சமச்சீர்க் கல்வி – இன்று தீர்ப்பு

சமச்சீர் கல்வி தீர்ப்பு இன்று வருகிறது. ஆகஸ்ட் 2, பின்பு 10ம் தேதிக்குள் புத்தகங்கள் தரப்படவேண்டும் என்று சொல்லி இதுவரை தரப்படவில்லை. சுப்ரீம் கோர்ட்டும் இதற்கும் ஒன்றும் செய்ததாகத் தெரியவில்லை. பாடப் புத்தகங்களைத் தரவேண்டும் என்று சொல்லிவிட்டதால் சமச்சீர்க் கல்வி இந்த ஆண்டே வரவேண்டும் என்றுதான் தீர்ப்பு வரும், எதிராக வர வாய்ப்பில்லை.

ஒருவேளை எதிராக வந்து, அடுத்த ஆண்டுமுதல் சம்ச்சீர்க் கல்வி, வேறு புதிய பாடங்களுடன் என்று தீர்ப்பு வந்தால், மகிழ்ச்சி! இல்லை என்றால், பசங்களுக்கு படிக்க எதாவது இப்பவாவது கிடைச்சதே என்னும் வகையிலும் கொஞ்சமே கொஞ்சம் மகிழ்ச்சியே… 2 மாதங்கள் படிக்காமல் போய்விட்டதால் பசங்க படிப்பே வீணாகப் போச்சு என்று சொல்வதில் கொஞ்சம் உடன்பாடு உண்டுதான் என்றாலும் முழுக்க உடன்பாடில்லை. நான் 8ம் வகுப்பு படித்தபோது 2 மாதங்கள் ஆசிரியர் ஸ்டிரைக் நடந்தது. +2 படித்த போது 2 மாதங்களுக்கும் மேலாக ஸ்டிரைக் நடந்தது. எப்படியோ எதையோ படித்துக்கொண்டிருந்தோம்! பெரிய அளவில் நஷ்டம் நேர்ந்ததாகத் தெரியவில்லை. ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போதும் இப்படி 2 மாதங்கள் பள்ளிகள் செயல்படவில்லை என்கிறார்கள்.  நிச்சயம் இது சரியான வழி அல்ல. குடிமூழ்கிப் போகக்கூடியதும் அல்ல. இந்த இரண்டு மாதங்களில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் இலக்கணத்தை உருப்படியாகக் கற்றுக் கொடுத்திருக்கலாம். பாடங்களைப் படிப்பது எப்படி என்றும், அதனை சுவாரயஸ்மாக அணுகுவது எப்படி என்றும் சொல்லித் தந்திருக்கலாம். இதற்கெல்லாம் பொதுவாக ஆசிரியர்களுக்கு நேரமே இருக்காது. கிடைத்த நேரத்தில் இதனைச் செய்திருக்கலாம். முதலில் இதுவெல்லாம் ஆசிரியர்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும் என்பதே நம் ஆசிரியர்களின் அடிப்படைப் பிரச்சினை.

இந்த ஆண்டு இதே சமச்சீர்ப் பாடங்கள் என்று தீர்ப்பு வந்தாலும், அடுத்த ஆண்டே இந்தப் பாடங்களை ஜெ. அரசு மாற்றவேண்டும். சமச்சீர்க் கல்வியை வைத்துக்கொண்டு சரியான பாடங்களோடு அதனைக் கொண்டு செல்லவேண்டும். பாடத் திட்டங்களை சரியாக்குகிறோம் என்று இன்னும் மோசமாக ஆக்காமல் இருப்பார்களாக என்று நம்புவோம்!

என்ன தீர்ப்பு வந்தாலும் அதனை ஏற்போம் என்று ஜெ சொல்லியிருப்பது நல்லது. வேறு வழியில்லை என்னும்போது இப்படித்தான் பேசவேண்டும். 🙂 இதனை ஒரு மாதத்துக்கு முன்பே சொல்லத் துவங்கி இருக்கவேண்டும். இதனைச் சொல்லிக்கொண்டே, சமச்சீர்க் கல்வியின்படித் தயாரிக்கப்பட்ட பாடங்களுக்கு எதிரான கருத்துகளை நீதிமன்றத்தில் சொல்லிக்கொண்டிருந்திருக்கவேண்டும். அரசியலை இன்னும் திறமையாகச் செய்யப் பழகவேண்டும் ஜெ. இரண்டாவது முறை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தபோதே இந்த ஆண்டே சமச்சீர்க் கல்வியை அரசு செயல்படுத்தும் என்று அரசு முடிவெடுத்திருந்தால், மக்களிடையே எழுந்துள்ள அதிருப்தியைக் கொஞ்சம் தவிர்த்திருந்திருக்கலாம். தொடர்ந்து உச்சநீதி மன்றத்தில் வழக்காடியது நிச்சயம் தவறல்ல. கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பது சரிதான். ஆனால் மக்களின் நிலையையும் கொஞ்சம் கவனத்தில் கொள்வது நல்லது. இனி இது தேவையில்லை. இன்றுதான் தீர்ப்பு வரப்போகிறதே. இந்த தொடர் வழக்கால் மக்கள் மத்தியில் இருக்கும் அதிருப்தி ஜெயலலிதாவுக்கு எதிராக மாறும் என்று நான் நம்பவில்லை. பார்க்கலாம்.

தொடர்ந்து வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது, அடிக்கடி எதையாவது சொல்லாமல், தேவையற்ற விவாதங்களைச் செய்யாமல், மௌனமாக, அதே சமயம் தெளிவாக நீதிமன்றத்தில் மட்டும் அரசு பேசியது நல்ல விஷயம். இதனையே எல்லா விஷயத்திலும் ஜெ கடைப்பிடிக்கவேண்டும். செயல்பாடே முக்கியம் என்னும் விஷயத்தை மக்கள் மனத்தில் பதிய வைக்க யோசிக்கவேண்டும். இல்லையென்றால் ஓட்டுப் போடாமல் விட்டுவிடுவார்கள்.

சமச்சீர்க் கல்வி வழக்கு தீர்ப்பு வருவதையொட்டி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துச் சொல்வதா வருத்தங்கள் சொல்வதா என்று தெரியவில்லை என்பதால் என்னவோ ஒண்ணு என்று மட்டும் சொல்லி வைக்கிறேன்.

Update: 10 நாள்களில் சமச்சீர்க் கல்வியை அமல்படுத்தவேண்டும் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

Share

உறுமி – திரைப்பார்வை

உறுமி திரைப்பார்வை தமிழோவியம்.காமில் வெளியாகியுள்ளது. வாசிக்க: http://www.tamiloviam.com/site/?p=1723

Share

தெய்வத் திருமகள் – காப்பி அண்ட் பேஸ்ட்

இந்தத் திரைப்படமே ஒரு மோசடி. ஐம் சாம் படத்தை அப்படியே உருவியிருக்கிறார்கள். இப்படி உருவிவிட்டு தனது பெயரை இயக்குநர் என்று போட்டுக்கொள்ள ஒரு மாதிரியான கல்நெஞ்சோடு பிறந்தால்தான் முடியும். விஜய் செய்த முதல் தவறு இது.

நான் இன்னும் ஐம் சாம் பார்கக்வில்லை. இந்தப் படம் பார்த்துவிட்டு வந்த இரவு யூ ட்யூபில் சும்மா அரை மணி நேரம் பார்த்தேன். அப்போதுதான் தெரிந்தது, இந்தப் படத்துக்கு ஐம் சாம் இயக்குநர் எத்தகைய ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கிறார் என்பதும், தமிழில் இதனை விஜய் எப்படி சீரழித்திருக்கிறார் என்பதும். அரை மணி நேரம் பார்த்ததுக்கே இத்தனை கோபம் வந்துவிட்டது. எனவேதான் இது. 🙂

யோசனை என்பதே இல்லை. ஐம் சாமின் ஹீரோவின் ஹேர் ஸ்டைலைக்கூடவா காப்பி அடிப்பார்கள்? ஐம் சாம் படத்தின் ஹீரோ மெண்டல்லி ரிடார்ட்டாக இருந்தாலும், அதிலும் அவருக்கு ஒரு மெச்சூரிட்டி இருந்தது. இந்தக் குணமே அந்தப் படத்தின் பல கேள்விகளுக்கு லாஜிக்காக பதில் சொன்னது. ஆனால் தமிழ்ப்படத்தில் விக்ரமுக்கு கொஞ்சம்கூட மெச்சூரிட்டி இல்லை. இயக்குநருக்கு மெச்சூரிட்டி இருந்தால்தானே நடிகருக்கு வர! ஆனால் இதனை இயக்குநரின் தவறாகவே பார்க்கமுடியும்.

திரைக்கதை நன்றாக உள்ளது என்று சிலர் சொல்லியிருந்தார்கள். திரைக்கதை தமிழில் படு சொதப்பல். படத்தை ஓட்டத் தெரியாமல், விக்ரமுக்கும் தனது மனைவிக்கும் கள்ளத் தொடர்பு உள்ளதோ என்று பாஸ்கர் அலைகிறார். அதில் கொஞ்ச நேரம் காமெடி காட்சிகள். இதில் எதாவது லாஜிக் உள்ளதா? ஆனால் மக்களை சிரிக்க வைக்க வேண்டுமாம். சாட்சி சொல்லப் போகும் பாஸ்கரைக் கண்டுபிடிக்க இன்னொரு அரை மணி நேர அறுவை. இதுவே ஒரு கிரேஸி மோகன் படத்தில் வந்திருந்தால் அது வேறு. இந்தப் படம் அப்படிப்பட்ட படமா? விக்ரமுக்கு மெண்டல்லி ரிடார்ட். ஆனால் பாடத் தெரியும். குழந்தை பெற்றுக்கொள்ளத் தெரியும். இதற்கு ஒரு வசனமும் உண்டு, ஒரு சம்பவம் நடக்கும்போது அது என்னன்னு ஒருத்தருக்குத் தெரிஞ்சா போதாதான்னு. அவருக்குப் பிறக்கும் குழந்தை தன் அப்பாவை பைத்தியம் இல்லை என்று சொல்லும். ஐம் சாமில் ஒரு காட்சியில், ஒரு சிறுவன் கேட்கிறான், உங்க அப்பா மெண்டல்லி ரிடார்டா என்று. அவள் சொல்கிறாள், ஆமாம். அப்ப நீ என்கிறான் சிறுவன். அவள் இல்லை என்கிறாள். எத்தனை தெளிவான திரைக்கதை பாருங்கள். குழந்தை தன் அப்பா மெண்டல்லி ரிடர்ட் என்பதைப் புரிந்துகொண்டு, அதனை ஏற்றுக்கொண்டு பேசுகிறது. இத்தனை தெளிவு தமிழ்ப்படத்தில் இருக்கிறதா?

ஐம் சாமில் மெண்டல்லி ரிடார்டாக இருப்பவரை வெறும் பைத்தியமாகக் காட்டி நோகடிக்கவில்லை. அவர் தன் குழந்தையுடன் சேர்ந்து வீட்டில் பாடங்களைப் படிக்கப் பார்க்கிறார். ஆனால் தமிழில்? விக்ரம் பைத்தியமேதான். அவருக்குத் தெரிந்ததெல்லாம் கையைத் தூக்கி தூக்கிப் பேசுவதுதான். அதுவும் மிஸ்டர் பீன் மற்றும் சிப்பிக்குள் முத்து கமலின் உடல் மொழியே.

அடுத்து வரும் கோர்ட் காட்சிகள். அனுஷ்காவின் கேரக்ட்ரை இத்தனை கேணத்தனமாக யாரும் உருவாக்க முடியாது. கூடவே வரும் கிறுக்கன் கேரக்டராக சந்தானம். இன்னொரு கிறுக்கனாக வரும், உதவும் வக்கீல். அத்தனை பெரிய வக்கீல் நாசரிடம் இருக்கும் உதவியாளரை தனக்கு வேவு பார்க்கச் சொல்வார்களாம். அப்படியாவது அவன் வேவு பார்த்துச் சொன்னது என்ன என்றால், ஒன்றுமே இல்லை. இதை வைத்துக்கொண்டு அரை மணி நேரம் குட்டிக்கரணம்.

அடுத்து நாசர் கேரக்டர். மிகப் பெரிய வக்கீலாம். ஆனால் அவருக்கு விகரமை மனநிலை சரியில்லாதவர் என்று கோர்ட்டில் நிரூபிக்கத் தெரியாதாம். ஏனென்றால் அனுஷ்காதான் ஹீரோயின். இவர் என்ன செய்வார்! தலையெழுத்து. கடைசியில் விக்ரம் மெண்டல்லி ரிடார்ட் இல்லை என்று ஒப்புக்கொண்டு விடுவாராம். விக்ரமும் குழந்தையும் சந்திக்க ஒரு மணி நேர அவகாசமாம். அந்தக் காட்சியில்தான் எத்தனை குழப்படி! அதில் விக்ரம் ஓடி வந்து விழும் காட்சி அப்படியே ஐம் சாமில் உள்ளது. தமிழ்த்தனமாக விழக்கூடவா தமிழனுக்குச் சுயபுத்தி இல்லை?

கோர்ட்டில் இரண்டு பேர் லூசுத்தனமாகப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஒருவர் நாமம் போட்டிருக்கிறார், இன்னொருவர் பட்டை அடித்திருக்கிறார். ஏன், அங்கே சைவ வைணவ விவாதமா நடக்கிறது?

மெண்டல்லி ரிடார்ட் விக்ரம்தான் பாட்டுப் பாடி நம்மைக் கொல்கிறார் என்றால், வக்கீலும் விக்ரமுடன் டூயட் பாடுகிறது. இந்த தமிழ் சினிமா விளங்கவே விளங்காதா? எந்த ’நல்ல பட’ இயக்குநராவது இப்படி ஒரு டூயட் காட்சி வைப்பாரா? கேட்டால் சமரசம் என்பார்கள்.

கடைசி காட்சியில் விக்ரமே குழந்தையை ஒப்படைத்துவிடுவாராம். கொடுமை. யார் மெண்ட்டல்லி ரிடார்ட்? நாமா? விக்ரமா?

விக்ரமுக்கும் குழந்தைக்குமான அன்னியோன்யம் குழந்தையின் பார்வையில் சரியாகப் பதியப்படவே இல்லை. உண்மையில் அதுதான் நம்மை நெகிழ்ச்சியின் உச்சத்துக்கே அழைத்துச் சென்றிருக்கும். அது இல்லாததால் கிளைமாக்ஸில் ஆச்சரியம் மட்டுமே மிஞ்சுகிறது. (இதுதான் நடக்கும் என்று யூகம் செய்துவிடும் என்னைப் போன்றவர்களுக்கு அதுவும் மிஸ்ஸிங்!) மனதில் ஒரு பதற்றம் ஏற்படவில்லை.

படம் முழுக்க ஓவர் ஆக்ட்சிங் செய்தால் மக்களுக்குப் பிடித்துவிடும் என்பது நம் மரபு. அப்படியே செய்திருக்கிறார் விக்ரம். பைத்தியமாக நடிப்பது சும்மா அசட்டுத்தனமாக அலட்டுவது என்று நமக்குப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், நம்ம ஊர் மெண்டல்லி ரிடார்டுகளெல்லாம் அழகானவர்களாகவும் அப்சரஸ்களாகவும் உலவும் ரகசியமும் புரிபடுவதில்லை. கமல், ஸ்ரீதேவி, ராதிகா, அஞ்சலியில் வரும் குழந்தை – இப்படி மெண்டல்லி ரிடார்டுகள் அழகானவர்களாகவே இருந்துவிடுகிறார்கள். ஆனால் விக்ரமுக்கு நண்பர்களாக வரும் 3 மெண்டல்லி ரிடார்டுகளில் ஒருவர்கூட அழகில்லை. அது எப்படி அப்படி ‘அமைந்துவிடுகிறது’ எனத் தெரியவில்லை.

இந்தத் திரைக்கதை படத்தை மனத்தில் வைத்து எழுதப்படவில்லை. மக்களை மனத்தில் வைத்து எழுதப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்தில் சுயம் இல்லை. தமிழில் வரும் பெரும்பாலான படங்களில் சுயம் இல்லை. குறைந்தபட்சம் உலகெங்கும் எடுக்கப்படும் கதையை இங்கே எடுக்கிறார்கள் என்றாவது அமைதிகொள்ள முடிந்தது. இப்படத்தில் ஒரு படத்தையே அப்படியே சுட்டிருக்கிறார்கள். இது நிச்சயம் ஏமாற்று வேலை. அத்திரைப்படத்துக்கான கிரெட்டிட்டைக் கொடுக்கவில்லை என்பது இது மோசடியே என்பதை நிரூபிக்கிறது.

மோசமான திரைப்படங்களுக்கு மத்தியில் சுமாரான படங்களை வரவேற்பதே நமது தலைவிதி ஆகிவிட்டது. அதனால்தான் அழகர்சாமியின் குதிரை, தெய்வத் திருமகள், மைனா எல்லாம் பெரிய வரவேற்பைப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுப் போகிறது. அழகர்சாமியின் குதிரை, மைனாவிலாவது மண் சார்ந்த சுயம் என்பது கதையளவில் இருந்தது. இதில் அதுவும் இல்லை.

இத்திரைப்படத்தின் சில ப்ளஸ்கள்: ஒரு முயற்சி என்ற அளவில் – மனதைக் கல்லாக்கிக்கொண்டு – வரவேற்பது. குழந்தையாக வரும் பெண்ணின் மாசு மருவற்ற முகமும் அதன் நடிப்பும். கிளைமாக்ஸ் கோர்ட் காட்சியில் விக்ரமின் நடிப்பு. ஆரிரோ ஆராரிரோ எனும் நெஞ்சை அள்ளும் பாடல். (இந்தப் படத்தில் இரண்டு பாடல்களைச் சுட்டிருக்கிறார் ஜி.வி. பிரகாஷ். இயக்குநர் ஜாடிக்கேத்த நல்ல ஜிவி பிரகாஷ் மூடி!) நல்ல ஒளிப்பதிவு. நாசர், அனுஷ்கா, அமலா பாலின் நடிப்பு. இவ்வளவுதான். இதை இவர்கள் எந்தப் படத்திலும் செய்துவிடுவார்கள்.

மனதைக் கல்லாக்கிக் கொண்டேயானாலும், தெய்வத் திருமகள் போன்ற ஓர் அப்பட்டமான காப்பியை நாம் வரவேற்பதுகூட நிச்சயம் தவறுதான். கலைக்கு செய்யும் அவமரியாதை.

Share

காஞ்சனா – விடாது தமிழ்ப்பேய்

* தமிழில் பேய்ப்படங்கள் எப்படி இருக்கவேண்டுமோ அப்படியே இருக்கிறது காஞ்சனா. பயமே இல்லாமல் பார்க்கலாம். 🙂

* அதே சரக் சரக் பேய், திடும் திடும் பேய். அதே தமிழ்ப்பேய்.  அதே ஓவர் ஆக்டிங் பேய். எல்லாம் சரி. கதையுமே அதுவேயா? முனி1ஐ அப்படியே எடுத்திருக்கிறார்கள். ஃப்ளாஷ் பேக் கதையை மாற்றிவிட்டார்கள். முனி1ன் ஸ்பெஷல் என்னவென்றால், அதற்கு முன்னர் வந்த பல பேய்ப்படங்களைப் போலவே அதுவும் எடுக்கப்பட்டிருந்ததுதான்.

* கமல்ஹாசன் நடித்து தேசிய விருது பெறுவார் என்று 1990களில் இருந்து நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அரவாணி கேரக்டரை சரத்குமார் பண்ணியிருக்கிறார். நடிக்கவே வரவில்லை. பிரகாஷ் ராஜ், சரத்குமார் என இவர்கள் நடிக்கவே வராமல் அரவாணி போல் நடிப்பதைப் பார்க்கவேண்டியிருக்கிறது. இவர்களுக்கு இப்படி நடிக்க தைரியமாவது இருக்கிறது. கமலுக்கு எப்போது வருமோ.

* ஒரே ஆறுதல் அரவாணிகளை அசிங்கப்படுத்தாமல் உயர்ந்த நோக்கில் காட்டியிருப்பது. அரவாணிகளைப் பற்றிய ஓர் உண்மையான திரைப்படம் வரும்வரையில் இது போன்ற முயற்சிகளைப் பாராட்டிக்கொண்டிருக்கவேண்டியதுதான்.

* முனி1க்கும் 2க்கும் வித்தியாசம் காட்ட, அரவாணி, இஸ்லாமியப் பேய் ஓட்டும் முறை என்று என்னவோ காட்டிவிட்டார்கள்.

* அநியாயத்துக்கு படம் நீளம். இடைவேளைக்குப் பிறகுதான் காஞ்சனாவே வருகிறாள். இதுகூட ஓகே. கொலை, ஃப்ளாஷ்பேக் எல்லாமே இடைவேளைக்குப் பிறகு என்றால் ஒரு மனுஷன் தாங்கவேண்டாமா ஐயா?

* முனி1ல் எப்படி நடித்தாரோ அதையே மீண்டும் நடித்துவிட்டுப் போய்விட்டார்கள் ராகவா லாரன்ஸும், கோவை சரளாவும். நல்லவேளை, வினுச்சக்கரவர்த்தையைக் கொன்றுவிட்டார்கள்.

* பாடல்கள் இது பேய்ப்படம்தான் என்பதை உறுதி செய்கின்றன. பின்னணி இசையும் அப்படியே.

* முனி1 பெரிய ஹிட் இல்லை. ஆனால் இந்தப் படம் ஹிட்டாகும் வாய்ப்பு இருக்கிறது. சில இடங்களில் வாய்விட்டு சிரிக்க முடிகிறது. கொஞ்சம் எடிட் செய்து டிரிம்மாக்கி இருந்தால் நிச்சயம் பெரிய ஹிட் ஆகியிருக்கும்.

* படத்தின் உச்சகட்ட திகில் காட்சி கடைசி ஸ்லைடுதான். முனி3 வருமாம். கிறித்துவப் பேய் ஓட்டும் முறை மீதி உள்ளது என்னும்போது ராகவா லாரன்ஸை என்ன குற்றம் சொல்லமுடியும். 3 முக்கிய மதங்களை  மட்டுமே நமக்குக் கொடுத்த அந்த இறைவன்தான் எவ்வளவு கருணைக்குரியவன்.

Share

காலில் விழுதல்

அரவிந்தன் நீலகண்டனுடன் ஒருமுறை ராமகிருஷ்ணா மடம் சென்றிருந்தேன். கிட்டத்தட்ட அரசர் போல பேசிக்கொண்டிருந்த அவர் உள்ளே சென்றதும் ஸ்வாமியைக் கண்டதும் யாதுமற்றோர் ஆண்டியாகப் பொத்தென காலில் விழுந்துவிட்டார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நானும் காலில் விழுந்தேன். அரவிந்தன் அவர் உடல் முழுக்க மண்ணில் பாவ காலில் விழுந்தார். நான் ஸ்டைலாக வேறு வழியில்லாமல் காலில் விழுவது போல விழுந்தேன். காலில் விழுவது என்றாலே ஒருவித அலர்ஜி. 90களில் ஜெயலலிதாவின் ஆட்சியில் ஏற்பட்ட எரிச்சலால் இருக்கலாம். யார் காலில் யார் விழுவது என்ற விவஸ்தை இல்லாமல் ஜெயலலிதா காலில் எல்லாரும் விழுவது குறித்து பெரிய எரிச்சல் இருந்தது. அதைத் தொடர்ந்து காலில் விழுவதே கேவலம் என்ற மனப்பான்மை வந்துவிட்டது. அரவிந்தன் ஸ்வாமிஜி காலில் விழுந்ததும், எனக்கு அவர் காலில் விழவேண்டும் என்ற ஒரு நெருக்கடி உண்டாகி, அதைத் தவிர்க்க முடியாமல்தான் ஸ்வாமிஜி காலில் விழுந்தேன். ஸ்வாமிஜி காலில்தானே விழுந்தோம் என்று மனதை எவ்வளவு தேற்றிக்கொண்டாலும் இப்படி காலில் விழும்படி ஆகிவிட்டதே என்று மனது உறுத்திக்கொண்டே இருந்தது. அரவிந்தனிடம் என்ன இப்படி திடீர்னு விழுந்திட்டீங்க, எனக்கும் வேற வழியில்லாம விழவேண்டியதாப் போச்சு என்றேன். எனக்கு விழணும் விழுந்தேன், உங்களுக்கு வேண்டாம்னா விழவேண்டாம் என்று சொல்லிவிட்டார். இன்னும் எதாவது கேட்டால், இங்கன பாத்துக்கிடுங்க என்று ஆரம்பித்துவிடுவார் என்பதால் அப்படியே விட்டுவிட்டேன்.

22ம் வயதில் எனக்குப் பூணூல் போட்டார்கள். வயதானவர்கள் காலில் எல்லாம் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவேண்டும். அம்மா சொல்ல சொல்ல நானும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டிருந்தேன். என் அக்காவின் நண்பர் ஒருவர் வந்திருந்தார். எனக்கும் அவருக்கும் 4 வயதுதான் வித்தியாசம் இருக்கும். ரொம்ப அழகா இருக்காங்கள்ல என்று மரியாதையுடன் அந்த அக்காவை நண்பர்களுடன் சைட் அடித்திருக்கிறேன். எதிர்பாராத ஒரு நொடியில் என் அம்மா அவர் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கச் சொல்லிவிட்டார். இந்த அம்மாவைக் கொலை செய்தால்தான் என்ற என்று தோன்றிவிட்டது. அந்த அக்கா சென்றதும் என் அம்மாவை உண்டு இல்லை என்றாக்கிவிட்டேன். என் திருமணத்துக்கு முன்பாக என் அம்மாவிடம் நானே யார் கால்ல விழணுமோ அவங்க கால்ல விழுவேன், நீ சொல்லவேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

இணையக் குழுமம் ஒன்றில் இப்படி காலில் விழுவது பற்றிப் பேச்சு வந்தபோது, காலில் விழுவது தேவையற்ற செயல் என்று சொன்னபோது, அடித்துத் துவைத்துக் காயப் போட்டுவிட்டார்கள். சொந்தக்காரர்கள் காலில் திருமணத்தில் விழுவது வேறு, கண்ட கண்ட மேடைகளில் இப்படி அரசியல்வாதிகள் காலில், குரு என்று சொல்லி மாஸ்டர்கள் காலில் விழுவதையெல்லாம் என்னால் சகிக்கமுடியவில்லை என்று சொன்ன நினைவு. ஆனால் காலில் விழுவதே இந்திய மரபு என்று தீர்ப்படித்துவிட்டார்கள். என்ன இந்திய மரபோ! இந்த இந்திய மரபில் ஏதோ ஒரு வகையில் அடிமைத்தனம் ஒளிந்திருப்பதாகவே தோன்றுகிறது. முதலிரவில் கணவன் காலில் மனைவி விழவேண்டும். மனைவி கணவன் காலில் விழவா முதலிரவில் காத்துக்கொண்டிருப்பார்கள்? ஆனால், அத்தை மாமா சொல்லி அனுப்பினாங்க என்று சொல்லி, நான் எத்தனையோ மறுத்தும், 19 வயதுப் பெண் அப்படித்தான் காலில் விழுந்தாள். இந்தச் சடங்கும் நல்லதுக்குத்தான். அதற்குப்பின் நான் எத்தனையோ தடவை கெஞ்சியும் அவள் சொன்ன பதில், நான் என்ன லூஸா உங்க கால்ல விழுறதுக்கு என்பதுதான். வரலக்ஷ்மி விரதத்தில் மட்டும் வேறு வழியில்லை, மனைவி கணவன் காலில் விழுந்துதான் ஆகவேண்டும். ஆனால் இந்தப் பண்டிகை வருடத்துக்கு ஒருமுறைதான் வந்து தொலைக்கிறது.

தினமும் மனைவி கணவன் காலில் விழுந்தால் குடும்பத்துக்கு நல்லது என்று எனக்குத் தூரத்து உறவான ஒரு அக்காவின் மாமியார் சொல்லிவிட்டார். அவர்கள் வீட்டுக்குப் போயிருக்கும்போது அந்த அக்கா தன் கணவனின் காலில் விழுவதைப் பார்த்து எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. எப்பலேர்ந்து இதெல்லாம் என்றேன். மாமியார் சொல்லியிருக்காங்க, குடும்பத்துக்கு நல்லதாம் என்றார். ஒரு மாதம் கழித்து மீண்டும் அந்த அக்கா வீட்டுக்குச் சென்றிருந்தேன். இரவு நெடுநேரம் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தோம். அப்படியே தூங்கப் போய்விட்டோம். திடீரென்று அந்த அக்கா ஏன்றீ ஏன்றீ என்று தன் கணவனை பதட்டத்துடன் அழைத்தார். அந்த அண்ணன் ரெண்டு ரூம் தள்ளி ஓரிடத்தில் படுத்திருந்தார். தூங்க ஆரம்பித்திருந்தார். தூக்க கலக்கத்துடன் என்ன என்றார். ஒரு நிமிஷம் இங்க வாங்க, கால்ல விழ மறந்துட்டேன், காலை காமிச்சுட்டுப் போங்க என்றார். அவர் புலம்பிக்கொண்டே எழுந்து வந்து காலைக் காண்பித்தார். அக்கா உடலை கொஞ்சம் கூட நகட்டாமல் படுத்தமேனிக்கு தன் கணவனின் காலை லேசாகத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு தேங்க்ஸ்றீ என்றார். நான் தலையில் அடித்துக்கொண்டேன்.

இத்தனை காலில் விழுதலும் வேறு மாதிரியானது.

நேற்று நாதஸ்வரம் நாடகத்தில் வேறு ஒரு மாதிரியாகக் காலில் விழுந்தார்கள். 4 வாரங்களாக செம அறுவையாகப் போய்க்கொண்டிருந்த நாடகத்தில், இனிமே இந்த எழவைப் பார்க்கத்தான் வேண்டுமா என்று நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், திடீரென்று புதுக்கதையை நுழைத்து கொன்றெடுத்துக்கொண்டிருந்த நேரத்தில், எதிர்பாராமல் உணர்ச்சி மயமான கட்டம் நீண்ட நாள்களுக்குப் பிறகு. நான் முதலிலேயே இந்தக் காட்சியை எதிர்பார்த்தேன். ஒட்டுமொத்த குடும்பமும் ஒரு சின்ன பெண்ணின் காலில் விழுகிறது, அவள் வீட்டை விட்டு ஓடிப் போய்விடக்கூடாது என்பதற்காக.

18 வயதில் பாலகுமாரன் நாவல்களை ஒன்றுவிடாமல் படித்துத் தீர்த்துக்கொண்டிருந்தேன். மொட்டைமாடியில் அவள் தலை வழியாக நைட்டியைக் கழற்றினாள் போன்ற வரிகள் எல்லாம் வாழ்நாளுக்கும் துரத்தி அடிக்கும். பதின்ம வயதுகளில் பாலகுமாரனைப் படிக்காமல் விட்டவர்கள் நிச்சயம் எதையோ இழந்தவர்கள்தான். அவரது நாவல் ஒன்றிலும் பழுத்த பிராமணர் ஒருவர் இப்படித்தான் தடால் என்று யார் காலிலோ விழுவார். நாவல் பெயர் நினைவில்லை. அந்த வரியைப் படித்தபோது உடலெங்கும் அதிர்வு பரவியது நினைவுக்கு வந்தது. வேர்கள்.

என் அத்தைக்கு 16 வயதில் திருமணம். என் தாத்தாவுக்கு அப்போது 60 வயது. கல்யாணத்தில் காப்பி வர லேட்டாகிவிட்டது. என் மாமாவின் அக்கா காப்பிக்காக பிரச்சினை செய்து, தன் தம்பியை தாலி கட்டவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். பெரிய களேபரம் ஆகிவிட்டது. என் தாத்தா தன் கனத்த சரீரத்தைத் தூக்கிக்கொண்டு கடும் கோபத்தோடு உணர்ச்சி வசப்பட்ட நிலையில் என் மாமாவின் அக்கா காலில் விழுந்துவிட்டார். எப்படியோ கல்யாணம் ஆகவேண்டும் என்பதற்காக. நான் இதனைப் பார்த்த நினைவில்லை. ஆனால் என் அம்மா உணர்ச்சி வேகத்தோடு தன் மாமனார் காலில் விழுந்ததை விவரித்தது, நான் கூடவே நின்று பார்த்த உணர்வை உண்டாக்கிவிட்டது. ’அத்தனை பேரும் பார்த்துக்கிட்டு இருக்காங்க. உங்க தாத்தா, நல்ல கனமான உடம்பு. அங்காரக்ஷதை நெத்தில தீர்க்கமா இருக்கும். கோஜன (கோபிக்கட்டி) முத்திரை எல்லாம் பார்த்தாலே பெரிய மனுஷன்னு கும்பிடத் தோணும். ஹெ எம்மா வேற இருந்திருக்காரா ஊர்ல நல்ல மரியாதை. நல்ல படிப்பு. ஆனா முன்கோபி. கோபம் வந்துட்டா என்ன செய்யறோம்னே இல்லை. உங்க பாட்டிக்கு கோவில்தான் கட்டணும். இப்படி ஒரு மனுஷன் கூட் வாழறதே தவம் மாதிரிதான். ஊர் மொத்தமும் கல்யாணத்துக்கு காத்துக்கிட்டு இருக்கு. இவளானா காப்பி வல்லைன்னு குதிக்கிறா. அப்பல்லாம் ஏது ஃபோன்? பால் லேட்டுன்னா என்ன பண்றது? இவ காப்பி இல்லைன்னா கல்யாணம் இல்லைங்கிறா. எங்களுக்கு என்ன செய்றதுன்னு தெரியலை. உங்கப்பா நான் காப்பி வாங்கிட்டு வரேன்னு ஓடறார். இவ பால் வந்து எனக்கு இங்க காப்பி போட்டாகணும்ன்றா. பார்த்தார் உங்க தாத்தா. சபைல அவ முன்னாடி வந்து நின்னார். தோள்ல இருந்த துண்டை எடுத்து இடுப்புல கட்டிக்கிட்டார். எப்படியோ கல்யாணத்தை பண்ணுங்கன்னு சொல்லி கை கூப்பிக்கிட்டு பொத்துன்னு சபை முன்னாடி அவ கால்ல விழுந்துட்டார். பஞ்சகச்சை கட்டிக்கிட்டு ஒரு பிராமணன் இப்படி கால்ல விழுறதைப் பாத்துட்டு எல்லாரும் பதறிட்டாங்க. எனக்கானா அழுகை ஒரு பக்கம், கோபம் ஒரு பக்கம். அவ அருகதை என்ன இவர் தகுதி என்ன. அவ வயசு என்ன இவர் வயசு என்ன. ஆனா கல்யாணம் ஒழுங்கா நடக்கணுமே. அப்புறம் அவ தன் தம்பியை தாலி கட்ட விட்டா. அந்த பிராமணர் கால்ல விழுந்த சாபம் சும்மா விடுமான்னு ஊரே பேசிக்கிட்டு இருந்தது.’

இது நடந்து 30 வருடங்களுக்குப் பிறகு எங்கள் தூரத்து சொந்தத்தில் இன்னொரு கல்யாணம் நடந்தது. அங்கேயும் எதோ பிரச்சினை. வீட்டு மாப்பிள்ளையை புது மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் கவனிக்கவில்லை என்று வீட்டு மாப்பிள்ளை ஆட ஆரம்பித்துவிட்டார். சண்டை பெரிதாகி பெரிதாகி ஒரு கட்டத்தில் மாப்பிள்ளையின் தாய் கதறி அழ ஆரம்பித்துவிட்டார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த புது மாப்பிள்ளை சட்டென முன்னே வந்து, என்னவோ அம்மா தப்பு பண்ணிட்டாங்க, மன்னிச்சுக்கோங்க என்று சொல்லி, கல்யாண வேஷ்டி சட்டையுடன் சாஷ்டாங்கமாகக் காலில் விழுந்துவிட்டார். அந்தக் கல்யாணத்துக்கு என் அண்ணாவும் சென்றிந்தார். காலில் விழுந்த கூத்து முடிந்ததும், அந்த மாப்பிள்ளையின் தாய்மாமா என் அண்ணாவைக் காண்பித்துச் சொன்னாராம். இதோ நிக்கிறானே இவன் தாத்தா ஊரே மெச்சின பெரிய மனுஷன். அவரே தன் பொண்ணுக்கு கல்யாணம் ஆகணுமேன்னு கால்ல விழுந்திருக்கார். நாமல்லாம் எம்மாத்திரம் என்றாராம். 30 வருடங்கள் கழித்து என் தாத்தாவின் செயல் ஒரு மண்டபத்தில் பேசப்பட்டதில் என் அண்ணாவுக்கு இனம் புரியாத சந்தோஷம், பெருமை. எனக்கும் அப்படியே.

என் தாத்தா காலில் விழுந்து 35 வருடம் கழித்து, என் மாமாவின் அக்கா மகனுக்கு கல்யாணம் நடக்க இருந்தது. கல்யாணத்துக்கு 1 மாதம் முன்பு என் மாமாவின் அக்காவின் கணவர் இறந்துவிட்டார். துக்க்கத்துக்கு வந்த என் மாமா தன் அக்காவைப் பற்றி எங்களிடம் சொன்னது, ஒரு பெரிய மனுஷனை காலில் விழ வெச்சா இப்படித்தான் ஆகும் என்றார்.

Share

நித்தியானந்தா – அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துல சனி

ரஞ்சிதாவுக்கும் நித்யானந்தாவுக்கும் இடையில் உள்ள உறவு எத்தகையது என்பது தேவையற்ற ஒன்று. பிரமச்சரியத்தை வலியுறுத்திய ஒருவர், தனியறையில் ஒரு நடிகையுடன் உல்லாசமாக இருந்தார் என்பது அவரது நேர்மையின்மையைப் பறைசாற்றுமே ஒழிய, அவர் சட்டப்படி தவறு செய்கிறார் என்றாகாது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஒருவரின் படுக்கை அறையில் என்ன நடந்தது என்பதை வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டது முதல் தவறு. அந்த ஆபாச சிடியை சன் டிவி மீண்டும் மீண்டும் தொடர்ந்து ஒளிபரப்பி, குழந்தைகள் பெண்களை அருவருப்படையச் செய்தது இரண்டாவது தவறு. நித்யானந்தா செய்த நேர்மையற்ற செயலைவிட இந்த இரண்டுமே பெரிய தவறுகள். இந்த இரண்டு தவறுகளின் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் அக்காட்சிகள் மார்ஃபிங் செய்யப்பட்டவை என்கிறார்கள். நான் அதனை நம்பவில்லை. ஆனால் அப்படி சொல்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. வயதுக்கு வந்த இரண்டு பேர் மனமொத்து தனியறையில் உறவு கொள்வதை சட்டம் தவறு என்று சொல்லவில்லை. ஏற்கெனவே மணமானவர்கள்  வேறு (கள்ள) உறவை வைத்திருந்தாலும் அதை சட்டம் தவறு என்று சொல்லவில்லை என்றே நினைக்கிறேன். உறவுக்கு அழைத்தல் என்பதுதான் தவறு என்று நினைக்கிறேன். சட்டம் தெரிந்தவர்கள் மேற்கொண்டு சொல்லட்டும். (முன்பு மரத்தடி குழுவில் பிரபு ராஜதுரை இது பற்றி விரிவாக எழுதியிருந்தார்.)

ஊரெங்கும் தலைவன் என்றும் தலைவி என்று சொல்லிக்கொண்டு திரியும் பெரிய தலைகளின் படுக்கை அறைக் காட்சிகள் எல்லாம் இப்படி வீடியோவாகி முன்பே வெளியாகியிருந்தால், நித்யானந்தா இன்னும் பிரம்மசாரியாகத்தான் நமக்குத் தோன்றுவார்.

அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துல சனி.

Share

நான் நாகேஷ் – சிறிய குறிப்பு

நான் நாகேஷ் படித்தேன். சுவாரஸ்யமான புத்தகம்தான். கல்கியில் தொடராக வந்ததன் தொகுப்பு. பலப்பல சுவாரய்ஸ்மான சம்பவங்கள். நாகேஷ் உண்மையில் பெரிய குறும்புக்காரராகவே வாழ்ந்திருக்கவேண்டும். ஆனால் ‘நான் நாகேஷ்’ என்ற பெயரை இப்புத்தகம் நிறைவு செய்கிறதா என்று பார்த்தால் பெரிய ஏமாற்றுமே எஞ்சுகிறது. புத்தகம் வெறும் துணுக்குத் தோரணமாக மாறிவிட்டது. நாகேஷின் வாழ்க்கையில் நடந்த சிறிய சிறிய சம்பவங்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், அவரது வாழ்க்கையில் நடந்த பெரிய விஷயங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. ஒருவேளை நாகேஷ் அதனை விரும்பியிருக்காமல் இருக்கக்கூடும். இதனால் ஒரு கலைஞனின் வாழ்க்கைக்குக் கிடைத்திருக்கவேண்டிய முழுமை கிடைக்காமல் போய்விட்டது. நாகேஷ் பல படங்களில் நடித்தவர். பல அனுபவங்கள் பெற்றவர். இப்படியான ஒருவரின் எண்ண ஓட்டம் அறுந்து அறுந்து ஓடுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒன்று கால வரிசைப்படிப் பேசியிருக்கவேண்டும், அல்லது மனிதர்களை முன் வைத்துப் பேசியிருக்கவேண்டும். வைரமுத்துவின் இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் போல. இரண்டையும் சேர்த்து எடுத்துக்கொண்டதில், யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் ஒரு முழுமையான சித்திரத்தை அளிக்காமல் போய்விட்டது இப்புத்தகம். கமல் கமல்தான், ரஜினி ரஜினிதான் என்றெல்லாம் துணுக்குகளாகப் படிக்கும்போது ஆயாசமே மிஞ்சுகிறது. இவை எல்லாமே கல்கியில் வந்ததுதானா அல்லது புத்தகமாக்கப்படும்போது ஏதேனும் எழுதி சேர்க்கப்பட்டதா எனத் தெரியவில்லை.

இதை மீறி நாகேஷ் விவரித்திருக்கும் பல சமபவங்கள் சுவாரயஸ்மாக உள்ளன. ஜெயகாந்தனுடன் பிச்சை எடுத்தது, திருவிளையாடல் படத்தில் தருமியாக நடித்தது, அப்படத்தின் வெற்றி விழாவுக்கு இவர் அழைக்கப்படாமல் போனது, கடன் வாங்க துண்டோடு நடந்து போனது, (கிருஷ்ணன்) பஞ்சுவிடம் சட்டை பொத்தான் எங்கே என்று தேடியது என பல சுவாரயஸ்மான துணுக்குகள். எல்லாவற்றிலும் நாகேஷ் ஏதோ ஒன்றை துடுக்குத்தனமாகச் செய்திருக்கிறார்.

 நாகேஷின் திரைப்பட வாழ்வை அழித்தது எம்ஜியார்தான் என்றொரு பேச்சு உண்டு. அதைப் பற்றியெல்லாம் இப்புத்தகத்தில் மூச்சே இல்லை. கன்னடம் பேசும் ஆசாரமான பிராமணக் குடும்பத்தில் பிறந்து ஒரு கிறித்துவப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டது பற்றியான சுவாரஸ்யமான தகவல்கள் எல்லாம் இல்லவே இல்லை. ஒரே ஒரு வரி வருகிறது, நான் காதலித்த ரெஜினாவைத் திருமணம் செய்துகொண்டேன் என்று. இவையெல்லாம் எதற்கு என்று நாகேஷ் நினைத்திருக்கக்கூடும். நாகேஷ் இன்று இல்லாத நிலையில் அவையெல்லாம் இருந்திருந்தால் ஒரு நல்ல கலைஞனின் ஒட்டுமொத்த வாழ்க்கைச் சித்திரத்தின் அருமை நமக்குப் புரிந்திருக்கும். அது கை கூடாமல் போனது துரதிர்ஷ்டமே.

 புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-562-2.html

Dial For Books: 94459 01234   |   9445 97 97 97

Share

Facebook Notes – 3

துக்ளக்கில் சாருவின் அறச்சீற்றம் – இலவச விளம்பரம் (07-ஜூலை-2011)

* இந்தியாவில் மதமாற்றம்தான் மதச்சார்பின்மை.

 * உண்மையைச் சொல்வதால் ஹிந்துத்துவவாதி முத்திரை.

 * மதமாற்றத் தடைச்சட்டம் உடனடியாகக் கொண்டுவரப்பட வேண்டும்.

 * பூர்வீக மதமான ஹிந்து தர்மத்தை ஒழித்துவிடுவார்கள். (குறிப்பு: ஹிந்து தர்மம் என்பதைக் கவனிக்கவும்!)

 * காங்கிரஸ் அரசு இத்தாலியின் ப்ராக்ஸி.

 கூடவே தொட்டுக்கொள்ள ஊறுகாயாக அரபி இலக்கியம் உண்டு. வழக்கம் போல டெய்ல் பீஸில் கருணாநிதி அர்ச்சனை.

 இன்றே வாங்குவீர், இப்போதே படிப்பீர்.

 (இது இலவச விளம்பரம்தான். துக்ளக் எனக்கு பணமெல்லாம் தரவேண்டியதில்லை.)

இரண்டாம் குறிப்பு: தமிழ்ஹிந்துவெல்லாம் ஒரு தளமா? சாருவிடம் இருந்து படித்துக்கொள்ளுங்கள் ஐயா.

தெய்வம் நின்றாவது கொல்லவேண்டும் (04-ஜூலை-2011)

கௌரவம் திரைப்படத்தில் மேஜர் சுந்தர்ராஜன் ஒரு கொலை செய்வார். சிவாஜியின் வாதத் திறமையால் வழக்கிலிருந்து தப்பித்துவிடுவார். அடுத்தமுறை கொலை செய்யாமலேயே அவர் மீது கொலைப்பழி விழுந்துவிடும். சிவாஜியின் வாதத் திறமையையும் மீறி அவருக்கு த்ண்டனை கிடைத்துவிடும்.

 அரசியல்வாதிகளின், அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துபவர்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. எதோ ஒன்றில் தப்பிக்கிறார்கள். எதோ ஒன்றில் மாட்டிக்கொண்டுவிடுகிறார்கள். படத்துக்கும் இவர்களுக்கும் ஒரே வித்தியாசம், இவர்கள் இரண்டிலுமே குற்றம் செய்திருப்பார்கள் என்பதுதான்.

 இன்றைய உதாரணம் சன் டிவியின் சக்ஸேனா. ஹோட்டல் சம்பந்தப்பட்ட தகராறு ஒன்றில் இவர் பெயர் அடிபட்டது. ஆனால் என்ன பிரச்சினை என்பது தெளிவாக வெளியில் வரவே இல்லை. எந்த பத்திரிகையும் கண்டுகொள்ளவும் இல்லை. இன்று இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கைதுக்கான புகார் பின்னணியில் உண்மை உள்ளதா என்பதெல்லாம் தெரியவில்லை. ஜெயலலிதா அரசு பழிவாங்கும் நோக்கோடு கைது செய்தது என்றெல்லாம் இனி கருத்துகள் வரலாம். (பழிவாங்கும் நோக்கோடு செயல்பட்டாலும், கைதுக்கான சரியான காரணங்கள் இருந்தால் அதைச் செய்யவேண்டியதுதான். இது ஜெயலலிதாவுக்கும் பொருந்தும்!) ஆனால் கருணாநிதி அரசு ஆட்சியில் இருந்தபோது சன் பிக்சர்ஸின் அதிகாரம் பற்றிப் பலர் புலம்பியிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்தக் கைது மகிழ்ச்சியைத் தந்திருக்கும். போக போக என்னவெல்லாம் நடக்கிறது என்பது தெரியவில்லை. பார்க்கலாம். நிறைய நோட்ஸ் எழுத முடிந்தால் மகிழ்ச்சியே!

தெய்வம் நின்றாவது கொல்லவேண்டும்.

சானல் 4 & ஜெயா டிவி (04-ஜூலை-2011)

சானல் 4ல் ஒளிபரப்பான போர்க்குற்றங்கள் வீடியோவின் ஒரு பகுதியை ஜெயா டிவி ஒளிபரப்பியதாக அறிந்தேன். நான் நிகழ்ச்சியை பார்க்கவில்லை என்பதால், நிகழ்ச்சி ஒளிபரப்பானது உண்மைதானா என்றறிய காத்துக் கொண்டிருந்தேன். ஜெயா டிவி செய்திருப்பது அதன் வாழ்நாள் சாதனை. தமிழக டிவிக்கள் எதாவது இதனைச் செய்யாமல் தமிழ்நாட்டு வெகுஜனங்களை அடையவே முடியாது. ஜெயா டிவிக்குப் பாராட்டு.

இதனை சன் டிவி செய்யவில்லை, கலைஞர் டிவி செய்யவில்லை என்பதைவிட்டுவிட்டு, எல்லா டிவிக்களும் இதை செய்யவேண்டும். அப்போதுதான் ஓரளவாவது இலங்கையில் என்னதான் நடந்தது என்பதன் ஒரு பகுதியாவது தமிழகத்துக்குத் தெரிய வரும்.

மெரினாவில் ‘மெழுகுவத்தி ஏந்தல்’ நிகழ்ச்சி முழுமையாக கவர் செய்யப்படதாதற்கு வேறு சில காரணங்களும் உண்டு. பிராபகரன் உயர்த்திப் பிடிக்கப்பட்டது பல ஊடகங்களுக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கலாம். திருமாவேலன் விகடனில் ‘தனி நபர் முழக்கங்களை தவிர்த்துவிட்டு, தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு தமிழ் ஈழத் தாயகம் மட்டுமே என்ற குரல் மட்டுமே உயர்ந்தது’ என்று எழுதியிருக்கிறார். 🙂 ஊடகங்கள் விடுதலைப்புலி ஆதரவு குரலை கண்டனம் செய்துவிட்டாவது, இந்த மெழுகுவத்தி கூட்டத்தை கவர் செய்திருக்கவேண்டும். வழக்கம்போல செய்யவில்லை.

ஊடகங்கள் இனிமேலாவது செயல்படுமா என்று தெரியவில்லை. பார்க்கலாம்.

Share