத்திருக்கிறேன். ஆசையைத்தானே சொல்லமுடியும்! நான் TACல் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். 1998 நாடாளுமன்றத் தேர்தல். 1996ல் நடந்த படுதோல்விக்குப் பின்பு ஜெயலலிதா சந்திக்கும் தேர்தல். கிட்டத்தட்ட ஜெயலலிதா குற்றவாளியாகவே எல்லாரும் கருதப்பட்டார். அத்தேர்தல் முடிவு குறித்த கணிப்புகள் எல்லாவற்றிலும் அதிமுகவுக்கு 0 இடமே கிடைக்கும் எனச் சொல்லப்பட்டிருந்தது. எங்கள் கம்பெனியிலும் ஒரு சர்வே நடத்தினார்கள். ஒரு சீட்டில் எந்தக் கூட்டணிக்கு எவ்வளவு என எழுதித் தரவேண்டும். நான் திமுகவுக்கு 40 எனவும், அதிமுகவுக்கு 0 எனவும் எழுதிக்கொடுத்தேன். கிட்டத்தட்ட 32 பேர் கலந்துகொண்ட அந்த கணிப்பில் 30 பேர் அதிமுகவுக்கு 0 எனச் சொல்லியிருந்தார்கள். ஒருவர் மட்டும் 1 இடம் அளித்திருந்தார். ஒருவர் மட்டும் அதிமுகவுக்கு 30, திமுகவுக்கு 10 என எழுதியிருந்தார். உடனே கண்டுபிடித்துவிட்டோம் அது யாராக இருக்கவேண்டுமென்று. கம்பெனியில் பிராமண ஆதரவாளர் என்றும், ஜெயலலிதா விசுவாசி என்றும் எல்லோராலும் கருதப்படும் கணேஷ் கார்த்திகேயனாகத்தான் இருக்கவேண்டும் என்று எல்லோருமே சொன்னோம். அவரும் ஒப்புக்கொண்டார். எல்லோரும் சிரித்தோம். முடிவு வந்தது. அவர் ஹீரோவாகிவிட்டார். அப்போது அவர் சொன்னார், ‘மக்கள் பல்ஸ் பிடிக்கத் தெரியணும் பிரசன்னா’ என்று. அன்றிலிருந்து இன்றுவரை இன்னும் பல்ஸ் பிடிக்கத் தெரியவில்லை. ஆனால் ஒன்றைக் கவனித்திருக்கிறேன். நான் என்ன சொல்கிறேனோ அது அச்சு அசலாக மாறி வருகிறது. சென்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு 170ம் திமுகவுக்கு 60ம் கிடைக்கும் எனச் சொன்னேன். இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு 27ம், திமுகவுக்கு 13 எனவும் சொன்னேன். அடுத்தமுறை முதலில் எந்த கூட்டணிக்கு எவ்வளவு என்று சொல்லிவிட்டு, கட்சிகளின் இடத்தை மாற்றிவிட உத்தேசித்திருக்கிறேன். வாங்க நெருங்கிப் பழகலாம் மக்களே.

-oOo-

பாஜக கூட்டணி தோல்வி அடைந்துவிட்டது. தோல்வி எதிர்பார்த்த ஒன்றே. ஆனால் இத்தனை மோசமாகத் தோற்கும் என எதிர்பார்க்கவில்லை. முக்கியக் காரணம், பாஜக மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடாமல், கொள்கை ரீதியான விஷயங்களுக்கு மட்டுமே போராடுகிறது. அயோத்தியில் கோயில், சேது சமுத்திரத் திட்டம், மதமாற்றம் – இப்படி போராடியிருக்கும் கட்சி, கடைநிலை மனிதனின் சோற்றுக்காக வீதியில் வந்து போராடியிருக்கிறதா என்று யோசித்தால், ஒன்றுமே இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அதிமுகவும், திமுகவும் தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி வந்திருப்பதைப் பார்க்கலாம். ஆனால் பாஜக எல்லாவற்றிலும் ஒரு ‘வெள்ளை காலர்’ அணுகுமுறையை மட்டுமே மேற்கொள்ளுகிறது. வெள்ளைக் காலர் அழுக்காகாமல் பதவி கிடைக்காது என்பதை பாஜக உணரவேண்டும். அத்வானியின் அரசியல் வாழ்க்கை பிரதமர் பதவியைக் காணாமலேயே முடியப்போகிறது. சர்தார் வல்லபா படேல் போல. சர்தார் வல்லபாய் படேலுக்கு நேரிடையான எதிரி இல்லை. அத்வானிக்கு திறமை குறைந்த ஒரு நேரிடையான எதிரி இருந்தும் அவரால் வெல்லமுடியவில்லை. தமிழக பிஜேபியைப் பற்றிப் பேசுவது நேர விரயம். இல கணேசன் யாருக்காகப் போட்டியிட்டார் என்பதே தெரியவில்லை. கோயமுத்தூரில் ஏன் ராதாகிருஷ்ணன் போட்டியிடவில்லை என்பதும் மர்மம். அத்வானி கன்னியாகுமரியிலும் திருச்சியிலும் பிரசாரம் செய்யாமல் ஏன் சென்னைக்கு வந்தார் என்பதெல்லாம் நல்ல காமெடியான விஷயங்கள். இவர்களின் அதிகபட்ச திறமையே இந்திய அளவில் நூறு இடங்களோடு திருப்தி பட்டுக்கொள்ளுவதுதான்.

-oOo-

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார். இன்னும் சில வலைத்தளங்கள், சில நண்பர்கள் அவர் சாகவில்லை என்று நம்புகிறார்கள். நான் நிச்சயம் பிரபாகரன் இறந்துவிட்டதாகவே நினைக்கிறேன். சரணடையச் சென்ற இடத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிற யூகமே எனக்கு ஏற்கத்தக்கதாக இருக்கிறது. இலங்கையில் இருக்கும் தமிழர்களின் வாழ்வில் இனியாவது அமைதி மலர இறைவன் அருளவேண்டும். நிறைய தமிழர்களின் உணர்வு சம்பந்தப்பட்ட இவ்விஷயத்தில் வேறொன்றும் எனக்குச் சொல்லத் தோன்றவில்லை.

-oOo-

FM நிகழ்ச்சிகளை சில சமயம் கேட்பதுண்டு. நான் கேட்டவரை எல்லா நிகழ்ச்சிகளுமே திரைப்படப்பாடல்களோடு சம்பந்தப்பட்டவையே. நேரலை நிகழ்ச்சிகளில் நேயர்கள் பங்குபெறும்போது கூட, இடையிடையே பாடல்களையே ஒலிபரப்புகிறார்கள். திரைப்படம் என்பதன் சுவடே இல்லாமல் ஒரு நிகழ்ச்சியாவது இருக்குமா என்பது சந்தேகமே. இங்கேயும் மக்கள் தொலைக்காட்சி போல மக்கள் பண்பலை என்ற ஒன்று வந்தால்தான் உண்டு. நிச்சயம் வரவேண்டும். திரைப்படப் பாடல்களைத் தவிர எதையும் மக்கள் கேட்கமாட்டார்கள் என்கிற முடிவு ஆபத்தானது. இதை நிச்சயம் உடைக்கவேண்டும். ஒரு பண்பலையில் குறைந்தது 10 சதவீதமாகவது திரைப்படம் சம்பந்தப்படாத நிகழ்ச்சிகள் இருக்கவேண்டும். இல்லையென்றால், அடுத்த தலைமுறை வெறும் திரைப்படப் பாடல்களால் நிரப்பப்பட்ட ஒரு பொதியாகவிடும். இப்போது நாம் இக்கட்டத்தை எட்டிவிட்டோம். அதுவே இதிலிருந்து மீளும் ஒரு உத்வேகத்தைத் தருமானால் அது மகிழ்ச்சியான விஷயமாகவே இருக்கும். மக்கள் பண்பலையைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன், அப்படி ஒன்று வருமா என்று!

-oOo-

கருணாநிதியைப் பற்றி ஒரு வார்த்தைகூட எழுதாமல் எப்படி குதலையை முடிப்பது. கருணாநிதிக்கு வெற்றிக்கனி கிடைத்த ஒரே நாளில், அவரது அரசு மைனாரிட்டி அரசுதான் என்னும் – அவருக்கு மட்டும் தெரியாத, உலகத்துக்கே தெரிந்த – உண்மையை அழுத்தம் திருத்தமாக உணர்த்தியிருக்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் செய்திருக்கும் ஒன்றிரண்டு நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று. இனிமேல் மைனாரிட்டி அரசு என்றால் என்ன என்பது போன்ற கேள்விகளை ஜெயலலிதாவிடம் கருணாநிதி கேட்கமாட்டார் என நம்புவோம்.

Share

கிழக்கு மொட்டை மாடியில் பன்றிக்காய்ச்சல்!

28 மே 2009, வியாழக்கிழமை, மாலை 6.00 மணிக்கு “பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல்” பற்றி மருத்துவர் புருனோ மஸ்கரனாஸ், கிழக்கு மொட்டை மாடிக்கூட்டத்தில் பேசுகிறார்.

கடந்த சில வாரங்களில் பன்றிக் காய்ச்சல் (Swine Fever) என்பது பற்றி நிறையக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மனிதர்களைத் தாக்கும் A (H1N1) வகை இன்ஃப்ளூயென்ஸா வைரஸ், மெக்சிகோ நாட்டில் பலரைப் பீடித்தது. அங்கிருந்து பரவி இன்று உலகில் பல நாடுகளில் 10,000 பேருக்கும்மேல் இந்த வைரஸ் தாக்கியுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

நம் அரசும் பத்திரிகையில் நிறைய விளம்பரங்களைச் செய்கிறார்கள். தமிழகத்தில் இரண்டு பேரை இந்த வைரஸ் பீடித்துள்ளது என்கிறார்கள். இந்தக் காய்ச்சல் pandemic என்று சொல்லப்படக்கூடியது. இது சட்டென்று பரவி, நாட்டின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடி வரை செல்லக்கூடியது. பல நாடுகளுக்கும் செல்லக்கூடியது.

இதைக் கண்டு நாம் பயப்படவேண்டுமா? இந்த வைரஸ் எப்படி மனிதர்களை பாதிக்கிறது? இதனைத் தடுக்கமுடியுமா? ஏன் பரவுகிறது? நாம் என்ன தடுப்பு முயற்சிகளைக் கையாளவேண்டும்? தனி மனிதர்களாகிய நாம் என்ன செய்யவேண்டும்? மருத்துவர்கள் என்ன செய்யவேண்டும்? அரசு என்ன செய்யவேண்டும்?

இப்படிப்பட்ட பல கேள்விகளுக்கும் விடை சொல்லப்போகிறார் மருத்துவரும் பிரபல வலைப்பதிவருமான புருனோ.

தவறாமல் கலந்துகொள்ளுங்கள்.

”பன்றிக்காய்ச்சல் மனிதனுக்கு ஏன் வருகிறது?” என்பது போன்ற ஆழமான கேள்விகளுடன் வருபவர்கள் அனைவருக்கும் என் நன்றி.

Share