Archive for Uncategorized

மனுஷ்யபுத்திரனுக்கு ஒரு பதில்

மனுஷ்யபுத்திரன் எழுதி இருக்கிறார், என்னுடைய வேலை எழுத்தாளர்களைக் கடத்தி வருவது என்று. பூனை தன் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்று நினைக்குமாம். இவர் எழுதும் இதே வெளியில்தான் நான் கடத்தி வருவதாக அவர் நினைத்துக்கொண்டிருக்கும் அத்தனை எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். அவர்களும் இதைப் படித்துக்கொண்டுதான் இருப்பார்கள். நான் பொய் எழுதுவதுமில்லை, பேசுவதுமில்லை. மேலும் ஒரு பதிப்பாளர் எழுத்தாளர் உறவின் சிக்கல்களை, அன்னியோன்னியத்தை வெளியில் சொல்வதுமில்லை. ஆனால் இதைப் படிக்கும் அத்தனை எழுத்தாளர்களுக்கும் தெரியும், கடத்தப்பட்டு வந்தார்களா இல்லையா என்பது.

உயிர்மையில் சாரு இருந்தபோது சாரு எழுதிய பதிவுகளே உதாரணம். தனியே எதற்கு இன்னொருவர் சொல்லவேண்டும்?

இன்னும் இன்றும் இப்போதும் எழுதிக்கொண்டிருக்கும் அனைத்து முன்னாள் உயிர்மை எழுத்தாளர்களின் பதிவுகள் மட்டும் மனுஷ்யபுத்திரனுக்கு மறந்துவிடும் அல்லது கண்ணுக்குப் படாது. பழி மட்டும் இன்னொருவர் மேல்.

இலக்கிய அரசியலில் ஈடுபடுவதில் எனக்கு ஆர்வம் இல்லை, திறமையும் இல்லை. ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டி இருக்கிறது. மற்றபடி சாருவின் இலக்கியப் பங்களிப்புக்குப் பக்கத்தில்கூட நான் இல்லை. அதை மனுஷ்யபுத்திரன் வலிந்து சொல்லவேண்டியதுமில்லை. ஏனென்றால் நான் அதை க்ளெய்ம் செய்யவே இல்லை. ஒருவகையில் மனுஷ்யபுத்திரனே இந்த ஒப்பீட்டைத் தொடங்கி வைக்கிறார்!

சாதாரணமாக ஒரு பதிவு எழுதப்போய் அது இப்படியெல்லாம் போவது சுவாரஸ்யம்தான்.

இன்னும் என்னவெல்லாம் வருகிறது எனப் பார்க்கலாம்.

Share

Cinemakkaararkal by Jeyabarathi

சினிமாக்காரர்கள், ஜெயபாரதி, கிழக்கு பதிப்பகம், 150 ரூ.

(இந்த நூலைப் பற்றிய சிறு குறிப்பை வாசிப்பதற்கு முன்பாக, ஜெயபாரதி எழுதிய ‘இங்கே எதற்காக’ புத்தகத்தைப் பற்றி நான் எழுதியதை வாசித்துவிடுங்கள். அதன் தொடர்ச்சியாக இதை எழுதுகிறேன் என்று எடுத்துக்கொள்ளவும்.)

ஜெயபாரதியின் சினிமாக்காரர்கள் புத்தகம், திரையுலகம் எப்படி தொழில்நுட்ப ரீதியாகவும் தினசரி வேலைகள் ரீதியாகவும் இயங்கியது என்பதைச் சொல்கிறது. ஆம், இயங்கியது என்பதையே சொல்கிறதே அன்றி எப்படி இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதைச் சொல்லவில்லை. ஜெயபாரதியின் அனுபவங்கள் நேற்றைக்கானவை. இன்று ஒட்டுமொத்த சினிமா உலகமும் மாறிவிட்டிருக்கிறது. அதை ஜெயபாரதியே முன்னுரையில் தெளிவாகக் குறிப்பிட்டுவிடுகிறார்.

மேலும் இப்புத்தகத்தில் இவர் சொல்லும் பெரும்பாலான விஷயங்கள் இன்று அனைத்துப் பொது மக்களுக்கும் தெரிந்தவையே. சில டெக்னிகல் பெயர்கள், சில டெக்னிகல் சாதனங்கள் தவிர எல்லாமே அனைவருக்குமே தெரிந்தவை. எப்படி செட்-களில் இருந்து திரைப்படம் தெருவுக்கு வந்ததோ அதேபோல் திரை மறைவுக்குப் பின்னிருந்த திரைப்பட நுணுக்கங்கள் எல்லாமே இன்று வீதிக்கு வந்துவிட்டிருக்கின்றன. அப்படியானால் இந்தப் புத்தகத்தில் நமக்கு என்னதான் கிடைக்கும்?

அன்று எப்படி கஷ்டப்பட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். சில சுவாரஸ்யமான சங்கதிகளை நூலில் சொல்கிறார் ஜெயபாரதி.

* கடைசி கறுப்பு வெள்ளை திரைப்படம் உச்சிவெயில் என்று ‘இங்கே ஏன் எதற்காக’ என்ற புத்தகத்தில் படித்த நினைவு. இப்புத்தகத்தில் குடிசை என்கிறார் ஜெயபாரதி.

* செட்-களில் இருந்து கிராமத்துக்கு வந்த முதல் படம் பதினாறு வயதினிலே அல்ல, குடிசை என்கிறார் ஜெயபாரதி.

* ஹாலிவுட்டில், கோடைக்காலத்தில் பேய்ப் படங்களும் குளிர்காலத்தில் காதல் படங்களும் அதிகம் விரும்பிப் பார்க்கப்படுகின்றன என்கிறார்.

* காந்தி திரைப்படத்துக்கு மூன்று பேர் திரைக்கதை எழுத அதில் ஒன்றைதான் ஏற்றுக்கொண்டிருக்கிறார் அட்டன்பரோ.

* விகடன் நாவல் போட்டியில் வென்ற கதை நடைபாதை. ஆனால் அதை எழுதியவரின் முகவரி அதில் இல்லை. அந்தத் தொடரை, அதை எழுதிய இதயன் அலுவலகத்துக்கு வரவும் என்ற குறிப்புடன் வெளியிடுகிறார்கள். இதயன் வருகிறார். ஏன் முகவரி இல்லை என்றால், அவர் நடைபாதையில் வசிப்பவர்! அவரது அனுபவமே நாவல்.

* பென்ஹர், டென் கமாண்ட்மெண்ட்ஸ் போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட உடைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கிளியோபாட்ராவில் எலிசபத் டெய்லர் அணிந்த நடித்த உடை தங்கத்தால் ஆனது. (இதேபோல் ராசுக்குட்டியில் ஐஸ்வர்யா அணிந்து நடித்த உடை ஒரு லட்ச ரூபாய் என்று அந்தப் படம் வந்த சமயத்தில் பெரிய பேச்சாக இருந்தது.)

* நாகேஷ் அணிந்து நடித்த சட்டையை அணிந்துகொண்டு வரும் ஜெயபாரதியின் பள்ளித் தோழன்.

* எந்தத் தாவரத்தில் எந்தப் பூ பூக்கும் என்றெல்லாம் பார்க்காமல் எதையோ ஒட்டி வைக்கும் திரையுலகம்.

* ஒளிப்பதிவு நிவாஸ் என்று திரையில் வரும்போது கைதட்டிய மக்கள். (பதினாறு வயதினிலே ஒளிப்பதிவாளர்.)
இப்படிச் சில சுவாரஸ்யங்கள் ஆங்காங்கே. மற்றபடி கடந்த காலத் திரையுலகம் எப்படி இயங்கியது என்பதன் அனுபவப் பதிவாக மட்டுமே இப்புத்தகத்தைக் கொள்ள முடியும். ‘ஊஞ்சல்’ நாடகம் போல.

தணிக்கைச் சான்றிதழ் (சென்சார்) வாங்கும் விதம் குறித்து அழகாக எழுதி இருக்கிறார். இதில் எனக்கிருக்கும் ஒரு சந்தேகம், யூ, ஏ என்ற சான்றிதழ் வாங்குவதில் ஏன் இந்தியாவில் இத்தனை ஆர்ப்பாட்டம்? வெளிநாட்டில் இந்தச் சான்றிதழ்கள்தான் முக்கிய ஆவணம் என்பதாலா? இந்தியாவில் இந்தச் சான்றிதழ்களுக்குத் தனித்தனி கட்டணம் என்று ஏதேனும் உள்ளதா? பொதுவாக இந்தியாவில் இந்தச் சான்றிதழ்களைப் பார்த்துவிட்டு அதற்கேற்றாற் போல் மக்களை திரையரங்கில் அனுமதிக்கும் வழக்கம் இல்லை. (மால்களைத் தவிர.) அப்படி இருக்கும்போது ஏன் இயக்குநர்கள் யூ சான்றிதழ் வாங்க இத்தனை மெனக்கெடுகிறார்கள்?

ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/9789386737465.html

Share

பேட்ட

* ரஜினியின் ருத்ர தாண்டவம். முதலில் பத்து நிமிடம் தடுமாறினாலும் பின்னர் விஸ்வரூபம் எடுக்கிறது படம்.

* சிம்ரன் கிட்டத்தட்ட கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் பார்ப்பது போல் இருக்கிறார். மற்றபடி ரோல் எதுவுமில்லை. த்ரிஷா அழகாக வருகிறார், சாகிறார்.

* விஜய் சேதுபதி – ஐயோ பாவம். ஏற்றுக்கொண்டு நடித்ததே பெரிய விஷயம். ஹிந்துத்துவ எதிர்ப்பு அரசியல் வேடம் என்பதால் நடித்தாரோ என்னவோ.

* ரஜினியின் பல பழைய ஸ்டைல்களைப் பார்க்க முடிகிறது. நடிப்பில் பின்னுகிறார்.

* இனி ரஹ்மான் வேண்டாம் ரஜினி படத்துக்கு. அநிருத் கச்சிதம். கலக்கல்.

* பாட்ஷா படத்தையே கவனமாக மாற்றி விவரமாக எடுத்திருக்கிறார்கள்.

* கொலை செய்வதை ரஜினி சாவாதானமாகப் பேசிக்கொண்டே செய்வதைப் பார்க்க கதக் என்றிருக்கிறது.

* முஸ்லிம் நண்பன், ஹிந்துத்துவ அரசியல் வில்லன். எரிச்சல். ஆனால் ரஜினியை நம்பிக்கையுள்ள ஹிந்துவாகக் காட்டி, முஸ்லிமை ஹிந்து மரபிலும் நம்பிக்கையுள்ளவராகக் காட்டி, ராமாயணக் கதை பேசி, என்னவோ சமாளிக்கிறார்கள். ஆனாலும் இது அநாவசியம்.

* அதேசமயம், காதலிப்பவர்கள் வேலன்டைஸ் டே தினம் வெளியே வந்தால் அவர்கள் கட்டாயத் திருமணம் செய்ய வேண்டும் என்பதை நான் ஏற்கவில்லை. இது ஹிந்துத்துவக் கருத்தியல் என்று நான் நம்பவில்லை. ஆனால் படத்தில் காவி நிறத்துடன் காட்டப்படுகிறது.

* அப்பா மகன் காட்சியின் தமிழ் சினிமாத்தனத்தை ஸ்பூஃப் ஆக்கியது அட்டகாசம். அதிலும் மிக எளிதாக யூகித்தக்க ட்விஸ்ட்டுகளுக்கு தரப்பட்டிருக்கும் இந்த ட்ரீட்மெண்ட் அருமை.

” ரஜினிக்காக ஒரு படத்தை கார்த்தி சுப்புராஜ் எடுத்திருக்கிறார்.

இனி அரசியல்:

விஜய் சேதுபதி தொடர்ந்து ஹிந்துத்துவக் கருத்தியலை எதிர்க்கும் அரசியலையே படங்களிலும் நிஜத்திலும் செய்துவருகிறார். புதிய அலை இயக்குநர்கள் அனைவருக்குமே இந்த ஹிந்து வெறுப்பு இருக்கிறது. அதில் கார்த்திக் சுப்புராஜும் சேர்ந்திருக்கிறார்.

விஜய் சேதுபதியின் தொடக்கக் காட்சியே, இந்தியா முழுவதும் ஹிந்து அமைப்புகள் காதலர் தினத்தன்று காதலர்களை ஓட ஓட விரட்டுவது போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. எங்கோ ஒரு சிறிய அடையாளமற்ற அமைப்பு ஒன்று ஹிந்துத்துவ அமைப்பு என்ற பெயரில் செய்யும் அட்டகாசங்களை ஒட்டுமொத்த ஹிந்துத்துவ அமைப்புகளின் செயல்களாக மாற்றிக் காட்டுவது ஹிந்து வெறுப்பாளர்களின் பாணி. இந்தியா முழுக்க வியாபாத்திருக்கும் ஆர் எஸ் எஸ் அமைப்போ, இந்தியா முழுக்க பெரும்பாலும் ஆட்சியைப் பிடித்த பாஜகவோ காதலர் தினத்தன்று இப்படிச் செய்ய ஆரம்பித்திருந்தால் யாரும் இந்தியாவில் நிம்மதியாகக் காதலித்திருக்கவே முடியாது. எதோ உதிரி அமைப்புகள் செய்வதை பெரும்பான்மையான ஹிந்துத்துவர்களே ஏற்பதில்லை. ஆனால் அதை ஹிந்துத்துவக் கருத்தியலாகக் காண்பிக்கிறார்கள்.

ரஜினி முதலில் காலா படத்தில்நடித்தபோது அது அவருக்குத் தெரியாமல் நிகழ்ந்தது என்று ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் இந்தத் திரைப்படத்தையும் அதே கணக்கில் வைத்துக்கொள்ள முடியாது. பேட்ட திரைப்படம் ஒரு வகையில் இன்னும் மோசமான அரசியல் கருத்தைச் சொல்கிறது என்றே கொள்ளவேண்டும். ஏனென்றால் காலா திரைப்படத்தைவிட பேட்ட என்னும் திரைப்படம் ஒரு கமர்ஷியல் உருவோடு வந்திருக்கிறது. எனவே இதன் வீச்சும் அதிகமாக இருக்கும்.

இத்திரைப்படத்தில் ஒரு மென் ஜிகாதி காதல் ஒன்றும் காண்பிக்கப்படுகிறது. இஸ்லாம் இளைஞன் ஹிந்துப் பெண்ணைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டு விட, ஹிந்துக் குடும்பம் அவளைக் கொடூரமாகக் கொலை செய்கிறது. இதையே மாற்றி எடுத்தால் என்ன ஆகும் என்பது இயக்குநருக்குத் தெரியும்.

தமிழ் சினிமா இந்த ஹிந்து வெறுப்பில் மிகத் தீவிரமாகச் சிக்கிக்கொண்டுள்ளது. அதில் ரஜினியும் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார். இது நல்லதற்கல்ல.

Share

சென்று வருக 2018 (திரைப்படப் பதிவு)

சிறந்த திரைப்படம்: வடசென்னை

முக்கியமான திரைப்படங்கள்: பரியேறும் பெருமாள், மேற்குத் தொடர்ச்சி மலை

சிறந்த நடிகர்: யாருமில்லை

சிறந்த நடிகை: கீர்த்தி சுரேஷ் (நடிகையர் திலகம்)

சிறந்த பின்னணி இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான் (2.0)

சிறந்த இசையமைப்பாளர்: செக்கச் சிவந்த வானம் (ஏ.ஆர்.ரஹ்மான்)

சிறந்த பாடல்கள்: நீல மலைச்சாரல் (செக்கச் சிவந்த வானம்), யார் வெச்சது யார் வெச்சது உன் சட்டமடா (சந்தோஷ் நாராயண், காலா), சி ஈ ஓ இன் தி ஹவுஸ் (சர்க்கார்),

நன்றாக வந்திருக்கவேண்டிய, ஆனால் தேங்கிவிட்ட படங்கள்: அசுரவதம், ப்யார் ப்ரேமா காதல், டிக் டிக் டிக்.

சிறந்த குழந்தைகள் திரைப்படம்: 2.0

சிறந்த வணிகத் திரைப்படம்: ராட்சசன்.

சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்: 2.0

சிறந்த காமெடி நடிகர்: யோகி பாபு (கோலமாவு கோகிலா)

சிறந்த துணை நடிகர், நடிகை: யாருமில்லை

சிறந்த ஒளிப்பதிவாளர்: தேனி ஈஸ்வர் (மேற்குத் தொடர்ச்சி மலை)

எதிர்பார்த்து கதற வைத்த படங்கள்: கலகலப்பு 2, சர்க்கார், மெர்க்குரி, ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன், காற்றின் மொழி, படைவீரன்

படு மோசமான படம்: கஜினிகாந்த்

அளவுக்கு அதிகமாகக் கொண்டாடப்பட்ட திரைப்படம்: 96

இந்த வருடம் பார்த்த படங்களுள் மனசுக்குள் பச்சக்கென ஒட்டிக்கொண்ட படங்கள்: தடக் (ஹிந்தி), ஹிச்கி (ஹிந்தி), துமாரி சுலு (ஹிந்தி)

Share

வருகை – சிறுகதை

என் சிறுகதை ‘வருகை’ இன்று வெளியாகியுள்ள குங்குமம் இதழில் பிரசுரமாகியுள்ளது. வெளியிட்ட குங்குமம் இதழுக்கும் படம் வரைந்த தமிழுக்கும் நன்றி.

Share