President of India Vs Supreme court – A discussion

Share

Good Bad Ugly Tamil movie

குட் பேட் அக்லி – எத்தனையோ குப்பைகளைப் பார்த்திருக்கிறேன். இது குப்பையிலும் குப்பை. இதை தியேட்டரில் பார்த்தவர்கள் நிலை அந்தோ பரிதாபம். ஒரு சீரியஸான காட்சியில் சிம்ரன் வருவதும் இன்னொரு காட்சியில் கிங்க்ஸ்லீ வருவதும் சகிக்க முடியாதவை. இதனால் மற்ற காட்சிகள் சகிக்க முடிந்தவை என்று நினைத்துவிட வேண்டாம். குட் உடைந்து பேட் வந்தாலும் பேட் உடைந்து அக்லி வந்தாலும் படம் தொடக்கம் முதல் இறுதி வரை அக்லிதான். நானும் 5 வருடங்களாக எப்படியாவது அஜித்தைப் பாராட்டிவிட நினைக்கிறேன்‌ வருவதெல்லாம் இப்படியாபட்ட குப்பைகள்தான். கதை திரைக்கதை வசனம் டைரக்‌ஷன் என எல்லாமே அக்மார்க் குப்பை.

ஏகே என்ற பெயரை எல்லாரும் சொல்கிறார்கள். அதை நீக்கி இருந்தால் அரை மணி நேரம் மிச்சமாகி இருக்கும். அஜித்தைப் புகழ்வதைத் தூக்கி இருந்தால் இன்னும் ஒரு அரை மணி நேரம் மிச்சமாகி இருக்கும். படம் 2 மணி நேரம் மட்டுமே என்பதுவே பெரிய ஆறுதல்.

வாட்ஸப் க்ரூப்பில் அஜித் படத்தைப் பார்த்ததும் வில்லன்கள் விலகுவது மட்டும் மாஸ் காட்சி.

Share

Mithya Kannada Movie

மித்யா (K) – எமோஷனலான படம். விருதுத் திரைப்படங்களுக்கே உரிய கேமரா. கேமராவே பாதி உணர்ச்சிகளைக் கொண்டு வந்துவிடுகிறது. நடிகர்களின் யதார்த்தமான நடிப்பு. அதிலும் அந்தச் சிறுவனும், கோபால்கிருஷ்ண தேஷ்பாண்டேவும் கலக்கிவிட்டார்கள். அதிலும் அந்தக் குழந்தை – நோ சான்ஸ்.

கேமராவுக்கு இணையாக அந்தக் கன்னட வட்டார வழக்கு இன்னொரு அழகு.

மெல்ல நகரும் திரைப்படம். ஆனால் ஒவ்வொரு ஃப்ரேமும் உணர்ச்சிமயம். கடைசி இரண்டு நொடி பதற வைத்துவிட்டார்கள். பார்க்கத்தான் வேண்டுமா என்றெல்லாம் தோன்றிவிட்டது. ஆனால் அற்புதமாக முடித்துவிட்டார்கள்.

ஒரு திரைப்படம் மானுடத்தைக் கையேந்தவேண்டும் என்றால், இந்தப் படம் அப்படி ஓர் அனுபவம். அதிலும் குறிப்பாக அந்தக் கதாநாயகச் சிறுவனின் சித்தி மற்றும் சித்தப்பா குடும்பக் காட்சிகள் அருமை.

ப்ரைமில் கிடைக்கிறது.

Share

Am Aha Malayalam and Pravinkoodu shappu Malayalam Movies

அம் அஹ (அம்மா) – (M) – விதந்தோதத்தக்க படம் அல்ல என்றாலும், மனதைக் கனக்கச் செய்துவிட்ட படம். படத்தின் முதல் பாதி த்ரில்லர் போலச் சென்றது. அதற்கான காரணத்தை விவரிக்கும்போது கலங்கடித்துவிட்டது. குறிப்பாக அந்தக் குழந்தையின் கள்ளம் கபடமற்ற முகம்.

அனைத்து நடிகர்களும் மிக இயல்பாக நடிக்கிறார்கள். நம்ம ஊர் தேவதர்ஷினிக்கு வாழ்நாள் கதாபாத்திரம். நன்றாக முயன்றிருக்கிறார் என்றாலும், நாம் பழக்கப்பட்டுவிட்ட தேவதர்ஷினியைத் தாண்டி, இந்தக் கதாபாத்திரத்துக்குள் செல்ல முடியவில்லை. வேறு நடிகையை நடிக்க வைத்திருக்கலாம். பாடல்களைக் குறைத்திருக்கலாம்.

மனம் இருண்டு கிடக்கும் நேரத்தில் ஒரு மகிழ்ச்சிச் செய்தி வந்து, புது மழை கசடை எல்லாம் நீக்கி குளிரச் செய்துவிடுவது போன்ற கடைசி இரண்டு நிமிடம் – மறக்கவே முடியாத மகிழ்ச்சியான தருணம்.

கதைக் களம் நடக்கும் இடம் மலை சார்ந்த பகுதி. இப்படிப்பட்ட ஊரில் எப்படி வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று ஒவ்வொரு நொடியும் அதிசயிக்க வைக்கிறார்கள். தங்கள் படத்தில் தங்கள் நிலத்தை இத்தனை அழுத்தமாகக் காண்பிப்பதில் மலையாளிகளுக்கு நிகர் எவருமில்லை.

திலீஷ் போத்தன் தான் நடிக்கும் எல்லாப் படங்களிலும் சிறப்பாக நடிக்கிறார் என்றாலும், இத்தனை நல்ல இயக்குநர் இப்படி நடிப்பில் கவனம் செலுத்தி வீணாகிப் போகிறாரே என்ற வருத்தம் எழாமல் இல்லை.

அம் ஆ – பொறுமை இருப்பவர்களுக்கான படம்.

Primeல்கிடைக்கிறது.

ப்றாவின்கூடு ஷாப்பு (M) – ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் தரம். கதை எல்லாம் பார்த்து பார்த்து அலுத்துப் போன கதைதான். ஆனால் அதைப் படமாக்கிய விதம் அட்டகாசம்.

பாஸில் ஜோசஃப் படம் என்று நினைத்து கொஞ்சம் அசுவாரஸ்யமாகப் பார்க்கத் தொடங்கினேன். வந்தார் சௌபின் ஷாஹிர். கூடவே செம்பன் வினோத். இவர்கள் இருவரும் இருப்பது தெரிந்திருந்தால் எப்போதோ பார்த்திருப்பேன். மூவரும் கலக்கிவிட்டார்கள். உண்மையில் இது சௌபின் படம். அவரது மேக்கப்பும் நடையும் அட்டகாசம். நடிப்பு அதகளம்.

ச்சாந்தினி – நோ சான்ஸ். செம அழகு, செம நடிப்பு.

எப்படி இத்தனை விதம் விதமான கொலை த்ரில்லர்களை எடுக்கிறார்களோ மலையாளிகள். ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, நடிப்பு, எடிட்டிங் இசை என அனைத்திலும் துல்லியம்.

ஏன் இந்தப் படம் பாக்ஸ் ஆஃபிஸில் ஹிட்டடிக்கவில்லை என்பது புரியாத புதிர்தான்.

டோன்ட் மிஸ் வகையறா படம். அதிலும் கொலையாளி யார் என்று நின்று நிதனமாகச் சொல்லும் காட்சி தரத்திலும் தரம்.

சோனி லைவில் கிடைக்கிறது.

Share

Vijayabharatam Award

விஜயபாரதம் பிரசுரம் வழங்கிய ‘சிறந்த பதிப்பாளர்’ விருது பத்ரி கையால் பெற்றபோது.

வாழ்த்திய அனைவருக்கும் சுவாசம் சார்பாக நன்றி.

பாரதி விருது பெற்ற ம வெங்கடேசன், பி.ஆர்.மகாதேவன், உவேசா விருது பெற்ற கீழாம்பூர் ஆகியோருக்கு வாழ்த்துகள்.

புகைப்படம் நன்றி – ஆர்விஎஸ் மற்றும் வல்லபா

Share

Kumari Anandhan

சில வருடங்களுக்கு முன்பு மதியம் 1.45 மணி இருக்கும். அப்பொழுது கிழக்குப் பதிப்பகத்தில் இருந்தேன். செக்யூரிட்டி வந்து, ஒருவர் புத்தகம் வாங்க வந்திருக்கிறார் என்று சொல்லவும், உணவு நேரம் முடிந்து 2 மணிக்குதானே விற்பனை தொடங்கும் என்று சொன்னேன். வந்தவர் பெரிய மனிதர் போல் இருக்கிறார், கூட போலிஸ் ஒருவரும் இருக்கிறார், விற்பனைப் பிரதிநிதிகள் மதிய உணவுக்குப் போயிருக்கிறார்கள் என்று சொல்லவும் நான் போய்ப் பார்த்தேன். அங்கே சேரில் குமரி அனந்தன் அமர்ந்திருந்தார். அத்தனை தள்ளாத வயதில் எப்படி மாடி ஏறி வந்தார் என்று ஆச்சரியமாக இருந்தது. கடை திறக்க அரை மணி நேரமாகும் என்று சொல்லி, அவருக்கு வேண்டிய புத்தகங்களை எழுதி வாங்கிக்கொண்டு, வீட்டிற்குப் புத்தகங்களை அனுப்பி வைக்கிறோம் என்று சொல்லவும் ஆச்சரியப்பட்டார். இப்படி எல்லாம் செய்வீர்களா என்றெல்லாம் கேட்டார். ஃபோன் நம்பரைக் கொடுத்து, இனி ஃபோன் செய்தால் போதும் புத்தகங்கள் உங்கள் வீடு தேடி வரும் என்று சொன்னேன். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு சென்றார்.

குமரி அனந்தன் என்றதும் அதுவரை எனக்கு நினைவுக்கு வந்ததெல்லாம், 1996ல், முதல்நாள் வரை காங்கிரஸுக்கு எதிராகக் கோஷம் போட்டுவிட்டு, மறுநாள் காங்கிரஸ் சொன்னவுடன் அதிமுகவுடன் கூட்டணியை ஏற்றுக்கொண்ட குமரி அனந்தனின் முகம்தான். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு குமரி அனந்தனை நினைக்கும் போது அவர் மாடிக்கு வந்து காத்துக் கொண்டிருந்ததும் நினைவுக்கு வரும்.

குமரி அனந்தன் அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி. அவரை இழந்து தவிக்கும் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share

Bougainvillea Malayalam Movie

போகன்வில்லா (M) – சைக்கலாஜிக்கல் திரில்லர் வகை. படத்தின் பிளஸ் பாயிண்ட் என்றால் மேக்கிங் மிக அருமையாக இருக்கிறது. இசை அருமை. கடைசி வரை ஏன் இப்படி நடக்கிறது என்று யூகிக்க முடியாமல் சஸ்பென்ஸைத் தக்க வைத்தது சிறப்பு. மைனஸ் பாயிண்ட் என்று பார்த்தால் ஹீரோதான் எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்க வேண்டும் என்பது சீக்கிரமே தெரிந்து விடுகிறது. ஃபகத் ஃபாசிலை இத்தனை வீணடித்திருக்கக் கூடாது. பல காட்சிகள் அவர் இல்லாமலேயே நகர்கின்றன. கடைசியில் நம்ம ஊர் சினிமா போலீஸ் போலத் துப்பாக்கியுடன் வந்து கைது செய்து விட்டுப் போவதற்கு அவர் எதற்கு? ஹீரோதான் காரணம் என்று தெரிந்த பிறகு வரும் காட்சிகள் நீளம். சுமாரான படம்.

Share

Five Movies

கிருஷ்ணம் ப்ரணய சகி (K) – கணேஷின் திரைப்படம் ஃபீல் குட் முவீயாக இருக்குமே என்று பார்க்க நினைத்தது ஒரு குத்தமாய்யா? சிதைச்சி விட்டுட்டாய்ங்க. கட்டுன பொண்டாட்டியையே காதலிக்கிற கதையை ஃபீல் குட்டா காமிக்க நினைச்சி, நான்லீனியர் கதையை அதுல செருகி, அப்படியே நம்ம தலைலையும் அதை செருகி.. மிடில.

ஒரு ஜாதி ஜாதகம் (M) – வினீத் ஸ்ரீனிவாசன் நடித்தும் படம் அறுவை. ஆங்காங்கே ஒவ்வொரு சமயம் சிரிக்கிறோம் என்றாலும் மொத்தத்தில் சிரிப்பே வரவில்லை. ஒரு ஆணுக்கு இத்தனை சிரமமா என்றெல்லாம் தோன்றினாலும், கதை நாயகனை இத்தனை அடி அடிக்கும் ஒரு படமா என்று தோன்றினாலும், பலவீனமான கதையும் அதைவிட பலவீனமான திரைக்கதையும் சாவடித்துவிட்டன.

பணி (M) – ஜோஜு ஜார்ஜின் இயக்கத்தில் வந்திருக்கும் முதல் திரைப்படம். முதல் பாதி மிக விறுவிறுப்பு. அட்டகாசமான திரைக்கதை. அத்தனையையும் இரண்டாம் பாதியில் கெடுத்து வைத்திருக்கிறார்கள். வெறும் பழிவாங்கும் கதை என்று போய்விட்டது. அதில் சுவாரசியமும் இல்லை. நம்பகத்தன்மையும் இல்லை. முதல் பகுதி அத்தனை புத்திசாலித்தனமாக இருக்க இரண்டாம் பகுதி பைத்தியக்காரத்தனமாகிவிட்டது. ஜோஜு ஜார்ஜின் நடிப்பும் மற்ற அனைத்து நடிகர்களின் நடிப்பும் மிக அருமை. நேரம் இருப்பவர்கள் பார்க்கலாம். சோனி‌ லைவில் கிடைக்கிறது.

I am Kathalan (M) – பார்க்கலாம். எனக்குப் பிடித்திருந்தது. டெக்னிகல் கிரைம் த்ரில்லர் வகையறா என்றாலும் படத்தில் ஒரு ஃபீல் குட் தன்மையும் இருந்தது. இளமையான படம். இதில் இருக்கும் தவறுகளை டெக்னிகல் ஆள்கள் கண்டுபிடிக்கலாம். மற்றவர்களுக்கு சுவாரஸ்யமாகவே இருக்கும். ஆஹா ஓஹோ படமில்லை என்றாலும் ஈகோ கணக்கைத் தீர்த்துக்கொள்ளும் எளிமையான படம். ப்ரைமில் கிடைக்கிறது.

Ponman (m) – எப்படித்தான் இப்படி ஒரு கதையை கண்டுபிடித்தார்களோ. ஒரு வரிக் கதையை வைத்துக்கொண்டு எத்தனை பெரிய படமாக்கி இருக்கிறார்கள்! ஓரளவுக்குப் பார்க்கும்படியாகவே வந்துள்ளது. சில காட்சிகளில் நம்பகத்தன்மை இல்லை என்று தோன்றினாலும் கூட, படத்தின் விறுவிறுப்பு நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறது. தொண்டி முதலும் திருகாக்‌ஷியும், மகேஷிண்டெ பிரதிகாரம் போன்ற, இருவருக்கிடையேயான ஈகோவை நினைவூட்டும் ஒரு கதை என்றாலும், இந்தக் கதை வேறு களம். உயிரே போனாலும் வெல்ல நினைக்கும் ஒரு பிடிவாதம். கேரளத்தின் நிலம், மக்கள் என அனைத்தையும் அத்தனை அசலாகப் படம் பிடித்திருக்கிறார்கள். சமூக ஊடங்களில் ஆகா ஓகோ என்று கொண்டாடப்பட்ட அளவுக்கு எனக்கு இதில் ஒன்றும் தோன்றவில்லை என்றாலும், நிச்சயம் மோசமான படம் அல்ல.

Share