Facebook Notes – 2

புவியிலோரிடம் – பாதி (1-ஜூலை-2011)

பாராவின் புவியிலோரிடம் வாசித்துக்கொண்டிருக்கிறேன். தமிழில் இது போன்ற ஒரு கதையை (நாவல் என்று சொல்ல இயலவில்லை) நான் வாசித்ததில்லை. முதல் பாகம் வரை படித்திருக்கிறேன். பாராவின் வழக்கமான வரிகள் தந்த தடையை மீறி நாவலுக்குள் நுழைவது ஒரு சவாலாகவே இருந்தது. மேலும் வாசுவாக பாராவையே நினைக்கத் தோன்றுவதையும் மீற முடியவில்லை. இந்த இரண்டு விஷயங்களையும் மீறியதும் நாவல் சட்டெனத் திறந்துகொண்டது. வெளிப்படையான ஒரு அரசியல் பிராமணக் கதையை  இதுவரை யாரும் எழுதவில்லை என நினைக்கிறேன். ஒரு இடத்தில் மணிரத்னத்தை நினைவுபடுத்தும் காதல் காட்சிகள். இந்த பாரா எனக்கு புதுசு. ஆயிரம் அபுனைவுகள் எழுதியிருந்தாலும் ஒரு எழுத்தாளன் ஒரு தடமாகப் பதிவு செய்யப்படுவது புனைவில்தான் என்ற எண்ணம் ஒரு அனுபவமாக எழுகிறது. முதல் பாகத்தில் பாரா ராக்ஸ். குறிப்பாக ஆசாரியார் வரும் காட்சிகளில் அவரது மனைவி பேசும் வசனங்கள். ஒரு நாவலுக்குண்டான அழகை சில இடங்களில் பார்க்கமுடிகிறது என்றாலும், அரசியலை சொல்ல நினைக்கும் அவசரமும் கதை சொல்ல நினைக்கும் வேகமும் அதனை உடைக்கின்றன. இரண்டாம் பாகம் நாளை படிக்கப் போகிறேன். சிறிய புத்தகம்தான். வசதி கருதி இரண்டு பாகமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. பாதி இன்று, மீதி நாளை.

 

மாவீரன்-லு (30-ஜூன்-2011)

தெலுகு டப்பிங் மாவீரன் படம் பார்த்தேன். எந்த ஒரு லாஜிக்கும் இல்லாமல் ஒரு படம் வந்தால் தமிழ்நாட்டைப் போலவே அதனை தெலுகு சகோதரர்களும் விழுந்து விழுந்து வரவேற்பது கண்டு பெரு மகிழ்ச்சி ஏற்பட்டது. எத்தனை மொக்கையாக இருந்தாலும் ஹைப் கூட்டப்பட்ட ஃப்ளாஷ் பேக்குக்க்கு தெலுகு சகோதரர்கள் அடிமையாகிவிடுவது கண்டு ‘ஆஹா நம் ரத்தமல்லவா’ என்ற மகிழ்ச்சி ஓங்கியது. 50 ஆண்டுகளாக ஒரே காதல் காட்சியை திரும்ப திரும்ப எடுத்தும் அதை விடாமல் ரசிக்கும் தெலுகு மக்களை நினைக்கும்போது நெக்குருகி நிற்கவேண்டியிருக்கிறது. விறுவிறுப்பு என்னும் பேரில் அடுத்தடுத்த காட்சிகளிலேயே அடுத்தடுத்த சம்பவங்கள் தடால் தடால் என நடப்பது கண்டு, நம் உற்ற தோழன் தெலுகு திரைப்படமே என்ற நினைப்பு வந்து நம் நெஞ்சை மயிலிறகால் வருடுகிறது. மறக்காமல் பாருங்கள் மாவீரன். இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை டப்பிங் திரைப்படம். வசனம் படு பிரமாதம். ப்ராணன் என்ற வார்த்தை எத்தனை தடவை வருகிறது என்று கண்டுபிடித்துச் சொன்னால் மாவீரன் படத்துக்கே 10 டிக்கெட் இலவசம். இதுபோக சென்னைத் தமிழும் உண்டு. ஆஹா. அட்டகாசம். அதிலும் ஹீரோ போட்டிருக்கும் செயின் பல இடங்களில் பூணூலை ஞாபகப்படுத்துகிறது. சிரஞ்சீவிகாருவின் மகன்காரு நடித்து படம்காரு வந்திருக்கிறது. தெலுகுகாருகள் இப்படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிவிட்டார்களாம். தமிழ்காருகளை நம்பி டப்பிங் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். நாமும் தமிழ்காருகள் ஆவோம். ஆல் தெலுகு வணிக சினிமா ரசிகர்காருகளுக்கு நம் வந்தனமுலு.


ஜூன் 26, 2011

விடுதலைப் புலிகள் இருந்தபோதுகூட இலங்கையில் உள்ள தமிழர்கள் படும் துயரங்கள் குறித்து வருத்தம் இருந்துகொண்டுதான் இருந்தது. ஆனால் இலங்கைத் தமிழர் ஆதரவு என்பதே புலிகள் ஆதரவுதான் என்னும் ஒரு மாயை நிலவியதால், அதிலிருந்து விலகி நிற்க விரும்பிய தமிழகத்தமிழர்களே அதிகம். இன்று புலிகள் தோற்கடிப்பட்டுவிட்ட நிலையில், தமிழர்கள் ஒட்டுமொத்தமாக இலங்கைத் தமிழர்கள் படும் இன்னல்களைப் பற்றிப் பேசவும் அவர்களுக்காக குற்றவுணர்ச்சியுடன் வருந்தவும் ஆயத்தமாகும்போது, மீண்டும் புலி ஆதரவு கோஷம் தலை தூக்குகிறது. இது நிச்சயம் தமிழகத் தமிழர்களை பின்னடைவு கொள்ள வைக்கும். தமிழகத் தமிழர்களின் ஆதரவே தேவையில்லை என்று எண்ணுபவர்கள் இதனை எளிதாக எடுத்துக் கொள்ளலாம். தமிழக தமிழர்களின் ஆதரவும் முக்கியம் என்று எண்ணுபவர்கள், இந்த புலி ஆதரவு இல்லாமல், தமிழகத் தமிழர்களின், இந்தியர்களின் ஆதரவைக் கோரும் வகையில் செயல்படுவது நல்லது. புலி ஆதரவு என்பது இன்று வரையில் தமிழகத் தமிழர்களுக்கு ஆகாத ஒன்று. இதனை மனத்தில் கொண்டு ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் செயல்படுவதே புத்திசாலித்தனம். புலி ஆதரவு இல்லாமல், அதே சமயம் ஈழத் தமிழர்களுக்காக, அவர்களின் இன்னல்களுக்காக மெழுகுவத்தி ஏற்றிய அனைவருக்கும் நன்றிகள். இனி தமிழுணர்வாளர்கள் முன்னெடுக்கப் போவது புலி ஆதரவையா அல்லது ஈழத் தமிழருக்கான ஒருமித்த ஆதரவையா என்பதை அவர்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.

 

ரஜினி பத்தி நெண்டே நெண்டு வரி (17-ஜூன்-2011)

ரஜினி டிஸ்சார்ஜ் ஆனதும் முதன்முதலாக ஜெயலலிதாவிடம் பேசியதைத் தொடர்ந்து நடுநிலையாளர்களும் முற்போக்காளர்களும் கலைஞர்களும் கட்டுரையாளர்களும் கடும் மனநெருக்கடி அடைந்து ரஜினியின் மனநிலை தொடங்கி நம்பகத்தன்மை வரை அலசி எதற்குமே ரஜினி லாயக்கில்லை என்ற உண்மையை உடைத்துப் போட்டு வடிவேலு போன்ற மன உறுதி கூட இல்லாதவர் என்றெல்லாம் பேசி தங்கள் கறாரான பார்வையையும் அறச்சீற்றத்தையும் வெளிப்படுத்தி எங்கே நாம் பேசியது ரஜினி ரசிகர்களுக்குத் தெரியாமல் போய்விடுமோ என்று அவர்களுக்கெல்லாம் அழைப்பு விடுத்து முடிந்த அளவு அவர்களுக்குத் தெரியுமாறு தனது மீது வெளிச்சம் அடித்து குட்டிக்கரணம் அடித்து முடித்து ஏன் கருணாநிதி கூடவே இருந்து ஜால்ரா அடிக்கும்போதே உனக்கு தெரியலையா என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு அட அப்பவே ஏன்யா நீ கேக்கலை என்ற பதில் கேள்வியையெல்லாம் மறந்துவிட்டு ரஜினியை முடிந்த அளவு திட்டி ஓய்ந்த ஒரு காலையில் பார்த்தால்

 இந்த ’மூளைகெட்ட பிஸினஸ்மேன்’ ரஜினிப்பய இன்று காலை கருணாநிதியையும் அழைத்து பேசியிருக்கிறார். இப்போதே அதே நடுநிலையாளர்களும் முற்போக்காளர்களும் கலைஞர்களும் கட்டுரையாளர்களும் மீண்டும் முதல் இடத்தில் தொடங்கப் போகிறார்கள் என்ற செய்தி கேட்டு நான் கலவரப்பட்டு நிற்கும் வேளையில் சொல்வதெல்லாம், உங்க மேல டார்ச் அடிச்சுக்குங்க, அது உங்க உரிமை, ஆனா என் முன்னாடி ஆடாதீங்க என்பதுதான்!

Share

இடஒதுக்கீடு மற்றும் மேற்படுத்தப்பட்ட ஜாதிகள்

இன்று முதல் புதிய வலைத்தளத்தில். இதனை சாத்தியமாக்கிய பா.ராகவன், கணேஷ் சந்திராவுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.

புவியிலோரிடம் நாவலை படித்தேன். நீண்ட நாள்களாகவே நண்பர்கள் இதனைப் படிக்கச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நாவலில் தொடப்பட்டிருக்கும் கருவைப் பொருத்தவரையில் இது மிக முக்கியமான நாவல்தான். பாராவின் வாழ்நாள் பெஸ்ட் இந்த நாவல் என்பதே என் கருத்து. பிராமணர்களில் மிக மோசமாகப் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை, பிற ஜாதிகளுக்குத் தரப்படும் இடஒதுக்கீட்டைச் சார்ந்து இந்நாவல் பேசுகிறது. அதிலும் நன்றாகப் படிப்பு வராத பிராமணர்கள் ஏழைகளாகவும் இருந்துவிட்டால் அவர்களின் நிலை என்னவாகும் என்பதை இந்த நாவல் முக்கிய பேசுபொருளாக வைக்கிறது.

இனி நாவலை விட்டுவிடலாம். 🙂

இடஒதுக்கீடு விஷயத்தில் எனக்கு உள்ள சில கருத்துகளைச் சொல்லிவிடுகிறேன். இடஒதுக்கீடு என்பது இந்தியா போன்ற ஒரு நாட்டில் நிச்சயம் அவசியமானதே. இடஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதில்தான் எனக்குள்ளே சில கேள்விகள் எழுகின்றன.

இடஒதுக்கீடு சமூகநீதியை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டிருக்கிறது – என்கிறார்கள். இங்கே சமூக நீதி என்பதை நம் எளிமைக்காக ஜாதி என்று எடுத்துக்கொள்வோம். ஜாதியை ஒட்டியே இடஒதுக்கீடு அமைந்துள்ளது. ஒரு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பிறக்கும் ஒருவர் அவர் பெறவேண்டிய சமூக நீதிக்காகவே இடஒதுக்கீடு அவசியமாகிறது. கச்சிதம். அதில் உள்ள பொருளாதார ரீதியாக முன்னேறியவர்களும் இச்சலுகையைப் பெறலாம். இதில் எனக்குள்ள தார்மிகக் கேள்விகளையெல்லாம் புறம்தள்ளிவிட்டு, நான் இதையும் ஏற்கிறேன். ஆண்டாண்டுகாலமாக அமுக்கப்பட்ட, அநீதி செய்யப்பட்ட ஒரு சமூகம் முன்னேறவேண்டும் என்பதில் ஒவ்வொரு இந்தியருக்கும், ஒவ்வொரு ஜாதியினருக்கும் (பிறப்பால் என்றே கொள்ளவும்) பொறுப்பு உள்ளது என்றுதான் நினைக்கிறேன்.

ஆனால் இதைச் செயல்படுத்தும்போது ஏன் பிராமணர்களில் (எனவே மேற்படுத்தப்பட்ட சாதிகளில்) உள்ள படிப்பறிவற்ற, அதே சமயத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களைப் பலிகொடுக்கவேண்டும்? இதைப் பற்றி பெரும்பாலானவர்கள் பேசாமலேயே இருக்கிறார்கள். பார்ப்பனீய முத்திரை என்பது முக்கியக் காரணமாக இருக்கலாம்.

நான் இங்கே பிராமணர் என்று மட்டும் சொல்வது ஒரு வசதி கருதி மட்டுமே. இதனை ஒட்டுமொத்தமாக மேற்படுத்தப்பட்ட சாதி (ஃபார்வேர்ட் கிளாஸ்) என்றே கொள்ளலாம். எல்லா மேற்படுத்தப்பட்ட சாதிகளும், தங்கள் ஜாதி அடையாளத்தைக் கூடவே வைத்துக்கொண்டு, எப்படியோ ஒருவகையில் இடஒதுக்கீட்டை அனுபவித்துவிடமுடியும் என்கிறார்கள். இது உண்மை என்றாலும், இதைப் பற்றியும் எனக்குப் பெரிய பிரச்சினைகள் இல்லை. என்னுடையே ஒரே கேள்வி, எவ்வகையிலும் இடஒதுக்கீடு பெறமுடியாத மேற்படுத்தப்பட்ட ஜாதியினரில் உள்ள, (ஒப்பீட்டளவில்) மோசமான கல்வி அறிவும் மோசமான பொருளாதாரப் பின்னணியையும் கொண்டவர்கள் பற்றி மட்டுமே.

உண்மையில் இங்கே சமூக நீதியை அடியொற்றி இடஒதுக்கீடு ஏற்படுத்தப்படவில்லை. இங்கே இடஒதுக்கீடு அடிப்படையாகக் கொண்டிருப்பது சமூக வெறுப்பை. அதனால்தான் பிராமணர்களில் கல்வி அறிவில் பின் தங்கியவர்கள்கூடப் புறக்கணிக்கப்படுகிறார்கள். இவர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, இவர்களின் கடந்த காலம் தரும் எரிச்சல். கடந்த காலம் என்பதை ஏதோ ஒரு கட்டத்தில் விட்டுத்தான் ஆகவேண்டும். அதனைக் காரணம் காட்டி இன்றைய நிலையில் பிராமணர்களைப் (அல்லது மேற்படுத்தப்பட்ட ஜாதியினரை) போட்டு வாங்கவேண்டும் என்று நினைத்தால், அது அந்தக் காலத்தில் பிராமணர்கள் செய்துகொண்டிருந்த கேவலமான உயர்ஜாதி மனோபாவத்துக்கு ஈடான ஒன்றேதான் அன்றி வேறில்லை.

யாரோ ஒரு அறிஞர் சொன்னாராம், ஒரு பிராமணர் உயர்ந்தால் இன்னொரு பிராமணரைத் தூக்கிவிடுவார். இப்படியே பிராமண இனமே முன்னேறிவிடும், எனவே அவர்களில் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களே இருக்கமுடியாது என்று. நல்ல அறிஞராகத்தான் இருக்கவேண்டும். சிற்றிதழ்களில் எழுதவேண்டிய கட்டாயம் உள்ள அறிஞராகவும் அவர் இருக்கக்கூடும். இதனையே மற்ற மேற்படுத்தப்பட்ட ஜாதிகளுக்கு அவர் சொல்லமாட்டார் என்பது நமக்குத் தெரிந்ததுதான். உண்மையில் ஒரு பிராமணர் இன்னொரு பிராமணரைத் தூக்கிவிடுவார் என்பதெல்லாம் கற்பனை. எத்தனையோ கஞ்சிக்கு இல்லாத, கல்வி அறிவும் இல்லாத பிராமணர்களை எனக்குத் தெரியும். இதே நிலையில் உள்ள பல மேற்படுத்தப்பட்ட சாதியினரையும் எனக்குத் தெரியும். எனவே இதெல்லாம் ஒரு எஸ்கேபிஸம் அன்றி வேறில்லை.

40% வாங்கியவர் டாக்டராவார், 90% வாங்கியவர் டீ ஆத்தணும் போன்ற வரிகளில், முதலில் உள்ளதைக் கூட விட்டுவிடலாம். ஏனென்றால் அது ஒரு இந்தியக் கடமை. பின்னது? அது எப்பேற்பட்ட அநியாயம்? உண்மையில் ஒட்டுமொத்த இடஒதுக்கீடும் பொருளாதாரப் பின்னணியைக் கொண்டதாக இருக்கவேண்டும். ஆனால் இது நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று என்பதையும், இதில் உண்மையிலேயே பல பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக நீதி மறுக்கப்படும் என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், மேற்படுத்தப்பட்ட சாதிகளில் உள்ள கல்வியறிவால் பின் தங்கியவர்களுக்கு சலுகைகள் தரப்படுவதன் மூலம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன சமூக அநீதி நிகழ்ந்துவிடும்?

இதனைப் பற்றி எந்த ஊடகமும் பேசாது. ஏனென்றால் பார்ப்பனீய முத்திரை என்பது பின் தொடரும் நிழலின் குரல் போன்றது. என்றும் உங்களை விடாது. உண்மையில் பிராமணர்கள் உள்ளிட்ட, எவ்வகையிலும் இடஒதுக்கீடு பெற இயலாத ஜாதிகளில் உள்ள, கல்வி அறிவு குறைந்த பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு தரப்படக்கூடாது என்பதைப் பற்றிச் சொல்லுங்கள். I am happy to be convinced.

நான் பிராமணன் என்பதால் இதனைப் பேசுகிறேன் என எடுத்துக்கொள்ளவேண்டாம். அப்படி எடுத்துக்கொண்டாலும் பிரச்சினையில்லை. நான் என்னை பிராமணனாக நினைக்கவில்லை. நான் பிராமணனாக இருக்கவும் இல்லை. மேலும், நான் பிராமணனாக இல்லாமல் இருப்பதற்கும், பிராமணர்கள் பற்றிப் பேசுவதற்கும் எந்தத் தொடர்பும் இருக்கவேண்டியதில்லை என்றும் நம்புகிறேன்.

Share

வேதபுரத்து வியாபாரிகள் – வியாபாரக் கூவல்

வேதபுரத்து வியாபாரிகள் – இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாவலை மீண்டும் வாசித்தேன். முதன்முதலில் வாசித்தபோது இத்தனை மொக்கையாக இருந்ததாக நினைவில்லை. தமிழக நடப்பு அரசியலை விமர்சிக்கிறேன் என்று அதன் அங்கதத்தின் சகல சுதந்திரங்களையும் பயன்படுத்தியதின் விளைவு, சோ எழுதிய முகமது பின் துக்ளக்கிற்கு இணையான வெற்று எழுத்தாக தேங்கிவிட்டது நாவல்.
 
ஒரு நாவல் தரவேண்டிய அனுபவத்தை எல்லாம் மறந்துவிட்டு, திராவிட அரசியல் என்பதே வெறும் கோமாளிக் கூத்துதான் என்ற எண்ணம் உள்ளவர்கள் இந்த நாவலை நிச்சயம் கொண்டாடுவார்கள். திராவிட நடைமுறை அரசியலைப் பற்றிய எனது எண்ணமும் இதுதான். ஆனால் திராவிட அரசியலை அதன் கோட்பாடு சார்ந்து (அப்படி ஒன்று இருப்பதாக நம்புகிறவர்கள் அவர்கள் :>) அணுகுபவர்கள், குறிப்பாக 60, 70களில் தங்கள் இளம் வயதைக் கழித்தவர்கள் இதை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். அவர்களைப் பொருத்தவரை திராவிட அரசியல் என்பது ஒரு விடுதலைக்கீற்று; பார்ப்பனியத்தின் நெருக்கடிக்கான பதிலடி. இதைத் தொடரும் ஒரு தலைமுறைக்கான இன்றைய இளைஞர்களும் இதனை இப்படியே பார்ப்பார்கள்.
 
எல்லா தத்துவமும் நீர்த்துப் போகும்போது, உணர்ச்சிகளின் பீடத்தில் நிறுவப்பட்டிருந்த (அப்படி நான் நினைக்கும்!) திராவிடம் மிக நீர்த்துப் போனதொரு தருணத்தில் இந்த நாவலை வாசிக்கும்போது வெறும் கேளிக்கையாகவும், அந்த கேளிக்கையே பெரியதொரு நடைமுறை உண்மையாகவும் தோற்றமளிக்கும் முரணைக் கண்கூடாகப் பார்க்கமுடிகிறது.
 
முக்கியமான விஷயம் – நான் நாவலை இன்னும் படித்துமுடிக்கவில்லை. ஒண்ணத்துக்கும் உதவாத ஒரு திரைப்படத்துக்கு 4 பதிவுகள் போடும் திருநாட்டில் ஒரு நாவலுக்கு ஏன் செய்யக்கூடாது என்ற எண்ணம் (யாரையும் மறைமுகமாகக் குறிப்பிடும் எண்ணமெல்லாம் இல்லை!) உந்தித்தள்ளவே இந்த முதல்பதிவு! (இன்னும் 3 பதிவுகள் வரலாம் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.)
 

(1994ல்) தொடர்கதையாக வெளிவந்த காரணத்தினாலாயே நாவலின் கட்டுமானத்தை இழந்து தவிக்கும் படைப்புகளின் பெருவரிசையில் இதனையும் சேர்க்கலாம். அப்போது எழுதப்பட்ட படைப்பில் இருந்து சிலவரிகள். இது எப்படி 2009ல் பலித்திருக்கிறது பாருங்கள்! இந்திரா பார்த்தசாரதிதான் எல்லாவற்றுக்கும் காரணம். கருணாநிதி பாவம். (கருணாநிதியை தொட்டுக்கலைன்னா உங்களுக்கெல்லாம் நேரமே போகாதே!)
 
“எங்கள் நாட்டைப் பற்றி ஏராளமான புத்தகங்கள் நூல் நிலையத்தில் உள்ளன. வரலாறு? புராணம், என்ன வேண்டும் உங்களுக்கு? எங்கள் தலைவரைப் பற்றியும் வந்திருக்கக்கூடிய நூல்கள் அளவிட முடியாது. வரலாறு? புராணம்…”
 
“தலைவரைப் பற்றியுமா புராணம்?”
 
“புராணமில்லாமல் எப்படித் தலைவராக இருக்க முடியும்?”
 
“உதாரணம்?”
 
நஞ்சுண்டன் சிறிது நேரம் பேசாமலிருந்தான். பிறகு கேட்டான்: “இன்று உங்களால் குளிக்க முடிந்ததே எப்படி?”
 
“குழாயில் தண்ணீர் வந்தது, குளித்தேன்.”
 
“எப்படி வந்தது?”
 
“புரியவில்லை.”
 
“பக்கத்து நாட்டுப் பகைவர்கள், எங்கள் ஆற்றைத் திருடிக் கொண்டு போய் மலையருகே ஒளித்து வைத்து விட்டார்கள். போர் தொடுக்க வேண்டுமென்று கொதித்தெழுந்தது எங்கள் மறவர் கூட்டம். ஆனால் எங்கள் தலைவர், நிதானத்தை இழக்காமல், 8,640 விநாடிகள் உண்ணா நோன்பு மேற்கொண்டார். எங்கள் மக்கள் கூட்டம் கண்ணீர் விட்டு அரற்றியது. அவர்கள் கண்களினின்றும் பெருக்கெடுத்தோடிய நீரே இன்று இந்நாட்டில் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது” என்றான் நஞ்சுண்டன்.

 
அப்புறம் வேறென்ன? நாவலை வாங்க என்று ஒரு லிங்க்கை இன்னும் நீட்டவில்லையே என்று நினைக்கிறீர்களா? புத்தகம் அவுட் ஆப் ஸ்டாக். 🙂 ஸ்டாக் வந்த்தும் சொல்கிறேன். இ புக்காக வாங்க விரும்புகிறவர்களும் ஒன்றிரண்டு வாரங்கள் காத்திருக்கவும். NHM eBook Reader is on the way!

Share

பிரி பிரி பிரி பிரி பிரி பிரி பிரி பிரி பிரி கண்ணில் நீர்வரப் பிரி

சேரன்மகாதேவி நான் சிறு வயதில் வளர்ந்த நாடு. காலார நடந்தால் ஊரை முழுக்கச் சுற்றிவர நான்கு மணி நேரம் ஆகும். கொழுந்தனா மலைக்கு அடிவாரத்தில் ஆடு மேய்ப்பார்கள். சன் பேப்பர் மில்லில் வேலை பார்த்துவிட்டு ஆற்றில் குளித்துவிட்டு நடந்தே வீடு வந்துவிடுவார்கள். ஒரே ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியும், பஞ்சாயத்து ஸ்கூலும் உண்டு. நான் 6 வயதில் அங்கே இருந்தபோது சித்ரா மெட்ரிகுலேஷன் என்ற ஒரே ஒரு மெட்ரிக் ஸ்கூல் இருந்தது. இப்போது 2 அல்லது 3 இருக்கலாம்.

முன்பு ஒரு டூரிங் தியேட்டர் கூனியூர் நாட்டில் இருந்தது. கூனியூர் என்பது சேரன்மகாதேவி நாட்டுக்குப் பக்கத்து நாடு. ஒரே ஒரு சௌகரியம், கூனியூர் நாட்டுக்குப் போகவோ, கூனியூர் நாட்டு மக்கள் சேர்மாதேவி நாட்டுக்கு வரவோ விசா தேவையில்லை. யூ டோண்ட் பிலீவ் இட், பாஸ்போர்ட்டும் தேவையில்லை யூ நோ. இன்னொரு அதிர்ச்சி, இரண்டு நாட்டுக்கும் நடந்தே போய்விடலாம். கூனியூர் நாட்டுக்குப் பக்கத்து நாடு வீரவநல்லூர் நாடு. Funny countries, isn’t it?

கூனியூர் நாட்டுக்கு இப்படி நம்ம நாட்டுப் பணமெல்லாம் போகுதே என்று யோசித்தவர்கள் சேர்மாதேவியிலேயே தியேட்டர் கட்டிவிட்டார்கள். என் அப்பா சேர்மாதேவியில் பெரிய பிஸினஸ் மேனாக இருந்தவர். பிள்ளையார் கோவில் பின்புறத்தில் நின்றுகொண்டு சுண்டலும் சுக்கு வெண்ணீரும் விற்பார்.

வேத பாடசாலை உண்டு. யச்சு பாகவதர் தனியாக வேதம் பாடுவார். இந்நேரம் அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கவேண்டும். முட்டை ஊதி வைக்க வைத்தீஸ்வரன் கோவிலும் உண்டு.

எனது கோரிக்கை எல்லாம் இந்த பெரிய நாட்டை நிர்வாக வசதி கருதி இரண்டாகப் பிரிக்கவேண்டும் யுவர் ஹானர்!

சோர்ஸ்: http://thatstamil.oneindia.in/news/2011/06/11/bifurcate-tirunelveli-district-says-sarath-kumar-aid0090.html

Share

Facebook Notes – 1

நாள்: 12-ஜூன்-2011

Choose the best answer – கருணாநிதிக்கு உதவுவோம்

கருணாநிதியின் இந்த பேட்டியைப் (http://dailythanthi.com/article.asp?NewsID=652219&disdate=6%2F11%2F2011&advt=1) படித்தால், கலங்காத மனமும் கலங்கிவிடும். திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகாருக்கு அடுத்த உருகார் இதுதான். பல கேள்விகளுக்கு அதிரடி பதில்தான். என்ன பொண்ண கையைப் பிடிச்சி இழுத்தியா (http://www.youtube.com/watch?v=rgANpyU48cw) ரக பதில்கள்தான்.

எப்படி இந்த பத்திரிகையாளர்களும் விடாமல் கேள்வியைக் கேட்கிறார்கள் என்பதுவும் பாவமாகவே இருக்கிறது.

திருவாரூரில் நான் என்ன பேசினேன் என்பதை மறைத்துப் பேசாமல் திரித்துப் பேசாமல் என்று என்னவெல்லாமோ சொல்கிறார். எனது மகள் கனிமொழி என்று சொல்லிவிட்டு, இரண்டு நிமிடங்கள் கண் கலங்கி, உடன்பிறப்புகள் தலைவா கோஷமிட அவர் அன்று மத்திய அரசுதான் காரணம் என்ற வகையில்தான் பேசியதை டிவியில் நானே பார்த்தேன். ஆனால் அவரது பேட்டியோ சத்தியமாகக் கேளுங்கள் என்று வருகிறது. கடவுள் சத்தியமா கேளுங்கள் என்று இன்னொருமுறை நாக்கு தவறாததற்கு அவர் இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்.

எல்லாக் கேள்விகளுக்கும் அவர் நிருபர்களையே பதில் சொல்லச் சொல்கிறார். தமிழ் ரத்தம் ஓடுகிறதா என்கிறார். டெல்லியில் நிருபர்கள் கேள்வி கேட்டால் ஹிந்தி ரத்தம் ஓடுகிறதா என்று கேட்காமல் இந்திய ரத்தம் ஓடுகிறதா என்றாவது கேட்கவேண்டும்.

கருணாநிதிக்கு நிருபர்கள் கொஞ்சம் கருணை காட்டி, சூஸ் தி பெஸ்ட் ஆன்சர் அடிப்படையில் கேள்விகளைக் கொடுத்துவிட்டால், அவரும் டிக் போட்டுக் கொடுத்துவிடுவார். மறக்காமல் ‘இவற்றில் எதுவும் இல்லை’ ஆப்ஷனை வைத்துவிடுங்கள்.

Link: http://www.facebook.com/note.php?note_id=207186185991642

————–

நாள்: 10-ஜூன்-2011

பகடியா உண்மையா ரொம்பக் கண்ண கட்டுது!

சாரு எழுதுவதில் எதை சீரியஸாக எடுத்துக்கொள்வது எதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்வது என்பதே குழப்பமாக உள்ளது.

சாரு வாசகர் வட்டம் பற்றி அவர் எழுதியபோது, சிலர் பஸ்ஸில் அதனை நகைச்சுவைப் பதிவு என்றார்கள். ஆனால், நான் படித்தபோது அது பகடியான பதிவாக எனக்குத் தோன்றியிருக்கவில்லை. கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது, எப்படி இவர்கள் அதனை பகடி என்று கண்டுபிடிக்கிறார்கள் என. சாரு இணையக் குழுமம் அல்லது ஃபேஸ்புக்கில் தொடரியாக இருந்தால்மட்டுமே இதெல்லாம் புரியும் என்றார்கள். ஆனால் தொடர்ந்து சாரு வாசகர் வட்டம் பற்றிய பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. இன்னும் அது தொடர் பகடியா அல்லது உண்மையா என்பது குழப்பமாகவே உள்ளது. பகடிதான் என்றால், அக்கவுண்ட் நம்பரெல்லாம் கொடுத்து உண்மை போலவே பகடி செய்ய தில் வேண்டும் என்று ஒப்புக்கொள்கிறேன்!

இப்போது உயிர்மையில் சாருவின் புத்தகங்களுக்கு 25% தள்ளுபடி, மோதிரம் பரிசு என்று தனது வலைத்தளத்தில் எழுதியிருக்கிறார் சாரு. (இப்படி சாரு தன் வலைத்தளத்தில் எழுதியிருக்கிறார் என்று சொல்வது கூட கொஞ்சம் ரிஸ்க்காக உள்ளது! திடீரென்று அந்தப் பதிவு தூக்கப்பட்டுவிடும் அபாயம் இருப்பதால் ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துவிட்டுச் சொல்லவேண்டியிருக்கிறது!) இது மனுஷ்யபுத்திரனுக்கும் சாருவுக்கும் இடையேயான பகடியா அல்லது உண்மையா என்பது இன்னொரு குழப்பமாக உள்ளது. உண்மை என்றால், வாழ்த்துகள். பகடி என்றாலும் வாழ்த்துகள்தான்! கண்டனமா செய்யமுடியும்? :>

Link: http://www.facebook.com/note.php?note_id=206725746037686

————–

நாள்: 5-ஜூன்-2011

ராம்தேவ் கைது அராஜகம்

ராம்தேவின் நோக்கங்கள் என்னவாக இருந்தாலும், இந்த காங்கிரஸ் அரசு செய்திருப்பது அராஜகம்.

ஊழலுக்கெதிராக உண்ணாவிரதம் இருப்பதை ஏன் லத்தி சார்ஜாலும் கண்ணீர்ப் புகையாலும் கலைக்கவேண்டும்? வினேச காலே விபரீத புத்தி.

உடனடியாக ராம்தேவின் ஊழல்களை – அப்படி ஒன்று இருந்தாலும் இல்லாவிட்டாலும் – உடனே வெளியிட்டு அவரை கேரக்டர் அஸாஸிநேஷன் செய்யும் அரசு.

1300 கோடி சொத்து என்கிறார்கள். அவ்வளவு வரும் வரை என்ன செய்துகொண்டிருந்தன அரசுகள்?

அதிகமான சொத்து உள்ள சாமியார்களை எல்லாம் என்ன செய்யப் போகிறது இவ்வரசு? சாய்பாபா உடலுக்கு முன் சோனியாவும் மன்மோகனும் தேவுடு காத்தது ஏன்?

காங்கிரஸ் ஒரு கேவலமான ஆட்சியை நடத்துகிறது, மன்மோகன் மிக மோசமான பிரதமர். இதில் இவர்களுக்கு பாபா ராம்தேவைச் சொல்ல எந்தத் தகுதியும் இல்லை.

ராம்தேவின் பின்னால் இதுவரை ஆர் எஸ் எஸ் இருந்ததோ இல்லையோ, இனி இருக்கவேண்டும் – ராம்தேவ் தனிப்பட்ட முறையில் ஊழல்வாதியாக இல்லாதிருந்தால்.

Link: http://www.facebook.com/note.php?note_id=207186185991642

Share

தள்ளுபடி அதிரடி

இந்தப் பதிவை நான் சீரியஸாகத்தான் எழுதுகிறேன் என்றாலும் கடைசியில் இது மார்க்கெட்டிங் பதிவாகவும் எஞ்சும் அபாயம் உள்ளது என்பதை இப்போதே சொல்லிவிடுகிறேன்.

அதிரடித் தள்ளுபடி என்று கிழக்கு பதிப்பகம் சில புத்தகங்களை கிட்டத்தட்ட 80% தள்ளுபடியில் விற்பனை செய்தது, செய்துவருகிறது. இது முதலில் அறிவிக்கப்பட்டபோது சந்தோஷத்துடன் வாங்கிச் சென்ற வாசகர்கள் ஒருபுறம், இது எழுத்தாளர்களை அவமானப்படுத்துகிறது என்று வருத்தப்பட்டவர்கள் ஒருபுறம். வாசகர்கள் இப்படிப் பழகிவிட்டால் புதிய புத்தகங்கள் வரும்போது இனி அதனை வாங்கமாட்டார்கள் என்று கருத்துச் சொன்னவர்கள் ஒருபுறம்.

பொதுவாக ஒரு புத்தகத்தை 1200 அச்சடிப்பது என்பது மரபு. (இப்படி இல்லாமல் குறைத்து, மிகக்குறைத்து, அல்லது நன்றாக விற்பனையாகும் புத்தகங்களை மிக அதிகரித்தும் அச்சடிக்கப்படுகின்றன. அவை பிரச்சினையற்றவை. எனவே, அதைப்பற்றி இங்கே எங்கேயும் பேசவில்லை.) அப்படி அச்சடிக்கும் புத்தகங்கள் நாம் எதிர்பார்த்த மாதிரி விற்பனை ஆகவில்லை என்றால் அவை தேங்கத் தொடங்கும். 3 வருடங்களில் விற்கவில்லை என்றால் அதுவே சுமையாகவும் ஆகலாம். பொதுவாக 100 புத்தகங்கள் அச்சிட்டால், அதில் சூப்பர் ஹிட் புத்தகங்கள் அதிகபட்சம் 5 வரலாம். ஹிட் புத்தகங்கள் 10 வரலாம். மோசமில்லை என்னும் ரகத்தில் இன்னொரு 20 வரலாம். மீதி 65 புத்தகங்கள் இப்படித் தேங்கிப் போகும் அபாயம் கொண்டவைதான். (இந்த எண்ணிக்கைக்கும் புத்தகங்களின் தரத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.)

இந்தப் புத்தகங்களை என்ன செய்வது? அதிலும் 1500 தலைப்புகளில் பல்வேறு புத்தகங்கள் வரை அச்சிட்ட பதிப்பகங்கள் என்ன செய்ய இயலும்? இவற்றை பத்திரமாக வைத்திருக்க புத்தகக் கிடங்குக்கு ஆகும் செலவு, அவற்றைக் கையாளும் பாதுகாக்கும் பணியாளார்களின் சமபங்களங்கள் எல்லாவற்றையும் எப்படி நிர்வகிப்பது?

இந்தப் பிரச்சினை புத்தகத் தொழிலில் மட்டும் இருப்பதில்லை. எல்லாத் தொழிலிலும் உண்டு. ஆனால் அவ்வப்போது ஸ்டாக் கிளியரன்ஸ் சேல்ஸ் என்ற ஒன்றைப் போட்டு காலி பண்ணிவிடுவார்கள். புத்தகம் பொருத்தவரையில், தமிழ்நாட்டில் இப்பழக்கம் இல்லை என்பதால், அதனை கிழக்கு செய்தபோது நிறைய கேள்விகள் எழுந்தன.

உண்மையில் கிழக்கு பதிப்பகம் இது போன்ற புத்தகங்களை இந்த விலையில் மகிழ்ச்சியோடு விற்கவில்லை. இதனை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு புத்தகத்தை 1200 கூட விற்கமுடியாதா என்ற கேள்வி எழலாம். அதற்கான சரியான வழிமுறைகளை எந்தப் பதிப்பகமும் இன்னும் எட்டியிருக்கவில்லை என்பதுதான் சோகமான உண்மை. இதுபோக, ப்ரைடுக்காகவும், மன மகிழ்ச்சிக்காவும் கொண்டு வரப்படும் புத்தகங்கள். அவையும் விற்கவில்லை என்றால் புத்தகக் கிடங்கில் தேங்கவே தொடங்கும். வேறு வழியின்றித்தான் இதனைச் செய்யவேண்டியிருக்கிறது.

இதைச் செய்வதால் ஏற்படும் பிரச்சினைகளாகச் சொல்லப்படுபவை, உண்மையில் கிழக்கை மற்றும் இதுபோன்று இனி வேறு பதிப்பகங்கள் செய்ய முன்வந்தால் அவற்றையும் பாதிக்காது என்றே நான் நம்புகிறேன். இப்படி குறைந்த விலையில் புத்தகம் வாங்கிப் பழகியவர்கள் இனிமேல் புதிய புத்தகங்களை வாங்கமாட்டார்கள் என்று நான் நம்பவில்லை. உண்மையான புத்தக விற்பனை புத்தக விரும்பிகளிடமே முதலில் ஏற்படுகிறது. அவர்கள் இதற்கெல்லாம் காத்திராமல் உடனே வாங்கிவிடுவார்கள் என்பது முதல் பாயிண்ட். இரண்டாவதாக, நாம் எல்லா புத்தகப் படிப்பாளர்களையும் ஏற்கெனவே அடைந்துவிட்டோம் என்னும்போதுதான் இந்த ‘புத்தகம் இனி விற்காது’ என்ற எண்ணமே ஏற்படும். ஆனால் உண்மையில் நாம் பெரும்பாலான புத்தக வாசிபபாளர்களைச் சென்று அடையவே இல்லை. எனவே இந்தத் தள்ளுபடி விற்பனையில் பயன் அடையப்போவது, நாம் ஏற்கெனவே சென்றடைந்திருக்கும் ஒரு சிறிய விகிதத்தில் ஒரு மிகச் சிறிய விகிதம் மட்டுமே. ஏனென்றால்,ஒரு தமிழ்ப் பதிப்பகத்தைத் தெரியாதவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்டதமிழர்களின் எண்ணிக்கைக்குச் சமமானது.

அடுத்ததாக எழுத்தாளர்களின் வருத்தம். முதலில் இது நியாயமானது என்பதைச் சொல்லிவிடுகிறேன். ஆனால் இது மனம் சார்ந்த வருத்தம். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் பதிப்பாளர்களுக்கு வேறு வழியில்லை என்பது புரியலாம். புத்தகத்தை எடைக்கு எடை போட்டோ, ரிபிராசஸஸ் செய்ய விலைக்குப் போட்டோ கொன்றுவிடலாம் என்று ஒரு வாதம் வருகிறது. நான் இதனை நிச்சயம் ஏற்கவில்லை. குறைந்த விலையில் கொடுத்தால் வாங்க ஆளிருக்கும்போது ஏன் இதனைச் செய்யவேண்டும்? புத்தகத்தின் விலை தங்கள் பர்ஸைவிட அதிகம் என்னும்போது மட்டும் ஒரு புத்தகத்தை வாங்காமல் செல்பவர் இதனைப் பயன்படுத்தி புத்தகம் வாங்கிக்கொண்டால் அது ஓர் எழுத்தாளருக்கு நிச்சயம் மகிழ்ச்சியே ஏற்படுத்தவேண்டும். ஓர் எழுத்தாளர் எழுதுவதே தனது புத்தகம் பரவலாக வாசிக்கப்படத்தானே!

மேலும், இப்படி வாசித்துப் பழகியவர்கள், சில வருடங்களில் ஒரு புத்தக வாசிப்பாளராகவே மாறும் வாய்ப்பு இருக்கிறது. இதோடு, இப்படி தள்ளுபடி விலையில் விற்பனை செய்யும் பதிப்பகங்களுக்கு நல்ல மார்க்கெட்டிங் கிடைக்கிறது. இதனையெல்லாம் சரியாக விற்காத புத்தகங்களின் மூலம் சம்பாதித்துக்கொள்ள முடியும்.

ஒரு புத்தகத்தை ஏன் 1200 கூட விற்கமுடியவில்லை? புத்தகம் வாசிக்கும் பழக்கம் நம்மிடையே குறைவு என்பது நிச்சயம் உண்மையே. ஆனால் ஒரு புத்தகத்தின் 1200 படிகளை வாங்கும் வாசிப்பாளர்கள்கூடவா இல்லை? இருக்கிறார்கள். தமிழ்நாடெங்கும் பரவலாக இருக்கிறார்கள். (வெளிநாட்டிலும்தான்!) அவர்களை அடையும் வழி காஸ்ட்லியானதாக இருக்கிறது. டிவியில் விளம்பரங்கள் வரத் தொடங்கினால் மிக எளிதில் ஒரு பதிப்பகம் பிரபலமாகலாம். நிச்சயம் புத்தகங்களும் விற்கும். ஆனால் அந்த டிவி விளம்பரத்துக்குத் தரும் காசுக்கு இணையான லாபத்தை புத்தகங்களில் பார்க்க முடியாது அல்லது வருடங்களாகும்.

டிவி விளம்பரம் என்றில்லை, முன்னணி நாளிதழ்கள், முன்னணி வெகுஜன இதழ்கள் எல்லாவற்றின் விளம்பர ரேட்டும் இதேபோலவே இருக்கின்றன. ஆனந்தவிகடன், குமுதம் போன்றவற்றின் ஒரு பக்க விளம்பரம் கிட்டத்தட்ட 1.5 லட்சம். இந்த 1.5 லட்ச விளம்பரத் தொகையை ஈடுகட்ட, 100 மதிப்புள்ள புத்தகம் எத்தனை விற்க வேண்டும் என்று கணக்கிட்டுப் பாருங்கள். ஒரு 100 ரூபாய் மதிப்புள்ள புத்தகம் விற்றால் பதிப்பகத்துக்கு நிகர வருமானம் (நிகர லாபம் அல்ல என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்) 30 ரூபாய்தான் கிடைக்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒரே விளம்பரத்தில் அத்தனை புத்தகம் விற்குமா? விற்காது. இதுதான் பிரச்சினை.

தள்ளுபடி விற்பனையின் ஒரே மகிழ்ச்சி, தான் வாங்க நினைத்திருக்காத புத்தகங்களையும் கூட வாசகர்கள் வாங்கிச் செல்வது. நெடுநாளாக வாங்க விரும்பி, பணம் அதிகம் என்ற ஒரே காரணத்துக்காக வாங்காமல் இருந்த ஒரு புத்தகத்தை வாசகர் கிட்டத்தட்ட நெக்குருகி வாங்கிச் செல்வது. இன்று கிழக்கு முன்னெடுத்திருக்கும் இந்த தள்ளுபடி விற்பனையை நிச்சயம் எல்லாப் பதிப்பகங்களும் முன்னெடுத்தே ஆகவேண்டும். சில வருடங்கள் ஆகலாம். ஆனால் வேறு வழியில்லை. இப்படிச் செய்யாமல், 10 அல்லது 12 வருடங்கள் விற்காமல் ஒரு புத்தகத்தை வைத்துப் பலனில்லை.

இன்னும் ரீ ப்ரிண்ட், டேமேஜ் பற்றியெல்லாம் நான் சொல்லவில்லை. கிழக்கு பதிப்பக விற்பனையில் கிளியரன்ஸும், டேமேஜ் புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. டேமேஜ் புத்தகங்கள் என்பது – அழுக்கடைந்த புத்தகங்கள், ஒரே ஒரு பக்கம் மட்டும் அல்லது அட்டை குறைபாடுடைய புத்தகங்கள். இவற்றையும் விலைக்குப் போடுவதற்குப் பதிலாக மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு வைத்திருக்கிறோம். இந்த டேமேஜ் புத்தகங்களில் மிக நன்றாக விற்பனை ஆகும் புத்தகங்களும் வரலாம். இதைப் பார்த்துவிட்டுத்தான் சில எழுத்தாளர்கள் நமது புத்தகம் சரியாக விற்கவில்லை என்று முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். டேமேஜ் புத்தகங்கள் தனியாகவும், கிளியரன்ஸ் புத்தகங்கள் தனியாகவும்தான் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கடைசியாக ஒன்று, ஏற்கெனவே சொன்னதுதான், நல்ல விற்பனை என்பதற்கும் புத்தகத்தின் தரத்துக்கும் தொடர்பில்லை.

பின்குறிப்பு 1: கிழக்கு பதிப்பகத்தின் கிளியரன்ஸ் சேல்ஸ் இப்போது திநகர் எல் ஆர் ஸ்வாமி ஹாலில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. திநகர் பஸ் நிலையம் அருகில் உள்ள சிவா விஷ்ணு கோவில் எதிரில்.

பின்குறிப்பு 2: இணையத்திலும் தள்ளுபடி விற்பனை கிடைக்கிறது. பார்க்க: https://www.nhm.in/shop/discount/
 
பின்குறிப்பு 3:  என் கவிதைத் தொகுப்பான நிழல்கள் புத்தகம் எத்தனை வருடங்கள் ஆனாலும் க்ளியரன்ஸ் சேல்ஸில் கிடைக்காது. எனவே இப்போதே வாங்கிவிடவும். :> வாங்க: https://www.nhm.in/shop/AAA-AA-AAAA-AAA-9.html

Share

ரவிக்குமார் – இந்த எழுத்தாளர்களே இப்படித்தான்!

ரவிக்குமார் ரஜினி தொடர்பான இரண்டு இடுகைகளை எழுதியிருந்தார். வழக்கம்போல ரஜினி ரசிகர்கள் அப்பதிவுகள் மோசமாக இருந்ததாகவே எடுத்துக்கொண்டார்கள். அப்படி அவர்கள் எடுத்துக்கொள்ளாவிட்டால்தான் அது செய்தி. உண்மையில் ரவிக்குமாரின் அந்த இடுகைகளில் மோசமாக எதுவுமில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனென்றால், அந்த இரண்டு இடுகைகளில் ஒன்றுமே இல்லை! பொருட்படுத்தத்தக்க எதுவுமே அந்த இரண்டு இடுகைகளில் இல்லை. (கூறியது கூறல்!) ரஜினி குறித்தோ ரஜினியின் அரசியல் குறித்தோ திண்ணைப் பேச்சுகளில் பரிமாறப்படும் ‘என் கருத்து’ வடிவிலான இரண்டு கருத்துகளையே இரண்டு இடுகைகளாக இட்டிருந்தார் ரவிக்குமார்.

இன்று 3வதாக ஒரு இடுகை. அதில் ஃபேஸ்புக் மற்றும் வலைப்பதிவை வாசிக்கும் வாசகர்கள் ரஜினி, வடிவேலு, குஷ்பூ குறித்து மட்டும்தான் வாசிக்கிறார்கள் என்று. இன்றுதான் இவர் இதைக் கண்டுபிடித்தார் என்பதே அதிர்ச்சியாக இருக்கிறது. நடிகர்களைப் பற்றி எழுதினால் அதிகம் பேர் படிப்பார்கள் என்று தெரியாமல்தான் எழுதினார் என்று நம்புவது இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது.

ரஜினி குறித்த முதல் இரண்டு இடுகைகளில் ரஜினி குறித்த தீவிரமான அலசல்கள் எவையுமே இல்லை. ஆனால் மூன்றாவது இடுகையில் ரவிக்குமார் தான் ஏற்கெனவே இந்தியா டுடேவில் ரஜினி பற்றி எழுதியிருக்கிறேன் என்றெல்லாம் பேசுகிறார். இந்தியா டுடேவில் ரஜினி பற்றிய தீவிரமான மதிப்பீட்டை நிச்சயம் ரவிக்குமார் முன்வைத்திருப்பார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ரவிக்குமார் மிக முக்கியமான எழுத்தாளரே. ஆனால் அக்கட்டுரையை மையமாக வைத்து, ஒன்றுக்கும் உதவாக இந்த இரண்டு இடுகைகளை அவர் அளக்க முனைவது சரியல்ல. இந்தியா டுடேவுக்கு எழுதியது போல எழுதாமல், கைக்கு வந்த நான்கு வரிகளை எழுதிவிட்டு இவர் வலைப்பதிவு வாசகர்களை நொந்து கொள்வது முரண்.

உண்மையில் so called இந்த வலைப்பதிவு/ஃபேஸ்புக் வாசகர்கள் ரவிக்குமார் போன்ற எழுத்தாளர்களைத்தான் நொந்துகொள்ளவேண்டும். இதே எழுத்தாளர்கள் இந்தியா டுடே, காலச்சுவடு போன்றவற்றில் எழுதும்போது தீவிரமாக உழைத்து எழுதுகிறார்கள். ஆனால் வலைப்பதிவு, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் எழுதும்போது ஏனோ தானோ என்று எழுதிவிடுகிறார்கள். அதே சமயம், சிற்றிதழ்களில் தாங்கள் எழுதும்போது எழுந்த விவாதமோ கருத்துரைகளோ இவற்றுக்கும் எழு வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். இல்லையென்றால், ஃபேஸ்புக், வலைப்பதிவு வாசகர்கள் சரியல்ல என்றும் பேசத் தொடங்கிவிடுகிறார்கள். மறந்தும், எழுத்தாளர்கள் ஃபேஸ்புக், வலைப்பதிவுகளில் சரியாக எழுதுவதில்லை என்று பேசுவதே இல்லை. எழுத்தாளர்களின் எழுத்து உழைப்பில் வேறுபாடு உள்ளதுபோலவே வாசகர்களின் வாசிப்பு உழைப்பிலும் வித்தியாசம் இருக்கிறது. இரண்டு சரிசம உண்மைகளில் ஒன்றை மட்டும் வெட்டிப் பேசினால் எப்படி?

ரஜினி குறித்த இரண்டு இடுகைகளில் (மீண்டும் மீண்டும் நான் இவற்றை இடுகை என்றே அழைப்பதன் நோக்கம், இதனைக் கட்டுரை என்று அழைக்க எவ்வித ஞாயமும் இல்லை என்பதே!) பிளாக்கில் விற்கப்படும் டிக்கெட்டுகளின் நிலையை நினைத்துப் பார்க்கவேண்டும் என்கிறார். மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் ஞானம் வந்துவிட்டதாக ரஜினியைச் சொல்லும் ரவிக்குமார், நன்றாக ஐந்து வருடம் எம்.எல்.ஏவாக இருந்த வேளையில் பிளாக்கில் விற்கப்படும் டிக்கெட் குறித்து நினைத்துப் பார்த்திருக்கவேண்டும். ரஜினியின் எந்திரன் திரைப்படத்துக்கு டிக்கெட் பிளாக்கில் விற்றது குறித்து இவர் கடும் போராட்டங்களை நடத்தியிருக்கலாம். சன் பிக்சர்ஸ் கையில் சிக்கிக்கொள்ளும் தியேட்டர்களில் என்ன என்ன நடக்கிறது, பிளாக்கில் டிக்கெட் விற்பது அத்தியேட்டர்களுடன் தொடர்புடையதா ரஜினியுடன் தொடர்புடையதா என்றெல்லாம் அவர் யோசித்திருக்கலாம். பிளாக்கில் டிக்கெட் விற்பது ரஜினி படத்துக்கு மட்டும்தான் நடக்கிறது என்று நான்கைந்து நாளாக முயன்று தன்னைத்தானே நம்பவைத்துக் கொண்டிருக்கலாம். பதவி போகும்போதுதான் எம் எல் ஏக்களுக்கும் ஞானம் வருகிறது.

மகளையே தயாரிபபாளராக்கி பணம் அள்ளுவது பெரிய குற்றமே. ஐயமே இல்லை. ஒரு படத்துக்கு வசனம் எழுதி 50 லட்சம் சன்மானம் பெறும் முதலமைச்சரின் கவிதைகள் பிடிக்கலாம், தவறில்லை. படங்களை அந்த முதலமைச்சரின் குடும்பங்களே வெளியிட்டுக் கொள்ளலாம். அதைப் பற்றி கூட்டணியில் இல்லாவிட்டால்தான் பேசலாம், அதுவும் தவறில்லைதான். ரஜினியின் மகள் பணத்தை அள்ளுவதுதான் பெரும் தவறு. ’மரணத் தறுவாயிலாவது’ ரஜினி இதனை யோசிக்கவேண்டும். வடிவேலுவின் பக்கத்தில் கைக்கூப்பி நின்று ஓட்டுக் கேட்டபோது, வடிவேலுவும் அவரது குடும்பத்தினரும் பணத்தை அள்ள எதுவுமே செய்வதில்லை என்று ரவிக்குமார் நம்பியிருப்பார் என்று நான் நம்பவில்லை. ஆனாலும் அது அத்தனை முக்கியமல்ல. ஆனால் ரஜினி மட்டும் ‘மரணத் தறுவாயிலாவது’ இதனை யோசிக்கவேண்டும்.

முன்பு ஒரு டிவி ஷோவில் தங்களுக்கு பிடித்த படம் என்ன என்ற கேள்விக்கு, மாபெரும் இலக்கியவாதியான ரவிக்குமார் சொன்ன பதில் ‘சிவாஜி.’ ரஜினியைப் பிடித்திருக்கிறது என்பது தவிர வேறு பெரிய காரணங்கள் இருந்துவிட முடியாது சிவாஜி திரைப்படத்தைப் பிடிக்க. இதில் தவறில்லை. ரவிக்குமாரே தனது 3வது இடுகையில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார், ரஜினி படங்களை மட்டும் முதல் காட்சியில் பார்ப்பேன் என்று. இப்படிச் சொல்லும் ஒருவர், ஏன் ராணா நல்லவிதமாகச் சுருண்டு விட்டது என்று சொல்லவேண்டும்? ரஜினியின் மகளே பணத்தை அள்ளப் போவதினாலா? கருணாநிதியின் மகன்கள், பேரன்கள் பணத்தை அள்ளுவது பற்றி ரவிக்குமார் கடந்த ஐந்து ஆண்டுகளில் (அதற்கு முன்னர் அவர் பேசியிருக்கலாம்!) பேசியிருக்கிறாரா? இலக்கியவாதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கான அதே அரசியல் சூத்திரம்தானா? இத்தனை ரஜினியைப் பிடிக்கும் என்று சொல்பவர், ஏன் திவ்யா நடிக்காமல் போனது நல்லது என்று சந்தோஷப்படவேண்டும்? தேவையற்ற கேள்விகள். ஏனெனில், ரவிக்குமார் பதில் சொன்னால், அவரது வலைப்பதிவில் அதிகம் பேர் படித்துவிடுவார்கள். ஃபுல் டைம் இலக்கியவாதி மற்றும் பார்ட் டைம் அரசியல்வாதி ஒருவரின் வலைப்பதிவில் நடிகர்கள் பற்றிய பதிவு அதிகம் படிக்கப்படுவது அவருக்கு இழுக்கு. அவருக்கு ஏன் அந்த இழுக்கு இன்னொருமுறை வரவேண்டும்?

இந்தப் பதிவுக்குக் கூட, ரஜினி ரசிகர்கள் இப்படித்தான் ரஜினியைப் பற்றிப் பேசினால் பொறுத்துக்கொள்ளாமல் எதையாவது சொல்வார்கள் என்றோ உளறுவார்கள் என்றோ அவரோ மற்றவர்களோ சொல்லக்கூடும். ரவிக்குமாரைப் போலவே நானும் ரஜினி அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. (வந்தால் அவருக்கே நிச்சயம் ஓட்டு என்பது வேறு விஷயம்!) ரஜினிக்கு அரசியலுக்கு வருவதை விரும்பால பல ரஜினி ரசிகர்கள் உண்டு. ஆனால் அவர் அரசியலுக்கு வருவதற்குக் காரணம் விஜய்காந்தின் வெற்றி என்றெல்லாம் காமெடி பண்ணாதிருக்கவேண்டும். ரஜினி மீண்டும் வந்து நன்றாக வாழ்ந்தாலே போதும். நடிக்கவே தேவை இல்லை. ஒருவேளை அவர் நடிக்கவும் செய்தால் அது போனஸ் மகிழ்ச்சி. இதைத்தான் ரவிக்குமாரும் சொல்ல நினைக்கிறார். ஆனால் அவருக்கு உள்ளேயிருந்து சில குரல்கள் அவரறியாமல் சில வரிகளை எழுதிவிடுகின்றன. இப்போது எனக்கு நடந்துவிட்டதைப் போலவே.

வாசகர்கள் வசதிக்காக…

ரவிக்குமாரின் முதல் இடுகை: (இது அவரால் நீக்கப்பட்டுவிட்டது)

ரஜினி அரசியலுக்கு வரப்போகிறாரா?

ரஜினிகாந்த் சிங்கப்பூர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. அவர் சிங்கப்பூருக்குப் போவதற்கு முன்பு பேசியதாக ஒரு ஒலிப்பதிவு தற்போது இணையத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது. அதில் அவருடைய குரல் மிகவும் ஆயாசத்தோடு ஒலிப்பதைக் கேட்கும்போது அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது என நம்புவது கடினமாக இருக்கிறது.
தான் பணம் வாங்கிக்கொண்டுதான் நடிப்பதாகவும் அதற்கே இவ்வளவு அன்பு செலுத்துகிறீர்களே என்றும் தமது ரசிகர்களைப் பார்த்து அவர் ஆச்சர்யப்பட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாது தனது ரசிகர்கள் தலை நிமிர்ந்து சொல்லிக்கொள்ளும்படி தான் நடந்துகொள்வேன் என்றும் அவர் அதில் வாக்குறுதி அளித்திருக்கிறார். நடிகர் விஜயகாந்த் தற்போது பெற்றிருக்கும் அரசியல் வெற்றி ரஜினியை சிந்திக்கவைத்துவிட்டதுபோல்தெரிகிறது. தானும் அரசியலில் ஈடுபட அவர் முடிவெடுத்துவிட்டார், தான் குணமடைந்து தமிழகம் திரும்பும்போது கடவுள் தன்னை இதற்காகத்தான் பிழைக்க வைத்தார் என்பதுபோல ஒரு வசனத்தைப் பேசிவிட்டு ரஜினி புதிய கட்சி ஒன்றைத் தொடங்கக் கூடும் என்பது என் அனுமானம்.
ரஜினி அரசியல் கட்சி துவக்கினால் அவருக்கான ஆதரவு எப்படி இருக்கும்? விஜய், அஜித் ரசிகர்கள் அவருக்குப் பின்னால் போய்விடுவார்களா? ஓரிரு வாரங்களில் இதற்கான விடை கிடைக்கும் என நம்புகிறேன்.

இரண்டாம் இடுகை: (இதுவும் நீக்கப்பட்டுவிட்டது)

ராணா – இன்னொரு ஜக்குபாயா?

ராணா படத்தின் துவக்கம் இப்படி சோகமாக முடியும் என ரஜினி ரசிகர்கள் நினைத்திருக்கமாட்டார்கள். ஏற்கனவே இப்படி அறிவிக்கப்பட்டு நின்றுபோன ஜக்குபாயின் நிலைதான் ராணாவுக்கும் என்பது என் அனுமானம்.’ ஆண்டவன் சொல்றான் அண்ணாமலை செய்யிறான்’ என்று வசனம் பேசிய ரஜினி இனிமேல் சினிமா வேண்டாம் என்று ஆண்டவன் சொல்லிவிட்டான் என அறிவிக்கக்கூடும்.
ராணா ஒரே நேரத்தில் தமிழிலும் இந்தியிலும் தயாரிக்கப்படுவதாக இருந்தது. தெலுங்கில் டப்பிங் செய்யவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. தனது மகளையே தயாரிப்பாளராக்கி லாபத்தை அள்ளலாம் என நினைத்திருந்த வேளையில் இப்படி சோதனை வந்துவிட்டதே என்று ரஜினி வேதனைப்பட்டிருக்கலாம். ஆனால் எனக்குக் கொஞ்சம் ஆறுதல். நான் ரசிக்கும் மிகவும் திறமைமிக்க நடிகைகளில் தீபிகா ஒருவர். அவர் ராணா படத்தில் நடிக்கிறார் எனத் தெரியவந்ததும் நான் மிகவும் வேதனைப்பட்டேன். ஐஸ்வர்யா ராய்க்கு எந்திரனில் நேர்ந்த கதி தான் தீபிகாவுக்கும் நேரும் என்று தெரிந்ததால் வந்த வேதனை அது. எந்திரனில் ரஜினியின் கேரக்டர்தான் ரோபோ என்றாலும் உண்மையில் ஐஸ்வர்யாவின் பாத்திரம்தான் ரோப்போவாக்கப்பட்டிருந்தது. தீபிகாவை அப்படியொரு நிலையில் எண்ணிப்பார்க்க கஷ்டமாக இருந்தது. எப்படியோ நல்லவிதமாக ராணா சுருண்டுவிட்டது.
மரணம் நெருங்கிவிட்டதாகத் தெரியும்போது எந்தவொரு மனிதனுக்கும் ஞானக்கண் திறந்துகொள்ளும். ரஜினிக்கும் அப்படித்தான் ஆகியிருக்கிறது. தனது ரசிகர்களின் அன்பை நினைத்து அவர் உருகியிருக்கிறார்.அல்லது அப்படி பாவனை செய்திருக்கிறார். வாக்களித்துவிட்டு விலைவாசி ஏறிவிட்டது எனச் சொல்லி எந்த அணிக்கு வாக்களிக்கவேண்டும் என்பதை தனது ரசிகர்களுக்கு சமிக்ஞை காட்டினார் ரஜினி. அந்த நேரத்தில் அவர் தான் வாங்கும் சம்பளத்தையும் தான் நடித்து வெளியாகும் படங்களுக்கு ப்ளாக்கில் விற்கப்படும் டிக்கட்டுகளின் விலையையும் நினைத்துப் பார்த்திருக்கவேண்டும்.
எப்படியோ சிங்கப்பூருக்குப் போகும் முன்னால் ரசிகர்களுக்கு வெளியிட்ட ஆடியோ பதிவில் தனது ரசிகர்கள் தலை நிமிர்ந்து பெருமைப்படும் விதமாக நடந்துகொள்வேன் என்று அவர் சொல்லியிருக்கிறார். மரண பயம் வரும்போது பேசிய பேச்சாக அல்லாமல் அதை ஒரு வாக்குறுதியாக அவர் கருதுவாரேயானால் நிச்சயம் அவர் அரசியலுக்கு வருவார் என்றே கருதுகிறேன். அவருக்குக் ‘ க்ருபா’ தரும் கடவுளும் , குருவும் என்ன செய்தியை அவருக்குக் கூறியிருக்கிறார்களோ! பொறுத்திருந்து பார்ப்போம்.

மூன்றாம் இடுகை:

ரஜினி குறித்த பதிவுகளுக்கு முடிவு: (விரைவில் நீக்கப்படும்!)

http://nirappirikai.blogspot.com/2011/05/blog-post_31.html

Share

ஆப்புக்கு ஆப்பு

திடீரென்று ஞாநி என்னிடம் நடிக்க வர்றீங்களா என்றார். வழக்கம்போன்ற உரையாடல்கள் நடந்தேறின. நடிக்கத் தெரியாதே, அதெல்லாம் நடிச்சிடலாம், நம்பிக்கை இருந்தா போதும் போன்றவை. ரிகர்சலுக்கு குத்தம்பாக்கம் சமத்துவபுரத்துக்குப் போனோம். கிட்டத்தட்ட 24 பேர் பங்கேற்றார்கள். நல்லவேளை எனக்கு வசனம் இல்லை.

அம்மா ஐயா ஆதரவாளர்களாக நீங்களே பிரிந்துகொள்ளுங்கள் என்றார். நான் உடனே அம்மா பக்கம் வந்து நின்றுகொண்டேன். ஞாநி இங்கயுமா என்றார். நடிப்பில் கூட கருணாநிதியைப் புகழமுடியாது என்றேன்.

முக்கியக் கதாபாத்திரம் அஞ்சலைதான் என்பது முதல் பார்வையிலேயே தெரிந்துவிட்டது. அஞ்சலையாக நடிப்பது கிறிஸ்டினா என்னும் பெண். அன்றைக்குத்தான் எல்லாரையுமே நான் முதன்முதலாகப் பார்க்கிறேன். கிறிஸ்டினா ஸ்கிரிப்டைக் கையில் எடுத்து, எழுத்து கூட்டி வாசிக்க ஆரம்பித்தார். திக்கித் திக்கி வாசித்தார். இதில் நுனி நாக்கு ஆங்கிலம் வேறு. ஸ்கிரிப்ட்டில் பக்கா சென்னைத் தமிழ்! கிழிஞ்சது கிருஷ்ணகிரி என நினைத்துக்கொண்டேன்.

இரண்டு தடவை வசனம் சொல்லிக் கொடுத்ததும் கிறிஸ்டினாவின் வசன வெளிப்பாடு என்னை அசரடித்துவிட்டது. இந்தப் பெண் இந்த நாடகத்தையே எங்கோ கொண்டு போய்விடுவார் என்ற நம்பிக்கை வந்தது. நாடக அரங்கேற்றத்திலும் அதுவே நடந்தது.

ஞாநி, சாய் கிருபா (ஆப்பம்மா), அஞ்சலை – இந்த மூவரை ஒட்டியே ஒட்டுமொத்த நாடகமும். நாங்களெல்லாம் இவர்களின் பாத்திரங்களை மெருகேற்ற மட்டுமே. அதனைச் செய்தோம்.

நீல்சன் கட்டியக்காரனாக நடித்தார். பக்கம் பக்கமாக வசனம். அநாயசமாகப் பேசினார். எனக்கு வசனங்கள் தராத ஞாநிக்கு மானசீகமாக நன்றி சொல்லவேண்டிய தருணம் இது.

ஞாநி முதல்தடவை பேசும்போது, ரிகர்சலுக்கு வாங்க, நீங்க வருத்தபடற மாதிரி இருக்காது என்றார். எனக்கு என்ன வருத்தம்? அப்படியே இருந்தாலும் பரீக்ஷாவை நினைத்துத்தான் இருந்திருக்கும். எப்படியோ தப்பித்தது பரீக்ஷா குழு.

நாடகத்தை யூ டியூபில் பார்க்க: (நல்ல பிரதி வந்ததும் மீண்டும் வலையேற்றி, நல்ல லிங்க் தருகிறேன்!) இதனை பதிவு செய்து வலையேற்றிய பத்ரிக்கு நன்றி. இப்படி ஒரு பொம்பளை கால்ல விழுந்து நடிக்கிறீங்களே, சே என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் எங்க வீட்டு ஜெயலலிதா!

Share