மணிக்கொடி சினிமா – ஆய்வுப் புத்தகமா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் சுவாரஸ்யமான புத்தகம். கடற்கரய்-யின் நீண்ட கட்டுரையும், அது தொடர்பான மணிக்கொடி காலத்து திரைப்படக் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. 1935களின் சினிமாவுக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்து விமர்சனங்கள் வெளியிட்டிருக்கிறார்கள். இன்றுவரை நாம் அதையேதான் செய்துகொண்டிருக்கிறோம்.
மனத்தைக் கவர்ந்தவை இரண்டு முக்கிய விஷயங்கள். 1935களில் எழுதப்பட்ட விமர்சனங்களின் நடை இன்றும் மிக இலகுவாகப் படிக்கும்படி இருக்கிறது. அந்தக் காலத்துக்கே உரிய சில வார்த்தைப் பயன்பாடுகளைத் தாண்டி எவ்வித நெருடலும் இல்லாமல் வாசிக்க முடிகிறது. அதிலும் கலாரஸிகன் என்பவர் எழுதி இருக்கும் விமர்சனம் நேற்று எழுதியது போல் இருக்கிறது. சஞ்சயன் என்பவர் எழுதி இருக்கும் விமர்சனங்களில் சில அந்தக்கால பிரத்யேக வார்த்தைகளைப் பார்க்க முடிகிறது. அன்றும் இன்றைப் போலவே தமிழ் சினிமாவைத் திட்டித் தீர்த்து இருக்கிறார்கள்.
“இதுவரையில் நாம் கண்ட தமிழ்ப்படங்களில் ஏதாவது ஒரு படம் பார்த்துவிட்டு வெளியே வந்ததும், ஏதோ தனித்தனியாக நான்கைந்து கதைகள் பார்த்ததாகத் தோன்றும்.”
“இதுவரையில் ஹாஸ்யப் படம் என்றால் ஆபாசம் நிறைந்த கதைகள், விரசமான சம்பாஷணைகள்தான் என்று என்னும்படி இருந்தது.” (அம்மாஞ்சி பட விமர்சனம்.)
“முதல்முதலில் தமிழ்ப் பேசும்படம் ஆரம்பித்தபோதே, நமது வேத காலத்தில் ஆரம்பிக்கவில்லையென்றாலும், புராண இதிகாஸ காலங்களிலேயிருந்து ஆரம்பித்தது.”
இப்படி சில நறுக்குத் தெறிப்புகள். அதுவும் 1935களில்! நூறு வருடமாக ஒரே வட்டத்துக்குள்தான் ஓடிக் கொண்டிருக்கிறோம் போல.
அச்சுத கன்யா-வின் கதை கொஞ்சம் ஆச்சரியம். பறையர் பெண்ணை ஒரு பிராமணன் காதலிக்கும் கதை. இருவரும் திருமணம் செய்துகொண்டு புரட்சி எல்லாம் நடக்கவில்லை என்றாலும், 90 வருடங்களுக்கு முன்பு இப்படி ஒரு படம் வந்திருக்கிறது. எந்த மொழி என்று தெரியவில்லை. இந்த நூலின் பெரிய குறை, எந்தப் படம் தமிழ்ப்படம் எந்தப் படம் வேற்று மொழிப் படம் என்பதை உறுதியாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. இயக்குநர், நடிகர்களின் பெயரை வைத்தே யூகிக்க வேண்டி இருக்கிறது.
கோடீஸ்வரன் என்ற (தமிழ்ப்படமா என்று தெரியவில்லை) ஒரு திரைப்படத்தின் கதை, திடீரென ஒரு பெண் நடிகையாக, அவளை காதலிக்கும் ஒருத்தன் குதிரை ரேஸில் ஜெயித்துப் பெரிய பணக்காரனாகி அவளைக் கை பிடிக்கப் போகும் நேரத்தில், ஹீரோவின் அம்மா அந்த நடிகையிடம் தற்செயலாகச் சொல்கிறாள், தன் பையனை ஒரு நடிகைக்கு எந்நாளும் கல்யாணம் செய்து வைக்க மாட்டேன், குடும்பப் பெண்ணுக்குத்தான் கட்டி வைப்பேன் என்று. மனம் உடைந்து போகும் நடிகை ஹீரோவின் வாழ்க்கையை விட்டு விலக, ஹீரோ தற்கொலை செய்துகொள்வதாகக் கடிதம் எழுதி வைக்க, மருத்துவர்கள் வந்து அவனைக் காப்பாற்ற முயல, அப்போதுதான் தெரிகிறது அவன் இன்னும் விஷமே குடிக்கவில்லை என்று. சுபம்.
இன்றளவும் இதே கதையைத்தானே பேசிக்கொண்டிருக்கிறோம்? கடைந்த பத்து வருடப் பாய்ச்சல் தமிழ் சினிமாவில் நிகழ்ந்திருக்காவிட்டால், 90% தமிழ் சினிமாக்கள் 90 வருடங்களாக ஒரே போலவேதான் யோசித்துக்கொண்டு இருந்திருக்கின்றன என்று சொல்லிவிடலாம்.