கொங்குதேர் வாழ்க்கை – நாஞ்சில் நாடன்
டாய்லட் (ஹிந்தி)
சவசவ என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். காது வலிக்கிறது. டாய்லட் இல்லாத வீடும் வேண்டாம், புருஷனும் வேண்டாம் என்று கோர்ட்டுக்குப் போகிறாள் ஒரு பெண். அரசு அலறியடித்துக்கொண்டு டாய்லட் கட்டித் தருகிறது. டாய்லட் கட்டாததற்கு அரசு காரணமல்ல, மக்களே காரணம் என்று சில காட்சிகளும் அரசும் காரணம் என்று சில வசனங்களுமென எல்லாப் பக்கமும் கர்ச்சீஃப் போட்டு வைத்துவிட்டார்கள். தன் வீட்டில் டாய்லட் வரக்கூடாது என்று உறுதியாக இருக்கிறார் ஒரு பண்டிட். (பிராமணர்களை இழிவுபடுத்துகிறதுன்னு கிளம்பிடாதீங்கய்யா…) கடைசியில் தன் பிடிவாதத்தைக் கைவிட்டு எப்படி டாய்லட் போகிறார் என்பதே இறுதிக்காட்சி. 🙂
கழிப்பறை இல்லாத வீடுகள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் தன் வீட்டில் கழிப்பறையே வரக்கூடாது என்று சொல்லும் நபர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதெல்லாம் கப்ஸா. ஒரு ஊரே அறியாமையில் டாய்லட் இல்லாமல் இருக்கிறது என்பதெல்லாம் நம்பவே முடியாத சங்கதிகள்.
அனிதா நர்ரே என்பவரின் உண்மைக் கதையை மையமாகக் கொண்ட படம் என்று இறுதியில் காண்பிக்கிறார்கள். இந்த நர்ரே என்பது பிராமணர்களைக் குறிக்கும் ஜாதியா? திரைப்படத்தில் பிராமணர்களின் ஜாதியாகக் காட்டி இருக்கிறார்கள் என்பதால் கேட்கிறேன். திரைக்கதையில் இப்படிக் காட்டினால்தான் படத்துக்கு ஒரு தர்க்கம் வரும் என்பதால் காட்டி இருப்பார்கள் என்று யூகிக்கிறேன். இல்லையென்றால் ஏன் ஒருவர் தன் வீட்டுக்கு டாய்லெட் வேண்டாம் என்று சொல்லவேண்டும்?
படம் நல்ல வசூல் என்கிறது கூகிள். தமிழில் வந்தால் ஊத்தியிருக்கும்.
ஒரு பக்கப் புலம்பல்
இது ஒரு பதிப்பாளரின் (பதிப்பகத்தில் பொறுப்பில் இருப்பவரின்) புலம்பல் மட்டுமே. எனவே படிக்காமல் கடந்துவிடுங்கள்.
தெற்கிலிருந்து ஒரு சூரியன் புத்தகத்துக்கு இன்று ஒரு பக்கம் விளம்பரம் வந்துள்ளது. இதை விளம்பரம் என்பதா என்றெல்லாம் கேட்காதீர்கள். உண்மையில் விளம்பரமே நோக்கம்.
ஒரு பதிப்பகத்துக்கு, தமிழ் தி ஹிந்து, தினமலர், தினமணி போன்ற ஒரு பத்திரிகையில் ஒரு புத்தகத்துக்கு முழுப்பக்க விளம்பரம் தரவேண்டும் என்பது நிச்சயம் கனவாகவே இருக்கும். இந்த விளம்பரத்துக்கான விலையை ஒரு பதிப்பகத்தால்கற்பனை கூடச் செய்து பார்க்கமுடியாது.
ஒரு பக்க விளம்பரம் என்றல்ல, அரைப்பக்க கால்பக்க விளம்பரச் செலவைக்கூட, முன்னணிப் பதிப்பகங்களால்கூடச் செய்யமுடியாது.
அதுவே ஒரு பத்திரிகை அதுவும் முன்னணிப் பத்திரிகை ஒரு பதிப்பகத்தின் கையில் இருந்தால் ‘நின்னு ஆடலாம்.’ ஆனால் நிலைமை எப்படி இருக்கிறதென்றால் பெரிய பதிப்பகங்கள் கைவசம் பத்திரிகை இல்லை. பத்திரிகை கைவசம் இருந்தாலோ பெரிய பதிப்பகமோ அல்லது புத்தகங்களை எப்படி மக்களிடம் கொண்டு செல்வது என்ற திட்டமோ அதைச் செயல்படுத்தும் தொலைநோக்கோ இல்லை. கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கதைதான். என்றாவது இந்த இரண்டும் ஒன்றாகும்போது அப்பதிப்பகம் உச்சத்துக்குச் செல்லும்.
கிழக்கு பதிப்பகம் முன்னணி பத்திரிகைகள் அனைத்திலும் ஒரு புத்தகத்தை வாரத்துக்கு ஒன்றென நான்கு வாரங்களுக்கு விளம்பரம் கொடுத்தால் அப்புத்தகத்தின் விற்பனை நிச்சயம் பல மடங்கு அதிகரிக்கும். ஆனால் லாபம் என்று எதுவும் இருக்காது என்பதுமட்டுமல்ல, பெரிய அளவில் நஷ்டம் இருக்கும். அதனால்தான் கிழக்கு போன்ற பெரிய பதிப்பகங்கள்கூட தினசரிகளில் விளம்பரம் கொடுக்க முடியாமல் திணறுகிறார்கள்.
எதாவது ஒரு பத்திரிகை புத்தகங்களின் தேவையைக் கணக்கில் கொண்டு புத்தக விளம்பரங்களை குறைந்த மிகக் குறைந்த விலையில் வெளியிட்டால்தான் இதுவெல்லாம் சாத்தியம். ஆனால் ஒரு பத்திரிகை நடத்த ஆகும் செலவோடு அவர்கள் ஒப்பிடும்போது அவர்களால் இது இயலாத ஒன்றாகவே இருக்கும்.
புத்தகங்கள் மக்களைச் சென்றடைய தினசரிகள் ஒரு வழி. இன்னொரு வழி, தொலைக்காட்சி ஊடகங்கள். தினசரிகளையாவது நினைத்துப் பார்த்து ஏங்கலாம். தொலைக்காட்சி ஊடகங்கள் – வாய்ப்பே இல்லை.
எனவே ஃபேஸ்புக் இடுகைகளைப் பார்த்து புத்தகங்களை வாங்கி மகிழுங்கள்.
கிழக்கு பதிப்பகத்தின் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க… வாங்க.
பின்குறிப்பு: சில ஆண்டுகள் முன்பு தினமலர் சில பதிப்பகங்களுக்கு இலவச விளம்பரம் தந்தது. நண்பர்கள் என்ற அடிப்படையில்தான் இவ்விளம்பரங்கள் செய்யப்பட்டன. இப்படிச் செய்வதற்கும் ஒரு மனம் வேண்டும். தினமலர் கிருஷ்ணமூர்த்தி அவர்களை இதற்காகப் பாராட்டவேண்டியது கடமை. இப்போதும் அவரைப் பார்த்துக் கோரிக்கை வைத்தால், அவருக்கு அந்தப் புத்தகமோ வெளியிடுபவர்களோ பிடித்திருந்தால், அவரது கொள்கைகளுக்கு எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் இருந்தால் இந்த உதவியைச் செய்வார் என்றே நினைக்கிறேன். அவரைச் சந்திக்க இயலும் என்கிறவர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மற்ற பத்திரிகைகளும் அவர்களுக்குப் பிடித்த புத்தகங்களுக்கு இது மாதிரி விளம்பரம் கொடுத்து உதவுங்கள்.
நானு அவனல்லா, அவளு (கன்னடம்)
நானு அவனல்லா, அவளு (கன்னடம்)
மரத்தடி யாஹூ குழுமத்தில் (2002வாக்கில் இருக்கலாம்) ஒரு கவிதைப் போட்டி நடைபெற்றது. ஒரு கவிதை அனைவரையும் திடுக்கிட வைத்தது. அனைவரையும் அக்கவிதையைப் பற்றிப் பேச வைத்தது. ஒரு கவிதையை யாரோ எழுதுவதற்கும், பாதிக்கப்பட்ட ஒருவர் எழுதுவதற்கும் உள்ள வேறுபாட்டை மிகத் துல்லியமாகக் காட்டியது அக்கவிதை. கவித்துவம் என்ற தூய அளவுகோல் கூட உணர்ச்சிக் குவியலின் நேர்மையின் முன்பு தகர்ந்துபோகும் என்பதற்கு அக்கவிதை ஒரு உதாரணம். அக்கவிதையை எழுதிய லிவிங் ஸ்மைல் வித்யா ஒரே நாளில் மரத்தடி யாஹூ குழுமத்தில் பிரபலமானார்.
2005/06 வாக்கில் சென்னை புத்தகக் கண்காட்சியில் ஒரு புத்தகம் அனைவரையும் பேச வைத்தது. புத்தகக் கண்காட்சியில் மட்டும் ஆயிரம் புத்தகங்களுக்கு அருகில் விற்ற முதல் புத்தகம் அதுவாக இருக்கலாம் என நினைக்கிறேன். கிழக்கு பதிப்பகம் அப்போதுதான் தோன்றியிருந்த புதிய பதிப்பகம். அந்தப் புத்தகம், நான் (சரவணன்) வித்யா.
2015ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது விஜய் என்ற நடிகருக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டின் விஜய்யாக இருக்க வாய்ப்பில்லை என்று உறுதியாகத் தெரிந்ததாலேயே யார் இந்த விஜய் என்று பார்க்க ஆர்வம் வந்தது. படத்தின் பெயர், நானு அவனல்ல அவளு என்பது கூடுதல் ஆர்வத்தைக் கொண்டுவந்தது. பின்னர்தான் தெரிந்தது, இப்படம், கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட லிவிங் ஸ்மைல் வித்யாவின் நான் வித்யா புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்று. இப்படத்தைப் பார்க்க நினைத்தேன்.
தமிழ்நாட்டில் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களைப் பார்த்துவிடலாம். கன்னடப் படங்களைப் பார்ப்பது கடினம். சிடியும் கிடைக்காது. (இன்று வரை ஒரு மொட்ட்யின கதா பார்க்கக் கிடைக்கவில்லை.) பெங்களூருவில் இருக்கும் ஒருவர் மூலம் நானு அவனல்லா அவளு கிடைக்குமா என முயன்றேன். கிடைக்கவில்லை அல்லது விலை அதிகம் என்று என்னவோ காரணங்கள்.
நேற்று தற்செயலாக யூ டியூப்பில் தேடினேன். இப்படம் சிக்கியது. உடனே பார்த்தேன். கொஞ்சம் மோசமான் ப்ரிண்ட் தான், ஆனாலும் வேறு வழியில்லை.
படத்தை ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால், அட்டகாசம். கண்டிப்பாகப் பாருங்கள். லிவிங் ஸ்மைல் வித்யாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, மிகச் சிறப்பாகப் படத்தை எடுத்திருக்கிறார்கள். படத்தில் நடித்த நடிகர்கள் ஒவ்வொருமே அற்புதம்தான். அதிலும் திருநங்கையாக வரும் விஜய் என்ற நடிகரின் நடிப்பு, வாய்ப்பே இல்லை. படத்தின் இயக்குநரின் தெளிவு, இப்படத்தை உணர்ச்சிகரக் குவியலாக மாற்றாமல் அப்படியே எடுத்ததுதான். மிகப் பொறுமையாக நிதானமாகச் செல்லும் திரைக்கதை. திருநங்கைகளின் உலகம் விரியும் காட்சிகள் எல்லாம் பொக்கிஷம். மீண்டும் மீண்டும் ஒலிக்கும் இசையும் பாடலும் படத்தோடு அப்படியே பொருந்திப் போகிறது.
இது போன்ற மாற்றுத் திரைப்படங்களுக்கு தொடக்கம் முடிவு என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. இப்படத்தின் முடிவு ஒரு மெல்லிய கீற்று தென்படுவதாகக் காட்டப்படுகிறது. மகிழ்ச்சி. யாரையும் குற்றம் சொல்லாமல் யாரையும் திட்டித் தீர்க்காமல் மிகப் பொறுமையாக சமூகத்தை எதிர்கொள்கிறது இத்திரைப்படம். மனிதர்கள் இயல்பிலேயே கெட்டவர்கள் அல்ல. அதேசமயம் இதே மனிதர்களே மிகக் கோரமாகவும் திகழ்கிறார்கள். இந்த முரணுக்கிடையில் மாட்டிக்கொண்டிருக்கும் ஒரு சமூகத்தின் திரைப்படம் இது. நிச்சயம் பாருங்கள்.
நடிகர் விஜய்க்கு விருது கொடுத்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. சரியாக எப்படி விருது கொடுத்தார்கள் என்று வேண்டுமானால் ஆச்சரியப்படலாம். பொதுவாக திரைப்படங்களில் திருநங்கைகளை ஆண்களின் ஆபாச நகல்களாகவே காட்டுவார்கள். தமிழ்த் திரைப்படங்களில் இதுகுறித்த விழிப்புணர்வு (பாம்பே, நான் கடவுள், அருவி) மெல்ல வளர்ந்து வருகிறது என்றாலும் முழுமையான திருநங்கைப் படம் என்று ஒன்று வரவில்லை என்றே நினைக்கிறேன். (அல்லது சந்தோஷ் சிவனின் படம் ஒன்று வந்திருக்கிறதா? நவரசா? இதை நான் இன்னும் பார்க்கவில்லை.) உண்மையில் இப்படம் தமிழில் வந்திருக்கவேண்டும். கன்னடத்தில் வந்தது ஆச்சரியம்.
படத்தைப் பார்க்க விரும்புகிறவர்கள், நடிகர் விஜய்யின் தற்போதைய புகைப்படத்தைப் பார்த்துவிட்டுப் படத்தைப் பாருங்கள். எந்த அளவுக்கு மாறி இருக்கிறார் என்று தெரியும். குடும்பத்துடன் பார்க்கலாம்.
யூ ட்யூப் லிங்க்: https://www.youtube.com/watch?v=bZSy3SNy1kA&t=213s
பின்குறிப்பு: லிவிங் ஸ்மைல் வித்யாவின் அரசியல் நிலைப்பாடு, கொள்கைத் தேர்வு எல்லாம் எனக்கும் தெரியும். எனவே அதை முன்வைத்து இப்பதிவை அணுகவேண்டாம்.
மெர்ஸல் – விஜய்யின் அரசியல் ஆசை
Mersal Movie
மெர்ஸல் – படம் எப்படி எனத் தெரிந்துகொண்டே முதல்நாளே சென்றுவிட்டு இதெல்லாம் தேவையா என்ற சீனியர் சிட்டிசன்கள் விலகி நிற்கவும்.
விஜய் அழகாக இருக்கிறார். அவ்வளவுதான். அழகாக மட்டும் இருக்கிறார். நடிக்க வரவில்லை. ஏனென்றால் நடிக்க ஒன்றுமில்லை. நன்றாக டான்ஸ் ஆடி அழகாக இருந்தும் அஜீத்தின் படங்கள் போன்ற மொக்கை ஒன்றைத்தான் தரமுடியும் என்றால் அஜீத்தைப் போலவே சித்தப்பா தோற்றத்தில் இருக்கலாம்.
படம் முழுக்க ‘புதுமைகள்.’ நயவஞ்சகம், ஏமாற்றம், மூன்று வேடங்கள் என ஹாலிவுட்டும் இதுவரை காணாத புதுமைகள். முக்கியமான காட்சிகளில் கூட மாயம் செய்து தப்பிக்கும் புதுமையெல்லாம் புதுமைக்கும் புதுமை. உச்சம். இயக்குநரின் அறிவுத் திறமைக்கும் கதை நேர்மைக்கும் இவையெல்லாம் சான்றுகள். குழந்தைச் சாவு, அம்மாவின் தற்கொலை, மருத்துவத் துறையின் சீரழிவு, மனைவியின் கொலை, அப்பா விஜய்யின் கொலை புதுசு புதுசாக யோசித்துச் செதுக்கி இருக்கிறார்கள்.
கொஞ்சமாவது தென்றல் வீசிய காட்சிகள், காஜலும் சமந்தாவும் வரும் காட்சிகள். மற்றபடி ஒரு காட்சிகூட விறுவிறுப்புடன் அமைந்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்திருக்கிறார் இயக்குநர். சாதாரண சாதனை அல்ல இது.
வடிவேலு ஐயோ பாவம். தன்னம்பிக்கை குன்றி என்னவோ விதூஷனங்கள் செய்து பார்த்துத் தோற்கிறார்.
நித்யா மேனன் சீக்கிரம் செத்தால் பரவாயில்லை என்ற அளவில் நடித்தார். முதல் படத்திலேயே நன்றாக நடித்தால் அது ஓவர் ஆக்டிங்கில்தான் முடியும் என்று முன்பே தெரிந்ததுதான். சீக்கிரம் விஜய்க்கு அம்மாவாக நடிப்பார் என்று நினைக்கிறேன். அப்போதும் ஓவர் ஆக்ட் செய்வார்.
இங்க இருக்கிறது மாறன், அங்க இருக்கிறதுதான் வெற்றி என்ற காட்சியும், டாக்டர்னா அடிக்கத் தெரியாதா என்ற காட்சியும் ‘புல்லரிக்க’ வைக்கின்றன. யாரும் இப்படி ஒரு ட்விஸ்ட்டை எதிர்பார்க்கமாட்டார்கள் என்று இயக்குநர் நம்பியது, இயக்குநர் எத்தனை குழந்தை உள்ளம் படைத்தவர் என்பதைக் காண்பிக்கிறது.
மருத்துவத் துறையின் மீதிருக்கும் மக்களின் பயத்தை ஒட்டுமொத்தமாக மருத்துவத் துறையே மோசம் என்று காட்டி இருக்கிறார்கள். இந்த வகையில் படு நெகடிவ்வான படம் இது. பூசி மெழுக ஒரு வசனம் வேறு உண்டு.
எப்போதாவது மட்டுமே இசை அமைப்பதால் ஹிட்டை மட்டுமே தரும் ஏ.ஆர்.ரஹ்மான் பரிதாபம். இரண்டு டப்பாங்கூத்துகளும் மொக்கை என்றாலும் இரண்டு காதல் பாடல்களும் இனிமைதான். அதிலும் சம்ந்தாவுடனான பாடலை பாதிதான் வைத்திருக்கிறார்கள். படத்தில் இந்த நல்ல பாடல் மட்டும்தான் போரடிக்கிறது என்று எப்படி கண்டுபிடித்து அட்லீ அதை வெட்டினார் என்பது இந்த நிமிடம் வரை புரியவில்லை.
திரைப்படமே கொடுமை என்றால், ஃப்ளாஷ் பேக் காட்சியாவது காப்பாற்றும் என்று நம்பி இருந்தேன். ஃப்ளாஷ்பேக் இன்னுமொரு கொடுமை. அதில் விஜய்க்கு நடிக்கவே வரவில்லை. அட்லீக்கு கிராமத்து வாசனையையெல்லாம் படத்தில் வைத்துப் பார்க்க நேர்ந்தது நாம் செய்த பாவபலன்.
என்னவோ ஸ்டைலாக கும்பிடுவதாக நினைத்துக்கொண்டு கையை ஒரு பக்கம் இழுத்துக்கொண்டு விஜய் கும்பிடுவது எல்லாம் காமெடியாக இருக்கிறது. அரசியல் ஆசை உள்ளே இருந்தால் திறமையான நடிகருக்குக் கூட இப்படித்தான் நிகழும் என்பதற்கு விஜய் ஒரு உதாரணம். நல்ல நடிகர் இப்படிப் படுகுழியில் விழுவதை, கொஞ்சம் சுதாரித்துக்கொண்டால் தப்பிக்கலாம். இல்லையென்றால், மோடி எதிர்ப்பு – தமிழன் குரல் என்று எங்கேயாவது கொண்டு போய்விடும் அரசியல் உலகம்.
அரசியல் நுழைவுக்கான ஆசையை வெளிப்படையாகவே வெளிப்படுத்தி இருக்கிறார் விஜய். அது அவரது சுதந்திரம், உரிமை. தனக்கு தளபதி என்று பதவி உயர்வு அளித்துக்கொண்டிருக்கிறார். ஏற்கெனவே நிஜ அரசியலில் இங்கே இன்னொரு தளபதி தேவுடு காத்துக் கிடக்கிறார். ஜெயலலிதா இருந்த வரை, தன் படம் வருமா வராதா என்று காத்துக் கிடந்த விஜய், ஸ்டாலினிடமும் அப்படிக் கிடக்கவேண்டும் போல. ஜெயலலிதா இருந்தவரை வால் சுருட்டிக் கிடந்த விஜய் இந்தப் படத்தில் மெல்ல அரசியல் வாலை நீட்டி இருக்கிறார். ஆனால் சாமர்த்தியமாக மத்திய அரசின் பக்கம் (ஜி எஸ் டி வந்தே ரெண்டு மாசம்தானய்யா ஆவுது?!) போய்விட்டார். தன்னை எம்ஜியாருடன் ஒப்பிட்டு வசனங்கள் வருமாறு பார்த்துக்கொண்டிருக்கிறார். தன்னை இன்னொரு எம்ஜியார் என்று முன்வைக்கிறார், வெளிப்படையாகவே. திறமை உள்ள ஒரு நடிகரின் சீரழிவு இப்படத்தில் தொடங்கவேண்டும் என்று எழுதப்பட்டிருந்தால் அதை யாராலும் மாற்றமுடியாது. இப்படி அரசியல் ஆசையுடன் படங்கள் நடித்துக்கொண்டிருந்தால் பலரின் (நான் உட்பட) குட்புக்கில் இடம்பெற்றிருக்கும் விஜய்யின் இடம் பறிபோகும். இதை அவர் உணர்வது அவருக்கு நல்லது.
பிகு: மெர்ஸல் படத்தில் உள்ள உப்புப் பெறாத ஜி எஸ் டி வசனத்தை ஹிந்து இயக்கங்கள் கடந்து செல்வது நல்லது. படத்தை ஹிட்டாக்கி வைக்காதீர்கள்.
வொய் ப்ளட், ஸேம் ப்ளட்
“இன்னைக்காவது பாட ஆள் கிடைச்சாங்களா?”
“இண்டஸ்ட்ரியே அலறுது சார். உங்க பாட்டை பாடறதுன்னா சும்மாவா?”
“ஐ டோண்ட் லைக் திஸ் மஸ்கா அண்ட் ஆல்… ஆள் கிடைச்சாச்சா இல்லியா? இல்ல யூ நீட் மி டூ சிங் திஸ் டூ?”
“இன்னைக்கு ஒருத்தன் வர்றேன்றுக்கான் சார். சீனியர் சிங்கர்ஸ்ல ஜெயிச்ச பையனாம், பாவம்.”
“என்ன பாவம்?”
“ஒண்ணுமில்ல சார். இதோ பையன் வந்துட்டான்.”
“கெட் ரெடி ஃபாஸ்ட். போய் ரெடி பண்ணிட்டு கூப்பிடுங்க.”
—
“சார், ரொம்ப திணர்றான் பையன்.”
“என்னய்யா இது. தமிழ்நாட்டுல என் பாட்டை பாட ஆள் இல்லியா?”
“ஆனா இவன் பாடிருவான் போல இருக்கு…”
“இஸிட்?”
“ஆமா, ரொம்ப ட்ரை பண்றான். ரெண்டு தடவை வாந்திகூட வந்திடுச்சு..”
“வாட், வாந்தி வந்திடுச்சா? யூ மஸ்ட் கீப் மீ இன்ஃபார்ம்ட் திஸ்…”
“இல்ல சார், இப்பதான் சார் வாயலெடுத்தான், அதான் ஓடி வந்தேன்.”
“வா பையனைப் பார்க்கலாம்.”
—
“வாந்தி வந்திடுச்சாமே?”
“ஆமா சார், ஸாரி ஸார்.”
“நோ நோ. இட்ஸ் ரியலி குட். பெர்ஃபெக்ட் ரூட் யூ நோ… ஜஸ்ட் ட்ராவல்… டொண்ட் கிவப்…”
“சார்…”
“யெஸ், என் பாட்டு பாடறது சும்மா இல்லை… அப்படியே அடி வயித்துல இருந்து எக்கிப் பாடணும்…”
“ஆமா சார், ஒரு தடவை வயித்தை பிடிச்சிக்கிச்சு.”
“தட்ஸ் தி ஃபர்ஸ்ட் ஸெட்ப் யூ நோ. பிடிச்சிக்கிட்டு இருக்கும்போது வலியோட அப்படியே சத்தமா உரக்க ரொம்ப சத்தமா பாடினா…”
“ரத்தம் வந்திடும்…”
“எக்ஸாட்லி. யூ ப்ரேவோ மேன்.”
“ரெண்டு வாட்டி வாந்தி வந்திருக்கு சார், இன்னும் ரத்தம் வரலை சார். ஆனா வந்திரும் சார், எனக்கு நம்பிக்கை இருக்கு”
“டோண்ட் கிவ் அப் மேன். தட்ஸ் பேஸ்ஸன். சீக்ரெட் ஆஃப் சக்ஸஸ். கீப் ராக்கிங். ஜஸ்ட் லௌட்லி. டோண்ட் கிவ் அப். ஹேவ் கர்ச்சீஃப்?”
“நாலஞ்சு கொடுத்திருக்காங்க சார்…”
“கைல வெச்சிக்கோ. மைக் என்ன ஆனாலும் பிரச்சினை இல்லை. குரல் குரல் குரல் அதுல மட்டுமே கவனம். சுதி சேரலை அது இதுன்னு நோ இமாஜினேஷன். எல்லாம் ஹம்பக். பித்தலாட்டாம். ஜஸ்ட் தின்க் அவுட் ஆஃப் தி பாக்ஸ். கத்து. எனர்ஜி இஸ் தி சீக்ரெட்…”
“ஓகே சார்…”
“எங்க கத்து…”
“ஓகேவா சார்…”
“இல்ல. ஐ நீட் நீட் ஸம்வாட் மோர்… யூ ஸி, ப்ளட் வரலை. ஸோ சம்திங் மிஸ்ஸிங்.”
“இப்பவும் வாந்தி வருது சார்…”
“லுக்கிங் கிரேட். பட் என்னவோ ஒண்ணு… ஐ டொண்ட் நோ… தடுக்குது… ஸீ, ப்ளட் அது வரணும்…”
“இன்னொரு தடவை பாடினா வந்திடும் சார்…”
“அப்ரிஷியேடட். அகைன், கமான்…”
“ஆனா சார்…”
“நோ செகண்ட் தின்கிங் ப்ளீஸ். ஐ டோண்ட் லைக் இட். நெவர் எவர் கிவப்…”
“இல்ல சார், இந்த முதல் பாட்டே கடைசி பாட்டாயிடுமோம்னு…”
“ஸோ வாட் மேன்… ஒரே பாட்டுல வெர்ல்ட் ஃபேமஸ் யூ நோ… வாட் எல்ஸ் யூ ஆர் லுக்கிங் ஃபார்?”
“ஓ…”
“யெஸ் மேன். இந்தப் பாட்டு பாட ஆள் கிடைக்காம இல்லை. நானே பாடுவேன். ஃபக்கிங் சிம்பிள் சாங் யூ நோ. பாடவா பாடவா பாக்கிரியா? ஒன்றரை டன் வெயிட் வாய்ஸ்… யூ வாண்ட் டு ஹியர்?”
“இல்ல சார்…”
“ஓ மை காட். எவ்ரிதிங் ஐ நீட் ஃப்ரெஷ். தினமும் ஃப்ரெஷ் வாய்ஸுக்காக ஐ புட் மி இன் ஃபையர் யூ நோ. ஒவ்வொரு பாட்டும் ஒரு விதம்… யூ ஃபர்ஸ்ட் அண்டர்ஸ்டாண்ட் தட்…”
“ஓகே சார்…”
“ஓகே. கமான். இட்ஸ் வெரி ஈஸி. ஜஸ்ட் ஒன் டைம் ப்ளட். அடி வயித்துல இருந்து உன் குடலெல்லாம் பிச்சி வாய் வழியா வெளிய வர்றதா நினைச்சுட்டு கத்து மேன். கமான். கெட் ரெடி. இட்ஸ் ரியல்லி அ ஃபண்டாஸ்டிக் மெலோடி. இதுக்கே திணரியேப்பா…”
“ஐம் ரெடி ஸார்…”
“தட்ஸ் தி ஸ்பிரிட். ஆல் ரெடி. ஸ்டார்ட்… எங்க பாடு… வேலையில்லாஆஆஆஆ…. பட்ட தாரீஈஈஈஈஈஈ….”
Byju’s learning app
அபிராம் 7வது படிக்கிறான். யூ ட்யூப் மற்றும் ஆப் மூலம் என்ன ஆக்கபூர்வமாக அவனுக்குச் செய்யலாம் என யோசித்து சில ஆப்களை தரவிறக்கினேன். பல ஆப்களைத் தேடினால் நிச்சயம் பலனுள்ளது கிடைக்கும். அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்க வாய்ப்பில்லை. இது குறித்து இன்னும் தேடலில் இருக்கிறேன்.
இந்த சமயத்தில் தினமலர் தீபாவளி மலரில் (ஐயோ வாங்கவில்லையே என்று யாரும் நினைக்கவேண்டாம், வாங்கும் அளவுக்கு இதில் ஒன்றுமில்லை!) ‘நேசமுடன்’ வெங்கடேஷ் பைஜூ ஆப்பினருடன் நடத்திய நேர்காணல் கண்ணில் பட்டது. இம்பரஸ் ஆகி உடனே தரவிறக்கினேன். இன்னும் முழுமையாக அதை எப்படிப் பயன்படுத்துவது என்று நான் பார்க்கவில்லை. அந்த ஆர்வம் இல்லாததற்குக் காரணம், அந்த ஆப்பின் கட்டணங்கள். 7ம் வகுப்புப் பாடங்களுக்கு 23,000 ரூபாய் என்று கண்ணில் பட்டதும் கொஞ்சம் ஷாக் அடித்தது போன்ற உணர்வு. ஒரு வருடப் பள்ளிச் செலவே இதைவிடக் கொஞ்சம் அதிகம் இருக்கும். பள்ளிக்கான கட்டணங்களே அதீதம் என்று சொல்லிக்கொண்டிருக்கதையில் ஒரு ஆப்புக்கான இச்செலவை என்னால் ஏற்கவோ ஜீரணிக்கவோ முடியாது என்பதால் ஆப்பை அப்படியே தள்ளி வைத்துவிட்டேன். இதன் அர்த்தம், அந்த ஆப் கொள்ளை அடிக்கிறது என்பதல்ல, அவர்களுக்கான நியாயங்கள் (!) இருக்கலாம். ஆப்பைப் பயன்படுத்திப் பார்த்தால்தான் தெரியும்.
இந்நிலையில் பைஜூ ஆப்பும் தி ஹிந்து குழுவினரும் அனைத்துப் பள்ளிகளிலும் (சென்னை மட்டுமாகக் கூட இருக்கலாம்) ஒரு தேர்வு வைத்ததாக என் பையன் சொன்னான். கேள்வித்தாளையும் கையில் கொண்டு வந்திருந்தான். நேஷனல் டேலண்ட் ஹண்ட் என்ற பெயரில் இருந்தது. இதில் வென்றவர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதெல்லாம் தெரியவில்லை. பள்ளிகளிலும் அதிகம் ஆர்வம் காட்டியதைப் போலத் தெரியவில்லை. பள்ளி மாணவர்களுக்குத் தெளிவான விளக்கம் எதுவும் தரப்படவில்லை போல.
கேள்வித் தாளைப் பார்த்தேன். அபிராம் ஏழாம் வகுப்பில் இரண்டாவது டெர்ம் படிக்கிறான். கேள்வித் தாளில் ஒரு கேள்வியைக் கூட ஏழாம் வகுப்பு மெட்ரிகுலேஷன் மாணவர்கள் சரியாகப் போட்டுவிடுவார்கள் என்று சொல்லமுடியாது. அத்தனை கடினம். அதைவிட, அவர்களுக்கு இதுவரை அறிமுகம்கூட ஆகியிராத பாடப்பகுதிகளில் இருந்து கேள்விகள். செட் 2 தேர்வு என்று கேள்வித் தாளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவர்களின் நோக்கம் என்ன என்றே தெரியவில்லை. அபிராம் உள்ளிட்ட அனைத்து மாணவர்களும் இங்கிபிங்கிபாங்கி போட்டுத்தான் விடையைத் தேர்வு செய்திருக்கிறார்கள். தங்கள் பெயரை எழுத்துக்கிரமமாக உச்சரித்து அது முடியும் விரலையெல்லாம் பதிலாகக் குறித்திருக்கிறார்கள் சில விஷமக்காரர்கள்.
நான் இதிலுள்ள 20 கேள்விகளைப் போட்டுப் பார்த்தேன். அரை மணி நேரம் ஆனது. ஓரளவுக்கு எல்லா கேள்விகளுக்குமே பதில் தெரிந்துவிட்டது என்றுதான் நினைக்கிறேன். அபிராம் அதிகபட்சம் 2 கேள்விகளுக்குச் சரியாக பதில் சொல்லி இருக்கலாம். அதிர்ஷடத்தில் எத்தனை சரியாகத் தேர்வு செய்திருப்பான் என்பது தெரியாது.
பைஜுவின் நோக்கம் என்ன? அவர்கள் நேஷனல் டேலண்ட் ஹண்ட்டில் யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
கேள்வித்தாளை இணைத்திருக்கிறேன்.
பைஜு வலைத்தளத்தில் பாடங்களுக்கான விலை: https://byjus.com/products/all-products/cbse-icse/?orderby=price







