இளையராஜா
–ஹரன் பிரசன்னா
எப்போது எப்படியென்றெல்லாம் சொல்லமுடியாத பிணைப்பு அது ராஜாவின் பாடல்களுடன் எனக்கு ஏற்பட்டது. என் வீட்டில், உயர்நிலை வகுப்பில் படிக்கும்போது புத்தகம் படிப்பது என்ற பழக்கம் மிகக்கடுமையாகத் தடைசெய்யப்பட்டிருந்தது. அதில் கவனம் வந்தால் படிப்பில் கவனம் போய்விடும் என்பது அவர்கள் வாதம். ஒரே பொழுதுபோக்கு வானொலி கேட்பது. வரப்பிரசாதமாய் சிலோன் வானொலி. என் அம்மாவும் அக்காவும் பொங்கும் பூங்குழல் ஆரம்பித்து தேனருவி, புத்தம் புதியவை எனத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பார்கள். பத்து மணிக்குத்தான் வானொலி தன் வாயை மூடும். காதில் விழுந்து நான் முயலாமலேயே மனதிற்குள் சென்றுவிட்ட பாடல்கள் அதிகம். இன்று நினைத்தாலும் பழைய நினைவுகளை அப்படியே கொண்டு வந்து கொட்டி, துக்கத்தில் தொண்டையை அடைத்துவிடும் பாடல்கள் எத்தனையோ உண்டு. கிட்டத்தட்ட எல்லாமே ராஜாவின் பாடல்கள்.
யார் இசையமைப்பாளர் என்று பார்க்கத்தொடங்கியதெல்லாம் பதினோறாம் வகுப்பு வந்த பின்புதான். தொடர்ச்சியாக வரும் படங்கள் எல்லாவற்றிலும் பாடல்கள் மட்டும் சோடை போகாத ஆச்சரியம் ராஜாவின் சாதனை. 1987 ல் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்கள். ஏனோ தானோ என்றெல்லாம் இல்லாமல் சாதனைப் படங்களும் அந்த வருடத்தில் இருக்கும். மெல்ல மெல்ல ராஜாவின் திறமை என்னுள் பெரிய ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் தரத்தொடங்கியது. டப்பாங்குத்துப் பாடல்களில் கூட இனிமை இருந்தது. சோகப்பாடல் கேட்டால் சோகம் வந்து அப்பிக்கொண்டது. திரையுலகின் மிகப்பெரிய ஆச்சரியமே சிவாஜிதான் என்ற எனது எண்ணம் கொஞ்சம் உடைந்து போனது ராஜாவால்தான்.
எந்தப் பாடல் கேட்டாலும் ஏதேனும் ஒரு நொடியில் ராஜா நினைவுக்கு வராமல் போனதே இல்லை. சினிமா எக்ஸ்பிரஸ் கையில் கிடைத்தால் புதிய படங்களின் வரவு கண்ணில் பட்டால் நாயகன் யாரென்று பார்க்காமல் இசை யாரென்று பார்க்க ஆரம்பித்தேன். ராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் சண்டை என்றறிந்த பின்னால் ராஜா இசையமைக்கும் படங்களில் யார் பாடல்கள் எழுதுகிறார்கள் என்று பார்க்க ஆரம்பித்தேன். ராஜா பற்றிய சிறிய குறிப்புகளைக் கூடத் தேடித் தேடிப் படித்தேன். ராஜாவைப் புகழ்ந்தவர்கள் எல்லாம் திறமைசாலிகளாகப் பட்டார்கள் எனக்கு.
கொஞ்சம் எதிர்பார்ப்புள்ள படத்திற்கு ராஜா இசையமைத்து பாடல்கள் சோடை போனதாக சரித்திரமே இல்லை என்றெல்லாம் நினைத்துக்கொண்டேன். திடீரென்று தோன்றும், ராஜாவை கொஞ்சம் அளவிற்கு அதிகமாய் தூக்கி வைக்கிறோமோ என்று. ஆனால் காதில் கேட்கும் ஏதோவொரு பாடலில் லயிக்கும்போது அது ராஜா என்று தெரியும்போது, தோன்றியதெல்லாம் மறந்துபோய் மீண்டும் ராஜா ஜெபம் விஸ்வரூபம் எடுக்கும். இன்று வரை இது மாறவில்லை.
ராஜா இசையமைத்த சில பாடல்கள் வேறு யாராலும் இசையமைக்க முடியாதோ என்று இன்றும்
தோன்றுவதுண்டு. அவற்றைப் பட்டியலிடுதல் மிகச்சிரமமான காரியம். யாருக்கு இசையமைக்கிறோம், என்ன தேவை என்பதன் மிகச்சரியான புரிதல் ராஜாவிடம் இருந்தது. (இதில் ஏ.ர். ரகுமானுக்கான கொள்கைகள் வேறு என்பது என் கணிப்பு). புதிய முயற்சிகள் எடுப்பதில் ராஜா தயங்கியதே இல்லை என்ற போதும் பழையனவற்றையும் தொடர்ந்தார்.
இசையறிவு எனக்கில்லை. நான் சொல்வதெல்லாம் ஒரு சாமான்ய – திரையிசையை அளவிற்கு மீறி இரசிக்கும் – இரசிகனின் கண்ணோட்டம்தான். ஆனாலும் நிறைய பெரிய கர்நாடக இசை வல்லுனர்கள் ராஜாவின் இசையைப் புகழ்ந்திருக்கிறார்கள். செம்மங்குடி புகழவேண்டுமானால் திறமை இருந்தால் மட்டுமே முடியும். காரணம் செம்மங்குடிக்கு திரையிசை பாடும் ஆசையில்லை.
பாடலுக்கு மட்டும் கவனம் செலுத்தினோம் என்றில்லாமல் பின்னணி இசையில் புதிய பரிமாணத்தைக் காட்டியவர் ராஜா. பின்னணி இதுவரை யாருமே தொடாத உயரத்தை மிக எளிதாய் தாண்டியவர் அவர். ஒரு திரைப்படம் உணர்வு ரீதியாய் மனதைத் தாக்கவேண்டுமானால் மனதுள் தங்கவேண்டுமானால் பின்னணி இசையினால் முடியும் என்று நிரூபித்துக்காட்டினார். தமிழ்த்திரையுலகின் மிகச்சிறந்த இயக்குநர் என்று நான் கருதும் மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மணிரத்னம் போன்ற சிறந்த இயக்குநர்களின் வெற்றியில் ராஜாவிற்கும் பங்கிருக்கிறது. பாடல் வெற்றிக்காய் இதைச் சொல்லவில்லை. அவர்களின் படங்களில் அவர்கள் சொல்ல வந்த விஷயத்தை மக்களுக்குக் கொண்டு சென்றதில் ராஜாவின் இசைக்குப் பங்கிருப்பதால் சொல்கிறேன். பதினாறு வயதினிலே படம் நம் மண்ணின் நிஜ மனிதர்களை திரையில் உலவவிட்டபோது அதற்கு ஏற்றார்போல் கைகோர்த்து கூட நடந்தது படத்தின் பின்னணி இசையும் பாடல்களும். சிகப்பு ரோஜாக்கள் என்ற புதிய முயற்சி வந்தபோது இசையும் புதியதாய் இருந்தது. திரைப்படம் என்பது நீட்டி முழக்குதல் அல்ல; யதார்த்தம்தான் என்று மகேந்திரன் முள்ளும் மலரும் சொன்னபோது பல இடங்களில் அமைதி காத்து நிமிர வேண்டிய இடங்களில் நிமிர்ந்து காவிய முயற்சிக்குத் துணை நின்றது இளையராஜாவின் இசை.
இசை என்பது இரண்டு அமைதியான கணங்களுக்கு இடையே வரும் ஒலி மட்டும் அல்ல, இரண்டு ஒலிகளுக்கு இடையே வரும் அமைதியும்தான் என்ற சித்தாந்தத்தை மெய்ப்பித்துகாட்டியது அவரது இசை. என்ன பெயரென்றே தெரியாத படங்கள் பலவற்றின் பாடல்கள் மட்டும் ராஜாவின் தனித்துவம் காட்டி நிற்கும். வெறும் தொழில் என்று செய்திருந்தால் இது சாத்தியமாயிருக்காது. தொழிலும் சுவாசமும் இசை என்றிருந்திருந்தால் மட்டுமே இது சாத்தியமாயிருக்க வாய்ப்புண்டு.
ஹிட் பாடல்களைவிட ஹிட்டாகாத பாடல்கள் பல நல்ல பாடல்களாய்ப் போன துரதிர்ஷ்டம் எல்லா
இசையமைப்பாளர்களுக்கும் ஏற்படுவதுபோல ராஜாவிற்கும் ஏற்பட்டிருக்கிறது. னாலும் அந்தப் பாடல்களை இன்றும் கேட்கமுடிகிறது என்பதும் இரசிக்க முடிகிறது என்பதும் ஹிட்டை விட பாடலின் தரம் முக்கியமென்பதை உணர்த்தியிருக்கும்.
பிடித்த பாடல்கள் என்று பட்டியலிடுவது மிகக் கடினம். எனக்கு டப்பாங்குத்து முதல் சோகப்பாடல்கள் வரை, கர்நாட்டிக் முதல் ஹிந்துஸ்தானி வரை, எப்படி இருந்தாலும் அதனளவில் நன்றாய் இருந்தால் பிடிக்கும். அப்படி நான் இரசித்த எத்தனையோ பாடல்கள் பெரும்பாலானவை ராஜாவின் பாடல்கள்தாம். அதனால்தானோ என்னவோ உங்களுக்குப் பிடித்த பிரபலங்களைச் சொல்லுங்கள் என்று சொன்னால் இரண்டாவது இடம் ராஜாவிற்கு இருக்கும் அளவிற்கு அவரைப் பிடித்துப் போனது.
என்னால் இளையராஜாவின் திரையிசைப் பாடல்களைக் கேட்காமல் வாழ முடியுமா என்பது சந்தேகமே. எத்தனையோ சமயங்களில் மனம் மிகக்கனமாய் உணர்ந்தபோது சில பாடல்களைக் கேட்டு இலேசாய் உணர்ந்திருக்கிறேன். மிகச்சந்தோஷமாய் இருந்த கணங்களில் சில சோகப்பாடல்கள் கேட்டு சந்தோஷத்தை இழந்திருக்கிறேன். மனிதனின் மனநிலையில் ஒரு மாற்றத்தை (அதற்கு இசை மட்டுமே காரணமில்லை என்றறிவேன்) ஒரு திரைப்பாடல் உருவாக்குகிறதென்றால் அது அந்தப் பாடலுக்கு உயிர்கொடுத்த இசையமைப்பாளனால்தான் என்பது மறுக்க முடியாதது. இப்படிப் பல பாடல்களைக் கொடுத்தது ராஜாவின் சாதனை.
ராஜாவும் வைரமுத்துவும் பிரிந்ததால் யார் எப்படிக் கவலைப்பட்டார்கள் எனத் தெரியாது. நான் மிகவும் கவலைப்பட்டேன். (இன்றும் கவலைப்படுகிறேன்). இதனால் இருவருக்கும் தனித்தனியாக பெரிய பாதிப்பொன்றும் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் நாம் இழந்தது அதிகம்.
வானம் என் விதானம்
இந்த பூமி சன்னிதானம்
பாதம் மீது மோதும்
ஆறு பாடும் சுப்ரபாதம்
காற்றின் தேசம் எங்கும்
எந்தன் கானம் சென்று தங்கும்
காற்றே நின்ற போதும்
எந்தன் ஆயுள் கோடி மாதம்
நானே நாதம்
என்ற வரிகளும்
என் சேலையில் வான் மின்னல்தான் வந்து நூலாகுமே
என் சோலையில் வேர் கூடப் பூக்கின்ற ஓர் காலமே
என்ற வரிகளும்
தோரண வாயிலில் பூரணப் பொற்குடம்
தோழிகளும் என்னைச் சூழ வலம் வருவேன்
வானவில்லை அங்குக் காணவில்லை என்று
மேகம் அலைந்திட தேகம் தனில் அணிவேன்
என்ற வரிகளும்
இலையாடை உடுத்தாதப் பூக்கள்
செடி மீது சிரிக்கின்ற நாள்கள்
படுக்கையில் பாம்பு நெளியுது
தலையணை நூறு கிழியுது
என்ற வரிகளும்
குளிக்கும் போது கூந்தலை
தனதோடையாக்கும் தேவதை
அலையில் மிதக்கும் மாதுளை
இவள் பிரம்மதேவன் சாதனை
தவங்கள் செய்யும் பூவினை
இன்று பறித்துச் செல்லும் காமனை
எதிர்த்து நின்றால் வேதனை
அம்புதொடுக்கும்போது நீ துணை
சோதனை
என்ற வரிகளும்
காத்திருந்தேன் அன்பே இனி காமனின் வீதியில் தேர்வருமோ
பூமகள் கன்னங்கள் இனி மாதுளை போல் நிறம் மாறிடுமோ
யிரம் நாணங்கள்; இந்த ஊமையின் மேனியில் ஸ்வரம் வருமா?
நீயரு பொன்வீணை நுனிவிரல் தொடுகையில் பல ஸ்வரமா?
பூவை நுகர்ந்தது முதல் முறையா?
வேதனை வேளையில் சோதனையா?
இது சரியா? இது முறையா?
என்ற வரிகளும் இன்னும் இது போன்ற பல வரிகளும் அதற்கேற்ற இசையும் தமிழகத் திரையிசையின் பொற்காலங்கள். இவற்றின் தொடர்ச்சிகளை நாம் இழந்தது இரு தனிமனிதர்களின் தனிமனித ளுமைகளின் மோதல்களால். என்ன சொல்ல? வேதனையைத் தவிர.
“இதுவரை நான்”-ல் வைரமுத்து இளையராஜாவைப் பற்றி எழுதும் போது இப்படி ஆரம்பிக்கிறார்.
“ஒரு நாள் நானும் நீயும் கடற்கரையில் ஒருவரை ஒருவர் துரத்தி விளையாடிக்கொண்டிருந்தோம். முடிவில் நீ என்னைப் பிடித்துவிட்டாய். இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் எதிரெதிர்த் திசையில்.’ (நினைவிலிருந்து)
இந்த வரிகளைப் படித்த போது நானடைந்த சோகம் இன்னும் மனதில் அப்படியே இருக்கிறது. நட்பை இழத்தல் ஈடுசெய்யமுடியக்கூடிய இழப்பல்ல.
ராஜாவில் ஆரம்பித்து எப்படியோ முடியும் என் எண்ணங்களை அங்கீகரிப்பீர்களாக.
(இதில் நான் சொன்ன இளையராஜா பற்றிய என் எண்ணங்களில் இம்மியளவு கூட உயர்வுநவிற்சி இல்லை)