என் இன்னொரு சிறு கதைமுகம்

நான் மறக்க விரும்பும் இன்னொரு முகம் இங்கே. 🙂 இதில் கட்டுடைப்புகள், இதுதான் நான் எழுதியவற்றிலேயே சிறந்த கதைகள் எனப் பாராட்டுகளைச் செய்து என்னை வெறுப்பேற்றுவது ஆகியவற்றைத் தவிர்க்குமாறு வேண்டுகிறேன். ,முக்கியமான குறிப்பு – இவையெல்லாம் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டவை. 🙂

உயிர்

“ஐயா, நம்ம வீட்டுக்கு போலிஸ்காரங்க வந்திருக்காங்க” என்று டாக்டர் சிவாவை எழுப்பினான் வேலைக்காரன்.

சிவா பதற்றத்துடன் வெளியில் வந்தான். இன்ஸ்பெக்டர் நின்றிருந்தார்.

“வளசரவாக்கத்துல ஒரு கார்ல குண்டு வெடிச்சிருக்கு. விசாரணைல அது உங்க கார்னு தெரிஞ்சது டாக்டர். காரை ஓட்டிக்கிட்டுப் போனவர் ஸ்பாட்லயே அவுட்.”

சிவாவுக்கு கை காலெல்லாம் நடுங்கியது. “என்ன சொல்றீங்க இன்ஸ்பெக்டர். நேத்து நைட் என் பிரண்டு ஜீவன் காரை எடுத்துக்கிட்டுப் போனான்.”

இன்ஸ்பெக்டர், “சரி, எங்களுக்கு எதாவது தகவல் தேவைப்பட்டா உங்களை கூப்பிடறோம்” என்று சொல்லிவிட்டுப் போனார்.

சிவா வீட்டுக்குள் சென்று நாற்காலியில் பொத்தென்று உட்கார்ந்தான். படபடப்பு கொஞ்சம் குறைந்திருந்தது.

முதல் நாள் இரவு ஜீவன் வீட்டுக்கு வந்ததிருந்தான். கையில் வைத்திருந்த ஃபோட்டோக்களையெல்லாம் காட்டினான். சிவா பல பெண்களுடன் உல்லாசமாக இருந்தபோது எடுத்த நிர்வாணப் புகைப்படங்கள். சிவாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“அப்ப நான் அனுப்பின மெயில் பாக்கலையா” – ஜீவன் கேட்டான்.

“இல்லையே…”

“ஓ, சரி. நேர்லயே சொல்றேன். ஜஸ்ட் ஒரு கோடி. உன்கிட்ட பணம் கொட்டிக் கிடக்குது. இதெல்லாம் நெட்ல வந்தா என்னவாகும்னு நினைச்சுப் பாரு. நீ ஒரு பெரிய டாக்டர், உங்கம்மா, அப்பா, உன் மனைவி எல்லாருமே டாக்டர்கள். இந்த ஒரு கோடியை ஒரு மாசத்துல சம்பாதிச்சிடலாம்” என்றான் ஜீவன்.

“கூடவே இருந்துட்டு இப்படி துரோகம் பண்றியேடா” என்றான் சிவா.

“உன் கூடவேதான் இருந்தேன், ஆனா உன் கூட சரிசமமா இல்லையே. என்கிட்ட பைக்கே இல்லை, உங்கிட்ட காரே இருக்கு. நானும் எப்பதாண்டா பெரியாளாறது?”

சிவாவுக்கு கோபம் தலைக்கு ஏறியது. பக்கத்தில் இருந்த ஒரு இரும்புக் கம்பியை எடுத்து ஜீவன் தலையில் ஓங்கி அடிக்க, ஜீவன் மயக்கமாகிவிட்டான். சட்டென டாக்டர் சிவாவின் மூளை யோசித்தது.

ஜீவனுக்கு ஒரு மயக்க ஊசி. யார் யாருக்கோ ஃபோன். பத்து நிமிடத்தில் நான்கைந்து பேர் வந்து அவன் காரில் குண்டு வைத்துவிட்டு, கேள்வி கேட்காமல், பணம் மட்டும் வாங்கிக் கொண்டு போனார்கள்.

ஜீவனைக் காரில் வைத்து, வளசரவாக்கத்தில் ஒதுக்குப்புறத்தில் காரை வைத்துவிட்டு வந்துவிட்டான். காலையில் கார் வெடித்துச் சிதறும்போது  ஜீவனும் சிதறியிருப்பான்.

எல்லாமே கச்சிதமாக நடந்துவிட்டது. சிவா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனான். கம்ப்யூட்டரை உயிர்ப்பித்தான். ஜீவனிடமிருந்து மெயில் வந்திருக்கிறது என்றது கம்ப்யூட்டர். ஜீவன் இதுபற்றிச் சொன்னது நினைவுக்கு வந்தது.

“சிவா, நான் கேட்கிறது ஜஸ்ட் ஒரு கோடி. இன்னைக்குள்ள தரலை, நாளை காலையில உன் ஃபோட்டோ எல்லாம் நெட்ல வரும். ஆட்டோமேட்டிக்கா வர்ற மாதிரி செட் பண்ணியிருக்கேன். நீ பணம் கொடுத்துட்டா, அதை டெலிட் பண்ணிடுவேன். இல்லைன்னா அது தானா நெட்ல வரும்.”

சிவாவுக்கு தலை சுற்றியது.

 

கிரிக்கெட்

ஜஸ்ட் ரெண்டே ரெண்டு பந்து. 47.1ஆவது ஓவரில் ஒரே ஒரு வைட் வீசவேண்டும். அடுத்து 49.4ஆவது ஓவரில் ஒரு நோபால். அவ்வளவுதான். சில கோடிகள் கைக்கு வரும்.

அனுஷனுக்கு படபடப்பாக இருந்தது. தமிழ்நாட்டிலிருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்திய அணியில் கலந்துகொள்ளப்போகும் 18 வயசுப் பையன். ரஞ்சி போட்டிகளில் ஓர் இன்னிங்கிஸில் 9 விக்கெட் வீழ்த்தி சாதனை செய்து நேரடியாக இந்திய அணிக்குள் வந்தவன் அனுஷன்.
முதல் போட்டியிலேயே இப்படியா! புக்கிகள் என்றார்கள். பணம் என்றார்கள். தனக்கு முதல் போட்டி இது என்றும், இந்தியா தன் தேசம் என்றும் என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தான். விடாப்பிடியாக இருந்தார்கள். இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், அவனது கிரிக்கெட் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என்று மிரட்டினார்கள்.

அனுஷனுக்கு தன் அண்ணன் தனுஷனின் நினைவு வந்தது. தனுஷன் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடுவதைத் தன் கனவாகக் கொண்டிருந்தவன். 15 வயதில் அவனும் அனுஷனும் திருச்சி பஸ்டாண்டில் ஒரு டிவியில் சச்சின் 100 ரன்கள் எடுத்து இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றதை பட்டப்பகலில் வெயிலில் நின்று பார்த்தவர்கள்.

தனுஷன் சொல்லுவான். நானும் இதை மாதிரி இந்தியாவை ஜெயிக்க வைப்பேண்டா என்று. ஓர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா முதல் சுற்றிலேயே வெளியற அன்று தனுஷன் தூங்கவே இல்லை. அழுதுகொண்டே இருந்தான்.

தலைவலி என்று ஆஸ்பத்திரிக்கு போனவனுக்கு தலையில் கட்டி என்றார்கள். ஆபரேஷன் என்றார்கள். ஒருநாள் ஒரு பெட்டியில் வைத்துக் கொண்டுவந்து வீட்டில் வைத்துவிட்டுப் போனார்கள். அனுஷனாவது கிரிக்கெட்டில் சாதிக்கவேண்டும் என்று கடைசி நிமிடங்களில் அவன் புலம்பிக்கொண்டிருந்ததை நினைத்தபோது அனுஷனுக்குக் கண்களில் நீர் வழிந்தது.
ஆனால் முதல் போட்டியிலேயே பெட்டிங். மர்ம ஃபோன் ஒன்று, ‘நீ நாங்க சொன்னபடி செய்யலைன்னா, இனிமே என்னைக்கும் நீ

இந்தியாவுக்கு ஆடமுடியாது’ என்றது. அனுஷனுக்கு ஏன் கிரிக்கெட் விளையாட வந்தோம் என்றிருந்தது.

இந்தியா 210 ரன்கள் எடுத்து 47வது ஓவரில் ஆல் அவுட்டாகியது. நியூஸிலாந்து பேட்டிங். 192 ரன்களுக்கு 9 விக்கெட். இன்னும் 18 பந்துகள் பாக்கி. 19 ரன்கள் எடுத்தால் நியூஸிலாந்து ஜெயித்துவிடும். சரியாக 48வது ஓவரை வீச அனுஷனை அழைத்தான் கேப்டன். அனுஷனுக்கு ஆச்சரியமாகவும் பயமாகவும் இருந்தது.

அரங்கமே நிசப்தத்தில் இருந்தது. சின்ன பையன், அதுவும் முதல் மேட்ச், இவனைப் போய் இந்த நேரத்துல என்று ஸ்டேடியமே முணுமுணுத்தது. அனுஷன் கடவுளையும் தனுஷனையும் நினைத்துக்கொண்டான். ஓடிவந்து கடும் வேகத்தில் கடும் கோபத்தோடு பந்தை வீசினான். சரியான யார்க்கர். பேட்ஸ்மேன் முழித்துக்கொண்டு நிற்க, ஸ்டம்ப் மூன்றும் அந்தரத்தில் பறந்தது. ஸ்டேடியமே ஆர்ப்பரித்தது. அனுஷன் வானத்தில் தனுஷனைத் தேடினான். ‘என் கேரியர் போனாலும் போகட்டும், இந்தியா ஜெயிச்சிடுச்சு இன்னைக்கு, இதுபோதும்’ என்று மனதுக்குள்ளேயே சொல்லிக்கொண்டான்.

 

கடவுள்

பிச்சை எடுப்பதுதான் அவனுக்குப் பிழைப்பு. என்ன பெயர் என்றுகூட அவனுக்கு நினைவிருக்காது. ஏன் பிச்சையெடுக்கிறான் என்று கேட்டால் சிரிப்பான். முடிஞ்சா காசு போடு, இல்லைன்னா போ என்றெல்லாம் பதில் சொல்லியிருக்கிறான். கந்தல் ஆடை உடுத்திக்கொண்டு, கையில் ஒரு துணி மூடையைத் தூக்கிக்கொண்டு, பரட்டைத் தலையுடன், கண்கள் எங்கோ அலைமோத, என்னவோ உளறிக்கொண்டு செல்லும் அவனுக்கு இந்த ஊர் வைத்த பெயர் பிச்சைக்காரன்.

நல்ல மதிய வெயில். கடுமையான பசி அவனுக்கு. சோதனையாக யாருமே இன்று காசு போடவில்லை. எங்கே போய் சாப்பிடுவதென்று தெரியவில்லை. கோவிலில் போய் எதாவது சாப்பிடலாமென்றால், இவனை உள்ளேயே விடமாட்டார்கள். ஹோட்டல் பக்கம் போனான்.

சாப்பாட்டு வாசனை மூக்கைத் துளைத்தது. பசி ஹோவென்று சோற்றுக்காக ஏங்கியது. சோறும் குழம்பும்போட்டு சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்ற நினைப்பே போதை தந்தது. வெளியில் நின்று, வருவோர் போவோர்களிடம் ஐயா பிச்சை என்று கேட்டுக்கொண்டே வந்தான்.

யாரோ ஒருவர் நின்று,  ‘பிச்சைனு காசு தரமாட்டேன், ஆனா சோறு வாங்கித் தர்றேன், துன்றியா’ என்றார். விதவிதமான பிச்சைகள். சிலர் காசு தர மறுத்து சோறு வாங்கித் தருவார்கள். ஏற்கெனவே பசியில் இருந்த அவனுக்கு கடவுளே நேரில் வந்து பிச்சை போடுவதுபோலத் தோன்றியது. ‘சரிங்க சாமி’ என்றான்.

அவனை ஹோட்டலுக்குள் விடவில்லை. வந்தவர் சர்வரிடம் சொல்லி ஒரு இலையில் சோறும் குழம்பும் காயும் போட்டுத் தரச் சொன்னார். காசு தந்துவிடுவதாகவும் சொன்னார். சர்வர் நிறைய சோறும் குழும்பும் காயும் போட்டு எடுத்துக்கொண்டுவந்து வெளியில் நின்றுகொண்டிருந்த அவனுக்குக் கொடுத்தான்.

சோற்றைக் கண்டதும் அப்படியே அவுக் அவுக்கென்று தின்றான். தண்ணீர் குடிக்கக்கூடத் தோன்றவில்லை. யாரேனும் சோற்றைப் பிடுங்கிவிடுவார்களோ என்ற அவசரம் தெரிந்தது அவன் வேகத்தில். சோறு வாங்கிக் கொடுத்தவர் அங்கே இருந்து பார்த்தார். அவர் தன்னைப் பார்க்கிறார் என்றதும், மீதிச் சோற்றை எடுத்துக்கொண்டு ஓடினான் அவன்.

நன்றாகத் தின்றுவிட்டு மீண்டும் பிச்சை எடுக்கப் போனான். நன்றாக சாப்பிட்டதன் மகிழ்ச்சி உடல் முழுதும். எதிரே வந்தவரிடம் பிச்சை கேட்டான். அவர் உடனே ஐம்பது ரூபாய் பிச்சை போட்டார். அவனுக்கு அதிசயமாக இருந்தது.

கொஞ்ச தூரத்தில் ஒரு பையன் பிச்சையெடுத்துக்கொண்டிருந்தான். இவனைப் பார்த்ததும் சிரித்தான். என்னடா சிரிக்கற என்றான் இவன். இல்லண்ணா, பசிக்குதுண்ணா, சோறே துன்னு நாலு நாளாச்சுண்ணா என்றான். சட்டென்று அவன், ‘வாடா நான் சோறு வாங்கித் தரேன், ஆனா காசு தரமாட்டேன்’ என்று சொல்லி அவனையும் சேர்த்துக்கொண்டு நடந்தான்.

 

அப்பா

இன்று அப்பாவை மேடையில் எல்லார் முன்னாலேயும் கேள்வி கேட்டுவிடவேண்டும் என்று தீர்மானமாக நினைத்துக்கொண்டான் கண்ணன்.

அவர் வெறும் அப்பா இல்லை, தமிழ்நாடே கொண்டாடும் எழுத்தாளர்.

இன்று அவருக்கு வாழ்நாள் விருது. எல்லாமே சுத்த ஹம்பக் என்று நினைத்துக்கொண்டான் கண்ணன்.

அவனுக்குத் தெரிந்து அவனது அப்பா என்றைக்குமே அவனது அம்மாவை மதித்துப் பேசியதில்லை. அம்மா என்றாலே அப்பாவுக்குக்

கிள்ளுக்கீரைதான். அம்மாவும் பூம்பூம் மாடு மாதிரி அப்பா எது சொன்னாலும் தலையாட்டுவாள். இவனுக்கு அதைப் பார்த்தாலே பத்திக்கொண்டு வரும்.

ஆனால் ஊரிலோ அப்பாவுக்கு பெரிய எழுத்தாளர் என்று பெயர். பெண்களைக் கொண்டாடுபவர் என்பார்கள். பெண்ணியப் புயல் என்று பட்டம் வேறு!

என்ன ஒரு ஹிபோகிரஸி! இன்று அவர் விருது வாங்கியதும் மேடைக்குச் சென்று மைக்கைப் பிடித்து… அவனுக்குள் ஒரு வெறியே மூண்டது.

அரங்கமே ஆர்ப்பரித்தது. என்ன என்னவோ பாராட்டிப் பேசினார்கள். அதிலும் ஒரு பெண் எழுத்தாளர் எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்ததுபோல, ‘பெண் எழுத்தாளர்கள் பெண்களைப் பற்றி எழுதியதைவிட நம் பெண்ணியப் புயல் எழுதியது அதிகம்’ என்று சொன்னார். சாம்பாரில் ஒருநாள் உப்பு கூடிவிட்டால் இந்தப் பெண்ணியப் புயல் அம்மாவிடம் எப்படிக் கரையைக் கடக்கும் என்று தனக்குத்தானே தெரியும் என நினைத்துக்கொண்டான் கண்ணன்.

இன்னொரு எழுத்தாளர் அப்பாவை, ‘தமிழகத்தின் முன்னோடி பெண்ணிய எழுத்தாளர்’ என்று புகழ்மாலை சூட்டினார். அதனால்தான் எல்லாப் பெண்களும் அவரை விழுந்து விழுந்து படிப்பதாகச் சொன்னார். இன்றோடு எல்லாப் பெண் ரசிகைகளும் காலி என்று கண்ணன் நினைத்துக்கொண்டபோது அவனுக்குள் ஒரு குரூர மகிழ்ச்சி பரவியது.

விருதைப் பெற்றுக்கொண்டார் எழுத்தாளர். கைத்தட்டு விண்ணைப் பிளந்தது. இதுதான் கடைசி கைத்தட்டு என்பதுபோல கண்ணனும் கைத்தட்டினான். எழுத்தாளர் பேசப் போனார்.

கண்ணன் அடுத்தது தான் பேசவேண்டும் என்பதற்கு வசதியாக, முன்வரிசையில் சென்று உட்கார்ந்து கொண்டான்.

எழுத்தாளர் பேசினார். யாருமே எதிர்பார்க்காத வண்ணம், தொடக்கத்திலேயே தன் மனைவியைப் பற்றிப் பேசினார். ‘அவள் இல்லையென்றால் நான் இன்று உங்கள்முன் ஒரு மனிதனாகவே நின்றிருக்கமுடியாது. நாயினும் கேவலமான ஒரு மிருமாகவே அலைந்துகொண்டிருப்பேன்’ என்றார். கண்ணனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அவர் இன்னும் சொன்னார். ‘என் மனைவி யாரை கல்யாணம் செய்துகொண்டிருந்தாலும் இதைவிட நன்றாக இருந்திருப்பாள். ஆனால் நான் என் மனைவியைத் தவிர யாரைக் கல்யாணம் செய்துகொண்டிருந்தாலும் சீரழிந்து போயிருப்பேன்… நான் விருது வாங்கும்போது என் மனைவியும் மேடையில் இருக்கவேண்டுமென்று விரும்புகிறேன்…’

அதற்குமேல் கண்ணனால் அங்கு இருக்கமுடியவில்லை. கூட்டத்திலிருந்து வெளியில் வந்தான். அவன் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.

மொபைலை எடுத்து அப்பாவுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினான்.  ‘அப்பா, ஐ லவ் யூ சோ மச்.’

 

மனை

நம்ம சக்திக்கு பக்கத்துல இருக்கிற காரவீட்டைக் கூட வாங்க முடியலையே என்று சலித்துக்கொண்டான் குப்புசாமி. திருநெல்வேலிக்குப் பக்கத்தில் இருக்கிற கிராமத்திலிருந்து சற்றுத் தொலைவில் உள்ள குக்கிராமத்தில் வசிக்கும் தனக்கு, தன் வாடகை வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பாழடைந்துபோன காரவீட்டைக் கூட வாங்க வக்கில்லை என்பது அவனுக்கு வருத்தமாக இருந்தது.

மாரி அவனை கேலி பேசினாள். ‘உங்களை கட்டிக்கிட்டு வந்து நான் வாழ்ந்து…’ என்றாள். அவள் இப்படி பேசுவது இது முதல்முறை அல்ல.
எப்படியாவது இந்த இடத்தையும் உடைஞ்சு கிடக்கிற வீட்டையும் வாங்கிடணும் என்று நினைத்துக்கொண்டான். கேட்டவுடன் வீட்டுக்காரன் சலாம் போட்டுக்கொண்டு கொடுப்பான் என்று அவன் நினைத்தது தவறாகப் போனது.

‘காரவீடு இடிஞ்சு பல வருஷமா கிடக்குன்னாலும், இடம் பொன்னுல்லடே’ என்றான் வீட்டுக்காரன். ‘கூடவே பழகினவன் கேக்க, 60,000 ரூபாய்க்குத் தாரேன்’ என்றான். குப்புசாமிக்கு இந்த இடத்தை எப்படியாவது 20,000 ரூபாய்க்கு முடித்துவிட ஆசை. ஆனால் அது இப்போது நிறைவேறாது என்று புரிந்துவிட்டது.

வீட்டுக்காரனிடம் வீராப்பாகப் பேசினான். ‘இந்த இடத்துக்கு எதுக்கு அம்புட்டு ரூவா? எவனும் வாங்கமாட்டான்’ என்றான். வீட்டுக்காரனும் அதை அறுபது ரூபாய்க்கு விற்றுக் காண்பிப்பதாக சவால் விட்டுவிட்டுப் போய்விட்டான்.

எங்கிருந்தோ ஆள்களைக் கூட்டிக்கொண்டுவந்து வீட்டைக் காண்பித்தான் வீட்டுக்காரன். அறுபது ரூபாய்க்கு வாங்கிப் போட்டால் பின்னால் நல்ல விலைக்குப் போகும் என்று வந்தவர்கள் பேசிக்கொண்டது குப்புசாமி காதில் விழுந்தது. அவனுக்கு வயிறு எரிந்தது.

வீட்டுக்காரன் போனதும் குப்புசாமி பஸ் ஸ்டாண்டுக்கு ஓடினான். அங்கே வீடு பார்க்க வந்தவர்கள் நின்றிருந்தார்கள். எப்படி என்ன பேசுவதென்று தெரியவில்லை அவனுக்கு. ஆனாலும் ஆரம்பித்தான்.

‘வீடு பாக்க வந்தீங்களா?’

‘ஆமாங்க. நீங்க?’

‘நான் அந்த வீட்டுக்குப் பக்கத்துலதான் இருக்கேன். நீங்க பாத்தது நல்ல வீடுதான்…’ என்று இழுத்தான்.

வந்தவன் கொஞ்சம் நெற்றியைச் சுருக்கினான்.

‘நல்ல வீடுதான்னா…?’

‘இல்லை, பாத்தா பாவப்பட்ட ஆளுங்களாத் தெரியறீங்க.’

‘விஷயத்தை சொல்லுங்க அண்ணாச்சி’ என்றான் வந்தவன்.

அண்ணாச்சி என்று அழைத்ததைக் கேட்டதும், நம்மிடம் வந்தவன் மாட்டிக்கொண்டான் என்று புரிந்து போயிற்று குப்புசாமிக்கு.

என்னென்னவோ பேசினான். வீடு அத்தனை விலை பெறாது அது இது என்று. ஆனால் வந்தவன் இதற்கெல்லாம் மசியவில்லை.

‘இவ்ளோதானா, நாகூட என்னவோ ஏதோன்னு பதறிட்டேன்’ என்றான்.

‘அது மட்டுமில்லைங்க, இந்த இடத்துல பேய் இருக்குன்னு ஒரு பேச்சு’ என்றான் குப்புசாமி. ஏன் அப்படிச் சொன்னோம் என்பது குப்புசாமிக்கே விளங்கவில்லை.

வந்தவன் பதறிவிட்டான்.

‘என்னது பேயா…’ வாயைத் திறந்தவன் மூடவே இல்லை.

குப்புசாமிக்கு சந்தோஷமாக இருந்தது.

‘ஆமாங்க, சொல்லவேணாம்னு பாத்தேன். ஆனா நீங்களும் நம்மள மாதிரிதான். பணக்காரங்க இல்லை. இருக்கட்டும்னு வாங்குறீங்க. அதை நல்லதா வாங்கவேணாமா? அந்த வீட்டுக்குள்ள என்னவோ ஒரு உருவம் அங்க நிக்கி இங்கன நிக்கின்னு ஊருக்குள்ள ஒரு பேச்சு. பலவங்க பாத்ததா சொல்றாங்க. அதாம் வீடு இத்தன நாள் மூடிக்கெடக்கு’ என்றான்.

அவன் மட்டுமல்ல, அதற்குப் பின் வந்த பலருக்கும் இதே போன்ற செய்தி சொல்லப்பட்டது. வீட்டுக்காரன் எத்தனையோ சொல்லியும் அங்கே பேய் இல்லை என்பதை யாருமே நம்பவில்லை.

ஊர் முழுக்க இந்த காரவீட்டில் பேய் இருக்கும் பேச்சு அடிபடத் தொடங்கியது.

குப்புசாமி வீட்டுக்காரனைப் பார்க்கும்போதெல்லாம் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு, ‘என்ன அண்ணாச்சி இது, பேய்க்கு இருக்கவா இடமில்ல, உங்க வீட்டுல வந்து இந்த ஆட்டம் ஆடுதே’ என்பான். வீட்டுக்காரன் ‘எல்லாம் தலையெழுத்து’ என்று சொல்லிக்கொண்டே போய்விடுவான். அவன் தலை மறைந்ததும் இடி விழுந்தது போலச் சிரிப்பான் குப்புசாமி.

மாரி இவனைத் திட்டுவாள். ‘ஒனக்கு அந்த இடத்தை வாங்க வக்கில்லைன்னா விடு. ஏன் அடுத்தவன் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிற’ என்பாள். இவன் கண்டுகொள்ளவே மாட்டான்.

திடீரென்று ஒருநாள் குப்புசாமி வீட்டுக்காரனைப் பார்த்துப் பேசப் போனான்.

‘அண்ணாச்சி, எனக்கு இந்தப் பேய் பிசாசுங்க மேல நம்பிக்கை இல்லை. நீங்க சரின்னா நானே இந்த இடத்தை வாங்கிக்கறேன்’ என்றான்.
வீட்டுக்காரனுக்கும் எப்படியாவது இந்த வீட்டை விற்றால் போதும் என்று இருந்தது. அந்த வீட்டில் பேய் இருந்தாலும் இருக்குமென்றே அவனும் நம்பினான். அதை மறைத்துக்கொண்டு, ‘சரி, உங்களுக்குத் தராம யாருக்குத் தரப்போறேன்’ என்றான்.

‘ஆனா 20,000 ரூபாய்தான் தரமுடியும்.’

‘உங்க மனசுப் போல’ என்றான். ஒருவழியாகப் பேரம் முடிந்தது. வீடும் பணமும் கைமாறியது.

காரவீட்டுக்குள் சந்தோஷமாகக் காலடி எடுத்து வைத்தான் குப்புசாமி.

மாரியிடம் சொன்னான். ‘என்னவோ சொன்னியே… ஒரே வருஷம், நான் நினைச்ச விலைக்கு வாங்கினேன்ல’ என்றான். உடைந்த வீட்டுக்குள் சென்று அங்குமிங்கும் ஓடினான். மாரி தலையில் அடித்துக்கொண்டு வெளியே போனாள்.

வீட்டின் ஒவ்வொரு மூலையில் நின்றும் ஓ என்று கத்தினான். எதிரொலி கேட்டது. மீண்டும் கத்தினான். இந்த முறை இன்னொரு ஓ என்ற சத்தம் கேட்டது. ஆனால் அது எதிரொலி இல்லை. குப்புசாமிக்குத் தூக்கி வாரிப் போட்டது.

‘யார் கத்தினது’ என்றான். பதிலே இல்லை. மீண்டும் ஓ என்று கத்தினான். மீண்டும் ஓ என்ற ஓர் அலறல் கேட்டது. குப்புசாமிக்குப் பயம் வயிற்றைக் கவ்வியது. சரேலென்று ஓர் உருவம் அவன் பின்னாலிருந்து சென்றது போல் இருந்தது. குப்புசாமிக்கு தலை சுற்றத் தொடங்கியது.

 

அப்பா மனசு

“இல்ல சரசு, ஒரு பொண்ணுக்கு 18 வயசு ஆயிடுச்சுன்னாலே கல்யாணம் பண்ணிரணும்.”

தன் கணவர் கனகலிங்கம் இன்று அவர் சீரியஸாகப் பேசுவது சரசுவுக்குப் புரிந்தது.

“இல்லைங்க நிறைய படிக்கணும்னு நம்ம பொண்ணு ஆசைப்படுது…” அவளும் பேசினாள்.

“கல்யாணம் பண்ணிக்கிட்டு படிக்கட்டும். நானே படிக்க வைக்கிறேன்.”

“அது எப்படிங்க முடியும்? கல்யாணம் ஆகி புள்ள குட்டின்னு ஆயிட்டா இது எப்படிங்க படிக்கும்?”

“இல்லம்மா, ஒனக்கு நான் சொல்றது புரியலை. பக்கத்து வீட்டுல இருந்த ரோஹிணி என்ன பண்ணா? அவள எத்தன தடவ உன் வாயாலேயே நல்ல பொண்ணுன்னு சொல்லிருப்ப? திடீர்னு ஒருநாள் ஓடிப்போகலயா?”

“அத மாதிரியாங்க நம்ம பொண்ணு?”

“நீ இப்படிக் கேப்பேன்னு தெரியும். நம்ம பொண்ணு நிச்சயம் இப்படி இல்லைதான். ஆனா வயசுன்னு ஒண்ணு இருக்கு பாரு, அது பொல்லாததும்மா… ரோஹிணிக்கு 18 வயசுல கல்யாணம் ஆயிருந்தா, இப்படி வேலை பார்க்கிற இடத்துல ஒருத்தனோட ஓடிப் போயிருப்பாளா?”

“அவ மாதிரில்லாம் எம் பொண்ணு செய்யாதுங்க.”

“நீ என்னை மாத்த பாக்காத. இந்த வருஷத்துக்குள்ள கல்யாணம் பண்ண வேண்டியதுதான்.”

தன் கணவனின் வார்த்தைகளில் இருந்த உறுதியைப் பார்த்து அமைதியாகிவிட்டாள் சரசு.

ரூமுக்குள் படித்துக்கொண்டிருந்த செல்வியின் காதுகளில் அத்தனையும் தெளிவாகவே விழுந்தது. அறையிலிருந்து வெளியில் வந்தாள்.

“என்னம்மா படிக்கலையா?” என்றார் கனகலிங்கம்.

“அப்பா, நான் உங்ககிட்ட ஒரு விஷயம் ரொம்ப நாளா சொல்லணும்னு இருந்தேன்பா” என்றாள் செல்வி.

“சொல்லும்மா…”

“என்னை மன்னிச்சுடுங்கப்பா… நான் டைப் ரைட்டிங் படிக்கப் போற இடத்துல செல்வன்னு ஒருத்தர் இருக்காரு. ஒரு பிரைவேட் கம்பெனில வேலை பார்க்கிறாரு.  நானும் அவரும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றோம்மா. இந்த வருஷம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு அவர் சொல்லியிருக்கார்பா.”

கனகலிங்கத்துக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“என்னம்மா சொல்ற? உனக்கு 18 வயசுதாம்மா ஆகுது. முடிவெடுக்கிற பக்குவம் எல்லாம் உனக்கு இருக்கவே இருக்காதும்மா… நீ ஒரு குழந்தைதான் இன்னும். அதைப் புரிஞ்சுக்கோ மொதல்ல. உனக்கு எப்ப கல்யாணம் பண்ணனும்னு எங்களுக்குத் தெரியாதா…” கனகலிங்கம் படபடவென்று பேசினார்.

செல்வி அவரை நிறுத்தி, “கூல்ப்பா கூல். அது எப்படிப்பா நீங்களே எனக்கு கல்யாணம் செஞ்சா 18 வயசு சரியான வயசாயிடுது. நானே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு முடிவு பண்ணா தப்பான வயசாயிடுது” என்று கேட்டாள்.

கனகலிங்கத்துக்கு வாயிலிருந்து வார்த்தைகளே வரவில்லை.

“சரிப்பா, நான் உண்மையை சொல்லிடறேன். எனக்கும் செல்வத்துக்கும் எந்த  லவ்வும் இல்லை. நான் உங்க பொண்ணுப்பா. ஆனா எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்ப்பா. நல்லா படிச்சு ஒரு வேலைக்குப்போனப்புறம் கல்யாணம் பண்ணி வைங்கப்பா” என்று சொல்லிவிட்டு

ரூமுக்குள் போய்விட்டாள்.

கனகலிங்கம் அப்படியே சிலைபோல நின்றிருந்தார்.

 

நட்பு

‘ஏட்டி, தெனோமும் சத்துணவு தின்னுட்டு எங்கட்டி போற?’ என்றான் சமையன். சங்கி என்ற சங்கர கோமதி தினமும் மதியம் எங்கே போகிறாள் என்று தெரிந்துகொள்ளாவிட்டால் தலைவெடித்துவிடும்போல இருந்தது சமையனுக்கு.

அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடம் பெரிய தோப்பு போன்ற பகுதியில் இருந்தது. சுற்றிலும் ஏகப்பட்ட வேப்ப மரங்கள். படிப்பில் அவளுக்கும் இவனுக்கும்தான் போட்டி. மாறி மாறி முதல் ரேங்க் எடுப்பார்கள். இருவருக்கும் இடையில் எல்லாவற்றிலுமே ஒரு போட்டி நிலவியது.

வரிசையில் நின்று சத்துணவு வாங்கிச் சாப்பிட்டதும் சமையன் உள்ளிட்ட எல்லா மாணவர்களுமே வகுப்பில் உட்கார்ந்து எதைப் பற்றியாவது அரட்டை அடிப்பார்கள். ‘ஏழாம் அறிவுல சூர்யா பின்னிட்டாம்லல…’ ‘வேலாயுதம்தாம்ல காமெடியா இருக்கு. ஏழாம் அறிவு அறுக்குல’. ‘டெண்டுல்கர் நூறு எப்பம்ல அடிப்பாம்?’ ஆனால் சங்கி மட்டும் அங்கே இருக்கமாட்டாள். வகுப்பு தொடங்குவதற்கு ஒரு நிமிடம் முன்னே ஓடி வந்து உட்காருவாள். இவ்வளவு நேரம் எங்கே இருந்தாள்? யாருக்கும் தெரியாது.

இன்று சங்கிக்குத் தெரியாமல் அவள் எங்கே போகிறாள் என்பதைப் பார்த்துவிடவேண்டும் என்று முடிவெடுத்தான் சமையன். அவளுக்குத் தெரியாமல் அவளுக்குப் பின்னே போனான். வகுப்பிலிருந்து கண்ணுக்கு எட்டாத தொலைவுக்குச் சென்று, அங்கே இருந்த இன்னொரு தோப்புக்குள் சென்றாள் சங்கி.

சோலை போல இருந்த அந்த இடத்தில் ஏகப்பட்ட வேப்ப மரங்கள் இருந்தன. அந்த மரங்களுக்குக் கீழே வேப்பம் பழங்கள் உதிர்ந்து கிடக்கும். பறவைகள் சூப்பிப் போட்ட வேப்ப முத்துகளும் இருக்கும். அவற்றையெல்லாம் சங்கி பொறுக்குவதை சமையன்  பார்த்தான்.

‘என்னத்தட்டி பொறுக்கிக்கிட்டு இருக்க?’

சங்கி திடுக்கிட்டுப் போனாள். இப்படி வேப்பமுத்து பொறுக்குவதை எல்லாரிடமும் சொல்லி மானத்தை வாங்கிவிடுவானோ என்று பயமாக இருந்தது அவளுக்கு.

‘ஏல, யார்கிட்டயும் சொல்லிடாதல. இதை விலைக்கு போட்டா காசு தருவாங்க. அதை வெச்சு நான் நோட்ஸ் வாங்குவேம்ல. எல்லாருக்கும் தெரிஞ்சதுன்னா ரொம்ப கிண்டல் பண்ணுவாங்கல, ப்ளீஸ்ல’ என்று அழாத குறையாகக் கெஞ்சினாள்.

‘மாட்டினியாட்டி நீ, எல்லார்கிட்டயும் சொல்லுதெம் பாரு’ என்று சொல்லிவிட்டு ஓடினான் சமையன்.

அன்று மதியம் வகுப்பு தொடங்கியதும் சற்று தாமதமாக வந்தாள் சங்கி. உடனே அறிவியல் டீச்சர், ‘ஏண்ட்டி லேட்டு, எங்கன சுத்திட்டு வார’ என்றார். சட்டென்று சமையன் எழுந்தான். சங்கிக்கு அவமானம் பிடுங்கித் தின்றது. அழுகை வந்தது. சமையன், ‘டீச்சர், அவங்க பாட்டிக்கு ஒடம்பு சரியில்லைன்னு ஆஸ்பத்திரிக்கு பாக்க போனா, உங்ககிட்ட சொல்லச் சொன்னா, நாந்தான் மறந்துட்டேன்’ என்றான்.

சங்கி கண்களாலேயே அவனுக்கு நன்றி சொன்னாள்.

(என் சுயசரிதையில் மட்டுமே இந்நிகழ்வுகளைக் குறிப்பிட எண்ணியிருந்தேன். ஆனாலும் ஒரு பக்கக் கதை எழுதும் சமூகம் என் கதைகளின் வழியே பயனடையட்டும் எனக் கருதி இப்போது வெளியிட்டுள்ளேன். நாளை அடுத்த பாம்.)

Share

2013 துக்ளக் ஆண்டுவிழாவில் சோ

”வேண்டுமென்று ஒரு ஜாதியைக் குறி வைத்து, அவர்களுக்கு எதிராக யார் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும், அது தவறுதான். அதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்தச் சமூகத்தில், ஹரிஜன சமுதாய மக்கள், காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வந்திருக்கிறார்கள் என்ற உண்மையை நாம் மறைத்துவிடமுடியாது. அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை, நம் அருகிலேயே வரக்கூடாது என்ற நிலையில் முன்பு வைத்திருந்தோம். அதனால் அப்பிரிவினருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டிருக்கலாம். அதன் காரணமாகச் சில இடங்களில், சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கலாம். அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் அம்மாதிரியான ஓரிரு நிகழ்வுகளை வைத்துக்கொண்டு, ஒரு சமுதாயத்துக்கு எதிராக வெறுப்புணர்ச்சியைத் தூண்டுவது என்பது நல்லதுமல்ல, நியாயமுமல்ல. இவ்விஷயத்தில், ராமதாஸ் கூரிய கருத்தை ஏதோ நான் வரவேற்றது போல் இங்கு பேசியவர் குறிப்பிட்டார். ஆனால், நான் அவ்வாறு வரவேற்கவில்லை.”

துக்ளக் ஆண்டுவிழாவில் சோ.

 

 

(இனி நான் சேமிக்க விரும்பும் பகுதிகளை இங்கே வெளியிட முடிவு செய்திருக்கிறேன். ஃபேஸ்புக், டிவிட்டரில் தேடுவதற்குள் தாவு தீர்ந்துவிடுவதால் இத் தாமத முடிவு.)

Share

அம்புலிமாமா, துளிர்

அம்புலிமாமா: கடந்த மூன்று மாதங்களாக அம்புலிமாமா வாசித்துவருகிறேன். அபிராமுக்காக அரவிந்தன் நீலகண்டன் சந்தா செலுத்தியிருந்தார். அதிலிருக்கும் கதைகளை அபிராமை வாசிக்கச் சொல்வதும், நான் அதை வாசித்து அபிராமுக்குக் கதை சொல்வதுமே நோக்கம். தமிழில் குழந்தைகளுக்கென நல்ல நூல்கள் வருவதாகத் தெரியவில்லை. எந்த வயதினருக்கு என்ன மாதிரியான புத்தகங்களை வாசிக்கத் தரவேண்டும் என்று முடிவெடுக்கக்கூடிய நிலையில், நம் முன்னே புத்தகங்கள் தமிழில் கொட்டிக் கிடக்கவில்லை. அம்புலிமாமா, பாலமித்ரா போன்றவற்றை நான் சின்ன வயதில், நூலகங்களிலும், அதை வாங்கும் நண்பர்கள் வீட்டிலும் காத்திருந்து வாசித்திருக்கிறேன். இன்று பாலமித்ரா வருகிறதா எனத் தெரியவில்லை. முதன்முதலில் சிறுவர் மலர் வந்தபோது அருமையான படக்கதைகள் வந்தன. இதற்காகவே வெள்ளி காலை எழுந்ததும் என் நண்பன் வீட்டுக்கு ஓடுவேன். எங்கள் வீட்டில் அப்போதெல்லாம் பேப்பரே வாங்கமாட்டார்கள். அவ்வளவு கஷ்டம். அப்போது எனக்கு 10 வயது இருக்கலாம்.

பின்பு கல்லுப்பட்டியில் படிக்கும்போது அங்கே இருக்கும் நூலகத்துக்குச் சென்று படிப்பேன். சரியாக இந்த அம்புலிமாமா, பாலமித்ராவை யாராவது எங்காவது ஒளித்து வைத்திருப்பார்கள். அதை நாம் கண்டுபிடித்து படித்துவிட்டு அடுத்தமுறை வந்ததும் படிக்க மீண்டும் அதை ஒளித்துவைத்துவிட்டு வரவேண்டும். மதுரையில் அழகரடியில் உள்ள நூலகத்திலும் அம்புலிமாமா, பாலமித்ராவுக்கு ஒரு பெரிய வரிசையே இருக்கும். கையில் கிடைப்பதே பெரிய விஷயம். 

இப்போதைய அம்புலிமாமாவைப் படிக்கும்போது இப்படி பழைய ஞாபகங்கள் வருகின்றன. ஹிந்து தர்மம் நோக்கிலான சிறுவர் கதைகளை அறிமுகப்படுத்தவேண்டும் என்பதே என் நோக்கம். அம்புலிமாமாதான் எனக்கு இருக்கும் ஒரே தேர்வு. 

மூன்று இதழ்கள் வாசித்ததில் இருந்து எனக்கு உருவான கருத்துகள். இத்தனை ஆண்டுகளாக இந்தத் தரத்தை அப்படியே காத்து வைத்திருப்பது ஒரு பெரிய சாதனை. சந்தேகமேயில்லை. அதிலும் வேதாளமும் விக்கிரமாதித்தனும் கதையைப் படிக்கும்போது, முதல் சில வரிகளும், கடைசி சில வரிகளும் அப்படியே உள்ளதைப் பார்க்கும்போது, சின்ன வயதில் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை இன்று அபிராமில் பார்க்கிறேன். இரண்டாவது இதழ் வாசிக்கும்போது, போன மாசம் வந்த அதே கதைதாம்ப்பா என்று சொல்லிவிட்டான். பின்பு நான் விளக்கியதும்தான், ஆரம்ப வரிகள் ஒன்றாகவும், பிறகு கதை மாறியும் வரும் என அவனுக்குப் புரிந்தது. விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் இப்போது டிவியில் அச்சுபிச்சுத்தனமாக வருகின்றன. அதைப் பார்த்துப் பழக்கப்பட்ட சிறியவர்களுக்கு, இக்கதைகள் பிடிக்குமா அல்லது வெறுக்குமா எனச் சொல்லத் தெரியவில்லை. அபிராமுக்கு ஓரளவு பிடித்திருந்தது என்றே நினைக்கிறேன். கதைகள் கொஞ்சம் நீளம் என்றே நினைக்கிறான்.

ஒன்றிரண்டு ஒரு பக்கக் கதைகள் வருகின்றன. அவற்றை உடனே படித்துவிடுகிறான். இந்த ஒரு பக்கக் கதைகளின் பிரச்சினை, வரிகளை உடைக்காமல் நீளமாக எழுதுவது. கமா போட்டு எழுதிக்கொண்டே போய்விடுகிறார்கள். ஐந்திலிருந்து எட்டு வார்த்தைகளுக்கு மிகாமல் இருப்பது நல்லது. என்ன ஆரம்பித்தோம், எங்கே முடிகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்வதில் ஏழு வயது அபிராமுக்குச் சிக்கல் உள்ளது. படிக்க படிக்க சரியாகிவிடும் என்று நினைக்கிறேன். ஒரு பக்கக் கதைகளை இன்னும் அதிகம் தந்தால் நன்றாக இருக்கும். ஆங்கிலத்தில் உள்ள நான்கைந்து பக்கக் கதைகளை படித்துவிடுகிறான். அதில் சிக்கல் வருவதில்லை. பள்ளியில் தரப்பட்ட பயிற்சி காரணமாக இருக்கலாம். பெங்களூரு புத்தகக் கண்காட்சி சென்றிருந்தபோது, பல நல்ல சிறுவர் ஆங்கில நூல்கள் 50% தள்ளுபடியில் கிடைத்தன. அள்ளிக்கொண்டு வந்தேன். சிறிய அழகான புத்தகமாக, நான்கைந்து பக்கங்களில் ஒரு கதைகள். இப்படி 10 கதைகள் அடங்கிய ஒரு புத்தகம். இதுபோல 20 புத்தகங்களாவது வாங்கியிருப்பேன். ராமாயணம், மகாபாரதம் படக்கதைகள் கிடைத்தன. வாங்கவில்லை. அடுத்தமுறை வாங்கவேண்டும். படக்கதைகள் போல சிறுவர்களுக்குப் பிடித்துப்போவது வேறொன்றில்லை. புத்தகத்தைப் படிப்பது மகிழ்ச்சி தருவது என்பதைவிட, நாம் புத்தகம் படிக்கிறோம் என்ற கர்வமே அபிராமுக்கு அதிகம் உள்ளது. 🙂

அம்புலிமாமாவின் இன்னொரு பயன், இதிலிருக்கும் கதைகளைப் படித்துவிட்டு கலந்துகட்டி நாமாக ஒரு கதையை உருவாக்கி தினம் சொல்லிவிடலாம். அந்த வகையில் அம்புலிமாமாவுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன்.

படக்கதைகள் அபாரம். படக்கதைகளில் உள்ள வரிகளை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கிறார்கள் போல. அதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தலாம். 

அம்புலிமமாவின் இதழ் வடிவம் மாறியிருக்கிறது. கல்கி தந்த கலாசாரா ஷாக்கெல்லாம் இல்லை. பெரிய சைஸிலும் இதழ் நன்றாகவே உள்ளது. ஒரு முக்கியமான சௌகர்யம், எழுத்துரு கொஞ்சம் பெரிதாக உள்ளது. சிறுவர்கள் படிக்க ஏதுவாக இருக்கிறது. ஜனவரி சிறப்பிதழ் மட்டுமே வடிவம் மாற்றப்பட்டுள்ளதா, முழுக்கவே இதழ் வடிவம் மாற்றப்பட்டுவிட்டதா எனத் தெரியவில்லை. ஃபிப்ரவரி இதழ் இன்னும் வரவில்லை. இதழ் எப்போது கைக்குக் கிடைக்கும் என்றே தெரிவதில்லை. இது ஒரு குறை.

நகைச்சுவைத் துணுக்குகள் வருகின்றன. சில துணுக்குகள் அபாரம். சில புளித்துப்போனவை. ஆனாலும் சிறுவர்களுக்கு புன்னகையைப் பூக்க வைக்கும் என்பது நிச்சயம்.

ஆங்கிலத்தில் சந்தாமா ஜூனியரை அபிராமுக்கு சப்ஸ்கிரைப் செய்யலாம் என்றிருக்கிறேன். ஆன்லைனில் சந்தா செலுத்த: www.chandamamashop.com. சந்தா செலுத்துபவர்கள் கவனத்துக்கு, 40 முதல் 45 நாள்கள் ஆகுமாம் முதல் இதழைப் பெற.

துளிர். நான் 8ம் வகுப்பு படிக்கும்போது எனக்கு துளிர் அறிமுகமாகியது. மதுரையில் என் பள்ளியில் உள்ள அனைவருக்கும் ஓர் இதழை இலவசமாகக் கொடுத்தார்கள். அந்த இதழ் நல்ல இதழ் என்று ஆசிரியர்கள் சொன்னார்கள். அதற்குப் பின்பு துளிர் இதழைப் படித்ததில்லை. அவ்வப்போது கேள்விப்பட்டிருக்கிறேன் துளிர் என்ற பெயரை. ஆனாலும் இதழ் பற்றிய ஒரு நல்ல எண்ணம் மனத்தில் இருந்தது. சரி, அதையும் வாங்குவோம் என்று அபிராமுக்காக சந்தா செலுத்தினேன். ஏண்டா வாங்கினோம் என்ற எண்ணத்தைத் தந்திருக்கிறது துளிர். யாருக்காக இதழ் வருகிறது, என்ன பேசுகிறோம், என்ன நோக்கம் என எல்லாவற்றிலும் குழப்பமே எஞ்சுகிறது. இது எந்த வயதினருக்கு என்பதை இன்னும் என்னாலேயே யூகிக்கமுடியவில்லை. இதையும் 3 இதழ்கள்தான் படித்திருக்கிறேன். இன்னும் 3 இதழ்கள் பார்த்துவிட்டு மேலே சொல்கிறேன். முதல் 3 இதழ்கள் தந்த அனுபவம் அத்தனை நன்றாக இல்லை என்பதை மட்டும் சொல்லி வைக்கிறேன். இத்துடன் சேர்த்து ஓர் ஆங்கில இதழுக்கும் சந்தா செலுத்தினேன். அது குப்பை.

Share

தமிழில் உலகத் திரைப்படங்கள் வரிசை – பகடி மற்றும் மகுடி

 

”படம் பார்த்துட்டீங்களா? நல்லா இருக்கா?”

“படம் பார்க்கும்போதே பாதிலயே ஃபேஸ்புக்ல மெசேஜ் போட்டிருந்தேனே. படம் செம மொக்கைன்னு.”

“ஓ ஸ்டேட்டஸ் மெசேஜ் நான் பார்க்கலை. அவ்ளோ மொக்கையாவா இருக்கு?”

“பகடி படத்தைதான கேக்குறீங்க? செம மொக்கைங்க. இடைவேளை வரை உட்கார முடியலை. அதுக்கு பின்னாடி நிக்கக்கூட முடியலை. ஓடித்தான் வெளிய வந்தேன்.”

“ஒருவேளை உங்களுக்கு புரியலையோ?’

“என்னங்க புரியலை? படம் மொக்கைன்றேன். சரி, இந்தப் படத்துல புரியறதுக்கு என்ன இருக்கு? ஒரே சினிமாத்தானம். சகிக்க முடியலை. எப்ப பாரு காதல் காதல்னு. சுதந்திரத்துக்கு முன்னாடி நடக்கற படமாம், அப்பவும் காதலைத்தான் காமிப்பாங்களாம். கருமம்.”

“உங்களுக்கு புரியலையோன்னுதான் தோணுது. உதாரணமா ஒரு சீன் வரும் பாருங்க. கதாநாயகனும் கதாநாயகியும் முதல்ல பார்க்கிற சீன். வாவ், கிளாசிக் இல்ல?”

“என்ன கிளாசிக்? நேரடியா பார்க்கவேண்டியதுதான? அதென்ன கீழ கிடக்கிற மழைத்தண்ணில பார்க்கிறது? சரிங்க, அதுக்கு எதுக்கு அஞ்சு நிமிஷம்? இப்படித்தாங்க படம் முழுக்க மெல்லா போவுது.”

“இல்லைங்க, அது மழைத்தண்ணி. கிட்டத்தட்ட சாக்கடை. அதுல ஹீரோவுக்கு ஹீரோயின் முகம் தெரியுது. ஹீரோயினுக்கு ஹீரோ முகம் தெரியுது. சாக்கடைல மலர்ந்த செந்தாமரை மாதிரி.”

“அடக்க்கோராமையே.”

“இதுல என்னங்க கோராமை? அது ஒரு குறியீடுங்க. அப்ப மழைத்தண்ணில ஒரு பூ விழுது பார்த்தீங்களா? அது இன்னொரு குறியீடு.”

“என்னங்க இது குறியீடுன்னு சொல்றீங்க? அதுவும் வெறும் குறியீடா வருதே, சாதா சீனே வராதா?”

“முழுசா கேளுங்க, கடவுளே அந்தக் காதலை ஆதரிச்ச மாதிரியான ஃபிரேம்ங்க அது.”

“டைரக்டருக்கு கடவுள் நம்பிக்கை இல்லைன்னு நினைச்சேனே.”

“அஃப்கோர்ஸ். அதான் மழைன்னு இயற்கையை வெச்சார். உங்களுக்கு நம்பிக்கை இருக்குல்ல, ஸோ அது உங்களுக்கு கடவுள்.”

“ஓ, இதெல்லாம் நாமளா வெச்சிக்கிறதுதான் இல்ல?”

“நோ நோ, படத்தோட குறியீடு சொல்ற சங்கதி அது. அந்த சீன்ல, பூ விழுந்த உடனே, தேங்கிக் கிடக்கிற மழைத்தண்ணி லேசா அசைஞ்சு திரும்பவும் ரெண்டு பேரோட முகமும் தெரியுது பாருங்க, ஒரு பெண் ஒரு பூ. அவ வரவும் சலனம். அவளுக்குன்னா, ஒரு ஆடவன் பூ தர்றவன். அவன் வரவும் சலனம். கிளாஸ் இல்லை? அதுமட்டுமில்லை, பின்னாடி வரபோற கஷ்டங்களெல்லாம் தெளிஞ்சு அவஙக் நல்லா வாழ்வாங்கன்னு சொல்ற மாதிரி இல்லை?”

“அப்ப அந்த சீனோட படம் முடிஞ்சு போச்சுன்னு சொல்றீங்களா? நான் இது தெரியாம கடைசி வரை இருந்து முழுப்படத்தையும் பார்த்துட்டேனே.”

“சே சே. டைரக்டர் எவ்ளோ ரசிச்சி எடுத்திருக்கான் பாருங்கன்னு சொல்லவந்தேன்.”

“படம் நாம ரசிச்சு எடுக்கத்தான எடுக்கணும்? சரி, அதுக்கும் எதாவது சொல்வீங்க.”

“கதையாவது உங்களுக்குப் புரியுதா?”

“என்னங்க புரிய இருக்கு? ஒருத்தன் ஒருத்தியை லவ் பண்றான். அப்ப சுதந்திரப் போராட்ட காலம். ஒரு ஆங்கிலேய அதிகாரி அதை எதிர்க்கிறான். ஏன்னா அவனுக்கு இவ மேல ஒரு கண்ணு. இவன் அவனை ஏமாத்திட்டு கல்யாணம் பண்ணிக்கிறான். இதுல என்ன புரியாம இருக்கு?”

“இல்லைங்க, அப்படி நேரடியா பார்க்கக்கூடாது.”

“படம் பார்க்கும்போது நான் கொஞ்சம் கோணலா தலையை சாச்சுத்தான் பார்ப்பேன். வீட்டுலயே கிண்டல் பண்ணுவாங்க.”

“அதைச் சொல்லலை. ஒரு படத்தை படமா பார்க்கக்கூடாது.”

“ஐயையோ. 30 வருஷமா அப்படித்தானே பார்த்துட்டேன்.”

“அதுதான் உங்க பிரச்சினையே. இப்ப பாருங்க. ஹீரோ ஆங்கிலேய அதிகாரியை எதிர்க்கிறதை சும்மா காதலுக்காக எதிர்க்கிறான்னு நினைக்கக்கூடாது. இந்தியனைப் பொருத்தவரை பொண்ணுதான் மண்ணு. மண்ணுதான் நாடு. எனவே அவன் நாட்டுக்காக ஆங்கிலேய அதிகாரியை எதிர்க்கிறான்னு பாக்கணும்.”

“அடக்கோராமையே.”

“இதுல என்னங்க கோராமை. அப்படித்தாங்க படத்தை பார்க்கணும்.”

“ஆனா படத்துல அதை சொல்லவே இல்லையேங்க.”

“சொல்லமாட்டாங்க. படம்னா அது கேக்கிறதுக்கு இல்லை. பாக்கிறதுக்கு.”

“என்னங்க மொதல்ல நேரா பாக்ககூடாதுன்னீங்க, இப்ப கேக்கக்கூடாதுன்றீங்க. தியேட்டருக்கு போய் என்னதான் பண்றது?”

“கிண்டல் பண்ணாதீங்க சார்.”

“யாரு நானா?”

“சரி விடுங்க, இப்ப பாருங்க அது வெறும் காதல் கதையாவா தோணுது? ஏன் அதை சுதந்திரக் காலத்துல வெச்சான்னு யோசிங்க. காதல்ங்கிறது ஒரு குறியீடு இங்க.”

“இந்த குறியீடுன்றதுதாங்க எனக்கு புரியலை. படத்துல பாட்டு வருது, ஃபைட்டு வருது, அதெல்லாமேவும் குறியீடுதான்றீங்களா?”

“சே சே. அதெல்லாம் சும்மா சீனுங்க.”

“ஏங்க எப்ப குறியீடு வருது எப்ப சாதா சீன் வருதுன்னு எப்படி தெரிஞ்சுக்கறது? ஏன் இந்த டைரக்டர் குறியீடு வர்ற சீனெல்லாம் ஒரு ப்ளஸ் சிம்பல் போட்டுக் காமிக்கக்கூடாது?”

“இப்பத்தானே சொன்னேன், படம்ங்கிறது கேக்கிறது இல்லை, பார்க்கிறதுன்னு. நீங்களா யோசிக்கணும் சார்.”

“இல்லைங்க, நானும் ப்ளஸ் சிம்பலை காட்டத்தான் சொன்னேன், ப்ளஸ்னு சொல்லச் சொல்லலை.”

“கிண்டல் பண்ணாதீங்க சார். இன்னும் இது மாதிரி நிறைய சீன் இந்தப் படத்துல இருக்கு. ஒரு சீன்ல பாருங்க, அந்தப் பொண்ணோட அப்பா தற்கொலை பண்ணிக்கிற சீன்ல வெறும் கயிறு மட்டும் ஆடிக்கிட்டே இருக்கு பார்த்தீங்களா?”

“என்னது அவங்க அப்பா தற்கொலை பண்ணிக்கிட்டாரா?”

“ஏன் அதிர்ச்சியாகறீங்க? அவங்க அப்பாதானே?”

“அது இல்லைங்க, அந்த கயிறு ஆடற சீன்ல நானும் அப்படித்தான் நினைச்சேன். நினைச்சேனா. அடுத்த சீன் வந்தது. வந்ததா. அதுல பார்த்தீங்கன்னா அவங்க அப்பா உயிரோட வாரான். அப்பாடின்னு எனக்கு அப்பதான் உசிரே வந்தது.”

“தப்புங்க, உசிரே போயிருக்கணும்.”

“அது படம் முடியும்போது நடந்ததுன்னு வைங்க.”

“சே, நான் அதைச் சொல்லலைங்க. அந்த கயிறு ஆடும்போது அவன் செத்தான்னு நினைச்சீங்களா? அதுவரைக்கும் சரி. அடுத்த சீன்ல அவன் ஏன் உயிரோட வர்றான்? அதுக்குப் பிறகும் ஏன் கயிறு ஆடிக்கிட்டே இருக்கு? ஏன்னா அவன் செத்த பொணமா நடமாடறான்னு அர்த்தம்.”

“அடக்கோராமையே.”

“இதுல என்னங்க கோராமை இருக்கு. கயிறு ஏன் ஆடிக்கிட்டே இருக்கு, வீட்டுல அதை யாருமே அவுத்து எறியலையான்னு தோணுனா நீங்க சாதாரணமா பார்க்கிறீங்கன்னு அர்த்தம். ஆனா பாருங்க, அந்த வீட்டுல கயிறே இல்லை. கயிறுன்றது உங்க கற்பனை.”

“ஐயையோ இது பேய்ப்படமா அப்ப?”

“விளையாடாதீங்க சார். உண்மைல உங்க மூலமா படத்தை இயக்குநர் பார்க்கிறார். உங்களுக்கு அவன் செத்துட்டான்னு தோணனும்னு சொல்ல வர்றார். ஆனா பாருங்க அவன் சாகலை. அதாவது படத்தைப் பொருத்தவரைக்கும் சாகலை.”

“புரியலைங்க சார்.”

“இல்லைங்க இது ஒரு உத்தி.”

“மொதல்ல குறியீடுன்னு சொன்னீங்களே, அது மாதிரியா சார்?”

“இல்லைங்க அது குறியீடு. இது உத்தி.”

“ஓ.”

“இப்ப புரியுதா! என்ன உத்தின்னா, படத்தை படமாவும் பார்க்கணும். நீங்களாவும் பார்க்கணும். படத்துல உங்களுக்கே இடம் தர்றது.”

“இல்லைங்க, எனக்கு நடிப்பெல்லாம் வராது.”

“இல்லைங்க, பார்வையாளனா இடம் தர்றது. இது ஒரு உத்தி.”

“அந்நியன் படம் பார்க்கும்போதே நான் இப்படி பார்க்கலையேங்க.”

“அந்நியனெல்லாம் கேக்கிற படம். இது பார்க்கிற படம்.”

“அப்புறம் எதுக்குங்க இந்த படத்துல ம்யூசிக், பாட்டு, வசனமெல்லாம்.”

“குட் கொஸின். உண்மைல சொல்லப்போனா நீங்க ம்யூசிக், பாட்டு, வசனத்தையெல்லாம் கூட பார்க்கணும்.”

“என்ன சார் பயமுறுத்துறீங்க.”

“ஐமீன், அப்ர்சவ் பண்ணனும்னு சொல்லவந்தேன்.”

“அப்சர்வேஷனா? என்னங்க இது பேஷண்ட்டை ஐசியூல சேர்த்திருக்கிற மாதிரி சொல்றீங்க. வெறும் படம்தானே இது.”

“என்னங்க வெறும் படம்னு சொல்லிட்டீங்க. படம் முழுக்க குறியீடு உத்தின்னு கலக்கியிருக்காங்க. பின்நவீனத்துவப் படம். சாதா படத்தை பார்க்கிற கண்ணோட இதையும் பார்க்காதீங்க.”

“காதையும் கழட்டிட்டு கண்ணையும் கழட்டிட்டு நான் என்னத்தைங்க பார்க்கிறது.”

“வித்தியாசமான கண் ஐ மீன் கண்ணோட்டத்தோட பாருங்க. உங்களையும் ஒரு பிரதிக்குள்ள வெச்சிப் பார்க்க வைக்கிற படம் தமிழ்ல இதுதான் முதல்ல வந்திருக்கு. அதான் உங்க குழப்பமே.”

“பின் நவீனத்துவப் படம்னு என்னவோ சொன்னீங்களே, அப்படி ஒரு படம் வந்திருக்கா?”

“அது படம் பேரு இல்லைங்க. அது ஒரு உத்திங்க.”

“அதுவுமா?”

“பின்ன, ஒரு படம்னா சும்மா இல்லைங்க.”

“நான் நெஜமாவே சும்மான்னு நினைச்சுட்டேங்க.”

“அப்படி நினைக்காதீங்க. நீங்க வெறும் 60 ரூபாய் கொடுத்து பார்த்துடறதால உங்களுக்கு அப்படி ஒரு நினைப்பு வருது. இதுவே 6000 ரூபாய் கொடுத்து பார்த்தா இப்படி தோணுமா, யோசிச்சு பாருங்க.”

“ஐயையோ ஒரு படத்துக்கு 6000மா? நினைக்கவே நடுங்குதே. படம் நல்லா இல்லைன்னாகூட நான்லாம் நல்லா இருக்குன்னுதான் சொல்வேங்க.”

“எக்ஸாட்லி.”

“இன்னொரு சீன்ல ஒரு டவுட் எனக்கு. கேக்கவே ஒரு மாதிரி இருக்கு. ஆனாலும் உங்ககிட்ட கேளுங்க.”

“குட் குட் கமான். படத்தை இப்படி பேசிப் பேசித்தான் பார்க்கணும்.”

“தாயோளி, எங்க வீட்ல படம் பார்க்கும்போது பேசாத பேசாதன்னே வளர்த்துட்டானுங்க.”

“கூல், சரி, உங்க டவுட்டை கேளுங்க.”

“படத்துல கடைசி சீன்ல எல்லாம் முடிஞ்ச பின்னாடி ஏங்க பொண்ணோட அப்பா அழற மாதிரி வருது? நெஜமாவே புரியலை. நான்கூட அவர் தயாரிப்பாளரோன்னு நினைச்சேன்.”

“இல்லைங்க, ஒரு படைப்பு முடியும்போதுதான் தொடங்கணும்.”

“என்னங்க இது, முடியும்போது முடிஞ்சாத்தான படம் முடியும். தொடர்ந்தா எப்பத்தான் படம் முடியும்.”

“யூ ஸீ, நீங்க அப்ப வேறாளாயிடறீங்க. நீங்க படத்துல இல்லை. வெளியில இருக்கிறீங்க. படம் என்னவோ திரைல முடிஞ்சிடுது. ஆனா உங்க மனசுல உங்களுக்கு நீங்களே எடுக்கிற படம் முடியறதே இல்லை.”

“நான் படம்லாம் எடுக்கிறதில்லைங்க.”

“நோ நோ, அதைச் சொல்லலை. உண்மைல ஒவ்வொருத்தன்குள்ளையும் ஒரு படம் இருக்கு. ஒரே படம்தான், ஆனா ஒவ்வொருத்தர்குள்ளையும் ஒவ்வொரு மாதிரி இருக்குன்றேன்.”

“புரியலைங்க, ஆனா கேக்க நல்லா இருக்கு.”

“புரியும். அவன் ஏன் அழறான்னு நீங்க யோசிக்கும்போது உங்களுக்கு பல காரணங்கள் வரலாம். இன்னொருத்தருக்கு இன்னும் பல காரணங்கள் வரலாம். அப்ப ஒவ்வொருத்தர் குள்ளையும் பல விதமா படம் தொடருது. அதுக்குத்தான் டைரக்டர் அப்படி அந்த சீனை வெச்சிருக்கார்.”

“அவர் தயாரிப்பாளரோன்னு நினைச்சதை யோசிச்சா எனக்கே கேவலமா இருக்கு சார். எனக்கெல்லாம் பத்தாது சார். சரி சார், நீங்க யோசிச்சீங்களா சார், உங்களுக்கு என்ன என்ன காரணம்லாம் வந்தது?”

“ஸாரிங்க, நான் ரொம்ப வேலையா இருந்துட்டேன், யோசிக்கலை, ஆனா காரணம் இருக்கும்னு மட்டும் யோசிச்சிக்கிட்டேன். நீங்க சும்மாதானே இருக்கீங்க, யோசிச்சுப் பாருங்க.”

“ஆமா சார், நான்லாம் ரொம்ப வளரணும். இது தெரியாம பகடி படத்தை மொக்கைன்னு சொல்லிட்டேன். திரும்பப் போய் நல்லா இருக்குன்னு சொல்லவும் வெக்கமா இருக்கு.”

“நோ நோ, இதெல்லாம் இலக்கிய உலகத்தில் சாதாரணம்.”

“ஓ அப்படி ஒரு உலகம் இருக்கா சார். என்னை நினைச்சு எனக்கே கேவலமா இருக்கு சார்.”

“ஒரு படைப்பை முதல்ல நல்லா இல்லைன்னு சொல்லிட்டு, பின்னாடி அதுதான் உலகத் தரம்னு சொல்றதெல்லாம் இங்கே சகஜம். அதை மீள் பார்வை பண்ணனும். அவ்ளோதான்.”

“ஓ மீள் பார்வை இல்ல? நான் இன்னொரு தடவை பார்க்கணும்னு நினைச்சுக்கிட்டேன். படைப்பு இல்ல? சே, நான் படம்னு நினைச்சுட்டேன்.”

“வருத்தப்படாதீங்க. எல்லாம் சரியா வரும். மொத்தத்துல பகடி ஒரு உலகத் திரைப்படம்.”

“உலகத் திரைப்படமா? டைரக்டர் இதையாவது படத்துல சொல்லிருக்கலாம். நான் ஏதோ குன்னத்தூர் பொட்டைல இருக்கிற ஒருத்தன்ல  கல்லுப்பட்டில இருக்கிற பொண்ணுக்காக ஆங்கிலேய அதிகாரியை எதிர்க்கான்னு நினைச்சுட்டேன்.”

“உலகத் திரைப்படம்னு சொல்லமாட்டாங்க. நாம்தான் அதை உலகத் திரைப்படம்னு புரிஞ்சிக்கணும். ஏற்கெனவே சொன்னேனே, ஒரு படம் அது படம் அதோட அது உங்க படம்னு.”

“ஆமா, சொன்னீங்கள்ல. உலக திரைப்படம்னா என்ன சார்.”

“உலகத் திரைப்படம்னா… வெல்… வாட் ஐ கேன் ஸே இஸ்… வெல். ஐ கேன் ஸே இட் அ வேர்ல்ட் மூவி. பிரிஸைஸ்லி வேர்ல்ட் சினிமா”

“வேல்ர்ட் சினிமான்னா?”

“வாட் டூ சே, யெஸ், எக்ஸாட்லி, வேர்ல்ட் கிளாஸ் சினிமா.”

“ஓ. நான் உலக திரைப்படமெல்லாம் பார்த்ததில்லைன்றதால எனக்கு சட்டுன்னு பிடிபடலை. இப்ப கொஞ்சம் பிடிபட்ட மாதிரி இருக்கு.”

“ஒரு படம் உலகத் திரைப்படமான்னு சொல்றதுக்கு நீங்க உலகத் திரைப்படமே பார்த்திருக்கவேண்டியதில்லைன்றதுதான் இதுல இருக்கிற ஐரனி.”

“ஓ ஐரனி. நாம இன்னும் நிறைய பேசணும் சார்.”

“பேசலாம் இல்லை பிரதர், விவாதிக்கணும். விவாதம். சரியா சொல்லணும், சரியா?”

“சரிங்க, நாம விவாதிப்போம்.”

“சரிங்க, இன்னொரு நாள் பார்ப்போம்.”

.

.

.

“என்ன சார் எப்படி இருக்கீங்க.”

“நீங்க சொன்னதெல்லாம் மனசுல வெச்சுக்கிட்டு நேத்தும் ஒரு படம் பார்த்தீங்க.”

“ப்ரில்லியண்ட். என்ன படம்.”

“மகுடின்னு ஒண்ணு வந்திருக்கே அது.”

“ஓ அதுவா, செம மொக்கையாச்சே.”

“அப்படித்தாங்க நானும் நினைச்சேன். ஆனா விடலை. கண்ணை மூடி கொஞ்ச நேரம், காதைப் பொத்தி கொஞ்ச நேரம், யோசிச்சுக்கிட்டே கொஞ்ச நேரம், படம் போனதே தெரியலைங்க. சட்டுன்னு முடிஞ்சிட்டு. செம விறுவிறுப்பு.”

“அடச்சே, அது செம மொக்கை படங்க. அதுல என்ன இருக்குன்னு சொல்றீங்க?”

“என்ன சார் இது. வில்லன் ஹீரோவை அடிக்கிறான். ஹீரோ தோத்துடறான். முந்தாநாள் வரை எனக்கும் இது சப்புன்னுதான் இருந்திருக்கும். ஆனா நீங்கதான் சார் ஒரு படத்தை பார்க்கச் சொல்லிக்கொடுத்தீங்க. தெய்வம் சார் நீங்க. ஹீரோ சேரிலேர்ந்து வர்றான். வில்லன் சிட்டி. சிட்டிக்காரன் சேரியை அடிக்கிறானான்னு யோசிச்சேன் பாருங்க, என் ரத்தமெல்லாம் பொங்கிட்டு. டைரக்டரை நினைச்சுக்கிட்டு ஒரு புல்லரிப்போட அப்படியே கையைத் தட்டுனேன் பாருங்க. பக்கத்துல இருக்கிறவனெல்லாம் மெர்சலாயிட்டான். நல்லவேளை, ஒண்ணு ரெண்டு பேர்தான் இருந்தான்னு வைங்க.”

“இல்லைங்க, இது நீங்களா யோசிக்கிறது. இதுல என்ன குறியீடு இருக்கின்றீங்க.”

“ஆமாங்க, சட்டுன்னு அந்த வார்த்தை ஞாபகத்துக்கு வரலை. குறியீடு. மனசுல வெச்சிக்கணும். என்னா குறியீடு இல்லை?!”

“இல்லைங்க, இதுல குறியீடே இல்லை. எல்லாப் படத்துலயும்தான இப்படி வருது?”

“ஏன், எல்லாப் படத்துலயும் குறியீடு வரக்கூடாதா சார்?”

“அப்படீன்னா அது கிளிஷே.”

“அது யாரு கிளிஷே? அதை நீங்க அன்னைக்கு சொல்லலியே.”

“இல்லைங்க, அது வேற சங்கதி. ஆனா இந்த மகுடி மரண மொக்கைங்க. பகடி மாதிரி வராது.”

“ஏன் அப்படி சொல்றீங்க?”

“இல்லைங்க, நீங்க அந்தப் படத்தோட டைரக்டர் யாருன்னு பார்த்துட்டுதான் குறியீடா கிளிஷேவான்னு பார்க்கணும்.”

“ஓ அப்படி வேற இருக்கா?”

“ஆமா, நீங்க நாளைக்கு வாங்க, நான் ஒரு லிஸ்ட் தர்றேன், அவங்க படத்துல மட்டும் நீங்க குறியீடு உத்தி பின்நவீனத்துவம் பார்த்தா போதும். மத்த படங்களெல்லாம் கிளிஷே.”

“இது கொஞ்சம் பெட்டரா இருக்குங்க.”

“நவ் யூ அர் கிளியர் ஐ கெஸ்.”

“ஆமாங்க.”

“இப்படியே பார்த்துப் பழகிட்டீங்க நீங்க என்னைவிடப் பெரியாளாயிடுவீங்க.”

“ரொம்ப சந்தோஷம் சார், ரொம்ப தேங்க்ஸ். லிஸ்ட்டை மறந்துடாதீங்க ப்ளீஸ்.”

[ஆப்த நண்பர் ஒருவர் கடல் திரைப்படத்தைப் பற்றிப் பேசும்போது, சாத்தான் தலைகீழாகத் தொங்கும்போது தேவன் தலைகீழாகத் தெரிகிறார் என்று எழுதியிருந்தார். அதை இன்னொரு ஆப்த நண்பரும் சிலாகித்திருந்தார். அப்போது ஏற்பட்ட கடும் மனநெருக்கடியின்போது எழுதியது இது. அந்த இரு நண்பர்களுக்கும் இதை அர்ப்பணிக்கிறேன். :>]

Share

மலர்மன்னன் – சில நினைவுகள்

மலர்மன்னன் இறந்துபோவதற்கு இரண்டு நாள்கள் முன்புதான் என்னிடம் பேசியிருந்தார். அவர் எழுதி, திரிசக்தி பதிப்பகம் வெளியிட்டிருந்த வந்தேமாதரம் நூல்களை விற்பது தொடர்பாகவும் அதை மார்கெட் செய்வது தொடர்பாகவும். இரண்டு நாளில் அவரது மரணச் செய்தி வந்தது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு, மலர்மன்னன் என்னும் பெயரைக் கேள்விப்பட்டிருந்தேனே ஒழிய, அவருடன் பழக்கமெல்லாம் இருந்ததில்லை. இப்போதும்கூட மலர்மன்னனுடன் நெருங்கிப் பழகியவன் என்றெல்லாம் சொல்லமுடியாது. சில வருடங்களுக்கு முன்பு ஹிந்துத்துவ நண்பர்கள் என்னிடம் சொன்ன மலர்மன்னனாகத்தான் அவர் எனக்கு பெயரளவில் அறிமுகமானார். அவரைப் பற்றிய எனது மனப்பதிவு அவர் கடும் பிராமண சாதிய ஆதரவாளர் என்பதே. அதே மனப்பதிவோடுதான் அவர் எழுதிய புத்தகங்களை நான் வாசித்தேன். அதே தீர்மானத்தோடுதான் அவர் எழுதிய புத்தகங்களையும் புரிந்துகொண்டேன். நான் எழுதிய புத்தக விமர்சனம் கூட அதே நிலைப்பாட்டில்தான் இருந்தது. அதைத் சரியாகப் புரிந்துகொண்ட மலர்மன்னன் அதற்கு ஒரு பதிலும் எழுதியிருந்தார்.

நான் மலர்மன்னனை முதலில் சந்தித்தது, எனி இந்தியன் பதிப்பகம் சார்பாக கலந்துகொண்ட சென்னை புத்தகக் கண்காட்சியில். உண்மையில் அவரை அதற்கு முன்பு நான் பார்த்ததில்லை. கேள்விப்பட்டதுமில்லை. கையில் ஒரு புத்தகத்துடன் அதை விற்பனைக்கு வைக்கமுடியுமா என்று கேட்டு வந்தார். நான் எனி இந்தியன் உரிமையாளர்களிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று சொன்னேன். அவரே கோபால் ராஜாராமுடன் பேசுவதாகச் சொன்னார். அவர் சென்ற பிறகு, எனக்கு அருகில் இருந்த விருட்சம் அழகியசிங்கர், அவர் யாரென்று தெரியுமா என்று கேட்டார். தெரியாது என்றேன். அவர்தான் மலர்மன்னன், கோபால் ராஜாராமுக்கெல்லாம் தெரியும், முன்பு கால் என்று பத்திரிகை நடத்தியிருக்கிறார், தற்போது முண்டா பழங்குடியினர் பற்றி அவர் எழுதியிருக்கும் கண் விழித்த கானகம் என்னும் நாவலை விற்க உங்களிடம் கேட்கிறார் என்றார். நாவலுக்கு பெயர் கண் விழித்த கானகமா, எப்படிங்க யார் வாங்குவா என்றேன். இப்படித்தான் முதன்முதலில் மலர்மன்னனை அறிந்துகொண்டேன். (இன்னும் நான் இந்தப் புத்தகத்தைப் படிக்கவில்லை. இனி படிப்பேன்.)

அடுத்த அறிமுகம் – காலச்சுவடு நடத்திய கூட்டம் ஒன்றில், அவர் தனது கருத்துகளைக் கடுமையாக முன்வைத்தபோதுதான். ஃபிலிம் சேம்பர் அரங்கில் நடந்த கூட்டத்தில், சல்மா பங்குபெற்ற மேடை ஒன்றில், வழக்கம்போல மதச்சார்பின்மை என்ற பெயரில் ஹிந்து இயக்கங்களுக்கு எதிரான கருத்துகள் முன்வைக்கப்பட்டன. (இதைத் தவறு என்று சொல்லவில்லை, என் கருத்தாக மட்டும் சொல்கிறேன்.) பின் வரிசையில் எனக்கு அருகில் அமர்ந்திருந்த பிராவஹன் அக்கருத்துக்களை மிகக் கடுமையாக எதிர்த்தார். எழுந்து நின்று சத்தம் போட்டார். அதைவிட உரத்தகுரலில் முதல் வரிசையில் இருந்து ஒரு குரல் வந்தது. அது மலர்மன்னனின் குரல். கண்ணன் மேடையேறி என்னென்னவோ சமாதானங்கள் சொல்லிப் பார்த்தார். ஆனால் மலர்மன்னனும் பிரவாஹனும் ஓயவே இல்லை. எனவே அம்மேடை பாதியில் நிறுத்தப்பட்டது. அம்மேடையில் கிருஷ்ண ஆனந்தும் இருந்ததாக நினைவு. இதைப் பற்றி அடுத்த காலச்சுவடு இதழில் சல்மா, கண்ணன், மலர்மன்னன், பிரவாஹன் எல்லாருமே எழுதியிருந்தார்கள் என நினைக்கிறேன். அப்போதெல்லாம் மலர்மன்னன் வெண்ணிற பைஜாமாவில் வருவது வழக்கம்.

அதற்குப் பின்பு மலர்மன்னனைப் பற்றி நான் கேள்விப்பட்டவை எல்லாம் நல்லதாக இல்லை என்பதே உண்மை. அவையெல்லாம் உண்மையா புரட்டா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அதை எனக்குச் சொன்ன நண்பர்கள் நிச்சயம் பொய் சொல்பவர்களோ புரட்டாளர்கலோ அல்ல என்பது உறுதி. அதுமட்டுமல்லாமல், அவர்களே மலர்மன்னன் மேல் மிகுந்த மரியாதை உடையவர்களாகத்தான் இருந்தார்கள், அத்தனைக்குப் பிறகும்.

இந்த அடிப்படையில்தான், கிழக்கு வெளியிட்ட திமுக உருவானது ஏன் என்ற, மலர்மன்னன் எழுதிய நூலை வாசித்தேன். இத்தனை மனச்சாய்வுக்குப் பிறகும், அந்த நூல் மிகவும் பிடித்திருந்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. திமுகவை எதிர்க்க, மலர்மன்னனின் சாய்வு மிகச் சரியாகப் பொருந்திப் போய்விட்டதும், அதோடு என் அரசியல் சாய்பு பொருந்திப் போய்விட்டதும் காரணம் என யூகிக்கிறேன். அதைவிட எனக்கு மிகவும் பிடித்திருந்தது, மலர்மன்னனின் எழுத்து நடை. மிகத் தெளிவானது, குழப்பமில்லாதது. சில இடங்களில் நக்கலுடன் கூடியதும்கூட. இது அவரது புத்தகத்தை மிக விரைவாக வாசிக்க வைத்தது. மலர்மன்னனின் புத்தகங்களெல்லாம் விற்பனை ஆகுமா என்ற சந்தேகமும் எனக்கு இருந்தது. ஆனால் அவரது புத்தகம் ஓரளவு நன்றாகவே விற்பனை ஆனது, ஆகிக்கொண்டிருக்கிறது என்பதுதான் நடைமுறை உண்மையாக இருக்கிறது.

காந்தியைப் பற்றிய தீவிர ஹிந்துவின் பார்வையாக (நான் அதை ஹிந்துத்துவாவின் பார்வை என ஏற்கவில்லை) மலர்மன்னன் எழுதிய கட்டுரைகள், அதன் சாய்வை மையமாக வைத்தே மிக முக்கியமானவையாகின்றன. நவகாளி பற்றித் தேடிக்கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட மலர்மன்னின் கட்டுரை மிக அசத்தலாக இருந்தது. இதை அப்போதே பலருடன் பகிர்ந்துகொண்டேன்.  அதேபோல் காந்தியையும் கோட்சேவைப் பற்றிய பதிவும் முக்கியமானது. (இதை இன்று தேடியபோது டோண்டுவின் பதிவில் கிடைத்தது. டோண்டுவுடன் எனக்குப் பழக்கமில்லை. ஒன்றிரண்டு முறை ஹாய் சொல்லியிருக்கிறேன். அவரும் மறைந்துவிட்டார். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.)  மலர்மன்னன் காந்தியை மோகன் தாஸ் என்றே குறிப்பிட்டு வந்திருக்கிறார். இன்றைய ஹிந்து இஸ்லாம் பிரச்சினைக்கு காந்தியே காரணம் என்று நம்பியிருக்கவேண்டும்.

இப்படி மலர்மன்னன் பற்றிய என் புரிதல் இருந்த நேரத்தில், மலர்மன்னனின் ஆர்ய சமாஜம் கிழக்கு வெளியீடாக வெளிவந்தது. மலர்மன்னனுக்காகவே அந்த நூலை வாசித்தேன். மிகவும் பிடித்திருந்தது. அதற்கு ஒரு மதிப்புரை போல ஒன்றை எழுதினேன். மலர்மன்னன் அதற்குப் பதில் எழுதியிருந்தார். வழக்கம்போல என் பார்வை, மலர்மன்னன் ஒரு பிராமண ஆதரவாளர் என்பதை மையமிட்டதாக இருந்தது. அதை அவர் ஏற்கவில்லை.

இந்நிலையில் திராவிட இயக்க நூற்றாண்டு வந்தது. இதை ஒட்டி மூன்று அல்லது நான்கு புத்தகங்கள் கொண்டு வர கிழக்கு பதிப்பகம் முடிவு செய்திருந்தது. ஒரு புத்தகம் ஒரு தலித்தின் பார்வையில் இருந்து, இன்னொரு புத்தகம் ஒரு திமுக ஆதரவாளரிடமிருந்து. இன்னொரு புத்தகம் ஹிந்துத்துவப் பார்வையிலிருந்து. ஹிந்துத்துவப் பார்வையில் இருந்து வரவேண்டிய புத்தகத்தை மலர்மன்னன் எழுதினால் நன்றாக இருக்கும் என்று பத்ரியிடம் சொன்னேன். எனது தனிப்பட்ட ஆசை, அது பிராமணப் பார்வையிலிருந்தும் வரவேண்டும் என்பதே. ஆனால் இதை நான் மலர்மன்னனிடம் சொல்லவில்லை. மலர்மன்னனுடன் பணி புரிவதில் சில சிக்கல்கள் உண்டு என்பதே ஒரு பொதுக்கருத்தாக இருந்தது. அதைமீறி அவர் அப்புத்தகத்தை எழுதினால் நன்றாக இருக்கும் என்று நான் நினைத்தேன். அவருடன் பேசுவது, அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதை நான் பொறுப்பேற்றுக்கொண்டேன். அப்போதுதான் அவரிடம் நான் தனிப்பட்டமுறையில் முதன்முறையாகப் பேசினேன்.

நான் அவர் புத்தகங்களுக்கு எழுதிய விமர்சனங்களை நினைவு கூர்ந்தார். நம்ம, நாம என்றே பேசினார். ஒரு ஜி வட்டம் உருவாகிவிட்டதை உணர்ந்தேன். அவர் எழுதி ஏற்கெனவே வெளிவந்த திமுக உருவானது ஏன் புத்தக எடிட்டிங்கில் அவருக்கு சில மனக்குறைகள் இருந்தன. அவற்றைச் சொன்னார். இம்முறை அப்படி நேராமல் பார்த்துக்கொள்ளலாம் என்றேன். இந்தப் புத்தகம் குறித்து பத்ரியைச் சந்தித்துப் பேச வந்தார்.

அவர் பத்ரியைச் சந்திக்கவந்தபோது அது மலர்மன்னன்தானா என்ற சந்தேகம் வந்துவிட்டது. அந்த தாடி மட்டும் இல்லை என்றால் நிச்சயம் குழம்பியிருப்பேன். வெறும் காவி வேட்டி மட்டுமே கட்டியிருந்தார். மேலே ஒரு காவித் துண்டு. என்ன ஜி இப்படி என்றேன். எல்லாத்தையும் விட்டாச்சு, சந்நியாசம் வாங்கிட்டேன், உங்களுக்குத் தெரியாதா என்றார். கையில் இருந்த வாட்ச்சைக் காட்டி, ஒரு நண்பர் அன்பா கொடுத்தார்ன்றதால இதை கட்டிக்கிட்டு இருக்கேன், சந்நியாசிக்கு எதுக்கு வாட்ச் சென்றார். திராவிட இயக்கத்தை எக்ஸ்போஸ் செய்யணும் ஜி என்றேன். அப்படி முன்முடிவோடல்லாம் எழுதவேண்டியதில்லை என்றார். எனக்கு சப்பென்று ஆகிவிட்டது. எனக்கு இருந்த பயம், மற்ற பார்வைகளில் இருந்து வெளிவரும் புத்தகங்கள் மிகவும் சரியான பார்வையோடு இருந்து, ஹிந்துத்துவக் கண்ணோட்டத்தில் வரும் மலர்மன்னனின் புத்தகமும் திராவிட இயக்கத்துக்கு ஏதோ ஒரு வகையில் ஆதரவு அளித்துவிட்டால் என்னாவது என்பதுதான். மலர்மன்னனின் அந்த பதில் எனக்கு அப்படி ஒரு எண்ணத்தை வரவழைத்துவிட்டது. என்ன என்ன செய்யவேண்டும் என்பதையெல்லாம் முதல் மீட்டிங்கிலேயே முடிவுசெய்துவிட்டார். இரண்டே நாள்களில் வேலையையும் ஆரம்பித்துவிட்டார்.

அதற்குப் பின்பு அவர் என்னிடம் தனியாகப் பேசியபோது என் பயம் முற்றிலும் அகன்றது என்றே சொல்லவேண்டும். திராவிட இயக்கமே ஒரு ஃபேக் என்றார். புத்தகம் பெயரே இப்படி வெச்சிரலாம் ஜி என்றேன். சிரித்துக்கொண்டார். என்ன பிரசன்னா, புத்தகம் வந்தா கடுமையா எதிர்ப்பாங்களா என்றார். எதுத்தா அதுக்கும் பதில் எழுதிடலாம் என்றார். என்ன என்ன எதிர்ப்புகள் வருமோ அதற்கெல்லாம் இப்போதே சேர்த்து புத்தகத்தில் எழுதிடுங்க ஜி என்றேன். ஓ அப்படி சொல்றீங்களா என்றார்.

முதல் அத்தியாத்தை எனக்கும் பத்ரிக்கும் அனுப்பினார். அடுத்தடுத்து அத்தியாயங்கள் வந்துகொண்டே இருந்தன. ஐந்து அத்தியாயங்கள் வரை படித்துக் கருத்துச் சொன்னேன். பின்னர் படிக்கவில்லை. விட்டுவிட்டேன். புத்தகமாக வந்ததும் படித்துக்கொள்கிறேன் ஜி என்றேன். நீங்க படிச்சு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் என்றார். என்னால் படிக்க முடியாமலேயே போனது. சோம்பேறித்தனமன்றி வேறு காரணங்கள் இல்லை. ஸாரி மலர்மன்னன் ஜி. 🙁

திராவிட இயக்கத்தை ஒட்டி கிழக்கு கொண்டு வர நினைத்த புத்தகங்களில் வெளிவந்தது இந்த ஒரே ஒரு புத்தகம் மட்டுமே. மற்ற புத்தகங்களை எழுத ஒப்புக்கொண்டவர்கள் அல்லது அதைப் பற்றிப் பேசியவர்கள் யாருமே அதை முழுமூச்சாகக் கையில் எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு புத்தகமாக வெளிவருவதன் அவசியம் பற்றியோ, அது தரப்போகும் நீண்ட காலத் தாக்கம் பற்றியோ தெளிவாகப் புரிந்துகொண்டவர் மலர்மன்னன் மட்டுமே.

அந்தப் புத்தகம் எழுதுவதற்குப் பல புத்தகங்களின் நகல்கள் வேண்டுமென்று மலர்மன்னன் கேட்டார். பெரும்பாலான புத்தகங்களைத் தந்துதவியவர் ம.வெங்கடேசன். அரிதான புத்தகங்களெல்லாம் வெங்கடேசனிடமிருந்தன. வெங்கடேசன் ஒரு புத்தகக் களஞ்சியம். வெங்கடேசன் பற்றி ஒரே ஒருமுறை மலர்மன்னனிடம் சொன்னேன். வெங்கடேசனைத் தெரியும் என்றார். மலர்மன்னனின் நன்றிக்குறிப்பில் வெங்கடேசன் பெயரைச் சேர்க்கச் சொல்லவேண்டும் என நினைத்துக்கொண்டேன். புத்தகம் வெளிவரும்போது சொல்லிக்கொள்ளலாம் என்று அப்போதைக்கு அப்படியே விட்டுவிட்டேன். ஆனால் புத்தகம் வெளிவரும்போது வெங்கடேசன் பெயரைச் சேர்க்கச் சொல்லமுடியாமல் போய்விட்டது. மலர்மன்னனே சேர்த்திருக்கவேண்டும் என்றும் சொல்லமுடியாது. ஏனென்றால் நான் வாங்கித் தந்த பெரும்பாலான புத்தகங்கள் வெங்கடேசன் தந்தவை என்று மலர்மன்னனுக்குத் தெரியாது. புத்தகம் வெளிவந்ததும் இது பற்றிச் சொன்னேன். அப்படியா, நீங்க மொதல்லயே சொல்லிருக்கலாமே என்றார். ஆமா ஜி, என் தப்புதான் என்றேன். இப்ப என்ன பண்றது என்றார். அடுத்த பதிப்பில் சேர்க்கலாம் என்றேன். சரி என்றார். வெங்கடேசனுக்கு இது எதுவுமே தெரியாது. தன் பெயர் வரவேண்டும் என்றெல்லாம் நினைக்கக்கூடிய மனிதர் அல்ல வெங்கடேசன். ஆனால் எனக்குத்தான் குற்ற உணர்ச்சியாக இருந்தது. குற்ற உணர்ச்சியுடனேதான் வெங்கடேசனுக்கு திராவிட இயக்கம் புனைவும் உண்மையும் புத்தகத்தை அனுப்பி வைத்தேன். அதிலும் மலர்மன்னன் இறந்த செய்திகேட்டபோது மிகவும் நொந்துபோய்விட்டேன். 🙁

திராவிட இயக்கம் புனைவும் உண்மையும் என்ற பெயரைவிட திராவிட இயக்கம் பொய்யும் புரட்டும் என்ற ரேஞ்சுக்குத்தான் பெயர் வைக்க மலர்மன்னன் விரும்பினார். பத்ரி அதை ஏற்கவில்லை என நினைக்கிறேன். நான் ஏற்கவில்லை என்றும் அவரிடம் சொன்னேன். புனைவும் உண்மையும்னா கொஞ்சம் மெல்ல தடவிக்கொடுக்கிற மாதிரி இருக்காது என்று கேட்டார். அதெல்லாம் சரியா வரும் ஜி என்றார். பத்ரியிடம் முடிவை விட்டுவிட்டார். கடந்த முறை இருந்த கசப்பனுவங்கள் எல்லாம் அவருக்கு மறைந்திருந்தது. மிக எளிமையான மனிதராக, ஒரு எடிட்டிங்கின் தேவையெல்லாம் புரிந்து நடந்துகொண்டார். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. காந்தியைப் பற்றி அவர் புத்தகம் எழுதினால் நன்றாக இருக்கும் என்றெல்லாம் யோசித்து வைத்திருந்தேன். அது நடக்காமல் போய்விட்டது.

சென்னை புத்தகக் கண்காட்சியின்போது வந்திருந்தார். அவரது வந்தே மாதரம் புத்தகத்தையும் விற்பனைக்கு வைத்திருந்தோம். ரொம்ப நன்றி பிரசன்னா என்றார். நான் விற்பனையில் படு மும்மரமாக இருந்தேன். அவர் சொல்வதையெல்லாம் மனதால் வாங்கிக்கொள்ளாமல் சரி சரி என்று சொல்லிக்கொண்டிருந்தேன். என்ன என்னவோ சொன்னார். அவருடன் வந்திருந்த ஒரு சகோதரியை அறிமுகப்படுத்தினார். அவரைப் பற்றியும் என்னவோ சொன்னார். என்னவென்று இப்போது நினைவுக்கு வரவில்லை. யாரோ ஓர் இசை ஆளுமையின் பேத்தி என்ற நினைவு. அந்தப் பெண்மணி, மலர்மன்னனின் ஆதரவில்தான் தன் வாழ்க்கையே நடக்கிறது என்றும், மலர்மன்னன் அடைக்கலம் தந்தார் என்றும் சொன்னார். அடைக்கலம் என்ற வார்த்தையைக் கடுமையாக மறுத்தார் மலர்மன்னன். எனக்கு நீ உதவி செய்றம்மா என்று அவர் சொல்ல, அதை அவர் மறுக்க, அவர்கள் இருவரும் அங்கேயே விவாதிக்கத் தொடங்கினார்கள். 

இறந்து போவதற்கு இரண்டு தினங்கள் முன்பு பேசும்போது, நான் திராவிட இயக்கம் புனைவும் உண்மையும் புத்தகத்தைப் படித்துவிட்டேனா எனக் கேட்டார். படிச்சுக்கிட்டே இருக்கேன் என்றேன். எதாவது விமர்சனம் வந்தா சொல்லுங்க என்றார். புத்தகம் பற்றி அவருக்கு வரும் விமர்சனங்களையெல்லாம் எங்களுக்கு அனுப்பி வைப்பார். அவர் எழுத்து புத்தகமாக வருவதில் பெரிய ஆர்வம் அவருக்கு இருந்தது. 

மோடியின் குஜராத் புத்தகத்தைக் கொடுக்க கடந்த வாரம் பிஜேபியின் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே செயல்வீரர்கள் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. மோடியின் குஜராத் புத்தகத்தின் முக்கியத்துவம் பற்றி பொன் ராதாகிருஷ்ணன் சொன்னார். அப்போது அங்கே இருந்த இல. கணேசன், ‘கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட இன்னொரு முக்கியமான புத்தகம் திராவிட இயக்கம் புனைவும் உண்மையும். நான் படித்துவிட்டேன். நம் பார்வையில் அசைக்கமுடியாத ஆதாரங்களுடன் வெளிவந்திருக்கும் இப்புத்தகத்தை எழுதியவர் மலர்மன்னன். அந்தப் புத்தகத்தையும் அனைவரும் படிக்கவேண்டும்’ என்றார். இதைப் பற்றி மலர்மன்னனிடம் சொல்ல நினைத்திருந்தேன். அதற்குள் அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

மலர்மன்னனின் இழப்பு ஹிந்த்துத்துவ நோக்கில் பெரிய இழப்பு. அவர் பிராமணவாதி என்பது என் முன்முடிவு. அவரோட பேசிய (பழகிய அல்ல) நாள்களில், அந்த முன்முடிவு தவறு என்று சொல்லும்படியாக எதுவும் நடந்துவிடவில்லை. அதேபோல் அது சரியானது என்னும்படியாகவும் எதுவும் நடந்துவிடவில்லை என்பதே அதைவிட முக்கியமானது. ஆனால் சந்தேகமே இல்லாமல் நல்ல ஹிந்துத்துவவாதி. ஒரு சாதியவாதி எப்படி நல்ல ஹிந்துத்துவவாதியாக இருக்கமுடியும் என்ற குழப்பங்கள் எனக்கு உண்டு. ஆனால் அவருக்குள் அந்த முரண் இருக்கவே இல்லை. ஒருவேளை என் முன்முடிவு தவறாகவும், அவர் சாதியவாதியாக இல்லாத ஒரு நிஜ ஹிந்துவாக இருந்திருக்கக்கூடும். எப்படி இருந்தாலும், என் கருத்துகளை என் கருத்துகள் என்று மட்டும் எடுத்துக்கொள்ளவும். ஜி என்று அவரை விளிக்கும் ஒரு மனிதரை அவர் உடனே விரும்பினார். அவர் ஹிந்துக்களின் மீதும் ஹிந்துத்துவத்தின் மீதும் தீராக் காதல் கொண்டிருந்தார். கிறித்துவ மதமாற்றமும், இஸ்லாமிய பயங்கரவாதமும் அவருக்கு இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கின. சித்தர்களைப் பற்றிய பெரிய ஆர்வமும் நம்பிக்கையும் இருந்தது. அவர் வீட்டருகில் இருக்கும் ஒரு சித்தரின் சமாதிக்கு என்னை வருமாறு அழைத்திருக்கிறார். ஒரு நல்ல மனிதர். அவரது இழப்பு ஈடு செய்யமுடியாதது. அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்.

Share

ஆரிய சமாஜம் நூல் மதிப்புரையும் மலர்மன்னன் பதிலும்

நான் 14- ஜூன்-2010ல் எழுதிய ‘ஆரிய சமாஜம்’ நூலின் மதிப்புரையும், அதற்கு 5-ஜூலை-2010ல் மலர்மன்னன் எழுதிய பதிலும் இங்கே – சேமிப்புக்காக.

மலர்மன்னன் முன்பு எழுதியிருந்த ‘திமுக தோன்றியது ஏன்?’ புத்தகத்தைப் படித்தபோது, அவ்ர் மேலிருந்த சில முன் அனுமானங்கள் உடைந்தன. என்றாலும், அவர் மேல் நான் கொண்டிருந்த முன் அனுமானங்களில் சிலவற்றை இன்னும் ஆழப்படுத்துவது போலவும் சில விஷயங்கள் அப்புத்தகத்தில் இருந்தன. குறிப்பாக பிராமண சார்புடைய பார்வை. எந்த ஒரு பார்வையும் நிச்சயம் தேவை என்னும் ஜனநாயக அடிப்படையிலும், பிராமணப் பார்வை என்பதே இன்று ஜனநாயகத்துக்கு எதிரானது என்றாகிவிட்ட நிலையில், அவர் எவ்வித சங்கடமும் இன்றி அதனை முன்வைப்பதும் அப்புத்தகத்தை முக்கியமானதாக்கியது என்று நினைத்தேன். (பிராமணச் சார்பு என்பதை அவர் மறுக்கக்கூடும்.)

மீதமிருந்த, ஆழமாகிப் போன, மலர்மன்னன் பற்றிய எனது முன் தீர்மானங்களை ‘ஆரியசமாஜம்’ புத்தகம் அடியோடு உடைத்துப் போட்டிருக்கிறது என்றால் மிகையில்லை. மலர்மன்னன் இப்புத்தகத்தை எப்படி எழுதினார் என்னும் கேள்வி என் மனத்துள் இன்னும் உழன்றபடியேதான் உள்ளது. தன் மனத்தில் இருந்த பிராமணச் சார்பை எல்லாம் புறம் தள்ளிவிட்டு, புதிய மனிதனாக, தயானந்தரின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொண்டு இப்புத்தகத்தை எழுதினாரா அல்லது பிராமணச் சார்பு ஒரு பக்கம் இருந்தாலும், புத்தகத்தை எழுதும்போது தன் சாயல் வரக்கூடாது என நினைத்து இப்படி எழுதினாரா எனத் தெரியவில்லை. எப்படி எழுதியிருந்தாலும் அது வரவேற்கத்தக்கதே, பாராட்டத்தக்கதே.

ஹிந்துத்துவம் எனப்து ஜாதியின் கைகளில் சிக்கி சீரழிந்துவிட்ட/கொண்டிருக்கும் நிலையில், தனிப்பட்ட முறையில் ஹிந்துத்துவம் என்பது ஜாதியில்லாமல் இயங்கமுடியாதோ என்கிற மிகப் பெரிய உள்மனச் சிக்கலில் நான் விழுந்த நிலையில், இப்புத்தகத்தைப் படித்தது எனக்கு மிகப்பெரிய ஆசுவாசமளித்தது என்றே சொல்லவேண்டும்.

ஜாதியின் அத்தனை காரண காரியங்களையும் உடைக்கிறது தயானந்தரின் முழக்கங்கள். 200 வருடங்களுக்கு முன்பாகவே, ஹிந்துத்துவம் என்பது எப்படி இருக்கலாம் என்று இன்று சிந்திப்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் அன்றே சரியான தீர்க்கமான வழியைச் சொல்லிச் சென்றிருக்கிறார் தயானந்தர். அவர் அன்று அப்படிச் சொன்னதை, மேல் சாதியினரான பிராமணர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை, இன்றைய பிராமணர்களை வைத்தே அறிந்துகொண்டுவிட முடியும். ஆனால் அதனை எல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், வேத முறையிலான வாழ்க்கை முறையை முன்வைத்திருக்கிறார் தயானந்தர். அதோடு, வேதங்களில் ஜாதிய முறைக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்பதைப் பல இடங்களில் சொல்லியிருக்கிறார். வேதங்களில் ஜாதி இருப்பதாகச் சொல்லப்படும் ஆதாரங்களுக்கெல்லாம் சரியான பொருளைச் சொல்லி, ஜாதி என்பதை அடியோடு மறுத்திருக்கிறார் தயானந்தர்.

வருணம் பற்றிப் பேசும்போது, பிறப்பால் வருணம் நிர்ணயிக்கப்படுவதை அடியோடு எதிர்த்திருக்கிறார். ஒரு பிராமணன் பிறப்பால் பிராமணனாவதிலலை என்றும், தங்களுடைய செயலாலே ஆகிறார்கள் என்றும், அப்படி எந்த ஒரு வருணத்தவரும் பிராமணராக முடியும் என்று மிக ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார் தயானந்தர். 

பூணூல் அணிவது எல்லோருக்குமான சடங்கு என்றும், சந்தியாவந்தனம் என்பதும் தனிப்பட்ட சொத்தல்ல, அதுவும் பொதுவானது என்று எடுத்துரைத்திருக்கிறார் தயானந்தர்.

பிராமணன் சடங்குகள் செய்விப்பது கடமையல்ல, ஒவ்வொரு குடும்பத்தில் ஒவ்வொருவரும் தாங்களே சடங்குகளைச் செய்துகொள்ளலாம், வேத கால ஹிந்து முறையில் அப்படித்தான் இருந்திருக்க முடியும் என்கிறார் தயானந்தர்.

எத்தனையோ பிராமணரல்லாத ரிஷிகள் நல்வாழ்வு வந்து பிராமணரைப் போல் உயர்ந்ததையெல்லாம் இப்புத்தகம் எடுத்துக்காட்டுகிறது. இப்படி ஒரு புத்தகத்தைப் படிப்பதே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உண்மையில் இன்றைய நிலையில் இப்படி ஒரு நிலையை ஹிந்துமதம் கொண்டிருக்குமானால் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்யாமல் இருக்க முடியவில்லை.

உயர் குணங்களோடு, ஜாதியற்ற சிந்தனையோடு உடல் ரீதியான பலமும் தேவை என்பதை தயானந்தர் சொல்லியிருக்கிறார். இதனைத்தான் பல ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தங்களுக்குத் தேவையான வகையில், சில சமயம் வன்முறை கூட சரி என்னும் அர்த்தத்தில் சொல்வதைக் கேட்கிறேன். 

தயானந்தர் உருவ வழிபாட்டை முற்றிலும் கைவிடச் சொல்லுகிறார். இந்த நிலைப்பாட்டில் ஆசிரியர் மலர்மன்னன் பிறழ்வது தெரிகிறது. தயானந்தரைப் பற்றி எழுதும்போது இதனைச் சொல்லியாக வேண்டிய ஆசிரியர், சில இடங்களில் உருவ வழிப்பாட்டைக் கைவிட்டால் என்னென்ன ஊறுகள் நேரும் என்பதைச் சொல்லிச் செல்கிறார். குறிப்பாக, ராம கிருஷ்ண பரம ஹம்சரும் தயானந்தரும் சந்தித்துக்கொண்டிருக்காத போது, இவர்கள் சந்தித்திருந்தால் என்ன நேர்ந்திருக்கும் என்று அவர் சொல்வது ஒரு எடுத்துக்காட்டு. ராம கிருஷ்ண பரமஹம்ஸர் உருவ வழிபாட்டைக் கைவிட்டிருக்க மாட்டார் என்று சொல்லும் மலர்மன்னன், தயானந்தரும் தன் கருத்தில் உறுதியாக இருந்திருப்பார் என்று சொல்வதற்குப் பதிலாக, சில ஞானிகளுக்கு தயானந்தர் விலக்கு அளித்திருக்கக்கூடும் என்கிற யூகத்துக்குத் தாவி விடுகிறார். இது போன்ற மலர்மன்னன் கொஞ்சம் தத்தளிக்கும் இடம், 1857 குறித்து தயானந்தர் பேசாதது பற்றியும், மனு தர்மத்தை தயானந்தர் ஏற்றுக்கொள்வது பற்றியும் எழுதும்போதும்.

மனுதர்மம் பற்றிய தனியான ஒரு அத்தியாயம் கடைசியாக வருகிறது. புத்தகத்தின் பின்னட்டையில், மனுதர்மத்தில் காலத்துக்கு ஏற்றதை மட்டுமே ஏற்றார் என்று பொருள்பட வருகிறது. ஆனால் புத்தகத்தினுள்ளே, தயானந்தர் மனுதர்மத்தை அப்படியே ஏற்றுக்கொண்டுவிட்டார் என்ற பொருள்பட, மலர்மன்னன், கிட்டத்தட்ட வாதாடிச் செல்கிறார். 

மனுதர்மத்தில் சொல்லப்பட்டிருக்கும் பிராமணர்களுக்கு எதிரான கருத்துகளை மட்டுமே முன்வைத்து இதனை மலர்மன்னன் அணுகியிருப்பது சரியானதல்ல. ஒரு பிராமணன் தவறு செய்தால் அவனுக்கு அதிகத் தண்டனையும், பிராமணரல்லாத மற்ற வருணத்தவர் தவறு செய்தால், பிராமணனுக்குத் தரப்படும் தண்டனையைக் காட்டிலும் குறைவான தண்டனையும் தரப்படுவதை சுட்டிக்காட்டும் மலர்மன்னன், பிராமணரல்லாத வருணத்தவர் பிராமணர்களைத் திருமணம் செய்துகொள்ளும்போது மனு தர்மம் சொல்லும் சட்டங்களைப் பற்றிப் பேசவே இல்லை. பிராமணனுக்கு அதிக தண்டனை தரும் சட்டங்களைவிட மிகவும் முக்கியமான்வையும், சர்ச்சைக்குரியவையும் எதுவென்றால், பிராமணனுக்கு அதிக சலுகைகள் தரும் சட்டங்களும், பிராமணனை ஒரு பீடத்தின் மேல் அமர்த்தி வைக்கும் சட்டங்களுமே ஆகும். அதைப் பற்றி தயானந்தரின் கருத்தென்ன என்பதை மலர்மன்னன் விளக்கவில்லை.

அதேபோல, தயானந்தர் பெண் விடுதலையைப் பற்றிப் பேசுவதைச் சிலாகிக்கிறார். ஆனால் மனு தர்மமோ என்றென்றும் பெண் ஆணைச் சார்ந்தே நடக்கவேண்டும் என்று சொல்கிறது. 

மேலும், மனு தர்மத்தில் கிட்டத்தட்ட பாதிக்கு மேற்பட்ட பாடல்கள் பாட பேதங்கள் என்கிறார் மலர்மன்னன். அதாவது, எவையெல்லாம் பிரச்சினைக்குரியவையோ அவையெல்லாமே பாட பேதங்கள் என்று சொல்லிக்கொண்டுவிட ஏதுவாக இப்படிச் சொல்கிறாரோ என்கிற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

தயானந்தர் சொல்லியிருக்கும் எல்லாக் கருத்துகளுக்கும் சரியான விளக்கம் அளித்துவிட வேண்டும் என்கிற மலர்மன்னனின் தவிப்பு, சில இடங்களில் யூகங்களுக்குத் தள்ளிவிடுகிறது. 1857 பற்றிய யூகம், ராமகிருஷ்ண பரமஹம்சர் என்ன சொல்லியிருப்பார் என்கிற யூகம் போலவே, யாகங்களின் மூலம் காற்றில் புகையைக் கலப்பதால் நன்மை பயக்கலாம் என்னும் யூகம். இப்படி யூகங்களுக்குச் செல்வதை விட, இப்படித்தான் தயானந்தரின் வாழ்வில் நடந்தது, இப்ப்படித்தான் தயானந்தர் சொன்னார் என்று சொல்லி விட்டுவிடுவது நல்லது. (ஆனாலும் அதனை தன் வாதப்படி எடுத்துச் சொல்லும் எல்லா உரிமைகளும் மலர்மன்னனுக்கு உள்ளது. என்ன ஒன்று, அதனைப் படிக்கும்போது லேசான புன்னகை இதழோரத்தில் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை!)

தயானந்தரின் இறப்புக்குக் காரணமாக அமைபவர் ஓர் இஸ்லாமியர். தயானந்தர், ஹிந்து மதத்தின் சடங்காச்சாரங்களைத் தீவிரமாக எதிர்த்தது போலவே, பிற மத ஆக்கிரமிப்பையும் எதிர்த்திருக்கிறார். எனவே ஒரு முஸ்லிம் அவரைக் கொல்ல எல்லா வாய்ப்புகளும் உள்ளன. அதே போலவே, தங்கள் ஆதாரங்களெல்லாம் பறிபோகிறதே என்று வேறு அதிகார வர்க்கத்தினர் சிலர் கூட, ஒரு முஸ்லிமின் தயவோடு தயானந்தரைக் கொல்ல முயன்றிருக்கக்கூடும் என்ற ஒரு தியரியும் உள்ளது. ராஜ புத்திர அரசர்கள் கூட அவரைக் கொல்ல முயன்றார்கள் என்று நிரூபிக்கப்படாத கூற்றும் உள்ளது. 

இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது இன்னொரு எண்ணம் தோன்றியது. யூத் ஃபார் தர்மா என்ற தயானந்த சரஸ்வதியின் அமைப்பு (இந்த தயானந்தர் வேறு, ஆரிய சமாஜத்தின் தயானந்தர் வேறு) ஒன்றின் கூட்டத்தில் பேசிய அரவிந்தன் நீலகண்டன், கூட்டத்தினரின் கேள்வி ஒன்றுக்கு இப்படி பதில் சொன்னார். பிராமணரைத் தவிர எல்லா வருணங்களும் அழிந்துவிட்ட நிலையில், பிராமண வருணம் ஏன் அழியவில்லை என்றால், இன்று மற்ற எல்லா வருணத்தவரைப் போல எந்த ஒரு வருணத்தாரும் எந்த ஒரு வருணத்தாரின் வேலையையும் செய்ய முடியும் என்கிற நிலை உள்ளது. அதாவது ஒரு சூத்திர வருணத்தவன் வைசிய வருணத்தவனின் வேலையையும், வைசிய வருணத்தவன் மற்ற வருணத்தின் வேலையையும் செய்ய முடியும். பிராமண வருணத்தவன் கூட இதே போல் மற்ற வருணத்தின் வேலையைச் செய்ய இயலும். ஆனால் பிராமண வருணத்தாரின் தொழிலாகக் கருதப்படுவதை மற்ற வருணத்தாரால் செய்யமுடியாத நிலை உள்ளது. இந்த நிலை மாறி, மற்ற எந்த வருணமும் பிராமணனின் தொழிலாகக் கருதப்படுவதைச் செய்யலாம் என்னும் நிலை தோன்றினால், எல்லா வருணங்களும் தம்மளவில் ஒன்று கரையும் நிலை வரலாம் என்றார். இது தயானந்தர் அன்றே சொன்னதன் சாரம்தான் என்று தோன்றுகிறது.

இப்புத்தகத்தை மிகவும் சிறப்பாக, மிகவும் நேர்த்தியாக எழுதியிருக்கிறார் மலர்மன்னன். எங்கே எதனைச் சொல்கிறோம், எந்த விஷ்யத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை அழுத்திச் சொல்கிறோம் என்பதிலெல்லாம் ஒரு தேர்ந்த எழுத்தாளராக வெளிப்பட்டிருக்கிறார் அவர். அதேபோல் ஒரு புத்தகமாக வருவதற்காக அவர் பல விஷயங்களைத் தேடியதோடு மட்டுமில்லாமல், அதனைச் சரியாகத் தொகுத்து அளித்திருக்கிறார். இன்னும் தொடர்ந்து மலர்மன்னன் பல்வேறு புத்தகங்களை தனது தனித்துவத்தோடு எழுதவேண்டும். அது தமிழ்ச்சூழலில் ஒரு புதிய திறப்பாக நிச்சயம் அமையும்.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://nhm.in/shop/978-81-8493-419-9.html 

மலர்மன்னனின் பதில்:

அன்புள்ள ஸ்ரீ ஹரன் பிரஸன்னா,

ஆரிய சமாஜம் நூலுக்கு நீங்கள் எழுதியுள்ள விமர்சனத்தை நண்பர்கள் அனுப்பித் தந்தமையால் வாசிக்கக் கிடைத்தது.

நூலாசிரியன் விளக்கம் அளித்தாக வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கும்படியான விமர்சனம் எழுதும் உங்கள் சாமர்த்தியத்தை முதலில் மெச்சுகிறேன்.

1. நீங்கள் பிராமணச் சார்பாகப் பார்ப்பதை நான் நியாயத்தின் சார்பாகப் பார்க்கிறேன். ஆகையால் எனது பார்வையை பகிரங்கப்படுத்துவதில் எனக்குச் சங்கடம் ஏதும் ஏற்படுவதில்லை. 

2. 1857-ல் அது குறித்து சுவாமி தயானந்தரிடமிருந்து எதிர்ரவினை ஏதும் வராமை, ஸ்ரீ ராமகிருஷ்ணர் பரமஹம்ஸர்-தயானந்தர் நிலைப்பாடுகள், மனுஸ்மிருதி பற்றறிய அவரது கருத்து, முதலானவை குறித்துச் சரியான ஆதாரங்களின் அடிப்படையிலேயே எனது கருத்துகளை நிறுவியுள்ளேன். ஆகவே அவை யூகங்கள் என்கிற வட்டத்துக்குள் அடங்காது என நினைக்கிறேன். அதற்குப் பதிலாக வாதங்கள் எனக்கொள்வது சரியாக இருக்கலாம்.

3. ‘ம’ எனப் பிரபலமடைந்த மகேந்திரநாத் குப்தா, ‘Gospel of Sri Ramakrishna’ என்ற தலைப்பில் பரமஹம்சரின் சொற்ப கால அன்றாட நிககழ்வுகளைப் பதிவு செய்திருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இது அமுத மொழிகள் என்கிற தலைப்பில் மூன்று தொகுதிகளாக சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் வெளியாகியுள்ளது. இதில் சுவாமி தயானந்த சரஸ்வதி ஸ்ரீ ராமகிருஷ்ணரைப் பார்த்ததாகவும் அவரது சமாதி நிலை கண்டு வியந்து போற்றிச் சென்றதாகவும் குறிப்புகள் உள்ளன. ஆனால் இருவருக்குமிடையே உருவ வழிபாடு குறித்து ஸம்வாதம் ஏதும் நடைபெற்றதாகத் தகவல் இல்லை. 

நான் பல்லாண்டுகளுக்கு முன் ‘ம’ வை ஆங்கிலத்தில் வாசித்திருந்தபோதிலும் ஆரிய சமாஜம்நூலை எழுதுகையில் இது எனது நினைவில் இல்லை. யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் எழுதிய தயானந்த ஜோதியிலிருந்து வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளைப் பயன் படுத்தியதால் அவற்றின் அடிப்படையில் இருவரிடையே சந்திப்பு நிகழ வாய்ப்பின்றி தயானந்தர் வங்காளத்தைவிட்டுச் சென்றுவிட்டார் என எழுதிவிட்டேன்.. 

பின்னர் ‘அமுத மொழிகளை’ வாங்கிப் படித்தபொழுது ஸ்ரீ ராம கிருஷ்ணரை தயானந்தர் பார்த்த விவரம் கவனத்திற்கு வந்தது. உடனே ஸ்ரீ பத்ரியுடன் தொடர்பு கொண்டு, புத்தகத்தில் இத்தகவலைச் சேர்த்துவிட வேண்டுமென்று சொன்னேன். அதற்குள் புத்தகம் அச்சாகிவிட்டபடியால் கால கடந்துவிட்டது, அடுத்த பதிப்பில் சேர்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்.

உண்மையில் சுவாமி தயானந்தர்-ஸ்ரீ ராம கிருஷ்ணர் இடையே சந்திப்போ, வாதப் பிரதி வாதங்களோ நிகழவில்லைதானே. சமாதி நிலையில் ஆழ்ந்திருந்த பரமஹம்சரைக் கண்டு, இது ஓர் அசாதாரன நிலை என்று தயானந்தர் போற்றிச் சென்றதாக மட்டுமே தகவல் உள்ளது.. ஆகையால் ஒருவகையில் எனது பதிவில் பெரிய முரண் இல்லை. எனக் கொள்ளலாம். உருவ வழிபாட்டில் ஈடுபாடு இல்லாத சுவாமி விவேகானந்தரையே தம்மை குருவாக ஏற்குமாறு செய்தவராயிற்றே,, கடவுளைப் பல உருவங்களாகவே பார்த்துப் பரவசமடைந்த ஸ்ரீ ராமகிருஷ்ணர்! இந்த அடிப்படையில், ராமகிருஷ்ணர் விக்கிரகங்களை வெறும் விக்கிரகங்களாக அல்லாமல் கடவுள்களாகவே பார்த்து சல்லாபிப்பவர் எனபதைக் கண்டுகொண்ட தயானந்தருக்கு ராமகிருஷ்ணரின் உருவவழிபாட்டில் என்ன பிரச்சினை இருந்திருக்கக் கூடும்?

4. நமது கலாசாரம் கோயில் கலாசாரமாக ஆழ வேரோடிவிட்ட பிறகு, நம் கலைகள் யாவும் உருவ வழிபாட்டைச் சார்ந்தே உருவாகிவிட்டபிறகு (ராமாயணமும் பாரதமும் இல்லை யென்றால் நமக்கு ரசிக்கத் தெருக்கூத்தே இல்லை என்று தெருக்கூத்துப் பிரியரான அண்ணா ஒருமுறை என்னிடம் மனம் திறந்து சொன்னதுண்டு!), பல்வேறு தொழில்களும் கோயில் நடை முறைகளைச் சார்ந்து உருவாகிப் பல்லாயிரம் மக்களின் ஜீவாதாரமாகிவிட்ட பிறகு, மேலும் மிகவும் முக்கியமாக மிகப் பெரும்பாலான மக்ககளுக்கு உருவ வழிபாடுகளின் மூலமாகவே தெய்வ நம்பிக்கையும் அதன் பயனாக ஆறுதலும் திட சித்தமும் முற்றிலும் கிடைக்கிற சாத்தியக் கூறு உள்ளபோது, உருவ வழிபாட்டிற்கு முற்றிலுமாக முழுக்குப் போடுவது சரியல்ல என்பதே எனது கருத்து. ஆரிய சமாஜத்துடன் எனக்குப் பல் ஆண்டுகளாகத் தொடர்பு சென்னையில் மட்டுமல்ல, வேறு நகரங்களிலும் உள்ளது. இன்று அதில் உள்ள பலர் உருவ வழிபாட்டைக் கைவிட மனமின்றி இருப்பதை அறிவேன். மேலும் சுவாமி தயானந்தரே ஹிந்து சமயம் பல்வேறு கோட்பாடுகளைச் சேர்ந்த நம்பிக்கையாளர்களால் கட்ட மைக்கப்படுள்ளது என்று கூறியிருப்பதையும் பதிவு செய்துள்ளேன். எனவே, என் குல தெய்வமான கொல்லூர் மூகாம்பிகையை என் அன்னையாகவே அறிந்துள்ள எனக்கு இந்த விஷயத்தில் தவிப்போ தத்தளிப்போ இல்லை. உருவ வழிபாட்டில் மக்களுக்கு உள்ள நம்பிக்கையைப் பயன்படுத்திக் கொண்டு நடைபெறும் முறைகேடுகள், பல தெய்வ வழிபாடு மக்களிடையே ஏற்படுத்தும் பேத உணர்வு முதலான பிரத்தியட்ச நிலவரங்கள்தாம் தயானந்தரை உருவ வழிபாட்டுக்கு எதிராக மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கச் செய்திருக்க வேண்டும்.. மனோ ரீதியாக பல தெய்வ நம்பிக்கையிலும் வழிபாட்டிலும் உள்ள பிற நன்மைகளையும் அறிந்துள்ளேன். 

5. சாதாரண எழுத்தாளர்களே தங்கள் எழுத்தில் முன்னுக்குப் பின் முரணாக எதேனும் எழுதிவிடுவோமோ என்று முன்னெச்சரிக்கையுடன் இருக்கையில், மனுவைப் போன்ற பேரறிஞர் முன்னுக்குப் பின் முரணாக விதிமுறைகளை எழுதுவாரா என்று யோசிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இதன் அடிப்படையில்தான் உலகில் உள்ள அறிஞர்கள் பலரும் மனுஸ்மிருதியில் பல இடைச் செருகல்கள் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்திருப்பதாகக் கூறுகிறார்கள். அதில் உள்ள 2685 வாக்குகளில் 1214 வாக்குகளே அசலானவை என ஆய்வாளர்கள் தெளிவாகக் கூறியிருப்பதைப் பதிவு செய்துள்ள ளேன். பெண்கள் விஷயத்தில் மனுவில் முரண்பாடு ஏதும் இல்லை. ‘புத்ரேண துஹிதா ஸமா’ (மகன்-மகள் இருவரும் சரிசமானவர்களே) என்று சொல்லியிருக்கும் மனு, எல்லா நிலையிலும் ஆண்கள் பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற கருத்துப்பட அறிவுறுத்தியிருப்பதைப் பெண்கள் ஆண்களுக்கு அடங்கியிருக்க வேண்டும் என அவர் சொல்வதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. 

6. புரோகிதர்களாக இருந்து எல்லாச் சடங்குகளையும் செய்து வைக்க ஆரிய சமாஜத்தில் ஊழியர்கள் இருப்பதை எனது நூலில் பதிவு செய்துள்ளேன். இவர்கள் மந்திரங்களைச் சொல்வதோடு நின்றுவிடாமல் அவற்றின் பொருளையும் உடனுக்குடன் எடுத்துக் கூறுகிறார்கள். இந்த ஊழியர்கள் ஜாதியின் அடிப்படையில் பிராமணர்கள் அல்லவாயினும் வர்ண அடிப்படையில் பிராமணர்களாக உள்ளனர். எனவே பிராமண வர்ணத்தின் பணியை பிற வர்ணத்தவர் மேற்கொள்ள முன்வராததால் அதில் மட்டும் பிற வர்ண நுழைவு நிகழவில்லை எனக் கருதத் தேவையில்லை. 

7. கும்ப மேளா போன்ற பல லட்சம் மக்கள் கூடுவதால் வரும் கழிவுகளை அகற்ற சுகாதார அதிகாரிகள் ஆறுகளையே பயன்படுத்தி வந்ததால் திருவிழாக்களின் போதெல்லாம் கலாரா பரவுவது இயல்பாக இருந்தது. தயானந்தர் ஆங்கிலேயே அதிகாரிகளைச் சந்தித்துக் கழிவுகளை ஆற்றில் எறியாமல் எரித்துவிடுமாறு அறிவுரை கூறினார். அதனால் எழும் புகைமண்டலத்திற்கு மாற்றாக மூலிகைச் சுள்ளிகளைத் தீயில் இட்டால் காற்று தூய்மையடையும் என்றும் கூறினார். ஆங்கிலேய அதிகாரிகள் எளிதில் புரிந்துகொண்டு சம்மதிக்க வேண்டும் என்பதற்காகவே சமயச் சடங்கு போன்ற வேள்வியை நடத்தலாம் எனக் கூறுவதை அவர் தவிர்த்திருக்கக் கூடும்.. இந்த விளக்கத்தை நான் தெரிவிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால் வேள்வித் தீயின் பயன் குறித்தும் ஓர் அனுமானம் போன்ற தொனி வந்துவிட்டிருக்கலாம். 

8. மனுஸ்மிருதியின் மூலப் பிரதியை எடுத்து வைத்துகொண்டு, வரிக்குவரி ஆராய்ந்து, எவையெல்லாம் அசல், எவையெல்லாம் இடைச் செருகல் என ஆதாரப் பூர்வமாக எழுத விருப்பம்தான். அதில் இறங்கிவிட்டால் பிறகு வேறு எந்த வேலையிலும்  ஈடுபட முடியாது. நானோ, இன்றளவும் முழுக்க முழுக்க எழுத்தின் மூலம் வரும் வருமானத்தையே நம்பியிருப்பவன். ஆகையால் யாராவது குறைந்த பட்சம் ஆறுமாத கால அவகாசம் தந்து ஸ்பான்ஸர் செய்தாலன்றி அந்த வேலையைக் கையில் எடுக்க இயலாது! நீங்கள் என்னிடம் மேலும் எதிர்பார்ப்பதாக எழுதியுள்ளமையால் இதனைக் குறிப்பிடுகிறேன்.

9. பண்டிதர்களும் புரோகிதர்களும் தங்கள் பிழைப்பைக் காத்துக் கொள்வதற்காக தயானந்தரைக் கொன்றுபோட முகமதிய நர்த்தகியையும் முகமதிய வைத்தியரையும் பயன்படுத்திக் கொண்டதை எனது நூலில் தெளிவாகவே பதிவு செய்துள்ளேன். எனவே முழுப்பழியையும் முகமதியர்மீது நான் சுமத்திவிடவில்லை!

இவ்வளவு விரிவான விளக்கம் தரக் காரணம், குறைகளுக்கு சமாதானம் சொல்லவேண்டும் என்கிற கவலை அல்ல. உங்களைப் போல் இந்த விஷயத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு முடிந்தவரை மனநிறைவளிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தனையும் எழுதலானேன்.

அன்புடன்,

மலர்மன்னன் 
ஜூலை 05, 2010 

 

Share

கல்கி இதழ் மாற்றமும், பிள்ளையார் இடப்பெயர்ச்சியும்

கல்கியின் இதழ் பார்த்தேன். வடிவமைப்பு மாறி இருக்கிறது. சட்டென அது கல்கி என்றே தோன்றவில்லை. கல்கிதான் இது என்று நம்பிக் கையில் எடுக்கக்கூட மனம் வரவில்லை. 1998ல் கல்லூரி முடிந்து வேலைக்குச் சேர்ந்தபோது நான் முதலில் வாங்கியது கல்கி இதழையே. காரணம் சுஜாதா. அப்போது கல்கியில் வரிசையாக சில சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தார். தொடர்ந்து வாசித்தேன். இடையில் துபாய் செல்லவேண்டி வந்தது. அங்கே சென்றது கல்கி வாசிப்பதை நிறுத்தினேன். அவ்வப்போது வாசித்ததும் உண்டு. இங்கே வந்தபின்பும் அவ்வப்போது வாசிப்பேன். இப்போது கடந்த ஒரு வருடமாக மீண்டும் வாசிக்கிறேன். கல்கியில் வரும் அனைத்தையும் வாசிக்கிறேன் என்று சொல்லிவிடமுடியாது. எனக்குத் தேவையானவற்றை மட்டுமே வாசிப்பேன். எப்படியாவது பாஜகவைக் குறை சொல்லி தனது இந்துத்துவ எதிர்ப்பு முத்திரையை வலிந்து காண்பித்துக்கொள்ளும் அசட்டுத் தலையங்கங்கள் 1998லேயே எனக்குப் பிடிக்காது. கல்கியெல்லாம் அப்பவே அப்படீன்னாலும் நாங்களும் அப்பவே அப்படித்தான். இப்போதும் அதே அசட்டுத்தனம் தொடர்கிறதுதான் என்றாலும், சில கேள்வி பதில்களில் கொஞ்சம் தைரியத்தைப் பார்க்க முடிந்தது.

 

புதிய வடிவமைப்பில் பெரிய அதிர்ச்சி தலையங்கத்தில் கல்கியின் பிள்ளையார் காணாமல் போனதுதான். பிள்ளையாரை நீக்க ஒரே காரணம் அதன் முற்போக்குவாதமாகவே இருக்கும் என்று மட்டுமே யோசிக்கமுடிகிறது. இந்த ஜல்லியைவிட்டு வேறு காரணங்கள் இருக்குமானால் அதை கல்கி அதன் வாசகர்களுக்குச் சொல்வது நல்லது. சொல்லவேண்டியது கல்கியின் கடமை அது இது என்றெல்லாம் அளக்க விரும்பவில்லை. கல்கி விளக்கம் தராவிட்டால், அதை செக்யூலர் ஜல்லி என்று எடுத்துக்கொள்ளவேண்டியதுதான் என்று மட்டும் நினைக்கிறேன். இப்படி நினைத்துக்கொண்டே, ஆனால் காஞ்சி பெரியவரின் தெய்வ வாக்கை விட்டிருக்கமாட்டார்களே என்று யோசித்துக்கொண்டே தேடிப் பார்த்தால், அங்கே காஞ்சி பெரியவரின் தெய்வ வாக்கு, தலையங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட பிள்ளையாருடன் உள்ளது! பிள்ளையாருக்கு ஏன் இந்த இடப்பெயர்ச்சி எனத் தெரியவில்லை.

ஆனந்தவிகடனின் இதழ் வடிவம் மாற்றம் பெற்ற போதும் எனக்குப் பிடிக்கவில்லை. ஒருவேளை இப்படி இதழ் வடிவம் மாற்றம் பெறுவதை ரசிக்கும், எடை போடும் ஆற்றல் எனக்கு இல்லாமல் இருக்கலாம். தெரியவில்லை. ஆனால் நிச்சயம் கல்கியின் இதழ்வடிவ மாற்றம் ரசிக்கும்படியாக இல்லை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லமுடியும். கழுதை போலவும் இல்லாமல் பழக்கப்பட்ட பழைய குதிரை போலவும் இல்லாமல் ரெண்டுக்கெட்டானாக உள்ளது. எழுத்துருக்களையெல்லாம் மாற்றியிருப்பார்கள் போல. ஒன்றுமே ஒட்டவில்லை. படிக்கவும் ஓடவில்லை. நீண்ட ஜடையுடன் தழைய தழைய புடைவை கட்டிக்கொண்டு மல்லிகை மணக்க கட்டிக்கொள்ளும் மனைவி, திடீரென்று குட்டைப் பாவாடையில் கிராப் வெட்டிக்கொண்டு கட்டிக்கொண்டால் என்ன தோன்றும்? சிதம்பரத்தில் அப்பாசாமி மாதிரி ஒரே ஒரு நைட்டுக்குன்னா ஓகே, எல்லா நாளும் அப்படித்தான்னா? கிளர்ச்சி அடைவதா அதிர்ச்சி அடைவதா என்ற அப்பெருங்குழப்பத்தில் இருக்கிறேன். :))

கல்கியில் அம்ஷன் குமார் உலக சினிமா பற்றி தொடர் எழுதுகிறார் போல. இந்த வார கல்கியில் அவரது மூன்றாம் வாரப் படைப்பைப் பார்த்தேன். புத்தகக் கண்காட்சி சமயத்தில் கல்கியை வாசிக்காமல் விட்டதால் ஒரு தொடர்ச்சி இல்லாமல் போய்விட்டது. அவற்றைத் தேடிப் படிக்கவேண்டும். முதல் இரண்டு அத்தியாயங்களில் என்ன படங்களைப் பற்றிப் பேசினார் என்று பார்க்கவேண்டும். இந்த வாரம் அம்ஷன் குமார் அறிமுகப்படுத்தியிருக்கும் படம் – செபரேஷன். ஆஸ்கர் விருது பெற்ற ஒரே திரைப்படம் என்ற தலைப்பில் அக்கட்டுரை வந்திருந்தது. கடல் திரைப்படம் பற்றிய பாராட்டுப்பத்திரம் உள்ளது. வழக்கம்போல் ஓ போடுகிறார் ஞாநி. படித்துப் பாருங்கள். 🙂

Share

உயிர்க்கத் துலங்கும் உலகு

யாருமே என்னை அழைக்கவில்லை
என் குரலும் யாருக்கும் கேட்கவுமில்லை
மழையோ வெயிலோ காற்றோ பனியோ
சத்தமோ நிசப்தமோ எதுவுமே இல்லை
சூன்யமும் இல்லை
ஆனாலும் எல்லாமும் நிறைந்திருந்தது எப்படி
மனதின் கண்கள் திறக்க
முகத்தின் கண்கள் மறைய
அகத்தின் செவி கேட்க
புறச்செவி ஒடுங்க
உள்ளே உள்ளே இன்னும் உள்ளே
மெல்லப் பரவுகிறது
அன்று பிறந்த மாசற்ற சிசு ஒன்றின் வாசம்
உயிர்க்கத் துலங்கும் உலகு.
 

Share